ராமர் - சினிமா விமர்சனம்


31-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களைவிட சிறிய பட்ஜெட் படங்களில்தான் கொஞ்சமாவது கதை என்ற வஸ்து இருக்கிறது.. பெரிய பட்ஜெட் என்றால் அந்த ஹீரோவுக்கு ஏற்றாற்போல் மலைக்கள்ளன் டைப் கதையாக எடுத்து தியேட்டரில் நம்மைத் தாளிக்கிறார்கள். இல்லையெனில் டிவிடியில் இருந்து உருவியெடுத்து நம்மையும் தியேட்டரில் உருவியெடுக்கிறார்கள்.

சின்னத் தயாரிப்பு படங்கள் 5 வந்தால், அதில் 3 படங்களாவது கதையும், எடுத்த விதமும் கொஞ்சம் நல்லபடியாக, இயக்கம் என்று ஒத்துக் கொள்ளக்கூடிய வகையிலே அமைந்து விடுகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..

அரதப் பழசான அடியாள் கதைதான்.. ஆனால் சினிமா பாணியில் ட்ரீட்மெண்ட் குட் ஷேப்பிங்.

கடலூர் பகுதியை பார்ட் பார்ட்டாக பிரித்துவைத்துக் கொண்டு தனது அடியாட்களை வைத்து ராஜ்யம் நடத்தி வரும் சேலையப்பன் என்பவரிடம் கைத்தடிகளாகவும், அதே சமயம் வளர்ப்புத் தம்பிகளாகவும் இருந்து வருகிறார்கள் மதனும், நித்யாவும்..!

பகலில் அடிதடி, வெட்டுக் குத்து, ரகளை, ரத்தம் என்று பார்த்துவிட்டு இரவில் குஜிலிகளுடன் ஆட்டம் போடும் பக்கா அடியாளான ஹீரோ நித்யா, ஹீரோயின் மகாலட்சுமியிடம் ஒரு தடவை அடி வாங்கி விடுகிறான்.

இதனை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினாலும், அவனுக்குள் ஏதோ ஒன்று லாலாலாலா பாடி விடுகிறது. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி மாதிரி.. அடைந்தால் மகாலட்சுமி இல்லையேல் மரணம்தான் என்ற நிலைமைக்கு வந்து அவளை விரட்டி விரட்டி பின் தொடர்ந்து சென்று அழுக வைக்கிறான்.

ஹீரோவின் உற்ற நண்பனான மதனின் முறைப் பெண்தான் இந்த மகா என்ற மகாலட்சுமி. இது ஹீரோவுக்குத் தெரியாது.. தான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணைத்தான் தனது உயிர் நண்பன் விரும்புகிறான் என்பதை அறியாமல் அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான் மதன்.

மகாவுக்கும், மதனுக்கும் இடையில் நிச்சயத்தார்த்தமும் நடந்த நிலையில் மீண்டும் ஹீரோ மகாலட்சுமியைத் தூக்கிச் செல்ல.. விஷயம் தெரிந்து மதன், இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு முடிச்சர்றேன் என்று சொல்லி ஹீரோவுக்கே போன் போட்டு “என் லவ்வருக்கு ஒரு பிரச்சினை.. மேட்டரை முடிக்கணும் வா” என்று சொல்லி போன் அடித்து வரவழைக்க.. இப்போதுதான் மகா சொன்ன ஆள் யாரென்று மதனுக்குத் தெரிகிறது.

அடுத்த நொடியே நட்புக்கு குட்பை சொல்லிவிட்டு காதலுக்கும், கல்யாணத்திற்கும் முன்னுரிமை கொடுக்கிறான் மதன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹீரோ, மதனை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறான்.

ஹீரோ வெளியில் வரவும் அவனால் 6 ரீலுக்கு முன்னால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அதே ஊருக்கு ஏ.எஸ்.பி.யாக வரவும் பொருத்தம் அமர்க்களமாக இருக்கிறது. தான் ரவுடியாக இருப்பதால்தானே மகா தன்னை விரும்ப மறுக்கிறாள் என்பதை உணர்ந்து தான் ரவுடித் தொழிலை கை விடுவதாக சேலையப்பனிடம் சொல்கிறான் ஹீரோ.

சீலையப்பனோ இப்போது தனது கிரவுண்ட்டிற்குள் நுழைந்து நொங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஏ.எஸ்.பி.யை போட்டுத் தள்ள ஹீரோவிடம் வேண்டுகிறான். ஹீரோ மறுக்க.. ஏ.எஸ்.பி. சேலையப்பனையும், ஹீரோவையும் நெருக்க.. இன்னொரு பக்கம் மகா, ஹீரோவை பார்க்கவே மறுப்புத் தெரிவிக்க.. முக்கோண வட்டத்தில் யார் கடைசியாக உயிருடன் இருப்பது என்பதுதான் கதை.

முதல் பாராட்டு வசனகர்த்தாவுக்கு.. மிக, மிக நல்ல உயிரோட்டமுள்ள வசனங்கள். திரைக்கதைக்கு பொருத்தமான இடங்களில் நச் என்று அமைந்திருக்கிறது.

ஹீரோவாக நடித்திருப்பவர் வினய் தத்தா. காதல் ஓவியம் கண்ணனை ஞாபகப்படுத்தியது போன்ற முகம். ஏதாவது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டோ என்று சந்தேகமாக இருக்கிறது.. நிஜமாகவே அவரளவுக்கு நன்கு நடித்திருக்கிறார். தன்னை மகாலட்சுமி அடித்ததை நண்பர்களிடம் சொல்லி தன்னை அடிக்கும்படி சொல்லிக் கெஞ்சுகின்ற காட்சியில் அடியாள் வேடம் சுத்தமாக அவுட்.. நல்லதொரு இயக்கம் இந்தக் காட்சியில்.

இடைவேளைக்குப் பின்பு அடிதடியை விடுவதாக அறிவித்துவிட்டு மகாவைத் தேடியலைந்து ஹாஸ்டலில் வந்து பார்க்கும்போது, “பார்த்திட்டு போயிருவேன்” என்று வார்டனிடம் சொல்லிவிட்டு அதேபோல் காதலியைப் பார்த்தவுடன் ஒருவார்த்தைகூட பேசாமல் செல்கின்ற காட்சியில் இன்னொரு சபாஷ்.. இயக்குநருக்கும் சேர்த்துத்தான்.

கிளைமாக்ஸில் “நான் என்ன செஞ்சா.. நீ சந்தோஷமா இருப்ப..?” என்று கேள்வி கேட்கும் நேரத்தில் காதலனாகவே உருக வைத்திருக்கிறார். 

அனுமோல் என்னும் கேரள நங்கை புதுமுகமாக பரிமாணித்துள்ளார். ஆனாலும் இவரை வேறு ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். எந்தப் படமென்று என் மூளையைக் கசக்கியும் ஞாபகத்திற்கு வரவில்லை. அனுமோலுக்கு மேக்கப்பே தேவையில்லை என்று இயக்குநர் சொல்லிவிட்டார் போலும். குளோஸப் காட்சிகளில் வியர்வைகூட பளிச்சென்று தெரிந்தது..

படம் முழுவதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருந்ததால் நடிப்பு பரவாயில்லைதான்.. நான் அதிகம் எதிர்பார்த்த இரண்டு நண்பர்களையும் ஒன்றாக பார்க்கின்ற காட்சியில் இயல்பாகவே நடித்திருக்கிறார். “இத்தனை நாளா நீ என்ன செஞ்சுக்கிட்டிருந்தன்னு, இவனைப் பார்த்தாலே தெரியுது” என்று கேட்கின்ற வசனமும், மகாவுக்கு மகா பொருத்தம்.
 
மதனாக நடித்திருக்கும் அந்த இரண்டாவது ஹீரோ கடலூர் காட்டான் என்று சொல்லலாம். அந்த வட்டார முகமும், பேச்சும் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது..!
 
இறுதிக் காட்சியில் ஹீரோவிடம், “செத்துப் போ” என்று மகா சொல்லும்போது மட்டும், ஏதோ என்னைக் கை காட்டி சொன்னது போல இருந்தது. “லவ் பண்ணத் தெரியலை.. இதுக்கு மேல என்ன செய்யறது, என்ன சொல்றதுன்னும் தெரியலை..” என்ற பட்டிக்காட்டான் வேடத்தில் சொல்லும் அந்த ஹீரோவை பார்த்து பரிதாபப்பட வேண்டிய மகாவின் வெறுப்பான அந்தப் பதிலால், ஹீரோ எடுக்கும் அந்த கிளைமாக்ஸ் முடிவு முற்றிலும் எதிர்பாராததுதான்..

இப்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் கிளைமாக்ஸில் திடுக் திருப்பத்தை வைத்துத்தான் படத்தை முடிக்கிறார்கள்.. ஏன் என்றுதான் தெரியவில்லை.. 'பாணா காத்தாடி', 'காதல் சொல்ல வந்தேன்' வரிசையில் இந்தப் படமும் உட்கார்ந்துவிட்டது.

ஒளிப்பதிவு காசி வி.நாதன் என்ற புதுமுகமாம். கடலூரின் சுற்றுவட்டாரம் முழுவதையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ஆதிராஜா கடலூரோ என்னவோ..? காட்சிக்கு காட்சி லொகேஷனை மாற்றிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்கள். நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அடுத்த ஆச்சரியம்.. பாடல்கள்.. தெளிவாக வந்து காதில் விழுந்தன வார்த்தைகள்.. மெர்வின் சில்வா என்பவர் இசையமைத்திருக்கிறார். அடி முதல் முறை என்ற பாடலும், வெண்ணிலா நில்லடி என்ற பாடலும் எடுக்கப்பட்ட விதமும், இசையும் மீண்டும் கேட்க வேண்டும்போல இருந்தது.

குத்துப் பாட்டு.. இறுகக் கட்டியணைக்கும் குஜிலிகள்.. ஹீரோயினின் மனதைப் பற்றி பிட்டு பிட்டு வைக்கும் ஒரு பாலியல் பெண்.. பாசத்தால் பிராக்கெட் போடப் பார்க்கும் அண்ணாத்தைகள்.. ஹீரோயினின் குடும்ப பேக்கிரவுண்ட்டில் ஒரு மெல்லிய சோகம்.. ஹீரோவின் முன் வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஸ்மால் ஸ்டோரி என்று அடியாள் கதைகளில் என்னென்ன இருக்குமோ அத்தனையும் இதில் இருக்கிறது.

இதனைவிட பெரிய, பெரிய லாஜிக் ஓட்டைகளும் இருக்கின்றன. இருந்தாலும் மன்னித்து ரசிக்கலாம்.. அதிலும் 'மாஸ்கோவின் காவிரி'க்கு இது பல மடங்கு பரவாயில்லை ரகம்.

ஆனாலும் புதுமுகங்கள்.. புதிய இயக்குநர்.. புது கம்பெனி என்று பல புதியதுகள் இப்படத்தை மூலைக்குத் தள்ளிவிட்டன. குறைந்தபட்ச தயாரிப்பில், போட்ட காசு வந்தால்போதும் என்கிற நிலைமைக்குள் இதனை எடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கதையை அட்லீஸ்ட் ஜீவா, பரத்தை வைத்தாவது எடுத்திருந்தால் ஓரளவுக்காவது நிச்சயம் பேசப்பட்டிருக்கும், பெரிய ஹீரோக்கள் இல்லாததாலேயே காலை காட்சியாக மட்டுமே பெரிய நகரங்களிலும், ஸ்மால் சிட்டிகளில் தியேட்டர் வாடகையை கலெக்ஷன் செய்யவுமே இதனை ஓட்டுவார்கள்.

தற்போதைய தமிழ்ச் சினிமாவுக்கு கதைக்கு அடுத்தபடியாக மிகத் தேவையான விளம்பரப்படுத்துதல் இப்படத்திற்கு சுத்தமாக இல்லையாததால் இயக்குநரின் திறமை முட்டுச்சந்துக்குள் நிற்கிறது.. அடுத்து யாராவது ஒருவர் வாழ்க்கை கொடுத்தால் மெழுகுவர்த்தி, சோடியம் லைட்டாக பிரகாசிக்கலாம்..

நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.

படத்தின் டிரெயிலர் இது


டிஸ்கி : எவ்வளவோ முயற்சித்தும் புகைப்படங்களை போட முடியவில்லை.. சொதப்புகிறது பிளாக்கர்..!

தலைவர்கள் தப்பிக்க.. தொண்டர்கள் தூக்கில் தொங்கும் கொடூரம்..!

30-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டது.  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

2 ஆண்டு கால தண்டனையைக் குறைக்கும்படி மற்ற 25 பேர் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்து அந்தத் தண்டனையும் சரியானதுதான் என்று சொல்லிவிட்டது..!

தலைவன் அடிபட்டால், தொண்டன் பொங்கி எழுவதும், தொண்டன் அடிபட்டால் தலைவன் அறிக்கை விட்டு அமைதியாவதும் தமிழ்நாட்டில் எப்போதும் நடக்கின்ற அரசியல் சூத்திரம்தான்..!

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொலைக்காட்சிகள் பிளாஷ் நியூஸில் வெளியிட்டபோது கூடவே தமிழகமெங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் சாலை மறியல், போராட்டத்தில் குதித்தார்கள் என்றும் பெருமையுடன் சொல்லிக் கொண்டது ஜெயா டிவி.

அன்றைய ஜெயா டிவியில் வந்த ஸ்கிரால் நியூஸை பார்த்தவுடனேயே கட்சித் தலைமையே நம்மை போராடச் சொல்கிறது என்பதைப் புரிந்து கொண்ட தொண்டர் படையினர் அம்மாவின் ஆணையை தமிழகம் முழுவதும் கச்சிதமாகச் செயல்படுத்தினார்கள்.

முடிந்த அளவுக்கு முடிந்த இடங்களிலெல்லாம் சாலை மறியலும், பஸ் மறியலும், பேருந்துகள் தாக்கப்படுவதுமாக சென்ற இவர்களின் அராஜகம் தர்மபுரி, இலக்கியப்பட்டி அருகே நடந்த அந்தக் கொடூரம் பற்றிய செய்தி வெளியானவுடன்தான் அமைதியானது.

தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பேருந்து இலக்கியம்பட்டி என்னும் ஊரின் அருகே அந்தப் பகுதி அ.தி.மு.க.வினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது.

பேருந்தில் இருந்த மாணவிகள் பேருந்தைவிட்டு இறங்குவதற்கு கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் “கொழுத்துங்கடா” என்றெழுந்த ஒற்றை வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பேருந்தை சுற்றி வளைத்து சொக்கப்பானை கொழுத்தியதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.




அது கருணாநிதியின் ஆட்சிக் காலம் என்பதால், ஜெயலலிதா மற்றும் அவர்தம் கட்சியினரின் யோக்கியதையை மக்களிடத்தில் தெரிவிக்க இதனை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது அப்போதைய தி.மு.க. அரசு.

ஆனாலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் இந்தக் கொடுமையை எதிர்த்து சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் என்றெல்லாம் ஆரம்பித்தபோது என்ன காரணத்தினாலோ அவர்கள் மீது தடியடி நடத்தி, மாணவர்களும், மாணவிகளும் கை, கால்களில் கட்டுப் போடுகின்ற அளவுக்கு மிருகத்தனமாக அடித்து உதைத்தது ஏன் என்றுதான் எனக்கு இப்போதுவரையிலும் தெரியவில்லை.

அதுவொரு கிராமப் பகுதி என்பதாலும், பேருந்து கொழுந்துவிட்டு எரிந்த போது அதனை அணைப்பதற்கு அந்தப் பகுதி மக்களும் ஓடோடி வந்துதான் உதவியிருக்கிறார்கள். அந்த மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினரை மிக எளிதாக அடையாளம் கண்ட காவல்துறை அவர்களைக் கைது செய்தது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மீதி நபர்கள் அனைவருமே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் உறுதிபடச் சொன்னதற்குக் காரணம் அந்தப் பகுதி மக்கள்தான்..!

உள்ளூர் தொண்டர்கள் என்பதால் நி்ச்சயம் அந்தப் பகுதி மக்களுக்கு அவர்களைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களெல்லாம் கொடூரமானவர்களோ.. இதற்கு முன் சீரியஸ் கொலைகளைச் செய்யும் கொலைகாரர்களோ அல்ல.. ஒரு கட்சியின் தொண்டர்கள்.

தங்களது கட்சி விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும், கட்சியில் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், பெருமையைடவையும், கட்சித் தலைமையின் கவனத்தைக் கவரவும் அவர்கள் நடத்திய கொடூரம்தான் இது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இவர்களைக் கண்டிக்கின்ற, தண்டிக்கின்ற அதே சமயம் இந்தத் தூக்கில் போடுகின்ற அளவுக்கான குற்றத்தின் முதல் குற்றவாளி அவர்களுடைய கட்சித் தலைமைதான்.. இவர்கள் வெறும் அம்புகள்தான்.. எய்தவர்கள் கட்சித் தலைமையில் இருந்தவர்களும், இருப்பவர்களும்தான்..!

அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர.. அன்றைய தினம் அத்தனை மாவட்டச் செயலாளர்களுக்கும், நகரச் செயலாளர்களுக்கும் தலைமையிடத்தில் இருந்துதான் போராட்டம் நடத்தும்படி ஆணை வந்துள்ளது.

ஆனால் விசுவாசமிக்க இந்தத் தொண்டர்கள் தங்களது தலைமையைக் கடைசிவரையில் காட்டிக் கொடுக்காத காரணத்தினால்தான் அடுத்து கொடுநாடு எஸ்டேட்டுக்கு போய் ஓய்வெடுப்பதா அல்லது சிறுதாவூர் அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுப்பதா என்று இவர்களது அரசியார் ரகசிய ஆலோசனை செய்து வருகிறார்.

இந்தக் குற்றச்சாட்டினாலும், தீர்ப்பினாலும் ஏதோ அ.தி.மு.க. கட்சி மட்டுமே வன்முறையில் ஈடுபடும் கட்சி எனவும் மற்றைய கட்சிகள் எல்லாம் சாந்தமான குணமுடையவை என்றும் நாம் நம்பிவிடக் கூடாது..

இவர்களையும் தாண்டிய வன்முறையை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே செய்து வந்தது தி.மு.க. அதற்கடுத்ததுதான் அ.தி.மு.க.

மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்தபோது அடுத்த மூன்று நாட்கள் மதுரை நகரமே பற்றி எரிந்ததெல்லாம், அங்கே வாழ்ந்து கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் நன்கு தெரியும்..

பல அரசுப் பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பட்டப் பகலில் கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி வாசலில் ஒரு அரசுப் பேருந்து தீயிடப்பட்டது. நல்ல வேளையாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின்புதான் அங்கே கூடியிருந்த அத்தனை பேரின் கண் முன்பாகவே எரிக்கப்பட்டது.

இன்றுவரையில்கூட அந்தக் கலவரங்களின்போது செயல்பட்ட குற்றவாளிகள் யார் என்பதை நமது இந்திய ஸ்காட்லாந்து போலீஸான தமிழ்நாடு காவல்துறை கண்டறியவே இல்லை என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்..!

பொதுவாகவே எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி.. கட்சியாக இருந்தாலும் தலைவன் தாக்கப்பட்டான்.. தலைவனுக்கு அவமரியாதை என்றால் உடனேயே தாக்கப்படுவது பேருந்துகளாகவும், அரசுச் சொத்துக்களாகவும்தான் உள்ளன.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட்டபோது கடலூர் டெல்டா பகுதிக்குள் ஒரு பேருந்துகூட செல்ல முடியவில்லை. சென்ற பேருந்துகள் அனைத்தும் கரியாக்கப்பட்டு காட்சியளித்தன. வேறு வழியில்லாமல் திருமாவளவனை விடுதலை செய்துதான் அந்தக் கலவரத்தை அடக்கினார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்கள் வளர்ந்ததே இது மாதிரியான ஒரு கொடூரச் செயல் மூலமாகத்தான்.. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தங்களுடைய செல்வாக்கைக் காட்ட வேண்டி அவர்கள் நடத்திய காட்டு தர்பாரில் வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை? எத்தனை..? கொளுத்தப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு..?

அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த உடன்பிறப்புக்களை விழுப்புரத்தில் வழிமறித்து தாக்குதல் நடத்தியபோது எரிந்துபோன அரசுப் பேருந்துகள் எத்தனை..? எத்தனை..?

இந்த மாதிரியான சம்பவங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஒரு முறை சிறையில் இருப்பதோடு சரி.. அவ்வளவுதான்.. ஜாமீனில் வெளி வந்துவிட்டால் அந்த வழக்கு அதோ கதிதான்..

அந்தக் கட்சிக்கு தோதான பெரிய கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் உடனேயே அவர்களுடன் இணக்கமாகி தங்களது கட்சிக்காரர்கள் மீதிருக்கும் வன்முறை வழக்குகளை உடனேயே வாபஸ் வாங்கிக் கொள்வார்கள். இப்படித்தான் தி.மு.க., அ.தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி என்று அத்தனை பேரும் தப்பித்துக் கொண்டே போகிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் மட்டுமே 3 மாணவிகளும் சேர்ந்து பலியான துக்கத்தைக் கொடுத்ததால் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர்.

இனி என்ன ஆகும்..? முருகன், பேரறிவாளனைப் போல ஜனாதிபதிக்கு கருணை மனுவைக் கொடுத்துவிட்டு எப்போது சாவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் கொடூரத்தை, இவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.

இவர்களைவிட இவர்களது குடும்பத்தினர் என்ன மாதிரியான உணர்வுகளை அனுபவிப்பார்கள் என்பது இவர்களை ஏவி விட்ட தலைவர்களுக்குத் தெரியுமா..? தங்களது குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் ஒருவரை சிறைக்குள் அனுப்பிவிட்டு என்னதான் உதவிகள் கிடைத்தாலும், அந்த பிரிந்த சூழலும், மனநிலைக்கும் எதனால் ஆறுதல் கொடுக்க முடியும்..?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “இந்தப் பேருந்து திட்டமிட்டே எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்துக்கு எதிரான காட்டுமிரண்டித்தனமான கொடூர செயல். இது போன்ற செயல்கள் இனி நடக்கவே கூடாது. தங்களது சுய லாபத்துக்காக அப்பாவி மாணவிகளை படுகொலை செய்தது கொடூரமானது. இந்த வழக்கில் ஏற்கனவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயமானதே” என்று தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

எனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பரிசீலிக்கும்படியாக மனு அளித்தாலும் இவர்களுக்கான தண்டனை குறைக்கப்படாது என்றே நான் கருதுகிறேன்..!

அரசுகளும், சட்டங்களும் மக்களைத் திருத்த வேண்டுமே ஒழிய மீண்டும், மீண்டும் தவறுகளைச் செய்யத் தூண்டுவதாக இருந்துவிடக் கூடாது..!

நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..

இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்த வழக்கு பற்றி இதுவரையிலும் வாய் திறக்காத இவர்களுடைய தங்கத் தலைவி ஜெயலலிதா இனிமேலும் வாய் திறப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

எவ்வளவுதான் பணத்தினை அந்தக் குடும்பங்களுக்கு அள்ளிக் கொடுத்து சமாதானம் செய்தாலும், அவர்களைக் கொலைப் பலிபீடத்திற்கு அனுப்பி வைத்த ரத்தக் கறை ஜெயலலிதாவின் கையை விட்டுப் போகாது என்பது நிச்சயம்..!


மாஸ்கோவின் காவிரி..! - சினிமா விமர்சனம்

28-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படம் தயாரித்து முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும்  தயாரிப்பாளரான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இதனை வெளியிடாமல் வைத்திருந்தது ஏன் என்பது இப்போது படத்தை பார்த்த பின்புதான் தெரிகிறது..!

கிட்டத்தட்ட 25 வருடங்களாக தமிழ்ச் சினிமா துறையில் இருந்துவரும் பழுத்த அனுபவசாலியான ரவிச்சந்திரன், இந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்தவுடனேயே தெளிவாகியிருப்பார் இது நிச்சயம் தேறாது என்று..!

அதனால்தான் தசாவதாரம் படத்திற்குப் பின் அடுத்த வெளியீடாக உடனேயே வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம், இத்தனை காலம் தாழ்த்தி வெளி வந்திருக்கிறது.

அதிலும் ஒரு விஷயம். தன்னுடைய ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தாலும் அந்த பேனரில் வெளியிட்டால் கம்பெனியின் பெயர் நாஸ்தியாகிவிடும் என்பதால் தனது உடன் பிறந்த தம்பியான ரமேஷ்பாபுவின் பெயரில் அவசரம், அவசரமாக ஆர் பிலிம்ஸ் என்னும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, அதன் மூலமாக இப்படத்தினை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.

இந்த அளவுக்குப் பயப்பட வேண்டிய அவசியமென்ன..? இது 70 எம்.எம். சினிமா இல்லை. வெறும் டாக்குமெண்ட்டரி. படத்தின் கதையை இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம். ஆனால் சொல்லிய விதத்தைச் சொல்ல வேண்டுமெனில் அது மாபெரும் கொடுமை..!

ஐ.டி. துறையில் பணியாற்றும் காதலர்கள், லிவிங் டூ கெதராக சேர்ந்து வாழ்ந்து பின் தங்களால் ஒத்துப் போக முடியாது என்பதை உணர்ந்து பிரிய நினைக்கிறார்கள். முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை..!

இதற்காக இயக்குநர் பெரும் சிரமமேற்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் போலும். பொதுவாக ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குநர்காளாக மாறி வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலர்தான்.. தோல்வியடைந்த பட்டியல்தான் அதிகம்..! அதில் ரவிவர்மனும் ஒருவர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவில் அவர் காட்டியிருக்கும் வெறியையும், ஆர்வத்தையும் படத்தின் கதையிலும், திரைக்கதையும் கொஞ்சமாவது காட்டியிருந்தால் படத்தின் பூஜையன்று செலவழித்த தொகையாவது தயாரிப்பாளருக்குத் திரும்பக் கிடைத்திருக்கும்..!

முதல் காட்சியில் ஹீரோயினை சந்திக்கிறார். பார்த்தவுடனேயே காதல் கொள்கிறார். ஒரு பாடல். நாயகியைப் பின் தொடர்கிறார்.. நாயகியின் புகைப்படங்கள் முழுவதையும் தனது வீட்டில் ஒட்டி வைத்து அழகு பார்க்கிறார். அடுத்தக் காட்சியில் நாயகி யார் நீ என்று கேட்டுவிட.. உடனேயே வீடு திரும்பி புகைப்படங்களை கிழித்தெறிகிறார்.

அதற்கடுத்த காட்சிகளில் சம்பந்தமேயில்லாமல் இருவரின் பிறந்த வீட்டுக் கதைகள் திணிக்கப்பட்டுள்ளன.  தன் அப்பா கையை வெட்டும் வன்முறையாளராக இருப்பதைப் பார்த்து பயந்து போய் ஹீரோயின் ,ஹீரோவைத் தேடி அவன் ஊருக்குச் செல்கிறாள்.

ஹீரோ தனது ஊரில் தனது சொந்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த ஊருக்கு வரும் ஹீரோயின், தான் தனது கணவனைத் தேடி வந்ததாகச் சொல்லி, ஹீரோவைக் கை காட்டுகிறார். ஹீரோ சந்தோஷப்படுகிறாராம்..

சென்னைக்கு வந்து இருவரும் சேர்ந்து வாழத் துவங்குகிறார்கள். வீட்டுக்காரன் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறான். ரோஷப்பட்ட ஹீரோயின் வீட்டுப் பொருட்களுடன் நடுத்தெருவில் வந்து அமர்ந்து கொண்டு நட்ட நடுரோட்டில் லேப்டாப்பில் கூகிளாண்டவரைத் துழாவி வீடு தேட ஆரம்பிக்கிறாள்.

இந்தக் காட்சியில் கை தட்டத் துவங்கிய சில நண்பர்கள் படம் முடியும்வரையில் கை வலிக்கத் தட்டித் தீர்த்துவிட்டார்கள். இந்த ஒரு காட்சியமைப்புக்காகவே இந்தப் படத்திற்கு அவசியம் விருது கொடுத்தாக வேண்டும்.

கடற்கரையோர வீட்டை விலைக்கு வாங்கி அங்கே குடி போகிறார்கள். அடுத்த நாளே ஹைதரபாத்திற்கு டிரெயினிங் என்று சொல்லி டூர் கிளம்புகிறார்கள்.

ஹீரோயினின் அப்பாவுக்கு எப்படித்தான் இந்த விஷயம் தெரிந்ததோ தெரியலை சாமி.. பொண்ணைத் தேடி அந்த வீட்டுக்கு வருகிறார். “பொண்ணும், மாப்ளையும் நல்லா இருக்காங்களாம்.. வீட்டு வாட்ச்மேன் சொன்னான்” என்று ஊர் திரும்பி தனது மனைவியிடம் சொல்லும்போது என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. ச்சே.. நாமளும்தான் இருக்கோம்.. இது மாதிரி ஒரு சீனாவது நமக்குத் தோணுச்சா..? மரமண்டை.. மரமண்டை..!

ஹைதராபாத்தில் காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன பிரச்சினையால் திரும்பி வரும்போது ரொம்பவே முட்டிக் கொள்கிறது.

இடையில் சம்பந்தமே இல்லாமல் ஒரு கிரிமினல் டிராக் வேறு.. அவன் இவர்கள் வீட்டில் இவர்களைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொள்ள.. தனது மனைவியைக் கொல்ல முயற்சித்த அவனை போலீஸ் கமிஷனர் பெரும் படையுடன் வீடு புகுந்து கொன்று இவர்களைக் காப்பாற்றுகிறாராம்.

அப்பாடா.. முடிச்சிட்டானுகடா சாமின்னு எந்திரிச்சா.. அப்பன்காரன் “மாப்ளைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திரு”ன்னு பெண்ணிடம் சொல்ல.. அப்பாவுக்காக காதலனிடம் பை சொல்ல வரும் காதலி.. காதலன் தங்களது போட்டோவை பார்த்து புலம்புவதைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி அவனைக் கட்டிக் கொண்டு நமக்கு மங்களம் பாடுகிறாள்.

எவனாவது ஏமாந்த சோணகிரி சிக்கிட்டான்னா, அவன் தலைல சுத்தமா மிளகா அரைச்சிருவாங்கன்னு சொல்வாங்களே.. நிச்சயமா இந்தப் படத்தை அதுக்கு உதாரணமா காட்டலாம்.

ரவிவர்மன் சிறந்த, சிறந்த, சிறந்த ஒளி்பபதிவாளர். அதில் சந்தேகமேயில்லை. இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையில் பிரேம் டூ பிரேம் அழகு.. கொள்ளை அழகு. அதோடு அழகுக்கு ஆபரணம் சேர்ப்பதுபோல் கதாநாயகியும் அழகு. இது போதுமா படம் ஓடுறதுக்கு..?

கதைன்னு ஒண்ணு வேணாமா..? நான் எடுக்கறதுதான் படம்.. நான் சொல்றதுதான் கதைன்னு முடிவு பண்ணி எடுத்திருப்பார் போலிருக்கு.

படத்தின் பிற்பாதியில் இருக்கும் சந்தானத்தின் காமெடி டிராக் சமீபத்தில் எடுக்கப்பட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் விற்பனைக்காக எடுத்ததாகச் சொல்கிறார்கள். அப்படியும் இது போணியாகவில்லை. சரி. அதையாவது உருப்படியாக எடுத்துத் தொலைத்தார்களா..? அதுவும் உச்சப்பட்ச லாஜிக் மீறல்..! சந்தானத்திற்கு இதெல்லாம் தேவைதானா..?

ஏற்கெனவே மாதாமாதம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றுதான் தியேட்டர் ரிப்போர்ட்டுகள் சொல்கின்றன. இந்த லட்சணத்தில் இது மாதிரி இன்னும் ரெண்டு சினிமா வந்தால்போதும்.. தயாரிப்பாளர் மட்டுமல்ல.. சினிமா ரசிகனும் வெறியாகிவிடுவார்கள்..!

பாடல் காட்சிகளை தொல்லைக்காட்சிகளில் பார்த்தால், கண்டு மகிழுங்கள்.. அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..!

நேரமும், பணமும் வீணானதுதான் மிச்சம்..!

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-27-08-2010

27-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 
அந்தோணி முத்துவின் மரணம்

இந்த மனிதருக்குள் இருந்த உற்சாகமும், உத்வேகமும் இவ்வளவு சீக்கிரம் உடைந்து போகும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றுத் திறனாளியாகத் தான் இருந்தாலும், அந்தக் கஷ்டத்தை மட்டும் வெளியில் சொல்ல விருப்பமில்லாமல் சக பதிவர்களைப் போலவே பதிவிட்டு உற்சாகத்துடன் வலம் வந்து கொண்டிருந்த நம்முடைய அந்தோணி முத்துவின் வாழ்க்கை நிச்சயம் பல பேருக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டியது.

கடைசியாக அவர் எழுதியிருந்த பதிவில்கூட கடைசி வரியில் மட்டுமே தன்னைக் கொன்று கொண்டிருந்த அந்த உடல் வலியை குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய தளத்தில் தனது உடல் குறையை தான் எப்படி சமாளித்தேன் என்பதையும், அது பற்றிய நினைப்பைத் தான் எப்படி தூக்கியெறிந்தேன் என்பதையும் நிறைய பதிவுகளில் எழுதியிருந்தார்.

என்ன இருந்தாலும்.. இவருக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்து, வாழ நினைத்த வயதில் அதற்கு அனுமதியும் கொடுக்காத முருகனை வையத்தான் வேண்டும்.. அந்தோணி முத்துவின் ஆத்மா சாந்தியாகட்டும்..


கேரளா.. குடிகாரர்களின் சொர்க்கம்

கேரளா மாநிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம் குடியிருக்கும் தேசம் என்றாலும் குடியின் மீது விருப்பம் கொண்ட குடிகார இந்தியர்களும் இங்குதான் அதிகம். 


ஓணம் பண்டிகையையொட்டி கடந்த நாட்களில் மட்டும் 155 கோடி ரூபாயை குடித்தே தீர்த்திருக்கிறார்கள் இந்த மகா குடிமகன்கள். அதிலும் ஒணம் நாளான 23ம் தேதியன்று மட்டும் 30 கோடிக்கு ஊத்தியிருக்கிறார்கள். சென்ற வருடத்தோடு ஒப்பிட்டால் இந்த வருடம் 18 சதவிகிதம் வசூல் அதிகமாம்..

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சூரை அடுத்த சாலக்குடி கேரளாவிலேயே அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாட்களில் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம், கருணாகரப்பள்ளி முறையே ரூ.22 லட்சம், ரூ.21 லட்சத்துடன் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்துள்ளன.

விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தி உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது.  தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த வி்ற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.



படிப்பிற்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கிறது கடவுளின் செல்லக் குழந்தையான இந்த கேரள பூமி..



காட்சிப்பிழை - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

சமீபத்தில் 'காட்சிப்பிழை' என்கின்ற திரைப்படத் திறனாய்வு நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்-இயக்குநர் சேரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சுபசற்குணராஜன், களவாணி படத்தின் இயக்குநர் சற்குணம், எழுத்தாளர் பிரபஞ்சன், ராஜன்குறை போன்றோர் கலந்து கொண்டனர்.

ரவிக்குமார் பேசுகின்றபோது அரசியல் மேடையாக நினைக்காமல், இலக்கிய மேடையாகவும் கருதாமல் வெகு சாதாரணமாகவே பேசினார். பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார். பொறுமையிழந்து போன ஒரு தோழர் கை தட்டினார்.. தட்டினார்.. தட்டினார்.. தட்டிக் கொண்டேயிருந்தார்.. ரவிக்குமாரே பேச்சை நிறுத்திவிட்டு “என்னப்பா..?” என்று கேட்டார். கை தட்டியவர் பதிலே சொல்லவில்லை.

புரிந்து கொண்ட ரவிக்குமார் “நான் இதுக்கு மேலேயும் பேசுறது நல்லாயில்ல. தோழருக்குப் பிடிக்கலை போலிருக்கு. சரி போதும் நிறுத்திக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் தனது சீட்டில் இருந்து எழுந்து வந்த ரவிக்குமார் கை தட்டிய தோழரின் அருகில் அமர்ந்து அவரிடம் நலம் விசாரித்தார். அந்தத் தோழரும் பதிலுக்கு ஏதோ சொல்ல.. இருவருக்குள்ளும் கசமுசாவானது.. மேடையில் இருந்த சேரன் தலையிட்டு.. “இப்ப எதுவும் வேண்டாமே.. நிகழ்ச்சி முடியட்டும்..” என்று சொல்ல ரவிக்குமார் தாங்க முடியாத கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்தார். ஆனாலும் கை தட்டிய தோழர் வேறிடத்தில் போய் அமர்ந்து கொண்டதால் எதுவும் செய்ய முடியவில்லை.. ரவிக்குமாரும் பாதியிலேயே கிளம்பி போய்விட்டார்.

ரவிக்குமார் தனது கட்சிக் கூட்டத்தினரோடு வந்திருந்தால், இந்தத் தோழரின் கதி என்னவாயிருக்கும்..? நல்லவேளை.. அன்றைக்கு தப்பித்தார் அந்தத் தோழர்..


நடிகை ஜெயந்தியின் உண்மையான மனம் திறந்த பேட்டி


மனம் திறந்த பேட்டி என்று பலருடைய பேட்டிகளை பத்திரிகைகளில் படித்திருக்கலாம். ஆனால் அது உண்மையாகவே அவர்கள் மனம் திறந்ததுதானா என்பது சந்தேகம்.

ஆனால் சமீபத்தில் நான் படித்த ஒரு பழைய சினிமா புத்தகத்தில் இருந்த இந்த பேட்டி நிச்சயமாக மனம் திறந்த பேட்டி என்றே நம்புகிறேன்.. ஏனெனில் சொல்லியிருக்கும் விஷயம் அப்படி. பேட்டியளித்தவர் கன்னட பழம் பெரும் நடிகை ஜெயந்தி.

".....ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து மிகவும் டயர்டாக ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தேன். பின்னாலேயே அந்தப் படத்தின் இயக்குநர் பெக்கட்டி சிவராமும் வந்தார். அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. என் மீது புலி போல் பாய்ந்தார். மிகக் களைப்பான நிலையிலும், எதிர்பாராத இந்த அதிர்ச்சியினாலும் தாக்குண்ட நான் ஒரு கட்டத்தில் அதனை எதிர்க்க முடியாமல் போய் அவருக்குள் அடங்கிவிட்டேன்.

சாதாரணமாக ஸாரி என்று சொல்லிவிட்டுப் போனவர் மறுநாள் என்னை விரும்புவதாகவும், அதனால்தான் எல்லை மீறியதாகவும் கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அவருக்குத் திருமணமாகி கல்யாண வயதில் பிள்ளைகள் இருந்தார்கள்.

இதனை வெளியில் சொல்ல முடியாத சூழல் எனக்கிருந்தாலும், அவருடைய பேச்சு என்னைக் கரைய வைத்தது. திருமணம் செய்ய முடியாத நிலையிலும் அவர் தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். அதற்குப் பின்புகூட நாங்கள் 6 அல்லது 7 முறை உறவு கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். என் பையன் அந்த உறவால்தான் பிறந்தான். ஆனாலும் அதன் பின்பு அவருடனான தொடர்பு முற்றிலும் அறுந்து போகும் வரையிலும் அவருடைய முதல் குடும்பத்தினருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது.

இதன் பின் எனது வாழ்க்கையில் காதல் என்பதையே திரைப்படங்களில் மட்டுமே செய்து வந்தேன்.. என் மகனுக்காக நான் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்பகுதியில் மேலும் ஒரு சோதனை வந்தது. என் மகனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு மாணவன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ப்ரீயாகப் பேசுவான்.. பழகுவான். நானும் அப்படியே பழகினேன்.

திடீரென்று தனது துணிமணிகளுடன் எனது வீட்டிற்கு வந்தவன் என்னை காதலிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் எனது காலைப் பிடித்துக் கொண்டு அழுதான். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நல்ல புத்திமதி சொல்லி அனுப்பப் பார்த்தேன். ஆனால் நான் முடியாது என்று சொன்னால் இப்பவே தற்கொலை செய்து கொள்வேன் என்று அழுது, அரற்றி பிடிவாதம் பிடித்தான்.

இரண்டு நாட்கள் வீட்டில் அவனைத் தங்க வைத்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முடியாததால் அந்தப் பையனுக்காக நான் எனது முடிவை மாற்றிக் கொண்டு அவனைத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். எனது வீட்டிலேயே பூஜையறையில் மாலை மாற்றிக் கொண்டு தம்பதிகளாக ஆனோம்.. இது மிகச் சரியாக பதினைந்து நாட்கள்தான்..

விஷயம் தெரிந்து அந்தப் பையனின் பெற்றோர் என் வீடு தேடி வந்து கதறி அழுதார்கள். நானும் என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவர்கள் பையனைக் காப்பாற்ற வேண்டியே இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயமானதாகச் சொன்னேன்.

நல்லவேளை அந்தப் பையன் இந்தப் பதினைந்து நாட்களில் கொஞ்சம் தெளிவாகிவிட்டான்.. அவனது பெற்றோர்களைப் பார்த்ததும் கொஞ்சம் மனம் திருந்தி அவர்களுடனேயே போய்விட்டான்.. இதனால் எனக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. ஒரு இளைஞனின் வாழ்க்கையையும், உயிரையும் காப்பாற்றினேன் என்கிற ஒரு திருப்தியே என் மனதில் இருந்தது..."

- இதுதான் நம்ம ஜெயந்தியம்மா கொடுத்திருந்த உண்மையான மனம் திறந்த பேட்டி.



பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டமா..?

ஏதோ பாகிஸ்தானே மதவாத நாடு என்றும், இஸ்லாமிய சட்டம் என்கிற பெயரில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆள்கிறார்கள் என்றெல்லாம் பில்டப் கொடுத்த சாமிகளே.. இந்த வீடியோவைப் பாருங்கள். 


தனது அலுவலக அறையிலேயே ஸ்டைலாக புகை விட்டுக் கொண்டு ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி ஷோ காட்டும் இந்த அம்மணியின் பெயர் ஷெர்ரி ரஹ்மான். பாகிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர்.



ரொம்பவே முற்போக்கானவர். வீடியோவை பார்த்தாலே தெரியுதும்பீங்க. இப்போது அவர் பதவியில் இல்லை. தானாகவே ராஜினாமா செய்துவிட்டார். காரணம் இதுவல்ல..

சென்ற வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் அரசு சில மீடியாக்கள் மீது கொண்டு வந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார் இந்த ஷெர்ரி. ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுப் கிலானியும் அவற்றில் உறுதியாக இருக்க.. "போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்" அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிட்டாங்களாம் அம்மணி. பரவாயில்லை. அங்ககூட முற்போக்கு கொள்கையெல்லாம் வாழுதே.. சந்தோஷம்..



ONG Bak-2 சண்டைக் காட்சி

நானும் எத்தனையோ சண்டைக் காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டார் மூவிஸ் சேனலில் பார்த்தபோது பிரமித்துப் போய்விட்டேன். அதிலும் அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி.. சான்ஸே இல்லை.. நிச்சயம் ஒரு வெறியர்களால்தான் இப்படியொரு காட்சியை படமாக்கியிருக்க முடியும்.. அற்புதம் என்றே சொல்லலாம்..

எப்படி இந்தப் படத்தை மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை. அவசரமாக டிவிடியை வாங்கிப் படத்தையும் பார்த்துவிட்டேன். அது பற்றிய விமர்சனத்தை தனிப் பதிவாகப் போடுகிறேன்.. ஆனாலும் சண்டைப் பிரியர்களுக்குப் பிடித்தமான இந்தச் சண்டைப் படத்தைக் காணத் தவறாதீர்கள்.

உங்களுக்காக அதில் முக்கியமான ஒரு சண்டைக் காட்சி இங்கே..




பிரகாஷ்ராஜின் திருமணம்

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திருமணம் இன்று மும்பையில் நடந்தேறியுள்ளது. லலிதகுமாரியுடனான காதல் முடிந்து போய்விட்டது அல்லது தீர்ந்து போய்விட்டது என்று சொல்லிவிட்டு பிரகாஷ்ராஜ் அடுத்தக் காதலைத் தேடிப் போய்விட்டார். பாவம்.. லலிதாகுமாரி.. இந்த வயதில், இனிமேல் அவர் வேறொரு காதலைத் தேடிப் போக முடியுமா..? அல்லது வந்தால்தான் ஏற்க முடியுமா..? குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை இனி சன்னியாசினிபோல் வைத்துக் கொண்டு வாழ வேண்டியதுதான்.. இதுதான் முக்கால்வாசி இந்தியப் பெண்களின் நிலை.


ஆணுக்கொரு நீதி.. பெண்ணுக்கொரு நீதி.. பாதியிலேயே நீர்த்துப் போவதற்குப் பெயர் காதலா..? அல்லது எத்தனை காதல் வந்தாலும் அதனை அனுபவித்துப் பார்ப்பதுதான் வாழ்க்கையா..? தனி மனித உரிமைதான் முக்கியமெனில் எதற்காகக் காதலிக்க வேண்டும்..? கல்யாணம் செய்ய வேண்டும்? பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்..? பிள்ளைகளைப் பெற்றெடுத்தால் அவர்களுக்காக தங்களது சுதந்திரத்தை, உரிமையை விட்டுக் கொடுத்தானே ஆக வேண்டும். அப்போது ஏன் தனி மனித சுதந்திரம் முக்கியம் என்கிறான் ஒரு ஆண்..? ம்ஹூம்.. இதில் இருப்பது ஆணாதிக்கத் திமிர் மட்டுமே என்பதுதான் எனது கருத்து..



களை கட்டும் கல்யாண டான்ஸ்

ஒரு டான்ஸ் நிகழ்ச்சியைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்ன்னு இந்த வீடியோ வந்து ரொம்பவே சிரிக்கவும் வைச்சிருச்சு. ஆச்சரியப்படவும் வைச்சிருச்சு.

பிலிப்பைன்ஸ் நாடுன்னு நினைக்கிறேன். ஒரு கல்யாண விருந்து போல.. மாமி வயதில் இருக்கும் ஒரு பெண் எவ்வளவு அழகாக நிகழ்ச்சியை கொண்டாடுகிறார் பாருங்கள்.




வட கொரியா கால்பந்து வீரர்கள் இனி சுரங்கத் தொழிலாளிகள்..

ஏதோ கம்யூனிஸ ஆட்சி நடப்பதால் ஜனநாயகம் தழைத்தோங்குவதாகவும், மக்களெல்லாம் சந்தோஷச் சிரிப்போடு துள்ளல் நடையோடு தெருக்களில் நடனமாடி வருவதாகவும் தோழர்கள் சொல்லி வரும் வடகொரியாவில் நடந்திருக்கும் கொடுமையை நினைத்தால் கம்யூனிஸத்தின் பெயரால் இவர்கள் நடத்துவது சர்வாதிகாரம்தான் என்று அடித்துச் சொல்லிவிடலாம்போலத் தோன்றுகிறது.


சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் படு தோல்வியடைந்து நாடு திரும்பிய தனது நாட்டு அணியினரை தலைநகரின் முச்சந்தியில் மூன்று மணி நேரம் நிற்க வைத்து அவமானப்படுத்தியிருக்கிறது அந்நாட்டு அரசு.

போர்ச்சுக்கல் அணியுடன் 7-0 என்ற கோல் கணக்கிலும், பிரேசிலுடன் 2-1 என்ற கோல் கணக்கிலும், ஐவரிகோஸ்ட்டிடம் 3-0 என்ற கோல் கணக்கிலும் படு தோல்வியடைந்திருந்தது வடகொரிய அணி.

இதனை நாட்டிற்கு கிடைத்த அவமானமாக கருதியிருக்கும் அந்நாட்டு சர்வாதிகார கம்யூனிஸ அரசு, அணியின் கோச் ஜாங் ஹன்னை கட்சியில் இருந்தும், விளையாட்டு அமைப்பில் இருந்தும் வெளியேற்றியதோடு இல்லாமல், நாட்டின் வடகோடியில் இருக்கும் ஒரு ஊரில் வீடு கட்டும் பணிகளைச் செய்யும் கொத்தனாராக போஸ்ட்டிங் போட்டு டிரான்ஸ்பர் செய்திருக்கிறதாம். இவரை மட்டுமா..? அணி வீரர்கள் அனைவரையும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களாக இடம் மாற்றி திருப்பியடித்துவிட்டதாம்..

தோல்விக்கு அவர்கள் என்ன செய்வார்கள்..? பாவம்.. அந்த நாடு இருந்த இருப்பிற்கு உலகக் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றதே பெரிய விஷயம். எந்த நாட்டுடனும் சுமூகமான உறவில்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் விளையாட விடாமல் செய்துவிட்டு, திடீரென்று உலகக் கோப்பைக்கு மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி விளையாட விட்டால் அவர்களால் எப்படி ஜெயிக்க முடியும்..? பிரேசிலுக்கு எதிராக ஒரு கோல் போட்டதே அவர்களைப் பொறுத்தவரையில் உலக சாதனை.

இவர்கள் மட்டுமா இப்படி..? சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் அரபு சாம்பியன் கால்பந்து போட்டியில் ஈராக் அணி தோல்வியடைந்து நாடு திரும்பிய பின்பு, அந்த அணி வீரர்களுக்கும் இந்தத் தண்டனைதான் கிடைத்திருக்கிறது.

நாடு திரும்பிய மறுநாளே அனைத்து வீரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். கால்பந்து சைஸுக்கு பெரிய இரும்பாலான குண்டு தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு வீரரும் ஒரு நாளைக்கு 50 முறை அந்தப் பந்தை உருட்டியபடியே மைதானத்தைச் சுற்றி வர வேண்டும் என்ற தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

இதனையும் செவ்வனே செய்து முடித்த பின்பு அத்தனை வீரர்களின் கால்களும், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு முறிக்கப்பட்டது. அணியின் கேப்டன் மீது மட்டும் கரிசனம் காட்டிய சதாம் உசேனின் மகன்களில் ஒருவர், கேப்டனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஜோர்டானுக்குச் சென்று பிழைத்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த வீரர் ஜோர்டானில் இருந்து சிகிச்சைக்காக லண்டனுக்கு பறந்து வந்து உலக மனித உரிமை அமைப்பிடம் இது பற்றி புகார் செய்த பின்புதான் இந்த விஷயமே வெளியே வந்தது..

சர்வாதிகாரிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அட்டூழியத்தை ஒன்று போலத்தான் செய்கிறார்கள். இவனுக தலைல இடி விழ..!!!




ஹியரிங் எய்டு கிளப்

எங்கேயாவது வெளியிடங்களில் என்னை மாதிரியே காது கேட்கும் கருவியை மாட்டியிருக்கும் இளையவர்களைக் கண்டால் ஏதோ நமது தூரத்து உறவினர் மாதிரி தன்னிச்சையாக எனது முகம் புன்முறுவலைக் காட்டிவிடுகிறது.. தவிர்க்க முடியவில்லை. ச்சே.. நம்மளை மாதிரியே இன்னும் எத்தனை பேரை இந்த முருகன் இப்படியாக்கி வைச்சிருக்கான்னு நினைச்சு அந்த நேரத்துல வருத்தமும் வரும்.

முதியோர்கள் காதில் மிஷின் வைத்திருப்பதைப் பார்த்தால் சரி.. “வயதாகிவிட்டது.. காது பழுதாகியிருக்கும். வச்சுட்டாங்க.. வேறென்ன செய்யறது.. முருகன் கொடுத்தது அவ்ளோதான்..” என்ற சமாதான எண்ணமும் மனதில் உண்டாகிறது..

இப்போது எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு பேர் இந்த ஹியரிங் எய்டு மாட்டியவர்கள் கிளப்பில் சேர்ந்திருப்பது எனக்கு பெரிய வருத்தத்தைத் தந்தாலும், நான் அவர்களுடனான ஒரு ஒற்றுமையில் இருக்கிறேனே என்ற ஒரு சிறு சந்தோஷமும் லேசாக வந்திருக்கிறது.


ஒருவர், இந்திய அரசியலையும், அரசியல்வியாதிகளையும், அவர்தம் சாதனைகளையும், சோதனைகளையும் எனது நினைவு தெரிந்த நாளிலேயே எனக்குக் கற்றுக் கொடுத்த அரசியல் ஆசான் திரு.சோ.ராமசாமி.

இன்னொருவர், சினிமாவுலகத்திற்குள் கால் வைக்க வேண்டும் என்கிற ஆவலையும், வெறியையும் எனக்குள் ஏற்படுத்திய எனதருமை திரையுலகத்துறை ஆசான் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

பாவம்.. இவருக்குமே வயது 75 ஆகிவிட்டது என்பதால் வருத்தத்துடன் இருவரையும் வரவேற்கிறேன்.. வெல்கம் மை டியர் சீனியர்ஸ்.

இன்னும் ஒரு முக்கியப் பிரமுகருக்கும் இந்தக் கேளாமை நோய் உண்டு. ஆனால் அதனை வெளியில் சொல்லாமல் இருந்து வருகிறார்.  80 வயதான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாதான் அவர்.

சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருடனான செயலாளர்கள் தொடர்பான முரண்பாட்டில் எஸ்.எம்.கிருஷ்ணா உடனுக்குடன் பதில் சொல்ல முடியாமல் போனதே இதனால்தானாம்.. ஆனால் இதனை வெளியில் சொல்லாமல் சமாளித்து வருகிறார். இவருக்கு எப்படி புத்தி சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் வெளியுறவுத் துறைச் செயலாளர்கள்.. பூனைக்கு யார் மணி கட்டுவது..?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் தோழர்களே..!

கமல்ஹாசன் பாராட்டு விழா சர்ச்சை - கேரள நடிகர்களின் தைரியம்..!

25-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“மாமியாருக்கு தொடையில புண்ணாம்.. அடங்கொப்புரானே, மருமகன்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ன்னாங்களாம்..” - அது மாதிரியாயிருச்சு நம்ம உலக நாயகன் கமல்ஹாசனுக்கு.

கமலஹாசனின் நடிப்பு கேரியரின் துவக்கக் காலத்தில், அதாவது அவரது டீன் ஏஜ் பருவத்தில் மலையாளப் படங்களில்தான் அவரது ‘கேரக்டருக்கே' ஏற்றாற்போல் கேரக்டர்கள் கிடைத்தன.

'கன்னியாகுமரி', 'மதனோல்சவம்', 'விருதம்', 'வேளாங்கன்னி மாதா,' 'ஈடா', 'சத்தியவான் சாவித்திரி', 'ஓர் மகள் மரிக்குமோ,' 'டெய்சி', 'சாணக்கியன்' என்று எனக்குத் தெரிந்த லிஸ்ட் குறைவுதான்.. ஆனாலும் ஸ்ரீதேவி, லட்சுமி, சீமா, ஜெயபாரதி, ஷீலா என்று அண்ணனுக்கு ஜோடி கட்டிய நடிகைகள் எல்லாம் பெரிய, பெரிய ஹீரோயின்கள்தான்.


கேரளாவில் வருடந்தோறும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு வார காலம் மாநிலம் முழுவதும் விழாக்களை அந்த மாநில அரசே நடத்தும். அதில் ஒரு பகுதியாக மலையாளப் படவுலகத்தின் மூலமாகப் புகழ் பெற்று தமிழ்த் திரையுலகில் இன்னமும் சாதனை படைத்து வரும் நம்ம அண்ணன், உலக நாயகன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது கேரள அரசு.

இந்த விழாவில் மம்முட்டியும், மோகன்லாலும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி, ஒரு மாத காலம் கழித்து நிகழ்ச்சி நடைபெறப் போகும் ஐந்து தினங்களுக்கு முன்பாக, கேரள மாநில திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா' அமைப்பின் தலைவரும், நடிகருமான இன்னசென்ட் இதனைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“கமலஹாசனைவிட சாதனை செய்தவர்கள் பலர் கேரளாவிலேயே இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு எதற்கு கேரளாவில் பாராட்டு விழா..? நாங்கள் இதனை ஒத்துக் கொள்ளமாட்டோம்.. இந்த விழாவை 'அம்மா' அமைப்பு புறக்கணிக்கிறது.. இதையும் மீறி தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகள் அந்த விழாவில் கலந்து கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்று சொல்லிவிட்டார்.

இன்னசென்ட் சொன்னதுபோலவே, விழாவுக்கு ஒரு சுமாரான நடிகர்கூட வரவில்லையாம்.. கமல் தற்போது நடித்து வரும் மலையாளப் படத்தின் ஹீரோவான ஜெயராம்கூட வரவில்லை. வாழ்த்துரைப் பட்டியலில் இருந்த மோகன்லாலும், மம்முட்டியும் மரியாதைக்குக்கூட வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக போனில் “ஸாரி” சொல்லிவிட்டதாக கோடம்பாக்கத்து 'பட்சி'கள் தெரிவிக்கின்றன.

"அம்மா அமைப்பில் இருந்து பெரிய தலைகள் ஒருவராவது வருவார்கள்.. வர வேண்டும்" என்று கேரளாவை ஆள்பவர்கள் மிகப் பிரயத்தனம் செய்தும் ‘அம்மா' அமைப்பின் ஒற்றுமையைச் சிதைக்க முடியவில்லை.

இதனால் கடுப்பான கேரள முதல்வர் அச்சுதானந்தன் அந்த விழாவில் பேசும்போது, “மலையாள நடிகர்கள் விளம்பரக் கலையைத்தான் விரும்புகிறார்கள். உண்மையான கலையை மதிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இருந்திருந்தால் இன்றைக்கு இங்கே வந்திருப்பார்கள்” என்று தாக்கிவிட்டார்.

இப்படி பேசியது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இதற்காகவெல்லாம் ச்சும்மா இல்லை ‘அம்மா' அமைப்பு.. இன்று அவசரமாகக் கூடிய அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் அச்சுதானந்தனை பரேடு எடுத்துப் பேசி முடித்துவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் “முதல்வர் அச்சுதானந்தனின் பேச்சு தற்போது கமல்ஹாசனின் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமல்ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல் மந்திரி தனது பேச்சைக் கடுமையாக்கிக் கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் கமல்ஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு, மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு செய்யப்பட்டது” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருக்கின்றன.

‘அம்மா' அமைப்பு, என்பது மாநிலத்தை ஆளும் அரசின் முடிவை எதிர்த்து, முதலமைச்சரின் பேச்சைக் கண்டிக்கின்ற அளவுக்குத் தைரியமாக குரல் கொடுக்கும் முதுகெலும்புள்ள கலைஞர்கள் சங்கமாக உள்ளது என்பது முதல் விஷயம்.

இரண்டாவது, ஒரு சங்கத்தின் முடிவை அச்சங்கத்தில் உள்ள அத்தனை பேரும் தங்களது சுய விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதனைப் பின்பற்றுவது.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது..? யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு சலாம் போட்டு, குல்லா வைத்து, குத்துப் பாட்டுக்கு நடிகைகளை ஆட வைத்து, அவர் மனம் குளிர வைக்கின்ற அத்தனையையும் செய்கிறார்கள் நமது நடிகர்கள். ஸாரி கலைஞர்கள் என்று சொல்ல என் மனம் வரவில்லை.

ஆட்சியாளர்கள் சினிமாவுலகத்துக்கு நல்லது செய்கிறார்கள் அதனால் வாழ்த்துகிறோம் என்கிறார்கள். வாழ்த்துங்கள் தவறில்லை. அதே சமயம் கண்டிக்கின்ற நேரத்தில் கண்டிக்க வேண்டாமா..?

‘விருமாண்டி' படத்தின் டைட்டிலை மாற்றும்படி டாக்டர் கிருஷ்ணசாமி வெட்டியாக போராட்டம் நடத்தியபோது, அதனை எதிர் நோக்கி கமல் மட்டுமே கோட்டைக்குச் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு கேட்க வேண்டிய நிலைமை இருந்தது. உண்மையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அரசுதான் அன்றைக்கு ஓடோடி வந்திருக்க வேண்டும்.. ஆனால் வரவில்லை. நடிகர்கள் சங்கம் அமைதி காத்தது.

‘பாபா' படத்தின் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி பாட்டாளி மக்கள் கட்சியினர் ரகளை செய்தபோது ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை விட்டதோடு சரி.. அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையையும், அதன் தலைவரான ஜெயலலிதாவையும் கண்டிக்காமல் விட்டுவிட்டது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மரணமடைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அரசு மரியாதை வழங்கும்படி எழுத்துப்பூர்வமாக அந்தச் சூழலிலும் எழுதிக் கேட்ட பின்புதான் ஆத்தா மனமிரங்கி அனுமதி தந்தார். அதான் அனுமதி கிடைச்சிருச்சே என்ற நிலையில் நடிகர் சங்கமும் அமைதியானது. ஆனால் உடலை அடக்கம் செய்ய இடம் கேட்டு கிடைக்காததால்தான் பெசன்ட் நகர் மயானத்தில் எரித்தார்கள். இடம் கேட்டதற்கு வந்த பதில் “நாவலர் நெடுஞ்செழியனுக்கே நாங்கள் நினைவாலயம் கட்ட இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்..” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதனைக் கண்டித்திருக்க வேண்டாமா..?

குஷ்பு கற்பு பற்றி பேசியபோது, அவரது வீட்டு முன்பாக விளக்கமாறும், கையுமாக நின்று சில அரசியல் ரவுடிகள் ரவுடித்தனம் செய்தபோது இதே நடிகர் சங்கம் முழு அமைதி காத்தது. போதாக்குறைக்கு ஆளாளுக்கு கற்பு பற்றி லெக்சர் அடித்தது தனிக்கதை..! ஒரு சக நடிகர் வரைமுறை மீறப்பட்டு தாக்கப்படுகிறார் என்கிற போது அவருக்குப் பரிந்து பேசவோ, ஆதரவு தெரிவிக்கவோ, பின்னணியில் அமைதி காக்கும் ஆட்சியாளர்களைக் கண்டிக்கவோ மனமில்லாமல் போய்விட்டது இந்த நடிகர் சங்கத்திற்கு..!

எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சமீபத்தில் முரசொலியில் தான் எழுதிய கவிதையில் 'மூன்றாம் தர நடிகை..' 'குலுக்கல் ஆட்டம் ஆடியவர்..' 'ஜிகினா டிரெஸ்ஸில் வந்தவர்..' என்றெல்லாம் நடிகை ஜெயலலிதாவைப் பற்றி கருணாநிதி எழுதிய கவிதையைப் பற்றித் துளியும் கவலைப்படாத இந்த நடிகர் சங்கத்தினர்தான், தினமலர் பத்திரிகை நடிகைகளைப் பற்றி எழுதிய அவதூறு பற்றிச் சிலிர்த்து எழுந்தார்கள்..! 

ஆளுக்கொரு நீதி என்பதிலும்கூட ஆளும் கட்சியினரையோ, முதல்வரையோ குற்றம் குறை சொல்லி எதையும் பேசிவிடக் கூடாது என்பதில் மட்டும் இப்போது வரை உறுதியுடன் இருக்கிறார்கள்.

தமிழகமே அரிதாரம் பூசியவர்களின் மகிமையின் பின்னால் இருப்பதைப் புரிந்து கொண்ட தி.மு.க. அரசு மட்டுமே, சினிமா கலைஞர்களின் பெரிய சங்கங்களில் தங்கள் சார்பான ஆட்களை வைத்து சங்கத்தையே தன் வசம் இழுக்கும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.

நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவரது அம்மா மறைவுக்கு ஜெயலலிதா வராததை காரணம் காட்டியும், ஸ்டாலின வந்ததை நினைத்தும் தாத்தாவிடம் சரண்டராகிவிட்டார். கமலும், ரஜினியும் தலைவர் பதவியை விரும்பாததால், சரத்குமார் தனது கட்சியின் இமேஜிற்காகவும், தனக்காகவும் தலைவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இராம.நாராயணனே மீண்டும் தலைவராகிவிட்டார். இயக்குநர் சங்கத்தில் பாரதிராஜா தலைவர். அவருக்கான கலைஞர் டிவியின் ஸ்லாட் டைம் உறுதியான பிர்லா சிமெண்ட்டில் கட்டப்பட்டுள்ளது. உடைத்தெறியவே முடியாது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான 'பெப்ஸி'யின் தலைவரான வி.சி.குகநாதன்,  கரை வேஷ்டி கட்டாத உடன்பிறப்பாகவே மாறிவிட்டார். ஆகவே, ஆட்சியாளர்களுக்குக் கவலையில்லாமல் போய்விட்டது..

சமீபத்தில் நடந்த விழாவில் சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவரான விடுதலை, “நீங்கள்தான் என்றென்றைக்கும் எங்களுக்குத் தலைவர்” என்று ஒத்து ஊதிவிட்டார். பெப்ஸி தலைவர் குகநாதனோ, “அடுத்த முதல்வரும் நீங்கள்தான். கட்டி முடிக்கப்படும் அந்த நகரத்தையும் நீங்கள்தான் திறந்து வைக்கப் போகிறீர்கள். நீங்கள் அங்கு வந்து எங்களோடு தங்குவதற்காக ஒரு வீடே தனியாகக் கட்டப் போகிறோம்..” என்று உறுதியளித்துவிட்டார்.

ஆக மொத்தம்.. ஆளுகின்ற அரசுகளின் அறிவிக்கப்படாத துணை கழக அமைப்புகளாக, கலையுலக சங்கங்களையும் மாற்றிவிட்ட கொடுமைதான் இங்கே நடந்து வருகிறது.  

மலையாளப் படவுலகினர் இந்த அளவுக்காவது தைரியமாக இருக்கிறார்களே.. பரவாயில்லை. உண்மையான கலைஞர்களான அவர்களை நாமும் வாழ்த்துவோம்...!

உங்களுக்காக நம்ம அண்ணன் கமல்ஹாசன் நடித்த 'ஈடா' என்கிற மலையாளப் படத்தின் பாடல் காட்சி இங்கே..


ஆனந்தின் டாக்டர் பட்டம் சர்ச்சை..! அலட்சியமான அதிகார வர்க்கம்..!

25-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தனது 18-வது வயதில் பத்மஸ்ரீ விருது.. 23-வது வயதிலேயே விளையாட்டுக்கான உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது. 2000-ம் ஆண்டு பத்மபூஷன் விருது.. 2007-ம் ஆண்டு பத்மவிபூஷன் விருது.. 2000ம் ஆண்டில் இருந்து 2002-ம் ஆண்டுவரையிலும் பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம்.. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பட்டம்.. பிடே ரேங்கிங்கில் 2800 புள்ளிகளை எடுத்து முதல் ஐவரில் ஒருவராகக் காட்சியளித்த முதல் இந்தியர்.. 15 மாதங்கள் தொடர்ச்சியாக உலகின் நம்பர் ஒன் செஸ் வீரராகத் திகழ்ந்த சாதனை.. என்று எழுதினால் போய்க் கொண்டேயிருக்கும் அளவுக்கு சாதனைகளைப் படைத்திருக்கும் இந்த விஸ்வநாதன் ஆனந்த் என்ற மயிலாடுதுறையில் பிறந்த தமிழனுக்கு நேற்றைக்கு வந்த சோதனை மட்டும் வேறொரு இந்தியனுக்கு வந்திருந்தால் இந்நேரம் இந்தியாவே அலறித் துடித்திருக்கும்.

ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்திருக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை ஆனந்த் செய்து வந்திருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இது தொடங்கிவிட்டது. தனது செஸ் விளையாட்டிற்காக வருடத்தில் பெரும்பாலான நாட்களை ஸ்பெயினில் கழித்துவரும் ஆனந்தின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் டீமுக்கு அவர் இந்தியரா என்று திடீர் சந்தேகம் வந்துவிட்டது. கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனந்தும் அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்.

எல்லாம் முடிந்தது என்ற நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு வந்து, பட்டம் வாங்க ஆசையோடு வந்திருக்கும் நிலையில், “இன்னும் எங்களது சந்தேகம் தீரவில்லை.. ஆனந்துக்கு டாக்டர் பட்டம் கொடுக்காதீர்கள்” என்று மத்திய மனித வள அமைச்சகம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் கொடுத்ததினால் நிகழ்ச்சி கேன்சல். இது ஆனந்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தைக் கொடுத்திருக்கும்.?

ஆனாலும் மனிதர் எதையும் அலட்டிக் கொள்ளாமல் தான் பாட்டுக்கு கண்காட்சிப் போட்டியில் காய்களை நகர்த்திக் கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தபோது, கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது.

இந்திய பாஸ்போர்ட் இல்லாத ஒருவர் வெளிநாட்டிற்குப் போயிருக்கவே முடியாது. இது முதல் விஷயம்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து கொண்டவர் மறுபடியும் இந்தியாவுக்குள் கால் வைப்பதும் தூதரக அனுமதியில்லாமல் முடியாத விஷயம்.. இது இரண்டுமே ஆனந்தின் விஷயத்தில் தெளிவாக இருக்கும்போது, இதைக்கூட சோதிக்கத் தெரியாதவர்களையெல்லாம் அதிகாரிகளாக வைத்திருக்கும் இந்த அரசியல் அமைப்பியல் நமக்குத் தேவையா..?

ஆனந்த் ஸ்பெயினில் குடியேறியிருப்பது செஸ் விளையாட்டில் மேலும், மேலும் வளர்ச்சியை அடைவதற்காக.. அந்த வளர்ச்சியினால் அதிகம் பெருமையடப்போவது யார் இந்தியாதான். எந்த ஒரு போட்டியிலும் பக்கத்தில் மூவர்ணக் கொடியில்லாமல் ஆனந்த் விளையாடி நான் பார்த்ததில்லை. இந்தியாவின் சார்பாகத்தான் அத்தனை உலகப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்த முட்டாள்தனமான அதிகாரிகளுக்கு எப்படி இந்த சந்தேகம் எழுந்திருக்க முடியும்..? எதனால் வந்திருக்கிறது..?

அப்படியே வந்தாலும் தங்களது மேல் மட்டத்திற்கு விஷயத்தைக் கொண்டு சென்று முடித்திருக்க வேண்டாமா..? இந்தப் பிரச்சினையை ஏன் இரண்டு வருடங்களாக ஜவ்வாக இழுத்தார்கள்..? தெரியவில்லையெனில் விளையாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகியிருக்கலாமே.. அவர்கள் சொல்லியிருப்பார்களே.. எதுவுமே செய்யத் தெரியாத.. யோசிக்கத் தெரியாத இந்த அதிகார வர்க்கம்தான் டெல்லியை ஆண்டு கொண்டிருக்கிறது போலும்..

இன்றைக்கு எல்லாம் முடிந்து கருமாரி கொண்டாடிய பின்பு வெளிச்சத்துக்கு வருகிறார் மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல். ஆனந்திடம் தொலைபேசியில் பேசி தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும், ஆனந்த் அந்த விருதைப் பெற ஒத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த முட்டாள்தனமான பிரச்சினையைக் கிளப்பிய அதிகாரிகளை என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவில்லை.

அநேகமாக அதிக முறை மன்னிப்பு கேட்டிருக்கும் ஒரே கேபினட் அமைச்சர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா..? இப்போது மத்திய அமைச்சராகிவிட்டதால் இவர் ஒரு வக்கீலா என்று யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் இவருக்கு தார்மீகக் கோபம்கூட வராதா.. என்ன..?

இது பற்றிய செய்திகள் வெளியில் வந்தால் நமக்குத்தானே கேவலம் என்றுகூட அந்த அதிகாரிகள் நினைக்கவில்லையெனில், நானெல்லாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கே மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.. விரும்பவும் இல்லை..

ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..! 

இனிது இனிது - சினிமா விமர்சனம்


21-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ஹேப்பி டேய்ஸ்' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த 'இனிது இனிது'. 


4 மாணவர்கள், 4 மாணவிகள் என்று எட்டு பேர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பாடப் பிரிவில் முதலாமாண்டில் சேர்ந்தது முதல், கல்லூரியைவிட்டு வெளியே வரும்வரையிலான அவர்களுடைய கல்லூரி வாழ்க்கைக் கதையைத்தான் இதில் சொல்லியிருக்கிறார்கள்.

கல்லூரிக்கு எதற்குப் போனார்களோ அல்லது போகிறார்களோ.. அந்தப் படிப்பு என்ற ஒன்றை மட்டும்விட்டுவிட்டு மீதி அத்தனையையும் இதில் காட்டுகிறார்கள்.

கல்லூரிகளில் ராகிங் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முதல் லோக்கல் கவுன்சிலர்வரையிலும் குரல் கொடுத்து வரும் சூழலில், அப்படியொரு சுகமும் மாணவர்களுக்கு உண்டு என்பதை பற்ற வைத்திருப்பது போல் இதில் வரும் காட்சிகள் பல உண்டு. முற்றிலுமாக தவிர்த்திருக்கக் கூடிய விஷயம் இது.

என்னதான் தடை செய்தாலும் அது நிஜத்தில் நடக்கத்தான் செய்கிறது என்றாலும், அதற்கு ஒரு அளவு வைத்து செய்திருக்கலாம்.. அதையே காமெடியாக்கி செய்திருப்பதால் அதன் தாக்கம் மற்றவர்களைச் சேராது என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. ஆனால் படத்தில் ராகிங் காட்சிகள் ஓவர் டோஸ்.
 

அதேபோல் கல்லூரி லெக்சரராக வரும் அஞ்சலா ஜாவேரியின் மீது மாணவன் ஜொள்ளு விடுவதும், அதனை பார்த்தவுடன வரும் காதலாக வர்ணிப்பதும் ரொம்பவே கொடுமை.. இது போன்று வகுப்பறைகளில்  ஆசிரியைகளின் உடை நெகிழ்வதைப் பார்த்து ஜொள்ளு விடும் மாணவ சமுதாயத்தையும், உடையை நெகிழ வைக்க வேண்டிய ஜன்னல் கதவுகளை மாணவர்களே திறப்பதும், அஞ்சலா குனியும்போது காற்று வீச வேண்டி மாணவர்கள் கையில் இருக்கும் நோட்டுப் புத்தகங்களை வீசி காற்றை வரவழைக்கின்ற காட்சிகளும் வெட்கக்கேடான விஷயங்கள்..! 


பள்ளிகளைப் போன்றே கல்லூரிகளும் இருக்கும்.. இருக்க வேண்டும் என்கிற நினைப்பையே மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டிருக்க சினிமா இயக்குனர்களும், கதாசிரியர்களும் மட்டுமே இந்த அளவுக்கு மட்டமான சிந்தனையை பகிரங்கப்படுத்தி வருவது கேவலமானது.

நான்கு மாணவர்களுமே சொல்லி வைத்தாற்போல் மூன்று மாணவிகள் மேல் காதல் கொள்கிறார்கள். அதில் அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் மோதல்கள், தாபங்கள், காதல்கள், ஈகோக்கள் அத்தனையையும் வரிசைக்கிரமமாக என்னைப் போலவே விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சிற்சில இடங்களில் ஜிலேபியின் மீதே தேன் ஊற்றிச் சாப்பிடுவதுபோல காட்சிகளின் அமைப்பு நகைக்க வைக்கிறது.. குபீர் சிரிப்பு தேவையில்லை. வெகு இயல்பான காட்சிகள் ஊடேயே நகைச்சுவையைத் தெளித்திருக்கிறார்கள்.

முற்றிலும் புதுமுகங்கள் என்றாலும் யாரும் சோடை போகவில்லை.. மது என்ற பெயரில் நடித்திருக்கும் ரேஷ்மி சேலை அணிந்து பஸ்ஸில் இருந்து இறங்கி வருகின்ற காட்சியே அழகு.. ஒரு அழகுக்கு, அழகு சேர்த்தது போல் இருந்தது அவர் சேலை அணிந்து வருகின்ற அத்தனை காட்சிகளும்..

அதேபோல் ஷாலு என்ற சீனியர் மாணவியும்.. அவருடைய பேச்சே இல்லாத முதல் தலையசைப்பு ஆக்ஷனே வித்தியாசத்தைக் காட்டிவிட்டது. அசத்தல்ம்மா.. போட்டோகிராபி முகம்.. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் நடிப்பு தெரிகிறது.. இது போல் நூறில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்..

எம்.எல்.ஏ.வின் மகனாக விமல் என்கிற கேரக்டரில் நடித்திருப்பவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு டைமிங் டயலாக் டெலிவரியில் பின்னியிருக்கிறார். அதிலும் ஜூஸில் எதையோ கலந்து குடித்துவிட்டு அவர் செய்கின்ற கோணங்கிச் சேட்டை.. சூப்பர்..!

ஷாலுவைக் காதலிக்கும் அந்த சைமனின் கதை.. மது-ஆதித் ஈகோவால் மோதல் துவங்கி இறுதியில் ஒன்று சேரும் இந்த ஜோடிகளின் கதை.. ரெண்டாங்கிளாஸில் பாட்டுப் பாடியதை ஞாபகம் வைத்திருந்து இப்போது திடீரென்று வரும் ஒரு பெண்ணால் தன் காதல் பாதிக்கப்பட்டு வருத்தப்படும் இன்னொரு பெண்.. தனது அழகை நினைத்து வருத்தப்பட்டு புலம்புகின்ற காட்சியெல்லாம் சுவையாகத்தான் இருந்தன.

அனைவரையும் ரொம்ப நல்லவர்களாகவே காட்டிவிட்டால் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக இருக்காது என்று நினைத்து இவர்களிடையே ஒரு பெண்ணை மட்டும் கூடு விட்டு கூடு பாயும் காந்தாரியாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பெண்ணை வைத்து மேலும் ஒரு குட்டிக் கலாட்டா.. அதனால் மீண்டும் ஒன்று சேர ஒரு முனைப்பு என்று திரைக்கதையில் கதம்பத்தை இறுக்கி, இறுக்கிக் கட்டியிருக்கிறார்கள்.

படத்தில் பெரிதும் சிரிக்க வைத்தக் காட்சிகள் கிரிக்கெட் போட்டி காட்சிகள்தான்.. வசனமே இல்லாமல் காட்சிகளிலேயே இந்த அளவுக்கு சிரிக்க வைக்க முடியும் என்று காண்பித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம்..

ஒரு நல்லத் திரைப்படம்தான் என்பதை சொல்லுவதைப் போன்ற திரைக்கதை அமைப்புடன் இப்படத்தை எடுத்திருந்தாலும், இது முற்றிலும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான படமாகவே அமைந்திருப்பது மிகப் பெரிய குறை.

இந்தத் திரைப்படம் எந்தக் காரணத்துக்காக ஆந்திராவில் சூப்பர் ஹிட்டானது என்று எனக்குப் புரியவில்லை. 

இந்தப் படம் சத்தியமாக, சத்யம், பி.வி.ஆர்., மாயாஜால், ஐநாக்ஸ் என்ற இடங்களுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, பில்லியனில் இடம் பிடித்து வரும் நங்கைகளுக்கும், அவர் தம் நண்பருக்கு மட்டுமே ஓடும் படமாக இருக்கிறது. பி.அண்ட் சி.யில் எப்படி ஓடும் என்று தெரியவில்லை.

படத்தின் முக்கால்வாசி வசனங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அணிகின்ற ஆடைகள் முதற்கொண்டு, காட்சியமைப்புகள் வரையிலும் ஹை கிளாஸ் சொசைட்டிக்காகவே இருப்பது படத்தின் மிகப் பெரிய குறை.

இவ்வளவு தூரம் படத்தை அக்கறையாக பிரேம் டூ பிரேம் செதுக்கியிருக்கும் இயக்குநர் ஒரு காட்சியாவது மனதில் நிற்பதைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை.. இறுதிக் காட்சியிலாவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏதோ ஒரு பாடலுடன் மங்களம் பாடி முடித்துவிட்டார்கள்.

'ஒரு தலை ராகம்' படத்தில் கடைசி நாள் வகுப்பறை காட்சி இன்னமும் என் மனக்கண்ணில் அப்படியே நிற்கிறது. அந்தக் காட்சியில் சந்திரசேகர் சொல்லும் அந்த 'புறா, ரத்தம்' கதை இன்னமும் என் நெஞ்சில் ஈரத்தைச் சொட்டுகிறது.. மறக்க முடியாத படம் என்று சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், நகைச்சுவையே போதும் என்று நினைத்து பாதியிலேயே விட்டுவிட்டார்களோ தெரியவில்லை..

குடும்பத்துடன் பார்க்கலாம்.. எந்தக் குத்துப் பாட்டு டான்ஸோ, தலைவலி தரக்கூடிய அடிதடிகளோ இல்லை என்றாலும் இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முன் மிகச் சமீபமாக கல்லூரி என்னும் திரைப்படம் இதே போன்ற கதையம்சத்துடன்தான் வந்தது. ஆனால் அதில் நமது மண்ணின் மணமும், மனமும் கொஞ்சம் கலந்திருந்தது.. நம் பக்கத்து வீடு, என் எதிர்த்த வீட்டுக் கதைகளும், நாம் பார்த்திருந்த, கேட்டிருந்த உரையாடல்களும், நாம் சந்தித்த, எதிர்த்த, பழகிய கதாபாத்திரங்களும் கண் முன்னே உலாவியிருந்தனர்.  அதில் கால்வாசி அளவுகூட இந்தப் படத்தில் நமக்கானதாக இல்லாமல் அந்நியப்பட்டு போயிருப்பது ரொம்பவே வருத்தமான விஷயம்.

என்னுடைய இந்த வருத்தத்திற்கான காரணம், இத்திரைப்படம் இந்தியாவின் மிக ஆச்சரிய கலைஞனான பிரகாஷ்ராஜின் சொந்தத் தயாரிப்பு. இரவு, பகல் பாராமல் தான் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்திருக்கும் பணத்தில் தனது விருப்பத்திற்காக அவர் எடுத்திருக்கும் படம் இது. இதற்கு முன் அவர் எடுத்திருந்த படங்கள் மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள்.. அவற்றில் கதை இருந்தது.. தமிழகத்தின் வாசனையும் இருந்தது.. மக்களும் இருந்தார்கள்..

இத்திரைப்படம் மட்டுமே புதிய, இளமையான மேட்டுக்குடி வர்க்கத்தினரை அடையாளம் காட்டுவதைப் போலவும், இவர்கள் பயில்கின்ற கல்லூரிகளின் தன்மையையும், இயல்பையும் காட்டுவதைப் போலவும் வெளியே போய்விட்டது.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிக்க வரும் பால்பாண்டி என்ற மாணவரை ராகிங் செய்யும்போது “உனக்கெல்லாம் எதுக்குடா இந்த காலேஜ்..? இந்த என்ஜீனியரிங் படிப்பு?” என்று கிண்டல் செய்வதெல்லாம் நிச்சயமாக பகடியல்ல.. நகைச்சுவையல்ல.. கொடுமை..

இந்த பால்பாண்டியை வைத்து அவருக்கு தைரியம் கொடுத்து மற்றவர்களின் ஒத்துழைப்பால் அவன் நன்றாக ஆங்கிலம் பேசி நல்ல வேலையில் அமர்வதாக வி.சேகர் டைப் கதையோடு கொண்டு போய் சேர்த்திருந்தாலும் படத்தில் அழுத்தமான காட்சிகளாக அது இல்லாததால் பத்தோடு பதினொன்றாகவிட்டது.

பாடல்கள் ஒலித்தன.. ஒலித்தன.. ஒலித்துக் கொண்டேயிருந்தன.. இடையில் இந்திய தேசியத்திற்கு  ஒரு ஜே-யும் போட்டிருக்கிறார்கள்.. கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை புகுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரே விஷயம். ஒளிப்பதிவு.. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல அவ்வளவு அழகு. அடுத்தது காஸ்ட்யூம்ஸ் அண்ட் செட் பிராப்பர்ட்டீஸ்.. ஒவ்வொரு பிரேமையும் கலை நுணுக்கத்தோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அவரே பிரபலமான ஒளிப்பதிவாளர் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் போலும்.. வாழ்த்துக்கள் குகன் ஸார்.

'இனிது இனிது காதல் இனிது' என்பவர்கள் தாராளமாக இந்தப் படத்திற்கு தங்களது 'காதல்களோடு' செல்லலாம்.

வாய்தா ராணி ஜெயலலிதாவின் வாய்தா வரலாறு..!

20-08-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது சொந்தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம், மற்றும் கர்நாடக நீதிமன்றங்களில் கடந்த 14 வருடங்களாக  இழு.. இழு என்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

“இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் ஜெயலலிதாதான்” என்று தி.மு.க.வினரும், “இல்லை.. இல்லை. தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கால்தான் தாமதம்” என்று ஜெயலலிதாவும் மாறி மாறி வாய்ப்பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கியே காலம் கடத்துவதாகக் கூறி கடந்த 4-ம் தேதி தி.மு.க.வின் இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று புதுப் பட்டப் பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்.

உண்மையில் இந்த அளப்பறைக்குக் காரணமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக அப்படி என்னதான் நடக்கிறது என்பதை மிகச் சமீபத்தில் நக்கீரன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை விரிவாக விளக்கியுள்ளது.

அது நமது பதிவுலகத்திற்காக இங்கே வைக்கப்படுகிறது..


18-09-1996

முதல் தகவல் அறிக்கை வழக்கு குற்ற எண் : 13 ஏ.சி./96/ ஹெட் குவார்ட்டர்ஸ் Charge w/s 13(1) (e) r/w 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் இந்தியாவிற்குள் உள்ளவை..

04-06-1997

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

05-06-1997

நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.

21-10-1997

2,3 மற்றும் 4-ம் குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

02-09-2000

இரண்டாவது வழக்கு குற்ற எண் : 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/2 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் லண்டனில் உள்ளவை.

23-03-2001

2-வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

17-04-2001

குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (முதல் குற்றவாளி ஜெயலலிதாவை தலைமையைகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மே 21-ல் முதலமைச்சரானார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 21-09-2001-ல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதே சமயம் முதல் குற்றவாளி ஜெயலலிதா 02-03-2002-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நவம்பர் 2002 - பிப்ரவரி 2003

76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்கெனவே கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து பல்டி அடித்தனர்.

21-02-2003

அரசுத் தரப்புச் சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

24-02-2003

குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.சி.பி.சி படி கேள்விகள் கேட்கப்பட்டன.

27-02-2003

குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகள் 1 மற்றும் 2 விசாரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

28-02-2003

கடந்த தேதியில் நடைபெற்ற விவாதம் தொடர்ந்தது. இதே நாளில் தி.மு.க. பொதுச் செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், டிரான்ஸ்பர் பெட்டிஷன் 77-78/2003-ன்படி இந்த வழக்கிற்குத் தடை விதித்தது.

18-11-2003

இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண் 208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

28-03-2005

சாட்சிகளின் வாக்குமூலங்களும், வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசிற்கும் வழங்கப்பட்டது.

27-06-2005

முதல் குற்றவாளி ஜெயலலிதா 11-02-2002-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஜூலை 2005

2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 - என்ற மனு, அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்டது.

05-08-2005

உச்சநீதிமன்றம், அன்பழகனின் வழக்கை ஏற்றுக் கொண்டு பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.

07-12-2009

உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் : 938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்தது.

30-01-2010

சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளைத் திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண் : 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண் : 322/2010 தாக்கல் செய்யப்பட்டது.

25-02-2010

சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண் : 321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண் : 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

03-03-2010

அரசுத் தரப்புச் சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

இதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் மனு எண் : 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.

04-03-2010

03-03-2010-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி மனு எண் : 346-ல் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 மனுக்களின் மீது விவாதம் நடைபெற்றது.

05-03-2010

மனு எண் : 340, 341, 346 இம்மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்.

08-03-2010

05-06-1997-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண் : 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.

10-03-2010

79/2010 மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

19-03-2010

மனு எண் 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 மனுவொன்றை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

22-03-2010

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 03-05-2010-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

18-04-2010

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண் 359-ஐ தாக்கல் செய்தனர்.

27-04-2010

ஆனால் இந்த மனுவை (மனு எண் :359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

07-05-2010

11-05-2010-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 11-05-2010-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

11-05-2010

விசாரணை நீதிமன்றத்தில் மனு எண் : 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறைச் சட்டம் 482-ன்படி தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது. இதனால் குற்றவாளிகள் இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

மே-2010

70000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

21-07-2010

3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.

22-07-2010

மனு எண் : 396. விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் இந்த மனு நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்த போதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை 06-08-2010, 09-08-2010, 11-08-2010 மற்றும் 13-08-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

29-07-2010

மனு எண் : 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளியான ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு எண் : 3748/2010

30-07-2010

மனு எண் : 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்ப வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதன் வழக்கு எண் : 3766/2010.

16-08-2010

மனு எண் : 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எண் : 3766/2010 மீதான விசாரணை இன்று நடந்தது. தொடர்ந்து அடுத்த விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

19-08-10

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு எண் : 3766/2010 மீதான விசாரணை இன்றும் தொடர்ந்து நடந்தது.. வழக்கறிஞர்களின் வாதம் தொடர்ந்து நடைபெற வேண்டியிருப்பதால் வழக்கு ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இனி நான்..!

இந்த அளவுக்கு வருடக்கணக்காக இந்த வழக்கை இழுத்தடிப்பதற்கு ஜெயலலிதா மட்டும்தான் காரணமா..? அரசுத் தரப்பு காரணமில்லையா என்கிற கேள்விக்குறியோடுதான் இதனை தேடிப் பிடித்துப் படிக்க வேண்டியதாகியிருந்தது.

ஜெயலலிதா மீதான முதல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதி  18-09-1996. இதன் பின்பு இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை. 1997-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதியன்றுதான் தாக்கல் செய்துள்ளனர். இதில் 9 மாதங்கள் கழிந்துவிட்டன.

முதல் வழக்கில் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யவே மேலும் 4 மாதங்கள் ஓடி 21-10-1997 அன்றுதான் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முழு முதற் காரணங்கள் குற்றவாளிகள்தான். பெரும்பாலான வழக்குகளில் அனைத்து குற்றவாளிகளுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், தங்களை அதில் சேர்த்தது தவறு.. தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள். இவர்களும் அதையேதான் செய்திருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருக்கிறது.

இதற்கடுத்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நீதிமன்றத்தில் குறட்டை விட்டுத் தூங்கத் துவங்கியது இந்த முதல் வழக்கு.

இடையில் 3 ஆண்டுகள் கழித்து திடீரென்று 02-09-2000 இரண்டாவதாக ஒரு புது வழக்கு ஜெயலலிதா மீதும் இதர குற்றவாளிகள் மீதும் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் 6 மாதங்கள் கழித்து 23-03-2001 அன்றுதான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது..

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவே முதலமைச்சராக பதவியேற்றுவிட அண்டாவுக்குள் விழுந்த குண்டூசியைப் போல கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டன இந்த இரண்டு வழக்குகளும்..

21-09-2001-ல் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்பு 1 வருடம் கழித்தே சாட்சிகள் விசாரணை தொடங்கின. ஆனால் அதற்குத் தெளிவான காரணங்களும் இருந்தன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டார்கள். அல்லது விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்பது அப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

சொல்லி வைத்தாற்போல் மிகச் சரியாக 76 சாட்சிகளும் 2003 பிப்ரவரி மாதம் வரையிலும் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது பல்டி அடித்து தங்களது விசுவாசத்தைக் காட்டினார்கள்.

வழக்கு விசாரணை செல்லும் வேகத்தைப் பார்த்தால் ஜெயலலிதா தப்பித்துவிடுவார் என்பது போல் தோன்றிய நேரத்தில்தான் பேராசிரியர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்து வழக்கினை பெங்களூருக்கு மாற்றும்படியான உத்தரவை பெற்றுக் கொடுத்தார்.

இந்த வகையில் அன்பழகனுக்கு நாம் நிச்சயம் நன்றிக் கடன்பட்டிருக்க வேண்டும். அவர் மட்டும் உரிய நேரத்தில் தலையிட்டு வழக்குத் தொடர்ந்திருக்காவிட்டால் நிச்சயம் ஜெயலலிதா இந்த வழக்கை காலில் போட்டு மிதித்து ஜெயித்திருப்பார்.

பெங்களூருக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலேயே ரிவ்யூ பெட்டிஷன் என்று சொல்லி காலத்தை கடத்தியதும் ஜெயலலிதாதான். இதனால் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து 28-03-2005-ம் தேதியில்தான் பெங்களூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளும், வாக்குமூலங்களும் மொழி பெயர்க்கப்பட்டு குற்றவாளிகள் தரப்பிற்குத் தரப்பட்டன.

இடையில் “எனக்குத் தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது. எனவே தமிழில் எனக்குக் குற்றப்பத்திரிகையை மொழி மாற்றம் செய்து கொடுங்கள்” என்று சசிகலா கொடுத்த மனுவோடு, மறுவாரம் சுதாகரனும், இளவரசியும் சேர்ந்து மனுவைக் கொடுத்து இன்னும் கொஞ்சம் லேட்டாக்கினார்கள்.

2005 ஜூலை மாதத்தில் இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து நடத்த முடிவு செய்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் இந்த வழக்கை நீண்ட வருடங்கள் தூங்க வைத்தது.  

அன்பழகன் தொடர்ந்த வழக்கினால் 05-08-2005-ல் இந்த வழக்கிற்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், நான்கு ஆண்டுகள் கழித்து, 2009 டிசம்பர் 7-ம் தேதி மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு வழக்கினை பைசல் செய்தது.

இந்த 4 ஆண்டு காலம் என்பது நிச்சயம் மிக அதிகமானதுதான்.  அன்பழகன் என்ன காரணத்திற்காக அப்போது அதனை எதிர்த்தார்.. இப்போது மனுவை வாபஸ் பெற்றார் என்பதற்கு பெரிய அளவிலான காரணத்தையெல்லாம் நாம் தேட வேண்டாம். 
தற்போதைய அரசியல் சூழலில்  அ.தி.மு.கவுக்கு எதிராக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய தி.மு.க.வுக்கு ஏதேனும் செய்தி வேண்டும். அதற்காகத்தான் நான்காண்டுகள் கழித்து இப்போதுதான் தூங்கியெழுந்ததைப் போல இந்த வழக்கை வாபஸ் பெற்று, அடுத்து இந்த வழக்குத் தொடர்பான செய்திகள் தினம்தோறும் பத்திரிகைகளில் வெளி வர வேண்டும் என்ற ஆர்வத்திலும், வேகத்திலும் வழக்கு விசாரணையை சூடு பிடிக்க வைத்திருக்கிறது மைனாரிட்டி தி.மு.க. அரசு.
இதன் பின்பு 2010 ஜனவரி மாதம் தொடங்கி மாதந்தோறும் இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று, ஏதேனும் ஒரு முன்னேற்றங்கள் நடந்து கொண்டுதான் வந்திருக்கின்றன. இப்போது தன் பங்கிற்கு, தான் மட்டும் சளைத்தவளா என்பதைப் போல இந்த வழக்கின் மீது மீண்டும் ஒரு முறை கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா.

2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருக்கும் வாசகங்கள் தவறான அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்பதை கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் கழித்துத்தான் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.. என்ன ஒரு அரியக் கண்டுபிடிப்பு..?

எந்தெந்த இடங்களில் குற்றம்,, குறைகள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றைப் பட்டியலிட்டு கேட்டால், கோர்ட்டிலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். மாறாக, இனிமேல் புதிதாக நீதிமன்றமே தனது நேரடி கண்காணிப்பில் மறுபடியும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்கள் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள்.

சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவே, இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது நிச்சயமாக ஏமாற்று வேலைதான்.. வழக்கை காலம் தாழ்த்தும் சூழ்ச்சி என்பதைத் தவிர வேறில்லை.. மக்களுடைய வரிப் பணத்தில்தான் நீதிமன்றங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிற வகையில் இந்த வழக்கிற்காக ஆகின்ற செலவுத் தொகை முழுவதும் தண்டத்திற்கு நம் தலையில்தான் மறைமுகமாக விழுகிறது.

இப்படி கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத்தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும், இந்த வழக்கில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதால்தான், இப்படி மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கண்கூடு.

ஊழல் செய்வதிலும், கூட்டாக கொள்ளையடிப்பதிலும் கருணாநிதிக்கு ஒரு படி கீழே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜெயலலிதா, கருணாநிதி அளவுக்கு செய்கின்ற தவறை மறைக்கத் தெரியாதவராக இருப்பதால் இப்போது கோர்ட் படியேறிக் கொண்டு தவிக்கிறார். 
ஆனாலும், தன் மீது தவறில்லை என்றால், தன் மடியில் கனமில்லையென்றால்.. நீதிமன்றத்தில் துணிந்து நின்று வாதாடி வெற்றி பெற்று தனது நேர்மையைக் காட்டுவதைவிட்டுவிட்டு, எப்பாடுபட்டாவது வழக்கில் இருந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பில் தனது சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஜனநாயகத்தை இப்படி கேலிக்கூத்தாக்குவது ஜெயலலிதாவுக்கு ஒருபோதும் வெற்றியைத் தேடித் தராது.

இதற்காக இவர் எத்தனை கோயில், குளம் என்று ஏறி இறங்கினாலும் செய்த பாவம் சும்மாவா விடும்..?


இவருக்குக் கிடைக்கப் போகின்ற தண்டனையால், இவரைவிடவும் பெரும் தவறுகளைச் செய்து அந்தப் பாவத்தை முழுங்கிவிட்டு உத்தமர்களைப் போல முக்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு   தினம்தோறும் நிம்மதியான நித்திரையைத் தராது என்பதும் மட்டும் நிச்சயம்..!

மக்கள் பணத்துல இப்படியா திம்பானுங்க இந்த நாதாரிங்க..?


19-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எவ்வளவுதான் திட்டினாலும் நம்ம அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவே மாட்டேங்குது.. எருமை மாட்டு மேல கல்லெறிஞ்ச மாதிரி.. “நீ என்ன வேண்ணாலும் செஞ்சுக்க.. சொல்லிக்க.. திட்டிக்க.. நாங்க அப்படித்தான் ஊர்க் காசுலதான் ஊர் மேய்வோம்” என்கிறார்கள் இவர்கள்.

எதுல, எதுலதான் திருடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிருச்சு இவனுகளுக்கு.. சுதந்திர தினம், குடியரசு தினத்துல நமக்கு ஒரு நாள் லீவை கொடுத்திட்டு, நம்ம காசுல இவனுக விருந்து வைச்சு கொண்டாடுறானுக பாருங்க..

இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க..

இனி ஜூனியர் விகடன் கட்டுரை..

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகள், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த தேநீர் விருந்துகளை கூட்ட “இது எதற்கு? இதனால் என்ன பயம்..? இதற்காக எவ்வளவு செலவு?” என்ற கேள்விகளுடன் கவர்னர் மாளிகையையும், கோட்டையையும் ஆராய்ந்தோம்.

தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கவர்னர் மாளிகையின் பெரிய புல்வெளியில் தேநீர் விருந்து. இதற்காக கவர்னர் மாளிகையை மலர் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க வைத்தார்கள். புல்வெளியில் வட்ட வடிவில் போடப்பட்ட மேஜைகளில் விருந்து நிகழ்ச்சி நடைபெற.. நடுநாயகமாக கவர்னரும், முதல்வரும் பங்கேற்பார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்.

தேநீர் விருந்து என்றதும் வெறும் டீ, காபி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. குளிர்பானம், காஜர் அல்வா, சாக்லேட் பிரெளனி, ஜிலேபி, பிஸ்தா கேசரி போன்ற இனிப்பு வகைகளும், டால் கச்சோரி, வெங்காயம் மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய ச்சீஸ் க்ராய்சன்ட், புளிச் சட்னியுடன் கூடிய சமூசா, மின்ட் சட்னியுடன் கூடிய டோக்லா போன்ற கார வகைகளோடு வெண்ணிலா ஐஸ்கிரீம், டீ, காபி போன்ற அயிட்டங்கள் அனைத்தும் பரிமாறப்படும். இந்த அயிட்டங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஆர்டர் செய்யப்படும். 3000 பேருக்கு விருந்து ஆர்டர் செய்வார்கள்.

இந்த விருந்துக்கான செலவுகளை தமிழக அரசின் பொதுத்துறைதான் பொறுப்பேற்றுச் செய்கிறது. அழைப்பிதழ் அச்சடித்தல் தொடங்கி, விருந்து முடியும்வரையில் உள்ள எல்லா ஏற்பாடுகளும் இவர்கள் பொறுப்புதான். நடனக் கலைஞர்களுக்குப் பொன்னாடை, பரிசுப் பொருட்கள், மேடை அலங்காரம், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம், போக்குவரத்துச் செலவு, ஊக்கத் தொகை, தற்காலிகப் பணியாளர்களுக்குத் தினக்கூலி என்று விருந்துக்காக நிறைய செலவாகும்.

கடந்தாண்டுக்கான சுதந்திரம் மற்றும் குடியரசு தின விருந்துக்காக தலா 3000 அழைப்பிதழ்கள் அச்சாயின. அரசு அச்சகத்தில் அச்சானாலும் இதற்காக 34 ஆயிரத்து 503 ரூபாய் செலவானது. இவற்றை விநியோகம் செய்வதற்காக 10,836 ரூபாய் செலவாகியிருக்கிறது.

கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூரில் இருக்கும் தென்னகப் பண்பாட்டு மையம் செய்யும். கடந்தாண்டு இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 1,72,960 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்போது தேநீர் விருந்துக்காக ஜி.ஆர்.டி.கிராண்ட் ஹோட்டலில் உணவுப் பொருட்கள் ஆர்டர் தரப்பட்டது.

இப்படி கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு 4,92,225 ரூபாயும், குடியரசு தினத்துக்கு 5,98,619 ரூபாயும் செலவாகியிருக்கிறது.

1994 முதல் 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய்.

இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

ஆண்டு வாரியாக செலவழிக்கப்பட்ட தொகையைப் பாருங்கள்..

ஆண்டு        -           சுதந்திர தினச் செலவு       -         குடியரசு தினச் செலவு
 
1994               -                     1,05,702                 -                      97,660
 
1995                -                    1,98,609                 -                    1,28,359
 
1996                -                    6,29,643                 -                    4,70,115
 
1997                -                    6,85,866                 -                    6,01,452
 
1998                -                    7,71,003                 -                    6,06,399
 
1999                -                    6,08,732                 -                    7,43,266
 
2000                -                    6,94,306                 -                    7,72,607

2001                -                    5,35,712                 -                    8,61,075

2002                -                    4,39,712                 -                    5,47,154
 
2003                -                    4,33,274                 -                    5,03,654
 
2004                -                                                   -                    1,87,563
 
2005                -                     4,22,648                -
 
2006                -                     3,52,441                -                    4,96,621
 
2007                -                     5,38,026                -                     5,74,887
 
2008                -                     6,86,005                -                     5,87,230
 
2009                -                     4,92,225                -                     5,98,919

இனி நான்..

யாரோ ஒரு புண்ணியவான் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களைப் பெற்றிருக்கிறார் போலிருக்கிறது..

பாருங்க.. இந்த அரசியல் வியாதிகளுக்கு மூணு மணி நேரம் உக்காந்து டீ சாப்பிடுற செலவு 7 லட்சம் ரூபாய்ன்னா நாடு என்னங்க ஆகுறது..?

இவனுக சொந்தக் காசுன்னு இப்படி செலவு செய்வானுகளா..? கொஞ்சமாவது யோசிக்க மாட்டானுங்களா இந்தக் கஸ்மாலங்க..? டீ, காபி, பிஸ்கட்ன்னு முடிச்சிட்டுப் போறதை விட்டுட்டு பிஸ்தா கேசரி வேணுமாம்ல இந்த அயோக்கிய ராஸ்கல்களுக்கு..?

ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகையாக கொடுப்பது மாதம் வெறும் 300 ரூபாய்.. ஆதரவற்ற விதவைகளுக்கு உதவித் தொகையாக வழங்குவது மாதம் வெறும் 400 ரூபாய்.. வேலையற்ற இளைஞர்களுக்குக் கொடுக்கும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்று 'அள்ளி' வழங்குகின்ற இந்த அயோக்கியர்கள்தான், ஒரு நாளில் முழுங்குவதற்கு மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் பணத்தில் செலவு செய்கிறார்கள்.

வேலையற்ற இளைஞர்கள் 200 ரூபாயை வைத்து ஒரு மாதத்தில் என்ன செலவு செய்துவிடுவார்கள்..? ஆதரவற்ற விதவைகள் 400 ரூபாயில் குடும்பம் நடத்தி விடுவார்களா..? உடல் ஊனமுற்றவர்கள் 300 ரூபாயில் தங்களுடைய உடல் உபாதைகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வார்களா..?  இதையெல்லாம் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டார்களா..? 

சொந்த வீட்டில் இருந்தாலும் அதற்காக வாடகைப் படியையும், வெள்ளையடிக்க.. வீட்டின் பரமாரிப்பு, சோபா செட்டுக்களை வாங்கிப் போட என்று மக்கள் பணத்தில் கை வைத்து சுரண்டியெடுக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை என்னவென்றுதான் சொல்வது..?

3000 பேரை கூப்பிடுறோம்.. அதுனால.. என்று இழுக்காதீங்கடா பரதேசிகளா.. பன்னாடைகளா..? உங்களை எவன்டா இப்போ பார்ட்டி வைச்சு கொண்டாடச் சொன்னான்..?

இந்தியால அரசியல்வியாதிகளுக்கு மட்டும்தான் சுதந்திரம்.. மக்களுக்கு இல்லைன்றதுதான் உலகத்துக்கே நல்லாத் தெரியுமே.. அதான் காலைல ஊர்வலம் நடத்தி, கொடியேத்தி நீங்களே கொண்டாடிக்கிறீங்களே.. அந்தச் செலவு பத்தாதா..? வட்டமா உக்காந்து தின்னு வேற எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கணுமா?

நாசமாப் போகப் போறீங்கடா..