ஜெயலலிதாவின் எதிர்காலம் இனி, இவர் கையில்..!

28-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அகில உலக தமிழர்களும் ஆசையோடு காத்துக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக ஆத்தா ஜெயலலிதா, பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகி பதிலளித்தது பற்றிய சென்ற வார நக்கீரனின் சிறப்புக் கட்டுரை இது. பதிவு செய்து வைக்க விரும்புகிறேன்..! ஜெயலலிதா பெங்களூர் ஜெயிலுக்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் சூழலுக்கு முதல் படியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்..! படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

ஜெயலலிதாவின் எதிர்காலம் இனி, இவர் கையில்..!


சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிஷன் போட்டாலும், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஜெ., தனது 313 ஸ்டேட்மெண்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், விசாரணையை எதிர்கொள்ளும் பாணியை ரொம்பவும் மாற்றியிருந்தார். 

முதல்முறையாக அக்டோபர் 21, 22 ஆகிய இரு நாட்களும் அவர் ஆஜரான போது, மொத்தமாக அவர் பதில் சொல்லியிருந்த கேள்விகள் 567தான்.  முதலமைச்சராக இருப்பதால் அதனைக் காட்டி, அடுத்தடுத்த முறை நேரில் ஆஜராகாமல் சுப்ரீம் கோர்ட் மூலம் விலக்கு வாங்கிவிடலாம் என ஜெ. தரப்பு செய்த மூவ்கள் ஃபெயிலியர் ஆனதால், எப்படியாவது  இந்த ஸ்டேட்மெண்ட்டை விரைவாக முடித்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் ஜெ. அதைத்தான் நவம்பர் 22, 23 தேதிகளில் பெங்களூரு பாரப்பண்ண அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள தற்காலிக சிறப்பு நீதிமன்றத்தில் காண முடிந்தது.

நவம்பர் 22.

தமிழக-கர்நாடக எல்லையில் அ.தி.மு.க. கொடி போட்ட கார்களையும், கரைவேட்டி கட்டிய ர.ர.க்களையும் வடிகட்டிக் கொண்டிருந்தது கர்நாடக போலீஸ். பரப்பன அக்ரகாரம் கோர்ட்டுக்கு சில கிலோ மீட்டர்கள் முன்பாகவே 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாது காப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு ஏ.டி.ஜி.பி.க்கள் தலைமையிலான கர்நாடக டீம் தமிழக முதலமைச்சருக்கான இசட் ப்ளஸ் பாதுகாப்பில் கவனமாக இருந்தது. 25 கார்கள் புடைசூழ வந்தது ஜெ.வின் கான்வாய். அந்தக் கான்வாயில் இதே சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா ஒரே காரில் ஜெ.வுடன் வந்தார். தமிழக மந்திரிகளில் 15-க்கும் அதிகமானவர்கள் பாரப்பண்ண அக்ரஹாரத்தில்தான் இருந்தனர். கான்வாயில் கடைசியாக வந்த காரில் உட்கார்ந்திருந்தார் முன்னாள் வளர்ப்பு மகனும் வழக்கில் சிக்கியிருப்பவருமான சுதாகரன்.  அவருடன் அவரது வக்கீல் சரவணகுமாரும் இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இம்முறை இளவரசி வரவில்லை.

ஜெ.வுக்காக வக்கீல் குமார் தலைமையில் கருப்புக் கோட் டீம் ரெடியாக இருந்தது. இந்த படைபலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்போதும்போல் சிங்கிளாக தன் பணியை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. காலை 10.30 மணிக்கு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தனது ஆசனத்தில் அமர, எதிரே குற்றவாளிக் கூண்டில் சசிகலா, சுதாகரன் இருவரும் இருந்தனர். ஜெ.வுக்கு மட்டும் தனியாக நாற்காலி போடப்பட்டிருந்தது. அவர் பெரியளவில் ரியாக்சன் எதுவும் காட்டவில்லை. அவ்வப்போது, சுதாகரனை மட்டும் முறைத்துக் கொண்டிருந்தார்.

முதல் நாளில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகள் பலவும் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றியதுதான். அந்த ஆடம்பரத் திருமணம் பற்றிய கேள்வி ஒவ்வொன்றும் நீதிபதியிடமிருந்து வெளிப்பட்டபோது, அதற்குப் பதில் சொல்வதற்கு முன்னதாக சுதாகரனை ஒரு முறைப்பு முறைக்க ஜெ. தவறவில்லை என்கிறார்கள் கோர்ட்டுக்குள் இருந்த வழக்கறிஞர்கள். ஜெ.விடம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றியும் அதற்கான பதில்கள் பற்றியும் அவர்களிடம் கேட்டோம்.

"சுதாகரன் உங்கள் வளர்ப்பு மகனா?''என்று நீதிபதி கேட்க, "அப்படியெல்லாம் எதுவுமில்லை'' என்று அவசரமாக பதில் சொன்னார் ஜெ.  நீதிபதியின் கேள்விகள் தொடர்ந்தன. 

"திருமணத்திற்காக 6 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறீர்கள். புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி நடந்திருக்கிறது. இன்விடேஷனை ரகுமானுக்குக் கொடுக்கும்போதே வெள்ளிப்பாத்திரங்களைப் பரிசாகக் கொடுத்துதான் இன்விடேஷன் வைத்திருக்கிறீர்கள்'' என்று நீதிபதி வரிசையாகச் சொல்ல, ஜெ.வோ சுதாகரனைப் பார்த்து முறைத்தபடி டென்ஷனாகியிருக்கிறார். (சொத்துக் குவிப்பு வழக்கு சென்னையில் நடந்தபோதே இந்த இசைக்கச்சேரி பற்றி சாட்சியமளித்திருந்தார் ரகுமான்).

ஸ்பெஷல் கோர்ட்டில் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், அதற்கு எப்படி பதிலளிக்கவேண்டும் என்பதையும் ஏற்கனவே கார்டனில் ஜெ.வுக்கு ரிகர்சலாகவே செய்து காட்டியிருந்தார்கள் அவரது வக்கீல்கள். அதனை மறக்காமல் இருந்த ஜெ., நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

"கல்யாணச் செலவுகளை பெண் வீட்டார் (சிவாஜி குடும்பத்தினர்) ஏற்றுக் கொண்டாங்க. நான் எந்த செலவும் செய்யவில்லை. சிவாஜி மகன் ராம்குமார்தான் எல்லா செலவுகளையும் பார்த்தார். அதற்கான  கணக்குகளை அவர் இன்கம்டாக்ஸ் ஆபீ சிலும் சமர்ப்பித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தவரும் ராம்குமார்தான்'' என்று ஜெ. பதில் சொல்ல, வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பாக மற்ற சாட்சிகள் தெரிவித்த தகவல்களிலிருந் தும் கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன. 

"கல்யாண வேலை பார்ப்பதற்காகவே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு வருக்கு இன்சார்ஜ் கொடுத்திருக்கிறீர்கள்'' என்று நீதிபதி கேட்க, "அதுவும் எனக்குத் தெரியாது'' என்று ஜெ. சொன்னார். வளர்ப்பு மகன் திருமணம் பற்றி மட்டும் சுமார் 200 கேள்விகளை நீதிபதி கேட்க, பெரும்பாலானவற்றுக்கு, "தெரியாது... தெரியாது...' என்றே பதில் சொன்னார் ஜெ.  இன்னும் மற்ற விஷயங்கள் குறித்த கேள்விகளும் இருக்கிறது என்பதால், மதிய உணவுக்காக 15 நிமிடம் மட்டுமே எடுத்துக்கொண்டார் ஜெ. கடந்த முறை 1 மணி நேரம் ஆனது.

ஜெ.வின் வங்கிக் கணக்கு அது தொடர்பான பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகள் ஆரம்பமாயின. 36, போயஸ்கார்டன், சென்னை-86 என்ற முகவரியில் மட்டும் 1991-96 காலகட்டத்தில் 42 கம்பெனிகள் நடத்தப்பட்டிருப்பதையும் இதில் ஜெ., சசிகலா, இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்ததையும் சிலவற்றில் சுதாகரனும் இருந்ததையும் பற்றி நீதிபதி தெரிவித்து, ஜெ. பெயரில் நேரடியாக சில டிரான்ஸ்செக்சன் நடந்திருப்பதையும் சுட்டிக் காட்டி அது பற்றிய கேள்விகளுக்கு வந்தார்.

"நீங்கள் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் வருமான வரி எதுவும் கட்டப்படவில்லை. உங்களது ஆட்சி காலமான 91-96 காலகட்டத்தில் இவர்கள் பெயரில் 42 கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் என்ற பொறுப்பில் பொது ஊழியராக இருந்த உங்கள் வீட்டு முகவரியில்  இருந்த இவர்கள் உங்களுக்குத் தெரியாமல் எப்படி இவ்வளவு பணத்தை முதலீடு செய்திருக்க முடியும்?'' என்ற நீதிபதி, "சட்டவிரோதமாக நீங்கள் சம்பாதித்தவைதான் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா?'' என்றார். 

தன் பெயரில் சில டிரான்ஸ்செக்சன்கள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்ட ஜெ., அதே நேரத்தில் அந்த கம்பெனிகள் ஒவ்வொரு நாள் வரவு-செலவு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தனது அறியாமையையும் தெரிவித்தார். எல்லாவற்றையும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தெளிவாகப் பதிவு செய்துகொண்டார்.

நகை, டிரஸ், அலங்காரப் பொருட்கள் பற்றிய கேள்விகள் இதனையடுத்துத் தொடங்கின. அப்போது ஜெ, "நான் நடிகையாக பல மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதில் அணிந்திருந்த உடைகளை யும் செருப்பு, கைக்கடிகாரம் ஆகியவற்றையும் நினைவுப் பொருட்களாக வைத்திருக்கிறேன். ரெய்டு என்ற பெயரில் 36, போயஸ் கார்டன் என்ற முகவரிக்கு மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு, அருகிலேயே உள்ள 31-ஏ, போயஸ் கார்டன் என்ற முகவரியிலும் வரம்பு மீறிப் போய் ரெய்டு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரமே இல்லாத ஹைதராபாத்துக்கும் போய் அங்கே இருந்த என் பங்களாவிலும் ரெய்டு நடத்தினாங்க'' என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் ஜெ.

"அந்த டிரஸ் அனைத்தும் உங்களுக்கு சொந்தமானவையா..?'' என்று நீதிபதி கேட்டதற்கு, "அதில் பல உடைகள் சசிகலாவுடையது'' என்ற ஜெ., "நகையிலும் அவருக்கு சொந்தமானவை உண்டு. நான் நடிகையாக இருந்தபோதே 21 கிலோ நகை வாங்கியிருந்தேன். அதற்கான மதிப்பீடும் செய்யப்பட்டிருந்தது. அ.திமு.க. தொண்டர்கள் பலர் எனக்குப் பரிசாக கொடுத்திருந்த தங்கத்திலான பொருட்களையும் வீட்டில் வைத்திருந்தேன். அதையெல்லாம் சேர்த்து ரெய்டுக்கு வந்த அதிகாரிகள் கணக்கிட்டுவிட்டார்கள்'' என்று சொன்னார் ஜெ.  முதல் நாளில் கேள்விகளும் பதில்களும் வேகமாகச் செல்ல, ஒரே நாளில் 600 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில் சொல்லியிருந்தார் ஜெ.

மொத்த கேள்விகள் 1359. அக்டோபர் மாதத்தில் 2 நாட்கள் ஆஜரானபோது பதிலளித்தவை 567. மீதமிருந்த 792 கேள்விகளில் நவம்பர் 22-ந் தேதி மட்டும் 600 கேள்விகளுக்குப் பதில் பெறப்பட்டதால், 192 கேள்விகள் மிச்சமிருந்தன.  மறுநாள் விசாரணை தொடர்ந்தது.

நவம்பர் 23.  கர்நாடக போலீ சின் கெடுபிடி அதிகமாகவே இருந்தது. கோர்ட் டுக்குள் மீடியாக்கள் யாரும் நுழைய முடியாதபடி தடுப்பரண்கள் போடப்பட்டிருந்தன. அப் போது, பரப்பன அக்ரகாரம் சிறையில் உள்ள கைதிகளைப் பார்ப்பதற்காக வரும் உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக பஸ் வந்தது. அந்த பஸ்ஸில் நாமும் ஏறிக் கொண்டோம். சிறை வளாகத்தில்தான் சிறப்புக் கோர்ட் தற்காலிகமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததால், கோர்ட் வளாகத்தை அடைந்தோம்.

இரண்டாவது நாள் விசாரணையில், போலீஸ் அதிகாரிகள் கொடுத்திருந்த ரிப்போர்ட் டின் அடிப்படையில் ஜெ.விடம் கேள்விகள் கேட்கப்பட்டன. "விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு இப்படித் தெரிவித்திருக்கிறார்'' என்று சொல்லிவிட்டு, கேள்வி கேட்டார் நீதிபதி. நல்லம்ம நாயுடு என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஜெ.வின் முகம் கடுமையாகச் சிவந்தது. 

கோபத்தை அடக்கியபடி, "முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மாதவனும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் சேர்ந்துதான் என் மீது இப்படிப்பட்ட கேஸைப் போட நல்லம்ம நாயுடுவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு சுப்ரமணியன் சுவாமி உதவியாக இருந்திருக்கிறார். நான் வருமானத் துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா சுவாமி ஒரு புகார் கொடுத்திருந்தார். அதுவே பொய்யான புகார். அதன் பேரில் சி.ஆர்.பி.சி. செக்சன் 203-ன் கீழ் கேஸ் போட்டி ருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக போட்ட வழக்கு இது'' என்று சொன்னார் ஜெ.  

இரண்டாம் நாள் மதிய உணவு இடை வேளையின்போது, சாப்பாட்டுடன் மல்லிகைப் பூ பொட்டலமும் எடுத்துச் செல்லப்பட்டது. கோர்ட்டை ஒட்டிய பகுதியில் இருந்த நாம், இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டோம். "விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, குற்றவாளிக் கூண்டில் இருந்த சசிகலாவின் தலையிலிருந்து மல்லிகைப்பூ கீழே விழுந்து விட்டதால், புதுப் பூ வேண்டும் என்று கேட்டனுப்பினார். லஞ்ச்சுடன் சேர்த்து மல்லிகைப் பூவையும் கொண்டு போறோம்'' என்றனர்.

போலீஸ் அதிகாரிகள் கொடுத்திருந்த ரெகார்டுகள் தொடர்பான கேள்விகள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தன. போலீசார் மீதும் முன்னாள் ஆட்சியாளர்கள் மீதுமான குற்றச்சாட்டுகளையே பதிலாக அளித்தார் ஜெ. அவருக்கு சாதகமான விஷயங்கள் அடங்கிய ஒரு டாக்குமெண்ட்டை ஜெ.வின் வழக்கறிஞர், நீதிபதியிடம் கொடுத்தார். இரண்டாம் நாள் விசாரணையில் 192 கேள்விகளுக்குப் பதில் பெறப்பட, மொத்தமாக 1359 கேள்விகளுக்கானப் பதில்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, அதற்கு ஜெ.விடம் தனித்தனியாக கையெழுத்து வாங்கியாக வேண்டும். நீதிமன்றத்தின் இந்த நடைமுறையும் நிறைவடைந்தது.

அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா. ஜெ.வின் பாதுகாப்புக்காக பரப்பன அக்ரகாரத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட சிறப்பு நீதிமன்றம், மீண்டும் பழைய இடத்திலேயே இயங்கும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் இனி 313 ஸ்டேட்மெண்ட் வாங்கப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்த நிலையில், வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பது பற்றி இரண்டு தரப்பு வழக்கறிஞர்களிடமும் சட்ட வல்லுநர்களிடமும் கேட்டோம்.

"நீதிமன்றத்தில் ஜெ. அளித்த 313 ஸ்டேட்மெண்ட்டில், போயஸ் கார்டனில் இருந்த நகைகளில் பெரும்பாலானவை தன்னுடையவை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுபோல, போயஸ் கார்டன் இல்லத்தை முகவரியாகக் கொண்டு இயங்கிய கம்பெனிகளில் பங்குதாரராக இருந்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். 31-ஏ போயஸ் கார்டன் என்ற முகவரியில் உள்ள வீட்டை 1991-96 ஆட்சிக் காலத்தில் வாங்கியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்'' என்பதை சுட்டிக் காட்டும் சட்ட வல்லுநர்கள், "மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய ஜெ., எப்படி கம்பெனிகளில் முதலீடு செய்தார் என்பதும், புது வீடு வாங்கினார் என்பதும் அவருக்கு எதிரான வாக்குமூலங்களாகவே இருக்கின்றன'' என்கின்றனர்.


ஜெ.வின் வழக்கறிஞர் குமார் நம்மிடம், "இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்றாக வேண்டும். அதற்கு வழக்கு விசாரணையை இன்னும் நீட்டிக்க வேண்டும்'' என்றார். ஜெ.வின் வழக்கறிஞர்கள் டீம் தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "எங்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம். எப்படியும் 200, 300 சாட்சிகளையாவது அவர்கள் விசாரிக்க வேண்டியிருக்கும்'' என்றதுடன், "மேடம் தன்னோட பதில்களை ஆங்கிலத்தில்தான் பதிவு செய்திருக்கிறார். வழக்கில் இடம் பெற்றுள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், இந்தப் பதில்களை தமிழில் தர வேண்டும் எனக் கேட்போம். அதற்கான நடைமுறைகள் முடிய அவகாசம் தேவை'' என்றனர். 

அரசுத் தரப்பில் கேட்டபோது, "இப்போது ஜெ. அளித்த 313 ஸ்டேட்மெண்ட்டை, ஜனவரியிலேயே அவர் முன்னாள் முதல்வராக இருந்த சமயத்திலேயே ஆஜராகி கொடுத்திருக்க முடியும். அவருக்குத் தரப்பட்ட தவறான ஆலோசனைகளால் சுப்ரீம் கோர்ட்வரை சென்று இழுத்தடிக்கப் பார்த்தார். அது நடக்கவில்லை. இப்போது, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிட்டிங் சி.எம். கோர்ட் படியேறி வழக்கை எதிர்கொண்டு 313 ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் என்ற நிலைமையை உருவாக்கியிருக்கிறார் ஜெ.

ஸ்பெஷல் கோர்ட் விசாரணைகளை இழுத்தடிப்பதற்காக இதுவரை ஜெ. தரப்பில் 45 முறை ஹைகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போயிருக்கிறார்கள். ஆனால், ஒரு முறைகூட அவர்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. இந்த ஸ்டேட்மெண்ட் விஷயத்திலும் அதுதான் நடந்தது. தமிழ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு வாரத்தில் முடியக் கூடிய வேலை. அதனால் பெரியளவில் காலதாமதமாகாது. அவர்கள் தரப்பு சாட்சி விசாரணை ஏற்கனவே இந்த வழக்கு சென்னையில் இருந்தபோதே நடந்துவிட்டது. அப்போதும் ஜெ. ஆட்சியில் இருந்ததால், கேஸை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற வேகத்தில், தங்கள் தரப்பில் இரண்டே இரண்டு சாட்சிகள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி விசாரிக்கச் செய்தார்கள். அந்த சமயத்தில்தான், வழக்கின் போக்கில் அதிருப்திகொண்டு தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டார். சுப்ரீம் கோர்ட் இதை பெங்களூரில் விசாரிக்க உத்தரவிட்டபோது, "பெங்களூர் வேண்டாம். பாண்டிச்சேரியில் போடுங்கள்' என்றது ஜெ. தரப்பு. நீதிமன்றம் ஏற்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஜெ. தரப்புக்கு எதிராகவேதான் உத்தரவுகள் வந்தன. 

"இந்த சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க டாக்குமெண்ட்ஸ் எவிடென்ஸ்தான். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு சில கோடிகள் அளவுக்கான சொத்துகளை அவர் முறைகேடாக வாங்கியிருக்கிறார் என்று நிரூபித்தாலே தண்டனைத் தீர்ப்புதான் கிடைக்கும். 313 ஸ்டேட்மெண்ட்டில் ஜெ.வே சில சொத்துகள் பற்றி ஒப்புக் கொண்டுவிட்டார்'' என்றது அரசுத் தரப்பு.


இந்த வழக்கில் ஆரம்பம் முதல் தீவிரமாக இருந்து வரும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவிடம் நாம் பேசினோம். "இந்த வழக்கைப் பொறுத்தவரை தண்டனை என்பது உறுதி. தாமதப்படுத்த முடியுமே தவிர, அவர்களால் வெற்றி பெற முடியாது. இதுதான் நியாயமான நடைமுறை. தமிழ் நாட்டில் நடந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் பி.வி.ராஜ மன்னாரின் வாதங்களைக் கேட்டு, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மிகச் சரியாகச் செயல்படுவதாகச் சொன்னார். அதுபோல நான் இந்த வழக்கில் மிகச் சரியாக செயல்படவேண்டும் என் பதில் உறுதியாக இருக் கிறேன்'' என்றார் நம்பிக்கை குறையாமல்.

ஜெ. தரப்பிலும் அரசுத் தரப்பிலும் வழக்கு குறித்த கருத்துகள் இப்படி வெளிப்பட்டாலும், வழக்கின் தீர்ப்பும் ஜெ.வின் எதிர்காலமும் நீதிபதியின் கையிலேயே உள்ளது. 

- பெங்களூருவிலிருந்து பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின்

ஜெ. மீதான சொத்துக் குவிப்பை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு முதலில் நியமிக்கப்பட்டவர் நீதிபதி பச்சாபுரே. அதன்பின் மனோலி நியமிக்கப்பட்டார். மூன்றாவதாக,  நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய நீதிபதி மல்லிகார்ஜூனய்யா. கர்நாடகாவில் அரசியல்வாதிகளின் ஊழலை விசாரிக்கும் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் பதிவாளராக நியமிக்கப்பட்டவர் மல்லிகார்ஜூனய்யாதான். பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்காயத்து சமுதாயத்தவரான மல்லிகார்ஜூனய்யா நெருப்பு. அவரை யாரும் நெருங்கிவிட முடியாது. லிங்காயத்து சமூக மடாதிபதிகள் சிலர் வழக்கு தொடர்பாக இவரை அணுக, அடுத்த முறையிலிருந்து மடத்திற்கு அனுப்பும் நன்கொடையை மணியார்டரில் அனுப்பிவிட்டு, அங்கே நேரில் செல்வதைத் தவிர்த்து விட்டார். வழக்கு தொடர்பாக தன் சக நீதிபதிகள், உறவினர்கள் யாரும் நெருங்க முடியாதபடி நடந்துகொள்ளும் இவர், தன் குடியிருப்பு பகுதியில் வாக்கிங் போவதைக்கூட அண்மைக் காலமாக நிறுத்திவிட்டாராம்.

- நன்றி : நக்கீரன் வார இதழ்

எனக்கு ஒரேயொரு சிங்கிள் டவுட்டு..! 

ஜெயலலிதா நகைகளையெல்லாம் முன்பே வாங்கி வைத்திருந்தது உண்மையா..? மைசூர் மகாராஜா வாங்கிக் கொடுத்தது என்றும், அவ்வப்போது ரசிகர்களும், தொண்டர்களும் அன்பளிப்பாக நகைகளை அளித்தார்கள் என்பதும் உண்மையா..? 

ஏன்னா, உடல் முழுவதும் நகைகளை அணிந்து சசிகலாவோட நிக்குற மாதிரி இருக்குற போட்டால ஜெயலலிதா அணிந்திருந்த ஒட்டியாணத்தை சைஸ் பார்த்துதானே வாங்கியிருப்பாங்க..? ஆத்தா எப்பவுமே இப்படியேதான் இருந்தாங்களா..?

யாராவது சரியான பதிலைச் சொல்லுங்கப்பா..!!!

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

28-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எனது பருவ வயதில் மலையாள இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களுக்கு கேரளத்திலும், தமிழகத்திலும் பெரும் வரவேற்பு இருந்த்து. காரணம், இலைமறைவு காயாக செக்ஸை எல்லா ரூபத்திலும் அவர் திணித்திருந்ததுதான்.. கிட்டத்தட்ட 60 திரைப்படங்கள் இது போலவே எடுத்திருந்தார். அத்தனையிலும் கதை இருக்கும். கூடவே சதையையும் சென்சார் போர்டு கட் செய்ய முடியாத்துபோல் வைத்திருப்பார். இப்போது இந்த வேலையை நமது செல்வராகவன், தியேட்டரில் சுயஇன்பம் தேடும் இளைஞர்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் திருந்த மாட்டார் போலிருக்கிறது..! குடி, கொண்டாட்டம், வயதை மீறிய பேச்சுக்கள், உணர்வு தவறிய செக்ஸ் முறைகேடுகள்.. இவைகளைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களை மட்டுமே தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் போலும்..! மீண்டும், மீண்டும் அதே கான்செப்டலேயே உருண்டு கொண்டிருக்கிறார்..! 

என்னதான் நடிகர்களை திறமையாக நடிக்க வைத்தாலும், கதையம்சம் இல்லாவிட்டால் அது நகைச்சுவையாகிவிடும்.. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தப் படம். செல்வராகவன் என்று டைட்டில் போடும்போது எழும் கை தட்டல், படத்தின் இறுதிவரையிலும் தொடர்கிறது. ஆனால் கேலியாக..!

தனுஷ் புகைப்படக் கலையில் நிபுணராக விரும்புகிறார். அதற்காக அதே துறையில் புகழ் பெற்று விளங்கும் மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராகச் சேர முயல்கிறார். அது முடியாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. இடையில் இவரது நண்பன் இழுத்துக் கொண்டு வரும் ரிச்சாவின் மீது முதலில் கோபமாகி பின்பு தாபமாகி, கடைசியில் அவளையே அதே நண்பன் முன்னிலையில் திருமணம் செய்யும் சூழல்..! 

மாதேஷ் தன்னுடைய புகைப்படத்தை வைத்து அவார்டு வாங்கும் செய்தியைப் படித்துவிட்டு மாடியில்இருந்து கீழே விழுந்து அடிபடும் தனுஷ், கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவராக மாறுகிறார். அதன் பின்பு அவருடைய வாழ்க்கையும் மாறித் தொலைத்திருக்க இறுதியில் என்னவாகிறார் என்பதுதான் கதை..!

படத்தின் அடித்தளமான தனுஷின் ரெண்டுங்கெட்டான் புத்திசாலித்தனத்தை முன் வைத்து அவர் மீதான அனுதாபத்தை நமக்குள் புகுத்த பார்த்திருக்கிறார் செல்வா. அதுவே கேலிக்கூத்தாக இருக்கிறது. இணையம் பயன்படுத்தும் ஒரு நபர், போட்டோகிராபியில் உலகளாவிய வகையில் புகழ் பெற விரும்புவர், புகைப்படம் சம்பந்தமான அத்தனை புத்தகங்களையும் புரட்டிக் கொண்டிருப்பவர்.. வேலை கேட்டு ஒருவரை எப்படி அணுக வேண்டும் என்பதுகூடவா தெரியாமல் இருப்பார்..? இங்கேயே தனுஷின் கேரக்டர் அடிபட்டுவிட்டது..! பிறகு என்னத்தை அவர் மீது பாரத்தை இறக்க..!? ஒரு முறை அல்ல.. 3 முறையும் மதேஷ் கிருஷ்ணசாமியிடம் மூக்குடைபட்டு திரும்புகிறார். நண்பன் தள்ளிட்டு வந்த ரிச்சாவிடம் கோபப்படும் அளவுக்குக்கூட மாதேஷிடம் அவரால் கோபப்பட முடியவில்லை. காரணமே இல்லையே..! 

3 ஆண், 2 பெண் என்று வழக்கமான செல்வாவின் கூட்டணி. பார்க்கும் நேரத்திலெல்லாம் கூச்சப்படாமல் பாட்டில்களுடன் திரிகிறார்கள். ஆனால் பாத்ரூமில் ரிச்சாவை தனுஷ் கட்டிப் பிடித்திருப்பதைப் பார்த்தவுடன் கோபப்படுகிறார்கள். இவர்களுடைய தப்புக்கு அளவுகோலை இவங்களே வைச்சிருக்காங்க போலிருக்கு..! தியேட்டர் சிரியாய் சிரிக்குது..!

ஒரு நிமிடத்திற்கு முன்பாக சிஸ்டர் என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடத்தில் காதல் பாடலில் உருகித் திளைக்கையில் அதனை ரசிப்பதா அல்லது சிரித்துத் தொலைவதா என்ற குழப்பத்திலேயே அந்த  4 நிமிடங்கள் கரைந்து போயின..!

இந்தப் படத்திலேயே கேணத்தனமான காட்சி பாத்ரூமில் பல்லிக்கு பயந்து இருவரும் கத்துதுவதான்..! இது போன்ற ஹம்பக்கான காட்சிகளை வைத்துதான் அவர்களைத் தொட வைக்க வேண்டுமா? அந்த வரிசையில் இது 1001-வது படமாகக் கொள்ளலாம்..!

முதல் சந்திப்பில் தனுஷுடன் சண்டையிடுவதில் தொடங்கி, புகைப்படக் கலையின் மீது வெறியாக இருக்கும் தனுஷ் மீதான பரிவு, காதலாகி உணரத் துடிப்பது ஓகேதான் என்றாலும், நண்பன் மீது அவர் கொண்டிருந்தது காதல் இல்லை என்றாகிவிட்டதால் படத்தில் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாகிவிட்டது..! இந்தக் காதல் எப்போது வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் தாவிவிடும் என்னும்போது அந்த மூன்றெழுத்திற்கு என்னதான்  மரியாதை..?

தனுஷ், நண்பன், ரிச்சா மூவரும் ஒரே காரில்தான் வருகிறார்கள். காட்டேஜில் தங்கியிருக்கும் காலையில் ரிச்சா தனுஷ் எங்கே என்று கேட்கிறார். அப்போதுதான் நண்பன் சொல்கிறார் “தனுஷ் படமெடுக்க இங்க வந்திருக்கான்” என்று..! இந்த அளவு கேர்லெஸ்ஸிற்கு செல்வராகவன் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை..!

இடைவேளை வரையிலும் தனது யூத்தான வசனங்களால் கதையை நகர்த்தியவர், இடைவேளைக்கு பின்பு மனநிலை தவறிய தனுஷாக மாற்றிவிட்டு எப்படி முடிப்பது என்று தெரியாமல் தனக்குச் சம்பந்தமே இல்லாத விக்ரமன் ஸ்டைலுக்கு தாவி நல்லபடியாக முடித்திருக்கிறார்..! இந்த ஒரு படத்தில்தான் கதையின் முடிவு மங்கலமாக முடிந்திருக்கிறது எனலாம்..!

படத்தில் கதை என்ற ஒன்று இலக்கில்லாமல் சென்றிருந்தாலும், ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு மூன்றுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டுள்ளன. முதல் பிரேமில் இருந்து கடைசி ஷொட்டு வரையிலும் ராம்ஜியின் ஒளிப்பதிவு அசத்தல். கதைக்கு தேவைப்பட்ட ஒளிப்பதிவை தயக்கமில்லாமல் வழங்கியிருக்கிறார் ராம்ஜி.. 

காட்சியமைப்புகளிலேயே போரடிக்காமல் செய்ய வைக்க வேண்டும் என்று முடிவ செய்து நகர்த்திய செல்வாவுக்கு உறுதுணை எடிட்டர் கோலா பாஸ்கர். ஆனாலும் சோகமயமான காட்சிகளிலேயே தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்ததால் பிற்பாதியில் ரிச்சாவின் கரு கலையும் காட்சிவரையிலும் படத்தின் ஓட்டம் ரொம்பவே பொறுமையைச் சோதித்துவிட்டது..!

நடிப்பு என்று பார்த்தால் தனுஷுக்கு மேலும் ஒரு முக்கியமான திரைப்படம் இது. இப்படிப்பட்ட கேரக்டர் என்றவகையில் மட்டுமே பார்த்தோமேயானால் கதையில் இருக்கும் இடிபாடுகளை அகற்றிவிட்டு தனுஷை மட்டுமே பிரதானமாக கொண்டு பாராட்டலாம். ஆனால் இனியும் இது தொடருமானால் இதுவே பலருக்கும் அலர்ஜியாகிவிடும் சாத்தியக் கூறுகளும் உண்டு.

ரிச்சா என்ற இந்த புதுமுகத்திற்கு நிச்சயமாக விருதுகள் உண்டு..! அனைவரும் குறிப்பிடுவதை போல சிந்திய தனது குருதியைத் துடைக்கும் காட்சியில் வசனமில்லாத அந்த நடிப்பு பிரமாதம்..! வரவழைத்திருக்கும் செல்வாவுக்கும் பாராட்டுக்கள்..! இது போலவே இறுதிக் காட்சியில் டிவியை உற்று பார்த்தபடியே இருக்கும் அந்த மங்கலகரமான முகத்தில் தெரியும் பரவச பரிதவிப்பிற்கு ஒரு சபாஷ்..!

பாடல்கள் ஏற்கெனவே இணையம் மூலமாக ஹிட்ட்டித்துவிட்டாலும், தியேட்டர்களில் இனிமையாகக் கேட்டுத் தொலைய முடியவில்லை.. சிம்புவின் ரசிகர்களுக்கு யாரோ மொத்தமாக டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. கடைசிவரையில் கேலி, கிண்டல், கை தட்டல், விசில் சப்தம் என்று காதை பஞ்சராக்கிவிட்டார்கள்..! 

சிறந்த நடிப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் என்று ஒரு திரைப்படத்திற்குத் தேவையான தூண்கள் சிறப்பாக இருந்தும், அடித்தளமான கதை நொண்டியடித்துவிட்டதால் பெஸ்ட் என்று சொல்ல முடியவில்லை..! 

அடுத்த கதையிலாவது தனது மனதைவிட்டு வெளியேறி, வெளிப்புற மனிதர்களைப் பற்றி எடுப்பது பற்றி செல்வராகவன் யோசிக்கட்டும்..! 

பாலை - சினிமா விமர்சனம்..!

27-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம் அனைவரின் ஒரு தலைமுறையைத் தாண்டி பின்னோக்கிப் பார்த்தால் எத்தனை பேர் நமக்குத் தெரிவார்கள்..?  நம்மில் எத்தனை பேரின் மூதாதையர்களின் பெயர்களின் நமக்கும், நமது வாரிசுகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்..?

இப்படி ஒவ்வொருத்தரையும் கணக்கில் கொண்டு யோசிக்கும்போது நமது தமிழ் மொழியையும், வாரிசுகளையும் முதன்முதலில் உய்வித்தது யாராக இருக்கும் என்று நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா..? இன்றைக்கு இருக்கின்ற வசதிகளை வைத்து எத்தனையோவிதமான வாழ்க்கையை அனுபவிக்கும் நாம், நமது முன்னோர்கள் எப்படிப்பட்ட காலக்கட்டத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திருப்போமோ..? இதைத்தான் தோழர் செந்தமிழன் தனது பாலை படத்தில் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.

இப்படியொரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் நாகை தி.இரவி அவர்களுக்கு எனது முதற்கண் நன்றி..! 

கற்றது தமிழ் திரைப்படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர், சின்னத்திரை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களுடன் அறியப்பட்ட செந்தமிழனின் முதல் படமான பாலை, தமிழ் வரலாறு சொல்லும் முதல் திரைப்படமாக உருவாகி அவருக்கும், தமிழ்ச் சினிமாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.


ஒரு கூட்டமாக மூத்தோர் ஒருவரின் வழி காட்டுதலில், தலைவன் ஒருவனின் அரவணைப்பில் வாழும் தமிழர்கள். ஆயர்குடி என்னும் பகுதியில் வாழ்ந்த இவர்கள், அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் வந்தேறிகளால் விரட்டப்பட்டு முல்லைக்கொடிக்கு இடம் மாறுகிறார்கள். முல்லைக்கொடி இருக்கும் நிலமோ பாலை. பாலைவனத்தில் பண்பட்டா வாழ முடியும்..!? அங்கே வாழ்பவர்கள் ஒன்று கொள்ளையடித்து வாழ வேண்டும். இல்லையேல் இடம்விட்டுத் தாவ வேண்டும்..! இந்த இரண்டில் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் தமிழ் மக்களுக்கு..! மோதி விடுவது என்றே முடிவு செய்கிறார்கள். ஆனால் கிடைத்த முடிவு என்ன என்பதைத்தான் 2 மணி நேர படமாக உருவாக்கியிருக்கிறார்..!

காயாம்பூ என்ற இளம் பெண், எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடியில் தன்னைப் பற்றியும், தனது கூட்டத்தினரைப் பற்றியும் எழுதுவதில்தான் கதை துவங்குகிறது.. இன்றிலிருந்து 2000 வருடக் காலக் கட்டத்தின் பின்னோக்கிய வரலாற்றை நமது தமிழின் பழம் பெரும் பாடல்களின் மூலம்தான் அறிய முடிந்துள்ளது.

5 ஆண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்று பலரையும் சந்தித்து தகவல்களைச் சேகரித்து அதன் பின்பே இந்த பாலை வரலாற்றை செல்லூலாய்டில் பதிவு செய்யத் துவங்கியிருக்கிறார் இயக்குநர். 

பழந்தமிழரின் வாழ்க்கை முறைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், உணவு முறைகள், வந்தேறிகள் என்று சொல்லப்படும் அந்நிய மொழியாளர்களின் வாழ்க்கை என்று நாம் இதுவரையில் காணாத காட்சியமைப்புகளே திரையில் ஓடுகின்றன.

என்னை அதிகம் கவர்ந்தது இயக்கம்தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொடுத்து அவற்றை யாரும் மீறாமல் இருக்கும்படியாக வசனங்களை வைத்திருக்கும் பாங்கு, அவற்றை அவர்கள் உச்சரித்திருக்கும் விதம்.. அனைத்துமே அசர வைக்கிறது.. உதாரணமாக தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அவரது கீழ்ப்படியும்தன்மை, காயாம்பூவின் கணவன் கடத்தப்பட்டபோதும் மறுபேச்சில்லாமல் அடங்கிப் போவதை வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார். தலைவர் என்று உணர்ச்சியுடன் உச்சரிக்கும் அந்த வார்த்தைகளில் இருக்கும் தயக்கம், பயம் இரண்டையும் உணர முடிகிறது..!

இளையோருக்குள் இருக்கும் காதல்.. அதை அவர்கள் வெளிப்படுத்தும்விதம், பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை.. கீழேயும் இல்லை.. மேலேயும் இல்லை என்பதை காட்டும்விதமாக பெண்கள் ஆண்களை தாக்குவதைப் போன்ற காட்சிகள், காயாம்பூ தனது காதலனை கன்னத்தில் அறைவது.. கள் என்ற போதையை பெண்களும் அருந்துவது என்ற அக்கால வாழ்க்கையை சமரசமில்லாமல் பகிர்ந்துள்ளார் இயக்குநர். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவைகள் நமது பெண்குலத்தின் தலையில் விழுந்தது எப்படி என்ற கேள்விக்குறியையும் இப்படம் எழுப்புகிறது..!

ஆயர்குடியை மீட்டால் ஒழிய நாம் வழிப்பறியை கைவிட முடியாது என்ற முதுவனின் நடவடிக்கையும், அதன் பின்னான சண்டையில் தனது இனம் தாக்கப்பட்டதையும் கண்டு அவர் படும் அவலத்தை குடித்தே தீர்க்க முயல்வதையும் தெளிவாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். அக்காலத்திலேயே இப்படித்தான் என்பது தமிழச் சமூகத்திற்கு இழுக்காக இல்லை.. மனித குல குணத்திற்கு இதுவே பொதுவான பண்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்னத்திரையில் ஷார்ப்பான வசனங்களுக்காகவே பேசப்பட்ட செந்தமிழினின் படைப்பில் வசனங்களுக்கு சொல்லியா தர வேண்டும்..? அழகுத் தமிழில் அத்தனையும் நிறுத்தி, நிதானமாக செவிகளில் மிக எளிதாக நுழையும்வகையில் எழுதியிருக்கிறார்.

ஆமைகளின் அணிவகுப்பை பார்த்துவிட்டு முதுவனின் பாலை வரப் போகுதுடா என்ற புலம்பல் துவங்குகிறது.. இதன் பின்புதான் அத்தனை ரணகளமும் தொடர்கிறது. வந்தேறிகளின் பிடியில் சிக்கினால் இறுதிவரையில் அடிமைகளாகவே வாழ வேண்டியிருக்கும் என்பதுதான் சிக்கியவனை மீட்டெடுக்க நினைக்கும் தமிழ்ச சமூகத்தின் முன் நிற்கும் ஒரே காரணம்.. எக்காரணம் கொண்டும் நம் இனம் அடிமையாகக் கூடாது என்றே அப்போதும் நினைக்கிறார்கள். அதே சமயம் நாம் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்பதோடு, நாமும் யாரையும் அடிமைப்படுத்தவும் கூடாது என்பதையும் தமிழனின் மரபாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அவசரப்படக் கூடாது.. வீரம் மட்டுமே போதாது.. சூழ்ச்சியும் வேணும் என்ற முதுவனின் கூற்று இப்போதைய தமிழர்களின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியம். அந்த சூழ்ச்சி வலையை உணரத் தெரியாமல்தான் தற்போது அழிந்தோம் என்பதை அடுத்தடுத்த வசனங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார் இயக்குநர். புலி, சிங்கம் என்று பிரித்தெடுத்து அவர் குறிப்பிடும்போது யாரை அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதையும், பூர்வகுடி மக்கள் யார், வந்தேறிகள் யார் என்பதும் புரிகிறது. 

படத்தில் 3 முக்கிய நபர்களின் பங்களிப்பும் அசத்துகிறது. முதல் நபர் எடிட்டர் ரிச்சர்ட். இது போன்ற கதை சொல்லும் படங்களில் ஏற்படும் ஆயாசம் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. தங்குத் தடையில்லாமல் தெளிந்த நீரோட்டம் போன்று செல்கிறது திரைப்படம். பெரிதும் உதவியிருக்கிறார் எடிட்டர். அடுத்து இசையமைப்பாளர் வேத்சங்கர்.  பாடல் காட்சிகளில் அத்தனை வரிகளிலும் தமிழ் விளையாடியிருக்கிறது. கொல்லாரே கொல்லாரே பாடல் கொண்டாட்டத்தைக் கொடுக்கிறது எனில், யாதே யாதே பாடல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது..! 3 பாடல்களையும் செந்தமிழனே எழுதியிருக்கிறார். அத்தனையும் அட்சரப் பிசகாத தமிழ் வார்த்தைகள்..! புதுமையான இசையாக பாலையின் தீம் மியூஸிக்கே கவர்ந்திழுக்கிறது..! படத்தின் இசையமைப்பாளர் வேத்சங்கர் மிக இளம் வயதுடையவர். இவர் மட்டுமல்ல படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேருமே 35 வயதுக்குட்பட்ட இளையோர் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம். மூன்றாவதாக ஒளிப்பதிவாளர் அபிநந்தனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரும் பலம்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பொட்டல்வெளி, சிறிய காடு, மணல்வெளிகள், வயற்காடுகள், ஏரிகள், கரைகள் என்று கேமிரா எங்கு சென்றாலும் அதுவொரு தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடமாகவே காண்பிக்கப்பட்டுள்ளது..! சண்டைகளின்போது தமிழர்கள் பயன்படுத்திய கவண்கல், ஈட்டி, சிறிய கத்தி, அவற்றை பெண்களும் பயன்படுத்தியதான உண்மை வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது. இதற்குத்தான் பெண்கள் என்றில்லாமல் ஆண்களுக்கு சளைக்காமல் அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..!

காயாம்பூவாக நடித்திருக்கும் ஷம்முதான் இப்படத்தில் நடித்திருப்பவர்களில் சினிமா வட்டாரத்தில் தெரிந்த முகம்., சுனில், முதுவன், தலைவனாக நடித்திருக்கும் நடிகர் என்று அனைவருமே தத்தமது வேலைகளைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். இருளர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக்கார்ர்கள், லோக்கல் கிராமத்து மக்கள் என்று சினிமா முகங்கள் 2 பேரைத் தவிர மீதி அத்தனை பேருமே அந்நியம்தான். ஆனால் அனைவரையுமே தனது முத்தான இயக்கத்தால் முத்திரை பதிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஒண்ணே கால் கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் ஆவணப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கும். ஆனாலும் அந்தக் கவசக் குண்டலத்தில் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே சில சமரசங்களுடன், நமது அரசியல்வியாதிகளின் கைப்பாவையாக இருக்கும் சென்சார் அதிகாரிகளுக்காக தமிழர்களின் உடை விஷயத்தில் விட்டுக் கொடுத்தும் வெளிவந்திருக்கிறது இப்படம்.

வணிக ரீதியான திரைப்படங்களும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மசாலா படங்களுமே சூழ்ந்திருக்கும் இன்றைய சினிமாவில் இது போன்ற சிறந்த, தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் வரலாறுக்கும் தேவையான திரைப்படங்களை ஆதரிப்பதும், வரவேற்பு கொடுப்பதும் நமது கடமை..! நல்ல சினிமாக்கள் வரவில்லையே என்று புலம்புவதைவிட, வந்ததை பெருமகிழ்ச்சியோடு கொண்டாடுவதே சிறந்தது..!

“நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும், நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது...” என்று படத்தின் முடிவில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த இரண்டு வரி வசனமே ஒரு வரலாறாகியிருக்கிறது இப்படத்தில்..!

இப்படத்திற்கு இந்த நேரத்தில் நமது ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை என்பதை மனதில் கொண்டு படம் பார்த்து பரப்புரை செய்து உதவுங்கள் மக்களே..!


தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

14-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உக்கிரமான யுத்தப் போராட்டம்..! நிஜமாகவே நடந்த கதை என்பதால் குமரி மாவட்டத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க.. 2 ஆண்டு கால கடும் போராட்டத்துக்கு பின்பு வெளியாகியிருக்கிறது..! படத்தின் இயக்குநர் வடிவுடையான், மலையாள கரம் மசாலா இயக்குநர் ஷாஜி கைலாஷின் சீடர் என்பதால், இது போன்ற வன்முறைகளுடன் கலந்த படைப்புக்கேற்ப இறுக்கமான திரைக்கதையை அமைத்து ரேஸ் குதிரையாக படத்தை ஓட விட்டிருக்கிறார்..!


பி.ஏ. பி.எட். படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக முயற்சிக்கிறார் கரண். அது முடியாமல் போக போலீஸ் வேலைக்காவது போகலாம் என்று முயல்கிறார். தேர்வு நாளன்று நடக்கும் கலாட்டாவில் கரண் சிறைக்குப் போக நேரிடுகிறது. அந்த நிமிடத்தில் இருந்து அவரது வாழ்க்கையில் ஏற்படும் சூழல்தான் கதை..!

ஒரு கதைக்குள் பல கிளைக் கதைகளாக முன்னரே சொல்லப்பட்டாலும், அனைத்துமே அதிகபட்சம் 5 நிமிடங்களைக்கூட தொடாத நிலையிலும், சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருப்பதால் திரைக்கதை விறுவிறுப்பாகத்தான் செல்கிறது.

தனது பெற்றோர் சமாதி இருக்கும் வீட்டை வங்கி அடமானத்தில் இருந்து மீட்டெடுக்க வேறு வழியில்லாமல் சிறையில் தனக்குத் தோழனாக அறிமுகமான சரவணனுடன் இணைந்து அரிசி கடத்தல் தொழிலில் இறங்குகிறார் கரண்.. 

அந்த ஊரின் பிரபல சாராய வியாபாரியான சிலுவையின் மகள் லூர்து மேரியை கரணம் காதலிக்கிறார். தான் கெட்ட தொழிலை செய்தாலும், தன்னுடைய மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மருமகன் எந்த வம்பு, வழக்கும் இல்லாத நபராக இருக்க வேண்டும் என்று சிலுவை விரும்புகிறான். லூர்து மேரிக்காக கரண் தனது கடத்தல் தொழிலையே கைவிடவும் சம்மதிக்கிறான். ஆனாலும் எப்போதோ ஒரு முறை சிலுவையின் கையாளான சண்முகராஜை ஒரு சந்தர்ப்பத்தில் கரண் அவமானப்படுத்தியது இப்போது பழிக்குப் பழி உணர்வாக வெகுண்டெழ.. சுமூகமாக முடிவாக வேண்டியது, தனி மனித குரோத்த்தினால் அலங்கோலமாகிறது..!

கூடவே தனது அண்ணனை கொன்ற சிலுவையை கொலை செய்ய முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸின் திட்டத்தில் கரணும் பலிகடா ஆக்கப்படுகிறார். சோகவயப்பட்ட சூழலில் தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் கதை இப்படித்தான் முடிந்திருக்கிறது என்பதை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது..!

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி கலவரம் மிகவும் வேகமெடுத்திருந்தாலும், அதற்கடுத்த மாவட்டமான கன்னியாகுமரியில் மதக் கலவரமும், கடத்தல் தொழில் மோதல்களும் எப்போதும் நடப்பதுதான். அதிலும் தமிழகத்திலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகத் திகழும் கன்னியாகுமரியில் அடிதடி, வெட்டு, குத்துகளினால் தங்களது வாழ்க்கையைத் தொலைத்த எத்தனையோ இளைஞர்களில் தம்பி வெட்டோத்தி சுந்தரமும் ஒருவர் என்கிறார் இயக்குநர்.

இந்தக் கதையைப் படமாக்கத் துணிந்த இயக்குநருக்கு முதற்கண் எனது நன்றி..! சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒரு மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது என்பதற்கு இந்தப் படத்தின் ஹீரோவும் ஒரு சாட்சி. சென்டிமெண்ட்டாக தனது தாய், தந்தை சமாதியில் வாழும் அந்த வீட்டை மீட்கத் துடிப்பது இயல்பான ஒன்று. அப்போதே அவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தாலோ, அல்லது வேறு வேலை பார்த்து வந்தாலோ, எப்படியாவது கடன் வாங்கிக் கட்டலாம் என்று நினைத்திருப்பார். ஆனால் துரதிருஷ்டவசமாக காவலர் தேர்வில் ஊழல் செய்வதைத் தட்டிக் கேட்கப் போய் ஜெயிலுக்கு அனுப்ப்ப்பட்டு அதனாலேயே அவரது வாழ்க்கை திசை திரும்புவதற்கு இந்தச் சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கரணுக்கு அவருடைய கேரியரில் மிக முக்கியமான படம் இது..! இவரைத் தவிர வேறு நடிகர்கள் யாராவது இதில் நடித்திருந்தால் நிச்சயமாக இந்த அளவுக்கு ஈர்ப்பைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே.. அத்தோடு கிளைமாக்ஸ் இயக்குநர் நினைத்ததுபோல் எடுத்திருக்கவும் முடியாது..!

போலீஸ் கிரவுண்ட்டில் போலீஸாருடன் மல்லுக் கட்டுவதில் காட்டும் வீரமும், சிறைக்குள் சரவணனுக்கு நட்பு பற்றி கிளாஸ் எடுக்கும் கோபமும், அஞ்சலியுடன் பஸ்ஸுக்குள்ளேயே கலாய்க்கும் ஒரு யூத்தின் மனோபாவமும் மனிதருக்கு எளிதாகவே வருகிறது..! கரண் நிச்சயமாக நல்ல தேர்வு..!

பருத்தி வீரனுக்கு பின்பு சரவணனுக்கு இதுதான் முக்கிய படம். போலீஸிடம் அடி வாங்கும்போது காமெடியாக பேசி கலாய்ப்பது. “ரூமை போடுறோம்.. கட்டிங்கை ஊத்துறோம்.. யோசிக்கிறோம்..” என்று அடிக்கடி சொல்லி அத்தனை யூத்துகளையும் கவரும்போதும் இவருக்கு ஏன் தமிழ்ச் சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்று வருத்தமும் வருகிறது..!

அரிசி வியாபாரி பணம் இல்லை என்று சொல்லி அதுவரையில் சஸ்பென்ஸாக இருந்த ஒரு விஷயத்தை போட்டு உடைத்த பின்பு தெருக் குழாயில் தண்ணீரைத் தலையில் ஊத்திக் கொண்டே புலம்பும் சரவணனின் நடிப்பு அபாரம்.. இந்தக் காட்சி சரவணன், கரண் இருவருக்குமே பெயர் சொல்லும் காட்சியாக வருங்காலத்தில் அமையப் போகிறது..! “தோழா.. தோழா..” என்று நிமிடத்துக்கு நிமிடம் கொஞ்சம் சரவணன், அதே அப்பாவித்தனத்தோடு சண்முகராஜின் தூண்டுதலை புரிந்து கொள்ளாமல் சர்ச்சிற்குள் நுழைந்து கலாட்டா செய்வது எதிர்பார்க்காத ஒன்று என்றாலும், இதன் பின்னர் கரண் போலவே நாமும் அவர் மேல் கோப்ப்பட முடியாத அளவுக்கு வசனங்களும், சரவணனின் நடிப்பும் இருப்பதில் இயக்குநருக்கு பாராட்டுக்கள்..!

சந்தேகமில்லாமல் அஞ்சலி தியேட்டருக்கு வரும் யூத்துகளால் காதலிக்கப்படுகிறார். “எடேய் மரண்டை.. காதலிச்சுத் தொலைடா..” என்ற வார்த்தையைக் கேட்ட பின்பும் எவனாவது காதலிக்காமலா இருக்கப் போகிறான்.? கரண்-அஞ்சலி காதல் எப்போது துவங்கியது என்பதற்கான சூழலுக்குள் இறங்காமல், காதலிலேயே துவக்கிவிட்டது ரசிக்கத்தக்கது. பஸ்ஸிற்குள் அஞ்சலி காட்டும் அத்தனை எக்ஸ்பிரஸன்ஸ்களும் அசத்தல்.. இதுக்காகவே அஞ்சலிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமோன்னு தோணுது.. 

ஒரு பக்கம் தனது அப்பாவிடம் “என்னை இன்னும் நீங்க நம்பலீல்ல..” என்று சொல்லி டபாய்த்துவிட்டு, அடுத்த நொடியே கரணுக்கு போன் செய்து “நாளைக்கே நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்..” என்று சொல்லும் அஞ்சலியின் கேரக்டர் ஸ்கெட்ச் இந்தக் கால லவ்வர்ஸ்களுக்கு ஒரு உதாரணம்தான்..!

இரு பக்கமும் தலை உள்ள நாணயத்தை வைத்து ஏமாற்றுவது, சுங்கச் சாவடியில் பாட்டிலை கொடுத்து போஸீஸை கரெக்ட் செய்ய நினைப்பது.. வாங்கிய மாமூலுக்காக உயரதிகாரியிடமே பொய் சொல்வது.. மகள் வீட்டிலேயே காதலனை வரவழத்து சுகித்திருக்க, பார்த்த மாத்திரத்தில் அப்பன் தண்டபாணி மகளை போட்டுத் தள்ளுவது.. போலீஸ் அடித்ததையே சரவணன் மிக எதார்த்தமாக சொல்வது.. லாட்ஜில் ரூம் போட்டு குஜிலியுடன் குஜாலாக இருக்கும் சரவணன் அங்கே வரும் கரணை “அப்படியே உக்காருங்க தோழர்..” என்று கட்டிலை காட்ட.. கரண் நாகரிகமா வெளியேறுவது.. அம்புரோஸின் அண்ணன் மகன் பூணூல் போட்ட இந்துவாக இருந்தாலும், “அவனுக்கு ஒண்ணும் இல்லை. எனக்குள்ள கோபம் இருக்கு..” என்று மறைமுகமாக அவர்களைப் பற்றிச் சொல்லும் அம்புரோஷின் வாய்ப்பேச்சு.. அஞ்சலியின் நிலை தெரியாமல் போனில் தொடர்பு கொள்ள அம்புரோஷ் அதனை வைத்துக் கொண்டு தனது திட்டத்துக்கு கரணை பலிகடா ஆக்குவது.. கரண் அஞ்சலியை மரணப் படுக்கையில் பார்க்கும் காட்சியும், இருக்க விரும்பாமல் கிளம்புவது.. லைட் கம்பத்தில் கரண் அமர்ந்திருக்கும் அந்த துன்பவியல் காட்சி.. மாட்டு வண்டியால் சிந்திய ரத்த்த்தை அவசரம், அவசரமாக துடைத்துவிட்டு மண்ணையள்ளி போட்டு மறைப்பது.. சிறுவன் அம்புரோஷ் கதையை முடிப்பது என்று பல இடங்களில் சினிமாத்தனங்களை கூட வெகு இயல்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்..

கொலைகாரா பாடலும், அதனைப் படமாக்கிய விதமும் அருமை.. அஞ்சலி இருக்கும்போது இயக்குநருக்கென்ன கவலை..? ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சியாளரும் கடும் போட்டியிட்டிருக்கிறார்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில். 

வலையுலக பரமார்த்த குரு பா.ராகவனின் கை வண்ணத்தில் வசனங்களும் பலிச்சிடுகின்றன..! கரணும், சிலுவையும் சந்தித்து பேசும் அந்த ஒரு காட்சியே போதும்..! “பெத்த அப்பனா வந்திருக்கேன்” என்பதும், “உங்க பொண்ணுக்காக கடத்தல் தொழிலை விட்டுர்றேன்” என்பதும் கதையில் மிக அழுத்தத்தை கொடுத்திருந்தன..! யதார்த்தத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பிற்பாதியில் பேசப்பட்ட பல வசனங்களை சென்சார் கத்திரி போட்டிருப்பது நன்கு தெரிகிறது..! அத்தனை பேச்சுக்களிலும் “எடே” போட்டு முடிக்கும் கன்னியாகுமரியின் வட்டார மொழி தமிழ்ச் சினிமாவுக்கு புதுசு..! கேட்கவும் ரசிப்பாகத்தான் உள்ளது..!

இயக்குநர் வடிவுடையான் சிறந்த அறிமுக இயக்குநர் என்பதற்கும்மேல் விறுவிறுப்பான திரைக்கதையாளர் என்பதை இங்கே நிரூபித்திருக்கிறார்..! பல பிரபல நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் இப்படத்தில் அவர்களுக்கேற்ற காட்சிகளை அளவோடு வைத்து, எத்தனை பேர் படத்தில் உயிரோடு இருக்கிறார்கள், சாகிறார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்க வேண்டியதுமான ஒரு கதையை, இப்படியொரு வேகத்துடன் கொடுப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அது இந்த இயக்குநரிடம் உள்ளது.. 

நிஜமான தம்பி வெட்டோத்தி சுந்தரம் இறந்து 17 வருடங்களாகிவிட்டதாம். ஒரிஜினல் லூர்து மேரி இன்னமும் இருக்கிறாராம்.. சுந்தரத்தின் சமாதியை போல பல சுந்தரங்களின் சமாதிகள் அந்த மாவட்டத்தின் பல இடங்களில் குவிந்திருக்கின்றன என்கிறார் இயக்குநர். 

இந்தப் படத்திற்கு எதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்பதும் தெரியவில்லை..! படம் பார்க்காமலேயே போராட்டமெல்லாம் நடத்தியவர்கள், படம் காட்டிய உண்மைத்தன்மையை உணர்ந்த பின்பு அமைதியாகிவிட்டார்களாம்..! இதுவே இப்படத்திற்குக் கிடைத்த உண்மையான பாராட்டுக்கள்..! தம்பி வெட்டோத்தி சுந்தரம் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..!

தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை அவசியம் பாருங்கள்..!

நான் சிவனாகிறேன் - சினிமா விமர்சனம்

12-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பழைய கள்ளுதான்.. புதிய மொந்தையில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் புதிய இயக்குநர் ஞானசேகர். 


தனது அம்மா, அப்பாவுக்கு செய்த துரோகத்தினால் அப்பா கொல்லப்பட.. அந்தக் கொலையை 10 வயது மகன்தான் செய்தான் என்று சொல்லி அம்மாவே அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறாள். சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து ஜெயிலுக்கும்போய் ஹீரோவாக வெளியில் வரும் பிரபாகரன், தனது வாழ்க்கையைத் துடைத்துப் போட்ட தனது அம்மாவைப் போன்ற சில அம்மாக்களைத் தேடிப் பிடித்து கொலை செய்கிறான். 13 கொலைகள் நடந்த பின்பு, 14-வது கொலைக்கு முன்பாகவே அவனை பிடித்துவிடுவேன் என்கிறார் அஸிஸ்டெண்ட் கமிஷனர். பிடித்தாரா இல்லையா என்பதையும் இறுதியில் அவன் கதி என்ன என்பதுவும்தான் கதை..!

தினமும் பத்திரிகைகளில் வெளிவரும் கள்ளக் காதல் செய்தியின் தாக்கத்தில் உருவான கருவாக்கம்..! நானும்கூட சில சமயங்களில் நினைப்பதுண்டு.. கள்ளக் காதல் விவகாரத்தில் தம்பதிகள் பிரிந்துவிட்டாலோ, யாரேனும் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டாலோ அவர்களுடைய குழந்தைகளின் நிலைமை என்ன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் பயமாகவே உள்ளது. அந்த ஒருவித பயத்தின் வெளிப்பாடுதான் இந்த பிரபாகரன் என்ற கேரக்டர்..!

ஜெயிலுக்கு போனதாலேயே அவன் மனநிலை தவறி தப்பு செய்தால் நானே தண்டிப்பேன்.. எங்கப்பா சொல்லியிருக்கார் என்று சொல்லிக் கொள்வது, சுவற்றைப் பார்த்து அப்பாவிடம் பேசுவதைப் போல பேசுவதும், நான் சிவனாகிறேன் என்று சிவ லிங்கத்தை வைத்து பூஜை செய்து அழகு பார்ப்பதுமாக ஒருவித சைக்கோத்தனத்தைக் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால் முழுமையாக இல்லை..!

திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பதால் சீரியஸான காட்சிகள் காமெடியாகி, காமெடி காட்சிகளில் சிரிப்பும் வராமல் போய் ரெண்டுங்கெட்டான் நிலைமையாகிவிட்டது..!

ஹீரோயின் அனிதாவாக ஒரு பெண். குழந்தைத்தனம் மாறாமல் பேச்சிலும், நடிப்பிலும் அமுல் பேபி முகத்துடன் இருக்க.. பஸ் ஸ்டாப்பில் பார்க்கும் இவரை ஹீரோ எப்படி தேடிப் பிடித்து வேலை வாங்குகிறார் என்று தெரியவில்லை..! காதல் சுகுமாரின் அறையில் இருந்த டிவியை கொண்டுபோய் விற்றுவிடும் ஹீரோவை திரும்பவும் தங்களது அறையிலேயே எதுவும் சொல்லாமல் தங்க வைக்கிறார்கள்..!

ஹீரோவைப் பற்றி எதுவுமே தெரியாமலேயே அவனைப் பற்றி ஹீரோயினிடம் சப்போர்ட்டாக பேசுகிறார் சுகுமார்..! ஹீரோயினுக்கு ஹீரோ மேல் பரிவும், பாசமும், காதலும் வருவதற்கான சூழலே இல்லை.. அடுத்தடுத்த காட்சிகளை வேகவேகமாக இப்படி நகர்த்தியிருப்பதை பார்த்தால் திரைக்கதைக்கு ரூம் போட்டு யோசிக்கவில்லை என்பது தெரிகிறது..!

இன்னுமொரு காமெடிக்கு போலீஸ் பார்ட்டிகள்..! ஆதித்யா எதற்கு சிரிக்கிறார்.. எதற்காக வண்டி நம்பரை நோட் செய்கிறார் என்றே தெரியவில்லை. அதை வைத்து ஏதோ பெரிதாக பில்டப் செய்துவிட்டு கடைசியில் புஸ்வாணமாக்கிவிட்டார்கள்..! ஆதித்யாவின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சோகத்துக்குப் பின்னும் மனிதர், தன்னந்தனியே ஹீரோவை பிடிக்க பறக்கும் காட்சியில் சிரிப்புதான் வந்தது.

ஹீரோ செய்யும் கொலைகளை நியாயப்படுத்த அவர் கோர்ட்டில் அனைத்து மீடியாக்களையும் வரவழைக்க வேண்டும் என்றவுடன் உடனேயே அதனை செய்து முடிக்கும் நீதிபதியை பார்த்தவுடன் அசந்துவிட்டேன். இப்படியொரு நீதிபதியை இந்தியாவிலென்ன.. உலகத்திலேயே எந்த இடத்திலும் கண்டுபிடித்துவிட முடியாது.. 

ஒரேயொரு ஆறுதல்.. ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் நயனா தீட்சித். கிளாமருடன் அட்ராக்ஷனை கூட்டியிருக்கிறார். ஆனாலும் இவரை கிளைமாக்ஸில் அநியாயத்திற்கு சாகடிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை..!



கணவன் தன்னைக் கவனிப்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் பிஸினஸ்.. பிஸினஸ் என்று அலைகிறார் என்பதே இது போன்ற எல்லை தாண்டும் பெண்களின் வாதமாக இருப்பதாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். பெற்ற பிள்ளை மீது கணவன் அன்பு காட்டுவதுகூட டூ மச் என்று நினைக்கும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனையும் ஒரு காரணமாகத் திணித்திருக்கிறார் இயக்குநர்..!

மனைவி கணவனைப் பிடிக்காமல் பிரிந்து போனதற்காகவும, சந்தர்ப்ப சூழ்நிலையில் ஜெயிலுக்குப் போனதற்காகவும் இது போன்று படுகொலைகள் செய்வதுதான் நியாயம் என்பதை போல கோர்ட்டில் வாதாடுவது படத்தின் இயக்குநரே தீர்ப்பு எழுதியிருப்பது போல தெரிகிறது..! இது ஒரு கதை.. இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட ஒரு ஹீரோவின் கதை என்ற போக்கில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது திசை மாறி இயக்குநரின் அழுத்தமான தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது..!

இயக்குநர் ஞானசேகர் மிக இளையவர். நிறைய குறும்படங்களை இயக்கிய அனுபவசாலி. முயற்சி செய்து பார்க்கலாம் என்று முதல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிப்பு என்று பார்த்தால் அம்மா கேரக்டர் மட்டுமே ஓகே.. ஒவ்வொருவரையும் திரைக்கதையில் இணைக்க முடியாமல் திண்டாடி ஒரு லெவலுக்கு கொண்டு வந்திருப்பதால் நடிக்க வைக்கவும் முடியவில்லை போலும்..!

கதை அழுத்தமாக நம்மை அமிழச் செய்யும்வகையில் இல்லாததால் ஆங்காங்கே பொறுமையிழந்து நெளிய வேண்டியிருக்கிறது. அதிலும் பிற்பாதியில் வரும் கோர்ட் சீன்களில் ரொம்பவே இழுத்திருக்கிறார்கள்..!

சண்டைக் காட்சிகளில் லேப்ஸ் வாங்குவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. பாடல் காட்சிகளில் மட்டுமே சொல்லிக் கொள்வதுபோல ஒளிப்பதிவாளர் தெரிகிறார்..! டைட்டில் காட்சியில் இருக்கும் வித்தியாசமும், அந்த பிஜிஎம்மும் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் பாடல்களில் இரைச்சலைக் கட்டுப்படுத்தி கூச்சலைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஏன் அத்தனை பாடல்களையும் ஹை ஸ்பீச்சில் பாட வேண்டும்..? காதல் இல்லை; காமம் இல்லை என்ற பாடல் நா.முத்துக்குமாருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த பிரபாகரன் போன்று பல இளைஞர்கள் இன்றைக்கும் இது போன்ற கொலைகளைச் செய்யாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவனின் வாழ்க்கை திசை மாறியது பற்றிச் சொல்வதற்கு எத்தனையோ கதைக் களன்கள் இருக்கின்றன.. வேறொரு சிறந்த இயக்குநர் அப்படியொன்றை எடுப்பார் என்று நம்புவோமாக..!

ஐஸ்வர்யாராயின் பிரசவமும், மீடியாக்களின் கவலையும்..!

10-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..!

தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே பிரேக்கிங் நியூஸாக போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..!


மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய். பிரசவிக்கும் தருணத்திற்காக வட இந்திய சேனல்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.. இதைவிட ஒரு இந்தியனுக்கு முக்கியமாகத் தெரிவிக்கப்பட வேண்டிய செய்தி வேறு எதுவுமில்லை என்ற அவர்களது கூர்மையான அவதானிப்பை ஒப்புக்காக இந்திய மீடியா உலகம் கண்டித்துள்ளது.

BROADCAST EDITOR’S ASSOCIATION  என்னும் தொலைக்காட்சி எடிட்டர்கள் அமைப்பு நாளைய தினம், அதாவது ஐஸ்வர்யாராய் பிரசவிக்கும் தினத்தன்று தொலைக்காட்சி மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் வழிகாட்டி முறைகளை வெளியிட்டிருப்பதுதான் மீடியா உலகத்தின் தற்போதைய கேவலமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

1. ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்தியை முன் கூட்டியே ஒரு செய்தியாக வெளியிடக் கூடாது.. 

2. குழந்தை பிறந்த செய்தியை பிரேக்கிங் நியூஸாக போடக் கூடாது.

3. டிக்கர் செய்தியாக எப்போதும் ஸ்கிரீனில் இருப்பது போன்றும் செய்யக் கூடாது.

4. குழந்தை பிறந்த தேதி, நேரம் இவற்றை வைத்து ஜோதிடர்களை வைத்து கதை செய்யக் கூடாது..

5. மருத்துமனையின் முன்பாகவும், பச்சன்களின் வீட்டின் முன்பாகவும் நேரடி ஒளிப்பரப்பு செய்ய உதவும் ஓபி வேன்களை கொண்டு வந்து நிறுத்தக் கூடாது..

6. மருத்துவமனையில் இருந்து நேரடி ஒளிரப்பு செய்யக் கூடாது..

7. குழந்தையின் புகைப்படம் கிடைத்தால்கூட அவருடைய குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரையில் அதனை வெளியிடக் கூடாது..

- இப்படி சில விதிமுறைகளை தங்களது சங்கத்தில் இணைந்துள்ள அனைத்து மீடியா தரப்பினருக்கும் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்..!

இந்த அமைப்பின் துணைத் தலைவர் அர்னாப் கோஸ்வாமி.. டைம்ஸ் நெள எடிட்டரான இவர் “இதுவொரு சாதாரண நிகழ்வுதான்.. நாட்டில் இதைவிட பெரிய விஷயமெல்லாம் இருக்கிறது..” என்று திருவாய் மலர்ந்துள்ளார். இதே டைம்ஸ் நெளதான் சில நாட்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா ஷாருக்கான் கொடுத்த பார்ட்டியில் கலந்து கொள்ள வந்தபோது, தனது சேனலில் பிரேக்கிங் நியூஸ் போட்டு அசத்தியவர்..!

டெல்லிவாலா மீடியாக்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு ஆட்களைப் பிடித்து வைத்துக் கொண்டு தங்களை வளர்த்துக் கொண்டே வருகின்றன. சினிமாக்களிலும் ஆளுக்கொரு கான்களை தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கம் வெட்டி வேலை பார்க்கும் இந்தியர்களின் கவனத்தை முழுமையாக தங்களது பக்கம் ஈர்ப்பதுதான்..!

இந்த லட்சணத்தில் இந்த பிரசவ செய்தியை யார் முதலில் பிரேக்கிங் நியூஸாக போடப் போவது என்றுதான் பலத்த போட்டியிருக்கும். யார் முதலில் சொன்னாலும், பச்சன்கள் இதனால் கோபித்துக் கொள்ளப் போவதில்லை..! அவர்களுக்கும் இந்த மீடியாக்கள் அவசியம் தேவை.. கொஞ்சம் வருத்தப்படுவதாக்க் காட்டிக் கொண்டாலும் ஐஸ்வர்யாவுக்கு, மீடியாக்கள் கண் பார்வையில் படவில்லையெனில் தூக்கம் வராது. 

இருவருமே தங்களுக்குள் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் வருத்தப்படுவது போலவும் நடித்துக் காண்பிக்கிறார்கள். இந்த நடிப்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும் நாளை நமக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது..!

வேலை, வெட்டியில்லாத இந்தியர்களே.. பொறுமையாக இன்று நள்ளிரவு முதல் விழித்திருங்கள்.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவின் தங்கமகளோ அல்லது தங்கமகனோ பிறந்துவிடுவார்கள். அதன் பின் உங்கள் நிலைமை எங்கயோ போய்விடும்..!

பின் குறிப்பு : எந்தச் சேனலில் முதலில் பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் எனக்குத் தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்..! 

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-08-11-2011



08-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நவம்பர் 7-ம் தேதிக்கு என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. கட்டாயம் வாழ்த்தியே தீர வேண்டிய பிறந்த நாள் சொந்தக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.இராமனும், 2 முறை நோபல் பரிசை பெற்ற மேடம் கியூரி அம்மையாரும் நேற்று பிறந்தவர்கள்தான். வணங்குவோம்..!


உலக நாயகன் அண்ணன் கமல்ஹாசனின் 57-வது பிறந்த நாளை அவரது ரசிகக் கண்மணிகள் ரத்த தானம், உடல் தானம் செய்து நற்பணி மன்றத்தின் பெயரை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்கள். அண்ணனுக்கும், அவர்தம் ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகள்..! (இது பற்றி தனிப் பதிவு போடலாம் என்று கடைசி நிமிடத்தில் நினைத்ததால் இந்தப் பதிவில் இருந்து நீக்கினேன். ஆனால் பிறந்த நாளைக் குறிப்பிட மறந்துவிட்டேன். பக்தர்கள் மன்னிக்கவும்)


திரையுலகப் பிரபலங்களான இயக்குநர் வெங்கட்பிரபுவும், பின்னணிப் பாடகர் கார்த்திக்கும் நேற்று தங்களது பிறந்த தினத்தை கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..!


தற்போதைய நமது கனவுக் கன்னி அனுஷ்கா ஷெட்டியும், வருடங்கள் கடந்தாலும், மறக்க முடியாத கருப்பழகி நந்திதா தாஸும் நேற்றைக்குத்தான் அவதரித்தார்களாம்.. அவர்களுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். (போட்டோ போட ஒரு சான்ஸ் கிடைச்சதுக்காக, அவர்களுக்கு நன்றியையும் செலுத்துகிறேன்)


நேற்றுதான் நமது வலையுலக இலக்கிய வித்தகர் அண்ணன் ஜமாலனுக்கும் பிறந்த நாள். அவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்..!


தம்பி வெட்டோத்தி சுந்தரம்

இப்போதெல்லாம் சினிமா எடுப்பது சுலபம். ஆனால் அதனை எதிர்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் செய்வது கடினமாகிவிட்டது. கன்னியாகுமரி-கேரள எல்லையில் வாழ்ந்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' என்ற கதாநாயகனின் கதையை அதே ஊரைச் சேர்ந்த இயக்குநர் வடிவுடையான் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். வரும் 11-ம் தேதி படம் ரிலீஸ். படத்தை பார்க்காமலேயே அந்தப் படத்திற்கு எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் ஒரு இயக்கத்தினர்..!


கன்னியாகுமரி மாவட்டத்தையே இப்படத்தில் கேவலமாக காட்டியிருப்பதாகச் சொல்லி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். படத்தைப் பார்க்காமலேயே அவர்களால் எப்படி இதனை உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று கேட்டால், எங்களுக்கு வந்த தகவல்களை வைச்சு தெரிஞ்சுக்கிட்டோம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தின் தயாரிப்பாளரும் அதே மாவட்டத்துக்காரர்தான்..

போற போக்கைப் பார்த்தா சினிமாவுக்கே வெளியுறவுத் துறை அமைச்சர் மாதிரி ஒருத்தரை வேலைக்கு வைக்கணும் போலிருக்கு. படம் தயாராகி மிக நீண்ட நாட்களுக்குப் பின் திரைக்கு வருவதால் தயாரிப்பாளர் தரப்பு கலக்கமாகி தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி உதவி கேட்டிருக்கிறார்கள். சங்கத்தினரும் படத்தைத் திரையிட அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆக.. இங்கே உண்மை சினிமா வெளிவரவே வராது போலிருக்கிறது..!

கரண், அஞ்சலி நடிப்பில் நமது வலையுலக பரமார்த்த குரு பா.ராகவனின் வசனத்தில் வடிவுடையானின் இயக்கத்தில் வளர்ந்திருக்கும் இப்படத்தைப் பார்த்து அப்படியென்னதான் கதை என்று தெரிந்து கொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன்..! முடிந்தால், வரும் 12-ம் தேதி, சனிக்கிழமையன்று வலையுலகத்தினருடன் இணைந்து பார்ப்போம்..! 


குடும்ப டான்ஸ்..!

இது எந்த ஊர்லன்னு தெரியலை.. ஆனால் மல்லு மாம்ஸ் மற்றும் சேச்சிகளின் டான்ஸ் அசத்தல்.. ரொம்ப பிராக்டீஸ் செஞ்சு ஆடியிருக்காங்க.. பாராட்டுக்கள் உரித்தாகட்டும்..



கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்

தற்செயலாகத்தான் இதனைப் பார்த்தேன். படித்தேன்.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் வருடச் சம்பளப் பட்டியல் இது :


A Grade  - Rs. 1.00 Crore

Sachin Tendulkar,   Rahul Dravid,  Gautam Gambhir,  Virender Sehwag,  M S Dhoni,  VVS Laxman, Suresh Raina, Harbhajan Singh, Zaheer Khan,  Yuvraj Singh, Ishant Sharma, Virat Kohli

B Grade - Rs. 50.00 lakhs

Praveen Kumar, Pragyan Ojha, Ravichandran Ashwin, Rohit Sharma, Ravindra Jadeja

C Grade - Rs. 25.00 lakhs

S.Sreesanth, Amit Mishra, Munaf Patel, Murali Vijay, Parthiv Patel, S.Badrinath, Manoj Tiwary, Piyush Chawla, Dinesh Karthik,  Jaydev Unadkat,  Umesh Yadav, Rahul Sharma, Varun Aaron,  Abhinav Mukund, Cheteshwar Pujara,  Abhimanyu Mithun, Vinay Kumar,  Ajinkya Rahane, Shikhar Dhawan, Wriddhiman Saha.

இதில் கடைசி 3 லைனில் இருப்பவர்கள் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை..! ஒருவேளை பயிற்சி ஆட்டத்தின்போது பந்து பொறுக்கி போடுபவர்களா..? என்னமோ செய்யட்டும்.. இத்தனை வருஷமா இந்த வெட்டியைப் பார்த்து, பார்த்து ஸ்கூல், படிப்பு எல்லாத்துலேயும் கோட்டைவிட்டு, வாழ்க்கையை இழந்துட்டு நிக்குற என்னை மாதிரி வீணாப் போன பரதேசிகளுக்கெல்லாம் பென்ஷன் மாதிரி ஏதாச்சும் போட்டுக் கொடுத்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்..!


சினிமாவுக்கு வயசு 80

கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று தமிழ் பேசும்படத்திற்கு 80 வயது பூர்த்தியானது. 1931-ம் ஆண்டு சென்னை தங்கசாலை அருகே அப்போது கினிமா சென்ட்ரல் என்ற பெயரில் இருந்த தியேட்டரில்தான் முதன் முதலாக தமிழின் பேசும்படமான காளிதாஸ் வெளியானது.


இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வை தயாரித்த பம்பாய் இம்பீரியல் மூவிடோன் அதிபர் அர்தேஷிர் இரானிதான் இந்தத் தமிழ்ப் படத்தையும் தயாரித்துள்ளார். டி.பி.ராஜலட்சுமி, கதாநாயகியாக தமிழில் பேசி நடித்தார். கவி காளிதாசராக நடித்தவர் தெலுங்கில் பேசியிருக்கிறார். எல்.வி.பிரசாத் ஹிந்தியில் பேசியிருக்கிறார். 

இதுபோல் படத்தில் நடித்த அனைவருமே அவரவர்க்கு தெரிந்த மொழியில்தான் பேசியிருக்கிறார்கள். ஆக இது முழுமையான தமிழ்ப் படமாக இல்லையென்றாலும், "தமிழ் மொழி ஒலித்த முதல் தமிழ்த் திரைப்படம்" என்ற பெயரைத் தாங்கியுள்ளது.


அக்டோபர் 31-ல் படம் ரிலீஸ் என்றாலும், அப்போது சென்னையில் வெளியாகி வந்த சில பத்திரிகைகளுக்கு மட்டும் அதற்குச் சில தினங்கள் முன்பாகவே படத்தைத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் விமர்சனம் அக்டோபர் 29-ம் தேதி சுதேசமித்தரன் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதே சுதேசமித்திரனின் விளம்பரமும் செய்திருக்கிறார்கள்.


மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களை எழுதியுள்ளார். “ராட்டினமாம் - காந்தி கை பாணமாம்”, “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை?” போன்ற தேசபக்தி பாடல்களும் இடம் பெற்றுள்ளன.  ராஜலட்சுமி குறத்தி டான்ஸ் ஆடுவதற்காக அதற்கேற்ற பாடல்களும் இருந்திருக்கின்றன.. இதில் ஒரு பாடலின் முதல் வரிகள் “மன்மத பாணமடா..! மாரினில் பாயுதடா..!” ஹி.. ஹி.. முதல் படத்துலேயே ஆரம்பிச்சிட்டோம்ல்ல..!


கலங்கடிக்கும் பேஸ்புக் பெண்கள்

தமிழகத்து பெண்கள் பற்றிய எனது பார்வையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் போலிருக்கிறது..! இரட்டை அர்த்த பேச்சுக்கள், செக்ஸ் ஜோக்குகளை தமிழகத்துப் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அண்டர்வேல்டு மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து பிறந்து வளர்ந்து வந்திருப்பதால் அப்படியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் சமீப காலமாக பேஸ்புக்கில் நான் பார்த்த சில பெண்களின் அரட்டைப் பேச்சுக்கள் இந்த எண்ணத்தை கலைத்துப் போட்டுவிட்டன. சமூகத்தில் பெரிய பெயர் உள்ள பெண்கள் வட்டத்தில் சென்ற மாதம் ஒரு அரட்டைக் கச்சேரி படு சீரியஸாக நடந்தது.. 

“கடைசியாக எப்போது செக்ஸ் உறவு வைத்துக் கொண்டீர்கள்..? கணவருடன்தான் என்றில்லை. உறவுதான் முக்கியம்..!” - இதுதான் கேள்வி. கேள்வி கேட்டவருக்கு வயது 50-க்கும் மேல். வந்து பதில் சொன்னவர்கள் அவர் வயதையொத்த தோழிகளும் கொஞ்சம் 45-ல் இருந்து 50-ஐ தொட்டவர்களும்.. 

சிலர் மட்டும் ரொம்பவே உச்சுக் கொட்டி “அது என்னைக்குன்னு ஞாபகத்துல வர மாட்டேங்குதே..” என்று அழுதேவிட்டார்கள்..! சிலர் “அப்படீன்னா..” என்று கிண்டலடித்துவிட்டு “முழுமையான உறவாக 10, 8, 6 வருஷத்துக்கு முன்னால. இப்பல்லாம் ச்சும்மா டச்சிங்.. டச்சிங் மட்டும்தான்...” என்று சிணுங்கலுடன் சொன்னார்கள்..! ஆனால் பலரோ “முன்னாடில்லாம் வாரத்துக்கு 2. இப்போ வாரத்துக்கு ஒண்ணுதான்..” என்று வருத்தமாய்ச் சொல்ல.. அவர்களை வைத்து மற்றவர்கள் ஆடிய ஆட்டமும், பேசிய பேச்சும்.. ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்..! அடுத்தவர்களின் அந்தரங்கத்தை படிப்பது அநாகரிகம் என்றாலும், கண்ணில் படும்போது என்ன செய்ய..?

இன்னொரு வகையினர் இன்றைய திருமணமான யூத்தான பெண்கள்.. “கைய வைச்சுக்கிட்டு சும்மா இருடா” என்று தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறதா..? நிஜமாகவே நான் கேட்டதில்லை..  அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு சமீபத்தில் ஒரு பேமஸ் பெமினிஸ்ட் சைட்டில் கும்மியடித்துத் தீர்த்துவிட்டார்கள்..! வந்து குவிந்த பெண்ணியவாதிகளெல்லாம் பெத்த பெயர் எடுத்தவர்கள். ஆனால் எழுதிய பின்னூட்டங்கள்..? நம்ம வால்பையனையும், ராஜன் லீக்ஸையும் ஒண்ணா உக்கார வைச்சு பிட்டு படம் பத்தி பேசச் சொன்னா எப்படியிருக்கும்..? அப்படியிருந்தது..! ம்.. காலம்தான் எவ்ளோ மாறிப் போச்சு..!


தேடிப் பிடித்த ரேஷ்மா

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சினிமா போஸ்டர்களில் பளிச்சென தென்பட்ட பிட்டு பட போஸ்டர்களில் இந்த முகம் தவறாமல் தென்படும். ரேஷ்மா. நிஜ பெயரா.. சினிமா பெயரா என்று தெரியாது.. ஷகீலாவின் தங்கச்சியாக 30 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இவரைப் போலவே 7, 8 பேர் தொடர்ச்சியாக அத்தனை பிட்டுகளிலும் காட்சியளித்திருந்தார்கள். சீஸன் முடிந்துவிட்ட பின்பு ஆளுக்கொரு பக்கமாக சிதறிவிட்டார்கள்.

சிலர் இன்றைக்கும் வடபழனி, கோடம்பாக்கம் ஏரியாவில்தான் இருக்கிறார்கள். ராம் தியேட்டரின் எதிர்த் தெருவில் 2 பேர் இப்போதும் குடியிருக்கிறார்கள். இன்னொரு தாரகை, இயக்குநர் சங்கத்தின் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு தனது குழந்தைகளை கொண்டுவந்துவிட காலையும், மாலையும் வருகிறார். அடையாளம் கண்டு கொள்ளும் ஆண்கள் அவரது முகத்தைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால், லேசாக புன்முறுவல் பூத்து கடந்து செல்கிறார்..

இந்த ரேஷ்மா மட்டும் எங்கே போனார் என்று கூகிளாண்டவரிடம் விசாரித்தபோது இந்த வீடியோவைக் காட்டினார். 2008-ம் ஆண்டு கேரளாவின் கொச்சி நகரில் விபச்சார ரெய்டில் சிக்கினாராம்.. அதையே போலீஸார் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள்..! என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க.. சரி.. இந்த போலீஸ் வீடியோ எப்படி ரிலீஸ் ஆச்சு..? இதை யார் விசாரிக்கிறது..?
என்னவோ போங்க..!






பாரதிராஜாவின் புதிய படம் துவக்க விழா



வரும் 17-ம் தேதி வியாழக்கிழமை, தான் பிறந்து வளர்ந்த தேனி மண்ணில் 'அன்னக்கிளியும், கொடி வீரனும்' படத்திற்கு பூஜை போடுகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. 

சென்னையில் இருந்து முன்னணி இயக்குநர்கள், பிரமுகர்கள் அத்தனை பேருக்கும் டிக்கெட் போட்டாகிவிட்டது. 100 கார்கள், 5 ஏஸி பஸ்கள் புக். டிரெயின், பிளைட் என்று அத்தனை வழியிலும் அழைத்து வரச் சொல்லியாகிவிட்டது..! திரையுலகப் புள்ளிகளை தவறாமல் வர வேண்டும் என்று பாரதிராஜாவே போன் செய்து அழைத்திருக்கிறார்.. கே.பாலசந்தர் தலைமை தாங்க, மணிரத்னம் முன்னிலை வகிக்கிறாராம்..! 


எல்லாம் சரி.. அவர் பிறந்த மண்ணில் நடக்கும் பிரம்மாண்டமான இந்த விழாவில் அவருடைய ஆரூயிர்த் தோழர் இளையராஜா கலந்து கொள்ள வேண்டாமா..? தன்னுடைய கனவுப் படம் என்று அவரே சொல்லியிருக்கும் இப்படத்தில் இளையராஜாவின் இசை இருந்திருக்க வேண்டாமா? இப்போதும் பிரிக்க முடியாத அவரது ஈகோவினால் ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறாராம்.. இதற்கு எப்படி இளையராஜா வருவார் என்கிறார்கள் திரையுலகத்தினர். 


“வைரமுத்து பாட்டெழுதப் போறாரு.. இளையராஜா இதுக்கு ஒத்துக்க மாட்டாருல்ல. அவர் என்ன செய்வாரு..?” என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தாலும் இளையராஜாவும் வருவார் என்று சென்ற வாரம் வரையிலும் கோடம்பாக்கத்தில் பேசி வந்தார்கள். திடீரென்று இளையராஜாவின் மனைவி இறந்துவிட்டதால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இப்போது..!

எப்படியோ, தனி மனித ஈகோவினால் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய சிறந்த படைப்புகள் கிடைக்காமல் போகின்றன என்பதை இந்த மூவர் என்றைக்கு உணரப் போகிறார்கள்..?


எதுக்குக் கல்யாணம்..?

வீட்டுக்குப் போகலாமா? வேண்டாமா? என்று நடுரோட்டில் நின்று யோசிக்க வைக்கும் அளவுக்கு பிக்கல் பிடுங்கல் இருக்கும் குடும்ப வாழ்க்கை முறை தேவைதானா என்று கேட்பவர்கள் இப்போதே மெக்சிகோவுக்கு டிக்கெட் எடுக்கலாம்..!

மெக்சிகோவில் இப்போதெல்லாம் டைவர்ஸ் கேட்கும் தம்பதியினரின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறதாம். ஒரு வருடத்தில் 100 பேர் திருமணம் செய்தால், அதில் 50 பேர் அடுத்தடுத்த வருடங்களில் கோர்ட் படியேறுகிறார்களாம். இதனைத் தவிர்ப்பதற்காக ஒரு சூப்பர் ஐடியாவை அந்த நாட்டு அரசே அறிவித்துள்ளது.

அதன்படி முதல்ல 2 வருஷம் தம்பதிகள் ஒண்ணா சேர்ந்து வாழப் போறோம்ன்னு கவர்ன்மெண்ட்டு ஏத்துக்குறாப்புல ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணுமாம்.. அந்த 2 வருஷத்துல அவங்களுக்கு அடிதடி, வெட்டுக் குத்து, கை கலப்பு எதுவுமே வரலைன்னா அவங்க தொடர்ந்து அந்த ஒப்பந்த்த்தை நீட்டிச்சுக்கலாமாம்.. இல்லைன்னா கட் பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்கலாம்.. இல்லாமல், இன்னும் 5 வருஷம் கழிச்சு தகராறு வந்தாலும் பரவாயில்லை. வெட்டி விட்டுட்டு போகலாம். கோர்ட், கேஸ்ன்னு அலைய வேண்டியதில்லை.. எங்களுக்கும் நேரம் மிச்சம் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்காங்க.. இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளும்கூட சேர்ந்து ஆதரிக்கிறாங்கன்றதுதான் பெரிய விஷயம்..! சரி.. எல்லாரும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க போலிருக்கு..!

இது மாதிரியே நாமளும் யோசிச்சா..? யோசிங்கப்பா.. யோசிங்க..!


அசத்தல் பின்னணி இசை..!


பின்னணி இசை பற்றிய புரிதல் பாமர சினிமா ரசிகனுக்கு இன்னமும் தோன்றாத சூழலில், 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த இந்தப் படத்தில் மம்முட்டி வரும்போதெல்லாம் பின்னணியில் பாய்ந்த இசையை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை..!

இசைஞானிதான் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெயர் 'சாம்ராஜ்யம்'. கள்ளக் கடத்தல் டானாக நடித்திருக்கிறார் ம்ம்முட்டி. இதில் அவருடைய மேக்கப் அசத்தல். கம்பீரமாக அலெக்சாண்டர் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் மம்முட்டி. படமும் செம விறுவிறுப்பு.. மலையாளத்தில் சக்கைப் போடுபோட்ட படம் இது..! மம்மூக்காவின் அறிமுகக் காட்சியில் இளையராஜா போட்ட பின்னணியை கேளுங்கள்..!



லிப்ஸ்டிக் போட்டி


ஐ.ஐ.டி.க்கள்தான் இந்தியாவின் முதன்மையான மாணவர்களை உருவாக்கும் கலைக் கோவில்களாம்.. இது ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் நடந்த மாணவர் கலை நிகழ்ச்சியின்போது நடந்த கூத்து..!










நடன இயக்குநர் சலீம் மரணம்

“சினிமாக்காரன் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக் கொண்டே தூங்கணும்.. இல்லாட்டி செத்துட்டான்னு சொல்லி தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க..” என்பார்கள் கோடம்பாக்கத்தில். சென்ற மாதம் நேரடியாகவே இதனை உணர்ந்தேன்.

நடன இயக்குநர் சலீம். தமிழில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் சேர்த்தால் 1000-க்கும் மேல்..! ஒரு நேரத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்று இருவருக்குமே பிடித்தமானவராக இருந்திருக்கிறார். ஸ்டைலிஷான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களுக்காக திரையுலகில் அதிகம் விரும்பப்பட்டவர். தெலுங்கிலும் அத்தனை டாப் ஹீரோக்களையும் ஆட்டுவித்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு மட்டும் 78 படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். 

'இளைமை ஊஞ்சலாடுகிறது' என்ற படத்தில், 'தண்ணி கருத்திருக்கு' என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததுடன், அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் இருந்தார்.  'வியட்நாம் வீடு' படத்தில் இடம்பெற்ற 'பாலக்காட்டு பக்கத்திலே' என்ற பாடலுக்கும் நடனம் இவர்தான். கடைசியாக அவர், 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இடம் பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடலுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.

புலியூர் சரோஜா, தாரா, சிவசங்கர், டி.கே.எஸ்.பாபு, ஜான்பாபு என்று பெயர் பெற்றவர்களை வளர்த்திருக்கிறார். தன்னுடைய சிஷ்யர்கள் எல்லாம் வளர்ந்துவிட்டதால், வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கி ஒதுங்கிக் கொண்டவர். மனைவி, பிள்ளைகளும் உண்டு..  

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தின்போதுதான் இவருக்கு கிரகம் சரியில்லாமல் போனது. கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகேயுள்ள இவருக்குச் சொந்தமான இடத்தில் குடியிருந்த கடைக்காரரை காலி செய்ய பேச்சுவார்த்தைக்குப் போனபோது உடன் அழைத்துச் சென்ற நபர் கோபத்தில் கடைக்காரரை தாக்கிவிட கடைக்காரர் ஸ்பாட்டிலேயே அவுட். இதுதான் சலீமீன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவம்..!

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் சலீம். ஜாமீனில் வெளியே வந்தாலும், இவருடைய குடும்பத்தினரின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிவிட்டன. தேவையான அளவு சொத்துக்களை இவரிடமிருந்து எழுதி வாங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர் பெயரில் இருந்த சொத்துக்களையெல்லாம் இவரது அப்பாவித்தனத்தினால் அதுவரையிலும் அனுபவித்து வந்தவர்களே சொந்தமாக்கிக் கொண்டார்கள்.. 

பாவம் மனிதர்.. வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக தனிமையில் எங்கெங்கோ வசித்தவர், கடைசியில் பசி பொறுக்க மாட்டாமலேயே ஒரு காலத்தில் தனது சொந்த செலவில் 25 லட்சம் ரூபாய் கொடுத்து கட்டிடம் வாங்கிக் கொடுத்த நடன இயக்குநர்கள் சங்கத்தில் வந்து உதவி கேட்டிருக்கிறார். நடன இயக்குநர்கள் சங்கம் இவருடைய இறுதிக் காலம் வரையிலும் மாதம் 3000 ரூபாய் கொடுத்து உதவி செய்த்து. சலீமின் நண்பரான ஸ்டண்ட் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற முஸ்தபா என்பவர்தான் சலீமை, கடந்த 5 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்திருக்கிறார்.

அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஆளுக்கொரு ஊரில் போய் செட்டிலாகிவிட.. தனிமையில் குடிக்கு அடிமையானார். சென்ற மாதம் அவர் மறைவுச் செய்தி கேட்டு போனபோது வாசலில் 5 பேர் உட்கார்ந்திருந்தார்கள். நடன இயக்குநர்கள் சங்கத்தினர் பின்பு வந்தாலும், பெயர் குறிப்பிடும்படியான பெரிய டான்ஸ் டைரக்டர்களில் ஒருவர்கூட வரவில்லை..! நடிகர் சிவக்குமார் மட்டுமே வந்தார். 

“ஸ்பாட்டிற்கு வந்து பாட்டை கேட்டுவிட்டு டான்ஸ் கம்போஸ் செய்யும் டான்ஸ் மாஸ்டர், எனக்குத் தெரிந்து இந்த சலீம் மாஸ்டர் மட்டும்தான் என்றார் சிவக்குமார்..! வெறுமனே மாலையை அணிவித்துவிட்டு போய்விடவில்லை. இறுதிச் சடங்களுக்கான முழுச் செலவையும் சிவக்குமாரே ஏற்றுக் கொண்டார்.

எத்தனை பெயர்களை எடுத்தாலும், எவ்வளவு சொத்துக்களை சேர்த்தாலும் என்ன பலன்..? இறுதியில் சில மனிதர்களுக்குக் கிடைப்பது புகழ் மட்டுமே..! சலீம் மாஸ்டருக்கு அதுகூட சினிமாவில் இருந்து கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்..!  


படித்ததில் ரசித்தது..!



"உங்களுக்கெல்லாம் தெரியுமோ என்னவோ.. நூர்ஜஹான் வேடம் போட்டு சிவாஜிகணேசன் நாடகங்களில் நடிப்பார். நடிகைகளையெல்லாம் மிஞ்சும் விதத்தில் அவர் நடித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். 'இழந்த காதல்' நாடகத்தில் வேணி என்கிற பெண் வேடம். பெண் என்பதால் ஏற்படக் கூடிய நாணம் ஒரு பக்கம். சற்று வயதான பெண் என்பதால் நாணத்தைச் சற்று மறந்துவிட்ட நிலை. இந்த இரண்டையும் இணைத்து வேணியாக வந்து மேடையில் சிவாஜிகணேசன் நடந்த நடை எனக்கு இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

நடிகர்களுக்கு இருக்க வேண்டிய அப்சர்வேஷன் திறமை இவரிடம் நிறைய இருக்கிறது. திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதை அன்று கணேசன் பார்த்திருந்து, மனதில் பதிய வைத்திருந்த காரணத்தால்தான் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இன்று சிறிதுகூடக் குறைவின்றி நாதஸ்வரம் வாசித்ததைப் பார்த்தேன். எங்கேனும் ஓரிடத்திலாவது மேலுதடு, கீழுதடு - பிசகுமோவெனக் கூர்ந்து கவனித்தேன். அறவே இல்லை. அப்படியொரு முத்திரையை அவரது நடிப்பில் கண்டேன்.

சிவாஜிகணேசன் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அவருக்கு அறுபது அல்லது எழுபது வயதானாலும்கூட, நடிக்கும் திறமை அவருக்கு நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த வயதில் அவர் பூந்தோட்டத்தில் கட்டிப் பிடித்து காதல் காட்சியில் நடிக்காமல், நல்ல குடும்பத் தலைவன் வேஷங்களில், வட இந்திய நடிகர் அசோக்குமார் ஏற்று நடிப்பதுபோல, வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்.."

- 'உயர்ந்த மனிதன்' படத்தின் வெற்றி விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது - 'தமிழ்ச் சினிமாவின் கதை' புத்தகத்திலிருந்து 


 பார்த்ததில் பிடித்தது..!