சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..!



ஜி.எஸ்.டி. என்பதற்கு தமிழில் சரக்கு மற்றும் சேவை வரி’ என்று பெயர். இந்த ச.சே. வரியானது முன்னர் மத்திய மற்றும் மாநில அரசால் வசூலிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஒரே வரியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தலைவர் நிர்வகித்து வருகிறார். இந்த சரக்கு மற்றும் சேவை வரியானது ஒவ்வொரு மதிப்பு கூட்டல் நிலையிலும் தனியாக வரி செலுத்த வேண்டும் என்பதை உறுதிபடுத்துகிறது.

முன்னர் நம் நாட்டில் ஒரு பொருளை விற்பனைக்கு கொண்டு வர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி போன்ற பல வகையான வரிகளை நாம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டும். இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு முறை இருந்து வந்தது.

இதனை மாற்றி நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த ச. சே வரி முறை ஆகும்.

இந்த ச. சே வரி விதிப்பின் மூலம் உற்பத்தியாகும் பொருள்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரம் நாம் சேவைகளாக பெறும் அழைப்பேசி, உணவகம், வலைத்தளம், காப்பீடு, போக்குவரத்து, கட்டுமானம், அழகு நிலையம் ஆகியவற்றின் சேவைகளை பெறுவதற்குரிய செலவுகளும் அதிகரித்துள்ளது.

இந்த ச. சே. வ ஆனது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. மத்திய ச. சே. வ (CGST)
2. மாநில ச. சே. வ (SGST)
3. ஒருங்கிணைந்த ச. சே. வ (IGST).

இதில் ஒரே மாநிலத்திற்குள் விற்கப்படும் பொருட்களுக்கு CGST மற்றும் SGST செலுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்கப்படும் பொருட்களுக்கு IGST மட்டும் செலுத்தப்படுகிறது.

தற்போது டீசல், கச்சா எண்ணெய், பெட்ரோல், எரிவாயு மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவைகள் தற்காலிகமாக ஜி.எ.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை.

இது தவிர மற்ற சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு முறையே 0%, 3%, 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் வரி கணக்கீடு செய்யப்படுகிறது.

இதில் அத்தியாவசிய தேவைகளான உணவு பொருட்களுக்கு 0% முதல் 5% வரை வரி விதிக்கப்படுகிறது.

தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள உலோகங்களுக்கு 3% வரி விதிக்கப்படுகிறது.

இது தவிர அத்தியாவசிய சேவைகளுக்கு 5% முதல் 12% வரையும் இதர சேவைகளுக்கு 18% வரையும் வரி விதிக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வரி என்பதால் இதனை செலுத்துவதன் மூலம் பொருள் அல்லது சேவையைத் தரும் நிறுவனத்தின் செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளது.

தனித்தனியாக அனைத்து வரிகளையும் செலுத்தும்போது ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டு இருந்ததால், சரக்கு மற்றும் சேவைகளின் விலை முன்னர் அதிகமாக இருந்தது.

ஆனால் ச. சே. வ அமல்படுத்திய பின்னர் ஒரே வரி என்பதால், ஒரே மாதிரியான வரியை அனைவரும் கட்ட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒருவர் 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளைத் தயாரித்து, அதில் ச. சே. வரியை சேர்த்து 520 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக் கொண்டால் இதனை வாங்கும் முகவர், ச. சே. வ தவிர்த்து வாங்கிய விலைக்கும், விற்ற விலைக்கும் இருக்கும் வித்தியாசத்துக்கும் மட்டும் வரி செலுத்தினால் போதும் என்பதே ச. சே. வரி விதிப்பின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி(GST) விதிப்புக்கு பின் மத்திய அரசுக்கு உற்பத்தியாளர் துவங்கி, முகவர், மொத்த விற்பனையாளர், அந்தப் பொருளை கடையில் விற்கும் சிறு வணிகர்கள் வரை அனைவரிடமிருந்தும் வரி கிடைக்கிறது. இதனால் மத்திய அரசின் வருவாய் அதிகரித்துள்ளது.

அதுபோல மாநில அரசுகளுக்கும் சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டுக்குமே வரி கிடைப்பதால், வருவாய் அதிகரித்துள்ளது.

இந்த ச.சே.வரி விதிப்பிற்கு பின்னர் உற்பத்தி நிறுவனங்களின் செலவு குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் அந்தப் பொருள் கிடைக்கிறது. அதே நேரம் சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டதால் உணவகத்தில் சாப்பிடுவது தொடங்கி ஒருவர் உபயோகிக்கும் தொலை தொடர்பு சேவைக்கும் வரி விதிக்கப்படுவதால் பொது மக்களுக்கு கூடுதல் வரி சுமையும் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட இந்த சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தால் வணிகங்களில் கருப்பு பணம் பரிவர்த்தனை பெரிதும் குறைந்துள்ளது.