உதவி வேண்டும் பதிவர்களே..!


22-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ஏற்கெனவே நான் புலம்பித் தள்ளியிருக்கும் இந்தப் பதிவின் கடைசிக்கு முந்தியான 6-வது பத்தியில் எழுதியிருப்பது தற்போது மீண்டும் நடந்துள்ளது.

பிளாக்கில் எழுத வந்த முதல் நாளிலிருந்தே எனது inscript typing method-ஐ வைத்து Unicode-ல் type செய்ய முடியாமல் தவியாய் தவித்துப் போனேன்..

வேறு Typing Method-ற்கும் மாற முடியாத சூழலில் இருந்தபோது நண்பர் பொங்குதமிழ் ராவணன் அவர்கள் பெருமுயற்சி செய்து எனக்காக ஒரு யுனிகோட் கீபோர்டை செய்து கொடுத்தார். அதிலேயும் சில பிரச்சினைகள் இருக்க.. அதை சரி செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்.

அதற்குள்ளாக நமது ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி ஸாரும், நாகராஜன் ஸாரும் NHM Software-ஐ ரிலீஸ் செய்தார்கள். ஆனால் இதில் எனது inscript method இல்லாமல் இருந்தது. பின்பு நாகராஜன் அவர்களிடம் எனது நிலைமையைத் தெரிவித்து ‘அழுத’ பின்பு எனக்காக inscript method-ஐ NHM Software-ல் இணைத்துக் கொடுத்தார். மிக்க நன்றி நாகராஜன் ஸார்..

அதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன்.

ஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் என்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.

இதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..?

அடுத்தது எனது தளத்தை ஓப்பன் செய்தாலே சிஸ்டமே ஆடிப் போய் நின்றுவிடுவதாக பல பதிவுலக சிங்கங்கள் போன் செய்து திட்டிக் கொண்டிருந்தன. இதை முருகனிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்து வந்தேன்.(தெரிஞ்சாத்தான சொல்றதுக்கு..?)

அப்போது பார்த்து நண்பர் தமிழ்பிரியன் வடிவில் வந்த முருகப்பெருமான் அதனை அவர் வாயிலாகவே தீர்த்து வைத்தான். நன்றி தமிழ்பிரியன் ஸார்.. இப்போது அந்த “தீபா கூகிள் பேஜஸ்” என்கிற நிரலி நீக்கப்பட்டு எனது தளம் வேகமாகப் பதிவிறக்கமானது.. இதுவும் கொஞ்ச நாள்தான்..

அந்தச் சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்புறம் நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கோபம் அவனுக்கு..

மறுபடியும் விளையாட்டு காட்டுகிறான்..

இந்த முறை கடந்த 4 நாட்களாகவே எனது தளம் முழுமையாக திறக்க மறுக்கிறது..

Get Clicky என்கிற சாப்ட்வேருக்குப் பின்பு இருப்பது எதுவுமே திறக்கப்படாமல் அப்படியேதான் முருகன் சிலைபோல் நிற்கிறது.

இடது கீழ்ப்பக்கத்தில் “transferring data from c20.stateounter.com...” என்று டிஸ்பிளே ஆவதோடு தளம் அப்படியே நிற்கிறது.. இதற்கு மேல் எந்த மாற்றமுமில்லை..

கூடவே எனது தளத்தின் வலதுபுற மேல்புறத்தில் முதல் இடத்தில் இருக்கும் 'எனது தளத்தை பின்தொடர்பவர்கள்' இடத்தில் ஒருவரின் புகைப்படம்கூட வெளியாக மறுக்கிறது.. ஆனால் எண்ணிக்கையை மட்டும் காட்டுகிறது..

முருகன் ஏன்தான் இப்படி படுத்துறானோ தெரியலை..?

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விஷயம் தெரிந்த பதிவர்கள் சொன்னால் முருகனிடம் சொல்லி உங்களுக்கு ஏதாவது மேலயோ, அல்லது கீழயோ போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன்..

என்னால் முடிந்தது அவ்வளவுதான்..


நன்றி..

வாழ்க வளமுடன்..

ஊனமுற்றோருக்கு ஒரு ஊன்றுகோல்..!


21-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“ஊனமுற்றோருக்குத் தேவைப்படுவது அன்பும், ஆதரவும் மட்டுமல்ல; வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதலும்தான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு தகவல் களஞ்சியம்தான் இந்தப் புத்தகம்” - ‘ஊனமுற்றோருக்கான கையேடு’ என்கிற இந்தப் புத்தகத்தின் அட்டையில் இருப்பது மேலே குறிப்பிட்ட வார்த்தைகள்தான்.

சத்தியமான உண்மை. ஊனமுற்றவர்களுக்கு பெரிதும் தேவை, அவர்கள் அந்த ஊனத்தை வெல்வதற்கான வழிகள்தானே தவிர நாம் காட்டும் பரிதாப உணர்ச்சிகள் அல்ல.. நம்மூரில் அட்வைஸிற்கும், அறிவுரைக்கும் பஞ்சமேயில்லை. ஆனால் வழி காட்டுதல் என்கிறபோதுதான் பாதிப் பேர் காணாமல் போய்விடுவார்கள்.

“ஒரு மீனை வாங்கிக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சாலச்சிறந்தது” என்பார்கள். அது போலத்தான் நீங்கள் ஊனமுற்றவரை பார்த்து எத்தனை, எத்தனை வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கோர்த்து ஆறுதல் சொன்னாலும், அது வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்கும் வழி காட்டுதலைப் போல வராது.

டாக்டர் சு.முத்துசெல்வக்குமார் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் என்னைப் போன்ற தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்களுக்கு மிக பயனுள்ளதாகும். (அதனால்தான் விமர்சனங்களுக்கான புத்தக லிஸ்ட்டில் இப்புத்தகத்தையே முதலில் தேர்வு செய்திருந்தேன்).

ஊனத்தில் மிகப் பெரிய ஊனம் என்னைப் பொறுத்தவரை பார்வையிழப்புதான். அந்த இழப்பிற்கு எவ்வளவுதான் நஷ்டஈடு கொடுத்தாலும் அது தகாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பார்வையற்றவர்கள் படிப்பதற்கான பிரெய்லி முறை பற்றியும், அதைப் பயிற்றுவிக்கும் முறைகள், நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் பயிற்சி முறைகள் பற்றி விலாவாரியாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

அரசு நிறுவனங்களில், அரசுப் பணிகளில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்றும், அதற்கான வழிமுறைகளையும் வேலையில் இட ஒதுக்கீடு என்ற பிரிவின் கீழ் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மறுவாழ்வு அளிக்கும் மையங்கள் செயல்படும் விதங்கள் பற்றியும், அதில் பயிற்சி பெறுவது எப்படி என்பது பற்றியும், அதன் இந்திய அளவிலான முகவரிகளைக் குறிப்பிட்டும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

ஊனமுற்றோருக்கு பள்ளிக் காலத்தில் இருந்தே உதவித் தொகைகள் வழங்கப்படுவது இன்றைய தேதிவரையில்கூட பலருக்கும் தெரியாத விஷயம்தான். பள்ளிகளின் மூலமாகவே ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தொகைதான் யானைப் பசிக்கு சொளப் பொரி என்பதைப் போல் இருக்கிறது.

ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் ஊனமுற்றவர்களுக்கான விசேஷ சலுகைகளை பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். இதில் சறுக்குப் பாதைகள், பேட்டரி கார்கள், தனி ரயில் பெட்டிகள் என்று ஆசிரியர் சொல்லியிருப்பது சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தை மட்டும் மனதில் வைத்துச் சொல்லியிருக்கிறார் போலும்.. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்றுவரையிலும் சறுக்குப் பாதைகள் கிடையாது. அங்கு என்றில்லை.. தமிழகத்தில் 99 சதவிகித ரயில் நிலையங்களில் படிகளில் ஏறி இறங்கித்தான் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடக்க முடியாதவர்களை அவரவர் தோழர்களும், உறவினர்களும் தூக்கிக் கொண்டுதான் செல்கிறார்கள்..

ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதன் அமைப்புகள் மற்றும் செயல்படும் விதம், முகவரிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஊனமுற்றோருக்கு அன்பும், அரவணைப்பும் தாண்டி மிகவும் தேவைப்படுவது அவர்களது ஊனத்தை மறக்கடிக்க நினைக்கும் அளவுக்கான உபகரணங்கள்.

வெளிநாடுகளில் எத்தனை விதமான ஊனம் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் வித, விதமான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அது நமது நாட்டில் மிகப் பெரிய பணக்கார வீடுகளில் மட்டுமே தெரிந்தவைகளாக உள்ளன. இன்னமும்கூட செயற்கைக் கால்கள் கிடைக்காமல் கட்டையை இருபுறமும் ஊன்றிக் கொண்டு நடக்கும் ஊனமுற்றவர்களை நாம் நிறைய பார்க்கலாம்.

ஊனமுற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளையும் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். சென்னையைச் சுற்றியே 29 பள்ளிகள் உள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம். மாவட்டந்தோறும், நகரந்தோறும் இருக்கும் இது போன்ற பள்ளிகளை பட்டியலிட்டுள்ளது பலருக்கும் நிச்சயம் பயன் தரும்.

ஊனமுற்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் என்னென்ன..? சலுகைகளைப் பெற என்ன செய்ய வேண்டும்..? எங்கு தொடர்பு கொள்வது..? சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் என்னென்ன..? இலவச உபகரணங்களைப் பெற என்ன வழி..? அரசின் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றியெல்லாம் மிக எளியத் தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கும் ஆசிரியர், அரசின் இந்தச் சலுகைகளைப் பெற வேண்டுமெனில் மிக முக்கியத் தேவையான ‘ஊனமுற்றோர்’ என்பதற்கான அடையாள அட்டை பெறும் வழியையும் அடையாளம் காட்டியிருக்கிறார்.

மாவட்ட மறுவாழ்வு மையங்களின் முக்கியப் பணியே உடல் ஊனமுற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்களைப் பற்றிய கணக்கெடுத்தலும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதலும்தான். அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பித்து இந்த அடையாள அட்டையைப் பெறும்படி அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இந்த மாதம் நான் செய்ய வேண்டிய தலையாய பணி எனக்கும் ஒரு அடையாள அட்டை பெறுதல்தான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்குக் கிடைத்துள்ள ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்கிறேன்..

என் போன்ற காது கேளாத குறைபாடு உடையவர்களுக்காக காது கேட்கும் கருவிகள் எங்கெங்கு கிடைக்கும் என்று ஒட்டு மொத்தமாகப் பட்டியலிட்டுள்ளார். புத்தகத்தை படித்து முடித்தவுடன் செய்த முதல் வேலை அந்தந்த கடைகளுக்கு போன் செய்து காதுக்கு பின்புறம் மாட்டக்கூடிய இலகுவான காது கேட்கும் கருவியின் விலையை கேட்டுத் தெரிந்து கொண்டதுதான். அது கொஞ்சம் காஸ்ட்லிதான்.. குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாயில் இருக்கிறது. அப்பன் முருகன் அருளால் பணம் சேர்ந்தவுடன் அதைத்தான் முதலில் வாங்க உள்ளேன்.

இப்போது உள்ளது கொஞ்சம் சிரமத்தைத் தருகிறது.
ரெடிமேட் சட்டைகளை வாங்கினால் அதில் உள்பாக்கெட்டை அவசியம் தைக்க வேண்டி உள்ளது. மேலும் அடிக்கடி கை அனிச்சை செயலாக அந்த வயரை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கிறது. கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் கை, காலை எடுக்காமல் காதை மட்டுமே எடுத்தானே முருகன் என்ற நினைப்பில் நமக்கு பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த குறைபாட்டால் எனக்குள்ள ஒரு குறை எனக்கு மிகவும் பிடித்தமான டீஷர்ட்டுகளை போடவே முடியவில்லை என்பதுதான். அவற்றுக்கு உள் பாக்கெட் தைப்பது மிகவும் கடினம் என்கிறார்கள் தையற்காரர்கள். மேலும் அது அதிக வெயிட்டை காட்டி தொந்தரவளிக்கிறது.. போகிறது.. அடுத்தப் பிறவியில் அனுபவித்துக் கொள்ளலாம்.

மிகக் குறைந்த வெறும் 60 ரூபாய் விலையுள்ள இப்புத்தகத்தை யாரேனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்தீர்களானால், அது விலை மதிப்பில்லாத ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த அரியப் பணிக்காக ஆசிரியர் டாக்டர் சு.முத்துசெல்லக்குமாரும், இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள கிழக்குப் பதிப்பகமும் என்றென்றும் என் நன்றிக்குரியது.

வாழ்க வளமுடன்

அபியும், நானும் - ஏமாற்றிய ராதாமோகன்

20-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்றொரு திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னால் காண நேர்ந்தது. அப்பா-மகன் உறவு பற்றிய ஒரு விவரணக் களம்தான் அந்தப் படத்தின் கதை. படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி தமிழில் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருப்பதால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளைத் திணித்து ஒரு வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கினார்கள்.

அதே கதையை அப்படியே தோசையைத் திருப்பிப் போடுவதாக நினைத்துப் பாருங்கள். அப்பா-மகள் என்று.. அதுதான் இந்த ‘அபியும், நானும்’.

முன்னதில் ஜெயம்ரவி என்றால் இதில் த்ரிஷா. த்ரிஷா சண்டையிடுவதை தியேட்டர் ஆபரேட்டர்கூட விரும்பமாட்டார் என்பதால் அவர்களுடைய விருப்பத்திற்காக சில பாடல் காட்சிகளில் நடனமாடியிருக்கிறார் ஹீரோயின் த்ரிஷா. அவ்வளவுதான்.. மீதிக் கதையை நீங்கள் அதில் பார்த்ததுதான்.

“அப்பாவாக மட்டுமல்ல; அம்மாவாகவும் நான்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடித்து மகள் மீது பாசத்தைக் கொட்டுகின்ற அப்பா.. தோளுக்கு மேல் வளர்ந்தவுடன் தானே தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயலும் மகள்.. தன்னிடம் கேட்காமல் எதையும் செய்யாத மகளா இவள் என்று கண் கலங்கும் அப்பா.. அவருக்கு தான் செய்தது சரி என்பதை உணர வைக்க முயன்று தோற்கும் மகள்.. கணவரின் அளவுக்கு அதிகமான பாசத்தைக் குறையென்றோ, தவறு என்றோ சொல்ல முடியாத மனைவி.. கடைசியில் சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையே இப்படித்தான் என்பதை தந்தை உணர்ந்து கொள்வது.. இப்படி பல பக்கங்களிலிருந்தும் கதையை நகர்த்தியிருக்கிறார் ராதாமோகன்.

இந்தக் கதையை ராதாமோகன்தான் பிரகாஷ்ராஜிடம் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். அது ‘பொய்’யாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் பிரகாஷ்ராஜ்தான் ராதாமோகனிடம் கதைக்கருவைச் சொல்லி இப்படி ஒரு ஒன் லைனில் படம் செய்யலாம் என்று சொல்லியிருக்கலாம் என கருதுகிறேன்.

ஏற்கெனவே அம்மா-மகன், அப்பா-மகன் சண்டை, சச்சரவு எல்லாம் வந்து தொலைந்துவிட்டது. இப்போது அப்பா-மகள் மட்டும்தான் பாக்கி என்று இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்.

சர்தார்ஜிகளை பற்றி யாரோ போகிற போக்கில் ராதாமோகனிடம் தவறாகச் சொல்லிப் புலம்பியிருக்கிறார்கள் போல.. படத்தின் பிற்பாதியில் கதையை நகர்த்துவதற்கு சர்தார்ஜிகளின் குணநலன்களை துணைக்கு அழைத்து, கிட்டத்தட்ட பஞ்சாப் சிங்கங்கள் பற்றிய பிரச்சாரப் படமாகவும் ஆக்கிவிட்டார்.

“யாரையோ காதலிக்கிறாளே மகள்.. வரட்டும் பார்க்கலாம்..” என்று விமான நிலையத்தில் பிரகாஷ்ராஜ் காத்திருக்க டர்பன் அணிந்த சீக்கிய இளைஞனை காட்டிய உடனேயே எனக்குப் புரிந்துவிட்டது, “இனி இப்படம் பார்வையாளர்களிடமிருந்து விலகி வெகுதூரம் செல்லப் போகிறது..” என்று.. நிஜமாகவே அது போலத்தான் நடந்துள்ளது. அநியாயத்திற்கு ஹிந்தி மற்றும் ஆங்கில வசனங்கள்.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் படத்தின் ஒட்டு மொத்த வசனத்தையும் அந்த சீக்கிய மாப்பிள்ளை சொல்வதால், அங்கே மட்டும் சப்டைட்டிலாக தமிழ்படுத்தியிருந்தார்கள்.

“உங்களுக்கு என்னதாம்பா பிரச்சினை..?” என்று பிரகாஷ்ராஜிடம் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் கேட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட படம் பார்த்த பார்வையாளர்களின் கேள்வியும் இதுதான்.

ஹீரோ இல்லாமல் ஹீரோயின்தான் நம்மிடம் இருக்கிறார் என்பதால் சண்டைக் காட்சிகளையும், சொடுக்குப் போட்டு சவால்விடும் காட்சிகளையும், ஒரு வரி டயலாக் பேசுவதையும் வைக்க முடியாது என்பதால் இதில் காட்சிகள் மற்றும் வசனத்தின் மூலமாக மாப்பிள்ளையைப் பற்றி உயர்வாகப் பேசி, அவர்தம் இனத்தின் பெருமையை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்திப் பேசி தன் தந்தையிடம் தான் செய்தது சரி என்று சாதிக்க வேண்டிய கட்டாயம் நமது ஹீரோயினுக்கு.

படத்தின் துவக்கமே சுத்த ஹம்பக்.. வாக்கிங் வரும் இடத்தில் அப்போதுதான் முதல் முறையாக சந்திக்கும் பிருத்விராஜிடம் தனது மகள் பற்றிப் பேசத் துவங்கும் பிரகாஷ்ராஜ், பிருத்விராஜை தனது இல்லத்திற்கே அழைத்து வந்து காபி கொடுத்துதான் படத்திற்கு சுபம் போடுகிறார். ஒரே நாளில் சொல்லப்படும் கதையாக போய்க் கொண்டிருக்க.. சுவையான வசனங்களால் மட்டுமே தப்பித்தார் இயக்குநர்.

வசனகர்த்தா விஜி துணையில்லாத திரைப்படம் என்பதால் எப்படியிருக்குமோ என்று நானும் பயந்துதான் இருந்தேன். ஆனால் இதுலேயும் அதே போல் வழக்கமான ராதாமோகனின் டயலாக் டெலிவரிகள் நச்சென்று இருந்தது.

சிற்சில சுவாரஸ்யமான காட்சிகள்.. ப்ரீ கேஜிக்காக க்விஸ் புத்தகத்தை மனப்பாடம் செய்வது.. பள்ளியில் க்யூவில் நிற்பது. இண்டர்வியூவில் பேசுவது.. மகள் அழைத்து வரும் பிச்சைக்காரனுக்கு பெயர் வைத்து மகளின் “ப்ளீஸ்பா..” என்கிற வார்த்தையில் கரைந்து போவது.. பிரைம் மினிஸ்டரிடம் போனில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுவது.. தலைவாசல் விஜய்யிடம் தனது மகளைப் பற்றிப் பேசி கண்கலங்குவது.. என்று பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு விளக்கமே தேவையில்லை. மனிதர் பின்னியிருக்கிறார்.



தமிழக இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி குமாரி, திருவளர்ச்செல்வி த்ரிஷா நடித்து நான் பார்க்கும் முழு முதற் திரைப்படம் இதுதான் என்பதால் என்னிடம் அவருடைய நடிப்பு பற்றி சொல்ல ஏதுமில்லை. கூடவே அவருக்கும் நடிப்புக்கான வாய்ப்பும் இப்படத்தில் இல்லை. பேசவேண்டிய டயலாக்கை, பேச வேண்டிய இடத்தில் மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டார்.. அவ்ளோதான்.. ஆனால் குளோஸப் காட்சிகளில் ‘குழந்தை’ கொள்ளை அழகு.

சில வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் சுண்டக்கஞ்சியை ராவாக குடித்த குரலைக் கேட்டேன். ஐஸ்வர்யாவுக்கு அவரது குரல்தான் பிரதான நடிப்புத் தளம். பிரகாஷ்ராஜை மிரட்டுகிற காட்சிகளிலெல்லாம் அவருடைய குரல் வளம் பின்னியெடுக்கிறது. சில சமயங்களில் அவர் அன்பாகப் பேசுவதுகூட மிரட்டல் போல் தெரிவதுதான் கொஞ்சம் டூமச்.

‘அழகிய தீயே’, ‘மொழி’, திரைப்படங்களில் “கதை இதுதான்.. இதைப் பற்றித்தான் போகிறது.. இதைத்தான் சொல்லப் போகிறோம்..” என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு, இத்திரைப்படத்தில் இல்லாததுதான் படத்தின் மிகப் பெரிய குறை.

100-ல் 1 மனிதனுக்கு பிரகாஷ்ராஜ் போல் மகனுக்கோ, மகளுக்கோ தான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இது என்பதை சொல்ல வந்த இயக்குநர் ராதாமோகன் அழுத்தமான திரைக்கதையில்லாமல் சிற்சில காட்சிகளை வைத்து படத்தினை நகர்த்த முயன்று இடைவேளைக்கு பின்பு அநியாயத்திற்கு போர் அடிக்கிறது.

இதற்கு முன் வந்திருந்த பாசப் போராட்டத் திரைப்படங்களில் ஒரு காட்சியிலாவது பார்வையாளர்களை கைக்குட்டையை எடுக்க வைத்திருப்பார்கள். அந்த ஒரு காட்சியினால்தான் அந்தத் திரைப்படங்களும் வெற்றி பெற்றிருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால், இத்திரைப்படத்தில் எந்தவொரு காட்சியும் என் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு சோகக் காட்சியிலும், ஒவ்வொரு உணர்ச்சிப் போராட்டக் காட்சியிலும் காமெடி வசனங்களை திணித்து அக்காட்சியின் தன்மையையே நீர்த்துப் போக வைத்துவிட்டார் இயக்குநர். பின்பு எங்கிருந்து ஒட்டுதல் வரும்..?

குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகச் சென்று பார்க்கலாம்.. தவறில்லை.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் ராதாமோகன்.

எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்


19-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

சமீப காலமாக நான் 'உயிர்மை' புத்தகத்தை வாங்கியவுடன் முதலில் படிக்கத் துவங்கியது பெரியவர் திரு.பாரதிமணி அவர்களின் கட்டுரையைத்தான்.

இப்படி ஒரு பெயரில் ஒரு எழுத்தாளரா என்றெண்ணிதான் அவருடைய கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்.. அது கற்கண்டாக இனிக்கத் துவங்கியது எனக்கு.. இந்தப் புது எழுத்தாளர் யார் என்று விசாரித்து தெரிந்து கொண்ட பின்பு, "அவரா இவரு.." என்ற ஆச்சரியமும் எனக்குள் தோன்றியது.

எழுத்து நடை எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் என்னை பெரிதும் கவர்ந்தது. அதிலும் புதுதில்லியின் சுடுகாட்டை பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரை அவர் எழுத்திலேயே சிறந்தது என்று நான் சொல்வேன். அக்கட்டுரையின் பாதிப்பு எனக்குள் ஏனோ பல நாட்கள் நீடித்திருந்தது. இந்தப் பெரியவரை எனக்கு முன்பே தெரியும் என்றாலும் நேரில் பழக்கம் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையும் அப்பன் முருகன் புண்ணியத்தில் சமீபத்தில் தீர்ந்து போனது.

ஒரு பின் மாலைப்பொழுதில் ஆரம்பித்து இரவு வரையிலும் அவருடன் இருந்து, கலந்து பேசி அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையும் கேட்டுத் தெரிந்ததில் எனக்குள்ள பிரமிப்பு இன்னமும் அப்படியே உள்ளது.

நாடக நடிகராக, சினிமா நடிகராகவெல்லாம் அவரை அறிந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போது எழுத்தாளர் என்கிற அவதாரத்திலும் இவரை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறது. அந்த நன்னாள் பற்றி ஐயா எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தை இங்கே பெருமகிழ்வுடன் பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

பல நேரங்களில் பல மனிதர்கள்.

திரு.உண்மைத்தமிழன்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த வருடத்தில், நான் 'உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், 'தீராநதி'யில் எழுதிய ஒரு கட்டுரை, 'அமுத சுரபி'யில் எழுதிய 4 கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தலைப்பில் 'உயிர்மை பதிப்பகம்' வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..

புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம். தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோகமித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!

இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!

போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியவன் என்றுதான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?

இதைப் படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.

பாரதி மணி


எனக்கும் வேலை வைக்காமல் தாங்களே சொல்லியிருப்பதுபோல் “வாழ்த்த வயதில்லை ஐயா, வணங்குகிறேன்..” என்று முதல் நபராகச் சொல்லி வாழ்த்துகிறேன்.. தங்களுடைய புத்தகம் விற்பனையில் சாதனை படைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ‘சரக்கு’ நன்றாக இருந்தால், அது எந்த நாடாக, எந்த இடமாக இருந்தாலும் விற்றே தீரும் என்பது தாங்கள் அறியாததல்ல..

மீதியை புத்தக விமர்சனத்தில் வைத்துக் கொள்கிறேன்.)))))))))))))))

நன்றி..

டிசம்பர் 17-சர்வதேச திரைப்பட விழா-அழைப்பிதழ்-திரைப்படங்களின் பட்டியல்

15-12-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நாளை மறுநாள் புதன்கிழமை, சென்னையில் துவங்கவிருக்கும் 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் அழைப்பிதழை இன்று கிடைக்கப் பெற்றேன்.

17-12-2008 புதன்கிழமையன்று மாலை 6.15 மணியளவில் சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தில் துவக்க விழா நடைபெறுகிறது.

மாநிலத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை செயலாளர் திரு.ஏ.சி.மோகன்தாஸ், ஐ.ஏ.எஸ். அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி அவர்கள் தலைமை தாங்குகிறார்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் குத்துவிளக்கேற்றி 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கி வைக்க இருக்கிறார்.

மற்றும் பல்வேறு தூதரகங்களின் துணைத் தூதர்களும், திரையுலகப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள பதிவர்கள் உடனேயே விரைந்து சென்று பணம் செலுத்தி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

கட்டணங்கள் பற்றிய தகவல்களை நான் ஏற்கெனவே http://truetamilans.blogspot.com/2008/11/17-26.html இந்தப் பதிவில் சொல்லியுள்ளேன். படித்துக் கொள்ளவும்.

துவக்க விழா நிகழ்ச்சி சம்பிரதாயப்படி புதன்கிழமையன்று மாலையில் நடந்தாலும், புதன்கிழமை காலையிலேயே உட்லண்ட்ஸ் தியேட்டர், உட்லண்ட்ஸ் சிம்பொனி தியேட்டர், பிலிம் சேம்பர் தியேட்டர்களில் உலகத் திரைப்படங்களின் திரையிடல்கள் துவங்குகின்றன.

முதல் திரைப்படமாக புதன்கிழமை காலை 10 மணிக்கு உட்லண்ட்ஸ் தியேட்டரில் Bad Faith என்கிற பிரெஞ்சு திரைப்படம் திரையிடப்பட உள்ளது.திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பெயர்களும், கதைச்சுருக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.

படவிழாவில் கலந்து கொள்ளவிருக்கும் திரைப்படங்களின் பெயர்கள், நாடுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.


A. அல்ஜீரியா
1. The Yellow House

B. ஆஸ்திரேலியா
2. Shalvatin

C. பங்களாதேஷ்
3. Transformation

D. பிரேஸில்
4. Alice’s House
5. The Karin

E. சீனா
6. Little Moth
7. Still Life
8. Tuya’s Marriage

F. குரோஷியா
9. Behind the Glass

G. செக் குடியரசு
10. I served the King of England

H. டென்மார்க்
11. Go with peace Jamil
12. The Art of Crying

I. எகிப்து
13. An Egyptian Story
14. The Choice
15. The Land

J. பின்லாந்து
16. Rocky VI
17. Shadows in Paradise
18. Thru The Wire
19. Ariel
20. The Match Factory Girl
21. Those Where The Days
22. Bohemian Life
23. Drifting Clouds
24. Juha
25. The Man Without A Past

K. ஜெர்மனி
26. Short Sharp Shock
27. Head On
28. Crossing The Bridge : The Sound of Istanbul
29. The Edge of Heaven
30. Cherry Blossoms
31. My Dream or Loneliness Never Walks Alone
32. 24/7 : The Passion of Life
33. The Red Spot
34. Ulzhan

L. ஹைதி
35. Le President A-T-Il-Le Sida?

M. ஹங்கேரி
36. Tranquility
37. Mario, The Magician
38. Eszter’s Inheritance
39. Milky Way
40. Delta

N. இஸ்ரேல்
41. The Bands Visit

O. இத்தாலி
42. The Orchestra of Pizza Vittorio
43. The Waltz
44. The Girl by The Lake
45. Address Unknown
46. Letter From Sahara
47. Jimmy on the Hall
48. Ossidiano
49. Grazing
50. Il Mattino Ha L’oro in Bocca
51. In the Flesh

P. மாசிடோனியா
52. I Am From Titov Veles

Q. மலேஷியா
53. Kala Malam Bulan Mengambang
54. Cinta
55. Chinese Eye

R. நெதர்லாந்து
56. Nadine

S. நார்வே
57. Gone with the Woman
58. Mirush
59. Reprise
60. Second Half

T. பாலஸ்தீனம்
61. Salt of This Sea

U. பிலிப்பைன்ஸ்
62. Ploning
63. Casket for Hire
64. The Bet Collector
65. Service

V. போலந்து
66. Katyn
67. All Will be Will
68. Bellisima
69. Double Portrait
70. Warsaw

W. ரஷ்யா
71. Shadow Boxing 2
72. The Mermaid
73. The Swing

X. செர்பியா
74. The Paper Prince
75. The Fourth Man
76. The Tour

Y. சிங்கப்பூர்
77. Singapore Dreaming
78. Dreams From The Third World

Z. ஸ்லோவானியா
79. Rooster’s Breakfast

AA. ஸ்பெயின்
80. Under The Snow
81. Wrap Up

AB. இலங்கை
82. King Siri
83. Flowers of the Sky
84. Machan

AC. தாய்லாந்து
85. Chaiya
86. First Flight
87. Chocolate
88. The Coffin
89. Wonderful Town

AD. துருக்கி
90. My Marlon And Brando
91. Three Monkeys

AE. கஜகஸ்தான்
92. Farewell Gulsary

AF. அமெரிக்கா
93. Coyote
94. Paper Clips
95. Freety To Think So
96. Women Behind The Camera
97. A Thousand Years of Good Prayers

AG. பிரான்ஸ்
98. The Class
99. Intimate Enemies
100. The Last of The Crazy People
101. La France
102. Cloud This Be love
103. The Witnesses
104. Bad Faith
105. Clod Showers

RETROSPECTIVE பிரிவு

FRANCE (Alian Resnais)
106. Guernica
107. Night And Fog
108. Hiroshima My Love
109. Last Year At Marienbad
110. Muriel
111. Stavisky
112. Same Old Song

AH. ஜப்பான்
113. Spring Dreams
114. Scent Of Incense

RETROSPECTIVE பிரிவு JAPAN (Keisuke Kinoshita)

115. Morning For The Osone Family
116. Woman
117. A Record of Youth
118. Carmen Falls in Love
119. Twenty Four Eyes

AI. தென்கொரியா
RETROSPECTIVE (Ki-Duk-Kim)
120. The Coast Guard
121. Spring, Summer, Autumn, Winter.. Spring
122. Time
123. Breath


பதிவர்கள் இத்திரைப்பட அட்டவணையில் இருக்கும் திரைப்படங்களை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள் என்றால், நன்றாக இருக்கும் திரைப்படங்களை சிபாரிசு செய்யலாம். என்றென்றும் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

நன்றி..

அரசியல் கட்சிகளை மிஞ்சிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

14-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல், எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அரசியல் கலந்த அம்சமாகிவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இரண்டு திரைப்பட இயக்குநர்கள் சங்கங்கள் இருந்தன. ஒன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம். மற்றொன்று இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம். இந்த இரண்டு சங்கங்களின் தோற்றம், வளர்ச்சி குறித்து இப்போது வேண்டாம். அது பெப்ஸி விஜயன்-பாலுமகேந்திரா பிரச்சினையின்போது ஏற்பட்டது. பின்னொரு நாளில் பார்ப்போம்.

இந்த இரண்டு சங்கங்களையும் ஒரு நல்ல நாளில் இரு தரப்பினரும் கூடிப் பேசி இணைத்தனர். இணைப்பு ஒப்பந்தமாக இரண்டு சங்கங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையே ஒருமித்த சங்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஒருங்கிணைந்த பொதுக்குழுவின் முடிவுப்படி தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த திரு.ஏ.எஸ்.அமீர்ஜான் ஒருங்கிணைந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக திரு.எஸ்.ஏ. சந்திரசேகரும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 வருடங்களை ஓட்டி முடித்துவிட்டனர்.

இப்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலில் முக்கியமான சினிமாத் துறை சங்கங்களின் கருத்துக்கள்தான் அரசியல் கட்சிகளுக்கு அடுத்து தமிழக மீடியாக்களால் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. நடிகர் சங்கத்திற்கு அடுத்து இயக்குநர்களின் சங்கம்தான் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல தகுதியுடையதாகிறது.

இந்தச் சூழலில் எதிர்பார்த்தது போலவே இயக்குநர்கள் சங்கத் தேர்தலிலும் ஒரு எதிர்பார்ப்பு சூழ்ந்திருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே பாரதிராஜா களத்தில் குதித்தார். கூடவே அவருடைய தளபதியான ஆர்.கே.செல்வணியும் இருந்தார்.

காலம், காலமாக இயக்குநர்களின் நிழலிலேயே வளர்ந்து கொண்டிருந்த துணை, இணை, உதவி இயக்குநர்களில் சிலருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டது. காரணம் ஒன்றே ஒன்றுதான்.. அது சம்பளம் சரிவர கைக்கு கிடைக்கவில்லை. சங்கத்தில் புகார் செய்தும் உறுப்பினர்களுக்கு அதனைப் பெற்றுத் தர சங்க நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை என்பதுதான்.

தேர்தல் அறிவிப்பு வரும்வரை காத்திருந்து பின்பு சடாரென்று 20 பேரை கூட்டணி சேர்த்து தாங்களும் களத்தில் இறங்குவதாக அறிவிக்க கேள்விப்பட்ட இயக்குநர்களில் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறை. இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர்களைவிட, உதவி, துணை, இணை இயக்குநர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

இது போதாதற்கு இயக்குநர் ஆர்.சி.சக்தி தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டார். இல்லாவிடில் தான் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்றார். இயக்குநர்கள் தரப்பில் ஒரு பெரும்படையே அவருடைய இல்லத்திற்கு சென்று காலை முதல் மதியம்வரை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் மசியவில்லை. முடியவே முடியாது என்றார். அவரும் களத்தில் நின்றுவிட்டார்.

தேர்தல் நாளுக்கு முதல் நாள் இரவு வலையுலக கலைத்தளபதி திரு.ஜே.கே.ரித்திஷீன் அன்புக்குப் பாத்திரமானவர்கள் செய்த கலாட்டாவால் விடியற்காலையில் தேர்தலுக்குப் பதில் கலவர பீதி கோடம்பாக்கத்தில் தொற்றிக் கொண்டது. இயக்குநர்கள் அனைவரும் உதவி இயக்குநர்கள் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து கோபமடைந்துவிட்டார்கள். உதவி இயக்குநர்களோ இயக்குநர்கள்தான் தங்களை உதாசீனப்படுத்துவதாக சொல்லி சண்டையிடத் துவங்க.. சமாதானப்பேச்சு வார்த்தை, அடிதடிக்கு முந்தைய நிலைமையோடு முடிந்துபோனது. தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் ஆர்.சி.சக்தி தேர்தலை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டி அதில் குரல் ஓட்டெடுப்பு மூலம் பாரதிராஜாவை ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் இயக்குநர்கள் சங்கத்தினர். இதனையும் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ஆர்.சி.சக்தி.

கோர்ட்டோ தேர்தல் நடக்கும்வரையிலும் சங்கத்தைக் கவனித்துக் கொள்ள இரண்டு பெண் வக்கீல்களை ரிசீவர்களாக நியமித்தது. கூடவே தேர்தலை கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும். தலைவர் பதவிக்கும் தேர்தல் உண்டு என்று சொல்லிவிட தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தது கோடம்பாக்கம்.

எப்போதும் சினிமாவுலகில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை கட்டாய விடுமுறை. அன்றைக்குத்தான் அனைத்து சங்கங்களின் பொதுக்குழுவோ, செயற்குழுவோ அல்லது சாதாரண பஜ்ஜி, வடை, டீ கூட்டமோ நடக்கும். அதே இரண்டாவது சனிக்கிழமையான இன்று(14-12-2008) இயக்குநர்களின் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது.

சம்பளம் வாங்கித் தராதது, மற்றும் உதவி இயக்குநர்களின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியது.. இந்த இரண்டு விஷயத்திலும் இயக்குநர்கள் மீது காட்டமாக இருந்த உதவி இயக்குநர்களில் ஒரு சிலர் இந்த முறை நாளைய இயக்குநர்கள் அணி என்கிற பெயரில் போட்டியிட்டனர்.

இதனைத் தவிர்ப்பதற்காக பல முறை துணை, இணை, உதவி இயக்குநர்களை அழைத்து ஆர்.கே.செல்வமணியின் தலைமையில் சமாதானக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் உதவி இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அமர ஆசைப்பட.. “இது இயக்குநர்கள் சங்கமாச்சே..?” என்று நயமாகச் சொல்லப்பட்டது இயக்குநர்களால்.. இயக்குநர்களுக்கே கேப்ஷன் எழுதித் தருபவர்கள் உதவி இயக்குநர்கள்தானே.. “முடியாது..” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட “நடப்பது நடக்கட்டும்.. பார்ப்போம்..” என்று சொல்லிவிட்டு போருக்குத் தயாரானது இயக்குநர்கள் கூட்டம்.

ஒரு புறம் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் கூட்டம்.

மற்றொரு புறம் நாளைய இயக்குநர்கள் அணி என்கிற தலைமையில் உதவி, துணை, இணை, இயக்குநர்கள் கொண்ட கூட்டம்.

இது இரண்டிற்கும் பொதுவாக சுயேச்சையாக பல உதவி இயக்குநர்கள், இயக்குநர்கள் பல பதவிகளுக்கும் போட்டியிட்டார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் திரு.ஆர்.சுந்தர்ராஜன். பொருளாளர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

நாளைய இயக்குநர்கள் அணியினர் நேற்றே விளம்பரப் பலகைகளை தேர்தல் நடக்கும் சேம்பர் திரையரங்கு அருகே வைத்து அசத்திவிட்டார்கள். பார்த்த கணத்தில் இயக்குநர்கள் டீம் ஒரு நிமிடம் ஆடித்தான் போனது. பின்பு அவசரம், அவசரமாக இரவோடு இரவாக வினைல் போஸ்டர்களும், தட்டி போஸ்டர்களும் உருவாக்கப்பட்டு விடியற்காலையில் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் நடைபெற்றது. இந்த முறை வாக்குச் சேகரிப்பு என்பது கூட்டம், கூட்டமாக அதிகமாக இருந்ததால் பல இயக்குநர்களும் கை நிறைய பேப்பர்களை வாங்கி வைத்துக் கொண்டு திண்டாடித்தான் போனார்கள்.

எது வேண்டுமானாலும் நடக்கும் என்று ‘கழுகார்’ மேலிடத்திற்கு பற்ற வைத்திருந்ததனால், காவல்துறையின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. காலையில் “நாங்க சொல்ற மாதிரி கியூவுல நின்னு ஓட்டுப் போடுங்க..” என்று இயக்குநர்களுக்கே கிளாஸ் எடுத்தது காவல்துறை. இந்த விஷயத்தில் அனைத்து அணியினரும் ஒன்று சேர்ந்து கோரஸாக, “எங்களையென்ன முட்டாள்ன்னு நினைச்சீங்களா..? அதையெல்லாம் நாங்களே பாத்துக்குறோம்..” என்று எகிறு, எகிறு என்று எகிறிவிட்டார்கள். “எப்படியோ போங்க..” என்று கழன்று கொண்டார்கள் காவல்துறையினர்.

பல இயக்குநர்கள் ஓட்டுப் போட வரவில்லை. அவுட்டோர் ஷ¥ட்டிங்கில் மாட்டிக் கொண்டதாக செய்தி மட்டுமே அனுப்பினார்கள். பதிலி ஓட்டுப் போட இங்கே அனுமதியில்லை என்பதால் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

காலை 9 மணிக்கு கியூவில் நிற்க ஆரம்பித்து மதியம் 3 மணிக்குத்தான் கியூ காணாமற்போனது. அதுவரையில் கூட்டம்தான்.. ஆனாலும் கேன்வாஸிங்கும் மிக ஜாலியாகத்தான் இருந்தது. எதிரெதிர் அணியில் இருப்பவர்கள் அருகருகே அமர்ந்து பேசியபடியே இருந்தனர்.

ஆர்.சி.சக்தி அணியில் செயலாளர் பதவிக்கு இயக்குநர் திரு.புகழேந்தி போட்டியிட்டார்.

பாரதிராஜா அணியில் அவர் தலைவர் பதவிக்கும், ஆர்.கே.செல்வமணி பொதுச்செயலாளர் பதவிக்கும், வீ.சேகர் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு விக்ரமன், சசிமோகன் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, அமீர், டி.கே.சண்முகசுந்தரம், ஏகாம்பவாணன் ஆகியோரும் களத்தில் இருந்தார்கள்.

செயற்குழு உறுப்பினர்களாக பாலி ரங்கம், பூபதி பாண்டியன், எழில், யார் கண்ணன், மாதேஷ், பேரரசு, ராஜாகார்த்திக், ஈ.ராம்தாஸ், இரவிகந்தசாமி, ஷிபி, சிபிசந்தர், எஸ்.எஸ்.ஸ்டேன்லி ஆகியோரும் போட்டியிட்டனர்.

கடைசி நபராக விமானத்தில் பறந்து வந்த இயக்குநர் வாசு ஓட்டுப் போட்டதோடு மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்து எண்ணிக்கை துவங்கியது.

என்றைக்கும் இல்லாத திருநாளாக இந்தத் தேர்தலில்தான் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 669. ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார்கள் அனைவரும்.

எண்ணத் துவங்கிய 1 மணி நேரத்தில் முதல் முடிவு வந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிராஜா 511 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற ஆர்.சி.சக்தி 148 ஓட்டுக்கள் பெற்றார். இன்னொரு சுயேச்சை வேட்பாளர் 10 வாக்குகள் பெற்றிருந்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 484 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட புகழேந்தி 124 ஓட்டுக்களை பெற்றார்.

பொருளாளர் பதவிதான் பாரதிராஜா அணியை காலைவாரிவிட்டது. அந்த அணி சார்பாக போட்டியிட்ட வீ.சேகர் தோற்றுப் போய், சுயேட்சையாகப் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜன் 306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். வீ.சேகர் பெற்ற ஓட்டுக்கள் 268. இங்கேதான் நாளைய இயக்குநர்கள் அணியின் அரசியல் விளையாடிவிட்டது. அவர்கள் பெற்ற வாக்குகள் 78. இவர்கள் களத்தில் இல்லாமல் இருந்திருந்தால் வீ.சேகரே வெற்றி பெற்றிருப்பார்.

ஆர்.சுந்தர்ராஜனால் நம்பவே முடியவில்லை. அழுதேவிட்டார். இத்தனைக்கும் அவருக்காக கேன்வாஷ் செய்தது 2 பேர்தான். ஒருவர் அவருடைய கார் டிரைவர். இன்னொருவர் அவருடைய உதவியாளர். ஆனால் பல அருமையான வாசகங்கள் கொண்ட தட்டிகளை வைத்து அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தார் ஆர்.சுந்தர்ராஜன். கூடவே அனைத்து உறுப்பினர்களுக்கும் போன் செய்து வாக்கு சேகரித்தார். “306 பேர் என் மேல நம்பிக்கையா இருந்திருக்கானுகளேப்பா..” என்று சொல்லி சொல்லி அரற்றிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பாரதிராஜாவின் சீடர்தான் ஆர்.சுந்தர்ராஜன். அவரை அணியில் சேர்த்துக் கொள்ளாத கோபத்தில் தனித்து சுயேச்சையாக நின்று ஜெயித்துவிட்டார்.

வெற்றி செய்தி கிடைத்தவுடன் காரில் பறந்து வந்த பாரதிராஜாவை மெயின்ரோட்டில் இருந்து அரங்கம்வரையில் அலாக்காக தூக்கி வந்தார்கள் அவருடைய சீடர்கள். அவரே எதிர்பார்க்கவில்லை. மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் இயக்குநர் இமயம். “எங்கள் அப்பா பாரதிராஜா வாழ்க..” என்ற கோஷத்தைக் கேட்டு சட்டென்று குரல் உடைந்து அழுதுவிட்டார். “தளபதி அதிரடிப்படை ஆர்.கே.செல்வமணி வாழ்க..” என்ற கோஷமும் செல்வமணியை உணர்ச்சிவசப்பட வைத்தது. ஆனால் இவரும் அழுதார். காரணம்தான் வேறு. வீ.சேகர் தோற்றுப் போனதை நினைத்து, சட்டென்று அவருடைய கரம் பிடித்து அழுது தீர்த்துவிட்டார் செல்வமணி.

துணைத் தலைவர் தேர்தலில் விக்ரமன் பாரதிராஜாவுக்கு அடுத்த இடத்தில் 505 வாக்குகளை பெற்று அனைவரையும் அதிசயப்படுத்தியிருக்கிறார். அடுத்து சசிமோகன் 368 வாக்குகள் பெற்று ஜெயித்துள்ளார்.

இணைச் செயலாளர்களாக அமீர் 488 ஓட்டுக்களும், லிங்குசாமி 420 ஓட்டுக்களும், டி.கே.சண்முகசுந்தம் 290 ஓட்டுக்களும், ஏகம்பவாணன் 322 ஓட்டுக்களும் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்கள்.

செயற்குழு உறுப்பினர்களுக்கான பட்டியலில் பாரதிராஜா அணியில் போட்டியிட்ட அனைவருமே வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும்

1. S.எழில் - 445
2. பேரரசு - 417
3. யார் கண்ணன் - 416
4. ஈ.ராமதாஸ் - 414
5. மாதேஷ் - 403
6. பூபதிபாண்டியன் - 400
7. S.S.ஸ்டான்லி - 393
8. R.ஷிபி - 343
9. பாலி ஸ்ரீரங்கம் - 311
10. D.ஷிபிசந்தர் - 306
11. ராஜாகார்த்திக் - 243
12. ரவி கந்தசாமி - 220

இயக்குநர்கள் அனுமோகனும், டி.பி.கஜேந்திரனும். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவுதான் ஏற்றத்தாழ்வுகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும் இயக்குநர்கள் மீது துணை இயக்குநர்களுக்கு இருக்கும் மரியாதை போகவில்லை என்று இந்த தேர்தல் முடிவுகள் வந்த பின்பு தமிழ்த் திரையுலகம் முழுவதும் பேச்சு. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

இனி தமிழகத்தின் அனைத்துத் தலையாய விஷயங்களிலும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான திரு.பாரதிராஜாவின் குரலும் ஒலிக்கப் போகிறது. அதற்காகத்தான் இவ்வளவு பரபரப்பு.

எல்லாம் நன்மைக்கே..

நன்றி..

“கண்கள் பனித்தன; இதயம் இனித்தது..!”

13-12-28


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

பிரிந்தவர் கூடினால் உள்ளம் மகிழும்; உவகை பொங்கும். இது குடும்பத்தில். இதுவே ஒரு அமைப்பில் என்றால்..?

முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன்.

'அம்மா(AMMA)' என்பது 'Association of Malayalam Movie Actors' என்பதன் சுருக்கம். மலையாளத் திரைப்பட நடிகர் சங்கம். தங்களது சங்கத்தின் வளர்ச்சிக்காக நிதி திரட்ட முடிவெடுத்தனர் மலையாள நடிகர்கள். நிதி திரட்டுவதற்காக ஊர், ஊராகச் சென்று நட்சத்திர கலைவிழாக்கள் நடத்துவதற்குப் பதிலாக ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிடலாம் என்ற நல்லதொரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டுத் துவக்கி வைத்திருப்பவர் இப்போதைய மலையாள உலகின் முன்னணி நடிகர் திலீப். தானே சொந்தமாக அப்படத்தினைத் தயாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து சங்கத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களும் பைசா காசு வாங்காமல் நடிப்பதற்காக ஒத்துக் கொண்டனர். வேலைகள் துவங்கின. படத்தின் பெயர் டுவென்ட்டி டுவென்ட்டி(Twenty 20).


மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், திலீப், பிருத்விராஜ், முகேஷ் என்று தனி ஹீரோக்கள் அனைவருமே முண்டாசுகட்டி கோதாவில் இறங்கிவிட்டதால் இவர்கள் அனைவருக்கும் ஏற்றாற்போல் கதை செய்து, அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்து கடைசியாக நிதி திரட்டுவதற்கான படம் என்பதனால், இதனை வெற்றிப் படமாகவும் ஆக்க வேண்டிய கட்டாயம் இருந்ததினால் இயக்குநரை மட்டும் மிகக் கச்சிதமாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஜோஷி. மலையாளத் திரைப்பட உலகில் 1985-க்குப் பிற்காலத்திய திரைப்படங்களிலிருந்து இன்றுவரையிலும் திரைக்கதைக்கு என்று தனி முத்திரை பதித்த திரைப்படம் “நம்பர் 20 மெட்ராஸ் மெயில்”. இன்றைக்கும் கமர்ஷியல் திரைப்படம் என்றாலும், சஸ்பென்ஸ் திரைப்படம் என்றாலும் சரி இரண்டிற்குமே விறுவிறுப்பான, வேகமான திரைக்கதை என்கிற உதாரணத்திற்கு இத்திரைப்படத்தைத்தான் சினிமா ஆர்வலர்கள் கை காட்டுவார்கள்.

அதிலும் அப்போதைய சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் சில வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் அது. அவர்கள் இருவருக்கும் போதுமான ஸ்கோப் வைத்து திரைக்கதையை கச்சிதமாக செய்திருந்தார் ஜோஷி. தமிழகத்தில்கூட பரபரப்பாக ஓடிய பெருமையுடையது அத்திரைப்படம்.

அதே ஜோஷியிடம் இத்திரைப்படமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடைய ஒரே பணி படம் ஹிட்டாக வேண்டும். அவ்வளவுதான். அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நடிகர்கள் இறங்கி வருவார்கள். ஒத்துழைப்பார்கள் என்று முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஜோஷிக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

மிகச் சின்ன கதை. பழி வாங்குதல்தான். சினிமா பாணியில் கதைக்கு வெள்ளி முலாம் பூசும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு காலத்திற்கேற்றாற்போல் தற்போது வைர முலாம் பூசி வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜோஷி.
ஒரு கொலையும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களிற்குள் அனைத்து நட்சத்திரங்களையும் வைத்து தேர் இழுத்திருக்கிறார் இயக்குநர்.

ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாதனின் பாரம்பரிய குடும்பத்தின் இன்றைய வாரிசுகள், அக்குடும்பத்து பெயரைக் கெடுப்பவர்கள் போல் நடந்து கொள்ள அதில் ஒரு பேரனை போலீஸ் கைது செய்கிறது. அவனைக் காப்பாற்ற வருகிறார் பிரபலமான வக்கீல் தினேஷ் நம்பியார். காப்பாற்றியும்விடுகிறார்.

ஆனால் அடுத்த நாளே அந்த பேரன் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்கிறார் மாவட்ட எஸ்.பி. ஆனால் அவன் கொலையாளி இல்லை என்று அவன் குடும்பத்தினர் வக்கீல் தினேஷ் நம்பியாரிடம் வந்து கண் கலங்கி அழுக.. தீவிரமாக களமிறங்கும் வக்கீல் கொலையாளியை காப்பாற்றிவிடுகிறார்.

இதன் பின்தான் கதையே.. இப்போது கொலையாளி தானே முன் வந்து வக்கீலிடம் “நான்தான்.. இதே கையாலதான்.. அவனை கொலை செஞ்சேன்..” என்று சொல்ல வக்கீல் அதிர்ச்சியாகிறார்.

இதில் இருக்கும் மர்மத்தை உடைக்க புறப்படுகிறார் வக்கீல். மர்மத்தின் முடிச்சுகள் அவிழ, அவிழ.. மர்மத்தின் துவக்கப் புள்ளி தன்னிடமே வந்து நிற்பதை உணர்கிறார் வக்கீல்.

முடிவில் தான் காப்பாற்ற நினைத்தவர்களே தனக்கு வில்லன்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் அவர், அந்தக் கொலையாளியுடன் இணைந்து திரைப்படங்களின் சம்பிராதயமான, வழக்கமான முடிவுரையை செய்து படத்தினை நிறைவு செய்கிறார்.

இப்படித்தான் இக்கதையை சொல்ல முடியும். முழுக் கதையையும் கேட்டீர்களானால் திரைக்கதை உங்களுக்கு சலிப்பாகிவிடும். ஏனெனில் இதில் நடிப்பு என்பது அதிகமில்லை. அனைத்தும் ஆக்ஷன்தான்.

வக்கீலாக மம்முட்டியும், கொலையாளியாக மோகன்லாலும், எஸ்.பி.யாக வழக்கம்போல சுரேஷ்கோபியும் நடித்திருக்கிறார்கள். மேலும் சீனிவாசன், மனோஜ் கே.ஜெயன், முகேஷ், திலீப், இன்னசென்ட், ஜெயராம், மது, கவியூர் பொன்னம்மா, நயன்தாரா, சிந்து, கோபிகா, காவ்யா மாதவன், கார்த்திகா, பாவனா, ஜெயசூர்யா, குஞ்சக்கோகாபன், மேலும் எனக்குப் பெயர் தெரியாத மலையாள நட்சத்திர பட்டாளங்களும் ஏராளம். ஏராளம்..

ஒரேயொரு காட்சியில் சும்மா நிற்கின்ற மாதிரியாகக்கூட நடிகர்கள் நடித்து ஒத்துழைத்திருக்கிறார்கள். சீனிவாசன் அவருக்கே உரித்தான அடக்கமான முறையில் ஒரேயொரு ஒரு நிமிட காட்சியில் வருகிறார். நமது நயன்தாராவும் ஒரேயொரு குத்துப் பாடலுக்கு தனது உடலைக் காட்டி்விட்டுப் போகிறார்.

படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமே வழக்கம்போல ஜோஷியின் திரைக்கதை வேகம்தான். படம் 3 மணி நேரம் என்பதால் பல காட்சிகளில் கத்திரிக்கோல் அடுத்தக் காட்சியை உடனுக்குடன் கொண்டு வருவதைப் போல் வெட்டித் தள்ளியுள்ளது. கார்களும், வேன்களும் cut to shot-களாக இந்தப் படத்தில்தான் அதிகம் பறந்துள்ளன.

சில இடங்களில் கொட்டாவி விடும் அளவுக்கு வேகத்தைக் குறைத்த காட்சிகளும் உண்டு. உதாரணம் மம்முட்டி அறிமுகக் காட்சியில்.. அவர் கோர்ட்டுக்குள் நுழையும்போது அவரைத் தடுத்து அவரது குமாஸ்தா பேசும் காட்சி ஸ்பீடை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதேபோல் மம்முட்டியும், மோகன்லாலும் பிளாட் வீட்டுக்குள் பேசுவதும், பின்பு அடித்துக் கொள்வதும் சின்னப்பிள்ளைத்தனமாகப் போய்விட்டது.

நல்லவேளையாக.. இந்தத் தொழில் நுட்பம் என்ற ஒன்று வந்தாலும் வந்தது. நமது வயதான நடிகர்கள் தப்பித்தார்கள். இல்லையேல் அவ்ளோதான். சண்டைக் காட்சிகளே நமக்கு காமெடியாகிவிடும்.

கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, முகேஷ், ஜெயராம் என்று ஐந்து பேரின் சண்டைக் காட்சியில் வேறு வழியே இல்லாமல் தொழில் நுட்பந்தான் இயக்குநருக்கு கை கொடுத்துள்ளது. வேறென்ன செய்வது? மலையாள நடிகர்களுக்கு நடிப்பு வருகின்ற அளவுக்கு சண்டைப் பயிற்சி வராது என்பது ஊர், உலகத்திற்கே தெரியும்.

மற்றபடிக்கு படம் ஒன்றும் மோசமில்லை. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம். பொழுதுபோவது தெரியவில்லை. படம் கேரளாவில் மிகப் பெரிய ஹிட். போட்ட பணத்திற்கும் மேலாக முதல் வாரத்திலேயே கோடிக்கணக்கில் அள்ளிவிட்டார்கள். ‘அம்மா’ அமைப்பினர் இப்போது மிக மிக சந்தோஷத்தில் திளைத்திருக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது. அவ்வளவே..

இந்தத் திரைப்படத்தினால் எனக்கும் ஒரே ஒரு பேருதவி. கடந்த ஒரு மாத காலமாக நகம் கடிக்காததினால் கன்னாபின்னாவென்று வளர்ந்திருந்த எனது பத்து விரல்களின் நகங்களையும், இந்தப் படத்தினை பார்த்துக் கொண்டிருந்தபோது கடித்துக் குதறி எடுத்துவிட்டேன். நீண்ட நாட்கள் கழித்து இப்படியொரு கொலை வெறி.

இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் மலையாளத் திரைப்பட உலகின் பெருமையைச் சொல்லக்கூடிய இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற, குறிப்பிடத்தக்க இரண்டு மலையாள நடிகர்கள் இடம் பெறாதது எனக்கு வருத்தமே. ஒருவர் திலகன், மற்றொருவர் நெடுமுடி வேணு.

அதற்கு முன் சில காலம் முன்பு ‘அம்மா’வில் நடந்த குடும்பச் சண்டையை லேசுபாசாக சொல்லிவிடுகிறேன்.

முன்னொரு காலத்தில் திடீரென்று மலையாளத் திரையுலகில் எந்த ஹீரோவுமே ஹிட் கொடுக்க முடியாமல் படத் தயாரிப்பில் நஷ்டமோ நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், தமிழ்த் திரைப்பட நடிகர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தடை விதித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தார்கள்.

இதனை அப்படியே காப்பியடித்தால் வெளியிடங்களில் தங்களது அபிமான நட்சத்திரங்களைக் காண முடியாத ரசிகர்கள், தியேட்டர்களுக்கு கும்பலாக ஓடி வருவார்கள் என்று கணக்குப் போட்ட மலையாள திரையரங்கு அதிபர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மூன்றும் இணைந்து மலையாள நடிகர்கள் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்கள்.

மலையாள சேச்சிகளும், சேட்டன்களும் அதிகம் கும்மியடித்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளில் மாதத்திற்கு பல கலை நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில்தான் மலையாள நட்சத்திரங்களுக்கு செம துட்டு. ஏற்கெனவே மலையாளத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கான சம்பளத்தை கர்ச்சீப்பில்தான் சுருட்டி தருவதாக பொறுமிக் கொண்டிருந்த மலையாள நடிகர் சங்கம் இதை முழுமையாக நிராகரித்தது.

கோபமான தயாரிப்பாளர் சங்கம் தங்களது தயாரிப்புக்களை சில காலம் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது. தொடர்ந்து அங்கே ஸ்டிரைக் துவங்கியது.

இந்தக் காலக்கட்டத்தில் ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில்தான் மலையாளத் திரையுலகின் மூத்த நடிகரான திரு.திலகன் “தயாரிப்பாளர்கள் சொல்வது சரிதான். நாம் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கூடாது..” என்று தயாரிப்பாளர்களுக்குச் சாதகமாகப் பேசினார். இதனை மிக, மிக மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டார்கள் மம்முட்டியும், மோகன்லாலும் பிற நடிகர்களும். அன்றிலிருந்து அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்களாம் சூப்பர் ஸ்டார்களான இந்த இருவரும்.

பின்பு ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம்போல திரையுலகம் இயங்கத் தொடங்கிய பின்பும் மம்முட்டியும், மோகன்லாலும் திலகனை தங்களுடைய படங்களில் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். திலகன் மீதான புறக்கணிப்பு மிகப் பெரியத் திரைப்படங்களிலும் தொடர ஆரம்பித்ததால்.. புதிய சிறிய, இயக்குநர்கள், மற்றும் சிறிய நடிகர்களின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்கத் துவங்கினார் திலகன்.

தன்னை அனைவரும் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிய வந்ததும் பொங்கித் தீர்த்தார் திலகன். “ஸ்கிரீனில் பெயர் முழுவதையும் நானே தட்டிச் சென்றுவிடுவேன் என்கிற வெற்று பொறாமையால், சூப்பர் ஸ்டார்களே என் நடிப்பைக் கண்டு பயப்படுகிறார்கள்..” என்றெல்லாம் பேட்டியளித்தார்.

மோகன்லாலையும், மம்முட்டியையும் பெயர் குறிப்பிடாமலே “மலையாளத் திரையுலகில் யாரும் சூப்பர் ஸ்டார்களே இல்லை..” என்றெல்லாம் திலகன் சொல்ல ஆரம்பிக்க, இந்த சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களில் திலகன் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே போய்விட்டது.

ஆனாலும், “திலகனுடைய கோபமெல்லாம் சக நடிகர் நெடுமுடி வேணு மீதுதான்” என்கிறார்கள் மலையாளப் பத்திரிகையாளர்கள். நெடுமுடி வேணுதான் தன்னைப் பற்றி நடிகர் சங்க கூட்டத்தில் இல்லாததும், பொல்லாததுமாகச் சொல்லி தனது அனைத்து பிள்ளைகளையும் தனக்கெதிராக திசை திருப்பிவிட்டதாகக் காட்டமாகப் பேட்டியளித்திருக்கிறார் திலகன். “நெடுமுடிவேணு நல்ல மனிதரல்ல. அவர் யாரையும் வாழ விடமாட்டார்..” என்கிற ரீதியில் திலகனின் பேட்டி இருந்தது.

அதன் பின் இதே ஜோஷியின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் மம்முட்டியுடன் திலகன் நடிக்க வேண்டி வந்தது. ஜோஷியின் விருப்பம் என்பதால் மம்முட்டியும் இதில் தலையிடவில்லை. ஆனாலும் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் திலகன் மட்டும் தனித்துவிடப்பட்டு மற்ற நடிகர்களெல்லாம் மம்முட்டியின் பின்னால் அணி வகுத்தது அப்போதைய ஷ¥ட்டிங்கின்போது பரபரப்பான விஷயம். (சூர்யா டிவியில் பரபரப்பு ஸ்கூப் நியூஸாக இதனை சுடச்சுட ஒளிபரப்பினார்கள். நான் பார்த்தேனாக்கும்..)

சமீபத்தில் நடந்த திலகனின் மகள் திருமணத்திலும் முக்கிய நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதில் மனிதர் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. இதற்கு முன்பு ஒரு முறை சென்னையில் திலகனுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றபோது, மலையாளத் திரையுலகமே திரண்டு வந்து ஒருவர் மாற்றி ஒருவர் முறை வைத்து அவரைப் பார்த்துக் கொண்டது மலையாளத் திரையுலகில் மிகப் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏனெனில் இந்த நிகழ்ச்சியினைப் பற்றி பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு “இது போல் தமிழ் நடிகர்கள் நடந்து கொள்வார்களா?” என்றெல்லாம் எழுதியிருந்தது இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது.

சரி விடுங்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் ஒன்று சேரட்டும். மனிதர்கள் முனையவில்லை என்றாலும், காலம் நிச்சயம் அதனை செய்யும்.

திலகன் சரி.. நெடுமுடிவேணு ஏன் இத்திரைப்படத்தில் இடம் பெறவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவருக்கேற்ற வேடம் இதில் இருந்தது. மேலும் நடிகைகளில் சுகுமாரி, கவியூர் பொன்னம்மா தவிர கே.பி.சி.பி.லலிதாவைக் காணவில்லை. ஊர்வசிக்கு பதிலாக அவரது சகோதரி நடித்திருக்கிறார்.

இத்தனை நடிகர்களையும் ஒரே திரைப்படத்தில் பார்ப்பது என்பது இனிமேல் முடியாத காரியம்போல்தான் தெரிகிறது. தனித்தனியாக ஆவர்த்தனம் செய்து தனி ராஜ்யம் கட்டிக் கொண்டிருந்தவர்கர் தங்களுடைய தாய் அமைப்புக்காக ஒரு குடிலுக்குள் வந்திருப்பது அவர்களுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

இவர்களாவது ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழட்டும்..

தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் பிரிந்திருக்கும் குடும்பத்தினர், ஒன்றுகூடினால் “கண்கள் பனித்தன; இதயம் இனித்தது” என்று சொல்வதுதான் “பேஷன்” என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் நானும் அதையே இப்பதிவின் தலைப்பில் வைத்தேன்.

அவ்வளவுதான்..
நன்றி..

யாருமே படிக்காத 'காலச்சுவடு..!'


10-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

‘தினசரி’,
‘தமிழ்ச்சுடர்’,
‘தின சூரியன்’,
‘நம் தினமதி’,
‘பிற்பகல்’

படித்து முடித்துவிட்டீர்களா..? குறுக்கெழுத்துப் போட்டிக்காக தயார் செய்யப்பட்டவை அல்ல இவை.. இவையெல்லாம் வெறும் தமிழ் வார்த்தைகளும் அல்ல. தமிழ்நாட்டில் வெளிவருகின்ற தினசரி பத்திரிகைகளின் பெயர்களாம். தமிழக அரசே சொல்கிறது. நம்புங்கள்.

அப்படியே கீழே உள்ளவைகளையும் ஏக் தம்மில் மூச்சு வாங்க படித்து முடித்து விடுங்கள்..

“தி ரெய்சிங் சன், கடலார், கனிமொழி, தாகூர் கல்விச் செய்தி, திரிகமுகம், தெலுங்கர் கீதம், அற்புத ஆலயமணி, எங்களுக்கு மகிழ்ச்சி, சிவ ஒளி, ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர், கவலைப்படாதே, நவசக்தி விஜயம், நல்வழி, நித்யானந்தம், ராமராஜ்யம், பாபாஜி சித்தர் ஆன்மிகம், கருதவேலி, ஞானவிஜயம், திராவிட ராணி, பண்ணாரி அம்மன் செய்திமலர், பாஞ்சஜன்யம், பென்சனர் கணினி, மலர்ந்த ஜீவிதம், மாத்ருவாணி, லேடிஸ் ஸ்பெஷல், வேதாந்த கேசரி, ஜங்கம இதழ், எங்கள் மக்கள் தலைவன்..”

முடிந்ததா..? இவைகளெல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகின்ற வார மற்றும் மாத இதழ்களாம்..

இவைகளில் எத்தனை பத்திரிகைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள். படிக்கவில்லையெனில் இனிமேற்கொண்டு படியுங்கள். ஆனால் ஒன்று. இவைகள் எந்தக் கடைகளிலும் கிடைக்காது.. படித்தே தீர வேண்டும் என்று நினைத்தீர்களானால், நீங்கள் அரசு பொது நூலகத்திற்குத்தான் செல்ல வேண்டும். நூலகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சில பருவ இதழ்களும், நாளிதழ்களும் பிரிண்ட் செய்யப்படுகின்றனவாம்.

இதில் ஒரு விஷயம். கடந்த 2008 ஏப்ரல் மாதத்திலிருந்து ‘காலச்சுவடு’ பத்திரிகையை தமிழக பொது நூலகத் துறை, தனது நூலகங்களுக்காக வாங்குவதனை நிறுத்திக் கொண்டு விட்டது.

இது பற்றி காலச்சுவடு பத்திரிகையும், பல்வேறு இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் அரசுக்கு எழுதிச் சொல்லியும், பேசியும் இதுவரை எந்தவிதப் பயனுமில்லை.

இது பற்றிய செய்தி 24.08.08 தேதியிட்ட ஜீனியர்விகடன் இதழில் வெளியானது. அதில் இது குறித்து பேட்டியளித்திருந்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அளித்திருந்த பதில் இது..

“வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான், ‘காலச்சுவடு’ பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். ‘காலச்சுவடு’ பத்திரிகை வாசகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றானால், இந்தப் பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்..”

எப்படி இருக்கிறது கதை..?

‘காலச்சுவடு’ பத்திரிகை அதிகம் வாசகர்களால் படிக்கப்படாத இதழாம். மேலே புதுப் புதுப் பெயர்களில் இன்றைக்குத்தான் நீங்களும், நானும் கேள்விப்பட்டிருக்கும் நாளிதழ்களும், பருவ இதழ்களும் மட்டுமே அதிகமான தமிழ் வாசகர்களால் படிக்கப்படக்கூடியவைகளாம்.

அமைச்சரின் கூற்று எப்பேர்ப்பட்ட பொய் என்பது அவருக்கே தெரிந்திருந்தும் ஏதோ ஒரு ‘அழுத்தம்’ காரணமாகவே அவருடைய செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது.

காலச்சுவடின் அரசியலை நான் பார்க்கவில்லை. அதன் இலக்கியத் தன்மையை நான் ஆராயவில்லை. அதனுடைய பத்திரிகை நேர்மையை நான் சல்லடை போடவில்லை. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வெகுஜனப் பத்திரிகை என்பதில் எனக்கு ஐயமில்லை.

இதற்கு முன்பு கனிமொழி காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்தவரையிலும் அதன் வாசகர்கள் அதிகம் பேர் இருந்திருக்கிறார்கள் என்பது அமைச்சரின் மறைமுகமான கருத்து. கனிமொழி காலச்சுவடில் இருந்து விலகிய பின்பு, கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு பற்றியும், மதுரை இளவரசரின் செயல்பாடுகள் பற்றியும் காலச்சுவடு விமர்சிக்கத் தொடங்கிய உடனேயே, அதனுடைய பார்வையாளர்களும், வாசகர்களும் மெதுவாகத் தேய்ந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் சுற்றி வளைத்துத் தெரிவிக்கிறார்.

இன்றைய முதல்வர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒரு பத்திரிகையாளன் என்று மைக் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இந்தப் பிரச்சினை வெளிவந்த பின்பு இன்றுவரையில் இதற்கு மட்டுமே பதில் சொல்லாமல் இருக்கிறார்.

கனிமொழியின் நெருங்கிய நண்பர் கார்த்தி சிதம்பரமே முதல் கையெழுத்திட்டு பல்வேறு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியகர்த்தாக்களின் கையொப்பத்துடன் ஆதரவுக் கடிதம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனாலும் இன்னமும் அரசு இறங்கி வரவில்லை.

ஆக.. “என்னை எதிர்த்தால், நீ தொழில் செய்ய முடியாது. என்னை அனுசரித்தால், உன் தொழில் நடக்கும்” என்கிற பாசிஸ்டு, சர்வாதிகார மனப்பான்மை இன்னமும் நமது அரசியல்வியாதிகளுக்குப் போகவில்லை என்பது இந்த ஒன்றிலிருந்தே நமக்குப் புலனாகிறது..

வாழ்க ஜனநாயகம்..!

வளர்க திராவிடம்..!

தர்மசங்கடம் என்பது இதுதானோ..?

10-1௨-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

'தர்மசங்கடம்' என்கிற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை, சில வேளைகளில் மட்டுமே நமது வாழ்க்கையில் உணர்ந்திருப்போம்.

அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியது இந்தப் புகைப்படங்கள்.

நீங்களே பாருங்கள்.











சமீபத்தில் கேரளாவின் கொச்சி கடற்கரையில் எரிக்ஸன் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலருக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாம். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகாரிகளை வரவேற்ற எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் திருமதி பீனாவிற்குத்தான் வெளிநாட்டினரின் இந்த மரியாதை..

பாவம் கலெக்டரம்மா..

முடியாது என்று தடுக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. அவருடைய தவிப்பு, புகைப்படத்திலேயே தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.

தர்மசங்கடம் என்பது இதுதானோ..?

குமுதம் சிநேகிதியின் ‘லொள்ளு!’


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையில் சினிமா போஸ்டர்களை மட்டுமே துணுக்குற்று வந்த எனக்கு சமீபத்தில் ஒரு பத்திரிகையின் போஸ்டரை பார்த்து லேசாக மிதப்பே வந்தது.. “6 A.M. To 6 P.M. கல்லூரி பெண்கள் யூரினை அடக்கலாமா?” இதுதான் போஸ்டரில் இருந்த தலைப்பு. ‘குமுதம் சிநேகிதிபத்திரிகையின் போஸ்டர் இது. தெருவோர புத்தகக் கடைகள் அனைத்திலும் ஜெகஜோதியாக தொங்கிக் கொண்டிருந்தது.

கருத்து சுதந்திரம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது. உண்மைதானே.. நடப்பதைத்தானே எழுதுகிறார்கள் என்பார்கள் சிலர். வேறு மாதிரி மாற்றி எழுதியிருக்கலாம் என்பார்கள் பலர். வேறு மாதிரி என்றால்.. யூரின் என்பதனை சிறுநீர் என்று மட்டுமே மாற்ற முடியும்.. அது அதைவிட முகம் சுழிக்க வைக்குமே..

வேறு என்ன வழி..? கல்லூரிப் பெண்களுக்கு உடல் நலன் டிப்ஸ் என்ற தலைப்பில் வைக்கலாம். ஆனால் எந்தபகுதிக்குஎன்பதைக் குறிப்பிடவில்லையெனில்காயகல்பம்கேஸாகிவிடும்.

முடியலையா..? விட்ருங்க.. முதலில் ஏன் முகம் சுழிக்கிறீர்கள். உள்ளதைத்தானே சொல்கிறார்கள். பிடித்திருந்தால் வாங்கிப் படியுங்கள். பார்க்கப் பிடிக்காதவர்கள் அடுத்த போஸ்டரில் தெரியும் நயன்தாராவைப் பார்த்து ஜொள்ளுவிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்யுங்கள்.. வாங்காமல் விடுங்கள். ‘முதலாளிகள்என்ன புரசைவாக்கம் அரண்மனையில் இருந்து தெருவுக்கா வரப் போகிறார்கள்..?

அடப் போங்கப்பா..

(போஸ்டர் கிடைக்கல.. இந்தப் புத்தகமும் இல்ல.. இது சும்மா ஒரு ஜாலிக்கு..)

கலைஞருக்கு நன்றி


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“சினிமாக்காரர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

சினிமாக்காரர்களால்தான் தமிழ்நாடு இந்த இழிவான நிலைமைக்குப் போய்விட்டது..

சினிமாவினால்தான் தமிழ்நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது.

அடுத்தும் ஒரு சினிமாக்காரன் வந்துதான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? தமிழன் இளிச்சவாயன் என்று நினைத்தார்களா..?”

இது போன்ற கோஷங்களெல்லாம் இப்போது தமிழ் பேசும் கட்சிகளின் ரெகுலர் கோஷங்களில் டாப் டென் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.

ஆனாலும் சினிமாவை தமிழகத்தின் தலையாயத் துறையாக மாற்றிய பெருமையுடையவர்கள் சினிமாவை கலையாக, அதனை ஒரு மேம்படுத்தப்படும் துறையாக நினைத்த கலைவல்லுநர்கள்தான்..

ஓவியம், நுண்கலை, புத்தகம், கட்டிடக்கலை, சமையல் கலை போன்று சினிமாவிலும் ஒரு கலை உள்ளது. அந்தக் கலையில் தேர்ந்தவர்களால்தான் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் ரசிகர்களைக் கட்டி போட முடிகிறது. அவர்களால்தான் திரைப்படம் வெற்றி பெறுகிறது. இதில் கை தேர்ந்தவர்கள் கூட்டணி அமைத்தால், அது அசைக்க முடியாத முழு மெஜாரிட்ட பெற்ற அரசியல் கூட்டணியைப் போல்.. சூப்பர்ஹிட் இவர்களால்தான்.

இவர்களது சினிமா ஆசையும், ஆர்வமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. அவர்களுடைய ஆர்வத்திற்கு தீனி போடுவதுதான் உலக சினிமா. பல்வேறு மொழி திரைப்படங்களை உள்வாங்கிக் கொண்டு இன்னும் தீவிரமாக தமிழிலும் அது போன்ற படைப்புகளை வெளிக்கொணர வைக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அந்த கலைஞர்களுக்கு உலக சினிமா பற்றிய அறிவு மிக அவசியம்.
நான் இந்தப் பதிவிலும்,
இந்தப் பதிவிலும்
சொன்னது போல கடந்த 5 வருடங்களாக ICAF என்கிற தனியார் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்று வந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இதுவரையிலும் தனி நபர்கள், அமைப்புகளின் ஆதரவோடுதான் நடந்து வந்தது.

இப்போது, இந்த ஆண்டுதான்.. முதல் முறையாக தமிழக அரசின் நிதியுதவியோடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆணையையும், உதவித் தொகையையும் தமிழக முதல்வர் கலைஞர் நேற்று ICAF அமைப்பின் செயலாளரும், விழாக்குழுத் தலைவருமான திரு.ரங்கராஜ், துணைத் தலைவர் திரு.சீனிவாசன் மற்றும் இன்னுமொரு துணைத் தலைவர் திரு.எஸ்.வி.சேகரிடமும் வழங்கியுள்ளார். (படம் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்)

25 லட்சம் ரூபாய் உதவி என்பது சாதாரண விஷயமில்லை. இந்த விஷயத்தில் தனி அக்கறை எடுத்து, மிக சரியான தருணத்தில், சரியான முறையில் முதல்வரிடம் கொண்டு சென்று ஜெயித்துக் காட்டியிருக்கும் ICAF அமைப்பின் துணைத் தலைவரும், நடிகரும், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு.எஸ்.வி.சேகருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் என்று மூன்று இடங்களிலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிகளோடு நடத்தப்படும்போது தமிழ்நாட்டிலும் அது போன்ற நிதியுதவி செய்து நடத்த வேண்டியது அரை நூற்றாண்டு காலமாக கலைத்துறையின் மூலமாக மாநிலத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருப்பவர்களின் கடமை. செய்ய வேண்டிய கடமையை சரியானத் தருணத்தில் செய்திருக்கிறார் கலைஞர்.

பல்வேறு எதிர்க்கணைகள் வந்தாலும் போயஸ் தோட்டத்து அம்மாவின் எதிர்ப்பு அறிக்கை, இந்த நிதி உதவி செய்திக்கு வராது என்பதாலும் கலைஞருக்கு ஒரு நாள் அறிக்கை விடும் வேலை கிடையாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் பாட்டாளிகளின் தலைவர் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது போன்ற சினிமா விழாக்களினால் சினிமா என்கிற கலைத்துறை தனி மெருகேற்றி ஒரு புதிய விஷயத்தைத் தொட்டுக் காண்பிக்கும் என்றால் அதனால் தமிழ்நாட்டிற்குத்தான் பெருமை.

அரசியல் ரீதியாக கலைஞர் பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சினிமா துறையின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் மனதில் வைத்து, சினிமா துறையில் முதல்வனாக இருக்கின்ற கடமையினாலும், நிதியுதவி வழங்கியிருக்கும் முதல்வர் கலைஞருக்கு உலக சினிமாவின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் என்கிற முறையில் எனது மனமார்ந்த நன்றியினை கலைஞரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

''எல்லாம் அவன் செயல்!' - வெளிவராத செய்தி


“நாங்க மட்டும் இல்லைன்னா.. இந்த வேலைக்கு யாரை கூப்பிடுவீங்க..?” - பதிவர்களே பதில் சொல்லுங்கள்..!




09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நட்ட நடுநசியில், நடுத்தெருவில் நீங்கள் மட்டும் தனியாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் அனுபவத்தை உங்களில் யாராவது பெற்றிருக்கிறீர்களா..?

சில நாட்களுக்கு முன் எனக்கு நடந்தது.

என்னுடைய மிக நெருங்கிய அக்கா ஒருவர் சென்னையில் இருக்கிறார். நான் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். வஞ்சகமில்லாத பாசக்காரர்கள் அவரும், அவருடைய கணவரும். சில நாட்கள் அவர்கள் வீட்டிலிருந்தே வேலைக்கும் சென்று வந்திருக்கிறேன்.

சென்ற வாரம் தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு தாம்பரம் அருகே புதிதாக வாங்கியிருந்த வீட்டிற்கு குடி புகுந்தார்கள். அவர்களுக்கு ஒரே பையன். இப்போது அமெரிக்காவில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறான். “துணைக்கு ஆள் இல்லாத காரணத்தால் என்னால் வர முடியுமா..?” என்று கேட்டார் அக்கா.

அதற்காகத்தானே அவதாரம் எடுத்திருக்கிறேன். முடியாது என்று சொல்வேனா..? “வருகிறேன்..” என்றேன். அவர்கள் அழைத்தது போல் சனிக்கிழமை இரவில் அவர்களது வீட்டில் ஆஜரானேன்.

“நம்மால் முடிந்ததை பேக் செய்து வைப்போம். மீதியை வருகின்ற ஏஜென்ஸிக்காரர்கள் செய்து கொள்வார்கள்..” என்றார் மாமா. அந்த ஏஜென்ஸிக்காரர்கள் பற்றி கேட்டேன். “Packers and Movers” என்றார் மாமா. அப்படியொரு தொழில் இப்போது சென்னையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்லி சில உதாரணங்களையும் தெரிவித்தார்.

“ஒரே நாளில் மூன்று அஸைன்மெண்ட்டுகளைக்கூட கையில் எடுப்பார்கள். அவ்வளவு வேகமாக பேக் செய்வார்கள். ஒரு பொருள் உடைந்தாலும் அதற்கு நஷ்டஈடு தந்துவிடுவார்கள். உடையாமல் கொண்டு வந்து தருவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம்..” என்றார் மாமா.

சனி இரவு விடிற்காலை 3 மணிவரை பேக் செய்தோம். மறுநாள் காலை 10 மணிக்குள்ளாக பாதியைக் கட்டி முடித்துவிட்டு ‘அக்கடா’ என்று காலை நீட்டி அமர்ந்து மாமா ஏஜென்ஸிக்காரர்களுக்கு போன் செய்தார். ‘இதோ வருகிறோம்’.. ‘அதோ வருகிறோம்’.. ‘வந்து கொண்டேயிருக்கிறோம்..’ என்றெல்லாம் சொல்லியபடியே இருந்தார்கள். நேரம் ஓடியதுதானே தவிர, ஆட்கள் வரவில்லை.

அக்கா இப்போது இருந்த வீட்டின் தெரு மிக மிக பிஸியான தெரு. பிரதான சாலையை இணைக்கக்கூடிய தெரு என்பதால் எப்போதும் கார்கள், டூவீலர்களின் அணிவகுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அந்த பிளாட்டில் இருப்பவர்களில் யாராவது வீட்டைக் காலி செய்தாலோ அல்லது புதிதாக வீட்டுக்குக் குடி வருகிறார்கள் என்றாலோ அவர்கள் வருகின்ற நேரம் அல்லது செல்கின்ற நேரம், விடியற்காலை அல்லது பின்னிரவு என்பதாகத்தான் இருக்கும். அல்லது ஞாயிறு பகலாக இருக்கும்.

காலையில் இருந்து காத்திருந்து இரவு 10.20 மணிக்குத்தான் லாரி வந்து சேர்ந்தது. மொத்தம் 4 பேர் டிரைவருடன் சேர்த்து. டிரைவர்தான் கேப்டனை போல். நான்கு பேருமே இளந்தாரிகள். இளைஞர்கள்.. பேச்சில் அச்சு அசலாக மெட்ராஸ் பாஷை பாடை கட்டி உட்கார்ந்திருந்தது. ஆனால் செயலில் சூப்பர்சானிக் விமானம் போல..

மடமடவென வேலையில் இறங்கினார்கள். வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தவுடனேயே எத்தனை அட்டைப் பெட்டி பார்சல்கள் தேவைப்படும், எத்தனை சாக்குகள் தேவைப்படும் என்பதனை கண்களாலேயே முடிவு செய்து கனகச்சிதமாக எடுத்து வந்தார்கள்.

இதன் பின் வேகம், வேகம், வேகம்தான்.. அக்கா வீடு முதல் மாடியில் இருந்தது. இறங்கி அங்கிருந்து ஒரு 20 நடை நடந்துதான் ரோட்டிற்கு வர வேண்டும். பார்சல்களைக் கட்டி முடிக்க இரவு 12.30 ஆனது. அதன் பின் ஒவ்வொரு பொருளாக கொண்டு வந்து லாரியில் ஏற்றினார்கள். மாமா என்னை லாரியின் அருகில் நின்று கவனித்துக் கொள்ளும்படி சொன்னார். நானும் சென்றேன்.

அவ்வப்போது வந்து சென்ற கார்கள், டூவிலர்களைத் தவிர தெருவில் மயான அமைதி. நான்கைந்து நாய்கள் மட்டும் என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து குரைக்கத் துவங்கின. தொகுதி விட்டு தொகுதி வரும் யாரையும் நாய்கள் மட்டுமே மிக எளிதாகக் கண்டு கொள்ளுமாம். ஏதோ புத்தகத்தில் படித்தது.

கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒன்று, இரண்டாக தூக்கியெறிந்து அவைகளை சிநேகம் பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.. ஆடத் துவங்கிய வால், லாரி அந்தத் தெருவைக் கடக்கும்வரையில் உடன் ஓடிவரும்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கீழே சாய்ந்தது.

எவ்வளவு நேரம்தான் நிற்பது என்றெண்ணி ஏற்றவிருந்த சேரை மடக்கி அதில் உட்கார்ந்தேன். இடை, இடையே நாய்களுடன் கொஞ்சல் பேச்சு.. “உங்களுக்கெல்லாம் கவலையில்ல.. நிம்மதியா இருக்கீங்க.. வீடு மாத்தணும்னு இவ்ளோ பேஜாரு இல்ல.. கிடைக்கிறத சாப்பிட்டுட்டு, இருக்குற இடத்துல இருந்துட்டு, சோறு போடுறவனுக்கு வாலாட்டிட்டு நல்ல பேர் எடுத்திட்டு முருகன் கூப்பிடும்போது போய்ச் சேரலாம்.. நாங்களும்தான் வந்து மாட்டிக்கிட்டிருக்கோம்.. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா உங்களை மாதிரிதான் பொறக்கணும்னு முருகன்கிட்ட வேண்டியிருக்கேன்..” என்று நாய்களோடு பேசிய என் பேச்சு அந்த நால்வரையும் வெகுவாகக் கவர்ந்து கொண்டுதான் இருந்தது.

அவ்வப்போது என்னருகில் வந்து நான் பேசுவதைக் கேட்டுவிட்டு சிரித்தபடியே போய்க் கொண்டிருந்தார்கள். என்ன, ‘லூஸ¤’ன்னு சொல்லலை.. அவ்ளோதான்.. ஆனாலும் அவர்களும் வேலையில் கெட்டி. அப்போதைக்கப்போ ரெண்டு சிகரெட்டை பற்ற வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இரண்டு புல் பாட்டில் தண்ணீர் காலி. ஆனால் ஒரு இளைஞர், வாஷிங்மெஷினை முதுகில் சுமந்து வந்த போது அதிர்ச்சியில் நான் எழுந்தேவிட்டேன்.

ஆத்தாடி.. என் பேகை குனிஞ்சு தூக்கமே எனக்கு முதுகு வலிக்கும்.. இது எப்படி? ‘அதுலேயும் சிரிச்சுக்கிட்டே செய்றாங்களே முருகா..’ என்று என்னை ரொம்பவே அவஸ்தைப்படுத்தியது அந்த இரவு. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பேசத் துவங்கினேன். அனைவருக்குமே சொந்த ஊர் இதுதான். படிப்பு வயதில் குறைந்த ஒருவர் மட்டுமே 7-ம் வகுப்பு பாஸ். மற்றவர்கள் 4. 5, 6, என்று எண்ணிக்கை கணக்கில்தான்.

“ஏன் படிக்கவில்லை..?” என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார் டிரைவர். “ஏன் படிக்க வைக்கலைன்னு கேளுங்க..”. எனக்கு சுருக்கென்றது. ஆஹா.. இவர் லேசுபட்ட ஆளில்லை சாமின்னு நினைச்சேன். “காலையில இருந்து வரலியே..?” என்று பேச்சைக் கொடுத்தபோது இன்று காலையில் இருந்து அவர்கள் இதுவரையில் இதுபோன்ற 3 வேலைகளை முடித்துவிட்டுத்தான் இங்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்னால தாங்க முடியல.. “எப்படிங்க..?” என்றேன்.

அப்போதும் சிரிப்புதான்.. “என்ன செய்யறது சொல்லுங்க..? வேலை வரும்போது செஞ்சுத்தான் ஸார் ஆகணும்..” என்றார் டிரைவர். “இல்லை. இவ்ளோ கடுமையா உழைக்குறீங்களே.. உடம்பு தாங்குமா..?” என்றார். இன்னொருவர் சொன்னார்.. “தாங்குறவரைக்கும் உழைச்சுத்தான் ஸார் ஆகணும்.. வீட்ல அடுப்பு எரியணும்ல்ல..” என்றார் இன்னொருவர்.

நேரமானதால் பேச்சைக் குறைக்க வேண்டி வந்தது. இடையில் கடமை வீரர்களாக காவல்துறையினர் டூவீலர்களில் ரவுண்டு வந்து என்னருகே சடக்கென்று நிறுத்தினார்கள். “என்ன ஸார்?” என்றார்கள். “வீட்டைக் காலி பண்றோம்..” என்றேன். “இந்த நேரத்துலயா..?” என்றார் ஒரு காவலர். என்னை முந்திக் கொண்ட பில்லியன் காவலர், “பகல்ல ரோடு கிளியரா இருக்காது. அதான்.. இந்தத் தெருவே இப்படித்தான்.. சரி.. சரி..” என்று சொல்லிவிட்டு என் எதிரில் தன் முன்னங்கால்களைத் தாங்கிக் கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்த நாய்களை பார்த்து தன் தடியைக் காட்டி மிரட்டிவிட்டுப் போனார்.

ஒரு வழியாக இரவு 3.30 மணிக்கு அனைத்தையும் லாரியில் ஏற்றி புது வீட்டுக்குப் பயணமானோம். அக்காவுக்கு வருத்தமோ வருத்தம். 20 வருஷமா இருந்த வீட்டை காலி பண்றோமேன்னு பீலிங். மாமாவுக்கு ரொம்பவே சந்தோஷம். மகனுக்காக ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்தாச்சே என்ற கடமையாற்றிய திருப்தி.

தாம்பரம் அருகே புது வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது விடியற்காலை 4 மணி. அங்கேயும் unpack நடந்தது. இங்கே வீடு 2-வது மாடியில். “லிப்ட் இருப்பதால் தப்பித்தீர்கள்” என்று லாரிக்காரர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன். என் வாய்முகூர்த்தம் பலித்துவிட்டது. பிரிட்ஜ், வாஷிங்மெஷின் இரண்டையும் லிப்ட் மூலமாக கொண்டு சென்ற பின்பு திடீரென்று ஓவர் லோடு காரணமாக லிப்ட் இயங்க மறுக்க.. டிரைவரைத் தவிர மற்ற மூவருக்கும் லேசான மனவருத்தம். ஆனாலும் முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் காட்டாமல் மற்றவைகளையும் படியேறியே கொண்டு வந்து வைத்தார்கள்.

ஒரு கட்டில், 3 பீரோக்கள், 10 சாக்குப் பைகள், 18 பெரிய டிவி சைஸ் அட்டைப் பெட்டிகள், டிவி, 4 டேபிள்கள், கிரைண்டர் என்று அவர்கள் சுமந்தது ஒரு குட்டி நிவாரணப் பொருட்கள். சட்டை முழுவதும் நனைந்து தொப்பலாகிய நிலையில் எனக்கு பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. இடையிடையே தண்ணீர் மட்டுமே குடித்தவர்கள்.. டீ கேட்டார்கள். அக்கா பால்பாக்கெட் வாங்கி வர மறந்துவிட, கொடுக்க முடியவில்லையே என்று அவர்களுக்கும் மனம்கொள்ளா வருத்தம்.

விடியற்காலை 5.45 மணிக்கு அவ்வளவு வேகமாக வேலையைச் செய்து முடித்தார்கள். கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்க நின்றவர்கள் வீட்டின் வாசலுக்குப் போய் நின்று கொண்டார்கள். உள்ளே அழைத்தும் வர மறுத்தார்கள். “அது எங்க ஏஜென்ஸில சொல்லிருக்கிற விதிமுறை ஸார்.. வேலைய முடிச்ச பின்னாடி, வீட்டுக்குள்ள நிக்கவே கூடாதுங்கறது ஓனர் உத்தரவு..” என்றார்கள்.

மொத்தமாக 3000 ரூபாய் பில். மாமா பணத்தைக் கொடுக்க நான் அவர்களது லாரி வரையிலும் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தேன். படிக்கட்டுகளில் இறங்கும்போது மெதுவாகக் கேட்டேன்.. “நீங்களும் நல்லா படிச்சிருக்கலாம்ல.. வீட்ல படிக்க வைச்சிருப்பாங்க. எங்களை மாதிரி ஆயிருக்கலாம்...” என்று இழுத்தேன்.

நால்வருமே சிரித்துக் கொண்டார்கள். “இப்ப நினைச்சு என்ன ஸார் ஆகப் போகுது..?” என்றார் ஒருவர். இன்னொருவர் “நினைக்கிறதே வேஸ்ட்டு..” என்றார் மற்றொருவர்.. “வீட்ல அப்பன், ஆத்தா இருந்திருந்தா படிக்க வைச்சிருப்பாங்க ஸார்” என்று எங்கோ பார்த்தபடியே சொன்னார் மூன்றாமவர். டிரைவர் மட்டுமே பதில் சொல்லாமல் வந்து கொண்டிருந்தார்.

“என்ன ஸார் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க?” என்றேன். லாரி அருகே வந்தவர் பின்புறக் கதவை பூட்டியபடியே “நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” என்றார். சொன்னேன்.. “படிப்புக்கு ஏத்த வேலை பாக்குறீங்களா..?” என்றார். “ஆமாம்..” என்றேன்.

“சரி.. எல்லாரும் உங்களை மாதிரியே படிச்சு, உங்க வேலை மாதிரியே தேடிட்டுப் போயிட்டா.. பின்ன இந்த மாதிரி வேலைக்கு யாரைத் தேடுவீங்க..? யார் வருவாங்க..? நீங்களே எல்லாத்தையும் தூக்கிருவீங்களா..?” என்றார்.

அந்த கார்த்திகை மாத குளிரிலும் என் உடம்பு குப்பென்று வியர்த்தது. மற்ற மூவரும் நான் என்ன பதில் சொல்வேன் என்று எதிர்பார்த்து ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க.. என்ன பதில் சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் மெளனமாக நின்றேன்.

மின்னல் வேகத்தில் கதவுகளை மூடிவிட்டு என் தோளில் கை வைத்து தட்டிக் கொடுத்துவிட்டு “அப்பால பார்க்கலாம் ஸார்.. ஸார்கிட்ட நம்ம கார்டு இருக்கு.. வேற யாருக்காச்சும் வேலை இருந்தா சொல்லு.. வர்றோம்.. என்ன வர்ட்டா..?” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு லாரியில் ஏறி அமர்ந்தார் டிரைவர்.

அந்த விடிந்தும், விடியாதப் பொழுதில் தெருமுனையில் மறையும் வரையில் அந்த லாரியையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இப்போதுவரையிலும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் பதிவர்களே..