டூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்

30-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இயக்கம் செய்ய வந்தவர் எடுத்திருக்கும் புதுமையான இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு கதை அமைப்பியலை சற்று யோசித்து கூர்ந்து கவனித்தால் இதில் இருக்கும் அரசியலும் தெரிகிறது. புரிகிறது..!
முதல் கதை பிரச்சினையே இல்லை.. இரண்டாம் கதைதான் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய கதை..! முதலில் முதல் கதையைப் பார்ப்போம்.
(இங்கே முழுக் கதையையும் சொல்லியிருக்கிறேன். வேண்டாம் என்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் நிறுத்திக் கொள்ளவும்.)

எஸ்.ஏ.சந்திரசேகரனே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்போது அவரது வயது 75. அவர் 30 வயது வாலிபராக இருந்தபோது காதலித்த ஒரு பெண்ணைத் தேடி இத்தனையாண்டுகள் அலைந்திருக்கிறார்.
இப்போது அவருக்கு டாக்டர்கள் நாள் குறித்துவிட்டார்கள். “ஒரு சொட்டு ஆல்கஹால் வயிற்றுக்குள் போனாலும் நீங்கள் காலிதான்…” என்கிறார் டாக்டர். “என் சாவுக்கு மறந்திராம வந்திருங்க..” என்று அதே டாக்டரிமே சொல்லிவிட்டு கிளம்புகிறார் எஸ்.ஏ.சி.
அவருடைய பால்ய வயது காதலியை இப்போதைய சம வயது நண்பரான மனோபாலா சிம்லாவில் பார்த்ததாகச் சொல்ல.. தனது காதலியைத் தேடி சிம்லா வருகிறார் எஸ்.ஏ.சி.
வந்த இடத்தில் பரமக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு பிக்பாக்கெட் திருடர்களை பரமக்குடியின் மைந்தர் கமல்ஹாசனின் வாழ்க்கை சரித்திரத்தைச் சொல்லித் திருத்துகிறார். அவர்களுடைய உதவியுடன் தனது காதலியைத் தேடுகிறார். ஒரு நாள் கண்டுபிடிக்கிறார்.
அதற்குள்ளாக அவருக்கு மரணம் அருகில் வந்துவிட்டது தெரிகிறது. அன்றைக்கு தனது காதலியைத் தேடி அவளது வீட்டிற்குச் சென்று பார்த்தே விடுகிறார். காதலி இப்போது நான்கைந்து சின்ன குழந்தைகளுக்கு பாட்டியாக இருக்கிறாள்.
அப்போதைய கல்யாணத்தன்று காதலிக்கு அணிவிக்க வைத்திருந்த மோதிரத்தை இப்போது காதலியின் கையில் கொடுத்துவிட்டு பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவிடம் ஐக்கியமாகிறார் எஸ்.ஏ.சி.
எத்தனையோ படங்களை இயக்கியவர்.. இப்படி ‘முன்னாடி போனாலும் உதைக்கும்.. பின்னாடி வந்தா கடிக்கும்’ என்ற லெவலில் லாஜிக்கே இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
“இத்தனையாண்டுகள் கழித்தும் ஆள், அடையாளம் தெரியாமல் போயிருக்குமே.. எப்படி கண்டுபிடிப்பீர்கள்..?” என்று பிக்பாக்கெட்டுகள் கேட்பதற்கு “அவளுடைய கண்ணை வைச்சே கண்டு பிடிச்சிருவேன்..” என்கிறார் எஸ்.ஏ.சி. அப்படித்தான் கண்டும் பிடிக்கிறார். அவருக்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கும் போலிருக்கு..! காதலிக்கும் அப்படித்தான்.. ‘ஹேமா’ என்ற குரலைக் கேட்டவுடன் அவரும் சட்டென்று கண்டுபிடிக்கிறார். இது சாத்தியமா என்று காதலர்களைத்தான் கேட்க வேண்டும்.
இள வயது எஸ்.ஏ.சி., தனது நண்பர்கள் இருவருடன் ‘ரூப் தேரா மஸ்தானா’ பாடலை பாடி காதலியை டாவடிக்கிறார். இது 1969-களில் வந்த ‘ஆராதனா’ இந்தி படத்தின் பாடல். இப்போதிலிருந்து 50 ஆண்டுகள் பின்னாடி போக வேண்டிய நிலையில் 30-வது வயதில்தான் இவர்களது காதல் கதை நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம்.
ஹீரோயின் இவர்களை கலாய்ப்பதற்காக தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகச் சொல்கிறார். சிதறி ஓடுகிறார்கள் ஹீரோவும், நண்பர்களும். ‘எய்ட்ஸ்’ என்ற வார்த்தை எந்த வருடத்தில் உலகத்தில் முதன் முதலில் தோன்றியது என்பது நமக்குத் தெரியும்..! எஸ்.ஏ.சி.க்கு தெரியுமா..?
பார்த்தவுடன் காதல்.. இந்தக் காதலியைப் பார்த்த தருணத்தில் பைக் கவிழ்ந்து கையில் கட்டுடன் வீட்டுக்கு வரும் ஹீரோவிடம் அம்மாவே இது பற்றி பேசுகிறார். அம்மாவிடம் தனது காதலியை அழகுற வர்ணிக்கிறார் ஹீரோ.. அப்பவே நம்ம அம்மாக்கள் இப்படியா இருந்தார்கள்..?
சர்ச்சில் திருமணத்திற்காக காத்திருக்கும் தருணம். ஹேமா கிறிஸ்தவராக மதம் மாறினாரா இல்லையா என்பது தெரியவில்லை. மதம் மாறாமல் சர்ச்சில் திருமணம் செய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. மேற்படி திருமணம் கடைசி நிமிடத்தில் காதலியின் அப்பாவுக்குத் தெரிய வந்து அவர் துப்பாக்கி முனையில் மகளை அடக்கி, ஒடுக்கி வேறு ஊருக்கு உடனடியாக அழைத்துச் சென்றுவிட.. அன்றிலிருந்து தனது தேடுதல் வேட்டையைத் துவக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.  காதலியை நினைத்து பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கிறார்.
இடையில் காதலியுடன் ஓரிடத்தில் இரவு தங்க வேண்டி வர.. அங்கேயே அவர்களுக்கு முதலிரவும் நடந்து முடிந்துவிடுகிறது.. இதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் நடந்ததாம்.
சரி.. இத்தனை லாஜிக் ஓட்டையுடன் இந்தக் கதை எதற்கு என்பவர்களுக்கு  இடைவேளைக்கு பின்பு வரும் ‘செல்வி’ என்கிற கதை விடையைச் சொல்கிறது.
ஏதோ ஒரு பட்டி.. கிராமம்.. ஊரில் மேல்சாதி, கீழ்சாதி மக்கள்.. மேல்சாதியினரின் வயல் வெளிகளில்தான் கீழ்சாதி மக்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த ஊர், பண்ணையார், பண்ணையாரின மகன், ஆளும் கட்சி கவுன்சிலர் மூவரும் சேர்ந்துதான் பல அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். அந்த ஊர் போலீஸாரின் கைகள் கட்டப்பட்ட நிலை.. திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதைத் தடுத்த தாசில்தாரை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு கொடூரமானவர்களாக இருக்கிறார்கள்.
தாசில்தார் காணாமல் போன விஷயத்தைக் கண்டுபிடிக்க சென்னையில் இருந்து ஒரு தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த காதலர்களான ரிப்போர்ட்டர்கள் இருவர் அந்த ஊருக்கு வருகிறார்கள். வந்தவர்களை அந்த ஊரின் ‘நல்ல’ போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார். இவர்கள் ஒரு பக்கம் தாசில்தார் கொலையைப் பற்றி துப்பறிந்து வருகிறார்கள்.
பண்ணையாரின் வீட்டில் வேலை செய்கிறாள் பூங்கொடி. 20 வயது இருக்கலாம். இவளுடைய தங்கை செல்வி. பள்ளியில் 2 அல்லது 3-ம் வகுப்பு படிக்கிறாள். இவர்களுக்கு தாய், தந்தை இல்லை. பூங்கொடி தனது தங்கையை பாசத்துடன் வளர்க்கிறாள்.
ஒரு நாள் பண்ணையாரின் மகன் அந்த ஊர்ப் பள்ளிக்கு வந்து “கீழ்சாதி பயலுகளெல்லாம் படிச்சு கிழிச்சது போதும்.. எந்திரிச்சு வீட்டுக்கு போங்கடா…” என்று விரட்டுகிறான். தட்டிக் கேட்கும் டீச்சரின் சேலையைப் பிடித்திழுக்கிறான். “இவுங்களையெல்லாம் இப்பவே படிக்காம தடுத்தால்தான் நாளைக்கு நமக்கு மரியாதை. நாலெழுத்து இவனுகளை படிக்க வைச்சுட்டா அப்புறம் நம்மளையே கேள்வி கேப்பானுக..” என்கிறான் பண்ணையார் மகன்.
இந்த நேரத்தில் பாரதியார் பாடலான ‘பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா’ என்ற பாடலை சிச்சுவேஷனாக பாடி இவனை மூக்குடைபடுத்துகிறாள் செல்வி. இதனால் கோபமான பண்ணையாரின் மகனும், கவுன்சிலரும் அந்த சின்னஞ்சிறு பெண்ணை கற்பழித்து மரத்தில் தூக்கு மாட்டி சாகடிக்கின்றனர். இந்த உண்மை பூங்கொடிக்கு தெரிந்து போலீஸில் புகார் செய்கிறாள். போலீஸ் வருகிறது. ஆனால் புகாரை பதிவு செய்யாமல் ஆதாரம் இல்லை என்று சொல்லி நிறுத்தி வைக்கிறது.
ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் தனிப்பட்ட முறையில் டிவி ரிப்போர்ட்டர்களிடத்தில் பூங்கொடியை அறிமுகப்படுத்தி வைத்து அவளுக்கு நியாயம் வழங்க கேட்கிறார்(!). நால்வரும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள்.
இவர்கள் திட்டப்படி பூங்கொடி மீண்டும் பண்ணையாரின் வீட்டுக்கே வேலைக்கு செல்கிறாள்.  அங்கே தன்னை படுக்கைக்கு அழைத்த பண்ணையாரை திட்டமிட்டு ‘அந்த’ இடத்தில் தேளால் கடிக்க வைத்து சாகடிக்கிறாள்.
அடுத்து மிச்சமிருக்கும் இருவரையும் அவள் எப்படி பழி வாங்குகிறாள் என்பதும், டிவி ரிப்போர்ட்டர்கள் தாசில்தார் விஷயத்திலும், பூங்கொடி விஷயத்திலும் என்ன செய்தார்கள் என்பதும்தான் மீதி படம்..!
தமிழ்நாட்டில் ஜாதி பிரச்சினை எப்போதும் கனன்று கொண்டே இருப்பதுதான். லேசாக பொறி கிளம்பினாலே போதும்.. பற்றிக் கொள்ளும். பாதிக்கப்படப் போவது படைப்பாளிகள் அல்ல.. அப்பாவி பொதுஜனங்கள்தான்..!
இது போன்ற சம்பவங்கள் உண்மையில் நடந்தவைதான். நடப்பவைதான்.. நடந்த விஷயங்களில் இருந்து சிலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.
இதிலும் அநியாயத்திற்கு லாஜிக் எல்லை மீறல்கள்.. தாசில்தாரை சாகடித்த விஷயத்தை அவரது மகனே மறைக்கிறான். இன்ஸ்பெக்டரும் “ஆக்சன் எடுக்க முடியாது…” என்கிறார். “ஆனால் ஏதோ நடந்திருக்கிறது..” என்பதை மட்டும் சொல்கிறார். இப்படியொரு கைகள் கட்டப்பட்ட நிலையில் காவல்துறை இருப்பது சில நேரங்களில் மட்டுமே.. பல நேரங்களில் அப்படியிருக்க முடியாது..! அரசு அலுவலர் சங்கங்கள் சும்மா விடுமா..? அந்த இன்ஸ்பெக்டர் நல்லவராக.. உண்மையை வெளிக்கொணர தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வதாக காட்டுவதும் சமாளிப்புதான்..!
இந்தக் கதையின் மிகப் பெரிய பயங்கரமே பூங்கொடி பண்ணையாரின் மகனையும், கவுன்சிலரையும் பழி வாங்குவதுதான்.. கவுன்சிலர் குடிக்கும் காபியிலும், பண்ணையாரின் மகன் குடிக்கும் டாஸ்மாக் சரக்கிலும் தனது சிறுநீரை கலந்து குடிக்க வைக்கிறாள் பூங்கொடி. இது ஒன்றே ஆதிக்க மேல்சாதியினரை பழிவாங்க கீழ் சாதியினர் செய்யும் கோபமான செயல் என்று எடுத்துக் கொள்ளலாமா..?
ஏனெனில் படத்தின் கிளைமாக்ஸில், “இத்தனை நாளா இந்தப் பொண்ணு மூத்திரத்தைத்தாண்டா குடிச்சு வாழ்ந்தீங்கன்னு உங்க ஏழு தலைமுறைக்கும் இந்த ஊரே பேசும்டா.. அப்ப எங்கடா போவும் உங்க கவுரவம்..?” என்று ஊர்க்காரர் ஒருவர் கேட்கிறார்.  
ஒரு மனிதனின் சிறுநீரை வேறொரு மனிதன் தொடுவதென்பதோ, குடிப்பதென்பதோ அருவருப்பான விஷயம் என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல கிராமங்களில் மேல் சாதி, கீழ் சாதியினர் மோதல் வரும்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவப்பட்டு நடந்திருப்பது உண்மைதான். யாரும் மறுக்க முடியாது. ஏன் மலத்தைக்கூட தின்ன வைத்தார்கள் என்றுகூட குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதுபோல ஒவ்வொரு சாதிக்காரர்களும், மற்ற சாதிக்காரர்களை இழிவாகப் பேச மூத்திரத்தை மையப்படுத்தியே பேசத் துவங்கினால் கடைசியில் என்ன ஆகும்..?
அந்தப் பெண் செய்தது சினிமாட்டிக்காக இருந்தாலும், ஊர்க்காரர்கள் பேசிய வசனங்களால் இது இரண்டு சாதியினரையும் தூண்டிவிடுவதை போலவே இருக்கிறது.
மேலும் மேல்சாதிக்கார ஆண்கள் மட்டுமே கெட்டவர்கள் என்பது போலவும், அந்த வீட்டு பெண்கள் நல்லவர்கள் போலவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். “வெறியிருந்தா என்கிட்ட வந்திருக்க வேண்டியதுதானே..? அந்தச் சின்னப் பொண்ணை ஏன்யா சிதைச்ச..? என்கிறார் பண்ணையாரின் மருமகள். “நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?” என்கிறார் அம்மா. கடைசியாக செல்வியின் பள்ளித் தோழியும், பண்ணையாரின் பேத்தியும், பண்ணையாரின் மகனின் மகளுமான அந்தச் சிறுமி துப்பாக்கியைத் தூக்க.. குற்றவாளிகள் காலி..
இங்கே பண்ணையாரின் மருமகள் துப்பாக்கியைத் தூக்கியிருந்தால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சின்னப் பொண்ணு.. இரண்டாங்கிளாஸ் படிக்கிற பொண்ணு.. தனது தோழிக்காக தனது அப்பாவையும், மாமாவையும் கொலை செய்கிறாளாம். இந்த அளவுக்கு நியாயத்தை கற்பிக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சி.
படைப்பாக்கம் என்று வரும்போது அவற்றை செய்வதற்கும், சொல்வதற்கும், காட்டுவதற்கும் ஒரு காரணம் வேண்டும். இந்தக் கதையில் சொல்ல வந்த கருத்து சரி. ஆனால் சொல்லிய விதம் தவறு என்றே நாம் கருதுகிறோம்.
இடையில் அந்த ரிப்போர்ட்டர்கள் இடையிலான வாழ்க்கைக் கதையும் ஓடுகிறது. அது இப்போதைய ரிப்போர்ட்டர்களெல்லாம் இப்படித்தான் வாழ்கிறார்களோ என்பது போன்ற ஒரு பிரமையையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதாகக் காட்டியிருக்கிறார். இந்த வீட்டிலும் ஒரே படுக்கையில் இருந்தும் ‘எதுவும் நடக்காமல்’ பார்த்துக் கொள்கிறார்கள்.   கதைக்குக் கொஞ்சமும் தேவையில்லாமல் ஒரு காட்சியில் பெண் டிவி ரிப்போர்ட்டரின் கிளாமரையும் காட்ட வைத்திருக்கிறார் இயக்குநர். எதற்கு..?
“செல்லியின் தற்கொலை குறித்த உண்மைத் தகவல்கள் கிடைத்தால், நாம இதை எக்ஸ்குளூஸிவ்வாக செய்தால் நம்ம டிவிக்கு டி.ஆர்.பி. ஏறும்.. சம்பளம் கூடும்..” என்கிறார் சேனலின் சி.இ.ஓ. “அப்படியே என்னோட பிரமோஷனையும் மறந்திராதீங்க ஸார்..” என்கிறார் ஆண் ரிப்போர்ட்டர். பெண் ரிப்போர்ட்டர் இப்போதுதான் சீறிப் பாய்கிறார். “ஆம்பளை புத்திய காட்டிட்டியே.. அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கிறது முக்கியமா..? நமக்கு பிரமோஷன் கிடைக்கிறது முக்கியமா..?” என்று சீறுகிறார்.  நியாயமான உணர்வுதான்.
செல்லி நாசமாக்கப்பட்ட அந்த கரும்புக் காட்டுக்குள் அத்தனை நாட்கள் கழித்தும் தடயங்கள் அப்படியே இருப்பது போலவும் அதனை டிவி ரிப்போர்ட்டர்கள் மட்டுமே கண்டுபிடிப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன. ஏன் இதை காவல்துறையே முன் விசாரணையில் செய்திருக்கக் கூடாதா..? மேம்போக்கான விசாரணையை கூடவா போலீஸ் நடத்தாது..?
தாசில்தாரின் உதவியாளர் எப்படி, எங்கேயிருந்து வந்தார்.. இவர்கள் எப்படி அவரை விரட்டுகிறார்கள் என்பதே தெரியவில்லை.  திடீரென்று விரட்டுகிறார்கள் டிவி ரிப்போர்ட்டர்கள் இருவரும். அவரைக் கட்டி வைத்து விசாரிக்கிறார்கள்.
அவர் உண்மையைச் சொல்ல மறுக்க அவரது இடுப்புக்குக் கீழே கத்தியை வைக்கிறார் ஆண் ரிப்போர்ட்டர். பெண் ரிப்போர்ட்டரோ, “ஏன் சும்மா நிறுத்திட்ட.. கீழ இறக்கு.. அப்பத்தான் உண்மையைச் சொல்வான்..” என்கிறார். எக்ஸ்கியூஸ் மீ மேடம் அண்ட் ஜென்டில்மேன்.. இங்க என்ன நடக்குது..? நீங்க டிவி ரிப்போர்ட்டர்ஸா? இல்லைன்னா போலீஸா..? போலீஸ் இப்படி செஞ்சா ‘அப்பட்டமான மனித உரிமை மீறல்’ன்னு காலைல இருந்து ராத்திரிவரைக்கும் ஒப்பாரி வைப்பீங்க. இப்போ நீங்களே செஞ்சா என்ன அர்த்தம்..? என்னவொரு திரைக்கதை பாருங்க..? அஸைண்மெண்ட்டுக்கு எப்படி அலையுறாங்கன்னும் பாருங்க..!?
இவர் கொடுத்த தகவலின்படி அத்தனை பெரிய மணல் குவாரியில் சமாதியாக்கப்பட்ட தாசில்தாரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு இவர்களது காரில் சென்னைக்கே பயணிக்கிறது.
சென்னைக்கு அவருடைய உடலை கொண்டு போய் இந்த ரிப்போர்ட்டர்கள் செய்யப் போவது என்ன..? யாரிடம் காட்டப் போகிறார்கள்.? அவர் கொல்லப்பட்டதற்கான எவிடென்ஸ் எங்கேயிருந்து கிடைக்கும்..? இது சட்டப்படி தவறில்லையா..? டிவிக்காரர்கள் இந்த அளவிற்கு சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவார்களா என்ன..?
நடிப்பென்று பார்த்தால் ஒட்டு மொத்த படத்திற்குமே பூங்கொடியாக நடித்த சுனுலட்சமிதான் ஐகானாக இருக்கிறார். மலையாள வரவு. திருப்தியான நடிப்பு. புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. பாடல் காட்சியில் துள்ளலான அந்த நடனம் ரசிக்க வைக்கிறது. அந்த கேரக்டருக்காக அவருடைய பாடி லாங்குவேஜில்கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் பேசும் வசனங்களும், காட்டியிருக்கும் நடிப்பும் இந்தாண்டு சிறந்த நடிகைக்கான பட்டியலில் குறித்து வைக்க வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்திருக்கிறது.
முதல் கதையில் ஹீரோயினாக பாப்ரிகோஷ் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். அசப்பில் ‘நெடுஞ்சாலை’ ஷமிதாவுக்கு அக்கா போல இருக்கிறார். சிரித்த முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். எஸ்.ஏ.சி.க்கு முத்தம் கொடுக்கும் பாக்கியம் கடைசியாக இந்த பாக்கியவல்லிக்குத்தான் கிடைத்திருக்கிறது. முத்தம் கொடுத்து, வாங்கியதில்… யார் கொடுத்து வைத்தவர் என்று அவர்களே சீட்டுக் குலுக்கிப் பார்க்கட்டும். என்ன இருந்தாலும் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதால் லிப்லாக்கிற்கெல்லாம் அஞ்சவில்லை. துணிந்து நடித்திருக்கிறார். தேறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
எஸ்.ஏ.சி.யின் இந்த வயது காதலியாக ஹேமமாலினி என்னும் சிம்லா தேசத்து நடிகை நடித்திருக்கிறார். கண்ணை பார்த்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு இவரது கண் ஒன்றும் ரசனைக்குரியதில்லை. ஆனாலும் வெறும் பார்வையாலேயே நடித்திருக்கிறார்.
எஸ்.ஏ.சி. அப்படியேதான். எப்போதும் இருப்பது போலவே வசனம் பேசியிருக்கிறார்.. அவ்வளவுதான். இரண்டாவது கதைக்கு அழுத்தம் கொடுக்கவே முதல் பாதியில் வேடமேற்றிருப்பதால் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சில நேரங்களில் அவருடைய காதல் புராணத்தைக் கேட்கும்போது எரிச்சல் வருகிறது. அதையும் படத்தில் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். நன்றிகள் ஸார்..!
பண்ணையாராக ‘ஆடுகளம்’ ஜெயபாலன், பண்ணையாரின் மகனாக ‘ரோபோ’ சங்கர், கவுன்சிலராக சாய் கோபி, இவர்களுக்கு ஒத்து ஊதும் உறவினராக ‘செவ்வாழை’ ராசு என்ற இந்த மேல்சாதி கூட்டணி வசனங்களை பின்னியெடுத்திருக்கிறது. அதிலும் இன்ஸ்பெக்டரிடம் ரோபோ சங்கர் கூட்டணி பேசும் எகத்தாளப் பேச்சுக்கள் தனி ரகம்.. ‘இவனுகளையெல்லாம்’ என்று கொஞ்சம் கோபப்படவும் வைத்திருக்கின்றன வசனங்கள். வசனகர்த்தா கிருஷ்ணமூர்த்திக்கு தனி பாராட்டுக்கள்.
இசைஞானியின் இன்னிசையில் முதல் பாடலும், பின்னணி இசையும் ஓகேதான்.. மற்றபடி மேலும் இரண்டு பாடல்களை கேட்டபோது நம்ம மொட்டை சாமிதானா இது என்று சந்தேகம் வருகிறது..!
இந்தப் படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியலுக்கு வருவதற்கான முதல்படியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது. நாட்டின் அதி முக்கிய பிரச்சினையான மேல் சாதி-கீழ் சாதி பிரச்சனையை மையமாக வைத்த ஒரு திரைப்படத்தில் எஸ்.ஏ.சி. தன்னை முன்னிறுத்தி வைத்திருப்பது எதற்கு என்று சந்தேகமும் எழுகிறது.
ஒருவேளை இந்தப் படம் பெரிய அளவு சர்ச்சையை கிளப்பினால் “இது எஸ்.ஏ.சி.யின் படம். அவருடைய இயக்கம். அவரே நடிச்சிருக்கார்.. அந்தப் படத்துனால இவ்ளோ பிரச்சினை என்று நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட படைப்பாளியாக எஸ்.ஏ.சி.யின் பெயர் பேசப்பட்டு இதன் பலன் இளைய தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பயன்படப் போகிறதோ..?” என்று நினைக்கவும் வைக்கிறது..!
தமிழகத்தின் ஜாதி அரசியல் சம்பந்தமான வகையில் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படமாக இது இருக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சி. நினைத்திருக்கிறார். அதனால்தான் இது தனது இயக்கத்தில் வெளிவரும் கடைசி படம் என்றுகூட அறிவித்திருக்கிறார். திட்டமில்லாமலா சொல்லியிருப்பார்..? 
முதல் பாதியைப் பொறுத்துக் கொண்டால், இரண்டாம் பாதியான அதிர்ச்சியைக் காணலாம்..!

தொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்

27-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு தொலைபேசி அழைப்பைத் தொட்டு ஹீரோ அல்லல்படுகிறார். ஒரேயொரு ஏமாற்று வேலையைச் செய்து ஹீரோயினும் அல்லல்படுகிறார். ஏன் இருவரும் இதைத் தொட்டார்கள்..? தொடாமலேயே இருந்திருக்கலாமே என்பதற்கு பதிலாகத்தான் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ டைட்டில்..!

ஹீரோயின் வங்கியொன்றின் டெலிகாம் சென்டரில் வேலை செய்பவர். உடன் வேலை செய்யும் தோழியை கிண்டல் செய்த்தற்காக ஹீரோவுக்கு போன் செய்து பேசத் துவங்க.. இந்தப் பேச்சு நயமாகவும், அன்பாகவும், கிண்டலாகவும் உருமாறி ஹீரோவுக்குள் காதல் உணர்வைத் தூண்டிவிடுகிறது. இங்கே ஹீரோயினுக்கு அது இல்லை..
இந்த நேரத்தில் ஹீரோயினின் தம்பி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். அவரைக் காப்பாற்ற வேண்டுமெனில் முப்பது லட்சம் ரூபாய் தேவை. அதே முப்பது லட்சம் ரூபாய்க்கு தன்னை இன்ஸூரன்ஸ் செய்திருப்பது ஹீரோயினுக்கு அப்போதுதான் ஞாபகம் வருகிறது.
தான் இறந்தால் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்து தம்பி பிழைத்துக் கொள்வானே என்று சொல்கிறது குறுக்கு புத்தி. வேண்டுமென்றே விபத்தில் சிக்கப் பார்க்கிறாள். தப்பித்தாலும், வேறொரு வழி கிடைக்கிறது.
ஒரு கொலை அஸைண்மெண்ட்டுக்காக அலையும் ஒரு கும்பலை பார்த்துவிட்டு அவர்கள் சிக்னலுக்காக வைத்திருந்த ஒரு பெண்ணின் போட்டோவை நீக்கிவிட்டு தன்னுடைய போட்டோவை அங்கே வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வருகிறாள்.
அதற்குள்ளாக ஹீரோ மின்னல் வேகத்தில் கிரவுண்ட் பண்டிங் முறையில் இணைய நண்பர்களிடத்தில் முப்பது லட்சம் ரூபாயை கலெக்சன் செய்து கொடுத்துவிட.. ஹீரோயின் முதலில் சந்தோஷப்பட்டாலும் பின்பு பகீரென்றாகிறது.
தன்னை கொலை செய்ய தானே ஐடியா கொடுத்துவிட்டு வந்திருப்பதை அடுத்து அங்கு ஓடிப் போய் பார்க்கிறாள். கொலையாளியின் கைகளுக்கு தன் புகைப்படம் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். தன் காதலை சொல்லத் துடிக்கும் ஹீரோவிடம் ஹீரோயின் இதைச் சொல்ல.. இருவரும் இணைந்து காதலியை கொலை செய்யும் முயற்சியை எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை..!
சென்ற வருடம் வெளியான ‘தெகிடி’ படத்தின் அடிநாதமே இன்ஸூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்வதுதான். இதில் கொஞ்சம் மாறுபட்டு கொலையை திட்டமிட்டு செய்துவிட்டு, அதனை தற்கொலை என்று சொல்ல வைக்கும் ஒரு கும்பலின் கதையாக மாறியிருக்கிறது.
தமன்குமார் நன்கு நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கொடுத்த வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ ஹீரோயின்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத்தான் அதிக ஸ்கோப். இன்னமும் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். அருந்ததி முந்தைய படத்தில் ஆள் பாதி, ஆடை பாதியாக நடித்து நடிப்பென்றால் என்ன என்று கேட்டிருந்தார். இதில் முழுக்க மூடி நடித்தும் ‘என் நடிப்பு இதுதான்’ என்று காட்டியிருக்கிறார். வெல்டன் மேடம்..!
உடன் நடித்திருக்கும் பாலாஜியின் கடி ஜோக்குகள் கேட்க நன்றாக இருந்தும் போதுமான இயக்கமில்லாததால் வசனத்திற்கேற்ற சிரிப்பு வரவில்லை. பத்திரிகையாளர்கள் காட்சியில் 3 இடங்களில் கைதட்டல்கள் கிடைத்தன. அது எதற்கு என்று இயக்குநருக்கே தெரிந்திருக்கும். நிச்சயம் இது தியேட்டர்களில் கிடைத்திருக்காது.
படத்தின் துவக்கமே மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சைரன் வைத்த அரசு காரில் செல்லாமல், உடன் பாதுகாப்பு போலீஸார் இல்லாமல்… சொந்த டிரைவரை வைத்துக் கொண்டு ‘விளையாட செல்லும்’ ஒரு காட்சியுடன்தான் துவங்குகிறது.
டாஸ்மாக்கின் சதியால் பின்னால் திறந்த ஜீப்பில் வந்த இளைஞர்கள் அமைச்சருடன் ரகளை செய்ய.. இரண்டு வாகனங்களும் ஒன்றையொன்று விரட்ட.. விபத்து.. அமைச்சர் மரணம். ஆனால் இது கொலையாக இருக்கலாமோ என்று சந்தேகிக்கும் நேரத்தில்தான் துவங்குகிறது ஒரு எதிர்பார்ப்பு..! படம் முழுவதிலும் இந்த சஸ்பென்ஸை கச்சிதமாக்க் கொண்டு போயிருக்கிறார்.
படத்தின் முற்பாதியில் ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச், அவருடைய வீட்டுப் பிரச்சினை, சித்தியின் புலம்பல்.. இங்கே ஹீரோவின் ஜாலி டைப்.. அவருடைய ஜாலியான ஒரு பிரெண்ட்.. பின்பு போனில் பேசும் கடலை பேச்சுக்கள் என்று பெரும்பாலும் செல்போனின் மூலமாகவே கதை நகர்வதால் போரடிக்கத்தான் செய்கிறது..
பிற்பாதியில் எப்படி ஹீரோயின் கொல்லப்படப் போகிறாள் என்கிற எதிர்பார்ப்பிலேயே கதை நகர்வதால் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், சட், சட்டென்று நகரும் காட்சிகளால் எந்தக் காட்சியும் மனதில் பாரமாக இருக்கும் அளவுக்கோ, மனதைத் தொடும் அளவுக்கோ இல்லாமல் போனது இயக்குநரின் இயக்கத்தினால்தான்..!
அமைச்சரின் அடிவருடியான இன்ஸ்பெக்டர் தனது சொந்த முயற்சியில் இந்தக் கேஸை தொடர்கிறார். ஆட்களைப் பிடிக்கிறார். துப்பாக்கி முனையில் ஒருவனை மடக்கிப் பிடிக்கிறார். பின்பு அவனை அமைச்சரின் மகனே கொலை செய்கிறார். இப்போதைய அரசியல் உலகத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது.
இன்னொரு பக்கம் அரதப்பழசான காட்சியமைப்புகளும் சலிக்க வைக்கின்றன. செல்போனில்தான் ஹீரோயின் பேசியிருக்கிறார். அந்த நம்பரை பாலோ செய்தாலே ஹீரோயினை கண்டுபிடித்துவிட முடியாதா..? அதுக்கெதுக்கு ஹீரோயின் பேசின வசனத்தை அலுவலக பெண் ஊழியர்களை பேச வைத்து செக்கிங்..? அடுத்த காட்சியில் “அதான் நம்மகிட்ட நம்பர் இருக்கே..?” என்கிறார் பாலாஜி. இதை முதல்லேயே செஞ்சிருந்தா அந்தக் காட்சி தேவையில்லைதானே..?
இப்போதைய நிலைமையில் முப்பது லட்சம் ரூபாய்க்கு மாசாமாசம் எவ்வளவு பிரிமீயம் கட்டணும்ன்னு கணக்கு போட்டு பாருங்க. ஒரு சாதாரண டெலி கால் ஊழியராக இருக்கும் ஹீரோயினால் இதைக் கட்ட முடியுமா..?
ஒரு மரத்தின் பின்னால் புகைப்படத்தை வைத்துவிட்டுப் போக.. கொலையாளிகள் வந்து எடுத்துச் செல்வதெல்லாம் எந்தக் காலத்து டெக்னிக்.? அதுவும் நடுராத்திரில..?  
ஹீரோ-ஹீரோயினை லாரியில் துரத்தும் வின்சென்ட்  அசோகனிடமிருந்து தப்பிக்கும் காட்சியெல்லாம் டூ மச். லாரியில் வருவது வின்சென்ட் மட்டும்தானே.. ஹீரோ இறங்கி ஒத்தைக்கு ஒத்தை பார்த்திருந்தால் ஹீரோவுக்காச்சும் சண்டை போட்ட திருப்தியைக் கொடுத்திருக்கும்..
திடீரென்று ஹீரோவுக்குள் ஒரு சந்தேகம்.. மினி ஆள்காட்டும் கருவி ஹீரோயின் கையில் இருப்பது.. அதை ஹீரோ கண்டுபிடித்தெடுப்பது.. இதைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்க நினைக்கையில் ஹீரோயினுக்கு இவ்ளோ டென்ஷனிலும், பிரச்சினையிலும் ‘மூடு’ வந்து ‘அதற்கு’ முயல்வது.. என்று திரைக்கதை போக.. படத்தில் சீரியஸ்னெஸ் என்பதே இல்லாமல் போய்விட்டது. திரைக்கதைக்காக இன்னும் நிறைய உழைத்திருக்கலாம்..!
விபத்து காட்சிகளை அழகாக படமெடுத்தவர்கள், வின்சென்ட்டை ஹீரோ துரத்தும் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள். வின்சென்ட் மேலேயிருந்து கீழே குதிக்க முயல்வது போன்ற ஆக்சனைகூட அப்படியே காட்டினால் எப்படி..?
வின்சென்ட் ரோப் மூலம் கீழே இறங்குவதைகூட மில்லி, மில்லியாகக் காட்டி சண்டை பயிற்சி இயக்குநரின் மானத்தை வாங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். இப்படி யாராவது படமாக்குவார்களா..?
பாடல் காட்சிகளும், ஒளிப்பதிவும் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்த சினிமாக்காரர்களுக்கு திருப்தியானது.  ஏரியல் வியூ ஷாட்டுகள் மற்றும் பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரமான ஸ்டைல் புதிய அழகைக் காட்டியிருக்கிறது. ஹீரோயின் இவ்ளோ அழகா என்று நினைக்கவும் வைத்திருக்கிறது..!
 பி.சி.சிவனின் இசையில் ‘பாஸு பாஸு’ பாடல் ஏற்கெனவே இணையம் மூலமாக ஹிட்டடித்துவிட்டது. ‘யாருடா மச்சான்’ பாடல் அடுத்த ஹிட். அந்த பல்பு, லைட்டு செட்டிங்ஸ் செய்த கலை இயக்குநருக்கு ஒரு ஜே.  பின்னணி இசை பதட்டத்தைக் காட்டினாலும் சுமாரான இயக்கம் அதை முழுமையாக ரசிக்கவிடாமல் செய்துவிட்டது.
சில, பல இடங்களில் புத்திசாலித்தனமான வசனங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. பாராட்டுக்கள். சீரியஸ் இல்லை.. காமெடியும் இல்லை.. ஆனாலும் படத்தின் இடைவேளைக்கு பின்பு எழுந்து போக எத்தனித்தவர்களையும் உட்கார வைத்திருக்கிறது படம்..!
எப்படியிருந்தாலும் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் திரில்லர் கதைகளை ஆர்வத்துடன் வாசிக்கும் ஒரு பீலிங்கை இந்த படம் கொடுத்திருக்கிறது. ஆனால் படிக்க ஓகே. பார்ப்பதற்கு….!???
இயக்குநர் கேபிள் சங்கர் தன்னுடைய வலைத்தளத்தில் இதுவரையில் எழுதிய சினிமா விமர்சனங்களிலெல்லாம் “இது குப்பை.. இது மொக்கை.. இது தேறாது.. இது அசுர மொக்கை.. பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்..” என்று சொல்லிய சில படங்களெல்லாம் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ படத்தைவிடவும் நன்றாகவே இருந்தன; இருக்கின்றன என்பதை இயக்குநர் கேபிள் சங்கர் இப்போது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறோம்.
நண்பர் கேபிள் சங்கர், அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் அளவுக்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம். 

ஆம்பள - சினிமா விமர்சனம்

18-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரிந்த குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் மகனின் கதைதான். அரதப் பழசுதான் என்றாலும் வழக்கம்போல சுந்தர்.சி.யின் சூப்பரான திரைக்கதை, வசனத்தில் இயக்கத்தில் இரண்டரை மணி நேரம் பொழுது போக்குப் படமாக வந்திருக்கிறது.

அரசியலுக்கு அடியாட்களை அனுப்பும் அலம்பல் வேலையை ஊட்டியில் செய்து வருகிறார் ஹீரோ விஷால். அந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் சந்தானம் ஒன் சைடாக காதலித்த ஹன்ஸிகாவை நைச்சியமாக பேசி கழட்டிவிட்டுவிட்டு தன் காதலியாக்கிக் கொள்கிறார் விஷால். இதனால் கோபமடைந்த சந்தானம் ஒரு பிளான் செய்து விஷால்-ஹன்ஸிகா காதலுக்கு கொள்ளி வைக்கிறார்.
இதனால் கொதிப்பான விஷால் தன் கொதி நிலையில் இருக்கும் தன் உள்ளத்தை டாஸ்மாக் சரக்கு மூலம் கூலாக்குகிறார். இதனை பார்க்கும் விஷாலின் அம்மா இதுக்காடா உன்னை பத்து மாசம் வயித்துல சுமந்து பெத்தெடுத்து வளர்த்தேன். உங்கப்பாவை விட்டு பிரிஞ்சு இத்தனை நாள்ல ஒரு நாள்கூட அவரை நினைச்சுக்கூட பார்த்த்தில்லை. இன்னிக்கு உன் மேல இருக்குற பயத்துல என்னை நினைக்க வைச்சுட்ட்டா. அப்பாகூட இருக்குற உன் தம்பியை பார்க்கணும்போல இருக்குடா..” என்று கண்ணாம்பா ஸ்டைலில் பேசி முடிக்க..
தன் அப்பாவையும், தம்பியையும் கண்டுபிடிக்க ஊட்டியில் இருந்து மதுரைக்கு வருகிறார் விஷால். வந்த இடத்தில் ரொம்பக் கஷ்டப்படாமல் அப்பாவையும், தம்பியையும் திருடர்களாக கண்டுபிடிக்கிறார் விஷால். இப்போது அப்பாவான பிரபு தன் பிளாஷ்பேக் கதையை ஓப்பன் செய்ய.
பாரம்பரியமான ஜமீன் குடும்பம். பிரபு, கல்யாணத்துக்கு முன்பேயே ஒரு யுவதியுடன் காதல் விளையாட்டில் ஈடுபட.. அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை மறைத்து.. அந்தப் பெண் இறந்துவிட்டாள் என்று பொய் சொல்லி விஷாலின் அம்மா துளசியை பிரபுவுக்கு கட்டி வைத்திருக்கிறார் அப்பா விஜயகுமார். இப்போது பிரபுவுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள்.  
ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தாத்தா விஜயகுமார். அடுத்த்த் தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு நிற்கும்படி தனது மகன் பிரபுவை கேட்கிறார். பிரபு மறுக்க.. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வில்லன் தன்னை நிறுத்தும்படி கேட்கிறார். விஜயகுமார் மறுக்க அவரை கொலை செய்துவிட்டு பழியை பிரபுவின் மீது போடுகிறார் வில்லன்.
பிரபு ஜெயிலுக்குப் போக.. பிரபுவின் உடன் பிறந்த தங்கைகள் மூவரும் பிரபு மீது கொலை வெறியாகிறார்கள். பிரபு ஜெயிலில் இருந்து திரும்பியவுடன் தனது சொத்துக்கள் முழுவதையும் சகோதரிகளின் பெயரிலேயே எழுதிவைத்துவிட்டு மதுரைக்கு வந்து திருட்டுத் தொழில் செய்கிறார்.
அப்பாவின் பிளாஷ்பேக் கதையைக் கேட்டு சுறுசுறுப்பான விஷால் பிரிந்து கிடக்கும் தன் குடும்பத்தை தான் சேர்த்து வைப்பதாகச் சொல்லி களமிறங்குகிறார். என்ன ஆகிறது என்பதுதான் மிச்சம் மீதி கதை.
லாஜிக்கையெல்லாம் பார்க்கவே கூடாது என்பதை முதல் காட்சியிலேயே முடிவு செய்துவிட்டார்கள் போலும். அடியாட்கள் படை அனுப்புவதில் துவங்கி அதே அடியாட்கள் கிளைமாக்ஸிலும் சஸ்பென்ஸாக வந்து படத்தை முடித்து வைப்பது வரையிலும் அக்மார்க் சுந்தர்.சி. படம்தான் இது. இது மாதிரியான டெம்ப்ளேட் கதையில் புதிய திரைக்கதை எழுதி இயக்கி வெல்வது சுந்தர்.சி.க்கு பழக்கமான விஷயம்தான்.
நடிகர் பிரபு இதில் நடித்திருப்பது ஆச்சரியமானது. அதே சமயம் ஆரோக்கியமானதும்கூட.. இப்படித்தான் எதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு கலைக்கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். இன்னும் அடுத்தடுத்து பிரபவும், குஷ்புவும் ஜோடி சேர்ந்து அப்பா-அம்மாவாக நடித்தால்கூட அதில் தவறில்லைதான்..
முதல் பாதி திரைக்கதை மிக மிக சுவாரஸ்யம். சந்தானத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலை பறி போவதற்கு விஷால் ஹன்ஸிகா காதலும் ஒரு காரணம் என்கிற வகையில் இருக்கும் இந்த புதுமையான திரைக்கதை  காமெடி டச்.. சந்தானம் முதற்பாதியில் வந்துவிட்டு பின்பு கடைசியில்தான் தலையைக் காட்டுகிறார். அதுவும் செம கலக்கல்தான். என்ன இருந்தாலும், பன்னி வாயா, போண்டா வாயா என்று திட்டுவதை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை.
விஷால் வழக்கம்போல.. ஆக்சன் ஹீரோவிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் காட்டியிருக்கிறார். “நீங்க ஒழுங்கா இருந்தீங்கன்னா நான் ஏங்க பதவிக்கு வர ஆசைப்படுறேன்.?” என்ற வசனத்தின் மூலம் நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு ஆப்பு வைத்திருக்கிறார்.
“ஒரு வரலட்சுமியோ, தனலட்சுமியோ யாரையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு..” என்று சந்தானம் சொல்லும் டயலாக் மூலம் விஷாலின் வரலட்சுமி யார் என்பதும் புரிகிறது.
சண்டை காட்சிகளில் இயக்குநர் ஹரிக்கே சவால்விட்டிருக்கிறார் சுந்தர்.சி. கார்களும், ஜீப்களும் பறக்கன்ற வேகத்தை பார்த்தால் இதுக்கே காசு காணாமல் போயிருக்கும் போலிருக்கிறது.
சண்டை காட்சிகள், காமெடி காட்சிகளோடு கவர்ச்சி காட்சிகளையும் காண்பிக்கத் தவறவில்லை இயக்குநர். விஷாலின் மூன்று அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் என்று மூன்று முன்னாள் தேவதைகளை முடிந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு ஆடவும் செய்திருக்கிறார்கள்.
இதில் கிரணை சைட் அடிக்கும் வாய்ப்பு சந்தானத்திற்கு. கிளைமாக்ஸில் கிரண் யார் என்று தெரிந்த பின்பு சந்தானம் அடிக்கும் கமெண்ட்டு ரொம்ப, ரொம்ப டூ மச். இப்படித்தான் சந்தானத்தின் மூலமாக தமிழ் நல்லுலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது..
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் படத்தின் வசனங்கள். சில டபுள் மீனிங் டயலாக்குகளையும் தாண்டி நகைச்சுவையை பிரதானமாக்கி அள்ளி வீசியிருக்கிறார் வசனகர்த்தா ராதாகிருஷ்ணன். இவரே இயக்குநர் சுந்தர்.சி.க்கு மிகப் பெரிய பலம். இந்தக் காலத்து பொண்ணுகளை பற்றி விஷால் சந்தானத்திற்கு கிளாஸ் எடுக்கும் அந்த நீண்ட, நெடிய காட்சியில் பேசப்படும் வசனங்கள் ஏ கிளாஸ்.. அந்தக் காட்சியில் விஷாலின் வசன உச்சரிப்பும் பாராட்டுக்குரியது. எத்தனை டேக் எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் கடைசியில் சந்தானம் சொல்லும் அந்த ஒரு வரி கமெண்ட்.. விஷாலின் அந்த உழைப்பையும் காணாமல் போகச் செய்துவிட்டது.
ஹன்ஸிகாவின் மெத்து, மெத்து மேனியை பாடல் காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சம் காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள். இன்னமும் தமிழ் உச்சரிப்பு சரியாக வராமல் இழுத்து, இழுத்து பேசும் அந்தக் கொடுமையை மட்டும் மன்னித்துவிட்டு பார்த்தால் ஹன்ஸிகா அழகுதான். இவரது இரண்டு தங்கைகளாக வரும் அந்த இரண்டு ஒண்ணுவிட்ட ஹீரோயின்களும் கொஞ்சம் ‘அழகு’ காட்டியிருக்கிறார்கள்.
‘வயசானாலும் உங்க அழகும் போகலை; நடிப்பும் போகலை..’ என்று ரம்யா கிருஷ்ணனை பார்த்து சொல்ல வேண்டும். ஐஸ்வர்யாவின் அந்த கட்டை குரலே தனி நடிப்புதான்.. கிரணுக்கு இனிமேல் ஆல்ரெடி அம்மா கேரக்டர்தான் என்பது உறுதி.
அத்தைகளின் கணவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக தங்களது மனைவியரின் பக்கத்திலேயே போக முடியவில்லை என்பதை சக ஆம்பளையாக நினைத்து மாப்பிள்ளைகளிடம் வருத்தப்படுவதும், மாப்பிள்ளைகள் ஒரே நாளில் அதற்கு ‘செட்டப்’ செய்வதும்.. ம்ஹூம்.. நினைத்துக்கூட பார்க்காத திரைக்கதைதான்..!
வேகமான திரைக்கதையில் படம் நகரும்விதத்தில்தான் இதன் வெற்றி பேசப்பட்டிருக்கிறது. கொஞ்சமும் லாஜிக்கை பற்றியே யோசிக்காமல் அடுத்து… அடுத்து.. என்று திரைக்கதையை வேகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஹன்ஸிகாவை பார்த்தவுடன் காதல்.. சந்தானத்தின் ஒன் சைடு காதல்.. ஹன்ஸிகா-விஷால் காதல்.. ஒரு டூயட்டு.. கட் செய்தால் சந்தானத்தின் சில்லுண்டி வேலை. காதல் கட்டு.. மதுரை வந்தவுடன் அப்பாவை சந்திப்பது.. இன்னொரு பாடல்.. உடன் வரும் ஒருவனே தனது தம்பி என்று பட்டென்று கஷ்டப்படாமல் சொல்வது.. அவனும் தான் அவர்களை கொல்வதற்காகத்தான் வந்ததாகச் சொல்வது.
மூன்று அத்தைகள் என்று சொன்னவுடனேயே யார் யார் என்பது புரிந்துவிட்டது. அவரது மகளில் ஒருவர் நிச்சயம் ஹன்ஸிகாதான் என்பதும் தெரிந்துவிட்டது. இப்படி நமக்குத் தெரிந்த கதையையே, திரைக்கதையையே கொடுத்தும் காமெடி இயக்கத்தின் மூலம் இதனை ஜெயிக்க வைத்திருக்கிறார் என்றால் இது இயக்குநர் சுந்தர் சி.யின் திறமையினால்தான்..!
சுந்தர்.சி.க்கு எந்த இசையமைப்பாளர் மீது கோபம் என்று தெரியவில்லை. ‘ஹிப்ஹாப் தமிழா’ இசைக் குழுவினரை இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவின் இசைப் பணியை மேடையில் பாடும் மெல்லிசை குழுவின் வேலை என்று நினைத்துவிட்டார்கள் போலும். இவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ஆண் பாடகர்களின் வாய்ஸில் அந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் கொடூரமாக இருக்கிறது. ஒரு பாடகருக்கு இருக்க வேண்டிய கம்பீரமே இல்லாமல்.. ஏதோ ஒரு குரல் போல ஒலிக்கிறது. எந்தப் பாடலையும் ரசிக்க முடியவில்லை. குறைந்த சம்பளத்திற்குக் கிடைத்துவிட்டார்களோ..?
ஆண் வர்க்கத்தை உயர்த்தியும், பெண் வர்க்கத்தை தாழ்த்தியும் பேசும் வசனங்களுடன் 2015-லும் ஒரு தமிழ்ப் படம் ஜெயிக்க முடிகிறதெனில் அது ‘ஆம்பள’ என்ற இந்தத் தலைப்பினால்தான் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ளட்டும்..!
ஆம்பள – சிரிக்க வைத்திருக்கிறான்..!

டார்லிங் சினிமா விமர்சனம்

17-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2014-ம் ஆண்டு முடிந்தும் பேய்ப் பட சீஸன் மட்டும் முடிந்தபாடில்லை. இந்தாண்டிலும் தொடர்கிறது. இந்தாண்டு வெளிவரும் முதல் பேய்ப் படம் என்கிற பெருமையைப் பெறுகிறது இந்த ‘டார்லிங்’.
தெலுங்கில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘பிரேமகதா சரித்திரம்’ படத்தின் தமிழ் ரீமேக். ஆனால் இதே டெம்ப்ளேட் கதையில் ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ என்கிற படம் சென்ற ஆண்டின் இறுதியில் வெளியாகிவிட்டது. இதுவும் அது போன்றதுதான்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் தனது நண்பன் பாலாவின் உதவியை நாடுகிறார். பாலாவோ ஹீரோவை ஒரு தலையாக காதலிக்கும் ஹீரோயின் நிக்கி கல்ரானியை எப்படியாவது பிரகாஷோடு இணைத்துவைத்துவிட வேண்டும் என்ற கொள்கையுடன் நாங்கள் இருவரும் உன்னுடன் சேர்ந்து தற்கொலை செய்யவிருக்கிறோம் என்று சொல்லி ஹீரோவை நம்ப வைக்கிறார். இன்னொரு தற்கொலை பார்ட்டியான கருணாஸ் தானாகவே இந்த டீமில் வந்து சேர்கிறார்.
ஏற்கெனவே இரண்டு கொலைகள் நடந்த ஒரு பங்களாவிற்கு தற்கொலை செய்வதற்காகவே வந்து சேர்கிறார்கள் நால்வரும். வந்த இடத்தில் பாலாவின் நாடகத்தால் தற்கொலை படலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்க.. ஹீரோ, ஹீரோயின் லவ் போர்ஷன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அந்த வீட்டிலேயே இருக்கும் பெண் பேய்க்கு இது பிடிக்கவில்லை. ஹீரோ, ஹீரோயினை காதலிக்க விடாமலும், ‘சேர’ விடாமலும் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் பேய் ஹீரோயினின் உடம்பில் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்ய.. தற்கொலை செய்து கொள்ள வந்து தப்பித்தால்போதும் என்கிற நிலைமைக்கு வருகிறார்கள் மற்ற மூவரும்.
கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படமே..!
புதுமுக ஹீரோ பிரகாஷ்குமாருக்கும் நடிப்பு வந்திருக்கிறது. நன்றாகவே நடித்திருக்கிறார். முதலில் இறுக்கமான முகத்துடன் காதல் தோல்வியுடன் உலா வருபவர், பேயை கண்டு பயந்து போன நிலையில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஹீரோயினின் உடலில் பேய் புகுந்திருக்கிறது என்பதை பாலாவிடம் சொன்னாலே கதை முடிந்துவிடும். படமும் முடிந்துவிடும். அதனால் அதை மட்டும் சொல்லாமல் தனது கோபத்தைக் காட்டிவிட்டு.. இயலாமையில் எரிந்து விழுந்து அந்தக் கேரக்டருக்கு நஷ்டம் வைக்காமல் நடித்திருக்கிறார்.
பெஸ்ட் ஸ்கோர் செய்திருப்பது ஹீரோயின் நிக்கி கல்ரானிதான். அழகு பதுமையாக இருப்பவர் பேயாக மாறும் தருணத்தில் பயமுறுத்துகிறார். அதற்கேற்ற மேக்கப்பும், பின்னணி இசையும் இதற்கு துணை போக.. அடுத்து எப்போது தனது சீற்றத்தைக் காட்டும் பேய் என்கிற எதிர்பார்ப்பை படம் முழுவதும் கொண்டு வந்திருக்கிறார். நல்லதொரு ஹீரோயின் தமிழ்ச் சினிமாவுக்கு..! வெல்கம் மேடம்.
இன்னொரு ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. கல்லூரி காதலி. ஒரு பாடல் காட்சியில்தான் முழுமையாக வந்திருக்கிறார். அவ்வளவுதான். அந்த அழகு முகத்தை வைத்தே அந்த ஒரு பாடல் காட்சியை ஒப்பேற்றியிருக்கிறார் இயக்குநர்.
இன்னொரு பக்கம் பாலாவும், கருணாஸும் அதகளம் செய்திருக்கிறார்கள். சூரி கொஞ்சம் சுதாரிப்பில் இருக்க வேண்டும். இதோ பாலா களத்தில் குதித்திருக்கிறார். எந்த ஹீரோவுக்கும் நண்பனாக இருக்கலாம் போன்ற ஒரு தோற்றம். ஆனால் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் சோடை போகவில்லை.
கருணாஸ் இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை. கிடைத்த வேடங்களில் நடிப்பேன் என்று உறுதியுடன் சொல்லி அவரே கேட்டு வாங்கி நடித்த கேரக்டர். பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய பேச்சுக்கு கத்திரி போட வேண்டும் போல இருக்கிறது. இரண்டு காட்சிகள் வந்தாலும் நான் கடவுள் ராஜேந்திரனின் கலக்கல் காமெடியை ரசிக்க முடிகிறது..
ஹீரோவாகிவிட்டதால் இசையமைப்பு அத்தனை அவசியமில்லை என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. வழக்கம்போல ஒரு பாடலும் புரியவில்லை. அவர்களுக்கு மட்டும் பிடித்தாற்போல் இசைத்திருக்கிறார்கள். காட்சிகளுடன் கூடிய பாடல் காட்சி மட்டுமே ரசிக்க முடிந்த்து. மிச்சத்தில் நிக்கி கல்ரானியும், சிருஷ்டியும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். பின்னணி இசையில் மட்டுமே கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பேய் சம்பந்தமான அனைத்து காட்சிகளிலும் அதுவே பயத்தைக் கூட்டியிருக்கிறது.
இந்தப் பேயை விரட்ட இவர்கள் செய்யும் கிளைமாக்ஸ் கதை புதிய டெக்னிக்குதான்.. ஆனால் இன்னமும் பேய் அந்த வீட்டில் இருந்து விலகாது என்பதாக சொல்லி முடித்திருப்பது வழக்கமான எல்லா பேய் படங்களிலும் இருப்பதுதான்..!
ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனில் இருந்த டபுள் மீனிங் டயலாக்குகளை இங்கேயும் அள்ளி வீசியிருக்கிறார்கள். இதனை நீக்கியிருக்கலாம். அந்தக் காட்சியை மாற்றியெடுக்க எவ்வளவு நேரமாகும்..? தமிழ் சினிமாவில் மறுபடியும் டபுள் மீனிங் டயலாக்குகள் தலை தூக்குவது வருத்தம் தரக் கூடியது.
தற்கொலை செய்து கொள்ள எதற்காக இப்படியொரு தனி பங்களாவை தேட வேண்டும்.? அவரவர் வீட்டிலேயே செய்து தொலைக்கலாமே..? எதுக்கு கூட்டணி சேர்க்க வேண்டும்..? அந்த வீட்டுக்கு வருவதற்கு லாஜிக்படி காரணமே இல்லை. ஆனாலும் வந்திருக்கிறார்கள். தன் கல்லூரியிலேயே படித்த இத்தனை அழகான பெண்ணை ஹீரோ கடைசிவரையிலும் பார்க்கவேயி்லலை என்பதெல்லாம் நம்ப முடிகிறதா..? இதையெல்லாம் யோசித்தால் படமே எடுக்க முடியாது என்பதால் விட்டுவிடுவோம்..!
பேய்ப் படங்களுக்கே உரித்தான இயக்கத்தை சிறப்பாகச் செய்திருக்கும் அறிமுக இயக்குநர் சாம் ஆண்டனுக்கு நமது பாராட்டுக்கள். அடுத்த வாரம் இந்தப் படத்திற்கு கூடுதலான தியேட்டர்கள் நிச்சயமாக கிடைக்கும்போலத்தான் தெரிகிறது. நாளுக்கு நாள் இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் அதிகரித்து வருவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காமெடியும், அமானுஷ்யமும் என்றுமே சினிமா ரசிகர்களுக்கு போரடிக்காதது. அந்த வகையில் இந்த வாரம் வந்த படங்களில் ‘ஆம்பள’யும், ‘டார்லிங்’கும் தமிழ்ச் சினிமாவுலகத்தையே கலகலப்பாக்கியிருக்கின்றன.
இந்த ‘டார்லிங்’கை தனியாகச் சென்று ரசிக்கலாம்..!

ஐ - சினிமா விமர்சனம்

15-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிட்டத்தட்ட 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம். இயக்குநர் ஷங்கர் மற்றும் விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக எதிர்பார்ப்பில் ஏங்க வைத்த படம். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிக பொருட்செலவை இழுத்து வைத்த படம்.. இப்படி பலவைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை கொண்டிருந்த இந்தப் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் கிராக்ஜாக் டிவி விளம்பரம் போலவே ‘பிப்டி பிப்டி’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

அர்னால்டு பெயரில் ஜிம் நடத்தி வருகிறார் விக்ரம் என்ற லிங்கேசன். அவருக்கு பாடி பில்டிங்கில் அளவு கடந்த ஆர்வம். ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என்ற பாடி பில்டிங்கின் மிகப் பெரிய பட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
தினமும் காலையில் எழுந்தவுடன் முளைவிட்ட மொச்சப் பயிறு.. வெறும் காய்கறிகள்.. ஸ்பூனில் அளவோடு குடிக்கும் தண்ணீர்.. மதியம் மட்டுமே கோழிக்கறி என்று அந்த பாடி பில்டிங்கிற்கு தேவையான அளவுக்கு உணவுப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் விக்ரம்.
இவருக்குள்ளும் ஒரு அணையா தீயாக இருக்கிறது ஒரு தலைக் காதல். தியா என்ற எமி ஜாக்சன் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார். இந்தியாவின் பிரபல மாடலான தியா சானிட்டரி நாப்கின் முதல் செருப்பு வரையிலும் பல பிராண்டுகளுக்கு மாடலிங் செய்து வருகிறார். எமியின் விளம்பரப் புகைப்படங்களையெல்லாம் பழைய பேப்பர் கடைகளில் இருந்து வாங்கி சேகரிக்கும் அளவுக்கு விக்ரமுக்கு காதல் முற்றிப் போயிருக்கிறது.
மிகுந்த கஷ்டத்துக்கிடையில் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தை வெல்கிறார் விக்ரம். ஒரு விளம்பரப் படத்தில் ச்சும்மா துணை கேரக்டரில் நிற்கவும் வாய்ப்பு வருகிறது. அந்த விளம்பரத்தில் நடிக்க எமி வருவதால் விக்ரம் ஓடோடிச் செல்கிறார். அங்கே எமியுடன் சந்திப்பு நிகழ்கிறது செல்பி புகைப்படங்கள் சின்ன செல்போனில் ஏறி ஒரு டூயட்டுக்கு வழி வகுக்கிறது.
எமிக்கு எப்போதும் ஒரு பிரச்சினை. உடன் நடிக்கும் பிரபல ஆண் மாடலான உபேன் பட்டேல் எமிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறான். தனக்கு இணங்கிப் போகுமாறு வற்புறுத்துகிறான். மிகப் பெரிய கோடீஸ்வரியான எமி இதற்கு மறுக்க.. எமிக்கு வாய்ப்புகள் கையை விட்டுப் போகின்றன. தன் கண் முன்பாகவே தனது மாடலிங் கேரியர் பறிபோவதை பார்த்து கலக்கமடையும் எமி, சீனாவில் அடுத்து நடக்கப் போகும் மிகப் பெரிய மாடலிங் கான்ட்ராக்டை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்.
இதற்காக உபேன் படேலை விட்டுவிட்டு வேறு மாடலை தேடுகிறார். கண்ணில் படுகிறார் விக்ரம். அவரை மாடலிங் கோ-ஆர்டினேட்டருக்கு அறிமுகப்படுத்திவைத்து அவரை சீனாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே நடக்கும் ஷூட்டிங்கில் விக்ரமுக்கு நடிப்பே வராமல் போக.. ஷூட்டிங் கேன்ஸலாகும் நிலைமை ஏற்படுகிறது.
விக்ரமுக்கு உண்மையான நடிப்பு வர வேண்டுமென்பதற்காக அவரை காதலிப்பதாக பொய் சொல்கிறார் எமி. இதை நம்பி விக்ரமும் உண்மையான நடிப்பையும், காதலையும் காட்ட.. இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி பின்னியெடுக்கிறது.
இதே நேரத்தில் எமியால் விக்ரமுக்கு மேக்கப்மேனாக அறிமுகப்படூத்தி வைக்கப்படும் திருநங்கையும் விக்ரமை விரும்புகிறார். டீப்பாக காதலிப்பதாக அவர் சொல்ல விக்ரம் அவரை உதாசீனப்படுத்துகிறார். இது அந்த திருநங்கைக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
எமி காதலிப்பது போல் உன்னை ஏமாற்றுகிறாள் என்று திருநங்கை போட்டுக் கொடுக்க உண்மை தெரிந்து ஏமாற்றமாகிறார் விக்ரம். அப்படியிருந்தும் விக்ரம் திருநங்கை பக்கம் திரும்பாமல் இருக்கிறார். இதனால் இன்னும் கோபமான திருநங்கை உபேன் பட்டேலுக்கு தகவல் அனுப்ப.. உபேன் இந்தியாவில் இருந்தபடியே விக்ரமின் முகத்தைச் சிதைக்க ஆசீட் வீச ஆள் செட்டப் செய்கிறான். இதில் இருந்து தப்பிக்கும் விக்ரம் இதை யார் செய்தது என்று யோசிக்கிறார்.
விக்ரமின் தொடர்ச்சியான அப்பாவித்தனமான குணங்களில் ஈர்க்கப்படும் எமி, கடைசியில் உண்மையாகவே விக்ரமை காதலிக்கத் துவங்குகிறார். விக்ரமும் தான் ஆசைப்பட்ட எமியே கைக்குக் கிடைத்த சந்தோஷத்தில் இருக்க.. இருவரும் இணைந்து பல விளம்பரங்களுக்கு மாடலிங் செய்கிறார்கள். பணம் கொட்டோ, கொட்டொன்று கொட்டுகிறது.  ஈசிஆரில் மாட மாளிகை வாங்கி செட்டிலாகுகிறார் விக்ரம்.
விக்ரமுக்கும், எமிக்கும் நிச்சயத்தார்த்தம் நடக்கிறது. திருமணத்திற்கு நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுக்கிறார் விக்ரம். அதில் நச்சுப் பொருள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்று சொல்லி தன்னை வளர்த்த தொழிலதிபர் ராம்குமாரிடமே சொல்கிறார்.
விக்ரம் அந்த விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துவிட்ட செய்தி மீடியாக்களில் பரவ.. அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அதிகரிக்கிறது. அந்த நிறுவனம் சீல் வைக்கப்படுகிறது. ஷேர் மார்க்கெட்டில் அதன் பங்குகளின் விலை குறைகிறது. அதன் உரிமையாளரான ராம்குமாருக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது.
இப்போது ராம்குமார், திருநங்கை, உபேன் பட்டேல் மூவருமே விக்ரம் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். இவர்களுடன் நான்காவதாக ஒருவர் வந்து சேர்கிறார். அவர் எமியின் குடும்ப நண்பராகவும், டாக்டராகவும் இருக்கும் சுரேஷ் கோபி. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் சிறு வயதில் இருந்தே எமியை மிகவும் விரும்பியிருக்கும் சுரேஷ்கோபி தான் நேசித்த எமியை விக்ரம் திருமணம் செய்யப் போவதால் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.
இவர்களது சதியாலோசனை விரிகிறது. “கை, காலை வெட்டி வீட்டில் படுக்க வைத்துவிடலாமா?” என்கிறார் உபேன். “அதுக்கும் மேல..” என்கிறார் டாக்டர். “கொலை செய்திரலாமா..?” என்கிறார் ராம்குமார். “அதுக்கும் மேல..” என்கிறார் டாக்டர். “மூஞ்சில ஆசிட் வீசிரலாமா..?” என்கிறார் திருநங்கை. “அதுக்கும் மேல..” என்கிறார் டாக்டர். கடைசியாக அந்த ‘அதுக்கும் மேல’ என்பதற்கான விளக்கத்தை அவரே சொல்கிறார்.
அதன்படி சுவிட்சர்லாந்தில் இருந்து அதிபயங்கர ‘ஐ’ என்ற வைரஸ் கிருமியை ராம்குமார் மூலமாக வரவழைத்து அதனை விக்ரமின் உடம்பில் செலுத்துகிறார்கள். அது விக்ரமை கூனனாக்கி, உடம்பெல்லாம் வீங்க வைத்து, முடியைக் கொட்ட வைத்து, முக அழகை சிதைத்து.. அலங்கோலமாக்கிவிடுகிறது.
ஏதோ எதிர்பாராத ஒரு மருத்துவ நோயினால் தான் பாதிக்கப்பட்டதாக முதலில் நம்பும் விக்ரம் பின்பு வேறொரு மருத்துவரால் தான் திட்டமிட்டு இப்படியொரு நிலைமைக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை உணர்கிறார். தன்னை இந்தக் கதிக்கு ஆளானவர்களை பழிக்குப் பழியாக என்ன செய்கிறார் என்பதும், எமியுடனான அவரது காதல் என்னவானது என்பதுதும்தான் இந்த 2 மணி 53 நிமிட படத்தின் கதை.
இந்தப் படத்திற்கு நிச்சயமாக ‘டபுள் ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். ஏன் ‘யு/ஏ’ கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. விக்ரமனின் முக மாற்றம் உடல் மாற்றம், தோற்றப் பொலிவு போன்றவை குழந்தைகளை நிச்சயமாக தொந்தரவு செய்யும். கூடவே இவரால் நவீன கருட புராணத்தின்படி தண்டிக்கப்படும் அந்த நால்வரும் கடைசியில் இருக்கும் தோற்றமும் நிச்சயம் பெரியவர்களாலேயே சட்டென ஜீரணிக்க முடியாது. இதை எப்படி குழந்தைகள் நல்லவிதமாக புரிந்து கொள்வார்கள். சென்சார் போர்டின் விதிமுறைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்தப் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கேட்டு போராடிய தயாரிப்பாளரை நாம் என்னவென்று சொல்வது..?
இது மட்டுமல்ல.. படத்தில் ஆபாசத்தின் எல்லையைத் தொடும் பல காட்சிகளும் உண்டு. எமி ஜாக்சன் அறிமுகமும் முதல் ஷாட்டின் நடன அசைவே அப்படித்தான் இருக்கிறது. மாடலிங் பாடல் காட்சிகள் முழுவதுமே அக்கிரமம்தான். சானிட்டரி நாப்கின் மற்றும் பெண்கள் அணியும் உள்ளாடைகளை விக்ரமின் அம்மாவிடமே காட்டி ‘இதை வைச்சு உன் பையன் என்ன பண்ணப் போறான்?’ என்று கேட்கிறார் சந்தானம். அந்த அம்மாவோ உள்ளாடையை மட்டும் கேட்கிறார். “எதற்கு..?” என்று சந்தானம் கேட்க “இட்லி சுட யூஸ் பண்ணிக்கிறேன்..” என்கிறார். “ஏற்கெனவே குஷ்பு இட்லி இருக்கு. இப்போ இதா..?” என்கிறார் சந்தானம்.. மேலும் சுரேஷ்கோபி, எமியின் உள்ளாடையை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் திணித்துச் செல்லும் காட்சியும் அதிர்ச்சியானது. இதெல்லாம் கதைப்படி ஓகேதான். ஆனால் இதற்கு ‘யு’ சர்டிபிகேட் கேட்டால் எப்படி..?
திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளும் இப்படித்தான். நாடு முழுவதிலும் இப்போதுதான் அரவாணி என்கிற பெயரில் இருந்து திருநங்கைகள் என்று நல்ல பெயர் கொடுத்து மரியாதை தரப்பட வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வரும் வேளையில் நன்கு படித்த, சிந்தனையுள்ள இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் காமெடி என்ற பெயரில் அதைச் சிதைப்பது வருந்தத்தக்கது.
இன்றைக்கு மாடலிங் மற்றும் மேக்கப் கலைகளில் திருநங்கைகள்தான் அதிகம் பேர் உள்ளனர். நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரிடம்கூட திருநங்கைகள்தான் மேக்கப்மேனாக இருக்கிறார்கள். விக்ரமுக்கு மேக்கப் செய்ய வரும் திருநங்கை விக்ரமை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் என்றும் அவரது காதல் வேட்கையை சில காட்சிகள் மூலமாக காட்ட முயன்றிருப்பதும் தவறாக இருக்கிறது. காட்சிகளில் இருப்பது காதல் அல்ல. காமம்.
இவைகளை சட்டென விட்டொழித்தால் கண் முன்னே நிற்பது விக்ரமின் அசராத உழைப்புதான். பாடி பில்டிங்கிற்காக அப்படியொரு உடம்பை உருவாக்கி பேணி காத்து.. பின்பு சட்டென்று மூன்றே மாதங்களில் அரை உடலாக காட்சி தரும் அந்த அகோரமெல்லாம் நடிப்புப் பசியின்றி வேறில்லை. சென்னை தமிழ் மட்டும் அவருக்கு ஒத்துழைக்கவில்லையே தவிர.. விக்ரமின் மீது ஒரு குறையுமில்லை.
காதலுடன் இருக்கிறாளே என்று நினைக்கும்போது அழைக்கும் ‘மேட’த்திற்கும் காதல் இல்லை என்ற போதும் ‘மேடம்’.. என்ற உச்சரிப்பில் காட்டும் விரக்தியையும் புரிய முடிகிறது.. முகம் கோரமான நிலையில் தனது பழைய காதலை நினைத்து உருகும்போது அந்த முகத்தில் எதைப் பார்ப்பது என்கிற பயவுணர்வே வருகிறது. ஆனாலும் கோவில் வாசலில் தன் கையில் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு செல்லும் எமியை நினைத்து ஒரு பார்வை பார்க்கிறாரே.. அதுவொன்று போதும்.. செம ஆக்சன்..
சுரேஷ்கோபி சொல்லும் ‘அதுக்கும் மேல’ என்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட விக்ரம் சொல்லும் ‘அதுக்கும் மேல’தான் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது.. ‘என்னருகில் நீ இருந்தால்’ பாடல் காட்சிகளிலும் வேறுவிதமான மேக்கப்புடன் அவர் செய்திருக்கும் அந்த நடிப்பு வித்தையை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. ஷங்கருக்கு தோள் கொடுக்க விக்ரம்தான் மிகச் சரியான ஆள்.
படத்தின் பாதி காட்சிகளை நகர்த்துவதே காமெடிகள்தான்.. கட் டூ பிளாஷ்பேக் காட்சிகளாக திரைக்கதையை அமைத்திருப்பதால் நகைச்சுவை சாத்தியமாகிவிட்டது இயக்குநருக்கு. சந்தானம் – பவர்ஸ்டார் கூட்டணி முதல் அரை மணி நேரத்தில் வயிற்றை பதம் பார்க்கிறது. சந்தானம் இன்னமும் சக மனிதர்களை கிண்டலடித்து காமெடியாக்கும் வித்தையை கைவிடவில்லை போலும். இதற்கு ஒத்து போகும் பவர்ஸ்டார் கடைசியாக சொல்லியிருக்கும், ‘நீங்க எவ்ளோதான் என்னை கேவலப்படுத்தினாலும் நான் மேல மேல உயர்ந்துக்கிட்டேதான் போவேன்’ என்பது அவருக்கு பொருத்தமானதுதான்..!
சுரேஷ்கோபி எப்படி இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டாரென்று தெரியவில்லை. மலையாளத்தில் அவர் நடித்திருப்பதில் கால்வாசிகூட இங்கே இல்லை. பெரிய ஸ்கோப்பும் இல்லாமலேயே அவரது கேரக்டரை முடித்திருக்கிறார்கள். உபேன் பட்டேல்தான் இருக்கின்ற வில்லன்களில் உருப்படியாகத் தெரிந்தவர். சிவாஜி ராம்குமார் மிக நீண்ட வருடங்கள் கழித்து மேக்கப் போட்டிருக்கிறார். கடைசியில் இப்படியாகிவிட்டதே..? ஆனாலும் ஒன்று.. ‘சரி.. போ நான் பார்த்துக்குறேன்’ என்று வெறுப்புடன் விக்ரமிடம் சொல்லும் அந்தக் காட்சியில் மட்டும் நடிகர் ராம்குமார் தனியாகத் தெரிகிறார். நல்ல அழுத்தமான நடிப்பு இந்தக் காட்சியில்.
எமி ஜாக்சன் மாடலிங்கிற்கு ஏற்ற முகம். லிப் லாக் வைப்பதற்கு மறுக்காமல் ஒத்துக் கொள்ளும் நடிகை. அதனால்தான் நடிக்க வைத்திருக்கிறார்கள் போலும். தன்னை விக்ரம் கடத்தி வந்து வைத்திருக்கும் காட்சியொன்றில் உருக்கமாக நடித்திருக்கிறார். மாடலிங் கோ-ஆர்டினேட்டர் மாயாவிடம் தன்னிலையை விளக்கும் காட்சியிலும் அதே போல.
அற்புதமாக காட்சிகளை வரைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இந்தப் படத்தை டிஜிட்டலில் செய்யாமல் ஃபிலிமிலேயே பதிவாக்கியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் அது தெரியவில்லை. டிஜிட்டலிலேயே பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு புதுமையான ஒரு அனுபவம் இந்தப் படம். சீனாவில் படமாக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளுமே கொள்ளை அழகு. அந்தப் பூக்களுடன் கூடிய காட்சிகளில் நடிகர்களைவிடவும சுற்றுப்புறத்தையே கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. எத்தனை, எத்தனை புதிய கேமிராமேன்கள் வந்தாலும் கை தட்டல் வாங்கிய முதல் ஆள் நான்தான் என்பதை இப்போதும் நிரூபித்திருக்கிறார் பி.சி. ஸார்..
சண்டை காட்சிகளில் இருக்கின்ற அத்தனை சினிமா டெக்னிக்கலையும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சீனாவில் நடக்கும் சண்டைகள் அந்நாட்டு படங்களில் மட்டுமே பார்த்திருக்கக் கூடியது. பாடி பில்டிங் போட்டியின்போது நடக்கும் சண்டைகளும் காதில் பூச்சுற்றியதுதான்.. அதேபோல உபேன் பட்டேலுடன் ஓடும் ரயிலில் மோதும் காட்சியும் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அநியாயத்திற்கு நீளமாக இருக்கின்றன. இவைகளில் கத்திரியை போட்டிருக்கலாம்.
பெரிதும் ஏமாற்றிய இசையைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், யேசுதாஸ், மனோ இவர்களிடத்தில் இருப்பது ஒரு கவன ஈர்ப்பு குரல். எங்கே, எந்த இடத்தில் ஒலித்தாலும் இசையையும் தாண்டி அவர்களது குரல் வசீகரிக்கும். திரும்பிப் பார்க்க வைக்கும்.
ஆனால் இப்போது ஒலிக்கின்ற ஆண் குரல்களும் பெண் குரல்களும் ஏதோவாகவே இருக்கிறதே தவிர, ஈர்ப்பாக இல்லை. ‘என்னருகில் நீ இருந்தால்’ பாடலையும், ‘மெர்சலாயிட்டேன்’ பாடலையும் கேட்டுப் பாருங்கள். குரலா அது..? இசையில் அமிழ்ந்துபோய்விட்டது. குரலே இல்லையெனில் பாடல்கள் எப்படி மனப்பாடமாகும்..?
எஸ்.பி.பி.யும், மனோவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கலாம். ஆனால் உயிரோட்டமான குரலோடு பாடலுக்கே உயிர் கொடுப்பவர்கள். இந்தப் பாடல்களை இவர்களுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். பாடலையாவது தனித்து கேட்க சந்தோஷமாயிருந்திருக்கும். அத்தனையும் வீணாகத்தான் இருக்கிறது.
பின்னணி இசையிலும் ஏனோதானாவென்றுதான் இசைத்திருக்கிறார் இசைப்புயல். விக்ரமின் பழி வாங்கும் காட்சிகளில்லாம் வரும் இசையைத் தவிர மிச்சம், மீதி இடங்களிலெல்லாம் அந்தக் காலத்து இசை.. ஏதோ இருக்கிறது என்கிற ரீதியில்தான் இசைத்திருக்கிறார். ஷங்கர் எப்படி விட்டாரென்று தெரியவில்லை..!? ரொம்ப ஏமாத்திட்டீங்க ரஹ்மான் ஸார்..!
இயக்குநர் ஷங்கர் ஒவ்வொரு படத்திலும் வில்லன்களுக்கு கொடுக்கும் விதவிதமான தண்டனை காட்சிகளுக்கு  ரொம்பமே மெனக்கெடுவார். இதிலும் அவருக்குக் கை கொடுத்திருப்பது மெடிக்கல் டிக்சனரி.
வெறும் எஃப்.ஆர்.சி.எஸ். படித்த மூத்த டாக்டர் ஒருவர் விக்ரமனுக்கு நடந்தவைகளை விளக்க… அவர் துணையுடனேயே தான் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் நால்வரின் கதையை தீர்மானிக்கிறார் விக்ரம். அந்தத் தீர்மானங்களெல்லாம் ஓஹோவாகத்தான் தெரிகிறது.
ஆனால் அடுத்தடுத்த காட்சிகளிலெல்லாம் ‘பிரஸ்’ என்கிற போர்வையில் சந்தானம் வந்து பேசும் பேச்சுக்களால் ‘சீரியஸ்’ என்ற தளத்தில் இருந்து ‘காமெடி’ என்ற தளத்திற்கு கொண்டு வந்துவிட்டதால் சட்டென அவைகள் மறந்து போகின்றன. படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் இதுதான்.
விக்ரமின் இத்தனை பெரிய உழைப்பு… இயக்குநர் ஷங்கரின் திறமை, உழைப்பு இவையெல்லாம் சந்தானத்தின் அந்த கடைசிகட்ட காமெடியில் புஸ்ஸாகிப் போனது. ‘இவ்ளோ கஷ்டப்படுத்திட்டாங்களே.. இவனுகளுக்கு நல்லா வேணும்’ என்கிற வார்த்தையை பார்வையாளனிடத்தில் இருந்து வரவழைக்காமல் போனது இயக்குநரின் தவறுதான்.
எத்தனையோ கமர்ஷியல் படங்கள் வரும்போது இது அவற்றில் இருந்து மேலாக ‘அதுக்கும் மேல்’ என்று பேசப்படும் அளவுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் விக்ரமின் உடல் உழைப்பையும் தாண்டி மற்றவை போலவே இதுவும் ஒன்று, என்று சொல்லும் அளவுக்கு போனது திரைக்கதையின் விளைவு..!
 புதிய புதிய சிந்தனைகள்.. புதிய கதைக் கருக்கள்.. புதிய திரைக்கதை.. புதிய படமாக்கல்.. வித்தைகள் என்று பலவற்றையும் தனது ஒவ்வொரு படத்திலும் செய்துவரும் இயக்குநர் ஷங்கரை பொருத்தமட்டில் இது அவருக்கொரு வெற்றி படம்தான். ஆனால் மற்றவைகளில் இருக்கும்.. இருந்த.. ஏதோவொன்று இதில் மிஸ்ஸிங் ஆகியிருக்கிறது.
இயக்குநர் ஷங்கரின் அடுத்த படங்களில் ‘இதுக்கும் மேல’  ஒன்றை எதிர்பார்க்கிறோம்..!

2014-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியல்..!

09-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சென்ற 2014-ம் ஆண்டில் 217 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒரு விதத்தில் சிற்பபான படங்கள் என்று நாம் பட்டியலிட்டால் அது வெறும் 10 திரைப்படங்களுக்குள்ளேயே அடங்கி விடுகிறது.
இவற்றில் இருந்து சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்வது என்பது மிகவும் சிக்கலானது.  சிறந்த கதை இருந்தால் திரைக்கதை இருக்காது. இந்த இரண்டும் இருந்தால் இயக்கம் இருக்காது.. அனைத்துமே ஒருங்கே அமைந்த படங்களை வரிசைப்படிதான் பட்டியலிடப்பட வேண்டியுள்ளது.
இவை அனைத்தும் அந்தந்த குறிப்பிட்ட பிரிவுகளில் திறன் வாய்ந்ததாக இருப்பதாக நாம் கருதுகிறோம். அந்த வகையில் மிகவும் சல்லடை போட்டு சலித்துத்தான் இந்தப் பட்டியலை தயார் செய்திருக்கிறோம். 

இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் தனித்து நின்று மிகச் சிறப்பான சமூக விழிப்புணர்வு மிக்க படமாக தேர்வாகியிருப்பது 'அப்பா வேணாம்ப்பா' என்ற திரைப்படம். மிகக் குறைந்த பட்ஜெட்டில் மதுவின் தீமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம்தான் 2014-ம் ஆண்டின் தமிழ்ச் சினிமாவின் தலையாய படம் என்று சொல்வோம்.
2014-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியல்..!

1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – கோலிசோடா
2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு — குக்கூ
3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – சதுரங்க வேட்டை
4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – முண்டாசுப்பட்டி
5. சிறந்த பேய்ப் படம் – பிசாசு
6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – ஜிகர்தண்டா
7. சிறந்த இயக்குநர் – விஜய் மில்டன் (கோலிசோடா)
8. சிறந்த இயக்குநர் – சிறப்பு விருது – பிரபு சாலமன் (கயல்)
9. சிறந்த புதுமுக இயக்குநர் – ராஜூ முருகன் (குக்கூ) 
10. சிறந்த கதை – கார்த்திக் ரவி (குறையொன்றுமில்லை) – ஸ்டாலின் ராமலிங்கம் (காடு)
11. சிறந்த திரைக்கதை – ரமேஷ் (தெகிடி)
12. சிறந்த வசனம் – ஸ்டாலின் ராமலிங்கம் (காடு)
13. சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
14. சிறந்த நடிகர் சிறப்பு விருது – பிருத்விராஜ் (காவியத் தலைவன்)
15. சிறந்த புதுமுக நடிகர் – சந்திரன் (கயல்)
16. சிறந்த நடிகை – மாளவிகா நாயர் (குக்கூ)
17. சிறந்த நடிகை – சிறப்பு விருது – விஜயலட்சுமி (வெண்நிலா வீடு)
18. சிறந்த புதுமுக நடிகை – ஆனந்தி (கயல்)
19. சிறந்த துணை நடிகர் – கலையரசன் (மெட்ராஸ்)
20. சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)
21. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – ராதாரவி (பிசாசு)
22. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – சமுத்திரகனி (காடு)
23. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – துளசி (பண்ணையாரும் பத்மினியும்)
24. சிறந்த குணசித்திர நடிகை சிறப்பு விருது – சரண்யா பொன்வண்ணன் (வேலையில்லா பட்டதாரி)
25. சிறந்த வில்லன் நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
26. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – மதுசூதன்ராவ் (கோலிசோடா) 
27. சிறந்த வில்லி – ஆண்ட்ரியா (அரண்மனை)
28. சிறந்த வில்லி சிறப்பு விருது – சலோனி லூத்ரா (சரபம்)
29. சிறந்த நகைச்சுவை நடிகர் – தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம், காடு, )
30. சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (அரண்மனை, பகடை பகடை)
31. சிறந்த ஒளிப்பதிவு – சதீஷ்குமார் (மீகாமன்)
32. சிறந்த படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
33. சிறந்த பின்னணி இசை – ராஜ் ஆர்யன் (ர)
34. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – அரோல் கரோலி (பிசாசு)
35. சிறந்த ஒலிப்பதிவு – (மீகாமன்)
36. சிறந்த ஒலிக்கலவை – (பிசாசு)
37. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – கயல்
38. சிறந்த நடன இயக்கம் – (பார்த்து பார்த்து – மஞ்சப் பை)
39. சிறந்த சண்டை அமைப்பு – சுப்ரீம் சுந்தர் (கோலிசோடா)
40. சிறந்த கலை இயக்கம் – சி.ஆர்.வேலு (ஆஹா கல்யாணம்)
41. சிறந்த ஆடை வடிவமைப்பு – (காவியத் தலைவன்)
42. சிறந்த ஒப்பனை – பட்டணம் ரஷீத் (காவியத் தலைவன்)
43. சிறந்த பாடல் – போகும் பாதை (தமிழச்சி தங்கபாண்டியன் – பிசாசு)
44. சிறந்த ஜனரஞ்சக பாடல் – குக்குரூ குக்குரூ (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
45. சிறந்த பின்னணி பாடகர் – அந்தோணி தாசன் (பாண்டிய நாடு கொடி – ஜிகர்தண்டா)
46. சிறந்த பின்னணி பாடகி – லட்சுமி மேனன் – (குக்குரூ குக்குரூ – ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
47. சிறந்த டிரெய்லர் – மீகாமன்
தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!