இரண்டு மனம் வேண்டும் - சினிமா விமர்சனம்

06-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சுனாமியின் கோரத் தாண்டவம் தமிழ்நாட்டைத் தாக்கிப் பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதன் சோகமும், வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களில் மறையாமல் இருக்க, அதிலிருந்து நூல் பிடித்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் சுந்தர்.
ஆனால், அந்த விஷயம் படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது. முதல் பாதியில் உவகை கொண்ட இரு காதல்களும், உணர்ச்சிமிக்க ஒரு குடும்பத்தின் பாசமும் இடம் பிடிக்கின்றன.

ஓய்வு பெற்ற நீதிபதியின் வீட்டிலிருந்து குழந்தையைக் களவாடும் நாயகன் செல்வத்தைப் போலீஸ் பிடித்துச் சென்று விசாரணை நடத்த, அது தன் குழந்தை என்கிறார் செல்வம். அவர் சொல்லும் பிளாஷ்பேக்கிலிருந்து படம் விரிகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமணல் என்கிற கடற்கரை கிராமத்தில் கதை நடக்கிறது. துணிக் கடையில் வேலை செய்யும் ஹீரோ செல்வம், கடைகளில் இனிப்பு, கார வகைகளை சப்ளை செய்யும் பொன்னி என்கிற பெண்ணைக் காதலிக்கிறார். ஊருக்குள் நல்ல பெயரெடுத்த அவர்களின் புனிதமான காதல், ஊருக்கு மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டுக்கும் கூடத் தெரியும்.
அவர்களின் திருமணத்தை உறவினர்களும் நண்பர்களும் எதிர்பார்த்திருக்க, தன் தம்பி ஒரு பெண்ணைக் காதலிக்கும் உண்மை தெரியவருகிறது செல்வத்துக்கு. தம்பி வேலையில்லாமல் இருப்பதால் அந்தக் காதலுக்குத் தற்காலிகமாக செல்வம் தடை போட, அதை எதிர்க்கும் தம்பி வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறார்.
அதனால், குடும்பத்தினர் சம்மதத்துடன் தம்பிக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் செல்வம். திருமணத்தன்று தம்பிக்கு விபத்து நடந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அண்ணன் உதவியுடன் அங்கேயே வைத்து தன் காதலிக்குத் தாலி கட்டும் தம்பி, சிறிது நேரத்தில் உயிரிழக்கிறார்.
வீட்டுக்கு வந்த நிலையிலேயே தன் மருமகள் விதவையாவதைக் காணச் சகிக்காத செல்வத்தின் தாய், அவளை மணந்து கொள்ளச் சொல்லி செல்வத்திடம் கேட்க, பொன்னியும் தன் காதலை விட்டுக் கொடுக்க, தம்பியின் காதலியை மணக்கிறார் செல்வம். அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்குக் ‘கண்மணி’ என்று பெயரிட்டு அன்புடன் வளர்க்கிறார்கள்.
தனக்குக் கிடைக்க இருந்த வாழ்வை இன்னொரு பெண்ணுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த சோகத்தில் இருக்கும் பொன்னி, மெல்ல, மெல்ல அந்த சோகத்தை மறக்க நினைக்கிறாள். இந்நிலையில் வேலை விஷயமாக செல்வம் ஆந்திரா சென்ற நேரம், இந்தோனேஷிய நிலநடுக்கம் காரணமாக தமிழ்நாட்டை சுனாமி தாக்க, அவரது ஊரான பெருமணலில் கடல் கோரத்தாண்டவம் ஆடி விடுகிறது.
டிவியில் செய்தி பார்த்து ஊருக்கு ஓடிவரும் செல்வம், தன் அம்மாவும், மனைவியும் அதில் பலியானது கண்டு துடிக்கிறார். அதில் குழந்தை மட்டும் காணாமல் போகிறது. அதிலிருந்து பித்துப் பிடித்து அலையும் அவர், இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் வளரும் குழந்தை தன்னுடையதுதான் என்று வாதிடுகிறார்.
அவர் மீது கருணை கொண்ட இன்ஸ்பெக்டர் தன் வக்கீல் நண்பருடன் செல்வத்துக்கு உதவி செய்ய வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது. அங்கே நடக்கும் மரபணு சோதனையில் குழந்தை செல்வத்துடையது அல்ல என்று உறுதியாகிறது.
தன்னைச் சுற்றி சதி நடப்பதாக செல்வம் புலம்ப, உண்மை தெரிந்த ஒரே சாட்சியான பொன்னி சொல்லும் சில உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன. அது என்ன என்பதில் சஸ்பென்ஸ் வைத்து நிறைவான… நெகிழ்ச்சியான கிளைமாக்ஸைத் தருகிறார் இயக்குநர்.
செல்வம் பாத்திரத்தை ஏற்றிருக்கும் சாஜி சுரேந்திரன், தன் கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். நீதிமன்றமும் தன்னைக் கைவிட்டுவிட, அவர் விரக்தியில் வாடும் காட்சிகள் அவர்மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன.
பொன்னியாக வரும் சிலங்கா, இன்னொரு கேரள வரவான மியா ஜார்ஜை நினைவுபடுத்துகிறார். ஆரம்பத்தில் அறுந்த வாலாக தனக்கென்று ஒரு மகளிர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அட்டகாசம் செய்யும்போது ரசிக்க வைப்பவர், தன் காதலையே விட்டுக் கொடுக்கும் இடத்தில் பெண்மையின் தியாகத்தை உணர்த்துகிறார்.
அவரது ஆசைக் காதலி தெய்வானையாக வரும் சாய்னாவுக்குக் குடும்பப் பாங்கான முகம். காதலித்தவன் இறந்த நிலையிலேயே அவரது அண்ணனை மணம் முடிக்க ஒரு பெண் சம்மதிப்பாரா என்கிற நியாயமான கேள்விக்கு நேர்மையான பதில் வைத்திருக்கிறார் இயக்குநர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஊர்ப் பெரிய மனிதர் ஜோசப்பாக வரும் அழகு, நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்வைக் காக்க, தன் மகனைத் தயார்ப்படுத்தும் உறுதியான தாயாக வந்து மடிகிறார் சாஜியின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை. சாஜியின் பாட்டியாக வரும் பெண்மணியும் கலகலப்பு சேர்க்கிறார்.
காமெடிக்கு உதவும் ‘திருடன்’ கிரேன் மனோகர், பின்பாதியில் திருந்தி செல்வத்தின் வாழ்வில் நல்லது நடப்பதற்குப் பயன்படுகிறார்.  செல்வத்துக்கு உதவும் கருணை மனம் கொண்ட இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் தயாரிப்பாளர் அனில் கொட்டாரக்கரா போலீஸுக்குப் பெருமை சேர்க்கிறார். அவரது தோற்றமும், இறுக்கமான நடிப்பும் நிஜ போலீஸாகவே அவரை உணர வைக்கின்றன.
ஓய்வு பெற்ற நீதிபதி கேரக்டருக்கு மோகன் சரியான தேர்வு. அவரே மனம் மாறி செல்வத்துக்கு உதவ முன்வர, அதை ஏற்காத பெருந்தன்மையுடன் செல்வம் பேசும் வசனங்கள் நெகிழ வைக்கின்றன. கொழுகொழு குழந்தை ‘கண்மணி’யாக வரும் பேபி பியோனாவுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுக் குட்டி.
இந்த நெகிழ்ச்சியான கதையை எழுதியிருக்கும் சி.ஆர்.அஜய்குமார் உண்மையில் ஒரு வழக்கறிஞர் என்பது ஆச்சரியம். தமிழ் சினிமாவில் வழக்கொழிந்து பொன கதையம்சத்தை மீண்டும் மீட்டுக் கொடுக்க இதைப் போன்ற படங்களை வரவேற்கலாம்.
காட்சிகளின் பின்னணியில் கடல் விரிய, கடற்கரை கிராமத்தின் அழகை அப்படியே திரையில் விரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப். முகமது அலியின் இசையில் வேல்முருகன் எழுதியிருக்கும் ‘மழை நின்றும்…’ பாடல் இந்த வருடத்தின் இனிமையான பாடல்களில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.
முதல் படத்திலேயே நல்ல கதையைக் கையிலெடுத்து சினிமாவுக்குள் வந்திருக்கும் இயக்குனர் பிரதீப் சுந்தருக்கும், தயாரிப்பாளர் அனில் கொட்டாரக்காராவுக்கும் வந்தனங்கள். இவர்களுக்கு முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டும், நிறைவான பட்ஜெட்டும் கிடைக்கும்போது பெரிய அளவில் சாதிப்பார்கள் என்பது நிச்சயம்.
இரண்டு மனம் வேண்டும் – காலச் சுனாமியில் கதைகள் காணாமல் போன சினிமாவுக்குள் ஒரு கலங்கரை விளக்கம்..!

0 comments: