பிருந்தாவனம் - சினிமா விமர்சனம்

28-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘சேதுபதி’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’  போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், தனது வான்சன் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் அருள்நிதி தமிழரசு ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடித்துள்ளார். ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் விவேக்,  நடிகர் விவேக்காகவே  நடித்துள்ளார். 
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரான விவேக் ஒளிப்பதிவாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ளார். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார். பொன்.பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.  நிர்வாக தயாரிப்பு – கே.பி.பஷிர் அஹமது, மக்கள் தொடர்பு – நிகில்,  ‘அபியும் நானும்’,  ‘மொழி’,  ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன்,  கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். 
ராதாமோகனின் படங்கள் எப்படியிருக்குமென்று கற்பனை செய்திருக்கிறீர்களோ அப்படியே.. தப்பாமல் வந்திருக்கிறது இந்தப் படம்..!

கதைக் களம் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி. அங்கே சிகை திருத்தும் நிலையத்தில் சிகை திருத்துநராக பணியாற்றி வருகிறார் ஹீரோ அருள்நிதி. காது கேளாத, வாய் பேச முடியாதவர்.
சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்து உண்டு வாழ்ந்தவர். ஒரு நாள் எம்.எஸ்.பாஸ்கருக்கு உதவி செய்யப் போய் அவர் கண்ணில் பட்டவர். அப்படியே எம்.எஸ்.பாஸ்கர் அவரை ஒரு அனாதை இல்லத்தில் சேர்ப்பித்துவிடுகிறார்.
அங்கேயே படித்து வளர்ந்து பெரியவனாகி, அதே ஊட்டியில், அதே பகுதியில், தொடர்ந்து 20 வருடங்களாக வசித்து வருகிறார். அதே ஊட்டியில் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் நடத்தி வரும் தலைவாசல் விஜய்யின் ஒரே செல்ல மகள் ஹீரோயின் தான்யா.
சின்ன வயதில் இருந்தே அருள்நிதியுடன் பழகி வந்த்தால் பெரியவளானதும் ஒரு இனம் புரியாத காதலுடன் இருக்கிறார் தான்யா. ஆனால் அருள்நிதிக்குத்தான் இது புரியவே இல்லை. அருள்நிதி அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்த காலத்தில் இருந்தே நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர். முடி திருத்தும் கடையில்கூட அவர் இருக்கும்போதெல்லாம் விவேக்கின் காமெடி மட்டுமே டிவியில் ஓடிக் கொண்டிருக்கும். அப்படியொரு விவேக் வெறியர்.
இந்த நேரத்தில் விவேக்கே ஊட்டியில் அருள்நிதியிடம் சிக்குகிறார். விவேக் ஓட்டி வந்த கார் சகதியில் சிக்கிவிட அந்த வழியாக வந்த அருள்நிதி காரை தள்ளிவிட்டு விவேக்கிற்கு உதவுகிறார். ஆனால் வந்தவர் விவேக் என்பதால் அருள்நிதி பெரும் மகிழ்ச்சியாகிறார்.
விவேக்கின் நெருங்கிய நண்பனான பஞ்சு சுப்பு உடல் நலமில்லாமல் இருப்பதால் அவரை பாதுகாப்பதற்காகவே ஊட்டிக்கு அவரை அழைத்து வந்திருப்பதாகச் சொல்கிறார் விவேக். இப்போது விவேக்கும், அருள்நிதியும் அவ்வப்போது சந்தித்து கொள்கிறார்கள்.
இது ஒரு கட்டத்தில் அருள்நிதி மூலமாக ஹீரோயின் தான்யா, அருள்நிதியின் நண்பன் என்று சிலருக்கும் தெரிய வருகிறது. இந்த நேரத்தில் தான்யா தான் அருள்நிதியை காதலிப்பதாகச் சொல்ல அருள்நிதி இதனை ஏற்க மறுக்கிறார். காரணம் கேட்க அதைச் சொல்லவும் மறுக்கிறார்.
விவேக்கும், நண்பனும் அருள்நிதியை இந்த விஷயத்தில் டார்ச்சர் செய்ய அப்போதுதான் அருள்நிதி தனக்கு பேச்சு வரும் என்று பேசிக் காட்டுகிறார். இதுவும் அவர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனாலும் தான்யாவை மணப்பதற்கு முடியாது என்கிறார் அருள்நிதி.
அருள்நிதிக்கு பேச்சு வரும் என்பதும், இத்தனை நாட்கள் ஊமை என்று சொல்லி தன்னை ஏமாற்றியது தெரிந்து தான்யாவும் அருள்நிதியை வெறுக்கத் துவங்குகிறார். விவேக்கும் சென்னைக்கு கிளம்பலாம் என்று வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்து தடைக்கல்லாகிறது..!
இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘பிருந்தாவனம்’ படத்தின் கதை.!
‘மொழி’ படத்தின் வெற்றிக்கு முக்கால்வாசி காரணமே ஜோதிகாவின் கேரக்டர் ஸ்கெட்ச். அந்த வாய் பேச முடியாத, காது கேளாத நிலையில் தான் பேசும் வசனங்கள் அனைத்தையும் சைகையிலேயே அதாவது நடிப்பிலேயே காட்ட வேண்டிய சூழல் ஜோ-வுக்கு. அசத்தியிருந்தார் ஜோதிகா.  இங்கே அதே நிலைமைதான் அருள்நிதிக்கு..!
முதலில் கொஞ்ச நேரம் அந்த சைகை பாஷை நமக்கு புரிபட லேட்டானாலும் தேவைப்படும் நேரத்தில் மிகவும் ஆழமாக நம் மனதில் பதிந்திருப்பதால், அருள்நிதியின் ஆவேச நடிப்பை உணர முடிகிறது. தான்யாவை மறுப்பதற்கான காரணத்தை சைகையிலும், பேச்சிலும் அவர் வெளிப்படுத்தும்விதம் கல்லான மனதையும் கரையும்வைக்கும் விதமாய் இருக்கிறது.
இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் இழைந்து கொடுத்திருக்கிறார் அருள்நிதி.  விவேக்கை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி காட்டும் மகிழ்ச்சியும், அவருக்கு மனமுவந்து செய்யும் உதவிகளும் ஒரு தீவிர ரசிகனை காட்டுகிறது..!
தான்யாவை முதலில் புறக்கணித்து பின்பு காதல் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் தவிப்பதும்.. இறுதியில் தன் நிலை உணர்ந்து தனக்குப் பொருத்தமில்லாதவள் என்று உதறித் தள்ளும் பக்குவமான பேச்சுமாக அருள்நிதி தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் சோடை போகவில்லை. இவரது நடிப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டது இந்தப் படம்.
இவருக்கு சளைக்காமல் போட்டி போட்டு நடித்திருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன். அட்டகாஷ் நடிப்பு எனலாம். சினிமாட்டிக் முகம் என்பதால் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அழகு சொட்டுகிறது. வசன உச்சரிப்பும், முக பாவனைகளும், நடிப்பும்கூட இவரை அனைத்துக் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறது. சுப்புவின் மகளை கடத்தும் காட்சியில் ஹீரோவுக்கு இணையாக கைதட்டலை பெற்றிருக்கிறார் தான்யா.. வெல்டன்ம்மா.. சீக்கிரமா இவரை புக் பண்ணுங்க இயக்குநர்களே..!
நடிகர் விவேக் நடிகராகவே நடித்திருக்கிறார். வழக்கமான தனது நக்கல் காமெடி டயலாக்குகளையும் இடையிடையே வைப்பதுபோல திரைக்கதை அமைத்து படம் சுவை குன்றாமல் செல்ல வழி வகுத்திருக்கிறார். இவரும் செல் முருகனும் அமைத்திருக்கும் காமெடிக் களன் இன்னொரு பக்கம் பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் ரகம்..!
தனது நண்பன் சுப்பு பஞ்சுவுக்காக தான் ஊட்டி வந்திருக்கும் கதையை சோகமாகச் சொல்லி மனதில் ஒரு டெம்போவை ஏற்றிவிடுகிறார். ஒவ்வொரு முறையும் சென்னைக்குக் கிளம்பும் திட்டம் பணாலாக… இதன் பின்பு மனைவிக்கு போன் செய்து சமாதானம் செய்து, அங்கிருந்து வரும் திட்டுக்களை அப்படியே வாங்கி முழுங்கிவிட்டு அல்லல்படும் விவேக்கின் அந்த ஒன் மேன் ஷோ தியேட்டரை கதி கலங்க வைக்கிறது..!
ராதா மோகனின் செட் பிராப்பர்ட்டிகளில் ஒன்றாகவே எப்போதும் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் இதிலும் ஒரு அழுத்தமான கேரக்டரை செய்திருக்கிறார். மனதை நெகிழ வைக்கிறார். காது கேளாத பெண்மணி, கிருஷ்ணமூர்த்தி, சிகை திருத்தக கடையின் உரிமையாளர்.. ஹீரோயினின் அப்பாவான ‘தலைவாசல்’ விஜய் என்று பலரும் நடிப்பில் சோடை போகவில்லை.
எந்தக் காட்சியையும் போரடிக்கவிடாத அளவுக்கு திரைக்கதை அமைத்து இதற்கேற்றாற்போல் வசனத்தை எழுதி மகிழவும், கைதட்டவும் வைத்திருக்கிறார் வசனகர்த்தாவான பொன்.பார்த்திபன். அவருக்கும் நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..! அதிலும் அந்த அவதார் காமெடி வசனம் சூப்பர்ப்..!
மலைகளின் அரசியான ஊட்டி ஏற்கெனவே இயற்கை எழில் வாய்ந்திருப்பதால் கேமிராமேனுக்கு அதிகம் வேலை வைக்காமல் அனைத்து காட்சிகளையும் ரம்மியமாக படம் பிடித்திருக்கிறார். அதிகம் கேமிரா டிரிக்குகளுக்கு வேலை கொடுக்காமல் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.விவேகானந்தன்.
விஷால் சந்திரசேகரின் இசையில் இரண்டு பாடல்களும் ஓகே ரகம். அவ்வப்போது சூழலுக்கேற்ற பின்னணி இசையை மட்டும் மிகச் சரியாக கொட்டி வைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
பாவப்பட்ட ஜீவன்களின் கதையை படமாக்கினால் அதற்கு மேல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வேறு எதுவும் தேவையில்லை என்பதால் ராதா மோகனின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச் ஓகேதான். படத்தில் எந்தவித நெருடலான காட்சிகளும் இல்லை. அழுத்துப் போன திரைக்கதையும் இல்லை. இரட்டை அர்த்த வசனங்களும் இல்லை.. ஆபாச குத்துப் பாடல்களும் இல்லை.. ஒட்டு மொத்தமாய் திரும்பவும் ஒரு ராதாமோகனின் படமாய் ஜொலிக்கிறது இந்த ‘பிருந்தாவனம்’ திரைப்படம்.
அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘பிருந்தாவனம்’. மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

தொண்டன் - சினிமா விமர்சனம்

27-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அப்பா’ படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் படம் ‘தொண்டன்’.
இதில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். அவரது தங்கை வேடத்தில் அர்த்தனா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.  மேலும் விக்ராந்த், சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஞானசம்பந்தம், வேல ராம்மூர்த்தி, நமோ நாராயணன், அனில் முரளி, திலீபன், பிச்சைக்காரன் மூர்த்தி, நசாத், பாபூஸ், செளந்தர்ராஜன், படவா கோபி, நித்யா, ஈரோடு கோபால், பல்லவா ராஜா, முருகன், தேவி, கெளரி என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், ரிச்சர்டு எம்.நாதன், படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், இசை – ஜஸ்டின் பிரபாகரன், கலை இயக்கம் – ஜாக்கி, நடனம் – ஜானி, பாடல்கள் – யுகபாரதி, விவேக், சண்டை பயிற்சி – விஜய் ஜாகுவார், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.எஸ்.ரவிச்சந்திரன், உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – சந்துரு, ஸ்டில்ஸ் – ஏ.ஆர்.முருகன், பி.ஆர்.ஓ. – நிகில், D.T.S. மிக்ஸிங் – டி.உதயகுமார், 4 பிரேம்ஸ், டிஸைன்ஸ் – சேவியோ, எழுத்து, இயக்கம் – பி.சமுத்திரக்கனி.
‘நாடோடிகள்’, ‘சாட்டை’, ‘நிமிர்ந்து நில்’, ‘அப்பா’ என்று தனது படங்களில் தொடர்ச்சியாக சமூகப் பிரச்சினைகளை பற்றியே பேசி வரும் சமுத்திரக்கனி, இந்தப் படத்தில் அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அனைத்தும் கலந்த ஒரு சமூகக் கலவையை கொடுத்திருக்கிறார்.

ராணுவத்தில் பணியாற்றிவிட்டு சமூக சேவையாற்ற வேண்டுமே என்கிற நோக்கத்தில் இப்போது ஆம்புலன்ஸ் வேனை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இவருக்கு உதவியாளராக இருக்கிறார் கஞ்சா கருப்பு.
ஒரு நாள் மகாத்மா காந்தி சிலையருகே நடந்த கொலை முயற்சியில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் பாபூஸை தனது ஆம்புலன்ஸ் வேனில் மிக வேகமாக வந்து தூக்கிச் செல்கிறார் கனி.
ஆனால் பாபூஸை கொலை செய்ய முயற்சித்த அந்த மாவட்ட மந்திரியின் மகனான நமோ நாராயணன் தனது அடியாட்களை ஏவி ஆம்புலன்ஸை மறிக்கச் சொல்கிறார். ஆனால் கனி தந்திரமாகச் செயல்பட்டு பாபூஸை குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்து அவரது உயிரைக் காப்பாற்றுகிறார். இதனால் நமோ நாராயணன் கனி மீது ஆத்திரப்படுகிறார்.
இதற்கிடையில் கனியின் நெருங்கிய நண்பனான விக்ராந்த், கனியின் தங்கை அர்த்தனாவை பல இடங்களில் சந்தித்து ஈவ் டீஸிங் செய்கிறார். இதற்கு மந்திரியின் இன்னொரு மகனான செளந்தர்ராஜன் உடந்தையாக இருக்கிறார். இதேபோல் பேருந்தில் இந்த சேட்டையை விக்ராந்தும், செளந்தர்ராஜனும் செய்ய.. கோபமடையும் அர்த்தனாவின் தோழி செளந்தர்ராஜனை செருப்பால் அடித்துவிட.. அவமானத்தில் குன்றிப் போகிறார் செளந்தர்ராஜன்.
விக்ராந்துடன் பேசி பேசி அவரது மனதை மாற்றி அவரையும் தன்னைப் போன்ற ஆம்புலன்ஸ் வேன் இயக்குநராக்க பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார் கனி. இந்த சிகிச்சையினால் மனம் மாறும் விக்ராந்தும் கனியை போலவே ஆம்புலன்ஸ் வேனை இயக்கும் வேலையில் சேர்கிறார்.
கனி, தனது வீட்டுக்கருகிலேயே இருக்கும் பள்ளி ஆசிரியையான சுனைனாவை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். நல்லவனாகி இப்போது பொறுப்பான வேலைக்குப் போகும் விக்ராந்த், கனியின் தங்கை அர்த்தனாவை காதலிக்கிறார்.
இந்த நேரத்தில் செளந்தர்ராஜன் திடீரென்று மகளிர் கல்லூரிக்குள் நுழைந்து அர்த்தனாவின் தோழியை தாக்குகிறான். கோபம் கொண்ட மாணவிகள் பதிலுக்கு செளந்தர்ராஜனை தாக்கியதில் அவர் மரணமடைகிறார். இதனால் கோபமடையும் நமோ நாராயணன் தனது தம்பியின் மரணத்துக்கு கனிதான் காரணம் என்று சொல்லி அவரை மருத்துவமனை வாசலில் வைத்து தாக்குகிறார். இரு தரப்பினருக்கும் இடையில் பகை வளர்கிறது.
எப்படியாவது சமுத்திரக்கனியை பழி வாங்கத் துடிக்கிறார் மந்திரியின் மகனான நமோ நாராயணன். இதற்கு அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்கிறார். செளந்தர்ராஜன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டாம் என்று காவல்துறை உயர் அதிகாரி, இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட கனியை எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இதனால் குறுக்கு வழியில் கனியைத் தீர்த்துக் கட்ட கேஸ் சிலிண்டரை வைத்து வெடிக்க வைக்கிறார் நமோ நாராயணன்.
இந்தச் சதிச் செயலில் சிக்கி கனியின் தந்தை தனது இரண்டு காதுகளிலும் கேட்கும் திறனை இழக்கிறார். கனியின் மனைவி சுனைனா காப்பாற்றப்பட்டாலும், அவரது கரு கலைந்து போகிறது. இதற்கெல்லாம் காரணம் நமோ நாராயணன் என்று தெரிந்தாலும் கனியின் இயல்பான குணம் அவரை தடுத்துவிட.. நமோ நாராயணனை வீடு தேடி வந்து எச்சரிக்கை மட்டுமே செய்துவிட்டு வருகிறார் கனி.
இதை இப்படியேவிடக் கூடாது என்று நினைத்து நமோ நாராயணன் காய் நகர்த்த.. நமோ நாராயணனை வேறு விதமாக பழி வாங்க கனியும் துடிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படமே..!
இந்தப் படத்தில் கேரக்டர்களுக்கு வைத்திருக்கும் பெயர்களே படத்திற்கான குறியீடுகளாக இருக்கின்றன. சமுத்திரக்கனியின் பெயர் மகா விஷ்ணு. படத்தில் சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பதால் காக்கும் கடவுளின் பெயரை வைத்திருக்கிறாராம். அவரது தங்கையான அர்த்தனாவின் பெயர் மஹிஷா சூரமர்த்தினியாம். அம்மன் பெயர். ஆம்புலன்ஸில் அட்டெண்டராக வரும் விக்ராந்தின் பெயர் விக்னேஷ். சமுத்திரக்கனியின் காதலி சுனைனாவின் பெயர் பகழமுகி. பெயர்களே படத்தின் வித்தியாசத்தை உணர்த்துகின்றன.
நமது அண்ணன், நமது தம்பி என்கிற அதே எண்ணவோட்டத்துடன்கூடிய நடிப்பையே கனியிடத்தில் பார்க்க முடிகிறது. கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதிலும் கனியே ஸ்கோர் செய்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
ஒரு சமூகப் போராளி என்னும் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதால் அதற்கேற்றவாறு தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை கொஞ்சமும் சிதைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கனி. வீட்டில் பொறுப்பான மகனாக பேசும்போதும், ஆம்புலன்ஸ் வேனின் டிரைவராக தனது பணியில் நேர்மையாக இருப்பதுடன், அதையும் கண்ணியமாக பேசி பதிலளிப்பதும்.. விக்ராந்தை தேடிப் பிடித்து அக்கறையுடன் விசாரித்து “என் தங்கச்சியைவிடவும் நீதாண்டா எனக்கு முக்கியம்…” என்று சொல்லி அவரை மனமாற்றம் அடையச் செய்யும் காட்சியிலும் கனியின் நடிப்பு மிகையில்லாதது..!
ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரிடத்தில் தற்போதைய நாட்டு நிலைமையை எடுத்துரைத்து அவர்கள் செய்து வரும் அனைத்துவித மக்கள் விரோதச் செயல்களையும் பட்டியலிட்டு சொல்லும் காட்சியில், தமிழகத்தின் ஒரே பிரதிநிதியாகவே காட்சியளிக்கிறார் கனி. தமிழகத்தில் இருந்த 87 வகையான மாடுகளின் பெயர்களை உணர்ச்சிபூர்வமாக பேசி கொந்தளிக்கும் காட்சியில் தியேட்டர்களில் கைதட்டல்கள் பறக்கின்றன.
நமோ நாராயணனை வீடு தேடி சென்று அவரை தாக்கி கொலை செய்ய முயற்சித்தும் கடைசி நொடியில் மனதை மாற்றிக் கொண்டு வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு எச்சரித்துவிட்டுச் செல்லும் காட்சியிலும் ஒரு சாத்வீக போராளியைக் காண முடிகிறது.. வெல்டன் கனி ஸார்..!
மிக, மிக வித்தியாசமான முறையில் அறிமுகமாகிறார் சுனைனா. ஏன் காதல்.. எதற்கு காதல்.. எப்படி காதல் என்றெல்லாம் சொல்லி நேரத்தை வீணாக்காமல் பட்டென்று காதலைச் சொல்லி கனியை கலவரப்படுத்துகிறார் சுனைனா. ஸ்கிரீனில் அழகோ அழகு. பாடல் காட்சிகளில் மிக அழகு.
கனியின் அப்பாவாக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி பல இடங்களில் கணீர் குரலில் அழுத்தமாக நடித்திருக்கிறார். சுனைனாவை பெண் கேட்கப் போகுமிடத்தில் அமைதியாய் பேசி, சட்டென்று கோபம் வந்து “தூக்குடா பொண்ணை…” என்று சொல்லிவிட்டு வருமிடத்தில் எல்லாருக்கும் பிடித்தமான அப்பாவாகிவிட்டார்..!
விக்ராந்த் தனது சோகத்தை மறைக்க வெறித்தனமான செயல்களில் ஈடுபட்டவர்.. கனியின் அன்பான, அனுசரணையான பேச்சால் மனம் மாறி நல்லவராக மாறுகிறார். “இன்னைக்கு ஒரு உசிரை காப்பாத்திட்டேண்ணே…” என்று அவர் கனிக்கு போன் செய்து சொல்லும் காட்சியில் ஒரு நெகிழ்ச்சி தென்படுகிறது..! இது போன்று கிடைக்கும் நல்ல வேடங்களில் நடிப்பதுதான் விக்ராந்த் போன்றவர்களுக்கு நல்லது..!
காதல், கோபம், சோகம் எல்லாவற்றையும் அனுபவ நடிகை போல் நடித்திருக்கிறார் புதுமுகமான அர்த்தனா.  கஞ்சா கருப்பா இது என்று கேட்பதுபோல பல காட்சிகளில் டைமிங் சென்ஸ் வசனங்களை அள்ளி வீசியிருக்கிறார் கஞ்சா கருப்பு ஸார்.. நல்ல போலீஸாக வரும் திலீபன் கவனிக்க வைத்திருக்கிறார். ஒரு கெட்ட போலீஸிடம் சிக்கியிருப்பதை உணர்ந்து எல்லா பிரச்சினைகளில் இருந்து நாசூக்காக கழன்று கொள்ளும் டெக்னிக்கோடு அவர் பேசும் பாங்கு அருமை. நடிக்க வைத்திருக்கும் இயக்குநரின் திறமையோடு திலீபனுடைய பங்களிப்பும் அதிகம்தான்..!
சில காட்சிகளே என்றாலும் சூரியும், தம்பி ராமையாவும் வெகுவாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். டைமிங் சென்ஸ் காமெடியில் இருவருமே கில்லிகள். அற்புதமாக நடித்து கலகலப்பை கூட்டியிருக்கிறார்கள்.
இதேபோல் நமோ நாராயணன்.. கெட்டவர் என்பதற்காக தனி கெட்டப்பே இல்லாமல் வெறும் வசனத்திலேயே தனது தந்தை ஞானசம்பந்தனை வைத்து காசு சம்பாதித்து அதில் தனது தாய்க்கும், மனைவிக்கும் தங்க நகைகளை வாங்கிக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று இவர் ஆடும் ஆட்டமும்.. முடிவில் இவருக்குக் கிடைக்கும் தண்டனையும் ‘கெட்டவன் வீழ்வான்’ என்னும் நன்னெறிக் கதையை போதிப்பது போலத்தான் இருக்கிறது.
இயக்குநர் சமுத்திரக்கனியின் இதற்கு முந்தைய படங்களைவிடவும் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் அதிக அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கஞ்சா கருப்புவுடன் கனி பேசும் சில உரையாடல்கள்.. இரவு நேரத்தில் திருடனை தேடி அலையும் காட்சிகள், சுனைனா வீட்டுக்கு பெண் கேட்டு போகும் காட்சி.. வருமான வரித்துறை ரெய்டில் நடக்கும் அட்டகாசங்கள்.. சூரியின் அலட்டல் இல்லாத நடிப்பு.. என்று இந்தப் படத்தில் இழையோடியிருக்கும் நகைச்சுவை காட்சிகளும் படத்திற்கு இன்னொரு பலமாக அமைந்திருக்கின்றன.
மறைமுகமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்களை சேர்த்து வைத்திருந்து, கடைசியில் யாருக்குமே கொடுக்காமல் அவர் போய்ச் சேர்ந்துவிட்ட கதையை சொல்லியிருக்கும் தைரியத்தை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்..!
சாத்வீக போராட்டமாக ஒரு பிரச்சினையில் இருந்து தப்பிக்க அதிலிருந்து விலகிவிட வேண்டும். முடியாவிட்டால் அந்தப் பிரச்சினையை திசை திருப்பிவிட வேண்டும் என்கிற அறிவுரை, நாட்டு மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய விஷயம்தான்.
இதனை முன் வைத்து நமோ நாராயணனை லஞ்சம் வாங்கிய கூட்டாளிகளிடமே மாட்டிவிடுவதும்.. போலீஸில் சிக்க வைப்பதும் ஒரு சுவையான திரைக்கதை.
நமோ நாராயணனின் சொத்துக் குவிப்பு பைல்கள் கனியைத் தேடி வரும் கதையெல்லாம் மிக எளிதாக அமைக்கப்பட்ட திரைக்கதைதான் என்றாலும் வேறு வழியில்லை என்பதால் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..!
இப்படி இயக்குநரின் வசதிக்காகவே பாஸிட்டிவ்வான திரைக்கதையாக அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரிய குறையாகத் தெரிந்தாலும், இது போன்ற மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் படங்களில் அது தப்பில்லை என்பதால் நாமும் அதனை மறப்போம்.. மன்னிப்போம்..!
ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் நெய்வேலி, கடலூர் மாவட்ட பகுதிகளை அழகு குறையாமல் காண்பித்திருக்கிறார். பாடல் காட்சிகளில்கூட அத்தனை வெயிலிலும் எப்படி துளிகூட அழகு குறையாமல் படமாக்கினார்களோ தெரியவில்லை. அத்தனை ஷாட்டுகளும் அழகு..!
விஜய் ஜாக்குவாரின் சண்டை பயிற்சியில் ஆம்புலன்ஸ் மோதலை மிக விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார். படத் தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷின் உதவியால் இடைவேளைக்கு பின்பு மிக இறுக்கமான விதத்தில் ஒரு திரில்லர் சேஸிங் டைப் படமாக மாற்றி அதையும் ரசிக்கும்விதத்தில் காண்பித்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் இரண்டு பாடல்களும் ஓகே ரகம்தான். பாடல் காட்சிகளை வைத்தே கதையை நகர்த்தியிருப்பதால் பாடல்களை தனியே கேட்டுக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
சமுத்திரக்கனியை இனிமேல் ‘மக்கள் தொண்டன்’ என்றும் குறிப்பிடலாம். தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மக்கள் நலப் பிரச்சினைகளை மட்டுமே முன் வைத்து அவர் செய்து வரும் இந்த சேவை போற்றத்தக்கது. புகழத்தக்கது..!
‘ஒரு சினிமாவினால் என்ன செய்ய முடியும்?’ என்ற  சொத்தை வாதத்தை சொத்தையாக்கும்விதமாக இயக்குநர் சமுத்திரக்கனி போன்றவர்கள் செய்யும் இந்த சமூக சேவைதான், தமிழ்ச் சினிமாவின் பெயரை இன்றைய தலைமுறையிடம் ஆழமாக பதிய வைக்கும்..!
அந்த வகையில் இந்தத் ‘தொண்டன்’ திரைப்படம் நிஜமாகவே ஒரு ‘மக்கள் தொண்டன்’ பற்றிய கதைதான். நாட்டு மக்கள் அனைவரும் அவசியம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமும்கூட என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறோம்..!

இணையத்தளம் - சினிமா விமர்சனம்

21-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனுக்கிரஹா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் உமா சங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், சுகன்யா, ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ், கெளசிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஏ.கார்த்திக் ராஜா, இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – ரிஜீஷ், கலை – ஜி.சி.ஆனந்தன், பாடல்கள், வசனம் – மரபின் மைந்தன் முத்தையா, நடனம் – பிரபு சீனிவாஸ், சண்டை பயிற்சி – மாபியா சசி, ஸ்டில்ஸ் – ஜி.வெங்கட்ராம், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – உமா சங்கர், இயக்கம் – சங்கர், சுரேஷ்.

இணையம் என்னும் புதிய விஞ்ஞான வளர்ச்சி கைக்கு எட்டியவுடன் உலகம் முழுவதிலுமே அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைத்து வகையான தொழில்களும் இணையத்தின் உதவியில்லாமல் நடத்தவே முடியாது என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த இணையத்தின் இன்னொரு பக்கமும் உலக மக்களை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நல்லதில் கெட்டதும் இருக்கும் என்பார்களே.. அது போலத்தான்.. இதே இணையத்தின் துணை கொண்டு அனைத்துவித கெட்ட செயல்களையும் இன்னொரு பக்கம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி நடத்தும் ஒரு செயலை சைபர் கிரைம் போலீஸார் எப்படி தேடி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
ஸ்வேதா மேன்ன் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஈரோடு மகேஷ் இதே பிரிவில் டெக்னிக்கல் ஆபீஸர். ஸ்வேதா மேன்னின் கணவர் பைலட்டாக இருந்து ஒரு விமான விபத்தில் இறந்து போய்விட்டார். இவருக்கு சிறிய வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
சின்னச் சின்ன சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடித்து வரும் வேளையில் இதுவரையிலும் நினைத்தே பார்க்காத ஒரு சம்பவம் நடந்தேறுகிறது.
ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் டெல்லி கணேஷ் படுத்த படுக்கையில் இருப்பது காட்டப்படுகிறது. அவருக்கு மெதுவாக கொல்லும் மருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கொஞ்சம், கொஞ்சமாக சாகப் போகிறார் என்றும், இந்த இணையத்தளத்தை தொடர்ந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக அவருக்கு அளிக்கப்படும் மருந்தின் அளவும் கூடும் என்றும் அந்த இணையத்தளத்தில் அறிவிப்பு வெளியாகிறது.
பைத்தியக்காரத்தனமான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானோர் அந்த இணையத்தளத்தை பார்வையிடத் துவங்குகிறார்கள். போலீஸ் விசாரிக்கத் துவங்குகிறது. ஆனாலும் ஒரு சிறிய துப்புக்கூட கிடைக்காமல் போக.. டெல்லி கணேஷ் அத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கு முன்பாகவே மரித்துப் போகிறார்.
இதனால் அதிருப்தியடையும் போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன், சைபர் கிரைம் போலீஸாரை கண்டிக்கிறார். இதனால் அஸிஸ்டெண்ட் கமிஷனரான கணேஷ் வெங்கட்ராமனை இந்த கேஸுக்காக சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமிக்கிறார்கள்.
அவரும் சார்ஜ் எடுத்து விசாரிக்கத் துவங்கும்போது அடுத்தக் கொலையாக ஒரு பத்திரிகையாளர் மாட்டுகிறார். அவரை ஐஸ் கட்டியின் மீது நிற்க வைத்து கழுத்தில் கயிற்றை மாட்டி தூக்குத் தண்டனை பெறுபவரை போல காட்டுகிறார்கள்.
இப்போதும் அந்த இணையத்தளத்தின் முகவரியையும், அது செயல்படும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள் சைபர் கிரைம் போலீஸார். இவர்கள் மும்முரமாக செயல்பட்டும் அந்த பத்திரிகையாளரை காப்பாற்ற முடியாமல் போகிறது.
இதற்கு பலிகடாவாக ஈரோடு மகேஷை சஸ்பெண்ட் செய்கிறார்கள். இதனால் வேதனைப்படும் ஈரோடு மகேஷ் தானே தன்னந்தனியே இந்த வழக்கு பற்றி விசாரிக்கிறார். இவருடைய விசாரணையில் அந்த நகரில் இருக்கும் ஒரு பெரிய மாலில்தான் இந்த இணையத்தளம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
இது பற்றி கணேஷுக்கு தகவல் கொடுத்து அவர் வந்து தீவிர சோதனை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மூன்றாவது பலியாடாக ஈரோடு மகேஷும் அந்த இணையத்தளத்தில் சிக்கிக் கொள்கிறார். இப்போது அவர் ஒரு பெரிய தண்ணீர் தொட்டிக்குள் நிற்க வைக்கப்பட்டிருக்க.. பார்வையாளர்களின் எண்ணிக்கை கூட கூட அந்த்த் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும் என்று அறிவிக்கிறார்கள்.
ஈரோடு மகேஷை காப்பாற்றத் துடிக்கிறது சைபர் கிரைம் போலீஸ். காப்பாற்றினார்களா இல்லையா என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.
மலையாள பேரழகி ஸ்வேதா மேனனை வீணடித்திருக்கிறார்கள். ஈரோடு மகேஷ் அவ்வப்போது காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். அவ்வளவுதான். கணேஷ் வெங்கட்ராமுக்கு இந்தப் படத்தின் படமாக்கலின்போது படத்தின் கதி நன்கு தெரிந்திருக்க வேண்டும். தன்னால் இயன்றதை செய்திருக்கிறார். இவர்களைக் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. இயக்கம் சரியாக இருந்தால் இவர்கள் ஏன் இப்படி இருந்திருக்கிறார்கள்..?
ஒரு குறிப்பிடத்தக்க டிவிஸ்ட்டாக சுகன்யா வந்தவுடன் படத்தில் ஒரு ஈர்ப்பு வருகிறது என்பது மட்டும் உண்மை.  ஆனால் அதை அவர் வெளிப்படுத்தும்விதம் இயக்கத்தில் சொதப்பலாகிவிட்டதால் ரசிக்கவே முடியவில்லை. ஆனால் சுகன்யாவை மட்டும் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். நன்றி..!
அரோல் கரோலியின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் பாடல் காட்சிகளை பார்த்தால்..? ம்ஹூம்.. வேண்டாம். விட்டுவிடுவோம்.. ஒளிப்பதிவு அவ்வப்போது ஆஃப் ஆகி வரும் டியூப்லைட்டை போலவே இருக்கிறது.
முதல் காட்சியிலேயே இந்தப் படத்தின் தரம் தெரிந்துவிட்டது. சாதாரண கமர்ஷியல் படம் அளவுக்கு எதிர்பார்க்கவில்லையென்றாலும், அதில் ஒரு சதவிகிதமாகவது இருக்க வேண்டாமா என்ன..?
சொதப்பலான இயக்கம்.. அரதப் பழசான திரைக்கதை.. அடிக்கடி லைட்டிங்கில் சொதப்பியிருக்கும் கேமிரா.. சின்னப் பிள்ளைகள் விளையாடும்விதமான சண்டை காட்சிகள்.. சம்பந்தமேயில்லாத வசனங்கள்.. தப்பான காட்சி கோணங்கள் என்று எந்தவிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு படத்தினை படமாக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.
இவர்களேதான் தயாரிப்பாளர்கள். எத்தனையோ நல்ல இயக்குநர்கள் வாய்ப்பில்லாமல் காத்திருக்கிறார்களே.. அவர்களிடத்தில் இதனை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கலாமே..? இப்படி இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்து கொண்டு எந்த தைரியத்தில் படத்தை இயக்க முன் வந்தார்கள் என்று தெரியவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் 8 போலீஸாரோடு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அருகில் வந்து நின்று, “இப்போ நாம ஸ்பாட்டுக்கு வந்துட்டோம்…” என்று டயலாக் பேசுகிறார் அஸிஸ்டெண்ட் கமிஷனர் கணேஷ் வெங்கட்ராம். சாதாரண போஜ்பூரி சினிமாலகூட இப்படியொரு டயலாக்கை வைக்க மாட்டார்கள்..!? அத்தனை கேவலமாய் இருக்கிறது இயக்கம்..!
மேற்கொண்டு படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு விஷயமும் இல்லை, என்பதால் படம் பற்றி எதையும் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறோம்..!

சங்கிலி புங்கிலி கதவ தொற - சினிமா விமர்சனம்

20-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’  நிறுவனம், பாக்ஸ்  ஸ்டார் நிறுவனத்துடன்  இணைந்து தயாரித்துள்ள படம் இது.
படத்தின் கதாநாயகன் ஜீவா.  இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இவர்களுடன் ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, கோவை சரளா, தம்பி ராமையா, தேவதர்ஷிணி என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஒளிப்பதிவு – சத்தியன் சூரியன், படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், இசை – விஷால் சந்திரசேகர், தயாரிப்பு வடிவமைப்பு – லால்குடி என்.இளையராஜா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – நா.முத்துக்குமார், விஜய் விவேக், அருண்ராஜா காமராஜ், பின்னணி பாடியவர்கள் – எஸ்.டி.ஆர்., அனிருத் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ்குமார், பிரேம்ஜி, சக்திஸ்ரீ கோபாலன், எம்.எம்.மான்ஷி. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரனாகிய ஐக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது இவருக்கு முதல் படமாகும்.

பேய்ப் படம்தான். ஆனால் குடும்பப் பாசமுள்ள பேய். மனைவியை இழந்து தனது சின்னஞ்சிறிய பையனுடன் தனிமையில் வாடும் ராதாரவிக்கு துணை அவருடைய மூன்று சகோதரர்கள்தான். அரண்மனை போன்ற வீட்டில் தனியே இருக்கும் ராதாரவியை சந்திக்க விடுமுறை நாட்களில் மூன்று பேரும் குடும்பத்தினருடன் வந்து போகிறார்கள்.
அப்படி வந்த ஒரு பொழுதில் சொத்துப் பிரச்சினை தலையெடுக்க அன்றைய இரவில் ராதாரவியும், அவரது மகனும் உறவினர்களாலேயே கொல்லப்படுகிறார். ஆனால் அவர்கள் இருவரின் ஆத்மாவும் சாந்தியாகாமல் அந்த வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.
ராதாரவியின் தம்பிமார்களை வீட்டை விட்டு துரத்துகிறது ராதாரவியின் ஆவி. இதைத் தொடர்ந்து இந்த வீட்டுக்கு யாருமே குடி வரவில்லை. வாங்கியவர்களும் அப்படியே விட்டுவிட.. இப்போது தனித்து நிற்கிறது இந்த அரண்மனை பங்களா..!
சிறு வயதிலிருந்தே வாடகை வீட்டில் வசித்து வந்ததால் பல்வேறு அவமானங்களையும், கஷ்டங்களையும் பட்டுவிட்ட ஹீரோ ஜீவாவின் வாழ்நாள் லட்சியமே தனக்கென்று ஒரு தனியாக வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அதிலும் சிறு வயதில் தான் ஒரு வீட்டை வாங்கி தன் அம்மாவை அதில் குடி வைத்து அழகு பார்ப்பதாக வாக்குறுதியளித்த அதே பங்களாவை வாங்க வேண்டும் என்று ஆசை.
இந்த பங்களாவின் இப்போதைய உரிமையாளர் வீட்டை விற்க முயற்சி செய்ய.. இல்லாதது, பொல்லாதது எல்லாவற்றையும் சொல்லி வீடு விற்பனையாகாமல் தடுத்து வைத்திருக்கிறார் ஜீவா. கடைசியில் ஜீவா சொல்லும் 40 லட்சம் ரூபாய்க்கே அந்த வீட்டை விற்றுவிட்டு போகிறார் உரிமையாளர்.
வீடு வாங்கிவிட்ட சந்தோஷத்தில் தனது அம்மா ராதிகா, மாமா இளவரசு குடும்பத்தினர், தனது உயிர் நண்பன் சூரியோடு அந்த பங்களாவுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ஜீவா. ஆனால் பூட்டப்பட்ட அந்த வீட்டுக்குள்ளேயே ஏற்கெனவே தம்பி ராமையா, தனது மனைவி தேவதர்ஷிணி, மகள் ஸ்ரீதிவ்யாவுடன் குடும்பம் நடத்தி வருவதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.
ஜீவாவுக்கு முன்பாகவே தான் அந்த வீட்டை விலைக்கு வாங்கிவிட்டதாக தம்பி ராமையா சொல்கிறார். பலவித கட்டப் பஞ்சாயத்துக்களும் பலிக்காமல் போக இருவருமே அந்த வீட்டில் இருக்கலாம் என்று தற்காலிக ஒப்பந்தம் ஏற்பாடாகிறது.
ஜீவா ஏற்கெனவே ஒரு வீட்டைப் பார்க்கப் போன இடத்தில் அறிமுகமாயிருந்த ஸ்ரீதிவ்யாவுடன் அப்போதே ஏற்பட்டிருந்த காதலை இங்கேயும் இருவரும் தொடர்கிறார்கள்.
இந்த நேரத்தில் அந்த வீட்டில் ஏற்கெனவே இருந்து வரும் ராதாரவி மற்றும் அவரது மகன் ஆவிகள்.. இந்த இரண்டு குடும்பத்தினரையும் அந்த வீட்டைவிட்டு வெளியேற்ற பெரும் முயற்சி செய்கின்றன.. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் ஆவிகள் இருப்பதை உணரும் ஜீவாவின் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறார்கள்.
ஆனால் ஜீவாவோ எப்பாடுபட்டாவது அந்த வீட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இறுதியில் பேய்களும், மனிதர்களும் என்னவாகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
பேய்க் கதை என்றார்கள். ஆனால் எந்த பயமுறுத்தலும் இல்லை. காமெடி என்றும் சொன்னார்கள். வாஷிங்மெஷினை மையப்படுத்திய டபுள் மீனிங் டயலாக்கை தவிர வேறு எதற்கும் சிரிப்பே வரவில்லை.
ஜீவாவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும் நடிக்கவில்லை அல்லது நடிக்க வைக்கப்படவில்லை. ஸ்ரீதிவ்யாவுக்கும் இதே நிலைமைதான். பாப்பாவுக்கு இந்தப் படத்தில் மதுவருந்தும் காட்சியை வைத்திருக்கிறார்கள். பெண்கள் மதுவருந்தினால் தப்பென்ன என்ற கேள்வியையும் இயக்குநர் கேட்டிருக்கிறார். வாழ்க.. வளர்க..
தம்பி ராமையாவும், தேவதர்ஷிணியும்தான் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். இருவரின் குடும்பச் சண்டையும், குடுமிப்பிடி பாசமும்தான் பார்க்க பிடித்திருக்கிறது. ராதிகாவின் மென்மையான அம்மா நடிப்பு எத்தனையோ படங்களில் பார்த்தாகிவிட்டது.
ராதாராவி தனது பாசமான தந்தை, அண்ணன் கேரக்டரை செய்திருக்கிறார். இதைவிடவும் பேயாக அப்படியே சிலையாக நிற்கும்போதுகூட நடித்திருப்பது போலவே தெரிகிறது. பாராட்டுக்கள்..!
சூரி வழக்கம்போல வசனங்களை ஸ்பீடு போஸ்ட்டாக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். இளவரசு ஒரு பக்கம்.. மயில்சாமி இன்னொரு பக்கம் கிச்சுகிச்சு மூட்ட நினைத்து உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுவும் வீண்தான்.. சிறிது நேரமே வந்தாலும் கோவை சரளா, தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிவிட்டுப் போகிறார்.
இந்தப் பேய் குடும்பப் பாசத்துக்கு ஏங்கிய பேய். அதனால் நாம் பேய்களின் கண்களுக்கு பாசமாக இருப்போம். அதைப் பார்த்து பேய் மனமிரங்கி ஓடிப் போய்விடும் என்கிற அந்த சின்ன கான்செப்ட் மட்டுமே படத்தில் செல்லுபடியான திரைக்கதை..!
பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் இரவுக் காட்சிகள் என்பதால் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு பெரிது. அவருக்கு நமது பாராட்டுக்கள்..! விஷால் சந்திரசேகரின் இசையில் 5 இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடியதாக ஒரு பாடலும் இருக்கிறது. வெளியில் வந்தவுடன் மறந்துவிட்டது.
எத்தனை பேய்களை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். ஆனால் அந்த பேய்கள் இதுவரையிலும் பார்க்காத புதுமையான பேய்களாக இருந்தால் மட்டுமே இனிமேல் அவைகள் செல்லுபடியாகும் என்பதை இந்தப் படத்தின் கதி தமிழ்த் திரையுலகத்திற்கு உணர்த்துகிறது..!

சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

13-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, ரெஜினா கேஸண்ட்ரா, சிருஷ்டி டாங்கே இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும், சூரி, லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ரோபோ ஷங்கர், யோகிபாபு, சாம்ஸ், ரவி மரியா, மதுமிதா, நித்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – டி.இமான், கலை – ருத்ரகுரு, பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – கே.ஆனந்தலிங்க குமார், நடனம் – பிருந்தா, தினேஷ், தினா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – எஸ்.எழில்.
இயக்குநர் எழிலின் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகி அதிரி புதிரி ஹிட்டடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் இது.

ஹீரோ உதயநிதி தனது சண்டை கோழியான பால்ய காலத் தோழி தேன்மொழி என்னும் ரெஜினாவை சமீபத்தில் இறந்து போன தன்னுடைய இளமைக் கால தோழியான பாத்திமா என்னும் சிருஷ்டி டாங்கேயின் உதவியுடன் எப்படி காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதைக் கரு.
ஒரு அகில இந்திய கட்சியின் மாநாட்டில் கட்சியின் அடுத்தக் கட்டத் தலைவர்களில் ஒருவருக்கு சிக்கன் பீஸ் கொடுக்காததால் கோபப்பட்டு அவர் கட்சியை இரண்டாக உடைக்கிறார். உடைபட்ட புதிய கட்சிக்கு தமிழகத்தின் தலைவராக விரும்பும் சூரி இதற்காக டெல்லி சென்று பெரும்பாடுபட்டு மாநில கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு ஊர் திரும்புகிறார்.
ஊரில் வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் உதயநிதி, ஊர் திருவிழாவில் ஆட வரும் ஜிகினாஸ்ரீயை வரவேற்கும் போஸ்டர்களில் தனது பெயரை அடிக்க புகைப்படம் எடுத்து போஸ்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார். ஆனால் அந்தக் குடிகார போட்டோகிராபர் போட்டோக்களை மாற்றிக் கொடுத்ததினால் ஊருக்குள் பெரிய வில்லனாக இருக்கும் மன்சூரலிகான் ஜிகினாஸ்ரீயுடன் ஒட்டிக் கொண்டு நிற்கும் போஸ்டர் மன்சூரலிகானின் வீட்டு சுவற்றிலேயே ஒட்டப்படுகிறது.
பதினெட்டு அடி அரிவாளோடு கொலை வெறியோடு தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி துபாய்க்கு தப்பியோடிய சூரி, அங்கே ஒட்டகம் மேய்த்து கஷ்டப்படுகிறார். இங்கே போஸ்டர் மாறியதால் அந்த சிக்கன் பீஸ் கட்சிக்கு மாநிலத் தலைவராகிறார் உதயநிதி.
உதயநிதியின் பால்ய காலத்து குடும்ப நண்பரான லிவிங்ஸ்டன் திரும்பவும் ஊருக்கே வருவதால் அதுவரையிலும் கட்சி அலுவலகமாக பயன்படுத்திவரும் அந்த வீட்டை காலி செய்து கொடுக்கும்படி உதயநிதியின் அப்பா ராஜசேகர் உதயநிதியிடம் கேட்கிறார். ஒரு வார காலம் அவகாசம் கேட்கிறார் உதயநிதி.
அதற்குள்ளாக லிவிங்ஸ்டன் தனது மனைவி நித்யா மற்றும் மகள் தேன்மொழி என்னும் ரெஜினா கேஸண்ட்ராவுடன் ஊர் திரும்புகிறார். சின்ன வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்து பழகியிருந்தாலும் உதயநிதிக்கும், ரெஜினாவுக்கும் ஆகவே ஆகாது. எலியும், பூனையும் மாதிரியிருக்கிறார்கள்.
“நான் ஊருக்குத் திரும்பி வரும்போது நீ கண்டிப்பா பிச்சையெடுத்திட்டிருப்ப பாரு…” என்று ரெஜினா சவால்விட்டிருக்கிறார். ஆனால் இப்போது உதயநிதி ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது அவரது ஈகோவை உசுப்பிவிடுகிறது. உதயநிதியோ, ரெஜினா என்னும் அழகு தேவதையை பார்த்தவுடன் லவ்வாகிறார். ஆனால் ரெஜினாவோ உதயநிதியை வெறுக்கிறார். இவரை வெறுப்பேத்த வேண்டுமே என்பதற்காகவே சாம்ஸை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து நிச்சயத்தார்த்தமும் நடைபெறுகிறது.
இந்த நேரத்தில்தான் உதயநிதி கல்லூரி படிக்கும்போது அவர் மீது காதிலில் இருந்த பாத்திமா என்னும் சிருஷ்டி டாங்கே உதயநிதியை காப்பாற்ற வேண்டி ரெஜினாவின் உடலில் அவ்வப்போது புகுந்து பல குழப்பங்களை செய்து வருகிறது.
பாத்திமா ஆவியின் திருவிளையாடல்களை அறிந்த உதயநிதி, தனக்கும் ரெஜினாவுக்குமான காதல் ஒர்க் அவுட்டாக உதவி செய்யும்படி பாத்திமாவை வேண்டிக் கொள்ள.. ஆவியும் இதற்கு ஒப்புக் கொள்கிறது.
ஆவி தன் வாக்கைக் காப்பாற்றியதா..? உதயநிதி-ரெஜினா காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்த பாதி சிரிப்பு படத்தின் கதை..!
உண்மையாக இந்தப் படத்தின் பெயரை ‘பாத்திமா இருக்க பயமேன்’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஹீரோயிஸத்திற்காக மாற்றி வைத்துவிட்டார்கள்.
தியேட்டருக்கு வரும் ரசிகர்களை லாஜிக் பார்க்காமல் சிரிக்க வைக்க மட்டுமே முடிவு செய்திருந்த இயக்குநர், திரைக்கதையில் சற்று சோம்பலாகிவிட்டதால் படத்தின் பல இடங்களில் தொய்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
கதையென்று பார்த்தால்கூட அது மூன்று தளங்களில் போய்க் கொண்டிருப்பதால் எது முதன்மையானது என்றே யோசிக்க முடியவில்லை. கட்சித் தலைவர்.. காதலியை அடைவது.. பேய்க் கதை என்று மூன்று பக்கமுமே அவ்வப்போது திரைக்கதை செல்வதால்தான் இந்தக் குளறுபடி. துவக்கத்தில் இருந்தே பேய்க் கதையாகவே எடுத்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் இதைவிட அதிகமாகவே பேசப்பட்டிருக்கும்..!
உதயநிதிக்கென்று தனியாக ஒரு இருப்பிடம் இல்லை. அதே சமயம் யாரையும் இரிடேட் செய்தும் அவர் நடிக்கவில்லை. தனக்கு எது வருகிறதோ அதையே செய்து கொண்டிருக்கிறார். இதிலும் அப்படியே.. நடிப்புக்கென்று பெரிய ஸ்கோப் இல்லாத படமென்பதால் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.
ரெஜினாவுக்கு இந்தப் படத்தில்தான் அழுத்தமான நடிப்பைக் காட்ட பெரிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. அழகு தேவதையாக சில காட்சிகளில் தென்படுகிறார். கோபம், ஆத்திரம், வீறாப்பு, பொறாமை, தந்திரம் என்று பலவகையான குணாதிசயங்களையும் தன்னுடைய முகத்திலேயே காட்டி நடித்திருக்கிறார். தென்னகத்தின் ஜூலியா ராபர்ட்ஸ் என்று சும்மாவா சொன்னார்கள்..?
பாத்திமா என்னும் காதலியாக நடித்திருக்கும் சிருஷ்டியும் ஏமாற்றவில்லை. பாடல் காட்சிகளில் தேவதை போலவே காட்சியளித்திருக்கிறார். சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார்.
கணக்கிலடங்காத குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களின் மிரட்டல்கள் படத்தில் அதிக இடங்களில் ஒங்கி ஒலித்திருக்கின்றன.
பஞ்சாயத்து பேச வரும் ‘மகுடேஸ்வரன்’ ரவி மரியா, ‘சகுடேஸ்வரன்’ ரோபா சங்கரின் கோஷ்டியும் அந்த நிகழ்வுகளும்தான் சில நிமிட தொடர்ச்சியான காமெடியை காட்டியிருக்கிறது.
இன்னொரு பக்கம் சாம்ஸும் யோகி பாபுவும் தனி ரகளை செய்திருக்கிறார்கள். “எலெக்சன்ல டெபாசிட்டே வாங்காத கட்சிக்காகவெல்லாம் இனிமேலும் அடி வாங்க முடியாதுப்பா…” என்ற யோகியின் டயலாக்கிற்குத்தான் மொத்த தியேட்டரும் அதிர்கிறது..!
சாம்ஸ் தனது டைமிங் வசனங்களால் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதேபோல் படம் முழுவதும் வசனம் பேசியே கொன்றிருக்கும் கல்யாணம் என்னும் சூரியும் சில இடங்களில் தெறிக்க விட்டிருக்கிறார். மறுப்பதற்கில்லை.
வீரசிங்கமான மன்சூரலிகானை பதம் பார்க்கும் மாமனார் ஜி.எம்.குமார், இவரது மனைவி, இவரது இரண்டாவது மனைவி.. என்று கதை போகுமிடங்களில் நல்ல காமெடிதான். ஆனால் விட்டுவிட்டு வருவதால் சட்டென்று அதனுள் புக முடியவில்லை.
டி.இமானின் இசையில் ‘எம்புட்டு இருக்கு ஆசை’ பாடல் மெலோடியில் கலக்குகிறது. ‘லாலா கடை’ குத்துப் பாடல் ஈர்க்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியின் அழகு தென்படுகிறது என்றாலும் இன்னும் நன்றாகவே படமாக்கியிருக்கலாமே என்றும் சொல்லத் தோன்றுகிறது.
தொழில் நுட்பத்தின் உதவியுடன் திலீப் சுப்பராயனின் சண்டை பயிற்சிகள் உதயநிதிக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. இதேபோல் பிருந்தா, தினேஷ், தினா நடன மாஸ்டர்களின் அனுக்கிரஹத்துடன் உதயநிதிக்கு நடனமும் கை வந்த கலையாகிவிட்டது. ஆனாலும் நடிப்பென்று முகத்தில் காட்டும் நவரசத்தில் ஏதும் மாற்றம் வரவில்லையென்றால் எதுவும் செய்ய முடியாது.. சொல்லவும் முடியாது..!
இயக்குநர் எழில் குறைவில்லாமல் நன்றாகத்தான் இயக்கியிருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் நமக்குத்தான் காமெடியே வரவில்லை. அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார் என்று மட்டுமே சொல்லலாம்..!