2017–ம் ஆண்டின் ‘உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகள்’ பட்டியல்

28-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற ஆண்டை போலவே இந்தாண்டும் தமிழ்த் திரையுலகின் சிறந்த சாதனையாளர்களை பட்டியலிடுவது மிகச் சிரமமாகத்தான் இருந்தது.
பல புதுமுக இயக்குநர்கள் தங்களது சிறப்பான இயக்கத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
பல புதிய சின்ன பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்து விருதுகளும் தங்களுக்கே கொடுத்தாக வேண்டும் என்று மிரட்டுவதை போல வெளிவந்திருக்கின்றன.
திரையுலகில் அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இத்தனை சிரமத்தில் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல் 2017-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!
இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில், ஒரு பாயிண்ட், ஒன்றரை பாயிண்ட் என்று துப்பாக்கியில் இருந்து பறக்கும் குண்டு போய்ச் சேரும் இடத்தைக் குறிப்பிடுவதுபோல அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!
வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2017ம் ஆண்டின் உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகள் பட்டியல் :
1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – அறம்
2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – தரமணி
3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – அருவி
4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – ஒரு கிடாயின் கருணை மனு
5. சிறந்த பேய் படம் – அவள்
6சிறந்த ஜனரஞ்சக திரைப்படம் – கவண்
7சிறந்த இயக்குநர் – மீஞ்சூர் கோபி (அறம்)
8சிறந்த இயக்குநர் – சிறப்பு பரிசு – ராம் (தரமணி)
9சிறந்த புதுமுக இயக்குநர் – அருண் புருஷோத்தமன் (அருவி)
10சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – லோகேஷ் கனகராஜ் – (மாநகரம்)
11சிறந்த கதை – மீஞ்சூர் கோபி (அறம்)
12. சிறந்த கதை – சிறப்பு விருது – ராம் (தரமணி)
13சிறந்த திரைக்கதை – லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)
14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது – கணேஷ் (8 தோட்டாக்கள்)
15சிறந்த வசனம் – ராம் (தரமணி)
16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – சமுத்திரக்கனி (தொண்டன்)
17சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (கருப்பன்)
18சிறந்த நடிகர் – சிறப்பு விருது – ராஜகுமாரன் (கடுகு)
19சிறந்த புதுமுக நடிகர் – வசந்த் ரவி (தரமணி)
20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – கார்த்திக் (பீச்சாங்கை)
21சிறந்த புதுமுக நடிகை – அதிதி பாலன் (அருவி)
22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – அனிஷா விக்டர் (அவள்)
23சிறந்த நடிகை – ஆண்ட்ரியா (தரமணி)
24சிறந்த நடிகை – சிறப்பு விருது – சுனு லட்சுமி (அறம்)
25சிறந்த துணை நடிகர் – பாரதிராஜா (குரங்கு பொம்மை)
26. சிறந்த துணை நடிகர் – சார்லி (மாநகரம்)
27சிறந்த துணை நடிகை – லிஸ்ஸி ஆண்டனி (தரமணி)
28. சிறந்த துணை நடிகை – சிறப்பு விருது – ரம்யா கிருஷ்ணன் (பாகுபலி-2)
29சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – எம்.எஸ்.பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – ஆடுகளம் நரேன் (எய்தவன், வீரையன்)
31சிறந்த குணச்சித்திர‌ நடிகை – ராதிகா பிரஷிதா (கடுகு)
32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – சரண்யா பொன்வண்ணன் (மகளிர் மட்டும்)
33சிறந்த வில்லன் நடிகர் – அரவிந்த்சாமி (போகன்)
34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – போஸ் வெங்கட் (கவண்)
35. சிறந்த வில்லி – ஷிவதா நாயர் (அதே கண்கள்)
36சிறந்த வில்லி – சிறப்பு விருது – சங்கீதா (நெருப்புடா)
37சிறந்த நகைச்சுவை நடிகர் – முனீஸ்காந்த் (மாநகரம், மரகத நாணயம்)
38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – யோகி பாபு (சரவணன் இருக்க பயமேன், என் ஆளோட செருப்பக் காணோம்)
39சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (காஞ்சனா-2)
40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – மதுமிதா (பல திரைப்படங்கள்)
41. சிறந்த குழந்தை நட்சத்திரம் – பேபி சைதன்யா (நிசப்தம்)
42. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறப்பு விருது – தன்ஷிகா (அறம்)
43சிறந்த ஒளிப்பதிவு – கே.கே.செந்தில் குமார் (பாகுபலி-2)
44சிறந்த படத் தொகுப்பு – கோடகிரி வெங்கடேஸ்வர ராவ், பிக்கினா தம்பிராஜூ (பாகுபலி-2)
45சிறந்த ஒலிப்பதிவு – கல்யாண ரமணா (பாகுபலி-2)
46. சிறந்த ஒலிக்கலவை – பி.எம். சதீஷ் (பாகுபலி-2)
47. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – கமலக்கண்ணன் (பாகுபலி-2)
48சிறந்த நடன இயக்கம் – ராகவா லாரன்ஸ் – ரங்கு ரக்கற (சிவலிங்கா)
49சிறந்த சண்டை பயிற்சி – கிங் சாலமன்லீ விட்டாக்கர்கேச்சா கம்பாக்டீ (பாகுபலி-2)
50சிறந்த கலை இயக்கம் – விஸ்வநாத் சுந்தரம் (பாகுபலி-2)
51சிறந்த ஆடை வடிவமைப்பு – ரமா ராஜமெளலிபிரசாந்தி பிடிபைர்நேனி (பாகுபலி-2)
52. சிறந்த ஒப்பனையாளர் – சீனு நல்லா (பாகுபலி-2)
53சிறந்த பின்னணி இசை – கிரீஷ் (அவள்)
54சிறந்த இசையமைப்பாளர் – சக்தி (சூரத் தேங்காய்)
55சிறந்த டூயட் பாடல் – ஒத்த பார்வை பார்த்து (சூரத் தேங்காய்)
56சிறந்த ஜனரஞ்சக பாடல் – ரங்கு ரக்கற (சிவலிங்கா)
57சிறந்த சோகப் பாடல் – அம்மான்னு உலகத்தில் (எங்கம்மா ராணி)
58சிறந்த பின்னணி பாடகர் – பென்னி தயாள் (லாலா கடை சாந்தி – சரவணன் இருக்க பயமேன்)
59சிறந்த பின்னணி பாடகி – மகிழினி குணசேகரன் (ஒத்த பார்வை பார்த்து – சூரத் தேங்காய்)
60.சிறந்த பாடலாசிரியர் – நலங்கிள்ளி (ஒத்த பார்வை பார்த்து – சூரத்தேங்காய்)
61சிறந்த டிரெய்லர் – விக்ரம் வேதா
தேர்வுகள் பற்றிய கருத்துகள்விமர்சனங்கள்அர்ச்சனைகள்பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

மன்னர் வகையறா - சினிமா விமர்சனம்

28-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

A3V சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விமலே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் விமல் ஹீரோவாகவும், ‘கயல்’ ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ‘இளைய திலகம்’ பிரபு, ஜெயப்பிரகாஷ், ‘ரோபோ’ சங்கர், சாந்தினி தமிழரசன், சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா & சூரஜ் நல்லுசாமி, இசை – ஜாக்ஸ் பிஜாய், படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – கே. சம்பத் திலக், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – தினேஷ் & எம். செரீப் & தீனா, பாடல்கள் – மணி அமுதன் & சாரதி.

மதியழகன் மூரியர் என்னும் விமல் சட்டக் கல்லூரி மாணவர். தேர்வெழுதி பாஸாகாமல் இருக்கும் வெட்டி ஆஃபீசர். அவருக்கும் ஜே.பி. வாண்டையார் என்னும் வம்சி கிருஷ்ணாவின் தங்கை ‘கயல்’ ஆனந்திக்கும் இடையில் காதல் மலர்கிறது.
விமலின் தந்தை கோவிந்தராஜ் மூரியர் என்னும் பிரபு, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் கருணாகரன் என்னும் அபிஷேக் வினோத்தின் இறால் பண்ணையை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூட வைக்கிறார் பிரபு. அதனால் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது.
விமலின் அண்ணன் கார்த்திக் குமார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அவரைக் காப்பாற்றும் விமல், தனது அண்ணன் காதலித்த சாந்தினியைத் திருமண மேடையில் இருந்து கடத்திச் சென்று அண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார் விமல்.
இதனால் விமல் மீது, அபிஷேக்கும் வம்சி கிருஷ்ணாவும் கொலை செய்யுமளவிற்குக் கோபம் கொள்வதோடு, சாந்தினிக்குப் பார்த்த மாப்பிள்ளையை ஆனந்திக்கு நிச்சயமும் செய்து விடுகின்றனர்.
ஒரு டிராமா செய்து, தனது அண்ணன் அண்ணியை, இரண்டு குடும்பங்களும் ஏற்றுக் கொள்ளச் செய்து விடுகிறார் விமல். எனினும், விமலிடம் அவரது அப்பா பிரபு, ஆனந்தியுடனான காதலைக் கண்டிப்பதோடு, ஆனந்திக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடையின்றி நிகழவேண்டும் என்றும் சொல்லி விடுகிறார்.
அதற்கான முயற்சியை விமலே முன் நின்று எடுக்கிறார். ஆனால், கல்யாணத்தன்று ஆனந்தியை மண்டபத்தில் காணவில்லை. விமல் தான் கடத்தியிருப்பார் என்று அனைவரும் கருதுகின்றனர்.
விமல் பரீட்சையில் தேர்வு பெற்றாரா? ஆனந்திக்கு என்னானது? விமல் ஆனந்தியின் காதல் என்னானது? என்பதெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
தனது மாப்பிள்ளை விமல் எப்படியும் வக்கீல் ஆகி விடுவான் என ஊரில் உள்ளவர்களை எல்லாம் வம்புக்கு இழுக்கும் மாமன் பாத்திரத்தில் ‘ரோபோ’ சங்கர் நடித்துள்ளார். அவருக்கு என்றே விசேஷமாக முழு நீள காமெடி ரோல் தரப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். படத்தின் க்ளைமேக்ஸில்கூட, தான் புதிதாய்ச் சேர்த்துக் கொண்ட பெண், சிங்கம்புலியைப் பார்க்கும்பொழுது, அதற்கு ‘ரோபோ’ சங்கர் தரும் ரியாக்ஷனுக்குத் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.
இறால் பண்ணை ஓனராக வரும் அபிஷேக்கை, இந்தப் படத்தில் வில்லன் என்றே சொல்லலாம். விமலைக் கொல்வதே தன்ல ட்சியம் என்று இருக்கும் அவர், க்ளைமேக்ஸில் தன் தம்பிக்கு ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலியோடு விமல் கல்யாணம் செய்து வைக்கும் பொழுது, அதைச் சுலபமாக ஏற்றுக் கொள்வது ஒட்டவில்லை.
வம்சி கிருஷ்ணாவிற்குத் தெரியாமல், அவரது அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா சரண்யா பொன்வண்ணன், பாட்டி மற்றும் மனைவி நீலிமா ராணி, சாந்தினியின் வளைகாப்பிற்காகக் கிளம்பும் காட்சி அசத்தல் நகைச்சுவை.
அந்த உண்மை தெரிய வரும் போது, வம்சி கிருஷ்ணா தனது தந்தையை எடுத்தெறிந்து பேசி விடுகிறார். அதே போல், ஆனந்தி காணாமல் போகும் போதும் வம்சி கிருஷ்ணா எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுகிறார். அதற்கு ஜெயப்பிரகாஷ் தன் மகனிடம் பேசும் வசனம், குடும்பம் என்ற அமைப்பின் மீதான நம்பிக்கைக் கூட்டுகிறது.
படத்தில் கூட்டுக் குடும்பத்தை உயர்த்திப் பேசும் ஒரு வசனம் உண்டு. தான் மனைவியின் அனைத்து உறவினருடனும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறேன் எனச் சொல்லும் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதனை சிங்கம்புலி கலாய்த்ததும், ”அடடா அடடா வீடே கோயில்” என்ற பாடல் வரிகளோடு ஜாக்ஸ் பிஜாயின் இசையில் பாடல் வருகிறது.
இந்த குடும்ப செண்ட்டிமென்ட்டை நம்பித்தான் ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்குநர் பூபதி பாண்டியன் எடுத்துள்ளார் என்று சொல்லலாம். படத்தின் நீளத்தையும் அவர் கவனத்தில் கொண்டு குறைத்திருக்கலாம். ஆனால், படம் போரடிக்காதவாறு திரைக்கதை அமைத்து அக்குறையைப் போக்கி விடுகிறார் பூபதி பாண்டியன்.
பாடல்கள் எல்லாமே வண்ணமயமாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயக் கவிஞராய்ப் புது அவதாரம் எடுத்திருக்கும் பூபதி பாண்டியன், ‘அண்ணன பத்தி கவலையில்ல’ எனும் பாடலை எழுதியுள்ளார். விமலுக்கும், ஆனந்திக்கும் அப்பாடலில் கொடுக்கப்பட்டுள்ள காஸ்ட்யூம்கள் ஈர்க்கின்றன. ‘ஒரு தட்டான போல்’ என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் இதமாய் உள்ளது.
சுப்ரீம் சுந்தரின் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கின்றன. சண்டைகளில் யாரும் இறப்பதில்லை. படத்தின் க்ளைமேஸையும், ‘திருவிளையாடல் ஆரம்பம்’ போல் தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாகவே முடித்து வைத்துள்ளார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
குடும்பத்தினரோடு பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது இப்படம்..!

பாகமதி - சினிமா விமர்சனம்

26-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை Studio Green மற்றும் UVCreations ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் சார்பாக வி.வம்சி கிருஷ்ண ரெட்டி, உப்பலாபாடி பிரமோத், கே.ஈ.ஞானவேல்ராஜா மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தில் அனுஷ்கா ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் உண்ணி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், பிரபாஸ் சீனு, தன்ராஜ், முரளி சர்மா, தேவதர்ஷிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மதி, இசை – எஸ்.எஸ்.தமண், படத் தொகுப்பு – கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ், சண்டை இயக்கம் – ஜாஸுவா, நடனம் – விஷ்வ ரகு, தயாரிப்பு வடிவமைப்பு – ரவீந்தர், நிர்வாகத் தயாரிப்பு – என்.சுந்தீப், எழுத்து, இயக்கம் – ஜி.அசோக்.
இந்த வருடமும் பேய்ப் பட சீஸன் தொடர்கிறது. இந்தப் படத்தின் கதையை ‘பாகுபலி’ படத்தின் ஷூட்டிங்கின்போதே தன்னிடம் சொன்னதாக நாயகி அனுஷ்கா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். ‘பாகுபலி‘ மாதிரியான மிரட்டலை இதில் கொடுக்க முடியவில்லையென்றாலும், டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக பொலிட்டிக்கல் மூவியாகவும், கூடவே பேய்ப் படமாகவும் கொணர்ந்திருக்கிறார்கள்.

மாநில அமைச்சரான ஈஸ்வர பிரசாத் என்னும் ஜெயராம், மிக, மிக நல்ல மனிதராக சமூகத்தில் மதிக்கப்படுபவர். ஊழலே செய்யாதவர் என்று அவர் மீது ஒரு பிம்பம் எழுப்பப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் ஜெயராமிடம் கேட்கும்போது, “இன்னும் 15 நாட்களுக்குள்ளாக அந்தக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் தான் அமைச்சர் பதவி மட்டுமல்ல.. அரசியலில் இருந்தே விலகிவிடுவதாக…” சொல்கிறார். கூடவே தன்னுடன் எப்போதும் இருக்கும் தனது கைத்தடியான பிரகாஷ் என்பவரை தனது அரசியல் வாரிசாகவும் காண்பிக்கிறார்.
இந்தப் பேட்டியை பார்த்து அதிர்ச்சியடையும் முதலமைச்சர் இது பற்றி உளவுத்துறை மூலம் விசாரிக்கும்போது அமைச்சர் ஜெயராம் கட்சிக்கும் குழப்பத்தை உண்டாக்கி, அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கி தான் முதலமைச்சர் ஆக விரும்புவதாக அறிகிறார்.
உடனடியாக டெல்லிக்கு ஓடுகிறார். அங்கே மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து சரணடைகிறார். அவரோ தமிழக முதல்வரை காப்பாற்ற நினைத்து ஜெயராமை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்கலாம் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
சமீப மாதங்களாக ஜெயராம் சுற்றுப்பயணம் சென்ற ஊர்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் இருக்கும் கோவில் சிலைகள் அன்றைக்கே திருடப்பட்டிருக்கின்றன. இந்தத் தகவலை வைத்து சிலை கடத்தல் வழக்கில் ஜெயராமை சிக்க வைக்க திட்டம் தீட்டுகிறார்கள் மத்திய உள்துறை அமைச்சரும், தமிழக முதலமைச்சரும்..!
உள்துறை அமைச்சரை நேரில் வந்து சந்திக்கும் சி.பி.ஐ.யின் இயக்குநர், இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி ஆதாரம் இல்லாமல் ஜெயராம் மீது பொய் புகாரை தன்னால் சுமத்த முடியாது என்று சொல்ல.. அவரை விலக்கிவிட்டு சி.பி.ஐ.யின் இணை இயக்குநரை பிடித்து தங்களது அரசியல் விளையாட்டைத் துவக்குகிறது மத்திய உள்துறை.
சி.பி.ஐ.யில் உயரதிகாரியாக இருக்கும் ஆஷா சரத் இதற்கு பொறுப்பேற்று சென்னைக்கு வருகிறார். வந்தவரின் ஒரே குறிக்கோள்.. மாநில அமைச்சர் ஜெயராமிற்கு எதிராக ஏதாவது ஒரு ஆதாரத்தைக் கண்டறிந்து, அதன் மூலமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான்.
இதற்காக ஜெயராமிடம் ஸ்பெஷல் பி.ஏ.வாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை விசாரிக்க நினைக்கிறார். அனுஷ்கா அப்போது தன்னுடைய காதலரும், பழங்குடியின மக்களின் ஆர்வலரும், ஆலோசகருமான சக்தியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
சிறையில் இருக்கும் அனுஷ்காவை சப்தமில்லாமல் வெளியில் கொண்டு வருகிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் ‘பாகமதி’ பங்களாவிற்கு அவரை கொண்டு சென்று அடைக்கிறார்கள். அங்கேயே ஆஷா சரத், அனுஷ்காவிடம் தொடர்ந்து விசாரணை செய்கிறார்.
இதற்கிடையில் அந்த பங்களாவில் இருக்கும் ‘பாகமதி’யின் பேய் அனுஷ்காவின் உடம்பில் ஏறிக் கொண்டு தன்னுடைய அட்டூழியத்தைத் தொடங்குகிறது. ஆஷாவின் விசாரணையிலும் எந்த முன்னேறமும் கிடைக்காத நிலை. ஆனால் பேயின் அட்டகாசம் மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது..!
இது தெரியாமல் மாநில அமைச்சர் ஜெயராமும் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். இறந்து போன சக்தியின் அண்ணனான போலீஸ் அதிகாரியும் அனுஷ்காவை கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆஷா சரத் எப்படியாவது அனுஷ்காவிடம் இருந்து ஜெயராமுக்கு எதிரான ஒரு விஷயத்தையாவது கறந்துவிடலாம் என்று பார்க்கிறார். இவர்களுக்கிடையில் ‘பாகமதி’ பேயோ அனுஷ்காவை அந்த வீிட்டில் இருந்து வெளியேறவிடக் கூடாது என்பதற்காக அவரை கொடுமைப்படுத்துகிறது..!
கடைசியில் அனுஷ்காவின் நிலைமை என்னாகிறது..? பாகமதி பேய் அனுஷ்காவை விட்டு விடுதலையானதா..? ஜெயராம் முதலமைச்சர் பதவியை அடைந்தாரா..? என்பதெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் அனுஷ்கா. அனுஷ்காவுக்காகவே படத்தைப் பார்க்கலாம் என்றும் சொல்ல வைத்திருக்கிறார். ஆச்சரியப்படும்வகையிலான கேரக்டர் ஸ்கெட்ச்சில்.. ஒரு சிறைக் கைதியாக அறிமுகப்படுத்தப்படும் ‘சஞ்சலா’ என்னும் அனுஷ்கா படத்தின் முடிவில் நிஜமான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தெரிகிறார்.
அந்தப் பங்களாவிற்குள் தன்னை விட்டு விலக மறுக்கும் பாகமதி பேயுடன் அவர் மல்லுக்கட்டும் காட்சிகளில் அவருடைய நடிப்பும், பதைபதைப்பும், படும் கஷ்டமும் ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபத்தையும் சேர்த்தே வரவழைத்திருக்கிறது.
சிற்சில காட்சிகள் பல பேய்ப் படங்களில் பார்த்த அனுபவம் இருந்தாலும் அனுஷ்கா என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. ‘சேலையில் ஒரு சுந்தரி’ என்னும் சொல்லாடலுக்கேற்றாற்போல் கலெக்டர் வேடங்களில் பவனி வரும்போது தேவதையாக ஜொலிக்கிறார். கொஞ்சமே கொஞ்சம்தான் அவருடைய கலெக்டர் போஸ்ட்டுக்கான நடிப்பு இருக்கிறது என்பதால் அதைவிடவும் ‘பாகமதி’ பேய்தான் பேயாட்டம் ஆடியிருக்கிறது.
கம்பீரம் என்பதற்கு ஏற்ற முகம்.. மிடுக்கான உடலமைப்பு, கூர்மையான கண்கள்.. அதிகாரிகளுக்கேற்ற தோரணையுடன் வலம் வரும் ஆஷா சரத் நாற்பதை தாண்டிய ரசிகர்களின் கண்களுக்கு நிச்சயம் குளுமையாகத் தெரிவார். இவரை இந்தக் கேரக்டருக்கு எதற்காக தேர்வு செய்தார்களோ, அதை அச்சுப்பிசகாமல் செய்திருக்கிறார் ஆஷா.
நிறைய அழகு.. சிபிஐ அதிகாரிகளுக்கே உரித்தான பேச்சு, அதிகாரத் திமிர் எல்லாமும் கலந்து இருக்கின்ற காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனை அழகாக்கியிருக்கிறார் இந்த ஆண்ட்டி..! நடிப்பிற்கு பஞ்சமில்லை. பாராட்டுக்கள்..!
ஜெயராம் போலி நல்லவராக நடித்திருக்கிறார். நல்லவர் என்கிற முறையில் அவர் பேசுகின்ற பேச்சும் காட்டுகின்ற நடிப்பும் வில்லன் ஜெயராமுக்கு போட்டியாகிறது. கடைசியில் வில்லனாகவே அவர் அனுஷ்காவிடம் காட்டும் நடிப்பு இப்படியே தொடருமய்யா உமது நடிப்பை என்று சொல்ல வைக்கிறது.
மலையாள இளம் ஹீரோ உன்னி முகுந்தனை மலையாள வசூலுக்காகவும் சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் அனுஷ்காவுக்கு ஜோடி என்றதுதான் கொஞ்சம் இடிக்கிறது. தனக்கு வந்த நடிப்பைக் கொட்டியிருக்கிறார் உண்ணி.
போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இருவரும் பேய்க்கு பயந்து சாகும் காட்சிகளெல்லாம் பேய் பற்றிய கதையை பில்டப் செய்ய பெரிதும் உதவியிருக்கின்றன. வித்யூ லேகாவும், தேவதர்ஷிணியும் ஒரு சில காட்சிகளில் வந்து போயிருக்கிறார்கள். அவ்வளவுதான்..!
திகில், சஸ்பென்ஸ் படங்களுக்கு மிகப் பெரிய பலமாக இருக்க வேண்டியது ஒளிப்பதிவும், இசையும். இந்தப் படத்தில் இந்த இரண்டுமே சொல்லி அடித்திருக்கிறது.
பங்களாவிற்குள் நடக்கும் காட்சிகளில் திகிலை கூட்டியும், சஸ்பென்ஸை தொடர்ந்தும், அனுஷ்காவின் பயமுறுத்தலை காட்டியும் ஒரு கச்சிதமான பேய்க் கதையை நிகழ்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி. பேய்க்கான பில்டப் கொஞ்சம் ஓவராக 3 ரீல் அளவுக்கு இருந்தாலும் அதனை மறந்துபோகும் அளவுக்கு இருப்பது கேமிராவின் வேலையினால்தான்.. அவருக்கு நமது பாராட்டுக்கள்..!
எஸ்.தமணின் பின்னணி இசை ரொம்பவும் பயமுறுத்தவில்லையென்றாலும், காட்சிகளின் பிரம்மாண்டத்திற்கு ஒத்துப் போயிருக்கிறது. அனுஷ்கா ஆணி அடிக்கும் காட்சியில் இருக்கும் பயங்கரத்திற்கு இசைதான் பெரிதும் உதவியிருக்கிறது.
பேய்ப் படத்தில் லாஜிக் பார்க்கவே வேண்டாம் என்பார்கள். ஆனால் இதில் பேயில்லாத கதையும் கொஞ்சம் இருப்பதால் அதையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
அனுஷ்காவை சிறையில் இருந்து பேய் பங்களாவிற்கு அழைத்துச் செல்லும் காட்சியிலேயே அனுஷ்கா பேசும் வசனங்கள் அவரது வாயசைப்புடன் ஒத்துப் போகவேயில்லை. எப்படி இத்தனை பெரிய தவறை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி.. அவரை சட்டவிரோதமாக சிறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியிடத்திற்குக் கொண்டு சென்று விசாரணை செய்வது எத்தனை கஷ்டம், முடியாத காரியம் என்பது சின்னப் பிள்ளைகளுக்குக்கூட தெரியும். அனுஷ்காவின் குடும்பத்தினர் சிறைக்கு வர மாட்டார்களா.. சிறையில் அனுஷ்கா எங்கே என்று மற்ற கைதிகள் கேட்க மாட்டார்களா.. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
முதல் தகவல் அறி்க்கையை பதிவு செய்யாமல் சி.பி.ஐ. அமைப்பு யாரையும் விசாரணைக்கு அழைக்காது. அதேபோல் விசாரணை செய்தால் அதனை முறைப்படி ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப்பாக பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டு. சம்மன் அனுப்பித்தான் அனைவரையும் வரவழைப்பார்கள். அதெல்லாம் இல்லாமல் நடந்து கொள்ளும் ஆஷா சரத் கோஷ்டி ஆளும் அரசியல் நிர்வாகத்தினரின் செல்வாக்கு பெற்றவர்கள் என்று சொல்லி நம் வாயை அடைத்திருக்கிறார் கதாசிரியரும், இயக்குநருமான அசோக்.
கிராமத்து மக்களை கொலை செய்வதைத் தடுக்க வேண்டி உண்ணி முகுந்தன் தனது உயிரை தியாகம் செய்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை. அதேபோல் இது ஒன்றுக்காகவே ஐ.ஏ.எஸ். படித்த கலெக்டம்மாவான அனுஷ்கா பயந்துபோய் உண்மையைச் சொல்லாமல் சிறைக்கு செல்வதெல்லாம் சுத்த பத்தாம்பசலித்தனம்..!
‘பாபநாசம்’ ஸ்டைலில் இறுதியில் தனது மகள் சொல்லிக் கொடுத்ததை நினைத்து அதுபோலவே திடீர் ஞானதோயமாக அனுஷ்காவின் உண்மைத்தனத்தைக் கண்டறிவதெல்லாம் டக்கென்று கதையை முடிக்க நினைத்த திரைக்கதையாகத் தோன்றுகிறது.
எல்லாவித லாஜிக்குகளுக்கும் மறுதலிப்பாக அனுஷ்காவும் இந்த விசாரணைக்கு உடந்தையாகித்தான் அங்கே செல்கிறார் என்று கடைசியில் ஒரு கதை சொல்லி நமது சந்தேகங்களுக்கு மங்களம் பாடியிருக்கிறார் இயக்குநர்.
இறுதியில் அப்படியும் பேயைவிட மாட்டோம் என்றெண்ணி “எனக்கு அரபி மொழி தெரியாதே..?” என்று அனுஷ்கா சொன்னவுடன், மீண்டும் அந்த பேயை ஓப்பன் செய்து காட்டுவதன் மூலம் இது பேய்ப் படம்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வழமையான பல பேய்ப் படங்கள் மத்தியில் கமர்ஷியல் படத்தின் கதையையும் சேர்த்து உருவாகியிருக்கும் இந்த ‘பாகமதி’ பேயை ஒருமுறை, முறைத்துவிட்டு வரலாம்தான்..!