கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!

30-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டெல்லி திகார் சிறை வட்டாரத்தில் உலா வந்த ஆ.ராசாவின் உறவுக்காரர்களை, திருச்சி வருமானவரித் துறை விசாரணைக்காக அழைத்தது! 

ஜூன் 24-ம் தேதி, காலை 10.35-க்கு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், அக்கா மகள் வித்யா, அக்கா மகன்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கார்களில் வந்து இறங்கினர்.

அவர்களைச் சூழ்ந்து பளிச், பளிச்சென ப்ளாஷ் அடிக்க... இத்தனை மீடியாக்களை எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். ''அவரைப் பத்தித்தான் இஷ்டத்துக்கும் எழுதி ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க... அப்புறம் இன்னும் ஏன் எங்களைத் தொல்லை பண்றீங்க..?'' என்று சீறியபடி, அலுவலகத்தின் உள்ளே சென்றார் பரமேஸ்வரி.

அடுத்து வந்த ராமச்சந்திரனை சூழ்ந்து​ கொண்ட நிருபர்கள், ''எதற்காக ஆஜராகச் சொல்லி உத்தரவு வந்துள்ளது? யார் யார் ஆஜர் ஆகிறீர்கள்?'' என்று கேட்க, ''உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே போய் விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று முறைத்தார்.

சற்று நேரத்துக்குப் பின்னர் அவர்களுடன் வந்த ஆடிட்டர்கள், ''வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததில் சில சந்தேகங்கள் என்று பரமேஸ்வரியையும் ராமச்சந்திரனையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை வருமானவரித் துறையினர் வரச் சொல்லி விசாரிப்பது சாதாரண விஷயம்தான்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.

பரமேஸ்வரி விசாரணைக்காகச் சென்ற சிறிது நேரத்திலேயே, வித்யாவும் வெங்கடேசனும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பரமேஸ்வரியிடம் மதியம்வரையும், ராமச்சந்திரனிடம் மாலைவரையும் விசாரணை நடந்தது. 

இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''இருவரிடமும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆ.ராசா கைதுக்கு முன்னர், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்திய சி.பி.ஐ. டீம், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது. சொத்துகள் வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பரமேஸ்வரி மற்றும் ராமச்சந்திரன் சொன்ன பதில்களில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் மற்ற உறவுகளையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள்!'' என்றனர்.

இது குறித்து நாம் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருச்சியில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் பேசினோம். ''உங்களிடம் பரமேஸ்வரி எதுவும் பேச மாட்டார். எங்கள் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!'' என்று கூறினார்.

வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்திருந்த ஆ.ராசாவின் குடும்ப உறுப்பினர்களைப்  பற்றி சிறு குறிப்புகள்.

பரமேஸ்வரி: ஆ.ராசாவின் மனைவி. சாதிக் பாட்சா நிர்வாக இயக்குநராக இருந்த க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதன் டைரக்டர் பொறுப்பில் இருந்தார். பின்னர் விலகிவிட்டார்.

ராமச்சந்திரன்: ஆ.ராசாவின் குடும்பத்தில் மூத்த ஆண். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி இருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றத் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

பரமேஸ்வரன்: ஆ.ராசாவின் மூத்த அக்காள் விஜயாவின் மகன். அம்மா விஜயா, அப்பா பச்சைமுத்து இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் சாதிக் பாட்சா எம்.டி-யாக இருந்தபோது, இவர் ஜே.எம்.டி. பொறுப்பில் இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பின்னர் இவர்தான் எம்.டி. சாதிக்பாட்சா தரப்பில் சுப்புடு என்கிற சுப்பிரமணியனுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. செக்கில் கையெழுத்துப் போடும் அதிகாரம் இந்த இருவருக்கும்தான். இது வரை 2-ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பரமேஸ்வரன் விசாரிக்கப்படாமல் இருப்பது, விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் ஆச்சர்யமாக விவாதிக்கப்படுகிறது.

வித்யா: ஆ.ராசாவின் சகோதரி கமலாவின் மகள். தந்தை அரங்கராஜன், கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் சி.டாக் என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தேவையான மென்​பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது.

வெங்கடேசன்: ஆ.ராசாவின் சகோதரி சரோஜாவின் மகன். பி.எஸ்.என்.எல். நிறுவன திருச்சி மண்டல அலுவலகத்தில் அக்கவுன்ட் ஆபீஸராகப் பணியாற்றுகிறார். ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, இரண்டு வருட காலமாக டெலிகாம் டிபார்ட்மென்டில் அசிஸ்டென்ட் பிரைவேட் செக்ரெட்​டரியாக டெல்லியில் பணியாற்றினார்.

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

நன்றி : ஜூனியர்விகடன்-03-07-2011

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் - தேர்தல் அறிக்கைகள்..!

26-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற 19-ம் தேதியன்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் முடிந்திருக்கிறது. ஆனாலும் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டும் இன்னமும் பதவியேற்காமல் இருக்கின்ற நிலையில் அதைப் பற்றி எழுதலாம் என்றால் சிக்கலுக்குள் சிக்கலான விஷயமாக இருக்கிறது..!


நிர்வாகிகளின் பதவியேற்பு அடுத்த வாரம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்பு மொத்தமாக எழுதலாம் என்று காத்திருக்கிறேன். அதுவரையில் சற்று பொறுத்தருள்க. 

ஆனாலும் உங்களது ஆர்வத்திற்கு கொஞ்சம் தீனி போடும்வகையில் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட 'ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணி'யினரின்  தேர்தல் வாக்குறுதிகளையும், 'புதிய அலைகள்' என்ற பெயரில் போட்டியிட்ட இணை, துணை, உதவி இயக்குநர்கள் அணியின் தேர்தல் வாக்குறுதிகளையும் இங்கே பதிவிடுகிறேன்..!


படித்துவிட்டுக் காத்திருங்கள். ஒரு நல்ல கவர் ஸ்டோரியுடன் வருகிறேன்..!

முதலில் ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணியின் தேர்தல் அறிக்கை..!

அன்பான உறுப்பினர்களுக்கு..

வணக்கம்.

நம் சங்கத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருப்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

முன்னெப்போதும் இல்லாது, இந்தத் தேர்தலில், உங்கள் அனைவரின் மனதிலும் எழுந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் நாங்களும் அறிந்திருக்கிறோம்.

இயக்குநர்கள் இரு வேறு அணிகளாய்ப் பிரிந்தது ஏன்..?

பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் ஏன்..?

உடனடியான சமரச சமாதானம் ஏன்..?

என்பது போன்ற கேள்விகளும் அவற்றுள் அடங்கும்.

நிற்க..

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புவரை எங்களுடன் திரண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் எவருக்கும் தேர்தலில் நிற்கும் எண்ணமே இல்லை.

ஆனால் இந்தச் சங்கம் எப்படி நடக்க வேண்டும்? என்னவெல்லாம் உறுப்பினர்களுக்குச் செய்ய வேண்டும்? எல்லா இடத்திலும் இயக்குநர் சங்கம் தன்மானம் இழக்காமலிருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

இப்படி வேண்டும், வேண்டும் எனப் பல வேண்டுதல்களை மனதுக்குள் போட்டு வைத்திருந்த இளம் இயக்குநர்கள் கூடிப் பேசிய பொழுது நினைத்தவையெல்லாம் நிறைவேற வேண்டும் என்றால், பொறுப்புக்கு வர வேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

புரிந்தவர்கள் எல்லாம் ஓரணியாய் திரண்டோம்.

சிந்தனை தெளிவாய் இருந்ததால் செயல் வேகமாய் நடந்தேறியது.

இசைக் கலைஞர்கள் சங்கத்தின் மூத்தக் கலைஞர்கள் முன்னிலையில் முதல் கூட்டம் போட்டோம்.

வேட்பாளர்களை முதலில் அறிவித்தோம்.

வேட்பு மனுக்களை முதலில் தாக்கல் செய்தோம்.

என்று எல்லாவற்றிலும் முதல், முதல், முதலானோம்.

அதன் பிறகே நமது தோழமை இயக்குநர்களும் திரு.ஆர்.கே.செல்வமணி தலைமையில் மற்றொரு அணியாய் திரண்டனர்.

இந்த நேரத்தில்தான் இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு ஒரே குடும்பமாய் வாழ்ந்திருந்த இயக்குநர்கள் எதிரெதிர் அணியாய் நிற்க - சூழ்நிலை இறுக்கமானது. இதையறிந்து கொண்ட பத்திரிகைகள், இயக்குநர்கள் சங்கத்தில் விரிசல் விழுந்ததாக நாடெங்கும் செய்திகளைப் பரவச் செய்தன.

தேர்தல் களத்தில் நாங்கள் முன் வைத்த காலை பின்னெடுக்கத் தயங்கினோம்.

அனுபவமில்லாதவர்கள்..!

பதவி ஆசை கொண்டவர்கள்..!

யார் தாளத்திற்கோ ஆடுகிறார்கள்..!

என்று தொடர்ச்சியாய் குற்றச்சாட்டுக்கள்..

தயங்கினோம். யோசித்தோம்.

நமக்கு யார் மீதும் புகார்கள் இல்லை. நாம் யாரையும் குறை சொல்லப் போவதுமில்லை. நம் மீது இருப்பதைவிட எதிரணியினர் மீது நமக்கு அதிக மதிப்பிருக்கிறது. தேர்தலில் எதிர்த்து நிற்பதாலேயே ஒருவர், நமக்கு எதிரியாக முடியாது. வென்றாலும், தோற்றாலும் அண்ணன்-தம்பி உறவு மாறாது.

யார் முனைப்புடன் செயல்படுவார்கள் என்பதை ஓட்டுப் போடும் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும் என்று தெளிந்த முடிவெடுத்தோம்.

தயக்கம் உடைத்தோம். முன்னைக் காட்டிலும் முழு வேகத்தோடு தேர்தல் பணியாற்றக் கிளம்பினோம்.

திரு.பாலசந்தர், திரு.பாலுமகேந்திரா, திரு.மணிரத்னம் ஆகியோரிடம் சங்கத்தின் செயல் திட்டங்கள் பற்றி நமக்கு இருந்த எண்ணங்களைச் சொன்னோம். மகிழ்ந்தார்கள். வாழ்த்தினார்கள்.

எங்களது வேகம் கண்ட திரு.கே.எஸ்.ரவிக்குமார், திரு.பி.வாசு இருவரும் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லோருமே சொன்ன ஒரு யோசனை..

“இத்தனை வேகமும், விவேகமும், தெளிவான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு தலைமை இருந்தால் நன்றாக இருக்கும்தானே..”

எல்லோரும் ஒரு சேர யோசித்தோம்.

முடிவில்..

எதிரணியாய் நி்ன்றிருந்த சகோதர இயக்குநர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற.. நம் அணியில் தலைமைப் பதவிக்கான வேட்பு மனுவை மட்டும் வாபஸ் பெற, “ஒருங்கிணைந்த இயக்குநர் அணி”யாய் இதோ இப்போது உங்கள் கண் முன்னே நிற்கிறோம்.

எங்களுக்கும் ஒரே நேரத்தில் இரண்டு நல்லவைகள் நடந்தேறின.

ஒன்று, மூத்த இயக்குநர்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பது.

மற்றொன்று, எங்கள் அணியில் இருப்பவர்கள் தலைமைப் பதவிக்கு அலைகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கியது.

மகிழ்ச்சியாய் ஒப்புக் கொண்டோம்.

இதுவே நடந்தது..

இதோ, இப்போது உங்கள் முன் தேர்தல் களத்தில் நாங்கள்..

சங்கத் தேர்தலில் நின்று வெல்வது என்பது பதவிக்கு வருவதல்ல. பொறுப்புக்கு வருவது. சங்கத்தில் பொறுப்புக்கு வருவது சுகமல்ல - சுமை. ஆனால், நம் அண்ணன், தம்பிகளுக்காக சுமப்பதும் சுகம். நல்லது நடக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் எல்லாம் வெளியில் நின்று, வெறும் வார்த்தைகளாய் மட்டும் பேசாமல் உள்ளே இறங்கி செயலாற்ற வேண்டும் என்று நினைத்து வந்திருக்கிறோம்.

அப்படியே நீங்களும் நினைத்து எங்களைத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறோம்.

நமது சங்கத்தின் நலன் கருதி, ஓரிருவர் தவிர இயக்குநர்கள் அனைவரும் ஓரணியாய் நிற்கும்போது, இணை, துணை மற்றும் உதவி இயக்குநர்கள் மட்டும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றனர்.

அவர்களை மேலும் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு எங்களது செயல் இருந்துவிடக்கூடாது என்பதாகவும் இணை, துணை மற்றும் உதவி இயக்குநர்களின் நிர்வாகப் பங்களிப்பும் நமது இயக்குநர் சங்கத்திற்கு மிக அவசியம் என்று கருதுவதாலும் 5 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு எங்கள் அணி போட்டியிடவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முடிக்கும் முன் மேலும் சில வரிகள்..!

எங்கள் அணி சார்பாக நின்று இந்தத் தேர்தலில், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர்கள் திரு.சேரன் மற்றும் திரு.சமுத்திரக்கனியும், பொருளாளர் திரு.ஜனநாதன் அவர்களும் இப்போதே தமது சங்கப் பணிகளைத் துவக்கி விட்டனர்.

அதிலொன்று, சென்னையில் உள்ள மூன்று பல்கலைக் கழகங்களில் பாடப் பிரிவுகளாக உள்ள பல் ஊடகக் கல்வி மற்றும் நவீனத் திரைப்பட சிறப்பு பல்கலைக்கழகச் சான்றிதவ் படிப்பு ஆகிய படிப்புகளை நமது சங்க உறுப்பினர்கள் மிக, மிகக் குறைந்தக் கட்டணத்தில் 4 மாதங்களிலேயே படித்துப் பயன் பெற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கடிதத்துடன் எங்களது தேர்தல் அறிக்கையையும் இணைத்திருக்கிறோம்.

செயலாக்கத் துடிக்கும், ஒருங்கிணைந்த இய்ககுநர்கள் அணியின் அறிக்கையில் உள்ள அத்தனை நலன்களையும் நீங்கள் பெற..

எங்களுக்கு வாக்களியுங்கள்..!

உங்களுக்கு உழைக்கிறோம்…!

நன்றி

அமீர் - சேரன் - ஜனநாதன்
மற்றும்
ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணி

தேர்தல் அறிக்கை

1. உயர்ந்து வரும் விலைவாசி, வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவுகளைக் கவனத்தில் கொண்டு சம்மேளனத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம், நமது உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயித்த இணை இயக்குநருக்கு ரூ.90,000-ஐ உயர்த்தி இனி ரூ.2,00,000 ஆகவும், துணை இயக்குநருக்கு ரூ.75,000-ஐ உயர்த்தி இனி ரூ.1,50,000 ஆகவும், முதல் நிலை உதவி இயக்குநருக்கு ரூ.50,000-ஐ உயர்த்தி, ரூ.1,00,000 ஆகவும் இரண்டாம் நிலை உதவி இயக்குநருக்கு ரூ.70,000 ஆகவும் உயர்த்தித் தர வலியுறுத்தப்படும்.

2. இணை, துணை, உதவி இயக்குநர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது போலவே Discussion, Pre-Production, Shooting, Post-Production போன்ற பணிகளுக்கேற்க தினசரி பேட்டாவையும் அதிகப்படுத்தி தொகை நிர்ணயம் செய்து முறையாக வழங்க வழிவகை செய்யப்படும்.

3. இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கான சம்பளத் தொகை முழுவதும் ரீ-ரெக்கார்டிங் முன்னதாகவே பாக்கியின்றி செட்டில் செய்ய தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தப்படும்.

4. நமது சங்கத்தில் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சங்கம் வழிச் சம்பள முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து, இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அதற்காக சங்கம் இதுவரை பெற்று வந்த 2 சதவிகித கமிஷன் அறவே ரத்து செய்யப்படும்.

5. இவைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முதல் முறையாக ஒரு தயாரிப்பாளருக்கும் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கும் இடையே முறையான ஒப்பந்தம் போடப்பட்டு அதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தப்படும்.

6. நமது சங்க உறுப்பினர்கள், தயாரிப்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படும்.

7. உறுப்பினர்கள், தயாரிப்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் இடம் பெற வேண்டிய விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளவும், சட்ட நுணுக்கங்கள் பற்றி விளக்கம் பெறவும், நமது உறுப்பினர்களிடம் அவர்களின் உரிமைகளை எடுத்துக் கூறி, அவற்றை ஒப்பந்தங்களில் இடம் பெறச் செய்யவும் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்.

8. தற்போது ஒரு படத்திற்கான டைட்டில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், GUILD-லும் பதிவு செய்யப்படுகிறது. அதுபோல இனிமேல், நமது இயக்குநர்கள் சங்கத்திலும் டைட்டில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். இத்திட்டம் தொடங்கியவுடன் இணை, துணை, உதவி இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் தாங்கள் யோசித்து வைத்திருக்கும் இரண்டு டைட்டில்களை நமது சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

9. எனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், GUILD, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று அமைப்புகளும் இனிமேல் ஒரு டைட்டிலை பதிவு செய்வதற்கு முன்பு நமது இயக்குநர்கள் சங்கத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வலியுறுத்தப்படும்.

10. நமது சங்கத்தில் உறுப்பினர் பதிவு செய்து வைத்திருக்கும் டைட்டிலை வேறு எவரேனும் பெற விரும்பினால் அதற்குச் சன்மானமாக குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் பெற்றுத் தரப்படும்.

11. உறுப்பினர்களின் மருத்துவ உதவிக்கு மட்டும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அத்தொகையை விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு பயன்பெறும் விதத்தில் உறுப்பினர் ஒருவருக்கு அதிகப்பட்சமாக 10000 ரூபாய் சுழற்சி முறையில் வழங்கப்படும்.

12. படம் சம்பந்தப்பட்டப் பணிகளில்(Pre-Production, Shooting, Post-Prodction and etc..) இருக்கும்போது உறுப்பினர் ஒருவர் விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டால் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக நமது சங்கத்திலிருந்து 50,000 ரூபாயும், அப்படத் தயாரிப்பாளரிடமிருந்து 50,000 ரூபாயும் பெற்று மொத்தம் ஒரு லட்சம் ரூபாயாக அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும். இது தவிர, உறுப்பினர் யாரேனும் இயற்கையாக மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை 25000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

13. இது போன்ற சங்கடமான நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டமும், உறுப்பினர்களின் குடும்பத்திற்கு மெடி-க்ளைம் பாலிசியும் எடுத்துத் தர தீவிர முயற்சி செய்யப்படும்.

14. இது தவிர, படத் தயாரிப்புக் காலத்தில் இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனம் “குறுகிய கால மருத்துவக் காப்பீடு” செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும்.

15. நமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், விளம்பரப் படங்களை இயக்கும்போது நமது சங்க உறுப்பினர்களில் இருந்து 2 உதவி இயக்குநர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

16. நமது உறுப்பினர்கள் வேற்று மொழிப் படங்களிலும் வேலை செய்ய ஏதுவாக பிரதான மொழிகளான ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை எளிய முறையில் கற்றுத் தர வசதி செய்து தரப்படும்.

பல்கலைக் கழகங்களில் தற்போது மூன்றாண்டு படிப்பாக உள்ள பல் ஊடகக் கல்வி(Multimedia Course) மற்றும் நவீனத் திரைப்பட சிறப்புப் பல்கலைக்கழகச் சான்றிதழ் படிப்பு  (Film Making Advance Special University Certificate Course) ஆகியவற்றை நமது சங்க உறுப்பினர்கள் மிக, மிகக் குறைந்தக் கட்டணத்தில் 4 மாதங்களிலேயே பயிலும்வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பெறப்படும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகச் சான்றிதழ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் வகையில் மதிப்புடையதாக இருக்கும் என்பது உறுதி செய்யப்படும்.

17. இணை, துணை, உதவி இயக்குநர்கள் பயன் பெறும் வகையில் சினிமாவி்ன் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி இந்திய மற்றும் உலகத் திரைப்பட வல்லுநர்களைக் கொண்டு நமது சங்கத்தி்ன் மூலமாக பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.

18. ஒவ்வொரு வருடமும் நமது இணை, துணை, உதவி இயக்குநர்கள் மட்டுமே உருவாக்கக் கூடிய “குறும்பட மற்றும் ஆவணப் போட்டி” நடத்தப்படும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும்.

19. மேலும், நமது உறுப்பினர்கள் தானே தயாரித்து, இயக்கும் சிறந்த குறும் படங்களைத் தேர்வு செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பச் செய்து, அந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து ஊக்கத் தொகையும் பெற்றுத் தரப்படும்.

20. இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களில் கடந்த 30 ஆண்டு காலமாக உறுப்பினராக இருந்து, 65 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருப்பின், அவர்கள் செய்த பணியினைக் கவுரவிக்கும் வகையில், நமது சங்கத்தின் மூலம் ஒரு தொகை நிர்ணயம் செய்து, மாதந்தோறும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும்.

21. அறிமுக இயக்குநர்களின் குறைந்தபட்ச சம்பளம் 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்து அதைத் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

22. நமது இயக்குநர்கள் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும், சங்க வளர்ச்சி நிதியாக குறைந்தபட்சம் 10,000 கட்டாயமாக வசூலிக்கப்படும்.

23. நமது சங்க உறுப்பினர்கள் எடுக்கக் கூடிய விளம்பரப் படம் ஒவ்வொன்றிற்கும் சங்க வளர்ச்சிக்காக ரூ.5,000 கட்டாயமாக வசூலிக்கப்படும்.

24. ஒரு தயாரிப்பாளருக்கும், ஒரு இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தயாரிப்பில் இருக்கும் படத்தில் இருந்து இயக்குநரை விலக்கி, வேறொரு இயக்குநரை வைத்துப் படத்தைத் தொடர்வதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்யும்பட்சத்தில் ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தாலும் நமது சங்கத்திடமும், விடுபட்ட இயக்குநரிடமும் முறையான அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

25. ஒரு படத்தின் இயக்குநர் அந்தப் படத்தை விருதுகளுக்கு அனுப்ப விரும்பும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் படத்தின் ஒரு பிரதியை சப்-டைட்டிலுடன் இயக்குநருக்கு வழங்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

26. சர்வதேச விருது, தேசிய விருது மற்றும் மாநில அரசு விருது பெறும் இயக்குநர்கள் தற்போது கெளரவிக்கப்பட்டு வருவதைப் போல், இனி விருது பெறும் இயக்குநர்களின் இணை, துணை, உதவி இயக்குநர்களையும் கெளரவிக்கும்வகையில் சங்கத்திற்கு அவர்கள் செலுத்த வேண்டிய சந்தா தொகையை சங்கமே ஏற்றுக் கொள்ளும்.

27. உலகத் திரைப்பட விழாக்கள், சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் பற்றிய தகவல்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளவும், தங்களது திரைப்படங்களை இது போன்ற விழாக்களில் பங்கு பெறச் செய்ய விரும்புபவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழி காட்டவும் குழு ஒன்று அமைக்கப்படும்.

28. மேலும், நமது சங்கத்தை அமெரிக்கா-ஐரோப்பா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் திரைப்பட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

29. உலகின் தலை சிறந்த சினிமா நூல்கள் உறுப்பினர்களுக்குப் பயன் பெறும்வகையில் தமிழில் மொழியாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

30. நமது சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக ஏற்கெனவே திரட்டப்பட்ட நிதியுடன், மேலும் நிதி திரட்டி நிரந்தர சங்கக் கட்டிடம் அமைக்க வழிவகை செய்யப்படும்.

31. சங்கக் கட்டிடப் பணிக்காக அமைக்கப்படும் ஆலோசனைக் குழுவில் கடந்த முறை பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவினரும் இடம் பெற வழிவகை செய்யப்படும்.

32. நமது நிரந்தர சங்கக் கட்டிடத்தில், 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தியேட்டரும், டிவிடி மற்றும் திரைப்படம் சார்ந்த புத்தகங்கள் அடங்கிய நூலகமும் அமைக்கப்படும்.

33. தமிழ்ச் சினிமாவின் முதல் பேசும்படம் தொடங்கி, இன்றைய சினிமாவரை அனைத்துத் தமிழ்ப் படங்களையும் சேகரித்து பாதுகாக்கும் ஆவணக் காப்பகம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

34. ஒரு சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருந்தால் கூட்டுறவுப் பண்டக சாலை அமைக்க அரசு அனுமதி தந்துள்ளது. அதன் அடிப்படையில் நமது சங்கம் 2000 உறுப்பினர்களை எட்டிவிட்டபடியால், சங்கத்தின் சொந்தக் கட்டிடத்தில் கூட்டுறவுப் பண்டகசாலை அமைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படும்.

35. சங்கத்திற்கென புதிய இணையத்தளம் சீரிய முறையில் உருவாக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எந்நேரமும் அதில் தெரிவிக்கலாம்.

36. உறுப்பினர்கள் தங்களது குறைகளை அலுவலக நேரத்தில் சங்கத்திற்கு வந்து தெரிவிக்கலாம். அதற்காக சங்கத்தில் புகார்ப் பெட்டி ஒன்று வைக்கப்படும். நேரில் வர இயலாதவர்கள், தங்களது புகார்களை சங்கத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்தால் பரிசீலனை செய்து தக்க பதில் அளிக்கப்படும்.

37. அதே இணையத்தளத்தில் தமிழ்ச் சினிமாவின் முதல் தலைமுறை இயக்குநர்கள் தொடங்கி, இன்றைய இயக்குநர்கள்வரையிலான தகவல் களஞ்சியம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

38. இனி வரும் காலங்களில், நமது சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்களிப்பவர்களின் தகுதிகள் பற்றிய தேர்தல் விதிமுறைகள் சரி செய்யப்படும்.

39. மேலும், நமது சங்கத்தின் நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள், இரண்டு முறைக்கு மேல் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்பது சட்டமாக்கப்படும்.

நன்றி..!

இனி, புதிய அலைகள் என்ற பெயரில் போட்டியிட்ட இணை, துணை, உதவி இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் அறிக்கை..!இவர்களின் அறிக்கையை இமேஜ் பைலாக மாற்றி இங்கே பதிவிட்டுள்ளேன்.  (தட்டச்சு செய்ய கொஞ்சம் சோம்பேறித்தனம். பொறுத்தருள்க)

அதனை கிளிக் செய்து பெரிதாக்கிப் படித்துக் கொள்ளுங்கள்..!
ஈழத்துச் சொந்தங்களுக்காக மெரீனாவில் திரண்ட மக்களின் அஞ்சலி..!

27-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த அளவுக்கு உணர்வாளர்கள் திரண்டு வருவார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களே நினைக்கவில்லை.. இத்தனை நாட்களாக இவர்களெல்லாம் எங்கேயிருந்தார்கள் என்றும் யோசிக்க வைத்துவிட்டார்கள் நேற்று மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழர்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதியை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டு அதே தினத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தாய்த் தமிழகத்தின் தலைநகரில் நமது தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிகழ்ச்சியை மே 17 என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.


தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல்-2011 என்ற தலைப்பில் இந்த இயக்கம் வெளியிட்ட படுகொலை புகைப்படங்களுடன் இருந்த செய்தித் தொகுப்பு மனதை உருக வைப்பதாக இருந்தது.

1,40,000 தமிழீழத் தமிழர்கள் என்ன காரணத்திற்காய் படுகொலை செய்யப்பட்டார்கள்? விடுதலை கேட்பது ஒரு பாவமா?

2500 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாய் தான் ஆண்டு வந்த தமிழர்களின் நாடான தமிழீழத்தின் விடுதலையைக் கேட்டு கடந்த 60 ஆண்டுகளாக போராடி வந்தது குற்றமா..?

சொந்த நாட்டிற்கு விடுதலை கேட்பதற்கு இதுதான் தண்டனையா..?

கூட்டம், கூட்டமாய் சாவுகள்.. அடுக்கடுக்காய் பாலியல் சித்திரவதைகள்..

தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல.. 543 தமிழக மீனவர்களும் சித்திரவதைச் செய்யப்பட்டு சிங்களவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு சித்திரவதைச் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்காய் என்ன செய்தோம்..?

அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அழுதிருக்கிறோம்..!

கதை, கதையாய்ப் பேசி கவலைப்பட்டிருக்கிறோம்..

ஒன்று கூடி ஒரு நாளாவது ஒப்பாரி வைத்திருக்கிறோமா..?

கடந்த 2009-ம் ஆண்டு நம் கண் முன்னே லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்

இறந்தோரின் நினைவுகளை நெஞ்சில் நிறைக்க நடுக்கல்லாய் குல சாமியாய், காவல் தெய்வமாய் வழிபட்ட மரபில் வந்தவர்கள் நாம்..

பாடப் புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் தம் பெற்றோரின் பாடைகளை சுமந்தன.

தமிழீழக் குழந்தைகள், பால் சுரக்கும் மார்பகத்தை அறுத்து வீசிய பாவிகள், பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றனர்.

ஆதரித்து பேசத்தான் அனுமதி கேட்க வேண்டும். அழுவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்..?

அன்றே நாம் சாலைக்கு வந்திருந்தால் 1,40,000 பேரின் சாவையாவது தடுத்திருக்கலாம்..

தமிழினம் தேய்வது தெளிவாய்த் தெரிகிறது. மிச்சத்தையாவது மீட்போம் வாருங்கள்..

களம் இறங்காமல் கனவு ஜெயிக்காது.. வீதிக்கு வராமல் விடுதலை கிடைக்காது..

இனப் படுகொலைக்கு தீர்வு இன விடுதலையே..!

தமிழீழத்தின் விடுதலையே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு.!!!

இந்தப் படுகொலைகளை, பஞ்சமாபாதகங்களை பார்த்த பிறகும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு மணி நேரம் செலவிட மனம் வராதா நமக்கு..

அஞ்சலி செலுத்த அணி திரள்வோம்...

சிந்துவதற்கு கண்ணீரையும், செலவிட கொஞ்சம் நேரத்தையும் கொண்டு வாருங்கள்..

மெழுகுவர்த்திகளும், தீக்குச்சிகளும் கடற்கரையில் காத்திருக்கின்றன.

நீங்கள் தாழ்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலி மட்டுமல்ல..

அவர்கள் கேட்ட தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அகிம்சை ஆயுதமும்கூட..

ஒரு மணி நேரம் மெழுகுவர்த்தியேற்றி நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வாருங்கள்..

இவ்வாறு அரசியல் சார்பற்று, மே 17 அமைப்பு வெளியிட்டிருந்த  அறிவிப்புக்கு எழுந்த பெரும் ஆதரவு, தமிழகத்தின் பிற இயக்கங்கள், கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் விளைவாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி இன்னும் பிற கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் இந்த நிகழ்ச்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்க.. வந்த கூட்டம்தான் அனைவரையும் திகைக்க வைத்தது.

முன்பே திட்டமிட்டபடி மெரீனா பீச்சின் புல்வெளியிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் மக்கள் கூட்டம் சாரை, சாரையாக வந்து குவிந்துவிட கடற்கரை மணல் பகுதிக்குள் நிகழ்ச்சியை நடத்த வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

அப்போதும் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் வந்த காவல்துறையினர் அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும், சட்டத்தையும் எடுத்துக் கூறி, சொன்னது சொன்னபடி நிகழ்ச்சியை நடத்தி முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

மைக் பயன்படுத்தக் கூடாது.. யாரும் பேசக் கூடாது.. மெழுகுவர்த்தியை கொளுத்திவிட்டு பின்பு மவுன அஞ்சலியைச் செலுத்திவிட்டு அதற்கான இடத்தில் மெழுகுவர்த்திகளை வைத்துவிட்டு அனைவரும் மெளனமாகக் கலைய வேண்டும். இதுதான் காவல்துறையின் மென்மையான வேண்டுகோள்.

இதற்கு ஒப்புக் கொண்டுதான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அமைப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கூட்டம் குவியத் தொடங்கியதால் அனைவரையும் ஒழுங்குபடுத்த வேண்டி ஒலிபெருக்கியையும், மைக்கையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் வந்தது.

நிகழ்ச்சிக்கு முக்கியப் பிரமுகர்களும் வருவார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தெரிந்தபோது எதிர்பார்ப்பு கூடியிருந்தது. இதனால்தான் காவல்துறையின் கண்டிப்பான உத்தரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனால் கொஞ்சம் உஷாரான இயக்கத்தினர் யாரையும் தாக்கிப் பேசவோ, கோஷமிடவோ வேண்டாம் என்பதை பேனரிலேயே எழுதி வைத்து நிகழ்ச்சிக்கு வரும் அனைவரின் பார்வைக்கும் படும்வகையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார்கள்.

கருணாநிதியைத் தாக்கிப் பேசி ஜெயலலிதாவை விட்டுவிட்டால், தி.மு.க.வினர் கோபிப்பார்கள். இருவரையும் சேர்ந்து தாக்கினால் இரண்டு கட்சியினரும் கோபிப்பார்கள். போதாக்குறைக்கு திருமாவும் அழுவார்.. எதற்கு வம்பு..? இந்தப் பிரச்சினையையே எழுப்ப வேண்டாம் என்று இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதால் தமிழகத்து தலைவர்களை விட்டுவிட்டவர்கள், மஹிந்த ராஜபக்சேவை மட்டும் வறுத்தெடுத்துவிட்டார்கள்..!

காவல்துறையினர் ஆலோசனையும், அறிவுரையும் வழங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கடற்கரை மணலில் ஸ்தூபியை போன்ற நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு அந்த இடம் அழகுப்படுத்தப்பட்டது..!


அணி, அணியாக வந்த பல்வேறு இயக்கத்தினரும் காந்தி சிலையின் பின்புறமுள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து உழைப்பாளர் சிலையின் பின்புறம்வரையிலும் ஊர்வலமாக கோஷமிட்டபடியே வந்து சேர்ந்தனர்.

ஓவியர் வீர.சந்தானம் ஈழப் போர் பற்றிய தனது ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார். பல்வேறு இயக்கங்களும் ஈழத்து மக்களின் கொடுஞ்சாவுகளுக்கு சாட்சியமான புகைப்படங்களை வைத்து விதம், விதமாக தட்டிகளைத் தயார் செய்து வைத்திருந்தது.. லிபியாவுக்கு ஒரு நீதி..? இலங்கைக்கு ஒரு நீதியா..? என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் கைகளிலும் இருந்தது..!

மணலில் அமைக்கப்பட்டிருந்த ஸ்தூபியின் முன்புறமாக அனைத்து இயக்கத்தினரும் வரிசையாக அமர்ந்தாலும், அவரவர் முறை வைத்து கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். ஒரு இயக்கத்தினர் களைப்பில் முடித்தவுடன், அடுத்த தரப்பினர் கோஷத்தை எழுப்ப.. நேற்றைய கடற்கரை முழுவதிலும் மஹிந்த ராஜபக்சே ஒழிக என்ற வார்த்தை நிச்சயமாக லட்சம் முறை எழுப்பப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்..! இடையிடையே பிரபாகரன் வாழ்க என்ற கோஷங்களும் விண்ணைப் பிளந்தன.

எழுப்ப வேண்டிய கோஷங்களைக்கூட எழுதி, ஜெராக்ஸ் எடுத்து அனைத்துத் தரப்பினருக்கும் கொடுத்திருந்தார்கள்.

மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம்
    இனப்படுகொலையை மறக்க மாட்டோம்.

சொந்தங்களே, சொந்தங்களே..
    தோள் கொடுப்போம் சொந்தங்களே..!

ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்..
    இனத்திற்காக ஒன்றுபடுவோம்..

ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
    தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..!

வெல்லட்டும், வெல்லட்டும்..
    தமிழீழம் வெல்லட்டும்..

உறுதியேற்போம்.. உறுதியேற்போம்..
    ஈழ விடுதலைக்கு உறுதியேற்போம்..

சாதி மறப்போம்.. கட்சி மறப்போம்..
    இனத்திற்காக ஒன்றுபடுவோம்..

உரிமை கேட்போம்.. உரிமை கேட்போம்..
    மீனவரின் பாரம்பரியா உரிமை கேட்போம்..

ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
    தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..

வெல்லட்டும்.. வெல்லட்டும்..
    தமிழீழம் வெல்லட்டும்..

ஐ.நா. சபையே.. ஐ.நா. சபையே..
    தடுத்து நிறுத்து.. தடுத்து நிறுத்து..
    சித்திரவதைகளை தடுத்து நிறுத்து..

நீதி வழங்கு.. நீதி வழங்கு..
    ஈழத் தமிழனுக்கு நீதி வழங்கு..

மீட்டெடுப்போம்.. மீட்டெடு்ப்போம்..
    ஈழத்தை மீட்டெடுப்போம்..

ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
    தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..

வெல்லட்டும்.. வெல்லட்டும்..
    தமிழீழலம் வெல்லட்டும்..

இவையல்லாமல்

"வாழ்க வாழ்க
பிரபாகரன்
வாழ்க வாழ்கவே..!"


என்ற கோஷம் மட்டும் தனித்துவம் பெற்று ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தக் கோஷங்களெல்லாம் கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் அன்றைய மெரீனா கடற்கரையில் ஒலித்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்..!

பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் என்று சில பிரபலங்களும்  வந்து அமர்ந்திருக்க.. கடற்கரையின் முன் பாதி முழுக்கவும் மனிதத் தலைகள்தான் தென்பட்டன..!

பல்வேறு இயக்கங்கள் வந்தவண்ணம் இருந்தபோது அழைக்காமலேயே வந்தார் வருண பகவான். ஆனாலும் கூட்டம் எழுந்திரிக்காமல் அமைதி காக்க.. வந்த வேகத்தில் 5 நிமிடங்களில் தனது வருகையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு வெளியேறினார் வருணன்..!

ஆனாலும் கூட்டம் கலையாமல் அதே இடத்தில் அமர்ந்த நிலையில், அந்த மழையிலும் கோஷங்களை எழுப்பியபடியே இருந்ததை நினைவு கூற வேண்டும்..!

அத்தனை பேரையும் கவர் செய்யும் அளவுக்கு மைக் வசதியும் இல்லாததால், பகுதி, பகுதியாக அவரவர்கள் மாலை மங்கியவுடன் தாங்களே மெழுகு திரியை கொளுத்தி கைகளில் வைத்திருந்தனர்.

ஆங்காங்கே பல்வேறு நபர்கள் முறை வைத்து கோஷங்களை எழுப்பியபடியே இருக்க.. அமர்ந்திருந்த கூட்டமும் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஒரு சேர உயர்த்திக் காட்டியபோது காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்துமே நின்று நிதானித்துதான் பயணித்தன.


தலைவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விளக்கேற்றிய பின்பு மனதார தங்களது அஞ்சலியை செலுத்திய பொதுமக்கள் கடற்கரை மணலில் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்திகளை வட்டமாக நிறுத்தி வைத்து தங்களது அஞ்சலியை முடித்துக் கொண்டனர்..!

ஸ்தூபி அருகே இருந்த மக்களிடையே பழ.நெடுமாறன் மட்டுமே சில நிமிடங்கள் பேசினார். ஈழத்து துயரம் பற்றி நாடகம் ஒன்றும் நடந்ததாகச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை..!

வந்திருந்த கூட்டத்தில் இந்த இயக்கத்தினர் என்றெல்லாம் அடையாளம் காண முடியாமல் கடற்கரைக்கு அன்றைக்கு வந்தவர்கள், இந்த நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் என்று பொதுமக்கள்தான் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்களின் முகத்தில் எல்லையில்லா வருத்தமும், கோபமும் தெரித்திருந்தன..

ஈழப் பிரச்சினை தமிழகத்து மக்களைத் தாக்கவே தாக்காது.. எந்த நிலையிலும் அதற்குச் சாதகமான ஒன்றை கட்சியினர் சாராத மக்கள் வெளிக்காட்ட மாட்டார்கள் என்று பல காலமாக சொல்லி வந்தவர்களின் வாக்கு நேற்றைக்கு தோற்றுப் போனதாகவே சொல்ல வேண்டும்..!

மிகச் சமீபத்தில் உலகம் முழுவதும் பார்க்கும்வகையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கொடூரங்களை இணையம் மூலமாகப் பார்த்தவர்களின் அதிர்ச்சி நேற்றைய கடற்கரைக் கூட்டத்தில் வெளிப்பட்டுத்தான் இருந்தது.

 
கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்திருந்தவர்களெல்லாம் இந்தச் செய்தித் தொகுப்பை வாங்கிப் புரட்டிவிட்டு ஒரு கணம் அதிர்ச்சியும், திகைப்புமாக சிலையாய் நின்றதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர்கள்தான் தங்களது குழந்தைகளுக்காகவும் ஒரு மெழுகுவர்த்தியை வாங்கி தங்களது அஞ்சலியை செலுத்திக் கொண்டார்கள்..!

இந்த அளவுக்கு அவர்களைத் தாக்கும்வகையிலான அளவு செய்தித் தொகுப்பை வடிவமைத்த தோழர்களுக்கு எனது நன்றி..!


 

மேலும், இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில்லாமல் உழைத்திருக்கும் ஒப்பற்ற தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்றைக்கு தங்கள் இயக்கத்தினரை அழைத்து வந்து கட்சி மாநாடுபோல் நடத்திக் கொடுத்த பல்வேறு இயக்கத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

வெறும் 10,000 பேரின் எழுச்சி யாரை, என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம்..! தமிழகம் முழுவதுமே பல்வேறு நகரங்களில் இது போன்ற மெழுகு திரி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. மிக்க மகிழ்ச்சி. இந்தச் சிறு துளி வரும் காலத்தில் பெரும் துளியாக மாறி வரக்கூடிய காலங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியா உருவெடுக்கலாம்.. அப்படியொரு சூழலை, இக்கட்டை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசியல்வியாதிகளுக்கு நெருக்கடியை கொடுக்க இந்தச் சிறு பொறியே கூட பின்னாளில் உதவக் கூடும் என்று நான் திடமாக நம்புகிறேன்..!

நம்மால் முடிந்தது நடந்த படுகொலையை பகிரங்கப்படுத்தியிருக்கிறோம். நமது சக தோழர்களிடம், சகோதரர்களிடத்தில் இந்த விஷயத்தைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலை போல அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு ஒருவராவது யோசித்து வாக்களித்தால் ஒருவேளை நாம் அடைய வேண்டிய இலக்கைத் தொட ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்..!

இதனை முன் வைத்து இனிமேல் அடிமேல் அடி வைத்து நடப்போம் தோழர்களே..!

உலகில் எந்த சர்வாதிகாரியும் நிம்மதியாக இறந்ததாக சரித்திரம் இல்லை. அதேபோல் சிந்திய ரத்தத்திற்கு பதில் சொல்லாமல் எந்த சரித்திரமும் முடிவுற்றுதும் இல்லை.. காத்திருப்போம்.. அதுவரையில் போராடுவோம்..!

டெயில் பீஸ் :

நேற்றைய நிகழ்ச்சியில் மைக் பயன்படுத்தியது.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மாறாக கடற்கரை மணலில் நிகழ்ச்சி நடத்தியது.. கூட்டத்தில் நிபந்தனையை மீறி பேசியது ஆகிய மூன்று விஷயங்களுக்காக காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைமையாளர் திரு.திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

இதனை அவர்களும் எதிர்பார்த்ததுதான். ஏனெனில் நேற்று மாலை கடற்கரை மணலில் தோழர்கள் கால் வைத்தவுடனேயே காவல்துறையினர் இதைத்தான் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்வோம். நீங்கதான் கோர்ட்ல பார்த்துக்கணும் என்றார்கள்.

இதில் ஒன்றும் தவறில்லையே..! அத்தனை ஜனத்திரளைக் கட்டுப்படுத்த மைக் வசதிகூட இல்லையேல் எப்படி பேசுவது..?

புல் தரையிலேயே பத்தாயிரம் மக்களையும் அமர வைக்க முடியுமா? அப்படி அமர வைத்தால் கூட்டம் பெசண்ட் நகர் சர்ச் வரையிலும் போய் நிற்கும்.. அந்த அளவுக்கெல்லாம் செய்ய முடியாது என்பதால்தான் கடற்கரை மணலில் செய்ய முடிவெடுத்தார்கள்..!

பேசக் கூடாது என்பது இரு தரப்பும் முன்பே செய்து கொண்ட ஒப்பந்தம்தான். ஆனால் ஒரு நிகழ்ச்சியென்றால் வந்திருந்த உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தினருக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகளாவது பேசவில்லையெனில் எப்படி என்று இறுதிக்கட்டத்தில் பலரும் கருதியதால் பழ.நெடுமாறன் மட்டும் பேசலாம் என்று முடிவெடுத்து பேசியதாகச் சொல்கிறார்கள்..!

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் லட்சக்கணக்கான வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது. போகட்டும். வழக்கைச் சந்திக்கும் துணிவும், நியாயமும், நேர்மையும் மே 17 இயக்கத் தோழர்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு நாம் என்றும் துணை நிற்போம்..

தவித்த கனிமொழி... தழுதழுத்த கருணாநிதி...!

25-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜூனியர்விகடனில் எப்போதும் தனியாக எழுதப்படும் கனிமொழியின் ஜெயில் வாசம் பற்றிய கட்டுரை, இந்த முறை அதிசயமாக கழுகாரின் வாயில் இருந்து வருவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்காகவா.. அல்லது வித்தியாசத்திற்காகவா என்று தெரியவில்லை..! ஆனாலும் இதுவும் நன்றாகத்தான் எழுதப்பட்டுள்ளது..

இனி படியுங்கள்..!
கழுகார் உள்ளே நுழையும்போது, அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்-கள் அடுத்​தடுத்து வந்துகொண்டே இருந்தன. ''எல்லாம் டெல்லியில் இருந்து!'' என்றார் சுருக்கமாக!
 
 

''காங்கிரஸ் மேலிடம் தி.மு.க-வை நெட்டி வெளியே தள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதற்கான காரியங்களை மறைமுகமாகத் தொடங்கி​விட்டார்கள். இதைத் தி.மு.க-வும் தெளிவாகவே தெரிந்துகொண்டுவிட்டது!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லை​யா?'' என்​றோம்.

''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலை​யில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷூவலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்​காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''

''சொல்லும்!''

''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியா​வையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக் கொள்கிறார்கள் என்று பார்ப்​போம்!''

''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''

''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்​பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''

''ம்!''

''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்​டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே  இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''

''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.

டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''

''அப்புறம்..?''

''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே  திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''

''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''

''பரமேஸ்வரி விஷயம்?''

''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்க​வைக்கப்​பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!'' என்ற கழுகார், அருகில் இருந்த ஐஸ் வாட்டரில் ஒரு 'சிப்’ பருகிவிட்டுத் தொடர்ந்தார்.

''கேபிள் டி.வி-க்களை மொத்தமாக அரசாங்கமே கையில் எடுக்கப்போகிறது என்று நான் உமக்குச் சொல்லி இருந்தேன். 'குறைந்தபட்சம் 30 ரூபாய்வரைக்கும் கொடுத்தால்கூட எனக்கு சந்தோஷம்தான்’ என்று ஜெயலலிதா சொன்னதையும் நான் உமக்கு சொன்னேன். அதன் தொடர்ச்சியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் முதல்வர். இதில் கோவை யுவராஜ் தலைமையிலான சங்கத்தினரும் கரூர் ஆறுமுகம் தலைமையிலான சங்கத்தினரும் கலந்துகொண்டனர். ஆபரேட்டர்கள் தரப்பில், 'சென்னையில் இருப்பதுபோலவே எல்லா ஊர்களிலும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாகத் தர ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கேபிள் தொழிலைவிட்டே போகும் அளவுக்குத் தொல்லைகள் தரப்பட்டன. ஆளும் கட்சியால் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போனது. எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஜெ., 'அரசின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்து பேசி, கேபிள் தொழிலுக்கு நல்லது செய்கிறேன்’ என்று உறுதி சொன்னாராம். அதற்கு முந்தைய நாள், தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மூவரும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இரண்டு மணி நேரம் பேசினர். விரைவில் இதற்கான தனிச் சட்டம் வரப் போகிறது. ஆனால், இதில் ஒரு கூத்து நடந்துள்ளதாக இன்னொரு தரப்பினர்  சொல்கிறார்கள்.''

''என்னவாம்?''

''தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான சகிலன்தான் இதுவரை இந்தப் பிரச்னையை வைத்துப் புயல் கிளப்பி வந்தவராம். எஸ்.சி.வி-க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டுவார் இவர். ஜெயலலிதா புதிய குரூப் ஒன்றை சந்தித்து இருப்பதைப் பார்த்து, சகிலன் தரப்புக்கு அதிர்ச்சி. 'முதல்வரை சந்திக்கும் தகவல் எங்களுக்குச் சொல்லப்படவே இல்லை. அவர் சந்தித்தது எல்லாமே, புதிதாக உருவான  சங்கங்கள். 'அரசு கேபிளைக் கொண்டு வரக் கூடாது’ என்பதற்காக செயல்படும் சிலர் இது போன்ற சங்கங்களைத் திடீரெனத் தொடங்கி, பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தால் இந்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் எங்களைத் தவிர்த்துவிட்டனர். கூடிய சீக்கிரமே முதல்வரை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்வோம்’ என்று சொல்லி வருகிறாராம்.''

''கேபிள் ஒயர்களைப் போலவே இவர்களும் செம சிக்கலில் இருப்பார்கள்போல!'' என்றோம். சிரிப்புச் சத்தம் வானத்தில் கேட்டது!

நன்றி : ஜூனியர்விகடன்-ஜூன்-29, 2011

கூட்டுக் கொள்ளையடித்த தி.மு.க.வினர்..!

23-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் ஏற்கெனவே மே மாதத்தில் எழுதிய  அழகிரி மற்றும் தி.மு.க. கட்சியினரின் சுருட்டல் விவகாரங்கள்..! என்ற பதிவோடு தொடர்புடையது இந்தக் கட்டுரை..!

தி.மு.க. தலைமை மீதும், கட்சியினர் மீதும் பொதுமக்கள் கொண்ட அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய அராஜகமான ஆட்டங்கள்தான் என்பதற்கு சில உதாரணங்களை எனது கட்டுரையில் சொல்லியிருந்தேன். அதே போன்ற பல உதாரணங்களை உள்ளடக்கி சூரியக்கதிர் ஜூன் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரைதான் இது. அவசியம் படியுங்கள்.


தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தங்கள் அதிகாரம் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு, தி.மு.க.வினர் அதிகார பலத்துடன் இருந்தனர். ஆனால், ஜெயலலிதா தமிழக முதல்வரானவுடன் தி.மு.க.வினரால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு அதை உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்கான அதிரடி அறிவிப்பும் தமிழக கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பிறகு தி.மு.க.வினர் ‘கிடுகிடு’வென நடுங்க துவங்கியுள்ளனர். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் புகார் கொடுக்க முன் வந்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சியில்தான் அதிகளவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களாகிப் போன தி.மு.க மாவட்ட தளபதிகளின் ‘ஆட்டம்’ வேறு மாதியானது. கண்களுக்கு தெரிந்து அவர்களின் கட்டுப்பாட்டு ஏரியாவிற்குள் தென்னந்தோப்போ, மாந்தோப்போ இருக்கக் கூடாது. நல்ல வசதியோடு கூடிய விஸ்தாரமான நிலமும் இருக்கக் கூடாது. அது எப்படி என்று போய் உட்கார்ந்துவிடுவார்கள். அந்த நிலத்தை வைத்திருப்பவர்களின் செல்வாக்கை பொறுத்து நடவடிக்கை அமையும். ஒன்றுமே இருக்காது. திடீரென்று பார்த்தால் எல்லா ஆவணங்களும் ‘மாவட்டங்களுக்கு’ வேண்டியவர்கள் பெயரில் மாறியிருக்கும். போலீஸ் அவர்களுக்கு உடந்தை. மேள தாளத்தோடு போய் வேலி அமைப்பார்கள். அவ்வளவுதான் நிலத்திற்கு சொந்தக்காரன் அதிர்ச்சியில் வீழ்ந்து போவான். போலீஸ் புகார், கோர்ட் என்று படியேறி... ‘மாவட்டத்திற்கு’ மனம் இருந்தால் கொஞ்சம் பணம் கொடுத்துவிடுவார்கள்.

சேலம் பகுதியில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி குடும்பத்திற்கு நடந்த கதை நாட்டிற்கே தெரியும். கண்ணுக்கு அழகாக தென்னந்தோப்பு வைத்திருந்தார்கள். அதுதான் தவறாகிவிட்டது. அப்போதய அமைச்சரின் வாரிசு ஆசைப்பட்டது. அதற்காக படுகொலையும் நடந்தேறியது. தவிர மாம்பழ நகரின் முக்கிய பகுதி எல்லாம் அடாவடியாக ஆக்கரமிக்கப்பட்டதாகவே இருக்கிறதாம். இதில் அரசு நிலமும் அடக்கம் என்று பட்டியல் வாசிக்கிறது ‘விபரம் அறிந்த’ அதிகாரிகள் தரப்பு. இது எல்லாம் சின்ன சின்ன விவகாரங்கள்தான்.

அசைக்கவே முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் போன்று இருந்த மதுரை இளவரசரின் நில ஆக்கிரமிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. பட்டியல் தயாராகிக் கொண்டு இருக்கிறது. தான் கல்லூரி கட்டி வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை குடும்பங்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. இது நீதிக்கான காலம். நீதி கிடைக்க வேண்டிய ஆட்சி. இதுவரை தி.மு.கவின் வசம் உள்ள அரசு நிலங்களையும் மீட்டால் பல ஆயிரம் கோடிகள் அரசிடம் சொத்துக்களாகவே இருக்கும்.

கோயில் நிலம் என்று தனியே இருக்கிறது. சென்னையில் பிரபலமான இடங்கள் எல்லாம் இருக்கிறது. அந்த இடத்திற்கும் அப்படித்தான். சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் எல்லாம் ‘உடன் பிறப்புகளுக்கு’ ஒத்துழைக்க, எல்லாவிதமான ஆவணங்களும் தயார் ஆனது. அதற்கென்று திருவண்ணாமலையில் உள்ள பழைய கால சொத்து விபர ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து, என்ன ஏது என்று பிரித்து மேய்வார்கள். அதற்கேற்ப யாரோ ஒருவர் விற்றதாய் ஆவணத்தைத் தயாரிப்பார்கள். அதை வைத்து வங்கியிலும் ‘கடன்!’ பெறுவார்கள். வங்கி கடன் இருக்கும்போதே அந்த நிலத்திற்கு வேறு ஒரு போலி நபரை அவர்களே செட்டப் செய்வார்கள். அந்த ‘செட்டப்’ ஆள் கையிலும் முறைப்படி ஆவணங்களை இருக்கும். திடீரென்று ஒருவர் வந்து என் அனுபவத்தில் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார் என்று முறைப்படி போலீஸ் கம்ப்ளைண்டும் செட்டப் ஆள் கொடுப்பார். வழக்கு நீதிமன்றத்திற்கும் போகும். கடைசியில் செட்டப் நபர் தோற்றுப் போவார். இது எல்லாமும் திட்டமிட்ட மோசடி நாடகம்தான் ஆட்சி அதிகாரம் என்ற திமிரில் இப்படி செய்து இடத்தை தனதாக்கிக் கொள்வார்கள். ‘அந்த நிலம் முறைப்படி வங்கி கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அவர் பெயரில் பட்டா இருக்கிறது. எனவே, அவர்தான் நிலத்திற்கு சொந்தக்காரர் என்று விஷயம் முடியும். அந்தவிதமாக அடையார், வில்லிவாக்கம், மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் நிலம் கொள்ளை போய் இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறது விபரம் அறிந்த வட்டாரம்.

திருச்சியை சேர்ந்த முதியவர் பழனிச்சாமியை சந்தித்து பேசினோம்.

‘‘எங்களுக்கு பூர்வீகமான சொத்து ஐந்து ஏக்கர் நிலம்தான். அந்த நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் இதை என் தந்தையின் காலத்திலிருந்து அனுபவித்து வருகிறோம். 1923&ல் இருந்து எந்த வில்லங்கமும் இல்லாமல் வைத்திருக்கிறோம். ஆனால், கடந்த 4 வருடத்திற்கு முன்பு நான்கு பேர் இந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இப்போது ஆர்.டி.ஓ. விசாரணையில் இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக நடக்கும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு நான் தவறாமல் ஆஜர் ஆவேன். ஆனால், வழக்கு தொடர்ந்தவர் தரப்பிலிருந்து யாருமே வருவதில்லை. இதுவரை எந்த கோர்ட்டிலும் அவர்கள் தரப்பில் ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்த இடத்தை வளைத்து எங்களையும் விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் சத்தியமூர்த்தி, திருச்சி தி.மு.க. துணை செயலாளரும், துணை மேயருமான அன்பழகன் உதவியுடன் எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்வதற்கு பல முயற்சிகள் நடந்தன.

அவர்களின் மிரட்டலுக்கு நான் பணியவில்லை. இதனால் என்னையும் என் மகன்கள் மூன்று பேரையும் கும்பல் அரிவாளால் வெட்டியது, ‘ஒழுங்கா நிலத்தை கொடுத்து விட்டு ஓடி போய்விடு, இல்லையென்றால் உன் உயிர் உனக்கு சொந்தமில்லை’ என்று மிரட்டினார்கள். அதற்கு பிறகும்கூட அவர்கள் மிரட்டல்களுக்கு நாங்கள் கட்டுப்படவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்த முடிவு செய்தனர். உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் மூத்த மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்து இழுத்து கொண்டு போனார். போலீஸ் ஸ்டேஷனில் என் மகனிடம் பேசிய இன்ஸ்பெக்டர், ‘இரண்டரை கோடி ரூபாய் பணம் வாங்கி தருகிறேன் ஒழுங்கா கொடுக்கற பணத்தை வாங்கிக்கொண்டு ஓடி போ. இல்லையென்றால் உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என மிரட்டினார்.

இது எங்கள் சொத்து இல்லையென்றால் எங்களுக்கு எதற்காக பணம் தர வேண்டும்? 30 கோடி ரூபாய் சொத்துக்கு இவர்கள் தருகிற தொகையை வாங்குவது விட ஜெயிலுக்கு போகலாம் என என் மகன் முடிவு செய்தான். பிறகு பல பிரிவுகளில் போய் வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் ஏழு நாள் ஜெயிலில் இருந்தபோது பெரிய தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர். இப்போது இன்ஸ்பெக்டர், சப்&இன்ஸ்பெக்டர் மேல் மனித உரிமைகள் கமிஷனரிடம் புகார் செய்து இருக்கிறேன். நகரத்துக்கு நடுவில் இப்படி பெரிய சொத்து இருந்தால் அதிர்ஷ்டசாலி என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் வேதனையில் துடித்துக் கொண்டியிருக்கிறேன். என் உயிர் பிரிவதற்குள் இந்த பிரச்னையில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என காத்து இருக்கிறேன்’’ என்கிறார்

இதே திருச்சியில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியின் முக்கிய அமைச்சர் குடும்பத்தினர் ஒரு ஓட்டலை அபகரிக்கத் திட்டமிட்டனர் இதை அறிந்த அந்த ஓட்டல் அதிபர் அமைச்சர் குடும்பத்தின் திட்டத்தை விவரித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி, திருச்சி போலீஸ் கமிஷனர், தமிழக போலீஸ் டி.ஜி.பி மற்றும் முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மேலும் அனைத்து முன்னிலை பத்திரிகைகளில் அவர் விளம்பரம் செய்தார்.

அந்த விளம்பரத்தில், ‘இந்த ஓட்டலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். பொது வாழ்வில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த ஓட்டலை அபகரிக்க சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதன் பிறகும் திருச்சி துணை மேயராக இருந்த அன்பழகன் ஆயுதம் தாங்கிய ரவுடி கும்பலுடன் அங்கு வந்தார். அவர் வந்த காரில் தி.மு.க. கொடி பறந்தது. ஓட்டல் அதிபருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸார் அந்த தி.மு.க. கும்பலுக்கு பாதுகாப்பு அளித்தனர். தி.மு.க. கொடியை பறக்க விட்டபடி, ரவுடிகள் படைகளுடன் வந்து குற்றத்தில் ஈடுபட்ட அந்த சம்பவத்தை நினைத்து ஒவ்வொரு தி.மு.க.வினரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

குற்றத்தை செய்தது மட்டுமின்றி அந்த ஓட்டலை நடத்தி வந்த தொழிலதிபர் மீது போலியான எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை விவரித்து முதல்வர் அலுவலகத்தில் அந்த தொழிலதிபர் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுக்கப்பட்டதே தவிர, எந்த நடவடிக்கையும் குற்றவாளிகள் மீது எடுக்கப்படவில்லை என்பதே மிகப் பெரிய வேதனையான விஷயம்.

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட தொழிலதிபரிடம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தை சந்தித்து சமாதானமாகப் போய்விடுங்கள் என்று கூறுகின்ற தொலைபேசி உரையாடல் பதிவு உள்பட பல முக்கிய ஆதாரங்களுடன் விரைவில் முதல்வர், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் புகாராக கொடுக்கும்படி அரசு தரப்பில் மேற்கண்ட தொழிலதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘இது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு..’ என்பது போல் மற்றொரு சம்பவத்தையும் இங்கே நாம் பார்க்கலாம். ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில், ‘சூர்ய சக்ரா ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஸ்பின்னிங் மில்லை கடந்த 1998&ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். 10 ஏக்கரில் இந்த மில் அமைந்துள்ளது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேருவின் தம்பி மணிவண்ணன், கோவை சஞ்சய் கிருஷ்ணன், அவினாசி ரவி ஆகியோர் மூலம் வாய்மொழியாக பேசியதன் அடிப்படையில், அந்த மில்லை அவர்கள் தற்காலிகமாக நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் லோகநாதன் கையெழுத்தை போலியாக தயாரித்து, அதன் அடிப்படையில் போலியான சில ஆவணப் பத்திரங்களில் அந்த கையெழுத்தைப் போட்டு அவரது சொத்துக்களை மோசடியாக அபகரிக்கத் திட்டமிட்டனர். அந்த மில்லை கொடுக்கும்படி பல வழிகளில் லோகநாதனை மிரட்டினர். மேலும், பெருந்துறை போலீசில் அவர் மீது பொய்யான புகாரைக் கொடுத்து, போலீசாரை வைத்தும் மிரட்டினர். வேறு வழியில்லாமல் அவரும் நீதியை பெறுவதற்கு, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார்.

இது தவிர இன்னொரு மோசடி ரகம் இருக்கிறது. ராஜாக்கள் நிலம். அப்போதைய குறுநில மன்னர்கள் வசம் இருந்ததை நல்லெண்ண அடிப்படையில் அரசுக்கு ஒப்படைத்திருந்தார்கள் அல்லது அரசே எடுத்துகொண்டது. அப்படியான இடம் இன்றும் ஆங்காங்கே காலியாக இருக்கிறது. உடன்பிறப்புகளின் ‘பவர்’ அங்கேயும் கண் பதித்தது. திடீரென்று அதற்கு வாரிசு முளைப்பார். இப்போது நான் நிலமற்ற எழையாக இருக்கின்றேன் என்று அரசுக்கு மனு போடுவார். ஆயிரமாயிரம் விண்ணப்பங்களை போட்டுவிட்டு மக்கள் காத்திருக்க, அப்படியான ‘வாரிசுகளின்’ மனுக்கள் மட்டும் றெக்கை கட்டி பறக்கும். எல்லாமும் முடிந்து நிலம் அவர் கைக்களுக்கு போகும். இப்படி பறிபோன நிலத்தின் மதிப்பு சென்னைக்குள் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.

எல்லாவற்றையும் விட இந்த ரகம் இன்னும் சூப்பர். பிரபலமான இடத்தில் வீடோ நிலமோ இருக்கிறது. அது அந்த ஏரியா உடன்பிறப்புக்கு பிடித்துப் போகிறது என்றால் அவ்வளவுதான். யார் தடுத்தாலும் முடியாது.

ஒரு சின்ன உதாரணம். சென்னை பனகல் பார்க் அருகில் பெரிய இடம். 50 கோடிக்கு மேல் போகும். பெரியவர் ஒருவர் வைத்திருந்தார். அவருக்கு வாரிசுகள் இல்லை. கட்டிய மனைவியும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ‘பழம்’ தின்று கொட்டை போட்ட உடன்பிறப்பு டீம் அங்கே சென்றது. முதலில் பேச்சு வார்த்தை. பிறகு மிரட்டல், உருட்டல்... கடைசியாக என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்த இடம் நினைத்தபடியே கை மாறியது. பணம் கொடுத்தார்களா.. அல்லது அடித்து விரட்டினார்களா.. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் யாரும் குறுக்கு விசாரணை செய்து விடாதீர்கள்.

அதே பகுதியில் வாரிசே இல்லாத இடமும் அப்படித்தான். அதன் மதிப்பும் 50 கோடிகளை தாண்டும். அங்கே காவலாளி ஒருவர் நிரந்தரமாக இருந்தார். எல்லா வீட்டையும் அவரே ஆண்டு அனுபவித்து வந்தார். அந்த ‘பழம்’ மனிதரின் டீம் சுற்று போட்டு கவனித்தது. என்ன ஏது என்று விசாரித்து. சொத்து யார் பெயரில் இருக்கிறது என பார்த்தது. அந்த காவலாளி மிரட்டப்பட்டார். கடைசியில் அவர் மீது ஒரு போலி பத்திரம் ரெடியானது. வாரிசே இல்லா இடத்திற்கு சொந்தக்காரர் அந்த காவலாளிதான்! பிறகு, அவரே இவர்களுக்கு முறைப்படி!!! நிலத்தை விற்பனை செய்கிறார். எல்லாமும் பேப்பர் ஒர்க்தான். முறையாக இருக்கும்படி செய்வார்கள். அந்த காவலாளிக்கு ஏதாவது கிடைத்ததா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. இப்போது அந்த இடத்தில் பெரிய கட்டிடம் கமர்ஷியல் காம்ப்ளக்ஸாக உயர்ந்துவிட்டது. இப்போது மதிப்பு நூறு கோடிகளில்..

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காலி மனைகளுக்கும் அதேவித பட்டை நாமம்தான். ஒரு வாரிசு உருவாகியிருப்பார். மீண்டும் நிலத்தை கேட்பார். அது அவரது கைக்கே மாறியிருக்கும். இப்போது அங்கே பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருக்கிறது. இதை மட்டும் கணக்கில் எடுத்து விசாரித்தாலே போதும். அரசக்கு பல ஆயிரம் கோடிகள் வருவாய் இருக்கும்.

மண் ஆசை. எண்ணிக்கையில் பலம் பொருந்திய துரியோதனன் அணியை வீழ்த்தியது. மண் ஆசை மாமன்னனையும் வீழ்த்தும் என்பதை மகாபாரதம் காட்டுகிறது. தி.மு.க-வின் நிலையும் அப்படித்தான். அது வீழ்ந்து போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அந்த கட்சியின் முக்கிய நபர்கள் தலைமை ஆதரவுடன் காட்டிய மண் ஆசைதான்!

தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை

கடந்த ஆட்சியில் தி.மு.க.வினரின் அதிகார துஷ்பிரயோகத்தினால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று நீங்கள் அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன நிம்மதியையும் மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் சொத்தை அபகரித்தவர்கள், தாங்கள் தவறு செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் சட்டத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சொத்தை அபகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் அந்த சொத்தின் உரிமையாளர் பிற நபர்களிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது போன்று முதலில் ஒரு போலி ஒப்பந்தம் தயாரிக்கிறார்கள். அந்த போலி ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சொத்தின் உரிமையாளர் தங்களின் சுவாதீனத்திற்கு எவ்வகை இடையூறும் தரக்கூடாது என்று எக்ஸ் பார்ட்டி இடைக்காலத் தடை உத்தரவு வாங்குகின்றனர். அந்தத் தடை உத்தரவை வைத்துக்கொண்டு ரவுடிகளின் துணையோடு சொத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இடத்தின் உரிமையாளர் இந்த அநீதிகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்தால் போலீஸ் மூலமாக பொய் வழக்கினை தொடுத்து நிலத்தின் உரிமையாளர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர்.

ஆகையால், வரவிருக்கின்ற புதிய சட்டமானது கடந்த கால தி.மு.க.வினர் போலித் தகவல்களை கொடுத்து நீதிமன்றத்தினரையும் காவல் துறையினரையும் தங்களுக்கு சாதகமாகவும் பாதுகாப்பானதாகவும் பயன்படுத்திக் கொண்டதற்குத் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும்.  மேலும் அவ்வாறு நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் தவறான தகவல்களை கொடுத்தவர்கள் மீது அதற்காக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்ய வேண்டும்.

அவர்கள் சொத்துக்களை அபகரிக்கக் கையாண்ட மற்றொரு வழி, வங்கியில் அடமானத்தில் இருக்கின்ற சொத்துக்களை வங்கி ஏலத்திற்கு கொண்டுவரும்போது யாரையும் ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் ஏலம் நடத்துகின்ற வங்கி அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி மார்க்கெட் மதிப்பில் பாதி விலைக்கு அந்த சொத்துக்களை ஏலத்தில் எடுத்ததாக சான்றிதழையும் பெற்று பிறகு ரவுடிகளின் துணையுடனும், போலீஸ் துணையுடனும் சொத்துக்களை ஆக்கிரமித்தார்கள்.

வங்கியின் மூலமாக பெற்ற சொத்துக்களை வங்கி சட்டத்தின் மூலமாக விற்கப்படுவதால் அதையும் தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். வங்கி சட்டம் பாராளுமன்றத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதால் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கின்ற துணிச்சல் அவர்களுக்கு.

ஆனால், அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் சொத்துக்களை பாதி விலைக்கு பெற்று சட்டத்தை மீறி ரவுடிகளின் துணையுடனும் போலீஸின் துணையுடனும் அபகரித்தவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை தொடர்வதற்கும், அந்த சொத்துக்களை மீட்பதற்கு புதிய சட்டம் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்!

நன்றி : ஜே.வி.பி., குருஜி, கோபிநாத்

சூரியக்கதிர்-ஜூன்-01-15, 2011

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல்-2011 முடிவுகள்

22-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் மிகப் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் பாரதிராஜா தலைமையில் 'ஒருங்கிணைந்த இயக்குநர்கள் குழு' ஒரு அணியாகவும், 'புதிய அலைகள்' என்ற பெயரில் துணை இயக்குநர்கள் தனி அணியாகவும் போட்டியிட்டார்கள்.

'புதிய அலைகள்' அணி தலைவர், செயலாளர், துணைத் தலைவர்கள், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடவில்லை. 4 இணைச் செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிட்டார்கள்.

ஆனாலும் பாரதிராஜாவை எதிர்த்து எஸ்.முரளி என்னும் துணை இயக்குநர், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

செயலாளர் பதவியில் அமீரை எதிர்த்து 'தமிழன்' படத்தின் இயக்குநர் அப்துல் மஜீத் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

மேலும் 'யார் கண்ணன்', டி.பி.கஜேந்திரன் போன்ற இயக்குநர்களும் சுயேச்சையாகவே செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட்டார்கள்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிட்டனர்.

கடந்த 19-06-2011 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வடபழனி இசையமைப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் தேர்தல் நடந்தது. அதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று(21-06-2011) இரவு 10.30 மணிக்கு முடிவடைந்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இரவு 11 மணிக்குத்தான் வெளியானது.

தற்போதைய தலைவரான பாரதிராஜாவே மீண்டும்   தலைவராகத் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.  பாரதிராஜா பெற்ற வாக்குகள் 1033. அவரை எதிர்த்து நின்ற துணை இயக்குநர் எஸ்.முரளி பெற்ற வாக்குகள் 267. செல்லாத வாக்குகள் 11.

சங்கத்தின் செயலாளராக இயக்குநர் அமீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 901. இவரை எதிர்த்து நின்ற தமிழன் படத்தின் இயக்குநர் அப்துல் மஜீத் பெற்ற வாக்குகள்  375.

சங்கத்தின் பொருளாளராக இயக்குநர் ஜனநாதன் போட்டியிடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல் சங்கத்தின் துணைத் தலைவர்களாக இயக்குநர்கள் சேரனும், சமுத்திரக்கனியும் போட்டியிடின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஒருங்கிணைந்த இயக்குநர் குழுவின் சார்பில் 4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு, இயக்குநர்கள் பிரபு சாலமன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, தம்பித்துரை, சி.வி.வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டார்கள். 

இவர்களில் பிரபு சாலமன்(905), எஸ்.எஸ்.ஸ்டான்லி(716), தம்பித்துரை(696) ஆகியோர் வெற்றி பெற்று வித்யாசாகர் தோல்வியடைந்தார். அவர் இடத்திற்கு 'நேசம் புதுசு' படத்தின் இயக்குநர் வேல்முருகன் 655 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சங்கத்தின் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவியில் 7 இடங்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த இயக்குநர்கள் குழு போட்டியிட்டது. மீதமிருந்த 5 இடங்களை துணை இயக்குநர்களுக்காக விட்டுக் கொடுத்தது.  இயக்குநர்கள் குழு சார்பில் இயக்குநர்கள் சிம்புத்தேவன், வசந்தபாலன், வெங்கட்பிரபு, ஏ.வெங்கடேஷ், கதிர், விஜய் ஆனந்த், பாலசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஆனால் 'புதிய அலைகள்' என்ற துணை இயக்குநர்கள் குழு துணைத் தலைவர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளிலும் இட ஒதுக்கீடு கேட்டனர். அந்த ஒதுக்கீட்டிற்கு இயக்குநர்கள் குழு ஒத்துக் கொள்ளாததால் செயற்குழு உறுப்பினர்களின் 12 இடங்களுக்கும் புதிய அலைகள் அணி போட்டியிட்டது.

தேர்தல் முடிவில் ஒருங்கிணைந்த இயக்குநர்கள் குழு சார்பாக போட்டியிட்டவர்களில் பாலசேகரன், சிம்புதேவன், வசந்தபாலன், வெங்கட்பிரபு ஆகிய நால்வர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

மீதமிருந்த 8 இடங்களில் 7 இடங்களில் புதிய அலைகள் அணியும், சுயேச்சையாக களமிறங்கிய  ராஜா கார்த்திக் என்னும் இணை இயக்குநரும் வெற்றி பெற்றனர்.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

1.ஐந்து கோவிலான் - 864
2. விஜயசங்கர் - 700
3. வெங்கட்பிரபு - 673
4.வசந்தபாலன் - 670
5. பாலமுரளிவர்மன் - 666
6. சிம்புதேவன் - 636
7. முகமது அஸ்லாம் - 630
8. ஜெகதீசன் - 621
9. பாலசேகரன் - 618
10. நாகேந்திரன் - 618
11. கமலக்கண்ணன் - 596
12. ராஜா கார்த்திக் - 557

மேலும், விரிவான செய்திகள் விரைவில் வெளிவரும்..!

மெல்லிதயம் கொண்டோரே, மெழுகுதிரி ஏந்த மெரினாவிற்கு வாரீர்..!

20-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழீழப் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிக வலிமையாக உணர்த்தும். எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.


கடந்த மே 18-ம் தேதி அன்று மெரினாவில் ஈழப் படுகொலைகள் நினைவாக மெழுகு திரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம்.

*பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.


இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச் செய்யுங்கள்.


இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம் http://candlelightfortamils.blogspot.com

lightacandlefortam...@gmail.com

lightacandlefortamils@googlegroups.com

http://groups.google.com/group/lightacandlefortamils

வேண்டுகோள் :

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் அனைவர்க்கும் அன்பு வணக்கம்.. வரும் ஜூன் 26 அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விற்கான வலைமனை பட்டை இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது அதனை தங்கள் வலைத்தளத்தில் ஜூன் 26 வரைக்கும் வைத்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் துண்டுப் பிரசுரத்திற்கான நகல் ஒன்றும் இணைத்துள்ளோம். அதனை தேவைபடுகிற அன்பர்கள் பயண்டுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள் : ஜூன் 26
நேரம் : மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை

அவன்-இவன் - சினிமா விமர்சனம்

18-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படத்திற்குப் பின்பு தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு இத்திரைப்படத்திற்குத்தான். சென்னையில் முதல் மூன்று நாட்களுக்கான முன் பதிவு முழுமையாக நிரம்பியுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் மகி்ழ்ச்சியில் திளைக்கின்றன.

தமிழ்ச் சினிமா காட்ட மறுத்த, மறுக்கும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை படம் பிடித்துக் காட்டுவதே பாலாவின் தனித்துவம்..! அந்த வகையில் இதுவும் ஒரு தனித்துவமான படம்தான்..!

விசுவாசம்.. இதுதான் பாலா இதுவரையிலும் எடுத்த நான்கு திரைப்படங்களில் கடைசி மூன்று படங்களின் முடிச்சு. இந்த ஐந்தாவது படத்திலும் இதுதான் மூக்கணாங்கயிறு..!


மணப்பாறை ராம்ஜி நகரை போன்று, ஊரே திருடர்களாக இருக்கும் ஒரு குக்கிராமம். இக்கிராமத்தை உள்ளடக்கிய கமுதிக்குப்பத்தின் தற்போதைய ஜமீன்தாரர் ஜி.எம்.குமார் என்றும் ஹைனஸ். தனது அரண்மனையையும், இம்பாலா காரையும் வைத்தே ஜமீன் அந்தஸ்தை ஓட்டி வரும் இவரின் செல்லப் பிள்ளைகள் அண்ணன், தம்பிகளான விஷாலும், ஆர்யாவும்..

இறைச்சிக்காக மாடுகளை கேரளாவுக்குக் கடத்தும் வில்லனை ஜமீன், தனது செல்வாக்கை வைத்து போலீஸில் காட்டிக் கொடுக்க.. அந்த வில்லன் பதிலுக்கு ஜமீனை மிகக் கொடுமையான முறையில் கொலை செய்ய.. வழக்கமான பாலாவின் ஹீரோயிக்கள் விசுவாசம் என்னும் கேடயத்தைத் தூக்க.. அவன்-இவன்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் இறுதிக் காட்சி..!

இப்படத்தில் கதை என்பதே இல்லை என்பதுதான் இப்படத்தின் சிறப்பு..! சில சம்பவங்களின் தொகுப்புதான் இத்திரைப்படம்..!

திருடர்கள் பரம்பரையில் வந்த இவர்களின் தந்தையின் இரு தார சக்களத்தி சண்டையில் சிக்கியிருக்கும் விஷால், ஆர்யாவின் சமூகத்தைக் காட்டுகின்ற நோக்கில், இங்கே நாம் அதிகம் கண்டு கொள்ளாத நமது சக மக்கள் இன்னமும் நிறைய பேர் உள்ளார்கள் என்பதையும் பாலா சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் இதுபோல் ஜமீன் குடும்பம் தற்போது எங்கே உள்ளது என்று தேடித்தான் பார்க்க வேண்டும். ஒரு வேளை இல்லாத ஒன்றை பாலா இருப்பதுபோல் வலுக்கட்டாயமாக சுவையுடன் நமக்குள் திணிக்கிறாரோ என்றும் தோன்றுகிறது..!

எந்த ஊரில் இதுபோல் ஜமீன்தாரை தேரில் உட்கார வைத்து ஊர் மக்கள் இழுத்து வருகிறார்கள்..? ஒரு காலத்தில் என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதைய நிலைமையில் எடுத்துக் காட்டுவது கொஞ்சம் அதிகப்படியான உருவாக்கமாகத்தான் தெரிகிறது.. இதனை ஜமீனாக எடுத்துக் கொள்ளாமல் தாதாயிஸமாக காட்டியிருந்தால்கூட கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருக்கலாம்..!

வழக்கமான பாலாவின் கதாநாயகர்களைப் போல விஷாலும், ஆர்யாவும் எதையும் செய்வார்கள் என்கிற பாணியிலேயே நம்மைத் துவக்கத்திலேயே பழக்கப்படுத்துகிறார்கள்..! ஆனால் விஷாலின் கேரக்டர் ஸ்கெர்ச் மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது..!

விஷாலுக்கு நிச்சயமாக இதுதான் முதல் திரைப்படம். அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. கிட்டத்தட்ட அரவாணியைப் போன்ற அவருடைய நடை, உடை, பாவனைகளுக்குப் பதிலாக, அவர் நாடகத்தில் ஸ்திரீ பார்ட் ஏற்பவராக இருப்பதால் அது போன்றே இருக்கப் பழகுகிறார் என்பதெல்லாம் நம்மை நம்ப வைக்க செய்திருப்பதாகவே தோன்றுகிறது..!

படத்தின் பல குறியீடூகளுக்கு விஷால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்..! ஆர்யாவால் பல முறை அவமானப்படுத்தப்பட்டும், எதுக்கும் லாயக்கில்லை என்றெல்லாம் குத்திக் காட்டப்பட்டும் குலத் தொழில் செய்ய துணிவில்லையென்றும் சொல்லப்படும் விஷால்தான், ஆர்யாவை வனத்துறை காவலர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்..!

காட்டாற்றின் கீழே அவ்வளவு பெரிய மரத்தில் அம்மணமாகத் தொங்கும் ஜமீனின் உடலைப் பார்த்து மயங்கி விழுவது ஆண் மகன் ஆர்யாவாகவும், கதறலுடன் அந்த மரத்தின் மீதேறி ஜமீனின் உடலை நீரில் விழுக வைத்து பின்னர் தண்ணீரிலிருந்து தூக்குவது ஸ்திரீ பார்ட் விஷாலாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது  குறியீடாக இல்லாமல் வேறென்ன..?

காலம் முழுக்க திருடனாக இருந்தவன்  வில்லனிடம் அடிபட்டு விழுக.. மேக்கப் போடும் கலைஞனாக அதுவும் பெண்ணாக உணரப்பட்டவன்தான், தனது விசுவாசத்தைக் காட்டும்விதமாக பகைவனைப் பழி தீர்க்கிறான்.. உச்சபட்ச குறியீடு இதுதான்..!

பெண் போல் இருக்கிறானே என்றெல்லாம் நம்மிடையே ஒரு எண்ணத்தை விதைத்துவிட்டு போலீஸ்காரியுடன் அவரது காதலைத் துவக்கி வைத்த சிறிது நேரத்திலேயே, அந்த கேரக்டர் மீதான நமது பரிதாப உணர்வு காணாமல் போய்விடுகிறது.. ஜமீன் சொல்வதைப் போல விஷால் இதற்குப் பின்பு நல்ல கலைஞனாகவே உணரப்படுகிறார். இது சூர்யா முன்னிலையில் அவர் காட்டும் நவரச நடிப்புணர்ச்சியின் மூலமாக உணர்த்தப்படுகிறது..!

முதல் குத்துப் பாடலில் ஆடுகின்ற விஷாலின் நடனம் நிச்சயமாக இந்தாண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் முதலிடத்தில் இடம் பிடிக்கப் போகிறது..! அசத்தல் நடனம்..! அரவாணிகளுடன் இணைந்து ஆடிய ஆட்டம் என்றாலும் பாலாவின் தனித்துவம் வாய்ந்த நடனக் காட்சியில் இதுவும் ஒன்று. இதுவே வேறொரு இயக்குநராக இருந்தால் குளோஸப் வைத்தே கொன்றொழித்திருப்பார்கள்..! மிகச் சிறந்த நடன இயக்கம்..!

விஷாலின் மொன்னை நடிப்பை ‘சிவப்பதிகாரம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்த்து நொந்து போயிருந்த என்னைப் போன்ற தமிழ் ரசிகர்கள், நிச்சயம் இந்தப் படத்திற்காக அவரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடலாம்..!

காவல்துறையினர் கொடுக்கும் விருந்திற்காக ராமராஜன் உடையில் ஸ்டைலாக வந்திறங்கும் விஷால், தனது காதலியின் பின்னால் ஒய்யாரமாக நடந்து செல்வாரே.. அந்த ஒரு ஷாட்டே டாப் கிளாஸ்..! இந்தக் கல்யாண மண்டபத்தில் தண்ணியடித்துவிட்டு அவர் செய்கிற அலப்பறைகள் எதுவும் வீணாகவில்லை. விஷாலா இப்படி என்று நிறையவே யோசிக்க வைத்திருக்கிறார் பாலா.

போலீஸ்காரியின் வீட்டில் திருட  வந்து மாட்டியவுடன் தனது குரலை டக்கென மாற்றிக் கொண்டு உதார் விடுவது.. சித்தியும், ஆர்யாவும் தன்னைத் தி்ட்டித் தீர்க்கும் காட்சியில் முகத்தாலேயே முறைப்பை உணர்த்துவது என்று விஷாலை பாராட்ட வேண்டிய காட்சிகள் நிறையவே..!

இந்தப் படத்தில் ஒவ்வாமையாக எனக்குத் தோன்றுவது ஆர்யாவின் காதல் காட்சிகள்தான்..! பெண்ணியவாதிகள் இப்படத்தைப் பார்த்து இனி என்ன கருத்து சொல்வார்களோ தெரியவில்லை.. அந்த அளவுக்கு எதனால் காதல் வருகிறது என்பதே தெரியாமல் ஆர்யாவின் ஆண்மைத்தனமான காதல் காட்சிகள் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை..! அதிலும் தனது காதலியை குட்டிக்கரணம் போடச் சொல்லும் காட்சிகள் ரொம்பவே ஓவர்..!

இதற்குப் பதிலாக டூயட் காட்சியில் ஆர்யாவும் பதில் குட்டிக் கரணம் போட்டாலும் இதை காதலியை மகிழ்விப்பதற்காகவே என்று சொல்லி பாலா ஒரு ஆணாதிக்கவாதி என்று குற்றம்சாட்டுபவர்களுக்கு தானே வலிந்து ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிட்டார்.

கதை இப்படித்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளையே திரைக்கதையாக்கி அதையே இடைவேளை வரையிலும் கொண்டு சென்றிருப்பதுதான் ஆச்சரியம்..! ஆனாலும் இடைவேளைக்குப் பின்பு கதைக்குள் நம்மையும் இழுத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறார் பாலா..!

இப்படி கதை எதை நோக்கிப் போகிறது என்கிற விஷயமே இல்லாமல் நகர்த்தியிருப்பதற்கு மிக உதவியாக இருப்பது திரைக்கதையும், வசனங்களும்தான்..! 2 நிமிடங்களுக்கொரு முறை வசனங்களால் தியேட்டர் அதிர்கிறது..!

அதிலும் இதில் இருக்கின்ற வசனங்களையெல்லாம் கேட்டால் படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் தூங்கிவிட்டார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது..! இரட்டை அர்த்த வசனங்கள் என்றால்கூட கள்ளச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போகலாம். ஆனால் இதில் நேரடியான வசனங்களே இப்படித்தான் இருக்கின்றன. அந்தக் கிராமத்து மக்களின் இயல்பான வசனங்களைத்தான் எழுதியிருக்கிறேன் என்று எஸ்.ரா. சொன்னாலும், அனைத்தையும் வெளிப்படையாக்குதல் என்றால் சென்சார்ஷிப் எதற்கு என்ற கேள்வி எழுகிறதே..?

அதிலும் அம்பிகா பேசும் சில வசனங்கள் அதீத ஆபாசத்தன்மை கொண்டவை.. ‘குஞ்சாமணி’, ‘மாவு மாவா போகுது’, ‘நட்டுக்கிட்டு நிக்குது’, ஆர்யா ஜமீனிடம் தண்ணியடித்துவிட்டு பேசும் அந்த ‘ஏ’ ரக வசனங்கள், பெண் போலீஸிடம் பேண்ட்ல ஜிப் இருக்கா...? என்று கேட்பது.. ஆர்யா தனது பின்புறத்தைப் பற்றிப் பேசுவது  என்று பலவும் விசனப்பட வைக்கின்றன.. இந்தப் படத்திற்கு இதெல்லாம் தேவையா என்று..?

இந்தக் குறிப்பிட்ட சமூகம்தான் என்றில்லை.. தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசுவான்.. கோபம் வந்தால் எந்தத் தமிழனிடமும் ஆர்யா ஜமீனிடம் உதிர்க்கும் அந்த வசனம்தான், முதல் வார்த்தையாக வெளிவரும். இதில் எந்த ஜாதிக்கார தமிழர்களும் விதிவிலக்கில்லை..! பின்பு எதற்கு இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று சுட்டிக் காட்டி அவர்கள் மீது அசூயையை வரவழைக்க வேண்டும்..? இயல்பை காட்டுவதிலும் இயக்குநர்களிடம் ஒரு அளவுகோல் தேவை.

எஸ்.ரா.தான் இந்த வசனங்களை எழுதினாரா என்று எனக்கு இப்போது சந்தேகமாகவும் இருக்கிறது. பாலாவின் கைவண்ணம் இதில் இருந்திருக்காதா என்றும் யோசனை வருகிறது. இது பாலாவின் மீதிருக்கும் ஒட்டு மொத்தத் திறமை மீதான அபிமானம்.

அதே சமயம் இத்தனை ஆண்டுகளாக எஸ்.ரா.வின் எழுத்தை வாசித்து வரும் ஒரு ரசிகன், இப்படிப்பட்ட வசனங்களின் ஒரு சிறிய முன்னுரையைக்கூட அவரது எழுத்துக்களில் இதுவரையில் வாசித்ததில்லை என்பதால் சட்டென்று ஏற்க முடியாமல் கொஞ்சம் திணறுகிறான்..!

பாத்திரப் படைப்புகளில் காவல் துறையினரை கேலிக்கூத்தாக்கியிருப்பது இத்திரைப்படத்தில் மட்டும்தானா..? நீதிபதியின் வீட்டுக்கு திருடனை அழைத்துச் சென்று பூட்டை உடைக்கச் சொல்லுவது.. ஊரில் திருட்டுக்களே நடக்கக் கூடாது என்றெண்ணி பூஜை செய்வது.. திருடர்களிடமே வந்து கெஞ்சி கூத்தாடுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடப்பதுதான். போலீஸ் ஸ்டேஷனிலேயே பூஜை நடத்துவது இங்கே சர்வசாதாரணம்..! ஆக, அப்படிப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரும், போலீஸாரும் இருக்கின்ற சூழலில் நடந்த கதையாகவே இதனை நாம் எடுத்துக் கொள்வோம்..!

பாலாவின் பெர்பெக்ஷன் என்பதே அவருடைய இயக்குதல் மற்றும் படைப்புத் திறனிலும் மேலோங்கியிருக்கும். இதிலும் அவ்வாறே.. அத்தனை நடிகர்களையும் ஒருசேர நடிக்க வைத்திருக்கிறார். உதாரணமாக முதல் குத்துப் பாடல் முடிந்ததும் விஷால் படியேறி ஜமீனிடம் தப்பியோடும்போது படிக்கட்டுகளில் நின்று கூச்சல் போடும் ஆட்டக்காரிகளின் நடிப்பை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.. எந்த வித்தியாசத்தையும் உணர முடியாது..!

ஒட்டு மீசையுடன் ஜமீனாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் முதல் காட்சியிலேயே விஷாலின் ஆட்டத்தைத் தாங்க முடியாத சிரிப்போடு சிம்மாசனத்தின் குறுக்கே படுத்து சிரிப்பதோடு தன்னை வித்தியாசப்படுத்தியிருக்கிறார்..! இதே ஜமீன்தான் அம்மணமாக வில்லனின் முன்பாக கூனிக் குறுகி நடுங்கிய தோரணையில் நிற்பதை பார்க்கின்றபோது அதற்குள் இத்தனையும் நடந்து முடிந்துவி்ட்டதா என்று சட்டென்று யோசிக்க வைக்கிறது திரைக்கதை..! ஜமீனின்  புறாக்களுடனான புலம்பல் தனிமை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்..!

ஆர்யாவின் அம்மாவாக வரும் பிரபா தனது மகனுக்காக அம்பிகாவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து பேசுவதும், செயற்கரிய செயலைச் செய்து, சுழல் விளக்கு வைத்த காரில் வந்திறங்கிய மகனை ஆட்டம், பாட்டத்தோடு வரவேற்கும் அந்தக் காட்சியும் ரசனைக்குரியது. அந்தம்மா இதைவிட கெட்ட ஆட்டத்தையெல்லாம் தெலுங்கில் நிறையவே ஆடியிருக்கிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!

இரண்டு ஹீரோயின்களில் மதுஷாலினிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் போலீஸ்கார ஜனனி ஐயரின் பேச்சைவிட அவரது கண்கள் நிறையவே பேசுகிறது. விஷாலை நடுரோட்டில் வழிமறித்து பேசுவதாகட்டும்.. வாக்கிடாக்கி கேட்டு வீடு தேடி வந்து கெஞ்சுவதாகட்டும் இந்தப் பொண்ணையும் இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் பாலா..!

அம்பிகா பீடி குடிப்பது, சின்னப் பையன் ஜமீனை யோவ் பெரிசு என்று அழைப்பது.. பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இன்ஸ்பெக்டரை அண்ணன் என்று அழைப்பது.. நீதிபதி இன்ஸ்பெக்டரை மிரட்டுவது.. அம்பிகாவும், பிரபாவும் குடும்பத்திற்கென்ற சூழல் வந்தவுடன் இணைந்து பேசுவது என்று பல கலவைகள் பாலாவால் கலக்கப்பட்டிருக்கிறது..

“எனக்கொரு ஆசை சார்.. இந்த லைட் வைச்ச கார்ல ஒரு தடவையாச்சும்..” என்ற வார்த்தையோடு முடித்துவிட்டு அடுத்தக் காட்சியில் அந்தக் காரில் ஆர்யா பயணிப்பது.. ஜமீனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் இடையிடையே பழி வாங்கும் படலத்தைக் காட்டி மிரட்டியிருப்பது, இறுதியில் தேரோடு வில்லனையும் சேர்த்து சொக்கப் பானை கொளுத்துவது என்று எதிர்பாராத சில தருணங்கள் திரைப்படத்திற்கு சுவை கூட்டியிருப்பது உண்மை.

படத்தில் எந்தக் காட்சியாலாவது இயக்கம், நடிப்பு சொதப்பல் என்று சொல்லவே முடியாத அளவுக்கு பாலாவின் மிகத் திறமையான இயக்குதல் தொடர்ந்திருக்கிறது..!

ஒரேயொரு நெருடல்.. கோவிலுக்கே சாமியாய் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த ஜமீன் இறந்தவுடன் ஆர்யா, விஷால் தவிர சுற்றி நிற்கும் மற்ற மக்களுக்கு அந்த எண்ணம் வராதது ஏன் என்றுதான் தெரியவில்லை..

ஜமீனுக்கு அடங்கிய ஊர் மக்கள்.. தெய்வமாக வழிபடும் தன்மை.. தேரில் அமர வைத்து இழுத்து வருவது.. இதெல்லாம் ஆண்டான், அடிமையை, சாதிப் பாகுபாட்டை மீண்டும் எதிரொலிக்கிறது என்றெல்லாம் பல்வேறுவிதமான சர்ச்சைகள்..!

குற்றம், குறை சொல்பவர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. நாம் மறக்க நினைக்கும், இந்தியச் சாதியத்தின் படிமங்களை மீண்டும், மீண்டும் இது பறை சாற்றுகிறது.. இந்துத்துவாவுக்கு மீண்டும், மீண்டும் வால் பிடிக்கிறார் என்றெல்லாம் பாலாவை நோக்கி குற்றச்சாட்டுக்கள் வந்தாலும், இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து அவரும் மறைமுகமாக இதற்கு படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார்..!

“கும்பிடறேன் சாமி” என்று ஆர்யாவுக்கு வைத்திருக்கும் பெயர்க் குறிப்பு எவனா இருந்தாலும் இனிமேல் எங்களை சாமி என்றுதான் பேச்சுக்காகவாவது அழைக்க வேண்டும் என்கிற அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது..!

சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவா என்று அலறித் துடிக்கும் தத்துவ மேதைகளுக்கு உதவியாக, பாலா தான் நம்பும் நாத்திகவாதத்தையும் ஒரு காட்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார். “பக்தனுக்கு என்ன வேண்டும் என்று தெரியாத நீயெல்லாம் ஒரு கடவுளா..?” என்று ஆர்யா மூலமாகக் கேட்கிறார் பாலா.

மாடுகளை இறைச்சிக்காக கடத்துவதைத் தடுக்கும் ஜமீனிடம் வில்லன் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.. “குர்பானிக்காக மாட்டை வெட்டித் திங்குறாங்களே.. அவங்களை போய் கேள்வி கேட்டியா நீயி..” என்ற இந்தக் கேள்விக்குள் உணர்த்துகின்ற, உணர்த்தப்படுகின்ற விஷயங்கள் நிறையவே உள்ளன.

நமது பல்வேறு மதங்கள், சமயங்கள், சாதிகள் பின்னிப் பிணைந்திருக்கும் இந்தச் சூழலில் இது போன்ற எதார்த்தவாத கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது கஷ்டம்தான்..! ஒருவருக்கு புனிதமானது மற்றொருவருக்கு பிடிக்காததாக இருக்கிறது..! ஆனால் இவை இரண்டுமே சமூகம் சார்ந்த பழக்கமாக இருப்பதால் இரண்டையுமே நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படியொரு சூழல் இருக்கிறது என்பதைச் சொல்லிக் காட்டுவதாலேயே அவர் அதற்கு ஆதரவானவர் என்று சொல்லி முத்திரை குத்திவிடக் கூடாது..! 

சமூகத்தின் கடைக்கோடியில், பிணியில் சிக்கி, கவனிப்பாறின்றி வாழும் மனிதக் கூட்டங்களின் வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளை மட்டும் இத்திரைப்படத்தில் பிய்த்து, பிய்த்து கொடுத்திருக்கிறார் பாலா. இதில் விபூதியும், சந்தனமும், குங்குமமும் தெளிப்பதோடு கூடவே, மனிதர்களுக்கு பொதுவான ரத்தமும் சிந்தப்படுகிறது என்பதுதான் உண்மை..!

பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!

அவன்-இவன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!