15-11-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சிம்பு என்றாலே விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகத்தைச் சுழிப்பது பொதுவான ரசிகர்களின் வழக்கம். சிம்புவுக்கு மட்டும்தான் அவரது ரசிகர்களைத் தவிர மற்ற நடிகர்களின் ரசிகர்களின் பேராதரவு கிடைப்பதில்லை.. இதனால்தான் அவரும் தனக்குப் பிடித்த நடிகர் ‘தல’தான் என்று பல முறை சொல்லிச் சொல்லி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்..!
ஆனால் படங்கள்தான் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.. கடைசியாக வந்த ‘ஒஸ்தி’ படத்தினால் அதன் தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களுக்கு இன்னமும் கிஸ்தி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘போடா போடி’ திரைக்கு வருமா வராதா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமல்ல.. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே இருந்து வந்திருக்கிறது..! கடைசியில் வழக்கம்போல எல்லா தரப்பு பஞ்சாயத்துக்களையும் சந்தித்துவிட்டே சந்திக்கு வந்திருக்கிறது இந்தப் படம்.
என்ன சொல்ல..? ராமராஜன் படங்களில்தான் கடைசியாக பார்த்தது... இது போன்ற ஆணாதிக்க வெறியை..! தமிழ், தமிழ்க் கலாச்சாரம், பெண், தாலி, புருஷன் என்று அக்மார்க் பி கிரேடு கதையை அப்படியே லண்டனுக்குக் கொண்டு சென்று அதனுடன் லவ்வையும் திணித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக ஒரு படத்தைத் தயாரித்துத் தந்திருக்கும் இந்த்த் தைரியம் தமிழ்ச் சினிமாவில் சிம்புவைத் தவிர வேறு யாருக்கும் வராதுதான்..!
வரலட்சுமி ஒரு டான்ஸர். டான்ஸ் என்றால் உயிராக இருப்பவர். இவருடைய வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடுகிறார் சிம்பு.. சிம்புவின் பொய்யான அலட்டல்களை உண்மை என்று நம்பி ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார் வரலட்சுமி. உடனேயே ஏத்துக்குறது ஆம்பளைத்தனம் இல்லியேன்னு கொஞ்சம் சுத்த விட்டுட்டு அப்புறமா இவரும் ஏத்துக்குறாரு.. கல்யாணமும் செஞ்சுக்குறாங்க.. இப்பவும் வரு, டான்ஸை விடலை.. இது சிம்புவுக்கு பிடிக்கலை. புள்ளை பொறந்துட்டா டான்ஸ் ஆட முடியாதுன்னு வீணாப் போன சித்தப்பன் கணேஷ் பத்த வைக்க.. அந்த வேலையையும் செஞ்சு முடிக்கிறார் சிம்பு.. குழந்தையும் பிறக்கிறது. இப்போது சிம்புவின் இந்த தில்லாலங்கடி வேலை வருவுக்கு தெரிய வர.. அவர் கோபிக்கிறார். அந்த நேரத்தில் நடந்த ஒரு விபத்தில் குழந்தை உயிரிழக்க.. இருவரும் தற்காலிகமாக பிரிகிறார்கள்.
வரு டான்ஸில் மூழ்கிப் போய் வாழ்க்கையை மறந்து போய் இருக்க.. சிம்புவால் முடியவில்லை. மீண்டும் வருவை தேடிச் சென்று அழைக்கிறார். வருவும் வருகிறார். சில கண்டிஷன்களோடு.. தன்னுடைய நீண்ட நாள் கனவான டான்ஸ் போட்டியில் ஜெயிக்கணும்ன்னு நினைச்சு பல முயற்சிகள் செஞ்சுக்கிட்டிருக்காரு வரு.. அதுலேயும் அவ்வப்போது மண்ணையள்ளிப் போட்டு கெடுக்குறாரு சிம்பு.. கடைசியா அந்தப் போட்டில வரு கலந்துக்கிட்டா மட்டுமே தன்னோட இருப்பாங்கன்றதால சிம்புவும் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறாரு.. ஜெயிக்கிறாங்க..! கடைசி சீன்ல இன்னமும் 14 ஆட்டம் இருக்குன்னு வரு சொல்ல.. இனிமே எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்ன்னுட்டு பெட்ரூம் கதவைச் சாத்தி நம்மளை வீட்டுக்கு அனுப்பிர்றாரு சிம்பு.. இம்புட்டுத்தான் கதை..!
சிம்பு தோன்றும் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிக்கு காட்சி, ஷாட்டுக்கு ஷாட் அவர்தான் தோன்றுகிறார்.. அவரேதான் அதிகம் பேசுகிறார். சில இடங்களில் மாடுலேஷனிலேயே சிரிப்பை வரவழைத்திருக்கிறார். உடன் இருக்கும் சித்தப்பா கணேஷை பல இடங்களில் வாரி விடுவது குபீர் சிரிப்பு ரகம்..! நன்றாகவே டான்ஸ் ஆடுகிறார்.. அவ்வப்போது பன்ச் டயலாக்கும் அடிக்கிறார். தமிழ் கலாச்சாரம் பத்தி கிளாஸ் எடுக்கிறார். “பொண்ணை கட்டிப் பிடிக்கிறவன்.. முத்தம் கொடுக்கிறவனையெல்லாம் செருப்பாலேயே அடிக்கணும்”னு சிம்புவே சொல்றதுதான் ரொம்ப ரொம்பக் கொடுமை.. இதைக் கேட்பாரே இல்லையா..?
நாமெல்லாம் தமிழர்கள்.. தமிழ்க் கலாச்சாரப்படி வாழணும்ன்னு நமக்கே அட்வைஸ் பண்றாரு.. பொண்டாட்டி காலைல எந்திரிச்சவுடனேயே புருஷன் காலை தொட்டுக் கும்பிடணும்ன்னு மணாளனே மங்கையின் பாக்கியம் காலத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டாரு..! என்னாச்சுன்னு தெரியலை.. ஒருவேளை தமிழகத்து பெண்கள் மத்தில தனக்கு நல்ல பேரு கிடைக்கணும்ன்னு சொல்லி முயற்சி பண்றாரோ..? என்ன செஞ்சாலும் சரி.. இந்தப் படம் கடைசிவரையிலும் ஆணாதிக்கத்தனத்தை போதிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை..!
வரலட்சுமி பாலே நடனத்தை முறைப்படி பயின்றவர்.. அனைத்து வகை நடனங்களும் அத்துப்படியாம். அதனாலேயே நடனக் காட்சிகளில் பிசகில்லாமல் ஆடியிருக்கிறார்.. இறுதியில் குத்துப் பாட்டிலும் அவரைக் களத்தில் இறக்கி ஆட விட்டிருக்கிறார்கள். சிம்பு படத்துல இது கூட இல்லைன்னாத்தான் பிரச்சினை..! வரலட்சுமியின் குரல் வித்தியாசமாக இருந்தாலும் ஆம்பளை குரல் போல இருப்பது கேட்க முடியவில்லை.. கொஞ்சம்ன்னாலும் பரவாயில்லை. படம் முழுக்கன்னா எப்படிங்க..? நடிப்பு..! ம்.. பரவாயில்லை ரகம்தான்.. காதலைத் தவிர மற்றதெல்லாம் வந்திருக்கிறது.. இயக்கம் செய்தவரிடம் திறமை இல்லாததால், இவரிடமிருந்து சரியான முறையில் நடிப்பை வெளிவர வைக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்..!
42 வயசானதால் ஷோபனா அம்மா கேரக்டருக்கு பிரமோஷன் வாங்கியிருக்கிறார். இவரும் நடனம் தெரிந்தவர் என்பதால்தான் கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களாம்.. ஆனால் நடனம்தான் இல்லை..! இவருடைய பேவரிட்டான கண்களைக்கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியாத இந்த இயக்குநரை என்னவென்று சொல்ல.. வேஸ்ட்டாகிவிட்டது..!
இசையமைத்திருப்பவர் தரண்.. என்னால் நம்பவே முடியவில்லை. பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் இரண்டாம் கட்டமாக மீண்டும் ஆர்டர் கொடுத்திருக்கிறதாம்..! அவ்வளவு டிமாண்டா..? அல்லது விளம்பரமா..? பல்லே சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு லவ் பண்ணலாமா? வேண்டாமா? என்ற வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு பாடிக் கொல்லும் சிம்புவை நான் மன்னிக்கவே மாட்டேன்.. முடியலை.. ஆனா இந்தப் பாட்டு யூ டியூப்ல ரொம்பவே சக்ஸஸ்..!
விக்னேஷ் சிவன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். கல்யாணத்திற்காக தனது லட்சியத்தை இழக்க வேண்டுமா என்கிற ஒரு பெண்ணின் கதையாக சொல்ல வந்தவர், இடையில் கதாநாயகன் சிம்பு நுழைந்ததால், கதையைக் கோட்டைவிட்டுவிட்டு, திரைக்கதையையும் அநியாயத்திற்கு போண்டியாக்கிவிட்டார்..!
மீண்டும் மீண்டும் சிம்புவே வந்து வந்து பேசிக் கொண்டிருப்பதால் ஒரு அளவுக்கு மேல் ரசிக்க முடியவில்லை.. போதும்டா.. ஆளை விடுங்கடா என்று சொல்லும் அளவுக்கு சிம்பு மேல் வெறுப்பை கொண்டு வந்திருக்கிறார்கள்..! இது சிம்புவே வரவழைத்ததா என்றும் தெரியவில்லை..! சிம்புவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் இது போன்ற ஒருவனின் கதை இது என்று சொல்லாமல், அவரே அப்படித்தான் என்பதாகவே கதை கொண்டு செல்லப்பட்டிருப்பதால் இடைவேளைக்கு பின்பு கதை எங்கே போகிறது என்றே தெரியவில்லை..!? கிளைமாக்ஸும் இன்னமும் கதை இருக்கிறது என்பது போல் முடித்திருக்க.. ஆளை விட்டால் போதும் என்ற மனப்பிராந்தியம்தான் ஏற்பட்டது..!
இப்படியெல்லாம் நாட்டின் சிச்சுவேஷன் தெரியாமல், ஹீரோத்தனத்தை உயர்த்துவதற்காகவே படமெடுப்பது தயாரிப்பாளரை பாழும் கிணற்றில் தள்ளுவதற்குச் சமம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், வாரி, வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதை படத்தின் ரிச்னெஸே சொல்கிறது..! பாடல் காட்சிகளுக்கு செட்டிங்க்ஸையே டி.ஆர். படம் போல செய்திருக்கிறார்கள்..! ஏதோ போட்ட முதலீடாச்சும் இந்தத் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
|
Tweet |