04-04-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துயரமும் கலந்துதான் இருக்கும். மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கும் தருணங்களே, நமக்கு சோகத்தைத்தான் தரும். சோகத்தை அதே கணத்தில் திரும்பிப் பார்த்தால் சொல்ல முடியாத துயரத்தைத்தான் தரும்..! வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு உணர்த்தத்தான் கஷ்டமான சூழல் ஏற்படுகிறது என்பார்கள்..! சிலர் இதனை உணர்ந்து தப்பிக்கிறார்கள்.. பலர் உணராமலேயே தாண்டிச் செல்கிறார்கள்..!
3 படத்தை பார்த்தபோது எனக்குள் எழுந்த ஒரு நெருங்கிய உணர்வைப் புறக்கணிக்க முடியாமல் 3 நாட்களாக கஷ்டப்பட்டுவிட்டேன். என்ன செய்தும் அதனை மறக்க முடியவில்லை..!
1 அண்ணன், 2 அக்காள்கள் மத்தியில் வாழ்ந்தவன் நான். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த ஆசான்கள் மூவர். முதல் நபர் எனது தந்தை திரு.சவடமுத்து. இரண்டாமவர் திருமதி திருமலையம்மாள் சவடமுத்து, எனது தாய். மூன்றாமவர் எனது இரண்டாவது சகோதரி செல்வமணி.
எனது அண்ணனுக்கும் எனக்குமான வயது இடைவெளி 15 என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. எனது மூத்த அக்கா ஈஸ்வரிதான் எனது வீட்டையே தாங்கிப் பிடித்தவர். நான் பிறந்தவுடனேயே எனது அம்மாவின உடம்பு வீக்காகி நோயாளியாகிவிட.. அப்போதுதான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மூத்த அக்காள் எங்களது நலனுக்காக தனது பள்ளிப் படிப்பை தியாகம் செய்துவிட்டு கரண்டியையும், வீட்டுப் பொறுப்பையும் கையில் எடுத்தார்.. இப்போதுவரையிலும் அடுத்தவருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன் எனது பெரியக்கா.. என்னளவில் எனது இன்னொரு தாய் இவர்தான்..!
எனது இரண்டாவது அக்கா செல்வமணி மிகவும் தைரியமானவர். பட்பட்டென்று பேசும் குணமுடையவர்..! எனக்கும் இந்த அக்காவுக்கு சின்ன வயதில் இருந்தே ஆகாது..! எப்போதும் அடிதடியாகவே இருப்போம்..! இப்போதும் ஒரு விஷயம் நியாபகத்திற்கு வருகிறது..! சின்ன வயதில் 2 அல்லது 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் தண்ணீர் தாகமெடுத்தால், பாயில் இருந்து எழுந்து உட்கார்ந்து கண்ணை திறக்காமலேயே “ஆயா.. ஆயா.. தண்ணி..” என்று குரல் கொடுப்பேன். எனது மூத்த அக்காளை எனது குடும்பமே “ஆயா..” என்றுதான் அழைக்கும்..! எனது அம்மா படுத்தபடியே பெரிய அக்காவை எழுப்பிவிடும்.. “ஈஸா.. தம்பி கூப்பிடுறான் பாரு.. தண்ணி கொடு..” என்று சொல்லும்.. தண்ணீர் சொம்பு சின்னக்காவின் பக்கத்தில் இருக்கும். பெரியக்கா சின்னக்காவிடம் “தண்ணியை எடுத்துக் குடுடி..” என்று சொல்லும்.. சின்னக்கா சொம்பை எடுத்து என் வாயருகே நீட்டும்.
சொம்பைப் பிடித்திருக்கும் அந்தக் கைகளை பிடித்துப் பார்ப்பேன். என் பெரியக்கா எப்பவும் கண்ணாடி வளையல்தான் அணிந்திருக்கும். சின்னக்கா ரப்பர் வளையல்தான் அணிந்திருக்கும்.. நான் பிடித்த கையில் கண்ணாடி வளையலாக இல்லாவிட்டால் “போ.. இது பிசாசு.. எனக்கு வேணாம்.. எனக்கு ஆயாதான் வேணும்..” என்று அந்த நேரத்திலும் செல்லம் கொஞ்சுவேன்.. சின்னக்கா தலையில் கொட்டும். “இந்த நேரத்துலேயும் கோபத்தை பாரு..” என்று சொல்லிவிட்டு, “இந்தா.. நீயே உன் தம்பிக்கு கொடு.. பிசாசு பய..” என்று சொல்லி பெரியக்காவை எழுப்பிவிடும். பெரியக்கா எழுந்து “ஏண்டா படுத்துற இப்படி..?” என்று தலையைச் சொரிந்து கொண்டே ஒரு கையால் சொம்பை எடுத்து என் வாயில் வைக்க.. அதன் இரண்டு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு தண்ணீரைக் குடித்துவிட்டு அப்படியே கண்ணைத் திறக்காமலேயே திரும்பவும் படுத்துக் கொள்வேன்..! திரும்பவும் பெரியக்கா என்னை எழுப்பி சேலை முந்தானையால் வாயைத் துடைத்துவிடும். இதுவரையிலும் கண்ணைத் தொறக்காமலேயே அந்த சுக அனுபவத்தை அனுபவிப்பேன்..! இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் முட்டுகிறது..! எத்தனை, எத்தனை அன்பு நிறைந்த நாட்கள் அவை..? எத்தனை பாசத்தை என் அக்காக்கள் என் மீது காட்டியிருக்கிறார்கள்..?
காலம் விரைந்து செல்ல.. தொண்டை புற்று நோயினால் என் அப்பாவை இழந்த நிலையில், என் இரண்டாவது அக்கா செல்வமணிக்கு மதுரையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கிளார்க்காக போஸ்ட்டிங் கிடைத்தது..! சந்தோஷப்பட்டது குடும்பம்.. இப்போது அண்ணனின் ஒரு சம்பாத்தியத்தோடு கூட ஒன்று கிடைத்ததே என்றுதான்.. எனது பெரியக்காவுக்கு அப்போது திருமணமாகிவிட்டது..!
நாங்கள் அம்மாவுடன் மதுரை தபால் தந்தி நகருக்கு குடிவந்தோம்.. அங்கே திடீரென்று அம்மாவுக்கு கேன்சர் வந்துவிட.. அம்மாவை பரமாரிக்க வேண்டி ஒன்றரை வருட காலம் எங்கேயும் வேலைக்கே போக முடியாமல் தவித்துப் போய், அந்த எண்ணமே இல்லாத அளவுக்கு வீட்டுக்காக வாழ்க்கைப்பட்டேன். அது பெரிய சோகக் கதை.. பின்னாளில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்..!
அம்மாவும் மறைந்த பின்பு, நான், சின்னக்கா, அண்ணன் மூன்றே பேர்தான் வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியிருந்தோம். இப்போது அண்ணனுக்கு திருமணமானது.. அடுத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் சின்னக்காவுக்கு கல்யாணமானது. இவரது கல்யாண வாழ்கையில் கிடைத்த மாமாவின் மூலம்தான் எனக்கு கணினியின் அறிமுகமே கிடைத்தது..!
அம்மா இருந்தவரையிலும் அம்மாவை பகல் வேளைகளில் நான்தான் பரமாரிப்பேன்.. இதற்காக செல்வா அக்காவும், அண்ணனும் நான் கேட்கும்போதெல்லாம் பணத்தைக் கொடுப்பார்கள். அப்புறமும் வீட்டுச் செலவுக்காக கொடுக்கும் பணத்திலும் மிச்சப் பணம் நம்ம பாக்கெட்டுக்குத்தான்..!
இப்போது சின்ன அக்காவுடன் நட்பு இறுகியது. சின்ன வயதில் இருந்த காரணமே இல்லாத குரோதமும், பகையும் போய், நட்பும், அன்பும், பாசமும் எங்கள் இருவருக்குமிடையிலேயே அதிகமானது இந்தக் காலக்கட்டத்தில்தான். என்னுடைய 2-வது மாமாவின் மூலமாக கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி பற்றி கேள்விப்பட்டு அவருடைய உறவுக்காரரின் கம்ப்யூட்டர் சென்டரில் டேட்டா என்ட்ரி கற்றுக் கொண்டேன். அங்கிருந்துதான் எனக்கு கணினி அறிவு அறிமுகம். அத்தோடு அப்போதைய கணினி உலகின் அடிப்படை படிப்புகளான பேஸ்கல் மற்றும் டிபேஸ், பாக்ஸ்புரோ வரையிலும் அங்கேதான் கற்றுக் கொண்டேன். இதற்கான செலவு முழுவதையும் செல்வாக்காதான் கொடுத்தது..
அண்ணனும் அதே பி.எஃப். அலுவலகத்தில்தான் பணியாற்றி வந்ததினால் சொக்கிகுளத்தில் இருக்கும் ஆபீஸ் குவார்ட்டர்ஸில் இருவரும் அருகருகேதான் குடியிருந்தார்கள். நான் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து தினமும் இரண்டு பேர் கொடுக்கும் டிப்ஸில் பொழப்பை ஓட்டிக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வம் அதிகமாகி பின்பு வெறியாகி கணினியை சற்று ஓரம் கட்டிவிட்டு முழு நேரமும் சினிமா பைத்தியமான பின்பு, மெட்ராஸ் சலோ என்று ஒரே நாளில் முடிவெடுத்து கிளம்பி வந்தேன்..!
இந்த நேரத்தில் எனது 2-வது மாமாவைப் பற்றியும் சொல்ல வேண்டும். தங்கமான மனிதர்.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்.. டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்..! அதன் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்..! நான் சென்னை வந்து முதல் 2 வருடங்கள் நான் படித்த அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து பின்பு தமிழன் எக்ஸ்பிரஸில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்த முதல் சம்பவம் நடந்தது..!
சின்னக்காவுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தது. என்ன விஷயம் என்று விசாரித்தபோது புதுமையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். “ஒரு வேலையும் செய்றதில்லை. போட்டது போட்டபடி அப்படியே இருக்கு.. வெறிச்சு பார்த்தபடியே உக்காந்திருக்கு. புள்ளை அழுகுது.. அதை கூட பார்க்க மாட்டேங்குது..” என்று எதை, எதையோ வீட்டினர் சொன்னார்கள்.
நான் மதுரை வந்து சின்னக்காவை பார்த்தபோது ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.. எப்போதும் “வாடா எருமை..” என்றழைக்கும் பாசமும், உற்சாகம் குன்றிப் போய் “வாடா..” என்ற ஒற்றை வரியோடு நிறுத்திக் கொண்டது.. அதேபோல் வீட்டு வேலைகளை செய்வதிலும், பிள்ளையை கவனிப்பதிலும் சுணக்கம் தெரிந்தது.. மாமாவும் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் பேசிப் பார்த்தபோது தனக்கு ஒன்றுமேயில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியது அக்கா..!
ஒரு மாதம் கழித்து உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கம்பம் சென்றபோது சின்னக்காவின் மாமனார் வீட்டிற்குச் சென்றேன். அப்போது லீவுக்காக சின்னக்காவும் அங்கே வரப் போவது தெரிந்துதான் சென்றேன். அங்கே அக்காவைப் பார்த்தபோது அதிர்ச்சி.. கழுத்தில் பாதி அறுபட்ட நிலையில் காயம் இருந்த்து. “என்னக்கா..?” என்று விசாரித்தபோது ஒரு மதிய வேளையில் தூக்கில் தொங்கி சாக முயற்சித்ததாக மாமாவும், அவரது வீட்டாரும் சொன்னார்கள். எனது அண்ணனும், அண்ணியும் “என்ன பிரச்சினைன்னு உங்கக்கா சொல்ல மாட்டேங்குது..” என்றார்கள்.. கல்யாணத்திற்கு வந்த உற்சாகம் குன்றிப் போய் அக்காவை பக்கத்தில் உட்கார வைத்து “என்னக்கா பிரச்சினை..?” என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். ஒரு வரியில் சொன்னது.. “தூக்குல தொங்குணேண்டா.. எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாங்கடா..” என்றது.. புரியவே இல்லை..!
எனது மாமா அக்காவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார். இங்கே கீழ்ப்பாக்கத்தில் ஒரு லேடி டாக்டரிடம் காட்டி சிகிச்சை பெற்றார். இங்கே வந்தபோதும் ஒருவித அலட்சியப் போக்கும், கிறுக்குத்தனமான பார்வையும் அக்காவிடம் தென்பட்டது.. சென்னை வந்து சென்ற ஒரு மாதத்திலேயே இரவு நேரத்தில் தூங்குவதற்காக கொடுத்த மாத்திரைகளை மொத்தமாக முழுங்கி உயிருக்குப் போராட்டமாக மீண்டும் ஒரு முறை மருத்துவனையில் சேர்க்கப்பட்டார் அக்கா. இந்த முறையும் நான் ஓடோடிச் சென்று பார்த்தபோது, அதே சிரிப்போடு “மொத்தத்தையும் முழுங்கிட்டேண்டா.. இப்பவும் காப்பாத்திட்டாங்க..” என்றது..!
மருத்துவர்களோ “அக்காவின் மூளையில் அதிர்ச்சியால் ஏதோ லேசான படலம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் சிறு மாறுதல்.. இது கொஞ்சம், கொஞ்சமாத்தான் மாறும்.. கவனிப்புலேயே வைச்சிருங்க.. இல்லைன்னா உங்களுக்காத்தான் ஆபத்து..” என்று எச்சரித்தார்கள். இதன் பின்பு அக்காவை ஷிப்ட் டைம் போட்டு யாராவது ஒருத்தர் பாதுகாக்க வேண்டியிருந்தது.. இதில் ஸ்கூலுக்கு போகும் பெண் குழந்தையும் இருந்தது.. மாமா வீட்டினர் அக்காவையும், குழந்தையையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். இடையில் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் சென்று பார்த்தனர்.. எங்கெங்கு இதற்கெல்லாம் ஆன்மிக மருத்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் பயணப்பட்டார் அக்கா. வீட்டைக்கூட மாற்றிப் பார்த்துவிட்டார்கள். அலுவலகத்தில் இதற்காகவே பேசி, அதே குவார்ட்டர்ஸில் வேறு பிளாக்கிற்கு குடியேறினார் அக்கா..!
இதற்கிடையில் வேலைக்கும் சென்று வந்து கொண்டிருந்தார் அக்கா. அலுவலகத்தில் அவர் மீது எந்தக் குற்றமும் யாரும் சொல்லவில்லை. எப்போதும் போலவேதான் இருந்தார். இடையில் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் திருச்செந்தூரில் இருக்கும் எங்களது குடும்ப நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மாமா பதறியடித்துபோய் அவரை அழைத்து வந்தார். “ஏன் போனார்..? எதற்கு போனார்..?” என்ற கேள்விக்கெல்லாம் விடையே கிடைக்கவில்லை. கேட்டு கேட்டு எங்களது வாய் வலித்ததுதான் மிச்சம்..!
அடுத்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட மாமா வீட்டினர் வெறுப்பாகிப் போய்விட்டார்கள். நானும் அருகில் அமர்ந்து எப்படியெல்லாமோ அன்பாகப் பேசியும், பணிவாக நடந்தும் என்ன காரணம் என்பதைச் சொல்லவே இல்லை.. அல்லது சொல்லத் தெரியவில்லையோ எனக்குத் தெரியாது..!
இப்போது நான் விருப்பப்பட்டு சென்னையில் “டாக்டர் ருத்ரனிடம் அழைத்துச் செல்லலாம்..” என்று சொன்னேன். மாமா மிகவும் சந்தோஷமாக அக்காவை அழைத்துக் கொண்டு வந்தார். கோடம்பாக்கத்தில் அப்போது இருந்த பழைய கிளினிக்கில் ருத்ரன் ஸாரிடம் காண்பித்தோம். சோதனை முடிந்தபோது செல்வாக்கா அழுது கொண்டேதான் வெளியே வந்தது.. அதன் பின்பு எங்களுடன் பேசிய ருத்ரன் ஸார், “நிறைய பேருக்கு இருக்கிறதுதான்..! எப்படி வரும்னு சொல்ல முடியாது..! மனநிலை தடுமாற்றம்.. இவங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியா இருக்க விடாதீங்க.. எப்போதும் சந்தோஷமான மனநிலைல வைச்சுக்குங்க.. கொஞ்சம், கொஞ்சமாத்தான் சரியாகும்..” என்று சொல்லி கை நிறைய மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பாண்டி பஜாரில் அக்காவுக்கும், பிள்ளைக்கும் டிரெஸ் எடுத்துக் கொடுத்து சந்தோஷமாக அவர்களை மதுரைக்கு வழியனுப்பி வைத்தேன்.
அந்த நேரத்தில் ஒரு புதிய திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. காமெடி சப்ஜெக்ட்.. என்ன ஆனாலும் சரி.. திரையுலகில் இதன் மூலம் கால் பதித்தால் போதும் என்று நினைத்து, 2003-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நான் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன். அதற்கு மறுநாள் ஆந்திரா, நெல்லூரில் அப்போது குடியிருந்த எனது உயிர் நண்பன் குமரேஷ்பாபுவின் வீட்டிற்கு சென்றேன். அங்கே உட்கார்ந்து கதை எழுதலாம் என்று நினைத்தேன்.
ஜனவரி 10-ம் தேதி இரவில் எனது அக்காவுடன் தொலைபேசியில் பேசினேன்.. “நல்லா இருக்கேன். பாப்பா நல்லாயிருக்கா.. மாமா வேலைக்கு போயிட்டார். நான் மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடுறேன்.. தேனில உனக்கு ஒரு பொண்ணு சொல்லியிருக்காங்க.. நான் இந்த வாரம் ஊருக்கு போனா அது விஷயமா மாமா, அத்தைகிட்ட பேசிட்டு வரேன்.. நீயென்ன திடீர்ன்னு ரிஸைன் பண்ணிட்டேன்னு சொல்லுற.. பொண்ணு வீட்டுக்காரங்க கேட்டா நான் என்ன்ன்னு பதில் சொல்றது..?” என்றெல்லாம் தெளிவாக விளக்கமாகப் பேசியது அக்கா..!
“நான் நெல்லூர்ல கதை எழுதி முடிச்சிட்டு, நேரா மதுரைதான் வர்றேன்.. அப்போ அது பத்தி பேசிக்கலாம்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். மறுநாள் மதியம் 1.30 மணியிருக்கும். திண்டுக்கல்லில் இருக்கும் எனது மாமா ஒருவர், எனக்கு போன் செய்து அந்தத் துயரச் செய்தியை சொன்னார்.. “செல்வா சூஸைட் பண்ணிருச்சுப்பா.. உடனே கிளம்பி வா..” என்றார்..
எனது ஆதர்ச கனவான சினிமாவுக்கு கதை எழுதுறோம் என்ற உச்சத்தில் இருந்த சந்தோஷம், அந்த ஒரே நொடியில் தரைமட்டமானது..! கிட்டத்தட்ட 18 மணி நேரங்கள் பயணித்து மறுநாள் மதியம் 1 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் கருகிப் போன நிலையில் எனது செல்வாக்காவை பார்த்தபோது நேர்ந்த துயரம், இப்போதும் நான் திரும்பிப் பார்க்க நினைக்காத ஒன்று..! ஆனால் இந்தத் துயரத்தைத்தான் மீண்டும் நினைக்க வைத்துவிட்டது கடந்த வெள்ளியன்று இரவு சத்யம் தியேட்டரில் நான் பார்த்த 3 திரைப்படம்..!
என்ன காரணம் என்று இன்றுவரையிலும் தெரியவில்லை. அக்கா ஆசைப்பட்டது போன்ற கணவர்.. அழகான குழந்தை.. கை நிறைய சம்பளம்.. சொந்த வீடு வாங்கியாச்சு.. வேறென்ன வேண்டும்..? எப்படி அந்த நோய் அவரைத் தாக்கியது.. அவரது 30 வயது வரையிலும், எங்களுடன் இருந்தவரையிலும் நாங்க பார்த்திருக்காத புதிய தோற்றத்தை சின்னக்காவிற்குள் தோற்றுவித்தது எப்படி..? ஒன்றுமே புரியவில்லை..!
பி.எஃப். அலுவலகத்தில் அப்போது லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடிய தருணம். லஞ்சம் வாங்குபவர்களை “உஜாலா கோஷ்டி” என்பார்கள். எங்களது குடும்ப நண்பர்களான அலுவலர்கள் பலர் இந்த லஞ்ச வழக்கில் சிக்கி சஸ்பெண்ட்டானார்கள். அதில் ஒரு விஷயத்தை மிக அருகில் இருந்து பார்த்தாராம் செல்வா அக்கா. சஸ்பெண்ட்டானவர், சஸ்பெண்ட் லெட்டரை வாங்கியவுடனேயே கமிஷனர் அறையில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவரை தூக்கி வந்து மயக்கம் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது செல்வா அக்காதானாம்.. இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே துவக்க நிலையாக திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் அலுவலகத்தினர். வேறேதுவும் தெரியவில்லை..
சிந்தனை.. சிந்தனை.. சிந்தனை.. எப்போதும் தலையில் கை விரல்களால் வருடியபடியே அமைதியாக உட்கார்ந்திருக்கும். “என்னக்கா..?” என்று கேட்டால் “ஒண்ணுமில்ல..!” என்று சொல்லிவிட்டு படுக்கப் போய்விடும். ஆனால் தூங்காது.. கொட்ட, கொட்ட முழிச்சிருக்கும். கண்களை மூடினாலும் இமைகள் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கும். மாத்திரைகள் சாப்பிட்டதால் தொடர்ந்து உடல் குண்டாகி முகமும் உப்பிப் போய்விட்டது. அது தொடர்பான பிரச்சினைகளும் வேறுவிதமாக வர.. பாவம் என்னுடைய மாமாதான் தவியாய் தவித்துப் போனார். அவரும் எவ்வளவுதான் பார்ப்பார்..?
2003 ஜனவரி 13-ம் தேதியன்று காலையில் மாமா வேலைக்குப் புறப்பட்டு போகும்வரையிலும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது அக்கா. “கேஸ் தீர்ந்து போச்சு.. மண்ணெண்ணைய் வாங்கிட்டு வாங்க..” என்று சொல்ல.. மாமாவும் எந்த சந்தேகமும் இல்லாமல் 10 லிட்டர் மண்ணெண்ணையை வாங்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு.. மதியம் துணியெல்லாம் துவைத்திருக்கிறார் அக்கா. எதிர் வீட்டினர் இதுவரையிலும் “உங்கக்கா நல்லாத்தான் இருந்துச்சு..” என்கிறார்கள்.
மதியம் 1 மணிவாக்கில்தான் திடீரென்று மண்ணெண்ணெய் கேனைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று மொத்தத்தையும் தலையில் கொட்டி தீக்குச்சியால் பற்ற வைத்துக் கொண்டு அப்படியே குப்புறப் படுத்திருக்கிறார் அக்கா..! ஒரு சின்ன அலறல் இல்லை.. ஓட்டம் இல்லை..! வெறும் புகை மட்டுமே அந்த மாடியில் இருந்து எழும்பியதாலும், அந்த மொட்டை வெயிலில் யாரும் வெளியில் வராததாலும் கவனிக்க ஆளே இல்லை.. 2 மணிவாக்கில் கீழ்வீட்டுக்காரர்கள் துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்தபோதுதான் கருகிப் போன அக்காவை கண்டிருக்கிறார்கள்..!
தற்கொலை என்பதெல்லாம் அதீதமான உணர்ச்சியின் தூண்டுதல்... அந்த நிமிடத்திய முடிவு என்பதெல்லாம் போய்.. போயே தீர வேண்டும் என்று நினைப்பதெல்லாம் மன நோய்தான். ஆனால் இது எப்படி வருகிறது..? ஏன் வருகிறது..? என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை. பணக்காரர், ஏழை என்றால்லாம் பாகுபாடு பார்க்காமல் இந்த நோயினால் அழிந்தவர்கள் ஏராளம்..! இது போன்ற பாதிக்கப்பட்ட மனநிலை உடையவர்களை 24 மணி நேரமும் கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அது கடைசியில் தற்கொலையில்தான் முடியும்..!
நடிகை ராதிகாவின் முன்னாள் ஹேர் டிரெஸ்ஸர்கூட இந்த மாதிரியான மன நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லியிருக்கிறார்..! ஐஸ்வர்யாவுக்கு நன்கு தெரிந்த யாராவது ஒருவர் இப்படி தனது வாழ்க்கையைத் தொலைத்திருப்பாரோ என்னவோ..? மிகத் தத்ரூபமாக ஒரு மன நோயாளியின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டியிருக்கிறார்..!
ஒரு திரைப்படம் நாம் பார்த்த, சந்தித்த விஷயங்களை கிளறிவிட்டாலே அது நிச்சயம் குறிப்பிடத்தகுந்த படம்தான்.. அந்த வரிசையில் இந்தப் படம் என் வாழ்க்கையிலும் நான் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துவிட்டது..!