ஆத்யன் - சினிமா விமர்சனம்

31-10-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு சின்னக் கதையை சுவாரசியமான திரைக்கதை மற்றும் அழுத்தமான இயக்கத்தின் மூலம் இரண்டு மணி நேரமும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராம் மனோஜ் குமார்.


ஹீரோ அபிமன்யூ ஜப்பானில் வசிப்பவர். தமிழர். அங்கேயே வளர்ந்தவராக இருந்தாலும் அவருடைய தந்தையின் பழக்கத்தினால் தமிழ் மொழியை நன்கு கற்று தேர்ந்திருக்கிறார். கட்டினால் தமிழ்ப் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்கிற ஆசையையும் உடையவர்.
ஹீரோயின் சாக்ஷி அகர்வால் சென்னையில் இருப்பவர். இவர்கள் இருவரும் முகநூலில் பழக்கம் கொண்டு நாளடைவில் காதல் கொண்டுள்ளனர். அபிமன்யூ, சாக்சியை பார்க்க சென்னைக்கு வருகிறார். இதில்தான் படமே துவங்குகிறது.
அடையாரில் தனக்குத் தெரிந்த நண்பரொருவரின் வீட்டுக்கு தங்குவதற்காக வருகிறார். அந்த வீட்டில் ஏற்கெனவே ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து போயுள்ளதால் அது பேய் வீடு என்று அந்த குடியிருப்பின் வாட்ச்மேனும் பயமுறுத்துகிறான்.
கால்டாக்சியில் வீட்டிற்கு வரும் வழியிலேயே அபிமன்யூவிற்கு அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. தூக்கம் வருகிறது. வீட்டிற்கு வந்தும் ஷவரில் குளிக்கும்போதே தலை சுற்றும் அளவுக்கு சோர்வாகிறார்.
காதலி சாக்சி மதியம் 1 மணிக்கு மாயாஜாலுக்கு வரச் சொல்கிறார். வருகிறேன் என்று சொன்னவர் சட்டென்று மயங்கி விழுந்து தூங்கிவிடுகிறார். ! மணி 20-வது நிமிடத்தில் கண் முழித்தவர் அரக்கப் பரக்க மாயாஜாலுக்கு கிளம்புகிறார். அங்கே மிக தாமதமானதால் சாக்சியை கண்டுபிடிக்க முடியவில்லை.
போதை மருந்து கடத்தல் தொழிலை செய்யும் ஜெனீஷும், அபிமன்யூ வந்த கால் டாக்சியின் டிரைவர் மகேஸ்வரனும், இந்தப் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெய்சந்திரனும் பால்ய வயதில் இருந்தே நண்பர்கள். இப்போது மூவரும் கூட்டணி அமைத்து போதை மருந்துகளை கடத்தி வருகிறார்கள். விற்பனை செய்கிறார்கள். காசை அள்ளுகிறார்கள்.  
இந்த நேரத்தில் இந்த ஜெனீஷின் ரவுடி கும்பலால் கடத்தப்படுகிறார் அபிமன்யூ. அவர் ஏன் கடத்தப்பட்டார்..? கடைசியில் என்ன ஆனார்..? என்பதெல்லாம் நிச்சயமாக சஸ்பென்ஸான விஷயங்கள்.
படத்தில் முதல் காட்சியில் இருந்தே இயக்குநரின் இயக்கத் திறமை பளிச்சிடுகிறது. ஏதோ ஒன்று படத்தில் இருக்கிறது என்று சொல்ல வைக்கிறது. படத்தின் இறுதிவரையிலும் அந்த மாயத்தை இயக்குநர் செய்திருப்பதால் கடைசிவரையிலும் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.
கதைக் கருவை பிரதானமாக வைத்து திரைக்கதை அமைக்காமல் பல்வேறு அனுமானங்களுக்கு இடம் கொடுத்து அதாக இருக்குமோ.. இதாக இருக்குமோ என்றெல்லாம் சஸ்பென்ஸை கொடுத்துவிட்டு இடைவேளைக்கு பின்புதான் முடிச்சை அவிழ்த்திருக்கிறார் இயக்குநர். அந்த இடம் ரசிப்பானது..!
ஹீரோ அபிமன்யூ ஏற்கெனவே ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜூடன் நடித்தவர்தான். இந்தப் படத்தில் சென்னைக்கு புதிது என்பதால், சரளமாக தமிழ் பேசுபவரிடம் அதிகமாக தமிழ் பேசாதவர் எப்படி பேசுவாரோ அப்படி பேச வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்கு துல்லியமாக கேரக்டர் ஸ்கெட்ச்சை வடிவமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
கிளைமாக்ஸில் வைத்திருக்கும் ஒரு டிவிஸ்ட்.. அதைத் தொடர்ந்து வரும் சண்டை காட்சிகள் அழகு. மிரட்டல் செல்வாவின் சண்டை காட்சிகள் இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு என்று தைரியமாகவே சொல்லலாம்.
ஒரு காட்சி.. ஒரு ஷாட்டில்கூட தேவையில்லாமல் எந்தவொரு ஆளையும் காட்டாமல், வசனத்தையும் கூட்டாமல் மிக எளிமையாக அமைத்திருக்கிறார். இதனாலேயே படத்தை அதிகம் ரசிக்க முடிந்திருக்கிறது.
ஹீரோயின் சாக்சியின் இரண்டு நண்பிகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு காதலை ஒருவர் ஆதரித்தும், இன்னொருவர் எதிர்த்துமாக குழப்புகிறார்கள். இந்தக் காட்சிகளைகூட யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சாக்சியின் தமிழ் உச்சரிப்பும், பாடல் காட்சிகளின் பாடல்களின் உச்சரிப்பு நடிப்பும் திறனாகவே வந்திருக்கிறது. வரவழைத்திருக்கிறார் இயக்குநர்.
ரவுடி கும்பல் தலைவனாக இருக்கும் ஜெனீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயச்சந்திரன், கால் டாக்சி டிரைவரான மகேஸ்வரன் மூவருமே வில்லன்களாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். டிரைவர் மகேஸ்வரனின் ஓவர் பேச்சு எதையோ உணர்த்துவதுபோல முதலில் காட்டினாலும் பின்பு உண்மை தெரியும்போது அதிர்ச்சியாகிறது. அபிமன்யூவை கடத்தி வந்தவுடன் அவருடன் பேசும்பேச்சில் இருக்கும் டிரைவர் மகேஸ்வரனின் எகத்தாள நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவுவரையிலும் இயக்குநருக்கு இன்னொரு மிகப் பெரிய பலமாக இருந்திருப்பவர் ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன். பலே கூட்டணி. மெரீனா கடற்கரையில் மாலை நேர காட்சிகளில் இதுவரைக்கும் இப்படியொரு அழகினை கண்டதில்லை. அவ்வளவு அழகாக படமாக்கியிருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பாடல் காட்சிகளை ரம்மியமாக எடுத்திருந்தாலும் பாடல்கள் எடுபடாமல் போயிருக்கின்றன. ‘உயிரைத் தேடி ஓடுகிறேன்’ பாடல் மட்டுமே கேட்க வைத்திருக்கிறது. ஆனாலும் பின்னணி இசையில் ஜொலித்திருக்கிறார் இசையமைப்பாளர். பல காட்சிகளை ரசிக்க வைத்தமைக்கு பின்னணி இசையும் ஒரு காரணம்..!
மிகக் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்கள் படப்பிடிப்பில் ஒரு நிறைவான படத்தினை எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் ராம் மனோஜ் குமார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படத்தில் மட்டுமே உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்தோடு இவர் இயக்கியிருக்கும் இந்தப் படம் புதிய இயக்குநர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது.

நானும் ரெளடிதான் - சினிமா விமர்சனம்

28-10-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏற்கெனவே வந்த கதைதான். காதலிக்காக கொலை செய்யத் துணியும் காதலன் பற்றிய படம். ஆனால் இப்போதைய காலக்கட்டத்திற்கேற்றவாறு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். கூடவே கொஞ்சம் காம நெடி கலந்த காமெடியும்..!

பாண்டிச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான மீனா குமாரி என்கிற ராதிகாவின் மகன் விஜய் சேதுபதி. சின்ன வயதில் இருந்தே ரவுடியாக வேண்டும் என்று ஆசைப்படுபவர். போலீஸ், ரவுடி இருவரில் போலீஸ்தான் பெரிய தாதா என்கிற நினைப்பில் தானும் ஒரு தாதாவாகிவிட வேண்டும் என்கிற ஆசையில் தனது தாயின் போலீஸ் ஆசைக்கு இணங்குவதுபோல் நடித்தபடியே தாதா வேலையையும் செய்து வருகிறார்.
இன்ஸ்பெக்டர் அழகம்பெருமாளின் மகளான நயன்தாராவை ஒரு நாள் தன் தாயைப் பார்க்க வந்த இடத்தில் சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தவுடனேயே வழக்கமான சினிமாத்தனம்போல் அவர் பின்னாலேயே ஓடுகிறார். விரட்டுகிறார். செல்போனை ரிப்பேருக்குக் கொடுத்துவிட்டு ‘சரி செய்து தருகிறேன்’ என்று சொல்லியே ஏமாற்றுகிறார்.
நயன்தாராவுக்கு காது கேட்காது. ஒரு குண்டு வெடிப்பில் தனது தாயை இழந்தவர். அந்தக் குண்டுவெடிப்பினால்தான் அவருக்கு காது கேட்கும் சக்தியும் பறி போயிருக்கிறது. ஆனால் உதட்டசைவை வைத்து பேசுவதைப் புரிந்து கொண்டு பேசுவார்.
அவரது தாயின் சாவுக்குக் காரணமான குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியது அதே பாண்டிச்சேரியில் இருந்த கிள்ளிவளவனான பார்த்திபன். இப்போது ரவுடிகளின் அடுத்தக் கட்ட பரிமாண வளர்ச்சியான அரசியலிலும் தலையெடுத்து நிற்கிறார்.
நயன்தாராவின் அப்பா இன்னும் சில நாட்களில் ரிட்டையர்டாகப் போகிறார். பாண்டிச்சேரிக்கு மகளுடன் வந்த இடத்தில்.. அப்பாவுக்காக பீர் வாங்க ஒயின்ஷாப்புக்கு போகும் நயன்தாரா, அங்கே கடையின் உள்ளே பார்த்திபன் இருப்பதைப் பார்த்துவிட்டு வந்து அப்பாவிடம் சொல்கிறார்.
அப்பா தனது மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மனைவியின் மரணத்திற்கு பழி வாங்க பார்த்திபனை கொலை செய்யப் போகிறார். ஆனால் குறி தவறுகிறது. பார்த்திபனின் ஆட்கள் அழகம்பெருமாலை கொலை செய்கிறார்கள்.
இந்தக் கொலையை முதலில் விஜய் சேதுபதி நயன்தாராவிடம் சொல்லாமல் விட்டுவிட.. கடைசியில் ராதிகாவால் நயன்தாராவுக்கு தெரிய வருகிறது. விஜய் சேதுபதி இந்த நேரத்தில் நயன்தாராவை காதல் என்று சொல்லி நெருங்கி வர.. “எனது அப்பா, அம்மாவை கொலை செய்த பார்த்திபனை கொலை செய்தால்தான் நான் உன்னைக் காதலிப்பேன். கல்யாணம் செய்து கொள்வேன்…” என்கிறார் நயன்தாரா.
அடுத்து விஜய் சேதுபதி என்ன செய்தார் என்பதுதான் இடைவேளைக்கு பின்னான கதை..!
படம் நல்லாயிருக்கு.. காமெடியா இருக்கு.. விட்டுவிட்டு வரும் காமெடிகள் படத்தை நகர்த்துது.. விஜய் சேதுபதி நல்லா நடிச்சிருக்காரு. நயன்தாரா தனது பெஸ்ட்டான நடிப்பை இதுல காட்டியிருக்காரு. அனிருத்தின் இசை வித்தியாசமா இருக்கு. மொத்தத்துல படம் சூப்பர் என்றெல்லம் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இதில் முக்கால்வாசி உண்மைதான். நயன்தாராவுக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம் என்று சொல்வதில் பொய்யில்லை. இத்தனையாண்டுகளாகியும், இத்தனை வயதாகியும் அழகு கூடிக் கொண்டே செல்கிறது நயனுக்கு.. நயனின் நடிப்பு இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். தனது அப்பாவின் மரணச் செய்தி கேட்டுவிட்டு நடுரோட்டில் அழுதபடியே நடந்து வரும் அந்த நீண்ட ஷாட் அற்புதம் என்றே சொல்லலாம்..!
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் நீண்ட நாள் கழித்துக் கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. திரைக்கதையைத் தவிர்த்துவிட்டு இவருடைய நடிப்பென்று பார்த்தால் பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பினாலேயே நகைச்சுவையை கொண்டு வந்திருக்கிறார். பல காட்சிகளில் மோசமான திரைக்கதையினால் எரிச்சலை ஏற்படுத்தினாலும் நடிப்பு என்கிற வகையில் அது ஓகேதான்..
ராதிகா வழக்கம்போல.. சொல்லவே தேவையில்லை. உடை மட்டுமே லூஸாக இருந்ததே தவிர.. நடிப்பில் அப்படியேதான்.. போலீஸ் செலக்ஷன் இடத்தில் நின்று கொண்டு தனது மகனுக்காக கேன்வாஸ் செய்யும் இடத்தில் மிக இயல்பாக நகைச்சுவையை தெளித்துக் கொண்டே போகிறார். பக்காவான அம்மா..!
பாலாஜி இந்தப் படத்தில்தான் கொஞ்சம் நிதானமான கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். அது யாருய்யா இந்த ராகுல் தாத்தா என்று கேட்க வைத்திருக்கிறார் அவர். கூகிள் மேப்பில் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும்போது திரையரங்கம் அதிர்கிறது.. நல்லதொரு கேரக்டர் ஸ்கெட்ச் இந்தத் தாத்தாவுக்கு..!
அதிரடி கலக்கல் பார்த்திபன்தான்.. “நீயெல்லாம் பழைய வில்லன்.. இப்போ நான்தான் இங்க புதிய வில்லன்..” என்று சொல்லி மன்சூரலிகானை ஓரம் கட்டுகிறார். தனது டிரேட் மார்க் குண்டூசி டயலாக்குகளால் பல இடங்களை ரசிக்க வைத்திருக்கிறார். பேபிக்காக தலைவரிடம் சீட்டு கேட்டு போராடும் காட்சியும், பேபியை தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு சீட்டை பெறும் சாமர்த்தியத்திலும் பார்த்திபனை ரசிக்கலாம்..! பார்த்திபனை கொலை செய்ய விஜய் சேதுபதி போடும் ஸ்கெட்ச்சும், அதே நேரம் மன்சூரலிகான் ஆட்கள் செய்யும் இடையூறும் கலகல..
இப்படி படத்தினை பற்றி ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் ‘பார்க்கலாம்’ என்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் சொல்ல வந்தவிதம் மிக கேவலமாக இருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
காதல் என்கிற ஒரு விஷயத்தைத் தவிர வேறு எதுவுமே தமிழ்ச் சினிமா ரசிகனிடத்தில் இல்லை என்றுதான் அனைத்து இயக்குநர்களும் இப்போதும் சிந்திக்கிறார்கள். இதை மீறி அவர்கள் வெளியில் வருவதே இல்லை.
இந்தக் காதல் என்ற உணர்வு பார்த்தவுடன் வருகிறது என்றுதான் அனைவருமே சொல்லிக் கொடுக்கிறார்கள். பார்த்தவுடன் வருவதா காதல்..? இதை காதலித்து மணமுடித்தவர்களுடன் கேட்டு, பேசிப் பார்த்தால் புரியும்..
காதலிக்காக காதலன் என்னவெல்லாம் செய்வான் என்பதையும் இந்த தமிழ்ச் சினிமாதான் சொல்லிக் கொடுத்தது. இப்போதும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லியிருப்பது போல இத்தனை கொடூரமாக இருக்கவே கூடாது..! முட்டாள்தனமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
எந்த மனுஷனாவது பெத்த அப்பன் செத்ததை மகளிடம் சொல்லாமல் ‘அவள் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை’ என்று சொல்வானா..? இது எவ்வளவு பெரிய மனித நேயமற்ற செயல்..? இந்த மனித நேயம்கூட இல்லாதவன் எப்படி ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியும்..? நல்ல மனிதனாக இருந்தால்தானே அவனையொரு நல்ல காதலன்.. உண்மையான காதலன் என்றே சொல்ல முடியும்.. திரைக்கதையின் மகா சொதப்பல் இதுதான்..
பாலாஜி மூலமாக ‘இது தவறு’ என்று திருப்பித் திருப்பி சொன்னாலும் ஹீரோயிஸ சினிமாவில் ஹீரோ என்ன சொல்கிறாரோ அதுதான் திரைப்படம் சொல்ல வரும் நீதி என்பது தமிழ்ச் சினிமாவுலகின் மரபு. அந்த வகையில் இத்திரைப்படம் சொல்லியிருக்கும் இந்த திரைக்கதை கேடுகெட்டத்தனம்..!
இன்னொன்று தான் காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் வந்திருக்கிறாள் என்று தேடி வரும் ஹீரோ, அந்த இடத்தில இடையூறு செய்யும் வில்லனின் கோரிக்கைக்காக ஒரு தடவை அவனை கட்டிப் பிடிக்கும்படி சொல்கிறாராம்..! இப்படி கேட்பதே தவறென்று இயக்குநருக்குத் தோணவில்லையா..? இந்த ஒரு வசனம் ஓராயிரம் கற்பழிப்பு காட்சிகளுக்கு சமமானது.. இதற்கும் ஹீரோ முதலில் சீரியஸாக ஒத்துக் கொண்டு ஹீரோயினிடம் சிபாரிசு வேறு செய்கிறார். கேவலமான காட்சியமைப்பு..!
இப்போதெல்லாம் படங்களில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் குறைந்து கொண்டே வருவதை நினைத்து சந்தோஷப்பட்ட வேளையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் அந்த நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டது. மறுபடியும்  வெட்கக்கேடான ஒரு விஷயத்தை தமிழ்த் திரையுலகில் புகுத்தி வெற்றி பெற வைத்துவிட்டது.
அதையும் இந்தப் படத்திலும் நிறைவேற்றியிருக்கிறார் இயக்குநர். ஹீரோயினுக்கு நிசமாவே காது கேட்காதா என்பதை சோதிக்க வேண்டி ஹீரோ இரண்டு கெட்ட வார்த்தைகளை சொல்லிவிட்டு இதைத் திருப்பிச் சொல்லும்படி கேட்கிறார். இதற்கு ஹீரோயின் நேரடியாக பதில் சொல்லாமல் “ரோஜா, பூமாலை” என்று பதில் சொல்லித் தப்பிக்கிறார். ச்சே.. என்ன அழகாக தமிழை வளர்க்கிறார்கள்..? இயக்குநருக்கு திருஷ்டி சுத்தி போடணும்..!
கிளைமாக்ஸில் ஹீரோயினே வில்லனிடம் ‘போடணும்’ என்று பேசுவது போன்று காட்சியும், வில்லன் அதற்கு நேரடி அர்த்தமே எடுத்து பதில் சொல்வதும்.. உச்சக்கட்ட ஆபாசம்..! ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் வாயில் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் பேச வைத்திருக்கும் இந்த இயக்குநருக்கு இந்தாண்டின் சிறந்த இயக்குநருக்கான விருதினை வழங்க வேண்டும். ஒரு பெண்.. அதிலும் ஒரு மாற்றுத் திறனாளி பெண் கேரக்டர் என்றாவது யோசித்திருக்க வேண்டாமா..?
இந்தப் படத்தின் இயக்குநரும், நயன்தாராவும் திருமணம் செய்து தம்பதிகளாகிவிட்டனர் என்று கோடம்பாக்கம் முழுக்க பேசிக் கொள்கிறார்கள். இது உண்மையெனில் தனது காதலி அல்லது தனது மனைவியை நடிப்புக்காகவே ஆனாலும் இப்படியொரு கேவலமான காட்சியில் தைரியமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் பரந்து பட்ட மனசுக்காக கோடானு கோடி தமிழ் ரசிகர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
டாஸ்மாக் சீன்களையே வைக்காதீங்கப்பா என்று மனித நேய ஆர்வலர்கள் கூப்பாடு போட்டு சொல்லி வரும் இந்த நேரத்திலும், பெத்த அப்பாவுக்காக மகளே டாஸ்மாக்கிற்கு போய் பீர் வாங்கி வரும் காட்சியை தைரியமாக வைத்திருக்கிறார் இயக்குநர். ‘சிறந்த சமூக சிந்தனையாளர்’ என்று ஒரு பட்டத்தையே அவருக்கு இந்த ஒரு காட்சிக்காகவே வழங்கலாம்.
இவைகள்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணங்களாக இயக்குநர் நினைத்தால், இந்தப் படத்தின் மூலம் கிடைக்கின்ற வசூல் மனிதக் கறியை கூறு போட்டு விற்று அந்தக் காசில் வாழ்வதற்கு சமமானது..! இதனாலேயே இந்தப் படத்தை சிறந்த, நல்ல படம் என்று சொல்ல முடியவில்லை. 
வருந்துகிறோம்..!

BSNL நிர்வாகத்துடன் ஒரு மல்லுக் கட்டு அனுபவம்..!

24-10-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த ஏப்ரல் மாதம் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்த பிறகு எனது பிஎஸ்என்எல் தொலைபேசியையும், அதன் இணைய இணைப்பையும் புதிய வீட்டில் இணைக்க வேண்டி விண்ணப்பம் செய்தேன்.

அது கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட இதன் பிறகு பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நான் நடையாய் நடந்த கதையையும், அங்கே என்ன நடந்த்து..? எப்படி நான் இணையத் தொடர்பையும் தொலைபேசித் தொடர்பையும் மீட்டெடுத்தேன் என்பதையும் அன்றைய பொழுதுகளில் தினமும் எனது saravanan savadamuthu என்கிற முகநூல் பக்கத்தில் தெரிவித்து வந்தேன்.

அதன் முழு தொகுப்பை இங்கே பதிவு செய்து வைக்கிறேன். படித்துப் பாருங்கள்..!



18-04-2015 - BSNL Updates

புது வீட்டுக்கு வந்து 13 நாளாச்சு. 12 நாட்களுக்கு முன்னாடியே பிஎஸ்என்எல் அலுவலகம் போயி பிராண்ட்பேண்ட் கனெக்சன் மாத்துறதுக்கு எழுதிக் கொடுத்தாச்சு. இன்னிவரைக்கும் வரலை. போன்ல கேட்டால் பிராசஸ் போயிக்கிட்டிருக்கு ஸார்ன்னு சொல்றாங்க.. நேர்ல போய் கேட்டால் வந்திரும்.. ஸார். நீங்க போங்க நாளைக்கு வந்திரும்னு டெய்லி இதையேதான் சொல்றாங்க.

இன்னிக்கு ஆபீஸ் பக்கம் போய் கொஞ்சம் சவுண்டுவிட்டா அசோக் நகர் ஆபீஸ்ல “6-ம் தேதியே கிளியர் பண்ணியாச்சு ஸார். நீங்க வளசரவாக்கம் எக்சேன்ஞ்சல போயி கேளுங்கன்னுட்டாங்க.. வளசரவாக்கம் வந்தா ஆமாம் ஸார்.. வந்திருச்சு ஸார். உங்க தெருவை லோகநாதன்ன ஒரு டெக்னீஷியன்தான் பார்க்குறாரு. ஆனா அவர் இப்போ லீவுல இருக்கார். அவரோட வொய்ப் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்காங்க. அதுனால அவர் லீவு போட்டுட்டு போயிட்டார். எப்போ வருவாருன்னு தெரியாது. அவர் வந்த பின்னாடிதான் லைன் தர முடியும்னு சொல்றாங்க ஒரு லேடி ஜூனியர் என்ஜீனியர்.

"அவர் இல்லைன்னா என்னங்க..? வேற டெக்னீஷியனை அனுப்பி வைங்க.." என்றேன். "அது முடியாது ஸார். அவங்க வர மாட்டாங்க. இது ஆபீஸ் ரூல்ஸ். வேற வழியில்லை. அவர் வர்ற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும்.." என்றார். அப்போ அவர் லாங் லீவு போட்டா என்னங்க செய்வீங்க..என்றேன். "அப்போ எங்க மேலிடத்துக்கு சொல்லி வேற ஒருத்தருக்கு கூடுதல் பொறுப்பை கொடுப்போம். இது சஜகமா நடக்குறதுதான்.." என்றார் அலட்சியமாக..

இந்த லட்சணத்துல இவங்களுக்கு மாச சம்பளம் பத்தலைன்னு இப்போ போராட்டம் வேற நடத்தப் போறாங்களாம்..! என்ன வெங்காயத்துக்கு தரணும்ன்றேன்.. அரசு அலுவலர் லீவுன்னா சாதாரண குடிமகனுக்கு எதுவும் நடக்காது.. கிடைக்காது என்கிற அரசு வடிவமைப்பை என்னவென்று சொல்வது..?

கரெக்ட்டா பாருங்க. நான் வீடு மாத்துற சமயமா பார்த்து அந்த டெக்னீஷியனோட வொய்ப்புக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு போக கணவரும் லீவு போட்டுட்டுப் போயிட்டாரு. இதெப்படி இருக்கு..? இதுதான் நான் வாங்கிட்டு வந்த வரம்.. என் கெரகம் இப்படித்தான் இருக்கும் போலிருக்கு..!

இதுவும் கடந்து போவும். யாருக்குத்தான் பிரச்சினையில்லைன்ற சொல்ற அண்ணாத்தைகளெல்லாம் வரிசையையா வந்து மொய் எழுதிட்டுப் போங்கப்பா..!

25-04-2015 - BSNL Updates

பிஎஸ்என்எல் வளசரவாக்கம் டெலிபோன் எக்சேஞ்சில் வேலை செய்யும் லோகநாதன் என்னும் டெக்னீஷியன் அண்ணாவே..!

தங்களுடைய திருமதியார் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது. நீங்களும் ஒரு வாரம் விடுப்பு எடுத்து கஷ்டப்பட்டு இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வரும் திங்கள்கிழமையாவது நீங்கள் பணிக்குத் திரும்புவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நான் புது வீட்டுக்கு குடி வந்து இன்றோடு 20 நாட்களாகிவிட்டது. போன் கனெக்சனை புது வீட்டில் மாட்டுவதற்காக உங்களுடைய அலுவலகத்திற்கு ஓட்டி, ஓட்டி என் டூ வீலரின் முன் பக்க டயரே தேய்ந்து பிய்ந்துபோய்விட்டது.

நீங்கள் பணிக்கு வந்த பின்புதான் அந்த வேலையைச் செய்ய முடியுமாம். உங்களுக்கு மாற்று ஆள் இல்லையாம். வேறு பகுதியை கவனிக்கும் டெக்னீஷியன்கள் உங்கள் பகுதியில் கை வைக்க மாட்டார்களாம். இது டெக்னீஷியன்களுக்குள் இருக்கின்ற உள்ளடி அரசியலாம். உங்கள் அலுவலகத்தின் மாடியில் இருந்த ஜூனியர் என்ஜீனியர் அம்மா ரொம்பத் தெளிவா சொல்லிட்டாங்க.

"லோகநாதன் வந்த பின்னாடிதான் கனெக்சன் சரி செய்யப்படும். வேறு யார்கிட்டேயும் சொல்ல முடியாது. டெய்லி காலைல 11 மணிக்கு ஆபீஸுக்கு வாங்க. எல்லா டெக்னீஷியன்களும் இங்கதான் இருப்பாங்க. யார்கிட்டயாவது சொல்லி அவங்க வந்தாங்கன்னா கூட்டிட்டுப் போங்க. நான் நேரடியா உங்களுக்காக சொல்ல முடியாது. இல்ல எங்கயாவது போய் புகார் செய்வதா இருந்தாலும் போய்ச் சொல்லிக்குங்க. வேற தனியார் போன் கனெக்சன் வாங்குறதா இருந்தாலும் வாங்கிக்கங்க.. எங்களுக்குக் கவலையில்லை"ன்னு தெள்ளத் தெளிவாச் சொல்லி்டடாங்கண்ணா..!

இனிமே காசு செலவழிச்சு வேற கம்பெனிக்கு என்னால அலைய முடியாதுங்கண்ணா. ஒரு தடவை இன்ஸ்டாலேஷன்.. அப்புறம் 6 மாசத்துக்கு தொந்தரவு இல்லாமல் வேலை பார்க்குது பி.எஸ்.என்.எல். அதோட இது மக்கள் நிறுவனம்.. எங்க கம்பெனின்ற ஒரு பாசத்துலேயும் இதையே வைச்சுக்கலாம்ன்ற கொள்கைல உறுதியா இருக்கேனுங்கண்ணா.

நீங்க கொஞ்சம் மனசு வைச்சு திங்கள்கிழமை வேலைக்கு வந்து உங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்கிற என்னை மாதிரியான பல அப்பாவி இந்தியக் குடிமகன்களின் பிரச்சினையைத் தீர்த்து வைச்சீங்கன்னா உங்களுக்கும், உங்க என்ஜீனியர் அம்மாவுக்கும் அடுத்து வருஷம் சிறந்த பணியாளர்ன்னு பத்மஸ்ரீ விருது கொடுக்க நரேந்திர மோடிகிட்ட சிபாரிசு பண்றேனுங்கண்ணா..!

கொஞ்சம் மனசு வைச்சு வீட்டுப் பக்கம் வந்திட்டுப் போங்கண்ணா..!

26-04-2015 BSNL Updates

இன்றைய பொழப்பும் காத்திருந்து, காத்திருந்து வீணாகிப் போய்விட்டது. காலை 10.30 மணிக்கெல்லாம் பிஎஸ்என்எல்லின் வளசரவாக்கம் எக்சேஞ்சிற்கு போய்விட்டேன். நான் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் மிஸ்டர் லோகநாதன் வெளியில் சென்றாராம். எப்போது வருவார் என்பது தெரியாது என்றார் செக்யூரிட்டி. இந்த செக்யூரிட்டிதான் இப்போது அந்த அலுவலகத்துக்கே இன்சார்ஜ் போல பேசுகிறார். அலுவலகத்தில் இருக்க வேண்டிய இரண்டு பொறியாளர்களும் லீவாம்..

லோகநாதனின் நம்பர் கேட்டேன். "தர மாட்டேன் ஸார். தந்தா அவர் கோச்சுக்குவார். எனக்கெதுக்கு பிரச்சினை...?" என்கிறார் செக்யூரிட்டி. "அப்புறம் எதுக்குய்யா உனக்கு இவ்ளோ பேச்சு..?" என்று நான் பட்டென்று கேட்க நான் எழுதிக் கொடுத்த பேப்பரை என் கண் முன்னாடியே கிழித்துப் போட்டுவிட்டு "அவரைத் தேடிப் பிடிச்சு அவர்கிட்டயே போய்க் கேட்டுக்குங்க..." என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டார்.

அங்கிருந்து போரூரில் இருக்கும் டிவிஷனல் என்ஜீனியர் ஆபீஸிற்கு சென்றேன். அவரும் வெளியில் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு மணி நேரம்வரையிலும் காத்திருந்தும் அவர் வரவில்லை. கடைசியாக அங்கேயும் கெஞ்சிக் கூத்தாடி அவருடைய செல்போன் நம்பரை(9444585205) வாங்கி பேசினேன்.

"ஐயையோ.. இப்படி பேசவே கூடாதே.. வேலை பார்க்குறதுக்குத்தானே அவங்களுக்குச் சம்பளம் கொடுக்குறோம். ஸாரி ஸார்.. 2514-தானே.. உடனே ஏற்பாடு பண்றேன்.. ஈவினிங்கிற்குள் ஆள் வரும்.." என்றார் டிவிஷனல் என்ஜீனியர்.

மறுபடியும் எக்சேஞ்ச் என்று ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பார்த்தேன். ஆள் வரவில்லை. எல்லா டெக்னீஷியன்களும் ஒரு நாளைக்கு 2 வேலைகள்தான் செய்வார்களாம். செய்து முடித்த பின்பு சாயந்தரம் சரியாக ஐந்தரை மணிக்கு ஆபீஸுக்கு வந்து கடமையை முடித்ததாகச் சொல்லிவிட்டு எஸ்கேப்பாம். இடைப்பட்ட நேரத்தில் வேலையை முடித்துவிட்டாலும் ஆபீஸுக்கு வர மாட்டார்களாம். வந்தால் வேலை சொல்வார்களே என்று எஸ்கேப்புதானாம்..

"இவங்களை ஒண்ணும் செய்ய முடியாது ஸார். யார் சொ்ன்னாலும் திருந்த மாட்டாங்க. மற்ற டெக்னீஷியன்களும் நம்பர் தர மாட்டாங்க. ஒருத்தரையொருத்தர் காட்டிக் கொடுக்க மாட்டாங்க.

டிவிஷனல் என்ஜீனியரே சொன்னாலும் பார்க்குறேன்னுதான் சொல்வாங்க.. அந்த அளவுக்கு தொழிற்சங்கங்கள் இந்தத் தொழிலாளர்களை வளர்த்து வைச்சிருக்கு.. ஒண்ணுமே செய்ய முடியாது..." என்றார் என்னைப் போலவே அங்கு வந்திருந்து காத்திருந்த ஒரு ஓய்வு பெற்ற இந்திய பொதுஜனம்..!

என்ன செய்வது..? காத்திருக்கத்தான் வேண்டும்..!

28-04-2015 - BSNL Updates

காலை 10 மணிக்கு எக்சேஞ்சுக்கு சென்றேன். "லோகநாதன் இன்றைக்கு வரவில்லை.." என்றார்கள். "கொஞ்சம் நேரம் காத்திருந்து பாருங்கள்..." என்றார். காத்திருந்தேன். வரவில்லை. மீண்டும் போரூர் டிவிஷனல் என்ஜீனியர் அலுவலகம் சென்றேன். அவரும் வரவில்லை. "எப்போ வருவாரு?"ன்னு தெரியாது என்றார்கள்.

9444585205 என்ற அவரது எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். 3 முறை முயற்சித்த பின்புதான் லைனுக்கு வந்தார். விஷயத்தைச் சொன்னேன். "ஜூனியர் என்ஜீனியர் நம்பர் தரேன். அவர்கிட்ட பேசுங்க. செய்வார்..." என்றார்.

9444993300 என்ற ஜூனியர் என்ஜீனியருக்கு போன் போட்டுக் கொண்டேயிருந்தேன்.. தொடர்ந்து 2 மணி நேரமாக எடுக்கவே இல்லை. பிஎஸ்என்எல் விளம்பரங்களைத்தான் காலர் டியூனாக வைத்திருக்கிறார். ம்ஹூம்.. என்ன பிரயோசனம்..?

என்னிடம் இருக்கும் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் டஜன் கணக்கான நம்பர்களை ஒவ்வொன்றாக தொடர்பு கொண்டேன். அதிர்ஷ்டவசமாக 04424869222 நம்பரில் ஒரு லேடி எடுத்து ஹலோ என்றார். விஷயத்தைச் சொன்னேன். "கம்ப்ளைண்ட் நம்பர் இது இல்லை ஸார்..." என்று சொல்லி இன்னொரு நம்பரை கொடுத்தார். 24867500 என்ற அந்த நம்பருக்கு டயல் செய்து கையே வலித்துவிட்டது.

மீண்டும் 24869222-க்கே டயல் செய்து விஷயத்தைச் சொ்ன்னதும் "அப்போ இன்னொரு நம்பர் தர்றேன். அதுல டிரை பண்ணிப் பாருங்க..." என்று சொல்லி இன்னொரு நம்பரை கொடுத்தார்.

24861002 இந்த நம்பரை போன் செய்தால் இன்றைய டிவிஸ்ட்டாக இன்னொரு விஷயமும் கிடைத்தது..! போனில் வந்த நபர் "லோகநாதன் நாளைக்குத்தான் ஸார் டூட்டில ஜாயிண்ட் பண்றாரு. நாளைக்கு காலைல 10 மணிக்கு ஆபீஸுக்கு வந்து அவரைப் பாருங்க. செஞ்சு கொடுப்பாரு..." என்றார். "கஸ்டமர் நேரில் வந்து அழைத்துச் சென்றுதான் சரி செய்யணும்னு எந்த கம்பெனில ரூல்ஸ் இருக்கு..?" என்றேன்.

"இங்க அப்படித்தான் ஸார். உங்களுக்கு வேணும்னா நீங்கதான் வந்தாகணும்.." என்றார். "அப்போ நீங்க என்னதான் வேலை பார்ப்பீங்க..? கஸ்டமர் காசையும் கொடுத்திட்டு வேலை வெட்டியை விட்டுட்டு உங்க பின்னாடியே அலையணுமா..? இத்தனை நாளா நீங்க வேலையை செய்யலையே.. எனக்கு டேட்டா கார்டு வாங்கி நஷ்டமாயிருச்சே. அதுக்கு யார் பொறுப்பு..?" என்றேன்..

"நான் ரொம்ப பொறுமையா பேசிக்கிட்டிருக்கேன். வேற ஆளா இருந்தா போடான்னு வைச்சிட்டு போயிட்டேயிருப்பான். நீங்க எங்ககிட்ட சொல்லாம வீட்டைக் காலி பண்ணினதே முதல் தப்பு. வீட்டை காலி செய்றதுக்கு முன்னாடியே லோகநாதன்கிட்ட சொல்லியிருந்தீங்கன்னா எந்தத் தேதில காலி பண்ணினா அவர் வர்றதுக்கு வசதின்னு சொல்லியிருப்பாரு. தப்பையெல்லாம் நீங்க பண்ணிட்டு எங்களைச் சொல்லாதீங்க..." என்றார்..

மிக கோபமாகிவிட்டது. "என்னய்யா பேசுறீங்க..? உங்ககிட்ட போன்தான வாங்கினோம்.. வீட்டு ஓனரா நீங்க.. உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் வீட்டையே காலி செய்யணும்னா எப்படி..?" என்று கத்தியவுடன்.. இதுதான் சமயம் என்று நினைத்து போனை வைத்துவிட்டார்கள்..

அதாகப்பட்டது இதிலிருந்து உங்களுக்குச் சொல்லப்படுவது என்னவெனில், நீங்கள் பிஎஸ்என்எல் சந்தாதாரரெனில் வீட்டை காலி செய்யும்போது அந்த அலுவலகத்தின் உங்களது ஏரியாவின் டெக்னீஷயன் யார் என்று தெரிந்து கொண்டு அவரிடத்தில் சென்று "ஐயன்மீர், நான் இப்படியொரு அப்பாவி கஸ்டமர்.. தெரியாத்தனமாக உங்க கம்பெனில போனை வாங்கித் தொலைச்சிட்டேன். இப்போ வீடு மாறப் போறேன்..

உங்க வீட்ல மனைவி, மாமியார், அ்ண்ணன், தம்பி, பிள்ளைகள் யாராவது இந்த நேரத்தில் உடல் நலமில்லாமல் இருக்கிறார்களா..? நீங்கள் லீவெடுக்காமல் அலுவலகம் வருவீர்களா..? இந்த நாட்களில் நான் வீட்டை மாற்றினால் உங்களுக்கு சவுகரியமாக இருக்குமா..?" என்றெல்லாம் கேட்டு அவரது அனுமதியைப் பெற்று பின்பு வீட்டை மாற்றிக் கொள்ளுங்கள்..!

ஏதோ அப்பாவியான பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு என்னால முடிஞ்ச உதவி..!

06-05-2015 - BSNL Updates

நேற்று மதியம்வரையில் வீட்டில் காத்திருந்தும் என பொன்னான நேரம் வீணானதுதான் மிச்சம். மதியம் மிக கோபத்துடன் வளசரவாக்கம் ஆபீஸுக்கு போனால் மிஸ்டர் லோகநாதன் ஜூனியர் என்ஜீனியரம்மாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

புல் பூஸ்ட்டில் இருந்தார். எனக்கு பரம அதிர்ச்சி. கடும் வாக்குவாதம்.. வாதப் பிரதிவாதங்கள். இன்னும் சில மாதங்களில் ரிட்டையர்டாகப் போகும் இருக்கும் இவரின் பேச்சும், நடத்தையும் எ்ந்த அளவுக்கு நேர்மையானது என்பது இரண்டே நிமிடங்களில் எனக்குத் தெரிந்தது..

"உங்க வீட்டுக்கு வயர் போதாது ஸார். கவர்ன்மெண்ட்ல 50 மீட்டர்தான் கொடுக்குறாங்க. உங்க வீட்டுக்கு மெயின் ரோட்டுல இருந்து இழுக்கணும். 250 மீட்டராவது வேணும். தரச் சொல்லுங்க. வரேன்.." என்றார். "அதுவல்ல விஷயம்.. ஏன் என் வீட்டுக்கு வரலை. என்னைச் சந்திக்கவில்லை. போனில் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.." என்று திரும்பத் திரும்ப கேட்டேன். குணா கமல்ஹாசன்போலவே எல்லாத்துக்கும் சிரிக்கிறார்.

"எப்படி ஆபீஸ் டைம்ல ஒரு ஸ்டாப்பை குடிபோதைல உள்ள விட்டிருக்கீங்க...?" என்று என்ஜீனியரம்மாக்களிடம் கேட்டேன். தலையில் அடித்துக் கொண்டார்கள். "இங்க யாரையும் எதுவும் சொல்ல முடியாது ஸார். யூனியன் ஸ்டிராங்க. நீங்க எப்படியாச்சும் அவரை தாஜா பண்ணி கூட்டிட்டுப் போங்க..." இதுதான் மேலதிகாரிகள் சொன்ன பதில்.

லோகநாதனை வெளியே அழைத்து வந்து பேசியபோது "500 ரூபாய் கொடுத்தால் கேபிள் வாங்கிட்டு காலைல 8 மணிக்கு வர்றேன். அப்புறம் நீங்க பார்த்து ஏதாச்சும் போட்டுக் கொடுத்தீங்கன்னா நல்லது.." என்றார் கூச்சமே இல்லாமல்..

"கேபிளுக்கு மட்டும்தான் காசு தருவேன். லஞ்சமெல்லாம் தர மாட்டேன். காலைல சீக்கிரமா வந்து தொலைங்க..". என்று சொல்லிவிட்டு வந்தேன். 

07-05-2015 - BSNL Updates

இன்று காலையும் 8 மணி வந்தது. ஆனால் லோகநாதன் வரவில்லை. 10 மணிக்கு போன் செய்தேன். அவரே போனை எடுத்து "லோகநாதன் இப்பத்தான் ஏரியாவுக்கு போனார்" என்றார். வாய்க்கு வந்ததையெல்லாம் திட்டி போனை வைத்தேன். கடுப்போ கடுப்பு..

'ஒற்றன் செய்தி' துரையண்ணனை போனில் அழைத்து "அடுத்து என்ன செய்யலாம்ண்ணே..?" என்றேன். "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பேசிட்டு சொல்றேன்.." என்றார். மதியம் போன் செய்த துரை, "கே.கே.நகர்ல இருக்குற டெபுடி ஜி.எம்.கிட்ட பேசி்டடேன். கேபிளுக்கு காசெல்லாம் தர வேணாம். எப்படியும் நாளைக்கு முடிச்சுத் தரேன்னு சொல்றாரு.." என்றார். "ஓகே" என்று கொஞ்சம் நிம்மதியானேன்.

தொடர்ந்து டெபுடி ஜி.எம்.மை நேரில் சென்று சந்திக்கும்படி துரை சொன்னதால் மதியம் கே.கே.நகர் அலுவலகம் சென்று அவரைச் சந்தித்தேன். புகழேந்தி என்ற பெயர் கொண்ட அந்த அதிகாரி மிக நிதானமாக அனைத்தையும் கேட்டுவிட்டு "2 நாளைக்கு முன்பே துரை போன்ல சொன்னப்பவே உங்க பிரச்சினையை முடிக்கச் சொன்னேன். திரும்பக் கேக்குறேன்.." என்று சொல்லிவிட்டு என் முன்னிலையிலேயே போரூர் டிவிஷனல் மேனேஜருக்கும், வளசரவாக்கம் ஜூனியர் என்ஜீனியர்களுக்கும் போன் செய்து பேசினார்.

அந்த கேபிள் மேட்டரைத்தான் அவர்களும் சொன்னார்கள் போலிருக்கிறது. "எவ்ளோ கேபிள்ன்னாலும் நாமதான் போட்டுக் கொடுக்கணும். கஸ்டமர்கிட்ட காசு வாங்கி கேபிள் போடுறது நமக்குத்தான் அசிங்கம். எத்தனை மீட்டர் வேணும்னு சொல்லுங்க. நான் அனுப்புறேன்" என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.

அடுத்த இருபத்தைந்து நிமிடங்கள் அந்த அமைப்பு தற்போது செயல்பட்டு வரும் விதத்தை அவர் விவரித்தபோது மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. "ஊழியர்கள் மனம் வைத்து வேலை செய்தால்தான் எல்லா பிரச்சினையும் தீரும். இல்லைன்னா கஷ்டம்தான்.. ஒரு தாசில்தார் எவ்ளோ கஷ்டப்படுறாரோ அதே அளவுக்கு நாங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம். எங்களோடதுல பெரிய கஷ்டமே இது மாதிரியான ஊழியர்களை வேலை வாங்குறதுதான். மகா கொடுமையா இருக்கு.." என்று கவலைப்பட்டார்.

"கவலைப்படாமல் போங்க ஸார். நாளைக்குள்ள.. இல்லீன்னா சனிக்கிழமை கண்டிப்பா உங்களுக்கு லைன் போட்டுத் தரேன். நானே ஸ்பாட்டுக்கு வரேன் ஓகேவா..?" என்று சொல்லி நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.

சரி.. நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருக்கிறேன்..

நன்றி ஒற்றன் செய்தி துரையண்ணனுக்கு..!

08-05-2015 - BSNL Updates

இன்றைக்கு எந்த போனும் வரவில்லை. காலையில் நான் போன் செய்து விசாரித்தபோது "லோகநாதன் ஏரியாவுக்கு போயிட்டாரு ஸார். பிராசஸ் போயிட்டிருக்கு ஸார்.. கேபிள் அவர் கைல கொடுத்திட்டாங்கன்னா அவர் வந்திருவாரு. வேற ஏதாச்சுன்னா அவர்கிட்டயே பேசிக்குங்க"ன்னு சொல்லி மறுமொழி எதிப்பார்க்காமல் டொக்கென்று வைத்தார்கள.

மதியம் மெயிலில் சென்ற மாதத்திற்கான பில் மட்டும் மிகச் சரியாக வந்திருக்கிறது. ஏப்ரல் 1 முதல் தேதியில் இருந்து ஏப்ரல் 5-ம் தேதிவரையிலான பயன்பாட்டிற்கு 206 ரூபாய் போட்டிருக்கிறார்கள்..!

இதுலேல்லாம் ரொம்ப கரெக்ட்டா இருக்காங்க..!

11-05-2015 - இன்றைய BSNL Updates :

மதியம்வரையிலும் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். வளசரவாக்கம் ஆபீஸுக்கு போன் செய்து அலுத்துப் போனது. போனை எடுக்கவே ஆளில்லை. வேறு வழியில்லாமல் கே.கே.நகர் சென்று டிஜிஎம்மை நேரில் சந்தித்தேன்.

இன்னும் வரலியா..?” என்று சிவாஜி செத்துட்டாரா என்பது போலவே ரியாக்சனை காட்டிவிட்டு என் முன்பாகவே போரூர் டிவிஷனல் என்ஜீனியர், வளசரவாக்கம் ஜூனியர் என்ஜீனியர்களுக்கு போன் செய்து மிக மிக தன்மையாகப் பேசினார். "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கஸ்டமர் டெய்லி என்னைப் பார்க்க வர்றாரும்மா.. சங்கடமா இருக்குங்கம்மா"ன்னு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலாய்த்து முடித்தார்.

அங்கே என்ன பதில் வந்ததோ தெரியவில்லை. திடீரென்று ரமணா ஸ்டைலில் கோபமாகி, "அவங்க எல்லார் மேலேயும் ஒரு ரிப்போர்ட் கொடுங்க. சஸ்பெண்ட் பண்ணாத்தான் வேலை நடக்கும் போலிருக்கு. நானும் போனா போகுதுன்னு பார்த்துக்கி்டடேயிருக்கேன். என்னதாங்க சொல்றாங்க.." என்று வெடித்தார். பின்பு கூலாகி "சீக்கிரமா முடிச்சுக் கொடுங்கம்மா.." என்று சொல்லி போனை வைத்தார்.

"ஸார்.. இப்போ நீங்க கிளம்புங்க ஸார். நாளைக்கு கண்டிப்பா வந்திருவாங்க ஸார்.." என்றார். "வரலேன்னா..?" என்றேன். "நம்பிக்கை வைங்க ஸார். கண்டிப்பா வந்திருவாங்க ஸார்.." என்றேன். வேறு வழியில்லாமல் போன மச்சான் திரும்பி வந்த கதையாக திரும்பிவிட்டேன்.

நாளைக்கு...................? பார்ப்போம்..........................?

12-05-2015 - இன்றைய BSNL Updates :

நேற்று டிஜிஎம் கொடுத்த வாக்குறுதியை வழக்கம்போல நம்பி காத்திருந்தேன். 12 மணிவரையிலும் போன் வராததால் நானே 24860016 என்ற எண்ணுக்கு டயல் செய்தேன். அதிசயமாக லோகநாதனே லைனுக்கு வந்தார்.

"ஸார்.. உங்க வீட்டுப் பக்கத்துல அண்டர் கிரவுண்ட்ல இருந்துதான் கேபிள் எடுக்கணும்.. அது இப்போதைக்கு முடியாது. உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்குறவங்கள்ல யாராச்சும் ஒருத்தர் வீிட்டை காலி செஞ்சா அந்த கேபிளை உங்களுக்குக் கொடுக்கலாம். இல்லைன்னா அதுவரைக்கும் இல்லைதான். நீங்க இனிமேல் என்கிட்ட பேசி பிரயோசனமில்லை. என் மேலதிகாரிகள்கிட்டயே பேசிக்குங்க.." என்று டொக்கென்று வைத்துவிட்டார்.

24867500 என்ற ஜூனியர் என்ஜினியர்களின் அறை எண்ணுக்கு பத்து முறை தொடர்பு கொண்டேன். ரிங் சென்றது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. ஒற்றன் செய்தி துரையண்ணனை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். "இப்போ நாம இதை ஜி.எம்.கிட்டயே பேசுவோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"ன்னு சொன்னார்.

மதியம் 2.30 மணிக்கு வளசரவாக்கம் ஆபீஸ்ல இருந்து 24860016 என்ற எண்ணில் இருந்து போன் வந்தது. நான் எடுப்பதற்குள் கட்டாகிவிட்டது. நான் மறுபடியும் 5 வினாடி இடைவெளியில் தொடர்பு கொண்டேன். 5 முறை டிரை செய்தேன். யாரும் எடுக்கவில்லை.

1 நிமிடம் கழித்து 9445013130 என்ற செல்போனில் இருந்து அழைப்பு. பிஎஸ்என்எல்ல இருந்து பேசுறோம் ஸார். யாரோ உங்ககிட்ட லஞ்சம் கேட்டதா புகார் சொன்னீங்களாமே..? என்ன ஸார் விஷயம்..?” என்றார். பெயர் கேட்டேன். அதெல்லாம் வேணாம் ஸார். அதான் செல் நம்பர் இருக்குல்ல. போதும். சொல்லுங்க..என்றார்.(எல்லாம் சுதாரிப்பாத்தான் இருக்காங்க)

விஷயத்தைச் சொன்னேன். சரி ஸார். நாளைக்கு கண்டிப்பா ஆளை அனுப்புறோம்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

ஜி.எம்.மின் பி.ஏ.விடம் என் கேஸை பற்றி விரிவாக பேசியுள்ளதாக ஒற்றன் துரை சாயந்தரம் சொன்னார். நாளை முடி்ந்தால் நேரில் சென்று சந்திப்போம்..என்றார்.

இரவு 10.10 மணிக்கு மீண்டும் இதே செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தேன். மறுமுனையில் பேச்சு மூச்சில்லை. 2 நிமிடம் பார்த்துவிட்டு வைத்துவிட்டேன். ஒருவேளை டிரையல் பார்க்குறாங்களோ..?

வழக்கம்போல நாளைய தினத்தை நினைத்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..!

14-05-2015 - இன்றைய BSNL Updates :

ஜி.எம்., டி.ஜி.எம். வரைக்கும் விஷயத்தைக் கொண்டு போயாச்சு. வந்திரும்.. வந்திரும்ன்னு வீட்லதான் ரெண்டு நாளா உக்காந்திருந்தேன். ம்ஹூம் வந்தபாடில்லை.

வளசரவாக்கம் ஆபீஸுக்கு போயி 5 நாளாச்சு என்பதால் இன்றைக்குப் போகலாம்னு முடிவெடுத்து மதியம் 2 மணிக்குச் சென்றேன். என்னைப் பார்த்தவுடனேயே லோகநாதன் இன்னிக்கு லீவு..என்றார் வாட்ச்மேன். இந்த வாட்ச்மேன்தான் அந்த ஆபீஸுக்கு சகலமும். வரும் கஸ்டமர்களிடத்தில் கட் அண்ட் ரைட்டாக பதில் சொல்லி கீழேயே திருப்பியனுப்பிவிடுவார். வெள்ளையும், சொள்ளையுமாக காரில் வந்திறங்கி பந்தா காட்டினால் அவர்களுக்கு மட்டும் மாடிக்கு வழி விடுவார்.

ஜூனியர் என்ஜீனியர் இருக்காரா..?” என்றேன். இருக்காருங்க. கையெழுத்துப் போட்டுட்டு போங்க..என்றார். பதிவேட்டில் எனது பெயரை பதிவு செய்துவிட்டு மேலே சென்றேன். ஜூனியர் டெலிகம்யூனிகேஷன் ஆபீஸரான அனிதா என்ற மேடம் அமர்ந்திருந்தார்.

24862514 என்றவுடன் நன்கு தெரிந்தது போல பாவனையுடன் என்னை அமரச் சொன்னார். ஸார்.. உங்க கேஸை ரொம்ப சிவியரா இப்போ பிரசாஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். கேபிள்லாம் எங்ககிட்டேயே இருக்கு. டோண்ட் வொர்ரி.. ஆனா உங்களுக்கு லைன் கிடைக்க இன்னும் 15 நாளாகும் ஸார்..என்றார். என்னங்க இது..? அதான் கேபிள் கைல இருக்குன்னு சொல்றீங்களே.. அப்புறமென்ன..?” என்றேன். லோகநாதன் லீவுல போயிட்டாரு ஸார். அவரை என்ன பண்றதுன்னு தெரியாம நாங்க முழிச்சுக்கிட்டிருக்கோம். ஏகப்பட்ட கம்ப்ளையிண்ட்ஸ் அவர் மேல மேலிடத்துக்கே போயிருக்கு. வேற இடத்துல இருந்து அவருக்கு பதிலா ஒருத்தரை மாத்துறதுக்கு ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு. அது முடிஞ்சு புது ஆள் வந்துட்டாருன்னா முதல் கேஸ் உங்களோடதுதான். அதுவரைக்கும் என்னால ஒண்ணும் செய்ய முடியாது..என்றார்.

அது உங்க பிரச்சினைங்க. கேபிள் இருக்குல்ல.. வேற டெக்னீஷியன்ஸ் இருக்காங்கள்ல.. அவங்கள்ல ஒருத்தரை அனுப்பி வைங்க..என்றேன். அது முடியாது ஸார். இந்த ஆபீஸ்ல ரூல்ஸ் இதுதான். அவங்கவங்க ஏரியால மட்டும்தான் லைன் மேன்ஸ் வேலை செய்வாங்க. அடுத்தவங்க ஏரியால நாங்களே சொன்னாலும் வேலை செய்ய மாட்டாங்க. மீறி நாங்க சொன்னா எங்களுக்குத்தான் பெரிய பிரச்சினையாகும்..என்றார்.

கஸ்டமர் ஒருத்தன் இத்தனை நாளா நாயா அலைஞ்சுக்கிட்டிருக்கேன்.. எதைப் பத்தியும் கவலைப்படாமல் ஆபீஸ் ரூல்ஸ் அது இதுன்னே சொன்னீங்கன்னா எப்படிங்க..?” என்றேன். என்னோட அதிகாரம் அவ்ளோதான் ஸார். உங்களுக்காக ஜி.எம்.ஆபீஸ், டி.ஜி.எம். ஆபீஸ் எல்லா இடத்துல இருந்தும் போன் வந்துச்சு. நான் இல்லேன்னு சொல்ல்லை. ஆனாலும் இன்னும் 15 நாளாகும். வேண்ணா என் மேலேயும் நீங்க திரும்பப் போய் புகார் சொல்லிக்குங்க. எனக்குக் கவலையில்லை. நீங்க கிளம்புங்க..என்றார்.

உங்களையெல்லாம் யாருமே கேள்வி கேக்க முடியாதுன்றதாலதான ஆளாளுக்கு இப்படி பேசுறீங்க..என்றேன் கோபத்தோடு. ஸார்.. இதுக்கு மேல நான் விளக்கம் சொல்ல முடியாது என்னை விட்ருங்க..என்று சொல்லிவிட்டு எனக்குப் பின்பு பேசுவதற்காக வந்த இன்னொரு கஸ்டமருக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

நானும் பொறுமையாக அமர்ந்திருந்தேன். மூன்றாவது கஸ்டமருக்கும் பதில் சொல்லி அனுப்பி வைத்தார். பின்பு மீண்டும் என்னை முறைத்துப் பார்த்து, “என்ன ஸார்.. இப்படியே எதுத்தாப்புல உக்காந்திருந்தா எப்படி..? அதான் செஞ்சு தர்றேன்னு சொல்றனே..?” என்றார். “15 நாளைக்குள்ளன்னு சொல்றீங்களே..? அதுவரைக்கும் நான் என்ன செய்யறது..? என் சைட் பிஸினஸ் என்னாகுறது..? அதுக்கு யார் பொறுப்பாகுறது..?” என்று கேட்டேன்.

பட்டென்று கோபமாயிருச்சு மேடத்துக்கு. ஸார் இதுக்கு மேல நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன். ஸாரி..என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கிவிட்டார். உங்க போன் நம்பர் என்ன…?” என்றேன். 24867500 என்றார். அதுக்கு பல தடவை போன் பண்ணிட்டேன். போனை எடுக்கவே இல்லையே..?” என்றேன். பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

இதற்கு மேல் நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மேடம் செய்ததெல்லாம் செம காமெடி.

நான் பேசிக் கொண்டேயிருந்தேன். மேடமோ, மேசையில் இருந்த 5 ரிஜிஸ்தர் புத்தகங்களையும் எடுப்பார்.. புரட்டுவார். திரும்ப வைப்பார். அடுத்ததை எடுப்பார்.. திறப்பார்.. ஏதாவது எழுதுவார். பக்கத்தில் இருந்த கம்யூட்டரில் ஏதாவது தட்டுவார். நானும் சளைக்காமல் எதிரில் அமர்ந்தபடியே பேசிக் கொண்டேயிருந்தேன். கண்டு கொள்ளாமலேயே, காதில் வாங்கிக் கொள்ளாமலேயே தன் வேலையில் கவனமாக இருந்து ஸோலோவாக நடிப்பை நிலை நாட்டினார். 

மேடம்.. நீங்கள்லாம் சினிமாவுக்குள்ள வந்தா எல்லாரையும் ஓரங்கட்டிடலாம்..! கங்கிராட்ஸ்.. எனக்கும் பொறுமை செத்துவிட்டது. இதற்கு மேல் இருக்க பிடிக்கலை.. உங்க மனசு போல செய்யுங்க மேடம்..என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்.

வாசலில் ஒரு பெரும் கூட்டமே வந்து கத்திக் கொண்டிருந்தது. நம்மளை மாதிரியே பல பேரு கதறிக்கிட்டிருக்காங்க போலிருக்கு.. 

வாசலில் நின்று கொண்டிருந்த இன்னொரு லைன்மேனிடம் இது பற்றிச் சொன்னேன். ஸார் எனக்கும் உங்களை பார்த்தா பாவமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்ய..? எங்களுக்குள்ளேயே ஒரு ஒப்பந்தம் மாதிரி செஞ்சுதான் வேலை பார்க்குறோம். இப்போ உங்களுக்காக அதை நான் மீற முடியுமா..? என்னால இது பத்தி பேசக் கூட முடியாது ஸார்..என்றார். இவரும் தன் பெயர் என்ன என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.

அங்கிருந்து பிரசாத் லேப்பிற்கு வந்தபோது வழக்கம்போல நண்பர்கள் கூட்டம் பிஎஸ்என்எல்லை பற்றியே பேசி கேலி செய்து கொண்டிருந்தனர். அண்ணன் விக்னேஷ் ராஜ், தினமலர் மீனாட்சிசுந்தரத்திடம் என்னுடைய பிஎஸ்என்எல் போராட்டத்தைப் பற்றிச் சொல்லி கிண்டல் செய்து, “நீங்கள்லாம் ஏதாவது உதவி செய்ய மாட்டீங்களாப்பா..?” என்று கேட்டவுடன் அண்ணன் மீனாட்சி சட்டென்று தன் செல்போனில் இருந்த ஒரு நம்பரை எடுத்துக் காட்டி இருங்க பேசிட்டு வர்றேன்..என்று சொல்லி 23728888சென்னை டிவிஷன் ஜி.எம். ஆபீஸிற்கு போன் செய்தார்.

அவர் பேசிவிட்டு என்னிடம் வந்து போனை கொடுத்தார். நானும் போனை வாங்கி பேசினேன். மறுமுனையில் ஒரு பெண் குரல். விஷயம் முழுவதையும் சொன்னேன். கடைசியாக நான் ஒரு பத்திரிகையாளன் மேடம்.. இணையத்தளப் பத்திரிகை வைத்திருக்கிறேன்..என்றேன். அதெல்லாம் எனக்கெதுக்கு ஸார்..? நீங்க நம்பர் கொடுத்துட்டீங்கள்ல.. நான் விசாரிக்கிறேன்.. பத்து நிமிஷத்துல லைனுக்கு வர்றேன்..என்றார். உங்க பேர் என்னங்க மேடம்..?” என்றேன். அதெல்லாம் எதுக்கு ஸார்..? உங்களுக்கு லைன் வேணும். அவ்ளோதான விடுங்க..என்று போனை வைத்தார்.

இருபது நிமிடங்கள் கழித்து 23728877 என்ற எண்ணில் இருந்து ஒரு அதே பெண்மணி பேசினார். ஸார்.. உங்க மேட்டரை பத்தி ஜி.எம்மே பேசிட்டார்.  எப்படியும் இந்த வாரத்துக்குள்ள முடிஞ்சிரும்.. கவலைப்படாதீங்க.. முடியலைன்னா திரும்பவும் கால் பண்ணுங்க..என்று சொல்லி வைத்துவிட்டார்.

என்னாது..? ஜி.எம்.மே பேசியும் முடியலைன்னா திரும்பவும் காலா..?

இந்தப் பஞ்சாயத்துக்கு ஆத்தாவோட சொத்துக் குவிப்பு கேஸே பரவாயில்லை போலிருக்கே..?!

22-05-2015 - BSNL Updates

நேற்றைக்கு ஜி.எம். அலுவலகத்தில் கேட்டபோது அடிஷனல் ஜி.எம்.மான புகழேந்தியின் நம்பரை கொடுத்து "இனிமேல் அவர்கிட்டயே பேசிக்குங்க ஸார். கண்டிப்பா இந்த வாரத்துக்குள்ள உங்க கேஸை முடிச்சுக் கொடுக்கணும்னு ஜி.எம். அவர்கிட்ட சொல்லிட்டாரு. அவரை கொஞ்சம் பிடிங்க ஸார்.." என்றார் ஜி.எம்.மின் செகரட்டரி(யோ?)

இன்று மதியம்வரையிலும் யாரும் வரவில்லை. புகழேந்தி ஸாருக்கு போன் அடித்தேன். லோகநாதன் கேஸ் என்றவுடன்தான் அவருக்கு ஞாபகம் வந்தது. "ஸார்.. உங்க வீட்டுக்குப் பக்கத்துல கனெக்ஷன் இல்லாததால வயர் நீளமா தேவையா இரு்ககு. உங்க ஒரு வீட்டுக்கு மட்டும் தனியா இத்தனை நீள வயரை யூஸ் பண்ணச் சொல்லி டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட்டுக்கு ரெகமண்ட் செஞ்சேன். அவங்க ரிஜக்ட் செஞ்சுட்டாங்க. கவர்ன்மெண்ட் ரூல்ஸ் ஸார். அதுனால வேற மாதிரி ஏற்பாடு செஞ்சுக்கிட்டிருக்கோம். நாளைக்கு சனிக்கிழமை.. முடியுமான்னு தெரியலை. ஆனா திங்கள்கிழமை கண்டிப்பா எங்க ஆள் வந்திருவாரு ஸார்.." என்றார்.

லோகநாதன்..என்று இழுத்தேன். "அவரை மறந்திருங்க ஸார். அவரை தூக்கச் சொல்லிட்டோம். அவருக்குப் பதிலா வர்றவர் டூட்டில ஜாயின்ட் செஞ்சவுடனே முதல்ல உங்க வீட்டுக்குத்தான் ஸார் வர்றாரு.. ஓகேவா ஸார்..?" என்று சொல்லி போனை வைத்தார்.

திங்கள்கிழமை என்றாரே ஒழிய.. எந்த மாத திங்கள்கிழமை என்று சொல்லவில்லை. அதனால் எனக்கும் நம்பிக்கையில்லை..!

25-05-2015 - BSNL UPDATES

மிஸ்டர் லோகநாதன் வீட்டுக்கு வந்திருக்கிறார். நான் திண்டுக்கல் அருகே என் குலதெய்வம் கோவிலில் இருக்கிறேன். என்ன கொடுமை சரவணா இது?

27-05-2015 - BSNL Updates

இன்று காலை 8 மணிக்குத்தான் சென்னை வந்து சேர்ந்தேன். மனம் பரபரத்தது. வராத மாப்ளை வீடு தேடி வந்த கதையை அசை போட்டவாறு.. குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் அந்த 10 மணியை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

11 மணிவரையிலும் வழக்கம்போல யாரும் வரவில்லை. "வீட்டு ஓனரிடம் அன்றைக்கு என்ன நடந்தது..?" என்று கேட்டேன். "நீங்க புதன்கிழமைதான் வருவீங்கன்றதை அவர்கிட்ட சொன்னேன். அவர் வந்தவுடனே எனக்கு போன் செய்யச் சொல்லுங்க. அவர் போன் பண்ணி கூப்பிட்டாத்தான் இனிமே வருவேன்(!!!) என்று மிஸ்டர் லோகநாதன் கூறியதாகச்" சொன்னார்.

சரி காத்திருந்து புண்ணியமில்லை. நாமளே செல்வோம் என்றெண்ணி வளசரவாக்கம் அலுவலகம் சென்றேன். வாசலில் இருந்த நந்தி பகவான் இன்றைக்கு அதிக உற்சாகத்துடன் இருந்தார். நரேந்திர மோடி மாதிரியே பேசுறாருப்பா இந்த செக்யூரிட்டி. என்னைப் பார்த்தவுடனேயே சந்தோஷத்துடன் "லோகநாதன் இன்னும் வரலியே ஸார்..." என்றார்.

அவருடன் பேசும் மனநிலையில் இல்லாததால் காத்திருந்தேன். பழைய வீட்டு டெக்னீஷியன் குணசேகரன் வந்தார். அவரிடத்தில் சொன்னேன். அவர் ரவி என்ற இன்னொரு டெக்னீஷியனை அடையாளம் காட்டினார். "அவரும் லோகுவும்தான் வொர்க் மேட்ஸ். அவர்கிட்ட பேசுங்க.." என்றார்.

ரவியிடம் பேசினேன். "ஸார்.. நீங்கதானா அது..? நேத்தும், முந்தாநாளும் முழுக்க உங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் ஸார் இருந்தோம். மெயின் ரோட்டுல இருந்து வயரை இன்னும் 2 பேரை கூட வேலைக்கு வைச்சு இழுத்தோம். வீடுவரைக்கும் கொண்டாந்துட்டோம். ஜெ.இ., ஏ.இ.யெல்லாம் கூட வந்து பார்த்தாங்க. சாயந்தரம்வரைக்கும் இருந்தாங்க. நீங்க இருந்திருந்தீங்கன்னா நேத்தே முடிஞ்சிருக்கும்..லோகநாதன் ஸாரோட உறவினர் யாரோ இன்னிக்குக் காலைல தவறிட்டாங்களாம். 3 நாள் லீவுன்னு சொல்றாரு ஸார்.." என்றார்.

சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. "நீங்களே வந்து மாட்டிக் கொடுங்களேன்.." என்று கெஞ்சினேன். "ஸார்.. இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வைச்சிருக்கிற பாக்ஸோட சாவி அவர்கிட்டதான் இருக்கு. அதோட அந்த கேபிளை இணைக்குறதெல்லாம் லோகு ஸாருக்கு மட்டும்தான் தெரியும். எனக்குக் கொஞ்சம்தான் தெரியும். நான் பாட்டுக்கு மாட்டிட்டு அப்புறம் பிரச்சினைன்னு வ்ந்துட்டா சிக்கலாயிரும். இருங்க நான் பேசுறேன்.." என்று சொல்லிவிட்டு அடுத்து 25 நிமிடங்கள் போனில் பேசியபடியே தெருவையே அளந்தார் மிஸ்டர் ரவி. ம்ஹூம்.. லோகநாதன் மனமிறங்கவில்லை போலும்.. மெதுவாக என்னிடத்தில் வந்து "நீங்க ஜெ.இ. மேடத்தை பாருங்க.." என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் உள்ளே ஓடிவிட்டார்.

காத்திருந்த நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட என்னைப் போன்ற அப்பாவியான வாடிக்கையாளர்கள் சட்சட்டென்று வந்து குவிந்தார்கள். அனைவருமே சொல்லி வைத்தாற்போல் "இந்த ஆபீஸ்ல ஒருத்தன்கூடவாங்க பொறுப்புணர்ச்சியோட வேலை பார்க்க மாட்டான்..?" என்று திட்டினார்கள்.

செக்யூரிட்டி இன்றைக்கு அதிகமாக ஒருவரை நக்கல் செய்துவிட வாசலிலேயே கடும் சண்டை.. நானே செக்யூரிட்டி முன்பாகவே "இந்தாளையெலலாம் பெரிசா எடுத்துக்காதீங்க. நீங்க மேல போய் ஜூனியர் என்ஜீனியரை சந்திச்சு கம்ப்ளையிண்ட் செய்யுங்க.." என்று சொல்லி அனுப்பி வைததேன். இதற்கே கொலை வெறியோடு என்னைப் பார்த்தார் செக்யூரிட்டி.

10 நிமிடங்கள் கழித்து மாடிக்குச் சென்று ஜூனியர் என்ஜீனியர் மேடம் அனிதாவை சந்தித்தேன். மேடம் அதிசயமாக புன்சிரிப்போடு வரவேற்றார். "ஸார்.. நேத்தெல்லாம் உங்க வீட்டுக்கு பக்கத்துலதான் நாள் முழுக்க உக்காந்திருந்தோம். நீங்க இருந்திருந்தீங்கன்னா நேத்தே முடிஞ்சிருக்கும். லோகநாதன் திடீர் லீவு ஸார். மறுபடியும் பிரச்சினை.." என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

"சரி.. எத்தனை மணிக்கு வருவாருன்னு மட்டுமா்ச்சும் உறுதியா சொல்லுங்க. வீட்ல ஆள் இருக்கணும்ல்ல.. நான் பேச்சுலர் மேடம். வேலைக்குப் போகணும். இப்பவே ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டியது. போகாம இங்க வந்திருக்கேன்.." என்றேன் படபடப்புடன்.

பின்பு என் முன்பாகவே மிஸ்டர் லோகநாதனுக்கு போன் செய்து, "லோகு ஸார்.. 2514 சரவணன் ஸார் வந்திருக்காரு. எப்போ வருவீங்கன்னு கேக்குறாரு..?” என்றார். அந்தப் பக்கம் லோகநாதன் சொன்னதைக் கேட்டுவிட்டு "ஸார்.. அவரு மதியம் 2 மணிக்கு மேல கண்டிப்பா வர்றேன்னு சொல்றாரு.. நீங்க வீட்ல வெயிட் பண்ணுங்க.. வந்திருவாரு.." என்றார்.

வேறென்ன சொல்வது.. செய்வது..? மேலும் ஒரு சோதனை காத்திருந்ததால் அதையும் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்து காத்திருந்தேன். இதோ இந்த நிமிடம்வரையிலும் மிஸ்டர் லோகநாதன் வரவில்லை.

நாளைக்கு வருவாரா... மாட்டாரா... என்பது யாருக்குத் தெரியும்..?

இன்றையதினம் நடந்த இரண்டு சினிமா நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் பொழப்பு கெட்டதுதான் மிச்சம்..!

28-05-2015 - BSNL Updates Climax

இன்று காலையும் காத்திருந்தேன். போனும் வரவில்லை. ஆளும் வரவில்லை. 11 மணியளவில் வளசரவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம் சென்றேன்.

வழியிலேயே குறுக்குத் தெருவில் லைன்மேன் ரவி நின்று கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். நான் அவர் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன். என்னைப் பார்த்ததும் திடீர் கோபத்துடன், "என்னைய எதுக்கும் கூப்பிடாதீங்க ஸார். போய் மேடத்தையே பார்த்துக்குங்க.." என்றார் வெடுக்கேன்று..

ஏன் ஸார்.. லோகநாதன் இன்னிக்கும் வரலியா..?” என்றேன். அந்தாளு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைச்சிருக்காரு. கேக்குறவங்களு்ககெல்லாம் நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு…” என்று எரிச்சலுடன் என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் விருட்டென்று தெருவின் மூலைக்கு நகர்ந்துவிட்டார்.

அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது வாசலில் எப்போதும் போல அதே செக்யூரிட்டி இன்னிக்குக் கிடைத்த இளிச்சவாயனை நக்கல் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்றபோது . "ஹலோ ஸார்.. ஸார்.." என்று கத்தினார். கண்டு கொள்ளாமல் மாடியேறினேன்.

தன் அறையில் இருந்த அனிதா மேடம் எ்ன்னைப் பா்ர்த்தவுடன் ஏற்கெனவே பேசிக் கொண்டிருந்தவரைத் தவிர்த்துவிட்டு பதட்டமாக தனது செல்போனை எடுத்து ஸார்.. உங்க நம்பர் கொஞ்சம் கொடுங்களேன்.. இன்னிக்கும் லோகநாதன் வரலை. நான் வேற ஒருத்தரை உங்களுக்காக ஏற்பாடு பண்றேன்.." என்றார்.

மேடம்.. இப்போ எனக்கு கமலா தியேட்டர்ல ஒரு நிகழ்ச்சியிருக்கு. நான் போயாகணும். நேத்து 2 நிகழ்ச்சிகளுக்கும் போகலை. என் பொழப்பு கெடுது…” என்றேன் கோபத்தோடு.

"இல்ல ஸார். இன்னிக்குக் கண்டிப்பா முடிஞ்சிரும். உங்க நம்பரை கொடுங்க. நீங்க கமலா தியேட்டருக்கு போங்க. முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனேயே எனக்கு போன் பண்ணுங்க நான் ஆள் அனுப்புறேன்.." என்றார் உறுதியாக.

என்றைக்கும் இல்லாமல் அதிசயமாக இன்றைக்கு நம்பர் கேட்கிறாரே என்று கொடுத்தேன். ரிங் செய்து செக் செய்து கொண்டார். நானும் குறித்துக் கொண்டு வந்துவிட்டேன்.

கமலா தியேட்டரில் நடைபெற்ற வெள்ளை உலகம் பட விழாவில் கலந்து கொண்டுவிட்டு 12 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். உடனேயே அனிதா மேடத்திற்கு போன் அடித்து சொன்னவுடன், ஸார் வீட்லயே இருங்க. நான் ஆள் அனுப்புறேன் என்றார் உறுதியாக.

ஆனால் 3.30 மணிவரையிலும் யாரும் வரவில்லை. திரும்பவும் போன் செய்தேன். இப்போ உடனே பேசிட்டு சொல்றேன் ஸார். என்றார். போன் வரவில்லை. ஆனால் 20 நிமிடங்கள் கழித்து ஆள் வந்தது.

தாமோதரன் என்னும் லைன்மேன் வந்தார். லோகநாதன் லைனை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டதாக அனிதா மேடம் சொன்னதை அவரிடம் சொன்னே்ன். மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தோம்.

என் வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட்டின் மொட்டை மாடியில் லைனை கட்டி வைத்திருந்தார் மிஸ்டர் லோகநாதன்.

தாமோதரன் மறுபடியும் அனிதா மேடத்திற்கு போன் மேல் போன் செய்து ஏதேதோ பேசி களைத்துப் போனார். கொஞ்சம் இருங்க ஸார். வரேன் என்று சொல்லிவிட்டுப் போனார். சிறிது நேரத்தில் ஜன்னல் வழியாக என்னை அழைத்து இந்த வயரை பிடிங்க என்று சொல்லி ஒரு வயரை வீசினார்.

அப்பாடா என்ற பரவசத்தோடு கைப்பற்றினேன்.. வயர் வந்தேவிட்டது.. வீட்டுக்குள் வந்து ஒரு பத்து நிமிட வேலையில் போனுக்கு இணைப்பு கொடுத்துவிட்டு அதற்கு மேல் ஒரு நிமிடம்கூட உட்கார நேரமிலலாமல் "எக்சேஞ்சுக்கு போகணும் ஸார்..". என்று சொல்லிவிட்டு ஓடினார்.

மாலை 6 மணிக்கு 52 நாட்கள் கழித்து எனது தொலைபேசி அலறியது. எக்சேஞ்சில் இருந்து அழைத்தார்கள். சகல கேள்விகளையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். "பத்து நிமிடம் கழித்து கூப்பிடுறோம் ஸார்" என்று சொல்லி வைத்தார்கள்.

அதேபோல் மீண்டும் ஒரு போன். "ஸார்.. உங்க போனுக்கு லைன் கொடுத்தாச்சு. ஆனா இண்டர்நெட் மட்டும் நாளைக்குக் காலைல 10 மணிக்குத்தான் ஓகே ஆகும். அது ஹைதராபாத்ல இருந்து கிளியராகணும். இ்பபோ நாங்க அவங்களுக்கு போன் செஞ்சோம். அந்த ஆபீஸ்ல யாரும் இல்ல போலிருக்கு. போனை எடுக்கலை. நாளைக்குக் காலைல வந்திரும் ஸார்.." என்று சொல்லி போனை வைத்தார் ஒருவர்.

இவர் போனை வைத்த அடுத்த நொடியில் மறுபடியும் டிரிங். அனிதா மேடம் லைனில்.. "ஸார்.. ரொம்பக் கஷ்டப்பட்டு வேற ஏரியா லைன்மேனை ரொம்ப கம்ப்பெல் பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சிருக்கேன்.. புரிஞ்சுக்குங்க.." என்றார்.. "ஓகே மேடம்.. மிக்க நன்றிகள்.. உங்க பேருதவியை மறக்க மாட்டேன்.." என்றேன்..

இன்றைக்கு இந்த சினிமா கிளைமாக்ஸுக்கு வந்துவிட்டாலும், நாளை காலைதான் எண்ட் கார்டு போட முடியும். பிராட்பேண்ட் கனெக்சன் கிடைத்து முழுமையாகட்டும். அதைச் செய்வோம்.

அதுக்குள்ள 3 பேர் சாட்டிங்ல வந்து இன்னிக்கு சிச்சுவேஷன் என்ன என்று கேட்டார்கள்..? ஒரு மனுஷனோட சோகத்தைக் கேக்க எத்தனை பேரு ஆர்வமா இருக்கீங்க..?

29-05-2015 - BSNL - END CARD

நன்றி நண்பர்களே..!

விடா முயற்சியாக நான் மேற்கொண்ட இந்தப் பணிக்கு பல்வேறு வகைகளில் ஊக்கம் கொடுத்து, பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்து எப்படியும் வாங்கியே தீருவது என்கிற ஒரு வெறியை எனக்குள் ஏற்படுத்தியது உங்களுடைய அன்பான வார்த்தைகள்தான்..!

இன்று காலையில் ஒரு போன். இண்டர்நெட் வொர்க் ஆகுதா ஸார்..?”ன்னு கேட்டார் ஒருவர். இயக்கிப் பார்த்துவிட்டு இல்லை..என்றேன். டொக்கென்று போனை வைத்தார்.

12 மணிவரைக்கும் எத்தகவலும் வராததால் அனிதா மேடத்திற்கே போன் செய்து கேட்டேன். "ஸார் உங்களுக்காகத்தான் இப்போ பேசிக்கிட்டிருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.." என்றார்.

மீண்டும் 2 மணிக்கு போன் செய்து இப்போ செக் செஞ்சு பாருங்களேன்..என்றார் அனிதா மேடம். நான் மதியச் சாப்பாடு வாங்க கடைக்கு வந்திருக்கேன் மேடம்..என்றேன். ஓகே.. நான் வெயிட் பண்றேன்..என்றார்.

வீட்டுக்கு வந்து இயக்கிப் பார்த்தேன். வந்தேவிட்டது எனது பிஎஸ்என்எல் இணையத் தொடர்பு. எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..

மீண்டும் அனிதா மேடத்திற்கு போன் செய்து எனது நன்றியினைத் தெரிவித்தேன். ஸாரி பார் தி டிலே.. கோச்சுக்காதீங்க..என்றார் மென்மையாக. நானும் நடந்தவற்றுக்கு ஸாரிசொல்லி வைத்தேன்.

இதனை நிச்சயமாகத் திட்டமிட்டு எழுத வேண்டும் என்று நினைத்து எழுதத் துவங்கவில்லை. எப்போதும்போல புலம்புவதை இதில் எழுதுவோமே என்றுதான் எழுதத் துவங்கினேன். அது பலருக்கு சுவாரஸ்யத்தையும், ஒருவித நகைச்சுவையையும், சிலருக்கு எதிர்பார்ப்பையும் உண்டு பண்ணிவிட்டது.

இந்தப் போராட்டம் எனக்குப் புதிதல்ல. ஏற்கெனவே 2009-ம் ஆண்டு பிஎஸ்என்எல் போனை முதன்முதலாக வாங்கும்போதே பெரிய போராட்டத்திற்கிடையில்தான் வாங்கினேன். இந்த விஷயத்தைக்கூட எனது உண்மைத்தமிழன் வலைத்தளத்தில் அப்போதே எழுதி வைத்திருந்தேன். 

இதன் லின்க் இங்கே http://www.truetamilan.com/2009/08/blog-post_11.html இருக்கிறது. படிக்க நேரமும், விருப்பமும் உள்ளவர்கள் இதனைப் படித்துப் பாருங்கள்.

இந்தப் பிரச்சினை எழுந்து இன்றைய தினம் முடிகிறவரையிலும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இது தொடர்பாக விசாரித்தும், கேட்டும் பிரச்சினையில் என்னுடன் பங்கு கொண்ட நட்புகளுக்கு எனது நன்றி.

மேலிடத்தில் சென்று புகார் செய்து வேறொரு கோணத்தில் பிரச்சினையைக் கொண்டு செல்ல உதவிய ஒற்றன் செய்திஅண்ணன் துரைக்கும், பின்னர் ஜி.எம். அலுவலகத்திலும் புகார் செய்ய வைத்து என் பெயரை பரப்பி புகழடையச் செய்த அண்ணன் தினமலர்மீனாட்சி சுந்தரத்திற்கும் எனது தனிப்பட்ட ஸ்பெஷல் நன்றிகள்..!

முதல் சில நாட்களிலேயே இந்த விஷயத்தின் ஆணிவேர் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். ஊழியர்களின் ஒத்துழையாமை என்பதும், நிறுவனங்களின் அரைவேக்காட்டுத்தனமான விதிமுறைகளும்தான் உடனுக்குடன் தீர்வை நோக்கி போக முடியாமல் தடுக்கிறது என்பதை தெரிந்து கொண்டதால்தான் நான் பேசியே இதற்கு தீர்வு காண நினைத்தேன்.

அதிகாரிகளுடன் பேசுவதை டேப் செய்து வெளியிடும்படி சில நண்பர்கள் கேட்டபோது நான் மறுத்த்தற்குக் காரணமும் இதுதான். ஒரு ஊழியனுக்கு அவனது யூனியன் சப்போர்ட்டாக இருக்கிறது. என்ன செய்தாலும் காப்பாற்றும் நிலை. குடித்துவிட்டு அலுவலகத்திற்குள் வரும் சுதந்திரம் இருக்கிறது. திடீர், திடீரென்று விடுப்பு எடுக்கும் சுதந்திரமும் அந்த ஊழியனுக்கு இருக்கும்போது இதனை யாரால் தடுக்க முடியும்..? இந்தியா முழுவதிலுமே இதுதானே நிலைமை..?

அதிகாரிகள் மட்டத்தில் சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். சஸ்பென்ட் செய்தால் யூனியன் ஸ்டிரைக் அறிவிப்பார்கள். போராட்டத்தில் குதிப்பார்கள். ஏற்கெனவே பல பிரச்சினைகள். இதில் இதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்று தயங்குகிறார்கள்.

அந்த அலுவலகத்தின் வாசலில் வேலையில்லாத லைன்மேன்கள் நிறைய பேர் நிற்பார்கள். ஆனால் யாரிடம் பேசினாலும் அவர்களுடைய பெயரையோ, போன் நம்பரையோ தரவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் உஷாராக இருக்கிறார்கள். நம்பர் கிடைத்துவிட்டால் கஸ்டமர்கள் நேரடியாக போன் செய்து தொல்லை செய்வார்களே என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இதுவொரு கடமை என்று அவர்கள் நினைக்கவில்லை. வாங்குகிற சம்பளத்துக்கு வேலை பார்ப்போமே என்றும் அவர்கள் நினைப்பதில்லை. அதனால்தான் ஒரு ஏரியா லைன்மேன் அவருடைய ஏரியாவை மட்டும்தான் கவர் செய்ய வேண்டும். லைன்மேன் லீவு எடுத்தால் அதில் வேலை செய்யக் கூடாது என்று அவர்களுக்குள்ளேயே பேசி வைத்த முடிவை அமல்படுத்தியிருக்கிறார்கள். இப்படியொரு அரசு விதியே கிடையாதாம். இதை யாரிடம் போய் சொல்வது..?

இந்த லோகநாதனை போல ஆயிரம், லட்சக்கணக்கான லோகநாதன்கள் அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இன்னமும் இருக்கிறார்கள். கண்டிக்க வேண்டிய, தண்டிக்க வேண்டியவர்களெல்லாம் பேசாமடந்தையாக இருப்பதாலும், எப்படியிருந்தாலும் நமக்கு சம்பளம் வந்துவிடுமே என்கிற மனோபாவத்தில் இருப்பதாலும் சாதாரண பொதுஜனமாகிய நாம்தான் அவர்களுடன் ஒவ்வொரு விஷயத்திற்கும் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

லஞ்சமும், ஊழலும் மட்டுமே இந்த நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கவில்லை. கடமையைச் செய்ய விரும்பாத இந்த லோகநாதன் போன்ற ஊழியர்களும் சேர்த்துதான் இந்தச் சீரழிவிற்குக் காரணமாகியிருக்கிறார்கள்.

இதே லோகநாதன் நாளைய தினம் அவருடைய தேவைக்காக மற்ற அரசு நிறுவனங்களில் போய் நிற்கும்போதுதான் அந்த வலி அவருக்குத் தெரிய வரும். ஆனால் அப்போது இந்த சரவணனெல்லாம் அவருக்கு ஞாபகம் வராது.. அவ்வளவுதான் அவருக்கு இருக்கும் அறிவாக இருக்கும்..!

சிவிக் சென்ஸ் என்று இணையத்தில்தான் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையாக, கடமையாக இருக்க வேண்டியவர்களிடத்தில்தான் இல்லை. இதனை பரப்புரை செய்ய வேண்டியவர்களும் செய்யாமல் இருப்பது இன்னுமொரு பெரிய குறை. முடிந்தமட்டில் நாம் நமது பிள்ளைகளுக்காச்சும் இதனை சொல்லிக் கொடுப்போம்.

தொடர்ந்து படித்து ஆதரவூட்டிய அத்தனை நட்பூஸ்களுக்கும் எனது நன்றி..!

ஜெய்ஹிந்த்..!

கொசுறு : இத்தனை கூத்துகளும் நடந்து முடிந்த பின்னர் ஜூன் 8, வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பிஎஸ்என்எல் அலுவலகத்தின் கஸ்டமர் கேர் அலுவலகத்தில் இருந்து ஒரு போன். ஸார் உங்க இண்டர்நெட் கனெக்ஷன் ஒர்க் ஆகலைன்னு கம்ப்ளையிண்ட் கொடுத்திருக்கீங்க.. அதை இப்போ நாங்க பார்வர்டு செஞ்சிருக்கோம் ஸார். சீக்கிரம் ஆள் வருவாங்க ஸார்…” என்றது ஒரு பெண் குரல்.

இந்தக் கூத்தை எங்க போய் சொல்லுறது..?