அஞ்சல - சினிமா விமர்சனம்

13-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகின் பிரபல மூத்த சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன் தனது Farmers Master Plan Productions சார்பில் தயாரித்துள்ள படம் இது. இவருடைய முதல் தயாரிப்பும்கூட..!
பெரு நகரங்களில் தற்போது டாஸ்மாக் கடைகளும், கோவிலும் எப்படி ஒரு அடையாளமோ அது போலத்தான் கிராமங்களில் டீக்கடைகள். பல ஊர்களில் அந்த ஊர் அமைக்கப்பட்ட பொழுதில் இருந்தே சாவடியில் ஏதாவது ஒரு டீக்கடை இருந்து கொண்டேதான் இருக்கும். அப்படியொரு டீக்கடையின் வாழ்க்கை வரலாறுதான் இந்த ‘அஞ்சல’ திரைப்படம்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பசுபதியின் தாத்தா அந்த ஊர் வழியே தனது மனைவியுடன் சென்றவர்.. அந்த ஊரின் நிலையைக் கண்டு அங்கேயே தொழில் செய்தால் என்ன என்று நினைத்து அந்த ஊர் சாவடியிலேயே ஒரு தேநீர் கடையை துவக்குகிறார். அப்படி சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அந்த ஊரில் அந்த இடத்தில் அந்த ‘அஞ்சல தேநீர் கடை’ அப்படியே இன்றுவரையிலும் இருக்கிறது.
இப்போது அந்த தேநீர் கடையை பேரன் பசுபதி கவனித்து வருகிறார். இன்னும் கல்யாணமாகவில்லை. ஆனால் ஊரில் இருக்கும் அனைத்து இளவட்டப் பயலுகளும் அந்தக் கடையில்தான் இருக்கிறார்கள். டீ குடிக்க வருகிறார்களோ இல்லையோ, கதை பேசவும்.. கிரிக்கெட் பார்க்கவுமாக அந்தக் கடை அந்த ஊர் இளசுகளுக்கு ஒரு மீட்டிங் பாயிண்ட்டாகவும் இருக்கிறது.
இன்னொரு ஹீரோவான விமல் டூவீலர் மெக்கானிக் கடை வைக்க லோன் கேட்டு வங்கிகளுக்கு படையெடுத்து வருகிறார். கூடவே தானாகவே ஒரு காதலும் வந்து ஒட்டிக் கொள்கிறது. அஞ்சல கடையின் மூலமாகவே அந்தக் காதலும் ஓகேவாகி வளர்கிறது.
இந்த நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக அந்தக் கடை இருப்பதால் சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தில் இந்தக் கடையின் இடமும் மாட்டிக் கொள்கிறது. நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் கடையை இடிக்கப் போவதாகச் சொல்ல இடிந்து போகிறார் பசுபதி. அரசு நஷ்டஈடு கொடுக்கும் என்றாலும் பரம்பரை பரம்பரையாக தாத்தா காலத்தில் இருந்தே இதே இடத்தில் இருப்பதால் வேறு இடம் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார் பசுபதி.  அரசு அலுவலகங்களுக்கு படையெடுக்கிறார். புகார் சொல்கிறார். பலனில்லை.
அந்த ஊரின் பெரும்தனக்காரரும், நல்லவர் போல வாழும் கெட்டவருமான சுப்பு டாஸ்மாக் சரக்கில் போலியை கலந்து கொடுத்து சம்பாதிக்கும் நல்ல பிஸினஸை செய்து வருகிறார். லோக்கல் போலீஸ். அரசியல்வாதிகள் என்று அனைவரையும் வளைத்திருப்பதால் இவருக்கெதிராக எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது.
இந்த நேரத்தில் இதே அஞ்சல கடையின் முன்பாகவே போலி சரக்குகளை ஏற்றி வரும் மினி லாரி விபத்துக்குள்ளாக கடத்தல் பிஸினஸ் மீடியாக்களில் வெளியாகிறது. சரக்கு பறிபோன நிலையில்.. கூடுதலாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு லோக்கல் இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட.. இந்தக் கூட்டணியின் கோபப் பார்வைக்கு ஆளாகிறார்கள் பசுபதியும் அவரது பாசமான தம்பிமார்களும்..!
இதே நேரம் நீதிமன்றம் சென்றும் பலனளிக்காமல் டீக்கடையை இடிக்க கோர்ட் உத்தரவிடுகிறது. அடுத்து என்ன செய்கிறார் பசுபதி..? தனது அஞ்சலையை அவர் காப்பாற்றினாரா? இல்லையா..? என்பதெல்லாம் படத்தின் பிற்பாதியில் வரும் திரைக்கதை..!
படத்தின் கதாநாயகன் பசுபதிதான். பேரன் பசுபதியைவிடவும் தாத்தா பசுபதியின் தாக்கம் படத்தில் அதிகமாக இருக்கிறது. பேரனின் நடிப்புக்கு அதிக ஸ்கோப் கொடுத்திருந்தாலும் “கடைதானே.. மாத்தி இன்னொரு இடத்தில் வைச்சிட்டா போச்சு. எதுக்கு இத்தனை அலப்பறை..?” என்பது மாதிரியான சவுண்டுகளை தியேட்டரிலேயே கேட்க வேண்டியதாகிவிட்டது.
விமல் வழக்கம்போல. நந்திதாவை ஊடலுடன் துவங்கி காதலிக்கிறார். பொறுப்பான மருமகனாகவும் இருக்க விரும்புகிறார். பசுபதியின் இந்த நிலைமைக்கு தானும் ஒருவகையில் காரணமாகிவிட்டேன் என்று சொல்லி புலம்புகிறார்.  இறுதியில் தானும் உயர்ந்து பசுபதியையும் விடாமல் கை தூக்கிவிட்டிருக்கிறார். நல்ல பாஸிட்டிவ்வான கிளைமாக்ஸ்..
நந்திதா தெற்றுப் பல்லே தனக்கு அழகு என்பதை சொல்லாமல் காட்டியிருக்கிறார் பல காட்சிகளில். மேலும் நடிப்புக்கென்று தனியாக ஸ்கோப் இல்லாததால் ஓகே எனலாம். ஒரேயொரு காட்சியென்றாலும் ஆடுகளம் முருகதாஸை காதலிக்கும் பெண் கான்ஸ்டபிளாக வரும் அந்தப் பெண்ணின் நடிப்பு செம..! ரித்விகா தாத்தா பசுபதிக்கு ஜோடி.. அதிக வசனமில்லாமல் காட்சிகளாலேயே தனது நடிப்பைக் கொட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படமாக்கியிருப்பது பார்க்கும் ரகம். பிரேமம் இசையமைப்பாளர் என்பதால் திறமையோடுதான் பயணித்திருக்கிறார். பாராட்டுக்கள்..
சின்ன பட்ஜெட் படம் என்பதால் பிரிட்டிஷ் காலத்திற்காக ரொம்பவும் மெனக்கெடாமல் படமாக்கியிருக்கிறார்கள். காட்சிகள் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் படமாக்கியிருக்கும்விதமும், நறுக்கென்று சொல்லியிருக்கும்விதமும் ரசிப்பாக இருக்கிறது. ஆனாலும் படத்தின் மூலக் கதைக்கு எந்தவிதத்திலும் இது பலனிளிக்காமல் போனதுதான் துரதிருஷ்டம்.
கள்ள நோட்டு வழக்கில் சிக்குவது.. நண்பர்களுக்குள் மோதல்.. பிரிவு.. டீக்கடையின் பெயர் கெடுவது.. பசுபதியின் வருத்தம். தனிமை.. நண்பர்களின் ஈகோ பிரச்சினை திரைக்கதை இது எல்லாவற்றையும் சுற்றிச் சுற்றி வந்தாலும் கதை அப்படியே வேறு இடத்திற்கு தாவிவிடுவதால் அஞ்சல டீக்கடையைப் பற்றிய எண்ணம் திடீரென்று ரசிகனிடத்தில் காணாமல் போய்விடுகிறது.
மிக அருமையான ஒரு கதைக் கரு. அதை அப்படியே இன்றைய காலக்கட்டத்திற்கேற்ற கோர்ட், வழக்கு, வழக்கறிஞர்கள், நீதித்துறை, அரசியல், அரசியல்வாதிகள் என்று கலந்து கட்டியிருந்தாலே படத்தின் பல சுவாரசியங்கள் இருந்திருக்கும். தேவையில்லாமல் சுப்பு பஞ்சு, டாஸ்மாக் சரக்கு.. விபத்து, போலீஸ் இன்ஸ்பெக்டரின் எதிர்ப்பு.. காதல் பஞ்சாயத்து என்று திசை மாற்றிச் சென்றிருப்பதால் படத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய ஈர்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது.
இப்போது தமிழகத்தின் நிறைய இடங்களில் சாலை விரிவாகத்திற்காக வீடுகள் கையகப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மக்களின் இடப் பரவல் காரணமாய் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாதது.
இதனாலேயே இந்தப் படத்தின் அடிப்படையான டீக்கடையை அகற்றுவது என்கிற கதைக்கரு சாதாரண ரசிகனுக்குள் எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. இதை வைத்து அதிகார வர்க்கமும், நீதித்துறையும், அரசியல்வாதிகளும் செய்யும் சித்து வேலைகளையும், லஞ்ச ஊழல் பணிகளையும் வெளிக்காட்டும்விதமாக படத்தின் திரைக்கதை அமைந்திருந்தால் இது நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமைந்திருக்கும்..!

0 comments: