ராஜீவ் காந்தி கொலை வழக்கு - கடந்து வந்த பாதை..!

12-11-2022

 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இன்று வரையிலும் இந்த வழக்கு சூடு குறையாத பேசுபொருளாகவே இருந்து வரும் நிலையில், ராஜீவின் கொலைக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது? வழக்கு கடந்து வந்த பாதை என்ன என்பதை ஆண்டுவாரியாக விளக்கும் இந்தக் கட்டுரையை உங்களுக்காக மறுபகிர்வு செய்கிறோம்.

1991 மே 20: ஒதிஷா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகளில் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த கிங் ஏர் விமானத்தில் புறப்பட்டார் ராஜீவ்காந்தி.

1991 மே 21 மாலை 6.30 மணி: விசாகப்பட்டணத்தில் இருந்து ராஜீவ் காந்தி சென்னை நோக்கிப் புறப்பட்டார்.

1991 மே 21 இரவு 8. 20 மணி: சென்னை பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர், பாதுகாப்பு அதிகாரிகளுடன் புறப்பட்டார் ராஜீவ்.

1991 மே 21 இரவு 9 மணி: போரூரிலும், பூந்தமல்லியிலும் இரண்டு தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு ஸ்ரீ பெரும்புதூரை நோக்கிப் புறப்பட்டார் ராஜீவ்காந்தி.

1991 மே 21 இரவு 10.10 மணி: ஸ்ரீ பெரும்புதூரை வந்தடைந்த ராஜீவ் காந்தி இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மைதானத்தை நோக்கி நடந்தார் ராஜீவ் காந்தி.



1991 மே 21 இரவு 10.20 மணி: லதா கண்ணன் என்பவரும் அவருடைய மகள் கோகிலாவும் நின்று கொண்டிருந்தனர். கோகிலா ராஜீவிடம் கவிதை ஒன்றைப் படித்தார். அடுத்ததாக சல்வார் கமீஸ் அணிந்திருந்த பெண்மணி ஒருவர் ராஜீவின் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு கீழே குனிந்தார். அடுத்த நோடி மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டது. அடுத்த நொடி அங்கே ரத்தமும் சதையும் சிதறிக்கிடந்தன.

1991 மே 21 மே 10.25 மணி; ராஜீவ்காந்தி, லதா கண்ணன், கோகிலா, சல்வார் கமீஸ் அணிந்திருந்த பெண், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது இக்பால் உள்ளிட்ட 9 காவலர்கள் உயிரிழந்தனர்.

1991 மே 21 இரவு: ராஜீவ் காந்தி அணிந்திருந்த லோட்டோ ஷூக்கள் மூலம் அவரது உடலை ஜி.கே. மூப்பனார் அடையாளம் கண்டார். அவரது உடல் ஒரு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு (இப்போது ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை)அனுப்பப்பட்டது.

1991 மே 22: ராஜீவ் காந்தியின் உடலுடன் சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும் தில்லி திரும்பினர். கொலை வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐ.ஜியாக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

1991 மே 22: ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்ற எண்: 329/91

1991 மே 24: மத்தியப் புலனாய்வுத் துறை புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தது. வழக்கு எண் - RC 9/S/91/CBI/SCB/MADRAS. இதையடுத்து வழக்கு தமிழ்நாடு காவல்துறையிடமிருந்து சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

1991 மே 29: சந்தேகத்திற்குரிய கொலையாளி, அவர் அருகில் நின்று கொண்டிருந்த குர்தா பைஜாமா அணிந்த நபர் ஆகியோரின் படங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு வெளியிட்டது.

1991 ஜூன் 11: நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான முதல் கைது இதுதான்.

1991 ஜூன் 14: நளினி, முருகன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கடுத்ததாக, பேரறிவாளன்,  ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

1991 ஜூன் 18: ராபர்ட் பயஸ் கைது செய்யப்பட்டார்.

1991 ஜூன் 19: பேரறிவாளன் கைது

1991 ஜூன் 26: ஜெயக்குமார் கைது.

1991 ஜூலை 02: சென்னையின் பிரபல புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம் கைது.

1991 ஜூலை 17: கோடியக்கரை ஜமீன்தார் சண்முகம் கைது செய்யப்பட்டார். ஜூலை 20ஆம் தேதி ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் அவர் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

1991 ஜூலை 27: புலிகள் அமைப்பைச் சேர்ந்த விக்கி, ரகு ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் பிடிபட்டனர். இதற்கு அடுத்த நாள் டிக்ஸன், குணா என்ற இருவர் சயனைடு அருந்தி உயிரிழந்தனர்.

1991 ஆகஸ்ட் 17: கர்நாடகத்தின் முதாடி, பிரூடா பகுதிகளில் தங்கியிருந்த புலிகள் இயக்கத்தினரை காவல்துறை சுற்றி வளைத்ததும் 17 பேர் சயனைடு அருந்தினர். 12 பேர் இறந்துவிட, ஐந்து பேர் காப்பாற்றப்பட்டனர்.

1991 ஆகஸ்ட் 19: பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன், ஓட்டுனர் ஒருவர் உள்ளிட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். காவல்துறை சுற்றி வளைத்ததால், அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.

1992 ஜனவரி 31: பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகிய மூவரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள்.

1992 மே 20: 55 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. 41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 3 பேர் தலைமறைவாக இருந்தவர்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள் 12 பேர். சிறையில் இருந்தவர்கள் 26 பேர்.

1993 மே 5: பிராசிக்யூஷன் தரப்பின் தலைமை வழக்கறிஞர் பி. ராஜமாணிக்கம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சித்திக் முன்பாக தனது வாதத்தைத் துவங்கினார்.

1994 டிசம்பர்: இன்டர்போல் மூலமாக பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானை கைது செய்ய வேண்டுமென இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது சி.பி.ஐ.

1995 ஜூன்: பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென முறைப்படி இலங்கையிடம் கோரியது இந்தியா.

1998 ஜனவரி 28: ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

1999 மே 11: 1998 செப்டம்பர் முதல் 1999 ஜனவரி வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் விசாரித்தனர். மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 

தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். 

மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.

1999 அக்டோபர் 8: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

1999 அக்டோபர் 10: தூக்குக் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

1999 அக்டோபர் 29: ஆளுநர் பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியது.

2000 ஏப்ரல் 19: இந்த விவகாரம் குறித்த மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 24: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

2000 - 2007: இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்.

2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இருந்தாலும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல் முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2007: குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் இந்த கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என செய்திகள் வெளியாயின.

2011 ஆகஸ்ட்: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். 

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18: பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

2014 பிப்ரவரி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெறப்பட்டது. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது மத்திய அரசு.

2014 ஏப்ரல் 25: இந்த வழக்கில் மத்திய - மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 டிசம்பர் 2: மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

ஆனால், 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

2018 செப்டம்பர் 9: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

2021 மே 20: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

2022 மே 18: இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 

2018-ம் ஆண்டில் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையின் மீது செயல்பட ஆளுநர் காலவரம்பற்ற தாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் தமக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறியிருந்தது.

2022 நவம்பர் 11: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையில் தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டும் என்று கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்கள் இருவரை மட்டும் இல்லாமல் வழக்கில் சிறையில் இருக்கும் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

நன்றி : பி.பி.சி. தமிழ்