நதிகள் நனைவதில்லை - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வேலையில்லா பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைச் சொல்ல வந்து, கடைசியில் தேசத்தைக் காக்கும் போராளியின் கதையாக உருமாறியிருக்கும் படம் இது.

வணிகவியலில் முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர் பிரணவ். இவருக்கு தோதான வேலை கிடைக்கவில்லை. செல்லுமிடங்களில் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்ற நிலை.
வீட்டில் தண்டச் சோறு என்று திட்டும் அப்பா. ஒரு பெண் குழந்தையோடு வீட்டில் இருக்கும் விதவை அக்கா. கல்யாண வயதில் தங்கை.. இவர்களை வைத்துக் கொண்டு வேலைக்குப் போகாமல்.. நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு பேசி.. ஊர்த் திருவிழாவில் நாடகம் போட்டு.. கரகாட்டக்காரிகளுடன் நடனமாடி, விளையாடி ஊரைச் சுற்றி வருகிறார் ஹீரோ. இவரையும் ஒரு பெண் காதலிக்க முன் வருகிறாள். ஹீரோவின் ஏழ்மை நிலையையும் தாண்டி காதலித்து வருகிறார் ரிஷா.
இவரது பக்கத்து வீட்டுக்கு குடி வருகிறார் இன்னொரு ஹீரோயின் மோனிகா.  ஒரு நாள் மோனிகாவின் வீட்டில் திருடர்கள் நுழைய.. அவர்களை காப்பாற்றப் போய், திருடர்களை விரட்டியடிக்கும் சண்டையின்போது மாடியில் இருந்து கீழே விழுகும் ஹீரோ தனது ஒரு காலை இழக்கிறார். ஏற்கெனவே தண்டத்துக்கு இருக்கும் நிலையில் இப்போது அப்பாவின் தீவிர வெறுப்புக்கு ஆளாகிறார் ஹீரோ.
இந்த நிலையில் ஹீரோவின் தங்கைக்கு வரன் வருகிறது. வரதட்சணை, 100 பவுன் நகை என்றெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கேட்க.. இதைப் புரட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஹீரோ. ஆனால் அவரால் இப்போதும் முடியவில்லை.. கூடவே அவரது காதலியும் அவரை மறுத்துவிட்டுப் போகிறாள். வெறுத்துப் போகிறார் ஹீரோ.
மோனிகாவின் புண்ணியத்தால் செயற்கைக் கால் கிடைக்கிறது. இதனை வைத்து வேலைக்கு முயற்சி செய்யாமல், கிடைக்கிற வேலையை பார்ப்போம் என்று நினைத்து குப்பையள்ளும் வேலைக்குக்கூட செல்கிறார்.
இடையில் தன்னால்தானே ஹீரோவுக்கு இந்த நிலைமை என்று நினைத்த மோனிகா ஹீரோவை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார். இது பிடிக்காத ஹீரோவின் அப்பா இனிமேலும் உன்னை வீட்டில் வைத்திருக்க முடியாது என்று சொல்லி ஹீரோவை விரட்டியடிக்கிறார்.
எங்காவது போய் தற்கொலை செய்து கொள்ள நினைத்து ஒரு அணைப்பகுதிக்கு வரும் ஹீரோ அணையை வெடி வைத்துத் தகர்க்க நினைக்கும் தீவிரவாதச் செயலை முறியடிக்கிறார்.
இப்போது ஹீரோவுக்குக் கிடைக்கும் பாராட்டையும், பணப் பரிசையும் நினைத்து அவரிடம் வந்து ஒட்டிக் கொள்கிறார் தந்தை. இனி ஹீரோ என் செய்கிறார் என்பதுதான் கடைசி ரீலின் கதை..!
ஹீரோ மிகவும் கஷ்டப்பட்டு வசனங்களை உச்சரிப்பதைப் பார்த்தால் அவருக்கு நடிப்பு டிரெயினிங் இன்னமும் தேவையாய் இருக்கிறது. ஹீரோயின்கள் இருவருமே நிறைய படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இவர்களது நடிப்பிற்குக் குறைவில்லை.
ஹீரோவின் தங்கை கேரக்டரில் நடித்திருக்கும் கல்யாணி நாயர் புது வரவு. தந்தையால் அவமானப்படுத்தப்படும் அண்ணன் மேல் காட்டும் கரிசனமும், பாசமும் சீரியல்களையெல்லாம் தோற்கடித்த காட்சிகள் .
மோனிகா பாடல் காட்சிகளிலும், நடிப்பிலும் குறையே வைக்கவில்லை. அழுத்தமாக கிடைத்த வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அதற்குள் நடிப்புக்கு குட்பை சொன்னால் எப்படி..?
ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களின் சிறிது நேர அலப்பறையைக்கூட தாங்க முடியவில்லை. ஆனால் இவர்களிடையே இருக்கும் திருநங்கை கேரக்டர் ரசிக்க வைத்திருக்கிறார்.
சண்டை காட்சி மட்டும் ஓகே.. சண்டை பயிற்சியாளர் தவசிராஜ் உருண்டு, புரண்டு கடுமையாக உழைத்திருக்கிறார்.
செளந்தர்யனின் இசை குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற கோடிகளில் சம்பளமாக வாங்குபவர்களின் இசையைவிடவும் செளந்தர்யனின் இசை மிகவும் சிறப்பானது.. அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம்தான். தனியார் பண்பலை வானொலிகள் இது போன்ற நல்ல பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பினால் பல இசை ரசிகர்களின் காதுகளையும் இந்தப் படத்தின் இனிமையான இசை சென்றடையும்.
தங்கப்பதக்கம் வென்ற ஒருவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதெல்லாம் நம்பும்படியாகவாக இருக்கிறது..? கதையின் அடிப்படையே கோளாறாக இருப்பதால் ஹீரோவின் வேலையில்லாத விரக்தியை உண்மையாக எடுத்துக் கொண்டு அவருக்காக பாவப்பட முடியவில்லை.
மிகவும் நல்ல கதைதான். ஆனால் இயக்கம்தான் பாடாய்படுத்துகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் இனிமேலும் நான்கைந்து படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றுவிட்டு வந்து படங்களை இயக்கலாம். அந்த அளவுக்கு இயக்கம் மோசம். ஒரு ஹீரோயினை அறிமுகப்படுத்தும் காட்சி எப்படியிருக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல் இயக்கியிருந்தால் எப்படி..? திரைக்கதையும் மிக எளிதாக யூகிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
‘நதிகள் நனைவதில்லை‘ என்று கவித்துவம் வாய்ந்த தலைப்பை வைத்திருந்தாலும், படத்தில் இடம் பெறும் பல வசனங்களை கவித்துவமாக எழுதியிருந்தாலும்  படம் கவிதை வடிவுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.!

வலியவன் - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படம் வெளிவருவதற்கு முன்பேயே படத்தின் அநியாயமான தயாரிப்பு செலவு, தயாரிப்பாளரின் இன்றைய பரிதாப நிலைமை.. இவையெல்லாமும் திரையுலகில் பரவியதால் ஒருவித பரிதாப உணர்வோடுதான் படத்தை எதிர்கொண்டுள்ளார்கள் கோடம்பாக்கத்தில்..!
இந்த பரிதாபத்தை படமும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பது கொடூரமான உண்மை..!
‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் இருந்த செய்நேர்த்தி.. திரைக்கதையில் புதிய யுக்தி, மனதைத் தொடும் கதைக் கரு – இதெல்லாம் இயக்குநர் சரவணனின் அடுத்த படமான ‘இவன் வேற மாதிரி’யில் வேற மாதிரியாகவே இருந்துவிட்டது. அதனால் அந்தப் படம் போணியாகவில்லை. கடைசியாக இதுவும் அப்படித்தான் ஆகியிருக்கிறது.

ஹீரோ ஜெய் வடபழனி போரம் மாலில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு முறை அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகேயிருக்கும் சப்வேயில் செல்லும்போது எதிரில் வரும் ஆண்ட்ரியா இவரைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறார்.
ஆண்ட்ரியா யாரென்றே தெரியாத நிலையில் அவர் சொன்ன ‘ஐ லவ் யூ’ மட்டும் ஜெய்யின் மனசுக்குள் இம்சை செய்ய பல கட்ட தேடுதல் வேட்டைகளுக்கு பிறகு ஆண்ட்ரியாவை தேடிப் பிடிக்கிறார். தானும் ‘ஐ லவ் யூ’ சொல்கிறார். ஆண்ட்ரியாவோ, “நான் ச்சும்மா ஒரு ஜாலிக்குத்தான சொன்னேன்..” என்கிறார்.
மனம் உடைந்து போன ஜெய் கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கும்போது திரும்பவும் அவரது வாழ்க்கையில் குறுக்கே வரும் ஆண்ட்ரியா, தேசிய குத்துச் சண்டை சாம்பியனான அருணை அடிக்கச் சொல்கிறார். அப்படி ஜெய், அருணை அடித்துவிட்டால் அவனை உண்மையில் காதலித்துவிடுவதாகச் சொல்ல ஜெய் ஒரு புல் ஓல்டு மான்க்கை ராவாக அடித்தது போன்ற சந்தோஷத்தின் உச்சத்திற்கே செல்கிறார்.
ஜெய் அருணை அடித்தாரா..? அருணை எதற்காக ஆண்ட்ரியா அடிக்கச் சொன்னார்..? இவர்களது காதல் ஜெயித்ததா என்பதெல்லாம் தியேட்டரில் பொறுமையுடன் அமர்ந்து படம் பார்த்தால் தெரியும்..!
முதல் பாதி முழுவதிலும் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டிக் கொண்டு அலைவது போலவே காட்சிகளை அமைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இது போன்ற பிளாஷ்பேக்கில் கதையிருக்கும் திரைக்கதைகளின் வேறுவடிவமாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகில் பல இயக்குநர்கள் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் சரவணன் அதையெல்லாம் பார்க்கவில்லைபோலும்..
போதாக்குறைக்கு ஹீரோவான நடிகர் ஜெய்.. எல்லா காட்சிகளுக்குமே ஒரே மாதிரியான பீலிங்கை கொட்டியும், காட்டியும் படுத்தியெடுத்திருக்கிறார். ‘ராஜாராணி’யில்கூட அவருடைய அப்பாவித்தனமான நடிப்பு ரசிக்க வைத்தது. இதில் எதுவும் இல்லாமல் போனது அவரது துரதிருஷ்டம்.
ஆண்ட்ரியாவுடன் காரில் செல்லும்போது ஜெய் நடந்து கொள்ளும்விதம் ரொம்பவே ஓவர், இதிலும் ரசிக்க வைத்த ஒரேயொரு காட்சி ஆண்ட்ரியாவை போலீஸ்காரர்கள் நடக்க வைத்து பார்ப்பது.
ஆண்ட்ரியாவின் அழகும், அவரது சின்னச் சின்ன முக பாவனைகளுடன் கூடிய நடிப்பு, அழகம்பெருமாள் மற்றும் அனுபமாகுமாரின் மென்மையான நடிப்பு.. பாலாவின் சிற்சில வசன நடிப்பு.. படத்தை முடிவுக்கு கொண்டு வரும் இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை இவைகளைத்தான் படத்தில் குறிப்பாகச் சொல்ல முடியும்.
அவ்வளவு பெரிய தேசிய குத்துச் சண்டை சாம்பியன்.. ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் ஒருவனை அத்தனை பேர் முன்னாலும் அடிப்பானா..? இதைப் பார்த்து அடி வாங்குபவனின் அப்பா எதற்கு அவனிடம் கெஞ்ச வேண்டும்..? ஒரு வணிக அங்காடியில் இந்தக் கூத்தை ஜனக்கூட்டம் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதெல்லாம் டூமச்..
இத்தனை அடி அடித்திருக்கிறான்.. அந்த வில்லனின் முகம் கூடவா ஹீரோவுக்கு மறந்து போயிருக்கும். இந்த அளவுக்கா அவர் முட்டாளாக இருப்பார்..? ம்ஹூம்.. இயக்குநர் நம்மை அப்படித்தான் நினைத்துவிட்டார் போலிருக்கிறது..!
வழக்கம்போல ஒளிப்பதிவு ரகளைதான்.. பாடல் காட்சிகளிலும் கண்களை ஈர்த்திருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன். இசை இமான் என்றார்கள்.. டைட்டிலும் அப்படித்தான் சொல்கிறது. பாடல்கள்தான் மனதில் நிற்கவில்லை. கூடவே பின்னணி இசையையும் போட்டுத் தாளித்திருக்கிறார் இமான்.
வலுவான, அழுத்தமான கதையை படத்தின் பிற்பாதியில் வைத்துக் கொண்டு முற்பாதி முழுக்க ஜல்லியடித்திருப்பதால் இடைவேளைவரையிலும் படத்தின் கதை என்ன என்றே கண்டறிய முடியவில்லை. படத்தின் பிற்பாதியிலும் அரைமணி நேரம் கழித்தே உண்மைக் கதை தெரிய வருகிறது.
ஷாப்பிங் மால்களில் இருக்கும் தியேட்டர்களில் காசு செலவழிப்பதற்காக வரும் மக்கள் பொறுமையாக இருந்து பார்ப்பார்கள். மற்ற ஊர்களில் படத்தின் இடைவேளையிலேயே எழுந்து ஓடிவிட மாட்டார்களா..?
இயக்குநர் அதிகம் யோசித்திருக்க வேண்டும்..!

CSK - ஷபிக் சார்லஸ் கார்த்திகா - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விட்டால் பேய்ப் படம். அடித்தால் காமெடி படம்.. இதுவும் இல்லையா.. இருக்கவே இருக்கிறது சஸ்பென்ஸ்-திரில்லர் படம். இந்த மூன்றும்தான் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவின் டிரெண்ட்.
இதில் சஸ்பென்ஸ்-திரில்லர் டைப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு திரைப்படம்தான் இது. சார்லஸ், ஷபிக், மற்றும் கார்த்திகா என்னும் மூன்று கேரக்டர்களின் வாழ்க்கையில் ஓரிரு நாட்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படத்தின் கதைக்கரு.

ஷபீக் தூத்துக்குடியில் தனது தாய், தந்தை மற்றும் இரண்டு தங்கைகளுடன் வசிப்பவன். வேலை எதுவும் நிரந்தரமில்லை. கிடைத்த வேலையைச் செய்து வந்தாலும் தனது தங்கைகளை கரை சேர்க்க முடியாமல் தவிக்கிறான். இதோடு இவனுக்கும் ஒரு காதல் உண்டு.
கார்த்திகாவின் சொந்த ஊரும் தூத்துக்குடிதான். ஷபீக்கின் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டவள்.  ஆனால் வேலை பார்ப்பது சென்னையில். வைர பிஸினஸ் செய்யும் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில்..
சார்லஸ் கார்த்திகாவின் காதலன். காதலுக்காக நிறைய பொய்களைச் சொல்லி சமாளித்து வருபவன். இதுதான் இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்.
தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக பணத்தேவையுடன் அலைந்து கொண்டிருக்கிறான் ஷபிக். தனது நண்பன் கள்ளக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான் என்பது தெரிந்தும் அவனிடத்திலேயே வேலை கேட்கிறான். அவன் வைரக்கடத்தல் வேலையைச் செய்யும் பவ்சான் பாயிடம் ஷபிக்கை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறான்.
ஏற்கெனவே இந்தக் கடத்தல் தொழிலில் இருப்பவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போலீஸிடமிருந்து தப்பிக்க நினைத்து தனது அடுத்த கடத்தலுக்கு புதிய ஆளை அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறான் பவ்சான் பாய். அந்த நேரத்தில் ஷபிக் வசமாக மாட்டிக் கொள்ள.. முன் பணத்தைக் கொடுத்து அவனது வாழ்க்கையை புக் செய்துவிடுகிறான் பவ்சான் பாய்.
8 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்து வைரங்களை வாங்கி வரச் சொல்கிறான் பவ்சான். ஷபிக்கும் அவன் சொன்னபடியே வைரங்களை வாங்கும்போது போலீஸ் பார்த்து ஷபிக்கை துரத்துகிறது. ஷபிக் அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லும்போது அவசரத்தில் பேருந்து நிலையத்திற்குள்ளேயே வந்துவிடுகிறான்.
அதில் ஒரு பேருந்தில் கார்த்திகா சென்னைக்கு போக தயாராக இருப்பது தெரிந்தும் அவளிடம் அந்த வைரங்கள் அடங்கிய சின்ன பெட்டியைக் கொடுத்துவிட்டு தான் மட்டும் தனியே சென்று தப்பிக்க நினைக்கிறான்.
ஆனால் போலீஸ் சந்தேக்க் கேஸில் ஷபிக்கை ஸ்டேஷனில் காவல் காக்க வைக்கிறது. மறுநாள் காலையில் இன்ஸ்பெக்டர் வந்த்தும் கையெழுத்து வாங்கிவிட்டு அவனை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
அதற்குள்ளாக வைரங்கள் கைக்கு வராத கோபத்தில் பவ்சான் பாய், ஷபிக்கின் அப்பாவைக் கடத்திக் கொண்டு போகிறான். ஷபிக் பவ்சான் பாயிடம் சென்று உண்மையைச் சொல்லி அழுக.. சென்னைக்கு தனது கூட்டாளிகளுடன் சென்று கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்களை வாங்கி வரச் சொல்கிறான் பவ்சான். அதுவரையிலும் ஷபிக்கின் அப்பா பிணைக்கைதியாக தன்னிடம்தான் இருப்பார் என்றும் சொல்கிறான்.
ஷபிக் பவ்சான் பாயின் கூட்டாளிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருக்க.. அதே நேரம் காதலன் சார்லஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவனது காதலுக்கு குட்பை சொல்லும் கார்த்திகா தொடர்ந்து வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு போக நினைக்கிறாள்.
கார்த்திகா வேலை பார்த்த நிறுவனத்தின் உயரதிகாரிகளான சஞ்சய், சந்துரு இருவரும் தங்களது நிறுவனத்தின் பணத்தைக் கையாடல் செய்து அதனை பவ்சான் பாயிடம் கொடுத்து ரகசியமாக வைரங்களை வாங்கி விற்று பிசினஸ் செய்து வருகிறார்கள். இவர்கள் கொடுத்த 8 கோடி ரூபாய் பணத்தைதான் ஷபீக் கொடுத்துவிட்டு வைரங்களை வாங்கினான்.
இப்போது இந்த நிறுவனத்தில் வேலையைவிட்டுச் செல்லும் சிஇஓ கம்பெனி பணத்தில் கையாடல் நடந்திருப்பது தெரிந்து இதனை பாஸிடம் சொல்லப் போவதாக மிரட்ட.. சிஇஓ-வை சந்துருவும், சஞ்சயும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.  இதனைப் பார்த்துவிடும் கார்த்திகாவையும் கொலை செய்ய அவர்கள் துடிக்க.. அதற்குள் இரவாகி கட்டிடம் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
ஒரு பக்கம் பூட்டப்பட்ட கட்டிடத்திற்குள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாள் கார்த்திகா. செல்போன் செத்துப் போய்விட்டதால் கார்த்திகாவைத் தொடர்பு கொள்ள முடியாத தவித்த நிலையில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் ஷபிக்.. இன்னொரு பக்கம் கார்த்திகாவிடம் மன்னிப்பு கேட்டு தனது காதலை மீண்டும் வாழ வைக்க அதே பில்டிங்கின் வாசலில் காத்திருக்கும் சார்லஸ்.. இந்த மூவரின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படம் சொல்லும் சுவாரஸ்யமான திரைக்கதை.
நடிகர்களின் நடிப்பை தன்னுடைய இயக்கத் திறமையால் அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் சத்தியமூர்த்தி சரவணன். இவரது அழகான, திறமையான இயக்கத்தினால் படமே ஒரு நீட்டான ஓவியம் போல வந்திருக்கிறது..!
ஷபிக்காக நடித்த மிஷால் நசிர் அனைவரைவிடவும் கொஞ்சம் அதிகமான ஸ்கோர் செய்திருக்கிறார். இயலாமைத்தன்மையுடனும், எதையாவது செய்து காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்துடன் சோகமான முகத்துடன் கடைசிவரையிலும் இயல்பாகவே நடித்திருக்கிறார்.
சார்லஸாக நடித்திருக்கும் சரண்குமார்.. ஏற்கெனவே இனிது இனிது படத்தில் நடித்தவர்தான். தாயிடம் ஒரு மாதிரியும், காதலியிடம் ஒரு மாதிரியும் பேசி நடித்து தனது காதலை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவரது தவிப்பு ஒரு அறுசுவை. கட்டிடத்தின் வாசலில் நின்று கொண்டு கார்த்திகாவை பார்க்க ஒவ்வொரு முறையும் முயலும்போதும் நம்மையும் சேர்த்தே பதட்டப்பட வைத்திருக்கிறார்.
கார்த்திகாவான ஜெய்குஹேனி. போட்டோஜெனிக் முகம்.. படத்தின் பிற்பாதி முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார். காதலன் சார்லஸின் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் உறுதியான குரலில் காதலை அந்த இடத்திலேயே கட் செய்துவிட்டு போகின்ற காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர். கை, கால்களைக் கட்டிப் போட்டு பேரலுக்குள் போட்டு தண்ணீரில் மூழ்கடித்து கொல்லப் பார்ப்பது. கிடைத்த நேரங்களில் அடி, உதையை வாங்கிக் கொள்வது.. வில்லன்கள் இவரை துவைத்து எடுப்பது என்று வேறெந்த ஹீரோயினும் இந்தளவுக்கு தனது உடலை புட்பாலாக்கிக் கொள்ள சம்மதித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.. இதற்காகவே இவருக்கு ஒரு பூச்செண்டை பார்சல் செய்ய வேண்டும். பாடல் காட்சிகளில் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மிக அழகாக தென்படுகிறார். இவருக்கு இன்னமும் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நமக்கு நல்லதுதான்..!
வில்லன்களாக நடித்திருக்கும் சஞ்சய், சந்துரு அதிகம் மிரட்டவில்லை என்றாலும், கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகள் என்றாலும் ஷபிக்கின் தந்தையாக நடித்தவரின் அந்த வாட்டமான வட்ட முகம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. வசனமே இல்லாமல் தனது மகனை பார்த்து இயலாமைத்தன்மையுடன் ‘எப்போ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போற?’ என்பது போல பார்க்கின்ற காட்சியில் கொஞ்சம் உச்சுக் கொட்டத்தான் வைத்திருக்கிறார்.
சித்தார்த்த மோகனின் இசையில் பாடல்கள் பரவாயில்லைதான். இந்த மாதிரியான சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு மிகப் பெரிய எதிரியே பாடல் காட்சிகள்தான். இதில் முழுமையாக நீக்கியிருக்கலாம். அதிசயமாக இரண்டு ஒளிப்பதிவாளர்கள் சரவணன், ஜி.மனோகரன் பணியாற்றியிருக்கிறார்கள். பில்டிங்கில் நடக்கும் சேஸிங் காட்சிகளை பரபரப்புடன் படமாக்கியிருக்கிறார்கள்.
அதிகமான வசனங்களையெல்லாம் கொட்டாமல் காட்சிக்குத் தேவையான வசனங்களை மட்டுமே வைத்திருப்பதால் படத்தின் அதிகக் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. வசனம் எழுதிய அண்ணன் கோவி.லெனினுக்கு வாழ்த்துகள்.
முதற்பாதியிலேயே படம் மெதுவாக நகரத் தொடங்கி இண்ட்டர்வெல் பிளாக்கில்தான் வேகமெடுக்கிறது.. இடைவேளைக்கு பின்பு அது பரபரதான்.  சின்னச் சின்ன சீரியல் டைப் திரைக்கதை காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் ஒரு நல்ல சஸ்பென்ஸ்-திரில்லர் கலந்த போரடிக்காமல் செல்லும் பொழுதுபோக்கு படம்தான்..!

இரவும் பகலும் வரும் - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்கை டாட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரித்திருக்கும் படம் ‘இரவும் பகலும் வரும்’. R.S.S.S. Pictures  நிறுவனத்தின் சார்பில் எஸ். தணிகைவேல் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் மற்றும் அனன்யா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலரும் நடித்துள்ளனர். இசை – தீனா, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி. படத்தொகுப்பு – வி.டி.விஜயன்.  ஏ.வெங்கடேஷிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாலா ஸ்ரீராம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
சந்தர்ப்ப சூழலால் பகலில் மாணவன்.. இரவில் திருடனாக வாழும் ஒரு இளைஞன் திடீரென்று மனம் மாறிய நிலையில் அந்த திருட்டு வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். அது முடிந்ததா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஹீரோ மகேஷ் கல்லூரி மாணவர். பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில் திருட்டுத் தொழிலில் தனியாளாக ஈடுபடும் திருடனாகவும் இருக்கிறார்.
இவரது அம்மா இறந்தவுடன் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொள்ள வந்த சித்தி தனது மகளுக்காக பணத்தைச் சேமித்து வைக்கும் குணமுள்ளவராக இருக்கிறார். தன்னைக் கவனிப்பதே இல்லையே என்கிற ஏக்கத்தில் இருக்கும் மகேஷுக்கு கல்லூரி தோழர்கள் மட்டும்தான் குடும்பத்தினராகவும் இருக்கிறார்கள்.
ச்சும்மா கடந்துபோகும் ஒரு நாள் காலைப் பொழுதில் ஹீரோயின் அன்ன்யாவை பார்த்தவுடன் பித்துப் பிடித்துப் போகிறார். அனன்யாவை காதலிக்க நினைத்து வழக்கமான ஹீரோக்கள் செய்யும் அனைத்தையும் இவரும் செய்கிறார்.
இந்த நேரத்தில் செய்யாத ஒரு தவறுக்காக மகேஷின் சித்தி அவனை வீட்டைவிட்டு வெளியே போகும்படி சொல்ல.. ரோஷமடையும் மகேஷ் அதுபோலவே வெளியேறுகிறான்.
இதே நேரம் அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஒரு பக்கா பிராடு. உலக மகா கிரிமினல். நகை பைத்தியம். நகை ஆசை கொண்டு அலையும் இவருடைய கையில் ஊரில் இருக்கும் அனைத்து செயின் திருடர்களும், வீடு புகுந்து திருடும் கொள்ளையர்களும் அடக்கம்..
கண் துடைப்புக்காக யாராவது சிலரை எப்போதாவது சரணடைய வைத்துவிட்டு கேஸை குளோஸ் செய்துவிடுவார். இவருக்குத் துணையாக மேஜிக் ஷோ நடத்தும் ஒரு வில்லனும் இருக்கிறார். இவர்களது கொள்ளைக்கு நாள், நட்சத்திரம் பார்த்துக் கொடுக்கவும் ஒரு ஐயரும் இந்தக் கூட்டத்தில் உண்டு.
அப்படியொரு நாள் மேஜிக் ஷோ நடத்த வாய்ப்பு வருகிறது வில்லனுக்கு. அவர் மேஜிக் ஷோவை நடத்திக் கொண்டிருக்க.. ஆள் இல்லாமல் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடர்கள் லபக்குகிறார்கள். இதே நேரம் ஒரு வீட்டில் மகேஷும் திருடிக் கொண்டிருக்க.. வில்லனின் ஆட்களும் அதே வீட்டில் திருட வருகிறார்கள். இரு தரப்பினரும் பார்த்துவிட.. மகேஷை துரத்துகிறார்கள். இந்தக் களேபரத்தில் வில்லனின் அடியாட்கள் பொதுமக்களின் கையில் சிக்கிவிட மூவரையும் பிடித்து அடித்து உதைத்து இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.
உண்மை தெரிந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பதைபதைக்கிறார். “என் லிமிட்ல எனக்கே தெரியாம எவன்யா அந்த இன்னொரு திருடன்..? அவனை உயிரோட பிடிக்கணும்..” என்று கங்கணம் கட்டி மகேஷைத் தேடிப் பிடிக்கிறார். பிடிபடும் மகேஷ் இப்போது பிளேட்டை திருப்பிப் போட்டு அவர்களுடனேயே ஜோடி சேர்கிறார். கொள்ளையடிக்கும் படலம் இப்போது சட்டப்பூர்வமானதாகவே நடக்கிறது.
ஒரு கட்டத்தில் அனன்யாவின் வீட்டிலும் மகேஷ் திருடப் போக அனன்யா இதைப் பார்த்துவிடுகிறாள். ஆனால் மகேஷ் தப்பிவிடுகிறான். ஊரில் நடக்கும் தொடர் கொள்ளைகள் பற்றி போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டரை அழைத்துக் கண்டிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக செய்தி பத்திரிகைகளில் வருகிறது. இப்போது திருட்டுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார் அனன்யா.
இந்த நேரத்தில் அனன்யாவின் சித்தியான யுவராணியின் செயினை  ஒருவன் அறுக்க.. அந்தச் சம்பவத்தில் கழுத்து நரம்பு அறுபட்டு யுவராணி மரணமடைகிறார். ஆனால் இந்தக் கொலை வழக்கை இன்ஸ்பெக்டர் தனது அதிகார பலத்தால் சாதாரண விபத்தாக மாற்றிவிட.. இந்த நேரத்தில் மகேஷும் மனம் மாறுகிறார். அந்தத் திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பிக்க நினைக்கிறார்.
இதன் முதல் கட்டமாக இன்றைக்கு எங்கெங்கே கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்கிற விஷயத்தை அனன்யா இருக்கும் திருட்டு விழிப்புணர்வு கூட்டத்திற்கு தகவல் கொடுத்துவிட.. பல திருடர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். இது இன்ஸ்பெக்டருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. தன்னிடம் இருப்பவர்களில் யாரோ ஒருவர்தான் இதனைச் செய்கிறார்கள் என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது.
அதே நேரம் அனன்யா மகேஷின் மீது காதல் கொண்டிருப்பது இன்ஸ்பெக்டருக்கு தெரிய வர.. சூழ்நிலை புரிந்து மகேஷை மடக்கத் திட்டம் போடுகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதைப் பார்க்க தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே..!
ஹீரோ மகேஷ் ‘அங்காடி தெரு’ படம் போலவே இதிலும் அப்பாவியான குணாதிசயத்திலேயே நடித்திருக்கிறார். அனைத்துவிதமான ஆக்சன்களுக்கும் ஒரே மாதிரியான முகபாவனையைக் காட்டினால் எப்படி..? காதலுக்கு ஓகே.. ஆனால் ஆக்சனுக்கும், ஒரு ஹீரோத்தனத்துக்கும் பொருத்தமாக வேண்டாமா..? இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட்டானால் அவருக்கும் நல்லது..
அனன்யா.. நடித்தால் டீஸண்ட்டான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்று கங்கணம் கட்டி செலக்ட் செய்து நடிக்கும் நடிகை. அழுத்தமான நடிப்பை தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் காட்டியிருக்கிறார். வெல்டன். இவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் போகப் போக அவரை மென்மையான பேச்சாளி என்பது போல மாற்றிவிட்டது ஏனென்றுதான் தெரியவில்லை.
மகேஷுக்கு சித்தியாக நடித்தவரும், இன்ஸ்பெக்டராக நடித்த இயக்குநர் வெங்கடேஷும்தான் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் வெங்கடேஷ் உடல் முழுக்க நகைகளை அணிந்து கொண்டு தனது நகை பைத்தியக் கதையைச் சொல்லிவிட்டு ஒரு ஆட்டம் ஆடுகிறார் பாருங்கள்.. கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும், தீனாவின் இசையும் குறிப்பிடும்படி இல்லை. ஆனால் கெட்டது போலவும் இல்லை. வழக்கமான அதே பார்மெட்டான பாடல்கள், சீன்கள்.
பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிகம் பேர் நகைகளை வீட்டில் வைத்திருப்பார்கள். மேலும் நகைகள் கொள்ளை போனால் இவர்களால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய முடியாது. ஒரு கட்டத்தில் சலித்துப் போய்விட்டுவிடுவார்கள். இதனாலேயே இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் இந்த மிடில் கிளாஸ் பேமிலிகளையே பதம் பாருங்கள் என்று தனது டீமுக்கு அறிவுறுத்துகிறார்.
இதுவொன்றுதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ரியலிஸம். போலீஸை கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். கொள்ளை நடந்த வீட்டில் 100 பவுன் தொலைந்திருந்தால்கூட “வெறும் 50 பவுன்னு எழுதிக் கொடுங்க..” என்று போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டி பணிய வைப்பார்கள். ஏனெனில் ஒருவேளை திருடன் பிடிபட்டால் அவன் மூலமாக கிடைக்கும் 100 பவுனில் 50-ஐ பறி கொடுத்தவர்களிடம் கொடுத்துவிட்டு மிச்சம் 50 பவுன்கள் ஸ்டேஷனில் இருப்பவர்களின் பாக்கெட்டுகளுக்கு சென்றுவிடும்.
இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனைத் தவிர்க்க ஒரே வழி பாதுகாப்பை நாமளே அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார் இயக்குநர்.
சொல்ல வந்த விஷயம் சரிதான் என்றாலும், போலீஸ் தொடர்பான விஷயங்களிலும், மற்ற திரைக்கதைகளிலும் பெரிய ஓட்டைகள் இருப்பினும் இந்த மெஸேஜூக்காக அவர்களையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது எனலாம்.

காலக்கட்டம் - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சந்தேகம் என்னும் வியாதி ஒரு மனிதனை ஆக்கிரமித்துக் கொண்டால், அவனது வாழ்க்கை எப்படி நரகமாகும் என்பதை தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் டைப் திரைக்கதையில் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.பாஸ்கர்.


மீனவரான பவனும், சினிமாவில நடனக் கலைஞனாக இருக்கும் கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். கோவிந்துக்கு திருமணமாகவில்லை. ஆனால் பவனுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
பவனும், கோவிந்தும் குடிப்பதில் இருந்து ரவுண்டு கட்டி அடிப்பதுவரையிலும் மிக நெருங்கிய நட்புகள். அடித்துக் கொள்வார்கள். பிறகு சேர்ந்து கொள்வார்கள்.. மொத்தத்தில் நல்லதொரு ‘குடி’மகன்களாக இருக்கிறார்கள்.
நெருங்கிய நண்பன் என்பதால் பவனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் அளவுக்கு அவனது குடும்பத்திற்கே நெருக்கமாக இருக்கிறான் கோவிந்த்.
விதி பவனின் வீட்டின் எதிரே மளிகைக் கடை வைத்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் மூலமாகவே வருகிறது. மளிகைக் கடையோடு வட்டிக்குக் கடன் கொடுக்கும் பிஸினஸையும் சேர்த்தே செய்து வருகிறார் ராஜேந்திரன். வட்டிக்கு பணம் கேட்டு வரும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வஞ்சகர் ராஜேந்திரன். சிலரை இதுபோலவே பணத்தைக் காட்டி மடக்கியிருக்கிறார்.
இவருக்கு பவனின் மனைவி மீது ஒரு கண். அவர் எதற்கும் மசிவது போல தெரியவில்லை. எனவே வேண்டுமென்றே பவனின் மனைவிக்கும், கோவிந்துக்கும் ஏதோ ஒரு  தொடர்பு இருப்பதாகச் சொல்லி செய்தியை ஊருக்குள் பரப்புகிறார்.
கடலுக்குள் மீன் பிடிக்க பவன் சென்ற பின்பு பவனின் மனைவிக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வரும் கோவிந்தை பற்றி பவனின் காதுபடவே ஓதுகிறார்கள் சிலர். நம்ப முடியாத சூழலிலும் குடியின் மயக்கத்திலும் இருக்கும் பவன், கோவிந்தை தனது வீட்டுக்கு இனிமேல் வர வேண்டாம் என்கிறான்.
பவன் தன்னிடமிருந்து ஒதுங்கும் காரணம் தெரியாமல் கோவிந்த் குழப்பத்தில் இருக்க.. பவனும் அதீத குடிகாரனாக மாறுகிறார். மீன் பிடிக்கப் போகாமல் குடியே கதியென்று இருக்கிறார். இதனால் குடும்பம் தள்ளாடத் துவங்க.. வேறு வழியில்லாமல் ராஜேந்திரனிடம் வட்டிக்குக் கடன் வாங்க நினைக்கிறார் பவனின் மனைவி.
இதுதான் சமயம் என்று தான் நினைத்த ராஜேந்திரன் பவனின் மனைவியை மடக்கப் பார்க்க.. இதற்கு மசியாத பவனின் மனைவி ராஜேந்திரனை அடித்து அவமானப்படுத்திவிட்டு செல்கிறார். இதனால் இன்னும் கோபமாகும் ராஜேந்திரன், எதேச்சையாக பவனின் வீட்டிக்கு வந்த கோவிந்த் வீட்டுக்குள் பவனின் மனைவியுடன் நடந்த கொண்டவிதத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பவனிடமே காட்டி விடுகிறார்.
உண்மை என்ன என்பதை அறியாத பவன், கோவிந்தை தாக்க.. இருவருக்குள்ளும் கை கலப்பு ஏற்படுகிறது. இதில் கோவிந்த் கொல்லப்பட.. பவன் சிறைக்குச் செல்கிறான். பவனின் மனைவியும் அவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட.. சிறையில் வாடும் பவன் உண்மையை அறிந்தாரா..? ராஜேந்திரனின் கதி என்ன ஆனது..? பவன் மனைவியோடு சேர்ந்தாரா என்பதெல்லாம் அடுத்து 3 அரைமணி நேர எபிசோடுகளாக வரக் கூடிய திரைக்கதை..!
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்கள்.. அங்கு நடக்கக் கூடிய இயல்பான விஷயங்கள்.. மீனவக் குப்பத்து ஜனங்களின் அன்றாட வாழ்க்கை.. ஏழைகளுக்கு நெருக்கடிகள் ஏற்படும் நேரம்.. குடி ஒரு குடும்பத்தை எப்படி சீரழிக்கிறது என்பதையெல்லாம் பதை, பதைப்புடன் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
நல்லதொரு நட்பு, சந்தேகம் என்ற ஒரு சொல்லால் காயம்பட்டு அவரவர் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.
நான் கடவுள் ராஜேந்திரனின் திட்டம்.. அவர் பேசும் பேச்சு.. அது தொடர்பான காட்சிகள் இயல்பானதாக அமைந்தும், வீடியோ காட்சி மட்டும் டிவி சீரியல்போல் செயற்கைத்தனமாக மாறியிருந்தது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
பவன்.. நிறைய படங்களில் ஹீரோ என்றில்லாமல் பல வேடங்களில் நடித்து வருகிறார். இதிலும் ஒரு மீனவனாக.. சராசரி மனிதனாக.. குடிகாரனாக.. என்று பல்வேறு விதங்களில் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். குறையொன்றுமில்லை.
கோவிந்தாக நடித்தவர் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் தனது பணியை நல்லவிதமாகவே செய்திருக்கிறார். அவரைக் காதலிக்கும் ஹீரோயின் உமா, பாடல் காட்சிகளுக்கும், சில உச்சுக் கொட்ட வைக்கும் காட்சிகளுக்காகவும் படத்தில் இடம் பெற்றுள்ளார்.
பவனின் மனைவியாக நடித்திருக்கும் சத்யஸ்ரீ சமீபமாக பல படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். மிக இயல்பாகவே நடித்திருக்கிறார். வீடியோவை ஆஃப் செய்யும்படி வெட்கத்துடன் பவனிடம் கெஞ்சியபடியே ரொமான்ஸையும் கொட்டியிருக்கிறார். ‘ராஜதந்திரம்’ படத்திலும் செமத்தியான ரோலில் நடித்திருந்தார் இவர்.
சந்தேகமேயில்லாமல் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்தான் இந்தப் படத்தில் அதிகச் சம்பளம் வாங்கியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
மொட்டைத் தலையில் விக் வைத்துக் கொண்டும், கலர் கலரான உடைகளை அணிந்தும், கூலிங் கிளாஸ் அணிந்தும் இவர் போடும் ஆட்டங்களும், பாட்டங்களும் படத்தின் முற்பாதியில் படத்தை வேகமாக நகர்த்துகின்றன. இவரது மிகப் பெரிய பலமே இவர் வில்லனா, ஹீரோவா, குணச்சித்திர நடிகரா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் இவரது வாய்ஸ் மாடுலஷேன்ஸ்தான்..
கிளைமாக்ஸில் ஜெயிலில் நடக்கும் சண்டையில் ஹீரோ பவன், ராஜேந்திரனை அடித்து, உதைத்து, துவைத்து காயப்போடும் காட்சியில் வேறெந்த நடிகராவது நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்..  ராஜேந்திரன் ஸார் சல்யூட் டூ யூ..!
எழில் அரசனின் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மகேந்திரனின் இசையில் ‘பச்சைக்கிளி பச்சைக்கிளி முனியம்மா’ பாடல் கும்மாங்குத்து. ‘கஜலு பாவா’ பாடலும், ‘உன்னால் மயிலே இருப்பது ஜெயிலே’ என்கிற கானா பாலாவின் சிச்சுவேஷனுக்கேத்த சோகப் பாடலும் கேட்கும்படிதான் இருந்தன.
பின்னணி இசைதான் காதைக் கிழித்துவிட்டது. அதிலும் பவன்-ராஜேந்திரன் சண்டை காட்சியில் மொத்தமாக எத்தனை பன்ச்சுகளை சொருகினார்களோ தெரியவில்லை.. பத்து நிமிடங்களுக்கு நமது காது பஞ்சர்தான்.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் கிடைத்த நடிகர், நடிகைகளை வைத்து கதைக்கேற்ற திரைக்கதையில் படத்தினை நிறைவாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

பட்ற - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசியல் களம் சார்ந்த கதை. அப்பாவி இளைஞர்களின் படிப்பறிவற்ற தன்மையையும், ஏழ்மையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்களது வாழ்க்கையையும், உயிரையும் பலிகடாவாக்கும் அரசியல்வியாதிகள் சம்பந்தமான படங்கள் பல வந்திருக்கின்றன. அவற்றில் இருந்து மேக்கிங் என்னும் உருவாக்கத்தில் மிக வித்தியாசப்படுத்தி யதார்த்தத்தின் மிக அருகில் வரும்படியான சிறப்பான இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது  இந்த ‘பட்ற’ திரைப்படம்.

படத்தின் கதை நடக்குமிடம் பாண்டிச்சேரி. ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரேணுகுண்டா கணேஷின் நட்புக்குப் பாத்திரப்பட்டவர்கள் புலிப்பாண்டியும், தனாவும். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் கடும் பகை. ஒருவரையொருவர் போட்டுத் தள்ள நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புலிப்பாண்டியின் மகன் கல்லூரி மாணவன். அவனைக் கொல்ல தனா ஆட்களை அனுப்புகிறான். அந்த முயற்சி தோல்வியடைய.. கோபமடையும் புலிப்பாண்டி கல்லூரிக்கு வந்து மாணவர்களையும், பிரின்ஸிபாலையும் மிரட்டிவிட்டுச் செல்கிறான்.
இதே கல்லூரியில் படித்து வருகிறார் ஹீரோ மிதுன்தேவ். கல்லூரி பிரச்சினையொன்றில் புலிப்பாண்டியின் மகனை கண்டிக்கிறார் ஹீரோ. சில நாட்கள் கழித்து புலிப்பாண்டியின் மகனை ஒரு குரூப் தாக்கிவிட்டுப் போக பழி ஹீரோ மீது விழுகிறது.
ஹீரோவை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து அடித்து, உதைக்கிறார் புலிப்பாண்டியின் உறவினரான இன்ஸ்பெக்டர். மிதுனின் அப்பாவும், மாமாவும் வந்து கேட்டும் ஹீரோவை விட மறுக்கிறார் இன்ஸ்பெக்டர். இந்த நேரத்தில் இவர்களது வீட்டிற்கு அருகிலேயே குடியிருந்து வரும் விலைமாதுவான உமா, தனாவுடன் தனக்கிருக்கும் நெருக்கம் காரணமாய் பத்தாயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தனா மூலமாக ஹீரோவை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
தனா-புலிப்பாண்டியின் மோதல் மாவட்டச் செயலாளர் கணேஷுக்கு தெரிய வர அவர் அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அப்போதும் அவர்களுக்குள் மோதல் நின்றபாடில்லை. புலிப்பாண்டி சுதாரிப்பதற்குள்ளாக அவரை போட்டுத் தள்ள விரும்பும் தனா, தனது அடியாட்களை ஏவிவிட.. இத்தாக்குதலில் புலிப்பாண்டியின் தம்பி மரணமடைகிறார்.
இப்போது தடாலடியாக களத்தில் இறங்கும் மாவட்டச் செயலாளர் கணேஷ், இருவரையும் மீண்டும் சமாதானப்படுத்தி வைக்கிறார். இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலில் நிற்க புலிப்பாண்டி சீட் வாங்கிக் கொடுக்கிறார் கணேஷ். இதனால் புலிப்பாண்டியை அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய நிலைமை தனாவுக்கு. தனாவும் இறங்கி வந்து நட்பு பாராட்டுகிறார்.
இந்த நேரத்தில் இந்தக் கொலை விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் ஹீரோவை அரெஸ்ட் செய்து சிறையில் அடைக்கிறார் இன்ஸ்பெக்டர். இந்த நேரத்தில் ஹீரோவின் தங்கையை தனாவிடம் அனுப்பி வைத்து தான் காரியம் சாதிக்க நினைக்கும் உமா அவளை அங்கே அழைத்துச் செல்கிறாள். தனாவின் இந்த கில்மா வேலைகளை அறிந்து கொண்ட புலிப்பாண்டு தனக்கும் இதில் பங்கு வேண்டும் என்று கேட்க.. அவரையும் வரச் சொல்கிறான் தனா.
இவர்களின் வேட்டையில் ஹீரோவின் தங்கை பலிகடா ஆக்கப்பட.. இதே நேரம் கோர்ட்டில் உண்மையைக் கூறி ஹீரோ கேஸில் இருந்தே விடுதலையாகி வெளியில் வருகிறார். ஆனால் வீட்டில் தங்கை மனவாட்டத்தில் இருப்பது அறிந்து உண்மையை அறிந்து கொள்கிறார்.
அரசியலும், பண பலமும், அதிகார பலமும் ஒன்று சேர்ந்து தனது அப்பாவிக் குடும்பத்தை இப்படி பலிகடா ஆக்கிவிட்டதை அறிந்து ஹீரோ மனம் கொதிக்கிறார். அவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். எப்படி செய்கிறார் என்பதுதான் மீதமான திரைப்படம்.
துவக்க்க் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் மிகச் சிறப்பான இயக்கம். துவக்கத்தில் வரும் கிரிக்கெட் ஷாட்டுகள் பிரமிப்பூட்டுகின்றன. ஹீரோவும், ஹீரோயினும் சந்திக்கின்ற முதல் காட்சியும் சுவையானது. இதுவரையில் எந்தவொரு இயக்குநரும் சிந்தித்திராத வினோதமான ஒரு திரைக்கதை. சிந்தித்த திறனுக்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
படத்தில் அனைத்து நடிகர்களுக்குமான கேரக்டர் ஸ்கெட்ச்சிலேயே வித்தியாசப்படுத்தியிருக்கிறார். அனைவரையும் ஓரடி முந்திச் சென்று சபாஷ் வாங்குகிறார் புதுமுக வில்லன் நடிகரான சாம்பால்.
தன்னிடம் இருக்கும் சின்னப் பையன்களை வைத்துக் கொண்டு சோப்பு போடுவதை போல வார்த்தைகளால் குளிப்பாட்டி. அவர்கள் மேல் அக்கறை உள்ளவர்போல நடித்து தன்னுடைய காரியத்தைச் சாதிக்க நினைக்கும் சகுனியாட்டத்திற்கு மிக பொருத்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் இவர்.
கோபத்தை மறைத்துக் கொண்டும், விரோத்த்தை வெளியில் காட்டிக் கொள்ளாமலும், மாவட்டச் செயலாளர் கணேஷிற்கு அடக்கமாக இருப்பது போல நடித்தும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சாம்பால்.  ஹீரோவை அடையாளம் காண முடியாமல் கார் ஓட்டிக் கொண்டே தவியாய் தவித்து தலையில் விதவிதமான முறையில் தட்டி, தட்டி உசுப்பேற்றிக் கொண்டு கடைசியில் கண்டறியும் காட்சியெல்லாம் பின்னணி இசையுடன் ஒரு திரில்லிங் அனுபவத்தையே கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் சாம்பால் மற்றும் ஹீரோவின் உழைப்பு பாராட்டத்தக்கது.
ஹீரோ மிதுன்தேவ்.. ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இதில் கொஞ்சம் அழுத்தமான வேடம். சிறப்பான இயக்கம் தெரிந்த இயக்குநரிடத்தில் சிக்கியிருப்பதால் மிக அழகாக நடித்திருக்கிறார். ஹீரோயின் வைதேகிக்கு அதிகம் நடிப்பதற்கு ஸ்கோப் இல்லையென்றாலும், முதல் அறிமுகக் காட்சியை நினைத்துப் பார்த்து  சங்கடப்படுவதும்.. ஹீரோவுடனான காதல் தனக்குள் பளிச்சிடும் காட்சியிலும் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்..
ஹீரோவின் அப்பா, அம்மாவும் நடித்திருக்கிறார்கள். இரண்டாவது முறையாக ஹீரோவை கைது செய்ய வீட்டிற்கு வரும் இன்ஸ்பெக்டரிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்று அவமானப்படும் அப்பாவின் நடிப்பும், நடிக்க வைத்த இயக்குநரும் பலே.. பலே..
புலிப்பாண்டியாக நடித்தவரின் கோபமும், வெறியும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதும்.. தலைவர் கணேஷிடம் வார்த்தைகளை மாற்றி மாற்றிப் பேசி தனது நிலையை விளக்கும் காட்சியிலும், தம்பி செத்துப் போன நிலையிலும் கட்சிக்காக.. பதவிக்காக.. தனாவிடம் போனில் பேசி கூலாவதெல்லாம் இந்த அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
சிறையில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டு தந்திரமாக அவர்களைச் சுட்டுக் கொல்லும் போலீஸின் திட்டம் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட்டுதான்.. அதேபோல கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு அடிபட்டு பிடிபடும் கூலிப்படை ஆள் ஒருவனின் தாயார் பிச்சையெடுத்து தனது மகனைக் காப்பாற்ற நினைப்பதும்.. மகன் இறந்துவிட்ட செய்தியை பணியாளர் சாதாரணமாகச் சொன்னவுடன் எழும் அத்தாயின் கதறலும் படத்தின் இறுக்கமான காட்சிகள்.
சுனோஜ் வேலாயுதனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் படத்தை பிரமிக்க வைத்திருப்பவர் அவர்தான். கேமிரா கோணங்களுக்கு இயக்குநரே பொறுப்பு என்றாலும், இதில் பல ஷாட்டுகள் சினிமா விரும்பிகளை நிச்சயமாக கவரும். ஒளிப்பதிவில் இவர் ஒரு தந்திரக்காரராக இருப்பார் போலிருக்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
கிருஷ்ணாவின் இசையமைப்பில் பின்னணி இசையை உறுத்தாத வண்ணம் கொண்டு சென்று பாடல் காட்சிகளில் அடக்கி வாசித்து படத்தின் தன்மையை எந்தவிதத்திலும் குறைத்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். புலிப்பாண்டியின் தம்பியை கொலை செய்யும் அந்த டிரிக் ஷாட்டில் பின்னணி இசையும் சேர்ந்தே பயமுறுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இதெல்லாம் நடக்காத கதைகளல்ல.. தமிழகத்தில் தினம்தோறும் பல ஊர்களில் நடக்கின்ற கதைகள்தான். படிக்க வாய்ப்பில்லாத இளைஞர்கள்.. மிக்க் குறுகிய காலத்தில் பணம், காசு பார்க்க நினைக்கும் அப்பாவி இளைஞர்களையெல்லாம் அரசியல்வாதிகளும், பண பலம் படைத்தவர்களும் இப்படித்தான் மூளைச் சலவை செய்து அவர்களது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது கண்கூடாக நாம் பார்க்கின்ற விஷயம்தான்.
இவர்களை போன்ற அயோக்கியர்களை  இப்படி பழி வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற யதார்த்தமான உண்மையை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மனித நாகரிகத்தின்படி இது தவறென்றாலும், தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையின்படி இது தவறில்லை என்பது இயக்குநரின் கருத்து..!
எந்தவொரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு மனிதனுக்கும் முழு உரிமையுண்டு என்பதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி. இதில் தவறில்லையே..?
பட்ற – மிகச் சிறப்பான படம். அவசியம் பாருங்கள்.

திலகர் - சினிமா விமர்சனம்

21-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தில் வாழும் சாதியினரில் முக்குலத்தோர் இனத்தவருக்கு மட்டும் ஏன் இந்தக் கொலை வெறி..? அரிவாள் வீச்சு என்பதை விளையாட்டுபோல் அவர்கள் பயன்படுத்துவதெல்லாம் எதற்காக..? அதுவும் சொந்த சாதிக்காரர்கள் மீதே.. தங்களுடைய உறவினர்கள் மீதே இந்தக் கொலை விளையாட்டை இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும்போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த கோட்டி பிடித்த வேலை என்று சிந்திக்க வைக்கிறது.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள மூன்று சாதியினரும், இவர்களது உட்பிரிவில் உள்ள சாதியினரும் ஏற்படுத்தும் இந்த கொலை விளையாட்டுக்களில் பலியானவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடிக் கொண்டே செல்கிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் மனிதர்களுக்குள் மிருக குணமும் உண்டு. ஆனால் அவைகளை தூண்டிவிடும் அளவிற்கான குணாதிசயங்கள் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடத்தான் செய்கிறது.. இந்த மனிதர்கள் என்பதையும் தாண்டி இந்தச் சாதிக்காரர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்திருக்கும் இந்த பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்.. அரிவாள் கலாச்சாரத்தை பதிவாக்கியிருக்கிறது இந்தப் படம்.
'மதயானை கூட்டம்' படத்திற்கு பிறகு மனிதர்களின் ரத்தச் சகதியில் குளித்திருக்கும் படம் இதுதான். 'மதயானை கூட்டம்' உசிலம்பட்டி தேவர்களின் கதை. இது தூத்துக்குடி மாவட்ட தேவரின மக்களிடையேயான கதை..!
பெருமாள் ‘பிள்ளை’ என்கிற இயக்குநர், ராஜேஷ் ‘யாதவ்’ என்கிற ஒளிப்பதிவாளருடன் இணைந்து வழங்கியிருக்கும் தேவரினத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்..!

உக்கிரபாண்டியான 'பூ' ராம், ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு பரம்பரையாக ஆட்சி செய்து வந்த குடும்பத்தின் தலைமகன். போஸ்பாண்டி என்னும் கிஷோர், பக்கத்து ஊரில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர்.
தன்னுடைய தம்பியான துருவாவை வம்புச் சண்டைக்கெல்லாம் போகவிடாமல் தடுத்து அவன் நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஆசையைத் திணித்திருப்பவர். கிஷோருக்குத் திருமணமாகி மனைவி இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார்.
கிஷோர் உள்ளூர் மற்றும் அசலூர் இளைஞர்களிடையே கவுரவமான ஆளாகத் தென்படுவதால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படுகிறார். இது ஒரே சாதியினமாக இருந்தாலும் அந்த ஊரிலேயே கொடி கட்டிப் பறந்த ராமுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தன்னுடைய ஊரிலேயே பக்கத்து ஊர்க்காரன் பெயர் எடுப்பது அவரை தகுதியிழக்கச் செய்வதாக நினைத்து கருவுகிறார்.
இந்த நேரத்தில் ராமின் தியேட்டரில் ‘அமரன்’ படம் வெளியாகிறது. கையில் அரிவாளுடன் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ பாடலை திரும்பவும் போடும்படி வற்புறுத்துகிறார்கள். தியேட்டர்காரர்கள் மறுக்க.. படத்தினை தொடர்ந்து ஓட்ட முடியாதபடிக்கு ரசிகர்களின் கூச்சலும், குழப்பமும் ஏற்படுகிறது.
இதனால் கோபம் கொள்ளும் ராம், கிஷோரின் ஊர்க்காரர்களுக்கு மட்டும் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கப்படாது என்று போர்டு எழுதி மாட்டுகிறார்.
இதனைக் கண்டித்து கலெக்டருக்கு புகார் மனுக்கள் பறக்க.. கலெக்டர், ராமை அழைத்து கண்டித்து அனுப்புகிறார். அதற்கு பின்பும் ராம் பிடிவாதமாக ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் எருமை மாடுகளை தியேட்டரில் அனுமதித்து படத்தை ஓட்டுகிறார். இதனால் அவரது தியேட்டருக்கான அரசு அனுமதியை ரத்து செய்வதாக கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி, தியேட்டருக்கும் சீல் வைக்கிறார்.
இது கிஷோர் செய்த வேலைதான் என்று நினைத்த ராம், கிஷோருக்கு பாடம் கற்பிக்க அவரது வாழைத் தோட்டத்தை இரவோடு இரவாக நாசம் செய்கிறார். இதனால் கோப்ப்படும் கிஷோர், ராமின் மகன்கள் மூவரையும் அடித்து, உதைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து ஒப்படைக்கிறார்.
தாங்கள் ஊர் மக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த ராமின் 3 மகன்களும் நல்லதொரு முகூர்த்த நாளில் கிஷோருக்கு குறி வைக்கிறார்கள். வளைகாப்பு நடந்து தாய் வீடு சென்றிருக்கும் தனது மனைவியைப் பார்த்துவிட்டு அப்படியே குலசேகரன்பட்டிணத்தில் வருடந்தோறும் நடைபெறும் தசரா விழாவைப் பார்க்கச் செல்கிறார் கிஷோர்.
விழாவில் தனியே வரும் கிஷோரை, தசரா விழாவின் மாறுவேடத்திலேயே ராமின் மகன்கள் மூன்று பேரும் படுகொலை செய்கிறார்கள். கிஷோரின் உடலைப் பார்த்து கதறியழும் அவரது அம்மா ‘பழிக்குப் பழி வாங்கி அவர்களது தலையை வெட்டிக் கொன்று சாம்பலை அள்ளிப் பூசித்தான் தன் மருமகள் தாலியறுப்பாள்’ என்று சவால் விடுகிறார்.
அதுவரையில் வீட்டு சாப்பாட்டிற்காக கோழியை அறுப்பதைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அப்பாவியாய் இருக்கும் தம்பி துருவா.. தனது அண்ணனின் படுகொலையைத் தாங்க முடியாமல் வீர, தீர மனோகரனாக உருவெடுக்கிறார்.  அண்ணனின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கப் போவதாக அண்ணனின் சமாதியில் சபதமெடுக்கிறார்.
இதனைச் செய்து முடித்தாரா..? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..?
‘பூ’ ராம் உக்கிர பாண்டியனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அந்தத் திமிர்.. சொந்த மருமகனின் எதிர்ப் பேச்சைக் கேட்டு எழும் கோபத்தை அடக்கிக் கொண்டு பதில் சொல்வது.. போலீஸ் ஸ்டேஷனில் அழுத்தமான குரலில் தனது மகனை விடுவிக்கச் சொல்வது.. போலீஸ் படையுடன் தன்னைத் தேடி வருபவர்களிடம் தானே சரண்டராவது.. கிஷோரை நினைத்து பொறாமைப்படுவது.. தனது மகன்களின் இறப்பை நினைத்து வருத்தப்படாமல் அதிலும் கவுரவம் பார்ப்பது என்று தான் இருக்கும் பிரேம்களில் எல்லாம் மற்றவர்களுக்கு வாய்ப்பே தராமல் தடுத்திருக்கிறார் ராம். சிறந்த நடிப்பு.. சிறப்பான இயக்கத்தினால்தான் இது அவரால் முடிந்திருக்கிறது என்பதால் இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்..!
கிஷோர் கம்பீரத் தோற்றத்துடன் மிடுக்கான மீசையுடன் தனது இனத்து இளைஞர்களை நினைத்து கவலை கொள்ளும் ஒரு சராசரி தலைவனாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பில் தனி பாணியை இதில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறோம். தூத்துக்குடி வட்டார பாஷையைக்கூட அனைவருக்கும் புரியும்வகையில் மிகத் தெளிவாக உணரும்வகையில் பேசியிருக்கிறார்.
அதிகம் அலட்டிக் கொள்ளாத நடிப்பு. கோபத்தைக்கூட கட்டுக்குள் வைத்துக் கொண்டு முகத்தில் காட்டாமல் செயலில் காட்டும் வீரனாக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். இதனாலேயே இவர் மீது கடைசியில் கோபம் வராமல் பரிதாப உணர்வே வந்திருக்கிறது.
படத்தின் ஹீரோவான துருவா முதல் பாதியில் அடக்கமான தம்பியாக.. அப்பாவியான தோற்றத்திலும் இரண்டாம் பாதிக்கு மேல் மிரட்டலான தோற்றத்திலும், பழி வாங்கும் உணர்வுமிக்க சராசரி தேவரின மகனாகவும் நடித்திருக்கிறார்.  தனது அண்ணன் மகனை அவனது தாத்தா வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று சொல்லும் அந்த அழுத்தமான காட்சியில் கவனமாகப் பதிவாகியிருக்கிறார் துருவா. இறுதியில் தனது குடும்ப வாரிசை பார்த்தபடியே இறக்கும் காட்சியில் உருக்கம் அதிகம்தான்..!
நாயகியாக வரும் இருவரில் மலையாள புது வரவான அனுமோலுக்கு நடிக்க ஸ்கோப் அதிகமில்லை என்றாலும் தாலியறுக்கும் காட்சியில் மிதமிஞ்சிய நடிப்பைக் கொட்டியிருக்கிறார். சத்தியமாக இப்படி நடிப்பது அவருக்கு இதுதான் முதல் முறையாக இருக்குமென்று நம்பலாம். மலையாளத்தில் இவர் நடித்திருக்கும் படங்களும், கேரக்டர்களும் இப்படியல்ல.. ஆனால் அவை பேர் சொன்னவை. அந்த லிஸ்ட்டில் இதுவும் சேரப் போகிறது.
இன்னொரு ஹீரோயின் மிருதுளா. ஏற்கெனவே ‘வல்லினம்’ படத்தில் நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல அவருக்கே தோன்றும் என்று நம்புகிறோம். படுகொலைகளைப் போலவே தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத காதலையும் சொல்ல வேண்டியிருப்பதால் இவரது போர்ஷனும் அவசியமாகியிருக்கிறது.
எதனால் காதல் உருவானது.. எப்படி உருவாகிறது என்பதையும் மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். தன்னுடைய தாய், தந்தையிடம் ஹீரோவை தனக்குப் பிடிக்கின்ற காரணத்தைச் சொல்லும் காட்சி ‘நச்’ என்ற பதிவு. அதேபோல அவனிடமிருந்து விலகிச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போகும் அந்தக் காட்சியிலும் நல்ல நடிப்பைத்தான் காட்டியிருக்கிறார். சரியான இயக்குநர்களிடம் சிக்கினால்தான் சரியான நடிப்பு வெளிப்படும் போலிருக்கு..!
படத்தின் பல காட்சிகளை இன்றைக்குத்தான் புதிதாகப் பார்ப்பது போன்ற காட்சியமைப்புகளிலும், கேமிரா கோணங்களிலும் படமாக்கியிருப்பதுதான் படத்தினை ஆழ்ந்து ரசிக்க வைக்கிறது. கேமிராமேன் ராஜேஷ் யாதவிற்கு பாராட்டுக்கள். சண்டை காட்சிகளை படமாக்கியிருக்கும்விதத்தில் இயக்குநருக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரும் படத்தில் நடித்திருக்கிறார். வாழ்த்துகள்..!
இசையமைப்பாளர் கண்ணனின் பாடல் இசையைவிடவும், பின்னணி இசைதான் அதிகம் பயமுறுத்தியிருக்கிறது. ராமின் மகன்கள் மூவரும் பலியாகும் காட்சியில் ஒளிப்பதிவும், இசையும்தான் ரங்கராட்டினமாக சுற்றியிருக்கின்றன.
வாழைத்தோட்ட காட்சிகளின் படமாக்கல்.. ராமின் தியேட்டருக்குள் நடக்கும் சண்டைகள்.. அரிவாள்களில் பெயர்களை எழுதி வாங்கி வைப்பது.. கோர்ட்டுக்குள்ளேயே ராமின் மகன்களை கொலை செய்ய திட்டம் தீட்டுவது.. அந்தக் கொலைக் காட்சியை படமாக்கியவிதம், ராமிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக கோப வெறியை ஏற்றுவது.. தன்னைக் கொலை செய்ய ஆட்களை தயார் செய்வது அறிந்து கோபமடையும் துருவா, ராமின் காரை மறித்து காரின் பேனட்டில் அரிவாளால் கொத்திவிட்டு “அவமானப்பட்டுட்டு போ” என்று சொல்வது..  (இந்தக் காட்சியில் ராம் காரில் ஏறாமல் திரும்பி நடந்து செல்லும் காட்சியில் ஏற்படும் உணர்வு சினிமா ரசிகர்களை நிச்சயம் பாதிக்கும்) பேரன்கள் பொங்கியெழுந்து பழி வாங்கும் கதைக்குள் தங்களைத் திணித்துக் கொள்வது.. “நீ திரும்பி ஓடுடா..” என்று மிரட்டியும் துருவா அவர்களை எதிர்த்து நின்று உயிரைவிடுவது என்று திரைக்கதையில் ஒரு மகாபாரதக் கதையையே திணித்திருக்கிறார் இயக்குநர். இப்படிப்பட்ட திரைக்கதையினால்தான் படம் கடைசிவரையிலும் சுவாரசியமாகவே சென்று முடிந்தது..
இத்தனை கோரமான கொலைகளை காட்டினாலும் அதில் இருக்கும் கோபம் உண்மையாக இருப்பதால் இது தவறாகப்படவில்லை. ஆனால் இயக்குநர் பட ரிலீஸுக்கு முன்பாக கோபப்பட்டதுபோல சென்சார் போர்டின் மீது எந்தத் தவறுமில்லை. இந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் என்பது சரியானதுதான்..!
வெறும் குத்துப் பாட்டு, ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைகள் இவற்றையும்விட வன்முறையைத் தூண்டும் காட்சியமைப்புகளும் சிறுவர், சிறுமியர் பார்க்க்க் கூடாதவைதான்.
அதிலும் இதில் முதல் காட்சியில் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் கொலையாளிகளான 18 வயதுக்குட்பட்ட ராமின் பேரன்கள் பேசுகின்ற பேச்சுக்களெல்லாம் மிகப் பெரியவை. அவர்களது வயதையொத்தவர்களால் இதனை ஜீரணிக்க முடியாவை.
இவர்கள் செய்கிற செயலும் மன்னிக்க முடியாதவை. சின்னப் பையன் கழுத்தில் கத்தியை வைத்து அவனைவிட 10 வயது பெரியவன் மிரட்டுவதெல்லாம் பயங்கரவாத காட்சியின் முதல்படி. இதனைத் தவிர்த்திருக்கலாம்..
ஆனால் இதே காட்சியை மனதில் வைத்து கிளைமாக்ஸில் அன்புதான் இப்போதைக்கு தேவை என்று சொல்லி அறிவுரையாக முடித்திருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது..? ரசிகர்களால் ஏற்க முடியுமா என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் சொல்ல வேண்டிய விஷயம்தான். 7 வயது பையனால் இதையெல்லாம்.. இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா என்பதுதான் நாம் முன் வைக்கும் கேள்வி..!?
எப்படியிருந்தாலும் ‘உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு செத்துத் தொலையாமல் ஒண்ணுக்குள்ள ஒண்ணா சாதி, சனத்தோட இயைந்து வாழ்ந்து தொலைங்கடா’ என்கிற இயக்குநரின் கருத்தை நாமும் வழிமொழிந்து பாராட்டுகிறோம்..!
‘திலகர்’ தில்லான தேவன்..!

கள்ளப்படம் - சினிமா விமர்சனம்

21-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இயக்குநர் மிஷ்கினின் பிரதம சீடரான வடிவேல் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் இது. இதில் இயக்குநர் வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின், சிங்கம்புலி, கவிதாபாரதி, ஆடுகளம் நரேன், ஜிஷ்னு, ‘வின்னர்’ ராமச்சந்திரன், செஃப் தாமு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காஜின் படத் தொகுப்பு செய்திருக்கிறார். கே இசையமைத்திருக்கிறார். இறைவன் பிலிம்ஸ் சார்பாக ஆனந்த் பொன்னிறைவன் தயாரித்திருக்கிறார்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற கனவோடு இன்றைக்கும் வடபழனி, சாலிகிராம பகுதி டீக்கடைகளில் நான்கைந்து பேராக நின்றபடியே, ‘இன்றைக்கு எந்தத் தயாரிப்பாளரை பார்க்க போக வேண்டும்..?’, ‘நேற்று பார்த்தவர் என்ன சொன்னார்..?’ ‘லேட்டஸ்ட்டாக ஜெயித்திருக்கும் தயாரிப்பாளரை சுலபமாக சந்திக்கும் வழிமுறைகள் என்ன..?’ என்றெல்லாம் சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் உதவி இயக்குநர்களைப் பார்க்கலாம்..!
அவர்களைப் போன்ற எண்ணற்ற சினிமா கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள், எப்படி சினிமாவில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்தக் ‘கள்ளப்பட’த்தின் கதை.

துணை இயக்குநர் வடிவேல், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷ், எடிட்டர் காகின் நால்வரும் உற்ற நண்பர்கள். அறை தோழர்கள். சினிமாவில் தலையெடுக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அனைவரும் அதில் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனை செயல்படுத்த இயக்குநர் கனவில் இருக்கும் வடிவேலுவால் மட்டுமே முடியும் என்பதால் அவரை நம்பியும் இருக்கிறார்கள்.
பாரதிராஜா, பாக்யராஜ், பாலா… இவர்களிடத்தில் சென்று வாய்ப்பு கேட்டு கிடைக்காமல்.. தனது பல வருட அனுபவத்தை முதலீடாகக் கொண்டு, ‘இவ்விடம் திரைக்கதைகளுக்கு பழுது பார்க்கப்படும்’ என்கிற போர்டுடன் ஒரு டீக்கடையை நடத்தி வருகிறார் சிங்கம்புலி. இவரது டீக்கடைதான் இவர்களது அன்னதானக் கோயில். இவர்களை அடிக்கடி சந்தித்து ஆறுதல் சொல்லி தானும் ஆறுதல்பட்டுக் கொள்கிறார் இன்னமும் படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடும் மூத்த துணை இயக்குநரான நடிகர் செந்தில்.
வடிவேலு கூத்துப் பரம்பரையில் இருந்து வந்தவர். அவரது தந்தை தன் கண் முன்னேயே தனது குடும்ப்ப் பாரம்பரியத் தொழிலான கூத்துக் கட்டும் தொழில் அழிந்து போகிறதே என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார். கூத்துக் கலைஞனாக பிரமிப்பு காட்டிய தனது தந்தை, உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த சிறுவன் வடிவேலுவால் அந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
தானும் சினிமாவில் ஒரு நல்ல படைப்பாளியாக வேண்டும் என்கிற ஆக்ரோஷத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர்களைச் சந்திக்கிறார். கதை சொல்கிறார். அவரிடமிருப்பது ஒரேயொரு கதைதான். அது கூத்து சம்பந்தப்பட்ட அவரது சொந்த வாழ்க்கைக் கதைதான்.
தயாரிப்பாளர்கள் குத்துப் பாடல், டாஸ்மாக் சரக்கு, சின்னப் பையன்களின் காதல், அடிதடி, கரம் மசாலா இவற்றோடு கமர்ஷியல் கம்மர்கட் திரைக்கதையில் உருவான கதைகளை எதிர்பார்க்க.. நம்பிக்கை மனம் தளராமல் அடுத்தடுத்து தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் வடிவேல்.
அப்படித்தான் ஒரு நாளில் ‘ஆடுகளம்’ நரேனுக்கு கதை சொல்லப் போகிறார் வடிவேலு. அதே கூத்துக் கதையைச் சொல்கிறார். வேறு, வேறு வேலைகளைச் செய்து கொண்டே கிடைத்த ‘கேப்’பில் கதையைக் கேட்கும் நரேன், வேறு கதை சொல்லும்படி கேட்கிறார். வடிவேலு ‘இல்லை’ என்று சொல்ல, கோபப்படும் நரேன் ‘இந்நேரம் 4 கதைகளை தயாரா வைச்சிருக்க வேண்டாமா..?’ என்கிறார். ‘இந்தக் கதைக்கு என்ன குறைச்சல்?’ என்கிறார் வடிவேலு. ‘படத்தை எடுத்து நீ மட்டும் பார்க்குறதுக்கு நானா கிடைச்சேன்..? ஒரு படத்தை எடுத்து ஹிட் பண்ணிட்டு வா. அப்போ நீ சொல்ற எந்தக் கதையை வைச்சும் நான் படமெடுக்கிறேன்..’ என்று சொல்லி வடிவேலுவை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் நரேன்.
இதே நரேனிடம் இப்போது வைப்பாட்டியாக இருந்து வருகிறார்  முன்னாள் ஹீரோயினான லட்சுமி பிரியா. இருவருக்கும் வாழ்க்கை கசந்து போயிருக்க.. அவரவர் வழியில் பிரிந்து போய்விட தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
முதல்நாள் இரவில் வடிவேலு அண்ட்கோ-வை சந்தித்து தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டிய செந்தில், மறுநாள் காலையில் இறந்து கிடக்கிறார். அவருடைய கனவு கலைந்தும், இப்படியொருவர் சினிமாவுக்குள் வந்ததே தெரியாமல் அவரது வாழ்க்கைக் கதை கோடம்பாக்கத்தில் பதிவானதை காணும் வடிவேலுவுக்கு, தங்களைப் பற்றிய பயவுணர்வு எழுகிறது. இந்த நேரத்தில் அவரது வைராக்கியம் வேறு மாதிரி திசை திரும்புகிறது.
“இந்த சினிமால ஒருத்தன் ஜெயிச்சான்னா, அவன் எப்படி ஜெயிச்சான்னு யாரும் பார்க்குறதில்ல. ஜெயிச்சிட்டானான்னுதான் பார்க்குறாங்க. அதுனால நாமளும் ஜெயிப்போம். எப்படியாவது ஜெயிப்போம்..” என்கிறார் வடிவேலு. “எப்படி.. கொள்ளையடிச்சா..?” என்று நண்பன் காகின் கேட்க.. அதை நூலாகப் பிடித்துக் கொள்ளும் வடிவேலு “ஆமாம்.. கொள்ளையடிப்போம்..” என்கிறார் தீர்மானமாக..
குடியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் நரேனிடமிருந்து விலகிப் போக நினைக்கும் லட்சுமி பிரியா தனக்காக புதிய காதலனைப் பிடித்துவிட்டார். அவனுடன் போக நினைக்கும் தருணத்திலும், நரேனிடம் இருக்கும் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போக திட்டமிடுகிறார்.
இங்கே அதே நேரம் வடிவேலுவும் நரேனின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்..! அதுவும் அதே நாளில்.. அதே நேரத்தில்..  இருவரும் கொள்ளைத் திட்டத்தை செய்து முடித்தார்களா..? இல்லையா..? யார் வெற்றி கண்டது..? என்பதுதான் இந்தக் ‘கள்ளப்படம்’.
தனது முதல் படத்திலேயே சந்தேகமேயில்லாமல் சிக்ஸர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெ.வடிவேல். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் செல்போனை மேயவிடவேயில்லை அவரது இனிமையான இயக்கம். மெல்லிய நகைச்சுவைகள்.. இயல்பான சோகங்கள்.. பட்டென்று சோகத்தைக் கடந்து செல்லும் காட்சிகள்.. யார் இவர் என்று ஒருவரை யோசிக்க வைக்கும் தருணங்கள்.. தனது குரு மிஷ்கினுக்கே உரித்தான வைட் ஆங்கிள் ஷாட்டுகள்.. ஒரு முறை வந்த காட்சியின் கோணங்கள் மறுமுறை வராதது. குத்தீட்டியாக இல்லையென்றாலும், குறிப்பாக மனதை திசை திருப்பிய வசனங்கள்.. ஈர்ப்பான இயக்கம்.. இப்படி பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்..!
அவரே நடித்திருக்கிறார் துணை இயக்குநராக.. பார்க்க பரதேசிபோலவும், பட்டென்று வசீகரம் செய்ய முடியாதவராகவும் இருப்பதுதான் துணை இயக்குநர்களின் முகவெட்டு. அதற்கு வடிவேலே பொருத்தமாகத்தான் இருக்கிறார்.
நரேனிடம் பேசும்போது கோபத்தை அடக்கிக் கொண்டு.. நரேன் செய்யும் கோமாளித்தனங்களை சகித்துக் கொண்டு மனப்பாடமாக கதையை சொல்லிக் கொண்டே போய் கடைசியில் வாக்குவாதத்தில் கெஞ்சவும் செய்யாமல், மிஞ்சவும் செய்யாமல் அடக்கத்துடன் பேசிவிட்டு திரும்புவதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அனைத்து உதவி இயக்குநர்களும் சந்திக்கும் ஒரு நிகழ்வுதான்..!
படத்தில் வடிவேலுவின் கேரக்டர் மிகக் கவனமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் காட்சியில் மற்ற மூவரும் ஆடிப் பாட.. கையில் நோட் பேடை வைத்துக் கொண்டு இங்கிட்டும், அங்கிட்டுமாக நடந்தே செல்கிறார் வடிவேலு. அவர் ஆட முடியாததுதான். அதற்கான காரணம் அவரது சொந்த வாழ்க்கைக் கதையாக பிளாஷ்பேக்கில் விரிகிறது.
அந்த பிளாஷ்பேக் கதை சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பாரத்தைக் கொடுக்கிறது. எத்தனை, எத்தனை கலைகளை இழந்து, எத்தனை எத்தனை அல்லவைகளை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அந்த சில நிமிடங்களிலேயே நமக்கு உணர்த்துகிறார் இயக்குநர்.
நண்பர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ரொம்ப நல்லவன் டைப்பில் இல்லாமல்.. இவர்களிலும் இப்படி ஆட்கள் உண்டு என்பதாகவே வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் கே, எங்காவது தனக்கு வேண்டியதை பார்த்தால் ஆட்டய போட்டுவிடுவார்.  அப்படி இவர் ‘சுடும்’ ஒரு பென் டிரைவை வைத்துதான் படத்தின் பிற்பாதியில் டெம்போவை ஏற்றியிருக்கிறார்கள்.
ஸ்ரீராம சந்தோஷின் நடிப்பைவிடவும் ஒளிப்பதிவுதான் கண்ணைக் கட்டுகிறது. பாடல் காட்சிகளில் குறிப்பாக ‘வெள்ளைக்கார ராணி’ பாடலில் அதகளம் செய்திருப்பது ஒளிப்பதிவாளரும், நடன இயக்குநரும்தான். இந்தாண்டு படங்களில் மிகச் சிறந்த நடனம் என்று இந்தப் பாடலின் நடனமே இப்போதுவரையிலும் பேசப்படும். ஒரு காட்சியில் லட்சுமி பிரியா திட்டம் தீட்டும்போது திடீரென்று லைட்டிங்ஸ் மாறி கருப்பு வெள்ளையாகவும், கலராகவும் மாறி, மாறி வருவது ஒளிப்பதிவில் ரசிக்க வைத்த காட்சி.
அறிமுகக் காட்சியிலேயே அசத்தலாக தோன்றுகிறார் லட்சுமி பிரியா. இதுவரையிலும் எந்தப் படத்திலும் கேட்காத ஒரு வசனம்.. ‘பணம் எடுத்துட்டு எவ்ளோ எடுத்தேன்னு குறிச்சு கையெழுத்து போட்டுட்டு போ’ என்று குளித்தபடியே நரேன் சொல்வதை பார்க்கும்போதே படத்தின் வித்தியாசம் உணரத் தொடங்கிவிட்டது.
தனது வாழ்க்கைக் கதையை நொந்தபடியே தனது புதிய காதலனிடம் சொல்லி ‘எனக்கு பணம்தான் முக்கியம்’ என்று சொல்லும் அந்தத் தருணத்தில்  அவரது கொள்ளைத் திட்டம்கூட சரியென்றே மனதுக்கு உணர்த்துகிறார். மாட்டிக் கொண்ட தனது ஆட்களை நினைத்து வருந்துவதைத் தவிர அந்த நேரத்தில் எதையும் சொல்ல முடியாமல் தவித்துவிட்டு.. பின்பு இன்ஸ்பெக்டர் கவிதாபாரதியிடம் பேரம் பேச வந்து ‘டீலிங்’கை முடிப்பதெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு இடையூறு இல்லாத விஷயம்..!
எடிட்டர் காகின், இசையமைப்பாளர் ‘கே’ இருவரும் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் குற்றம் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
‘ஆடுகளம்’ நரேன் படத்திற்குப் படம் தனது நடிப்பினால் கேரக்டராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அலட்சியமாக காது குடைந்து கொண்டே கதை கேட்பது.. பணம் பறிபோன பின்பு பணத்துக்காக அவர் படுகின்ற பதட்டம்.. லட்சுமி பிரியாவை தொலைத்துவிட தான் நினைத்திருப்பதை பட்டென்று சொல்லி தனக்குப் பணம்தான் முக்கியம்.. என்று சொல்லி கவிதாபாரதியை விரட்டுவதும், கடைசியாக பணத்தை பார்த்ததும் வாழ்க்கைக் கிடைத்ததுபோல குற்றவாளி யாரென்று தெரிவது தனக்கு முக்கியமில்லை என்று நினைத்து ஆபரேஷனை ஹால்ட் செய்யச் சொல்வதும்.. நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.
இவருடைய அல்லக்கைகள் நால்வரும் ஆளுக்கொரு மொக்கை யோசனையைச் சொல்லும்போதெல்லாம் அதற்கொரு ரியாக்ஷன்களை வரிசையாகக் காட்டுகிறார் பாருங்கள்..  சிம்ப்ளி சூப்பர்ப்..!
இன்னொரு புதிய வரவான கவிதா பாரதியை இரு கரம் கூப்பி வரவேற்கலாம். இவரது அறிமுகப் படலம் இரண்டு காட்சிகளில் மெளனமாகவே நடக்கிறது. எதற்காக இதைக் காட்டுகிறார்கள் என்கிற மெல்லிய சந்தேகத்தை அடுத்த நொடியில் போட்டுடைத்தாலும் கவிதா பாரதியின் லின்க்கை அப்படியே விட்டுவைத்துவிட்டு பின்னால் உடைப்பது நல்லதொரு சஸ்பென்ஸ்தான்.
லட்சுமி பிரியாவிடம் இன்ஸ்பெக்டர் கெத்து குறையாமல் பேசியபடியே வந்து டீலிங்கில் வந்து நின்று அதையும் தனது கண் பார்வையிலேயே குறிப்பால் உணர்த்துவதெல்லாம் படு ஜோர்.. ‘எல்லாம் முடிந்த’ பிறகான ஓய்வில் கேமிராவின் கண் பார்வையில் கவிதாபாரதி கீழே அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் பலகையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி அவரை நோக்கி காலாட்டியபடியே லட்சுமி பிரியா பேசுவதை படம் பிடித்திருக்கும் கேமிராவின் கோணம் காட்டுவது என்ன என்பதெல்லாம் பெண்ணியவாதிகளும், ஆணியவாதிகளும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்..!
சிங்கம்புலி. சிங்கம்புலியாகவே வருகிறார். சின்னச் சின்ன ஷாட்டுகள் என்றாலும் பாரதிராஜா, பாக்யராஜ், பாலாவிடம் இவர் வாய்ப்பு கேட்கும் காட்சிகள் ரசனையானது. மேலும் இவருக்கும், நண்பர்களுக்கும் இடையில் நடக்கும் வாதப் போர்களும், கொள்ளைத் திட்டத்தில் இவருக்கே தெரியாமல், இவரையும் இணைத்து வைத்து நடத்தியிருக்கும் திரில்லிங்கான திரைக்கதையும் சூப்பர்தான்.
கஷ்டப்பட்டு வாய்ப்பு கிடைத்த பின்பு இணை, துணை இயக்குநர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டும் கெத்தையும், திமிரையும் சிங்கம்புலியை வைத்தே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
பரபரப்புடன் துவங்கும் அந்தக் கொள்ளையடிக்கும் எபிஸோடும் முடிவுற்ற பின்பு தொடர்ந்து நடக்கும் சேஸிங்கும் மிஷ்கின் படங்களுக்கே உரித்தான திரைக்கதை. ‘ஆகஸ்ட்-15’ என்கிற சின்னக் குறிப்பை வைத்துக் கொண்டு கடைசியில் கண்டுபிடிப்பதுவரையிலும் போன பின்பு கிளைமாக்ஸில் நரேன் செய்யும் டிவிஸ்ட் செமத்தியான திரைக்கதை.
கூத்துக் கலை பற்றிய அந்தப் பாடல் காட்சியை படமாக்கியிருக்கும்விதமே வித்தியாசம்தான்.. இடையிடையே நடப்பு காட்சிகளையும் காட்டவிட்டு படப்பிடிப்பு விட்டுவிட்டு எடுப்பது போலவும் திரைக்கதையே வேகப்படுத்தியிருப்பதில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். மிக யதார்த்தமான நம் மண் சார்ந்த அந்தக் கூத்துக் கலை இப்போது மருகிப் போய் அருகிவிட்டது என்பது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
வசனங்களினாலும் வடிவேல் நிச்சயம் கவரப்படுகிறார். கமல், ரஜினி, நமீதா வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று இவர்கள் போடும் திட்டமும், பாலுமகேந்திரா பற்றிய வசனமும் குறிப்பிடத்தக்கவை.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம். கலை இயக்கம். இவர்கள் நால்வர் வசிக்கும் மொட்டை மாடி வீட்டை அப்படியொரு டிஸைனாக அமைத்துக் கொடுத்த கலை இயக்குநர் பாலாவுக்கு நமது பாராட்டுக்கள். அதேபோல் கூத்துக் கலையின் மேக்கப்பும், அது தொடர்பான கலை இயக்கப் பொருட்களும் தேடி கண்டெடுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.
‘வின்னர்’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராமச்சந்திரன் ஹோட்டலில் சர்வர் வேலை பார்ப்பதாக வந்த செய்தியைக் கண்டு தமிழகமே திகைத்தது. அதே தயாரிப்பாளரை இந்தப் படத்தில் அவ்வப்போது வந்து செல்லும் ஒரு கேரக்டராகக் காட்டி தங்களுடைய படத்தினால் கிடைக்கும் பலனில் கொஞ்சத்தை அவருக்கு கொடுப்பதும் டச்சிங்கான விஷயம். இந்த கேரக்டரில் நடிக்க முன் வந்த அந்த்த் தயாரிப்பாளருக்கு நமது நன்றிகள்..!
என்ன இருந்தாலும் கொள்ளையடித்த பணத்தில் படத்தை தயாரிப்பதும், பின்பு படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க எண்ணுவதும் சினிமாத்தனம்தான் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். தவறுதான் என்றாலும் இதற்காக இயக்குநர் வடிவேலு திரையில் சொல்லும் சில நியாயங்கள் சட்டத்தின் முன்பும், சமூகத்தின் முன்பும் நியாயமில்லை என்றாலும், இதனை நியாயப்படுத்தும்வகையில் ஜெயித்த பின்பு நடந்து கொள்வதுதான் வடிவேலுவின் வெற்றியாக தெரிகிறது..!
படத்தின் கதைப்படி இது ‘கள்ளப்படம்’தான் என்பதால் தலைப்பையும் பொருத்தமாக வைத்தமைக்கு இயக்குநர் வடிவேலுவுக்கு இன்னுமொரு ஷொட்டு..! 2 மணி 13 நிமிடங்களே என்றாலும் ஒரு சுவையான, திரில்லிங்கான படத்தை பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது இந்தக் ‘கள்ளப்படம்’.
‘கள்ளப்படம்’ என்றாலும் இதுவொரு நல்ல படமே..! அவசியம் பாருங்கள்..!