அட்டக்கத்தி - சினிமா விமர்சனம்

31-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வெற்றிகரமாக 2-வது வாரமாக அரங்குகள் முழுவதும் நிறையாவிட்டாலும், முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருக்கும் வகையில், முக்கியப் படமாக அமைந்துவிட்டது அட்டக்கத்தி..! 

முதல் 3 நாட்கள் “நான்” திரைப்படம் இதற்கு ஈடு கொடுத்தாலும், பின்பு குறைந்து போனது.. அந்தக் குறைச்சலை அட்டக்கத்தியே வசூல் செய்து கொண்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பினர் சந்தோஷமாகச் சொல்கிறார்கள். அதே நேரம் “நான்” திரைப்படமும் கொஞ்சமாகத்தான் கையைக் கடித்திருப்பதாக மீரான் சாகிபு தெருவினர் தெரிவிக்கிறார்கள்..! அதனால் என்ன “நான்” படத்தின் அதே யூனிட்டோடு விஜய் ஆண்ட்டனி அடுத்தப் படத்திற்குத் தயாராகிவிட்டார். படத்தின் டைட்டில் “திருடன்..” வாழ்க.. வளமுடன்.. !!!

இனி நாம் அட்டக்கத்திக்குச் செல்வோம்..! சென்னை என்றாலே மயிலாப்பூரையும், வட சென்னையையும், ராயப்பேட்டையின் நெரிசலான சந்துகளையுமே காட்டி வந்தவர்கள் தற்போது சென்னையின் புறநகர் பேருந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு, கொஞ்சம் அவுட்டருக்கு நம்மைத் தள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள்..!


ஒரு இளைஞனின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலையும், பெண்களையும் வைத்து சுவாரஸ்யமாக ரம்மியாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர்..! முதல் பாராட்டு ஹீரோ தினகரன் என்னும் தினாவாக நடித்த தினேஷிற்கு.. பொருத்தமான தேர்வு...! முதல் காதலைச் சொல்ல நினைத்து முயன்று, முயன்று இறுதியில் ஜெயிக்கும்போது கிடைக்கும் பதிலை கேட்டு திகைப்பதில்தான் இவரது நடிப்பு துவங்குகிறது.. அதே சோகத்தோடு நண்பர்களுடன் கடைக்குப் போய் போண்டா சாப்பிடும்போது பேசுகின்ற பேச்சும் நடிப்பும் அட்டகாசம்.. இதே வேகத்தோடு அடுத்தடுத்த பெண்களுடன் பேசுவதற்கு முயன்று.. வேண்டுமென்றே அடிதடிக்குள் நுழையும் அந்தக் காட்சியிலும் மிக யதார்த்தமான நடிப்பு..! 

எழுதி வைத்த கடிதத்தை பூர்ணிமாவிடம் கொடுக்க நினைத்து தவிப்பது.. கல்லூரியில் சண்டியர்தனத்தைக் காட்டும் நேரத்தில் பூர்ணிமாவை பார்த்தவுடன் சட்டென இயல்புக்கு மாறுவது.. பேருந்தில் செய்யும் கலாட்டாக்கள்.. ஒரு உணர்ச்சி வேகத்தில் தப்பிக்க முடியாத உணர்வில் பேருந்தில் அந்தப் பெண்ணைத் தடவும் காட்சி.. “அமுதா வர்றாடா..” என்ற நண்பனின் வாய்ஸை கேட்டவுடன் சட்டென கண்ணைத் துடைத்துக் கொண்டு பரபரவென தலையைச் சிலுப்பிக் கொண்டு தயாராகி நிற்கும் அந்த வேகம்.. ஸ்டைல்..  எல்லாவற்றுக்கும் மேலாக இறுதியில் பூர்ணிமாவை அவள் கணவரோடு பார்த்துவிட்டு அதிரும் காட்சியில் இவரது நடிப்பு ஏ ஒன்.. “இன்னிக்கு ஒரு நாள் இருந்திட்டு போலாம்ல.. நீயும் வாயேன்..” என்று ஹீரோயின் அழைக்க அதற்கு மறுதலிக்க முயன்று சொல்ல முடியாமல் தவிக்கும் அந்தக் காட்சியும் ஹீரோவுக்கு பெத்த பெயர் கொடுக்கும் காட்சிகள்.. நிச்சயமாக அடுத்த வருடம் சிறந்த புதுமுகத்திற்கான அனைத்து விருதுகளும் இவருக்குத்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்..! 

ஹீரோயின் பூர்ணிமாவாக நடித்த நந்திதாவின் சில சில எக்ஸ்பிரஷன்கள் கவர்ச்சியாக இருக்கிறது..! இறுதிவரையிலும் தான் யார் என்பதை அவர் காட்டாமலேயே இருப்பதுபோல திரைக்கதை என்பதால் எப்போதும் போலவே இருப்பது கொஞ்சம் ஈர்க்காமல் விட்டுவிட்டது.. பொண்ணுக்கு சிரிப்புதான் மூலதனம்.. இவருக்கு அடுத்து மனதைக் கவர்பவர் பக்கத்து வீட்டு அத்தைப் பொண்ணான அமுதா. முதல் அறிமுகத்திலேயே டிவியை பார்த்தபடியே பேசும் அந்த அரைவெட்டு முகமும், வாசலில் கோலம் போடும் அழகும், யாரை விரும்புகிறாள் என்பதையே வெளிப்படுத்திக் காட்டாத அந்த வயதுக்கே உரித்தான இன்னொசன்ட் நடிப்பும் ஓஹோ..

இதுபோலவே அடுத்த காதலிகளாக வந்து மாட்டும் அந்த இரட்டையர் நாயகிகள்.. இவர்கள் போர்ஷனில் இயக்குநரின் கலைத்திறமையும், காட்சிப்படுத்தும் திறனும் ரொம்பவே வெளிப்பட்டிருக்கிறது..! இதை எதுக்கு எங்ககிட்ட கொடுக்குறீங்க என்ற கேள்வியிலேயே அவர்களது இத்தனை நாள் கொண்டாட்ட நிகழ்வைக் குறிப்பாகச் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.. 

ஆடி போனா ஆவணி பாடலும், ஆசை ஒரு புல்வெளி பாடலும் ஹிட்ட்டித்திருக்கின்றன.. இதில் ஆடி போனா ஆவணி கானா டைப்பாக இருந்தாலும், எடுக்கப்பட்ட காட்சிகளால் மேலும், மேலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது.. இதேபோல் ஆசை ஒரு புல்வெளி பாடல் மாண்டேஜ் காட்சிகள்தான் என்றாலும் இன்னும் சிரத்தையாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..! 

பாடல்களைவிட பின்னணி இசை அற்புதம் என்றே சொல்ல வேண்டும்..! எந்தவிடத்திலும் தற்போதைய சினிமா இசை தென்பட்டுவிடாமல் கவனத்துடன் பார்த்திருந்து நாடக மேடைகளில் ஒலிக்கப்படும் மென்மையான இசையையே படம் முழுவதும் தவழ விட்டிருக்கிறார்.. அதிலும் ஒரு காட்சியில் வாழை மட்டையை சுவற்றில் அடித்தால் என்ன சப்தம் வருமோ, அதையே தடதட காட்சிக்கு பயன்படுத்தியிருப்பது சாலப் பொருத்தம்..! கச்சிதமாக பணியாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்..!

இரட்டை மகளிரை சைட் அடிக்கும் காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு டிரெஸ்ஸில் வருவதையும், அடுத்தடுத்த நாட்களில் தினா பேசுகின்ற பேச்சு கூடிக் கொண்டே போவதையும் அந்த ஒற்றைக் காட்சியில் அழகுடன் விளக்கியிருக்கும் இயக்குநருக்கும், அதற்கு பெருந்துணையாக இருந்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ஒரு சபாஷ்..!

ஒரு காட்சியில் பேருந்து படிகளில் பயணம் செய்யும் தினா-பூர்ணிமாவையும், அவ்வப்போது வந்து செல்லும் காட்சிகளில் லைட்டிங்ஸே இல்லாமல் இருப்பதை வைத்து அழகுற செய்திருக்கும் ஒளிப்பதிவாளரின் பணியை புதிய ஒளிப்பதிவாளர்கள் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது..!

கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இயக்குநர் அடித்து ஆடியிருக்கிறார். தினாவின் குடிகார அப்பா.. குடித்துவிட்டு அவர் பேசுகின்ற பேச்சும்.. செய்யும் செயலும் மிக நயமான நகைச்சுவை.. அமுதாவை வைத்துக் கொண்டு தினாவின் அம்மா அவனைத் திட்டுவதும், குடித்துவிட்டு மப்பில் இருக்கும் கணவனை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி ஊட்டுவதும்.. என் ஜட்டி எங்க என்று கேட்கும் கேள்விக்கு அம்மாவின் அந்த வெறுப்பான பதிலுமாக.. அந்தக் குடும்பத்தை தேடிப் பார்க்க வேண்டுமே என்ற ஆசையைத் தூண்டிவிட்டது..!

உண்மையான கத்தி ரத்தம் சிந்த வைக்கும். ஆனால் அதுவே அட்டக் கத்தியாக இருந்தால் உண்மை தெரியாதவரையில் மிரள வைக்கும்.. உண்மை தெரிந்தால்..! இதற்கான பதிலைத்தான் ஹீரோவின் கல்யாண வாழ்க்கையில் இறுதிக் காட்சியில் காட்டுகிறார்..! எத்தனையோ முயன்றும், கடைசியில் பிக்கப்பாகி முடிவது எதிர்பாராத வேறொன்றாகிவிடுகிறது..!  

எல்லா காதலுமே ஜெயிப்பதில்லை.. ஆனால் காதல் முயற்சிகள் ஒரு போதும் நின்று போவதில்லை என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருப்பதாக பேட்டியளித்தார் இயக்குநர் ரஞ்சித்.. இப்படம் பெரிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து இன்னும் கொஞ்சம் நகைச்சுவை கதாநாயகர்களோடு வலம் வந்திருந்தால் நிச்சயம் ஓகே ஓகே, கலகலப்பு ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கும்.. இப்போதும் பரவாயில்லை. இயக்குநர் ரஞ்சித்திற்கு நல்ல பெயரையும், அடுத்த படத்திற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. 

முதல் பார்வையிலேயே இந்தப் படத்தை வாங்கி, கூடுதலாக 1 கோடிக்கும் மேல் செலவழித்து படத்தை ரிலீஸ் செய்திருக்கும் ஞானவேல்ராஜா நிச்சயம் பாராட்டுக்குரியவர். இவர்களை போன்ற பெரும்தனக்காரர்கள் இது போன்ற சின்ன பட்ஜெட்டில் தயாராகும் தரமான திரைப்படங்களை ஊக்குவித்தால் நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் இது போன்ற சினிமாக்கள் நிறையவே வெளிவரும்..!

வெற்றிகரமான வலைப்பதிவர் சந்திப்பு..!

28-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவரும் எதிர்பார்த்ததுபோல் இனிதே நடந்து முடிந்தது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு..! 80 வயது முதிய பதிவர்-புலவர் இராமானுசம் அவர்களின் ஒரு சிறு முயற்சி, நேற்றைக்கு பெருவெள்ளமாக புண்ணியகோடி மண்டபத்தில் கடந்தோடியது எனலாம். அவருக்கு எனது முதல் நன்றிகள்..!



இப்படியொரு அறிவிப்பை கவிஞர் மதுமதி அவர்கள் தனது பதிவில் வெளியிடும்வரையிலும் அந்த அழைப்பிதழில் இருந்த பலரது தளங்களை நான் பார்த்ததே இல்லை.. இத்தனை பேர் எப்போது இருந்து எழுதுகிறார்கள் என்ற சந்தேகம்தான் எழுந்தது.. அவர்கள் ஒவ்வொருவரின் எழுத்தையும் தேடிப் பிடித்து படித்தபோது, அவர்களது எழுத்தில் பதிவுலக அரசியல் கொஞ்சமும் இல்லாமல், நட்புணர்வே மேலோங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..!

மிக அருமையான ஒரு குழுமம்..! ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, இந்தக் குழு, அந்தக் குழுவென்றில்லாமல் அனைவருமே ஒரு குழு என்ற மன எண்ணத்தோடு செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..! இந்தக் குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முறை மட்டுமே என்னால் பங்கேற்க முடிந்தது. அதுவும் கொஞ்சம் நேரம்தான் இருக்கவும் முடிந்தது. அலுவலகப் பணிகள் கடுமையாக இருப்பதினால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்று இராமானுசம் ஐயாவிடம் முன்பே சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்..! எந்தவொரு இடர்பாடும் இல்லாத வகையில், அனைவரையும் அனுசரித்துப் போய் ஒரு புதிய வழிகாட்டுதலைத் துவக்கி வைத்திருக்கிறார்கள்.. 

நேற்றைக்கு அலுவலகப் பணியொன்று காலையில் இருந்ததினால், மதியம்தான் என்னால் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது..! 150 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து அதற்கும் மேல் இருந்தது கூட்டம். பலருடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்துதுமே இவர் யாராக இருக்கக் கூடும் என்ற தேடுதல் வேண்டாமே என்றெண்ணி பேட்ஜையும் கொடுத்திருந்தார்கள்.. அதை வைத்துத்தான் அறிமுகப் படலம் எனக்குள் துவங்கியது.. இதுவரையில் நேரில் பார்த்திருக்காத பதிவர்களையெல்லாம் சந்திக்க முடிந்தது..!  

நான் உள்ளே நுழைந்தபோது மேடையில் மூத்தப் பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களை கவுரவிக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.. இனிய நண்பர் சுரேகாவும், கவிஞர் மதுமதியும் மிக அழகாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்கள்..! வயதில் மூத்த பல பதிவர்களை இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்.. ஆனால் விழாவினை நடத்தியவர்களுக்கு அவர்கள் நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி.  நாம்தான் தனி தீவாக இருந்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை எனக்கு உணர்த்துவதாக இருந்த்து இந்த பதிவர் சந்திப்பு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் கூட்டமாய் வந்திருந்தார்கள்..! திரட்டிகளில் அதிகம் மேய்ச்சல் காட்டாமல் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் பிளஸ் என்று அதிகம் எனது பார்வையை திருப்பிக் கொண்டதால் எண்ணற்ற பதிவுகளையும், பதிவர்களையும் இதுவரையில் காணாமல் இருந்தது கண்டு இப்போது நான் வருத்தப்படுகிறேன்..!

பலரும் ஏற்கெனவே தங்களுக்குள் பேசி வைத்திருந்து வந்ததை போல அவரவர்களை அடையாளம் கண்டு தனி குழுவாக பேசித் தீர்த்ததும் நடக்கத்தான் செய்த்து.. இதுதான் இந்தக் குழுமத்தின் முதல் படி.. சிறு குழு, பெருங் குழுவாகி இப்போது குழுமமாகவே இதன் மூலம் சங்கமித்திருக்கிறது..!

விழா நடத்துவதிலும் மிகத் துல்லியமாக இருந்து 99 சதவிகிதம்வரையிலும் திட்டமிட்டபடி நிகழ்வினை குறித்த நேரத்திற்குள் நடத்தி முடித்தார்கள். மாலை மயங்கிய நேரத்தில் விடுதிக்குச் சென்றுவிட்டு ரயில் நிலையத்திற்குச் செல்லும் கால அவகாசத்தை கொடுத்து பதிவர்களை பத்திரமாக அனுப்பி வைத்திருந்துவிட்டு பின்புதான் அருகில் வந்து கை கொடுத்தனர் விழா அமைப்பினர்.. இந்த பொறுப்பும், தன்மையும்தான் இந்த பதிவர் சந்திப்பின் வெற்றிக்கான காரணம்..!

தனிமரம் தோப்பாகாது என்பதையும், ஒரு கை ஓசை எப்போதும் பலமில்லாத்து என்பதையும் புலவர் இராமானுசம் ஐயா அவருடைய பேச்சில் குறிப்பிட்டார்..! அது போலவே இவர் சார்பு, அவர் சார்பு என்றில்லாமல் யார் வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் துவங்கப்பட்டுள்ள இந்தக் குழுமம் தனது அடுத்த உயர்வாக முறையான குழுமமாகச் செயல்பட உத்தேசித்துள்ளதும் பாராட்டுக்குரியது..! 

இந்த விழாவினை திறம்பட நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்.. குறிப்பாக புலவர் இராமானுசம் ஐயா அவர்களுக்கும், கவிஞர் மதுமதி அவர்களுக்கும், இருதய ஆபரேஷன் செய்த நிலையிலும் இதற்காக ராப்பகலாக உழைத்திருக்கும் அன்பர் பட்டிக்காட்டான் ஜெய் அவர்களுக்கும் இன்ன பிற பதிவுலக நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடமளித்து கூடுதலாக நன்கொடையும் அளித்து முக்கிய முகவரியாக விளங்கிய டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் பதிவர் வேடியப்பனுக்கும் ஒரு சிறப்பு நன்றி..! இந்த நிகழ்ச்சிக்காக நன்கொடையளித்த அனைத்து பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!

இதேவேளையில் வலையுலகில் பழமைக்கும், புதுமைக்கும் என்றும் இணைப்புப் பாலமாய் திகழ்ந்து கொண்டிருக்கும் அன்பர்கள் மோகன்குமார், மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாஸபி பிரபாகரன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!

நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு இருந்த பதிவர்களை வைத்துக் கொண்டு விழா அமைப்பாளர்கள் காட்டிய அக்கறையுடனான சந்திப்பில், பதிவர்கள் மிகவும் எதிர்பார்த்த விஷயங்கள் மிகச் சில எட்டிப் பிடிக்கப்பட்டுள்ளன.. விரைவில் அவைகளனைத்தும் நடந்தேறும் என்று நம்புகிறேன்..!

உயர்வான நோக்கம்.. எளிமையான அணுகுமுறை.. ஜனநாயகமான நடைமுறைகளுடன் தோற்றுவிக்கப்பட இருக்கும் இந்த வலைப்பதிவர் குழுமம், மற்ற இணையத்தள சமூகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றே நம்புகிறேன்..!


18 வயசு - சினிமா விமர்சனம்

24-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் தனது அடுத்த படத்தை அதைவிட அதிக முனைப்புடனும், ஊக்கத்துடனும் செய்வார்கள்..! வெற்றி மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக.. இந்த படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம் அப்படியே பல்டியடித்து, இந்த ஒரு படத்தோடு திரையுலகத்தைவிட்டு வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு தனது இரண்டாவதான இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.!

பைத்தியக்காரத்தனமான கதை.. திரைக்கதை, இயக்கம்.. இப்படியொரு படத்தை எடுத்தால் இந்தக் காலத்தில் தியேட்டர் கேண்டீனில் வேலை பார்ப்பவர்களாவாவது பார்ப்பார்களா என்று யோசிக்காமலேயே தனக்குத் தோன்றியதையெல்லாம் படமாக சுருட்டி எடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம். ஆனாலும் என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம்தான்.. எங்களது அன்பு அண்ணன் கிருஷ்ணா டாவின்சி நடித்திருக்கும் ஒரே படம் இதுதான் என்பதால் இது கண்டிப்பாக அந்த வகையில் மட்டுமே சிலருக்கு பாதுகாக்க வேண்டிய படமாக இருக்கும்.


தான் மிகவும் நேசித்த அப்பாவின் மரணத்தினாலும், தனது அம்மாவின் பாராமுகத்தினாலும் மனநோயாளியாக இருக்கும் கார்த்திக் என்னும் இளைஞன், ஹீரோயின் காயத்ரியை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்க.. இடையில் அவனது மனநோயால் 2 கொலைகளை செய்துவிட்டு காதலியையும் கடத்திக் கொண்டு தப்பியோடுகிறான். பிடிபட்டானா இல்லையா என்பதுதான் கதையெனச் சொல்லப்படுவதன் முடிவுக் காட்சி..!

முதல் 5 நிமிடத்திலேயே படத்தின் தரம் முடிவாகிவிட்டது.. ஹீரோ, தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் மகன் என்பதாலேயே அவரை மையமாக வைத்து படமெடுக்கலாம். தப்பில்லை.. ஆனால் அதற்கொரு நல்ல கதை வேண்டாமா..? இதில் கதை என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதைத் தேடுவதற்குள் இடைவேளை வந்துவிட்டது. அதற்குப் பிறகு ஓடிப் போனவனைத் தேடுறாங்கப்பா.. அவ்வளவுதான் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படமும் முடிந்துவிட்டது..! ரேணிகுண்டா படத்தை இயக்கியவர்தான் இந்த பன்னீர்செல்வமா என்ற சந்தேகம் இப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் வரும்.. அந்த அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் காட்சிக்கு காட்சி ஏராளம்..!

மனநோயில் பல வகைகளைப் பார்த்திருக்கிறோம். இதில் முற்றிலும் புதுமையாக எதிரில் பார்க்கும் பூனை, நாய், பாம்பு, மாடு போன்றவைகளை போலவே தானும் உருமாறிக் கொள்ளும் மனநோயை இன்றைக்குத்தான் என் வாழ்க்கையில் கேள்விப்படுகிறேன்.. வளர்க கதை இலாகாவின் பங்கு..!

புதுமுக ஹீரோ ஜானி தானும் கஷ்டப்பட்டு படம் பார்ப்பவர்களையும் அநியாயத்துக்கு கஷ்டப்படுத்தியிருக்கிறார்..! அவ்வப்போது அவர் ரூட் மாறும் பிராணிகளை போன்று குரல் கொடுக்க அவர் பட்டிருக்கும் கஷ்டத்தை பார்த்தால், நாம் கொடுத்த 120 டிக்கெட் கட்டணமே பரவாயில்லை என்று சொல்லி பேசாமல் எழுந்து வந்துவிடலாம்..! இந்தப் படத்திற்கு.. இந்தக் கதைக்கு.. இது ஓகே.. அடுத்த படத்தில் இவரின் நடிப்பை விமர்சித்துக் கொள்ளலாம்..!

புதுமுக ஹீரோயின் காயத்ரி.. மேக்கப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.. சுண்டியிழுக்கும் அழகு இல்லையென்றாலும், ஏதோ ஒரு கவர்ச்சி அவரது முகத்தில் இருக்கிறது..! இன்னும் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.. வரட்டும்.. பார்ப்போம்.. (நான் பேட்டியெடுத்தவர்களில் "அண்ணா" என்று என்னை அழைத்த ஒரே கதாநாயகி இந்த காயத்ரி மட்டுமே என்பதால், இதற்கு மேல் இந்தப் பொண்ணைப் பத்தி நான் எதுவும் சொல்ல மாட்டேன்)

வீணாப் போனவர்களின் பட்டியலில் யுவராணியும், ரோகிணியும், கிருஷ்ணா டாவின்சியும் இணைந்திருக்கிறார்கள். யுவராணியின் கேரக்டர் ஸ்கெட்ச்சே அப்படித்தான் என்பதால் விட்டுவிடுவோம்.. ரோகிணி-கிருஷ்ணா டாவின்சி போர்ஷன், கதையின் அடித்தளமே ஆடிப் போகும் அளவுக்கான லாஜிக் மிஸ்டேக்கில் பவனி வருவதால் இவர்களையும் விட்ருவோம்..

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் இன்றுவரையிலும் மறக்க முடியாத சத்தியேந்திரன், இந்தப் படத்தில் வேறொரு மனநோயாளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்..! காதல் வாழ்க.. என்று அவர் சொல்லும்போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.. ஒரு குறும்புக்கார பத்திரிகையாளர் இயக்குநர் ஒழிக என்றுகூட பதிலுக்குக் கத்தினார்.. தனது இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில், இப்போதுதான் முதல் முறையாக கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஜெயித்திருக்கிறார் சத்தியேந்திரன்..! இனியாவது நல்லாயிருக்கட்டும்..!

தினேஷ் சார்லஸ் பாஸ்கோ என்பவர் இசையமைத்திருக்கிறார். போடி போடி பெண்ணோ, உன்னை ஒன்று.. இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே மீண்டும் கேட்க வேண்டும் போல உள்ளது.. தனியாக மட்டும்.. படத்துடன் இல்லை. இந்த இசையமைப்பாளர் பற்றிக் குறிப்பிட வேண்டியது இன்னொன்று இருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசையைப் போன்ற ஒரு கொடூரமான இசையை இந்த வருடத்தில் எந்தப் படத்திலும் நான் இதுவரையில் கேட்டதில்லை.. அவ்வளவு சப்பை..!

ஒளிப்பதிவாளர் மட்டும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டு இயக்குநரை நட்டாத்தில் விட்டுவிட்டார். அந்த நோய் எதனால் வந்த்து என்பதைக் கூட பாதியிலேயே விட்டுவிட்டார்கள்..! ரோகிணியும், கிருஷ்ணாவும் ஏன் ஹீரோவை காப்பாற்ற இத்தனை மெனக்கெடுகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் காணோம்..! அதேபோல் இன்ஸ்பெக்டர் ஜெ.எஸ். ஆளை பார்க்கும் முன்பாகவே ஹீரோவை போட்டுத் தள்ளிவிட வெறியோடு இருப்பது ஏன் என்பதும் தெரியவில்லை.. ஹீரோ ஒரு மன நோயாளி என்பதையே புரிந்து கொள்ள முடியாத ஹீரோயினாக காட்டியிருப்பது தோளில் மீது ஏறி உட்கார்ந்து நம் காதில் பூச்சுற்றும் வேலை..! படத்தின் மிகப் பெரிய காமெடியே.. போலீஸ் ஜீப்பின் பின்னால் ஹீரோ ஓடி வருவதும், ஜீப் முன்னால் பறப்பதுமாக வருவதுதான்.. என்னவொரு திரைக்கதை..!? அசரடிக்க வைத்துவிட்டார்கள்..!

இப்படியெல்லாம் காசை கொட்டி வெட்டியாக செலவழித்து வைப்பதற்கு பதிலாக ராமராஜன் மாதிரி ஒரு ஹீரோவை உடனடியாகத் தேடிப் பிடித்து கிராமத்தில் ஆட்டையோ, மாட்டையோ மேய்க்கச் சொல்லி படமெடுத்து வெளியிட்டாலும் புண்ணியம் கிடைக்கும்..! 

இப்போதுவரையிலும் கதை, திரைக்கதைக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறோம் என்று இயக்குநர் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இன்னும் கொஞ்ச நாளில் “எனக்கும் கதை பிடிக்கலதான்.. தயாரிப்பாளரின் மகனுக்காக சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்தேன். அதுல என்னோட பங்களிப்பு ஏதுமில்லை.. அதுனால அந்தப் படம் பெயிலியர் ஆயிருச்சு...” என்று இதே இயக்குநர் பேட்டியளிக்கத்தான் போகிறார்..! அதையும் நாம பார்க்கத்தான் போறோம்..!

அட்டக்கத்தி, நான் படத்தையெல்லாம் பார்த்தவங்க, அந்தப் படங்களையே 2-வது தடவையும் போய்ப் பாருங்க.. ஒண்ணும் தப்பில்லை..!

நான் - சினிமா விமர்சனம்

16-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எதிர்பாராமல் திகைக்க வைத்த படம்..! சிறந்த திரைக்கதை.. சிறந்த இயக்கம்.. என அனைத்தையும் தனக்குள்ளே வைத்திருக்கும் சாமான்யமான படம் இது. 

தான் 24 திரைப்படங்களுக்கு இசையமைத்து சம்பாதித்த பணத்தை, இந்த ஒரே படத்தில் முதலீடு செய்த துணிச்சல்கார ஹீரோவான விஜய் ஆண்ட்டனியை நெஞ்சார வாழ்த்துகிறேன்.. அவருடைய தைரியத்துக்கு எனது சல்யூட்..! சிறந்த கதையையும், சிறந்த இயக்குநரையும் தேடிப் பிடித்திருக்கிறார் விஜய்.. அவரளவுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும், திறமையாகவும் திரையில் கனமாகக் காட்சி தந்திருக்கிறார். 

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் துவங்கும் படம், இறுதியில் மருத்துவக் கல்லூரியில் தனது உயிரை விடுகிறது.. இந்தப் படத்தை இன்னொரு கோணத்திலும், நீங்கள் பார்க்கலாம். அது மனிதனை ஆட்டி வைப்பது விதியா? அல்லது மதியா என்று.. இது அனைத்துக்கும் வரிசைக்கிரமமாக பதில் சொல்கிறது இப்படம்..! 

நன்கு படிக்கும் மாணவனாக இருந்தும் நண்பர்களுக்கு உதவி செய்ய மார்க் ஷீட்டில் கையெழுத்தை போர்ஜரியாக போடப் போய் தலைமை ஆசிரியரால் கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்.. அவமானத்தோடு வீடு திரும்பும் சிறுவன் கார்த்திக், பட்டப் பகலில் தனது தாய் வேறொருவரோடு படுக்கையில் இருப்பதைக் கண்டு வெம்புகிறான். 

தாயின் வேண்டுகோளை ஏற்காமல் தந்தையிடம் இது பற்றிக் கூற தந்தை மனமுடைந்து தூக்கில் தொங்குகிறார்.. இப்போது கேள்வி கேட்பாரே இல்லையே என்ற நிலையில் புதிய அப்பா இரவிலேயே வீட்டிற்கு வர.. கோபமடைந்த கார்த்திக், தன் அம்மாவையும், புதிய அப்பாவையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தீ வைத்து அவர்களைக் கொல்கிறார்..! 

இதுவரையில் நடந்தவைகள் அனைத்தும் விதியின் விளையாட்டு.. அந்தச் சிறுவனுக்கு எது உண்மை..? எது பொய்..? எது நிஜம்..? எது மாயை என்பது தெரியாத வயது.. அம்மா அப்பாவிடம் தைரியமாகச் சொல்கிறாள்.. “ஆமா.. அப்படித்தான்.. அவன்தான் வந்தான்.. நீ வேஸ்ட்டு.. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ..” என்கிறாள். இதை புரிந்து கொள்ளும் வயது அவனுக்கில்லை.. விதிவிட்ட வலியை ஏற்றுக் கொள்கிறான். 

சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி அவனை அரவணைக்கிறது.. அனைத்தையும் அங்கே கற்றுக் கொள்கிறான்.. 21 வயது முடியும்வரையிலான அவனது தண்டனைக் காலம் முடிந்து இந்த போலி, பொல்லா உலகத்திற்குள் கால் வைக்கிறான்.. இதுவரையிலும் ஓரமாய் அமைதியாய் இருந்த விதி தனது விளையாட்டை அவனது வாழ்க்கையில் மீண்டும் துவக்குகிறது..!  

சொந்த சித்தப்பா வீட்டிற்கு வந்த அவனுக்கு, "அவன் துணைக்கு ஏன் நீயும் வெளில போயேன்.." என்று சித்தப்பாவுக்கு சித்தியிடமிருந்து கிடைத்த மரியாதையைக் கண்டு, சொல்லாமல் கொள்ளாமல் தேநீரைக்கூட குடிக்காமல் வெளியேறுகிறான். விதியின் துவக்கம் இது..! 

விதியின் பின்தொடரல் தெரியாமலேயே இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பும் பஸ்ஸில் ஏறி அமர்கிறான் கார்த்திக். அருகில் ஒரு முஸ்லீம் இளைஞன். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்கிறான்.. ஓரமாய் அமர்ந்திருந்த கார்த்திக்கை அந்த சீட்டுதான் வேணுமா என்று கேட்க வைக்கிறது விதி.. அது புரியாமல் டீஸன்சியை காட்ட விரும்பி நகர்ந்து இடம் தருகிறான் கார்த்திக். நடுவழியில் ஆர்ப்பரிக்கிறது விதி.. 

பஸ் விபத்துக்குள்ளாகி கார்த்திக்கின் அருகில் இருந்த முஸ்லீம் நண்பன் ஸ்தலத்திலேயே மரணிக்கிறான்.  விதி கோடு போட்டுக் கொடுத்தால், அவனவன் மதி தானே ரோடு போட்டுக் கொள்ளும். இப்படித்தான் துவங்குகிறது விதி-மதி விளையாட்டு..  

இப்போது கார்த்திக் மதியின் சகுனி விளையாட்டு துவக்கம். இறந்து போன இளைஞன் கொண்டு வந்த சூட்கேஸ்களை நொடியில் தூக்கிக் கொண்டு தனது அம்மா, அப்பாவுடன் இருந்த போட்டோவை தனது பையில் இருந்து எடுத்துக் கொண்டும் வழியும் ரத்தத்த்தோடு தானே சாலைக்கு ஓடி தப்பிக்கிறான் கார்த்திக். 

சென்னையில் மேன்ஷனில் ஒரு அறையை அவசரமாக வாடகைக்கு எடுத்து பரபரப்பாக சூட்கேஸை துழாவ முகமது சலீம் என்ற அந்த இளைஞனின் எம்.பி.பி.எஸ். ஆர்வம் கார்த்திக்கிற்கு புரிகிறது. கூடுதலாக அவன் எதிர்பார்த்த பணமும் கிடைக்கிறது. 

குளித்துவிட்டு வருவதற்குள் அதே அறையில் தங்கியிருந்த இன்னொரு முஸ்லீம் நண்பர் அந்த பைலை கையில் வைத்துக் கொண்டு விதி, நாக்கில் வகுத்துக் கொடுத்த வார்த்தைகளை வீசுகிறார். “நல்ல மார்க் சலீம். டாக்டராகப் போறீங்க.” - விதி எடுத்துக் கொடுக்க கார்த்திக்கின் மதி பரபரப்பாகிறது..! 

உடனுக்குடன் மேன்ஷன் மாற்றம்.. அந்த சலீமின் இடத்துக்கு தான் போக விரும்பி அனைத்தையும் ஒரு பாடலுக்குள்ளேயே செய்து முடிக்கிறான் கார்த்திக். மகாபலிபுர கடற்கரையில் ராட்டினத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கையில் காசைத் திணித்து தனது அப்பாவாக ஒரு நாள் நடிக்க அழைத்துப் போய் கடைசியில் கல்லூரியில் தனக்கான சீட்டையும் பெற்று விடுகிறான்.. மதி கரவொலி எழுப்பி சிரிக்க விதி மெளனமாக காய் நகர்த்துகிறது.. இப்போது அதன் கையில் ஆட்டம்.. 

அசோக் என்ற ஸ்டூடண்டுடன் கை கோர்க்கிறது விதி. ஒரு சந்தர்ப்பத்தில் அசோக்கை கார்த்திக் என்ற சலீமுடன் கோர்த்துவிடுகிறது.. இப்போது மதி விழித்துக் கொண்டு கிடைத்த புளியங்கொம்பை கைவிடக் கூடாது என்பதற்காக அதன் வசதிகளை அனுபவிக்க முடிவெடுக்கிறது..! 

மேன்ஷனுக்கு வாடகை கொடுக்க காசில்லாமல், காபி டேயில் பகுதி நேர வேலை பார்த்தும் சமாளிக்க முடியாது.. இனிமேல் அசோக்கின் பங்களா வீட்டிலேயே தங்கி இருக்கிறவரைக்கும் இருப்போம் என்று மதி சொல்ல அபாரமாக ஒத்துழைக்கிறார் சலீம்.. 

அசோக்கின் சகா இரவில் வாந்தி எடுத்த்தை சுத்தம் செய்து வைத்து, முந்தின இரவில் கூத்தாடிகளின் கொண்டாட்டத்தில் பப் போன்று இருந்த வீட்டை சுத்தமாக்கி வைத்து அசோக்கிடம் நெருங்குகிறான் சலீம். ஆனாலும் விதி சலீமுக்கு இங்கேயும் ஒரு செக்கை வைத்திருக்கிறது சுரேஷ் என்ற நண்பனின் மூலமாக.. பார்த்தவுடன் பிடிக்காதவர்கள் பட்டியில் சலீமை சேர்த்து வைத்திருக்கிறான் சுரேஷ். 

விதியின் விளையாட்டு கொஞ்சம் இடைவேளைவிட்டு தான் ஆட்டுவிக்கப் போகும் கதாபாத்திரங்களின் தன்மை முழுவதையும் நமக்குச் சொல்லிவிட்டு மீண்டும் தனது ஆட்டத்தைத் துவக்குகிறது..! இப்போது அடுத்தக் கட்டம் வீட்டிற்கு வெளியே சலீமை துரத்துகிறது. 

சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் தலைமைக் காப்பாளர், சலீமை கார்த்திக்காக நினைத்து பேச இதனை அசோக்கும் கேட்க வேண்டியதாகிறது.. சலீம் தனது மதியினால் முடிந்த அளவுக்கு சமாளித்து வைக்கிறான்.. 

பாண்டிச்சேரிக்கு குட்டிகளுடன் அசோக்கையும் தள்ளிக் கொண்டு போக நினைக்கிறது விதி.. சுரேஷின் பாராமுகத்தை உணர்ந்து தான் வரவில்லை என்று சொல்ல வைக்கிறது சலீமின் மதி. அசோக்கின் காதலி ரூபா வீடு தேடி வந்து அசோக் பற்றிக் கேட்டதை மறைக்கச் சொல்கிறது விதி. மறைத்ததை வெளியிலும் சொல்ல வைக்கிறது.. ஆனால் மதியோ சலீமின் கன்னத்தில் விழுந்த அறையைக்கூட தாங்கிக் கொள்ளச் சொல்கிறது.  

சலீமை அசோக்கின் வீட்டில் இருந்து துரத்தச் சொல்கிறது விதி. சலீம் செல்லலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் அவனது பாதுகாப்பு உணர்வை அசோக்கிடம் காட்டிக் கொடுக்கிறது விதி. சலீம் குளிக்கப் போன நேரத்தில் அவனது அறைக்குள் நுழைந்து தாய், தந்தையுடனும் விபூதி பூசிய நிலையில்  இருக்கும் புகைப்படத்தைக் காண வைக்கிறது விதி.. அடுத்தது அராஜகம்தான்.. 

சாதாரண மனிதனால் அவதூறைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அவமானத்தை தாங்க முடியாதுதான்.. விதி எப்படியெல்லாம் கோரமாக விளையாடுகிறது? தனது சிப்பாய்களையெல்லாம் இழந்துவிட்டுத் தவிக்கிறான் சலீம். கை கலப்பில் அசோக்கை பரமபதம் சென்றடைய வைக்கிறது விதி..  

ஏற்கெனவே இருந்த சிறைக் காலம் போதாதா..? மீண்டும் சிறைக்கா..? இப்போது அசுர வேகத்தில் யோசிக்கிறது சலீமின் மதி.. அசோக்கை பார்சல் கட்டி கொண்டு போய் ஓரிடத்தில் புதைத்துவிட்டு வந்து ஆற, அமர யோசித்து விதிக்கு எதிரான தனது ஆட்டத்தை அசுர வேகத்தில் துவக்குகிறான் சலீம்..! 

சலீம் உயிருடன் இருப்பது போல் அவனது அப்பாவிடம் போனில் பேசுகிறான் சலீம். அவரும் நம்புகிறார். அசோக்கை அவரது நண்பர் ஒருவரை உடனே போய் பார்க்கச் சொல்லும்படி சொல்கிறார். ரூபாவை வீட்டு வாசலுக்கே அழைத்து வருகிறது விதி. கன நொடியில் விதியை புரிந்து கொண்டு பெப்பே காட்டுகிறது சலீமின் மதி. 

மாடி பெட்ரூமில் அசோக் இருப்பதாகக் காட்டி தானே வீட்டைச் சுற்றி மாடிக்குப் போய் கதவுக்கு அந்தப் புறமாக இருந்து கொண்டு அசோக் போல் வாய்ஸ் மாடுலேஷன் பேசி ரூபாவை நம்ப வைத்து அனுப்பி வைக்கிறான்..! அசோக் அப்பாவின் நண்பரை தான்தான் அசோக் என்று பொய் சொல்லிச் சந்திக்கப் போகுமிடத்தில் விதியின் விளையாட்டு மீண்டும் ரூபாவை அங்கே அழைத்து வருகிறது. அதைவிட சுவாரஸ்யம்.. ரூபாவும், அந்த நண்பரின் மகள் ப்ரியாவும் நண்பர்கள்.. அசோக்கிற்காக அவர்கள் காத்திருக்க.. தப்பிக்க நினைத்து தனது சாகசங்கள் அனைத்தையும் செய்கிறது மதி. இப்போதும் தப்பிக்கிறான் சலீம்.. இனி விதியை நாம் முந்திக் கொள்வோம் என்று நினைத்து ஆட்டத்தை கலைத்துப் போடுகிறது சலீமின் மதி. 

இரவு விடுதிக்கு சுரேஷையும், ரூபாவையும் வரவழைத்து.. அதே இடத்திற்கு ரூபாவின் நண்பி ப்ரியாவையும் வரவழைத்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கிறான் சலீம். சுரேஷை வெறுப்பேற்றுவது.. இனி அசோக்கின் மனதில் ரூபாவுக்கு இடமில்லை. புதிதாக வந்த ப்ரியாவுக்கு அந்த இடம் என்பதைச் சொல்லி அவளை அப்புறப்படுத்துவது.. ப்ரியாவை தனக்காக தயார் செய்வது என மூன்றையும் கில்லியாய் அடிக்கிறான் சலீம்.. 

ஆனால் மறுநாளே ப்ரியாவை வீட்டிற்கு அழைக்கிறது விதி.. அவளுடன் டின்னர் சாப்பிடலாம் என்று நினைத்து வெளியேற நினைத்த அசோக்கை சுரேஷையும் அழைத்து வந்து கோர்த்துவிடுகிறது விதி.. தானா வந்து மாட்டுறானே என்ற விதியின் கோரம் மதியை குணமிழக்கச் செய்ய கொஞ்சம், கொஞ்சமாக விதியின் வசமாகிறான் சலீம். ப்ரியாவை வெளியேறச் சொல்லிவிட்டு சுரேஷையும் போட்டுத் தள்ளி விடுகிறான்.. 

இப்போது சலீம் மீண்டும் மதியின் வசம்.. தான் தப்பிக்க வேண்டும். அதே சமயம் அசோக்கை தேட வேண்டும்.. என்ன செய்யலாம்..? வேண்டுமென்றே அரைகுறையாக அசோக்கை புதைத்துவைத்துவிட்டு வந்துவிடுகிறான்.. விதி வழக்கமான பாணியில் போலீஸை வீட்டுக்கு இழுத்து வருகிறது..! 

மதியின் துணையால் தனது சுவாரஸ்யமான திரைக்கதை அவிழ்த்து விடுகிறான் சலீம். அசோக்கிற்கும், சுரேஷிற்கும் இடையில் ஏற்கெனவே மனத்தாங்கல். இதற்கு ரூபாவே சாட்சி என்று ரூபா பக்கம் கேஸை தள்ளிவிடுகிறான். அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் ஒரு பல்டியடித்து ப்ரியாவையும் கோர்த்துவிடுகிறான். ப்ரியா வரும்போது விதி விளையாடி, சலீமை, அசோக் என்று காட்டிக் கொடுத்துவிடுமோ என்று நினைக்க.. விதி இங்கேதான் சோம்பேறித்தனப்பட்டுவிட்டது.  திரும்பிப் பார்க்க எத்தனையோ வாய்ப்பிருந்தும்.. இருவரையும் அருகருகே வைத்து விசாரிக்க வைக்கும் சூழல் இருந்தும், விதி அதைச் செய்யாமல்விட.. மதி கை கொட்டி எகத்தாளமாகச் சிரிக்கிறது..! 

ரூபாவிடம் அசோக்கின் போனில் இருந்து அசோக்கின் குரலில் பேசும் சலீம், தான் சுரேஷை கொலை செய்துவிட்டதாகச் சொல்கிறான். தான் சாகப் போவதாகவும் சொல்கிறான். பதற்றத்துடன் வீட்டுக்கு வரும் ரூபாவை எதிர்கொள்கிறான் சலீம். 

தான் வரும்போது இந்தக் கடிதம் மட்டுமே இருந்ததாகச் சொல்லி ஒரு கடித்த்தை நீட்டுகிறான். அதில் தான் சுரேஷை கொலை செய்த்தை பகிரங்கமாக தனது கைப்பட எழுதியிருக்கிறான் அசோக். குழப்பத்தில் இருக்கும் ரூபாவுக்கு விதி திடீரென்று ஒன்றை ஞாபகப்படுத்தி உசுப்பிவிடுகிறது. 

அன்றொரு நாள் தன்னைச் சமாதானப்படுத்த அசோக்கின் குரலில் சலீம் பேசியது அவளுக்கு நியாபகம் வர.. “நீ அசோக் வாய்ஸ்ல பேசுவீல்ல..” என்கிறாள்..! நொடியில் சலீமின் மதி 1 லட்சம் எலெக்ட்ரான் ஸ்பீடில் செல்கிறது.. “யாரோ வெளில இருக்காங்க. அநேகமா அது அசோக்காகூட இருக்கலாம். நீ இந்த ரூமுக்குள்ள இரு.. நான் இப்ப வந்தர்றேன்..” என்று சொல்லி ரூபாவை அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டி சாவியை மட்டும் அங்கேயே தொங்க விடுகிறான். அடுத்து தனது அதகளத்தைத் துவக்குகிறான் சலீம். 

நிச்சயமாக அது ருத்ர தாண்டவம்தான்.. மோனோ ஆக்ட்டிங்கில் பின்னியெடுக்கிறான் சலீம். அவனது மதியின் அற்புதமான விளையாட்டு இது..! வெளியில் அசோக்கும், தானும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சீன்ஸை சப்தத்தின் மூலமாக சலீம் ஏற்படுத்த.. உள்ளேயிருக்கும் ரூபா நம்பி விடுகிறாள்.. வீடே அலங்கோலமாகி.. தானே ஏற்படுத்திக் கொண்ட காயத்துடன் இருக்கும் சலீமை அந்தக் கோலத்தில் பார்க்கிறான் அப்போது அங்கே வரும் கல்லூரி நண்பன். அவன் போட்ட கூச்சலில் அக்கம்பக்கம் திரண்டு வர.. ரூபா மீட்கப்பட.. போலீஸும் வருகிறது..! 

இப்போது விதி கொஞ்சம் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க.. சலீமின் அப்பாவும், அம்மாவும் வரவழைக்கப்படுகிறார்கள். சுரேஷை கொலை செய்துவிட்டு, இப்போது சலீமையும தாக்கிவிட்டு அசோக் தப்பியோட்டம்..! இதுதான் சலீமின் மதி செய்த திரைக்கதை.. 

தினம்தோறும் கள்ளக் கண்களையே பார்த்து சலித்துப் போயிருந்த இன்ஸ்பெக்டருக்கு நொடிக்கு ஒரு தரம் உளவு பார்க்க அலையும் சலீமின் கண்கள் ஏனோ சந்தேகத்தைக் கிளப்ப.. சலீமின் பூர்விகத்தைத் தோண்டியெடுக்க ஒரு ஆர்டரை இராமநாதபுரத்திற்கு அனுப்ப வைக்கிறது விதி..! 

இராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் டேபிளில் இருக்கும் அந்த பேக்ஸ் மிஷின் துப்பிய அந்த பேக்ஸ் செய்தியைவிடவும் ராக்கெட் ஸ்பீடில் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் சலீம் இராமநாதபுரத்துக்கு தாவுகிறான். இறந்து போன ஒரிஜினல் சலீமின் வீட்டில் எதிர்வரும் போலீஸ் விசாரணைக்குக் காத்திருக்கிறான் கார்த்திக். 

வந்த போலீஸுக்கு சலீம் தந்தையின் இன்றைய பாரிச வாயு அட்டாக் உடலும், அதனை தூக்கிச் சுமக்கும் சலீமின் கடமையும் விரட்டியடிக்க.. நல்ல பையன் சர்டிபிகேட் சென்னைக்குச் செல்ல.. விதி மேற்கொண்டு இக்கதையில் எப்படி இவனை மாட்டி வைப்பது என்று தெரியாமல் இப்போது இராமநாதபுரத்திலேயே நின்று கொள்கிறது.  

இனிமேல் உங்களுக்காகத்தான் நான் வாழப் போறேன் என்ற ஒரு சின்ன நம்பிக்கை ஒளிக் கீற்றை அந்தப் பெரியவரிடம் சொல்லிவிட்டு, அதே மருத்துவக் கல்லூரியில் சலோ போட்டு செல்கிறான் சலீம் என்ற கார்த்திக்..! 

இறுதியில் தப்பை தப்பா செஞ்சால்தான் தப்பு.. தப்பை சரியாச் செஞ்சு தப்பித்துக் கொண்டால், அதில் தப்பில்லை என்ற விதிக்கு மாற்றான ஒரு விதியை நமக்கே சொல்லியிருக்கிறார் இயக்குநர்..! 

அருமையான இயக்கம்..! மிக இறுக்கமானது..!    முதல் படம் போலவே இல்லை விஜய் ஆண்ட்டனிக்கு.. என்ன முகம் மட்டுமே 21 வயதுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், அவரது இறுகிப் போன முகம்.. களையிழந்த பொலிவு.. எப்போதும் சோகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது என்று இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற தோரணை..!  அசோக்கின் கொலை காட்சியிலும், தன்னை அசோக் அடிப்பதாக நினைத்து செய்யும் மோனோ ஆக்ட்டிங்கிலும் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்..! வெல்டன் விஜய் ஸார்..! 

அசோக்காக நடித்திருக்கும் சித்தார்த்தும் விஜய்க்கு ஈடு கொடுத்திருக்கிறார்.. 'மக்காயாலா' பாடல் காட்சியில் ஒரே ஒரு பிரேமில் இவரது எக்ஸ்பிரஷன் ஹீரோவே இவர்தானா என்று சொல்ல வைக்கிறது..! ரூபாவை சமாளிக்க முடியாமல், விஜய்யை கண்டிப்பது.. விஜய்யை சந்தேகித்து அதனை குரூரமாக தீர்த்துக் கொள்வது என்ற இவரது ஸ்டைல் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியிருக்கிறது..! 

விபா, ரூபா மஞ்சரி, அனுயான்னு ஒண்ணுக்கு மூணு ஹீரோயின்கள்.. விபா புதிய அழகு.. பேச்சு ரசிக்க வைக்கிறது..! கல்லூரியோடு இவரது ஆட்டம் முடிந்துவிடுவதால் பெரிதாக ஏதுமில்லை.. ரூபா மஞ்சரிதான் கடைசிவரையில் துணைக்கு வருகிறார். முன்பைவிட இப்போது கொஞ்சம் கூடுதல் அழகோடு இருக்கிறார் ரூபா.. அதிலும் மக்காயாலா பாடல் காட்சியில் செம க்யூட்.. இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதைத்தான் இறுதிக் காட்சியில் காண முடிகிறது.. அனுயாவுக்கு கெஸ்ட் ரோல்தான்.. அவரவர்களின் சொந்த கேரக்டர்களை போன்ற வசனங்களும், காட்சியமைப்புகளும் இருப்பதால் மூவருமே இயல்பாக நடித்திருப்பது போல் தோன்றுகிறது..! 

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவரை நிறைய ஹிந்தி படங்களில் பார்த்திருக்கிறேன்.. தமிழ் நடிகர்களை ஏனோ முயற்சி செய்ய முயலாமல் இவரை கொண்டு வந்ததற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. பெரிதாக இவரது கேரக்டர் எதையும் சொல்லிவிடவில்லை.. 

அடுத்தவர் படம் என்றாலே கொஞ்சம் பார்த்து மியூஸிக் செய்பவர்கள் தனது சொந்தப் படம் என்றால் ச்சும்மா விடுவார்களா..? சந்தேகமே இல்லாமல் 'மக்காயாலா' சூப்பர் ஹிட்.. தப்பெல்லாம் தப்பே இல்லை பாடல் இனி தப்பு செய்பவர்களுக்கு தேசிய கீதமாகலாம்.. இதனை எழுதிய வலையுலக நண்பர் அஸ்வினுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..! 

பாடலையும்விட இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையை நறுக்கென்று கொடுத்து பிரேம் பை பிரேம் டென்ஷனை கூட்டியிருக்கிறார் விஜய் ஆண்ட்டனி..!  நீலன் கே.சேகரின் சிக்கலான முறுகல் கதையை, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜீவா சங்கர். மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். இதனாலேயே ஜீவா என்ற பெயரை தனது சொந்தப் பெயருக்கு முன்பே சூட்டிக் கொண்டாராம்.. முதல் அறிமுகத்தையே அசத்தலாக செய்திருக்கிறார். 

தனது சொந்தக் கதையை மட்டுமே எடுப்பேன் என்றில்லாமல் வெற்றிக் கதையை தான் இயக்க வேண்டும் என்று நினைத்த இவரது நினைப்புக்கு பாராட்டுக்கள்.. இயக்கத்திற்கு அடுத்து இவரது ஒளிப்பதிவு இவரது குருநாதருக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது. இடைவேளைக்கு பின்னான பல காட்சிகள் இருட்டிலேயே எடுக்கப்பட்டிருப்பதும், அதற்கான லைட்டிங்ஸ் இருக்கா, இல்லையா என்றுகூட தெரியாத அளவுக்கு எடுக்கப்பட்டிருப்பது இவரது சிறப்புதான்..! ஜீவா பெயர் காப்பாற்றப்பட்டது என்றே சொல்லலாம்..! 

முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரையிலும் இவரது இயக்கம் தொடர்ச்சியான ஒரு பிரமிப்பைத் தருகிறது.. இதற்கு இன்னொரு துணை எடிட்டர் ஏசு சூர்யாவின் கச்சிதமாக கட்டிங்.. சண்டைக்கு வரும் இளைஞனை ஸ்கூரூ டிரைவரை வைத்து மிரட்டும் காட்சியிலும், ஒரே காட்சியில் இரண்டு பேரை துரத்தியடிக்கும்வகையில் எழுதப்பட்ட திரைக்கதைக்காக டாஸ்மாக் பாரில் கிருஷ்ணமூர்த்தி தலையில் பாட்டிலை உடைக்கும் காட்சியிலும், அசோக் கொல்லப்பட்ட இடைவெளியில் அடுத்தடுத்த காட்சிகளை நறுக்கென்று கொண்டு போய் முடித்திருப்பதும் அது கொலை என்பதாகவே நமக்குத் தெரியவில்லை. தெரியாமல் நடந்துவிட்டதாகவே நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.. வெல்டன் எடிட்டர் ஸார்.. 

இடையிடையே வந்த சில லாஜிக் மீறல்களை மட்டும் நாம் கண்டு கொள்ளாமல் போனால், நல்லதொரு திரில்லர்வகை படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்..! எல்லா ஆட்டத்தையும் ஆட வைத்துவிட்டு கிளைமாக்ஸில் இவர் எழுதியிருக்கும் வசனங்களும், காட்சியமைப்பும் கார்த்திக் சலீமாக செய்த தப்பு தப்பில்லையோ என்று நினைக்கும் அளவுக்கு நம்மை நெகிழ வைக்கிறது. இயக்குநர் இங்கேதான் நமக்கு விதி-மதி சோதனையின் முடிவைக் காண்பித்திருக்கிறார். 

விதியினால் விளைந்ததை மதி எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதற்கு இந்தப் படத்தின் கிளைமாக்ஸும் ஒரு உதாரணம்..! மெளனகுரு, வழக்கு எண், ராட்டினம் போன்ற படங்களுக்கு பின்பு கிளைமாக்ஸில் நம்மை அசரடித்திருப்பது இந்தப் படம்தான்.. நல்லவேளையாக யூ/ஏ சர்டிபிகேட் வாங்கியதால் படம் கொஞ்சமாவது தப்பித்தது.. உண்மையில் இப்படம் ஏ சர்டிபிகேட்டிற்கு மட்டுமே உரித்தானது.. எப்படி தப்பித்தார்கள் என்று தெரியவில்லை. பாராட்டுக்கள்..! சினிமா ரசிகர்களால் இப்படம் நிச்சயம் கொண்டாடப்படும் என்றே நினைக்கிறேன்..! அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..! காணத் தவறாதீர்கள்..!!!

எப்படி மனசுக்குள் வந்தாய் - சினிமா விமர்சனம்

13-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் டைட்டில் கவிதையாகத்தான் உள்ளது. ஆனால் படமோ கவிதையாக ஆரம்பித்து, அடிதடிக்குள் நுழைந்து டெர்ரர் படமாக முடிகிறது..! 


துணி வெளுக்கும் டோபி குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ, தமிழ்ச் சினிமாவின் பார்முலாபடி ஹீரோயினை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. அவளுக்காகவே.. அவளுடன் நட்பு கொண்டு, காதலில் ஜெயிக்க விரும்பி ஹீரோயின் படிக்கப் போகும் அதே கல்லூரியில் ஹீரோயின் படிக்கும் பேஷன் டெக்னாலஜி கோர்ஸில் சேர்கிறார்.. காதல் கொஞ்சம் கை கூடும் நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு அசம்பாவிதத்தில் உடன் படிக்கும் ஹீரோயினின் நெருங்கிய குடும்பத்து தோழன் இறந்துவிட.. அதன் பின்பு படம் வேறு பக்கம் சூடு பிடிக்கிறது.. தான் செய்த தவறை மறைக்கப் பார்த்து.. பொய் மேல் பொய் சொல்லி.. எப்பாடுபட்டாவது தனது காதலைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறார் ஹீரோ.. முடிந்ததா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

2008-ல் வெளிவந்த காதலில் விழுந்தேன் படத்தின் இயக்குநர் பி.வி.பிரசாத்தின் அடுத்த படம் இது.  4 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நல்ல கதைக்காக காத்திருந்து செய்தேன் என்கிறார் இயக்குநர்..!  சொல்லப்படும் காதல் அரதப் பழசு என்றாலும், அதில் ஏதாவது வித்தியாசத்தைக் காட்டி முதல் மூன்று நாளில் ஓடி வருகின்ற ரசிகர் பட்டாளத்தை திருப்திபடுத்திவிட அனைத்து இயக்குநர்களுமே துடிக்கிறார்கள்..! இயக்குநர் பிரசாத்தின் துடிப்பும் அப்படித்தான் இருந்திருக்கிறது..!

காதலை வளர்ப்பதும், அந்தக் கொலை வரையிலும் கதை நேர்க்கோட்டில்தான் செல்கிறது.. பின்புதான் தடம் புரண்டு ஹீரோவை ஆண்ட்டி ஹீரோவாக்கி, காதலுக்கு சமாதிகட்டி சினிமாத்தனமான வில்லனாக்கி முடித்திருக்கிறார்கள். பொதுவாகவே காதல் என்றாலே அடுத்தது கல்யாணம் என்ற லெவலை நோக்கித்தான் கதையைக் கொண்டு போவார்கள்.. கண்மூடித்தனமான காதலுடன், ஹீரோ காதலிக்காக உயிரையே கொடுப்பான் என்றாலும், அதையும் ஒரு கட்டுக்குள் வைத்து, சில காம்ப்ரமைஸ்களால் ஹீரோவை நல்லவனாகவே காட்டிவிடுவார்கள். இதில் பிரசாத் வித்தியாசமாக ஹீரோவை அநியாயத்துக்கு வில்லனாக காட்டியிருக்கிறார்..!

நண்பன் காணாமல் போய்விட்டதாக புரளியைக் கிளப்பி.. அதன் தொடர்ச்சியாக அவனை போல குரல் மாற்றி ஹீரோயினிடம் அசிங்கமாகப் பேசுவது.. ஹீரோயினிடம் போலீஸின் ரூட்டையும் மாற்றிச் சொல்வது.. தன்னை அவள் காதலிக்கும் அளவுக்கு சூழலை ஏற்படுத்துவது என்று கதை போகிற போக்கில் திரைக்கதையின் வேகம் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும், ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச் அங்கே புஸ்ஸென்று போனதுதான் உண்மை..! 

முந்தைய படங்களில் பாதிப்பை ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நினைத்து நாக்கு முக்க ஸ்டைலில் ஊறாக்கிளி பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் 4 ஆண்டுகள் கழித்து மீண்டு வருவதால், இதனை நியாகப்படுத்தும் விதமாகவே விளம்பரங்கள் செய்தாலும், படத்தின் துவக்கத்திலேயே இந்தப் பாடல் வந்துவிடுவதால் வெறுமனே ஒரு பாடல் நடனமாக மட்டுமே இதனை ரசிக்க முடிகிறது..! நாக்க முக்க பாடலில் இருந்த கதையின் இருப்பிடம், இதில் இல்லாதது பாடலுக்கே பெரிய மைனஸாகிவிட்டது..!

அறிமுக ஹீரோ விஸ்வா, 10 படங்களில் நடித்த அனுவபத்தை இந்த ஒரு படத்திலேயே பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். இயக்குநர் விஸ்வாவை புரட்டி எடுத்திருக்கிறார். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். காதலில் பரவாயில்லை ரகம்.. இன்னும் கொஞ்சம் படங்களில் தேறிவிடுவார் போலத்தான் தோன்றுகிறது..! ஹீரோயினை முதல் பார்வையில் பார்த்த உடனேயே காதலாகி கசிந்துருவுதலில் ஆரம்பித்து.. கொலை செய்துவிட்டு பதறுவது.. ஹீரோயினிடம் சமாளிபிகேஷன் செய்வது.. ரவி காலேயிடம் ஆவேசமாக மோதுவது என்றெல்லாம் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை மட்டுமே செய்திருக்கிறார். அடுத்த படத்தில் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்தால் தொடர்ச்சியாக வரலாம்..!


ஹீரோயின் முன்னாள் மிஸ் இந்தியாவாக வென்றவராம். தான்வி வியாஸ்.. கொள்ளை அழகு.. ஸ்கிரீனில் இன்னும் அழகாகத் தெரிகிறார்.. பால்கோவாவை உடம்பெல்லாம் பூசியதுபோல பளீச்சென்று இருக்கிறார்.. இவருக்கேற்ற கேரக்டர்தான் படத்தில்..! ஒவ்வொரு புதுமுகமும் சந்திக்கும் டயலாக் லிப் லாக்  இவருக்கு பிரச்சினையில்லாமல் இருந்ததினால் நமக்கும் சந்தோஷம்தான்..! 

படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கிய நடிகர் ரவி காலே.. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் ஏன் இந்த வழக்கை இவ்வளவு ஆர்வமாக கையில் எடுத்திருக்கிறார் என்ற லாஜிக் கொஸ்டீனை மட்டும் விட்டுவிட்டால் மனிதர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்..!  விஸ்வாவை புரட்டியெடுத்துவிட்டு டீலிங் பேசும் சமயங்களில் அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்வேஜூம் அசத்தல்..! தமிழ்ச் சினிமாவுக்கு புதிய வில்லன் கிடைத்திருக்கிறார்..!

ஒளிப்பதிவு வேலையோடு வசனத்தையும் எழுதியிருக்கிறார் விஜய் மில்டன். ஒளிப்பதிவு வழக்கம்போல அவரது பெயரை சொல்லாமல் சொல்கிறது.. கேமிராவின் கண்களில் ஹீரோயினின் அழகையும், லொகேஷனையும் மாறி மாறி காட்டுவதால், எதனை ரசிப்பது என்பதே புரியவில்லை.. அந்த அளவுக்கு இருக்கிறது ஒளிப்பதிவு..! சண்டைக் காட்சிகளிலும், விஸ்வா போலீஸாரால் தாக்கப்படும் காட்சியிலும் விஜய் மில்டன் தனியே தெரிகிறார்..!

ஹாரீஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த டேனியல்தான் இசையமைப்பாளர். என் காதல் நீதானே.. கன்னக் குழியழகி, ஒரு பார்வையிலே பாடல்களைவிடவும், காட்சிகளை எடுத்தவிதம் ஓகே.. இவ்வளவு அழகான ஹீரோயினை வைத்துக் கொண்டு பாடல் காட்சிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்..!

படத்தில் சுவாரஸ்யமே இல்லையா என்றால் நிறையவே இருக்கிறது.. ஹீரோயினின் ஸ்கிரீன் அறிமுகம்.. ஹீரோயினின் டிரெஸ்ஸை ஹீரோ ஸ்பெஷலான அக்கறை எடுத்துத் துவைப்பது.. ஹீரோயினிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள ஹீரோ செய்யும் வேலைகள்.. இர்பானை தாக்கிவிட்டு அடுத்து நடந்ததை காண்பிக்காமல் அடுத்தடுத்த காட்சிகளில் கொஞ்சம், கொஞ்சமாகக் காட்டுவது.. இர்பான் குரலில் விஸ்வா பேசி ஹீரோயினை கலங்கடிப்பது.. வீட்டிற்கு சர்ச் வாரண்டோடு வந்து வெறும் கையோடு திரும்பிப் போகும்போது ஹீரோ அவர்களை கிண்டலடிப்பது.. அந்தக் காட்சியின் இண்ட்டர்கட்டை அடுத்த காட்சியில் காட்டுவது.. ஆக்ரோஷமான அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எல்லாவற்றையும்விட ஹீரோவுக்கு எப்போதுமே இருக்கும் முந்தைய செயல்களை பின்னோக்கி பார்க்கும் ஞாபக சக்தி.. என்று பலவற்றைச் சொல்ல்லாம்..!

இருந்தாலும், படம் இடைவேளைக்கு பின்பு டெர்ரர் முகத்தோடு போவதால் காதலையும் கொண்டாட முடியாமல், ஹீரோவின் காதலுக்கான நியாயங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்க வேண்டியுள்ளது..! பரபர திரைக்கதையுடன், டிவிஸ்ட்டுகளுடன் கூடிய புத்திசாலித்தனமான வசனத்தையும் வைத்துக் கொண்டு இயக்கத்தில் ரங்கு ராட்டினமே ஆடியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இவை அத்தனையும் காதலர்களின் மனதிலும், சராசரி ரசிகனின் மனதிலும் ஒட்டாமல், திரில்லர் பட வரிசையில் சேர்ந்ததுதான் பெரும் சோகம்..!

ஒரு முறை பார்க்கலாம்..!!!

பனித்துளி - சினிமா விமர்சனம்

10-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முடிவே கட்டிவிட்டார்கள் போலிருக்கிறது..! பணம் இருந்தால் நாம நினைக்குறதையெல்லாம் படமாக்கி வெளியிட்டுவிடலாம். நம் படத்தை எதிர்பார்த்து சோறு, தண்ணியில்லாமல் பல பேர் தமிழ்நாட்டில் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பலருக்கும் நினைப்பு.. நட்டிகுமார், டாக்டர் ஜெய் என்ற இரட்டை இயக்குநர்கள் இப்படித்தான் யோசித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

ஷார்ட் மெமரி லாஸ் அல்லது செலக்டிவ் அம்னீஷியா என்று இரு டைப்புகளில் சொல்லிக் கொள்ளலாம்.. அந்த நோய் வந்து தனது காதலியை மறந்தவன் திரும்பவும் எப்படி தனது காதலியை அடைகிறான் என்பதைத்தான் நமக்கே ஷார்ட் மெமரி லாஸ் ஏற்படும் அளவுக்கு மூளையை கிறங்கடித்து சொல்லி முடித்திருக்கிறார்கள்..


ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன், டாக்டருக்கு படிக்கும் கல்பனா பண்டிட்டை காதலிக்கிறார். கல்பனாவின் படிப்பு முடிவதற்குள்ளாகவே கணேஷுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க ஒரு வருஷம்தானே போயிட்டு வா.. அதுக்குள்ள நான் படிப்பை முடிச்சர்றேன் என்கிறாள் காதலி. காதலியின் தாதா அப்பாவோ தனது மகளை ஒரு வருடம் பார்க்காமல் இருக்க வேண்டும். அதன் பின்பும் இருவரும் காதலிப்பதாகச் சொன்னால் தான் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்கிறார். இதை நம்பி அமெரிக்கா செல்லும் ஹீரோவை அங்கேயே கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதில் சிக்கி தலையில் அடிபட்டு கடைசி 4 வருட நினைவுகளை இழக்கிறார் ஹீரோ.  ஹீரோயினையும் சேர்த்துதான்..! 

இதன் பின்பு தனது அலுவலக கொலீக்குடன் தொடர்பு ஏற்பட்டு அந்த நட்பு படுக்கைவரையிலும் பாய்ந்தோடி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ காட்டுக்குள் ஒரு நாள் இவர்கள் தங்கியிருக்கும்போது அங்கேயிருந்த பழங்குடி மக்கள் கொடுத்த ஒரு பானத்தைக் குடித்துத் தொலைகிறார் ஹீரோ. உடனேயே பழைய கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது.. ஆனாலும் ஒரு ஸ்டெடி மைண்டாய் இல்லை என்பதால் மீண்டும் ஹாஸ்பிட்டல், ட்ரீட்மெண்ட்.. 

இடையில் திடீரென்று தனது காதலியை அமெரிக்காவிலேயே மருத்துவராகப் பார்த்து விடுகிறார். அறுந்து போன காதல் நூலை காதலியிடம் நீட்டிக் கொண்டிருக்க. அவளோ அதைப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இப்போது ஹீரோ எப்படி அவளை கைப்பிடிக்கிறார் என்பதை தைரியம் இருந்தால் தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!

கலகலப்பு, மிரட்டல் போன்ற படங்களில் லாஜிக் பார்க்க தேவையே இல்லை.. அது நகைச்சுவை.. ச்சும்மா டைம்பாஸ் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆனால் இதில் அப்படியில்லையே..? முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டையான லாஜிக் திரைக்கதையை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு எடுத்துத் தந்திருக்கிறார்கள் இயக்குநர்கள்..!

அமெரிக்காவில் இப்படி நட்ட நடு ரோட்டில் துப்பாக்கியுடன் எவனாவது ஓட முடியுமா..? ஓடியவன் அடுத்த நாள் வெளியில் இருக்க முடியுமா..? ம்ஹூம்.. சான்பிரான்சிஸ்கோவில் பழங்குடியினரின் கதை.. ஹீரோவை கொலை செய்ய நடக்கும் முயற்சிகள்.. மருத்துவர் அருணின் “தமிழா.. தமிழ் தெரியுமா..? தமிழ்ல பேசுறீங்க..” என்ற கேணத்தனமான கேள்வி..! ஹீரோ அமெரிக்கா வந்து 2 வருஷமாகியும் அவரோட வீட்டுக்காரங்க அவரைப் பத்தி கவலையே படலையா..? காதலியோட அப்பன் நம்ம ஊர்ல பட்டப் பகல்ல ஒருத்தனை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துறான்.. “அதை உன் பொண்ணுகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்.. நான் நடிக்கிறதை நீ கண்டுக்காத.. கல்யாணத்தை செஞ்சு வைன்னு..” கிளைமாக்ஸ்ல ஹீரோ உருகுறதுல சாமி சத்தியமா ஒரு பீலிங்ஸும் வரலை..! “எந்தக் காட்சி இப்போது நடப்பது.. எது முன்பு நடந்தது..?  எது ரீலு.. எது அந்து போன ரீலு..?” என்று மாற்றி, மாற்றிக் காட்டியதில் சினிமா பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே கொஞ்சம் கஷ்டமாகியிருக்க.. கொட்டாம்பட்டியில் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகன் என்ன ஆவானோ..? பாவம்.

கணேஷ் வெங்கட்ராமன் அர்னால்டு மாதிரி உடம்பை சிக்கென்று வைத்திருக்கிறார். அடிக்கடி சட்டையைக் கழட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டி தனது ரசிகைகளை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். அவருக்கான காட்சிகளில் அழுத்தமோ, இம்ப்ரஸ்ஸிவ்வோ இல்லாததால் ஜஸ்ட் பாஸ் ஹீரோவாகி தப்பித்துச் செல்கிறார். 

2 ஹீரோயின்களில் கல்பனா பண்டிட்டின் பிலிமோகிராபி பல படங்களைக் காட்டுது.. அம்மணியும் நல்லாவே காட்டியிருக்கு. இன்னொரு புதுமுகம் ஷோபனா.. நேரில் பார்ப்பதைவிட ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். ஆனாலும் பிரிண்ட்டின் நிறப்பிரிகையினால் அதுவும் தெளிவில்லாமல் இருக்கிறது..! காதல் காட்சிகளில் அழகாய் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளில் ஜொலிக்கிறார்.. மற்றவைகளில் அதிகம் அவருக்கு வேலையில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கிறது ஹீரோயின் போர்ஷன்..!

இதுவே இப்படியென்றால் இசை, பாடல்கள் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை..? Agnel Roman & Faizan Hussain அப்படீன்னு ரெண்டு பேர் இசையமைப்பு செஞ்சிருக்காங்களாம்.. ஒளிப்பதிவை மட்டும் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று  மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..! அதற்கு மட்டும் எனது வாழ்த்துகள்..!

இந்த டிஜிட்டல் யுகம் வந்தாலும் வந்துச்சு.. ஆளாளுக்கு கேமிராவைத் தூக்கிட்டு நாங்களும் ரவுடிதான்னு கிளம்பிர்றாங்க.. அமெரிக்கா போயி இவ்வளவு நல்லா காசு செலவு பண்றவங்க கதை, திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கெட்டு மெரீனா பீச்லயாவது உக்காந்து பேசிட்டு கிளம்பினாத்தான் என்ன..? கணேஷ் வெங்கட்ராமனுக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்கா..? அவரை ஹீரோவா போட்டா விநியோகஸ்தர்கள் வாங்குவாங்களா..? தியேட்டராவது வாடகைக்குக் கிடைக்குமா..? போஸ்டர் அடிக்கிற காசாவது திரும்ப வருமா..? இதையெல்லாம் யோசித்தார்களோ இல்லையோ.. படம் பார்க்குற நமக்கு பக், பக்குன்னு அடிச்சுக்குது.. தயாரிப்பாளர் பாவமாச்சேன்னு..! ஆனாலும் தயாரிப்பு பார்ட்டி பெரிய ஆளுகதான்.. இதுனால சேதாரத்தைப் பத்தி அவுங்க கவலைப்படப் போறதில்லை.. தமிழ், ஹிந்தில ஒரே நேரத்துல இதை எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன்..!

கணேஷின் நோய் தொடர்பான காட்சிக் குழப்பங்களை மட்டும் நேர்ப்படுத்தியிருந்தால், இடைவேளைக்கு முன்பிருந்தே படத்தை ரசித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.. இறுதிக் காட்சியில் இது அத்தனையும் டூப்பு என்று ஒரு வரி டயலாக்கில் சொல்லி கணேஷ் தப்பிக்கப் பார்ப்பதும், துப்பாக்கியோடு வந்த மாமனார் மனசிரங்கி மகளை தாரை வார்க்க சம்மதிப்பதும் அக்மார்க் பூவை காதில் சுற்றும் வேலை.. இதற்குள் மக்கள் போதுமடா சாமின்ற லெவலுக்கு போயிட்டாங்க..!  கணேஷுக்கு இப்போது உடனடி தேவை.. நல்லதொரு கதை.. நல்லதொரு இயக்குநர்..! 

ம்ஹூம்.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!

மதுபான கடை - சினிமா விமர்சனம்

06-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கதைக்குள்ள போறதுக்கு முன்னால 2 மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தைப் பத்திச் சொல்றேன்.. மதுரையின் இலக்கியச் செல்வர் கார்த்திகைபாண்டியனின் திருமணத்திற்கு மதுரை செல்வதற்காக நானும், அண்ணன்கள் தண்டோராவும், வாசுவும் பெருங்களத்தூர் பஸ்ஸ்டாண்டில் ஒரு மதியவேளையில் மொட்டை வெயிலில் நின்று கொண்டிருந்தோம்.


எங்களுக்குச் சற்றுத் தொலைவில் 3 பெண் குழந்தைகள், 1 பையனுடன் கணவன், மனைவி நின்றிருந்தனர். அந்தாள் மனைவியிடம் “காசு கொடு காசு கொடு” என்று செல்போனை பிடுங்குவதும், பர்ஸை பிடுங்குவதுமாக கெஞ்சிக் கொண்டிருந்தான். மனைவியோ வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் வீசியெறிந்து அவனை கேவலப்படுத்திக் கொண்டிருந்தாள்.. “டேய்.. டேய் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? உனக்கெல்லாம் பொண்டாட்டி, பிள்ளைக ஒரு கேடா.. சம்பாதிக்க துப்பில்லை.. குடிக்க காசு கேக்குதா உனக்கு..?” என்று எட்டியிருந்த கடைக்காரர்களுக்கூட கேட்கும் அளவுக்கு திட்டித் தீர்த்தாள்.. ஆனாலும் நம்மாளு இம்மியும் அசையவில்லை. காசு கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.. ஒரு அளவுக்கு மேல் அதைப் பார்க்கவே கடுப்பாக இருந்தது.. இத்தனை பேர் சுற்றி நிற்குமிடத்தில் இப்படி கேவலப்படுகிறோமோ என்ற சொரணைகூட இல்லாத அந்தக் குடிகாரனை காலில் கிடப்பதை எடுத்து நாலு சாத்து சாத்தலாம் போலத்தான் தோன்றியது..!

குடிகாரர்களின் உலகம் புரிந்து கொள்ள முடியாததுதான்.. ச்சும்மா ஜாலிக்குக் குடிக்கிறோம் என்று குடிப்பவர்கள்கூட ஒரு பெக் உள்ளே போனவுடன் ஊரில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் தன்னைச் சுற்றியே நடப்பதாக நினைத்து அளந்துவிடுவார்கள்..! பிரச்சினைகளோடு இருப்பவர்கள் அதனை மறக்கவே குடிக்கிறேன் என்று சொன்னாலும், மீண்டும், மீண்டும் அதனுடையே உழல்வார்கள்..! 

ஆனால் இதில் இருக்கும் ஒரேயொரு அழகான முரண்பாடு எனில், அத்தனை தீவிரமான குடிகாரர்களும் மிகுந்த பாசக்காரர்களாக இருக்கிறார்கள்..! அவர்களுடைய குடியே அவர்களை அன்னியப்படுத்துகிறது என்பது அவர்களுக்கு புரிந்தாலும், பாசத்தையும் வெளிப்டுத்த்த் தெரியாமல், குடிப்பதையும் நிறுத்த முடியாமல்.. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்..! இந்த முரண்பாட்டை எனது தந்தை, நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலரிடமும் கண்டிருக்கிறேன்..!

விபச்சார விடுதியினை போலவே டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் பற்றியும் அது பற்றி அறியாத மக்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கிறது..!  விதம்விதமான குடிகாரர்கள் ஒன்று கூடும் அந்த இடத்தில், ஒரு நாளில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் தைரியமாகவே இதில் கதை என்று எதுவும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். இந்தத் தைரியத்துக்கு முதலில் எனது சல்யூட்..!




டாஸ்மாக் ஊழியர்.. பார் ஓனர்.. 2 சப்ளையர்கள்.. பார் ஓனரின் மகள்.. பார் கிளீனர்கள்.. பாத்திரம் கழுவும் அம்மா.. சமையல்காரர்.. குடிக்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள்.. மாமூல் போலீஸ்காரர்.. என்று இவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது கதை..!

பத்து காசு பாக்கெட்டில் இல்லாமல் பாருக்குள் நுழைந்து டீஸண்ட்டாக பிச்சையெடுத்து ஓசி சரக்கடிக்கும் அந்த கேரக்டரும், யாரைப் பார்த்தாலும் எகத்தாளம் பேசினாலும், உணர்ச்சிவசப்பட்டால் காலில் விழுகவும் தயங்காத பெட்டிஷன் மணியும்தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்..! கதை இவர்களாலேயே அவ்வப்போது நகர்த்தப்படுகிறது..!

கடையில் இருந்து வெளியேறச் சொல்லும்போது போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பெட்டிஷன் மணியை ஏதோ பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இந்தப் புண்ணியவான்தான் எழுதியிருக்கிறார். 2 முக்கிய பாடல்களையும் இவரேதான் பாடியிருக்கிறார். 

துவக்கத்தில் இவர் செய்யும் அலம்பல்களுக்கு ஒட்டு மொத்த பதிலடியாக காதல் தோல்வியால் சரக்கடிக்க வந்திருக்கும் இளைஞன், இவரிடம் பெண்களைப் பற்றிப் பேசும்பேச்சில் தியேட்டரே அதிர்கிறது..! இதற்கு மணி கொடுக்கும் ரியாக்ஷன்தான் சூப்பர்..!

ஓசி சரக்கடிக்கும் நபர், ஒவ்வொருவரின் சோகத்திலும் பங்கெடுத்துக் கொள்வதுபோல தானும் கொஞ்சம் லவட்டிக் கொள்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..! ஒவ்வொரு பாரிலும் இப்படியும் ஒருத்தன் நிச்சயம் இருப்பான் என்கிறார்கள் வலையுல பார் அனுபவஸ்தர்கள்.. 

துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒரே இடத்தைத்தான் காண்பிக்கப் போகிறோம் என்பதை முதலிலேயே முடிவு கட்டிவிட்டதால் காட்சிகளை மாற்றிப் போட்டு, கதாபாத்திரங்களையும் மாற்றி, மாற்றி வரவழைத்து, வசனத்தில் தேனையும், மிளகாயையும் குழைத்து, ஒரு சைட் டிஷ்ஷாக அளித்திருக்கிறார் இயக்குநர்..! படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் அலுப்புத் தட்டியது என்னவோ உண்மைதான்.. இருந்தாலும் பெட்டிஷன் மணியின் புண்ணியத்தில் அது சிறிது நேரத்திலேயே காணாமலும் போனது..!

இவ்வளவு களேபரத்திலும் சப்ளையரின் காதல் காட்சியில் ஒரு அதீத உடற்சேர்க்கைக்கான முன்னுரை காத்திருப்பதை முதல் காட்சியிலேயே உணர்த்துகிறார் இயக்குநர்.. காதலர்களின் லிப் டூ லிப் காட்சி இதனாலேயே கொஞ்சமும் அதிர்ச்சியைத் தரவில்லை.. அதான் முன்னாடியே எதிர்பார்த்தோமோ என்பதாலும், காதலர்கள் ஊரைவிட்டுக் கிளம்பும் இறுதிக் காட்சியும் மனதில் நிற்காமலேயே போய்விட்டது..!





இயக்குநரின் இயக்குதல் திறமை பல இடங்களில் பளீச்சிடுகிறது..! டாஸ்மாக் வாசலில் கடை திறக்க லேட்டாவது குறித்து எழும் சர்ச்சை.. வாத்தியார், பையன்கள் காட்சிகள்.. சண்டைக் காட்சியை படமெடுத்த கேமிரா கீழே தள்ளப்பட்டவுடன் அப்படியே நிலைகுத்தி நிற்க.. யாரோ தூக்கிவிட்ட பின்பு மீண்டும் சரியான இடத்துக்கு வந்து நிற்பது.. பார் ஓனர் தனது மகளின் முத்தக் காட்சியை பார்த்துவிட்ட பின்பும் அமைதி காத்து, அடியாட்கள் மூலம் காதலனை அடிக்க செட்டப் செய்யும் காட்சி.. என்று பல இடங்களில் இயக்குதலை ரசிக்க முடிகிறது..!

பாலை படத்தின் இசையமைப்பாளர் வேத்ஷங்கர்தான் இதற்கும் இசை. 4 பாடல்களில் 3 ஓகே ரகம்தான்.. பின்னணி இசையை சில இடங்களில் உலாவ்விட்டும், பல இடங்களில் அடித்து ஆடவும் அனுமதித்திருக்கிறார் இயக்குநர். உதாரணத்திற்கு சப்ளையர்களை வாடா போடா என்றழைக்கும் அந்த கேரக்டரின் வருகையின்போதும், பெட்டிஷன் மணியிடம் டிப்டாப் இளைஞன் சரக்கை ஆட்டையைப் போடும் காட்சியிலும் இசையை கேட்டுப் பாருங்கள்.. பாருக்குள் அடிதடி நடக்கும்போது அத்தனையையும் நிறுத்திவிட்டு நம்மை யோசிக்கவும் வைக்கிறார்கள்..!

சமரசம் உலாவும் இடமே பாடல் காட்சியை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். கூடவே அப்பாடல் காட்சியிலேயே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.. “கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்” பாடலை இறுதி டைட்டில் காட்சிகளில் போட்டதற்குப் பதிலாக படத்தின் நடுவிலேயே வைத்திருக்கலாம்.. மிக இனிமையாகவும் இருந்தது..

ஒரு பாரின் உள்ளரங்கை கச்சிதமாக நிர்மாணித்தது.. தப்பும் தவறுமாக தமிழில் எழுதி வைத்திருப்பது.. எதற்கும் அஞ்சாத சப்ளையர்கள் மனநிலை.. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கேன் என்பது போன்ற அவர்களது தொடர்ச்சியான பேச்சுக்கள்.. அடாவடியாக பேசும் ஆளை சோத்துக் கையாலேயே அடித்துவிரட்டுவது.. கடை மூட இன்னும் 10 நிமிஷம் இருக்கு என்று டாஸ்மாக்கிற்கு வந்து சட்டம் பேசும் குடிமகன்கள்.. மாமூவை வெட்கமில்லாமல் வந்து வாங்கிச் சொல்லும் கான்ஸ்டபிள்.. டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு காலையிலேயே பொய் சொல்லி காசு வாங்கி வந்துவிட்டு.. தலைகுனிந்த நிலையிலேயே அமர்ந்திருக்கும் இளைஞன்.. ராமர் வேடத்தில் இருப்பவனை பிச்சைக்காரனை போலவும், அனுமாரை அவனுக்காக கட்டிங் வாங்கிக் கொடுக்கும் ஆளாகவும் காட்டியிருப்பது.. மதுவில் கலப்படம் செய்வது.. குடிகாரர்களின் பேச்சுக்கள் அனைத்தையும் குடியினால் விளைந்த பேச்சாகவே எடுத்துக் கொள்வதாக படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் காட்டியிருக்கும் வசனங்கள்.. என்று இது அனைத்திலும் இயக்குநரின் கைவண்ணம் அமோகம்..!

டிஜிட்டல் கேமிரா.. முற்றிலும் புதுமுகங்கள்.. சின்ன பட்ஜெட்.. இதனாலேயே இந்தப் படத்தை ஓஹோ என்று சொல்லலாமா என்கிறார்கள்..! டிஜிட்டலில் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற கதைகளை படமாக்கலாமா என்று திட்டுபவர்களும் உண்டு..! ஆனால் இது போன்ற “குறிப்பாக எது பற்றியும் இல்லாத - நான் லீனியர் வகை திரைப்படங்கள்” தமிழுக்கு நிச்சயம் புதுசுதான்.. 

இதையே ஒரு கோவில், ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை என்று அமைத்திருந்தால் படம் சாதாரண தமிழ்ப் படங்களைப் போல பிரித்து மேய்ந்திருக்கலாம்.. ஆனால் இது டாஸ்மாக் பாராகவே அமைந்துவிட்டதால் இந்தக் குடிகாரர்களின் சேட்டைகளையும், அனுபவங்களையும், விரோதங்களையும், பேச்சுக்களையும், சோகங்களையும், தாகங்களையும் தமிழகத்துப் பெண்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பது சோகம்தான்..!

“இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தாலே எப்படியும் பெண்கள் வர மாட்டார்களே.. பின்பு எப்படி தைரியமாக வைத்தீர்கள்..?” என்று இயக்குநரிடம் பிரஸ் மீட்டிலேயே கேட்டேன்.. “இது எனக்கும் தெரியும்தான்.. ஆனால் படம் வெளியான பின்பு மெளத் டாக்கினால் நிச்சயம் வருவார்கள்..” என்றார் உறுதியாக.. இப்போது வருகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்..! ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்..!

கதையை விட்டுத் தள்ளுங்கள்.. ஆனால் இயக்கம் சூப்பர்..! தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு சிறந்த புதுமுக இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல்லாம்..! அடுத்தடுத்த படங்களில் இந்த இயக்குநர் புதுவித கதைகளில் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..!

மிரட்டல் - சினிமா விமர்சனம்


03-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீப காலங்களில் வெற்றி பெற்றிருக்கும் நகைச்சுவை கலந்த காதல் கதை பட வரிசையில் அடுத்தப் படம் இது..! லாஜிக் பார்க்கவில்லையெனில் தலைவலி தராமல் ஜஸ்ட் டைம் பாஸ் எண்ட்டெர்டெயிண்மெண்ட்டாக கொடுத்து வெளியே அனுப்புகிறார்கள்..! நம்பிச் செல்லலாம்..!


2007-ம் ஆண்டு சீனு வைட்லா இயக்கத்தில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, ஜெனிலியா டிசெளசா நடிப்பில் வெளிவந்த "Dhee" என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்குதான் இது..! 

வீட்டில் பொறுப்பில்லாமல் தண்டச்சோறு பட்டம் வாங்கிக் கொண்டு ஊர் சுற்றும் ஹீரோவை அவரது தந்தை சங்கர் தாதாவிடம் கொண்டு போய் தள்ளிவிடுகிறார். தினத்துக்கு ஒரு கொலை செய்து, அந்த ஊரிலேயே பெரிய டானாகத் திகழும் சங்கரின் அலுவலகத்தில் அன்றாடம் வசூலாகும் மாமூல் பணத்தை எண்ணும் வேலை ஹீரோவுக்கு கிடைக்கிறது.. சங்கர் தாதாவும் உள்ளூரின் இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்துக்கும் இடையில் ஜென்மப் பகை.. சங்கர் தாதாவின் அடியாள் ஒருவரை பிரதீப்பின் ஆட்கள் பொலி போட.. இதனால் கோப்ப்படும் சங்கர் பிரதீப்பின் மகனை தீர்த்துக் கட்டுகிறார். இப்போது பிரதீப் சங்கரின் தங்கையான ஹீரோயினை கொலை செய்யத் திட்டம் போடுகிறார். லண்டனில் படித்துக் கொண்டிருந்த தனது தங்கையை பாதுகாப்பிற்காக சென்னை அழைத்து வந்து பாதுகாத்து வருகிறார் சங்கர். இந்த நேரத்தில் எசகுபிசகாக ஹீரோ, ஹீரோயினை சந்தித்துவிட காதல் மலர்கிறது.. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா.. சங்கர், பிரதீப் மோதலில் ஜெயித்தது யார் என்ற கேள்விக்கெல்லாம் பதில் வேணும்னா 120 ரூபாய் செலவழித்து தியேட்டருக்குப் போய் பார்த்துக்குங்க..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே லாஜிக் கிலோ என்ன விலை என்ற காட்சிகள்தான் அதிகம்..! இது கமர்ஷியல் கம்மர் கட் என்று துவக்கத்திலேயே உணர்ந்துவிடுவதால் உடனேயே கதையில் ஒன்ற முடிகிறது..!

படத்தின் ஹீரோவான வினய் ரொம்பவும் கஷ்டப்படாமல் வெகு இயல்பாக தனக்கு தோன்றியதை நடித்துக் காண்பித்திருக்கிறார்..! நகைச்சுவை என்று சொல்லியாகிவிட்டது.. பின்பு அதில் நடிப்பை எதுக்கு தேடுவானேன்..? போலீஸாக வேஷம் போடுவதில் துவங்கி.. அம்மாவிடம் கொஞ்சுவது.. சங்கரிடம் பயமில்லாமல் பேசுவது.. ஹீரோயினிடம் வழிவது.. சமாளிப்பது.. சந்தானத்தை அவ்வப்போது வாருவது என்று அத்தனை தில்லுமுல்லுகளையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் வினய்.. 

ஹீரோயின் லண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஷர்மிளா..! இதுதான் முதல் படம் என்றார்கள். பார்த்தால் அப்படி தெரியவில்லை..! வசன உச்சரிப்பு ஏ ஒன். ஒரு சின்ன பிழைகூட என் கண்ணுக்குத் தெரியவில்லை. டப்பிங் தெரியாத அளவுக்கு ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்..! பாடல் காட்சிகளில் கண்ணியமாகவே இவரை காண்பித்திருப்பதால் இவருக்கு அடுத்துத் தொடர்ந்து படங்கள் கிட்டுமா என்று தெரியவில்லை..! 

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மூவரை.. பிரபு, சந்தானம், மன்சூரலிகான்..! தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிலும் சக்கைப் போடு போடும் அண்ணன் பிரபு இதிலும் அப்படியே.. கொலை செய்யத் தயங்காத வில்லனாக.. பாசமிக்க அண்ணனாக.. டெக்னாலஜி தெரியாத தலைவனாக.. அப்பாவியாக என்று அனைத்திலும் பிரபுவாகவே நடித்திருக்கிறார்..! 

சந்தானம்.. வழக்கம்போல படத்தினை காப்பாற்றி கொடுத்திருக்கிறார். இதில் சந்தேகமில்லை..! வினய்யுடன் இணைந்து சாரி என்ற அய்யர் வேடத்தில் இவர் அள்ளி விடும் பஞ்ச்சுகள் வயிற்றை பதம் பார்க்கின்றன..! வினய் அவ்வப்போது சந்தானத்தை லின்க் செய்துவிடுவதும், அதற்கு அவர் பதறுகின்ற பதற்றமும் யதார்த்தமான நகைச்சுவை..! நல்ல பிளாட்பார்ம் கிடைத்தால் எந்த இடத்திலும் புகுந்து விளையாடலாம் என்பதற்கு கஞ்சா கருப்பு-சந்தானத்தின் காமெடி ஒரு நல்ல உதாரணம்..!

இதுவரையிலும் கழுத்தை அறுபது டிகிரி கோணத்திலும், உடலை எண்பது டிகிரி கோணத்திலும் திருப்பிக் கொண்டு ஒரு வினோதமான உடல் மொழியைக் காட்டி நடிக்கும் மன்சூரலிகான் இந்தப் படத்தில் ஈஸிசேரில் அமர்ந்திருக்கும் நோயாளியாக பெர்பெக்ட் ஆக்ட் கொடுத்திருக்கிறார்..! ஒரு வசனமில்லை.. கோபமில்லை.. விழி உருட்டல் இல்லை.. ஆனால் பேச முடியாத தனது இயலாமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மன்சூரலிகான்..!

அவருடைய குறைபாட்டை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வினய் அவரை பாடாய்படுத்துவதும்.. ஹீரோ, ஹீரோயின் காதல் பற்றி தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் அந்தப் பரிதவிப்பும் கொஞ்சூண்டு நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறது..! இவருக்கு அடுத்து கஞ்சா கருப்பு, பாண்டியராஜன், பிரதீப் ராவத் மூவரும் தங்களது கேரக்டருக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.. 

வினய் வருகின்ற காட்சிகளிலெல்லாம் டிவிஸ்ட்டுகள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்க.. படம் வேகமாகவே நகர்கிறது..! முடிவில் எப்போதுதான் உண்மை வெளி வருமோ என்று நம்மையே ஏங்க வைத்துவிட்டார்கள்..! இது மாதிரியான நகைச்சுவை படங்களில் லாஜிக் பார்ப்பதே வேஸ்ட்டு.. அப்படி பார்த்தால் இந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி குப்பை என்றே சொல்வதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஆனால் அது தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்..!

ஒரு நல்ல எண்ட்டெர்டெயிண்மெண்ட்டுக்கு நாம் இதைவிடவும் அதிகமாக எதிர்பார்க்க முடியாது..! பிற்பாதியில் படத்தின் வேகத்திற்கு தடையாக இருப்பது பாடல்கள்தான்.. முற்பாதியில் 1 பாடல்.. பிற்பாதியில் 3 பாடல்கள் என்று கலந்து கட்டியிருப்பதால், பிற்பாதி ரொம்ப நீளமோ என்ற பீலிங்கை தந்தது..! பாடல்களைவிட பாடல் காட்சிகள் ரசனையோடுதான் எடுக்கப்பட்டுள்ளன. தனது இடுப்பை மட்டுமே ஆட்டியிருக்கும் ஷர்மிளாவுக்கு சுட்டுப் போட்டாலும் டான்ஸ் வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..! சீக்கிரமே கத்துக்கலைன்னா வீட்ல உக்காந்து டிவி பார்க்க வேண்டியதுதான் அம்மணி..!

டி.கண்ணனின் ஒளிப்பதிவையும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..! வெளிநாட்டு லொகேஷன்களை படமாக்கியவிதம் அசத்தல்.. அந்த ஊர்ல அப்படியிருக்கு.. அப்படியே ரோட்டுல இலையைக்கூட போடாம சாதம் போட்டு விருந்து சாப்பிடலாம் போலிருக்கு..! படத்தின் வேகத்திற்கு எடிட்டரின் கத்திரிக்கோல் கடுமையாக உழைத்திருக்கிறது எனலாம்..!  இசையமைப்பாளர் பிரவீண் மணியின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்ததா என்று தெரியவில்லை..! ஆனால் பாடல்கள் எதுவும் மனதில் நிற்காமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை..!

'தில்லுமுல்லு' என்று முதலில் பெயர் வைத்திருந்துவிட்டு பின்பு அதற்கான ஒப்புதல் கிடைக்காததால், பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள்..   தயாரிப்பாளருக்கு போட்ட காசு திரும்பி வரணும்.. அதே சமயம் பணத்துக்காக சிற்றின்பத்தை மலிவாகத் தூண்டிவிடும் படமாகவும் இருக்கக் கூடாது..! மசாலாவில் நல்ல மசாலாவாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து படமெடுத்திருக்கும் மாதேஷின் இந்தப் படம் சிறந்த பொழுதுபோக்கைத் தருகிறது என்பது மட்டுமே உண்மை..!

தாண்டவம் படத்தின் கதை என்ன..?

01-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடைசியாக 'தாண்டவம்' படத்தின் கதையும் கொஞ்சம் லேசுபாசாக வெளியில் தெரிந்துவிட்டது..! முழுக்க, முழுக்க கண் பார்வையற்ற டேனியல் கிரீஷ் என்னும் அமெரிக்கரிடம் இருக்கும் தனித் திறமையை வைத்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன் என்று ஓப்பன் டாக் கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் விஜய்.


இன்று மாலை ஐநாக்ஸ் தியேட்டரில் தாண்டவம் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா அமோகமாக நடந்தது.. செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஷூட்டிங்கில் சிக்கிக் கொண்டதால் அனுஷ்கா வரவில்லை. எப்போதும்போல சந்தானம் எஸ்கேப்.. கூப்பிட்டவுடன் ஓடி வரும் எமி ஜாக்சன் விக்ரமுக்கு முன்பாகவே வந்திருந்து 35 டிவி சேனல்களுக்கும் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல், முகம் சுழி்ககாமல் பேட்டியளித்தார்..

2 வரிகளில் பேட்டியளித்துவிட்டு "மைக்ல நிறைய பேசுவனே.. அதுல இருந்து எடுத்துக்குங்களேன்.. நிறைய வேலை இருக்கு. கோச்சுக்காதீங்க" என்று கெஞ்சி டிவிக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு பறந்தார் இயக்குநர் விஜய். ஆனாலும் நிகழ்ச்சி முடிந்த பின்பு டிவி ரிப்போர்ட்டர்களை தேடிப் பிடித்து "கோச்சுக்காதீங்க பிரதர்.. படம் வெளிய வரும்போது டீம் பிரஸ் மீட்ல உங்க சேனலுக்கே வந்து நல்லா பேசுறேன்.. ஸாரி.. ஸாரி.." என்று சொல்லி அசர வைத்துவிட்டுப் போனார்.. மிக்க நன்றிகள் விஜய் ஸார்..!

டதெய்வத்திருமகள்ட போலவே இந்தப் படமும் எந்த ஹாலிவுட்டின் காப்பி என்று யாரும் மண்டையை போட்டு பிய்த்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து படம் எங்கேயிருந்து எடுக்கப்பட்டது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் இயக்குநர் விஜய். 

அமெரிக்காவில் இருக்கும் டேனியல் கிரீஷ் என்பவருக்கு சுத்தமாகக் கண் பார்வை இல்லையாம்.. ஆனால் அவரால் எதிரில் இருப்பவைகள் என்னென்ன.. எதிரில் வருபவைகள் என்னென்ன என்பதை உணர முடிகிறதாம். இதனால் கண் பார்வையுள்ளவர்களை போலவே அவர் மிக, மிக இயல்பாக இருக்கிறாராம்..  அவருக்கு கண்களாக காதுகளே செயல்படுவதாகச் சொன்னார் விஜய். 

இவரைப் பற்றிய செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அமெரிக்கா பறந்தார்களாம் விஜய்யும், விக்ரமும். 2 நாட்கள் டேனியலுடனேயே தங்கியிருந்து அவர் எப்படி செயல்படுகிறார்.. என்னென்ன செய்கிறார்.. என்பதையெல்லாம் அவதானித்து வந்தார்களாம்.. அந்த குறையென்று வெளியே தெரியாத குறைபாடுடைய கேரக்டர்தான் இந்தப் படத்தில் வரும் விக்ரம் என்று விஜய் சொல்லி முடிப்பதற்குள் விக்ரம் குறுக்கிட்டு “கதையைச் சொல்லாதீங்க..” என்று தடுத்துவிட்டார்.

இவரை மட்டுமல்ல யூ டிவி தனஞ்செயன் பேச்சுவாக்கில் விக்ரமின் கேரக்டரை பத்தி சொல்லப் போக அவரையும் பார்த்து முறைத்துவிட்டார் விக்ரம்.. கதையைச் சொல்ல 2 பேருமே ஆர்வமாக இருந்தும் ஹீரோவான விக்ரமுக்கு மட்டும் கொஞ்சமும் பிடிக்கவில்லை போலும்.. எல்லாம் தெய்வத்திருமகள் தந்த படிப்பினை என்று நினைக்கிறேன்..! 

படத்தில் விக்ரமனுக்கு டபுள் ஆக்ட்டா என்று பலரும் கேள்வி கேட்க.. "இல்லை.. இல்லை.." என்று துண்டு போட்டு, தாண்டாத குறையாகச் சொன்னார்.. எப்படியாவது கதையை அவர் வாயால் சொல்ல வைத்துவிட வேண்டும் என்று துடித்த பத்திரிகையாளர்களை உரிமையுடன் கண்டித்து உட்காரச் சொல்லி சமாளித்துவிட்டார் விக்ரம்..! படத்தில் நாசர் இலங்கை தமிழ் பேசி நடித்திருப்பதையும் சொல்லி கதை "அங்க" போகுதா..? இல்ல "அங்கே"யிருந்து "இங்க" வருதா என்றெல்லாம் கேட்டார்கள்.. "தஞ்சாவூரில் ஆரம்பித்து சென்னைக்கு வந்து அப்படியே லண்டனுக்கு பறக்கிறது.. லண்டனிலேயே முடிகிறது.." என்றார் தனஞ்செயன்.!

உண்மையில் மேற்கொண்டும் விசாரித்தபோது கிடைத்தத் தகவல்கள்.. ஒரு முக்கியமான விஷயத்தை பார்த்துவிட்டார் என்ற காரணத்திற்காக அவரை சிலர் தாக்குகின்றனர். அந்தத் தாக்குதலில் அவருடைய கண் பார்வை பறி போய்விடுகிறது.. ஆனாலும் தனது கேட்டல் உணர்வை வைத்தே தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்குவதுதான் கதை போல தெரிகிறது..!

ஜி.வி.பிரகாஷ் தீம் மீயூஸிக்கை மட்டும் நல்லபடியாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.. டிரெயிலருக்காக ஸ்பெஷலாக போடப்பட்ட அந்த டியூன் டிரெயலருக்கு ஒரு வேகத்தைக் கொடுத்திருக்கிறது..! கூடவே மேக்கிங் வீடியோஸாக 5 நிமிட படக் காட்சிகளையும் வெளியிட்டார்கள்..! எமியையே சுத்தி சுத்தி வந்த கேமிரா தங்கத் தலைவி அனுஷ்காவை லேசுபாசாக சுட்டிருப்பது வருத்தத்திற்குரியது..!


குண்டக்க, மண்டக்க என்ற கேள்வி பதில் சீசனில் படத்தின் கதையை மட்டும் சொல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டு மீதிக்கெல்லாம் பதில் சொன்னார். எமி ஜாக்சனுக்கு என்ன சொல்லிக் கொடுத்தீங்க என்ற கேள்விக்கு தனியா வந்து கேளுங்க. சொல்றேன் என்றார் விக்ரம். 


எமி ஜாக்சன் இயக்குநர் ஷங்கரின் 'ஐ' படத்தில் அடுத்து நடிக்கவிருப்பதால் கொஞ்சம், கொஞ்சம் தமிழ் கத்துக் கொண்டிருக்கிறார். 'ஐ' படத்துக்காக மும்பை சென்று எமிக்கு 2 நாள் தமிழ் மொழியை விளக்கமாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் நம்ம தாத்தா பாரதிமணி. இதனாலோ என்னவோ தமிழை கொஞ்சம், கொஞ்சம் புரிந்து கொண்டு பதில் சொன்னார் எமி..! விக்ரம் தனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை என்று தலையை 90 டிகிரிக்கு ஆட்டி வைத்து மறுத்தார்.

இவ்வளவு பெரிய அல்ட்ரா டீலக்ஸ் தியேட்டரில் ஜெனரேட்டர் வசதிகூடவா இல்லை..? விக்ரம் பேசிக் கொண்டிருக்கும் மின்சாரம் 2 முறை கட் ஆனது.. மீண்டும் மைக் பிடித்த விக்ரம்.. “இன்னொரு தடவையும் கரண்ட் கட் ஆனா நல்லதுதானே..? 3 தடவை தடங்கல் வந்தா படம் கண்டிப்பா சக்ஸஸ் ஆயிரும்னு சினிமாவுலகத்துல சொல்வாங்க.. யாராச்சும் கட் பண்ணுங்கப்பா..” என்றார் குஜாலாக.. 

“மூன்றரை மணிக்குத்தான் பங்ஷனை ஆரம்பிக்கலாம்னு நினைச்சிருந்தோம். பட், நிகழ்ச்சியை ராகு காலத்தில் நடத்தாதீங்கன்னு பிரெண்ட்ஸ் சொன்னதால, ராகு காலம் முடிந்து 4.30 மணிக்கு மேல் நிகழ்ச்சியைத் துவக்கினோம். தாமதத்துக்கு மன்னிக்கணும்..” என்றார் தனஞ்செயன்..! 

எப்படியோ ராகுவும், கேதுவும் சேர்ந்து படத்தை குரு பார்வைக்கு கொண்டு போனால் சரிதான்..!