ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு - கர்நாடக அரசின் அப்பீல் மனு - முழு விவரம்

27-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.



1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள்வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.

நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. 

தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை. 

மேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.

சில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா..?

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக் குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். 

ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படிதான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அது பற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது. இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு 

நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இது பற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.



கட்டடங்களின் மதிப்பீடுகள்

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.

ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார். 

பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.

இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு  ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது. 

சுதாகரன் திருமணச் செலவுகள்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரனின் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி குமாரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமான வரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். 

ஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.



கடன் மூலம் வந்த வருமானங்கள்

மிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார். 

உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.

அப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப்  பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.

குற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி குமாரசாமி அதைப் புரிந்து கொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும். 

இப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டு மொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.

திராட்சைத் தோட்ட வருமானம்

ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம்  10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார். 

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.

கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமான வரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.

பரிசுப் பொருட்கள் மூலம் வந்த வருமானங்கள்

ஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப் பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.

ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும்வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.

சசி என்டர்பிரைஸஸ்

சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர் தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்

நமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா, சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் 4 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். 

தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். 

ஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ் சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டூப்பர் டி.வி

சூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல்,  சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.

சொத்துகள்...

அசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர் தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.



இது போன்ற குளறுபடிகளால், எதிர் தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார்.

ஜெயலலிதா விடுதலையானதற்குக் காரணமாக அமைந்த கணக்குகள் பிழையான கணக்குகள் என்பதை நீதிபதி குமாரசாமியின் அட்டவணைகளே நிரூபிக்கின்றன. அதைச் சரி செய்தால், இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவால் விடுதலையாகி இருக்க முடியாது. அந்தக் கணக்கில் நடைபெற்ற பிழைகள் தவிர்த்து வேறு பல விஷயங்களையும் கருத்தில் கொண்டால் நிச்சயமாக ஜெயலலிதாவால் இந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்திருக்கவே முடியாது. 

எனவே, இந்த வழக்கு முழுமையாக இங்கு விசாரிக்கப்பட்டு முடியும் வரை, இடைக்கால உத்தரவு பிறப்பித்து ஜெயலலிதாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு ஊழல் தடுப்புச் சட்டம் அந்த உரிமையை வழங்குகிறது. அதனால், தவறான தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை, இதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், இதில் நீதி கேலிக்குரியதாக மாற்றப்படும்.

கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடனடியாக சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தேவையான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். எதிர் மனுதாரர்கள் இதில் எந்த முறையீடும் செய்யாததைக் கருத்தில் கொண்டு உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கை நடத்த வேண்டும்.

- இவ்வாறு அப்பீல் மனுவில் சொல்லப்பட்டுள்ளதாம். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

தமிழக அமைச்சர்களுக்கு மீண்டும் கோயில் வேலைகள் காத்திருக்கின்றன என்று கிண்டல் அடிக்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.

நன்றி : ஜூனியர்விகடன் - 01-07-2015

சொப்பன வாழ்வில் - நாடக விமர்சனம்

24-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவை வெறும் காமெடி நடிகராகவே பாவித்துவிட்டது தமிழ்ச் சினிமாவுலகம். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதையறிந்தும் சினிமாவுலகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றாலும், அவருடைய மேடை நாடகங்கள்தான் அவருடைய நடிப்புக்கு அடையாளம் காட்டுகின்றன..!
முழுக்க முழுக்க கமர்ஷியலாக இல்லாமல் நகைச்சுவை தோரணங்களுடன் ஒரு நல்ல மெஸேஜை சொல்வதுதான் ஒய்.ஜி.மகேந்திராவின் அனைத்து நாடகங்களும் சொல்லும் கதை. இதிலும் அப்படியே..!பல திரைப்படங்களில் கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதியிருக்கும், மேடை நாடக கதாசிரியர் கோபுபாபுவின் கதை, திரைக்கதை, வசனத்திற்கு உயிர் கொடுத்து கணேசன் என்கிற அப்பாவி கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.

கணேசன். நிறைய அப்பாவி. மூளை வளர்ச்சி குறைவா என்பதால் ஒரு மாதிரியாக பேக்கு போன்று பேசுவார். மீனா என்கிற மனைவி வந்த பிறகும் தன் நிலையை அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில், வீட்டில், வெளியில் பல இடங்களிலும் தன்னுடைய அரைவேக்காடு புத்தியினால் பல கேலிகள், கிண்டல்களை தாங்கிக் கொண்டு அதெல்லாம் அவமானம் என்றுகூட புரியாமல் சிரித்தபடியே ஏற்றுக் கொள்பவர்.
பக்கத்து வீட்டுக்கு உதவுகிறேன் என்று சொல்லி தன்னை வருத்திக் கொள்கிறார். தெருவில் கன்னுக்குட்டி கஷ்டப்படுகிறதே என்று தன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். ஆபீஸில் பலருடைய வேலைகளையும் இளிச்சவாயத்தனமாக செய்து கேணயனாக இருக்கிறார். அவருடைய மிக நெருங்கிய நண்பனே ஷூரிட்டி கையெழுத்து வாங்கி ஒரு கடன் வழக்கில் சிக்க வைத்து போலீஸில் அடி உதை படுகிறார். உச்சக்கட்டமாக அவருடைய மனைவியை பற்றியே பலரும் தவறாகப் பேசுவதைக்கூட தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு..
மனைவியின் அன்பான, அனுசரணையான பேச்சாலும், கவனிப்பாலும் தனக்காக ஒரு ஜீவன் இருக்கிறதே என்கிற நினைப்பில் வாழ வேண்டும் என்ற நினைப்பில் இருப்பவருக்கு திடீரென்று தலையில் அடிபடுகிறது. இதன் பின்னர்தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றம்.
சூப்பர் பவர் கிடைக்கிறது. இதனை வைத்து தன் வாழ்க்கையை தானே திருத்திக் கொள்ளப் பார்க்கிறார். அந்த அறிவு அவருக்கு வந்தவுடன் தன்னை ஏளனம் செய்தவர்கள்.. பாதகம் செய்தவர்களையும் அவர் அதே பாணியில் சமாளிக்க நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தின் கதை.
‘படிக்காத மேதை’ சிவாஜி போன்று வலது கையை பாதியோடு மடக்கிக் கொண்டு கை முஷ்டியை ஆட்டிக் கொண்டும், அப்பாவி, பேக்குத்தன்மையா முகத்தில் காட்டியபடியே கணேசன் பேசுகின்ற அத்தனையும் அடேங்கப்பா சிரிப்பு ரகம்.
நண்பனை முழுமையாக நம்பி அவனால் போலீஸில் அடிபட்ட நிலையில் அதே நண்பனின் பரிகாசத்தை கேட்டு பதறுவதும்.. தன் மனைவியின் கேரக்டரை சிதைத்து பேசுவதை கேட்டு அதிர்ச்சியாகி தன்னால் மறுதலித்து பேச முடியாத நிலைமையில் ஒய்.ஜி.மகேந்திராவின நடிப்பெல்லாம் ஏ கிளாஸ்.. அப்படியே சட்டென்று கண்களை குளமாக்கியது.
சூப்பர் பவருக்கு பின்பு அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், தைரியமான பேச்சும் ‘தவறில்லையே.. பலே கணேசா’ என்று ஆடியன்ஸ் கை தட்டி பாராட்டும் அளவுக்கு கொண்டு செல்கிறது மகேந்திராவின் நடிப்பு.
கிளைமாக்ஸில் அந்த கடைசி 10 நிமிடங்கள் கலக்கிவிட்டார். தான் மட்டுமே தனித்து நிற்க ஆடியன்ஸை பார்த்து புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டு அலட்சியமாக பார்க்கும் பார்வையில், சினிமா ஹீரோக்களையெல்லாம் மறக்கடித்துவிட்டார்.
“எனக்காகவே.. என்ன நம்பி.. இந்த அப்பாவி கணேசன்தான் வேண்டும் என்கிற என் மீனாவுக்காகவே நான் திரும்பி இப்படியே இருக்கப் போறேன்..” என்கிற வசனந்தான் நாடகத்தின் உயிரான வசனம்.
கோபுபாபுவின் வசனங்கள் பலவும் நாடகத்திற்கு மிகப் பெரிய பலம். துணுக்குத் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டாலும் அத்தனையிலும் ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. திராவிடர் கழகத்தின் தாலி கழட்டும் வைபவம், சுப்ரமணியசாமியின் அரசியல், டிராபிக் ராமசாமியின் வழக்கு போராட்டம்.. என்று இன்றைக்கு தினசரிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் அத்தனை செய்திகளையும் தொகுத்து ஒரு கோனார் நோட்ஸ் உரையை வழங்கியிருக்கிறார் கோபுபாபு. அவருக்கும் எமது பாராட்டுக்கள். 
‘மீரா என் மாமியா மப்புல இருக்காளா?’ என்கிற ஒய்.ஜி.மகேந்திராவின் அப்பாவித்தனமான கேள்விக்கு அரங்கமே அதிர்ந்தது..“நான் போயிட்டா உங்களை யாருண்ணா பாத்துப்பா…?” என்கிற மனைவி மீராவின் வசனத்துக்கு மட்டுமல்ல.. யுவஸ்ரீயின் நடிப்புக்கும் சேர்த்தே கைதட்டல்கள் கிடைக்கின்றன. மிக நீண்ட நடிப்பு அனுபவம் கொண்டவர். சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலேயே அதிகம் நடித்தவர். அபாரமான மனன சக்தி, ஞாபக ஆற்றல், நடிப்பாற்றலில் மேடை நாடகத்திலும் ஜொலிக்கிறார்.
ஒரு காட்சியே வந்தாலும் சுப்புணி அரங்கத்தை அதிர வைக்கிறார். ‘சரியா போச்சு’ என்று திடீரென்று அவர் குதிக்கின்ற குதியில் தெரிகிறது மகேந்திராவின் சிறப்பான இயக்கம். எத்தனையோ நாடங்களை தொடர்ந்து இயக்கி வந்தாலும், ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஒரு சிறப்பான வித்தியாசமான இயக்கத்தை செய்துவிடுவது ஒய்.ஜி.மகேந்திராவின் வழக்கம். இதில் சுப்புணியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அந்த ‘சரியா போச்சு’ வசனமும் நச்.
மேலும் மாமியாராக நடித்திருக்கும் பிருந்தா, அப்பாவாக நடித்து ‘அன்னைக்கு நீ ஒரு கேள்வி கேட்டியே’ன்னு சொல்லியே சிரிக்க வைத்தவர்.. மற்றும் நண்பராக நடித்தவர்களெல்லாம் பாத்திரம் அறிந்து ஒரு குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.ஹாஸ்யம் இருக்கும் காட்சியில் அதற்கேற்ற இசை.. சோகம் இருக்கும் காட்சியில் அதற்கேற்றது.. இப்படி பலவற்றுக்கும் பலவித இசைகளை கோர்த்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம். பாராட்டுக்கள்.
மூளை வளர்ச்சி குன்றியவர்களை எங்கயாவது, எப்போதாவது பார்த்தாலும் அவர்களை கிண்டல் செய்துவிடாதீர்கள். அவர்களை மனதளவில் துன்புறுத்திவிடாதீர்கள் என்பதுதான் இந்த நாடகம் சொல்லும் மெஸேஜ்.
2 மணி நேரம்தான். கிட்டத்தட்ட ஒரு சினிமா பார்ப்பது போல.. ஆனால் சினிமா தியேட்டரில் கிடைக்க வாய்ப்பே இல்லாத கைதட்டல்களை அனாயசமாக வாங்கிச் செல்கிறார்கள் இந்த நாடகக் கலைஞர்கள்.  ஒட்டு மொத்த டீமுக்கும் நமது பாராட்டுக்கள்.
இந்த ‘சொப்பன வாழ்வில்’ நாடகம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27-ம் தேதியன்று தி.நகர் சர் பிட்டி தியாகராயர் ஹாலில் மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இரண்டு காட்சிகள் நடக்கவிருக்கிறது.
ஒரு தரமான நாடகப் படைப்பை பார்க்க விரும்புவர்கள், அவசியம் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும்.

அச்சாரம் - சினிமா விமர்சனம்

24-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ் சினிமா ஹீரோக்களில் எந்த லிஸ்ட்டிலும் இல்லாத கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடித்திருக்கும் படம். கதையை நம்பியே குறைந்த பட்ஜெட்டில் தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பும் பழைய காதலனுடன் சல்லாபிக்கும் பெண்.. கணவன் இருக்க மற்றொரு நபரோடு எஸ்கேப்பாகும் ஒரு மனைவி.. இப்படி எல்லை மீறும் பெண்களை படத்தின் துவக்கத்திலேயே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான  கணேஷ் வெங்கட்ராம்.
மேலும் பணியில் மிகவும் கண்டிப்பாகவும் இருப்பதால் கொடைக்கானலுக்கு தூக்கியடிக்கப்படுகிறார் கணேஷ். அங்கே அவர் சந்திக்கும் முதல் கேஸே ஹீரோயின் பூனம் கவுரின் வீட்டில் நடந்த கொள்ளை வழக்குதான். பூனம் கவுரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி.. பின்பு அவர் மீது மையல் கொண்டாடும் வில்லனை போலவே நடந்து கொள்கிறார் கணேஷ்.
இந்த விஷயம் பூனத்தின் கணவருக்குத் தெரிய வந்து அவர் மூலமாக இன்ஸ்பெக்டருக்கும் தெரிய வந்து எச்சரிக்கப்படுகிறார் கணேஷ். ஆனாலும் கணேஷ் பூனத்தின் மீது ஒரு கண்ணாக இருக்க.. இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற 2 பெண்களின் கொலை வழக்கில் கணேஷ் மீது சந்தேகம் வந்து மேலதிகாரிகள் விசாரிக்கத் துவங்க..
கணேஷின் பின்புலம் பிளாஷ்பேக்கில் விரிகிறது. இதுதான் படத்தின் மையக் கதை. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவரும் மகன் கணேஷை தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி ஏமாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அம்மா ரேகா.
தஞ்சாவூரில் இருக்கும் தனது தூரத்து சொந்தமான பூனம் கவுரை மகனுக்கு நிச்சயம் செய்கிறார் ரேகா. பொண்ணும், மாப்பிள்ளையும் நேருக்கு நேர் பார்க்கவில்லை. புகைப்படங்கள் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் பெண்ணை மாப்பிள்ளை பார்த்தாலும், மாப்பிள்ளையை பெண் பார்க்கவில்லை.
இந்த நேரத்தில் பூனமும் வேறொருவரை காதலித்து வருகிறார். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் கல்யாணத்திற்கு முதல் நாள் காதலர்கள் எஸ்கேப்பாகிறார்கள். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அம்மா ரேகா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள.. கணேஷுக்கு இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. சைக்கோ போல் ஆகிவிடுகிறார்.
கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை பார்த்தால் போட்டுத் தள்ளிவிட்டுப் போக வேண்டும் என்று துடிக்கிறார் கணேஷ். இந்த நேரத்தில்தான் தன் அம்மாவின் சாவுக்குக் காரணமான பூனம் கவுரே கையில் கிடைக்கும்போது சும்மா விடுவாரா..? அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படம்.
கணேஷ் வெங்கட்ராம் சிக்ஸ் பேக் வைக்காமலேயே எய்ட் பேக் வைத்ததுபோலவே இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன்  இருக்கிறார். ஆனால் காதல் காட்சிகளில் ரசிக்க முடியாத அளவுக்கு இயக்கம் இருப்பதால் இவரைக் குறை சொல்லி புண்ணியமில்லை. மேலும் இவரது உயரம் வேறு இடிக்கிறது. ஹீரோயின்கள் அண்ணாந்து பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதால் ம்ஹூம்.. ரொமான்ஸ் சீன்ஸே வேண்டாம்பா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் ஆக்சன் காட்சிகளில் சில இடங்களில் ஓவர் சப்தம் என்றாலும் போலீஸ் அடியை கொடுத்து பயமுறுத்துகிறார். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு நடனமாடியிருக்கிறார். 
ஹீரோயின் பூனம் கவுர் எட்டாத உயரத்தில் இருக்கும் ஹீரோவுக்கு ஜோடி. பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். இன்னமும் சிறந்த இயக்குநர் கிடைத்தால் தேற்றிவிடலாம். அப்பாவை கண்டு பயப்படும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கொட்டியிருந்தால் பார்ப்பவர்களுக்கு ‘அச்சச்சோ’ என்கிற பீலிங்காவது வந்திருக்கும். கெட்டது கதை என்றாகிவிட்டது படத்தின் அச்சாணியான அந்தக் காட்சி..!
மற்றொரு ஹீரோவாக வரும் சைமன் முதன்முதலாக பூனத்தை பார்த்தவுடன் பேசும் அலுவலக காட்சிகளை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சிககேற்ற வசனத்தை அதற்கேற்ற முகபாவனையுடன் நடித்து அசத்தலாக நடித்திருக்கிறார்கள் இருவரும்
ரேகாவின் அனுபவ நடிப்பை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார் இயக்குநர். கோவிலில் ‘எனக்கும் ஒரு பெண் இருக்கு’ என்று சொல்லும் சொந்தக்கார பெண்ணிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டு கிளம்பும் காட்சியில் அசத்தல் அம்மாவாகத் தெரிகிறார்.
ஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்க வைக்கிறது. தொடர்ந்து கேட்டால் பிடிக்கலாம். பின்னணி இசையிலும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். பிரதாப்பின் ஒளிப்பதிவில் ஹீரோயினின் அழகைவிடவும் கொடைக்கானலின் அழகு நன்கு தெரிகிறது.  கொடைக்கானல் காட்சிகள் பலவும் இரவு நேர காட்சிகளாகவே இருப்பதால் கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் அழகாக படமாக்கியிருக்கிறார். 
சில இடங்களில் இயக்கம் பளிச்சென்றும், பல இடங்களில் ஒளிந்து கொண்டும் இருப்பதால் படம் ஏற்ற இறக்கத்துடனேயே கடைசிவரையில் செல்கிறது.  ஒரு அழகான கிரைம் கதையை கையில் எடுத்துக் கொண்டு திரைக்கதையையும் சுவாரஸ்யமாகவே கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே கணேஷ்தான் கொலைகாரன் என்பது தெரிந்துவிட்டது. பின்பு பூனம் கவுர் யார் என்பதை சஸ்பென்ஸில் வைத்திருந்து லீக் செய்யும்போது அந்த ப்ளோ இல்லாததால் படத்தின் கனம் மனதில் ஏறவில்லை.
காதல் இங்கே தவறில்லை என்றாலும், பெற்றோரை  எதிர்த்து காதலர்கள் வீட்டை விட்டு ஓடுவதும் தவறில்லை என்றாலும், கல்யாணத்திற்கு முதல் நாள் வரையில் காத்திருந்து அதன் பின்னர் ஓடி, இதன் மூலம் இரு குடும்பத்தாருக்கும் சமூகத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர்கள் என்பதை அழுத்தம், திருத்தமாக ஒரு நல்ல மெஸேஜாக சொல்லியிருக்கிறார் இய்க்குநர்.
கதையாக படம் ஓகேதான். ஆனால் திரைக்கதையில் அழுத்தமான காட்சிகளாக இல்லாததாலும், பல லாஜிக் மீறல்களையும் கொண்டிருப்பதாலும், வேகவேகமான காட்சி நகர்த்தலால் மனதில் நிற்காமல் போகும் உணர்ச்சிகளாலும் படம் சாதாரண படமாகவே மாறிவிட்டது.
மொத்தத்தில் அச்சாரம் ‘ஹிட்’டுக்கு அச்சாரம் கொடுக்கவில்லை.

எலி - சினிமா விமர்சனம்

24-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாவம் அண்ணன் வடிவேலு. தான் என்ன செய்தாலும், என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் ரசிகர்கள் கைதட்டுவார்கள். சிரிப்பார்கள் என்று நினைத்துவிட்டார். ‘தெனாலிராமன்’ போலவே இந்த ‘எலி’யும் அவரை ஏமாற்றியிருக்கிறது. அவரும் தன்னையே இன்னொரு முறை ஏமாற்றிக் கொண்டுள்ளார் என்பது வருத்தமான செய்தி.

1960-ம் காலத்திய கதைக்களம். 1970-களில் ஜெய்சங்கர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்களின் கதை. நகைச்சுவை என்பது கிஞ்சித்தும் இன்றி வெற்று வசனங்களாலேயே தோரணம் கட்ட முயன்று தோல்வியடைந்திருக்கிறார் வடிவேலு.
1960-களில் தமிழகத்தில் சிகரெட்டுகளுக்கு தடை. அவைகளை வாங்குவதோ, விற்பதோ தடை செய்யப்பட்ட நிலையில் கள்ள மார்க்கெட்டில் சிகரெட்டின் விற்பனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க சென்னை போலீஸ் பெரும் பிரயத்தனம் செய்கிறது.
பிரதீப் ராவத்துதான் இந்த சிகரெட் கடத்தல் தொழிலின் மன்ன்ன். இவரை பொறி வைத்துப் பிடிக்க போலீஸ் திட்டமிடுகிறது. ஆனால் போலீஸுக்குள்ளேயே இருக்கும் கருப்பு ஆடான இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், சம்திங் பெற்றுக் கொண்டு பிரதீப்புக்கு தகவல்களை பாஸ் செய்வதால் ஒவ்வொரு முறையும் சிகரெட் கடத்தலை தடுக்கவே முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் நம்ம ஹீரோ எலிச்சாமி எண்ட்ரியாகிறார். நெஞ்சுக்கூட்டில் அரை இன்ச்சு அகலம் கூடுதலாக இல்லாததால்  போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் கோட்டைவிட்டவர். இதனால் கோபமாகி இப்போது திருடனாகிவிட்டார். கைத்தடிகள் இருவரை வைத்துக் கொண்டு நகைக்கடையில் போலீஸ் போல கொள்ளையடிக்கிறார். பூட்டிக் கிடக்கும் வீடு என்று நினைத்து முன்னாள் ஐ.ஜி. கிட்டியின் வீட்டையும் கொள்ளையடித்துவிட்டுச் செல்கிறார்.
கடத்தல் பார்ட்டிகளை பிடிக்க வேண்டுமானால் அந்தக் கூட்டத்தில் நமது ஆள் ஒருவரை உளவாளியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் போலீஸ் உயரதிகாரி. யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போது கிட்டியின் தயவால் எலிச்சாமியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
இன்னொரு திருட்டு அஸைண்மெண்ட்டில் இருந்த எலிச்சாமி கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டு போலீஸில் பிடிபடுகிறார். அவரிடம் பேரம் பேசி கடத்தல்காரர்களுடன் இணைந்து தங்களுக்கு உளவு பார்த்து சொல்லி அவர்களைப் பிடித்துக் கொடுத்தால் போலீஸ் வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்படுகிறது. இந்த எலி போலீஸ் வேலை என்கிற வடைக்கு ஆசைப்பட்டு இதற்கு ஒத்துக் கொண்டு திருட்டுக் கூட்டத்துக்குள் நுழைகிறது. அடுத்து என்ன நடந்தது என்பதுதான் மிச்சமான படத்தின் கதை.
அரதப்பழசான கதை. பீரியட் படம் என்றாலே அந்த நிகழ்வுகளின் பின்னணி இடங்களுக்கு நிறைய மெனக்கெட வேண்டும். அது எப்படி சாத்தியம்..? இதெல்லாம் தேவைதானா..? இப்போதைய காலக்கட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கே..? இயக்குநர் எப்படி இதனை தேர்வு செய்தார் என்றே தெரியவில்லை.
கலை இயக்குநர் தோட்டா தரணி மிக கஷ்டப்பட்டு பல இடங்களில் பெயிண்ட் அடித்து சுத்தம் செய்து புதிய இடங்களை பழைய இடம் போல காட்ட பிரயத்தனப்பட்டிருக்கிறார். இத்தனை செய்தும் அது செயற்கை என்பது தெளிவாகவே தெரிகிறது. மனதில் ஒட்டலையே..? வில்லனின் இருப்பிட செட்டுக்காக கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.
வடிவேலு வழக்கம்போல பக்கம், பக்கமாக வசனம் பேசியிருக்கிறார். உடல் சேஷ்டைகளை காட்டியிருக்கிறார். சின்னப் புள்ளைகளை கவர்வதற்காக அவர்களுக்குப் பிடித்தமான வசனங்களும், சேட்டைகளும் இருக்கின்றன. ஆனாலும் என்ன ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரலியே..?
‘வேணாம்.. அழுதிருவேன்’ என்கிற ஒரு வரியில் வந்த சிரிப்பை இத்தனை பக்க வசனங்களால் கொண்டு வரவே முடியவில்லை என்பதை வடிவேலு இந்தப் படத்தில் இருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இடைவேளைக்கு பின்பு தலையைக் காட்டும் ஒரு ஹீரோயினாக சதா. இரண்டு பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். சில வசனங்களை பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.. வடிவேலு படத்தில் இது கிடைத்ததே பெரிய விஷயம்தான்..!
வில்லன் பிரதீப் ராவத், கிட்டி, கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரி அஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று அவரவர் கேரக்டரில் சொல்லிக் கொடுத்த வசனங்களை பேசிவிட்டு போயிருக்கிறார்கள். ம்ஹூம்.. யாராவது ஒருவராவது சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று கடைசிவரையிலும் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். வங்கிக் கொள்ளை, நகைக் கொள்ளையில் எத்தனையோ சிரிப்புகளை பூக்க வைத்திருக்கலாம். இயக்குநரின் இயக்கம் அதைச் செய்யாததால் வீணாகிவிட்டது.
‘கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கு’ பாடலும், ஹிந்தி பாடலும்தான் படத்தில் கிடைத்த இரண்டு ரிலீப் டைம். பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவில் குறைவில்லை என்றாலும் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. பின்னணி இசை என்று சொல்லி காதுக்குள் கம்பியைவிட்டுக் குத்துவதை போல இசையமைத்திருப்பது ஏனோ..?
தன்னை திரையில் பார்த்து எத்தனை நாட்களாயிருச்சு என்று சொல்லி தியேட்டருக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் போவதை, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வடிவேலு அண்ணன் பார்த்துக் கொண்டிருப்பார் என்று தெரியவில்லை.
சிறந்த கதை, சிறந்த இயக்குநர் என்று அமைப்பியல் இருந்ததால்தான் அவருடைய பல காமெடிகள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அடுத்து இது போன்ற கொடுமையான முயற்சிகளைக் கையாளாமல் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலேயே ஹீரோக்களுக்கு இணையாக புதிய கதைக்களத்தில் புதிய இயக்கத்தில் வடிவேலு அண்ணன் வலம் வந்தால் அவருடைய பழைய டிரேட் மார்க் சிரிப்பலையை தியேட்டரில் காணலாம்..!
இனி எல்லாம் அவர் கையில்..!

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

14-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹீரோக்களுக்கு துணை நின்றே பழகிப் போன காமெடியன்கள் தங்களுக்கென்றே சில கதாபாத்திரங்களும், கதைகளும் இருக்கின்ற என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கென்று உள்ளதை ஹீரோக்கள் செய்ய முடியாது என்பதையும் அவர்கள் நினைப்பதில்லை.
இப்படியொரு எண்ணத்தில் எத்தனை நாட்கள்தான் ஹீரோக்களை முதுகில் தூக்கிச் சுமப்பது.. நாமே ஹீரோவாகிவிடலாமே என்கிற துணிச்சலில் சந்தானம் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி அவரை கைத்தூக்கிவிட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
வழக்கமான காதல் கதைதான். ஆனால் சந்தானத்தின் பாணியில் சொன்னதோடு, கிளைமாக்ஸில் அவர் கொடுத்திருக்கும் செய்திதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது எனலாம்.

வீட்டில் வெட்டி ஆபீஸராக இருக்கும் சீனு என்கிற சீனிவாசனுக்கு இன்னும் 3 மாதங்களுக்குள் திருமணம் செய்துவைக்காவிடில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் கழுத்தில் மாலையேற வாய்ப்பே இல்லை என்று கொஞ்சம் காஸ்ட்லியான ஜோஸியர் ஒருவர் சொல்லிவிட.. ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய அவருடைய தாயார் அடுத்த 3 மாதங்களுக்குள் சீனு என்கிற சந்தானத்திற்கு திருமணம் செய்து வைத்துவிட தீர்மானிக்கிறார்.
தனது வயதையொத்த நட்புகளின் மூளைச் சலவையினால் காதலித்துத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிற குறிக்கோளில் இருக்கும் சீனு இதனால் அவஸ்தைப்படுகிறார். பெண் பார்க்கப் போகும் இடத்திலெல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்டு அடி வாங்காமல் தப்பி வந்துவிடுகிறார்.
ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் வர வேண்டும். அவள்தான் பெண்டாட்டி என்று உடனே மனது சொல்ல வேண்டும். அதுதான் காதல் என்கிறார் சந்தானம். ஷாவேரியை ஒரு கணத்தில் பார்த்தவுடன் அந்தக் காதல் சந்தானத்திற்குள்ளும் வருகிறது. ஆனால் ஷாவேரிக்கு வர வேண்டுமே..? காதலிக்க வைக்க படாதபாடு படுகிறார். பலனில்லை.
இந்த நேரத்தில் கிராமத்தில் இருந்து வரும் தாய்மாமா தம்பி ராமையா சந்தானத்தின் கல்யாணம் முடிந்தால்தான் தனது பூர்வீகச் சொத்து தனது கைக்கு வரும் என்பதால் எப்படியாவது சந்தானத்தின் கல்யாணத்தை முடித்து வைக்க அரும்பாடுபடுகிறார்.
ஒரு முறை பெண் பார்க்க கோவிலுக்கு சந்தானத்தை ஏமாற்றி அழைத்துச் செல்கிறார் தம்பி ராமையா. பெண்ணை பிடித்துவிட்டதாக சொல்லி ஒரு டிராமா போட்டுவிட்டு பின்பு மீண்டும் நிச்சயத்தார்த்த்த்தையும் பிக்ஸ் செய்ய வைக்கிறார் தம்பி ராமையா.
இந்த நேரத்தில்தான் அதுவரையில் வராத காவிரி தண்ணி மாதிரியிருந்த காதல் வந்துவிட்ட தெலுங்கு கங்கை தண்ணீர் மாதிரி ஓகேயாக.. இங்கே நிச்சயத்தார்த்தமும் முடிந்துவிடுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு டிரெயினை ஓட்ட முடியாதே என்று சந்தானம் தவிக்க.. கல்யாணம்வரைக்கும் சமாளி. அதுக்குள்ள ஏதாவது செஞ்சு வீட்டாரை சமாளிச்சுக்குவோம் என்று தம்பி ராமையா கோக்குமாக்காக ஐடியா கொடுக்க அதனால் காதல் விஷயத்தை வெளியில் சொல்லாமல் காலம் கடத்துகிறார் சந்தானம். இறுதியில் என்ன ஆனது..? யார் கரம் பற்றினார் சந்தானம் என்பதுதான் மீதமிருக்கும் கதை..!
தன்னுடைய பாணியிலேயே திரைக்கதையை எழுதி, கடைசிவரையிலும் தொய்வு இல்லாமல் கொண்டு போய் கலகலப்பாக்கியிருக்கிறார் சந்தானம். இதற்கு அவருக்கு பெரிதும் கை கொடுத்திருப்பது அவருடைய லொள்ளு சபா டீம்தான். வசனம் எழுதி உதவியிருக்கும் மாறன் அண்ட் கோவிற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
முதல் பாதியைவிடவும் பிற்பாதிதான் ஜிவ்வென்று பறக்கிறது. காமெடியும் அதிகம். எப்படித்தான் முடிக்கப் போகிறார்களோ என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு அதனை கொஞ்சம் இறங்கிவிடாமல் பார்த்துக் கொண்டு கிளைமாக்ஸில் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். அதுதான் படத்தினை வெகுவாக தூக்கிவிட்டிருக்கிறது.
ஆசைப்பட்டது கிடைக்காமல் போனாலும், தானாக வந்த்தை கைவிட்டிராதே என்பதை இந்த பாழாய்ப் போன காதல் விவகாரத்திலும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் சந்தானம். எந்த விமர்சனத்திலும் கிளைமாக்ஸை உடைக்க முடியாதபடிக்கு வைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் கதையாசிரியருக்கு கிடைத்திருக்கும் வெற்றி..!
படத்தில் அதிக கைதட்டல்கள் கிடைத்த இடங்கள் பெப்சி விஜயன் சந்தானத்தின் கையைக் குலுக்கும்போதும், தம்பி ராமையாவின் வேஷ்டியை ரஞ்சனி இழுக்க முயலும்போதுதான்.. மற்றபடி அவருடைய டிரேட் மார்க் பன்ச் டயலாக்குகளை கேட்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஆடியன்ஸின் கைதட்டல் பறக்கிறது. என்ன மாதிரியான பார்வைன்னே தெரியலையே..?
சந்தானம் ஹீரோத்தன பார்வையுடன், நடனமும் ஆடி அசத்தியிருக்கிறார். தனது பேவரிட் வசன உச்சரிப்பில்கூட இந்தப் படத்தில் கொஞ்சம் சிரத்தையெடுத்து குறைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. தனி மனித்த் தாக்குதலான வசனங்களை தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்த்து.. இதுபோலவே கடைசிவரையிலும் தொடர்ந்தால் நல்லதுதான்..!
காமெடியனுக்கு வேறென்ன வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறார் சந்தானம். கோப்ப்படுகிறார். ஆத்திரப்படுகிறார். அழவில்லை. ஆனால் பேச முடியாத தோரணையில் பேசி யோசிக்க வைக்கிறார். கிளைமாக்ஸில் அவருடைய மென்மையான அந்தப் பேச்சும், ஆக்சனும்தான் இருக்கிறதை வைச்சு நல்லா வாழுடா என்று ஆடியன்ஸை சொல்ல வைத்திருக்கிறது..! தன் தவறை உணர்ந்த நிலையில் அவருடைய அமைதியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இனிமே இப்படித்தான் என்று சொல்வது மூலமாக தனியொரு ஹீரோவாக தானும் களத்தில் குதித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் வெற்றி இதனை தொடர வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஹீரோயின்களில் ஷாவேரியின் முகவெட்டு ஒரு சில காட்சிகளில் அழகாகவும், பல காட்சிகளில் சின்னப்புள்ளத்தனமாகவும் காட்சியளிக்க இவர் அப்படியொன்றும் அழகில்லையே.. பின்பு எப்படி சந்தானம் மயங்குகிறார் என்று கேட்க வைக்கிறது. நடிப்பென்று பார்த்தால் தன் கையைத் தானே வெட்டிக் கொண்டு காலைல ரிஜிஸ்தர் ஆபீஸுக்கு வா என்று சொல்லி அனுப்பி வைக்கும் காட்சியில் மட்டுமே நடிக்கும் ஸ்கோப் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
இதேபோல அகிலா கிஷோருக்கும் தன்னைத் தேடி வரும் சந்தானத்தைத் திட்டி திருப்பியனுப்பும் காட்சியில் மட்டும்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஷாவேரியைவிடவும் அகிலா அழகில் ஓகேதான்..!
சில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார் பெப்சி விஜயன். நடு ஹாலில் அவர் ஆடும் ஆட்டமே சிரிக்க வைத்திருக்கிறது.. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் திரைக்கதைக்கு வெகுவாக உதவியிருக்கிறது.
தம்பி ராமையாவின் நடிப்பு மற்ற படங்களிலிருந்து வேறுபடவில்லை. அதேபோலத்தான். கடைசியாக அப்போ பொண்ணு யாரு என்ற சந்தானத்தின் கேள்விக்கு நம்ம பொண்ணுதான் என்று தலையாட்டும் அந்த தம்பி ராமையாவும் ஈர்க்கத்தான் வைத்திருக்கிறார்.
அப்பாவான ஆடுகளம் நரேன், அம்மாவான பிரகதி, அகிலாவின் அம்மாவான ஸ்ரீரஞ்சனி, விடிவி கணேஷ், ஹீரோயினின் மூன்று நண்பிகள் என்று பலரும் அவரவர் கேரக்டர்களில் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். அதிலும் விடிவி கணேஷ் அளிக்கும் ஐடியாக்களும், அவருடைய மனைவியுடன் அவரைச் சம்பந்தப்படுத்தி பேசும் வசனங்களும் படு சுவாரஸ்யம்.
சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் பரவாயில்லை ரகம். கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதம் சந்தானத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் எடுத்திருப்பதை உணர்த்துகிறது.
காதல் தேவைதான். ஆனால் இப்படி விரட்டி, விரட்டி காதல் செய்வது தேவைதானா.. என்பதையும், நாம் ஆசைப்பட்டது கிடைக்கலைன்னாகூட பரவாயில்லை.. நம்ம மேல ஆசைப்படறதை விட்டுறக் கூடாது என்பதையும் காதலர்களுக்கு உணர்த்தும்வகையில் பாஸிட்டிவ்வாக முடித்திருப்பதுதான் ரசிகர்களை திருப்தியோடு திரையரங்கைவிட்டு வெளியேற வைத்திருக்கிறது.
தனது முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கும் சந்தானத்திற்கு ராஜபாட்டை காத்திருக்கிறது. ஓடும் ரேஸ் குதிரைகளில் அவரும் ஒருவராக தன்னை இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். தக்க வைத்துக் கொள்வதும் அவருடைய கைகளில்தான் இருக்கிறது..!
முழு பொழுது போக்கிற்கு உத்தரவாதம்..!

காக்கா முட்டை - சினிமா விமர்சனம்

14-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் பார்த்த எந்தவொரு திரைப்படத்திற்கும் தியேட்டரில் இந்த அளவுக்கு கைதட்டல்களும், விசில்களும், சந்தோஷக் கூச்சல்களையும் பார்த்ததில்லை..!

சாமான்ய மக்களின் கதையை இயல்பான திரைக்கதையில் அதைவிட இயல்பான நடிப்பில்.. சிறப்பான இயக்கத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.
எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் வேற்று மொழி பேசும் நாட்டில் அந்தப் படமும் பேசப்படுகிறது. பார்க்கப்படுகிறது என்றால் அது நிச்சயம் உலக சினிமாதான். அதன் போக்கில் பார்த்தால் இந்தப் படமும் நிச்சயமாக உலக சினிமாதான் சந்தேகமேயில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பிய தேசம்வரையிலும் எந்த ஊர் சினிமா திரையரங்கில் இதனை திரையிட்டாலும் மக்கள் கூட்டம் நிச்சயமாக ரசிப்பார்கள். இது சாதாரண மனிதர்கள் பற்றிய இயல்பான கதை..! இட்டுக் கட்டி செயற்கையாக எழுதப்பட்டவை அல்ல..
நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய பிராயத்தில் ஒரு கனவு இருக்கும். நம் குடும்பச் சூழலுக்கு மேற்பட்ட ஒன்றை அடைவது என்பதுதான் அந்தக் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்போதெல்லாம் என் வீட்டில் இட்லி, தோசையெல்லாம் கிடையாது. அரிசி சோறுதான். எப்போதாவது.. வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது மட்டும்.. அல்லது தீபாவளி, பொங்கல் தினத்தன்று மட்டும்தான் இட்லி, தோசை.. இந்த இட்லி, தோசையை சாப்பிடுவதற்காகவே பண்டிகை தினங்கள் தினம்தோறும் வராதா..? விருந்தினர்கள் தினமும் வந்து தலையைக் காட்ட மாட்டார்களா என்றெல்லாம் நினைத்ததுண்டு..
இது போன்றே  பீட்சா உணவை ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஏக்கத்தில் தவித்து அதற்காக போராடுகிறார்கள் அண்ணன் தம்பியான சிறுவர்கள் இரண்டு பேர்.  அது அவர்களுக்குச் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
இதற்காக இயக்குநர் செய்திருக்கும் திரைக்கதையும், கேரக்டர் ஸ்கெட்ச்சும், படமாக்கலும், சுற்றுச்சூழலும், கதைக்களன் உட்பட அத்தனையும் தத்ரூபமாக கதையுடன் ஒன்றிப் போவதால் இந்த ஒரு படத்தில்தான் செல்போனை நோண்டாமல் கடைசிவரையில் திரையில் இருந்து கண்ணை அகற்றாமல் பார்த்துத் தீர்க்கிறது சினிமா ரசிகர்களின் பார்வை.
‘பெரிய காக்கா முட்டை’.. ‘சின்ன காக்கா முட்டை’ என்கிற அடைமொழியோடு அழைக்கப்படும் அரைக்கால் டிரவுசர் அணிந்த பையன்கள்தான் படத்தின் ஹீரோக்கள்.
சைதாப்பேட்டை பாலத்தின் கீழே இருக்கும் தாடண்டர் நகர் போன்ற பெரிய குடிசைப்புறத்தில் சின்ன வீடு இவர்களுடையது. அப்பா ஜெயிலில்.. ஜாமீனில் எடுக்க காசில்லை. இவர்களை பள்ளிக்கு அனுப்பவும் காசில்லாமல் வேலைக்கு அனுப்புகிறாள் அம்மா. அவளும் வேலைக்குப் போகிறாள். பையன்கள் சரக்கு ரயில்கள் செல்லும் டிராக்கில் கீழே விழுகும் கரித்துண்டுகளை பொறுக்கி வந்து எடைக்கு போட்டு காசு சம்பாதிக்கிறார்கள். வீட்டில் ஒரு வயதான ஆயா. இவர்களைப் போலவே குட்டியான ஒரு நாயும் உண்டு.
கோழி முட்டை சாப்பிட கொடுத்து வைக்காததால் ஆயா சொன்னதுபோல காக்கா முட்டையைத் திருடி சாப்பிட்டு பழகியிருக்கிறார்கள். இதனால்தான் இவர்களுக்கு இந்த செல்லப் பெயர். தாய் காக்காக்களுக்கு சோறு வைத்து அவைகளை அந்தப் பக்கமாக திசை திருப்பி இவர்கள் மரத்தின் மீதேறி ஒரேயொரு முட்டையை மட்டும் பெரிய மனதுடன் வைத்துவிட்டு இரண்டு முட்டைகளை ஆட்டையைப் போட்டு குடிக்கும் அப்பாவிகள்..!
பெரிய மரத்துடன் கிரிக்கெட் விளையாடும் வசதியுடன் கூடிய இந்த இடம் ஒரு நாள் பூட்டப்படுகிறது. காக்கைகள் கூடு கட்டி குடியிருந்த அந்த மரம் வீழ்த்தப்பட்டு மண் தோண்டப்பட்டு பில்டிங் கட்டப்படுகிறது. புதிதாக நவநாகரிகத்துடன் ஒரு கட்டிடம் எழும்பியிருக்கிறது. அது பீட்சா கடை.
கடையைத் திறந்து வைக்க சிம்பு வருகிறார். பையன்கள் பார்க்கிறார்கள். கவனத்தை ஈர்க்கிறது பீட்சா. அதை சாப்பிட்டு பார்க்க துடிக்கிறார்கள். விலை 300 என்றவுடன் திகைக்கிறார்கள். எப்படியாவது அவ்வளவு பணத்தை சம்பாதித்து பீட்சாவை சாப்பிட முடிவெடுத்து பணத்துக்காக கடுமையாக உழைக்கிறார்கள்.
அந்தச் சின்ன வயதில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து 300 ரூபாயைத் சம்பாதித்துக் கொண்டு பீட்சா கடைக்குள் நுழைகிறார்கள். அவர்களுடைய சேரிவாழ் முகமும், அழுக்கு உடையும் அந்தக் கடைக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது. வாட்ச்மேன் உள்ளேவிடாமல் அடித்துத் துரத்த நல்ல உடையுடன் போனால்தான் உள்ளே விடுவார்களோ என்று எண்ணுகிறார்கள்.
இதற்காக இன்னொரு சுற்று சம்பாதிக்கிறார்கள். எப்போதும் கம்பி வலைக்கு பின்னால் மட்டுமே சந்திக்க முடியும் பிளாட் வீட்டு பையனின் உதவியோடு புத்தாடை கிடைத்து பீட்சா கடைக்கு பெருமிதத்தோடு தன்னுடைய எதிரி நண்பர்களையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது அவர்களுக்கு அடிதான் கிடைக்கிறது. உடையும் இப்போது தகுதியில்லையா..? பின்பு எதுதான் தகுதி என்பது அந்தச் சிறுவர்களின் புத்திக்கு உரைக்கவில்லை.
திரும்பி வந்தவர்களின் கையில் இருந்த பணம் அவர்களது ஆயாவின் இறுதிக் காரியத்திற்கு உதவுகிறது. ஆனால் இவர்கள் அடி வாங்கியது இன்னொருவனின் செல்போனில் பதிவாகியிருக்க அது வேறொரு ரூபத்தில் மீடியாக்களில் வெளியாகிறது.
எப்பாடுபட்டாவது உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் கட்சியின் அடியாட்களும், இவர்களை வைத்து தாங்கள் வாழ நினைக்கும் அரசியல்வியாதிகளும்.. எந்தப் பிரச்சினையானாலும் லஞ்சம் வாங்கியே பிழைப்பை நடத்தும் போலீஸ்காரர்களும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை மண்ணோடு மண்ணாக்கினாலும் கடைசியில் கடைக்காரரின் சமாதானத் திட்டத்தினால் இவர்களால் பீட்சாவை சுவைக்க முடிகிறது.
ஆனால் இறுதியில் படம் சொல்லும் நீதியை உணர்ந்தால் மனம் திக்கென்றாகிறது.
சேரியில் வாழும் மனிதர்களும், அழுக்கு ஆடை மனிதர்களும் கையில் பணம் வைத்திருந்தாலும் உலாவக் கூடிய இடம் அதுவல்ல என்று சொல்வதுகூட ஒருவித இனி வெறி, நிற வெறிதான் என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதனைப் புரிந்து கொண்டதால்தான் பல திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பாராட்டையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
புதுமுக நடிகைகள் பலரும் செய்யத் துணியாத ஒரு விஷயம். இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடிக்க எந்த ஹீரோயினும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். துணிந்து ஒத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சபாஷ்.
சேரிப் பெண் வேடம். மெல்லிய சேலை.. மேக்கப் இல்லாத முகம்.. அழுது ஊரைக் கூட்ட வேண்டியிருக்காத கேரக்டர் ஸ்கெட்ச். மகன்களின் நடிப்பைப் பார்த்து கொஞ்சுவதிலிருந்து “ஆயாகூட சும்மாதான இருக்கு..?” என்று பெரிய முட்டை கேட்டவுடன் கோபத்துடன் “என்ன பேச்சு பேசுறான் பாரு…” என்று பொருமுவதிலும் ஒரு தாயின் நிஜ நடிப்பை அப்படியே காட்டியிருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஏதோவொரு கவுரவத்தை தனக்குத்தானே சுமந்து கொண்டிருப்பதையும் அதனை கடைசியில் கிளைமாக்ஸில் போலீஸ் ஜீப்பில் வரும்போது ஒத்துக் கொண்டு கண்ணீர் விடுவதெல்லாம் கிளாஸ் நடிப்பு..! வெல்டன் மேடம்..!
சின்னப் பையன்களில் இருவருமே அசத்தியிருக்கிறார்கள். புதுமுக நடிகர்கள் என்றில்லை. சின்னஞ்சிறியவர்களை எப்படி இப்படி அசலுக்கு மிக அருகில் வரும்படியாக நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களுடைய ஆச்சரியம்.. பயம்.. கோபம்.. வெட்கம்.. தப்பிப் போக நினைப்பது.. அம்மாவிடம் காட்டும் பாசம்.. ஆயாவிடம் காட்டும் நெருக்கம்.. என்று அனைத்தையும் மிக இயல்பாக நடிக்க வைத்து காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
முதல் ஷாட்டில் பையனின் டிரவுசரில் இருந்து உச்சா வெளிவரும் காட்சியை நிச்சயமாக தமிழகத்து மக்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கேமிராவின் கோணமும், இதைத் தொடர்ந்து அந்தப் பையன் அடுத்தடுத்து செய்யும் செயல்களும் ருசிகரமானவை. வாவ் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு சின்னப் பையன்களின் சின்னச் சின்ன ரியாக்சன்களும், நடிப்பும் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது.
பீட்சா ஆள் வழி தவறி தெருவில் நிற்கும்போது ஒரேயொரு தடவை பீட்சாவை திறந்து காட்டால் வழியைச் சொல்வதாக பிளாக்மெயில் செய்து அந்த பீட்சாவை மிக அருகில் பார்த்து வாசனையை முகர்ந்து ஏக்கத்துடன் பார்க்கும் அந்தக் காட்சி ரம்மியமானது. ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்தது இந்தக் காட்சியாகத்தான் இருக்க முடியும்.
படத்தில் அதிகமாக கைதட்டல் வாங்கிய காட்சி பீட்சாவை தான் வீட்டிலேயே செய்து தருவதாக ஆயா சொல்லிவிட்டு அதைத் தயார் செய்வதுதான். “அதுல நூல் நூலா வரும்..” என்று பெரிய முட்டை சொன்னதற்கு “அது கெட்டுப் போனாத்தாண்டா வரும்…” என்று ஆயா சொல்லும் காட்சியில் கரகோஷம் தியேட்டரை அதிர வைத்தது. மிக இயல்பான வசனங்களை பேசும்வித்த்தில் நமக்குள்ளேயே பேச வைத்துவிட்டார் இயக்குநர்.
ரயில்வே டிராக்மேன் பழரசமாக வரும் ஜோமல்லூரியின் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு மேலும் ஒரு கவனஈர்ப்பை கொடுத்திருக்கிறது. அவர் நினைத்திருந்தால் வெறும் 300 ரூபாய்தானே என்று அவரே கடைக்குச் சென்று பீட்சாவை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மாறாக பையன்கள் சம்பாதிக்க வேண்டி கரி குடோனையே அவர்களது கண்ணில் காட்டுகிறார். பையன்களின் அந்த உழைப்பையும், வேட்கையையும் பார்த்து பார்த்து புன்னகைக்கிறார் பழரசம். அந்தக் கேரக்டரில் இருப்பது தியேட்டர் ரசிகர்களில் ஒருவன் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபு ஆண்டனி தமிழில் வந்திருக்கிறார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை சமாளித்து லஞ்சம் கொடுத்து இடத்தைப் பிடித்து பீட்சா கடையைத் துவக்குவது முதல், கிளைமாக்ஸில் பிரச்சினை அவரது உடன் வரும் கல்லூரி கால நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் அவரசக்குடுக்கை பேச்சினால் நொந்துபோகும் அளவுக்கு இருந்தும் அப்போதும் கோப்ப்படாமல் பிரச்சினையைத் தீர்க்க முயல்வதுகூட சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்.
கிளைமாக்ஸ் நிச்சயமாக யாராலும் யூகிக்க முடியாத்து. அரசியல் படமோ என்று நினைத்து போகும்போது அதனை மனிதர்கள் தாங்களே முடித்துக் கொள்ள முயல்கிறார்கள் என்று சொல்லியிருப்பதுகூட பாஸிட்டிவ்வான விஷயம்தான்..
அரசியல் அடியாட்களாக வரும் அந்த இரண்டு பேரும் இன்றைய நிகழ்கால அரசியலின் உதாரணங்கள்தான். இவர்களைப் போன்ற பல தொண்டர்களால்தான் இந்த எம்.எல்.ஏ.வை போன்ற புத்தியுள்ளவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்களோ..? ஆனால் தியேட்டரில் ரசிகர்கள் இவர்களுக்குக் கொடுக்கும் கை தட்டலை பார்த்தால் நிச்சயம் ஏரியாவுக்கு இரண்டு பேர் இப்படியிருப்பார்கள் என்பது நிச்சயம்.
கண்ணனின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு மேலும் ஒரு பலம். அந்த சின்னஞ்சிறிய இடத்தில் எப்படி ஷூட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் அவ்வப்போது ஏரியல் வியூ ஷாட்டில் அந்தப் பகுதியைக் காட்டும்போது இதுவரையிலும் சென்னையில் இப்படியொரு ஏரியா இருக்கிறது என்பதையே தெரியாதவர்களுக்கு நிச்சயம் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
பாடல் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால் அதுவும் தேவையாகத்தான் இருக்கிறது. படத்தின் இயக்குநர் எம்.மணிகண்டன் ஏற்கெனவே பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். கார்த்திக் சுப்புராஜிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவருடைய திறமையை உணர்ந்த இந்தப் படத்தை உருவாக்க துணிந்த இயக்குநர் வெற்றிமாறனுக்கும், நடிகர் தனுஷுக்கும் நமது நன்றிகள்.
படத்தில் சிறப்பாக நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் நமது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
இந்தாண்டு இதுவரையில் வந்த படங்களிலேயே மிகச் சிறப்பான படம் இதுதான் என்று நிச்சயமாக உறுதியாகச் சொல்லலாம். உலக சினிமாவை படைக்க வெளிநாட்டு படைப்புகளைத்தான் பார்க்க வேண்டும். காப்பி செய்ய வேண்டும் என்பதில்லை. நம்மிடையே உள்ள கதைகளையே எடுக்கலாம். ஆனால் இயக்கம்தான் சிறப்பாக வேண்டும். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்..
காக்கா முட்டை நிச்சயம் பொன் முட்டைதான். அவசியம் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படம்..!

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் - சினிமா விமர்சனம்

05-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பார்க்காமலே காதல்.. பார்த்தும் பேசாமலே காதல்.. பிடிக்காமலேயே காதல்.. நெருங்காமலேயே காதல்.. கட்டிப் பிடிக்காமலேயே காதல்.. என்கிற வரிசையில் 1990-களில் வந்திருக்க வேண்டிய திரைப்படம். சற்று அல்ல மிக நீண்ட வருட தாமதமாக இப்போது வந்திருக்கிறது.

நாயகன் கிரீஷ் தென்காசியைச் சேர்ந்தவர். மதுரையில் வேலை செய்கிறார். வேலைக்கு வந்த இடத்தில் ஒரு காதல். நாயகி சிருஷ்டி டாங்கேவை பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. பார்க்கிறார். பார்க்கிறார்.. பார்த்துக் கொண்டேயிருக்கிறார். ஒரு நாள் அல்ல. ஒரு மாதம் அல்ல.. மூன்று வருடங்கள்.. ஆம்.. மூன்று வருடங்களாக வெறுமனே பார்த்தபடியே இருக்கிறார். இதுவரைக்கும் பேசவே இல்லையாம்..
வழக்கமாக கல்லூரிக்குப் போக சிருஷ்டி வரும் பேருந்தை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருக்கும் கிரிஷ்.. பார்வையாலேயே சிருஷ்டியை வரவேற்று பை சொல்லிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். சிருஷ்டிக்கும் இவர் மீது காதல்தான். ஆனால் யார் முதலில் அதனைச் சொல்வது என்று இருவருக்குள்ளும் தயக்கம்..
ஒரு நாள் வேறொரு நபர் சிருஷ்டியிடம் காதல் கடிதம் கொடுக்க.. அதை சிருஷ்டி வாங்கிக் கொண்டதை பார்த்தவுடன் சிருஷ்டி தனக்கில்லை என்று தவறாகப் புரிந்து கொண்ட கிரிஷ்.. தண்ணியை போட்டு அலம்பல் செய்து.. அடுத்த தேவதாஸாக உருமாறுகிறார்.
அதே சமயம் சிருஷ்டியின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட.. இந்த நேரத்திலும் விதி விளையாடி இருவரையும் சந்திக்க விடாமலேயே செய்து விடுகிறது. சிருஷ்டியின் மாமா கிரிஷின் நெருங்கிய நண்பராக இருந்தும்.. அவருக்கும் கிரிஷின் ஒருதலைக் காதல் தெரிந்தும், காதலி தன்னுடைய கொழுந்தியாள்தான் என்பது தெரியாமலேயே போகிறது. சிருஷ்டியின் வீட்டுக்குச் சென்ற கிரிஷ் வீட்டுக்குள்ளேயே பெட்ரூமுக்குள் இருக்கும் சிருஷ்டியை சந்திக்க முடியாதபடிக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.
சிருஷ்டிக்கு மாப்பிள்ளை ரெடியாக.. மனமுடைந்த நிலையில் கிரிஷ் தென்காசிக்கு பயணப்பட.. காதலர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
இந்தப் படத்தின் முதல் பாதியை வேறொரு இயக்கநரும், பிற்பாதியை இன்னொரு இயக்குநரும் இயக்கியிருக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது..!
அந்த அளவுக்கு முற்பாதியில் இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என்று அனைத்திலுமே அப்ரண்டிஷிப் ஸ்டைல் தெரிகிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில்தான் அதிசயமாக அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.
சினிமா ரசிகர்கள் இது போன்ற காதல் கதைகளையெல்லாம் பார்த்து, பார்த்து, கேட்டு கேட்டு சலித்துப் போயிருக்கும் இந்த நேரத்தில் எந்த தைரியத்தில் இப்படியொரு படத்தை எடுக்க துணிந்தார்கள் என்று தெரியவில்லை..!
ஹீரோ கிரிஷுக்கும் நடிப்புக்கும் வெகு தூரம் என்பது இதிலேயே தெரிகிறது. அவர் கோபித்துக் கொள்ளாமல் சிறந்த பாடகராக மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.. முதற்பாதியில் அரைகுறை ஒளிப்பதிவில்கூட கவனிக்க வைத்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. அந்தக் கன்னக்குழி அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் தனிச் சிறப்பு. இயக்கம் சிறப்பாக இருந்திருந்தால் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கும்.. இல்லாமல் போனதில் இவர் மீது தவறில்லை..!
சிருஷ்டியின் மாமாவாக நடித்தவர்.. அக்காவாக நடித்த ஜானகி.. கிரிஷின் அம்மாவாக நடித்த ரேகா சுரேஷ்.. தங்கையாக நடித்த அந்தக் குட்டிப் பெண் என்று இவர்களெல்லாம் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கச்சிதமாக முடித்திருக்க வேண்டிய கிளைமாக்ஸில் ஒரு கனவுக் காட்சியைத் திணித்து நம்ம மனதைக் குலைத்திருப்பது நியாயமா இயக்குநரே..?
தாங்கள் பேசுவது இரட்டை அர்த்த வசனங்கள் என்பது தெரியாமலேயே கல்லூரி மாணவிகளாக நடித்தவர்கள் அனைவருமே வசனங்களை பேசித் தொலைத்திருக்கிறார்கள். மாணவிகள் இந்தக் காலத்தில் இப்படி தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்த இரட்டை அர்த்த வசனங்கள் மூலமாக நமக்கு புரிய வைத்த இயக்குநர், இந்தக் கால காதலும் இப்படியில்லையே என்பதை புரிந்து திரைக்கதை எழுதியிருக்க வேண்டாமா..?
ரைஹானை சேகரின் இசையில் வாலி எழுதிய கடைசிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலும், கல்யாண மண்டபத்தில் பாடும் பாடலும் கேட்க இனிமை.. நடனமும் அழகு.. குடும்பத்தினர் அனைவரையும் பாட வைத்து ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இது போன்ற கதைகளுக்கு ஜீவனுள்ள நடிப்பும், காட்சிகளும், திரைக்கதையமைப்பும் தேவை. கிளைமாக்ஸில் இருக்கும் அந்த ஒரேயொரு டிவிஸ்ட்டுக்காக படம் ஓடிவிடும் என்று நினைப்பது மூடத்தனம். ‘காதலுக்கு மரியாதை’ படமும் இதேபோன்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டில்தான் ஜெயித்தது.. ஆனால் அந்தப் படத்தில்  ‘காதல்’ என்கிற ஜீவன் இருந்தது.. இதில்..?
இயக்குநருக்கு இது முதல் படம் என்பதால் விட்டுவிடலாம்.. அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்கி பாராட்டைப் பெற வாழ்த்துகிறோம்..!

மாசு என்கிற மாசிலாமணி - சினிமா விமர்சனம்

02-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



மாசில்லாத மாசிலாமணி என்கிற பெயருடன் இருக்கும் ஹீரோ பெயருக்கு நேர்மாறான செயல்களை செய்யும் ரவுடியாக வாழ்கிறார். போலீஸ் டிரெஸ்ஸை அணிந்து டாஸ்மாக்கை கொள்ளையடிப்பது.. கஸ்டமஸ் ஆபீஸர் போல் உடையணிந்து கடத்தல் பணத்தைக் கொள்ளையடிப்பது போன்ற மாசு வேலைகளை தனது உயிர் நண்பன் பிரேம்ஜியுடன் இணைந்து செய்து வருகிறார்.
கஸ்டம்ஸ் பிராஜெக்ட்டில் கொள்ளையடித்த பணத்தை பறி கொடுத்த ரெட்டி. சூர்யாவை தேடிப் பிடித்து பணத்தைக் கேட்க அங்கே நடக்கும் அடிதடிக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து காரில் தப்பியோடுகிறார்கள். வழியில் கார் விபத்துக்குள்ளாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைக்கிறார் சூர்யா.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் சூர்யாவிற்கு, ஆத்மா சாந்தியாகாமல் இன்னமும் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஆவிகள் கண்ணில் தெரிகின்றன. அவைகள் அனைத்தும் சூர்யாவை சுற்றி வளைத்து தங்களது ஆசையை நிறைவேற்றித் தரும்படி கேட்க.. அவைகளை வைத்து பேயோட்டும் பிஸினஸை துவக்குகிறார் சூர்யா. இதில் நன்றாக கல்லா கட்டவே இதனையே தொடர நினைக்கிறார்.
இந்த நேரத்தில்தான் திடீரென்று ஷக்தி என்னும் இன்னொரு சூர்யா பேயாக காட்சியளிக்கிறார். அவர் தனக்கொரு உதவி என்று சொல்லி நிஜ சூர்யாவை நெல்லைக்கு அழைத்துச் செல்ல அந்த வேலை கொலையில் முடிகிறது..!
அந்தக் கொலைக்கான காரணத்தை தேடியறியும் முயற்சியில் சூர்யா இறங்க.. அப்போதுதான் அவருக்கே அவரது பிறப்பு, குடும்பம் போன்றவைகள் தெரிய வர.. ஆன்ட்டி கிளைமாக்ஸாகிறது கிளைமாக்ஸ்.. இதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் கதையே..!
முந்தைய பேய் படங்களிலெல்லாம் பேய்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியைக் காட்டி அதனை வைத்துத்தான் தியேட்டரை அலற வைத்தார்கள். இதில் பேய்களுக்கு ஒரு குறிப்பிட்ட ரேஞ்ச்சுக்கு மட்டுமே சக்தியுண்டு எனவும், அதற்கு மேல் கிடையாது என்றும் சொல்லி மிச்சத்துக்கு சூர்யாவை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பேய்களுக்கு தொடும் உணர்ச்சி கிடையாது என்று சொல்லிவிட்டு மேசையில் இருக்கும் டம்ளர், தட்டுக்களை பறக்க விடுவதெல்லாம் எந்த வகையில் நியாயம் இயக்குநரே..?
படத்தின் முற்பாதியில் கதைக்களம் சற்று சோர்வடையச் செய்தாலும் பிற்பாதியில்தான் ‘மாஸ்’ தெறிக்கிறது. படத்தின் குறிப்பிட்ட மூன்று இடங்களில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை டிவிஸ்ட் ரசிக்க வைத்திருக்கிறது. பிரேம்ஜியின் அன்றைய நிலையை சூர்யா உணரும் கட்டம். ஷக்தி யார் என்பதை சூர்யா தெரிந்து கொள்ளும் காட்சி.. சூர்யாவுக்கு இருந்த மாஸ் சக்தி அவரை விட்டுப் போய்விட்டதை அறியும் காட்சி என்று கொஞ்சம் இடைவெளிவிட்டு விட்டு டிவிஸ்ட்டுகளை ஒழுங்குபடுத்தியிருப்பதால் படத்தினை பிற்பாதியில் பெரிதும் ரசிக்க முடிந்தது..!
இந்தப் படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தராது என்றாலும் இருக்கின்ற பெயரை குறைக்காதவகையில் இயக்கமும், நடிப்பும் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. பிரேம்ஜியின் நிலை பற்றி தெரிந்து புலம்புவதும்.. ஷக்தி யார் என்று தெரிந்து தன் நிலை உணர்ந்து அழுவதிலும்தான் கொஞ்சம் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நல்லாத்தான போயிக்கிட்டிருக்கு என்று சொல்லும் நிலையில் இந்தப் படத்தில் எதற்கு ஈழத் தமிழர் கேரக்டர் என்று தெரியவில்லை. ஈழத் தமிழரின் சொத்துக்களை அபகரிக்கும் உள்ளூர் தமிழனை எட்டி உதைத்து நியாயம் கேட்கிறார் ஈழத் தமிழன் ஷக்தி. அவர் பேசும் வசனத்திற்கும் அந்தக் காட்சிக்கும் ஒட்டவேயில்லையே..?
மற்றபடி நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்வது.. விரட்டிப் பிடிப்பது.. ரெட்டியுடன் நக்கலாகப் பேசியே தப்பிப்பது.. ஆவிகளை அதட்டலுடன் சமாளிப்பது.. அவைகளுக்கும் மனம் உண்டு என்பதை உணர்ந்து அவர்கள் ஒவ்வொருவரின் ஆசையையும் நிறைவேற்றி வைப்பது போன்றவைகளில் ஜமாய்த்திருக்கிறார் சூர்யா.
இந்தப் படத்திற்கு எதற்கு நயன்தாரா என்று தெரியவில்லை. அவர் படத்தில் பேசியிருக்கும் மொத்த வசனமும் அரை பக்க பேப்பரில் எழுதிவிடலாம். அவ்வளவுதான்.. ஆனால் திரைக்கதையில் மிக கச்சிதமாக அவரை உட்புகுத்தி கடைசிவரையிலும் இழுத்திருக்கிறார்கள்..! இவரைவிடவும் இவரது தோழியாக நடித்தவருக்குத்தான் நடிக்க ஸ்கோப் கிடைத்துள்ளது.
பிரேம்ஜி கொஞ்சம் அடக்கமாக பேசியிருக்கிறார். சிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் கலகலக்க வைக்கிறார். ஆனாலும் இன்னமும் அலட்டல் நடிப்பை கைவிடவில்லை. இதையும் கைவிட்டாரென்றால் நன்றாகவே இருக்கும்.
சமுத்திரக்கனி மீது வெங்கட்பிரபுவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. இதில் வசமாக ஒரு வில்லன் கேரக்டரை கொடுத்து அடி வாங்கியே சாகடித்துவிட்டார்கள். அதிலும் எம்.ஜி.ஆர். காலத்து வில்லனை போன்ற கெட்டப் வேறு..?!
இன்னுமொரு சுவாரய்மான கேரக்டர் பார்த்திபனுடையது. நல்லவரா.. கெட்டவரா.. வல்லவரா.. என்றெல்லாம் யோசிக்கவேக்கூட நேரமில்லாமல் டயலாக் மூலமாகவே சுவாரஸ்யத்தைக் கூட்டிக் கொண்டே போகிறார் பார்த்திபன். 
அவருடைய தனி ஸ்டைலில் 'எதையுமே புடுங்கலைன்னு சொல்லிடக் கூடாது பாரு..' என்று சொல்லிவிட்டுப் போகுமிடத்தில் தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது. பார்த்திபனின் பஞ்ச் அண்ட் டைமிங்கான வசனங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்..! 
யுவன்சங்கர்ராஜாவின் இசையை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பாடல்களெல்லாம் தியேட்டர்களில் கேட்பதோடு சரி.. வெளியில் வந்தவுடன் எதுவும் நினைவில்லை. சில  இடங்களில் பின்னணி இசை மட்டுமே ரசிக்கும்படி இருந்த்து..!
வெளிநாட்டு லொகேஷனை படமாக்கியவித்த்தில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். ஆனால் நயன்தாராவை மட்டும் ஏன் இப்படி டல்லாக காட்டியிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. பாடல் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக இருந்தும், ஆடல், பாடல் கண்ணுக்குக் குளிர்ச்சி.. கேமிராவிலும் அசர வைத்திருக்கிறது. இன்னொரு பாடல் காட்சியில் உருக்கத்தைக் கொடுக்க கேமிராவும் துணை நின்றிருக்கிறது.
பேய்கள் துரத்தி வரும் காட்சியிலும்.. அவைகள் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளிலும் எடிட்டரின் உதவியினால் காட்சிகளின் தொகுப்பும் பார்க்கும்படியிருக்கின்றன. எல்லாம் இருந்தும் மனதைத் தொடும் காட்சிகளும், அதீத பயமுறுத்தல்களும் இல்லாததால் பேய்ப் பட வரிசையில் இடம் கொடுக்காமல் சூர்யாவின் படமாகவே இதனைப் பார்க்கலாம்..!