23-11-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது போல, அது தமிழ்ச் சினிமாவுக்கும் ராசியில்லாதது என்பது மீண்டுமொருமுறை இந்தப் படத்தின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது..!
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் செல்வராகவன், தமிழில் தற்போது காமெடி என்ற பெயரில் எடுக்கப்படும் மொக்கை படங்களே, தமிழ்ச் சினிமாவை சீரழிக்கின்றன என்று சீறித் தள்ளினார். ஆனால் இப்போது அவர் எடுத்திருக்கும் இந்தப் படம்தான், உண்மையிலேயே தமிழ்ச் சினிமாவின் பெரும் வர்த்தகத்தை ஒரே நாளில் தகர்த்திருக்கிறது.. தமிழ்ச் சினிமா மீதான ரசிகர்களின் ஆர்வத்தில் 10 டன் மண்ணள்ளிப் போட்டுப் புதைத்திருக்கிறது..!
எனக்கும் செல்வராகவனுக்கும் இடையில் எந்த வாய்க்கால், வரப்புத் தகராறும் இதுவரையிலும் இல்லை..! ஆகவே காசு கொடுத்து படம் பார்த்த ஒரு சாதாரண பாமர ரசிகனாக கேட்கிறேன்.. இந்தப் படத்தின் கதை என்ன ஸார்..? உங்களுக்கு மட்டுமே கதை புரிஞ்சா.. தெரிஞ்சா.. போதுமா..? எங்களுக்குப் படம் புரிஞ்சாத்தானே நாங்க வெளில போய் நாலு பேர்கிட்ட இதைப் பத்திச் சொல்ல முடியும்..! ஒண்ணுமே புரியலைன்னா நாங்க என்ன சொல்றது..?
புரியாதவகையிலேயே படத்தை எடுத்துவிட்டு இதைப் புரிந்து கொள்ளவும் ஒரு அறிவு வேண்டும்ன்னு மறைமுகமா சொல்றது எங்களையெல்லாம் அவமானப்படுத்துற மாதிரியில்லையா..? நான் புரிந்து கொண்ட வகையில் இது அந்தப் பாழாய்ப் போன காதலை, இன்னொரு கிரகத்துக்கே கொண்டு போய் கொடி பிடிக்குற படமா தெரியுது..? ஏன் ஸார்..? ஊர் உலகத்துல பிரச்சினையா இல்லை..!? இப்பத்தான் மங்கள்யான் கோளே, செவ்வாயை சோதனையிட போய்க்கிட்டிருக்கு.. நீங்க இந்த நேரத்துலயும் அந்த காதலைத்தான் இன்னொரு உலகத்துக்கு கொண்டு போய் காட்டணுமா..? என்னவோ போங்க..!
இரண்டாவது உலகத்துல இருக்கும் ஒரு பெண் தெய்வம்.. தன்னோட கிரகத்துல இருக்கிறவங்களை நல்வழிப்படுத்தணும்ன்னு நினைச்சு பூலோகத்துல இருக்குற காதலர்கள்ல, காதலியை கொன்னுட்டு.. காதலனை பேக்கப் பண்ணி கூப்பிட்டுக்குது.. அந்தக் காதலன் காதல்ன்னா என்னான்னு கேக்குற அந்த கெரகத்துக்குள்ள போயி.. அங்க இருக்கிறவங்களுக்கு காதல்ன்னா என்னன்னு சொல்லி புரிய வைச்சு ஒரு புதிய பாதையா அவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குறாராம்.. இந்தப் பின்னவீனத்துவமான சோகக் கதையை ஒரு பாமர ரசிகனுக்கு எளிமையா புரிய வைக்கணும்னா, சாலமன்பாப்பையா, ராஜா, ஞானசம்பந்தன் வகையறாக்காளால்கூட இப்போதும், எப்போதும் முடியாது..!
ஒரு உலகத்துல அனுஷ்கா டாக்டர். அவர்கூட வேலை பார்க்குற ஆர்யாவோட நல்ல குணங்களைப் பார்த்து அவரை கல்யாணம் செஞ்சுக்க பிரியப்படுறாங்க அனுஷ்கா. ஆர்யாகிட்ட பேசிப் பார்க்க அவர் மொதல்ல முடியாதுன்றார்.. அப்புறம் 3 ரீல் அந்து போனப்புறம் திரும்பி வந்து சரின்றாரு.. அதுக்குள்ள அனுஷ்காவுக்கு வேற இடத்துல மேரேஜ் நிச்சயமாகுது. ஆனா இப்ப ஆர்யா அதை ஏத்துக்காம கோவாவரைக்கும் அனுஷ்கா பின்னாடியே போய் வம்படியா ரகளை செஞ்சு அவரைக் காதலிக்க வைச்சர்றாரு.. ஆனா பாருங்க.. சோகம் பின்னாடியே வருது.
மேல இரண்டாவது கெரகத்துல இருக்குற பெண் தெய்வம்.. திடீர்ன்னு வேலையைக் காட்டி அனுஷ்காவை சாகடிக்குது.. கோவால இருந்து சென்னைக்கு வராம ஆர்யா அங்கேயே இருந்து அனுஷ்காவை தேடோ தேடுன்னு தேடிக்கிட்டிருக்காரு..! ஒரு நல்ல மழை நாள்ல சாகப் போகும்போது இரண்டாவது கெரகத்துல இருக்குற வேறொரு ஆர்யா.. வந்து இந்த ஆர்யாவை கூட்டிட்டு தன்னோட கெரகத்துக்கு போறாரு..!
அந்த கெரகத்துக்கு ஒரு மங்குனி ராஜா.. அந்த நாட்டு தளபதியோட பையன்தான் ஆர்யா. அங்கேயும் ஒரு அனுஷ்கா.. ரொம்ப தைரியசாலி. அதே சமயம் பிடிவாதக்காரி.. யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்னு நெஞ்சை நிமிர்த்தி சண்டை போடுற டைப்.. அந்த ஆர்யா அந்த அனுஷ்காவை பார்த்து ஜொள்ளுவிட்டு பின்னாடியே திரியறாரு.. அந்த ஊர் ராஜா அனுஷ்காவை பார்த்து தன்னோட அந்தப்புரத்துக்குத் தூக்கிட்டுப் போய் வைச்சுக்குறாரு.. ஒரு சிங்கத்தை கொன்னு.. அதோட தோலை ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டு வந்தா அனுஷ்காவை திருப்பித் தர்றதா சொல்றாரு..
கெரகத்து ஆர்யாவும் ரொம்ப தைரியமா போயி சண்டை போட்டு ஒரு மிருகத்தைக் கொன்னு தோலை கொண்டு வந்து அனுஷ்காவை கல்யாணம் செஞ்சுக்குறாரு.. இது பிடிக்காத அனுஷ்கா கல்யாணத்தன்னிக்கு ராஜாவை கொல்லப் பார்க்க. அதுனால ராஜா அனுஷ்காவை நாட்டைவிட்டு துரத்திர்றாரு.. காட்டுக்குள்ளேயே இருக்குற அனுஷ்காவை பார்க்க புருஷன் ஆர்யா அப்ப்ப்போ போயிட்டு வந்திட்டிருக்காரு..!
இந்த நேரத்துல நம்ம ஆர்யாவும் அங்கே போக.. அங்கேயும் ஒரு அனுஷ்காவை பார்த்து திகைக்க.. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்து பேசிக்கிட்டிருக்க.. இதைப் பார்த்த அந்த ஆர்யா கோபப்பட்டு அவங்களை சந்தேகப்பட.. இந்த நேரத்துல அந்த ஊர் தெய்வத்தை இன்னொரு கெரகத்துக்காரன் வந்து தூக்கிட்டுப் போக.. 2 ஆர்யா.. 1 அனுஷ்கான்னு மூணு பேரும் சேர்ந்து என்ன பண்றாங்கன்றதுதான் கடைசி 3 ரீலோட கதை..!
அங்கே நடப்பதையும், இங்கே நடப்பதையும் மாற்றி மாற்றி காட்டி முதல் பாதியிலேயே போரடிக்க வைத்துவிட்டார்.. கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதே ஆர்யா-அனுஷ்கா லவ் போர்ஷன் மட்டும்தான்.. அதிலும் அனுஷ்கா ஆர்யாவிடம் தனது விருப்பத்தைச் சொல்ல வரும் காட்சியில் அவருடைய தோழி, ஆர்யாவின் பாடி அனாடமியை பிட்டுப் பிட்டு வைக்கும் காட்சி.. அடுத்து அனுஷ்கா ஆர்யாவிடம் பேசும் காட்சி.. ஆர்யா மனசு மாறி அனுஷ்கா பின்னால் அலையும் காட்சிகள்.. கோவா பஸ்ஸில் இடம் பிடிக்கும் காட்சிகள்.. கோவாவில் மேடத்தை சைட் அடிக்கும் காட்சிகள் என்று முற்பாதியில் இவ்வுலக காட்சிகள் கொஞ்சம் கொஞ்சம் ரசிக்கத்தான் வைத்தன. ஆர்யா, சீனியர் டாக்டரை லவ்வும் காட்சிகளை சின்ன பட்ஜெட்டில் தெரியாத முகங்களை வைத்து எடுத்திருந்தால் கலாச்சாரம் கெட்டது என்று பலரும் கூக்குரல் இட்டிருப்பார்கள்.. ஆனால் இங்கே எடுத்திருப்பது கோடம்பாக்கத்து ரட்சகர் செல்வராகவனாச்சே..! யாரும் மூச்சுவிட மாட்டார்கள்..!
எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருச்சு.. வீட்ல பார்த்த பையன்.. எனக்கும் பிடிச்சிருக்குன்னுதான் ஆர்யாகிட்ட அனுஷ்கா சொல்றாங்க. அப்புறம் கோவாவுக்கு வரும் அந்த பையன், எனக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்கன்னு சொல்லிட்டுப் போயிடறாரு.. இவர் எஸ்கேப்பாகுறதால அனுஷ்கா, ஆர்யாவுக்கு ஓகே சொல்றாங்களாம்.. ஏதோ அவங்கவங்க சொந்த வாழ்க்கை மாதிரியே படத்தோட கதையையும் அனுபவிச்சு நடிச்சிருக்காங்க.. எடுத்திருக்காங்க..! இதுவரைக்கும்கூட ஓகேதான்.. ஆனால் இதுக்கப்புறம்தான் நமக்கு கெரகமே...?
படத்தோட இடைவேளை போர்ஷன்வரையிலும் பின்னணி இசையே இல்லை.. நம்ம ஆர்யாவுடனான காதலின் இறுதிக் கட்டத்தில் புல்வெளியில் நடந்துவரும்போதே பாடல் காட்சிகளின் ஊடே திடீர் திடீரென்று கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து தங்களது தீரா ஆர்வத்தைத் தணித்துக் கொள்ளும் அந்தக் காட்சி மட்டுமே அக்மார்க் செல்வராகவன் டைப் திரைக்கதை..!
இப்போது சாதாரண கேபிள் கனெக்சன்லேயே ஹாலிவுட் மூவி சேனல்கள் வருகின்றன.. வீட்டுக்கு வீடு ஹாலிவுட் படங்களை பார்த்து திகைத்துப் போயிருக்கிறார்கள்.. அதில் வரும் கிராபிக்ஸ் அனிமேஷன் காட்சிகளை பார்த்து பார்த்து சலிப்படைந்த நிலையில் இருக்கும் மக்கள்.. இதில் இருக்கும் ஹாலிவுட்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 5 சதவிகித அனிமேஷன் காட்சிகளைப் பார்த்து பிரமித்துப் போவார்கள் என்று செல்வராகவன் எப்படி நம்பினார்..?
ஹாலிவுட் தரத்துக்கு நம்மால் அனிமேஷனையும், கிராபிக்ஸையும் செய்யவே முடியாது.. அதுக்கே பட்ஜெட் 100 கோடியைத் தாண்டிவிடும்.. இந்த லட்சணத்தில் கிடைத்தவரையிலும் பார்ப்போம் என்றெண்ணி கலர் கிரேடிங் செய்தும், கிராபிக்ஸில் வண்ண வண்ணப் பூக்களை நிரப்பியும், கிஜினா தாள்களை பரப்பியும் ஒரு மெல்லிய செட்டப்பை செய்துவிட்டால் அது வேறொரு உலகமாக ஆகிவிடுமா..?
இரண்டாவது உலகம் எடுத்தது ஜார்ஜியாவிலாம்.. அந்த லொகேஷனை ஒளிப்பதிவாளர் ராம்ஜி தன்னால் முடிந்த அளவுக்கு அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். ஆனால் காட்சிக்கு காட்சி.. பிரேமுக்கு பிரேம் கிரேடிங் செய்தும், கிராபிக்ஸ் செய்தும் வைத்திருப்பதால் அதனையும் முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விட்டது..!
படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் தனது தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார் அனுஷ்கா.. வயதான தோற்றம் அவருக்கே மைனஸாகிவரும் நிலையில் ஹீரோயின் போஸ்ட்டில் இருந்து ரிட்டையர்டாகும் சூழலில் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. டாக்டர் அனுஷ்காவைவிடவும், இரண்டாவது கெரகத்தில் இருக்கும் அனுஷ்கா கடுமையாகவே உழைத்திருக்கிறார். அவர் போடும் சண்டை காட்சிகளாவது பரவாயில்லை.. ஆனால் எப்பவும் முகத்தை கடு கடுவென்று வைத்திருக்கும் அந்தச் சூழல்தான் பிடிக்கவேயில்லை..! அந்த அழகு முகத்தின் கடுமையை திரையில் பார்க்கவே என்னை போன்ற ரசிகர்களுக்கு மனமில்லை..!
டாக்டர் ஆர்யாவைவிடவும், வேற்று கிரக ஆர்யாதான் ரசிக்க வைக்கிறார்.. அப்போதைய உலகத்தின் மிருகங்கள் என்று சொல்லி ஓநாய் வடிவத்தில் இருக்கும் 2 விலங்குகளைக் காட்டி தனது திறமையைக் காட்டியிருக்கிறார்கள் கலை வல்லுநர்கள். காட்சிப்படி ஆர்யா இதில்தான் உசிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. அந்த சண்டை காட்சியில்.. இருப்பதை இல்லாததுபோல் நினைத்து நடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை திரையுலகினர் அறிவார்கள். மிகச் சிறப்பாகவே தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ஆர்யா..
பின்னணி இசை முற்பாதியில் இல்லாதது பெரும் சந்தோஷம்.. இரண்டாம் பாதியில் அதுவே கரைச்சலாகவும் இருக்கிறது..! பாடல்கள்தான் தமிழ்ச் சினிமாவின் பெரும் தடையென்று செல்வராகவனே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் தமிழ்ப் படங்களில் பாடல் காட்சிகளிலேயே பல கதைகளையும், திரைக்கதைகளையும் சொல்லும் வித்தைகள் இருப்பதினால் அது சாத்தியமாகமலேயே இருக்கிறது. இதில் செல்வராகவனும் பாடல் காட்சிகளின் மூலமாகவே திரைக்கதையை கொஞ்சம் நகர்த்தியிருக்கிறார்..!
Institute of Mathematics Science கிளாஸ் ரூமில் பாடத்துக்கு நடுவே தனது நண்பனுக்கு அட்வைஸ் செய்யும் அந்த நடிகர் கொஞ்சமே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்..! அதேபோல் ஆர்யாவின் தந்தை கேரக்டரில் நடித்திருப்பவரும்.. புதுமுகம் போலவே தெரியவில்லை..! ஆர்யாவின் அந்த வீட்டுப் பிரச்சினையை எந்தவிதமான மனத் தாக்கமும் வராத அளவுக்கு படம் பிடித்திருப்பது ஏன் என்று என்னால் யூகிக்க முடியவில்லை..
அனுஷ்கா இறந்த பின்பு ஆர்யா கோவாவில் இருந்து கொண்டு கையில் அனுஷ்காவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஏன் தேடுகிறார்.. ?அதுதான் சுடுகாட்டில் அவரை புதைக்கும்போது அருகில் இருப்பதாகவும் காட்டிவிட்டார்களே.. நாய் அழைத்துவரும்போது ஊரில் இருந்து போன்.. அப்பா இறந்துவிட்டார் என்று.. அதற்கும் பதில் இல்லை..! ஒருவேளை இந்தப் போர்ஷன் எனக்குத்தான் புரியலையோ..? கொஞ்சம் குழப்பமாகவேதான் இருக்கு..!
கனிமொழியே பாடலும், என் காதல் தீ பாடலுக்கும் தியேட்டரில் கை தட்டல்கள் பறக்கின்றன..! ஆனால் வெளியில் வந்தவுடன் மறந்துபோய்விட்டது..! சிறந்த ஒளிப்பதிவு.. படத்தை 2 மணி 40 நிமிடங்கள் 9 வினாடிகள் அளவுக்கு கிரிப்பாக செதுக்கிக் கொடுத்திருக்கும் எடிட்டர் கோலா பாஸ்கர்.. ஹாரிஸ் ஜெயராஜின் இசை.. அனிருத்தின் பின்னணி இசை.. தமிழ், தெலுங்கு இரண்டிலுமே மார்க்கெட் செய்ய உதவியிருக்கும் அனுஷ்கா.. பெரிய ஓப்பனிங்கிற்காக ஆர்யா.. இது எல்லாவற்றையும் தாண்டி இயக்கம் செல்வராகவன் என்ற பெயர் திரையில் தோன்றியதுமே கை தட்டும் ரசிகர்கள் கூட்டம்.. இத்தனையையும் வைத்துக் கொண்டு இந்தப் படம் நிச்சயமாக ஒரு மங்காத்தா ஆடியிருக்க வேண்டும்.. ஆனால் கதை என்ற வஸ்து இல்லாததால் ஆட முடியாமல் நொண்டியடித்துவிட்டது..!
ஜார்ஜியா மக்கள் அதிகம் பேரை நடிக்க வைத்ததும், கிராபிக்ஸ் காட்சிகளும்தான்.. படத்தின் பட்ஜெட்டை அவர்கள் சொல்லும் கணக்குப்படி 67 கோடியாக உயர்த்திவிட்டது என்கிறார்கள்.. இப்போது, இதில் பாதியாவது தேறுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான்..! முதலிலேயே சொன்னதுபோல மவுத்டாக்கில் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமில்லை என்பதால் இனிமேல் செல்வராகவன் என்ற பிராண்ட் பெயருக்காக தியேட்டருக்கு வரும் கூட்டத்தினர் திரண்டு வந்தால்தான் படம் பிழைக்கும் என்ற நிலைமை..!
நேற்றைக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் மெய்யழகி என்ற படம் தரத்தில் நிச்சயம் இதைவிட உயர்வான படம்தான். ஆனால் அதன் ஆக்டர்ஸ் வேல்யூ மிக்க் குறைவாக இருப்பதால் தியேட்டர்கள் கிடைக்காமல் கிடைக்கின்ற தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். இரண்டாவது உலகத்தின் கதையைவிடவும் மெய்யழகி படத்தின் கதை மிக மிக உயர்வானது..! அந்தப் படம் தமிழ்ச் சினிமா ரசிகனின் கண்ணில் பட வேண்டிய படம். ஆனால் இந்த பெருவணிகச் சூழலில் அந்த சின்ன பட்ஜெட் படம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது..! ஒரு ஊரில் 4 தியேட்டர்கள் இருந்தால் அந்த நான்கிலுமே இரண்டாவது உலகத்தையே திரையிட்டிருக்கிறார்கள். இதனால்தான் 2 நாட்களுக்கு முன்பாக அவர்கள் மீடியாக்களில் புலம்பித் தள்ளினார்கள். இப்படியிருந்தால் சின்ன பட்ஜெட் படங்கள் எப்படிப் பிழைக்குமென்று..?
67 கோடியை முழுங்கிவிட்டு வந்திருப்பதால் படம் நல்லாயிருக்கோ இல்லையோ.. முதல் மூன்று நாட்களில் விமர்சனத்தை எதிர்பார்க்காமல் வரும் கூட்டம் கொடுக்கிற பணத்தை அள்ளிவிட்டு தப்பித்துவிட நினைக்கும் பெரும் தயாரிப்பாளர் முன் மெய்யழகி போன்ற சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர் கை கட்டி நிற்கும் சூழல்.. தயாரிப்பாளர் சங்கம் கண்டும் காணாததுபோல இருப்பதினால், மெய்யழகி பெருவாரியான ரசிகர்களை சென்றடையப் போவதில்லை என்பதும் திண்ணம்..!
ஒருவேளை ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு நேர்ந்த கதிபோல இரண்டாவது உலகத்தை உடனே தூக்க வேண்டும் என்ற சூழல் வந்தால்.. அதற்குப் பதிலாக மெய்யழகியை திரையிட்டு கொஞ்சம் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டுமாய் திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்..!
காமெடி என்ற பெயரில் தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாத படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று புகார் சொல்லும் செல்வராகவன், முதலில் இந்தப் படத்தை இன்னொரு முறை பார்த்துவிட்டு மனசாட்சியோடு பேசட்டும்..! ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பிரமோஷனின்போது "இதுதான் நான் எடுக்கும் முதல் தமிழ்ச் சினிமா..." என்றார். ஆனால் இப்போது, "ஆயிரத்தில் ஒருவன் படத்தை தீ வைத்துக் கொளுத்த வேண்டும்" என்று பயமுறுத்துகிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. அடுத்த படம் செய்யும்போது இதே "இரண்டாம் உலகத்தை நான் எடுத்திருக்கவே கூடாது.. பொய்யான படம்.." என்று தனக்குத்தானே வாக்குமூலமும் கொடுப்பார்..!
எது நல்ல சினிமா.. எது கெட்ட சினிமா என்பது அவரவர் பார்வையிலும், அவரவர் ரசிப்புத் தன்மையிலும்தான் இருக்கிறது.. ஒருவரின் ரசனை அடுத்தவரையும் ஈர்த்துவிடாது. ஆனால் ஒரு வெற்றிப் பட இயக்குநரின் ரசனை, பல லட்சம் ரசிகர்களை ஒன்றிணைப்பதாலேயே அந்தப் படம் வெற்றிப் படமாகிறது..! அந்த வெற்றியை இதற்கு முன்னும் தமிழ்ச் சினிமாவில் ருசித்திருக்கிறார் செல்வராகவன். அப்போதெல்லாம் வராத அவரது கலையார்வம் இப்போது வருவதற்கு காரணங்களை கண்டுபிடிக்கத் தேவையே இல்லை. மைக் போபியா என்பதும், தன் முகத்தைப் பார்த்தவுடன் கை தட்டும் ரசிகனையும் பார்த்தவுடன் தான் பேசுவதெல்லாம் சரியாகவே இருப்பதாகத்தான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தோன்றும்..!
இந்த புகழ் போதையில் சிக்காதவர்களே கிடையாது.. இதில் இப்போது லேட்டஸ்ட் செல்வராகவன்தான்..! இவருடைய கணிப்புப்படி இந்த 67 கோடி கலையுலகத்திற்கு பிவிபி கம்பெனியினர் செய்த தியாகமாகவே கணக்கில் கொண்டு போய்விடலாம்..! போதாக்குறைக்கு இந்தப் படத்திற்கு அடுத்த பாகமும் வந்தாலும் வரலாம் என்று சொல்லி இப்போதே பயமுறுத்தியிருக்கிறார்..! அதுக்கு எந்த இளிச்சவாய தயாரிப்பாளர் சிக்கப் போகிறாரோ தெரியவில்லை..!
ஆனாலும் இவ்வளவு காஸ்ட்லியாக ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்ச் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதற்குப் பதிலாக, இந்தப் பணத்தில் பல வீ.சேகர்களும், டி.பி.கஜேந்திரன்களும் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்தால் அதுவே நிச்சயம் தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்த வளர்ச்சியாகத்தான் இருக்கும்..! இதையும் செல்வராகவன் புரிந்து கொள்ள வேண்டும்..!
போறவங்க போய்க்குங்கப்பா..!