மெளனகுரு – சினிமா விமர்சனம்..!


31-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இப்படியொரு படம்.. அதுவும் வருடக் கடைசியில் வருமென்று எதிர்பார்க்கவில்லைதான்..! ஆனால் தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்தியிருக்கும் திரைப்படம்..! கதை இல்லை.. கதை இல்லை என்பவர்களின் முகத்தில் அரை டன் கரியைப் பூசியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார். கதைகளை நமக்குள் இருந்தே எடுக்கலாம். அதைத் தேடாமலேயே புலம்புவதில் அர்த்தமில்லை என்பதையும் புதுமுக இயக்குநர்கள் இப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை என்ன பாடுபடுத்தலாம் என்பதுதான் கதை. லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் ஒரு போலீஸ் உயர் அதிகாரியின் அலட்சியமான விளையாட்டால் பாதிக்கப்படுகிறார் அருள்நிதி. தவறு மேல் தவறு செய்தபடியே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அந்த துணை கமிஷனரின் லீலைகளால் தனது வாழ்க்கையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அருள்நிதியால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் இறுதிக் கதை..!

விதியின் விளையாட்டு என்று தலைப்பு வைத்திருந்தாலும் அது சரியாகத்தான் இருந்திருக்கும். மெளனகுரு என்று அருள்நிதியின் தனிப்பட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சையே தலைப்பாக்கியிருக்கிறார்கள். மெளனமாக இருப்பது. பேச ஆரம்பித்தால் வெடுக்கென்று கொட்டுவது.. இடம் பார்த்து பேசத் தெரியாதது.. வெளியுலகம் அறியாமல் வாழ்க்கையோட்டத்தில் கலந்திருப்பது என்று தற்போதைய இளைய சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ஒருவனாக அருள்நிதி வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!

சில இடங்களில் அவருடைய அதீத மெளனம் நமக்குள் கோபத்தைக் கிளறுகிறது. ஆனால் அங்கேதான் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். இப்படியொரு குணாதிசயம் கொண்டவருக்கான முதல் எதிரி உடன் படிக்கும் ஒரு மாணவன்.. இன்னொரு எதிரியாக கல்லூரி முதல்வரின் மகன்.. இந்த விதி விளையாட்டு கடைசியாக அருள்நிதியிடமே போய் நிற்க.. அவர் இப்போது காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் ஒரு குற்றவாளி.. இதையும் யாரும், யாரையும் குறை சொல்ல முடியாத அளவுக்கான வாழ்க்கைப் பாடங்களை, இயக்குநர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக் கட்டுகளை போல் செதுக்கியிருக்கிறார் திரைக்கதையில்..!

அம்மாவுக்கு மூத்த மகனுடனும் இருக்க வேண்டும். பேரனுடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை. அருளுக்கு அம்மாவுடனும் இருக்க வேண்டும். வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்ற ஆசை..! போலீஸ்காரர்களுக்கு எப்படியாவது இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசை. மர்ம மரணத்தை எப்படியாவது துப்புத் துலக்கிவிட வேண்டும் என்று கர்ப்பவதியான பெண் எஸ்.ஐ.யின் ஆசை..! சதுரங்க ஆட்டம்போல அனைவரும் ஆடுகின்ற இந்த ஆட்டத்தில் ஒரு மயிலிறகாய் அருள்நிதியின் காதல் எபிசோட்..! 

ஒரு ரூபாய் காயின் கிடைக்காமல் கடைக்காரரிடம் மல்லுக் கட்டும்போதே அருள்நிதியின் கேரக்டர் புரிந்தது.. தன்னை தாக்கிய போலீஸ்காரரை அடித்துவிட்டு அவரது குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனில் போய் நிற்பது, அண்ணன் அழைத்திருக்கிறான் என்றவுடன் அவன் குழந்தைக்கு பீ துடைக்கக் கூப்பிட்டிருக்கான் என்று வெடுக்கென்று கடுப்படிப்பது, அண்ணனின் வீட்டில் தான் அழையா விருந்தாளி என்பதை புரிந்து கொண்டு கிளம்புவது.. பஸ் மறியலில் தனியாளாக தரையில் அமர்ந்திருப்பது, வந்திருப்பது போலீஸ் என்று தெரியாமல் தெனாவெட்டாக “யாருங்க நீங்க..?” என்று கேட்பது.. மனநல மருத்துவமனையில் தான் யார் என்று சொல்ல முடியாமல் தவிப்பது.. தப்பித்து வந்து தனது குடும்பத்தினருக்கு புரிய வைக்க முயல்வது.. இறுதியில் "இப்ப நான் போலாமாங்க..?" என்று உமா ரியாஸிடம் கேட்பதாக.. அத்தனையிலும் மெளனகுருவாகவே காட்சியளிக்கிறார் அருள்.

அருள்நிதி அதிகாரத்தை எதிர்த்து போராடுவது, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும். தனது குடும்பத்தினர் தன்னை பைத்தியம் என்று சொல்லி ஒதுக்குவதைத் தடுக்கவும், தனது கல்லூரியில் தான் மீண்டும் படிக்க விரும்பவுமே போலீஸ் அதிகாரிகளுடன் கடைசிவரையில் அவர் மல்லுக் கட்டுகிறார். செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்கிறபோதுதான் செய்துவிட்டு அனுபவிக்கிறேனே என்பதாக அவர் எடுக்கும் முடிவுக்கு ஒரு சாதாரண சாமான்யனின் எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

போலீஸ் எஸ்.ஐ.யாக வரும் உமா ரியாஸின் பாத்திரப் படைப்புதான் படத்திற்கு மிகப் பெரும் பலம். அவருடைய அடுத்தடுத்த விசாரணைகளுக்கு இடையிலேயே அவருடைய கர்ப்பவதி கோலத்தையும் தொடர்ச்சியாக காட்டியிருக்க.. கோபம் முழுவதும் அந்த 3 போலீஸார் மீதே அதீதமாக எழுகிறது. இயக்குநர் எதை சாதிக்க நினைத்தாரோ, அதைச் செய்து காட்டிவிட்டார்..! 

காவல்துறையின் பச்சை நாடா விதிமுறைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எஸ்.ஐ.யை இடம் மாற்றுவது மிக எளிதானதுதான். ஆனால் விசாரணையை முடக்கினால் பின்னாளில் சமாளிக்க முடியாது என்பதால்தான் பிராடு துணை கமிஷனரே அதனை அனுமதிக்கிறார். எந்த எல்லைவரை போனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுப் பிடிப்பதும், இறுதியில் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் மரியாதை என்ற ஒரு வார்த்தையால் தப்பிக்க நினைப்பதும் ரியலிஸம்.

துணை கமிஷனர் ஜான் அசத்துகிறார். இறுக்கமான முகம். டைட் குளோஸப் காட்சிகளில் வசனமே தேவையில்லாமல் அவருடைய முகமே அனைத்தையும் செய்துவிடுகிறது..! அவருடன் கொள்ளையில் ஈடுபடும் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தியும்தான் கடைசியில் பலிகடா ஆவார்கள் என்பதை எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பாராத முடிவு..!

முத்தாண்டிக்குப்பம் வசந்தா கற்பழிப்பு வழக்கிலும், அண்ணாமலை நகர் பத்மினி கற்பழிப்பு வழக்கிலும்கூட உடனடியாக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விஷயத்தை பேசித் தீர்க்கவே அரசு அதிகாரங்கள் செயல்பட்டன. கம்யூனிஸ இயக்கங்களும், சில மனித உரிமை அமைப்புகளும் போர்க்கொடி தூக்கிய பின்பே இன்றைக்கு அவர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவர்களைக் காப்பாற்ற முனைந்த அத்தனை உயரதிகாரிகளும் இன்றைக்கும் பொறுப்பில்தான் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டுமே..? அவர்களுக்கு அனைத்தையும்விட பெரிய விஷயம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் மரியாதை..!

இந்த வார்த்தையை சொல்லும் அந்த கமிஷனரின் டயலாக்கில் மட்டுமே ஒரு சிறிய தவறு இருந்தது. அன்னியோன்யமாக டி.ஐ.ஜி., ஐ.ஜி.கிட்ட பதில் சொல்ல முடியலை என்பதற்குப் பதிலாக என் மேலதிகாரிகள் என்று அவர் சொல்லி உமா ரியாஸ் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதில் மட்டுமே ஒரு சின்ன இடறல்..! லாஜிக் மீறல்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அருளின் கேரக்டர் ஸ்கெட்ச்சே இப்படித்தான் என்பதில் மூழ்கிப் போய் விடுகிறது..!

இனியா என்னும் தேவதை இங்கே கொஞ்ச நேரம் தோகை விரித்து ஆடியது. அதிகமான வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவர் மூலமாகத்தான் திரைக்கதை ஓரிடத்தில் விரிகிறது என்பதாலும், தற்போதைய சினிமா டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போலும் இடையில் ஒரு காதலை புகுத்த வேண்டியிருக்கிறது.. ஒன்றும் தவறில்லை..! விபச்சாரப் பெண்ணாக வருபவர், ஒரு சில காட்சிகளே என்றாலும் அசத்தியிருக்கிறார். அவ்வளவோ உயரத்தில் இருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொண்டால் போலீஸுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும். இதனை டயலாக்கில் வைத்திருந்தால் இன்னும் பொறுத்தமாக இருந்திருக்கும்..

ஒரேயொரு காட்சி என்றாலும் அம்மாவாக நடித்தவர் அசத்தியிருக்கிறார். இனியாவுடனான தொடர்பை பார்த்துவிட்டு அருளின் நெஞ்சில் அடித்துவிட்டுப் போகும் காட்சி தத்ரூபம்.. ஆனால் அதுதான் புறக்கணிப்பின் துவக்கம். முறையான விஷயம்தான். காதல் தவறில்லையே..? ஆனால் தனது மகனை ஏதோவொன்றாக நினைத்திருக்கும் அம்மாவின் கணிப்பை அங்கேயே நிறுவியிருக்கிறார் இயக்குநர்.

முதல் ஷாட்டில் இருந்தே களை கட்டியிருக்கிறது மகேஷ்முத்துச்சாமியின் ஒளிப்பதிவு. அந்த இருட்டில் இருந்து வெளிவரும் முகங்களின் அணிவரிசையில் அருளின் முகத்தைப் பார்த்தவுடன் ஏற்படும் இரக்கம் கடைசிவரையில் இருந்ததுதான் படத்தின் பலம்.. மனநல மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு பெரும் பலம் ஒளிப்பதிவுதான்..! படத்திற்கு காதல் பாடல்கள் தேவையில்லைதான். ஆனாலும் வைத்திருக்கிறார்கள். இசை தமனாம்..! பத்தோடு பதினொன்று..!

படம் பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு தயவு செய்து இப்படத்தை சிபாரிசு செய்கிறேன். அவசியம் பாருங்கள். அந்த அருளாக நாளைக்கே நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்பாக நிற்க வேண்டி வரலாம். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தையும், எதிர்வரும் ஆபத்துக்களைத் தாண்டும் தந்திரத்தையும் நாம் அறியும் பாடங்களே நமக்குக் கற்றுத் தரும். அதில் இதுவும் ஒன்று..!

முதல் வாரமே படம் பல ஊர்களில் எடுக்கப்பட்டுவிட்டது. பின்பு மெதுவாக பரவிய மெளத்டாக்கினால், நேற்றைக்கு கூடுதலாக 31 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நிச்சயமாக இத்திரைப்படம் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட வேண்டியவைகளில் ஒன்று..!

மெளனகுரு – அழுத்தமான திரைப்பாடம்..!

ஈரோடு வலைப்பதிவர் குழுமச் சங்கம விழா - எனது பார்வை..!


30-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதற்கு மேலும் இது பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்று நினைத்துதான் அவசரமாக இதனை எழுதத் துவங்குகிறேன். “18-ம் தேதி நடந்த நிகழ்வுக்கு 12 நாட்கள் கழித்து பதிவா..?” என்று கோபப்படாதீர்கள். அப்பன் முருகனின் திருவிளையாடலில் அலுவலகப் பணியும், வீட்டுப் பணிகளும் ஏராளம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். தாங்க முடியவில்லை. கொஞ்சம் பொறுத்து நிதானமாக எழுதலாம் என்று நினைத்தால், தலைவர் ஜாக்கியாரே திடீரென்று பதிவை போட்டுவிட்டார். தலைவரே பதிவு போட்ட பின்பு, நான் ஒரு சாமான்யமான சின்னப் பதிவன்.. இதற்கு மேலும் பதிவு எழுதாமல் இருந்தால் அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதால் எனது ஈரோடு சுற்றுப்பயணத்தை இதில் இருந்தே துவங்குகிறேன்..!

அது என்றைக்கு என்று எனக்கு நினைவில்லை. திடீரென்று நமது ஈரோட்டு சிங்கம் கதிர் என்னை தொலைபேசியில் அழைத்து சங்கமம் நிகழ்ச்சி பற்றிச் சொன்னார். வாழ்த்துக்களைக் கூறினேன். கூடவே, “உங்களை அந்த நிகழ்ச்சியில் பாராட்டப் போறோம்ண்ணே..” என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது எனக்கு. “நிசமாவா..?” என்றேன். “ஆமாம்..” என்றார். “என்னைவிட சீனியரெல்லாம் இருக்காங்க கதிரு..” என்றேன். “அதெல்லாம் மேட்டர் இல்லை. உங்களை பாராட்டணும்னு நினைச்சிருக்கோம்.. அவ்ளோதான்..” என்றார் தீர்மானமாக. சங்கடமாக இருந்தது எனக்கு..! “வேறு யார், யாரை பாராட்டப் போறீங்க..? லிஸ்ட் சொல்ல முடியுமா..?” என்றேன். “ஸாரிண்ணே.. அது குழுவின் முடிவு.. நானே தனிப்பட்டு வெளியிட முடியாது. ஆனால் உங்களை தேர்வு செய்திருக்கிறோம்.. வருவீங்களா? மாட்டீங்களா..?” என்றார். நானும் எனது முடிவை இறுதியாகச் சொல்லாமல் “2 நாள் கழித்துச் சொல்றனே..” என்றேன். “சரி” என்று விட்டுவிட்டார் கதிர்.

1 நாள் முழுவதும் யோசித்தேன். வலையுலகத்தில் எனக்கு முன்னோடிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு நமக்குக் கொடுத்து, நாம் வாங்கிக் கொண்டால் அது தர்மசங்கடமாகிவிடுமே என்றுதான் மிகவும் யோசித்தேன். விருது கொடுப்பது வலையுலகத்திற்கு சம்பந்தமில்லாத தனியார் நிறுவனமல்ல.. வலையுலகக் குழுமம்.. தனியார் நிறுவனங்களோ, அமைப்புகளோ தாங்களே தேர்வு செய்து விருதளித்தால் அது அவர்களின் முடிவு என்று சொல்லிவிடலாம். ஆனால் வலையுலகக் குழுமமே, தமது சீனியர்களை விட்டுவிட்டு தற்போது எழுதி வருபவர்கள் என்ற பட்டியல்படி தேர்வு செய்தால் அது தவறானதாக இருக்குமே என்பது எனது கருத்து..!

ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மனம் ஊசலாடியது. “கடைசியாக நம்ம கதிர்தானே.. நிச்சயமா நல்லவிதமாத்தான் செஞ்சிருப்பாரு.. நிச்சயம் சீனியர்களெல்லாம் உடன் இருப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டு கதிருக்கு போன் செய்து “யெஸ்” சொன்னேன்.. சந்தோஷப்பட்ட கதிர், “போக்குவரத்து, தங்குமிட வசதியையெல்லாம் ஜாபர்தான் செய்றாருண்ணே.. அவரே உங்களை கான்டக்ட் செய்வாரு. நீங்களும் அவர்கிட்ட தொடர்புல இருங்க” என்று சொல்லி போனை வைத்தார் கதிர். அடுத்த நாளில் எனது பயோடேட்டா கேட்டு ஒரு தனி மெயில் வந்திருந்தது. அதையும் வேலைப் பளு காரணமாக 1 நாள் கழித்தே யோசித்து தட்டச்சி அனுப்பி வைத்தேன். 

14-ம் தேதி முதல் சென்னையில் துவங்கிய 9-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டி அலுவலகத்தில் 9 நாட்கள் சம்பளமில்லாத விடுப்பெடுத்துவிட்டு உலக சினிமாவில் ஐக்கியமாகியிருந்தேன். உடன் படம் பார்த்துக் கொண்டிருந்த தலைவர் ஜாக்கியார், ஈரோட்டுக்கு எப்படி செல்வது, எப்போது செல்வது என்று அடிக்கடி பிளான் பேசிக் கொண்டேயிருந்தார். அப்போது எங்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த பட்டர்பிளை சூர்யாவை துணைக்கழைத்து, “எப்படியாவது முந்தின நாள் ராத்திரியே ஈரோட்டு போயி ரூமை போடுவோம்.. கட்டிங்கை ஊத்துவோம்.. திங்க் பண்ணுவோம்..” என்ற ஐடியாவில் பரபரத்தார்.  “13-ம் தேதி இரவு கிளம்பி 14-ம் தேதி காலைல போலாமே.. நான் அப்படித்தான் போகப் போறேன்..” என்று நான் சொன்னதற்கு தலைவர் ஜாக்கியார், என்னை பார்த்து உதிர்த்த வார்த்தைகளை நானே வெளியில் சொல்லி எனக்கு இப்பவும் இருக்குற கொஞ்சூண்டு மானத்தையும் கப்பலேத்திக் கொள்ள விரும்பவில்லை. 

இதற்கிடையில் சென்னையில் இருந்து செல்கிற பதிவர்களின் காரில் டிக்கியிலாவது தொற்றிக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் நான் மணிஜியுடன் மாறி, மாறி செல்பேசியும் மனுஷன் அசரவில்லை. சுப்ரமணியம்சுவாமியை போல வைச்சிருக்கேன். எப்போ வெளில விடணுமோ அப்பத்தான் விடுவேன்ற மாதிரியே “சீட்டு இல்லை. சீட்டு இருக்கு. இடம் இல்லை.. இடம் இருக்கு.. ஆள் நிறைய இருக்கு.. பார்க்கலாமே.. நீயும் வர்றியா..? ஏண்ணே ஈரோட்டுக்கு பஸ்ஸே இல்லையா..?” என்றெல்லாம் மாற்றி, மாற்றி ‘கதை’ விட்டுக் கொண்டிருந்தார். 

எனக்குப் புரிந்தது..! ‘இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?’ன்னுட்டு பஸ் பயணமே என்று உறுதி செய்து கொண்டேன். ஆனாலும் தலைவர் ஜாக்கியார் மட்டும் விடாப்பிடியாக உறுதியாக இருந்து, மணிஜியின் காரில் தொற்றிக் கிளம்பிவிட்டார்.

டிசம்பர் 13 அன்று லேசான காய்ச்சலால் உலக சினிமாவுக்கும் போக முடியவில்லை. வீட்டில் இருந்தேன். காலையிலேயே ஜாபருக்கு போன் செய்து இரவு பஸ் ஏறுவதாகச் சொல்லிவிட்டேன். காலை 12 மணி வாக்கில் மணிஜியின் போனில் தலைவர் ஜாக்கியார் போன் செய்து தானும் அவர்களுடன் காரில் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். இதையே 2 வது முறையாக நான் தலைவருக்கு தனியாக போன் செய்தபோதுதான் முந்தின முறை பேசியதே தலைவர்தான் என்று எனக்குத் தெரிய வந்த்து. இதுவொரு தனிக்கதை. போன் பேசும்போது யாரோ காருக்குள்ளயே “ஆ.. ஊ..” என்று ஊளையிட்டுக் கொண்டே செல்வது காதில் விழுந்தது. இங்கேயே மப்பு ஏற்றிக் கொண்டுதான் வண்டி செல்கிறது என்பதும் புரிந்தது..! அதுக்காக இப்படியா சின்னப் புள்ளைக மாதிரி கத்திக்கிட்டே போறது..? உருப்படாததுக..! 

இந்த போனுக்கு பின்பு மேலும் 2 முக்கிய நபர்களுடன் ஈரோடு சங்கமம் தொடர்பாக போனில் பேசினேன். அது இக்கட்டுரையின் பிறிதொரு பக்கத்தில் வரும்..!

அன்று இரவு கே.பி.என். பேருந்தில் ஈரோடு கிளம்பினேன். கட்டணம் 435 ரூபாயாம். ரொம்பவே அதிகம்.. அண்ணன் ஜாபருக்கு போன் செய்து “தயவு செஞ்சு காலைல போன் ஆஃப் ஆகி இருக்குற மாதிரி எதுவும் செஞ்சிராதீங்கண்ணே. நீங்க செய்ய மாட்டீங்க. ஆனா என் அப்பன் எதையாவது செஞ்சு வைப்பான். அப்புறம் நான் நடுரோட்டுல நிக்க வேண்டி வரும்..” என்று எச்சரித்தேன். அண்ணன் ஜாபர் இனி ஜென்மத்தில் எனக்கு பின்னூட்டம் போட மாட்டார் என்று நினைக்கிறேன். (ஏற்கெனவே நிறைய பின்னூட்டம் போட்டுட்டார் பாருங்க. இனிமே போடுறதுக்கு..!) பரவாயில்லை. என் பயம் எனக்குத்தான தெரியும்..!

பேருந்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லையென்றாலும், ஒரேயொரு விஷயத்தை மட்டும் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். விடியற்காலை பொழுதில் அசந்திருந்த நேரத்தில் “சீக்கிரம் இறங்குங்க..” என்ற சத்தமான குரல் கேட்டு கண் விழித்தேன். அக்கம்பக்கம் பார்த்த பொழுது இருட்டாக இருந்து பல பேர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவரிடம் “ஈரோடு வந்திருச்சா..?” என்றேன். அவர் என்ன சொன்னார் என்று என் காதில் சரியாக விழுகவில்லை. வேகவேகமாக, பையைத் தூக்கிக் கொண்டு இறங்கியும்விட்டேன். இறங்கிய வேகத்தில் பேருந்தின் கதவைச் சாத்திய நடத்துனரிடம், “என்ன சீக்கிரமா கொண்டாந்துட்டீங்க.. 5.30 மணியாகும்னு சொன்னீங்க..” என்றேன். அவர் குழப்பமாகி “நீங்க எந்த ஊர் கேட்டிருந்தீங்க..” என்றார். “ஈரோடு..” என்றேன். பட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவர் கதவைத் திறந்து அவர் கீழேயிறங்கி பேருந்து படிக்கட்டைக் காண்பித்து, “ஏறுங்க ஸார்.. காலங்கார்த்தால காமெடி பண்ணாதீங்க.. இது சேலம்ங்க..!” என்றார். இப்போது இவர் கோபத்தில் கத்தியது தெளிவாகக் காதில் விழ.. மருவாதையாக பேருந்தில் ஏறியவன் வாயது, கையது பொத்திக் கொண்டு அமர்ந்திருந்து, ஈரோடு வந்ததும் ஒரு முறைக்கு 3 முறை கேட்ட பின்பே பேருந்தில் இருந்து இறங்கினேன்..!

சேலத்தில் இருந்து ஈரோடு வரும்போதே அண்ணன் ஜாபர் போன் செய்து ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி(மறந்து போச்சுங்க மக்காஸ்) அதன் வாசலில் நிற்கும்படி சொல்லியிருந்தார். அதே போல் அந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்று போனை அடித்தவுடன் 2 நிமிடத்தில் தனது ரதத்தில் வந்து சேர்ந்தார் அண்ணன் ஜாபர். அவரை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.. ஹேண்ட்சம்மாக இருக்கிறார்..! “நான் பிளாக்கையெல்லாம் படிப்பேன். ஆனால் எழுதறதில்லை..” என்று சிணுங்கல் குரலில் அந்த விடியற்காலையிலும் தெளிவாகவே சொன்னார். வழியில் ஓரிடத்தில் காபி குடித்தபோது நேற்று இரவு வந்தவர்கள், வரவிருப்பவர்கள் பற்றியெல்லாம் சொன்னார். காலை 4 மணியில் இருந்தே இப்படி டிரான்ஸ்போர்ட் வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். பாவமாகவும் இருந்தது. பெருமிதமாகவும் இருந்தது..!

தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது வாசலில் நின்று வரவேற்றார் சங்கவி. இவரை நான் அறிந்த ஆதி காலத்தில் பெண் என்றே நினைத்திருந்தேன். இதையும் அவரிடமே சொல்லி கொஞ்சம் பல்பு வாங்கிக் கொண்டேன்.. ஹோட்டல் லாபியில் அண்ணன் காவேரிகணேஷ் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தார். அவரிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு படியேறினேன். என்னதான் அடிச்சாலும், புடிச்சாலும் அவுங்ககூடதான் ஒட்ட வேண்டியிருக்கு என்பதால்.. “எளக்கிய சூடாமணிகளின்’ அறைக்கே போகலாம்” என்று அண்ணன் ஜாபரிடம் சொன்னேன். மிகச் சரியாக ஒரு அறையின் முன் கொண்டு வந்து நிறுத்தி கதவைத் தட்டினார் அண்ணன் ஜாபர். முதல் இரவு முடிந்து எழுந்து வரும் தோற்றத்தில் கதவைத் திறந்து ‘என்னா’ என்பதை போல் பார்த்தார், வலையுலக குபீர் எளக்கிய சூறாவளியான மயில் ராவணன். 

அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணன் ஜாபர். முக்கால்வாசி மப்பு இறங்கியும், கால்வாசி இறங்கியிருக்காத நிலையிலும் மயிலு காட்சி தந்ததால் அவரைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தால், இரண்டு வலையுலக எளக்கிய விடிவெள்ளிகள் ஆழ்ந்த சயனத்தில் இருந்தார்கள். ஒருவர் பீஸ் வாங்காமலேயே டைவர்ஸ் கேஸ்களில் ஆண்களுக்காக ஆஜராகி, நம் இனத்தவர் பலரின் வாழ்க்கையைக் காப்பாற்றி வரும் பேமஸ் வக்கீலும், எளக்கிய சிந்தனையாளருமான அகநாழிகை வாசுதேவன்.. இன்னொருவர் அவருடைய உயிரும், உடலில் பாதியுமான எளக்கிய வித்திகர் தண்டோரா மணிஜி..(பில்டப்பு போதுமா..?)

இருவரையும் எழுப்பிவிட்டு குட்மார்னிங் வைத்தால், கை கொடுத்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்கள். ‘முழிச்சது உன் மூஞ்சிலயா?’ என்கிற பயம், அவர்களையறியாமலேயே அவர்களது கண்களில் தெளிவாகத் தெரிந்தது. கொஞ்சம் தெளிவானவுடன் மணிஜி சொன்னார்.. “அண்ணே.. ராத்திரி ஓவர் மப்புண்ணே.. எவ்ளோ அடிச்சோம்னே தெரியலை.. என்ன பேசினோம்னும் தெரியலை..”. நல்லவேளை.. நான் ராத்திரி வரலையேன்னு அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு..!

முக்கால் நிர்வாணக் கோலத்தில் திடுக்கென்று வந்து நின்று ஆஜரானார் தலைவர் ஜாக்கியார். ஒரு வணக்கம் போட்டு வைத்தேன்..! “பக்கத்து ரூமிலும் நம்மாளுகதான்..” என்றார் வாசு. சென்று பார்த்தால் காலை 7 மணிக்கு பல்லைக்கூட வெளக்காம வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருந்தார் மாயவர ஒடம்பொறப்பு அபிஅப்பா. அவருக்கும் எனக்கும் தற்போது டெர்ம்ஸ் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால், அதிகமாக அவரைத் திட்டவில்லை. கொஞ்சமாகத் திட்டி வைத்தேன்..! மனுஷர் எல்லாத்துக்கும் சிரிச்சே வாயடைக்குறார். இதே மாதிரி பின்னூட்டத்துலேயும் செஞ்சா நல்லாயிருக்கும்ல்ல..!

எதிர் ரூமில் பிலாசபி பிரபாகரன் மற்றும் நாய் நக்ஸ், ஆரூர் செந்தில் என்ற நண்பர்கள் குழாம் முகாமிட்டிருந்தது.. அவர்களிடத்திலும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்..! ஜாபரும், சங்கவியும் விரைந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சுடுதண்ணீருக்காக கொஞ்சம் காத்திருந்து குளித்துவிட்டுக் கிளம்பினோம். கிளம்பியபோது அண்ணன் நாய் நக்ஸ் இன்சுலின் போட்டுக் கொள்வதற்காக மருந்தை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தார். திக்கென்றானது மனசு. இப்போதுவரைக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. டெய்லி அந்த ஊசிய போடணுமாம்.. இதையும் சிரிச்சுக்கிட்டே சொல்றாரு மனுஷன்.. பாவம்பா இவங்கள்லாம்..!

படியிறங்கியபோது லாபியில் எழுத்தாளர் கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் பல நண்பர்கள்(பெயர் மறந்து போச்சுப்பா. கோச்சுக்காதீங்க) காத்திருந்தனர். சிறிது நேர இடைவெளியில் பேஸ்புக்கின் முடிசூடா மன்னர்களான அன்பழகன் வீரப்பனும், செல்வா அண்ணனும், ஜெயராஜ் பாண்டியனும் இறங்கி வந்தார்கள். அன்பழகன் வீரப்பனார் மீடியாவில் எக்ஸ்பர்ட்.. காற்று புகாத இடத்தில்கூட ஆள் வைத்திருப்பவர். ஆனால் மீடியாக்காரர் இல்லை என்று சொல்லிக் கொள்பவர். அண்ணன் ஜெயராஜ் பாண்டியனை இந்தப் பயணத்தின்போதுதான் நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன்.. அண்ணன் செல்வகுமார், அவர் அடுத்து எடுக்கப் போகும் திரைப்படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்கப் போவதாக பட்டப் பகலிலேயே ‘எதுவும் போடாமலேயே’ சத்தியம் செய்து சொல்லியிருக்கிறார். பார்ப்போம்..!

மணிஜியின் காரில் தோழர்கள் சிலர் ஏறிக் கொள்ள.. இடம் கிடைக்காத சிலருடன் ஆட்டோவில் ஏறி அரங்கம் நோக்கிப் பயணமானோம். அதிகம் டிராபிக் இல்லாத அந்த நேரத்தில் 2 நிமிடத்தில் அரங்கத்தை அடைந்தோம். வாசலில் அண்ணன்கள் தாமோதரன் சந்துருவும், ஆரூரானும் எங்களை வரவேற்றனர். இருவரையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறை.. தலைவர் சந்துரு நல்ல மனுஷனா தெரியறாரு.. அப்புறம் ஏன் இப்படி வலையுலகத்து வந்து மாட்டினாருன்னு தெரியலை..! அன்னாரின் வலைத்தளத்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது. அந்த லட்சணத்தில்தான் நான் இருக்கிறேன். மன்னிச்சுக்குங்க அண்ணா..!


விருந்தினர்களுக்காக காலை டிபன் தயாராக இருந்தது.. சாப்பிட்டுவிட்டால் அவர்களுக்கு ஒரு வேலை முடியுமே என்பதால் கூச்சப்படாமல் முதல் பந்தியிலேயே உட்கார்ந்து முடித்துவிட்டோம். எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் என்ன சாப்பிட்டேன் என்பது மறந்துவிட்டது மக்களே..! யாராவது சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து பதிவர்களின் வருகை வந்தபடியே இருக்க அனைவருடன் முகமன் பழகவே நேரம் சரியாக இருந்தது.. நாங்கள் வந்திறங்கிய பின்பு அண்ணன் கதிர் தனது குடும்பத்தினருடனும், வானம்பாடிகள் ஐயாவுடனும் வந்து சேர்ந்தார். வானம்பாடிகள் ஐயா மீது எனக்கு ஏற்கெனவே ஒரு கோபம் உண்டு. 2 வருடங்களுக்கு முன்பு அண்ணன் கதிர் சென்னை வந்து எனது வீட்டில் இருந்து கிளம்பி ஜெயா டிவியின் ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக சென்றார். அது முடிந்தவுடன் அவரை பிக்கப் செய்து ஹோட்டலில் விருந்து வைத்து நிறைய பேச வேண்டும் என்று காத்திருந்த நேரத்தில், இந்த வானம்பாடிகள் ஐயாதான் குறுக்கே புகுந்து அன்றைக்கே கதிரை தள்ளிக் கொண்டு போய்விட்டார். இந்தப் பெரிசு இவர் கூட எப்படி என்று அப்போதே யோசித்தேன்.. ம்.. எல்லாம் ‘எளக்கியம்’ செய்ற வேலை என்பது புரிந்தது..! சரி.. பரவாயில்லை. நல்லாயிருக்கட்டுமே..! 

அரங்கத்தின் உள் அலங்கார வேலைகளை முந்தின தினமே முடித்து வைத்திருந்ததால், அரங்கம் நிகழ்ச்சிக்குத் தயாராகத்தான் இருந்தது..! ஒவ்வொருத்தரும், ஒவ்வொருவரிடமும் “நீங்க யாரு..? உங்க பெயர் என்ன..?” என்று கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் பெயர் பேட்ஜ் அங்கேயே தரப்பட்டது. அதை நெஞ்சில் வீராப்பாக குத்திய பின்பு ஒரு வேலை மிச்சமாகியது. நன்றி நண்பர்களுக்கு..!

சீனா ஐயா தனது துணைவியாருடன் வந்தார். இவரையும் நான் இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தேன். வந்தவுடனேயே வில்லங்கத்தைத் துவக்கணுமா என்று விட்டுவிட்டேன். நிகழ்ச்சி இறுதியில் பேசலாம் என்று நினைத்து அதுவும் மறந்துபோய்விட்டது..!


இணையத் தளங்கள் அனைத்திலும், பத்திரிகைகள் பலவற்றிலும் தனது பங்களிப்பை செய்து வரும் தேனக்கா தனது கணவருடன் வந்தார். மீண்டும் கீழே வெட்டிப் பேச்சு. உரையாடல்.. கலகலப்பு இவற்றுடன் இருந்தபோது மதுரை பதிவர்கள் ஒரு செட்டாக வந்து சேர்ந்தார்கள். நான் “பெரிசு” என்று செல்லமாக அழைக்கும் தருமி ஐயா அவர்களுடன் மதுரையின் இலக்கிய சூடாமணி கார்த்திகை பாண்டியனும் வருகை தந்தார். தருமி ஐயாவை பார்த்து 3 வருஷமாச்சு. மதுரைக்கு போய் அவர் வீட்டில் அவருடன் உரையாடியதுதான் கடைசி சந்திப்பு.. இவர்களுடனும் வானம்பாடிகள் ஐயாவுடனும் சிறிது நேரம் மொக்கை போட்டு நேரத்தை போக்கி மேலும் பதிவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்.

அபியப்பா மற்றும், கே.ஆர்.பி.செந்தில் இருந்த இடத்தில் மணிஜியிடம், “விருச்சிக்காந்தும், சாம் மார்த்தாண்டனும் வந்துட்டாங்களா..? இல்லை வரப் போறாங்களாண்ணே..?” என்று கேட்டேன். “விருச்சிக்காந்த் நேத்தே வந்தாச்சு..” என்றார் மணிஜி. “சாம் மார்த்தாண்டனும் வந்தாச்சு. இங்கதான் இருக்காரு..” என்று சிரித்தபடியே சொன்னார் கே.ஆர்.பி.செந்தில். அருகில் நின்று கொண்டிருந்த தலைவர் ஜாக்கியாரும் இதைக் கேட்டுவிட்டு எங்கயோ பார்த்தபடியே சிரித்துத் தொலைத்தார். “ஜாக்கிக்கே அது யாருன்னு தெரியும்ண்ணே..” என்றார் செந்தில். ஸோ.. எல்லாரும் ஒரு கோக்குமாக்காத்தான் இருக்காங்கன்னு தெரியுது..!


அண்ணன் பாலபாரதி தனது துணைவியார், மகனுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஆட்டோவில் வந்தவர் இடம் தெரியாமல் 2 முறை போன் செய்து கேட்ட, அவருக்காக ரோட்டில் போய் நின்று அடையாளம் காட்ட வேண்டியதாகிவிட்டது. பய கனிவமுதன்.. செம சேட்டை.. அப்பனுக்கேத்த புள்ளை..! “அடங்க மாட்டேங்குறாண்ணே..!” என்றார் பாலபாரதி.. “அப்பன் அடங்குனாத்தான, புள்ளை அடங்குவான். அப்பன் எதுக்காவது, என்னிக்காச்சும், யார்கிட்டயாவது அடங்கியிருக்கானா..?” என்று கேட்டேன். திருமதி பாலபாரதியே இதனை வழிமொழிந்ததால், பாவம் திருவாளர் பாலபாரதியால் எதுவும் பேச முடியவில்லை. கனிவமுதன் முதலில் முரண்டு பிடித்தாலும், கொஞ்ச நேரத்தில் அனைவருடனும் ஒட்டிக் கொண்டான். கடைசிவரையிலும் பதிவர்களுக்கு இருந்த ரிலாக்சேஷன் இந்தச் சின்ன ஐயாதான்..!

திருப்பூரில் இருந்து சேர்தளம் குழுமத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் வெயிலானின் தலைமையில் அணிவகுத்து வந்தது பார்ப்பதற்கு ஜோராக இருந்தது.  அவர்களுடைய லோகாவுடனான டீ ஷர்ட்டுடன் காட்சியளித்த அவர்கள் நிகழ்ச்சி முடியும்வரையில் பல புதியவர்களின் கேள்விக்கு உள்ளானார்கள். வெயிலான் எதற்காக இந்த யூனிபார்மோடு வர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேறிவிட்டது..! என்னை மாதிரி சின்னப் பசங்களையெல்லாம் கொஞ்சம் கண்டுக்கிட்டாருன்னு இன்னமும் நல்லாயிருக்கும்..!


நிகழ்ச்சி துவங்க நேரம் நெருங்கியபோது கதிர் அருகில் வந்து “கடைசி வரிசையில் உக்காருங்கண்ணே..” என்றார். அவர் சொன்னதுபோலவே அமர்ந்தேன். சீனா ஐயாவும், தருமியும் வந்திருப்பதால் அவர்களும் எங்களுடன் மேடையேறுவார்கள் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 

முதல் நிகழ்ச்சியாக அண்ணன் ஆரூராரின் பிள்ளைகளான அருட்சுடரும், அமர்நீதியும் அழகுத் தமிழில் தமிழ் வணக்கம் பாடியது கேட்பதற்கே வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து சந்துரு அண்ணன் சுருக்கமாக வரவேற்புரையாற்றினார். இதையடுத்து அழகுத் தமிழில் அன்பு அண்ணன் ஆரூரான் சிறப்புப் பேச்சாளரான ஸ்டாலின் குணசேகரன் பற்றி எங்களுக்கு எடுத்துரைத்தார். இது நல்ல விஷயம். தெரியாதவர்களும் வந்திருப்பார்களே.. அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா..? அண்ணன் ஆரூராரின் தமிழ்ப் பற்றை அன்றைக்குத்தான் மேடையில் பார்த்தேன். அசத்துகிறார். 

அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்களை வரிசையாக மேடைக்கு அழைத்தார்கள். முதலில் நான். எனக்கு பின்பு தலைவர் ஜாக்கியார், அண்ணன்மார்கள் ஜீவ்ஸ், அதிஷா, வெயிலான், கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா, சீனா ஐயா இவர்களுடன் தேனக்காவும் சேர்ந்து மேடையேறினார்கள்.


மேடையில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பெட்ஷீட்டும், ஒரு ஷீல்டும் ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து எங்களிடம் தரப்பட்டது. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் அந்த்த் தாம்பாளத் தட்டையும் வாங்கிக் கொண்டே தங்களது இருக்கைக்கு சென்று அமர, பின்னாலேயே யாரோ ஒருவர் வந்து அந்தத் தட்டை பெற்றுச் சென்றது கடைசிவரையிலும் காமெடியாகத்தான் இருந்தது.

எங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தபோது அது தொடர்பான புகைப்படங்களையும் அருகில் இருந்த ஸ்கிரீனில் காண்பித்த்து மிக அழகாக இருந்தது.  அதேபோல் எங்களைப் பற்றிய குறிப்புகளை அறிவிப்பாளர்கள் 3 பேர் மாற்றி, மாற்றி பேசியதும் ரசிக்க வைத்தது. இருந்தாலும் என்னால்தான் அதிகம் ரசிக்க முடியவில்லை..! என்னைவிட மிக மூத்த பதிவரான தருமி ஐயா கீழே இருக்க.. நான் விருது பெறுவதும், தருமி ஐயா மட்டுமல்ல.. வேறு பலரும் இப்போதும் பதிவுலகில் ஆக்டிவ்வாக இருப்பதும் சட்டென்று நினைவில் வர மனம் ஒரு நிலையில் இல்லை. அருகில் அமர்ந்திருந்த தலைவர் ஜாக்கியார், எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அண்ணன் யுவகிருஷ்ணாவை சுட்டிக் காட்டி என்னிடம் ஏதோ சொல்லி கிண்டல் செய்தபடியே இருந்தார். எனக்குத்தான் முழு கவனமும் அதில் இல்லையே..! அப்புறம் என்னத்த கேக்குறது..?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.. ஏதோ சினிமா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் டிவி கேமிராக்களை போல கிட்டத்தட்ட 30 பேருக்கும் மேலாக கையில் கேமிராவைத் தூக்க.. மேடை நிகழ்ச்சிகளில் பிளாஷ் மழைகள் பொழிந்தன.  வாழ்த்திப் பேசிய திரு.ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு கூட்டத்தினரை மிகவும் ஈர்க்கும்வகையில் இருந்தது. அதிலும் நியூயார்க் ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அவர் குறிப்பிட்ட செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் வருடாவருடம் அவர் நடத்தி வரும் புத்தகக் கண்காட்சியின்போது எத்தனையோ பேச்சாற்றல் மிக்கவர்களை அழைத்து கூட்டம் நடத்தி தமிழ்ப் பேச்சுக் கலையை ஆதரித்தும், வளர்த்தும் வருகிறார் என்பதை அறிந்தபோது அவர் குறித்து மிகவும் பெருமைப்பட்டேன். 

மேடையில் பாராட்டுப் பெற்றவர்களின் குறிப்புகள் இங்கே இருக்கிறது. படித்துப் பாருங்கள்.. எங்கள் 15 பேரிலும் சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரனின் சேவைதான் மகத்தானது. அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது இது போன்று ஒரு செயலைக்கூட இதுவரையில் என் வாழ்க்கையில் செய்ததில்லையே என்ற வருத்தமே எனக்குள் எழுகிறது.. வாழ்க மகேந்திரன்..! 

பேசுவதற்கு வாய்ப்பு வந்தபோது சில மணித் துளிகள் மட்டுமே அனுமதி என்று கதிர் முன்கூட்டியே சொல்லிவிட்டதாலும், எனக்குள் இருந்த பதட்டம் காரணமாகவுமே கீழ்க்கண்டவைகளை மட்டுமே பேசினேன்..

“அனைவருக்கும் வணக்கம். சிறப்புப் பேச்சாளருக்கு சிறப்பு வணக்கம். இத்தனை நாட்களாக இரவு, பகலாக பக்கம், பக்கமாக மாய்ந்து, மாய்ந்து எழுதி என்னத்தடா உண்மைத்தமிழா சாதிச்ச என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம் இப்படியொரு விருதினை கொடுத்து கவுரப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.. இந்த விருதினை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால், இதுவரைக்கும் பதிவுகளை 25 பக்கங்களில் எழுதிட்டிருந்த. அது போதாது.. இனிமேல் 50 பக்கங்களில் எழுது என்று ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் எனக்கு உத்தரவிட்டதாகவே இந்த விருதினை எடுத்துக் கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..”

இப்படித்தான் பேசினேன் என்று நினைக்கிறேன்..! ஆனாலும் எனக்குள் இருந்த வருத்தத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை...! வலைப்பதிவர்கள் மட்டுமே இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். ஆனால் பல்வேறு இணையத்தள வாசகர்களும், எழுத்தாளர்களும் இருந்ததால் அந்த மேடையிலேயே இதனை ஒரு இஷ்யூவாக ஆக்க விரும்பவில்லை.. ஆனாலும் சென்னை திரும்பிய பின்பு மனசு பொறுக்காமல் கதிருக்கு போன் அடித்து எனது வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்தேன். அவசரமாகச் செய்ததாலும், குழுவினர் முடிவெடுத்ததாலும் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என்றார் கதிர். அடுத்த சங்கமத்தில் இதனை நிவர்த்தி செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டேன். “நிச்சயமாக..” என்று சொல்லியிருக்கிறார் கதிர்..! செய்வார்கள் என்றே நம்புகிறேன்..!

அதே நேரத்தில் எனக்கு முன்பாகப் பேசிய தலைவர் ஜாக்கியாரின் பேச்சில் இருந்த ஒரு சில வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும். தலைவராக இருந்தாலும், நம் மனதுக்குத் தவறாக இருந்தால் அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிடுவதுதான் நல்லதொரு தொண்டனுக்கு அழகு.. 

“என்னைப் பற்றிய விமர்சனங்கள் என் கால் தூசுக்குச் சமம்..” என்று மேடையில் அவர் சொன்ன வார்த்தைகள் அழகில்லை. பொருத்தமானதில்லை..! விமர்சனங்களை எதிர்கொள்பவன்தான் நல்ல எழுத்தாளன். அது எப்பேர்ப்பட்ட விமர்சனமாக இருந்தாலும் சரி..! குழந்தை தவழ்ந்து, நடை பயின்று, ஓடியாடி தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடையும்வரையில் அதற்குக் கிடைக்கின்ற தாயின் அன்பைப் போன்றதுதான் வாசகர்களின் விமர்சனங்கள். எழுதுவதற்கெல்லாம் பாராட்டுக்கள் கிடைத்துவிடாது..! அனைத்துமே பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறானது..! தலைவர் ஜாக்கியார் தான் இப்படித்தான் என்று சொல்லிச் சொல்லியே தனது தவறை நியாயப்படுத்துகிறார். பல முறை இதனை அவரிடத்தில் நேரில் சொல்லியும் மூக்குடைபட்டிருக்கிறேன். அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் நானும் பின்னூட்டம் போடுவதில்லை என்று சொல்லி, அன்றிலிருந்து அவர் தளத்தில் பின்னூட்டம் இடுவதை நானும் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் இப்போதும் அதனையே சொல்லத் தோன்றுகிறது. சொல்லிவிட்டேன்..! இனி எப்போதும் இதைத்தான் சொல்லுவேன்..!

தொடர்ந்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் உறுப்பினர்கள் மேடையேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அண்ணன் க.பாலாசி நன்றியுரை நிகழ்த்திய பின்பு மேடை பொதுவானதாக அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. புதிய பதிவர்கள் பலரும் மேடையேறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் பதிவுலகத்தில் நுழைந்தது எப்படி என்றும், பதிவுலகத்தின் பலன்கள் பற்றியும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவரையிலும் பொறுமை காத்த கூட்டம் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இறங்கி ஓடியது. முதல் கூட்டத்தினர் தம் அடிக்க ஓட.. இரண்டாவது கூட்டம் கதையடிக்க ஆரம்பித்தது. இதை என்ன செய்ய முடியும்..? எப்படி தடுக்க முடியும்..? இத்தனை பதிவர்களும் பல மாதங்கள் கழித்து ஒன்று சேர்கிறார்கள். பேசுவதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கும்..?

மணிஜியை சுற்றி ஒரு கூட்டம்.. தலைவர் ஜாக்கியாரை சுற்றி ஒரு கூட்டம்.. சி.பி.செந்தில்குமாரை சுற்றி ஒரு கூட்டம். ‘மெட்ராஸ் பவன்’ சிவகுமாரை சுற்றி ஒரு கூட்டம்.. கார்த்திகைபாண்டியனை சுற்றி ஒரு கூட்டம்.. என்று ஆளாளுக்கு குழு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். 


கிடைத்த இடைவெளியில் பதிவர்கள் பலரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எடுத்தவர்களெல்லாம் எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைத்தால் தன்யனாவேன்..! அண்ணன் ஜீவாவுடன் சிறிது நேரம் அளவளாவியபோது அவர் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணன் என்று தெரிந்து கொஞ்சம் ஆச்சரியமானேன்..! தேசிய விருதுக்கு புத்தகங்களை அனுப்பும் முறையை அண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அங்கே நான் சந்தித்த தம்பி சி.பி.செந்தில்குமாருக்கு ஒரு சின்ன எச்சரிக்கையை விட்டேன். “தொடர்ந்து குஜிலி, பிகர் என்றே உனது பிளாக்கில் எழுதிக்கிட்டே வர்ற.. பின்னாடி ஏதாவது பிரச்சினைன்னா யாரும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. இது மாதிரி எழுதறதை நிறுத்திட்டு அளவோட எழுது..” என்றேன். நல்லது சொன்னா இந்தக் காலத்துல எந்தப் புள்ளை கேக்குது..? தானா அடிபட்டு புரிஞ்சுக்கட்டும்..!


நான் முன்பே சொன்னதுபோல எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் சாப்பாட்டு சீர்வரிசைகள் பற்றி அதிகம் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனாலும் அசைவத்தை ஒரு வெட்டு வெட்டினேன்.. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காவேரிகணேஷ், அவ்வளவு காரத்தையும் சமாளித்து வியர்க்க, விறுவிறுக்க முழுங்கிக் கொண்டிருந்தார். எப்படித்தான் முடியுதோ தெரியலையே..? 

இடையிலேயே அரங்கத்தில் இருந்து ஜூட் விட்ட மணிஜியும், அவரது அடிப்பொடிகளும் கொஞ்சம் ‘சுதி’யை ஏற்றிக் கொண்டு எங்களுக்கு அடுத்த பந்தியில் அமர்ந்து ஆற, அமர வெட்டினார்கள்..! ‘அடிச்சது’கூட வெளில  தெரியாமல் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் அண்ணன் அகநாழிகை வாசுதேவன் யாருக்காவது திடீரென்று முத்தம் கொடுத்தால், அண்ணன் மப்பில் இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். எனக்கு 2 முறை முத்தம் கொடுத்தார். முதல் முறை சரியில்லை என்று சொல்லி 2-ம் முறையாக முத்தம் கொடுத்தபோதுதான்  எனக்கே ‘தெளிந்தது’ இந்த விஷயம்..! நல்ல அண்ணன்..!

இந்தக் கூத்துக்கிடையில் பல பதிவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஓய்ந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து களைத்துப் போய் நின்றிருந்தவேளையில் குழுமத்தின் உறுப்பினர்கள் சாப்பிட்டவர்களிடமே திரும்பத் திரும்ப போய் “சாப்பிட வாங்க..” என்று வாய்கூசாமல் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அன்புக்கு ஒரு அளவு வேண்டாமா..? கா.பா. வலசை புத்தகத்தை எனக்குப் பரிசாக அளித்தார்.  விஜி மற்றும் ரோஹினி சிவாவிடமும் சிறிது நேர அளவளாவல். “உங்களுக்காக பொண்ணு பார்க்குறேன் சித்தப்பூ..” என்றார் விஜி. “இது முடியறதுக்குள்ள நீ நிச்சயம் பாட்டியாயிருவ..” என்று வாழ்த்தியிருக்கிறேன்..! இத்தனை களேபரத்திலும் புகைப்படக் கலைஞர் அண்ணன் ஜீவ்ஸ் மட்டும் தனது பணியில் மிகச் சரியாக இருந்தார்..! பெற்றோர்களுடன் வந்திருந்த சிறு குழந்தைகளை வைத்து ஒரு ஆல்பமே தயாரிக்கும் அளவுக்கு புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார்..! என்னையும்தான் எடுத்தார். ஆனால் இதுவரையில் வெளியிடவில்லை..! அவ்வளவு மோசமாவா இருக்கேன்..?

மதியம் 3-30 மணி டிரெயினில் சென்னை திரும்ப ஒரு டீம் கிளம்பிக் கொண்டிருக்க.. நான் வழக்கம்போல எப்படி திரும்பச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் மணிஜி கார் ஹவுஸ்புல் என்று நான் கேட்காமலேயே சொல்லி தப்பித்துக் கொண்டார். தொடர்ந்த விசாரணையில் பேஸ்புக் தோழர் சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பன் காரில் வந்திருப்பதாகச் சொல்ல.. காவேரிகணேஷின் மூலமாக ஒரு பிட்டை போட்டு அவர்கள் மனதில் இடம் பிடித்து, அதன் மூலம் காரிலும் சீட்டைப் பிடித்தேன்..! 


நள்ளிரவுக்குள் சென்னை திரும்ப நினைத்து முதலில் நாங்கள்தான் அரங்கத்தை காலி செய்தோம். அனைவரிடமும் திரும்பத் திரும்ப ‘டாட்டா’ காட்டியே அலுத்துப் போனது..! அந்த அளவுக்கு சென்று வருகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுத்தான் கிளம்பினோம். பேருந்து நிலையம்வரையிலும் அண்ணன் சங்கவியும் எங்களுடன் வந்தார். “போன் பண்றேண்ணே..” என்று சொல்லிவிட்டு வண்டியில் இருந்து இறங்கிச் சென்ற அண்ணன் சங்கவி இப்போதுவரையிலும் போன் செய்யவில்லை.. சரி.. நல்லாயிருக்கட்டும்..!

சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பனார் வண்டியோட்ட மோகன்குமார், காவேரிகணேஷ், ஜெயராஜ் பாண்டியன் இவர்களுடன் நானும் சேர்ந்து பயணாமானோம். இப்போதுதான் தெரிகிறது கார் பயணத்தின் அனுகூலம் என்னவென்று..! ஏதோவொரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ‘உச்சா’ போனபோது, தூரத்தில் இருந்து சில இளைஞர்கள் எதையோ செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள், எங்களையும் சேர்த்தே படம் எடுத்தார்கள். ஓரக்கண்ணால் பார்க்கத்தான் முடிந்தது..! எதுவும் சொல்ல முடியவில்லை. ஆமாம்.. இதை படம் புடிச்சு அவனுக என்ன செய்யப் போறானுக..? 

காரில் வரும்போதே யுடான்ஸ் பரிசளிப்பு விழாவும் சட்டென்று ஞாபகத்திற்கு வர, வேடியப்பனுக்கு போன் செய்து கேட்டேன். விழா முடிந்து நான் கடையையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்..! அடுத்து தம்பி அப்துல்லாவிற்கு போன் செய்தேன். விழாவினை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அனைவருடனும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்திருப்பதாகச் சொன்னார்..! ‘ச்சும்மா ஒரு விசாரணைதான்’ என்று சொல்லி வைத்தேன்..!

ஈ.ஸி.ஆர். ரோட்டில் எப்படி வேண்டுமானாலும் பறக்கலாம் போலிருக்கிறது..!  சி.ஐ.டி. அன்பழகன் 120-ல் இருந்து 160 வரையிலும் ஸ்பீடு காட்டினார்.. நடு, நடுவே செல்வா அண்ணனுடனும், மோகன்குமாருடனும் பேசிக் களைத்தோம். செல்வா அண்ணன் தமிழகத்தின் அடுத்த அண்ணாஹசாரேவாக உருமாறும் அளவுக்கு அரசியல் பேசுகிறார். ஆனால் பிளாக்கில்தான் எழுத மாட்டேன்றார்..! 7.30 மணி நேரப் பயணத்தின் முடிவில் இரவு 11 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்..!

எந்தவொரு லாப நோக்கமும் அற்ற நிலையில், எழுத்து, மற்றும் செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட விருதுகள் என்றாலும், அதனை அளித்தவிதம்தான் அத்தனை வருத்தங்களையும் தூக்கியெறிந்துவிட்டது. கதிரின் அன்புக் குழந்தைகள்தான் தர வேண்டிய பரிசுப் பொருட்களை உள்ளறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தபடி இருந்தார்கள். அவர்களுக்கென்ன 12, 14 வயது இருக்குமா..? கதிர் இப்பொழுதே பழக்குகிறார் போலும்..! தூரத்தில் இருந்து பார்த்தபோது மனம்  நெகிழத்தான் செய்தது..!

மேடையில் முகத்தைக் காட்டாமலேயே உள் அறையில் நின்றபடியே கதிர் 2, 3 முறை பேசினார். “சிறப்புப் பேச்சாளர் பேசும்போது பார்வையாளர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..” என்று கதிர் மறைந்திருந்துதான் மைக்கில் பேசினார். அது ஏன் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறது. தப்பித் தவறிகூட அரங்கத்தில் யாரும் இதனை பரிகாசம் செய்துவிடக் கூடாது என்பதில் கதிர் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.

நான் 3-வது முறையாக சென்னையில் இருந்து கதிரை அழைத்து நான் எப்படி வரவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்தபோது, முதல் பதில் வார்த்தையாக கதிர் சொன்னது.. “ஜாபர்கிட்ட பேசுங்கண்ணே.. அவர்தாண்ணே போக்குவரத்தெல்லாம் பாத்துக்குறாரு..” என்பதுதான்..! இதுதான் ஒரு நல்ல கேப்டனுக்கு அழகு. ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால், அதனை அவர்தான் பார்க்க வேண்டும். டீம் வொர்க் என்பதும் இதுதான். அனாவசியமாக அடுத்தவர்கள் வேலையைத் தாங்களே நட்புக்காக செய்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான் அமைப்புக்கு மிகச் சரி..!

நான் காரில் ஏறி கிளம்பிய அந்தத் தருணத்தில்தான் தலைவர் தாமோதர் சந்துரு, சாப்பிட அமர்ந்தார். அதுவரையிலும் அத்தனை குழுக்களின் அருகிலும் வந்து “சாப்பிட்டீங்களா..? சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு கடைசி பந்தியில் அமரும் அளவுக்கு மிகப் பொறுப்பான தலைமையைத்தான் இந்தக் குழுமம் பெற்றிருக்கிறது..! பாவம்.. இந்த மனிதருக்கு சிரிக்க மட்டுமே தெரியும் போலிருக்கு..! அப்படியொரு சிரிப்பு..! இப்படியாக குழுமத்தில் இருக்கும் அனைவருமே ஒரு சிறிய பிரச்சினையைக்கூட அடுத்தவர் முன்பாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சி முடியும்வரையிலும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது பெருமைக்குரிய விஷயம்..! வாழ்க ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்தினர்..!

இது போன்ற நிகழ்வுகள் தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கின்ற அத்தனை ஊர்களிலும் நடந்தால் வலைப்பதிவுகளின் மூலமாக தமிழில் எழுதும் நாம் அனைவரும் இன்னமும் நெருக்கமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதே சமயம், இது போன்ற நிகழ்வுகள் நடத்த ஆகும் செலவுகள் குறித்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..!

இந்த ஈரோட்டு நிகழ்வுக்கே எவ்வளவு ரூபாய் செலவானது என்று தெரியவில்லை. இது பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காமல் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதுதான் வெட்கமான ஞாபகம் வருகிறது. நிச்சயமாக 75000 ரூபாயாவது செலவாகியிருக்கும். நன்கொடைகள் இல்லாமல் குழும உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டு செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.. இது போன்று அனைத்து ஊர்களிலும் செய்துவிட முடியாது..! பணமும் மிக முக்கியந்தான்..!

இதற்குப் பதிலாக நன்கொடைகள் மற்றும் விளம்பரம் மூலமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தலாம். ஆனாலும் எந்தவொரு நிகழ்வும் அது தொடர்பான துறையின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்வதாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் இது போன்ற வலைப்பதிவர்கள் சந்திப்பு என்னும் நிகழ்ச்சியினைவிடவும், வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை நாம் நடத்தினால் அது நமது தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..!

வலைப்பதிவர்களின் கலந்துரையாடலில் கிடைக்கும் மகிழ்ச்சியும், பூரிப்பும் அவ்வப்போது நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. போனில் பேசுகிறோம். எங்கேனும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தால் பேசுகிறோம். அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்களைச் சந்தித்து உரையாடுகிறோம். இதை அப்படியே வைத்துக் கொண்டு இன்னமும் பார்வையாளர்களாகவே இருக்கும் பல வாசகர்களையும் நாம் எழுத வைக்க வேண்டும். அதற்காக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை அவசியம் நாம் ஊர், ஊருக்கு நடத்தியாக வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் அண்ணன் பாலபாரதி தலைமையில் வலைப்பதிவு பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினோம். அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் வலைப்பதிவுகள் பற்றி அறிந்து கொண்டதோடு 150-க்கும் மேற்பட்டோருக்கு வலைப்பதிவுகளை ஒரே நாளில் துவக்கிக் கொடுத்தோம். 10 கணிணிகளை வாடகைக்கு எடுத்து வந்து, ஆர்வத்தோடு வந்தவர்களுக்கு அங்கேயே வலைப்பதிவுகளைத் துவக்கிக் கொடுத்தோம். தமிழில் எப்படி தட்டச்சு செய்வது.. எந்த தட்டச்சு முறை கற்றுக் கொள்ள மிக எளிதானது என்று சொல்லி அதற்கான விளக்கக் கையேட்டை கூட மறைந்த அண்ணன் சிந்தாநதியின் ஒத்துழைப்பில் வழங்கியிருந்தோம். அவர்களில் பலர் இப்போதும் எழுதிதான் வருகிறார்கள். இது போன்ற சேவையை நம்மால் முடிந்த அளவுக்கு, தமிழகம் முழுவதுமே ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் இதுவே நமது வலையுலகத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து..! 

அடுத்த பிப்ரவரி மாதத்தில் சென்னையில் நடத்தவுள்ள சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சி ஈரோடு சங்கமம் போன்றதுதான். முதல் முறையாக நடத்துவதால் அனைத்து இணையப் பங்களிப்பார்களையும் வலையுலகத்தின் பக்கம் ஈர்த்துவிட்டு, பின்பு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சிப் பட்டறை போன்று நடத்த உத்தேசிக்கலாம் என்று யோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும், நிறைய உடல் உழைப்பும், பணமும் தேவைப்படுகிறது..! இதற்கான முன் பயிற்சியாகத்தான் இந்த இணையத்தள பங்களிப்பாளர்களின் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கின்ற அனுபவத்தின் வாயிலாக நிச்சயமாகத் தொடரும் காலங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கும் வலைப்பதிவர்கள் தங்களுடைய ஊர்களில் இருக்கும் பதிவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுமத்தை உருவாக்கி அதன் மூலம் கூட்டங்களை நடத்தி, வலைப்பதிவர்களை ஒன்றிணைத்தால் வரும் காலத்தில் நமது தமிழ் வலையுலகத்தை முன்னோக்கி நகர்த்தலாம் என்று கருதுகிறேன்..! தமிழகத்தின் தமிழ்ப் பதிவர்கள் இது குறித்து ஆவண செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

ரொம்ப ஓவரா, சீரியஸா பேசிட்டனோ..? எனக்கே ஒரு மாதிரியாத்தான் இருக்கு..! அதுனால இனி கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாமா..? இனிமேல் வருபவைகளெல்லாம் மொக்கைகளே..! மொக்கைகளைத் தவிர வேறில்லை என்று என் அப்பன் முருகன் மீது ஆணையாகச் சொல்லித் துவக்குகிறேன். 

டிசம்பர் 13-ம் தேதி காலையில் அண்ணன் சஞ்சய்காந்தி போன் செய்தான். “என்னண்ணே எப்படியிருக்கீங்க..? ச்சும்மாதான் ரொம்ப நாளாச்சு பேசி.. பேசலாம்னு நினைச்சேன்..” என்றான். நானும் மிக மகிழ்ச்சியாக என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு பேசுறானேன்னுட்டு ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டு கடைசியா, “ஈரோட்டு வர்றியாடா..?” என்றேன். “எதுக்குண்ணே..?” என்றான். “அதான் சங்கமம் நிகழ்ச்சிக்குடா..” என்றேன். “நான் வரலை.. ஆமா.. இப்படி கூட்டம் போட்டு பேசி என்னத்த சாதிக்கப் போறீங்க..?” என்றான். “என்னடா இப்படிச் சொல்ற.. எப்பவும் போன்ல பேசிக்கிட்டிருந்து, பின்னூட்டம் போட்டுக்கிட்டேயிருந்தா போதுமா..? நேர்ல பார்த்து பழக வேண்டாமா..?” என்றேன்.. “என்னமோ செய்யுங்க.. எனக்கு வேலையிருக்கு.. நீங்க அங்க போறீங்களா..?” என்றான். “என்னையும் மேடையேத்தி பாராட்டப் போறதா கதிர் சொல்றாரு. போகாம எப்படி இருக்குறது..?” என்றேன். “என்னது பாராட்டா..? எதுக்கு..?” என்றான் அண்ணன். “பிளாக்ல ரொம்ப நாளா எழுதிட்டிருக்கேன்ல.. அதுக்காக..” என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். “அப்போ நானெல்லாம் பதிவர் இல்லையாமா? நான் உங்களைவிட சீனியர் தெரியும்ல்ல..! அதென்ன கணக்குல கூப்பிட்டு பாராட்டுறாங்களாம்..?” என்றார் சஞ்சூ.. “தெரியலடா.. கூப்பிட்டாங்க போறேன்.. அவ்ளோதான்..” என்றேன். “சரி.. சரி.. போயிட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான். போனை வைத்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன்.. இவன் ஒருத்தனுக்கே இம்புட்டு கோபம் வருதே.. மத்தவங்களுக்கெல்லாம் வராதா என்று..!

சரி.. அது முடிஞ்சு போச்சு.. இப்போ ஒண்ணும் செய்ய முடியாது. ஆனாலும் அண்ணன் சஞ்சய் விடலை.. 2 நாளைக்கு முன்னாடி கூகிள் பிளஸ்ல, “இந்தப் பதிவர் கூட்டம் நடத்தி என்ன சாதிக்கப் போறீங்க..?”ன்னு கேட்டு தாளிச்சிட்டான்..! இதை கதிர் பார்த்தாரான்னு எனக்குத் தெரியலை.. பார்க்கலைன்னா இப்போ தெரிஞ்சுக்கட்டுமேன்றதுக்காக மட்டுமே இதைச் சொல்றேன். பத்த வைக்குறேன்னு யாரும் சொல்லிராதீங்கப்பா..! நான் ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப நல்லவனாக்கும்..!

சஞ்சய்கிட்ட போன் பேசி முடிச்சுட்டு அடுத்து அண்ணன் அப்துல்லாவுக்கு நானே போன் செய்தேன். “ஈரோட்டுக்கு எப்பண்ணே வர்றீங்க..?” என்றேன்.. “அட போண்ணே.. எங்க வர்றது.. வரலைண்ணே..” என்றார் வெறுப்பாக.. “என்னாச்சுண்ணே..? ஏன் வரலை..?” என்று நான் கேட்க.. “எல்லாம் இந்த ஆதியும், பரிசலும் செஞ்ச வேலைண்ணே.. யுடான்ஸ் பரிசளிப்பு விழாவை வைச்சிட்டாங்களே.. அதான் நகர முடியலை..” என்று அலுத்துக் கொண்டார். “அவங்க நடத்தினா நடத்தட்டும். நீங்க வரலாம்ல..” என்றேன். “எப்படிண்ணே வர்றது..? நான் செஞ்ச ஒரே தப்பு, தெரியாத்தனமா இந்தப் போட்டிக்கு நடுவரா இருந்திட்டேண்ணே.. நடுவரா இருந்தவரே பரிசளிப்பு விழாவுக்கு வராம இருக்கக் கூடாதுன்னு சொல்லி ஈரோட்டுக்கு 'தடா’ போட்டுட்டாய்ங்கண்ணே.. போட்டுட்டாய்ங்க..” என்றார்..! “உங்க நிகழ்ச்சியையாவது கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம்ல.. நாங்களும் கலந்துக்கிட்டிருப்போம்ல.. இப்போ சென்னை பதிவர்கள் எல்லோரும் ஈரோட்டுக்கு போயிட்டிருக்காங்க..” என்றேன் வருத்தத்துடன். “ஆமாண்ணே.. புரியுதுண்ணே.. நானும் கேபிளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.. இந்த ஆதியும், பரிசலும் முடியவே முடியாதுன்னுட்டாய்ங்கண்ணே.. நான் என்னண்ணே செய்யறது..?” என்றார் வருத்தத்துடன். எனக்கும் தாங்க முடியலை.. “ஏன்.. என்ன பிரச்சினை.. ஒரு வாரமாச்சும் தள்ளிப் போட வேண்டியதுதானே.. எல்லாரும் உன்னை கேப்பாங்க அப்துல்..” என்றேன். “யார் கேட்டாலும், நான் சொன்ன இதை அப்படியே சொல்லிருண்ணே.. மைக்ல கூட சொல்லிரு. ஒண்ணும் தப்பில்லை. ஆதியும், பரிசலும் சேர்ந்து பிடிவாதமா பங்ஷனை வைச்சு, அப்துல்லாவை ஈரோட்டுக்கு வரவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்லிரு...” என்றார் அப்துல். பாவம்.. ரொம்ப நொந்து போயிருக்காருன்னு நினைச்சு நானும் “சரி.. ஓகே.. போயிட்டு வரேன்..” என்று சொல்லி போனை வைத்தேன். 

அப்துல் அண்ணன் சொன்னதை ஈரோட்டில் நான் யாரிடம் சொன்னேன் என்று எனக்கு நியாபகமில்லை. மேடையிலும் இதைச் சொல்லவில்லை.  ஆகவே இங்கே பதிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். அவ்ளோதான்.. நான் ரொம்ப, ரொம்ப நல்லவன் சாமிகளா..! இப்பவாவது நம்புங்க..!

இப்போ மேட்டருக்கு வருவோம். ஆதியும், பரிசலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடித்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தலைவர் கேபிளாரும் எங்களுடன் இணைந்து விருது பெற இருந்தார் என்பதை மட்டும் கொஞ்சம் உங்களது மனதில் நிலைநிறுத்தி யோசித்துப் பார்த்தீர்களேயானால், இந்தக் கேளவிக்கான விடை உங்களுக்குத் தானாகவே கிடைக்கும்..!

வந்தால் மட்டுமே விருது என்று ஈரோட்டுக் குழுமம் முடிவு செய்திருந்ததால், நிச்சயமாக கேபிளார் ஈரோடு சென்றே தீர வேண்டும் என்று அடம் பிடித்திருப்பார். அதுவும் அவருடைய ‘அன்னியோன்ய’ நண்பரான, இன்னொரு தலைவர் ஜாக்கியார் விருது பெறும்போது, தானும் அதே ஆண்டு, அதே மேடையில் விருதைப் பெற்றாக வேண்டும் என்று துடித்திருப்பார். ஆனால் ஆமை தோற்றத்தில் நடுவில் புகுந்து கெடுத்தது ஆதியும், பரிசலும்தான் என்றால் இந்தக் கொடுமையை அவர் எங்கே போய்ச் சொல்வார்..? 

ஆதி, பரிசல், வெண்பூ, நர்சிம், கார்க்கி, அப்துல் என்ற கூட்டணி ஒரே சமயத்தில்தான் பதிவுலகத்தில் நுழைந்தார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பின்பு எழுத வந்த கேபிளார், காலப்போக்கில் ‘யூத்து’ என்கிற ஒரேயொரு உரிமையோடு இவர்களிடத்தில் ஐக்கியமாகி இப்போது ஒருவரை விரட்டியடித்துவிட்டு அறுவராகக் காட்சியளிக்கிறார்கள். இதில் மிச்சம் மீதியிருந்த சீனியர்களைவிட்டுவிட்டு ஒருத்தருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தினால், விட்டுவிடுவார்களா அவர்கள்..? நேராகச் சொல்ல முடியாமல் பிளான் செய்து காரியத்தை நகர்த்தி கச்சிதமாகத் தலைவர் கேபிளாரை சென்னையிலேயே முடக்கி விட்டார்கள் என்று இந்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது. 

ஒரு வேளை ஆதியும், பரிசலும் விரும்பியிருந்தாலும் தற்போது ஒபாமாவின் விருந்தினராகச் சென்றிருக்கும், அந்த குண்டு பையன் எதிர்த்திருக்கலாம் என்று கே.ஜி.பி.யின் அறிக்கையும் கூறுகிறது. “கொஞ்சூண்டு தொப்பை வைச்சிருக்கிற கேபிளுக்கு விருது..? அவரைவிட நிறைய தொப்பையோட இருக்குற எனக்கு விருதில்லையா..?” என்று அவர் ஆதியைப் போட்டு பிறாண்டியிருப்பார். பதிலுக்கு ஆதி, பரிசலை கடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இப்படியும் ஒரு சந்தேகம் ரா உளவுத்துறைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது...!

இன்னும் கொஞ்சம் யூகித்தால், ஈரோட்டு சிங்கம் கதிரின் மீதி இருக்கும் கடுப்பினாலும் ஆதியும், பரிசலும் இதனை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சந்தேகிக்கிறது..! “திருப்பூரில் நாங்கள் நடத்துவதற்குள் நீ நடத்துறியா..? கேபிளார் இல்லாம எப்படி நிகழ்ச்சி நடத்துறன்னு பார்க்கலாம்..?” என்று மனதுக்குள் பந்தயம் கட்டி கவுத்திருப்பார்கள் என்று கொடுமுடி ஆற்றின் கரையில் இரண்டு டோபிக்கள் பேசிக் கொண்டார்களாம்..!

இன்னொரு பக்கம் பார்த்தால், தலைவர் ஜாக்கியாரின் இன்னொரு நெருங்கிய நண்பரான பரிசல், ஜாக்கியாருக்கு மறைமுகமாக உதவி செய்யும்பொருட்டு, கேபிளாரைத் தடுத்து வைத்திருக்கலாம் என்றும் டிஸ்கவரி புக் பேலஸ் கூட்டத்தில் யாரோ பேசிக் கொண்டார்கள். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாதாம்..! ஒரே மேடையில் இரண்டு தலைவர்கள் இருந்தால் அது நல்லாயிருக்காது என்று நினைத்து ஜாக்கியாரைத் தூக்கிப் பிடித்து, கேபிளாருக்கு ஆப்படித்திருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்லவில்லை..!

இந்த மணிஜி இருக்காரே மணிஜி.. இவர் பிள்ளையையும் கிள்ளிவிடுவார். தொட்டிலையும் ஆட்டிவிடுவார். இவர் சேட்டைகளை வெளிப்படையாகச் சொன்னால், கூட இருந்த பாவத்துக்காக என்னை வெள்ளாவி வைத்து வெளுத்து விடுவீர்கள். ஆனால் இவரிடமும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவெனில், இவரால் யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், எதிராளியின் டவுசர் கழறும்வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, கடைசி நேரத்தில் ‘வேறு பெயரில்’ வந்தாவது பிரச்சினையை சுபமாக முடித்துவைத்துவிடுவார். இந்த நல்லெண்ணம் காரணமாகவே இந்த அண்ணன், இன்றுவரையிலும் அவரைத் தாக்கியவர்களாலும், அவரால் தாக்குதலுக்குட்பட்டவர்களாலுமே பெரிதும் ரசிக்கப்படுகிறார். 

இவரும் தலைவர் கேபிளாரும்கூடத்தான் டாஸ்மாக்கின் மூலமாக மிக நெருங்கிய நண்பர்கள். எங்கே கேபிளாரும் கூடவே ஈரோட்டுக்கு வந்தால், டாஸ்மாக் சரக்குக்கு கூடுதல் செலவாகுமே என்று நினைத்து அண்ணன் மணிஜியே அடுத்த விளம்பரப் படத்தில் விஜய் ரசிகனாக நடிக்க வைப்பதாக தம்பி கார்க்கியிடம் சொல்லி, அவர் மூலமாக ஆதி, பரிசலை ஆஃப் செய்திருக்கலாம் என்று கேபிளாரே நினைப்பதாக சைதாப்பேட்டை கேபிள் டிவி வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்..!

இதற்கும் மேலாக கேபிளாரின் ‘தற்போதைய’ பாதி உடலான அவரது நெருங்கிய நண்பர் கே.ஆர்.பி.செந்திலும் யுடான்ஸ் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஈரோட்டுக்கு வந்தது நிச்சயம் கேபிளாருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதையும் யோசித்துப் பார்த்தால் கட்டிங் பிரெண்ட் செந்திலை, கேபிளாரின் அருகில் இருந்து பேக்அப் செய்து அனுப்பி வைக்க அந்த நால்வர் கூட்டணி செய்த சதியாகவும் இதனை கருத வாய்ப்புண்டு என்று ஜூனியர்விகடன் கழுகார் எச்சரிக்கிறார்..!

ஆக மொத்தத்தில் தலைவர் கேபிளாருக்கு குழி தோண்டியது, அவருடைய நெருங்கிய நண்பர்களே என்பது இங்கே வெட்ட வெளிச்சமாகியிருப்பதால், இனிமேலாவது ‘ஜாக்கிரதையாக’ இருக்கும்படி அவரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

இன்னும் நிறைய எழுதலாம்தான்.. ஆனா பாருங்க.. சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சிக்காக சென்னை பதிவர்கள் கூட்டத்தில் நான் இனிமேல் அடிக்கடி கலந்து கொள்ள வேண்டி வரும் போலத் தெரிகிறது. போனால் பத்திரமாகத் திரும்பி வரணும் என்ற பயமும் எனக்கு இப்போது இருப்பதால், என் பாதுகாப்புக்காக இந்த மொக்கையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்..!

அத்தோடு பரிசல்கார அண்ணன் வேறு என் மேல் ரொம்ப மதிப்பும், மரியாதையும் வைச்சு ட்வீட்டர்ல “பட் உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு” என்று ட்வீட்டியிருந்தார். எதற்கு என்று தெரியவில்லை. எனது வலைத்தளத்தில் பரிசலின் பின்னூட்டத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அவருக்கு நான் மிகவும் பிடித்தமானவன் என்பதால், அண்ணன் பரிசலுக்கு இங்கேயே அனைவரின் முன்பாகவும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்த ஒரு நாள் மேட்டருக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா என்று நினைக்க வேண்டாம். நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்..! நேரம் இருந்தால், கீழே இருப்பவைகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்..! 




அப்புறம் இன்னொரு விஷயம். ‘ஏதோ’வொரு விஷயத்துக்காக தலைவர்கள் கேபிளாரும், ஜாக்கியாரும் இப்படியொரு பின்னூட்டங்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது தலைவர் கேபிளார் சொன்னது..!

என்ன தலைவரே.. பதிவெழுத ஏதும் கிடைக்கலைன்னா இது மாதிரி எதையாவதை ஆரம்பிச்சு வைச்சிர வேண்டியதா..? ஆஹா.. உடான்ஸ் விழா முன்னமே முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டு விழாவில் சிறப்பிக்க இருந்தவர்களில் நானுமொருவன். அதைவிட்டு நாங்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்ததால், கலந்து கொள்ள முடியவில்லை. சும்மாவாவது குரூப் அது இது என்று பேசுவதை விட்டுவிட்டு அரசியல் ஆக்கப் பார்க்காதீர்கள்..!

இது தலைவர் ஜாக்கியார் சொன்னது..!

ஜாக்கி குருப், கேபிள் குருப் என்று சில பேச்சுகள்  கவனத்துக்கு வருகின்றன..அப்படி எதுவும் இல்லை... சென்னை பதிவர்களை பொறுத்தவரை எவ்வளவு கருத்து மோதலாக சண்டை போட்டுக்கொண்டாலும் நேரில் அதனை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை.. கேபிளுக்கு எனக்கும் கருத்து மோதல் உண்டு ஆனால் அவர் என் நண்பர்..அவரோடுதான் ஒஸ்திபடம் பார்த்தேன்..இரண்டு நாளைக்கு முன் கூட  இரவு  சென்னை லஷ்மன் சுருதி எதிரில் தாகசாந்தி முடித்து விட்டு புகாரியில் நான் கேபிள் மற்றும் நண்பர்களோடு சாப்பிட்டோம்..இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....

இதனை நன்கு படித்து, 
முடிந்தால் மனப்பாடம் செய்துகூட 
வைத்துக் கொள்ளுங்கள். 
மிக விரைவில் 
இவைகள் 
உங்களுக்கு 
நீங்கள் எழுதப் போகும் 
‘ஏதோ’வொரு பதிவின் 
ஆதாரத்துக்காக 
நிச்சயமாகத்
தேவைப்படும்..!!!

இதுவரையில் பொறுமையாக இந்தக் காவியத்தைப் படித்து முடித்த உங்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்கி நன்றி கூறிக் கொள்கிறேன்.

இப்படிக்கு

தமிழ் வலையுலகத்தின் ஒரேயொரு யூத்து

உங்கள் உண்மைத்தமிழன்

படித்து, செத்து மடியுங்கள் - கவிதைகள்

25-12-2011



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஏனோ தெரியவில்லை.. இன்று காலையில் இருந்து கவிதை ஊற்றாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்று எண்ணி கீபோர்டில் இருந்து விலகிச் சென்ற பின்புதான் மனம் கொஞ்சம் ஆறுதல்பட்டு கவிதைகளை தேடுவதை உள்ளுக்குள் நிறுத்திக் கொண்டது. எழுதியதை பிளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்தது போதாது என்று வலைப்பூவிலும் என் நிம்மதிக்காக பகிர்கிறேன்..!

இந்தக் கவிஞர்கள்தான் எழுதினார்களா என்றெல்லாம் பூதக்கண்ணாடி போட்டு தேட வேண்டாம். இப்போதைய பேஷன், எதையாவது எழுதி, கீழே தனக்குப் பிடித்தமான கவிஞர்களின் பெயரை போட்டு பிரபலப்பட்டுக் கொள்வதுதானாம்..! அதான் நானும் களத்தில் குதித்துவிட்டேன்..!


படித்து, செத்து மடியுங்கள்..!


படிக்க மட்டுமே நாம்..!





எதை எதையோ
எவன் எவனோ
எதில் எதிலோ 
எழுதி வைத்திருக்க..
படிக்க மட்டுமே 
நாம்...!


- பெருங்கவிஞர் நீட்சே




உ ஒன்றுதான்..!





உலர்ந்த சிறகு
உடைந்த மனம்
உலராத காதல்
உவப்பாத உணவு
உயராத வாழ்க்கை
உள்ளுக்குள் எல்லாமே
ஒன்றுதான்..!


- கவிக்கோ பைரன்






துள்ளும்வரையிலும் துள்ளு..!






துள்ளி எழுந்ததாம் 
காதல்..!
துள்ளிச் சென்றதாம்
காலம்..!
துள்ளச் சொன்னதாம்
மனம்..!
துள்ளாமல் துள்ளியதாம்
இளமை..!
தள்ளாமை வரும்வரையில்
துள்ளு..!


- பெருங்கவிக்கோ ஷெல்லி






அமைதி காற்றே அமைதி..!







எங்கும் நிசப்தம்
எதிலும் நிசப்தம்
அமைதி காற்றே
அமைதி..!
சில நிமிடங்கள்
அமைதி காற்றே..!

கொஞ்சம் பனி
வீசட்டும்
சிறிது ஒளி
கிடைக்கட்டும்..
அமைதி காற்றே
அமைதி..!

சவக்குழி எனக்காக
காத்திருக்கிறது..
நான் மட்டுமே..
எனக்கு மட்டுமே..
சருகுகளுக்கு அங்கே
இடமில்லை.
தனியனாகவே செல்ல 
விரும்புகிறேன்..
அமைதி காற்றே
அமைதி..!

இலை, சருகுகளை
என்னுடன் தள்ளாதே..
அவைகளாவது 
சூரியனை பார்த்தே
உருவம் இழக்கட்டும்..!


- கவிச்சக்கரவர்த்தி கீட்ஸ்

ராஜபாட்டை- சினிமா விமர்சனம்


23-12-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒரு படம் வெற்றியடைந்தவுடன் அடுத்தப் படத்தின் வெற்றி தானாகவே வரும் என்று நினைப்பதுதான் பல இயக்குநர்களின் எண்ணம். சுசீந்திரனும் அதில் விதிவிலக்கல்ல..! வெண்ணிலா கபடிக் குழுவினால் அவருக்கு வாழ்க்கை கிடைத்தது. நான் மகான் அல்ல படத்தினால் ஹீரோவுடனும் ஜெயிப்பார் என்று நிரூபணமானது. அழகர்சாமியின் குதிரையில் இலக்கியமும் படைப்பார் என்றானது.. ஆனால் இந்த ராஜபாட்டையில் முழுவதுமாக சறுக்கி விழுந்திருக்கிறார்..! பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமே கிடைத்திருக்கிறது..!

அனல் முருகன் என்ற பெயரில் சினிமாவில் வில்லன் நடிகராகப் பெயரெடுக்க நினைத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா நடிகர் விக்ரம்..! தனது மனைவியின் பெயரில் அமைந்திருக்கும் அனாதை ஆசிரம இடத்தை எம்.எல்.ஏ. சீட்டுக்காக கேட்கும் மகனிடமிருந்து தப்பி வந்து விக்ரமிடம் அடைக்கலமாகிறார் கே.விஸ்வநாத். அந்த அனாதை ஆசிரம இடத்தை வளைக்க நினைத்து ஏமாற்றமாகிறார் அக்கா என்னும் அரசியல் வித்தகி ரங்கநாயகி.. மகனைத் தூண்டிவிட்டு தேடச் சொல்கிறார். அவரது அடியாட்களும் தேடுகிறார்கள். விஸ்வநாத் கிடைத்தாரா..? விக்ரம் விட்டாரா? என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கதை என்னவோ தற்போதைய தமிழகத்தின் ஹாட் ஸ்டோரிதான் என்றாலும், திரைக்கதை அரதப் பழசு. 1985-1990-களில் வெளி வந்த மசாலா படங்களின் டைப்பில் திரைக்கதையை எழுதியிருக்கிறார் சுசீந்திரன். இதையெல்லாம் செய்துவிட்டு திரைக்கதை-இயக்கம் என்று தைரியமாக தன் பெயரையும் போட்டிருக்கிறார்.. ஆச்சரியமான தைரியம்தான்..!

அடுத்தடுத்து காட்சிகள் எப்படி வரும்..? என்னவாக வரும்..? வசனங்கள் என்ன..? ஹீரோ என்ன செய்வார் என்பதை முன்பேயே ஊகித்துவிடுவதால் படத்தில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு எந்தவித்த்திலும் சேர்க்க முடியாத வெள்ளரி பிஞ்சாக ஹீரோயின்.. கோவில் இல்லை அட்லீஸ்ட் இவருக்காக போஸ்டர்கூட அடிக்க முடியாத அளவுக்கு ஒரு அழகு ஹீரோயின்..  புகைப்படங்களில் மட்டுமே அழகாக இருக்கிறார். படத்தில் செகண்ட் ஹீரோயின் லெவலில் இருக்கிறார். ஒளிப்பதிவாளருடன் ஏதாவது சண்டையோ..! இவருக்கு அப்படியே நேரெதிர், அக்காவாக நடித்திருக்கும் அரசியல் வில்லி.  குளோஸப் காட்சிகளில் குஷ்பூ போலவே இருக்கிறார்..! பேசாமல் கதையை மாற்றி ஹீரோயினுக்கு அம்மாவாகவாவது வைத்திருந்தால் ரசித்திருக்கலாமோ..?

விஸ்வநாத், விக்ரமுக்கு காதலிக்க அட்வைஸ் கொடுக்கும் காட்சிகளும், ஹீரோயினை லின்க் செய்துவிடும் காட்சிகளும் ரொம்பவே ஓவர் என்றாலும், அந்தக் காட்சிகளில் விஸ்வநாத் இல்லாமல் வேறு நபர்களை வைத்திருந்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மனதில் இருக்கும் மரியாதையை கட் செய்து காக்காய்க்கு போட முடியலை..! டூ மச்சாகவே இருந்தாலும் கொஞ்சம் ரசித்தேன்..!

மகனாக அவினாஷ்..! அப்பாவிடம் கெஞ்சப் போகிறேன் என்று சொல்லிவிட்டு நொடியில் முகத்தை மாற்றிப் பேசும் அந்த ஒரு நடிப்பு அவரது இத்தனை வருட நாடக வாழ்க்கையை பளிச்சென்று சொல்லிக் காட்டியது..! 

தெலுங்கின் மெகா வில்லனான பிரதீப் இதில் வாப்பா என்ற பெயரில் வில்லனாக உருமாறியிருக்கிறார். கதைக்கு வில்லன் தேவைதான் என்றாலும், இப்போதைய காலக்கட்டத்தில் இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச் தேவையா..? வாப்பாவின் தோழர்கள் அனைவரும் அரிவாளோடு ஓடி வந்து முருகனுடன் சண்டையிடுவதை நினைத்துப் பார்த்தால் நிஜத்தில் பகீரென்கிறது..! இதுவரையில எந்தவொரு சினிமாவிலும் இப்படி பகிரங்கமாக முருகனையும், வாப்பாவையும் மோதவிட்டதில்லை என்று நினைக்கிறேன்..! 

தசாவதாரம் படத்தின் மீது அனைத்து அரிதார நடிகர்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அது போன்றே அத்தனை வேடங்களையும் ஒரே படத்தில், ஒரே காட்சியில் இப்படித்தானா வைத்து ஆற்றிக் கொள்ள வேண்டும்..!? விக்ரமின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது..! 

சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் என்றால் அவரது நண்பர்கள் அனைவரும் வாட்டசாட்டமாக ரவுடிகளை போலவே இருப்பார்கள்.. கதைக்குப் பொருத்தமானதாக இருக்கும். திரைக்கதையில் பல்வேறு போலிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் சுசீந்திரன். பிரதீப்பை சிபிஐ, லோக்கல் போலீஸ் என்று ஆள் மாறாட்டம் செய்து விசாரிக்கும் உத்தி, முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும், விக்ரமின் பலவேஷ மேக்கப் காட்சிகள்தான் கொஞ்சம் காமெடியாகிவிட்டது..! இதனைச் செய்யாமலேயே இருந்திருக்கலாம்..!

அவனவன் வட்டிக்கு கடன் வாங்கி, அந்தக் கடன் வட்டியையே கட்ட முடியாமல், திரும்பவும் வட்டிக்கு கடன் வாங்கி.. ஒரேயொரு கையெழுத்தில் 50 வருட சம்பாத்தியத்தையே இழந்து கோடம்பாக்கத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், லட்சங்களில் செலவு செய்து வெளிநாட்டில் போய் ஷூட் செய்திருக்கும் ரீமாசென், ஷ்ரேயா, விக்ரமின் பாடல் காட்சியை இப்படியா எண்ட் டைட்டிலில் வைத்து கொடுமைப்படுத்துவது..? பாவம் தயாரிப்பாளர்.. என்றைக்காவது ஒரு நாள் இதனை நினைத்து தலையணையில் முகம் புதைத்து அழுகத்தான் போகிறார்..!

இடையிடையே நகைச்சுவை என்ற பெயரில் விஸ்வநாத்தும், தம்பி ராமையாவும், எதிரணியில் இருக்கும் 2 மொன்னை ரவுடிகளும் ரவுசு கட்டுகிறார்கள்..! இதுவே போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார்..! 

இசை யுவன்ஷங்கர்ராஜாவாம்.. அனைத்துப் பாடல்களும் யுகபாரதியாம்.. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வார்த்தைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். ஆனாலும் மனதில் நிற்கவில்லை..! ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடும் அழகியைவிடவும் அதன் பாடல் வரிகள் நில்லாததுதான் கொடுமை..! 

கமர்ஷியல் படங்கள் எடுக்கலாம்தான்.. ஆனாலும் விக்ரம் போன்ற மாஸ் ஹீரோக்களை கையில் வைத்துக் கொண்டு அவர் ஏற்கெனவே நடித்த தில், தூள் வகையறாவிலேயே தோசை சுட்டால் எப்படி..? விக்ரமாவது கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டாமா..? தெய்வத்திருமகளில் கிடைத்த பாராட்டுக்களில் கால்வாசிகூட இந்தப் படத்திற்காக அவருக்குக் கிடைக்கப் போவதில்லை..!

ஸாரி.. தலைவலி வரவில்லைதான்.. அதே சமயம் வீணாகிவிட்டதே என்கிற கோபமும் வருகிறது..!

முல்லைப் பெரியாறு - மெரீனாவில் ஒன்றுகூடல்..!

23-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



அனைவரும் வருக..! ஆதரவு தருக..!

சென்னை திரைப்பட விழா - லீனா மணிமேகலையின் திடீர் போராட்டம்..!


15-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

9 ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று மாலை 7 மணிக்கு கொஞ்சம் திருஷ்டிப் பொட்டோடு அமர்க்களமாக ஆரம்பித்தது. முறைப்படி மாலைதான் துவக்க விழா நிகழ்ச்சி என்றாலும், காலையில் இருந்தே படங்கள் திரையிடப்பட்டு வந்தன.

வாசலில் டம், டம் டமாரம் காதைக் கிழிக்க... அங்கே போடப்பட்டிருந்த கேரளாவின் பூக்கோலத்தை யாரும் சரியாகக் கவனிக்காததால் ஆரம்பம் அமர்க்களமாகத்தான் இருந்தது..! சுஹாசினி மணிரத்னமும், பூர்ணிமா பாக்யராஜூம், ஷைலஜா ஷெட்லூரும், பாத்திமா பாபுவும் காலையில் இருந்தே பரபரப்பில் இருந்ததால், அரங்கமும் அதே பரபரப்பில்தான் இருந்தது.

காலை காட்சிக்குப் பின்பு உட்லண்ட்ஸில் காட்சிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டு அலங்கார வேலைகள் அமர்க்களப்பட்டன. ஆத்தா வருவார் என்று எதிர்பார்த்து அவர் வராமல் போக, முதல் முறையாக.. இந்த ஆட்சி அரசவை ஏற்ற பின்பு, ஒரு சினிமா விழாவுக்கு அமைச்சர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை என்பதால் கொஞ்சம் விமரிசையாகவே அவரை வரவேற்போம் என்று நினைத்துவிட்டார்கள்..!

மேடையில் இரண்டு பக்கமும் ஜெயா டிவியின் லோகோ அசத்தலாக இருக்க ஸ்பான்ஸர் லிஸ்ட்டிற்காக பணம் கொடுத்தவர்கள் பட்டியல் இருபதைத் தொட்டிருந்த்து. சென்ற சில ஆண்டுகளில் பட விழாக்கள் நடக்கும்போது உடனிருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்த அமைப்பின் துணைத் தலைவரான, நடிகர் எஸ்.வி.சேகர் இந்தாண்டு ஏனோ தலைமறைவாகிவிட்டார். 

அவருக்குப் பதிலாக அவரது இடத்தை அண்ணன் சரத்குமார் பிடித்துக் கொண்டார். அவரது மீடியா வாய்ஸ் பத்திரிகைதான் இந்த்த் திரைப்பட விழாவின் பிரதான பத்திரிகை ஸ்பான்ஸராம்..! ஆத்தாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதும், 25 லட்சம் ரூபாய் டொனேஷன் கிட்டியதும் நாட்டாமையின் செல்வாக்கினால்தான்..! 

யாரோ ஒரு நடிகை என்றார்கள். பி.எம்.டபிள்யூ காரில் வந்திறங்கி உள்ளே வந்தவரை அப்படியே சுவர் ஓரமாக நிறுத்திவைத்து ஏதோ ஓவியம் வரைவதைப் போல சுட்டுத் தள்ளினார்கள் வீடியோகிராபர்களும், புகைப்படக்காரர்களும்..! முடிந்த்து என்று சொல்லி படியேறப் போனவரை மீண்டும் தடுத்துப் பிடித்து எனக்கு மட்டும் என்று சொல்லி 2 பேர் போட்டோ புடிக்க.. திரும்பி நின்ற அந்த நடிகை அந்த 2 பேரும் தங்களது செல்போனில் தனது அழகை தைரியமாகப் படம் புடித்த அழகைப் பார்த்து தன் சூரிய விழி கண்களில் டஜன் கணக்கான அதிர்ச்சியைக் கொடுத்தார். 

சரியாக 6 மாதங்கள் கழித்துச் சந்தித்த நண்பர் ரோசாவசந்த், சரியாக 1 மாதம் கழித்துச் சந்தித்த அண்ணன்மார்கள் ஜாக்கிசேகர், நித்யாவுடன் அரங்கத்திற்குள் அடித்துப் பிடித்துதான் நுழைய முடிந்தது.. டிவி சேனல்களின் அராஜகம் அதற்குள்ளாகவே அங்கே பட்டையைக் கிளப்பிவிட்டது. உட்கார்ந்திருப்பவர்களுக்கு தங்களது பரந்த முதுகைக் காட்டியபடியே கேமிராமேன்கள் நிற்க.. சிலர் கத்தியும், பலர் தன்மையாகச் சொல்லியும் தள்ளி நிற்கும்படி அனத்திக் கொண்டேயிருந்தார்கள். இவர்கள்தான் ஜெயா டிவியில் குஷ்பூவின் முதுகு தெரியும் ஜாக்கெட்டை பற்றியே பேசிக் கொண்டிருந்த மகாத்மாக்கள்..!

மெயின் ஸ்பான்ஸர் ஜெயா டிவிதான் என்றாலும், அனைத்து டிவி சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.. பிரபலங்கள் பாத்ரூம் செல்வதைக்கூட எடுத்து வெளியிடத் தயாராக இருக்கும் நிலை இன்றிருப்பதால் முடிந்த அளவுக்கு ஓசியில் பிரியாணி சாப்பிடத் தயாராகவே வந்திருந்த்து மீடியாக்கள்..!

இருக்கைகள் நிகழ்ச்சி துவங்க அரைமணி நேரம் இருக்கும் முன்பாகவே நிரம்பி வழிய.. முன் வரிசையில் வி.வி.ஐ.பி. வரிசைகளில்கூட பழக்க தோஷத்தில் தமிழர்கள் தொற்றிக் கொள்ள.. படாதபாடுபட்டு அவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் விழா நடத்துனர்கள்..!

ராஜேந்திர பாலாஜி என்ற அமைச்சரொருவர் விழாவினைத் துவக்கி வைக்க வந்தார். அவருடைய கைத்தடிகளாக 20 பேர் திமுதிமுவென உள்ளே நுழைந்து மிச்சம், மீதமிருந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்ள.. நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் செய்தவர்களெல்லாம் நிற்க வேண்டியதாகிவிட்டது..! வேணும்டி உங்களுக்கு..! 

அமைச்சருக்கு சேகர் கபூர் யார் என்று தெரியவில்லை.. அமைச்சரின் அருகில் வந்து அமர்ந்த அவரை பார்த்து ஒரு சின்ன ஸ்மைல்.. ஒரு மரியாதை.. ம்ஹூம்.. தேமே என்று தேவாங்குபோல் அமர்ந்திருந்தார் அமைச்சர். உலகத்தின் எட்டாவது அதிசயமாக தனியொரு நபராக வந்திருந்து ஒட்டு மொத்த கைதட்டல்களையும் அள்ளிச் சென்றார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

இதுக்கு மேலும் தாமதித்தால் பசங்க தாளித்துவிடுவார்கள் என்ற பயம் வந்ததால் பீமபுஷ்டி அல்வாவுக்கு விளம்பரம் கொடுக்கும் அழகில் இருக்கும் கோட்டு, சூட்டு போட்ட கணேஷ் வெங்கட்ராமனையும், வேஷ்டியுடன் சிக்கென்று இருந்த பார்த்திபனையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக்கி மேடைக்கு அழைத்தார்கள். கணேஷ் ஆங்கிலத்தில் பொளந்து கட்ட, பார்த்திபன் தன் பங்குக்கு தமிழில் பொளந்தார்.

பொண்ணுகள், பையன்கள், சைட் அடிப்பது, காதலிப்பது, லுக்கு விடுவது.. இதைத் தவிர வேறு எதையும், எங்கேயும் பேசக் கூடாது என்று கங்கணம் கட்டியிருக்கிறாரா பார்த்திபன்..? அவரே ஒரு இள வயது பெண்ணுக்கு அப்பன்தான்.. அந்த நினைப்பாவது அவருக்கு இருக்கா..? வந்திருக்கும் வயசுப் பசங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்குறதா நினைத்து அவர் பேசினதுல ஒண்ணுமே இல்லை..!

அப்பாலிக்காதான் மேடையே ஆடுச்சு.. வத, வதன்னு ஆணும், பொண்ணுமா வந்தாங்கோ.. ஆடினாங்கோ.. “யாரடி நீ மோகினில” இருந்து “கொலைவெறிடி” பாட்டுவரைக்கும் நாலு, நாலு வரிக்கெல்லாம் ஸ்டெப் வைச்சு ஜெயா டிவிக்கு மார்க்கெட்டிங் பண்ணி முடிச்சாங்க.. சர்வதேசத் திரைப்பட விழான்னு பேர் வைச்சுக்கிட்டு இது என்னாத்துக்கு..? இதற்குப் பதிலாக பழைய தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பையே காட்டியிருக்கலாம். வந்திருந்த வெளி மாநில, வெளிநாட்டு விருந்தினர்களுக்காவது புதிய விஷயமாக இருந்திருக்கும்.. சொதப்பல்..!

விழாவில் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்த்துதானோ என்னவோ மேடையில் சரியாக கிரங்கள் வரிசையாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சேகர் கபூர் மேடையேறியபோது அவருக்கு மனதிருப்தி கிடைக்கும் அளவுக்கான கை தட்டல்கள் கிடைத்தன என்று நினைக்கிறேன்.

குத்துவிளக்கை ஏற்ற 3 குடும்பக் குத்துவிளக்குகளை மேடையில் ஏற்றினார்கள். கார்த்திகா, தன்ஷிகா, இவர்களுடன் ஒரு நடிகை.. பெயர் மறந்துபோய்விட்டது. ஆளுக்கு 2 இடங்களில் பற்ற வைத்துவிட்டு கடமை முடிந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தங்களது ஒய்யார கொண்டையை சிலுப்பிவிட்டுக் கொண்டு அமைச்சருக்கு மட்டும் டென்ஷனை ஏற்றிவிட்டு போனார்கள்..! 

பேசிய அனைவரும் 2 நிமிடங்களில் தங்களது பேச்சுக்களை முடித்துவிட்டாலும் ஒருவரும் உருப்படியாகப் பேசவில்லை என்பதால் எதையும் குறிப்பிட முடியவில்லை..! சேகர் கபூர் பேசத் தயாராக இருக்கும் நிலையில்தான் திடீரென்று அரங்கத்தில் ஒரு சலசலப்பு. பதாகைகளைத் உயரத் தூக்கியபடியே “தணிக்கை செய்யாதே.. செங்கடலை தடை செய்யாதே” என்ற கூக்குரல்கள் எழுந்தன. ஸ்டேண்டில் பொறுத்தப்பட்டிருந்த கேமிராக்கள் நொடியில் கேமிராமேன்களின் கைகளுக்குத் தாவ.. அவர்களைச் சுற்றிலும் பிளாஷ் மழைகள்..! 

பிரபல எடிட்டர் பி.லெனின் தலைமையில், அருண்மொழி, அம்ஷன்குமார், வெளிரங்கராஜன் என்ற பிரபலங்களுடன் லீனா மணிமகேலை தனது செங்கடல் படத்திற்காக நீதி கேட்டு கூக்குரலை எழுப்பினார். வந்திருந்தவர்களில் பாதி பேருக்கு விஷயம் தெரியவில்லை என்பதால் குழப்பத்துடன் பார்க்க.. பேசுவதற்காக எழுந்து வந்த சேகர் கபூர், சிறிது நேரம் அமைதி காத்து வேடிக்கை பார்த்தார்.

வாலண்டியராக நியூ காலேஜில் படிக்கும் மாணவர்களை அமர்த்தியிருந்தால் அவர்களுக்கு இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று தெரியவில்லை. பல சினிமாக்காரர்கள் அவசரமாக அங்கே ஓடி வந்து பார்க்க எடிட்டர் லெனினே கோஷம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் அப்படியே சிலையாய் நின்றார்கள்..!

சரத்குமார் மேடையில் இருந்தபடியே மைக்கில் சொல்லிப் பார்த்தார். கேட்காததால் கீழே இறங்கிவந்து லெனினிடம் பேசினார். லெனின் மீதிருந்த மரியாதையின் காரணமாக ஒரே வரியில், “இந்த பெஸ்டிவலில் இந்தப் படத்தை நிச்சயமாக திரையிட நான் ஏற்பாடு செய்கிறேன். என் மேல நம்பிக்கை வைச்சு போராட்டத்தை முடிச்சுக்குங்க..” என்று சரத்குமார் கேட்டுக் கொள்ள.. ஒரே நொடியில் அந்தப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. (எனக்கு ஒரு ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகவே எனக்குத் தெரிகிறது.. ஹி.. ஹி.. ஹி.. அடி வாங்கறதுக்கு முன்னாடியே வாங்குற மாதிரி நடிச்சிட்டோம்ன்னா வலி குறையும் பாருங்க.. அதுக்குத்தான்..!)  

இந்தக் களேபரத்துக்கு இடையில் திடீரென்று அரங்கமே எழுந்து நின்று எதற்கோ ஆரவாரம் செய்ய என்னடா என்று மேடையை பார்த்தால், நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்..! என்ன கொடுமை சரவணா இது..?

லீனா முறைப்படிதான் தேர்வுக் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறார். விண்ணப்ப மனுவையும் தவறில்லாமல் நிரப்பியும் அனுப்பியிருக்கிறார். எப்படியும் தேர்வாகிவிடும் என்று காத்திருந்தவருக்கு லிஸ்ட்டில் பெயர் இல்லை என்றதும் அதிர்ச்சியாகியிருக்கிறது. போன் செய்து விபரம் கேட்டவருக்கு சரிவர பதில் சொல்லவில்லை. இதுதான் அவருக்கு அசாத்தியமான கோபம் வரக் காரணம்..! ஏதாவது இருந்தால்தானே அவங்க சொல்வாங்க..?

கோவா பிலிம் பெஸ்டிவலில் இந்தியன் பனோரமாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் செங்கடல் மட்டுமே..! அதேபோல் பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா என்று 2 விழாக்களிலும் தமிழ் மொழி சார்பாகவும் செங்கடல் திரையிட தேர்வாகியிருக்கும் சூழலில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடத்தப்படும் திரைப்பட விழாவில் மட்டும் தேர்வாகவில்லையெனில் இது எந்தவகையில் நியாயம்..?

ஆத்தாவிடம் 25 லட்சம் வாங்கியிருக்கிறோம். மாநில, மத்திய அரசுகளை வன்மையாகக் கண்டிக்கும் செங்கடல் படத்தை வெளியிட்டால் ஆத்தாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பயம்தான் இதற்கான முதல் காரணமா நான் நினைக்கிறேன். வேறு இருக்க முடியாது.. தேர்வுக் கமிட்டியினராக நடிகை ரோகிணி, மதன், பிரதாப்போத்தன் மூவரும் இருந்துள்ளனர். 

இதேபோல் சென்ற ஆண்டுக்கான சிறந்த மாநில மொழித் திரைப்படம், சிறந்த பாடலாசிரியருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என்று 3 தேசிய விருதுகளைப் பெற்ற தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படமும் இந்த பெஸ்டிவலில் சேர்க்கப்படவில்லை. இதற்கு விழா அமைப்பினர் சொல்லும் பதில், “அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. அதனால் நாங்கள் செலக்ட் செய்யவில்லை..” என்பது. ஆனால் விழா அமைப்பாளர்களில் ஒருவரான சந்தானம் என்பவர் டிவி மீடியாக்களுக்கு பதில் அளித்தபோது இந்தியன் பனோரமாவில் இடம் பெற்றிருக்கும் சில படங்களுக்காக அந்தந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை நாங்களே கேட்டு விண்ணப்பம் அனுப்பச் சொன்னதாகச் சொல்கிறார். “ஏன் இதே போல் தென்மேற்குப் பருவக் காற்று படத்துக்கும் கேட்டிருக்கலாமே..?” என்கிறார் அதன் இயக்குநர் சீனுராமசாமி. நியாயமான கேள்விதான்..! ஆனால் இதற்கு விழா கமிட்டியினரிடம் இப்போது பதில் இல்லை.

சீனு ராமசாமி இதனை இயக்குநர் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு போக.. செயலாளரான இயக்குநர் அமீர், விழா கமிட்டியினரிடம் கேட்டும் இதே பதில்தான் வந்திருக்கிறது. அதே நேரத்தில் விழா கமிட்டியில் பாரதிராஜாவின் பெயரும், தன் பெயரும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியான அமீர், தனக்கு யாதொரு பொறுப்பும் இல்லாமலேயே தனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆத்தாவின் கவனத்துக்குக் கொண்டு போய், விழாவுக்கு ஜெயலலிதா செல்லக் கூடாது என்றும், இந்த பட விழாவை இயக்குநர்கள் சங்கம் புறக்கணிப்பதாகவும் அறிக்கையே வெளியிட்டார்.

சரத்குமாரே பக்கத்தில் இருப்பதால் இதைப் பற்றியெல்லாம் விழா கமிட்டியினர் இப்போதுவரையிலும் கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் செங்கடல் போலவே, தென் மேற்குப் பருவக் காற்று படமும் இதே விழாவில் திரையிடுவதற்கான முன் முயற்சிகள் இந்த இரவில் இருந்தே நடந்து வருகின்றன.  இந்த 2 படங்களையும் திரையிட்டால் தமிழுக்கும், தமிழகத்திற்கும் பெருமை கிடைக்கும்.

அத்தோடு திரைப்பட விழாக்கள் சென்சார் போர்டுகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், அவர்களை போலவே உள்ளடி வேலையில் இறங்குவது கேவலமான செயல்..! கலைஞனுக்கு கலைஞனே எதிரியாக இருக்கக் கூடாது..! மக்களுடைய வரிப்பணத்தில் நடத்தப்படும் ஒரு விழா, அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு சிலரின் ஆசைகளுக்காகவும், எதிர்ப்புகளுக்காகவும் அடிபணிந்து நடப்பதாக இருக்கக் கூடாது.. 

சேகர் கபூரின் ஆங்கில உரைக்கு பின்பு அமைச்சரின் நீண்ட நெடிய உரை அரங்கேறியது. கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியது போலவே அவர்களே, இவர்களே என்றழைத்து இது போன்ற விழாக்களுக்கு இவர் மாதிரியான ஆட்களை அழைக்கவே கூடாது என்பதை கச்சிதமாக நிரூபித்தார் அமைச்சர் பாலாஜி..! 

ஆத்தா 25 லட்சத்தை வாரிக் கொடுத்திருப்பதால் அமைப்பின் செயலாளரான தங்கராஜ், என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு தனது ஆங்கில நன்றியுரை பேச்சில், “புரட்சித் தலைவி அம்மா” என்று தமிழில் சொல்லியது ஐ.சி.ஏ.எஃப் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று..! நோட் செய்து வைத்துக் கொள்வோம். அடுத்து தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!

நிகழ்ச்சி முடிந்தவுடனேயே டிவி கேமிராக்கள் லீனாவையும், அவருடைய கூட்டத்தினரையும் மாறி, மாறி பேட்டி எடுக்கத் துவங்க.. இந்தக் களேபரத்தில் வெளியே வந்த ஜூரிகள் மூன்று பேரும் பேட்டியளிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டனர். யாராச்சும் ஒருத்தராவது பேட்டி கொடுங்க என்று மீடியாக்கள் விழா கமிட்டியினரை நச்சரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியில் வர.. அவ்வளவுதான்.. திரைப்பட ஆர்வலர்களும், குஞ்சுகளும், சுளுவான்களும் அவருடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டு நிற்க.. சீனிவாசனின் மனைவியே இந்தக் கூத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தது சீனிவாசனைவிடவும் காமெடியாக இருந்தது..!

இந்த காமெடிக் கூத்துக்கள் இன்னும் 8 நாட்கள் தொடரும்போல தெரிகிறது. ஏனெனில் நம்ம பவர் ஸ்டார், விஐபி பாஸ் வாங்கி வைத்திருக்கிறாராம். எப்பல்லாம் படம் பார்க்க வந்து, தியேட்டரை காலி செய்யப் போறாரோ தெரியவில்லை..! காத்திருப்போம்..!


நன்றி : indiaglitz.com

ஒஸ்தி - சினிமா விமர்சனம்

10-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹிந்தி தபாங்கின் ரீமேக். எந்த லாஜிக்கும் பார்க்கவே கூடாது..! டிக்கெட் வாங்கினோமா? உள்ள போனோமா? உக்காந்தோமா? பார்த்தோமா? சிரிச்சோமா..? எந்திரிச்சு வந்தோமான்னு ஐடியா இருந்தா இந்தப் படத்துக்குப் போங்க.. அதாவது வாசல்லேயே மூளையைக் கழட்டி வைச்சிட்டு, விமர்சனத்துக்குன்னு கூட போயிராதீங்க..!


சிம்பு.. அவரோட அம்மா ரேவதி. ரேவதியோட செகண்ட் ஹஸ்பெண்ட்டு நாசர். அவங்களுக்கு பொறந்த பையன் ஜித்தன் ரமேஷ். சின்னப் புள்ளைல சிம்புவை விட்டுட்டு, ரமேஷை செல்லமா வளர்க்குறாரு நாசர். கடுப்புல கெடக்காரு சிம்பு. ஆத்தாவுக்கு பஞ்சாயத்து பண்றதே வேலையா போகுது..! உருப்பட மாட்டான்னு சொல்ற சிம்பு எப்படியோ ஷோகேஷ் பொம்மைக்கு காக்கி யூனிபார்ம் போட்டு காட்டுற மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டரா ஆயிடறாரு.. நல்லா வருவான்னு நினைச்ச தம்பி ரமேஷு.. உருப்படாமலேயே போயிடறாரு.. அந்த ஊர் கெட்ட அரசியல்வியாதி சோனுசூட்டை இடைத்தேர்தல்ல ஜெயிக்க விடாமல் இருக்க அத்தனையும் செய்யறாரு சிம்பு. அவர் தம்பியை வைச்சே அவர் குடும்பத்தை உடைக்குறாரு சோனு. கடைசீல பாசம் சேர்ந்துச்சா..? பகை புட்டுக்கிச்சான்றதை உங்க மூணாவது கண்ணுல நினைச்சுப் பார்த்துக்குங்க..!

தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அண்ணன் தரணியின் ஒரு அம்சக் கொள்கை.. அதுக்காக கமர்ஷியலை விடவே கூடாதுன்னு இடுப்புல போட்டிருக்குற அண்ணாக்கயிறு மாதிரி இறுக்கமா புடிச்சிட்டே இத்தனை வருஷமா புல் ஸ்கேப்புல ஓடிக்கிட்டிருக்காரு..!

சிம்புவோட மேனரிசம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக ஸ்டைலா பேசுறேன்னு சொல்லி திருநெல்வேலி தமிழைக் கொத்துப் புரோட்டோ போட்டதுதான் தாங்க முடியலை.. எத்தனை ஏலேதான் நிமிஷத்துக்கு பேசுவாங்க.. ஒரு தபா ஆரம்பிச்சா பத்தாதா..? போதாக்குறைக்கு பில்டப் வசனங்கள் வேற..! காமெடியான கேரக்டர் ஓகேன்னாலும், டூட்டிலேயும் இதே மாதிரி காமெடியாத்தான் இருக்கணுமா? டோட்டலா அவரோட கேரக்டர் ஸ்கெட்ச்சே இதுல காமெடியாகி எதையுமே உண்மையா ரசிக்கவும் முடியலை.. இல்லைன்னும் விட முடியலை.. ரெண்டுங்கெட்டான் போலீஸா ஆயிருக்காரு சிம்பு..!

பக்கம் பக்கமா வசனம்.. நம்ம அண்ணாத்தே பரதன் எழுதியிருக்காரு. தில், தூள், கில்லி, குருவின்னு தரணியோட ஆஸ்தான வசனகர்த்தா. அழகிய தமிழ் மகன் படத்தோட இயக்குநர். அந்த ஒரு படம் ஓடலைன்னா என்ன..? இருக்கவே இருக்கு வசனகர்த்தா தொழில்ன்னு அண்ணன் இதுல அடிச்சு விளையாடிட்டாரு..! இவரோட வசனங்களை அழகா ஸ்பேஸ் விடாம எடுத்துவிட்டிருக்கிறது சந்தானம்தான்..!

அந்தக் கால கவுண்டமணியை இப்போதைக்கு கொஞ்சமா ஞாபகப்படுத்துறாரு சந்தானம். இவர் மட்டும் இல்லேன்னா தியேட்டரே ரவுசாயிருக்கும்.. படத்தையும் இவர்தான் காப்பாத்தியிருக்காருன்னு அடிச்சுச் சொல்ல்லாம்..! “ஆக்ரோஷமா பேச வேண்டிய வசனத்தை, ஆட்டுக்குட்டியை தடவிக் குடுக்குற மாதிரி பேசுறியே..” என்ற இடத்தில் உம்மனா மூஞ்சிகளும் சிரிக்கத்தான் வேண்டும்..! பீர் பாட்டிலை லுங்கில ஒளிச்சு வைக்கணும்னு சொல்ற டயலாக்கும், "கோவைப் பழம் மாதிரி ஹீரோயின், கொட்டாங்குச்சி மாதிரி ஹீரோ"ன்ற டயலாக்கும் சிரிக்க வைக்கின்றன..! எனிவே பெஸ்ட் ஆஃப் காமெடி இன் சந்தானம்ஸ் கேரியர்..! நன்றி பரதன் அண்ணா...! இருந்தாலும் அவ்வப்போது இரட்டை அர்த்த டயலாக்குகளையும் வழக்கம்போல அள்ளித் தெளித்திருக்கிறார். இதுக்காக அவர் தலைல 2 கொட்டு கொட்டிரலாம்..!

ரிச்சாசாசாசாசாசாசாசாசாசாசாசாசாசாசா....... அறிமுக சீன்ல அப்படியே பனிக்கட்டியை உருக வைச்சு அதுல சிலை செஞ்ச மாதிரி நிக்குறப்போ எவனுக்கு லவ் பீலிங் வராது.. வரும்.. அதுலேயும் அந்த லூஸூ இன்ஸ்பெக்டருக்கு வரலைன்னா நிச்சயமா அவன் லூஸே இல்லை. ஸோ.. காதல் பத்திக்கும் அந்தக் காட்சிக்கு இடைலேயே பரபர சேஸிங்கையும் வைச்சு ரன்வேல பத்தியிருக்காரு திரைக்கதையை.. வெல்டன்..!

படம் முழுக்க அம்மணி பேசியிருக்குற வசனத்தை ஒரேயொரு ஏ4 பேப்பர்ல எழுதிரலாம்.. மயக்கம் என்னவில் பார்த்த ரிச்சாவுக்கும், இதுக்கும் நிறைய வித்தியாசம். அழகும்கூடவே இருக்கு.. கோபிநாத் இதை மட்டும் கச்சிதமா செஞ்சிருக்காரு..! அப்ப்ப்போ இடுப்பு தெரியற மாதிரியும், முழு முதுகும் தெரியற மாதிரியும் அங்கிட்டும், இங்கிட்டுமா நடக்க வைச்சு.. என்னை மாதிரி யூத்துக்களை..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வேணாம்.. நம்ம வினவு அண்ணாச்சிக நம்ம தளத்தை உன்னிப்பா வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்குற மாதிரி தெரியுது. எதுக்கு வம்பு..? இத்தோட இந்த மேட்டருக்கு மங்களம் பாடிருவோம்..!

படத்துல வேஸ்ட்டான மேட்டர் மல்லிகா ஷெராவத்தின் குத்துப் பாட்டும், டான்ஸும்தான்.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா..? அடப் போங்கப்பா..!  சோனுசூட்டுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவரை கண்டிப்பா பாராட்டணும்.. இப்படியொரு ஹிந்தி மாடுலேஷனையும் கச்சிதமா ஏலே, வாலே, போலேன்னு பேச வைச்சு அதையும் கச்சிதமா செஞ்சிருக்காங்க..! நாசர், ரேவதி ஓகே.. பட் பீல் குட்.. மருத்துவமனையில் நாசரிடம் சிம்பு பேசும் வசனங்களும், அப்பா என்றழைக்கும்போது நாசரின் ஆக்சனும் பெர்பெக்ட்..!

பாடல்களையெல்லாம் மனப்பாடம் செஞ்ச மாதிரி அல்லா யூத்துகளும் பாடிக்கிட்டேயிருக்காங்க. நமக்குத்தான் மண்டைல ஏற மாட்டேங்குது.. இத்தனை வசதி, வாய்ப்புகள் கொடுத்தும், ஹீரோயினை நடக்க விட்டே பாட்டு சீன்களை எடுத்தது ஏன்னுதான் தெரியலை.. அதுலேயும் அந்த பிளைட் பக்கத்துல நின்னு இவங்க கொடுக்குற டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.. அநியாயத்துக்கு வேஸ்ட்டு.. ஒருவேளை டான்ஸ் மாஸ்டரை கூட்டிட்டு போகலியோ..?

விஜயகுமார்ன்னு ஒரு ஆக்டர் ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் என்ட்ரி..  போலீஸ் கான்ஸ்டபிள்களாக தம்பி இராமையா, மயில்சாமி, கோஷ்டியுடன் சந்தானம் எடுத்துவிடும் டயலாக்குகளால்தான் இந்த குருப்பீன் டெர்ரர் கும்மி படம் பார்ப்பவர்களின் கழுத்தை பதம் பார்க்காமல் விடுகிறது..! 

இப்படி அலுங்காமல், குலுங்காமல் சிரிச்சு பேசியே ஒரு சாதாரண இன்ஸ்பெக்டரால் பண முதலைகளையும், அரசியல்வியாதிகளையும் சமாளிக்க முடியுமெனில்.. உஷ்.. அதான் முதல் பாராவிலேயே சொல்லிட்டேன். நோ லாஜிக்.. ஒன்லி எண்ட்டெர்டெயிண்ட்.. எண்ட்டெர்டெயிண்ட் எண்ட்டெர்டெயிண்ட்!

ரொம்ப நாள் கழிச்சு பொட்டி வரலைன்னு கன்னத்துல கை வைச்சு காத்துக்கிட்டிருந்த ரசிகர்களை காசி தியேட்டர்ல பார்க்க வேண்டியதா போச்சு.. முந்தின படங்களுக்குத் தர வேண்டிய பாக்கியை மொதல்ல எடுத்து வை என்ற விநியோகஸ்தர்களின் கடைசி நேர நெருக்கடியினால் குறள் டிவி ஓனரான டி.ஆரே, தனது சொந்தப் பணத்தில் கொடுப்பதுபோல் கொடுத்து, அதையும் இந்தப் படத்துக்கான விநியோகப் பணமாக தானே எடுத்துக் கொண்,டு ஒரு வழியாகப் பஞ்சாயத்து பேசி மதியம் 3 மணிக்குத்தான் முதல் ஷோவே ஓடியிருக்கு..! 

சினிமாவை விமர்சிப்பவர்களை ஒரு நாளைக்கு இந்தக் கடைசி நேர பஞ்சாயத்தில் பார்வையாளர்களாக உட்கார வைக்க வேண்டும். அவர்களுடைய ரியாக்ஷனை தெரிந்து கொள்ள ஆசை..! என்னவோ போங்க..! நேர்மை இரண்டு பக்கமும் இருந்தால் பிரச்சினையில்லை.. ஒரு பக்கம் என்றால் இது போலத்தான் நடக்கும்..!

ஒஸ்தி - சிலருக்கு நாஸ்தி.. பலருக்கும் குஸ்தி..!