கணிதன் - சினிமா விமர்சனம்

28-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குற்றங்களின் ஒவ்வொரு வகையாக பார்த்துப் பார்த்து தமிழ் சினிமாவில் கதை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் போலி கல்விச் சான்றிதழ்களால் பாதிக்கப்படுபவர்கள் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

ஹீரோ அதர்வா பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அந்த வேலைக்குப் போகாமல் தன்னுடைய விருப்பதற்கேற்ப ஒரு பத்திரிகையாளராக வேண்டி தற்போதைக்கு ஸ்கை டிவியில் பணியாற்றி வருகிறார். ஆனால் இவருடைய லட்சியம் பி.பி.சி.யில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு நைட் கிளப்பில் ஸ்டிங் ஆபரேஷனின்போது ஹீரோயின் கேத்தரின் தெரசாவை பார்க்கிறார் அதர்வா. பி.பி.சி.யில் பணியாற்றுவதாக உடன் வரும் நண்பன் உதார்விட.. அதையே கேத்தரின் உண்மை என்று நம்பி அதர்வாவைக் காதலிக்கத் துவங்குகிறார். இவரும்தான்.. ஆனால் கடைசியில் பார்த்தால் கேத்தரின் ஸ்கை டிவியின் ஓனரான மனோபாலாவின் மகள் என்பது தெரிகிறது.
உண்மை தெரிந்ததும் அதர்வா தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து வருந்தும் கேத்தரினை, தன்னுடைய பி.பி.சி. கனவைச் சொல்லி சமாதானம் செய்கிறார் அதர்வா. பி.பி.சி.யில் இருந்து மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருகிறது. செல்கிறார். தேர்வாகிறார். தனது உண்மை சான்றிதழ்களை அவர்களிடத்தில் சோதனைக்காக கொடுத்துவிட்டு வருகிறார். கூடவே சோதனையும் வந்துவிடுகிறது.
அதர்வா தன்னுடைய சான்றிதழ்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காட்டி அதன் மூலமாக சொந்தமாகத் தொழில் துவங்க கடன் பெற்றதாகவும், அந்தக் கடனை அவர் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டாரென்றும் சொல்லி காவல்துறை அவரை கைது செய்கிறது. இந்தத் திடீர் திருப்பத்தால் அவரது குடும்பமே அதிர்ச்சியாகிறது.
தான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை என்று அதர்வா சொன்னாலும் அவருடைய புகைப்படம், வீட்டு முகவரி, கையெழுத்து என்று அனைத்துமே பக்காவாக வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் போலீஸ் சொல்வதுதான் உண்மை என்றாகிறது. அதர்வா மட்டுமல்ல.. வேறு சில அப்பாவிகளும் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் ஒருவர் ஜெயிலுக்கு போகும் வழியில் போலீஸ் வேனில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள.. இது மீடியாவில் பெரும் பரபரப்பாகிறது.
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையாகி வெளியே வரும் அதர்வா.. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க திட்டம் தீட்டுகிறார்.. அதேபோல் இந்த நவீன ரக கொள்ளைகளை செய்து வரும் கும்பலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க எண்ணுகிறது. இதில் யார் வென்றது..? யார் தோற்றது..? என்பதுதான் இரண்டாம் பாதியின் சுவையான திரைக்கதை.
அதர்வா சென்றடையத் துடிக்கும் ஹீரோயிஸத்திற்கேற்ற கதை. தனி ஒருவனாக துப்பறியும் வேலையில் இறங்கி அதீ தீவிர சாகஹசம் செய்யாமல் புத்திசாலித்தனமாக திட்டமிடுதலின் மூலமாகவே தனது இலக்கை அடைய முயற்சித்திருக்கிறார். தன் மூலமாக ஒரு சாதாரணமான மிடில் கிளாஸ் மாதவனை திரையில் காண்பித்திருக்கிறார்.  அந்த வகையில் அதர்வாவுக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும்..!
கேத்தரின் தெரசா அழகுக்கும், நடனத்திற்கும், கிளாமருக்கும் ஊறுகாய் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அம்மணி..!
அதர்வாவின் அப்பாவான ‘ஆடுகளம்’ நரேனின் பரிதவிப்பும், போலீஸ் ஸ்டேஷனில் அவர் படும்பாடும்.. இனிமேல் ஜென்மத்திற்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போகக் கூடாது என்று நடுத்தர வர்க்கத்தினரை முடிவெடுக்கச் செய்யும் அளவுக்கு இருக்கிறது. தத்ரூபம்..! அம்மாவும், பிள்ளையும் அப்பாவுக்கு போக்குக் காட்டும் காட்சிகள் கலகலப்பு..!
அதர்வாவின் நடனத் திறமை ‘யப்பா சப்பா’ பாடலில் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசைக்கேற்ற நடனமும், இவைகளுக்கேற்ற ஒளிப்பதிவுமாய் காட்சிகளில் இருந்து கண்ணை அகற்ற மறுக்கும்விதமாய் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!
டிரம்ஸ் சிவமணியின் இசையில் காதைக் கிழிக்கும் பின்னணி இசையைவிடவும், பாடல்கள் கேட்கும் ரகம்.. ஆனாலும் பின்னணி இசையை கொஞ்சம் வடிகட்டியிருக்கலாம்..!
ஒரு திரைக்கதையாக பார்க்கப் போனால் இப்படியெல்லாம் ஒரு போலீஸ் இருக்க முடியுமா என்றும்.. இப்படியெல்லாம் ஒரு பத்திரிகையாளர்கள் இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது.
மீடியா என்று தெரிந்தும் போலீஸ் இப்படி தைரியமாக கை வைப்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை. இதேபோல் ரவுடிகளின் கும்பல் ஏதோ மாநகராட்சி பாத்ரூமுக்கு வருவதுபோல ஹாயாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் நுழைந்து அதகளம் செய்வதெல்லாம் ரொம்பவே டூ மச் இயக்குநர் ஸார்..!
பத்திரிகை அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்குள் நுழையும் போலீஸ் குற்றம்சாட்டப்பட்டவர்களை அடித்து, இழுத்துச் செல்வதெல்லாம் முடியுமா என்றும் யோசிக்க வைக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே சிறப்பு நீதிமன்றத்தைக் காட்டுகிறார்கள். இதற்கான பார்மாலிட்டியை எல்லாம் இயக்குநர் எப்படி மறந்தார்..? சட்டென்று வழக்கு வேகம் பிடித்து நகர்ந்து முடிவுக்கே வந்துவிடுவதெல்லாம் சூப்பர் பாஸ்ட் திரைக்கதையாக இருக்கிறது..!
ஏட்டு பாக்யராஜின் உதவியோடு தனியாக இவர் புலனாய்வு செய்வதும்.. அதர்வாவின் தாக்குதலில் இறந்து போனவர்களை பற்றி போலீஸ் எதையும் விசாரிக்காமல் இருப்பது பற்றியும் இயக்குநர் அப்படியே விட்டுவிட்டது ஏனோ..?
கருணாகரன், பாக்யராஜின் எதிர்பாராத முடிவும், தொடர்ச்சியான வில்லனின் அசுர வதமும் அதர்வா என்னும் ஹீரோவுக்காக செய்யப்பட்டிருக்கிறது..  வில்லனின் கோட்டைக்குள் அதர்வா வந்துவிட்டு தகவல்களை திருடுவதும்.. முடியாமல் ஹார்டுடிஸ்க்கையே கழட்டிக் கொண்டு செல்வதும்.. தொடர்ச்சியாக கேத்தரின் தெரியாமல் வந்து அப்பாவியாய் மாட்டுவதும்.. செமத்தியான காட்சிகள்.. விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் கடைசி சில நிமிடங்களில் இயக்குநரின் அருமையான இயக்கத் திறமையால் படத்தை சபாஷ் போட வைத்துவிட்டது..!
கள்ள நோட்டு போலவே இப்போதெல்லாம் படிக்காமலேயே காசை விட்டெறிந்தால் டாக்டரேட் பட்டம்கூட வீடு தேடி வந்து விடுகிறது. இந்த அளவுக்கு திருடர்கள் அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில் இது போன்ற விழிப்புணர்வு பார்வை நமக்கு அவசியம் தேவைதான்.
நமக்குத் தெரியாமலேயே நம் பெயரைச் சொல்லி கடன் வாங்கி நம்மை கடனாளியாக்கும் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. இந்தப் படம் அதை நமக்குத் சொல்லி நம்மை எச்சரித்துள்ளது. இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்..!
அதர்வாவின் கேரியரில் இதுவும் ஒரு முக்கியமான படமே..!

1 comments:

SK said...

Dear Saravanan please post your review for Bangalore Naatkal..