முரண் - சினிமா விமர்சனம்

30-09-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள்.. ஏதோ ஒரு சம்பவம்.. யாரோ ஒருவரால் நமது நிம்மதி தொலைந்தது அல்லது வசந்தம் வந்தது என்று சொல்லக் கேட்டிருப்போம். அல்லது நமக்கே அது போன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கும். கிடைத்த அனுபவத்தினால் இனிமை கிடைத்திருக்குமானால் அதில் சுவாரஸ்யம் அதிகமிருக்காது. ஆனால் அதுவே துன்பமயமெனில்.. இதைதான் ஊரே மெல்லும்.. அப்படியொரு அனுபவச் சிக்கலுக்குள்ளாகும் நந்தா என்ற சேரனின் கதைதான் இந்த முரண்.


இந்தப் படம் தமிழுக்குப் புதியதுதான்.. இப்படியொரு கதையை படமாக்க துணிந்த சேரனை முதலில் வஞ்சகமில்லாமல் பாராட்டிவிடுவோம்..! அடுத்த பாராட்டு படத்தினை சேரனிடம் இருந்து வாங்கி வெளியிட்டிருக்கும் யு டிவி நிறுவனத்தினருக்கு..! 

சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டி தவம் கிடந்து வாய்ப்பு பெற்றிருக்கும் சேரன், பெங்களூரில் தயாரிப்பாளருடன் சந்திப்பு முடிந்து சென்னை திரும்புகிறார். வரும் வழியில் கார் சிக்கலுக்குள்ளாகி நின்றுவிட எதிர்ப்படும் காரில் லிப்ட் கேட்டு தனது பயணத்தைத் தொடர்கிறார். அதுதான் அவரது அடுத்தடுத்த வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறது.

காரோட்டியான அர்ஜூன் என்னும் பிரசன்னாவால் மூளைச் சலவைக்குள்ளாக்கப்படுகிறார் சேரன். விளைவு.. தனக்கு பணம், அந்தஸ்து கொடுக்காமல் பிச்சைக்காரனாக நடத்தும் தன் அப்பாவை சேரன் கொல்ல வேண்டும் என்றும், சேரனுக்கு விவாகரத்து கொடுக்காமலும், அவருடன் சேர்ந்து வாழாமலும் டார்ச்சர் செய்யும் அவரது மனைவியை நான் கொல்வேன் என்று சேரனுடன் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப் போடுகிறார் பிரசன்னா.. பிரசன்னா சொன்னதைச் செய்தாரா என்பதுதான் கதை..!

இந்தப் படத்தில் பிரசன்னாதான் நடிக்க வேண்டும் என்று இதன் இயக்குநர் ராஜன் மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார். தான் கதை சொன்ன அத்தனை தயாரிப்பாளர்களிடமும் பிரசன்னா நடிக்கவில்லையெனில் இந்தக் கதையை நான் இயக்க மாட்டேன் என்று  சண்டையே போட்டிருக்கிறார் இயக்குநர்.

சேரனிடமும் பிரசன்னா இருந்தால் மட்டுமேதான் இந்தக் கதையை படமாக்க முடியும் என்று உறுதியாக இருந்ததால், அந்த உறுதிக்காகவே சேரன் தனது சொந்த பேனரில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். 75 சதவிகிதம் படம் முடிவடைந்த பின்பு, யு டிவியின் கைகளுக்கு இந்தப் படம் கை மாறிவிட்டது. யு டிவியின் தனஞ்செயன்கூட முன்பே கதை கேட்டபோது பிரசன்னா என்றவுடன் சற்று தயங்கியிருக்கிறார்.. இதனை படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பிரசன்னாவே வெளிப்படையாகப் பேசிவிட மேடையே கலகலத்துப் போனது.

அந்தப் பிடிவாதத்திற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.. பிரசன்னாவுக்கு ஏற்ற கேரக்டர்தான்.. பிரசன்னாவும் தனது 3 வருட கால காத்திருப்பிற்குப் பின்னர் சரியான திரைப்படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். சேரனைவிடவும் எனக்கு பல இடங்களில் பிடித்திருக்கிறார் பிரசன்னா.. என்ன ஒரேயொரு குறை, பிரசன்னாவுக்கு குடிகாரனை போல உளறத் தெரியவில்லை.. இது ஒன்றுதான் பிரச்சினை..

முதற்பாதியில் படத்தினை நகர்த்துவதே வசனங்கள்தான்.. சேரனின் ஈகோவை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரசன்னாவின் அந்த நக்கலையும், பிரசன்னாவை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பாவியாக சேரனின் நடிப்பும் ஏ ஒன்..! அதிலும் மாங்கா பறிக்கும் காட்சிக்குப் பின்பு “நாயை உசுப்பிவிட்டது நீங்கதானே..” என்று சேரன் கேட்குமிடம் செம டச்சிங்..!

ஸ்டூடண்ட்ஸ் முன்னால் மனைவியிடம் அவமானப்படுவது.. "சம்பாதிக்க துப்பில்லாத புருஷன்கிட்ட மாட்டிக்கிட்டேன்" என்று பேச்சு வாங்கியும் அமைதியாக நிற்பது.. இன்னொருவன் தனது மனைவியுடன் உரசலுடன் இருப்பதை நேருக்கு நேர் பார்த்துவிட்டு பொருமுவது.. பிரசன்னாவின் டார்ச்சர் தாங்காமலும், ஹரிபிரியாவை பிரசன்னாவிடமிருந்து காப்பாற்ற வேண்டி அலைவதுமாக படம் முழுவதும் அவதிப்பட்டுக் கொண்டேயிருக்கிறார் சேரன். பொருத்தமான வேடம்.. பிரசன்னாவிடம் மனநோய் நிபுணரின் போன் நம்பரை கொடுத்துவிட்டுப் போகும் அந்தக் கோப சேரன்தான் நிஜமானவர் என்று நினைக்கிறேன்..! 

இருவருக்குப் பின்னாலும் இருக்கும் கதைகள் ரொம்ப சோதிக்காமல் பட் பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் வைத்திருந்ததினால் ரசிக்க முடிந்தது.. மிஷ்கினின் சீடராச்சே இயக்குநர்.. பல காட்சிகளில் அந்த டச் தெரிந்தது. ஸ்டூடியோவில் தனது காதலி இறந்து போவதை போல நினைத்துப் பார்த்து சேரன் துள்ளி எழ, அதே நேரம் எதிரில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் வாட்ச்மேன் பொத்தென்று கீழே விழுவது.. எனக்கு அஞ்சாதே படத்தை நியாபகப்படுத்தியது.

போகப் போக தனது மனைவியின் டார்ச்சரைவிடவும், பிரசன்னாவின் டார்ச்சரே அதிகம் என்று சேரன் நினைக்குமளவுக்கு எதுவுமே தெரியாதது போல் செய்யும் பிரசன்னாவின் ஆக்ட்டிங்தான் சேரனையும் தாங்கிப் பிடித்திருக்கிறது..

சேரனின் மனைவியாக நிகிதா... காதலியாக ஹரிபிரியா.. இருவருக்கும் அதிகம் வேலையில்லை என்றாலும், ஹரிபிரியாவின் அந்த மார்க்கெட்டிங் காட்சி குபீரென்று சிரிப்பை வரவழைத்த்து. “நீங்க என்ன சோப்பு யூஸ் பண்றீங்க..?” என்று ஹரிபிரியா கேட்கும் கேள்வியில் சிரிக்காமல் எப்படி இருப்பது..? இதேபோல் “சொதப்பிட்டா..” என்று சேரன் கேட்கும்போதும், பிரசன்னா மேப் போட்டு விவரிக்கும்போதும், “கமிஷனரும் அங்கதான் வாக்கிங் வருவாரு..” என்று சொல்லும்போதும் அப்ளாஸ் போட்டுத்தான் தீர வேண்டியிருந்த்து..!

பிரசன்னா வேண்டுமென்றே வம்பு சண்டைக்குப் போக, சேரன் இடையில் புகுந்து தாக்குதல் தொடுக்க.. கடைசியில் அவர்களது காரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு கவலைப்படாமல் தப்பிக்கும் காட்சியிலேயே சேரன், பிரசன்னாவின் குறைந்தபட்ச எல்லைக் கோட்டுக்குள் வந்துவிட்டார் என்பதை உணர்த்திவிட்டார் இயக்குநர்.

ஜெயபிரகாஷை, சேரன் கொலை செய்திருந்தால்கூட சேரன் மீது எவருக்கும் குற்றவுணர்வு வந்திருக்காது என்று நினைக்கும் அளவுக்கு பிரசன்னாவின் டார்ச்சர் காட்சிகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக வைத்து 'பெப்' ஏற்றியிருக்கிறார் இயக்குநர்.

பாடல் காட்சிகள் படத்தின் தொய்வுக்குக் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து அரை பாடல், முக்கால் பாடல் என்று 2 பாடல்களைத் தாண்டி கிளைமாக்ஸில் வரும் குத்துப் பாடல் ஒரு புதிய வரவு. 

சேரன், பிரசன்னா, ஹரிபிரியா, ஜெயப்பிரகாஷ் நால்வரையே படத்தின் பின்பாதி முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும், எப்படி இருவரும் கதையை முடிக்கப் போகிறார்கள் என்று திரில்லிங்கின் 'பெப்'பை ஏற்றிக் கொண்டேயிருக்கிறது திரைக்கதை. அந்த சப் இன்ஸ்பெக்டர் இறக்கும்போதுதான் பிரசன்னாவின் கேரக்டர் மீது கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிற்பாடு உறுதியானபோது திரைக்கதையின் இறுக்கம் புரிந்தது..

இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகன் சொந்த அலுவலகத்தில் சாதாரண டைப்பிஸ்ட்டை போல அமர வைக்கப்பட்டிருப்பதும், அப்பாவால் வெறுத்து ஒதுக்கப்பட்டும் இத்தனை ஆடம்பரமாக வலம் வந்தும், கொலை செய்ய சேரனை ஏன் கேட்க வேண்டும் என்ற லாஜிக் கேள்வியெல்லாம் எழாமல் இல்லை. இருந்தாலும் அப்பாவியாய் தோற்றமளிக்கும் சேரன் போன்றவர்கள் கிடைத்தால், எந்த அயோக்கியனுக்கும் பயன்படுத்திக் கொள்ளத்தான் தோன்றும் என்பதையே நாம் லாஜிக்காக எடுத்துக் கொள்வோம்..!

ஆரண்ய காண்டத்திற்குப் பின்பு அதே பாணியில் வந்திருக்கும் இந்த முரண் திரைப்படமும் திரைக்கதை ஆக்கத்திலும், இயக்கத்திலும் பேசப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை..!

முரண் - நிச்சயமாகப் பார்க்கலாம்..!இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-21-09-2011

21-09-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அன்புக்கு நான் அடிமை..!

இதுவரையில் நீட்டமாக வயரை மாட்டி காது கேட்கும் மெஷினை வைத்திருந்த நான் கடந்த 10 நாட்களாக புதிய மாடல் மெஷினை மாட்டிக் கொண்டு திரிகிறேன்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ்.ஸின் பொற்கரங்களால் ஒரு சுதந்திர தினத்தன்று, மதுரை ரேஸ்கோர்ஸ் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற விழாவொன்றில்தான் அந்த பழைய மிஷினை நான் வாங்கினேன்..!

கடந்த 20 ஆண்டுகளாக அது என்னுடன் உடன் பிறந்த சகோதரனை போன்று இருந்து வந்திருக்கிறது. ஹியரிங் எய்டு கடையில் சொன்னால் நம்ப மறுத்தார்கள். கருவிழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு ஆச்சரியப்பட்டார்கள். “எப்படி ஸார்..? எப்படி ஸார்..? அதுவும் கவர்ன்மெண்ட்ல கொடுத்தது. மட்ட ரகமாத்தான ஸார் இருக்கும்..” என்றார்கள். இதுதான் எனக்கும் புரியவில்லை.  ஆனாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு நானே அதற்கு கட்டாய ஓய்வளித்து வீட்டில் உட்கார வைத்துள்ளேன்.

பதிவுலகத் தம்பி இராமசாமி தனது தந்தையார் மூலமாக என்னிடம் கேட்காமலேயே எனக்காக இந்த புதிய மிஷினை வாங்கி நமது எளக்கிய விடிவெள்ளி மயில் ராவணன் மூலமாகக் கொடுத்தனுப்பியுள்ளார். இந்த மாதம் நானே வாங்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் “ஏற்கெனவே நாங்க வாங்கி தயாரா வைச்சிருக்கோம் பிரதர்.. மருவாதையா இதைத்தான் நீங்க போடணும்..” என்று சொல்லி இதனை அன்பளிப்பாக கொடுத்துவிட்டிருக்கிறார் இராமசாமி..! (பெயரை சொல்லாமல் இருந்து தொலையக் கூடாதா என்று தம்பிகள் திட்டக் கூடாது. இதையெல்லாம் சொல்லித்தான் ஆகணும்) 

தம்பிகள் இராமசாமி மற்றும் மயிலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! 

வன்மையான கண்டனம்..!

பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டாலே நமது காவல்துறையினருக்கு மாமியார் வீட்டுக்கு வந்தது போன்ற சந்தோஷம்.  சட்டத்தின் துணை கொண்டு அவர்களுடைய அராஜகங்களும் ஆரம்பித்துவிடும். இந்த முறையும் சப்தமில்லாமல் செய்துதான் வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வின் அத்தனை பெருந்தலைகளும் உள்ளே போயாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கட்டளைபோலும். இதற்காக அவர்கள் மீது புகார் இல்லையென்றாலும்கூட தி.மு.க. ஆட்சியில் புகார் கொடுக்க வந்து ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டவர்களைக்கூட தேடி கண்டுபிடித்து புகாரை வாங்குகிறார்கள்.

பல புகார்கள் உண்மையாக இருந்தாலும், சில புகார்களை கேள்விப்படும்போது சம்பந்தப்பட்டவரை உள்ளே வைப்பதற்காகவே புகார்கள் பெறப்பட்டவை போல தோன்றுகின்றன. இது ஒரு புறம் இருக்கட்டும். கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைப்படுத்தலாம். ஜாமீன் கிடைத்தால் அவர்கள் வெளியேறலாம். காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வழக்கை நேர்மையான வழியில் நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை அடித்து, உதைத்து, சித்ரவதைப்படுத்துவது அவர்கள் செய்த செயலைவிட மிகப் பெரிய கொடூரம்.

மதுரையில் கைதான அத்தனை தி.மு.க. வி.ஐ.பி.களுக்கும் இதே மரியாதைதான் கிடைத்திருக்கிறது. கேட்டால், போலீஸையே எதிர்த்து பேசினான் ஸார்.. எங்களையே சல்யூட் அடிக்க வைச்சான் ஸார் என்று ஏதோ அவர்களை தேவதூதுவர்கள் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள் போலீஸார்.. 

சென்னையில் சக்சேனாவையும், அவரது உதவியாளர் ஐயப்பனையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்த குரூர சந்தோஷம் யாரை திருப்திப்படுத்த..? பாவம் ஐயப்பன்.. கால்கள் வீங்கி நடக்கக்கூட முடியாமல் நடந்து வருவதைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. க்க்கூஸ்ல உக்கார கூட முடியலை என்று தனது வழக்கறிஞரிடம் சொல்லி அழுதாராம்.. ஜெயலலிதாவை கைது செய்தபோது போலீஸார் இதே போன்று செய்திருந்தால் இந்த அம்மையார் சும்மா இருந்திருப்பாரா..? இதுதான் ஆட்சியாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்..!

குற்றம் செய்தார்கள்.. கைது செய்தேன் என்கிறார்களே போலீஸார்.. சென்ற ஆட்சியின்போது இதே குற்றச்சாட்டுக்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர்களிடம் புகார்களை வாங்கக்கூட மறுத்து அவர்களை அடித்து விரட்டினார்களே.. அந்த போலீஸார் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அது மட்டும் தவறில்லையா..? புகார் கொடுக்க வந்தவர் யாராக இருந்தாலும், எவர் மீதான புகாராக இருந்தாலும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து, விசாரித்து குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையில்லையா..? அந்தக் கடமையை செய்யத் தவறிய போலீஸ்காரர்களுக்கு யார் தண்டனை தருவது..? ஆத்தா ரொம்பத்தான் கூவுதுய்யா..!

பரபரப்பில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம்

பேங்க் பேலன்ஸ் 1 லட்சமோ, 2 லட்சமோ.. இவ்வளவுதான் இருக்கும். ஆனால் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1250. சின்னத்திரையில் தினமும் நம்மையெல்லாம் அழுக வைக்கும், சிரிக்க வைக்கும் இந்த நடிகர்களின் சங்கத்தில் தற்போது கடும் புகைச்சல்.

தற்போது முதல் முறையாக இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 9-ம் தேதியன்று நடக்கவுள்ள தேர்தலில் நடிகர்கள் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். 

தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன். இவர் தலைமையில் ஒரு அணி. தற்போதைய செயலாளர் ராஜ்காந்த். இவருடைய தலைமையில் 2-வது அணி, தற்போதைய துணைத் தலைவர் பானுபிரகாஷ். இவருடைய தலைமையில் 3-வது அணி. 

போட்டியிடும் அணிகளின் பட்டியல்..!

ராஜ்காந்த் அணி


தலைவர் - ராஜேந்திரன்
செயலாளர் - ராஜ்காந்த்
பொருளாளர் - தினகர்
துணைத் தலைவர்கள் - விஜயபாபு, மனோபாலா
இணைச் செயலாளர்கள் - சத்யப்பிரியா, கன்யா பாரதி, சதீஷ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் - குமரேசன், சுக்ரன், ஸ்ரீகுமார், தேவ், பி.ராஜ்குமார், விஜய் ஆனந்த், ஜெயந்த், நிதீஷ், பரத், வீரா, வசந்த், ரூபஸ்ரீ  டாக்டர் ஷர்மிளா, ஷிவானி.

அபிஷேக் அணி


தலைவர் - பானுபிரகாஷ்
துணைத் தலைவர் - அபிஷேக், பாத்திமா பாபு
செயலாளர் - பூவிலங்கு மோகன்
பொருளாளர் - ஸ்ரீதர்
இணைச் செயலாளர்கள் - ஆர்த்தி கணேஷ், கமலேஷ், டிங்கு, விச்சு
செயற்குழு உறுப்பினர்கள் - பப்லூ, பிருந்தாதாஸ், மீனா குமாரி, வெங்கட், விஜய் ஆதிராஜ், சாய்ராம், மேஜர் கெளதம், பிரேம், சாக்சி சிவா, சுபகணேஷ், ஆதித்யா, சங்கீதா, பிரியதர்ஷிணி, பாபூஸ், சத்யா

சிவன் சீனிவாசன் அணி

தலைவர் - சிவன் சீனிவாசன்
பரத் கல்யாண், பாபு கணேஷ், மாலி, ரிஷி, வின்சென்ட் ராய், தர், சாய்பிரசாத், சங்கர், குண்டு கல்யாணம், கர்ணா, ராஜேந்திரன், சுரேஷ், எம்.டி.மோகன், ரொசாரியா, சி.ஐ.டி. சகுந்தலா, சந்திரா லட்சுமண், பாக்ய, ராணி, தேவி, புஷ்பலதா, சிந்து, சுந்தரி.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரையிலும் பெவிகால் போட்டு ஒட்டியதுபோல் பிரிக்க முடியாத நட்பாக இருந்த நடிகர்கள் சங்கத்தினர் இப்போது 3 அணிகள் அமைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. 3 பேருமே அதனை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் நடந்த அவர்களது சங்கத்தின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்களும், வாக்குவாதங்களும் நடந்திருக்கின்றன. அதன் பின்புதான் மனக்கசப்பு ஏற்பட்டு நின்னு பார்த்திருவோம் என்று களத்தில் இறங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு பிள்ளையார்சுழி போட்டது, கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்த இயக்குநர் விடுதலைதான் என்று அனைவரும் குற்றம்சாட்டுகிறார்கள். பாலாஜி என்ற நடிகரை இயக்குநர் விடுதலை, ஒரு நாள் இரவில் பூஸ்ட் அணிந்திருந்த வேளையில் தாக்கிவிட்டார். இந்த விஷயத்தில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் சரிவர செயல்படவில்லை. விடுதலையைக் கண்டிக்கவில்லை என்று குற்றம்சாட்டிதான் பலரும் அவர் மீது கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 

இப்போது கடைசி நேரத்தில் சிவன் சீனிவாசனுடன் ஒன்றாகவே இருந்த பானுபிரகாஷ் தலைமையில் வேறொரு அணி உருவாகிவிட்டது. 

உண்மையில் இந்த அணிக்குத் தலைவர் நடிகர் அபிஷேக்தான். அவர் தலைமையில் ஒரு நட்சத்திர பட்டாளங்கள் அணி வகுத்த பின்னர் அணியில் இருக்கும் கலைஞர்கள் அனைவரும் பிராமணர்களாக இருக்கிறார்களே என்றெல்லாம் பேச்சு எழும்பியிருக்கிறது. இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட நினைத்த அபிஷேக், துணைத் தலைவர் பதவிக்கு டிரான்ஸபராகிக் கொள்ள பானு பிரகாஷ் தலைவராகிவிட்டாராம்.

3 அணிகளாகப் போட்டியிட்டாலும், யார் ஜெயித்தாலும் அவர்களுடன் இணைந்து சங்கத்தை வளர்க்கப் பாடுபடுவோம் என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சந்தோஷமே..!


மெய் மறக்கச் செய்த பாம்பே சாரதா..!

2 மாதங்களுக்கு முன்பாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் விழா நடந்த தினத்தன்று சங்கரா டிவியில் பாம்பே சாரதா என்ற இந்தப் பெண்ணை முதல்முறையாகப் பார்த்தேன். சுமாராக 2 மணி நேர கச்சேரி. இரவு 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

சாரதா பாடியவை அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்தான். கூடவே அத்தனைக்கும் அபிநயத்துடன் நடித்தும் காண்பித்தார். அசத்தல்..! 2 மணி நேரமும் மெய்மறந்து போயிருந்தேன். அந்த வீடியோவை இத்தனை நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. சங்கரா டிவியில்கூட கேட்டுப் பார்த்தேன். “மறு ஒளிபரப்பு வரும்போது பார்த்துக்குங்க ஸார். நாங்க தனியா டிவிடி போட மாட்டோம்..” என்றார்கள். நெல்லை வாழ் நண்பர்கள், பதிவர்களிடமும் சொல்லி கேட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. 

என்றைக்குக் கிடைத்தாலும் அதனை நிச்சயமாக வலையில் ஏற்றுகிறேன். அதுவரையில் தற்போதைக்கு இணையத்தில் இருக்கும் சாரதாவின் இந்த 2 பாடல்களை மட்டும் கேளுங்கள்..!ஆஸ்திரேலியாயாயாயாயாயாயா..!

ஆஸ்திரேலிய நாட்டின் பெண் நிதியமைச்சரான Penny Wong  தனது லைப் பார்ட்னருக்கு வரும் டிசம்பரில் பிரசவம் நடக்கும் என்று கூறியிருக்கிறார். சந்தோஷம்தான். இதில் சுவாரஸ்யம் இவருடைய லைப் பார்ட்னரும் பெண்தான்.. பெயர் Sophie Allouache. விந்தணு தானம் மூலமாக கர்ப்பமாகியிருக்கும் அவரது மூலம் தனக்கு வாரிசு வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார் பென்னி.


தற்போதைய பிரதமரான கில்லர்டு தலைமையில் இயங்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் பென்னி சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சி ஓரினச் சேர்க்கைக்கு எதிரான கொள்கையுடன்தான் இப்போதும் இருந்து வருகிறது என்பது ஒரு மேலதிகச் செய்தி. ஆனாலும் பென்னிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் கில்லர்டு, விரைவில் தனது கட்சியில் இது தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வாழ்க தம்பதிகள்..!


ஜெயலலிதாவின் கொடுத்த பேதி மாத்திரை..!

தனக்கு மிக நெருக்கமானவர்களைத் தவிர மற்ற சினிமாக்காரர்களை போயஸ் கார்டன் பக்கமே வர விடாமல் தடுத்திருக்கும் ஜெயலலிதா கொஞ்சம், கொஞ்சமாக திரையுலகத்தினருக்கு எனிமா கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை தற்போது இருக்கும் 15 சதவிகித்த்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது என்று மட்டும் புகையும் கண்ணீர்ப் புகை குண்டை வீசியிருக்கிறார். பத்து நாட்களாக கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த திரையுலகத்தினர் இன்றைக்கு முறைப்படி அனைவரும் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கேளிக்கை வரியினால் திரையுலகத்தினருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தமிழகம் முழுக்க 10 மாநகராட்சிகள் மற்றும் 22 நகராட்சிகளில் 15 சதவிகிதம் கேளிக்கை வரியாக தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்துக்களில் 10 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 30 சதவிகிதமாகவும், பஞ்சாயத்துக்களில் 20 சதவிகிதமாகவும் உயர்த்தப்படவிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 15 சதவிகிதமான 18 ரூபாய் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது 36 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் ஒரு டிக்கெட்டுக்கு 84 ரூபாய் மட்டுமே திரையரங்க உரிமையாளருக்குக் கிடைக்கும். இதில் 70 சதவிகிதமான 58 ரூபாய் விநியோகஸ்தர்கள் பங்காக போய்விடும். மீதமிருக்கும் 25 ரூபாயில்தான் திரையரங்குக்கான பராமரிப்புச் செலவுகள், ஊழியர்களுக்கான ஊதியம், மின்சார கட்டணம் போன்றவற்றைக் கொடுத்துவிட்டு லாபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று சென்னை தவிர்த்த மற்ற நகரங்களில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுக்கு 7 ரூபாய் 50 காசுகள் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டால், வெறும் 10 ரூபாய் மட்டுமே திரையரங்க உரிமையாளருக்குக் கிடைக்கும். இதனை வைத்து நாங்கள் என்ன செய்வது..” என்று கேட்கிறார் இவர். (அதே சமயம், தமிழக அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் சில நிபந்தனைகளுடன் கூடிய விதிமுறைகளை செயல்படுத்தி படங்களைத் தயாரித்தால், கேளிக்கை வரி அவர்களுக்கு ரத்தாகும்.) 

இதனால்தான் இன்றைக்கு அவசரமாகக் கூட்டப்பட்டிருக்கும் திரையுலகப் புள்ளிகளின் கூட்டத்தில் பிரபல நடிகர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இது நியாயமானதுதான்.. படம் முடிவடைந்தவுடன் ஹீரோ மட்டும் முழு தொகையுடன் வீட்டுக்கு போய்விட, தயாரிப்பாளர்கள் மட்டுமே நஷ்டத்தை முழுமையாக சந்தித்து அடுத்த படம் எடுப்பதற்கான சக்திகூட இல்லாமல் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள். 

ஊர் கூடி தேர் இழுப்பதைப் போல திரையுலகமே ஒன்று சேர்ந்து அமர்ந்து பேசினால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்..!


கூடன்குளம் மின் திட்டம் தேவையா..?!

கூடன்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். அலைகடலாக திரண்டு வந்திருக்கும் அவர்களை பார்த்தபோது எந்த அளவுக்கு அணுக் கசிவு பற்றிய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.


அந்தத் திட்டத்தை கொண்டு வந்தபோதே பல கட்சியினரும், பொதுமக்களும் எதிர்த்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையின் கடுமை காட்டியதாலும், கட்சிகளுக்குள் இருந்து ஒற்றுமையின்மையாலும் அது அப்போது பிசுபிசுத்துப் போயிருந்தது. இப்போது ஜப்பானிலும், பிரான்ஸ், ஜெர்மனியிலும் அடுத்தடுத்து அணு உலைகளில் ஏற்பட்ட கசிவு பற்றிய செய்திகள் அந்த மண்ணை எட்டியவுடன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிய உணர்வு அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த முறை தங்களது கோரிக்கையில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

மின்சாரத் தேவைகளுக்கான திட்டங்கள் தேவைதான் என்றாலும், அவற்றை மாற்று வழிகள் இருந்தால் அவைகள் மூலமாக பெறுவதற்கு முயலலாமே..? பிரச்சினைகள் வரவே வராது என்று யாரும் வாக்குறுதி தர முடியாது.. சுனாமி வந்தபோது யாராவது அதனை நினைத்து பார்த்திருந்தார்களா..? சுனாமி என்ற வார்த்தையையே அப்போதுதான் தமிழகத்து மக்கள் தெரிந்து கொண்டார்கள்.


இத்தனை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களைப் புறக்கணித்துவிட்டு இந்த்த் திட்டத்தை தொடர வேண்டுமா என்று மத்திய, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கம்போல முதல் நாள் ஒரு கொள்கையும், மறுநாள் வேறொரு கொள்கையும் பேசி தான் ஜெயலலிதாதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். 

அனல் மின்சாரம், கடல் நீரில் இருந்து மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று மாற்று வழிகளை ஆராய்ந்து அதற்குச் செலவிட்டாலும் பரவாயில்லை. என்றைக்கோ கூட்டம், கூட்டமாக கொள்ளை கொண்டு போகக் காத்திருக்கும் இந்த எமன் நமக்குத் தேவையில்லை..!33 வருடங்களில் 333 திரைப்படங்கள்

பரிச்சூரி பிரதர்ஸ். முதலில் இவர்களை புக் செய்துவிட்டு பின்புதான் அலுவலகம் அமைக்கும் முடிவுக்கே வருவார்கள் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள். 


பரிச்சூரி வெங்கடேஸ்வரராவ், பரிச்சூரி கோபாலகிருஷ்ணா என்ற இரண்டு பிரதர்ஸ்கள்தான் தெலுங்கு சினிமாவை கடந்த 33 ஆண்டு காலமாக ஆட்டி வைத்த திரைக்கதையாசிரியர்கள். இவர்களிடத்தில் தங்களுக்காகவே கதை கேட்டு, இவர்களது டேட்ஸ் கேட்டு காத்திருந்த ஹீரோக்களே தெலுங்கில் அதிகம்.

என்.டி.ராமரா, நாகேஸ்வரராவ், சோபன்பாபுவில் ஆரம்பித்து, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மோகன்பாபு ஆகியோர் வரையிலும் அவரவர்க்கு ஏற்ற கதைகளை எழுதி இதில் பல படங்களை சூப்பர்ஹிட்டாக்கியவர்கள் இந்த பரிச்சூரி பிரதர்ஸ்..! 33 வருடங்களில் 333 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இவர்களைப் பாராட்டி தெலுங்குலகில் சமீபத்தில் விழா எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியிருக்கிறது.  இவர்களுடைய அரசியல் அடிதடி படங்களுக்கு ஆந்திராவில் கிடைத்த பாராட்டுக்களே, இந்தச் சகோதரர்களின் பெயரை காலாகாலத்திற்கும் சொல்லும்..!

நம்மூரில் 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதிய ஒரு எழுத்தாளரும் இருக்கிறார். பெயர் ஆரூர்தாஸ். சென்ற வாரம் நல்ல குப்புச்சாமி செட்டியார் தனது சொந்த செலவில் பாராட்டு விழா நடத்தி அவரை கெளரவித்தார். தமிழ்த் திரையுலகில் இப்போது எத்தனை பேருக்கு ஆரூர்தாஸை தெரியும் என்று தெரியவில்லை..! பின்பு யார் பாராட்டு விழா நடத்துவது..? அவர் தலையெழுத்து அவ்வளவுதான்..!


வயசானாலும் பாட்டியில்லை..!

சில விஷயங்கள் கண்ணில்படும்போது  ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன. இந்த வீடியோவை பாருங்கள்.. நம்மூரு கிழவி வயசுதான். ஆனால் ஜிம்னாஸ்ட்டிக் டான்ஸ் செய்யறாங்க.. இந்த வயதிலும் அவருடைய உடல் இந்த அளவுக்கு ஒத்துழைப்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது..! பாலை திரைப்படம்

3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனின் வாழ்க்கை முறை என்ன என்பது பற்றி நாம் அதிகம் சிந்தித்த்தில்லை. புத்தகங்களும் அதிகமில்லை. இன்றைய நடப்புகளை பார்க்கவே நமக்கு நேரமும் இல்லை. அதிகம் படிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத இந்தச் செய்தியை நிகழ்வுகளாக்கி அதனை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் தோழர் செந்தமிழன்.

'பாலை' என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பங்கு கொண்டிருக்கும் அத்தனை பேருமே இளைஞர்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். படத்தின் நாயகி ஷம்மு. படம் லோ பட்ஜெட் படம் என்பதால் கிராமவாசிகளுக்காக அதிகம் பேரை பயன்படுத்தாமல் கச்சிதமாக எண்ணி நடிக்க வைத்திருக்கிறார்கள்.


காலச் சூழலில் ஒரு கிராமம் பாலைவனமாக போகும் சூழல் இருப்பதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல விரும்புகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மீது தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் வேறொரு கிராமத்து மக்கள் அவர்கள் மீது போர் தொடுக்க.. யார் ஜெயித்தது என்பதுதான் கதை..!

'கற்றது தமிழ்' படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய தோழர் செந்தமிழன் பல சின்னத்திரை தொடர்களில் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார். தன்னுடைய சொந்தப் பணம் மற்றும் தோழமை உணர்வோடு ஒருமித்தக் கருத்தோடு இணைந்தவர்களிடமிருந்து கிடைத்த பணத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறாராம். வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!


டெர்மினேட்டர்-5 

உலக சினிமா ரசிகர்களிடையே டெர்மினேட்டர் சீரியஸ் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. இது அடுத்து வரவிருக்கும் 5-வது பாகத்தின் டிரெயிலர். ரிலீஸ் அடுத்த ஆண்டுதான் என்றாலும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்..!


தொடர்கிறது காங்கிரஸின் துரோகம்..!

வெட்கம்கெட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தான் தமிழனுக்கு என்றுமே எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மத்திய அரசு, நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது. டக்ளஸ் செய்த குற்றம் என்ன என்பதை இந்தத் தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.


அவர் அயல் நாட்டில் அமைச்சராக இருக்கிறாராம். அந்த நாட்டு ஜனாதிபதியோடு உடன் வந்தாராம். அதனால்தான் கைது செய்ய முடியவில்லையாம். ஆனால் அதே சமயம் இனிமேலும் கைது செய்யும் எண்ணமும் இல்லை என்றே சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

கொலை செய்துவிட்டு அடுத்த நாட்டிற்கு ஓடிவிட்டாலோ, அடுத்த நாட்டில் அமைச்சராகிவிட்டாலோ இந்திய அரசு யாரையும் எதுவும் செய்யாது என்பது டக்ளஸின் விளக்கத்தின் மூலம் தெளிவாகிறது. நம் நாட்டில் சிறைகளில் இருப்பவர்கள் இதையே முன் உதாரணமாக வைத்து இனிமேல் நீதிமன்றங்களில் வாதாட வேண்டும். அனைவருக்கும் வருவதும், வந்த்தும் ரத்தம்தான்.. தக்காளி ஜூஸ் அல்ல என்று அனைத்து கொலை குற்றவாளிகளும் ஒன்று சேர்ந்து வாதாடினால், அப்போது இந்த வெட்கம் கெட்ட காங்கிரஸ்காரர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்..! 


எங்கேயும் எப்போதும் - மாசமா பாடல்

6 மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பாடல் ஏதேனும் ஒரு வித்த்தில் ஹிட்டாகிவிடும். அதற்கடுத்து அந்தப் பாடல் காட்சியில் நடித்தவர்களும், இசையமைத்தவரும், பாடலை எழுதியவரும், நடன இயக்குநரும், படத்தின் இயக்குநரும் போதும்டா சாமிகளா.. விடுங்கடா என்று கதறுகின்றவரையில் அதை வைத்து கும்மியடிப்பது மீடியாக்களின் வழக்கம்.

தற்போது 'எங்கேயும் எப்போதும்' படத்தின் 'மாசமா' பாடல் அதனைத்தான் துவக்கியிருக்கிறது. இதனை அடித்துக் கொள்ள வேறொரு பாடல் வரும்வரையில் இதுதான் டிவிக்களின் தினசரி ஊறுகாய்.. 

எதையாவது புதுமையாக செய்தாவது ரசிகர்களைக் கவர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் இது போன்று வித்தியாசத்தை காட்டினால்தான் அந்த இயக்குநர் பெயர் கொஞ்ச நாளைக்கு இங்கே பேசப்படும். இயக்குநர் சரவணனே இந்தப் பாடலை எழுதியிருக்கிறாராம்.  அதனை படமாக்கிய விதமும் பாராட்டுக்குரியது. ஆர்க்கெஸ்ட்ராகாரர்களும், மேடை நடனக் கலைஞர்களும்தான் பாவம்..! தோளைக் குலுக்க தனியா டிரெயினிங் எடுத்தாகணும்..! 

பச்சைக்குடை திரைப்படம்

அன்னக்கிளி செல்வராஜ். தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத பெயர். பல நெஞ்சைத் தொட்ட உன்னத கதைகளுக்குச் சொந்தக்காரர். "கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், புதுமைப் பெண், முதல் மரியாதை. கடலோரக் கவிதைகள், புது நெல்லு புது நாத்து, அந்தி மந்தாரை, இதயக் கோவில், உதய கீதம், சின்னக்கவுண்டர், டும் டும் டும், அலைபாயுதே" என்று இந்த எழுத்தாளரின் கை வண்ணத்தில் எழுந்தவை இன்றைக்கும் மறக்க முடியாத திரைக்காவியங்கள்.

இவரை மாதிரியிருப்பவர்களுக்கு ஒரு கிறுக்கு குணம் இருக்கும். எதையாவது புதிதாகச் செய்கிறேன் என்று சொல்லி சம்பாதித்த காசை விட்டொழிப்பார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. ரோஜாவின் மேக்கப் இல்லாத நடிப்பில் உப்பு என்றொரு படத்தினை எடுத்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார். ஆனால் டப்பு தேறவில்லை.

இப்போது இந்த ஆண்டு ஐ.நா. சபை பசுமையை பாதுகாப்போம் என்ற கோஷத்தை எழுப்பியுள்ளதால் அதற்கேற்றால்போல் படம் எடுக்கிறேன் என்று சொல்லி பச்சைக்குடை என்ற படத்தினை தயாரித்து, இயக்கியிருக்கிறார். 


“பத்து கிணறுகள், ஒரு குளத்திற்குச் சமம்.
பத்து குளங்கள், ஒரு ஏரிக்குச் சமம்.
பத்து ஏரிகள், ஒரு மகனுக்குச் சமம்
பத்து மகன்கள், ஒரு மரத்துக்குச் சமம்.”

- இதுதான் படத்தின் கான்செப்ட். 

மரங்களை நேசிப்போம். வனங்களைக் காப்போம் என்கிறார் செல்வராஜ். இசைஞானி இளையராஜா பணம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்தாலும் பட்ஜெட் 40 லட்சங்களைத் தொட்டுவிட்டது. பிரபல மலையாள நடிகை நித்யாதாஸ் நடித்திருக்கும் இப்படத்தில் இதற்கு மேலும் மார்க்கெட்டிங் நடிகர்கள் யாருமில்லை. 

“இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படமாட்டாது. டிவிக்களில்தான் ரிலீஸ் செய்யப் போகிறேன்..” என்கிறார் செல்வராஜ் ஸார். அடுத்த மாதம் நியூயார்க்கிற்கும் இந்தப் படம் பறக்கவிருக்கிறதாம். ஐ.நா. சபையில் திரையிடப்படவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்..! எதற்கு இந்த வேலை என்றால், “நாம பொறந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணுமே..” என்கிறார். பழுத்த கம்யூனிஸ்ட்டான செல்வராஜ், இத்தனை ஹிட்டடித்த படங்களை கொடுத்த பின்னும் இன்னமும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார். "உண்மையான கலைஞர்களுக்கு பாராட்டும், மரியாதையுமே போதும்" என்கிறார். வாழ்த்துகிறேன்.. நீங்களும் வாழ்த்துங்கள்..!

கலையுலக வாழ்க்கையில் 50 ஆண்டுகள்..!

'காதோடுதான் நான் பேசுவேன்' என்ற கொஞ்சலுக்குச் சொந்தக்காரரான எல்.ஆர்.ஈஸ்வரி இந்த மாதம் தன்னுடைய கலையுலக வாழ்க்கையின் 50-ம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் 1000 திரைப்பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் ஈஸ்வரியின் சாதனை மகத்தானது..! அவருடைய கீச்சுக் குரலையும் கொஞ்ச வைக்கும் குரலையும் கொஞ்சமாகத்தான் தமிழ்த் திரையுலகம் பயன்படுத்தியிருக்கிறது என்ற வருத்தம் அவருக்கும் உண்டு.


இருந்தாலும் தமிழக்கு மக்கள் மத்தியில் அவரை என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கான திரைப்பாடல்கள் அவருக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். எந்த குக்கிராம்மாக இருந்தாலும் கல்யாண வீடுகளில் ஒளிபரப்பப்படும், ‘மணமகளே மணமகளே வா.. வா..’ என்ற பாடலும், ‘வாராயோ தோழி வாரோயோ’ என்ற பாடலும் ஈஸ்வரியம்மா பாடியதுதான்.. தமிழகத்தின் அத்தனை புகழ் வாய்ந்த ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் தவிர்க்க முடியாத பாடலாக இருக்கும் ‘பட்டத்து ராணி’ பாடலைப் பாடியவரும் இவரே. இரவு நேரங்களில் அத்தனை எஃப்.எம். ரேடியோக்களும் ஒலிக்கவிடும் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்ற பாடலை பாடியதும் இவர்தான்..! 

இவர் பாடி எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் வரும் ‘அடி என்னடி உலகம்.. இதில் எத்தனை கலகம்’ என்ற பாடல்தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. எத்தனை, எத்தனையோ அர்த்தங்களை இந்தப் பாடல் மீண்டும், மீண்டும் கற்பிக்கிறது..! வாழ்க கவிஞர்..!

ஒரு புறம் சினிமா பாடல்கள் என்றாலும் இன்னொரு பக்கம் பக்தி பாடல்களில் ஈஸ்வரியம்மாவை அசைக்க முடியவில்லை. ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ளும், ‘கற்பூர நாயகியே கனகவல்லி’யும், ‘அம்பிகையை கொண்டாடுவோம்’ பாடலும் இன்றைக்கும் ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் பாடல்கள். 

தமிழ் மொழி உள்ளவரையில் ஈஸ்வரியம்மாவின் புகழ் என்றென்றும் தமிழர்களிடையே நிலைத்திருக்கும். வாழ்க..

படித்து வெறுத்தது..!

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் போக வேண்டுமென்று புறப்பட்டார். இதற்கொரு காரணம் உண்டு. போன முறை அங்கே போனபோது மூர்த்தி கணேஷ்பட், இனி நீங்கள் இங்கே வர முடியாது என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னாராம். இதை எம்.ஜி.ஆர். விளையாட்டாக எடுத்துக் கொண்டார். ஆனால் ஜானகி அம்மாள் பதறிப் போய் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற கோயில், கோயிலாக அப்போதே போக ஆரம்பித்துவிட்டார்.

போன முறை எம்.ஜி.ஆர். ஈரோட்டிற்கு ஒரு பத்திரிகை விழாவுக்காக வந்தார். சேஷசாயி பேப்பர் மில்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். திருப்பூர்வரை வந்து மங்களூர் எக்ஸ்பிரஸில் ஏறினார். திருப்பூரில் இருளோடு இருளாக ஒரு பெண்மணியை திருப்பூர் மணிமாறன் எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டார்.

அந்தப் பெண்மணி எம்.ஜி.ஆரின் ஏ.சி. முதல் வகுப்புப் பெட்டிக்குள் நுழைந்த 15 நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். அவரது சட்டை சுக்கு நூறாகக் கிழிந்திருந்தது. கோபத்தில் அவராகக் கிழித்துக் கொண்டாரா அல்லது இந்தப் பெண்மணியே கிழித்துவிட்டாரா என்று தெரியவில்லை.

அப்போது அடுத்த பெட்டியில் பரமசிவம் ஸார், பிச்சாண்டி, டாக்டர் சுப்பிரமணியம் எல்லோரும் இருந்தார்கள். ஆத்திரத்தில் வெளியேறிய அந்தப் பெண்மணியை டாக்டர் சுப்பிரமணியம் மாத்திரம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் அழைத்தார். “ஏற்கெனவே அவர் சுகமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது? ஆத்திரத்தை அடக்குங்கள்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். நல்லவேளை இந்த ஆட்சியில் சுப்பிரமணியத்தின் வீடு சுக்குநூறாகக் கிழிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் மூகாம்பிகை கோவிலுக்குப் போனார் எம்.ஜி.ஆர். ஆனால் பாதி வழியிலேயே திரும்பிவிட்டார். அடுத்த்த் தடவை சென்றபோது இனி வர மாட்டீர்கள் என்று குறி சொல்லப்பட்டது. சென்னை வந்த எம்.ஜி.ஆர். அந்தக் காலக்கட்டத்தில் 3 நாட்கள் மயக்கத்தில் இருந்தார். இந்த மூன்று நாட்களும் ஜானகி அம்மாள் பச்சைத் தண்ணீரைத் தவிற வேறு ஒன்றையும் அருந்தாமல், அவர் அருகிலேயே இருப்பதைப் பார்த்து நான் கண்ணீர்விட்டேன்.

- 'வணக்கம்' புத்தகத்தில் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரிஜான்


பார்த்து ரசித்ததுஎங்கேயும் எப்போதும் – சினிமா விமர்சனம்

19-09-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


முதலில் இப்படியொரு கதையில் சினிமா தயாரிக்க முன் வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எனது கோடானுகோடி நன்றிகள். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் 28 வயது இளைஞர், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு எனது அடுத்த நன்றி. இந்த இளைஞரை பார்த்து வரவிருக்கும் புதிய இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்தான் இந்தத் திரைப்படம்.

தினம்தோறும் பத்திரிகைகளில் சாலை விபத்துகள் பற்றிய செய்திகளைப் படிக்கிறோம்.. துக்கப்படுகிறோம். வருத்தப்படுகிறோம். ஏன் இந்த வேகம்..? எதற்காக இந்தச் சம்பவம்..? என்றெல்லாம் விசனப்படுகிறோம். ஆனால் விபத்தில் இறந்து போனவர்களின் குடும்பம், வாழ்க்கை, அவர்களுடைய கனவுகள் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறோமா..? இதைத்தான் செய்திருக்கிறார் இயக்குநர் சரவணன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்குவார்சத்திரம் அருகே ஒரு திருமண நிச்சயத்தார்த்தத்திற்காக கிராமத்து மக்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது, டேங்கர் லாரி ஒன்று மோதியதில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் எரிந்து கரிக்கட்டையாய் ஆனபோது தமிழகமே கண்ணீர்விட்டது.. இன்னமும் மறக்க முடியவில்லை என்னால்..! இந்தப் படம் அந்தச் சம்பவத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திவிட்டது.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்திலும், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்திலும் பயணிகள் அவரவர்கள் வாழ்க்கைக் கனவோடு பயணிக்கையில், அசுர வேகம் என்ற ஒரு வினை சீட்டுக் கட்டுக்களைப் போல் அனைத்தையும் கலைத்துப் போடுகிறது..!  இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை ஒரு நொடியில் புரிய வைக்கிறது அத்தனை பேருக்கும்..!

இரண்டு காதல் ஜோடிகள்.. ஜெய்-அஞ்சலி. அனன்யா-சர்வா. இரண்டு காதலன்களும், காதலிகளும் மாறுபட்ட குணச்சித்திரங்கள். காதலர்களின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்தனையிலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது அஞ்சலிதான். வாவ் என்றே கூச்சலிட வேண்டியிருக்கிறது அஞ்சலியை நினைத்து.

காதலிக்கிறேன் என்று சொல்வதற்குள் இத்தனை போராட்டங்களா..? திரையரங்கில் அத்தனை ரசிப்பு..! ஜெய்யை அப்பாவிடம் அனுப்பி வைப்பது.. தான் நிராகரித்த காதலனிடம் அனுப்பி வைப்பது.. டிரெஸ் எடுக்க படுத்தியெடுப்பது.. ரத்தப் பரிசோதனை செய்வது என்று படபடவென்ற தனது படாபட் ஜெயலஷ்மியின் மறுஉருவத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார் அஞ்சலி. அவருடைய இயல்பான குணமே இதுதான் என்பதால் 100 சதவிகிதம் ஜெயித்திருக்கிறார். "என் மீது கோபப்படு.." என்று அஞ்சலி சொல்வதற்கும், அது முடியாமல் ஜெய் தவிப்பதற்குமான காட்சிகளில் தியேட்டரே அதிர்ந்தது.

திருச்சி மலைக்கோட்டையில் முத்தமிடப் போகும் காட்சியிலும், ஜெய்யைக் கட்டிப் பிடிக்கச் சொல்லும் காட்சியிலும் அதற்கு முந்தைய ரீல்களில் தெரிந்த அஞ்சலி காணாமலேயே போய் மை ஸ்வீட் ஹார்ட்டாகிவிட்டார்..!

ஆனாலும், எந்தவொரு காதலனுக்கும் அஞ்சலி போன்று காதலி கிடைக்காமல் இருக்க என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன். அந்த அளவுக்கு டார்ச்சர் செய்கிறார்.. ஆனால் அத்தனையிலும் க்யூட்டாக ரசிக்கவும் வைத்துள்ளார்.

அனன்யா கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இந்தக் கதைக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார் என்றால் நிச்சயமாக அதனைப் பாராட்டலாம். பி.இ. முடித்தவர் இப்படிப்பட்ட சைல்டிஷ் மனநிலையில் இருப்பாரா என்றெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச் பற்றி இப்போது ஸ்கெட்ச் போட்டு கொண்டிருக்கிறார்கள்.. இருக்கலாம். இருக்கிற ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. போதும்.

செல்போன்கூட வைத்துக் கொள்ளவில்லை என்னும்போதுதான் கொஞ்சம் இடிக்கிறது என்றாலும் கதையின் டிராவலுக்காக இதனை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சின்ன உதவி செய்யப் போய் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் சர்வா. அதனைவிட குறிப்பிட வேண்டியது, காதல் உருவாக காரணத்தைத் தேடி கண்டுபிடிக்க வேண்டாம். அது தானாகவே கிராஸ் ஆகும் என்பார்களே.. அது இதுதான்..

அந்த அக்காவின் படபட பேச்சு, அனன்யாவின் கண்கள் பேசும் மொழி, சர்வாவின் தடுமாற்றம் என இவர்களின் பிளாஷ்பேக்கில் அஞ்சலி அண்ட் கோவுக்கு கொஞ்சமும் குறையில்லாத நிகழ்வுகள். பிடித்துவிட்ட நிலையில் பேருந்தில் பக்கத்தில் அமரப் போகும் நிலையில் ஸ்டாப்பிங் வந்திருச்சு என்று சொல்லும் சர்வாவின் அழைப்பில் தாக்குண்ட அனன்யாவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரது கண்களே ஏமாற்றத்தைக் காட்டிக் கொடுத்தது.. தங்கைதான் இப்படியென்றால் அக்காவும் அவரை மாதிரியே என்பதை போல் வீட்டு வாசலிலேயே அனன்யா சொல்வதை போட்டுடைக்க சர்வா எவ்வளவோ தாங்கிட்டோம், இதைத் தாங்கிர மாட்டோமா என்ற நினைப்பில் ஜெர்க்காவது செம காமடி..!

ஊர் தெரியும்.. பெயர் தெரியாது.. செல் நம்பர் தெரியாத நிலையில் அவரைத் தேடி ஊருக்கு வரும் அனன்யாவின் செயலை லாஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். முதல் முறையாகவே அப்படித்தானே வந்திருக்கிறார். அக்காவின் நம்பர் மட்டும்தானே.. இதனை சாய்ஸில் விட்டுவிடலாம்..!

பேருந்துகளில் விதம்விதமான கேரக்டர்கள்.. மகளின் பேச்சையே செல்போன் ரிங்காக பயன்படுத்தும் அப்பா, தூங்கியே வழியும் ஒருவர், ரோஷமான பொதுஜனம்.. பார்த்த உடனேயே காதல் செய்யத் துடிக்கும் காதலர்கள், மனைவியை விட்டுப் பிரிய முடியாத காதல் கணவன், வாயாடி குழந்தையும், அடக்க மாட்டாத அம்மாவும்.. வெற்றி பெற்ற பரிசுக் கோப்பையுடன் சந்தோஷமும், சிரிப்புமாக ஊர் திரும்பும் மாணவியர் கூட்டம்..  இப்படி அனைவருக்கும் ஒரு கதையைக் கொடுத்துவிட்டு இவர்களின் சந்தோஷத்தில் கொள்ளி வைக்கும் அந்த பேருந்தின் வேகத்தை படு ஆக்ரோஷமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கண்டிப்பாக இனிவரும் காலங்களில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளராக இடம் பெறப் போகிறார் வேல்துரை. பேருந்து மோதல் காட்சிகளையும், அது தொடர்பான பின்னணி காட்சிகளையும் கடும் மனதையும்   ஈரம் கசிய வைக்கும்வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

சிதைந்து போன உடல்கள், நசுங்கிக் கிடக்கும் மனிதர்கள், உற்றார் உறவினர்களின் கதறல் என்று அத்தனையையும் விரட்டி விரட்டி படம் பிடித்திருக்கும் கேமிரா, சம்பவத்தின் வினை அசுர வேகம்தான் என்பதை கச்சிதமாக உணர்த்தியிருக்கிறது. அதிலும் ஒரு பேருந்திலிருந்து அடுத்த பேருந்துக்குள் பயணித்து சென்று மீண்டும் வெளியில் வந்து நிற்கும் காட்சியில் ஈரக்குலை நடுங்கியது என்பார்களே.. அது போன்ற நிகழ்வுதான்..! இளகிய மனதுடையவர்கள் கிளைமாக்ஸ் காட்சியை தவிர்ப்பதும் ஒருவகையில் நல்லதுதான்..!

சமூக விழிப்புணர்வுமிக்க திரைப்படம் இது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் சொல்கின்ற விஷயம் அத்தனை பேருக்கும் சிரமமில்லாமல் போய்ச் சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் கதைக் களமாக காதலையும், இன்றைய நிலைமையில் காதலர்கள் படுகின்ற பாட்டையும் மிக அழகாக திரைக்கதையில் வடித்திருக்கிறார் இயக்குநர்.

இசை புதுமுகம் சத்யா. ஜெய் பல்பு வாங்கும் இடங்களிலும், சர்வாவை அனன்யா போட்டுத் தாக்கும் இடங்களிலெல்லாம் பின்னணி இசையைக் கூர்ந்து கவனியுங்கள்.. ஹாஸ்ய உணர்வை இசையே கூட்டிக் கொடுக்கிறது. படம் முழுவதும் மிக மெலிதான நகைச்சுவை உணர்வை நடிப்பிலும், இயக்கத்திலும் இயக்குநர் வைத்திருந்தாலும் இசை அதனை கொஞ்சம் உயர்த்தியே பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள் சத்யா. கிளைமாக்ஸின் உக்கிரத்தில் இசையும் தனது பங்களிப்பை கச்சிதமாகவே செய்திருக்கிறது..!

இந்த வருடத்திய ஹிட் பாடல்கள் பட்டியலில் 'மாசமா ஆறு மாசமா' பாடலும் இடம் பிடித்துவிட்டது. நா.முத்துக்குமாருக்கு பெயர் சொல்லக் கூடிய பாடல்களாக "கோவிந்தா"வும், 'சொட்டச் சொட்ட'வும் அமைந்துவிட்டன. இயக்குநர் சரவணனே எழுதிய 'மாசமா ஆறு மாசமா' பாடல் காட்சிகள் புதுமையாக, ரசிக்கும்வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பும் இயக்குநருக்கு நன்று கை கொடுத்திருக்கிறது..!

"நல்ல திரைப்படங்களை கொடுத்தால் யார் வந்து பார்க்குறா..?" என்று மக்களைக் குற்றம் சொல்பவர்கள் தயவு செய்து இத்திரைப்படத்தை வந்து பார்த்துவிட்டு பின்பு பேசலாம்.. 'தேவி கருமாரி' திரையரங்கில் படம் முடிவடைந்தவுடன் அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். மக்களின் மனநிலை ஒன்று போலத்தான் எப்போதும் இருக்கிறது. அதனை வெளிக்கொணர வைப்பதில்தான் இயக்குநர்களின் பங்கு அவசியம் தேவை. இதை சரவணன் மிக அழகாக செய்திருக்கிறார்.

மருந்தை தேனுடன் கலந்து கொடுப்பது மருந்தின் கசப்பு தெரியாமல் இருக்கத்தானே..? சினிமா பார்க்க தற்போது ஆவலுடன் ஓடி வருவது இளையோர் கூட்டம். அவர்களுக்குப் பிடித்தது காதல். காதலர்களின் துயரம், மக்களின் கண்களில் நீரை கசியச் செய்யும்.. அது அவர்களது மனதைப் பாதிக்கும். திரையரங்கு ரசிகர்களாலும், மக்களாலும் குளிர்விக்கப்படும் என்பதை உணர்ந்து அந்தத் திட்டத்திலேயே படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஜெயித்தும்விட்டார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

பயணிகளுக்கும் ஒரு மனம் உண்டு. ஏகப்பட்ட கனவுகளோடு வந்து கொண்டிருப்பவர்கள்.. அவர்களை பத்திரமாக கொண்டு போய்ச் சேர். 10 மீட்டர் என்பது, உனக்கும் சாவுக்குமான இடைவெளி என்ற எச்சரிக்கை உணர்வை ஓட்டுநர்களுக்கு உணர்த்தியிருக்கிறது இத்திரைப்படம்.

பொதுவாக மனம் நிறைய கனவுகளோடு இருப்பவர்களுக்குத்தான் மிக எளிதாக மரணம் வரும் என்பார்கள். என்னுடைய வாழ்க்கையிலும் சிலரது மரணத்தின்போது அதனை நான் உணர்ந்திருக்கிறேன். "எப்படியும் பிரணாய் ராய் போல் பேசப்படும் பத்திரிகையாளனாக வருவேன். அத்தனை பேரும் என்னை பாராட்டுவதை போல் செய்யப் போகிறேன்.." என்று தினத்துக்கும் ஒரு கனவோடு இருந்த எனது நண்பர், 'தமிழன் எக்ஸ்பிரஸ்' ரிப்போர்ட்டர் வேல்பாண்டியன் இது போன்ற ஒரு சாலை விபத்தில்தான் அகோரமாக உயிரிழந்தார். "ஷங்கரை போன்று மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குநராக முன்னுக்கு வருவேன்.." என்று முதல் படத்தின்போதே அறிவித்திருந்த இயக்குநர் திருப்பதிசாமியும், ஒரு இரவு நேரத்தில் விபத்தொன்றில்தான் உயிரைவிட்டார். எஸ்.பி.பி. போல் வரப் போவதுதான் லட்சியம் என்று சொன்ன பின்னணி பாடகர் சாகுல் ஹமீது, திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில்தான் உயிரைவிட்டார். மிகச் சமீபத்தில் கடந்த புதன்கிழமை எனது நண்பன் ஹரிபாபு திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரை விட்டுள்ளான். நிறைய சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்தவன். டிவியில் பெரிய நடிகனாக வர வேண்டும் என்பதற்காக 2 மாதங்களுக்கு ஒரு முறை சென்னைக்கு வந்து டேரா போட்டு வாய்ப்பு தேடி வந்தவன்.. இப்போது வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்துவிட்டான்.. என்னவோ போங்க..!

சிறந்த திரைப்படங்கள் வரும்போது அதனை அங்கீகரித்து, பாராட்டுவது நமது கடமை. இந்த நேரத்தில் இந்தத் திரைப்படத்திற்கும் நாம் அதனைச் செய்தாக வேண்டும்..! வாருங்கள் ஆதரவளிப்போம்..!

கோடி நன்றிகள் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸூக்கும், சரவணனுக்கும்..!

1992-கும்பகோணம்-மகாமகத்தில் நடந்த பயங்கரம்..!

09-09-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவு செய்து வைக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் அடுத்து வந்திருப்பது 1992-ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக தினத்தன்று நடந்த பயங்கரம்.  தொடர்ந்து இரு இதழ்களில் வந்த கட்டுரையுடன் கூடவே அப்போதைய ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டரும், தற்போது இணைய ஊடகங்களில் நமது உயிரையெடுக்கும் 'உத்தம நண்பர்' திரு.மாயவரத்தானின் நேரடி அனுபவத்தையும் இணைத்தே பதிவு செய்து வைக்கிறேன்..!

1992-கும்பகோணம் மகாமகம் பயங்கரம்-1

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 29: 26.2.92


தாமதமாகத் துவங்கப்ப பராமரிப்பு வேலைகள், அரசுத் துறைகளின் மெத்தனம், ஆகம விதிகள் மீறப்பட்டதாக எழுந்த புகார்... என்று பல்வேறு சர்ச்சைகளோடு இம்முறை கும்பகோண 'மகாமக நாள்’ நெருங்கியது. 'தமிழக முதல்வர் ஜெயலலிதா மகாமகக் குளத்துக்கு வந்து நீராடப்போகிறார்’ என்கிற செய்தி மேலும் பரபரப்பை உண்டாக்கியது. கட்டுக்கடங்காத கூட்டத்தில் கும்பகோணம் சென்று பத்திரமாகத் திரும்புகிற பயம், லட்சக்கணக்கான பக்தர்​களிடையே இருந்தது. முதல்வரின் நேரடி விசிட், அதனால் ஏற்படப் போகும் பாதுகாப்புக் கெடுபிடிகள், பக்தர்களை மேலும் பயமுறுத்திக்​கொண்டுதான் இருந்தன.

பக்தர்களின் பயத்தை உறுதி செய்வதுபோல், மகாமகத்துக்கு முதல் நாளான 17-ம் தேதியே நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. 'முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் குளத்தில் இறங்க அனுமதி இல்லை!’ என்று 17-ம் தேதி போலீஸ் செய்த அறிவிப்பு பக்தர்களைத் திகிலடையச் செய்தது. போலீஸ் அறிவிப்பை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பி.ஜே.பி. தொண்டர்கள். போலீஸ் அறிவிப்பை மீறி, பி.ஜேபி-யினர் முதல் நாளே குளத்தில் இறங்க ஆரம்பித்தனர். அதனால் போலீஸின் கெடுபிடிகள் அவ்வளவாக இல்லாமல் போனது. ஆகவே, முதல்வர் வருகைக்கு முன்பே பல்லாயிரம் பேர் நீராடிவிட்டுக் கிளம்பினர்.

மகாமகத்தன்று காலை 8.30 மணிக்கு, குளத்தில் மிதமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் காவல் துறையினர் கூட்டத்தை ஓரளவு கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.

இந்த ஒழுங்கு முறை காலை 9.30 மணி வரை நீடித்தது. ஆனால், குளத்தில் இருந்து வெளியேறாமல் அங்கேயே நின்ற கூட்டம், முதல்வர் ஜெயலலிதா நீராடும் காட்சியைக் காண வேண்டி அதற்கென அமைக்கப்பட்டு இருந்த பிரத்யேகமான குளியல் அறைப் பகுதியை நோக்கி நகர்ந்து அந்தப் பகுதியிலேயே தங்கி நின்றது.

குளத்தின் கொள்ளளவு 40 ஆயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால், அதைவிடப் பல மடங்குக் கூட்டம் குளத்தில் நின்றது. குளத்தில் கால்வாசி பகுதிக்கு மேல் முதல்வரின் பாதுகாப்பு கருதி காவல் துறை வளைத்து நின்றது. இதனால் நேரம் ஆக ஆகக் குளத்தின் உள்ளே மக்கள் நெருக்கம் அதிகரித்தது. முதல்வர் நீராடும் இடத்தை நோக்கி நெருக்கியடித்தபடி நகர்ந்தது மக்கள் கூட்டம்... முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்த தேவாரம் ஐ.ஜி., அடிக்கடி பைனாகுலர் மூலம் மக்கள் அவதிப்படுவதைப் பார்த்துக்​கொண்டு இருந்தார். ஆனால், குளத்துக்குக் கூட்டம் வருவதைத் தடுக்க முடிய​வில்லை.

சரியாகக் காலை மணி 11.32-க்கு பிரத்யேகமாக அமைக்கப்​பட்டிருந்த குளியல் அறைப் பகுதிக்கு வந்த முதல்வர், படிக்கட்டில் நின்று மக்களைப் பார்த்துக் கையை அசைத்தார். அவருக்கு நேர் எதிர்ப்புறம் வடக்கு வீதிப் பக்கம் நின்ற கூட்டத்தினர் முதல்வரைக் காண முடியாமல் குளக்கரையில் இருந்த கோயில் ஒன்று மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு வந்து 'பாங்கூர் தர்மசாலா’ கட்டடத்தின் வெளிப்​புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயல, அதைத் தொடர்ந்துதான் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர்.

பொதுமக்கள் மத்தியில் கிரில் விழுந்தபோது, அந்தப் பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக் ​கொள்​வதற்காக நாலாபுறமும் திக்குத் தெரியாமல் ஓடினார்கள். அதனால் குளத்தில் இருந்து கரையேறிய மக்களும், சிதறி ஓடிய மக்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்போது வீதிகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கடியில் ஆண்களும் பெண்களுமாகப் பல உயிர்கள் பலியாகின.

போலீஸ் தரப்பில் 'பலியானது 48 பேர்’ என்று புள்ளிவிவரம் கொடுத்தாலும், இன்​னும் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். அந்த அள​வுக்குக் களேபரம், கூக்குரல்கள், துயர சம்​பவங்கள் முதல்வர் நீராடிய இடத்துக்குச் சில நூறு அடிகள் தள்ளி நடந்தன. நிகழ்ச்சியை வர்ணித்துக்கொண்டு இருந்தவர்களின் மைக் ஒலிக்கும், கூட்டத்தின் இரைச்​சலுக்கும் நடுவே, மனித உயிர்களின் மரண ஓலங்கள் கேட்கவே இல்லை.

''முதல்வர் மதியம் 2.30 மணிக்கு மேல்தான் கும்பகோணத்தில் இருந்து கிளம்பினார். அதுவரையில் அவருக்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்திருப்பாரே...'' என்கிறார்கள் ஊர் மக்கள்.

இறந்தவர்களின் உடல்களை மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குடந்தை அரசு மருந்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் செஞ்சிலுவை சங்கத்தினர்.  நகரில் தொடர்ந்து ஆம்புலன்ஸ் 'சைரன்’ பரபரப்பாக ஒலித்துக்கொண்டே இருந்தது! மருத்துவமனையின் புதிய கட்டடமான அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அவசர கேஸ்களும் இறந்தவர்களின் உடல்களும் சரிசமமாக வந்து குவிந்தன.

ஊரில் இந்த சம்பவம் காட்டுத் தீ போலப் பரவ ஆரம்பித்ததும்... பொதுமக்கள் 'இறந்தவர்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?’ என்று மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோயில்களில் வேண்டிக்கொண்டு, பிணங்களை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்து துக்கத்துடன் குழுமிவிட்டனர். இறந்துபோனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய நிருபர்களை போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதோடு, ''நீங்க உள்ளுக்குள்ள நுழைஞ்சா பிரச்னை பெரிசாயிடும்!'' என்று மிரட்டினார்கள்.

குடந்தை மருத்து​வமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கடந்த 18.10.91 அன்றுதான் தொடங்கப்​பட்டதாம். அந்தக் கட்ட​டம் திறக்கப்பட்ட பிறகு நடந்திருக்கும் பெரிய விபத்து இது! ''12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மகாமக விழாவில், இது வரையிலும் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததே இல்லை...'' என்கிறார்கள்.

பிணங்களை அடையாளம் காட்டி உடல்களைப் பெற்றுச் செல்வதற்காக மருத்து​வமனைக்கு வந்திருந்த பலர், அடையாளம் காட்டிய பிறகும் அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவர்களில் ஒருவரிடம் காரணம் கேட்டபோது, ''இறந்துபோனது எங்க அம்மா. அவங்க 'மகாமகக் குளத்துக்குப் போறேன்’னு கிளம்பி​னப்ப, கிட்டத்தட்ட 25 பவுனுக்கு மேல நகைகள் போட்டுட்டுப் போனாங்க. அவங்க மூச்சுத் திணறி மயக்கமா இருக்காங்கனு சொல்லி ஆஸ்பத்திரில சேர்க்கிற வரைக்கும்கூட எல்லா நகைகளும் சரியாத்தான் இருந்திச்சு. அதுக்கப்புறம் அவங்க இறந்துட்டாங்கனு சொல்லிப் பிணத்தோட பிணமாக் கிடத்தினாங்க! அப்புறம் நாங்க போயி பாத்தா, எங்க அம்மா உடம்புல ஒரு துண்டு நகைகூட இல்லை. கேட்டா.... 'அந்தம்மாவே போயிடுச்சு... நகையா முக்கியம்’கிறாங்க. ஆனா, 'பிணத்தோட, நகைகளையும் பெற்றுக் கொண்டோம்’னு எழுதிக் கையெழுத்து போடச் சொல்றாங்க'' என்றார் அழுதபடியே!

தேவகோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கையைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து, ''இங்க பாரு... உன்னோட அப்பாவும் அம்மாவும் இறந்து போயிட்டாங்க! இப்ப அழுவறதுக்கு நேரம் இல்லை. தேவகோட்டைக்கு ஏற்கெனவே ஒரு பாடியை ஏத்தி ஆம்புலன்ஸ் புறப்படத் தயாரா நிக்குது. உங்க அப்பாவையும் அம்மாவையும் வண்டில ஏத்திரலாம் இல்லையா...'' என்று கேட்டதும் அந்த இளைஞர் அதிர்ந்து கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது.

இந்தத் துயரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அரசுத் தரப்பில் இருந்து பல முரண்பட்ட செய்திகள்...

இதுவரையில் இறந்தவர்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படும் எண்ணிக்கை - 48 பேர். ஆனால்... ஆஸ்பத்திரியில் பிணங்களை அடுக்கி இருக்கும் பகுதிக்கு நிருபர்கள் சென்று பார்வையிட்டபோது... இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாகவே இருந்தது.

நம் கண் முன்னாலேயே வயதான பெண்மணி ஒருவர் கூட்டத்தில் மிதிபட்டுக் கொண்டு இருந்தார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது போலீஸாரால் பலவந்தமாக இடத்தைவிட்டு நாம் அப்புறப்படுத்தப்பட்டோம்! பிறகு அந்தப் பெண்மணி மயக்கமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இறந்துபோனார்.

கூட்ட நெரிசலில் பலரது ஆடைகள் கிழிபட்டன. நகைகள் பறிபோயின. பணம் ஏராளமாகப் பறிபோனது. பலர் அரை நிர்வாணமாக போலீஸாரின் கெடுபிடிகளால் கூட்டத்தில் மூச்சுவிடக் கூட முடியாமல் முன்னேறினார்கள். அப்போது பொதுமக்கள் இழந்த பொருட்களின் மதிப்பு மட்டும் பல லட்ச ரூபாய்கள் இருக்கும்! ரோட்டில் ஏராளமான சட்டைகள், வேஷ்டிகள், புடவைகள், செருப்புகள்...

ஒரு சில மணி நேரத்தில், ஆன்மிக விழா ஒன்று, மரண பூமியாக மாறிப்போனதை நேரில் கண்ட அதிர்வில் இருந்து விலக முடியவில்லை!

- நமது நிருபர்கள்

படங்கள் : கே.ராஜசேகரன்

ஒரு பக்கம் சாவு... மறுபக்கம் குதூகலம்!

. ''கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பகுதி புதிய கட்டடத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதிதான் முதல்வர் திறந்துவைத்துவிட்டுப் போனார். சரியாக நான்கு மாதங்களுக்குப் பிறகு அதே 18-ம் தேதி பிணங்களால் நிரம்பி வழிந்தது!'' என்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொல்லி வருந்தினார்.

கண் இமைக்கும் பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்தக் கோரச் சம்பவத்தால் அந்த இடத்தையே துக்கம் சூழ்ந்துகொண்டது. எங்கும் அழுகை மயம்... ஒரு புறம் இந்த சம்பவம் நடந்துகொண்டு இருக்க... இன்னொரு புறத்தில் முதல்வர் குளித்து முடித்து 'பந்தா’வாக காரில் ஏறிச் செல்ல, அவர் சென்றதும் காவல் துறை உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் அதே இடத்தில் குளித்தனர்.

குளத்தில் போடப்பட்ட காசுகளைப் பொறுக்குவதில் ஏகப்பட்ட போட்டா போட்டி. இதில் காசு எடுப்பதில் பலர் முட்டி மோதி விழுந்து எழுந்ததில் பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். சிலர் இறந்தனர்.

1992-கும்பகோணம் மகாமகம் பயங்கரம்-2

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 40: 4.3.92

கும்பகோணம் மகாமத் திருவிழாவில் நடந்து முடிந்த அந்த மாபெரும் சோகச் சம்பவத்தின் பாதிப்பு துளியும் மாறவில்லை. மீண்டும் ஒருமுறை, அந்த நகரைச் சுற்றி வந்தபோது, விபத்து பற்றி மேலும் பல புதிய தகவல்கள் தெரியவந்தன.

 விழா ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிறைய கால அவகாசம் இருந்தும் மிகத் தாமதமாக அரசு விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததே, பல குளறு​படிகளுக்குக் காரணம் என்று தெரிய வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே, மகாமகத்துக்கான முதல் கட்ட வேலைகள் துவங்கப்பட்டு, அதற்காக  40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அப்போதைய தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான கோ.சி.மணி அதற்கான பணியில் தீவிரமானபோதுதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

அ.தி.மு.க. அரசு புதிதாகப் பதவி​யேற்​ற​வுடன், மகாமக வேலைகள் கண்டு​ கொள்ளப்​படவே இல்லை. அரசு ஒதுக்கிய  10 கோடி  மகாமகத்துக்கு ஒரு வாரம் முன்புதான் வந்து சேர்ந்ததாகத் தகவல்!

வழக்கமாக மகாமகப் பணிக்கு அரசு அதிகாரிகள் ஒரு குழுவாகவும், ஊர் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட ஒரு கமிட்டியும் அமைக்கப்படும். ஆனால், இந்த முறை மகாமகத்துக்குச் சில நாட்கள் முன்புதான், ஊர் முக்கியப் பிரமுகர்களைக்கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதிலும், சம்பந்தமே இல்லாத வெளியூர் பிரமுகர்கள் சிலர் சேர்க்கப்பட்டதில் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலருக்கு வருத்தம்.

இது இப்படியிருக்க, மகாமகக் குளத்துக்கு வருகை தரும் பக்தர்கள் எப்படி வந்து, போக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் ஒரு ரூட் வரைபடம் பிரின்ட் செய்து விநியோகித்தார்கள். நாளிதழ்கள் வரைபடத்தைப் பிரசுரித்தன. வெளியூரில் இருந்து வந்திருந்த பலர் அந்த வரைபடைத்தை மறக்காமல் கையில் வைத்திருந்தனர். அதேபோல, மிகப் புனிதமான என்று சொல்லப்படும் 'தீர்த்தவாரி நேரம்’ பகல் 11.45 முதல் 12.30 என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
   
முதல்வர் அங்கே வரப்போகிறார் என்பதை மகாமகம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் அழகு திருநாவுக்கரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். அதுவரை மக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த அதிகாரிகள், திடீரென்று முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டில் திசைதிரும்பிவிட்டார்கள்.

''ஏற்கெனவே வரைபட மேப், குளத்தில் நீராட வேண்டிய நேரம்... இப்படிப் பல விஷயங்களை விளம்பரப்படுத்தி விட்ட நிலையில், சி.எம். வந்தால் அந்த புரோகிராம்களை மாறுதல் செய்ய வேண்டிவரும். அப்படி மாறுதல் செய்தால்கூட, அதை மக்களுக்கு விளம்பரப்படுத்த அவகாசம் இல்லையே! என்ன செய்வது?'' என்று ஓர் அதிகாரி கருத்துச் சொல்ல... அவருக்கு ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் இருந்து பயங்கர டோஸ்!

அதேபோல, மேற்குக் கரை வழியாக காரில் முதல்வர் நுழைந்தவுடன் ஓரப் பகுதியிலேயே ஓர் இடத்தில் முதல்வர் குளித்துவிட்டு, வந்தவழியே திரும்பிப் போகும்வகையில் ஓர் ஏற்பாட்டை அதிகாரிகள் செய்திருந்தார்கள். இதன்படி நடந்திருந்தால், மேற்குக் கரையின் ஒரு வழி மட்டுமே அடைபட்டிருக்கும். கரையின் மறுமுனை வழியாக மக்கள் போக்குவரத்து இருந்திருக்கும். ஆனால், இங்கேயும் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு, மேற்குக் கரையின் நடுவில் ஓர் இடத்தில் முதல்வர் குளிக்க இடம் குறித்திருக்கிறார். அதிகாரிகள் வாயடைத்துப்போய் நின்றார்களாம்.

இப்படி இடம் மாறியதால்தான் மேற்குக் கரையின் இருமுனையும் முதல்வர் வருகைக்காக போலீஸாரால் தடை ஏற்பட்டுத்தப்பட்டது. இப்படித்தான் குழப்பம் ஆரம்பித்தது. இது ஒருபுறம் இருக்க... காசி விஸ்வநாதர் கோயிலின் கொடிக்கம்பம் முறிந்து விழுந்த தகவலை அப்போதைக்கு அதிகாரிகள் மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள். இருந்தும், அந்தத் தகவல் மக்களிடத்தில் பரவிவிட்டது.

மகாமகப் பணிக்கான ஸ்பெஷல் டியூட்டிக்​காக டி.ஐ.ஜி-யான செல்வராஜைப் போடுவதாக முடிவாகி இருந்தது. இந்த நிலையில், டி.ஐ.ஜி. திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். இதனால் போலீஸார் மத்தியிலும், 'அபசகுணமான பீதி’ பரவியிருந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் டி.ஜி.பி-யான ஸ்ரீபால் கும்பகோணத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் டெலிபோனில் தொடர்புகொண்டு, ''அன்று எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது! எல்லாம் நல்ல​படியாக நடக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் கோயிலில் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்றாராம்!

ஆக மொத்தத்தில் மகாமகத் தினத்தன்று, 'நிச்சயம் ஏதோ ஒரு விபரீதம் நடக்கும்’ என்று போலீஸார் மத்தியில் ஒருவித பயம் இருந்தது! அதனால், முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவர்கள் மிகத் தீவிரமாக இருந்தனர்.

நீராட வருபவர்கள் குளத்தில் வடகரைப் பகுதியில் இறங்கி மேற்குக் கரையில் ஏறுவதாக முன்கூட்டி திட்டமிட்டு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த வழியெல்லாம் கடைசி நிமிடத்தில் முதல்வர் வருகையால் தடை செய்யப்பட்டன. வடகரையில் இறங்கி தென்கரையில் ஏறவேண்டும் என்ற போலீஸார் திடீரென திட்டத்தை மாற்றினர். இந்த 'மாற்ற விவரம்’ பொதுமக்களுக்குப் போய்ச் சேராததுதான் பெரும் குழப்பம்!

காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் குளத்தில் இறங்கியவர்கள் மீண்டும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நிற்கத் தொடங்கினர். குளத்தின் படிகளில் நின்றவர்கள் வெகுநேரம் நிற்க முடியாமல் அப்படியே நெருக்கமாக உட்கார்ந்துவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான மக்கள் குளத்தில் இறங்க வாய்ப்பு எதிர்பார்த்தபடி பதற்றத்துடன் முட்டிமோதி நின்றுகொண்டு இருந்தனர்.

இந்த நெருக்கடியான கூட்டத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் வேறு சத்தமிட்டபடி வானத்தில் சுற்றி வர... பக்தர்களிடம் சலசலப்பு!

நெட்டியடித்துக்கொண்டு முன்னேறத் தொடங்கினர். ''மேற்குக் கரையை ஒட்டிய குளத்துக்குள் நின்றவர்களிடம் குடந்தை போலீஸ் உதவிக் கண்காணிப்பாளர் கந்தசாமி லேசாக லத்திப் பிரயோகம் செய்தார். இதுதான், போலீஸின் முதல் அத்துமீறல் சம்பவம்... கூட்டம் மிரண்டு ஓடத் தொடங்கியது!'' என்கிறார்கள் நேரில் பார்த்த பிரமுகர்கள்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் சாமிநாதன் ஓடிப்போய், ''பக்தர்களை அடிக்காதீர்கள்!'' என்று கந்தசாமியிடம் கெஞ்சினார். ஆனால், சிதறிய கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.


சரியாக 11.45 மணிக்கு ஜெயலலிதா புனித நீராடத் தொடங்கியபோது ரெடியாக இருந்த தேவாரம் ஐ.ஜி., தீர்த்தவாரிக்கான நேரம் தொடங்கிவிட்டதை அறிவிப்பதற்காக மூன்று முறை துப்பாக்கியால் வானத்தில் சுட்டுக் காட்டினார்.

தேவாரம் துப்பாக்கி உயர்த்துவதைப் பார்த்ததுமே, 'ஏதோ அசம்பாவிதம்’ என்று தவறாக எண்ணி மக்கள் சிதறத் தொடங்கினர். மக்கள் பீதி அதிகமாகிறது. உடனே அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில், கூட்டத்தில் சிக்கிப் பலர் மூர்ச்சையாகி இருக்கிறார்கள்.

12.00 மணிக்குப் புனித நீராடிவிட்டுக் கரையேறிய ஜெயலலிதா, பொதுமக்களைக் கவர்வதற்காக கையசைத்துக் காட்டும்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில், வடகரையில் உள்ள 'பாங்கூர் தர்மசாலா’ கிரில் கவர் தடுப்பு அருகே மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது. அப்போது கிரில் சுவர் சாய்ந்தது. இதைப் பார்த்ததும் கூட்டம் மேலும் சிதறி ஓடியது. அப்போது கட்டடம் இடித்துவிட்டதாக நினைத்த மக்கள் நாலா பக்கமும் ஓடியபோது அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் சுழற்றிச் சுழற்றி அடித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ''அடிக்காதீர்கள்!'' என்று அந்த இன்ஸ்பெக்டரின் காலைப் பிடித்துக் கெஞ்சியதாகத் தெரிகிறது.

ஒரு கும்பல் குளத்தில் இருந்து கரையேறவும், மற்றொரு கும்பல் போலீஸ் தடியடி பொறுக்கமுடியாமல் குளத்தில் இறங்க முற்பட்டதும் இடையில் மக்கள் சிக்கி மூச்சுத் திணறினர்.

சிறிது நேரத்தில் ஜெயலலிதா அங்கு இருந்து புறப்பட்டு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்கு ரெஸ்ட் எடுக்கச் சென்றதும், குளத்தில் இருந்து ஒட்டுமொத்த மக்களும் மேற்குக் கரையிலும், வடகரையிலும் கரையேறிப் போக முற்பட்டனர். போலீஸார் மீண்டும் ஒரு முறை தடியடிப் பிரயோகம் நடத்தினர்!

இப்படியாகப் பல தடவை குறுகிய ஏரியாவுக்​குள்ளே போலீஸ் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எல்லாம் முடிந்து கூட்டம் வடியத் தொடங்கியபோது, வடகரையில் பாங்கூர் தர்மசாலா அருகில் கிட்டத்தட்ட 200 அடி இடைவெளியில் நூற்றுக்​கணக்கானவர் விழுந்து கிடந்தனர். காயம்​பட்டுப் பலர் துடித்துக்கொண்டு இருந்தனர். இவர்களைத் தவிர, குளத்தின் மற்ற கரைகளில் நெரிசலில் சிக்கிக் காயம்பட்டவர்கள் பலர். இவர்கள் அனைவரையும் தர்மசாலா வாசலருகே தூக்கி வந்து தரையில் வரிசையாகப் படுக்க வைத்திருந்தனர்.

இத்தனை விபரீதம் நடந்து முடிந்ததும், போலீஸ் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப் போனது. உடனடியாக ஆம்புலன்ஸ், போலீஸ் கன்ட்ரோல், ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் தகவல் சொல்லி உஷார்படுத்தியது ஹாம் (பிகிவி) ரேடியோ சங்கத்தினர்தான்!
 
எல்லாவற்றிலும் கொடுமையான ஒரு விஷயம்... குளத்தின் வடகரையில் இருமுனைகளிலும் நின்றிருந்த போலீஸார், நிலைமை தங்கள் கைமீறிப் போவதைப் பார்த்து பயந்து போய்விட்டனர். 

எப்படி மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்று புரியாமல், தங்கள் கைகளில் இருந்த வயர்லெஸ் மூலம் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டனர். ''முதல்வர் பத்திரமாகப் போகட்டும்... அப்புறம் பார்க்கலாம்!'' என்றே எல்லா முனைகளில் இருந்தும் பதில் வந்தது. அதோடு... கீழ்மட்ட போலீஸாரிடம் இருந்து வந்த வயர்லெஸ் அழைப்புகளைச் சட்டை செய்யாமல், முதல்வரையும் தங்கள் குடும்பத்தினரையும் பத்திரமாக காரில் அனுப்புவதில்தான் உயர் அதிகாரிகள் சிலர் கண்ணும் கருத்துமாய் இருந்து இருக்கிறார்கள்!

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்களிடம் அகப்பட்டத்தைப் பறிக்கவே ஒரு கூட்டமும், சில்மிஷம் செய்ய வந்திருந்த ஒரு கூட்டமும் போலீஸார் முன்னிலையிலேயே தங்கள் பணியை அரங்கேற்றியதுதான் அனைத்திலும் சோகமானது!

'தர்மசாலாவில் உணவுப் பொட்டலங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் விநியோகித்ததைப் பார்த்ததாக’ உள்ளூர்க்காரர்கள் சிலரைக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதனால்தான் பதற்றம் உண்டானது என்று காட்டப் பார்க்​கிறார்கள். அப்படி எழுதிக் கொடுத்தவர்கள் என்னிடம் வந்து முறையிட்டார்கள். உடனே, நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்து, அவர்கள் எழுதிக் கொடுத்ததை வாபஸ் பெறச் செய்தேன்!'' என்கிறார் சாமிநாதன்.

உண்மையில் மகாமகத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மருத்துவ முகாம், இலவச உணவு என்று சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை, கட்சி வித்தியாசம் இன்றி அரசியல் பிரமுகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த மக்களும் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசு தரப்பில், இவர்கள் மீதுதான் ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

********
விருந்து நடந்தது..!

முதல்வரும் சசிகலாவும் குளத்துக்கு வந்தவுடனே - அங்கு அவருக்காக ஏற்பாடாகி இருந்த பாத்ரூமைப் பார்த்த முதல்வர் முகம் சுளித்திருக்கிறார். அந்த பாத்ரூமுக்குள் போய் குளிக்கலாமே என்று முதல்வரை சசிகலா அழைத்திருக்கிறார். ஆனால், முதல்வர் மறுத்துவிட்டு, குளத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து குளிக்க முடிவு செய்தார்.

முதல்வரின் இந்தத் திடீர் முடிவு, ''அடடா, இத்தனை ஏற்பாடுகளைச் செய்தும் வேஸ்ட்டா போச்சே!'' என்று அமைச்சர் ஒருவர் உட்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் கவலைப்பட்டனர். அவர்களுக்கு அருகில் இருந்து ஓர் அதிகாரி இப்படிச் சொன்னாராம்... ''மக்களோடு மக்களாக நின்று முதல்வர் குளிக்கும் வரையில் சிறு தடுப்பு அமைத்து ஏற்பாடு பண்ணி இருக்கலாம். அதைச் செய்யாமல், தனி பாத்ரூமே கட்டியது முதல்வருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.''

முதல்வர் தனது அமைச்சரவை சகாக்களை ஒவ்வொருவராக அழைத்து, புனித நீரை அவர்கள் மீது தெளித்து வாழ்த்தினாராம். பிறகு, தொகுதி எம்.எல்.ஏ-வான ராமநாதன், தொகுதி எம்.பி-யான மணிசங்கர ஐயர் இருவருக்கும்கூடப் புனித நீரைத் தெளித்து வாழ்த்தியபோது மெய்சிலிர்த்துவிட்டார்களாம்.

முதல்வர் நீராடிய பிறகு முன்பே ஏற்பாடு செய்தவாறு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டார். அங்கே, தஞ்சாவூர் பாணியில் மாபெரும் விருந்து காத்திருந்தது. முதல்வருக்கு ராசியான எண் 9. அதன் இரண்டு மடங்காக 18 வகை காய்கறிகளுடன் சாப்பாடு.  அமைச்சர்கள் உட்பட 300 பிரமுகர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். மகாமகக் குளத்தருகே நடந்து முடிந்த அந்தத் துயரச் சம்பவம் குறித்து அப்போது முதல்வரிடம் சொல்லத் தயங்கிய சில அதிகாரிகள் மட்டும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை!

அந்தச் சம்பவம் பற்றி சென்னை சென்ற பிறகுதான் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ''இந்த விஷயத்தைக் கும்பகோணத்திலேயே தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை?'' என்று அதிகாரிகளிடம் முதல்வர் கோபப்பட்டாராம்.

_ நமது நிருபர்கள்

இது நம்ம 'நொச்சு பார்ட்டி' மாயவரத்தான் எழுதிய நேரடி வர்ணனை

சென்ற சனிக்கிழமை வெளியான ஜூ.வி.யில் ‘பழசு என்றும் புதுசு’ பகுதியில் இடம் பெற்றிருந்த ‘மகாமகம்’ கட்டுரை எனது நினைவலைகளை கொஞ்சம் தட்டிச் சென்று விட்டது.

1992-ம் ஆண்டு மகாமகத்தை யாராலும் மறக்க இயலுமா? ’உடன்பிறவாச் சகோதரிகள்’ ஜெ & சசிகலா கலந்து கொண்டு சிறப்பித்த மகாமகம் அது! அவர்கள் கிளம்பிச் சென்றபின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க எக்கச்சக்க பேர் இறந்து போனது நினைவிருக்கலாம்.

இப்போதெல்லாம் மகாமகம் என்றாலே அதுதான் எல்லாருக்கும் நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

விகடனில் நிருபராக இருந்த காலம் அது. நான், விகேஷ், அறிவழகன் மற்றும் புகைப்படக் கலைஞர் கே. ராஜசேகர் ஆகிய நான்கு பேரும் விகடன் சார்பாக மகாமகத்தில் கலந்து கொள்ள முதல் நாளே கும்பகோணம் சென்று விட்டோம். 

"புகைப்படக்காரர் ஒருவர், ஆனந்த விகடன் நிருபர் ஒருவர் என இரண்டு பேருக்குதான் பாஸ் தர முடியும்.." என்று அரசு பி.ஆர்.ஓ. கூறிவிட்டார். எனவே நண்பர்கள் ராஜசேகர் மற்றும் விகேஷ் இருவருக்கும் பாஸ் வாங்கிவிட்டு கிளம்பி வந்தோம்.

சிறிது நேரம் கழித்து நான் மட்டும் தனியே மீண்டு சென்று பாஸ் கேட்டேன். “அதான் அப்பவே சொல்லியாச்சே” என்றார் அவர். “சார் நீங்க பாஸ் தந்தது ஆனந்த விகடனுக்கு. நான் ஜூ.வி. சார்” என்றேன். “ரெண்டும் ஒண்ணு இல்லையா?” என்று கேட்டார் அந்த அதிகாரி. “என்ன சார் கேட்கிறீங்க? ரெண்டும் வேற வேற நிர்வாகம் சார்” என்று அடித்துவிட்டேன். மறு பேச்சு இல்லாமல் பாஸ் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு பிரஸ்ஸுக்கும், அரசுக்கும் தொடர்பாளர்களாக பி.ஆர்.ஓ.க்கள் இருந்த காலகட்டம் அது.

மறுநாள் அதிகாலையிலேயே வரச் சொல்லி அரசு செலவில் ஏதோ ஒரு நல்ல ஹோட்டலில் காலை சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து ஒரு வேனில் மகாமகக் குளக்கரைக்கு கூப்பிட்டுச் சென்றார்கள்.

பிரஸ்ஸுக்கு என்று தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30 பேருக்கு மேல் அங்கே குழுமியிருந்தோம். குளத்திலும், குளக்கரையிலும் கும்பலோ கும்பல்! வால்டர் தேவாரம் கையில் பைனாகுலர் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் ‘லுக்’ விட்டுக் கொண்டிருந்தார்.

முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து குளத்துக்கு மேலே வட்டமடித்த போதே மக்கள் ஆரவாரம் களை கட்டியது.  வேத கோஷங்கள் முழங்க அவரும் சசிகலாவும் குளத்தில் இறங்கி மாறி மாறி தண்ணீர் எடுத்துக் குளித்துக் கொண்டிருந்த  போது கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்ப்பரித்தது. அந்நேரத்தில் வானத்தை நோக்கி டுமீல் என்று சுட்டு ஒரு மினி ராக்கெட்டை விட்டார் வால்டர். மக்கள் என்னவோ ஏதோ என்று பயந்து போனார்கள். முதல்வர் குளித்துக் கொண்டிருந்த இடத்துக்கும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சாமியார் (வட மாநிலத்தில் ஏதோ ஒரு சங்கராச்சாரியார் என்று நினைவு) மற்றும் அவர் சிஷ்யர்கள் மீது போலீஸ் திடீர் தடியடி நடத்தியது. அடி பொறுக்க முடியாமல் அவர் குளக்கரைக்கு ஓடி வந்தார்.
பிரஸ் கேலரியில் எல்லோர் கவனமும் முதல்வர் & கோ பக்கம் இருக்கையில் இந்தப் பக்கத்தில் நடந்த கூத்தை கவனித்து விட்ட நான் அங்கிருந்து தாவிக் குதித்துச் சென்று அந்தச் சாமியாரை புகைப்படம் எடுத்து என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதை கவனித்து விட்டு வேகமாக எங்களிடம் வந்தார் வால்டர். “எந்த பிரஸ் நீங்க?” என்று கடுகடுத்த முகத்துடன் கேட்டுவிட்டு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாஸைப் பார்த்தார். “ஜூ.வி” என்றேன். முகம் இன்னமும் கறுத்துப் போனது. “ஜூவிக்கு எவன் பாஸ் கொடுத்தான்” என்று முணுமுணுத்து விட்டு மேற்கொண்டு என்னிடம் எதுவும் பேசாமல் அந்த சாமியாரிடம் ”சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க” என்று எச்சரித்து வேறு பக்கம் அழைத்துச் சென்று விட்டார். முதல்வர் குளித்து விட்டு நகர்ந்த அடுத்த விநாடியில் சுற்றியிருந்த போலீஸாரும் எனக்கென்ன என்று கிளம்பிவிட்டார்கள்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. வரும் போது ராஜமரியாதையுடன் அழைத்து வந்த பிரஸ் மக்களையும் அம்போவென விட்டுவிட்டு உடனடியாக கிளம்புங்கள் என்று துரத்தி விட்டார் வால்டர்! அதுவும் குறிப்பாக என்னையும், கூட இருந்த நண்பர்களையும் “சீக்கிரம், சீக்கிரம்” என்றார். மக்கள் கும்பலில் மாட்டிக் கொண்டோம். கொஞ்சம் தூரம் நடப்பதற்குள் எனக்கும் மூச்சு திணற ஆரம்பித்தது. இன்றைக்கு அவ்வளவு தான் நம்ம கதை என்று லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பர் விகேஷ் கத்தினார். “காலை தரையிலே வெக்காதீங்க. ரெண்டு பக்கமும் வர ஆளுங்க தோளிலே கையை வெச்சுக்கிட்டு காலை மடக்கிக்கிடுங்க. இல்லைன்னா சாவ வேண்டியது தான்” என்றார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தேன். இரண்டு பக்கமும் இருந்த முகம் தெரியாத ஆட்கள் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள். 

கையைக் காலை அசைக்கக்கூட வழியில்லை. காலைக் கீழே வைத்து தப்பித்தவறி தடுக்கி விட்டால் அத்தோடு கதை முடிந்து விடும். மகாமகக் கும்பல் அத்தனையும் நம் மீது நடந்து போயிருப்பார்கள். வழியிலேயே ஓரிருவர் அப்படி கீழே விழுந்து பரிதாபக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.அவர்களை கீழே குனிந்து பார்க்கக்கூட முடியாமல் ஒட்டு மொத்த கும்பலும் அவர்கள் மீதேறி போய்க்கொண்டிருந்தது. சொல்லப் போனால் யாருமே தானாக நடக்கவில்லை. பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கும் மேலாக அப்படித்தான் வர வேண்டியிருந்தது. ஒரு குட்டிச் சுவர் பாதியில் வந்தது. அப்படியே அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்து மூச்சு விட ஆரம்பித்தேன். அதே போல விகேஷும் வந்தார். சுமார் அரை மணி நேரத்துக்கு அப்படியே அங்கேயே மண்ணிலேயே உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். அறிவழகனும், ராஜசேகரும் எந்தப் பக்கம் போனார்கள் என்றே தெரியவில்லை. அப்படியே தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல ஆரம்பித்தோம். வீதியெங்கும் செருப்புகள், துணிமணிகள், அது இதுவென போர்க்களம்! ஆம்புலனஸ் சப்தங்கள் ஊரெங்கிலும் அலறிக் கொண்டிருந்தது.


ஏதோ பிரச்னை என்பதும் புரிந்தது. நேரடியாக அரசு மருத்துவமனைக்கு ஓடினோம். அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்தது!

அன்றைய தேதியில் நான் உயிர் பிழைக்க தோள் கொடுத்த முகமறியா அந்த இருவருக்கு(ம்) நன்றி!

நன்றிகள் : ஜூனியர்விகடன், மாயவரத்தான், தமிழோவியம்.காம்