அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!

30-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
அம்பேத்கர் படம் பற்றிய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.. தொலைபேசியில் பலரும் அழைத்து திரையரங்குகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள். மேலும் ஐநாக்ஸ் திரையரங்கு பற்றி இறுதி முடிவு எடுக்காததால் தியேட்டர் நிர்வாகமும் நேற்று முன்தினம் வரையிலும் கருத்து சொல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மேலும் நான் விசாரித்தபோது சில தகவல்கள் தெரிந்தன. பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்குக் கொடுத்திருந்த மூன்றாண்டு தவணைக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் தற்போது அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விநியோக உரிமை திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கே திரும்பவும் கிடைத்துவிட்டது.

தற்போது படம் திரையிடல், விளம்பரங்கள் போன்றவற்றை திரைப்பட வளர்ச்சிக் கழகமே செய்து வருகிறது. நேற்று இன்னும் கூடுதலாக சில திரையிடல் வசதிகளை திரைப்பட வளர்ச்சிக் கழகம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில் சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி ஆகிய திரையரங்குகளில் மதியக் காட்சியில்(Noon Show) மட்டும் அம்பேத்கர் படம் திரையிடப்படுகிறதாம். வரும் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில்(சனி, ஞாயிறு) மட்டும்தானாம்.

ஆல்பர்ட் திரையரங்கில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தினம்தோறும் ஒரு வாரத்திற்கு காலை காட்சியாக(11.30 மணிக்கு) மட்டும் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படுவதாக நேற்று மாலை முடிவான, இறுதியான செய்தியாகக் கூறினார்கள்.

இது பற்றி இன்று வெளியான 'தினத்தந்தி', 'தினகரன்' பத்திரிகைகளில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.

அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். சென்னைவாழ் பதிவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

காலை காட்சி மட்டும்தான் என்பது நமக்கு மிகவும் சிரமமானதுதான். வார நாட்களில் செல்ல முடியாது என்றாலும்.. டிசம்பர் 4, 5(சனி, ஞாயிறு)தேதிகளில் காலை, மதியம் என இரண்டு காட்சிகள்  இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாளில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் திரையரங்கிற்குச் சென்று படத்தினை கண்டுகளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கொண்டும் திரையிடல் சம்பந்தமாக ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

நன்றி..!

அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?

28-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது 1982-ம் வருடம். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பகல் பொழுதில் வகுப்பறைக்குள் நுழைந்த அலுவலக பியூனிடம் இருந்து வாங்கிய நோட்டை பார்த்துவிட்டு எனது அறிவியல் ஆசிரியர் அமல்ராஜ் இப்படி கூறினார்.. “அடுத்த வாரம் 'காந்தி' படத்துக்கு உங்களையெல்லாம் கூட்டிட்டுப் போறாங்கப்பா.. டிக்கெட் 1 ரூபாதான்.. கண்டிப்பா எல்லாரும் வந்தாகணுமாம்..” என்று சொல்லி முடிப்பதற்குள் வகுப்பறைக்குள் டெஸ்க்குகள் உடைந்துவிடுவதைப் போன்ற தட்டல்களுடன், சந்தோஷக் கூச்சல்கள். மறக்க முடியவில்லை அந்த உற்சாகத்தை..!

அதேபோல் ஒரு மதியப் பொழுதில் எனது பள்ளிக்கு எதிர் தெருவில் இருந்த 'சோலைஹால்' தியேட்டருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் வரிசையாக அணிவகுத்து சென்று அந்தப் படத்தை பார்த்தது இன்றைக்கும் நினைவுக்கு இருக்கிறது..

'தேசத் தந்தை'யின் இந்த வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களும் நிச்சயம் பார்த்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பார்க்க வைத்த அந்தப் புண்ணியவான் யாரோ.. அவருக்கு எனது முத்தங்கள். நன்றிகள்..!

அதுவெல்லாம் அந்தக் காலம் என்று கண்களில் ஏக்கத்தை வைத்துக் கொண்டு தொண்டையில் சொற்கள் சிக்கிக் கொண்டு பேச முடியாமல் தவி்த்தபடியே இப்போது சொல்கிறார்கள் 'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர்' திரைப்படத்தை வெளியிடவே முடியவில்லையென்று..!




காந்திக்கு, அம்பேத்கர் எந்தவிதத்தில் குறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. காந்தி இந்தியாவின் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டவராக இருக்கலாம். 'தேசத் தந்தை' பட்டத்துக்கு உரியவராக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அம்பேத்கரும் தனது இறுதிக் காலம் வரையிலும் இந்த நாட்டுக்காகத்தான் உழைத்தார். அவரைத் தெய்வமாகத் தொழுத மக்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இன்றளவும் அவர்தான் தந்தை.

சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவர். சாதிய, சமய முரண்பாடுகளின் மூட்டையாகத் திகழும் இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த புண்ணியவான்.. எல்லாம் தலையெழுத்து என்று சொல்லி ஒதுங்கிப் போகாமல், முடிந்தால் அசுத்தமான சேரியையும், சுத்தமான அக்ரஹாரமாக்கலாம் என்று முனைந்தவர்.

சுதந்திர இந்தியாவுக்கு அடிப்படைத் தேவையான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.. சட்ட மாமேதை என்று இன்றைக்கும் சட்ட வல்லுநர்களால் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கக் கூடியவர்.. இவரது வாழ்க்கை வரலாறு இந்தியாவின் குடிமகன்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய, அறிய வேண்டிய விஷயம். ஆனால் ஏன் முடியவில்லை..?

NFDC என்றழைக்கப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும், மகாராஷ்டிரா அரசும், மத்திய அரசின் சமூக நீதித்துறையும் இணைந்துதான் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த 1991-ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு இந்தப் படத்தின் தயாரிப்புக்காக 7.7 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. படத்தில் நம்முடைய மெகா ஸ்டார் மம்முட்டிதான அம்பேத்கராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஜாபர் பட்டேல் இயக்கம் செய்திருக்கிறார். ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பிடித்து மேக்கப் டெஸ்ட் வைத்து, சோதனை செய்து பார்த்துவிட்டு கடைசியாகத்தான் பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படத்தின் ஆங்கிலப் பதிப்பு, 1999-ம் வருடம் வெளியாகியுள்ளது. ஹிந்தி பதிப்பு 2000-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வெளியானது.

மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் இத்திரைப்படத்தைக் கொண்டாடியிருக்கின்றன. இதனால் அந்த ஆண்டுக்கான  சிறந்த  படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. மம்முட்டி இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாவது முறையாகப் பெற்றிருக்கிறார்.

இதற்குப் பின் மராத்தி மொழியிலும், பிற சில மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மகாராஷ்டிராவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.. அத்தோடு இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்ற நல்ல கொள்கையுடன் அதற்கான நிதியுதவிகூட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் தகவல்கூட வெளியில் தெரியாமல் போனதுதான் நமது அரசியல் நிர்வாகத்தின் லட்சணம்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இத்திரைப்படத்தை தமிழில் வெளியிடுவதற்காக முனைந்தபோது மம்முட்டி நடித்திருக்கிறார் என்பதால் ஒரு சாதாரணமான திரைப்படம் போலவே வெளியிட முயற்சி எடுத்திருக்கிறது.

இதனால் முன்னாடியே போய் வாங்கிவிடுவோம் என்ற சினிமா வியாபார தந்திரத்தின் அடிப்படையில் 'ஆஸ்கர் பிலிம்ஸ்' ரவிச்சந்திரனின் சகோதரரான 'விஸ்வாஸ்' சுந்தர் 'அம்பேத்கர்' திரைப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது நடந்தது 2007-ம் ஆண்டு என்கிறார்கள்.

ஆனால் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரையிலும் இத்திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் செய்யாமல் அப்படியே வைத்திருந்தது ஏன் என்பது மத்திய அரசுக்கும், திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்குமே தெரிந்த ரகசியம்..!

திரைப்பட வளர்ச்சிக் கழகம் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ்தான் 'விஸ்வாஸ்' சுந்தருக்கு அத்திரைப்படத்தை வழங்கியிருக்கிறது. அந்த ஒப்பந்தம் 2010 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறதாம். அதற்குள்ளாக அவர் படத்தினை அவரது சொந்த செலவில் டப்பிங் செய்து எத்தனை முறை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம். இதுதான் ஒப்பந்தம்.

ஆனால் படத்தினை வாங்கிய விஸ்வாஸ் சுந்தர் இத்திரைப்படத்தை வெளியிட இன்றுவரையிலும் முன் வரவில்லை. காரணம் ஏனென்று அப்போது தெரியவில்லை. கடைசியில்தான் தெரிந்தது. அவர் ஒரு ஆர்வத்தில்தான் அந்தப் படத்தினை வாங்கியிருக்கிறார் என்று.! ஆனால் தினம்தோறும்தான் நமது திரையுலக நடைமுறை வியாபாரங்கள் மாறிக் கொண்டேயிருப்பதால் இந்த நேரத்தில் அத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் திரையிட முடியாது என்கிற யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்.

ஆனால் அம்பேத்கரின் சில தொண்டர்கள் சும்மா இருக்கவில்லை. பெரியார் திராவிடர் கழகத்தினர், வே.மதிமாறன் தலைமையிலான இயக்கம், ம.க.இ.க. இன்னும் பிற தோழமை இயக்கங்கள் எல்லாம் இது குறித்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தன.  நாள்தோறும் தனக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு மட்டுமே செவி கொடுக்கும் நமது அன்பு முதல்வருக்கு இதெல்லாம் கேட்கவா போகிறது..?

'அம்பேத்கர் விருதை' மட்டும் ஆர்வத்துடன் ஓடோடிப் போய் வாங்கியவர் இத்திரைப்படம் பற்றிய செய்தியை மட்டும் கண்டும், காணாததுபோல் இருந்துவிட்டார். ஒருவேளை அம்பேத்கரின் பெயருக்கு தமிழ்நாட்டில் ஓட்டு வங்கி இல்லை என்று நினைத்துவிட்டாரோ என்னவோ..? தாத்தாவுக்குத்தான் இப்போது ஓட்டுக்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது..!

இடையில் வே.மதிமாறன் தலைமையிலான இயக்கத்தவர்கள் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் நேரில் சென்று இது குறித்து கேட்டபோது அவர்கள் விஸ்வாஸ் சுந்தரை கை காட்டியிருக்கிறார்கள். விஸ்வாஸ் சுந்தரிடம் அவர்கள் கேட்டபோது “வாங்கி வைச்சிருக்கிறவனுக்கு படத்தை வெளியிடத் தெரியாதா..? செய்வோம்..” என்று பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவர்கள் சிலர் போராட்டத்தில் குதித்த பின்புதான் படத்தை வெளியிட முயற்சி செய்யும்படி திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர், விஸ்வாஸ் சுந்தரை வற்புறுத்தியிருக்கின்றனர்.

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர் செல்வப்பெருந்தகை இத்திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பியபோது, "இத்திரைப்படத்தின் டப்பிங் செலவுக்காக பத்து லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாக" பலத்த கை தட்டலுடன் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அமைச்சர் பரிதிஇளம்வழுதி.

  
"அதான் பத்து லட்சம் கொடுத்தாச்சே.. போய் டப்பிங் பண்ணிட்டு படத்தை ரிலீஸ் செஞ்சுக்குங்க.." என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டார் தாத்தா.. ஆனால் அது சாத்தியமா என்றாவது யோசித்திருக்க வேண்டாமா..? பாவம்.. அவருக்கே அடுத்த பாராட்டு விழா நடத்த ஆள் இல்லாத சோகம்..! என்ன செய்வது..? அவர் கவலை அவருக்கு..!

இந்த நிலையில் கடந்த மே மாதம் சத்தியசந்திரன் என்னும் வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அம்பேத்கர்' திரைப்படத்தை தமிழகத்தில் விரைவில் வெளியிட வேண்டும் என்று கோரி மனு செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலத்தில் படமாக தயாரிக்கப்பட்டது. அதில், நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். ஜாபர் பட்டேல் இயக்கியுள்ளார். இந்தி, மராத்தி மற்றும் சில மாநில மொழிகளில் இப்படம், ‘டப்’ செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை ‘டப்’ செய்ய, 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடவடிக்கை இல்லை. இந்த படத்தை தமிழில் வெளியிட, உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கும் மனு அனுப்பினேன். இதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, அம்பேத்கர் படத்தை தமிழில் வெளியிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டிருந்தார்.

மனுவை அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. விசாரணை முடிவில் தீர்ப்பாக, “படத்தின் வினியோக உரிமை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. தமிழக அரசிடம் வரிச் சலுகை பெறும் நடவடிக்கையில், வினியோகஸ்தர் ஈடுபட்டுள்ளார். வரிச் சலுகை பெற்ற உடனேயே, படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு டப்பிங் செலவுகளுக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும், படம் விரைவில் வெளியாவதில், தமிழக அரசும் ஆர்வமாக உள்ளது என்றும், அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா தெரிவித்துள்ளார்.

எனவே, வரிச்சலுகை குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். படத்தை எவ்வளவு விரைவில் வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. எப்படியானாலும் இன்னும் நான்கு வாரங்களுக்குள் படத்தை வெளியிட வேண்டும்" என்று மே 15-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்று அம்பேத்கர் பக்தர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகவில்லை. படம் வெளியாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு ஜூன் 16-ம் தேதி முடிவடைய இருந்தது.

அதற்குள்ளாக ஜூன் 7-ம் தேதியன்று  தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட, 90 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு,  மற்றும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பேத்கர் படத்தை ஆங்கிலத்தில் ஜபார் பட்டேல் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், ஸ்பான்சர் செய்துள்ளது. 2000-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் வினியோக உரிமை பெற, 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டேன். வரும் 2010, செப்டம்பர் மாதம் அந்த உரிமை முடிகிறது. தமிழ் மொழியில் அம்பேத்கர் படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் படத்திற்காக 30 லட்சம் ரூபாய்வரை செலவு செய்துள்ளேன். பிரின்ட் செலவு, போஸ்டர், விளம்பரம் என, மேற்கொண்டு 90 லட்ச ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட, வாழ்க்கையை தியாகம் செய்த அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தை பொதுமக்கள் பார்க்க முடியும். ஏற்கனவே, தனியார் ஒருவர் தயாரித்த பெரியார் படத்துக்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. எனவே, தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட ஏதுவாக 90 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”  என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழகம், மற்றும் புதுவை அரசுகள் இந்த அளவுக்குப் பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் எவ்வளவு தைரியம் பாருங்க இவருக்கு..? டப்பிங் செலவுக்கே பத்து லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட இவருக்கு மேலும் 90 லட்சம் கொடுத்தால் படத்தை ரிலீஸ் செய்வாராம்..? எப்படி..?

மொதல்ல இந்தப் படத்துக்கு டப்பிங் செலவே அதிகப்பட்சம் 5 லட்சம்தான் செலவாகியிருக்கும். இதில் நிறைய கதாபாத்திரங்களும், பல்வேறு மொழி பேசுபவர்களும் இருப்பதால்தான் இந்தச் செலவு. இல்லையெனில் 2 லட்சத்திலேயே முடித்துவிடலாம். 

இவர் எவ்வளவு தொகைக்கு திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் இருந்து வாங்கினார் என்றே தெரியவில்லை. இதில் இப்போதைக்கு படத்தை சுமூகமாக வெளியிடணும்னா 90 லட்சம் கொடுன்னு கிட்டத்தட்ட மிரட்டல் பாணியில்தான் கேட்டிருக்கிறார். 'சுமூகமா வெளியிடணும்'ன்னா என்ன அர்த்தம்னு இவர்கிட்ட மறுபடியும் விளக்கம் கேட்க வேண்டும். படத்தி்ன் வசூலே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் 90 லட்சம் ரூபாயை கேட்டதே சுருட்டத்தான் என்பதை திரையுலகில் இருப்பவர்களே ஒத்துக் கொள்வார்கள். நல்லவேளை கொடுக்காதவரையிலும் சந்தோஷமே..!

அதே சமயத்தில் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை மதிக்காமல் விநியோகஸ்தர் படத்தினை வெளியிட தாமதப்படுத்துகிறார் என்று கூறி வழக்கறிஞர் சத்தியசந்திரன் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததாக மீண்டும் முறையீடு செய்தார்.

இப்போது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் ஆஜராகி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். “படத்தின் பிரதிகள் சிதைந்திருப்பதால், மூலப் பிரதியைப் பெற்று அதனைச் சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்குச் சற்று கால அவகாசம் வேண்டும்..” என்றார்கள்.

இதற்கு ஒத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் இறுதியாக வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று அப்படத்தினை எப்படியும் வெளியிட்டாக வேண்டும் என்று இறுதி உத்தரவினை வெளியிட்டார்கள்.

இந்த நேரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எடிட்டர் லெனின் அவர்களின் உதவியோடு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து படத்தினை வெளியிட பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிலிம் ரோல் பிரதிகளே 5-தான் உள்ளதாம்.  இப்போது பெரும்பாலான திரையரங்குகளில் கியூப் சிஸ்டம் கொண்டு வந்திருப்பதால் இதில் இருக்கும் டெக்னிக்கல் சிரமங்களையும் கவனிக்க வேண்டியிருப்பதாக திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்புதான் படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளன. ஆனாலும்  ஊர், ஊருக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்  நடைமுறைச் சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளில் இப்படத்தைத் திரையிட வேண்டி அணுகியிருக்கிறார்கள். 

“இப்ப இதையெல்லாம் யார் ஸார் பார்க்கப் போறா.. விடுங்க ஸார். தியேட்டர் வாடகைகூட கிடைக்காது..” என்று வெளிப்படையாகவே தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் சில திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது திரையரங்கை லீஸுக்கு விட்டுவிட்டதாகச் சொல்லி ஒப்பந்ததாரர்களைக் கை காட்டியிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர்களோ மறுபடியும் ஓனர்களையே கை காட்டியிருக்கிறார்கள்.. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் தியேட்டர்கள் கிடைக்காது என்ற பதிலே கிடைத்திருக்கிறது.

டிசம்பர் 3-ம் தேதிக்கு நாள் நெருங்கிவிட்டதால் சென்னையில் திரையரங்குகள் கிடைக்காமல் அல்லல்பட்டு கடைசியாக தற்போது சென்னை ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸில் ஒரு அரங்கில் மட்டும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தினை டிசம்பர் 3-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு திரையிட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

தமிழகத்தில் 1800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன.  ஒரு வருடத்திற்கு சுமாராக 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகமும் நடக்கிறது. ஆனாலும், இந்த இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட, அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதென்ன கொடுமை..?

கடந்த சனிக்கிழமையன்று 4 பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்காக அம்பேத்கர் திரைப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தினை தமிழகத்து மக்களிடத்தில் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்.

இக்கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். கூட்டத்தில் பேசிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், படத்தினை வெளியிட வேண்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேற்கொண்டும் என்ன செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை கூறுமாறு வந்திருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் எடிட்டர் லெனின்  பேசும்போது தான் திரைப்பட சங்கங்கள், பிரமுகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்வதாகக் கூறினார். அடுத்த வாரம் முழுவதும் திரைப்படவுலகத்தில் இதனை பரப்புவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

பின்பு திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், வழக்கறிஞர் சத்தியசந்திரன், நமது சக வலைப்பதிவர் கார்ட்டூனிஸ்ட் பாலா, மேலும் பல அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். ஆலோசனைகளையும் வழங்கினார்கள். தொலைக்காட்சி மூலமாக நாம் பரப்புரை செய்ய வேண்டும். இப்படியொரு திரைப்படம் வெளியாவதை நாம் மக்களிடத்தில் கொண்டு போக வேண்டும் என்றே பலரும் தெரிவித்தார்கள்.

ஒரு கட்டத்தில் மீண்டும் எழுந்து வந்து மைக்கை பிடித்த லெனில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். “ஒரு பிரதி 5 லட்சமோ, 6 லட்சமோ.. நாம கேட்டு வாங்கிருவோம். நானே என் சொந்தச் செலவுல வாங்கித் தரேன்.. ஊர், ஊருக்குக் கிடைக்கிற தியேட்டர்ல போடுவோம்.. வர்ற மக்கள்கிட்ட ஒரு ரூபா வாங்குவோம்.. அது போதும்.. தியேட்டர் கிடைக்கலைன்னா என்ன கல்யாண மண்டபம் கிடைத்தால்கூட போதும். அங்கேயே ஸ்கிரீனை கட்டி போட்டுக் காட்டுவோம்..” என்று கொந்தளித்தார்.

உண்மையாகவே லெனின் ஸாரின் இந்தச் செயலுக்கு நாம் மண்டி போட்டுத்தான் வணங்க வேண்டும். அப்படியே வணங்குகிறேன்..!

இக்கூட்ட இறுதியில் மாணவர்கள் மத்தியில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு செல்லும் விதத்தில் இத்திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் அரசே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகத் திரையிட வேண்டும் என்று கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது..!

காந்தி திரைப்படம் வெளிவந்தபோது அப்போது படித்துக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயமாக பார்க்க வைக்கப்பட்டது போல்  இந்த அம்பேத்கர் படத்தினை இப்போதைய மாணவர்கள் மத்தியில் கொண்டு போக இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு ஏன் தோணவில்லை..?

வெறுமனே 10 லட்சம் ரூபாயை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டால் போதுமா..? பெரியார் படத்திற்கு மட்டும் 92 லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்து, படம் வெளியிடுவதற்கான அனைத்து வசதி, வாய்ப்புகளையும் செய்து கொடுத்த இந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு, அம்பேத்கரை மட்டும் திரும்பிப் பார்க்க மறுப்பது ஏன்..? அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..? இத்தனைக்கும் அம்பேத்கரின் பிறந்த நாளைக்கு மாலை போட மட்டும் தாத்தா மறப்பதில்லை.

காந்தி திரைப்படத்தினை வெளியிட்டதுபோல இந்தத் திரைப்படத்தினையும் மொத்தமாக தமிழக அரசே வாங்கிக் கொண்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யலாமே..?

ஊர், ஊருக்கு ஏதாவது ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து அங்கே படத்தினை சலுகை விலையில் முழு வரிச்சலுகையுடன் வெளியிடலாமே..? மாணவர்களை அழைத்து வந்து காண்பிக்கலாமே..? தமிழக அரசுக்கு இந்த யோசனை ஏன் வரவில்லை..? அரசு ஒரு உத்தரவிட்டால் உடனேயே செய்துவிடலாமே..? ஏன் இந்த எண்ணம் இந்த மைனாரிட்டி அரசுக்கு உதிக்கவில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் மைனாரிட்டி மக்களின் தலைவனாகவும், தந்தையாகவும், காவலனாகவும் இருப்பதுதான் இந்த மைனாரிட்டி அரசுக்கு உறுத்தலாக இருக்கிறதோ என்னவோ?

இன்னும் வெளியாகாத ராடியாவின் டேப்பில் குடும்ப ரகசியங்கள் இன்னும் என்னென்ன புதைந்து கிடக்கிறதோ என்கிற குழப்பத்தில் தாத்தா இருக்கலாம். பிள்ளைகள் இருக்கலாம். இவர்களுடைய மதி கெட்ட மந்திரிகளும் இருக்கலாம்.. ஆனால் அம்பேத்கர் பெயரையும், புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தி வரும் பெரிய இயக்கத்தினர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை.

சென்னை, அண்ணா சாலையில் காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரையிலும் ஒரு ஓரமாக சேர் போட்டு உட்கார்ந்து போகும், வரும் டாடா சுமோ கார்களைப் பாருங்கள். அதன் முன், பின் பக்கக் கண்ணாடிகளில் எந்தத் தலைவரின் புகைப்படம் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கிறது என்று.. நிச்சயம் அம்பேத்கர்தான்.. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிடத்தான் அத்தனை அமைப்புகளுக்கும் அக்கறையில்லை..!

இப்போது இருக்கின்ற குறைவான நாள் இடைவெளியில் எப்படி இந்தப் படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு கூட்டத்தைக் கூட்டி படத்தைப் பார்க்க வைப்பது.? இது நாம் மட்டுமே பார்க்கக் கூடியது அல்ல.. நிச்சயம் மாணவ சமுதாயத்தினர் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதற்கான முயற்சிகளைக்கூட இந்த அம்பேத்கர் படத்தை வைத்து புரட்சி அரசியல் பேசும் சில புண்ணாக்குகள் செய்ய முன் வரவில்லை என்பது வெட்கக்கேடானது..

சோனியாகாந்தி தன்னைத் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்பதற்காக டெல்லிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக் காத்திருந்த திருமாவளவனுக்கு இனி அம்பேத்கர் தேவையில்லை என்று நினைக்கிறேன்.. ஆளும் தரப்புடன் கூட்டணியில் இருப்பது தனக்கும், தன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே என்று நினைத்துவிட்டார் போலும்..

அவர் நினைத்திருந்தால்கூட இதனைச் செய்திருக்கலாம். அரசுகளை கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக மாணவர்கள் மத்தியில் இத்திரைப்படத்தினை கொண்டு சென்றிருக்கலாம்.. ம்ஹூம்.. என்ன செய்வது..? நமக்கு வாய்த்த தலைவர்கள் சொந்தக் காரணங்களுக்காக அரசியல் செய்பவர்களாக வந்து தொலைத்திருப்பதால் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!

டிசம்பர் 3-ம் தேதி சென்னையில் மட்டும்தான் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. அது சமயம் அன்றைக்கு திருவிழா போல் கூட்டத்துடன் படப் பெட்டியை ஊர்வலமாகக் கொண்டு சென்று தாரை, தப்பட்டை முழங்க ஒடுக்கப்பட்ட மக்களின் தந்தையாகத் திகழும் அம்பேத்கருக்கு நன்றி செலுத்தவிருப்பதாக கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் தெரிவித்தார்கள்.

இதுவும் இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பேருதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் தவறுமில்லை. யார், யாருடைய கட்அவுட்டுக்கோ பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான ரசிகர்கள் மத்தியில் நாட்டுக்காக உழைத்த உத்தமர் ஒருவருக்கு இதுகூட செய்யவில்லையென்றால் எப்படி..?

நான் கொஞ்சம் அரசியல் ஆர்வலன்.. நிறைய சினிமா ஆர்வலன். உங்களுக்கே தெரியும். அந்த வகையில் ஒரு சினிமா ரசிகனாக மம்மூக்காவின் நடிப்பைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை என்ன என்பதை அரசியல் ஆர்வலனாக அறிந்து கொள்ளவும் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்கிறார்கள். இதனால் ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் நேரம் தெரியவில்லை. இது பற்றி இணையத்தள வசதியுள்ளவர்கள் அன்றைக்கு இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

நமது வலையுலகப் பதிவர்கள் அத்தனை பேரும் தயவு செய்து  இத்திரைப்படத்தினை கண்டுகளித்து இது பற்றிய விமர்சனங்களையும், செய்திகளையும் வெளியிட்டு இந்த நாட்டுக்கும், அரசியல் சட்ட மாமேதையான நமது அம்பேத்கருக்கும் நம்மால் நம் வாழ்க்கையில் முடிந்த ஒரேயொரு உதவியாக இதைச் செய்ய வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்..!

இப்படத்தினை வெளியிட காரணமாகவும், ஊக்கமாகவும் இப்போதும் இருந்து வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வே.மதிமாறன் தலைமையிலான இயக்கத்தினருக்கும், பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், ம.க.இ.கழகத்தினருக்கும், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும், வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், எடிட்டர் லெனினுக்கும், இன்ன பிற பெயர் தெரியாத அம்பேத்கர் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

படத்தில் நடித்துள்ளவர்கள் :

Mammootty - Dr. Babasaheb Ambedkar

Sonali Kulkarni  - Ramabai Ambedkar

Mohan Gokhale - Mahatma Gandhi

Mrinal Kulkarni  - Dr. Kabir

Ma Jivan Mary - Rosa Epstein

Tirlok Malik - Lala Lajpatrai

Alisa Bosschaert

Govind Namdeo

Anjaan Srivastav

Rahul Solapurkar

Stacie Kellie  - Patron

Crew Members

Director : Jabbar Patel

Producer : Madan Ratnaparkhi

Written by : Daya Pawar, Arun Sadhu , Sooni Taraporevala

CINEMATOGRAPHER : Ashok Mehta

MUSIC_DIRECTOR : Amar Haldipur

Film Editing by : Vijay Khochikar

Set Decoration by : Sophie Newman

Art Direction by : Nitin Desai

Makeup Department : Vikram Gailkwad

Costume Design by : Bhanu Athaiya

Sound Department : Pramod Purandare

Other crew : Shyam Benegal , Dr. Y.D. Phadke

படத்தின் டிரெய்லர்


மும்பை நில ஊழல் - புதிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானும் திருடன்தானாம்..

27-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மும்பையின் கொலாபா பகுதியில் ஆதர்ஷ் சங்கம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் ஊழல் என்று எழுந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அசோக்சவானின் தலையும் உருண்டது. புதிய முதலமைச்சராக அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிரிதிவிராஜ் சவான் இந்தியாவின் அன்னை சோனியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரும் கர்ம சிரத்தையாக மும்பைக்கு ஓடோடி வந்து பதவியேற்ற உடனேயே அவர் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. அது தீப்பற்றி எரிவதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலின் புகை அனைவரின் கண்களையும் மறைத்துவிட்டதால் அப்போதைக்கு மட்டுமல்ல.. இப்போதுவரையிலும் தப்பித்த நிலையில்தான் உள்ளார் சவான்.

அது என்ன ஊழல்..? என்ன வகையானது..? என்பதை யோசித்துத் தேடியபோது விபரங்கள் சரிவர கிடைக்கவில்லை. ஆனால் இந்த வார துக்ளக் பத்திரிகையில் அதனைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


அதாகப்பட்டது என்னவெனில் மும்பையின் மத்திய கிழக்கு வடலாப் பகுதியில் - பிரிதிவிராஜ் சவான் 2003-ம் ஆண்டு சுமார் 1100 சதுர அடியில்,  ஒரு பிளாட் வீட்டை வாங்கியிருக்கிறார்.

இதிலென்ன முறைகேடு? ஊழல் என்கிறீர்களா..? சற்றுப் பொறுங்கள். இந்த வீட்டைக் கட்டியது அரசு கூட்டுறவு சங்கம். இது போன்ற வீடுகளை வாங்க வேண்டுமெனில் அதற்கான சில விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றன. அதில் ஒரு விதிமுறை சொல்வது என்னவென்றால் வாங்குபவரின் வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்தைவிட குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது.

ஆனால் இந்த வீட்டை வாங்கும்போது பிரிதிவராஜ் சவான் எம்.பி.யாக இருந்திருக்கிறார். அவரது மாத வருமானமே 76000 ரூபாய். ஆக நியாயப்படி பார்த்தால் அவருக்கு இந்த வீடு வாங்கக் கோரும் விண்ணப்பம் வாங்கும் தகுதிகூட இல்லை. ஆனாலும் வாங்கியிருக்கிறார்.. எப்படி அவரால் முடிந்தது..?

அடுத்த மெகா முறைகேடு.. அப்போதைய முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் தனிப்பட்ட பிரத்யேகக் கோட்டாவில்தான் இதனை வாங்கியிருக்கிறார். முதல்வருக்கென்று தனி கோட்டா தருவதுகூட முறைகேடுதானே? ஊழல்தானே..? இதையெல்லாம் இந்த அரசியல்வியாதி நாய்கள் யோசிக்க மாட்டார்களா.? வாரி வழங்கிவிட்டார் ஷிண்டே.. சரி எத்தனை ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்.. அங்கேயும் ஒரு மெகா ஊழல்..

2.25 கோடி மதிப்பு வாய்ந்த அந்த 1100 சதுர அடி அளவுள்ள வீட்டை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு கிரயப் பத்திரம் செய்து கொடுத்திருக்கிறார்கள். என்ன கொடுமைடா இது..?

அரசியல்வாதிகளை திட்டிக்கிட்டே இருக்கீங்க.. வஞ்சிக்கிட்டே இருக்கீங்களே..? வேற வேலை வெட்டி இல்லையா உங்களுக்கு..? வாய் வலிக்கலையா..? ஏன் போரடிக்கிறீங்க..? என்றெல்லாம் பேசக்கூடிய அன்பர்கள் கொஞ்சம் இதற்கு ஒரு விளக்கத்தைச் சொல்லுங்களேன்..

இந்த விஷயத்தைக்கூட சமூக நல ஆர்வலர் ஒருவர் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் தெரிந்து வைத்திருக்கிறார். சவான் பதவியேற்ற உடனேயே இந்தத் தகவலை வெளியிட்டு நியாயம் கேட்டிருக்கிறார். நியாயம் கேட்டா உடனே பதில் சொல்ல அவர் என்ன சாமான்யனா..? அரசியல்வியாதி இல்லையா..? அதுலேயும் மாநிலத்தையே ஆளும் முதல் அமைச்சர் இல்லையா..? சுலபத்துல பேசிருவாரா..? கொஞ்சம் லேட்டாகத்தான் ஆனால் அட்டகாசமா பதில் சொல்லியிருக்காரு..

“2003-ல் எனது தாய் பிரேமிலா பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது புற்றுநோயால் அவதிப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற வசதியாக மேற்படி வீடு வாங்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் அதில் குடி புகுவதற்குள் அவர் இயற்கை எய்திவிட்டார். நான் பாராளுமன்ற அங்கத்தினராக அப்போது முதல் இருந்து வருவதால் அவ்வீடு என் பெயரில் உள்ளது. இதில் தவறுகள் இருந்தால் வீட்டை அரசுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்..” - எப்படி இருக்கு பதில்..?

64 வயசாயிருச்சுல்ல.. சுயபுத்தி இருக்குல்ல.. அறிவு இருக்குல்ல.. படிச்சாருக்குல்ல.. 2.25 கோடி மதிப்புள்ள அரசு சொத்தை வெறும் 4 லட்சத்துக்கு வாங்குறோமேன்னு ஒரு குற்றவுணர்ச்சியாவது இருக்கான்னு பாருங்க.. தப்புன்னா திருப்பிக் கொடுக்கிறேன்னு கூலா ஒரு பதில்.. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் இவங்ககளுக்கு இருக்கவே இருக்காதா..? பின்ன என்னதான் ஸ்கூல்ல படிச்சிட்டு வர்றாங்க இவங்க..? இந்த லட்சணத்துல எம்.பி.யாம்.. மத்திய அமைச்சராம்.. இருக்குற சில வெட்கக்கேடுகள்ள இதுவும் ஒரு வெட்கக் கேடு..

இப்படியொரு விளக்கம் சொன்ன இந்த மகாத்மா சில கேள்விகளுக்கு மட்டும் வேணும்னே பதில் சொல்லாம எஸ்கேப்பாயிட்டாரு..

1. அவருடைய மாத வருமானம் 76000 ரூபாயாக இருக்கும்போது வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்திற்கு குறைவுன்னு விண்ணப்பத்துல எழுதினது ஏன்..?

2. எந்த அடிப்படையில் 2.25 கோடி மதிப்புள்ள வீட்டை சலுகை விலையில் 4 லட்சத்திற்குப் பெற்றார்..?

3. அவரது அம்மாவுக்குத்தான் அந்த பிளாட் கொடுக்கப்பட்டது என்றால் அம்மா இறந்த பிறகு சவான் ஏன் அதன் மீது சொந்தம் கொண்டாடினார்..?

4. எந்த ஊழலும் இல்லைன்னா இப்போ வீட்டை திரும்பி ஒப்படைக்கிறேன்னு சொல்றது எதுக்கு..? ஏதேனும் விசேஷப் பிரார்த்தனைக்காகவா..?

இப்படியெல்லாம் பா.ஜ.க.-சிவசேனா கட்சிக்காரங்க கேள்வி மேல் கேள்வி கேட்டாலும், எருமை மாடு மேல மழை பேஞ்ச கதையா “எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் இப்போ சி.எம்.” அப்படீன்னு சொல்லி எஸ்கேப்பாயிட்டாரு சவான்.

ஆனால் அவருக்குப் பதிலா இப்போ துணை முதல்வரா பதவி வகிக்கிற சரத்பவாரின் அண்ணன் மகனான அஜீத்பவார்தான் பதில் சொல்லியிருக்காரு. அதுவும் எப்படின்னு பாருங்க..

“இப்படிப்பட்ட கேள்விகளை பிரிதிவிராஜ் சவான் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் ஈவிரக்கமின்றி சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அபாண்டமாகக் கூறுகின்றன. அவர் மீது குற்றச்சாட்டுக்களை வெறும் அரசியல் காரணங்களுக்காகச் சுமத்தி தங்களது காழ்ப்புணர்ச்சியை மட்டுமே எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்துகின்றன. எப்படிப்பட்ட மாபெரும் ஊழலின் ஆணி வேரையே அகற்ற பிரிதிவிராஜ் சவான் வந்துள்ளார் என்பதையும், பதவியேற்ற 72 மணி நேரத்திற்குள் ஆதர்ஷ் கட்டிடத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று கேள்வி கேட்டு மத்திய சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பக் காரணமாக இருந்த முதல்வரின் அதிரடிச் செயலில் இருந்தே அவரது நியாய, நாணய உணர்வின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ள முடியவில்லையே..?” இப்படி பக்காவான கூட்டணிக் கட்சிக்காரனா பேசியிருக்காரு அஜீத்பவாரு.

இனி என்னாகும்..? சட்டமன்றத்தில் இந்தப் பேச்சு எழுந்து கலாட்டா நடக்கும்போது வீட்டைத் திருப்பிக் கொடுத்துட்டு எனக்குக் கொடுத்தத் திருட்டுப் பட்டத்தை வாபஸ் வாங்கிருங்கன்னு நம்மளைப் பார்த்து வெக்கமில்லாம இளிக்கப் போறாரு முதலமைச்சரு..

இதேபோலத்தான் ஆதர்ஷ் ஊழலும் நடந்தது. உடனேயே அசோக் சவானை வீட்டுக்கு அனுப்பின சோனியாம்மா.. அதே மாதிரி இன்னொரு ஊழலை செஞ்ச இன்னொரு சவானுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தது ஏனோ..?

எல்லாம் நடிப்புங்க.. பாருங்க.. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட்டோம்னு ஒரு பாவ்லா.. அப்படியே கட்சியையும் உடையாம பார்த்துக்கணும்.. கூட்டணியும் பிரியாம பார்த்துக்கணும். நமக்கும் தலையாட்டற ஆளாவும் இருக்கணும்.. அப்படீன்னு இன்னொரு ஊழல்வாதியைக் கொண்டாந்து உக்கார வைச்சிருக்காங்க..

இதோட இன்னொரு விஷயமும் இப்போ வெளில வந்திருக்கு. மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி, ராணுவ இலாகாவில் எத்தனை இடங்களில் நிலம் ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்பு மூலமாக ஊழல் நடந்துள்ளது என்பதை ஆராய ஆய்வு நடத்தும்படி உத்தரவு போட்டிருக்காராம்.

அப்போது, முதலில் வெளிப்பட்ட குட்டு, புனே நகரின் மையப் பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் மலிவு விலையில் மறைந்த ஊழலும் ஒன்று.. அந்தப் பகுதி நமது இன்னுமொரு மாபெரும் ஊழல் விளையாட்டு அரசியல்வியாதி சுரேஷ் கல்மாடியின் பாராளுமன்றத் தொகுதிக்குள்தான் அடங்கியிருக்கிறதாம்.. அடடா என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்..?

அத்தனை அரசியல்வியாதிகளும் சுருட்டறதுல மட்டும்தாங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கானுக.. நாம வழக்கம்போல அடுத்து  ஓசில என்ன கிடைக்கும்னு நாக்கைத் தொங்கப் போட்டுட்டு காத்துக்கிட்டிருப்போம்..!!!

நந்தலாலா - உலகத் தரமான தமிழ்ச் சினிமா..!

26-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..!

இத்தனை சிறப்புக்களையும் தாராளமாக நாம் வாரி வழங்கலாம் இந்தப் படத்திற்கு..!

ஆனாலும் நெருஞ்சி முள்ளாய் இதயத்தைத் துளைக்கிறது ஒரு குறை. படத்தின் கதை தழுவல்தான். நிச்சயமாக கிகுஜிரோ என்ற ஜப்பானியத் திரைப்படத்தின் கதையைத் ஆரத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.. ஆனால் எடுத்தவிதத்தில் உலகத் தரமான இயக்குநர்களின் வரிசையில் தைரியமாக நிற்கிறார் மிஷ்கின்.


அன்னவாசல் என்னும் ஊரில் இருந்து கொண்டு மாதந்தோறும் லெட்டரையும், பணத்தையும் அனுப்பி வைக்கும் தனது அம்மாவைத் தேடிப் புறப்படுகிறான் சிறுவன் ஹரி. சிறிதளவு மனநலம் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு நோயாளி. எல்லாரையும் பார்க்கவும், நேசிக்கவும், சோறு ஊட்டவும் அம்மாவும், அப்பாவும் வரும்போது, தன்னைப் பார்க்க யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்.. ஒரு நாள் மருத்துவமனையைவிட்டு வெளியேறுகிறான்.
 
அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான்.



பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவை பார்த்தானா? என்பதையும் தயவு செய்து தியேட்டருக்குச் சென்று பாருங்கள்..!

முதல் ஷொட்டு இயக்குதலுக்கு..! அஞ்சாதே படத்தைப் போல் முதல் ஷாட்டிலேயே துவங்கிவிட்டது மிஷ்கினின் ராஜ்ஜியம். இப்படியெல்லாம் காட்சியமைப்புகள் வைக்க முடியுமா என்று பல துணை இயக்குநர்களையும், இயக்குநர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..

எந்தக் காட்சியிலும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமென்பதற்காக கேரக்டர்களை எல்லை மீறி பேச விடவில்லை. தானும் பேசவில்லை. இயக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் தானும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் மிஷ்கின்.



தனது கருவிழி பிதுங்கி வந்துவிடுவதைப் போல முகத்தைக் குரூரமாக்கிக் காட்டுவதிலும், மென்ட்டலா என்று கேட்டவுடன் அவர் காட்டும் வேகமும், அதே வேகத்தைப் பையனிடம் காட்ட முடியாமல் தவியாய் தவிக்கின்ற தவிப்பும், தனது அம்மாவின் கோலத்தைப் பார்த்து கதறி அழுவதுமாக இயக்குநர் என்பவனே ஒரு நடிகன்தான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகியிருக்கிறார் மிஷ்கின்.

வெறும் காட்சியமைப்பிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.. ஹனிமூன் தம்பதிகளை ஓவர்டேக் செய்யும் அலம்பல் பார்ட்டிகளை  இடுப்பில் நிற்காத தனது பேண்ட்டை ஒரு கையால் பிடித்தபடியே சமாளிக்கும்விதம் செம கலகலப்பு..!

போலீஸிடம் இருந்து தப்பிக்க அந்தச் சிறுவன் பேசும் ஆங்கிலச் சொற்பொழிவும், அதற்கு அந்த இன்ஸ்பெக்டரி்ன் முக பாவனையும் சூப்பர்..! இதேபோல் இளநீர் திருடி மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதும், கடைசியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக் கொடுப்பதுமாக காட்சிகளை மிஷ்கின் நகர்த்தியிருக்கும்விதம் அருமை..!




பையனின் அம்மா காலில் விழுந்து அழுத பின்பு அவள் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறிய காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்ந்தது. இத்தனைக்கும் அதில் வசனமே இல்லை. இளையராஜா மட்டும்தான்..! அப்படியிருந்தும் ஆக்கத்தினால் தூண்டப்பட்டுவிட்டோம்..!

ஜாதிக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வழி கேட்டு கடைசியில் அவன் உடல் ஊனமுற்றவன் என்பது தெரிந்தாலும், அவன் காசு கேட்கின்ற கொடுமையை வைத்திருப்பதில் இருந்தே இங்கே காசில்லாமல் எதுவும் நகராது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

கீழே விழுந்த பின்பே தான் உடல் ஊனமுற்றவன் என்பதை உணர்ந்து அவர் படும் மனக்கஷ்டத்தை அடுத்தடுத்த ஷாட்டுகளில் காட்டியிருப்பது மிக இயல்பு. அதேபோல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்குச் சிகிச்சையளித்த பெண் டாக்டர் நொண்டிக் கொண்டே செல்வதைக் காட்டுகின்றபோதும் மனதை என்னவோ செய்தது..!




ஸ்னிக்தாவைக் காப்பாற்றும் பொருட்டு நடக்கும் சண்டையில் அடி வாங்கி கடைசியில் நட்பு குண்டர்களைப் பார்த்தவுடன் “இப்ப வந்து அடிங்கடா பார்க்கலாம்..” என்பதைப் போல குண்டரின் தோளில் கை வைத்துக் கொண்டு குதிக்கின்ற குதி இருக்கிறதே.. இந்தக் காட்சியில் தனது உடலின் பின்புறத்தை மட்டுமே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.. எந்தக் காட்சிக்கு குளோஸப் அவசியமோ அப்போது மட்டும்தான்..

ஆட்டோக்காரராக பத்திரிகைக்கார அண்ணன் அருள்எழிலன் நடித்திருக்கிறார். ஆச்சரியம். இவர் எப்படி களத்தில் இறங்கினார் என்று தெரியவில்லை. அண்ணன் தனது பேவரிட் வார்த்தையான “என்னம்மா..” என்பதையும் டயலாக்கில் சேர்த்தே பேசியிருக்கிறார். இப்படியாவது பொழச்சுக்கட்டும்..!




பையனிடம் மிஷ்கினைக் குறிப்பிட்டு “மென்ட்டலா..?” என்று கேட்டவுடன் மிஷ்கின் ஆக்ரோஷத்துடன் அடிதடியில் இறங்கி அவரை அடித்துவிட்டு பின்பு அதற்காகவும் வருத்தப்பட்டு கதறுகின்ற கதறல்.. அவரது இயலாமையைச் சுட்டிக் காட்டும்விதமாக செய்திருக்கிறார்.. ஆனால் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிகக் கவனமாக இப்படித்தான் கையாண்டிருக்கிறார் மிஷ்கின்..!

லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரி்க்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் “வரேன்டி சிறுக்கி முண்டை..” என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனை காட்டும் அம்மா ரோகிணி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுயகட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டு போயிருக்கிறார்..!

இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு “மென்ட்டல்” என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..



“எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்.. இதோ இவங்களைச் சொல்லலாம்ல.. இவங்கதான் அம்மான்னு சொல்லிருக்கலாம்ல.. நான் முத்தமாவது கொடுத்திருப்பேன்ல..” என்று சொல்லும்போது அந்தப் பையனை வாரியணைக்க வேண்டும்போல இருந்தது..!

தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..!

 

படம் இறுதிவரையிலும் மெல்லிய சோகத்துடன்தான் இழையாடுகிறது.. இதற்குப் பக்க பலம் இசைஞானி இளையராஜா.. இங்கே ஒரு இசை ராஜ்ஜியத்தையே செய்து காட்டியிருக்கிறார்.

மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!

டிவியை உடைப்பது.. அருள் எழிலனை அடிப்பது.. அவருடன் சண்டையிடுவது.. ஸ்னிக்தாவுக்காக அந்தக் கிழவனுடன் சண்டையிடும் காட்சி.. அம்மாவைத் தேடி வீடு, வீடாகக் கதவைத் தட்டி கேட்கின்ற காட்சி, மிஷ்கின் தனது அம்மாவைத் தேடிப் போகும் காட்சி.. மிஷ்கின் ஆக்ரோஷப்படும் காட்சிகள்.. என்று அத்தனையிலும் இசைஞானி தனியாகத் தெரிகிறார்.

பின்னணி இசை என்றாலே ஏதாவது கேரக்டர்கள் தூங்கும்போதுகூட எதையாவது போட்டு நம் காதை நிரப்பி வைத்திருக்கும் இயக்குநர்கள் மத்தியில் இந்தப் படத்தில் தேவையான இடங்களில் மட்டுமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. மற்ற இடங்களில் கேமிரா தான் செல்லும் பாதையிலேயே கதையைக் கொண்டு செல்ல.. இசை தேவையில்லாமல்தான் தெரிகிறது..

இந்தப் பயணத்துக்கான லொகேஷன்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழகுற காட்டியிருக்கும் பாங்கில் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்..! கலை இயக்குநருக்கும் ஒரு சபாஷ்..

பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எப்படி இத்தனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு வெறும் கால்களை மட்டுமே அழகுர படம் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை..! பல ஷாட்டுகளில் பாதி நபர்கள்தான் தெரிகிறார்கள். ஆனாலும் அதுவும் ஒரு அழகு. குறிப்பாக குண்டர்கள் பைக்கில் உட்கார்ந்திருக்கும் காட்சியில் பாதி ஸ்கிரீனை அவர்களே அடைத்துக் கொள்ள.. பின்னணி இசையே இல்லாமல் ரசிக்க முடிகிறது..!



பவானி, சேலம் போன்ற பகுதிகளின் சாலைகளிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அழகான இடங்களை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.. மிக எளிமையான முறையில் சிறுவனின் வீடு இருப்பதையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்க்கும்போதும், கண் தெரியாத பாட்டியை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று கொண்டு வந்து விடும் சிறுவனின் கடமையையும் முதலிலேயே காட்டிவிடுவதால் இதென்ன வாழ்க்கை என்று நமக்கே வெறுப்பாகிறது.. இதைத்தான் தனது பலமாக ஆக்கிக் கொண்டு பையனை அழைத்துக் கொண்டு நம்மையும் டூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வசனங்களும் மிகக் குறைவு.. நான் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பையனின் அம்மாவைக் கண்டுபிடிக்கும் இடத்தில் வசனமில்லாதது பெரும் ஆச்சரியம்.. எதுக்கு டயலாக்கு என்பதோடு இந்தக் காட்சியிலும் அம்மாவின் முதுகுப்புறத்தை மட்டுமே காட்டிவிட்டு நிறுத்தியது மிஷ்கினின் ஸ்டைல்..!

நிச்சயம் இது போன்ற ஷாட்டுகளையும், காட்சியமைப்புகளையும் பல வெளிநாட்டுத் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.. கிகுஜிரோவில்கூட இப்படியான காட்சிகள் இல்லை.. அதைவிடவும் மேம்பட்ட நிலையில்தான் இது எடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்..! 

மிஷ்கின் இறுதியில் சிறுவனின் தாயைப் பற்றிச் சொல்லும்போது மட்டும்தான் இயல்பான மனநிலையில் பேசுகிறார். அப்படீன்னா அவர் இதுவரையில் பேசியது, நடந்து கொண்டதெல்லாம் என்கிற நமது கேள்விக்கு நம்மையே விடை தேடச் சொல்லியிருக்கிறார். ஏனெனில் அறிமுகக் காட்சியிலேயே “யாரோ டிவியை உடைச்சுட்டாங்க..” என்று மிகச் சாதாரணமாக வார்டனிடம் சொல்லிவிட்டுப் போகும்போதே மிஷ்கினை கவனித்தேன். ஏதோ ஒன்றை அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று..! இறுதியில் பலூன் விற்கும்போதுதான் தனியாகத் தெரிகிறார்..!




மனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்....

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களில் ரசிகர்களைக் கவருகின்றவிதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டு படங்களும் பி அண்ட் சி சென்டரில்கூட ஓடின..




ஆனால் இந்தப் படத்தில் எந்தவித சமரசத்தையும் வைத்துக் கொள்ளாமல் பாடல் காட்சிகளைக்கூட கதையை நகர்த்துமிடத்தில் மட்டுமே வைத்திருந்து தனக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக, மிஷ்கின் சமீபத்தில் சொன்னதுபோல அவருடைய கேரியரில் இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம்..!

இப்போதெல்லாம் படத்தின் ரிலீஸுக்கு முன்பே படத்தின் பிரிவியூ போடுவதைத் தவிர்த்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் மிஷ்கின் இந்தப் படத்தை டிவிடி வடிவத்திலேயே தமிழ்நாட்டின் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் பலருக்கும் போட்டுக் காட்டி கேன்வாஸ் செய்துவிட்டார். சாருவும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார்..!

பத்திரிகையாளர்கள், மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்காக இந்த வாரம் திங்கள்கிழமையில் இருந்தே தினம்தோறும் ஷோ நடத்தி காண்பித்துவிட்டார். அத்தனை பேருமே "கண் கலங்கிய நிலையில்தான் வெளியில் வந்தோம்.." என்றார்கள். நானும் அப்படித்தான்..!

தமிழ்ச் சினிமா தற்போது தாங்க முடியாத வருத்தத்திலும், குழப்பத்திலும்தான் இருக்கிறது. லோ பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் சூழலே இல்லாமல் இருக்கும் நிலையில் இது போன்ற தரமானத் திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது...! நிச்சயம் நாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்..! பதிவர்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது..!

எப்போதும்போல் “தமிழ்ச் சினிமா ஒண்ணுமேயில்லை.. குப்பை. மொக்கை.. இவங்களுக்கு படம் எடுக்கவே தெரியலை.. ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக் படத்தைப் பாருங்க..” என்று சொல்லி புலம்புவதைவிட அவைகள் போன்று தரமான நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்  படத்தையும் உலகளாவிய அளவுக்குக் கொண்டு போக வேண்டியது நமது கடமை..!

மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!

அதற்கு இந்த ஒரு படமே சாட்சி..!

டிஸ்கி : நமது சக வலையுலகத் தோழி லிவிங் ஸ்மைல் வித்யா இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..!


இதையும் படியுங்கள் : 

மந்திரப்புன்னகை - சினிமா விமர்சனம்

24-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இத்திரைப்படத்தை சென்ற வெள்ளியன்று மாலையே பார்த்திருந்தாலும் உடனுக்குடன் விமர்சனத்தை வெளியிட என் மனம் ஒப்பவில்லை. காரணம், நான் எதிர்பார்த்துப் போன கரு.பழனியப்பன் அதில் இல்லாத அதிர்ச்சிதான்..!

நான் இப்படி எதிர்பார்ப்பதே தவறு என்பதை உணர்ந்து சகஜ நிலைக்கு வருவதற்கே இரண்டு நாட்களாகிவிட்டது. ஒருவரின் பிம்பம்.. இவர் இப்படித்தான் என்பது மாதிரியான அடிப்படை உணர்வு நம் மனதில் புகுந்துவிட்டால் அதனை வெளியில் தூக்கியெறிவது மிகவும் கடினமாக இருக்கும். அது போலத்தான் பழனியப்பன் பற்றிய எனது பார்வையும்.

இவரது படத்தினை குடும்பத்துடன் பார்க்கலாமே என்ற நினைப்போடு போயிருந்த எனக்கு, அதில் இருந்த கலாச்சாரப் புரட்சியும், எக்குத்தப்பான வசனங்களும் காய்ச்சலுக்குள்ளாக்கிவிட்டது.

ஆனால் பின்பு யோசித்துப் பார்த்ததில் தவறு என் பக்கம்தான் இருக்கிறது என்பது புரிந்தது. நான் யோசித்தது கரு.பழனியப்பனை. ஆனால் திரையில் நான் சந்தித்தது கதிர் என்னும் ஒரு கேரக்டரை.

அந்தக் கேரக்டர் அப்படித்தான். அவனது குணாதிசயங்கள்தான் அது.. அவனது கதை அதுதான். அவனது வாழ்க்கைச் சம்பவம்தான் கதை என்கிற ரீதியில் யோசித்துப் பார்த்து வெறும் இயக்குநராக எழுத்து, இயக்கம் செய்த கரு.பழனியப்பனை மட்டுமே நினைவில் கொண்ட பின்புதான் மனம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது.


தமிழுக்கு இது போன்ற கதைகள் புதிது என்றே நினைக்கிறேன். இதனுடைய திரைமொழியாக்கமும் புதிதுதான்..! கரு.பழனியப்பனின் இதற்கு முந்தைய படமான பிரிவோம் சந்திப்போம் படத்திலேயே இது போன்ற ஒரு அடித்தளத்தை அவர் வைத்திருந்தார்.

அந்தக் குறிப்பிட்டக் காட்சி அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அந்தக் காட்சியை மட்டும் தமிழக அரசு வழங்கிய சினிமா விருதுகள் பற்றிய இட்லி-வடை கட்டுரையில் இரண்டு பாராவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“இதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் 'பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.

சந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.”

இப்படித்தான் அதில் எழுதியிருக்கிறேன். எதிரில் ஒருவர் இருப்பதைப் போல் கற்பனை செய்து கொண்டு உரையாடும் ஒரு மனப்பிறழ்வு நோய் நாயகிக்கு ஏற்பட்டிருப்பதை அதில் காட்டியிருப்பார் இயக்குநர் கரு.பழனியப்பன்.  ஆனால் இந்தக் காட்சியைத்தான் கொஞ்சம் அழுத்தமாகக் கொடுக்கவில்லை என்று குறைபட்டிருந்தேன்.

அந்தக் குறையை நீக்க வேண்டி அதற்கான பின்புலமாக ஒரு கதையைத் தேர்வு செய்து இப்போது முழு நீளப் படமாகவே மந்திரப்புன்னகையில் கொடுத்திருக்கிறார்.

தன் மேல் அன்பையும், பாசத்தையும் பொழிந்த தாய் திடீரென்று தன்னை விட்டுப் போனதையடுத்து மனச்சிக்கலுக்குள்ளான கதிர், அதேபோல் தான் விரும்பும் பெண்ணும் போய்விடுவாளோ என்று நினைத்து தனக்குள் இருக்கும் மிருகத்தை உசுப்பிவிட்டு அதனால் படும்பாட்டைத்தான் இந்த 2 மணி நேர சினிமாவுக்குள் சொல்லியிருக்கிறார்.

இந்த முறை மட்டுமே.. இந்தச் சினிமாவிற்கு மட்டுமே... கதைச் சுருக்கத்தை சொல்வதற்குக்கூட சற்றுச் சங்கடப்பட வேண்டியிருக்கிறது. இப்போது பெரும்பாலான பதிவர்கள் நான் நினைத்ததுபோலவே கதிரின் கேரக்டர் பற்றிச் சொல்லிவிட்டதால் இடைவேளையின்போது வரும் அந்த ட்விஸ்ட்டை விமர்சனத்தை படித்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களால் முழுமையாக ரசிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.


முதல் பாராட்டு வேறொரு நடிகரை வைத்து இயக்காமல், தானே நடித்தற்காக இயக்குநருக்குக் கொடுக்க வேண்டும். வேறொரு முன்னணி நடிகர் நடித்திருந்தால் திரையில் அவரைப் பற்றிய வெளிப்புற பிம்பமே நம் மனதை ஆழ்த்தி, மனநோய் பீடித்த கதாநாயகன் தோன்றியிருக்க மாட்டான். தனது முதல் படத்திலேயே இப்படியொரு கேரக்டர் என்பதால்தான் இங்கே கதை பிரதானமாகி பின்புதான் பழனியப்பன் என்னும் நடிகர் தென்படுகிறார்.

படத்தின் பிரதான அம்சமே வாழ்க்கையின் சகலத்தையும் கொத்து புரோட்டோ போட்டிருக்கும் வசனங்கள்தான். பொதுவாகவே பழனியப்பனின் திரைப்படங்களில் வசனங்கள் மிகுதியாக இருக்கும். அதிலும் பொது அறிவுக் களஞ்சியமாக வசனங்கள் கொட்டியிருக்கும். இதிலும் அப்படியே.. ஆனால் கொஞ்சம் அவற்றைக் குறைத்துவிட்டு கேரக்டருக்கு ஏற்றாற்போல் வசனங்களைப் பிரித்து மேய்ந்திருப்பதால் முதல் பகுதியில் ஏக கலகலப்பு..! "படிப்பு வரலேன்னா என்ன... சினிமால ஹீரோவாக்கிட்டு போறேன்.." என்ற டயலாக்கை தைரியமாக வைத்திருப்பதற்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு..! அதேபோல் எனக்கு "அது பிடிக்கும், இது பிடிக்கும்" என்று சொல்லும் மீனாட்சியிடம் "மொத்தத்துல ஆம்பளைங்க வாசம்னா பிடிக்கும்னு சொல்லு" என்று பழனியப்பன் சொல்லும் வசனமும் பல ஆயிரம் கதையைச் சொல்கிறது..

சந்தானம் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் சில இடங்களில் முகத்தைச் சுழிக்க வைத்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.. வசனங்களின் முக்கியத்துவம் தேவை என்றாலும், எட்டாவது ரீல் வரையிலும் கேரக்டர் ஸ்கெட்ச்சை வசனத்தின் மூலம் சொல்லிக் கொண்டே போக வேண்டுமா என்கிற அங்கலாய்ப்பும் எழுகிறது.


அந்த அப்பா கேரக்டரின் உண்மைதன்மையை முன்பே வெளிப்படுத்துவதுபோல் வசனங்களை அமைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. “எப்போ நான் வந்தாலும் என்னை அனுப்புறதுலேயே குறியா இரு..!!!” என்ற வசனத்தை இரண்டாவது முறையாகக் கேட்டபோதுதான் மனதில் குறியீடாக நின்றது..

கதிரின் ஒழுக்கம்கெட்டத் தன்மையை காட்டுவதாகக் கூறி காட்சிக்குக் காட்சி மது பாட்டில்களைக் காட்டியது ஓவர்தானோ என்றும் தோன்றுகிறது. தனது தாய் மீதான நெருக்கத்தைக் காட்டும் “வெளில போறதுக்கு முன்னாடி கண்ணாடில நம்மளை நாமளே பார்த்துக்கணும்” என்ற வசனம் மீனாட்சியையும் பிடிக்க வைப்பது டச்சிங் சீன். மீனாட்சியை பாலோ செய்து ஹோட்டலுக்கு வரும் காட்சியில் கேமிரா காட்டியிருக்கும் விசுவரூபத்திற்கு ஒரு பாராட்டு..!

கதிர் நார்மலானவன் அல்ல என்பதற்காக இயக்குநர் வைத்திருக்கும் பல காட்சிகளால் அவன் மீது வெறுப்பு ஏற்பட வைக்க இயக்குநர் மிகவும் முயன்றிருக்கிறார். அலுவலக மீட்டிங்கில் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுவது. முடியாது என்று முகத்திலடித்தாற்போல் சொல்வது.. கைம்பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் போய் வேலையைப் பார்க்கச் சொல்வது.. இறக்கும் தருவாயில் இருக்கும் பாட்டியை சாகச் சொல்வது.. கார்த்திகை தீபத்தின் அருகில் நின்று சிகரெட்டை பற்ற வைப்பது.. பெற்ற அப்பனிடம் பணத்தை நீட்டி நடையைக் கட்டச் சொல்வது.. மீனாட்சியைப் புறக்கணிக்க வேண்டி அவளை அவமானப்படுத்துவது.. தனக்குச் சுகம் தரும் வந்தனாவைத் திட்டியனுப்புவது.. என்று படம் முழுவதும் அவனுடைய டேலண்ட் மொத்தத்தையும் நாக்கில் விஷம் போல் சேர்த்து வைத்துக் கொட்டும் அனுபவம் அனைத்துமே கேரக்டருக்கு வலு சேர்க்கத்தான் செய்திருந்தன.

கதிராக நடித்திருக்கும் பழனியப்பனுக்கு இது தோதான கதை. நடித்துவிட்டார். ஆனால் அடுத்தும் என்றால் எனக்கு பகீரென்கிறது. இயக்குநர் பழனியப்பனே இனி தொடர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இது போன்ற எதிர்பார்ப்பு இல்லாத கேரக்டரில் நடித்த பின்பு, மீண்டும் ஒரு ஸ்கிரீன் லைட்டை  பூசிக் கொள்வது முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு வடிவத்தில், வேறு இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்து வேண்டுமானால் அண்ணன் முயற்சி செய்யலாம்..!

பாரில் பீர் பாட்டில் மூடியை வாயால் கடித்தே திறக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மீனாட்சி. இவர் இப்போதுதான் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  இதற்கு முன் நடித்த எந்தப் படத்திலும் இத்தனை குளோஸ்அப் காட்சிகளை மீனாட்சியின் முகத்துக்கு மட்டும் வைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி..! சில குளோஸ்அப்புகளில் லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ் தவறுவது தெளிவாகத் தெரிகிறது.. இந்தப் பெண்ணுக்கும் நடிக்க வரும் என்பதைத் தெரிவித்தமைக்காக பழனியப்பனுக்கு இன்னுமொரு நன்றி..! ஆனாலும் பாடல் காட்சிகளில் சேலையிலேயே கவர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறார் மீனாட்சி. மற்ற இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்..!


படத்தின் முற்பாதியை பாதியளவுக்குத் தனது தோளில் சுமந்திருக்கிறார் சந்தானம். காண்டம் வாங்கப் போன இடத்தில் அவர் அல்லல்படுவதும், மனைவியிக்கு சேலை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கே கிடைக்கும் ட்விஸ்ட்டான திட்டில் ஆடிப் போகும் சராசரி சந்தானங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம்தான்..!

அதற்காக அவர் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை மன்னிக்க முடியாது.. செத்த கிளியை இரண்டு முறை பேசுவதெல்லாம் தேவைதானா..? குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் என்கிற கணக்கில் இப்போது சந்தானத்தின் காட்டில்தான் மழை. மனிதரும் வஞ்சகமில்லாமல் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

கல்யாணமே செய்யாமல் பெயரில் மட்டும் மன்மத நாயுடுவாக தம்பி இராமையா. நீண்ட அனுபவசாலி நடிகரைப் போல டைமிங்காக பேசுவதில் அசத்துகிறார். முற்பாதியில் கலகலப்பைக் கூட்டுபவராகவும், பிற்பாதியில் குணச்சித்திரத்துக்கும் மாறிவிடவும் மிக எளிதானவராக இருக்கிறார். இனிமேல் இவர் காட்டில் மழைதான் என்று நினைக்கிறேன்.

அடுத்துக் குறிப்பிட வேண்டியது வந்தனாவும், ரிஷியும். மூன்று ஐந்து காட்சிகளே வந்தாலும் வந்தனாவுக்கு ஒரு ஷொட்டு. கதிர் கூப்பிட்டால் இனிமேல் என்னை அனுப்பாதே என்று கேட்டுக் கொள்வதில் இருக்கும் ஆதங்கம் அளவிட முடியாதது.. எல்லாருக்கும் மனமென்ற ஒன்று இருக்குமே..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக மின்பிம்பங்கள் தயாரிப்பில் விஜய் டிவியில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற சீரியலில் நடித்த ரிஷியின் முதல் துவக்கமே பாராட்டுக்குரியதாகத்தான் இருந்தது. அப்போதே மாடுலேஷனில் பிச்சு வாங்கினார். டிவியில் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்லித்தான் அந்தக் கேரக்டரை எக்ஸ்டன்ஷன் செய்து கொண்டே போனார்கள். அசத்தினார் மனிதர். இப்போதும் அசத்தியிருக்கிறார்..
  

பழனியப்பன் படம் என்றாலே பாடல்களும், பாடல் காட்சிகளும் ஸ்பெஷலாக இருக்கும். இதில் வித்யாசாகரின் இசையில் தியேட்டரில் மட்டும் கேட்கக் கூடிய அளவுக்கு தண்ணி போட வாப்பா என்ற முதல் பாடலும், சட்ட சட சட என்ற பாடலும், அன்பில்லாமல் என்ற பாடலும் பாடல் காட்சிகளும் பிடித்திருந்தன.. முதல் நடிப்பு என்பதால் நடனமாடி நம்மை சோதிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அண்ணன் அதை தவிர்த்துவிட்டு காட்சிகளை அழகுபடுத்தியிருப்பதற்கு நன்றி..!


முதல் பாதியில் ஜாலியும், எதிர்பார்ப்புமாகச் சென்ற கதை பிற்பாதியில் நீளமான சம்பவங்களின் கோர்வையினால் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்துவிட்டது. அந்தக் கொலை சம்பவமும், அதைத் தொடர்ந்த காட்சிகளும் பரபர..! அவரது சிறு வயதுக் கதையை கவிதையைப் போல் எடுத்திருக்கிறார்..! அந்தக் காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடி என்பதால் அது எடுக்கப்பட்டவிதம் நன்று..!

இப்போதைய கட்டுப்பாடுகள் மீறிய காதல் எதனால் ஏற்படுகிறது என்பதை இங்கேயும் வசனத்தாலேயே குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பாராட்டு.. ஒரு மகிழ்ச்சி.. மனைவியின் திறமையை அங்கீகரித்தல்.. இப்படி ஏதோ ஒன்றை ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்க்கிறாள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் இயக்குநர்.

பெரும்பாலான இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இதுதான் அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. ஆனால் இவைகள் கணவர்களுக்குத்தான் புரிவதில்லை. வெறும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே சுகமில்லை.. அதையும் தாண்டி மனைவியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் காதல் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.. இது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சு போச்சுன்னா நாட்டுல கள்ளக்காதலே இருக்காது.. நல்லக் காதல் மட்டுமேதான் இருக்கும்..!

இடையில் சில காட்சிகளை நறுக்கித் தள்ளியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. துவைத்த துணிகளை காயப் போட்டுக் கொண்டே கல்யாணத்தைப் பற்றி மீனாட்சியிடம் பேசும் பெண்மணியின் காட்சியும் இதில் ஒன்று..!


கதிரின் மனப்பிறழ்வு நோய் சரியாகிவிட்டதா இல்லையா என்பதை மருத்துவரும் குழப்பமாகவே சொல்லிவிட்டது படத்தையும் கொஞ்சம் குழப்பிவி்ட்டது என்றே நினைக்கிறேன். நந்தினியை புறக்கணிக்கவே நான் இப்படி நடிக்கிறேன் என்று கதிர் சொன்னாலும், டாக்டரோ மருந்து, மாத்திரை சாப்பிட்டால் குணமாயிருவார் என்று சொல்லி மேலும் பீதியைக் கொடுக்கிறார். இறுதிக் காட்சியிலும் அப்பா தென்பட்டவர் அமைதியாக, பேசாமல் திரும்பிப் போவதில் அவர் இனிமேல் திரும்பி வர மாட்டார் என்பதை சிம்பாலிக்காக காட்டினாலும் நினைத்துப் பார்ப்பது கதிர்தானே..?

ஊரில் இருக்கும் பாட்டி பற்றிய காட்சிகள் நிஜமா அல்லது அதுவம் கற்பனையா..? அந்தப் பாட்டிதான் மருத்துவமனைக்கு வந்த பாட்டியா..? என்பதும் என் மரமண்டைக்கு சரிவர புரியவில்லை..! இதில் எது, எது உண்மைக் காட்சிகள்.. எது எது கற்பனைக் காட்சிகள் என்பதையே தனியாக லிஸ்ட் போட்டுத்தான் எழுத வேண்டும் போல் உள்ளது..!

கிளைமாக்ஸ் காட்சியை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்..! பத்து வரி சென்டிமெண்ட்டுகளில் கதிர் உருகிவிடுவதாகச் சொல்லியிருப்பது அந்தக் காட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. படம் பார்த்த அத்தனை பேரின் அங்கலாய்ப்பும் இதுதான்..! அந்தக் காட்சியைக் கொஞ்சம் வேறு மாதிரி சிந்தித்திருக்கலாம்..!

கரு.பழனியப்பனின் திரைப்படங்களிலேயே அதிக அளவுக்கு சென்சாரால் வசனங்கள் கட் செய்யப்பட்டிருப்பதும் இதில்தான்  என்று நினைக்கிறேன். யூ-ஏ சர்டிபிகேட்கூட பழனியப்பனுக்கு இதுதான் முதல் முறை என்றும் நினைக்கிறேன்.

பழனியப்பனின் படங்களில் இந்த இரண்டுக்குமே இந்தப் படமே கடைசியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்..!

மந்திரப்புன்னகை நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் பேசக் கூடிய வித்தியாசமான படமாக வருங்காலங்களில் இருக்கும்..!

பெருமைப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு நன்றி..!

24-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று நடந்த மந்திரப்புன்னகை படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

வருகிறேன் என்று சொல்லி கடைசி நிமிடத்தில் வர இயலாமல் போனதாகத் தெரிவித்த பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!


இயக்குநர் திரு.கரு.பழனியப்பனை 15 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் முதன் முதலாகச் சென்னைக்கு வந்த பொழுதில் இருந்தே எனக்கு அறிமுகமானவர்தான். பழகுவதற்கு இனியவர். நிறைய படிப்பாளி. ஆனந்தவிகடனில் மாணவ நிருபராக தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமானவர்..!

நான் இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை அவரைச் சந்தித்துப் பேசியபடிதான் இருந்தேன். இருக்கிறேன். இந்த மந்திரப்புன்னகை படத்தினை சென்ற வெள்ளிக்கிழமையன்றே நான் சந்திரன் தியேட்டரில் பார்த்துவிட்டு எனது கருத்தை அவரிடம் தொலைபேசியில் கூறிவிட்டேன்.

மிக நேர்மையான முறையில் அதனை உள்வாங்கிக் கொண்டார். கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டார். பதில் விளக்கமளித்தார். எனது சந்தேகங்களுக்கான தீர்வாக “இன்னொரு முறை அந்தப் படத்தை நீங்கள் பார்த்தால்தான் புரியும்” என்றார்.

அத்தோடு அந்தப் பேச்சு முடிவடைந்தது. திங்கள்கிழமையன்று அவரிடத்தில் இணை இயக்குநராக இருப்பவரும், எனது இன்னொரு நண்பருமான திரு.பிரபாகரன் அவர்கள் போன் செய்து “வலைப்பதிவர்களுக்கு தனியாக ஒரு ஷோ நடத்தலாம் என்று பழனி ஸார் விரும்புகிறார். ஏற்பாடு செய்யலாமா..?” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் அப்போதே எனது சந்தேகத்தினை அவரிடமும் தெளிவுபடுத்திவிட்டேன்.

“பிரிவியூவில் பார்ப்பதினால் வலைப்பதிவர்கள் திரைப்படத்திற்குச் சாதகமாக எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். வலையுலகில் பலரும் இப்போது அறிமுக எழுத்தாளர்கள் நிலையில்தான் உள்ளார்கள். இதற்கெல்லாம் அசரவும் மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் முதல் வரியிலேயே மொக்கை என்றுதான் ஆரம்பிப்பார்கள்...” என்று நமது வலையுலகக் கலாச்சாரத்தை அவர் மூலமாக பழனியப்பனிடம் தெரிவிக்கச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை போனில் அழைத்த பிரபாகரன், “அது ஒரு விஷயமே இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பல தரப்பட்ட விமர்சனங்களை இயக்குநர் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியாததல்ல.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வளவுதான்..” என்றார். இதன் பின்புதான் நானும் இதற்குச் சம்மதித்தேன்.

நேற்றைய தினம் முழுவதும் பழனியப்பன் மந்திரப்புன்னகை படத்தின் பிரமோஷனுக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிக்கான படப்பதிவு ஏவி.எம். ஸ்டூடியோவில் நடப்பதால், நமது திரையிடலையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டால் அவரும் வந்து கலந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஏவி.எம். பிரிவியூ தியேட்டர் ஏற்பாடானது.

எப்படியும் இயக்குநர் பழனியப்பனே நேரில் வந்தால்தான் நமக்குத் திருப்தியாக இருக்கும் என்பதால் நேற்று காலை கரு.பழனியப்பனுக்கே போன் செய்து விஷயத்தைச் சொல்லி அவருடைய வருகையை உறுதிப்படுத்திக் கொண்டேன்..!

பல்வேறு போன் கால்கள். எனது போன் இத்தனை பிஸியாக இருந்தது நேற்று ஒரு நாளில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நேற்றுபோல் என்றும் இருந்ததில்லை..! வருபவர்களெல்லாம் வாருங்கள்.. குடும்பத்தை அழைத்து வாருங்கள் என்று சொல்லியும் மூன்று பேர் மட்டுமே மனைவியருடன் வந்திருந்தார்கள். பலரும் அலுவலகத்தில் இருந்து அப்படியே நேராக வந்ததால் வீட்டுக்குச் சென்று அழைத்து வர முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருந்திருந்தால் நிச்சயம் குடும்பம் சகிதமாக சந்திப்புகள் நடந்திருக்கும். வந்தவரையில் மகிழ்ச்சிதான்..!

நேற்று மாலை ஸ்டூடியோ 5 தியேட்டரில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் மந்திரப்புன்னகை படத்தைப் பார்க்க வந்திருந்ததால், பழனியப்பன் கொஞ்சம் திண்டாடித்தான் போனார். இதற்கிடையில் பிரசாத் கலர் லேப்பிலும் வேறொரு ஷோ ஓடியது.

ஆக.. இந்த மூன்று இடங்களுக்கும் மாறி, மாறி அவர் செல்ல வேண்டியிருந்ததால் பதிவர்களிடம் நீண்ட நேரம் பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகக் கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டார். அடுத்த முறை விரிவான முறையில் நன்கு திட்டமிட்டு ஒரு சந்திப்பை மேற்கொள்வோம் என்றேன்.

சமீபகாலமாக வலைப்பதிவர்களாகிய நாம் அனைவரும் சந்திக்கக் கூடிய சூழல் இல்லாத வருத்தம் நமக்குள் இருந்த நிலையில் திரையிடல் முடிந்தும் அரைமணி நேரமாக பேசியிருந்துவிட்டுத்தான் பல பதிவர்கள் கிளம்பினார்கள். இது மாதிரியான சந்திப்பு நிகழ்வுகளை இனி மாதத்திற்கு ஒரு நாள் வைக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.. இதற்கான வாய்ப்புகளைத்தான் நாம் இனிமேல் தேட வேண்டும்.

நாம் நேற்று பார்த்த திரையிடல் பற்றி தமிழ்சினிமா.காம்-ல்  கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்க­ளுக்கு வரவேற்பு
என்றும், தேட்ஸ்தமிழ்.காம் இணையத்தளத்தில்  கரு.பழனியப்பனின் 'பிளாக்கர்ஸ் ஷோ!' என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தேட்ஸ்தமிழ்.காம்-ல்   வெளியான செய்தியில் இருக்கும் கோபம், கிண்டலை நாம் பொருட்படுத்த வேண்டாம்..! அவர்களுடைய செய்தியை நாம் பல இடங்களில் கொண்டு போவதும், அதில் அவர்களுடைய பெயர் மறைக்கப்படுவதினாலும் ஏற்படும் இயல்பான கோபம்தான் அவர்களுடையது என்று நினைக்கிறேன்..!

ஒரு பக்கம் அவர்களது கோபம் நியாயமானது என்றாலும், சில வார்த்தைகள் தேவையில்லாதது. மீடியாக்களின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இணையம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காம் இல்லை. நாம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காமுக்கும் அதிகப்படியான விளம்பரங்கள் கிடைக்காது. ஓசியில் நாம் கொடுக்கும் விளம்பரங்களைக் கணக்கில் எடுக்காமல் புரிந்து கொள்ளாத சூழலில் நம்மைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. விட்டுவிடுவோம்..!

மந்திரப்புன்னகையின் விமர்சனங்களை இயக்குநர் கரு.பழனியப்பன் பெரிதும் வரவேற்கிறார். படிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். எழுத விரும்புவர்கள் அவர்களது நியாயமான விமர்சனத்தை முன் வைக்கலாம். திரையிடல் நிகழ்ச்சி பற்றி நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவர் சார்பில் மீண்டும் ஒரு முறை உறுதிமொழியை உங்களுக்கு வழங்குகிறேன்.

மேலும் நேற்று நண்பர் சுரேஷ்கண்ணன் கூகிள் பஸ்ஸில் இது போன்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அந்த பஸ்ஸில் நானும் இது பற்றிய உண்மையை எழுதியிருந்தேன். இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தகைய விளக்கம்..!

விமர்சனங்களை வரவேற்கும்விதத்தில் நம்மையும் மதித்து அன்போடு வரவேற்று கருத்துக்களைப் பகிர வைத்த இயக்குநர் கரு.பழனியப்பனுக்கும், எல்லா உதவிகளையும் செய்த இணை இயக்குனர் திரு.பிரபாகரனுக்கும், அவருடைய உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் வந்திருந்த வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

மிகக் குறுகிய காலமே இருந்தாலும் அழைப்பை ஏற்று பல சிரமத்திற்கிடையிலும் நேரில் வந்து கெளரவப்படுத்திய சகோதர வலைப்பதிவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றி..!

சென்னைவாழ் பதிவர்களுக்கு ஒரு அவசர அழைப்பு..!

22-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வலைப்பதிவுகள் என்பது நம்மையும் தாண்டி பொது ஜனங்களின் விருப்பதற்கு உள்ளாகியிருக்கிறது என்பது உண்மைதான். இப்போதெல்லாம் இணையத்தளம் வசதியுள்ளவர்கள் ஒரு திரைப்படத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு நமது வலைத்தளங்களைத்தான் தேடி வருகிறார்கள்.

அந்த வரிசையில் நமது வலைத்தளங்களின் சினிமா சம்பந்தமான கட்டுரைகள், சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களாலும் வரவேற்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன.


இதோ... அது போன்றதொரு வரவேற்பையும், மரியாதையையும் 'மந்திரப் புன்னகை' திரைப்படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன் நமக்குத் தருவதற்காக முன் வந்திருக்கிறார்.

வலைத்தளங்களில் எழுதும் நமது பதிவர்கள் மற்றும், அவர்தம் குடும்பத்தினருக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்புக் காட்சியை  நாளை(23-11-2010) மாலை 6 மணிக்கு சென்னை, வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் திரையிட ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இந்தத் திரையிடலில் கலந்து படத்தினை பார்க்க விரும்பும் வலைப்பதிவர்கள் இப்பதிவைப் படித்த உடனேயே பின்னூட்டத்திலோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

பதிவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன்தான் வர வேண்டும் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் விரும்புகிறார். ஆகவே குடும்பத்தினர் எத்தனை பேரை வேண்டுமானாலும் பதிவர்கள் தாராளமாக அழைத்து வரலாம்.. 

எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து சீட் அரேஞ்ச்மெண்ட் செய்ய வேண்டியிருப்பதால்தான் பின்னூட்டம் அல்லது போன் தகவல் மிக முக்கியமானதாக தேவைப்படுகிறது.

நாள் : நாளை அதாவது 23-11-2010 செவ்வாய்கிழமை

இடம் : ஏவி.எம். ஸ்டூடியோ, பிரிவியூ தியேட்டர் - வடபழனி

நேரம் : மாலை 6 மணி

சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் வந்தால் பதிவர் சந்திப்பு நடத்தியது போலாகவும் இருக்கும் என்பதால் பதிவர்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன்..!

நன்றி..!

நீரா ராடியாவின் ஒலி நாடாக்கள் கூறும் உண்மையென்ன..?

22-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி விசாரிக்கப் போக.. அது இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக நினைக்குமளவுக்குப் போகும் என்று மன்மோகன்சிங்கும் அவருடைய அல்லக்கைகளுமே நினைத்திருக்க மாட்டார்கள்.

நீரா ராடியா என்ற அந்த இந்தியாவின் தலைசிறந்த புரோக்கரின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பட்டியலிட்டால் பக்கம் போதாது போலிருக்கிறது..


அம்மணியின் திருவாய் ஜம்முதாவி எக்ஸ்பிரஸை போல நிறுத்தாமல் பேசியிருக்கிறது..! இந்தியாவின் அடுத்த அரசை அமர வைக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால்தான், இந்த அம்மணியின் ரேடியோ ஒலிபரப்பு நான் ஸ்டாப்பாக இருந்திருக்கிறது.

முதலில் இந்த டேப்புகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது..? யார் டேப்புகளை பதிவு செய்தது..? எப்படி இந்த டேப்புகள் வெளியில் லீக் ஆனது என்பதையெல்லாம் விசாரித்தால் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்திய பின்பே சிபிஐ இந்த வழக்கை தானே எடுத்து விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. அப்போது அமைச்சராகவே இருந்தாலும் இவரைத் தொடர வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டு ராசாவின் பேச்சை டேப் செய்யும் அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் சிபிஐக்கு கிடைத்திருக்கிறது.


ஸோ.. தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் முக்கியப் புள்ளியாகத் திகழும் கேபினட் அமைச்சரான ராசாவின் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்படுகின்ற சூழலில்தான் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த 15-வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு கடந்தாண்டு மே 13 அன்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 16 அன்று நடந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்த செய்தியும் அன்றைக்கே கிடைத்தது.

இந்தக் களேபரத்துக்கிடையில் இலங்கையில் இனவாத சிங்களப் பேரரசின் கொடும் தாக்குதலினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழ் ஈழ மக்கள் செத்து மடிந்தார்கள். மே 18-ம் தேதியன்று பிரபாகரன் இறந்ததாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுவிட்டது. அன்றோடு தமிழ் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போரும் முடிவுக்கு வந்தது.

மே 19-ம் தேதியன்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி ஆட்சி பற்றி விவாதிக்க டெல்லி செல்கிறார். தனது குடும்பத்தினரை எப்பாடுபட்டாவது அமைச்சரவையில் இடம் பெற வைத்தே தீருவது என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு சோனியாவையும், மன்மோகனையும் சந்தித்துப் பேசுகிறார்.

எத்தனை சீட்டுக்கள் என்பதில்கூட காங்கிரஸுக்கு பிரச்சினையில்லை. ஆனால் யார், யாருக்கு என்பதில்தான் அவர்களுக்கு தலைவலி.. அத்தனை சொந்தங்களையும் கொண்டு போய் நிறுத்தி “இவங்க எல்லாருமே என் குடும்பந்தான்.. ஒருத்தருக்கு கொடுத்து, இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா கோச்சுக்குவாங்க. என் மனசு தாங்க முடியாது” என்றெல்லாம் சீன் போட்டு அழுதார் கலைஞர்.

மே 20-ம் தேதியன்று மன்மோகன்சிங் டில்லி அரண்மனைக்குச் சென்று தற்போதைய ராணியிடம் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பித்தார். அங்கேயே அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதினால் மன்மோகன் வீடு திரும்புவதற்குள், மே 22 அன்று அவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மன்மோகன்சிங் விண்ணப்பம் கொடுத்த 20-ம் தேதியில் இருந்து அரியணை ஏறிய 22-ம் தேதிவரையிலுமான காலக்கட்டத்தில் இந்த நீரா ராடியா என்னும் புரோக்கரின், எண்ணற்ற சித்துவேலைகள் மர்ம தேசமான டெல்லி அரசியலில் புகுந்து விளையாடியிருக்கிறது.

நான் சென்ற பதிவுகளில் ஆங்கிலத்தில் போட்டிருந்த அனைத்து உரையாடல்களும் நேற்று தமிழாக்கம் செய்யப்பட்டு பல்வேறு இணையத்தளங்களில் போடப்பட்டிருந்தன. இந்த ஸ்பெக்டரம் ஊழல் பற்றி தொடர்ச்சியாக நான் பல பதிவுகளைப் போட்டிருப்பதால், இந்தத் தமிழாக்கத்தையும் வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்குண்டு.

அதோடு கூடவே மே 20-ம் தேதியில் துவங்கி, நேரத்தை முன் வைத்து நீரா ராடியாவின் பேச்சுக்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இப்போது படித்துப் பார்த்தீர்களேயானால் இந்த பெண் புரோக்கர் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பதையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அரசியல் செய்வதை எவ்வளவு லாவகமாச் செய்யும் திறன் படைத்தவர் என்பதும் புரியும்..! இந்த அம்மணியையும் தாண்டிய ஆண் அரசியல் புரோக்கர் யாரையாவது இந்தியாவில் அடையாளம் காட்டினால் தெரிந்து கொள்வேன். என்னளவில் வேறு யாருமில்லை.

வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல்

20.6.2009 -  மதியம் 12 மணி 09 நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப் பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது, இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா,  எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேச முடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்கு முன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில  பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்து விடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் உள்ளது. எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக் கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக் கூடாது. மன்மோகன்சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும்விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டு  விடுகிறேன்...

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...

கனிமொழியுடன் - மே 21, 2009, காலை 8:41

கனிமொழி : ஹலோ

ராடியா : பிரதமர் காரியம் இன்னும் உறுதிப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான்  இருக்கிறார்கள்.

கனிமொழி : தொலைத் தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் மாற்றங்கள்..?

ராடியா : என்ன?

கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் ஊடகங்களில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.  (‘அவருக்கு’ என்பது தயாநிதி மாறன் என்பது வெளிப்படை)

ராடியா : நீங்கள் விமானத்திலிருந்தபோது அவர் அதை எல்லா ஊடகங்களிலும் வரவழைத்துக் கொண்டிருந்தார்.

கனிமொழி : ஆமாம். எனக்கு அது தெரியும்.

ராடியா : ஆனால் கனி, பிரதமர் இப்போது ராஜாவுடனும் பாலுவுடனும் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் என் மதிப்பிற்குரிய சகாக்கள் என அறிக்கை வெளியிட்டிருக்காரே.

கனிமொழி : அவர் அறிக்கை விடுவார். ஆனால் இது பற்றி அப்பாவிடம் பேச வருபவர்கள் மாற்றிப் பேசக் கூடாது. ஒருவர் வெளியே பேசுவதற்கும் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதும் வேறுபடும். அரசியலில் உள்ள நம்மனைவருக்குமே அது தெரியும்.

ராடியா : கனி, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு தகவல். அவர்கள் சொல்வது: ‘திமுகவின் பிரச்சினைகள் அகப் பிரச்சினைகள். குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைகள். அவர்களுடைய தலைவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். திமுக 5 அமைச்சரவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது’

கனிமொழி : ஆமாம்.

ராடியா : ‘அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லிவிட்டோம்’.

கனிமொழி : மூன்றும் நான்கும் (அமைச்சரவைகள்)

ராடியா : ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்பதை உணர்கிறோம். ஆனால் நாங்கள் அவர்களிடம் போக முடியாது. எங்களைப் பொறுத்தவரை, அரைமணிக்கொருமுறை மாறன் குலாம் நபி ஆசாதை அழைத்து என்னென்னவோ கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். எங்களை அழைப்பதில் பலன் இருக்காது என்று அவரிடம் சொல்லி விட்டார்கள்’.

கனிமொழி : அவருடைய கோரிக்கைகள் என்னவாம்?

ராடியா : எங்களுக்கு ஐந்து இடங்கள் தாருங்கள் என்று கேட்கிறார். அல்லது அமைச்சரவையில் சேர மாட்டோம் என்கிறார். இல்லையென்றால் ரயில்வே வேண்டுமாம். அல்லது நிலக்கரி மற்றும் கனிமவளம் வேண்டுமாம். எனவே அவர்கள் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது திமுகவின் அகப் பிரச்சினை. காங்கிரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யார் வேண்டும், வேண்டாம் என்பதைக் கருணா முடிவு செய்யட்டும். அதை அவரிடமே விட்டுவிட்டோம். அவரே முடிவு செய்யட்டும். ஆனால் மாறனைப் போல் பலர் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பர்கா தத் (என்.டி.டி.வி. செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல்

22.5.2009  காலை 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால் - அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித் தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய  மிகப் பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றி விடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அது பற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க. கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது.  தி.மு.க. ஒப்புக் கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக் கொண்டால் மாறனைக் கைவிட வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல்கூட மிகக் குறுகிய நேரமே நடந்தது - இரண்டு நிமிடங்கள் - கனிமொழிதான் மொழி பெயர்த்தார்.

பர்கா: சரி.  அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை(பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர்(கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும்கூட இருந்து கலந்து கொண்டால் என்ன?

நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்து கொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்

22.5.2009 - 9.49 

நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்காதத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு(மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர்.பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: ... ஆனால் தலைவருடன் இது பற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இது பற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... (ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும்போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...

கனிமொழியுடன் ராடியா பேச்சு

22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...

கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.  அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தார்களா இல்லையா..? சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக் கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..  ...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவு செய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி விடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

பர்கா தத்துடன் ராடியா பேச்சு

22.5.2009 காலை 10  மணி 47 நிமிடம் 33 விநாடிகள்

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத் துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத்துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் தரலாம் என்றார். தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?
 
அ.ராசாவுடன் ராடியா பேச்சு
 
22.5.2009  - மதியம் 2 மணி 29 நிமிடம்  - 41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்...

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...  நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசி விட்டேன், ஏற்கெனவே பேசி விட்டேன்...

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற
விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...

நீரா: இல்லை... அது மட்டுமல்ல, அது மட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...

ராசா: ஓ...

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
 
கனிமொழியுடன் ராடியா பேச்சு

22.5.2009  - மதியம் 2 மணி 46 நிமிடம்  - 15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பி விடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை)
(0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று  மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.
கனிமொழியுடன் ராடியா பேச்சு
22.5.2009    - இரவு 8 மணி 04 நிமிடம்  - 19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக் கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன். 

 

கனிமொழியுடன் ராடியா பேச்சு

23.5.2009  காலை 9 மணி 59 நிமிடம்  - 2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர்(மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப் போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்குகூட விருப்பமில்லை.
 
வீர் சங்வியுடன் ராடியா பேச்சு

23.5.2009    - இரவு 10 மணி 26 நிமிடம்  - 42 விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...

வீர்: மாறன்.

நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)  ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: 600 கோடி சரியா?

நீரா: 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ண முடியாது?

நீரா: இல்லையா?
 
அ.ராசாவுடன் ராடியா பேச்சு..!

மே 24, 2009 காலை: 11:05

ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?

ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.

ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?

ராடியா : ஆனால் தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.

ராசா : இல்லை,  இருவருமே நுழையலாம்.

ராடியா : இருவருமா? பாலு(டி.ஆர்)வால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். தலைவருக்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.

ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே . 

ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணர முடிகிறது . . .

நீரா: மாறன் தன்னைப் பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில்தான் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ்கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?  நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம் ..

--------------------------
 
இந்த டேப்புகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. நாங்கள் இப்படி எதையும் பேசவில்லை. சி.பி.ஐ. பொய்யாக இந்த டேப்புகளைத் தயாரித்துள்ளது என்று இந்த டேப்பில் சிக்கியுள்ள அரசியல்வியாதிகள் யாரும் இதுவரையில் முன் வந்து கூறவில்லை.
மாறாக உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டும், பயத்தையும் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து மழுப்பியபடியே நடமாடி வருகிறார்கள். அ.ராசாவோ, கனிமொழியோ இதுவரையில் இது பற்றி எனக்குத் தெரிந்து எதையும் கூறவில்லை. இது போலியானது என்றால் அவர்கள் தாராளமாக இந்நேரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். போயிருக்கலாம்.

ஆனால் சகல செல்வாக்கும் உடைய அவர்கள் மெளனமாக இருப்பதைப் பார்க்கின்றபோது, நிச்சயம் இந்த பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் அனைத்தும் உண்மையானவைகள்தான் என்று 200 சதவிகிதம் நம்ப வேண்டியிருக்கிறது. நானும் நம்புகிறேன். 

இடையில் நீரா ராடியா லண்டனில் இருந்தபடியே இந்த டேப்புகளை இனியும் வெளியிடக் கூடாது என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது தள்ளுபடியானதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஸோ.. இனிமேல் இந்த டேப்புகளை சம்பந்தப்பட்ட நபர்கள்தான் பேசியிருக்கிறார்கள் என்கிற நம்பகத்தோடு மேலும் சில விஷயங்களைப் பற்றி இங்கே பேசுவோம்..!

முதலில் வீர்சிங்வியிடம் என்ன சொல்கிறார் நீராராடியா? மன்மோகன்சிங்கின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அனில் அம்பானிக்குக் கிடைத்த சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை முகேஷ் அம்பானி டிவி நிகழ்ச்சியில் தான் பேசப் போகும் விஷயத்தில் மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அது தொடர்பான கேள்விகளைத்தான் வீர் சிங்வி கேட்க வேண்டும்.. இது முகேஷ் அம்பானிக்காக, நீரா ராடியா செய்யும் லாபி..!

ஆனால் இதில் கேலிக்குள்ளாகும் விஷயம் வீர் சிங்வி நடத்திய அந்த விவாதத்தை முகேஷ் அம்பானி உள்ளிட்ட அறிவுஜீவிகளெல்லாம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலையுடன் விவாதிக்கிறார்கள் என்று அப்பாவி ரசிகர்கள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத்தான்..!

மே 21 காலையில் கனிமொழியுடன் பேசும் ராடியா தி.மு.க. கொடுத்திருக்கும் பட்டியலை காங்கிரஸ் ஏற்க மறுத்தது பற்றித் தெளிவாகச் சொல்கிறார். மூன்று கேபினட், நான்கு இணை அமைச்சர்கள் ஓகே. ஆனால் கேபினட் அமைச்சர்கள் யார், யார் என்ற குழப்பத்தை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் காங்கிரஸ் சொல்லியிருக்கிறது..!

இதில் எங்கே தமிழ்நாட்டின் நலன் இருக்கிறது.. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சினைதானே தெரிகிறது..?

மே 22-ல் பர்கா தத்துடன் பேசும் ராடியா, தி.மு.க. கேட்கும் இலாகாக்களை பட்டியலிடுகிறார். இதில் சாலை போக்குவரத்து, மின்சாரம், நிலக்கரி, சுகாதாரம், ரயில்வே என்று லம்ப்பான மேட்டர்களையே கேட்டிருப்பது தெரிகிறது.. அதிலும் தயாநிதி மாறன் தனக்காக நிலக்கரி, சுரங்கத் துறையைக் கேட்டிருக்கிறார்..


இது மட்டும் கிடைத்திருந்தால், கனிமொழியும், அவரது தாயாரும் இப்போதும் செய்து வரும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தொழிலில் கை வைத்திருக்கலாம். ஒருவேளை கனிமொழிக்கு இப்படி தங்களது தொழிலில் தலையிட்ட நினைத்ததால்தான் மாறன்மேல் கோபம் வந்ததோ..?

பர்காதத் தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் மறந்து இந்தக் கேடு கெட்ட ஆட்சியாளர்களின் பதவியேற்புக்கு உதவிகளைச் செய்துள்ளார். அதுவும் எப்படி..?

மாறன், கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு சகிதமாக வந்ததால் கலைஞரிடம் தனியாக நாலு வார்த்தைகூட பேச முடியவில்லை என்பது பிரதமரின் அங்கலாய்ப்பாம்.. டி.ஆர்.பாலு வேண்டாம் என்பது பிரதமரின் அவா. ஆனால் இதனை அவரால் அப்போது வெளிப்படுத்த முடியவில்லை என்பது பர்கா தத்தின் மில்லியன் டாலர் தகவல்..!

எப்படி பேசுவார்..? டி.ஆர்.பாலு வேண்டாம் என்றோ,. ராசா வேண்டாம் என்றோ அவர்களை வைத்துக் கொண்டே பேச முடியுமா..? அதுதான் தயக்கம். இந்தத் தயக்கத்திற்காக கனிமொழியின் வேண்டுகோளை ஏற்று ராடியா பர்கா தத்திடம் பேச, பர்கா தத் மீண்டும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி நேரம் வாங்கித் தருகிறேன். அல்லது குலாம் நபி ஆசாத்தைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்கிறார்.

ம்.. இந்தம்மா 24 மணி நேரமும் டிவிலதாம்பா தெரிஞ்சாங்க.. இவங்களுக்கு எப்படி இந்த புரோக்கர் தொழிலுக்கெல்லாம் நேரம் கிடைச்சதோ தெரியலையே..?

அடுத்த போன் ராசாவுக்குப் பறக்கிறது.. “டி.ஆர்.பாலுதான் பிரச்சினை. அதனால்தான் மினிஸ்ட்ரி பெர்த் இன்னமும் பைனல் ஆகாமல் இழுத்தடிக்கிறது..” என்கிறார் ராடியா. பதைபதைக்கிறார் ராசா. “உடனே இதை தலைவரிடம் சொல்ல வேண்டும். நாங்க சொல்ல முடியாது. நீங்களே இதை எப்படியாவது தலைவர் காதுக்கு போன்லயாவது சொல்லிருங்களேன்.. இல்லாட்டி ரகசியக் கடுதாசியையாவது கொண்டுபோய் கொடுங்களேன்” என்கிறார் ராசா. அப்படியேகூட, “அ.ராசாகூட எங்களுக்குப் பிரச்சினையில்லை. டி.ஆர்.பாலுகூடத்தான் பிரச்சினைன்னு சொல்லச் சொல்லுங்க..” என்று கூச்சநாச்சமில்லாமல் பதறுகிறார்.

உஷ்.. அப்பா.. இந்த மொள்ளமாரி, முடிச்சவிக்கியெல்லாம் ஏதோ கூவம் ஆத்துக் கரையோரமெல்லாம் இல்லப்பா. நிசமா அ.ராசா மாதிரியான ஆளுங்கதாம்பா அவங்க..! பாவம் டி.ஆர்.பாலு..! தனக்கு லைன் கிளியர் ஆக வேண்டும் என்பதற்காக ராசா எவ்ளோ துடிக்கிறார் பாருங்க..!

அடுத்த போன் கனிமொழிக்கு.. இடையில் அகமது பட்டேலிடம் ராடியா போனில் பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு அகமது படேலிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல் சாலை போக்குவரத்து கட்டுமானத் துறை பாலுவுக்கோ, மாறனுக்கோ கிடையாது என்பது..

இதைத்தான் கனியிடம் சொல்கிறார் ராடியா. கனி மறுக்கிறார். “யார் சொன்னது இது? என்னிடமோ அப்பாவிடமோ யாரும் இதைச் சொல்லவில்லை..” என்று மறுக்கிறார். ஆனால் “யாரோ சென்றிருக்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள்..” என்கிறார் ராடியா. ஸோ.. தாத்தாவை யார் கண்காணிப்பில் வைத்திருப்பது என்பதிலேயே அங்கே போட்டி நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த டேப்பிலேயே நமக்குத் தெரிய வந்துள்ள இன்னொரு விஷயம்.. தாத்தாவும் காது கேளாதோர் சங்கத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார் என்ற சோகச் செய்திதான் அது. வெல்கம் தாத்தா..!

அப்போது டெல்லியில் தங்கியிருந்த ராஜாத்தி அம்மாவை ராடியா நேரில் சென்று சந்திக்கிறார். அங்கேயும் ஏதோ சதித் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள் என்பதை இவர்களின் அடுத்தடுத்த பேச்சுக்களில் தெரிகிறது.

இந்த இடத்தில் ஒரு தகவல். ராஜாத்தியம்மாளுக்கு நீரா ராடியாவை அறிமுகப்படுத்தி வைத்தது பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமின் மனைவிதான் என்கிறார்கள். இவர்தான் இப்போதைக்கு ராஜாத்தியம்மாளின் பண விவகாரத்தை டீல் செய்து, கூடவே சுற்றுக்கும் விட்டு வருகிறார் என்பது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்தான்..!


கனியிடம் பேசி முடித்துவிட்டு உடனேயே பர்காவுக்கு போன் அடித்து சாலை போக்குவரத்துத் துறை மாறனுக்கோ, பாலுவுக்கோ இல்லை என்று பிரதமர் மறுத்துவிட்டதைச் சொல்கிறார் ராடியா. கூடவே காங்கிரஸ் தரப்பில் இருந்து தி.மு.க.வுடன் யார் பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கனியிடம் பேசியதையே சொல்கிறார் ராடியா..

அன்றைய மதிய நேரத்தில் ராடியாவிடம் இருந்து அ.ராசாவுக்கு போன் பறக்கிறது. அழகிரியைப் பற்றி அவருடைய செல்ல மருமகன் தயாநிதி மாறன் டில்லியில் என்னென்ன வத்தி வைப்புகளை பற்ற வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ராடியா சொல்கிறார். அஞ்சாங்கிளாஸு தாண்டாதவரு.. இங்கிலீஷ் தெரியாது.. அவர் ஒரு கிரிமினல் அப்படீ, இப்படீன்னு தயாநிதி மாறன் செஞ்சோற்றுக் கடனை அடைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இங்கே ராசாவும் அழகிரியிடம் மாறன் பற்றி தான் ஏற்கெனவே பேசிவிட்டதாகச் சொல்கிறார். ஆக, ராடியாவிடமிருந்து நியூஸை வாங்கி அழகிரியிடம் போட்டுக் கொடுத்துவிட்டு தனக்கான ஆதரவை அழகிரியிடமும் பெற்றுக் கொண்டிருக்கிறார் ராசா என்றே நம்ப முடிகிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் கனிமொழிக்கு போன்.. கனி கேட்கின்ற முதல் கேள்வியே ங்கொய்யால வகையானது.. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தயாநிதி மாறன் போகிறாரா இல்லையா?” என்று கேட்கிறார் கனி. கலைஞர் டெல்லியில் இருந்தபோதெல்லாம் கனிமொழி, ராசா, தயாநிதி, பாலு நால்வரும்தான் கூடவே போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரே கட்சிதானே.. ஒரே பேமிலிதானே..? பேசிக்கவே மாட்டாங்களா.. குடும்பப் பிரச்சினைல சண்டைன்னா அதை குடும்பத்துக்குள்ள வைச்சுக்க வேணாமாய்யா..! இப்படியா பப்ளிக்காக்குறது..?


அவங்களுக்காக.. அவங்க தலைமுறைக்காக ஒரு மனுஷன் நடக்க முடியாத காலத்துலேயும் தவழ்ந்தாவது போய் பிச்சை கேட்டு அழுதுகிட்டிருக்காரு.. அவரைப் பார்த்தா பாவமா தெரியலையா இவங்களுக்கு..?

வெறுப்பாகப் பேசுகிறார் கனிமொழி. “அவர் போறாரா இல்லையான்னு தெரியலை. ஆனா போயிட்டு வந்து அப்பாகிட்ட  அகமது படேல் கூப்பி்டடாரு போனேன்னு சொல்வாரு..” என்கிறார் கனி. ஆக மொத்தம், தயாநிதியின் வளர்ச்சி சிஐடி காலனி வீட்டுக்கு என்றைக்குமே உறுத்தலாகத்தான் உள்ளது..

22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மன்மோகன்சிங் தனது 19 சகாக்களுடன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுவிட்டார். அன்றைய இரவு மீண்டும் கனிமொழியிடம் பேசுகிறார் ராடியா. கனிமொழி இப்போது இன்னொரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அது ராசா மீண்டும் மந்திரியாக வேண்டும் என்பதில். “இனிமேல் அப்பாவுடன் யார் பேச வருவதானாலும் அவர்கள் இவரைப்(அ.ராசா) பற்றி எதிராகப் பேசக் கூடாது.” என்று ராடியாவிடம் உறுதியாகக் கூறுகிறார் கனிமொழி.

ஆக.. தயாநிதி மாறனுக்கு எதிராக அழகிரியை டெல்லியில் வளர்க்க முடியாது.. ஆனால் ஆ.ராசாவை வளர்க்கலாம் என்று ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் நன்கு தி்ட்டமிட்டுத்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..! இதற்கிடையில் மே 22-ம் தேதியே  கலைஞர் சென்னை திரும்பி விட்டார்.  

23-ம் தேதி காலையில் பத்து மணிக்கு மீண்டும் கனிமொழிக்கு போன்.. இம்முறை ராடியா தெளிவாகச் சொல்கிறார் அழகிரி பற்றியும், ராசா பற்றியும் காங்கிரஸ் மேலிடத்தில் தான் தெளிவாக எடுத்துரைத்துவிட்டதாக..!

அழகிரியின் இந்தி, ஆங்கிலம் தெரியாத நிலையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக அவருக்குக் கீழ் இரண்டு மொழிகளும் தெரிந்த நபரை துணை அமைச்சராகப் போட்டுச் சமாளிக்கச் சொல்லுங்கள் என்று தனது பெரிய அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் கனிமொழி. கூடவே “அந்த ஆளு” என்று தயாநிதி மாறனை விளித்து அவருக்குத் தொலைத் தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்பதையும் மீண்டும் அறிவுறுத்துகிறார். மாறனுக்குப் பதவி கிடைப்பது தி.மு.க.விலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் ஒரு பிட்டைப் போடுகிறார் கனி.!

இந்த டேப்பில் பல தொடர்ச்சியானவைகள் இல்லை. நன்கு திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதே நாள் இரவில் வீர்சிங்வியைத் தொடர்பு கொள்கிறார் ராடியா. தயாநிதி மாறனை எடுத்துக் கொள்ளும்படி பிரதமருக்கே நிர்ப்பந்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ராடியா. இப்படி நிர்ப்பந்தம் கொடுப்பது ஸ்டாலினும், அவரது அக்காள் செல்வியும் என்கிறார் ராடியா. இதென்னாங்கடா புது குழப்பம்னு யோசிச்சா.. நமக்குத்தான் தலையே சுத்துது..!

ஸ்டாலினுக்கு அழகிரியின் வளர்ச்சி நிச்சயம் ஆபத்தானதுதான். ஆகவே அவர் பதவியில் இல்லாமல் இருந்தால்தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறார். செல்விக்கோ தனது மகன் போன்ற தயாநிதி மாறனை விட்டுக்கொடு்க்க முடியாத நிலைமை. அந்த மகன் மட்டும் இல்லாவிடில் தான் இன்னமும் ராயப்பேட்டையில் துணிக்கடையில் பில்தான் போட்டுக் கொண்டிருந்திருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் பாசப்பிணைப்பில் செல்வியும், ராஜதந்திரவகையில் ஸ்டாலினும் தயாநிதி மாறனுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.. ம்.. இந்த மாறன்களுக்கு மச்சம் எங்கிட்டுத்தான் இருக்குன்னு தெரியலை சாமிகளா..!

ஆனால் ராடியா சொல்லியிருப்பதுபோல் 600 கோடி ரூபாயை தயாளு அம்மாளுக்கு மாறன்கள் கொடுத்திருந்தால், அது முன்னதாகவே சன் டிவியில் பங்கு பிரிக்கும்போது நடந்தததன் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போது தயாளு அம்மாவுக்கு மிகக் குறைவான தொகையைத்தான் பங்காக கொடுத்தார்கள் என்று ஏக கோபத்தில் இருந்தார்கள் கோபாலபுரத்து குடும்பத்தினர்.. ஓகே.. எப்படியோ வந்து சேர்ந்திருந்தால் சரிதான்..!

இதற்கிடையில் 23-ம் தேதி இரவு சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்தினர்களுக்குள் நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் பாலுவை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு அழகிரி தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கலைஞரிடம் நேருக்கு நேராகக் கேட்டு உறுதிமொழி வாங்கிவிட்டுச் சென்றார்.

வாசலில் நின்று கொண்டிருந்த பாலுவிடம் “ஸாரி பாலு..” என்று ஒரு வார்த்தையில் பாலுவின் பதவி கனவில் ஒரு டன் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு சிட்டாகப் பறந்தார் அழகிரி.. இதுவெல்லாம் தெரிந்துதான் ராசா மறுநாள் காலை ராடியாவிடம் பேசும்போது உறுதியாகச் சொல்கிறார் கேபினட் பெர்த்தில் அழகிரி உறுதியென்று....!

அந்தச் சமயத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ஏன் இவ்ளோ லேட்டு என்று பத்திரிகைகள் மாய்ந்து, மாய்ந்து கட்டுரைகள் எழுதித் தள்ளியபோது தி.மு.க.வால்தான் தாமதம் என்ற செய்தி காங்கிரஸால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அப்படியாவது தி.மு.க. சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரட்டுமே என்றுதான்..!

இந்த இடைவெளியில் பாலுவுடனும், அ.ராசாவுடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கைகூட வெளியிட்டார். நம்மால் தாமதம் என்று அவர்கள் சொல்லக் கூடாதே என்பதால்தான்..!

அ.ராசாவின் பெர்த் 23-ம் தேதி இரவில் உறுதியாகிவிட்டதாக ராடியாவும் சொல்கிறார். அழகிரியைப் பற்றி மாறன்களின் பற்ற வைப்புகள் அவருக்கே தெரியும் என்பதை ராசா மீண்டும் இங்கே தெளிவாக்குகிறார்.

ராடியா என்னும் அரசியலில் இல்லாத வெறும் புரோக்கர் பெண், இத்தனை அல்லல்பட்டு ஒருவரை மத்திய அமைச்சரவையிலேயே சேர்க்க முடிகிறது என்றால் இவரது செல்வாக்கு என்ன என்பதையும், எதற்காக என்பதையும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறையப் பெற வேண்டியிருக்கிறது.” என்று ராடியா ராசாவிடம் சொல்வதைப் பார்க்கும்போது இதுவெல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் நடந்தேறி உள்ளது என்று சந்தேகத்திடமில்லாமல் நான் நம்புகிறேன்..!

கூடவே அமைச்சருக்கு அனைத்து வகையிலும் உறுதியாக இருப்பதைப் போல ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டலிடம் ராசா சார்பில் சமாதானம் பேசியிருப்பதையும் சொல்கிறார் ராடியா. இதற்கு ராசா சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.. “இன்னும் அஞ்சு வருஷம்கூட என்கூடத்தான் அவர் வேலை பார்த்தாகணும். இதையும் அவர்கிட்ட சொல்லிருங்க” என்கிறார் ராசா.. அசத்தல் சினிமா டயலாக்..! செத்தான்டா வில்லன்..!

எப்படியோ இந்தத் திருடர்கள் இத்தனை உள்ளடி வேலைகளையும் செய்த பின்பு மே 28-ம் தேதியன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..!

இதன் பின்பும் நிச்சயம் சி.பி.ஐ. போன் பேச்சுக்களை பதிவு செய்திருக்கும்.. அதனால்தான் இன்றைக்குக்கூட ஆடிட்டர் ஜெனரலின் குற்றச்சாட்டுக்களை ஒரு ஆதாரமாக தான் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்களிடம் இப்போது இருக்கும் ஆதாரங்களே போதுமானது என்றும் சிபிஐ கூறியிருக்கிறது.

ஆனால் இந்த டேப்புகளை கோர்ட்டில் தாக்கல் செய்யும் சாக்கில் யார் இதனை வெளியில் விட்டது என்பதை விசாரிக்கவே வேறு ஒரு சி.பி.ஐ. வர வேண்டும் போல் தோன்றுகிறது.

இது தி.மு.க.வுக்கும் தெரியாமலில்லை. அவர்களே இது போன்ற சித்து வேலைகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலேயே டெலிபோனில் ஒட்டுக் கேட்பது எப்படி என்பதை செய்து காட்டியவர்கள் தி.மு.க.வினர்தான். அவர்களுக்கே ஆப்பு வைப்பது போல ஒரு பக்கம் டேப்புகள் லீக். இன்னொரு பக்கம் கூட்டணி உறுதி.. பதவி விலக நிர்ப்பநதம்.. கோர்ட்டில் மனு தாக்கல்.. ஊழலே நடக்கவில்லை என்று அமைச்சரவையின் சார்பில் மனு தாக்கல். ஆனால் அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஊழல் நடந்திருக்கிறது என்று மனு தாக்கல் என்று நாடே கலவர பூமியாக இருக்கிறது..

ம்.. ஒண்ணும் புரியலை.. இதுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் மன்மோகன்சிங் என்னும் பிரதமர் இருக்கிறார்.. இவர் எதுக்காக இந்தப் பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்குக் கீழுள்ள ஒரு துறை ஊழல் நடக்கவில்லை என்கிறது. இன்னொரு துறையோ நடந்துள்ளது என்கிறது.. இந்தச் சூழலில் குற்றவாளிகள் நிச்சயம் தப்ப முடியாது என்று வீர ஆவேசம் காட்டுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நாள் தி.மு.க.வுடனான தங்களது கூட்டணி பலமானதாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்கிறார்..!

ஆக மொத்தம்.. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுவுற மாதிரி அழுவு என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது காங்கிரஸ்.. தி.மு.க.வும் வேறு வழியில்லாமல் இதனை அப்படியே பாலோ செய்து கிளிசரின் போடாமலேயே பூணூல், பார்ப்பு, பார்ப்பான், தலித், சூத்திரன், மனு தர்மம் என்று புளுத்துப் போன புழுக்கைகளை கை நிறைய அள்ளி தன் மேலேயே வாரி இறைத்துக் கொள்கிறது..!

இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!

ஜெய்ஹிந்த்..!