கலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா....!?

30-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக படையெடுத்து வந்தாலும், எத்தனை பேர் தங்களது வாய்ப்பேச்சுக்களையும், வீறாப்புக்களையும் காட்டி எகத்தாளமிட்டாலும் அரசியல் சதிராட்டத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர்.

ஏதோ தான் சொன்னால்தான்.. சொன்னவுடன்தான் மத்திய அரசு போர்க்குணத்துடன் செயல்படும்.. முடிவெடுக்கும்.. என்று அவர் தனக்குத்தானே வஞ்சப் புகழ்ச்சி பாடிக் கொள்வது அவரது வாழ்க்கையில் 11 கோடியே 11 லட்சத்து 1 ஆயிரத்து 111-வது முறை என்பது அவரது அரசியல் வாழ்க்கையை பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது ஒரு நாளில் 6 மணி நேர உண்ணாவிரதத்தினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று புளகாங்கிதமடைந்து வெற்றியோடு அவர் வீடு போய் சேர்ந்திருக்கிறார். அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது இலங்கை ராணுவம். அன்றைக்கு மட்டும் 272 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் எங்கே போர் நிறுத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்தான் தமிழ் கற்றறிந்த தமிழராச்சே.. சொல்லட்டும்..!

ஐயாவின் வெற்றிச் செய்தியும், “யார் சொன்னது போர் நிறுத்தம் என்று..?” என்று ராஜபக்சே கொக்கரிக்கும் செய்தியும் ஒரே பத்திரிகையில் ஒரே பக்கத்தில்தான் வெளியாகியிருந்தது.. படித்தாரோ படிக்கவில்லையோ.. அல்லது “வனவாசத்தை” படிக்கவே இல்லை என்று உலகமகா புரூடா விட்டதுபோல் இதையும் படிக்கவில்லை என்று சொல்வாரோ தெரியவில்லை.

ஆனாலும் எனக்கு இதில் புரியாத இன்னொரு விஷயம்.. எதிர்க்கட்சிகளின் பல்வேறு வகையான போராட்டங்கள்.. பொதுமக்களின் எதிர்ப்புகள்.. மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக 14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள். இவை எல்லாமே நடந்தும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு, முதல்வருக்கு மட்டுமே இந்த அளவுக்காவது அசைந்து கொடுக்கிறது என்றால் போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?

இறந்தவர்களெல்லாம் விலங்குகள் என்றா..? எதிர்க்கட்சியினர் அனைவரும் மனிதர்களே அல்ல.. வேற்று நாட்டவர் என்றா..? சென்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பைச் செய்திருக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களும்தான் இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தபடியே வந்திருக்கிறார்களே.. அவர்களெல்லாம் யாராம்..?

தி.மு.க.வும், அதன் தலைவரும் மட்டும்தான் மனிதர்கள்.. இந்தியர்கள்.. தமிழர்கள்.. மற்றவர்களையெல்லாம் கண்டு கொள்ளவே வேண்டாம் என்று மத்திய அரசு நினைப்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. இதிலிருந்தே இவர்களது ஆட்சியின் லட்சணமும், மக்கள் பற்றிய அவர்களது மிருகத்தனமான நிலைப்பாடும் தெரிகிறது, புரிகிறது..

இதேபோல் அதே இடத்தில் நான் ஒரு இந்தியன்.. நான் ஒரு தமிழன் எனக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு.. நான் இருப்பேன் என்று சொல்லி நான் மேடை போட்டு அமர்ந்தால் அரசு என்ன செய்யும்..? அனுமதிக்குமா..? ஆள்பவருக்கு ஒரு சட்டம்..! பொதுமக்களுக்கு ஒரு சட்டமா..? எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்பாகவே அனுமதி பெற்றாக வேண்டும் என்று சொல்லி போராட்டக் குணங்களையும், போராட்டக்காரர்களையும் நெருக்கி வரும் இந்த அதிகார வர்க்கம், இப்போது மட்டும் வாய் மூடிவிட்டது ஏனாம்..?

“நான் சொன்னால் மட்டும்தான் அங்கே சாவு நிக்கும்.. நான் சொன்னால் மட்டும்தான் படுகொலைகள் மட்டுப்படுத்தப்படும்.. நான் சொன்னால் மட்டும்தான் உதவித் தொகைகள் வழங்கப்படும் என்று எதற்கெடுத்தாலும் நான்.. தான்.. நான்தான்.. என்னால்தான்..” என்று மண்டைக் காய்ச்சலால் கலைஞரால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றபோது இந்த மாதிரியான ஒரு தற்பெருமைக்காரரை உலகத்தில் எந்தவொரு மூலையிலும், எந்தவொரு இனத்திலும் பார்த்திருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது..

“ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் அனுப்பிய உதவித் தொகைகளை ஏற்க முடியாது.. அதை யாரிடம் கொண்டுபோய் கொடுப்பது..?” என்று எகத்தாளமாகச் சொன்ன கலைஞர், பின்பு தி.மு.க.வின் சார்பில் அனுப்பப்பட்ட உதவிகளை மட்டும் பக்குவமாக இலங்கை அரசிடம் கொண்டு போய்ச் சேர்த்தாரே.. இது மட்டும் எப்படியாம்..?

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் பசி, பட்டினியால் இறந்து போனவர்களுக்கு கலைஞர்தானே பொறுப்பாளி.. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்து போன தமிழர்களைச் சாகடித்த பெருமையும் இவரைத்தானே போய் சேர்கிறது.. ‘தமிழர்களை பட்டினி கொண்டான்' என்ற பட்டத்தையும் இனிமேல் இவர் தன்னுடன் பெருமையாகச் சேர்த்துக் கொள்ளலாம். 1111-வது பட்டமாக இருந்துவிட்டுப் போகட்டும்..!

தற்போது நடப்பவைகளைப் பாருங்கள்.. ஏதோ தன்னுடைய ஆட்சியில் மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படுகின்றன என்றும், அம்மா ஆட்சியில் அது காணாமல் போயிருந்தது என்றும் எகத்தாளமிடும் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்..?

ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை யார் எந்த ரூபத்தில் நடத்தினாலும் ஆதரிப்பதை விட்டுவிட்டு அதை ஒடுக்கி, மத்திய அரசுக்கு ஒரு விசுவாசமான ஊழியனாக, இனத் துரோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே 24 மணி நேரத்தையும் செலவழித்து வருகிறார் இந்தப் புண்ணியவான்.

ஈழத்தில் நடப்பது என்ன என்கின்ற முழக்கத்தோடு ஈழப் போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புகைப்படங்களோடு, உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு குழுக்களால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சிடிக்களை பறிமுதல் செய்து அதை வைத்திருந்தவர்களை, தயாரித்தவர்களை கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்கிறார். இவரா ஈழத்தமிழர்களுக்கு உதவுபவர்..?

கேட்டால் “தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறவில்லை” என்கிறார். என்ன முட்டாள்தனம் இது..? ஈழப் போராட்டத்திற்கும், தேர்தலுக்கும் என்னங்கய்யா சம்பந்தம் இருக்கு..?

பாரதிராஜா நடத்திய போராட்டத்திலேயே இந்த சிடிக்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்து ஓடத் துவங்க.. மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழருவி மணியன் தனது பேச்சை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது மைக்கிற்கு முன்னால் ஓடி வந்த பாரதிராஜா, “சிடியை நிகழ்ச்சி முடிந்த பின்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்ட பின்பும், சிடிக்கள் ரகசியமாக வரிசைக்கிரமமாக பாஸ் செய்யப்பட்டது. அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தனர் ஈழத்து ஆர்வலர்கள்.

அந்த சிடிக்களில் அப்படியொன்றும் எந்தவிதமான ஆட்சேபணையான கருத்துக்களும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களும் இல்லவே இல்லை. என்னிடம் கிடைத்த சிடியை போட்டுப் பார்த்ததில் அதில் முழுக்க முழுக்க ஈழப் போரில் பாதிக்கப்பட்டு, சிதைந்து போன தமிழ் மக்களின் புகைப்படங்களும், இந்தப் போருக்கு பின்புலமாக, பக்கபலமாக, ஆயுதங்களயும், பண உதவியையும், ஆள் உதவியையும் வழங்கி வருவது இந்திய அரசுதான் என்கிற தகவலும், புகைப்படங்களும் மட்டுமே இருக்கின்றன.

இதைத்தானே வீதி, வீதியாக ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது..? மேடை போட்டுச் சொல்லலாம்.. பேசலாம்... கத்தலாம். ஆனால் அதையே சிடிக்களாகத் தரக்கூடாது என்றால் இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எதற்காக இந்தக் கைதுகள்..? சித்ரவதைகள்.. பறிமுதல்கள்.?

கலைஞர் உண்மையான உணர்வோடு இருந்திருந்தால் இந்த சிடிக்களை அவரே வெளியிட்டிருக்க வேண்டு்ம்.. அதுதான் முறையானது..

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது “அவர் கிட்டத்தட்ட செத்துவிட்டார்..” என்றும், “உயிரோடு வந்தாலும் இனிமேல் அவரால் பேச முடியாது.. எழுத முடியாது.. நடக்க முடியாது.. முடமாகிவிட்டார்.. இதோ பாருங்கள் ஆதாரங்கள்..” என்று முரசொலியில் புகைப்படங்களை வெளியிட்டு அதனை நோட்டீஸாகவும் அச்சடித்து வெளியிட்டார்களே.. இது எந்த வகையான ஜனநாயகமாம்..? இதற்கு ஐயா யாரிடம் அனுமதி வாங்கினாராம்..?

வி.பி.சிங் பிரதமர் ஆன தேர்தலின்போது தெருத்தெருவாக போபர்ஸ் ஊழல் வழக்குகள் பற்றி புத்தகங்களையும், நோட்டீஸ்களையும் வெளியிட்டார்களே.. அப்போது எந்த உரிமையில், எந்த சட்டத்தின்கீழ் இதை செய்தார் கலைஞர்.. அவருக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..?

ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பின் வந்த தேர்தலின்போது அம்மாவும், உடன்பிறவா சகோதரியும் நகை, நட்டுக்களுடன் போஸ் கொடுத்த காட்சியை தேடியெடுத்து ஊர், ஊராக நோட்டீஸ் அடித்து ஒட்டினார்களே தி.மு.க.காரர்கள்.. இதற்கு யாரிடமாவது அனுமதி வாங்கினாரா கலைஞர்..?

சென்ற தேர்தலின்போது தனது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என்று சொல்லி புத்தகங்களையும், சிடிக்களையும் தொகுதி, தொகுதியாக தி.மு.க.வினர் வெளியிட்டார்களே.. அப்போது எங்கே போனது இவரது சட்டம்..? அப்போது மட்டும் தேர்தல் கமிஷன் அனுமதி வாங்கிவிட்டுத்தான் அதனை செய்தாரா அவர்..?

மக்கள் பணத்திலேயே கூட்டுக் கொள்ளையடித்துவிட்டு அதனையே சாதனையாக்கி வெளியிடுதைவிட, ஈழத்தில் அல்லல்படும் அப்பாவி மக்களின் துயரங்களை பட்டியலிடுவதும், இதனை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு போவதும் பாவமான செயல் என்று கருதுகிறாரா இந்த உத்தமத் தலைவர்..?

ஜெயலலிதாவை தாக்கி பேசினார்கள் என்ற காரணத்திற்காக விடுதலைவிரும்பி மற்றும் வெற்றி கொண்டானை கைது செய்து சிறையில் வைத்தபோது, பொங்கியெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதமெழுதி அவர்களை போராட வைத்து.. அவர்களது மண்டைகளை உடைக்க வைத்து.. அவர்களது ரத்தங்களை சிதற வைத்து.. அவர்களை சிறையில் தள்ள வைத்து.. அவர்களது குடும்பத்தினரை பதற வைத்து.. கடைசியில் அவர்கள் இருவரும் வெளியில் வந்தவுடன் எல்லாம் என்னுடைய போராட்டத்தினால்தான் என்று மார்தட்டிக் கொண்டாரே.. அப்போது மட்டும் அரசுக்கு எதிரான எதிர்ப்பை போராட்டமாகக் காட்டினால் அது தவறாக படவில்லையா இவருக்கு..?

இவருடைய ஆதரவு ஆட்கள்தான் தமிழர்கள்.. மற்றவர்களெல்லாம் மயிருகளா..?

இப்போது என்ன செய்கிறார் இந்த தமிழர் தலைவர்..? முறையான அனுமதியோடு நாகரிகமான பேச்சுக்களோடு, ஆழமான, உண்மையான கருத்துக்கள் அடங்கிய நோட்டீஸ்களோடு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களை தொகுதி மக்களிடத்தில் கொண்டு சென்ற தனி அமைப்புகளைச் சேர்ந்த தமிழர்களை.. பொறியியல் படிப்பு படித்த அந்த தமிழ் இளைஞர்களை.. கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறாரே.. இதுவா ஜனநாயகம்..?

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தலைமையில் இனி ஒரு கூட்டம் காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கப் போவதையறிந்து அவர்களை வரவிடாமல் செய்வதற்காகவும், பயமுறுத்துவதற்காகவும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கைதுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுவான ஜனநாயகம்..?

ஜனநாயகம் என்ற பெயரில் இந்த தலைவர் நடத்துகின்ற சர்வாதிகாரம்தான் இது.. கேட்டால் நான்தான் உலகத் தமிழர்களின் ஒப்பு விருப்பற்ற ஒரே தலைவன் என்கிறார். நான் சொல்வதுதான் தமிழர்களின் வேதவாக்கு என்கிறார்.

என்ன நடிப்புய்யா நடிக்கிறாரு மனுஷர்..? கவிதை எழுதும்போது ஒரு நடிப்பு.. பேசும்போது ஒரு நடிப்பு.. உறங்கும்போது ஒரு நடிப்பு. இப்போது உண்ணாவிரத்திலும் ஒரு நடிப்பு என்று சகலத்திலும் கை வைத்து நடிகர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் இந்த மகா நடிகர்.

இந்த செட்டப் உண்ணாவிரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு புன்னகையுடன் வீடு திரும்பியிருக்கிறார் கலைஞர்.

கிட்டத்தட்ட அத்தனை தமிழர்களையும் ஒரு சேர பிடித்து முகாம்களில் அடைத்தாகிவிட்டது, என்கிற திருப்தியில் இருக்கிறார் நவீன கால ஹிட்லர் ராஜபக்சே.

எப்படியோ தனது தாலிக்கயிறு பறி போனதுக்கு முக்கால்வாசி பழிக்குப் பழி வாங்கிவிட்டு கூடவே, எல்லாரையும் திருப்திப்படுத்தி பிரச்சினையை முடிச்சாச்சு என்ற அகோர திருப்தியில் இருக்கிறார் அன்னை சோனியா..


இவர்களுடைய வெட்கங்கெட்ட அரசியலுக்கு நடுவில் உற்றார், உறவினரை இழந்து, தாய், தகப்பனை இழந்து, குடும்பத்தினரை இழந்து, தாய் மண்ணை இழந்து தினந்தோறும் நூறு தமிழராவது செத்துக் கொண்டேயிருப்பார்கள்.. இதுதான் தமிழனின் சாபம்..!

போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியலும்..!

திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் - அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்..!

25-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர்.

இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்துவிட்டார்கள்.


அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்கிற அமைப்பை இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் ஏற்படுத்தி, இது போன்ற ஈழத்தின்பால் நேசமும், பாசமும், பற்றும் கொண்ட பல்வேறு அமைப்பினர்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி இருக்கிறார்கள்.

இதுவே எனக்கு முதல் ஆச்சரியத்தை அளித்தது. காரணம் இயக்குநர் இமயம் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தெக்கத்திப்பொண்ணு' என்னும் சீரியலை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தத் தயாரிப்பு அது.. இந்த நேரத்தில் கலைஞரை சிக்கலில் மாட்டிவிடும் வேலையை அவரே முன் நின்று செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது..

கடந்த 23-ம் தேதியன்று சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தின் திறந்த வெளியில் மாநாடு போல் பந்தல் அமைத்து மிகப் பெரும் அளவுக்கு ஈழத்து ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்திவிட்டார்கள்.

எப்போதுமே கலைஞர் எல்லாருக்கும் முந்தி தனக்குத்தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நினைப்புடையவர். பாரதிராஜாவின் இந்த போராட்டம் உலகம் முழுக்க தமிழர்களிடையே முழு கவனத்தையும் ஈர்க்கும் என்பதை உணர்ந்த கலைஞர் முதல் நாளே ஏதோ திடீர் ஞானதோயம் பெற்றவராக 23-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 12 மணி நேர பந்த் என்று அறிவித்திருந்தார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்களும், இளைஞர்களும் பெருவாரியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றாலும் கூட்டம் பந்தலையும் தாண்டி அமர்ந்திருந்தது எதிர்பார்க்காத ஆச்சரியம்.

இக்கூட்டம் பற்றிய எனது செய்திக் கட்டுரையை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். மேடையில் பேசியவர்களின் பேச்சில் எனக்கு நினைவில் இருப்பவைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.

கூட்டத்திற்கு வந்திருந்த இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மனோபாலா, அமீர், சேரன், மணிவண்ணன், பார்த்திபன், பாலுமகேந்திரா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, தங்கர்பச்சான், வெற்றிமாறன், வசந்தபாலன், ஜனநாதன், வி.சேகர், வசந்த், மனோஜ்குமார், யார் கண்ணன், சித்ரா லட்சுமணன், ஆர்.சுந்தர்ராஜன், ஈ.ராமதாஸ், கதிர், சசிமோகன், ரவீந்தர், ஆதி, போன்றோர்.



மேலும் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, முன்னாள் தலைவர் விஜயன், மற்றும் பெப்ஸி நிர்வாகிகளும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், கே.பாலு, ஏ.எல்.அழகப்பன், சோழா பொன்னுரங்கம், வசனகர்த்தா பிரபாகரன், ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் போன்றோரும் வந்திருந்தனர்.

நடிகர்களில் சத்யராஜ், கஞ்சா கருப்புவும் காலை 8.30 மணிக்கே வந்திருந்து இறுதிவரையில் இருந்தனர். நாசரும் வந்திருந்து பேசிவிட்டுச் சென்றார். ஆனால் மதியம் 2 மணிக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு பாதியிலேயே பேசக்கூட இல்லாமல் ஓடிவிட்டார்.


நடிகைகளில் முதல் ஆளாக வந்தவர் புவனேஸ்வரி. பாரதிராஜாவின் 'தெக்கத்திப்பொண்ணு' சீரியலில் நடிப்பதால் இவரது வருகை ஆச்சரியமளிக்கவில்லை. தங்கர்பச்சானும், ரோகிணியும் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரை நேரில் சென்று பார்த்து வாழ்த்திவிட்டு இந்த மேடைக்கு வந்தார்கள்.

கவிஞர் தாமரை, கவிஞர் சினேகன், கவிஞர் மு.மேத்தா, புலவர் புலமைப்பித்தன், அருட்தந்தை ஜெகத்கஸ்பார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், வழக்கறிஞர் கருப்பன், த.வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி, தமிழருவிமணியன், ஐயா பழ. நெடுமாறன் என்று திரண்டிருந்தனர்.

நிகழ்ச்சிகளை இயக்குநர்கள் பாரதிகிருஷ்ணகுமாரும், சேரனும் தொகுத்து வழங்கினார்கள். காலை 8.30 மணி முதலே வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க.. முதலில் பெப்ஸியின் தலைவர் வி.சி.குகநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கவிஞர் புலமைப்பித்தன்

“எம்ஜிஆர். ஆட்சிக் காலத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். இது பற்றி கலைஞரே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். ‘அரசவைக் கவிஞரும் எதிர்க்கிறாரே..' என்று.. அந்தக் கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் இப்போதைய கலைஞரை உங்களைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. கலைஞர் அவர்களே.. கூட்டணியை உடைத்துவிட்டு காங்கிரஸோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வாருங்கள்.. அதுதான் உங்களுக்கு அழகு..” என்று கலைஞருக்கு அட்வைஸ் செய்தார்.

மேலும், இந்திய அமைதி காப்புப்படையில் மேஜர் ஜெனரலாக இருந்த கர்ஹிரத்சிங் எழுதிய புத்தகத்தைப் படித்துக் காட்டினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது என்பதை ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனேவுக்கு எழுதிய கடிதத்தை வைத்து விளக்கினார். எம்.ஜி.ஆர். இந்திய ராணுவம் ஈழத்துப் பெண்கள் மீது நடத்திய அட்டூழியங்களை ராஜீவின் கவனத்திற்கு கொண்டு போனதையும், அவர் எரிச்சலடைந்து எம்.ஜி.ஆர். மீதே எரிந்து விழுந்ததையும் சுட்டிக் காட்டினார் புலவர்.

“ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்..? புறத்தே வெளுத்து, அகத்தே கருத்துள்ள சோனியாவே வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.. நாங்கள் பிரபாகரனை பிடிக்கின்றவரையில், அவனைக் கொல்கின்றவரையில் போரை தொடர்ந்து நடத்துவோம் என்று சொல்லிவிடுங்கள்.. அடுத்து நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” என்றார் கோபத்துடன்.

“பிரபாகரன்தான் தமிழ் இனத்திற்கு விடிவெள்ளி. அவன்தான் ஈழத்தமிழர்களின் தளபதி. அவனைத் தவிர தமிழர்களுக்கு வேறு நாதியில்லை..” என்று வெளிப்படையாகவே தனது ‘தம்பி' பாசத்தைக் காட்டிவிட்டுப் போனார் புலவர் புலமைப்பித்தன்.

இயக்குநர் மணிவண்ணன்

காலில் அடிபட்டு சில காலமாகவே நொண்டி, நொண்டி நடந்து வரும் இயக்குநர் மணிவண்ணன், இந்த உபாதையுடனேயே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஈழத்து விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

“சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்து அரசியல்வாதிகளை இலங்கைக்காரன் ஒருவன் ‘கோமாளிகள்' என்றான். அப்போது நான்கூட கோபப்பட்டேன். ஆனால் இப்ப நடக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அவன் உண்மையாத்தான் சொல்லிருக்கான்னு நினைக்கிறேன்...” என்றபோது பலத்த கைதட்டல் எழுந்தது.

“புலியை நான் நம்புகிறேன்.. புலியை எனக்குப் பிடிக்கும்.. புலியை நான் நேசிக்கிறேன்.. புலிகளை வாழ வைக்க வேண்டும்.. நான் புலிகளை ஆதரிப்பேன்.. ஏன்னா நம்மளோட தேசிய விலங்கே புலிதாங்க. நம்ம புலிக்கு நம்மளே சப்போர்ட் பண்ணலைன்னா வேற எவன்ங்க சப்போர்ட் பண்ணுவான்..? ஆகவே தோழர்களே.. நீங்களும் புலிக்கு சப்போர்ட் பண்ணுங்க.. புலி நம்மளோட பிரெண்டு.. பெஸ்ட் பிரெண்டு.. புலியே நமக்கு விடுதலை பெற்றுத் தரும். புலிகளை நம்புங்கள்.. புலிகளை ஆதரியுங்கள். நமக்கு விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்...” என்று தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு எழுந்த கை தட்டலால் அரங்கத்தை அதிர வைத்துவிட்டுப் போனார் இயக்குநர் மணிவண்ணன்.

சிவாஜிலிங்கம் எம்.பி.

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவாஜிலிங்கம் தனது பேச்சில் இலங்கை வரலாற்றை எடுத்துச் சொல்லியதோடு, இனப்பிரச்சினை எதனால் ஏற்பட்டது.. இதுவரையில் நடந்தது என்ன என்பது பற்றியெல்லாம் கூட்டத்தினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் எம்.கே.நாராயணனை சந்தித்தபோது அவர் “எங்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பாலமாக இருங்கள்” என்று தன்னிடம் தெரிவித்தையும் சொன்னார் சிவாஜிலிங்கம்.

“4000 விடுதலைப்புலிகள்தான் உள்ளனர் என்று சொல்லிவிட்டு 8000 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாக சிங்கள ராணுவம் கணக்குச் சொன்னது. நான் இலங்கை நாடாளுமன்றத்திலே கேட்டேன்.. ‘4000 என்று சொல்லிவிட்டு இப்போது 8000 புலிகளை கொன்றுவிட்டதாகச் சொல்கிறீர்களே.. கணக்கு உதைக்கிறதே.. அங்கே சண்டையிட்டது புலிகள்தானா..? அல்லது ஆவிகளா..? பிசாசுகளா?' என்று கேட்டேன். அரசுத் தரப்பில் பதிலே இல்லை.

இங்கே ஒரு பிரச்சினை பேசப்பட்டு வருகிறது.. எமது போராட்டம் தீவிரவாதமா அல்லது இன விடுதலைப் போராட்டமா என்று.. இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் போன்றதுதான் எங்களது விடுதலைப் போராட்டம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்டம் போன்றதுதான் எங்களுடையது.. அது போராட்டம் என்றால் எங்களுடையதும் போராட்டம்தான். பகத்சிங்கின் போராட்டமும் எங்களுடையது ஒன்றுதான். இது போன்றதுதான் பிரபாகரன் தலைமையில் நாங்கள் நடத்தும் போராட்டம். இதில் வித்தியாசம் ஏதுமில்லை.

ஒட்டு மொத்த ஈழத்து தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தான்.. வேறு யாருமில்லை.. அவர்களால் மட்டுமே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர முடியும். அவர்களைத்தான் உலகத்தில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களும் நம்புகிறார்கள். தமிழகத்து மக்கள் எமது ஈழ விடுதலைக்காக எத்தனையோ தியாகங்களையும், உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்கு உதவாவிட்டால் ஈழத்தில் எமது வம்சம் இருந்ததா என்பதை வருங்காலத்தில் பாடப்புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும்.. எதையாவது செய்யுங்கள்...” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சத்யராஜ்

“தமிழ் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி இன்றைய ஈழத்து வாரிசுகளுக்கு தெரியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் 20 வயதான இளைஞர்களும், பெண்களும்தான் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இந்தப் போர் வெற்றியடையும்வரையில் ஓயாது என்றே நினைக்கிறேன்..” என்றவர் அன்றைய குமுதம் பத்திரிகையில் அரசு பதில்களில் இருந்த ஈழம் தொடர்பான கேள்வி-பதிலை படித்துக் காட்டினார். ஆனாலும் சத்யராஜின் அன்றைய பேச்சில் ஆவேசம் சற்று மிஸ்ஸிங்தான்.

கவிஞர் தாமரை

இந்த போராட்ட மேடையின் ‘கலரையே' மாற்றியவர் இவர்தான். இவருடைய பேச்சிற்குப் பின்புதான் பேச்சாளர்கள் அனைவரும் நேரடியாக கலைஞர், சோனியா, ஜெயலலிதா மூவரையும் வெளுத்துக் கட்டினார்கள். அந்த வகையில் தாமரையக்காவுக்கு ஒரு ‘ஜே' போட்டுக்குறேன்..

“நீங்க எப்படியோ தெரியலை.. ஆனா என்னால என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஈழத்தில் நடைபெறும் கோரச் சம்பவங்களின் புகைப்படங்களை பார்த்தபோது எப்படி என்னை அடக்கிக் கொள்வது.. என்ன பேசுவது என்பதே தெரியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நம்மளால எப்படி அதைத் தாங்கிக்க முடியும்.. சொல்லுங்க..

இப்ப இந்த திரையுலகக் கலைஞர்கள் எல்லாரும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர். நான் அப்படியில்லை.. எதையும் வெளிப்படையாப் பேசுவேன். தமிழ் ஒரு இனம். மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்..? இதைக் கேட்டால் ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறேன்' என்கின்றனர். சின்னதாகக்கூட என் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப கோபம், கோபமாக வருகிறது..

இந்த நேரத்தில்தான் அப்படி, இப்படி என்று தனது சீட்டில் உட்கார்ந்து தவித்துக் கொண்டிருந்த பாரதிராஜா, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாரதிகிருஷ்ணகுமாரை அழைத்து ஏதோ சொல்லியனுப்ப கிருஷ்ணகுமார் துண்டு சீட்டை தாமரையிடம் கொடுக்க.. புரிந்து கொண்ட கூட்டத்தின் முன் வரிசையினர் எழுந்து சத்தம் போட.. ஆளாளுக்கு எழுந்து நின்று தாமரையக்காவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.. தொடர்ந்தும் பேசினார் தாமரை.

‘ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி பேச முடியாது..' என்கிறார் கலைஞர். இலங்கை பிரச்சினையில் இங்குள்ள மக்கள் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று சொல்லலாம்.. முதல்வராக இருக்கும் கலைஞர் ‘என்னால் முடியாது' என்று சொல்லலாமா..? பின்பு எதற்கு அவருக்கு முதலமைச்சர் பதவி..? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும். ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால், கலைஞர் அமாவாசைக்கு அடுத்த நாள்..” என்று ஆவேசத்துடன் சொல்ல.. எழுந்த கை தட்டல் ஜெமினி பாலத்தையே சற்று அசைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.




பொறுத்துப் பார்த்த பாரதிராஜா எழுந்து வந்து தாமரையிடம் ஏதோ சொல்ல.. தாமரை “நான் இன்னும் பேசணுமே ஸார்..” என்றார் அதே வேகத்தோடு.. பாரதிராஜா பதிலுக்கு ஏதோ சொல்லப் போக.. கூட்டம் மொத்தமும் எழுந்து சவுண்டு விட்டது.. “பேச விடுங்க.. பேச விடுங்க..” என்று சத்தம் நாலாபுறத்திலிருந்து மேடையை நோக்கி வர.. ஆனாலும் மேடை நாகரிகம் காரணமாக தாமரை தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

கவிஞர் சினேகன்

கலைஞரை வெளுத்து வாங்கினார் இந்தக் கவிஞர். “போயும் போயும் அந்த இத்தாலிக்காரிகிட்ட போய் எங்களைக் கெஞ்ச விட்டுட்டீங்களே கலைஞர் ஐயா.. இது உங்களுக்கே நியாயமா..?” என்றபோது கைதட்டல் தூள் பறந்தது..

இயக்குநர் கவிதாபாரதி

மக்கள் தொலைக்காட்சியில் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி ஒளிபரப்பாகி வரும் தொடரின் இயக்குநரான கவிதாபாரதி துவக்கத்தில் மேடையிலேயே கதறி அழுதார். இளங்கோவனை பற்றிப் பேசும்போது “அவர் பெரியாரின் நிஜ பேரனல்ல.. போலி பேரன்.. அந்த இன்ஷியலைப் போட்டுக் கொள்ளும் தகுதியே அவருக்கில்லை.. பெரியாரின் உண்மையான பேரன் முத்துக்குமார்தான்” என்றார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

“என் வாழ்க்கையில இதுவரைக்கும் இரண்டு முறைகள்தான் மிக, மிக வருத்தப்பட்டிருக்கிறேன்.. ஒன்று நான் பள்ளியில் படித்து வரும்போது நிகழ்ந்த மகாத்மாகாந்தியின் மரணம்.. இன்னொன்று சமீபத்தில் முத்துக்குமாரின் மரணத்தின்போது..” என்றவர், “நடந்து வரும் நிகழ்வுகள் விரும்பத்தக்கது அல்ல.. ஈழத்தை, ஈழத்து மக்களை அன்னை பராசக்திதான் காப்பாற்ற வேண்டும்..” என்றார்.

த.வெள்ளையன்

“முத்துக்குமாரோடு சேர்ந்து இதுவரையில் 13 பேர் தீக்குளித்து மாண்டிருக்கிறார்கள். இன்னமும் மத்திய அரசும், மாநில அரசும் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன்.. இந்திய ராணுவத்தில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களை மட்டும் தனியே பிரித்து எங்களிடம் கொடுத்துவிடுங்கள்.. தனி ஈழத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. இனி எதற்கும் உங்களிடம் வந்து கேட்க மாட்டோம்.. கையேந்த மாட்டோம்.

கலைஞர் அவர்களே.. உடனடியாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள். அப்போதுதான் நீங்களே உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர் பட்டம் உங்களுக்குப் பொருந்தும்.. இல்லாவிடில் ‘தமிழினத் துரோகி' என்ற பெயர்தான் கிடைக்கும்..” என்றபோது அதை ஆமோதிப்பதைப் போல் கரகோஷம் கிளம்பியது.

கடைசியாக பேச்சை முடிக்கும் போது மீண்டும் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்தவர், “கலைஞர் அவர்களே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள்.. இல்லாமல் அந்தக் கூட்டணியில்தான் இருப்பேன். கொஞ்சுவேன் என்று இருந்தால், அந்த பாழாப் போன காங்கிரஸோடு சேர்ந்து நீங்களும்..” என்று சொல்லி வார்த்தையை முடிக்காமல் தலைக்கு மேல் இரு கரங்களையும் உயர்த்தி கும்பிட்டுவிட்டுப் போக ‘அர்த்தம்' புரிந்து ஆர்ப்பரித்தது அரங்கம்.

பேசி முடித்துவிட்டு தனது சீட்டுக்கு வந்தமர்ந்த வெள்ளையனிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்கள் பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும்.

அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

“இப்படியே பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. அடுத்து என்ன செய்வது? டெல்லியின் கவனத்தை எப்படி நாம் ஈர்ப்பது..? அவர்களை எப்படி அசைய வைப்பது.. நம்முடைய இது மாதிரியான போராட்டங்கள் எல்லாம் டெல்லி மத்திய சர்க்காரை எதுவும் செய்யாது.. வேறு மாதிரிதான் செய்ய வேண்டும்.. நாம் போராடி முடிப்பதற்குள் அங்கே கடைசித் தமிழனையும் முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. தமிழ்த் திரையுலகத்தினருக்கு மட்டுமே இந்த ஈழப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கும் திறமையும், உரிமையும், கடமையும் இருக்கிறது. இதனை அவர்கள் உறுதியுடன், உண்மையாகச் செய்ய வேண்டும்..” என்றார்.

இவர் பேசும்போது ‘இவர் கனிமொழியின் நண்பர்' என்பதைச் சொல்லி அரங்கில் நான்கைந்து பேர் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

பெ.மணியரசன்
தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர்

“தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் இழுத்துப் பூட்ட வேண்டும்.. அலுவலகங்கள் இயங்கவிடாமல் செய்ய வேண்டும்.. மத்திய அரசின் இயந்திரங்கள் எதுவும் தமிழ் மாநிலத்திற்குள் செயல்படக்கூடாது. அறவே நிறுத்தவேண்டும். அப்போதுதான் மத்திய அரசு ஓடோடி வரும். இதுதான் நமது அடுத்தக் கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்..” என்றார் இவர்.

இந்த நேரத்தில் சென்னையில் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் போராட்ட அமைப்பினர் மேடைக்கு வந்தார்கள். அவர்கள் மேடைக்கு வரும்வரையிலும் மொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கை தட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் அமைப்பினர் மேடைக்கு வந்து அமர்ந்த பின்புதான் கூட்டமும் அமர்ந்தது.

பெண்கள் அமைப்பின் சார்பில் சந்திரா

“நாங்கள் கடந்த 11 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசும், மாநில அரசும் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அங்கே நம் இனப் பெண்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.. இப்போது நீங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறீர்கள். இது நல்லதொரு திருப்பம். இதனை நீங்கள் கடைசிவரையிலும் கைவிடாமல் தொடர வேண்டும்..”

‘கருப்புக் குரல்' நாடகம்

இதன் பின்பு சீமானிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்கள் ஒன்று சேர்ந்து ‘கருப்பு குரல்' என்றொரு நாடகத்தை நடித்துக் காட்டினார்கள். இந்நாடகத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஏற்கெனவே மகனையோ, மகளையோ இழந்திருந்த அந்த வீட்டுப் பெரியவருக்கு இதனாலேயே மனநிலை பிறழ்ந்து எப்போதும் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். “ஐ.நா. படைகள் வந்துவிட்டதா..? ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டதா..?” என்று கேட்டபடியே இருக்கிறார்.

அப்போது இருக்கின்ற மகனும் குண்டடிபட்டு வருகிறான். கதறி அழுகிறார்கள். அதுதானே முடியும்.. மருமகனைத் தேடி வரும் சிங்கள ராணுவம் அவனை புலி என்று நினைத்து சித்ரவதை செய்கிறது. ஒரு கட்டத்தில் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “நான் புலிதான்.. நான் புலிதான்..” என்று கத்துகிறான் அவன். ராணுவம் அவனைச் சுட்டு வீழ்த்திவிட்டுப் போகிறது. குடும்பத்தினர் இப்போது கதறி அழுகிறார்கள்.

உடனேயே ஓடி வருகிறார் ‘மஞ்சள் துண்டு' அணிந்த பெரியவர் ஒருவர்.. “நான் மஞ்சள் கட்சிக்காரன். நான் ஐ.நா.வுக்கே தந்தி அடிச்சிருக்கேன்.. சீக்கிரம் நல்லது நடக்கும்..” என்கிறார். “இந்த இடத்தில் முதல் மரியாதை செய்ய தனக்கே முதல் உரிமை இருக்கிறது..” என்கிறார்.

அடுத்து வருகிறார் ஒரு நீண்ட துண்டு அணிந்தவர். “நான் கருப்பு கட்சிக்காரன்.. நான்தான் ஆதிக்காலம் தொட்டே இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசி வருகிறேன். எனவே எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.

அடுத்து வரும் ரோஸ் கட்சிக்காரர் “நான்தான் உண்மையான தமிழன். தனக்குத்தான் முதல் உரிமை..” என்றும் சொல்கிறார்.

கடைசியாக வரும் ஒருவர் “நான்தான் உண்மையான தம்பி.. சீறுகின்ற தம்பி.. எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.

கடைசியில் நால்வரும் கலந்து பேசி, ஒன்று சேர்ந்து அந்தப் பிணத்திற்கு மாலை அணிவித்து சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ரேடியோவில் செய்தி ஒளிபரப்பாகிறது தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று.. சடலத்தை மெது, மெதுவாக கீழே வைத்தவர்கள் ஓடோடிப் போய் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசுகிறார்கள்.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசுகிறார்கள். இங்கே பின்னணியில் பிணத்தின் அருகே குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேரங்கள் முறிந்து போக.. ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து இருவர், இருவராக கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்.

அப்போது எங்கிருந்தோ வரும் சிலர் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து “இவர்கள் யாரும் நமக்கு வேண்டாம்.. நாங்கள் இருக்கிறோம்.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி நாங்கள்தான் செயலாற்றப் போகிறோம்..” என்று சொல்லி பிணத்திற்கு மாலை அணிவித்து தூக்கிச் செல்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடகம் முடிகிறது.

இந்த நாடகத்தில் அந்த 4 அரசியல்வாதிகள் யார், யார் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால் ஏக ரெஸ்பான்ஸ்.. பலத்த கரவொலி. அற்புதமான நடிப்பு. மிகக் கச்சிதமாக தற்போதைய அரசியல் நிலவரத்திற்கு ஏற்றாற்போல் வசனமெழுதி நடித்துக் காண்பித்திருக்கிறார்கள் துணை இயக்குநர்கள். பாராட்டுக்கள்..

வைகைப் புயல் வடிவேலுவின் எஸ்கேப்

இந்த நாடகம் துவங்குவதற்கு முன்புதான் நடிகர் வடிவேலு மேடைக்கு வந்தார். பாரதிராஜா எழுந்தோடி போய் அவரை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தார். நாடகத்தை மேடையின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, நாடகம் முடிந்ததும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார்.

வடிவேலுவின் இந்த ஜூட் பாரதிராஜாவுக்குத் தெரிய வர.. மனிதர் டென்ஷனாகிவிட்டார். ஆனாலும் பின்பு பேச வந்த அமீர் விடவில்லை. தனது பேச்சின்போது வடிவேலுவைப் போட்டுத் தாக்கிவிட்டார்.

இயக்குநர் யார் கண்ணன்

இவர் தனது பேச்சினை தனது கணீர்க் குரலில் கவிதையாகவே வடித்துவிட்டார்.

அந்தக் கவிதை இது..

"சமுத்திரத்தின் நடுவே தமிழன் வடித்த கண்ணீர்ச் சொட்டு இலங்கையாகிக் கிடக்கிறதா..?

ஒவ்வொரு மறை அச்சடிக்கப்படும்போதும் உலக வரைபடத்தில் இலங்கைக்கு மட்டும் இன்னும் இரத்த நிறம்தானா..?

இது மனிதனை மனிதனே விரட்டும் மஞ்சுவிரட்டு.. இனவெறித் தீயில் விறகுகள் மட்டுமா..? பானைகளே பற்றி எரியும் பயங்கரம்.

நீரில் நீந்தும்போது நனையாத இந்தத் தீவு போரின் தீயில் மூழ்கிப் போனதா..?

இலங்கையில் மட்டும் வருங்கால மாணவர்கள் வரலாறு படிக்கும்போது இன்னும் எத்தனை ஆண்டுகள் இறந்த காலமும், இறக்கும் காலமும் நிகழ்காலமாய்த் தெரியும்..?

சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கவில்லை.. வீதி சமைத்துக் கொண்டிருக்கிறது தமிழனை..

திசைதோறும் உலக அமைதிக்காகப் போதித்தவனின் திருச்சபையில் ஒப்பாரி உலா.

சாஸ்திரிய சங்கீதத்தின் மேனியில் ராப்பகலாய் பறைக்கொட்டு..

ராவணன் ராகம் வளர்த்த ராஜ்ஜியத்தில் அபஸ்வரங்களின் ஆட்சி..

பெயர்த்தெடுத்து வந்த அடுத்தவர் மனைவியிடம்கூட அவன் தோற்றுவித்த தொடா நாகரீகம் மண்ணில் உயிர்த்து வளர்ந்தவர்களிடம் மரித்துப் போனது.

மெளனமற்றுப் பபேன மயான பூமியே.. உனது வானொலி தமிழைச் சவைத்தது - நீ தமிழர்களைச் சுவைத்துவிட்டாய்..

தேசத்தின் திசை எங்கும் உட்கார்ந்திருக்கிற கரம் இலங்கை அரசின் இதயத்தைவிட்டு எப்போது வெளிநடப்பு செய்தது..?

ஒரு இலக்கியச் சீதையின் கற்பு காக்கப்பட்டபோது அது அசோக வனம் - இன்று சோக வனம்..

இந்த மனித இனத்திற்கு குண்டு துளைக்காத உடை.. விஷம் கலக்காத காற்று.. உயிர் பறிக்காத உறைவிடம்.. தர உத்தரவாதம் யார்..?

புராதன ஜடாயுக்களின் புனிதம் போய் - மனிதம் பிணந்தின்னிக் கழுகுகளின் பெரும் பிடியில்..

இது அஹிம்சையை போதித்த புத்த பூமியை இல்லை ரத்தத்தால் எழுதப்பட்ட யுத்த பூமியா..?

மானுடத் தீப்பெட்டியில் குச்சிகளைக் குச்சிகளே கொளுத்தும் கொடூரம்..

போர்ச்சத்தத்தில் பூக்கள் சுமந்த மரங்களின் கருச்சிதைவு..

மலடாகிப் போனது மண்ணின் செடி, கொடிகள்..

படுகொலையைப் பயிர் செய்து பாத்தி கட்டி உயிர் அறுவடைகள்..

சடலங்களையே கரையாக்கி சமுத்திர அலையோட்டம் சாவின் துர்நாற்றம்..

தன் ஆவியைக் கூவி விற்று ஆயுளையே பசிக்குத் தின்னும் தமிழனுக்கு - கடல் நீரின் நுரைப்பூக்கள் மட்டுமே கரை ஒதுங்கி கண்ணீர் அஞ்சலி..

அங்கு மட்டும் கடல் நீரின் நிறம் சிவப்பு.. உப்பும் கசக்கிறது..

இமயம் இன்று குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!
இயக்குநர் இமயம் இன்று தமிழ்க் குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!
எழுத்தும் பாட்டும் இயக்கமும் சேர ஈழம் வென்றதடா..!
உழைப்பவர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார் உணரட்டும் மத்திய அரசு..!
ஒவ்வொரு தமிழனின் விரல் நுனிமையும் ஓட்டு
ஆட்சியைப் புரட்டும் முரசு..!

உலகத் தரத்துக்கு படமெடுக்கும் திரை உலகே!
கலகத் தரக்கரை வேர் அறுக்க
பொறுப்பு இருக்கு உனக்கும்..
பொறுப்பு இருக்கு உனக்கும்..!

வன்முறை வேண்டாம் என்பதற்காக
எத்தனைப் படங்கள் எடுத்தோம் நாம்!
வறுமையும் பசியும் போவதற்காக
வழிகள் சொல்லிக் கொடுத்தோம் நாம்..!

என் தமிழ் இயக்குநர் இந்திவரைக்கும்
வென்றது தமிழன் வெற்றியடா!
நல்லதும் கெட்டதும் சொல்கிற நாமே
நாளைய உலகின் தொட்டிலடா!

தர்மம் வெல்லும் என்னும் முடிவை
படங்களில் வடித்தவர் நாம்..?
அதர்மம் மத்தியில் ஆண்டு கொண்டிருந்தால்
எப்படிப் பொறுப்பது நாம்..?

தமிழனை வைத்து தமிழால் உயர்ந்தோம்!
தமிழனை ஏன் மறந்தோம்-ஈழத்
தமிழனை ஏன் மறந்தோம்?
உண்டும், உறங்கியும் வாழ்வது என்றால்
இருந்தும் நாம் இறந்தோம்..!
இருந்தும் நாம் இறந்தோம்..!

ஓட்டு ஆயுதம் கைகளில் இருக்கு
உணரட்டும் மத்திய ஆட்சி..!
ஒவ்வொரு தமிழனும் நினைத்தால்போதும்
தலைமை மாறும் காட்சி..!

அத்தனை பேரும் முடிவெடுப்போம்!
அநீதியைத் தடுப்போம்!
ஆட்சியில் இருக்கும்
கைகளை முறித்து
விடுதலை நாம் கொடுப்போம்-ஈழ
விடுதலை நாம் கொடுப்போம்..”

தமிழருவி மணியன்

“நான் வணங்கும் பெரியவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் பழ.நெடுமாறன். இன்னொருவர் நல்லகண்ணு..

வாழிய தமிழ்.. வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு.. என்ற பாரதியின் கூற்றை காங்கிரஸார் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் மொழியின் மீது பற்று வேண்டும். அதற்குத்தான் ‘வாழிய தமிழ்' என்றான் பாரதி. பின்பு அந்த மொழி பேசும் தமிழரின் வாழ்வு சிறக்க வேண்டும் என்கிறான். பின்பு மூன்றாவதாகத்தான் ‘வாழிய பாரத மணித்திருநாடு' என்கிறான். இது கூடத் தெரியாமல் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர். இவர்களுடைய நாடக நடிப்பைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினேன்.

இந்த அரசியல் கட்சிகளுக்கு இப்போது என்ன நேர்ந்தது..? வைகோ 4 தொகுதிகளில் நின்று ஜெயித்துவிட்டால் தனி ஈழம் கிடைத்துவிடுமா..? ராமதாஸ் 7 தொகுதிகளில் ஜெயித்துவிட்டால் ராஜபக்சே மண்டியிட்டுவிடுவானா..? சிறுத்தைகளைப் பாருங்கள்.. ‘அடங்க மறு.. அத்து மீறு..' என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு இப்போது ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்'னு விவேக் பேசுற வசனம் மாதிரி போயி நின்றுக்காங்களே.. இவங்களையெல்லாம் என்ன செய்யறது..?

மத்திய அரசுகளை அசைக்க வேண்டும். அவர்களை நம்மைத் தேடி ஓடிவர வைக்க வேண்டும்.. அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.. இப்படிச் செய்தால் தமிழன் என்றோர் இனமுண்டு.. அவனுக்கோர் தனியோர் குணமுண்டு.. என்பதை உலகத்துக்குக் காட்டினால் மத்திய அரசும், கட்சிகளும் ஓடோடி வருவார்களே.. அப்போது நாம் பேசுவோம்.. நம்மிடம் இருக்கும் வாக்கு வித்தையைக் காட்டுவோம்.. ‘எமக்கு ஈழத்தை வாங்கித் தந்தால் ஓட்டுப் போடுவோம்' என்போம். இதுதான் ஒற்றுமை உணர்ச்சி.. இதுதான் இப்போதைக்கு நமக்கு வேண்டாம். அந்த உணர்வு இருந்தால்தான் நம்மால் ஜெயிக்க முடியும்..” என்று ஒரு நீண்ட பேருரையை ஆற்றினார்.

அருமையான தமிழ். சும்மா அருவி மாதிரி கொட்டியது இவரிடமிருந்து..


திருச்சி வேலுச்சாமி

“நான் பரம்பரை காங்கிரஸ்காரன்.. என் அப்பா காங்கிரஸ்காரர். என் அம்மாவும் காங்கிரஸ்தான்.. என் மனைவியும் காங்கிரஸ்காரி. மாமனார் காங்கிரஸ்காரர்.. என் தம்பி காங்கிரஸ்காரன். வார்டு உறுப்பினர். அவன் மனைவியும் காங்கிரஸ்காரிதான்.. பழனி பக்கத்துல ஊராட்சி மன்றத் தலைவி.. என் தாய்மாமன் காங்கிரஸ்காரன்.. அவன் குடும்பமும் காங்கிரஸ்காரர்கள்தான்.. எனது சொந்த பந்தங்கள் அனைத்துமே காங்கிரஸ்தான். ஆனாலும் சொல்கிறேன்.. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும்..” என்றபோது எழுந்த கைதட்டலில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

“ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை அடைந்து 18 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி வழக்குத் தொடுத்திருக்கிறேன். அதன் விசாரணை நேற்று நடந்தது. படுகொலை தொடர்பாக விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் குழுவான ஜெயின் கமிஷன் இரண்டு பேரைக் குறிப்பிட்டு அவர்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த இரண்டு பேர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திராசுவாமி.. ‘சிபிஐ அவர்களை விசாரித்ததா?' என்றார் நீதிபதி.. ‘இல்லை..' என்றார் சி.பி.ஐ. வக்கீல். ‘ஏன்..? இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..?' என்று கேட்டார் நீதிபதி. பதில் இல்லை. ‘இரண்டு வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் விசாரிக்கவில்லை..' என்பதனை எழுத்துப் பூர்வமாக நாளை மறுநாள் தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..” என்று தனது வழக்கு பற்றிய செய்திகளையும் சொன்னார்.

அதோடு கூடவே ராஜீவ்காந்தி படுகொலை சம்பந்தமாக சுப்பிரமணியம்சுவாமி முந்திரிக்கொட்டையாக சொன்ன, ‘புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள்' என்கிற தகவலையும் சொல்லி சுப்பிரமணியம் சுவாமி மீதான தனது சந்தேகத்தை இங்கேயும் பதிவு செய்தார்.

இயக்குநர் அமீர்

சீமான் இல்லாத குறையைப் போக்கினார் அமீர். மேடைப் பேச்சு போன்று இல்லை என்றாலும் சுவையாகவும், சூடாகவும் இருந்தது..

“இங்கே நடிகர்கள் பலரும் வரவில்லை. ஆனால் வரவேண்டியவர்கள்தான் வந்திருக்கிறார்கள். தமிழ் என்ற உணர்வு, தமிழன் என்ற உணர்வு இல்லாதவர்கள்தான் வரவில்லை.

‘மானாட மயிலாட' நிகழ்ச்சி போன்று போட்டிகள் நடத்தினால் நடுவராகச் செல்வதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருப்பார்கள். நட்சத்திரங்கள் என்றாலே மின்னி மறைபவர்கள் என்றுதான் பொருள். மின்னல் வேகத்தில் வருவார்கள்.. அதே வேகத்தில் திரும்ப போயிருவாங்க.. அவங்க படத்தோட வேலைன்னா உடனே வருவாங்க.. இது அவங்களோட வேலையில்லையே.. அதுனால அவங்க யாரும் வரலை..

இங்ககூட ஒரு நடிகர் வந்தாரு.. இப்ப நடுவுல திடீர்ன்னு ஓடிட்டாரு.. நீங்களும் இனிமே அந்தப் புயலு.. இந்தப் புயலுன்னு எவனையாவது சொன்னா நம்பாதீங்க..


சோனியா நமக்கு அன்னையா..? நமக்கு அன்னை என்றால் அது இந்திராகாந்திதான்.. சோனியா நமக்கு அன்னை அல்ல.. சித்தி.. ரெண்டாம்தாரம். கொல்லைப்புறமாக வந்தவர்.. சித்தி கொடுமை.. சித்தி கொடுமைன்னு சீரியல்லேயும், சினிமாவுலேயும் நாம பார்த்திருப்போம். இப்ப நேராவே.. நிஜமாவே நாம அனுபவிக்கிறது இந்த சித்தி கொடுமையைத்தான்..

பிரணாப்முகர்ஜிக்கு தமிழினத்தை பத்தி, தமிழர்களோட வலியைப் பத்தி என்ன தெரியும்..? ராணி முகர்ஜிக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவனுக்குத் தெரியும்.. நம்மளைப் பத்தி என்ன தெரியும் அவனுக்கு..?

இதைப் பேசாத.. அதைப் பேசாத.. அப்படிப் பேசாத.. இப்படிப் பேசாத.. பேசினா இறையாண்மைக்கு எதிரா பேசுறன்னு சொல்லி உள்ள தூக்கிப் போடுறீங்க..? இதோ இப்ப தூக்கிப் போட்டீங்க.. என்னாச்சு.. கோர்ட் உங்களைக் கிழிக்கலை..

இனிமே தேர்தல்ல ஜெயிச்சு டெல்லிக்குப் போனீங்கன்னா வெளியுறவுத் துறை கேளுங்க.. ராணுவத் துறை கேளுங்க.. உள் துறையைக் கேளுங்க.. ஏன் லம்பமா காசு அள்ளுற துறையா கேக்குறீங்க..?

இப்ப இவுங்க என்னடான்னா ‘அவங்களைக் கேக்கணும்'.. ‘இவங்களைக் கேக்கணும்'ன்றாங்க. உங்ககிட்ட கேக்காம வேற யார்கிட்ட போய் கேக்குறது? ஜப்பான்காரன்கிட்டயா கேக்க முடியும்..? ஓட்டுப் போட்டது உங்களுக்கு..? தந்தி அடிக்கிறது ஐ.நா.வுக்கா..?

பக்கத்துல ஈழத்துல இருக்கிறவன் எனது சகோதரன்.. சொன்னா, ‘அப்படிச் சொல்லாத'ங்குறான்.. எங்கயோ 30000 மைல் தூரத்துல இருந்து வந்தவளை ‘அன்னை'ன்னு கூப்பிடும்போது, 30 மைல் தொலைவுல இருக்கிறவனை ‘சகோதரன்'னு கூப்பிடாம என்னன்னு கூப்பிடறது..?

இயக்குநர் சேரன்

"மானமுள்ள தமிழர்கள் எல்லாரும் இங்க வந்திருக்காங்க.. இல்லாமல் போய் வராதவங்களைப் பத்தி நமக்குக் கவலையில்லை..

இப்படியே எத்தனை நாளைக்கு பேசி, பேசி கலைஞ்சு போறது.. எதாவது செய்யணும்..? நாங்க தயாரா இருக்கோம்.. டசினிமாவைத் தூக்கிப் போட்டுட்டு வாடாடன்னு உடனே இப்பவே வரோம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க.. ஒரு நிமிஷம்கூட கண்ணை மூட முடியலீங்க.. நெட்ல பாருங்க போட்டோவையெல்லாம்.. பெண்களும், குழந்தைகளும் எவ்வளவு கொடூரமா கொல்லப்பட்டிருக்காங்கன்னு.. ரெண்டு கையும் இல்லாத ஒரு பொண்ணை கைப்புள்ளைக்கு பால் கொடுக்க கஷ்டப்படுறதை பார்க்கும்போது நெஞ்சு வெடிக்குதய்யா..

தமிழனை வாழ விடு.. தமிழன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடு.. இல்லைன்னா எங்களைத் தனியா விடு.. இதுதான் எங்களுக்கு வேணும்.. சும்மா சும்மா ‘இந்தியா' ‘இந்தியா'ன்னு கும்பிடு போட்டு உக்கார, எங்களால இனியும் முடியாது. இன்னிக்கு இங்கேயே ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. பாரதிராஜா ஐயா.. எடுப்பார்.. எடுக்கணும்.. அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்..

இயக்குநர் இமயம் பாரதிராஜா

பலத்த கரவொலிக்கிடையிலும், எதிர்பார்ப்புக்கிடையிலும் மைக்கைப் பிடித்தார் பாரதிராஜா.

“எனக்கு பதவி முக்கியமல்ல.. இந்த பாரதிராஜா எந்தப் பதவிக்காகவும் இந்த இயக்கத்தைத் துவங்கவில்லை.. எனக்கு நாற்காலி கனவு கிடையாது. தமிழன் என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது.

தனது குஞ்சுகளைக் காக்கின்ற கோழியைப் போல இனமானத்தைக் காப்பதற்காக மிகப் பெரிய நாட்டின் ராணுவத்தை எதிர்த்து, ஒரு இயக்கத்தை ஆரம்பித்து எதிர்த்து ஜெயிக்கிறான் எனது ஈழத் தமிழன்.

உனக்கு இது கேவலம்.. உன்னால் முடியாத காரணத்தால்தான் இந்திய அரசு பேடித்தனமாக, கள்ளத்தனமாக, கொல்லைப்புறமாக ஆயுதங்களையும், தளவாடங்களையும் இலங்கைக்குக் கொடுத்து உன்னை ஜெயிக்க வைக்கிறது.. இல்லாவிட்டால் உன்னால் ஜெயிக்க முடியுமா..? இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.. நமது இந்திய அரசுதான் உதவி செய்து வருகிறது..

சோனியாவை விமர்சித்தால் ‘தேச விரோத குற்றம்' என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கிப் போட்டாலும் கவலையில்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

முத்துக்குமார் மரணத்தின்போது அந்த மேடையில் அரசியல் கட்சியினர் பலரும் இருந்தனர். அனைவரிடமும் நான் கேட்டுக் கொண்டேன்.. “உங்களுடைய அரசியல் கொள்கைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, கட்சி அடையாளங்களை தொலைத்துவிட்டு ‘ஈழம்' என்கிற ஒரே கூரையின்கீழ் ஒன்று சேருங்கள்.. நாங்கள் அத்தனை பேரும் பின்னாலேயே ஓடி வருகிறோம் என்றேன்.. ஒருவரும் வாய் திறக்கவில்லையே.. ஆனால் இப்போது நெடுமாறன் ஐயாதான் தனி மரமாக நிற்கிறார். அந்த நாடகத்தில் நான்கு பேர் பிணத்தைப் போட்டுவிட்டு ஓடியதைப் போல அவர்களும் ஓடிவிட்டார்கள்.

நானும் ஆரம்பத்தில் அகநானுறு, புறநானுறு போன்றவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். தமிழ்நாட்டுப் பொண்ணு புலியை முறத்தால் அடித்து விரட்டியதையெல்லாம் படித்திருக்கிறேன். அது போன்ற வீரத்தை நான் பிரபாகரனிடத்தில்தான் பார்த்தேன்.

இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாகக் கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது.. செயலில்தான் காட்ட தெரியும்.

தமிழ் ஈழத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் ஒரு முதிய பெண் என்னைச் சந்தித்து கதறி அழுதார். ‘ஐயா இந்த ஈழத்துல இதுவரைக்கும் பிச்சைக்காரங்களே இருந்ததில்லைய்யா.. இப்ப எங்கட மக்கள் அத்தனை பேரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கிட்டாங்களேய்யா..' என்று கதறினார். பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் பிச்சைக்காரர்களே கிடையாது..

ஈழத்து மக்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெற்ற தாயாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். பெற்றவனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். உற்றத் தோழனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. ஒரு முடிவெடுத்திருக்கிறோம்.. இரண்டு தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்..

முதல் தீர்மானம்..

இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அழித்தொழிக்கும் இந்த இனப் போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.

இருந்தபோதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது. அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது.

தமிழர்களின் வாழ்வை, உயிரைக் காப்பாற்றத் தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளைக் கேட்கும் தார்மீக தகுதியில்லை என்று நாங்கள் ஒரு மனதாகச் சொல்கிறோம்.

போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒருமித்தக் குரலில் முன் மொழிகிறோம்.

இந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை, எந்தெந்த முறையிலெல்லாம் காட்ட வேண்டுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.

எங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம்..

இரண்டாவது தீர்மானம்

தமிழ் ஈழத்தின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொச்சைப்படுத்தியும், உதவி செய்ய முன்வராத தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய மூவரின் தொகுதிகளிலும் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்..”

என்று எதிர்பார்க்காத முடிவுகளைச் சொல்லி அசத்திய இயக்குநர் இமயம் கடைசியாகச் செய்ததுதான் ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

“எனக்கு இந்தத் தமிழகம் எத்தனையோ விருதுகளை ஏற்கெனவே வழங்கிவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதனைத் தூக்கியெறிய முடிவு செய்துவிட்டேன்..” என்றவர் அந்த பட்டத்தையே மேடையில் காட்ட கூட்டம் மொத்தமும் எழுந்து மேடையை நோக்கி ஓடியது..


“இப்போது இதை உடைக்கவா..? தூக்கியெறியவா..?” என்று பாரதிராஜா கேட்க ‘உடை..' ‘உடை..' என்று ஒட்டு மொத்தக் குரலும் எழும்பியது. பாரதிராஜாவின் கையை சேரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, உடைக்காமல் பார்த்துக் கொண்டபடியே மைக்கில் அனைவரையும் அமைதிப்படுத்தினார்.

“இதனை உடைக்காமல் மத்திய அரசுக்கு அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் அந்த அவமானத்தை அவர்கள் உணர்வார்கள்..” என்றார் சேரன்.

அமீரும் மற்ற இயக்குநர்களும் இதையே சொல்ல.. “சரி.. திருப்பி அனுப்பிவிடுங்கள்..” என்று ஒரு வார்த்தையில் இந்திய அரசின் முகத்தில் கரியைப் பூசியதோடு பேச்சினை முடித்துக் கொண்டார்.


இறுதியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் நன்றி தெரிவிக்க கூட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தக் கூட்டத்தின் அனைத்துச் செலவுகளும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினுடையதுதான்.. கூட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும்வரையிலும் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கூட்டத்தினரை சுற்றிச் சுற்றி வந்தவர் அனைத்து ஏற்பாடுகளையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் செய்து வந்தார்.

மதிய நேரத்தில் வந்திருந்த அத்தனை பேருக்கும் லெமன் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து உபசரித்தார். லிட்டர், லிட்டராக குடிதண்ணீர் வந்து இறங்கியது.. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதும் கல்யாண வீட்டில் சொல்வதைப் போல், “சாப்பாடு நிறைய இருக்குய்யா.. சாப்பிடாதவங்க சாப்பிட வாங்கய்யா..” என்று வரிசை வரிசையாக வந்து சொன்ன சுந்தர்ராஜன் ஐயாவுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.. இரவு கூட்டம் முடிந்த பின்பும் மீதமிருந்த சாப்பாட்டு பொட்டலங்களை பலரும் வாங்கிச் சென்றார்கள். வாங்காதவர்களின் கைகளில் வலுக்கட்டாயமாக பார்சல்கள் திணிக்கப்பட்டன.

இந்த கூட்டமும், தீர்மானங்களும் தமிழக, மத்திய அரசுகளை கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

அரசியல் கட்சிகள் என்றால் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்..' என்ற நோக்கில் பொதுமக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்படி அரசியல் கலப்படமற்றவர்கள் ஈழத்து பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வதும், மத்திய, மாநில அரசுகளுடன் நேருக்கு நேர் மோதலுக்காக நிற்பதும், ஜனநாயகத்தில் பெரும் போர் தொடங்கியதற்கான முதல் காட்சி.


சோனியா, மன்மோகன்சிங் வருகையின்போதும், சில நாட்களில் காங்கிரஸ் தலைவர்களின் தொகுதிகளில் நடக்கவிருக்கும் பிரச்சாரத்தின்போதும் இந்த தீர்மானத்தின் தாக்கம் தெரியத் துவங்கும்..

அதுவரையில் நாமும் காத்திருப்போம்..

பொறுமையாகப் படித்து முடித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..

வணக்கம்.

ஈழப் போராட்டம் - ராஜபக்சே அரசுக்கும், இந்திய, தமிழக அரசுகளுக்கும் வித்தியாசமில்லை..!

19-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை போர்ப்படையினரைக் கண்டித்து உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.


லண்டனில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக சுப்ரமணியன் என்பவர் உள்ளிட்ட சில தமிழ் இளைஞர்கள் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.


இங்கிலாந்து தேசத்திலேயே இதுவரையில்லாத அளவுக்கான பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.


ஜெர்மனியில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் முன்பாக கடந்த செவ்வாய்கிழமை முதல் 14 தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இன்றோடு சேர்த்து 5 நாட்களாகிறது.. மணி தெரசா சூபைப்பிள்ளை(68), சதீசுவன்(49), கோபாலகிருட்டினன்(57), புவனேசுவரன்(27), குகதாசுதேவன்(27), சீத்தாராம்(29), சுதர்சன் சிவாநந்தன்(28), செயந்தி சூரியகுமார்(44), இரஞ்சனி செல்வமாணிக்கம்(48), செயந்தி கீதப்பொன்கலன்(43), சரோசினி தேவி தங்கரத்தினம்(57), கங்கா சுப்பிரமணியம்(37), அலெக்சு ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிருட்டின அம்பலவாணன் என்பவர் கடந்த 13-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அங்கும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இவருடைய போராட்டத்தின் பலனாக சுவிஸ் அரசு ஈழப் பிரச்சினை தொடர்பாக கலந்து பேச இவரை அழைத்திருக்கிறதாம்.


மேலும் ஜெனீவா நகரில் தினந்தோறும் மிகப் பெரும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.


ஜூரிச் நகரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் கார் பேரணியும் நடத்தி வருகிறார்கள் தமிழ இளைஞர்கள்.


தென்னாப்பிரிக்காவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கைக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.வேழவேந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று 10-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

நெதர்லாந்தில் உள்ள டென்காக் என்னும் ஊரில் 7-வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள் பிரேமினி ஜெஸ்லின், கஸ்தூரி ரவீந்திரன் என்கிற ஈழத்துப் பெண்கள். தொடர் ஊர்வலங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.


இத்தாலி பலெர்லாமில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கனடாவில் டொராண்டா நகரில் ஈழத் தமிழர்கள் பெரும் திரளாக ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் போர் நிறுத்தம்கோரி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஜூரம் பிடித்து அரசியல் கட்சியினர் அலைவதால் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிகளும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பலரின் காதில் விழாமல் இருக்கிறது. அல்லது காதில் வாங்கவே மாட்டேன் என்கிறார்கள்.

தமிழ்ப் பெண்கள் கூட்டமைப்பு என்கின்ற இயக்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் நடத்தப் போகிறோம் என்று காவல்துறையினரிடம் அனுமதி கேட்டபோது கிடைக்கவேயில்லை. எப்படி கொடுப்பார்கள்..? வேறு வழியில்லாத பெண்கள் கூட்டமைப்பினர் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அதே கொளத்தூர் பிரதான வீதியில் அதே இடத்தில் உட்கார்ந்து உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். ஓடி வந்த காவல்துறையினர் இன்னிக்கு ஒரு நாள்தான்.. சாயந்தரம் போயிரணும்.. இல்லைன்னா அரெஸ்ட்தான்.. என்று அன்பாகவே மிரட்டினார்கள்.

மறுநாள் கொளத்தூர் வியாபாரிகள் சங்கத்தில் உண்ணாவிரதத்தைத் துவக்கியிருக்கிறார்கள் பெண்கள் கூட்டமைப்பினர். இப்போதும் காவல்துறையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. அனைத்துப் பெண்களுமே சிறைக்குள் சென்றுவிட்டால் தமிழகத்தில் தாங்கள் செய்ய நினைத்த கவன ஈர்ப்பு முடியாமல் போகும் என்று நினைத்த அந்தப் பெண்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அடைக்கலம் கொடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தின் வாசலில் அமர்ந்த பெண்களில் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள்.

இவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. மிகக் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டி உடனேயே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இந்திய அரசு இலங்கையை கட்டாயப்படுத்தி போர் நிறுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்பதுதான். யார் காதில் விழுகிறது..?


சோனியா அம்மாவுக்கு ஊர்ப்பட்ட கவலை.. 90 சீட்டு வருமா.. 120 சீட்டு வருமா..? பிரிஞ்சு போனவங்க திரும்பி வந்து நம்மளை காப்பாத்துவாங்களா..? என்ற கவலையில் இருக்கிறார். இந்தியாவின் பிரதமர் என்று சொல்லப்படும் திருவாளர் மன்மோகன்சிங்கோ தனது எஜமானி சோனியாம்மா எதற்கும் மனம் வருத்தப்பட்டுவிடக் கூடாது என்கிற ஒரு அம்சத் திட்டத்தோடு இந்த ஐந்தாண்டு காலமும் உழைத்தவர், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் இதே போல் உழைக்கக் காத்திருப்பதால் வாய்மூடி மெளனியாக இருக்கிறார்.


தமிழகத்திலோ எத்தனையோ வருடங்களாக இலங்கை பிரச்சினையை ஊறுகாய் போல தேர்தலுக்குத் தேர்தல் பயன்படுத்திக் கொண்ட அனுபவம் இருப்பதினால் கலைஞர் இப்போதும் அதன்படியே பயன்படுத்தி வருகிறார்.

தி.மு.க.வைத் தவிர வேறு யாரும் இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதனால்தான் நேற்றைய தேர்தல் பிரச்சார அறிமுகப் பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் மூலமாகத் தன்னைவிட்டால் தமிழர்களுக்கு நாதி இல்லை என்று மறுபடியும் சொல்லச் சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார். இன்னும் எத்தனை தடவைதான் இப்படி தன்னையே புகழ்ந்து கொள்வாரோ தெரியவில்லை..? இனிமேல் தமிழக வரலாற்றில் 'தற்பெருமை மன்னன்' என்று இவரை மட்டுமே அழைக்க வேண்டும்.

இவருக்குத்தான் உதவி செய்ய மனமில்லையென்றாலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு உதவியாவது செய்யலாமே..

பிரச்சினையைத் திசை திருப்புவதற்கு ஆளும் கட்சியினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தமிழக வாக்காளர் பெருமக்களைக் கேட்டால் தெளிவாகச் சொல்வார்கள். இப்போது சென்னையில் இருந்து புலிகளுக்கு ஆயுதம் கடத்த முற்பட்டதாக முகுந்தன், குகன், பாபு ஆகிய இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்களைக் கைது செய்த இடம் திருவான்மியூர் பேருந்து நிலையம் என்றவுடனேயே லோக்கல் பத்திரிகையாளர்களுக்கு இந்த கைது நடிக்க வைக்கப்பட்ட நாடகம் என்பது புரிந்துவிட்டது.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த இலங்கை விசுவமடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்கிற முத்தண்ணா(39)வை புலி என்கிற சந்தேகத்தில் காவல்துறை கைது செய்திருக்கிறதாம். இதனை வைத்து ஒரு நாள் சீன் ஓட்டியாகிவிட்டது.

இனிமேல் பாருங்கள்.. தொடர்ந்து யாராவது ஒரு ஈழத்து இளைஞர் புலி என்ற முத்திரையின்கீழ் தினமும் கைது செய்யப்பட்டு காராகிரஹத்தில் அடைக்கப்படுவார். புலி பயம் தமிழகத்து மக்களிடம் வலிந்து திணிக்கப்பட்டு தமிழ் ஈழத்து மக்களின் கதறல் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் ஒளியும், ஒலியில் சமாதியாக்கப்படும்.


ஈழத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக நண்பன் முத்துக்குமார் முதல் நபராக தனது உயிரைக் கொடுக்க, இதோ நேற்று கரூரைச் சேர்ந்த சிவானந்தம் என்கிற பெயிண்டராக வேலை செய்யும் ஒரு தமிழர், சென்னை வடபழனியில் தீக்குளித்து மாண்டுள்ளார்.

இவரோடு சேர்த்து இதுரையிலும் ஈழத்துப் பிரச்சினைக்காக தமிழகத்தில் தீக்குளித்தவர்களின் எண்ணி்க்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அரசு எங்கே கண்டு கொண்டது..? எத்தனை பேர் செத்தால் என்ன..? உயிரோடு இருப்பவர்களையே இறந்தவர்கள் லிஸ்ட்டில் வைத்திருக்கும், இந்த அரசுகள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன..?


கடந்த 3 மாத காலத்திலேயே 4800 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வே அறிவித்துள்ளது. கடந்த 1 வருடத்தில் மட்டும் 77 ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த இறப்பு புள்ளி விவரங்களினால்தான் இத்தனை தமிழர்கள் ஈழத்தில் வாழ்ந்து வருவது இந்திய அரசியல்வாதிகளுக்கு தெரிய வந்திருக்கிறது.

இன்றைய புள்ளிவிவரக் கணக்குப்படி புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டு வீசியதில் 169 தமிழர்கள் கொலை.. நேற்று 178 தமிழர்கள் கொலை.. இன்னும் ஒரே மாதத்தில் அங்கே தமிழர்கள் என்றொரு இனம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது என்கிற வார்த்தையை உண்மையாக்கப் போகிறது ராஜபக்சே அரசு.

வெறுமனே புலி எதிர்ப்பு என்கிற போர்வையில் ராஜபக்சே அரசு செய்து வரும் இந்த திட்டமிட்ட இன அழிப்பை தடுக்கும் சக்தி கொண்ட நாடுகளும் பல்வேறு காரணங்களினால் தப்பித்து வருகின்றன.

தமிழ் ஈழத்துப் பகுதி மக்களை அரசியல்தான் வஞ்சித்தது என்றால் இயற்கையும் வஞ்சித்துவிட்டது.. ஆப்பிரிக்க தேசங்களைப் போல எந்தவொரு இயற்கை கனிமவளமும் ஈழத்தில் இல்லை.. வல்லரசு நாடுகளுக்குத் தேவையான எந்தவொரு தேவைகளும் ஈழத்தில் இல்லாது போனது நமது துரதிருஷ்டமே.

இஸ்ரேலியர்களைப் போன்று வல்லரசு நாடுகளுக்கு உதவிடும் அளவுக்கு எமது தமிழர்களுக்கு அறிவும், வாழ்க்கைத் தரமும் இல்லை. சொந்த அரசும், தார்மீக உரிமையுள்ள அரசும் புறக்கணித்து வரும் வேளையில், உலக நாடுகளும் நம்மை புறக்கணித்து வருவது நமது துரதிருஷ்டம்தான்..

வருகின்ற புதன்கிழமை ஐ.நா.வில் வன்னியில் சிக்கியிருக்கும் மக்கள் பற்றி பேசப் போகிறார்களாம். பேசட்டும்.. ஏதாவது ஒரு தீர்வாவாவது கண்டு அந்த அப்பாவி மக்கள் உயிரோடு வந்திட மாட்டார்களா என்ற நப்பாசை அனைத்து தமிழர்களுக்கும் இருப்பதைப் போல் எனக்கும் உண்டு.

நேற்றைய தினம் வரையிலும் இந்திய அரசு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வருத்தப்படுவதாக ஏதோ எழவு வீட்டுக்கு வந்து போவதைப் போல் பேசுகிறது.. அதிலும் பிரணாப்முகர்ஜி அளித்திருக்கும் பேட்டியில் “இடையில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை..” என்று சொல்லியிருப்பது எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பக்கத்து நாட்டில் மனிதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். நம்முடைய இனத்தவர்கள்.. சக மனிதர்கள் என்றெல்லாம் இரக்கம் காட்டாமல் “நடுவுல போக மாட்டோம்.. பேச மாட்டோம்.. செத்தா அஞ்சலி மட்டும் தெரிவிப்போம்..” என்று சொல்வது இந்திய அரசுக்கு காங்கிரஸ் அரசால் கிடைக்கின்ற மிகப் பெரிய அவமானம்.

வருகின்ற 20-ம் தேதி சோனியா சென்னை வருவதையொட்டி இதுவரையிலும் மேல் நடவடிக்கை ஏதும் இல்லையே என்கிற ஆதங்கத்தில் சென்னை உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்களில் சுமார் 100 பேர் எழும்பூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் நடத்தியவர்களை அவசரம், அவசரமாக கைது செய்து அப்புறப்படுத்துவதில்தான் இந்த அரசு மும்முரமாக இருந்ததே தவிர, இது பற்றிய ஒரு செய்தியைக்கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. காவல்துறையினர் முரட்டுத்தனமாக பெண்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்தபோது இந்த அரசின் ஈழ அணுகுமுறையின் கோரம் தெளிவாகவே புரிகிறது. கண் பார்வையில்லாத இளைஞர்களைக்கூட கொத்தாகத் தூக்கி வண்டிக்குள் வீசியது காவல்துறை. இங்கே யாருக்குக் கண்ணில்லை என்பது கேள்விக்குரிய விஷயம்.?

ராயப்பேட்டையில் இருக்கும் காங்கிரஸின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடச் சென்ற பெண்கள் அமைப்பினரை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் போலீஸார் அராஜகமாக கூட்டத்தைக் கலைத்து இழுத்துச் சென்றார்கள்.

தொப்புள்கொடி உறவுள்ள தமிழகத்தில் இந்த கொடூர நிலைமை. சொந்தங்களின் சாவுக்கு வாய் விட்டு அழுக முடியாத நிலைமை.

இப்போது ஈழப் பிரச்சினையில் அமைதி திரும்ப போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சோனியாவை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகம் சார்பில் தொடர் முழுக்கப் போராட்டம் நடத்தப் போவதாக இப்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

தாயகத்தில் மயங்கிக் கிடக்கும் பெண்கள் கூட்டத்தினரை தனது சக இயக்குநர்களோடு நேரில் சென்று பார்த்து அவர்களது உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். முதலில் 21-ம் தேதியே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவி்த்திருந்தார்.

ஆனாலும் திங்கள்கிழமை ஒரு வேளை புதுச்சேரி சிறையிலிருந்து இயக்குநர் சீமான் விடுதலையாகவில்லை என்றால் போராட்டத்திற்கு வலு கிடைக்காது என்பதால் இரண்டு நாட்கள் தள்ளி துவக்குவதாகச் சொல்லியிருக்கிறார். சீமானி்ன் வருகைக்காக இவர்களின் அடுத்தக் கட்டப் போராட்டம் காத்திருக்கிறது. இந்த அளவுக்காவாவது முன் வருகிறார்களே அதுவே மிகப் பெரிய விஷயம்..


அக்கம் பக்கம் நாடுகளில் போராட்டம் நடத்த இடம் கொடுத்து, அந்தப் போராட்டத்தின் பயனாக சம்பந்தப்பட்ட நாடுகளே செவிசாய்த்து நாங்கள் இலங்கை அரசிடம் பேசுகிறோம்.. பேசுவோம்.. நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கனவுடன், பாசத்துடன், நேசத்துடன், பரிவுடன் பேசி வரும் சூழலில் தாய்த்தமிழகத்தில் அடக்குமுறை, அராஜகம், பாஸிசம் என மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் இவர்களுக்கும் ராஜபக்சே அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ராஜபக்சே சொல்லிவிட்டுச் செய்கிறார். இவர்கள் சொல்லாமல் செய்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-17-04-2009

17.04.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆட்டோ டிரைவர்களின் புதுவித விளையாட்டு

உலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எங்கே காத்தாடுகிறதோ இல்லையோ ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களின் வரிசை நீண்டு கொண்டே செல்வதைப் பார்க்க முடிகிறது.

மக்கள் காசை இறுக்கிப் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்க சும்மா உட்கார்ந்திருந்த டிரைவர்களுக்குள் தற்போது ஒரு புதுவித விளையாட்டு மோகம் பிடித்திருக்கிறது.

இரண்டு நாலணா நாணயங்கள்தான் விளையாட்டு உபகரணம். நான்கு பேர் செட் சேர்கிறார்கள். அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் நாணயங்களைச் சுண்டுவது அடுத்தவருக்குப் போகும். தலை விழுந்தால் அப்படியே தொடர்ந்து அவரை நாணயங்களைச் சுண்டலாம். பூ விழுகின்றவரையிலும் அந்த ஒருவருக்கே சுண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இப்படியே மாறி, மாறிப் போகிறது விளையாட்டு.

யார் ஆரம்பித்து வைத்தது..? எங்கேயிருந்து துவங்கியது என்று தெரியவில்லை.. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே நம்பி ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது..

எப்படின்னாலும் விட மாட்டோம்ல..!

சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ள வரும் இப்போதைய நடிகைகள் எப்படியாவது குறைந்தபட்ச ஆடை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்து, புகைப்படங்களில் சிக்கி மேலும் பரபரப்படைந்து வாய்ப்பு தேடுவது ஒரு பேஷனாகிவிட்டது.

இது போன்ற சமயங்களில் புகைப்படம் எடுக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கொண்டாட்டம்தான். புகைப்படங்களில் அப்படி, இப்படி என்று நடிகைகள் சிக்கிவிட்டால் அது நடிகைகளின் தவறாகத்தான் தோன்றுமே தவிர, புகைப்படம் எடுத்தவர்கள் மீது குற்றமாகாது என்பதால்தான் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

வட இந்தியாவிலிருந்து கலைச்சேவை செய்ய வந்த நடிகைகள்தான் முதலில் இந்த ஆடைக் குறைப்பு அலங்கோலத்தை ஆரம்பித்துவைக்க இப்போது அதனையே அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.

குறைந்த ஆடையுடன் பாதுகாப்பாக இப்படி போஸ் கொடுத்தாலும்..




காத்திருந்து சமயம் பார்த்து இப்படி புகைப்படம் எடுப்பதில் கில்லாடிகள் சினிமாவின் புகைப்பட நிபுணர்கள்.




இது போனஸுக்கு..



உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை

சமீபத்தில் தமிழக அரசு ஒரு மிகப் பெரும் உதவியை உடல் ஊனமுற்றோருக்கு செய்திருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளைத் தவிர மற்ற விரைவுப் பேருந்துகள், சாதாரணப் பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.

தேசிய உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் சமூக நலத் துறையின் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான சலுகை உத்தரவு உடனேயே கிடைக்கிறது.

ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி. நான் இனிமேல்தான் அடையாள அட்டையே பெற வேண்டும். அடையாள அட்டை கிடைத்துவிட்டால் பஸ் பாஸ். கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.

'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..?

திரையுலகின் கதாநாயகர்கள் அனைவருக்கும் அவரவர் திரைப்படங்கள் வெளியாவதில் இருக்கின்ற சந்தோஷம் வேறு எதற்கும் இருக்காது. அவர்களுடைய லைப் கிராப்பில் அது ஏற்றிவிடுமா அல்லது இறக்கிவிடுமா என்பது தெரியாமல் அனைவரும் பதட்டத்துடன் இருப்பார்கள்.



நம்ம கேப்டன் மட்டும்தான் எந்தக் கவலையும் இல்லாமல் ஹாயாக கூலிங்கிளாஸுடன் வேர்க்க, வியர்க்க பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடைய நடிப்பில் 'இன்னொரு வானத்தைப் போல' என்ற பிரச்சாரத்துடன் 'மரியாதை' திரைப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்பு சென்ற மாதமே வந்திருக்க வேண்டிய எங்கள் ஆசான் என்னும் படம் திரையிட வேண்டிய நாளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வெளிவராமல் போனது. காரணத்தைத் துழாவினால் கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்கிறது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் கேப்டனின் ஆரம்ப கால நண்பர். திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தபோதே தங்கராஜை கேப்டனுக்கு நன்கு பழக்கமாம். இந்த தங்கராஜ் இதற்கு முன்பு 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' என்று இரண்டு திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்' தயாரித்ததில் உடலெங்கும் பலத்த அடியாம். நடக்க முடியாமல் கிடப்பதை அறிந்த கேப்டன், பெரிய மனதுடன் அவரே முன் வந்து இவரைத் தயாரிப்பாளராக்கி 'எங்கள் ஆசானை' உருவாக்கித் தந்தார்.

படம் முடிந்து வெளியாகும்வரையிலும் கேப்டன் தன் சம்பளம் பற்றி எதையும் பேசவில்லையாம். கடைசியில் நண்பர் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். தயாரிப்பாளரோ தே.மு.தி.க. தொண்டர்களின் ஆவலையே முதலீடாக்கி விநியோகஸ்தர்களிடம் கூடுமானவரையில் சேதாரமாகாதவகையில் விற்றிருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள்வரையிலும் நடிப்புக்கான கூலி கைக்கு வந்து சேராத கேப்டன் பின்பு பணம் கேட்க தயாரிப்பாளர் தரப்பில் "படம் விற்கவில்லை.. போனியாகவில்லை" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டனின் 'கிச்சன் காபினெட்' அவசரமாகக் கூடி முதல் நாள் நள்ளிரவில் ஒரு முடிவெடுத்தது. அந்த முடிவின்படி, கேப்டனுக்குரிய சம்பளப் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று லேபில் கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தரப்பு அதிர்ந்துபோய் அதற்கு பிறகு சம்பளம் பற்றிப் பேசப் போயிருக்கிறது.

அதற்குள் தேர்தல், வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என்று வந்துவிட கூடவே இன்னொரு விஷயமும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பித் தவறி 'எங்கள் ஆசானை' முன்கூட்டியே வெளியிட்டு படம் படுத்துவிட்டால் பின்பு வரும் 'மரியாதை'க்கு மரியாதை இருக்காது. அதனால் 'மரியாதை' முதலில் ரிலீஸாகட்டும். பின்பு எங்கள் ஆசானின் தலையெழுத்தை பார்ப்போம் என்று ரகசிய ஆலோசனை கூறப்பட்டதால் 'எங்கள் ஆசானை பின்பு பார்ப்போம். அப்படியே நிறுத்தி வையுங்கள்' என்று சொல்லிவிட்டாராம் கேப்டன்.

ஷெரில் பெர்ணான்டோவை பார்க்கலாம் என்று தவிப்புடன் இருந்த என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..?

பல நேரங்களில் பல மனிதர்கள்

எழுத்தாளர் பாரதிமணி ஐயா உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தகமாக வெளிவந்துவிட்டது. 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தலைப்பில் 110 ரூபாய் விலையில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகத்தில் எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போலவே பாரதி ஐயாவை பற்றி உருகி, உருகி எழுதியிருக்கிறார்கள். படிக்கத் தவறாதீர்கள்.. நேரம் வீணாகாது என்பதற்கு நான் கியாரண்டி.

எது உண்மை..? எது பொய்..?

ராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.

ஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எடுத்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது . அப்புறம் எதுக்கு காந்தி..? சரி விடுங்க..

ஆனால் அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம். ஆரம்பமே சரியில்லையே. மனு பரிசீலனையின்போது எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்..


16 வயதினிலேயின் பெண்ணாம்..


அடுத்த மயிலு..???????

மருத்துவமனையில் மணிரத்னம்


வேலை என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கக் கூடியவர் இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி..

'குரு' படத்தின்போதுதான் இப்படிப்பட்ட அதீத உழைப்பின் காரணமாக முதல் முறையாக நெஞ்சு வலி அவரைத் தாக்கியது.. மருத்துவமனையில் வாசம் செய்துவிட்டு மீண்டும் தனது பணியினைத் தொடர்ந்தார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி வர.. மருத்துவமனைக்கு சென்று மீண்டு வந்தார்.


இப்போது 'ராவணன்' திரைப்படத்திற்கும் பேயாய் உழைத்திருக்கிறார் இயக்குநர். அதன் விளைவாக இப்போதும் மீண்டும் மருத்துவமனையில்.


உழைப்பு அவசியம்தான்.. தேவைதான். அதே சமயம் அதற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். மணி போன்ற இந்தியாவின் இயக்குநர்கள் இன்னும் படைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக உழைக்கலாமே.. ஏன் இவ்வளவு அவசரம்..? அவர் நல்ல உடல் நலம் பெற்று திரும்ப என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியல்..!

13-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..

சோனியாகாந்தி - 1.38 கோடி


இந்தியாவின் அன்னை(!) சோனியாகாந்தி தாக்கல் செய்த மனுவில் தனக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், இந்தியாவில் தனக்குச் சொந்தமாக கார், வீடு எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவரின் முன்னோர்கள் வீடு ஒன்று இத்தாலியில் உள்ளது. அதன் மதிப்பு 18.05 லட்சம். கையில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளது. யூகோ வங்கியில் 28.61 லட்சம் ரூபாய் பணம் டிபாசிட்டாக உள்ளது. மேலும் 20 லட்சம் ரூபாயை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளார்.

மாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 10 பங்குகள் வெஸ்டர்ன் இந்தியா டானரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் 500 பங்குகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கியின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குப் பத்திரங்களும் அம்மா வசம் உள்ளனவாம்.

தேசிய சேமிப்புத் திட்டத்தில் 1.99 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளதோடு தனிப்பட்ட வருங்கால சேமிப்பு நிதியில் 24.88 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்துள்ளார். 18.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 88 கிலோ வெள்ளி மற்றும் 11.08 லட்சம் மதிப்பிலான நகைகளும் அன்னையிடம் உள்ளன.

இவருக்குச் சொந்தமாக சுல்தான்பூர் மற்றும் தெராமண்டி கிராமத்தில் 2.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளதாம். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது இவரின் சொத்து மதிப்பு 95 லட்சம் ரூபாய்தானாம்.. மூன்றாண்டுகளில் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ராகுல்காந்தி - 2.33 கோடி


ராகுல்காந்தி தனக்கு 2.33 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். HDFC வங்கியில் இருந்து 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதில் 23.25 லட்சம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதுள்ளதாம். டில்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இரண்டு கடைகள் உண்டாம். ஒரு கடையின் மதிப்பு 1.08 கோடி ரூபாய்.. மற்றொரு கடையின் மதிப்பு 55.80 லட்சம் ரூபாய்.

11 லட்சம் ரூபாய்க்கு வருமான வரியும், 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேவை வரியும் செலுத்தியுள்ளார் ராகுல். டில்லியில் உள்ள மூன்று வங்கிகளில் மொத்தம் 10.92 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன.

அசையா சொத்துக்கள் வகையில் மெக்ராவுலி பகுதியில் 9.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு உள்ளது. பல்வேறு இடங்களில் ஆறு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்களும் இவர் பெயரில் உண்டு. சொந்த வாகனம் எதுவுமில்லை..

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்து - 88 கோடி


பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி தனது சொந்த ஊரான பாலகொல்லு தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சுரேகா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவில் சிரஞ்சீவிக்கு 88 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி தனது மனுவில் சென்னையில் தனக்குப் பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் செஞ்சுரி பிளாசாவில் ஒரு கடையும், அண்ணாசாலை டெம்பிள் டவர்ஸில் 1200 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூமும் உள்ளது. இதன் மதிப்பு மூன்றரை கோடியாம்.

மேலும் சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் நாலரை கோடி மதிப்புள்ள நிலமும், கிருஷ்ணா கார்டனில் 2 கோடி மதிப்புள்ள சொத்து, சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடமும் உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டின் மதிப்பு மட்டும் 14 கோடியாம். அவரது வீடு 3 ஆயிரத்து 333 அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

ஆந்திரா, தமிழ்நாடு தவிர சிரஞ்சீவிக்கு கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பெங்களூரில் வணிக வளாகங்களும், புறநகர்ப் பகுதிகளில் விவசாய நிலமும் உள்ளது.

ராஜசேகர ரெட்டியின் சொத்து விவரம்


ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி கடப்பா மாவட்டம் பிலிவேந்தலா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருடைய சொத்துப் பட்டியலைப் பார்ப்போம்..

ரெட்டியின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து, 78 ஆயிரத்து 487 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. வங்கி கையிருப்பு 12,379. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை 1 லட்சத்து 93 ஆயிரத்து 797. அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் 44 லட்சத்து 54 ஆயிரத்து 643 ரூபாய் டெபாஸிட்டும், ரூ.31,069 வங்கி கையிருப்பும் உள்ளது.

ராஜசேகர் ரெட்டிக்கு சொந்தமாக வேம்பள்ளி கிராமத்தில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிலமும் உள்ளன. கடப்பாவில் ராஜசேகரரெட்டியின் பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு 8 லட்சத்து 97 ஆயிரத்து 250 ரூபாய். அதே பகுதியில் அவரது மனைவி பெயரில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களில் ராஜசேகரரெட்டி பெயரில் 2 ஆயிரம் ரூபாயும், ஏ.பி.ஸ்டீல்ஸ் லிமிடெட்டில் ஆயிரம் பங்குகளும் உள்ளன.

விஜயலட்சுமி பெயரில் சரஸ்வரி பவர் இண்டஸ்ட்ரியல் என்ற நிறுவனத்தில் 35 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேசிய சேமிப்புப் பத்திரம், 2 லட்சத்து 43, 848 ரூபாயில் எல்.ஐ.சி. பாலிஸி பத்திரங்களும் வைத்துள்ளார். ராஜசேகரரெட்டிக்கு சொந்தமாக சுமார் 74 பவுன் தங்க நகைகளும், 13 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. அவரது மனைவியின் பெயரில் சுமார் 72 பவுன் தங்கநகைகளும், பத்து லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. இருவரின் பெயரில் கார் உட்பட வேறெந்த வாகனங்களும் இல்லை.

ஜக்மோகன் ரெட்டி - 77 கோடி

ராஜசேகர ரெட்டியின் மருமகன் ஜக்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பும் குறைவில்லை.. 77 கோடிதானாம்..

ராஜகோபால் - 299 கோடி

விஜயவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் ராஜகோபால் தனக்கு 299 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திராவின் மருமகன். முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் தீவிர ஆதரவாளர். இவரது மனைவி பத்மாவின் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளனவாம்.

ஆதிகேசவலு - 67 கோடி

சித்தூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் ஆதிகேசவலுக்கு 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளனவாம்.

சந்திரபாபு நாயுடு - 69 கோடி



ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு 69 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துள்ளார்.

சஷி தரூர் - 21 கோடி


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சஷி தரூருக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்கள் உள்ளனவாம்.

தரூரின் பெயரில் 14 கோடியே 41 லட்சமும், அவரது மனைவி கிறிஸ்டா கைல்ஸின் பெயரில் 4 கோடியே 80 லட்ச ரூபாயும் உள்ளதாம். இவரது பெரும்பாலான சொத்துக்கள் வெளிநாடுகளில்தான் உள்ளது.

தரூர் மற்றும் அவரது மனைவியின் சொத்தில் 15 கோடி ரூபாய் வங்கி சேமிப்பு, டிபென்ச்சர்கள், பங்குகளாக இருக்கி்ன்றன. கனடாவில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு, எர்ணாகுளத்தில் 24.96 லட்சம் மதிப்பில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, பாலக்காட்டில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் பூர்வீகச் சொத்து, துபாயில் உள்ள அஃப்ராஸ் வென்ச்ர்ஸ் நிறுவனத்தின் தலைவரான தரூரிடம் கைக்காசாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாம். தங்கம், வெள்ளி வாகனங்கள் எதுவும் இல்லையாம்..

வீரப்ப மொய்லி


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி சிக்பல்லபூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்துப் பட்டியல் இது..

மொய்லியின் பெயரில் வங்கியில் பத்து லட்சம் ரூபாய் டிபாசிட் தொகை உள்ளது. கையிருப்பு பணம் 60 ஆயிரம் ரூபாய்தான். இரண்டு லட்சம் மதிப்புள்ள கார். 40 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பங்கு பத்திரங்கள் உள்ளன. ஆனால் அசையா சொத்துக்களோ, நகைகளோ இவர் பெயரில் இல்லை.

மொய்லியின் மனைவி மாலதி பெயரில் பெங்களூரு ஆர்.டி.நகரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா உள்ளது. அதுபோல ராமநகர மாவட்டத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17.27 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே மதிப்பிற்கு கர்கலாவில் மூன்றரை ஏக்கர் பண்ணை நிலம் உள்ளது.

மனைவி பெயரில் வங்கி டிபாசிட் பணம் 11 லட்சம். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நகைகள் உள்ளன. மொய்லிக்கு கடன் எதுவும் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது..

பல ஆண்டுகள் அரசியலில் உள்ள வீரப்பமொய்லி மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயசங்கர் - 2 கோடி

மைசூரில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயசங்கருக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்துக்கள் உள்ளனவாம். கூடவே 550 செம்மறி ஆடுகளும் சொந்தமாக உள்ளனவாம். இவற்றின் மதிப்பு 10 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி சரோஜாம்மாவுக்கு 21 ஆயுள் காப்பீட்டு பாலிஸிகள் உள்ளன.(??????????)

சாந்தி - 4.11 கோடி

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராமுலுவின் தங்கை சாந்தி பெல்லாரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு 4.11 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. 500 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளனவாம்.

பிரகாஷ் ரதோட் - 4 கோடி

கர்நாடக மாநிலம் பூஜப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் பிரகாஷ் ரதோட், தனக்கு நான்கு கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரது கையிருப்பில் 2.2 லட்சம் ரூபாயும், நான்கு கார்களும் உள்ளனவாம்.

பிரகாஷ் ஜா - 55 கோடி


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்ஜா.. பல பாலிவுட் மற்றும் ஜோத்பூரி மொழி படங்களை எடுத்தவர். இயக்குநராகவும் இருந்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பஸ்வானின் லோக்ஜனசக்தி சார்பில் மகாராஷ்டிராவில் மந்த்ராகோண்டா தொகுதியில் போட்டியிடுகிறார் இவர்.

இவர் சொத்து மதிப்பாக வேட்புமனுவுடன் காட்டியிருப்பது 55 கோடி ரூபாய். பிரகாஷ் ஜாவின் சாத்துக்களில் கையிருப்பு பணம், வங்கிகளில் டெபாசிட் தொகை, நடத்தி வரும் பட நிறுவனங்கள், நகைகள், சொந்த ஊரான பீகாரின் பஸ்ஸிம் சேம்பரான் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்துக்கள், மகாராஷ்டிராவில் வாங்கிய சொத்துக்கள் ஆகியவை அடங்கும். அசையா சொத்துக்களில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 16 கோடி ரூபாய். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜா பாலிவுட்டில் நுழைந்து பல படங்களை தயாரித்தவர்.

கரண்சிங்தன்வார் - 150 கோடி

தெற்கு டில்லி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் கரண்சிங்தன்வார் தனக்கு 150 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.

நவீன் பட்நாயக் - 7.98 கோடி


ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவருக்கு 7.98 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளனவாம். வங்கியில் 57 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளதாம்.

சுப்ரியா சுலே - 53 கோடி


மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவுக்கு 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளனவாம்.

எம்.கே.சுப்பா - 60 கோடி

அசாம் மாநிலம் தேஜ்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.கே.சுப்பாவுக்கு 60 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளனவாம்.

வின்சென்ட் பாலா - 24.5 கோடி

மேகலயா மாநிலத்தின் ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வின்சென்ட் பாலா என்ற வேட்பாளரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு 12.5 லட்சமாம். இவரது குடும்பச் சொத்தின் மதிப்பு 24.5 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மிலிந்த் தியாரோ - 17.15 கோடி

மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியாரோ தனக்கு 17.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரியா தத் - 37 கோடி



மும்பை வடமத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மறைந்த நடிகர் சுனில்தத்தின் மகள் பிரியாதத் தனக்கு 37 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாந்த்ரா பகுதியில் விவசாய நிலங்கள், வர்த்தக மற்றும் குடியிருப்புகள், கட்டிடங்களின் மதிப்பு 31.77 கோடி என கூறியுள்ளார்.

மகேஷ் ஜெத்மலானி - 28 கோடி

இதே தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வக்கீல் ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ்ஜெத்மலானி தனக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்வானி - 3.5 கோடி



பாரதீய ஜனதா தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு 3.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளார்.

டில்லி அருகே உள்ள குர்கானில் 92.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளன. காந்தி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு உள்ளது. வங்கியில் அத்வானியின் பெயரில் 67.56 லட்சம் ரூபாயும், அவரது மனைவி பெயரில் 36.56 லட்சம் ரூபாயும் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.

16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவர்களுடைய குடும்பத்தில் உள்ளதாம். கையிருப்பாக அத்வானியிடம் 20 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியிடம் 5000 ரூபாயும் உள்ளதாம்.

கடந்த 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது அத்வானியின் சொத்து மதிப்பு 1.30 கோடி ரூபாய்தான்.. 5 வருஷத்துல 2 கோடியே 10 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கு. இந்த அளவுக்குக்கூட உசரலைன்னா இவர் என்ன தலைவரு..?

ஜஸ்வந்த்சிங்


பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் போட்டியிடுகிறார். இவருக்கு அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு முழு ஆதரவு அளித்துள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில் அரேபியக் குதிரைகள் இடம் பெற்றிருப்பது சுவாரசியம்தான்..

சவூதி அரேபிய இளவரசர் கொடுத்த இரண்டு அரேபிய குதிரைகள், ராஜஸ்தானில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜோத்பூர் பண்ணை வீடு மற்றும் பங்களா, டில்லியில் உள்ள குடியிருப்பின் மதிப்பு எட்டு கோடி ரூபாயாம்.

வங்கியில் கையிருப்பு எட்டு லட்சம் ரூபாய். பியட் காரின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய். டிராக்டரின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். மனைவியிடம் உள்ள இன்னோவா காரின் மதிப்பு 9.5 லட்சம் மதிப்பு மற்றும் யூனோ காரின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். கால்நடைகளின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய். கைவசமுள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

மாட்டு வண்டிதான் சொத்து..!

ரொக்கப் பணமும், அசையா சொத்துக்களான கட்டிடங்களும், நகைகளையும் பல வேட்பாளர்கள் தங்களது சொத்தாகக் காட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அம்லாவே மாட்டுவண்டிதான் தனது வாகனச் சொத்து என்று கணக்குக் காட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் ராஜ்கர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் இவருடைய வங்கிக் கணக்கில் 1612 ரூபாய் இருக்கிறதாம். சொந்தமாக 22 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், ஒரே ஒரு காளை மாடு என்று வாயில்லா ஜீவன்கள் சொத்துக்களாக உள்ளன. தனது பெயரில் 6.3 ஹெக்டேர் நிலமும், தனது மனைவி பெயரில் 3 ஹெக்டேர் நிலமும், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்மோட்டார் ஒன்றும் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவரது மனைவியின் பெயரில் 19 லட்சம் ரூபாய்க்கான சொத்துக்கள் தனியாக உள்ளது என்று கணக்குக் காட்டியுள்ளார்.

இந்தப் பட்டியல் மேலும் மேலும் வந்து கொண்டேயிருக்கிறது என்பதால் அவ்வப்போது இந்தப் பதிவு அப்டேட் செய்யப்படும்.

நன்றி..!