தாயே... மன்னித்துவிடு..!


17-03-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து கொண்டிருந்தேன். குடியிருந்தது திண்டுக்கல்லில். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 5.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸையோ அல்லது அதற்குப் பின்பு வரும் டிரெயினையோ பிடித்து மதுரை வந்து, அங்கிருந்து வேறொரு பஸ்ஸில் 8 மணிக்குள்ளாக ஒர்க்ஷாப்பிற்குள் போயாக வேண்டும்..!

எனது அம்மாவுக்கு படிப்பறிவே இல்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. கையெழுத்து கூட போடத் தெரியாது. உடல் வலுவும் இல்லை. ஒல்லிக்குச்சியாக இருக்கும். எப்போதும் காலை நீட்டி சுவரில் சாய்ந்துதான் உட்கார்ந்திருக்கும். வீட்டில் சமையல் வேலையெல்லாம் எனது அக்காள்கள்தான்..! எனக்காக எனது அக்கா செல்வமணி காலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்து கொடுக்கும். சில நாட்களில் அக்காவால் முடியலைன்னா அதுவும் படுத்திரும். 

காலை 4.15 மணிக்கு முதல் அலாரம் ஒலித்த சில நொடிகளில் என் அம்மா கண் முழிச்சிரும்.. “தம்பி...” என்று குரல் கொடுக்கும். என்னிடமிருந்து ஏதாவது அசைவுகள் வரவில்லையெனில் “ராசா” என்று இன்னொரு குரல் கொடுக்கும்.. அதற்கும் நான் பதில் அசைவு கொடுக்கவில்லையெனில் எழுந்து உட்கார்ந்து நான் போர்த்தியிருக்கும் பெட்ஷீட்டை லேசாக உருவியபடியே “கண்ணு.. எந்திரி கண்ணு.. அலாரம் அடிச்சிருச்சு..” என்று சொல்லும்..!

அப்படி, இப்படி என்று திரும்பி, அலுத்துப் போய் எழுந்து உட்கார்ந்து அம்மாவை பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு.. கோபம்.. எல்லாம் சேர்ந்து வரும்.. “அதான் எந்திரிச்சிட்டேன்ல.. அப்புறம் எதுக்கு நொய்.. நொய்யுன்ற..” என்று கடுப்போடு எழுந்து போவேன்.. அம்மா இதைக் கண்டு கொள்ளாமலேயே இன்னொரு பக்கம் படுத்திருக்கும் அக்காளை எழுப்பத் துவங்கும். “செல்வா.. தம்பி எந்திரிச்சிட்டான் பாரு..” என்று குரல் கொடுக்கும். அக்காள் உடனே எழுந்தால் நல்லது. இல்லையெனில், கோபத்துடன் வசவுகளை வாரி வழங்கும். இந்தக் கோபக் குரலைக் கேட்டே அக்காளுக்கும் கோபம் வரும்.. “ச்சே.. ஆத்தாளுக்கும், மகனுக்கும் வேலையில்லை. உயிரை வாங்குறீங்க..” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும்.. “ஆமா.. எனக்கு வேலையில்லை.. வேலைக்குப் பொற புள்ளைக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதாடி..?” என்று கேட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொள்ளும் அம்மா..!

நான் குளித்து முடித்து ரெடியாகி வரும்வரையில் அக்காவிடமிருந்து சின்னச் சின்ன முனங்கல்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக அம்மாவும் எதையாவது படுத்த நிலையில் இருந்தே அள்ளி வீசிக் கொண்டிருக்கும். அதிகமாக “உனக்கு கொழுப்பு கூடிப் போச்சுடி.. பொம்பளை மாதிரியா இருக்குற..? அவனுக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதா.. நாம செஞ்சு கொடுக்கலைன்னா வேற எவ செஞ்சு கொடுப்பா..?” என்பதாகவே இருக்கும்..!

“இந்தாடா.. கிளம்பு.. போய்த் தொலை.. உயிரை எடுக்குறான்..” என்று அதிகப்பட்சம் முறைப்புடன் அக்கா, டிபன் பாக்ஸை கையில் கொடுத்துவிட்டு எப்போது வெளியேறுவேன்.. கதவைச் சாத்தலாம் என்கிற ஆசையோடு காத்திருக்கும்.. நான் பேக், டிபன் பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பும்வரையிலும் படுத்திருக்கும் அம்மா, வாசல் கதவு அருகே சென்றவுடன் எழுந்து உட்கார்ந்து, “தம்பி.. பாஸ் எடுத்துக்கிட்டியா..? எல்லாம் எடுத்திட்டியா..? காசு வைச்சிருக்கியா..?” என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகளை வீசும். ஒரு நாள்கூட ஒரு கேள்விக்கும் மரியாதையாய் பதில் சொல்லியதில்லை. “எல்லாம் எடுத்துக்கிட்டேன்.. ச்சும்மா தொண, தொணன்னு அனத்தாதம்மா.. படுத்துத் தொலை..” என்று வெறுப்பை கக்கிவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறேன்..!

இந்த வெறுப்பை என்றைக்கும் எனது அம்மா கண்டு கொண்டதில்லை.. அடுத்த நாள்.. அதற்கடுத்த நாள்.. அந்த 2 வருட அப்ரண்டிஸ் பீரியட் முடியும்வரையிலும் அதனுடைய கேள்விகளும், விசாரணைகளும், அக்கறையும் ஒரு நாள்கூட நின்றதில்லை..! அதற்குப் பின்பு கேன்சரில் அது படுத்த படுக்கையாகும்வரையிலும்கூட இரவு வேளையில் நான் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் “சாப்பிட்டியா கண்ணு..?” என்று வார்த்தைகளை வீசாமல் தூங்கியதில்லை....! 

எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் 16 வருட இடைவெளி. இது தலைமுறை இடைவேளையாக பரவி.. ரோட்டில் பார்த்துக் கொண்டால்கூட பேசிக் கொள்ளாமல் செல்வதாக இருந்தது.. ஒரு நாள் டிரெயின் பாஸ் எடுக்க  காசில்லை என்றார் அண்ணன். எனக்கு கோபம். தொடர்ந்து வீட்டுச் சண்டையில் வீட்டில் எல்லாரையும் சபித்துவிட்டு, பட்டென்று சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு “இந்த எழவெடுத்த வீட்டுக்கு இனிமேல் வரவே மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்..

மதுரை ஒத்தக்கடையில் என்னுடன் வேலை பார்த்த வேல்முருகனின் வீட்டில் டேரா போட்டுவிட்டேன். காலையில் மெதுவாக எழுந்து, ஹோட்டலில் சுடச் சுட இட்லியையும், மெதுவடையையும் சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கும் கடையிலேயே சாப்பிட்டு இரண்டாவது நாளிலேயே நாக்கு சுவை கண்டுவிட்டது..! மாதம் அப்ரண்டீஸ் உதவித் தொகையாக 450 ரூபாய் கொடுத்தார்கள். அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் ஒரு நப்பாசை..!

2-வது நாள் மாலையே எனது அண்ணன் ஒர்க்ஷாப்பிற்கு போன் செய்தார். “டேய் அம்மா கூப்பிடுதுடா.. வந்திருடா..” என்றார். “அதுக்கு வேற வேலையில்லை.. எங்கிட்டாவது போகச் சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு வைக்கிறேன்னு சொல்லாமலேயே போனை கட் செய்தேன்.. மாலை வேலைகளில் ஒத்தக்கடை சிவலிங்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் சினிப்பிரியா, மினிப்பிரியா என்று நண்பர்களுடன் அவர்களுடைய காசில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்தேன்..!

தினமும் மாலை 5 மணிக்கு எனது அண்ணன் போன் செய்வதும், நான் மறுப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. 10-வது நாள். மறுபடியும் போன்.. “டேய்.. அம்மா நேத்து காலைல இருந்து சாப்பிடலைடா.. உன்னை பார்த்தாத்தான் சாப்பிடுவேன்னு சொல்லுதுடா.. வந்து ஒரு வாட்டி முகத்தைக் காட்டிட்டுப் போடா. அது பாவம்டா...” என்றார் அண்ணன்.. இப்போதும் “உங்க வீட்டுக்கே வர விருப்பமில்லை. ஆளை விடுங்க” என்றேன்..!

மீண்டும், மீண்டும் அன்றைக்கே தொடர்ச்சியாய் போன்.. ஒர்க்ஷாப்பில் விசாரித்தார்கள். விபரம் தெரிந்து ஆள், ஆளுக்கு கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிக் கொண்டு அடிக்க வந்தார்கள். “மரியாதையா இப்பவே கிளம்பலைன்னா நாளைக்கு வீட்டுக்குள்ள விடமாட்டோம்”னு நண்பர்களே சொல்லும் அளவுக்கு டிராக்டர் ஷெட் பஞ்சாயத்து சென்றுவிட்டது..

கடுப்போ கடுப்பு.. கோபமோ கோபம்..! கொஞ்சமும் நிம்மதியாய் இருக்க முடியலை.. நம்ம இஷ்டத்துக்கு விட மாட்டேன்றானுக என்று நெஞ்சு கொதிக்க.. நண்பர்களிடம் கை மாத்து வாங்கிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறினேன்.. மதுரையில் சிடி சினிமா, தீபா, ரூபாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்றுதான் பிட்டு படங்களை மாற்றுவார்கள். அது வியாழக்கிழமை.. நாளைக்கு ஒரு நாள் கூட இருந்து படத்தையாவது பார்த்துட்டுப் போகலாம்னு முடியலையே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது..!

திண்டுக்கல்லுக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்ந்து அப்பவும் வீட்டுக்குப் போக மனசில்லாமல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாஸ் கடையில் பையை வைத்துவிட்டு அப்படியே என்விஜிபி தியேட்டருக்கு 8 மணி ஷோவிற்குச் சென்றேன்.. அப்போது பிட்டு படங்கள் மட்டுமே அந்த ஷோவில் ஓட்டுவார்கள்.. ஓட்டினார்கள்.. கண் குளிர பார்த்துவிட்டு மிக சாவகாசமாக போய்த் தொலைவோம் என்ற நினைப்பிலேயே 11 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினேன்..!

உள்ளேயிருந்து என் அம்மாவின் குரல்தான்.. “செல்லா.. தம்பி வந்துட்டான்.. தம்பி வந்துட்டான்.. கதவைத் திறடி..” என்றது அவசரமான அந்தக் குரல்.. கதவைத் திறந்த அக்காள் தலையில் நொங்கு நொங்கென்று கொட்டினாள்.. “சனியனே.. சனியனே.. ஏன் எங்க உயிரை எடுக்குற..? உங்க ஆத்தாளுக்கு எவ பதில் சொல்றது..? வந்து தொலைய வேண்டியதுதானே..?” என்றது. படுக்கைகள் விரித்து தூங்கிப் போயிருந்தவர்களை எழுப்பியிருக்கிறேன் என்பது புரிந்த்து. இன்னொரு மூலையில் கட்டிலில் படுத்திருந்த அண்ணன் எழுந்து காலைத் தொங்கபோட்டபடியே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகிலேயே தரையில் காலை நீட்டி அமர்ந்திருந்த எனது அம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அம்மாவின் குரல் வீடு முழுக்க திரும்பத் திரும்ப ஒலித்தது.. “சோறு எடுத்து வைடி.. புள்ள பசியோட வந்திருப்பான்..” என்றது.. அந்த ஒரு நொடிதான்.. எனக்குள் ஒரு மிருக வெறி.. அடுத்த 5 நிமிடங்களுக்கு எனது அம்மாவைப் பார்த்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கத்தித் தீர்த்தேன்.. 

சனியன், பிசாசு, பேய் என்று என்னென்ன அடைமொழி இருக்கோ அத்தனையையும் சொல்லி.. “ஏன் என் உசிரை எடுக்குற..? பார்க்கணும்.. பார்க்கணும்னு ஏன் என்னைக் கொல்லுற.. மதுரைல நிம்மதியா இருந்தேன்.. அதான் வந்துட்டேன்ல.. என்ன செய்யணும்.. சொல்லு.. சொல்லு..?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அராஜகம் செய்தேன்.. எனது அண்ணன் எனது கையை கஷ்டப்பட்டு விலக்கி என்னைக் கீழே தள்ளிவிட்டார்..

எனது அம்மா தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு மீண்டும் அக்காவிடம் “தட்டு எடுத்து வைடி. சாப்பிட்ட்டும்...” என்று சொல்லிவிட்டு, “சாப்பிடுறா.. சாப்பிடு தம்பி.. ராசா சாப்பிடு..” என்றார். இப்போதும் என் தலையில் அடித்துக் கொண்டு, “சாப்பிடு.. சாப்பிடு.. சாப்பிடு.. ஏன் இப்படி உசிரை எடுக்குற..? சாப்பிடவா நான் பொறந்தேன்.. சனியனே உசிரை எடுக்காத.. காலைல சரவணான்னு எழுப்பின கொன்னே புடுவேன்..” என்று சொன்னபடியே விரித்திருந்த பாயில் மல்லாந்தேன்..!

எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது. அன்றைய இரவில் நான் சாப்பிட்ட பின்பு எனது அம்மாவை வலுக்கட்டாயமாக எழுப்பி அண்ணன் ஒரு பக்கம், அக்காள் ஒரு பக்கமாக கெஞ்சு, கெஞ்சென்று கெஞ்சி சாப்பிட வைத்தார்கள்.. என்னைப் பார்த்தபடியே ஏக்கத்துடன் இருந்த அந்த சுருங்கிப் போன முகத் தோல்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு என் முதுகைக் காட்டிவிட்டு திரும்பிப் படுத்தேன்..!  இப்படித்தான் தொடர்ந்திருந்தது எனக்கும், எனது அம்மாவுக்குமான பாசப் போராட்டம். 

சாப்பிடு.. தூங்கு என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு தாயை நான் அப்போதைக்கு விரும்பாதவன்.. ஆனால் இப்போது..?

இன்று நீண்ட நாட்கள் கழித்து எனது தாயோடு நெருங்கிப் பழகிய ஒரு புண்ணிய ஆத்மாவிடம் சிறிது நேரம் பேசினேன்..! எனது அம்மாவைப் பற்றிச் சொன்ன அவர், “பாவம்டா உங்கம்மா.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது.. உலகமே தெரியாது.. பாசக்காரி.. நீங்கதான் அவளைப் புரிஞ்சுக்கலை..” என்றார்..

அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.. வீடு வந்து சேரும்வரையில் நான் என் நினைவில் இல்லை.. இப்போதுதான் கொஞ்சம் கூடுதலாக நினைத்துப் பார்க்கிறேன்.. எத்தனை பாசம்..? எத்தனை அன்பு..? எத்தனை ஈர்ப்பு..? எத்தனை கனிவு..? அத்தனையையும் கலந்து கொடுத்த ஒரு தெய்வத்தையே நான் மதிக்காமல்தான் வளர்ந்திருக்கிறேன்.. வந்திருக்கிறேன்..! புரிந்து கொள்ளாமல்தான் இருந்திருக்கிறேன்..!

பெற்றவர்களின் ஆசி எல்லாவற்றுக்கும் வேண்டும் என்பார்கள். நான் எல்லாவிதத்திலும் அவர்களை உதாசீனப்படுத்தியவன்.. கஷ்டப்படுத்தியவன்.. மரணத் தருவாயில் இருந்த எனது தாய், தந்தையர் இருவரிடமும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகவே கேட்டிருக்கிறேன்.. “செத்துத் தொலையக் கூடாதா..?” என்று..! 

அவர்களுடைய இறுதிக் கட்டத்தில்தான் அவர்களுடன் நெருக்கமாகி, அவர்கள் இருக்கப் போவதே கொஞ்ச நாள்தான்.. பாவம் என்று பலரும் சொன்ன பின்புதான் தாய், தந்தையர் என்பதையும் தாண்டி ஒரு உயிர் என்ற பிற்போக்குத்தனமான பார்வையுடன் பார்த்திருந்த எனது கேடுகெட்டத்தனத்தை இன்றைக்கு நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது..!

அத்தனைக்கும் இப்போது படுகிறேன்..! நினைத்துப் பார்த்தால் இங்கேதான் ஜெயிக்கிறான் இறைவன்..! பட்டுத் திருந்து.. படாமல் போனால் கிடைக்காது புத்தி என்கிறான் இறைவன்..!  இருக்கும்போது அதன் அருமை தெரியவில்லை. இல்லாதபோதுதான் புரிகிறது..! இன்றைக்கு ஒரு வேளை.. ஒரு வாய் சாப்பிட்டியா என்று கேட்கவே எனக்கு நாதியில்லை..! “தூங்குனியா..? உடம்பு சரியில்லையா..?” என்று அன்பை கொட்டவும் ஆளில்லை..! செத்துப் போனால்கூட தூக்கிப் போடவும் ஆளில்லை.. எத்தனை, எத்தனை விஷத்தைக் வார்த்தைகளில் தோய்த்து வீசியிருக்கிறேன் எனது தாயை நோக்கி.. அத்தனைக்குமான பதிலடிகளை இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன்..! எத்தனையோ முறைகள்.. எப்படியெப்படியோ திட்டமிட்டும் எதுவும், எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோற்றுக் கொண்டேயிருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும்..! தாயின் ஆசிகளே இல்லையே.. கிடைத்திருக்காதே.. பின்பு எப்படி வரும் நல்ல வாழ்க்கை..?

ஆண்டவனின் விளையாட்டில் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.. அத்தனை பேருக்கும் அவன் அளந்துதான் கொடுத்திருக்கிறான்.. கொடுக்கிறான் என்பது இப்போது யோசித்துப் பார்த்தாலும் புரிகிறது.. நான் யார், யாரையோ இப்படி சொன்னேன்.. அப்போது நான் சொன்னது, இப்போது எனக்கே திருப்பியடிக்கிறது..! 

வேறு வழியில்லை.. மனதை சாந்தப்படுத்த யாரிடமாவது பேச வேண்டும்போல் உள்ளது. நான் பேசுவதையும், மன்றாடுவதையும், மன்னிப்பு கேட்பதையும் தெரிந்து கொள்ளவும் ஆள் இல்லையே.. அதனால்தான் இந்த எழுத்து..! 

தாயே.. கடைசி முறையாகக் கேட்கிறேன்.. மன்னித்து விடு..!63 comments:

vasu balaji said...

ஏண்ணே இப்படி கலங்கடிக்கிற. என்ன பிதற்றல் இது. எந்த பிறப்புக்கும் கடவுள் எழுதி வெச்ச சொத்துண்ணே தாயின் ஆசி. அது கிடைக்காதுன்னு ஏன் நினைக்கிறீங்க. காசு பணம் அந்தஸ்து மசிரு எதுக்குண்ணே. உ.த. அண்ணேன்னு இங்க சுத்தி நிக்கிற ஜனங்க இருக்குல்ல. உங்க பேருக்கு ஒரு மரியாத இருக்குல்ல. அது எப்புடி வந்துச்சாம். தூங்குண்ணே. காலைல சரியாயிடும்.

Rajan said...

:-(

வெற்றி said...

உங்க அம்மா ஆசி உங்களுக்கு இல்லேன்னு யாருண்ணே சொன்னது? இப்போ கூட உங்க கூடவே இருந்து 'ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவ கண்ணு'ன்னு சொல்லிட்டிருப்பாங்க ! நல்லா கவனிச்சுக் கேளுங்க !!

ILA (a) இளா said...

பதிவுகள் பார்த்து கலங்குற காலத்தைக் கடந்துட்டேன்னு நினைச்சிட்டு இருந்தேன்,ஆனா இன்னிக்கு கலங்கிட்டேன்.

கண்டதையும் போட்டு குழப்பிக்காதீங்க. எல்லாம் நல்லதே நடக்கும்

Anonymous said...

சில பேருக்கு மனம் தனிமையை விரும்பும்.அப்போது உறவுகளை விலக்கும்.உறவுகளே இல்லாதபோது தனிமையை வெறுக்கும்.யாராவது கேட்க மாட்டார்களா என்று தோன்றும்.நீங்கள் அந்த வகை என்று தோன்றுகிறது.கலங்க வைத்துவிட்ட பதிவு. நானும் இதே தான்.இப்படித்தான் இருந்தேன். இன்னும் முழுதாய் திருந்தவில்லை.ஆனால் மீள வழியுண்டு.அம்மா இல்லாதபோது அம்மா மாதிரி வயதுள்ளவர்கள் அம்மாவாகலாம் என்றே நான் நினைக்கிறேன்.

Anonymous said...

நானும் இந்த இடத்தில் கடவுளை நம்புகிறேன்.அவன் ஒரு அராஜகப் பேர்வழி.கதற கதற தண்டனை கொடுப்பவன்.புத்தன் சொல்கிற 'மஹா தர்ம சக்கரம்' சுழன்றுகொண்டே இருக்கிறது.நாம் அதில் ஒட்டிக்கொண்டிருக்கிற ஒரு சிறிய ஜீவன்.நாம் ஏசினாலும்,பாராட்டினாலும் அது தொடர்ந்து சுழலும். சக்கரத்துக்குப் பதிலாக ஒரு சிலையை வைத்தால் அது இந்துக் கடவுள் என்பார்கள் அவ்வளவே!

நிழல்_Shadow said...

அண்ணே நாங்க இருக்கோம் உங்களுக்கு... தவறை உணர்ந்தாலே போதும்ணே உங்க வாழ்க்கை உயரும்

சீனு said...

எனக்கு தெரிந்தவரை இதில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த தாய் தன் பிள்ளைகள் மேல் கோபம் கொண்டிருக்கிறாள்?

சீனு said...

நாளைக்கு பேசிக்கலாம் பாஸ். போய் தூங்குங்க...

? said...

சில இடங்களில் உங்கள் மீது கடுப்புக்கூட வந்தது. கடைசியில் அழுகையும் வந்தது.

இதை பதிவாக போட்டு எமக்கு பாடமெடுத்திருப்பதற்கு நன்றி. ஆனால் ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா புள்ளைய விட்றுமா? இன்னைக்கு இல்லீனாலும் ஒருநாள் ஜெயிப்பீங்க.

அமர பாரதி said...

உண்மைத்தமிழரே, டேக் இட் ஈஸி. பதிவைப் படித்ததும் மனது கணக்கிறது. உங்கள் நிலைமை இப்படி, என் நிலைமை நேர் மாறாக. இரண்டுமே சரியில்லை. இதற்கு ஒரு சிறிய பரிகாரம் சொல்லட்டுமா? உங்கள் இருப்பிடத்குக்கு அருகில் ஆதரவற்ற ஏதேனும் ஒரு முதிய பெண்மணிக்கு உங்களாச் முடிந்த அளவு உதவி (பண உதவி தான் என்றில்லை) செய்யுங்கள். மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.

ராஜ நடராஜன் said...

டயரி எழுத பழக்கம் மட்டும் போதும்.மன உறுத்தலை பொதுவில் வைக்க மன வலிமை வேண்டும்.

அந்த வயதுக்கான கோபங்கள யதார்த்தமான்தாக இருந்தாலும்,இந்த வயதுக்கான அனுபவங்கள் உங்களை உயரத்தில் நிறுத்துகிறது.

ராமுடு said...

Dear Mr.Saravanan, I totally scold you till I read last couple of paragraphs. How can people show anger by staying outside? Its hard to imagine. Dont feel bad. Parents can get anger to the kid, but in next few minutes, they show the kindness towards the kid. As a parent to a kid, I am saying this. Your parent's blessing will always be there. Again I am saying, don't feel bad. Take care of yourself.

கோவை நேரம் said...

...அண்ணே..அழ வச்சிட்ட..இப்போ என்ன ஆச்சு ண்ணே..?இப்போவாவது அம்மாவோட அருமை புரியுதே....அம்மா இப்ப இருக்காங்களா...? அம்மா மாதிரி இருக்கிறவங்கள நீங்க பல இடத்துல பார்க்கலாம் அவங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணு அண்ணே...புண்ணியமா போகும்..

senthil said...

சரவணன்,

என்னை ஒரு நிமிடம் ஆடிப் போகச் செய்து விட்டது உங்களது பதிவு. பாசத்தைக் கொட்டத் தெரிந்த அம்மா, அம்மாவின் பேச்சைக் கேட்கும் உடன் பிறந்தார்,இவர்களுடன் வயதிக்கேற்ற பக்குவன்மியும்...

தவறு செய்து என்பது அனைவரும் செய்யக் கூடியதே... தவறை உணர்வதே அத் தவறுக்கு நாம் செய்யும் பரிகாரம்.

இந் நாள் தங்கள் தாயின் நினைவு நாளா?

- செந்தில் முருகன்

அகல்விளக்கு said...

ஏண்ணே கலங்கடிக்கிற...

கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம இருங்க... :-(

Unknown said...

வார்த்தைகள் இல்லை :((

இராஜராஜேஸ்வரி said...

நினைத்துப் பார்த்தால் இங்கேதான் ஜெயிக்கிறான் இறைவன்..! பட்டுத் திருந்து.. படாமல் போனால் கிடைக்காது புத்தி என்கிறான் இறைவன்.

அவன் தான் இறைவன்...

சக்தி இருக்கும் போது புத்தி இருக்காது.

புத்தி வந்த பின் எதுவுமே மிஞ்சி இருப்பதில்லை...

லதானந்த் said...

சிந்திக்க வைத்த பதிவு

கேரளாக்காரன் said...

:( amma aaseervaadham eppadi illamal pogum.... Seekkirame jeyippinga

ராஜரத்தினம் said...

இல்ல பாஸு! அம்மாவோட ஆசி நமக்கு இல்லாம போகவே போகாது! நான் கூட உங்களை போலதான்! ஆனால் நான் முதன்முதலில் வெளிநாடு போனபோது என் தாய்காலில்தான் விழுந்து சென்றேன்! எப்பவுமே அம்மா ஆசி நமக்கு இல்லாமல் போகவே போகாது! அதையும் மீறிதான் உங்களுக்கு இப்ப உள்ள நிலை! ஆசியே இல்லனா நினைச்சி பாருங்க உங்க நிலையை இன்னும் மோசமா இருந்திருக்கும்!

பித்தன் said...

அண்ணே ரொம்போ கலக்கீட்டிங்களே நாங்களெல்லாம் இருக்கோம் கவலை படாதீங்க. காலம் எல்லா கவலைக்கும் மருந்து தரும்ண்ணே......

SurveySan said...

Hm.

மின்னுது மின்னல் said...

:((((((((((((

கிருஷ்ண மூர்த்தி S said...

*ராஜ்கிரண் படத்தில் தாயென்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே பாட்டைத் திரும்பத் திரும்பப் போட்டு பாத்தீங்களா என்ன?* உத! உண்மையை சொல்லப் போனால், ஒரு தாயின் அருமையைத் தனிமையில் மட்டும் தான் உணர முடியும்!

*தனித்துவிடப்பட்டிருக்கிறோம், நாதியில்லை என்று அறிகிற நேரத்தில் தான் இறையருளுக்கு மிகவும்நெருக்கமாகவும் இருக்கிறோம் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்* வீண் விசனத்தை விட்டொழித்து, எது நடந்தாலும் அது இறைவனின் திருவுள்ளப்படியே என்று ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.அன்னையின் கருணை துணை நிற்கும்!

Unknown said...

விளம்பரம் வெளியிட்டுவிட்டு வசூல் செய்துகொண்டு இருந்த நேரம்.இரவு பகல் என்று நேரம் காலம் இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்த நேரம்.அம்மா(தங்கை வீட்டிலிருந்தார்) என்னை பார்க்க அடம் பிடிப்பதாக செய்தி.போனில் நிலைமையை எடுத்து சொல்லியும் "நீ எல்லாம் என்ன பிள்ளையோ?"என்று அலுத்து கொண்டார்.மனதுக்கு சங்கடமாக இருந்தது.அடுத்த நாள் மனைவி குழந்தைகளுடன் சென்று ஒரு மணி நேரம் அம்மாவுடன் இருந்தேன்!!! மகிழ்ச்சியாக இருந்தார்கள்.பேரன் பேத்திகளுக்கும், மருமகளுக்கும், அறிவுரை வழங்கினார். இரவே நாங்கள் எங்கள் வீட்டிற்கு திரும்பினோம்!! அடுத்த நாள் காலை அம்மா இறந்த செய்தி கேட்டதும், மனதுக்கு மிகவும் சங்கடம்!!! போகாமல் இருந்திருந்தால் வாழ்நாள் பூரா உறுத்தலாய் இருந்திருக்கும்.

rkajendran2 said...

என்னை ஒரு நிமிடம் ஆடிப் போகச் செய்து விட்டது உங்களது பதிவு.

ராஜ் said...

அண்ணனே, கவலை படாதேங்க.. அம்மா உங்கள மன்னிக்காம யார மன்னிபாங்க..

lovely said...

God bless you.

கலகலப்ரியா said...

||தாயின் ஆசிகளே இல்லையே.. கிடைத்திருக்காதே.. பின்பு எப்படி வரும் நல்ல வாழ்க்கை..?||

இதுதான் காரணம்னு கண்டுபுடிச்சாச்சா... அவ்ளோ கடுமையா இருந்தப்பவே... சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்ன அவங்க ஆசி கொடுக்க மாட்டாங்கன்னு நினைக்கற நீங்க.. இப்பவும் திருந்தின மாதிரித் தெரியலை.. :p

செரி செரி... ஆறுதலா எதுனா சொல்லலைனா... உங்க ஆதரவாளர்கள் ஆசி எனக்குக் கிடைக்காதுங்கிறதால சொல்றேன்...

நீங்க நடந்துக்கிட்ட விதம்... செத்துத் தொலையக் கூடாதான்னு கேட்டது எல்லாம் அவங்களுக்கு வலிக்கத்தான் செய்திருக்கும்.. அத நீங்க இப்போ உணர்ந்து வருத்தப்படறது எவ்ளோ சாதாரணமோ... அதே மாதிரி அந்த வயதில அவங்களுக்கு எதிரா நடந்துக்கிறதும் ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணம்..

அப்டி நடக்கலைன்னாதான் ஹார்மோன்ல ஏதோ கோளாறுன்னு அர்த்தம்... அது ஹார்மோன்... குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம்.. அம்மா அப்பா கிட்ட இருந்து விலகி சுயமா நிக்கச் சொல்ற மெகானிஸம்.. அத நீங்க இல்ல உங்க அப்பன் முருகனே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது...

இது மஹா தவறு... இதனாலதான் பாவம் என்னைத் துரத்துறதுன்னு நினைச்சுக்கிட்டு... சுய பரிதாபத்தில அலைறதுதான் ரொம்பப் பரிதாபம்..

ஏன் இப்டி இருக்கோம்... என்ன காரணம்.. இதுவா.. அதுவா... கடந்த பிறவியின் வினைப்பயனான்னு ஆராய்ஞ்சுட்டிருக்காம... வேலையக் கவனிங்க... உங்க கைலதான் இருக்கு...

அப்றம் எதுனா அனத்தினா மீதி சர்ஜரி நடத்திக்கறேன்... வர்ட்டா..

ஜோ/Joe said...

அண்ணே, இவ்வளவு நல்ல மனுசனா அம்மாவை இவ்வளவு நோகடிச்சாருண்னு கடுப்பா இருந்துச்சு . காலம் கடந்து கிடைப்பது தான் பாடம். வருந்தாதீங்க.

உண்மைத்தமிழன் said...

பின்னூட்டத்தில் ஆதரவளித்தும், ஆறுதல் அளித்தும், உரிமையோடு கண்டித்தும் நட்பை நிலை நாட்டியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்..! நேற்று இரவு இந்தக் கதையை போஸ்ட் செய்ததில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் போன் செய்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும், வருத்தங்களையும் பகிர்ந்து கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

நேற்று எதையாவது செய்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலைமையில் இருந்தேன்.. நான் அதிகமாக எனது குடும்பப் பிரச்சினைகள், மற்றும் குடும்பத்தினர் பற்றி எழுதியதில்லை. எழுத வேண்டுமா என்றெல்லாம் யோசிக்க விடாமல் எழுதினால்தான் தூங்க முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அதனால்தான் எழுத வேண்டியதாகிவிட்டது..! இந்தக் கட்டுரை யாரையாவது சலனப்படுத்தியிருந்தால், அல்லது டிஸ்டர்ப் செய்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..! இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை..

உண்மைத்தமிழன் said...

இன்னும் எழுத வேண்டியது நிறையவே இருக்கின்றன..! நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த அப்பா, அம்மாவை பார்த்த சம்பவங்கள்.. அவர்களுடன் முரண்பட்டு நின்ற கொடுமைகள்.. கேன்சர் நோயின் தாக்கம்.. அதன் விளைவுகள்.. மருந்துகள்.. மருத்துவர்கள், மருத்துவமனைகள் என்று அனைத்தையும் பகிர விரும்புகிறேன்.. கொஞ்சம் மெதுவாக செய்ய விழைகிறேன்.. காத்திருங்கள்..!

Mahi_Granny said...

தொடர்ந்து வாசிக்கிறவள் ,இன்று பதில் சொல்லமுடிவெடுத்தேன். அம்மாவிடம் காட்ட தவறிய அன்பை உடன் பிறந்தோரிடம் காட்டுவதில் சரி செய்து கொள்ளுங்கள். ஒருக்காலும் அம்மா பிள்ளைகளின் மேல் கோபப் பட மாட்டாள். அவளால் முடியாது. மன்னிப்பெல்லாம் கேட்டு இருக்கிறீர்கள். எல்லாம் நல்லதே நடக்கும். .

butterfly Surya said...

நாங்க இருக்கோம். Cool.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

எந்த ஒரு உறவும் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. இல்லாதபோதுதான் அவர்களின் அருமை புரியும், அப்படி புரியும் பொது அவர்கள் இருக்கமாட்டர்கள். இது இயற்கையின் நியதி. நல்லதொரு அனுபவ பதிவு. உங்கள் தாயாரின் பரிபூரண ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்குமென்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.

சத்ரியன் said...

கடவுளே கடவுளே என்று இறைஞ்சும் நாம் கடவுளை நேரில் கண்டாலும் இப்படித்தான் நடந்துக் கொள்வோம். பெற்றவர்கள் கடவுளன்றி வேறு யார் கடவுளாக இருக்கக் கூடும்.

இப்பகைர்வை படித்த பின், பெற்றோர்களை உதாசீன படுத்துபவர்களில் சிலரேனும் மாறக்கூடும்.

Unknown said...

அண்ணா,உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு வயசும் பக்குவமும் பத்தாது என்று எனக்குத் தெரியும்.ஆனாலும் உங்கள் உணர்வுகளுக்கு பிரதிபலிப்புச் செய்யாமல் கடந்து செல்ல என்னால் முடியவில்லை.

உங்கள் பதிவை வாசித்து விட்டு நடுச்சாமத்தித்தில் என் அம்மாவிற்கு போன் பண்ணிப் பேசினேன்.
ஏன் என்றால் உங்கள் வார்த்தையின் நிஜம் அத்தனை தகிப்பாய் இருந்தது.

நீங்கள் பாதையில் கடந்து செல்லும் போது சந்திக்கும் இரவல் கேட்கும் முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.சில்லறையைச் சுண்டி விட்டுச் செல்வதை விட அவர்களிடம் தேவையை கேட்டு வாங்கிக் கொடுங்கள். ஆதரவாய் நாலு வார்த்தை பேசுங்கள்.

அவர்கள் ஊடாக கண்டிப்பாய் உங்கள் தாயைச் சந்திப்பீர்கள்.
உங்கள் மனதை சாந்தமாக்க இதைவிட மேலான காரியம் ஏதுமில்லை.

அண்ணா,நீங்கள் மன சந்தோசம் அடைய வாழ்த்துகிறேன்.

மூவிதன்.

Nanditha said...

Mother's Love towards her child is always unconditional. No mother will curse her child for anything. Your mother's blessings are always with you. Like some one said do not be in self-pity. Try harder & do not give up easily. God Bless, Best Regards-Nanditha

ப.கந்தசாமி said...

தாய்ப் பாசம் அப்படித்தான் அஞ்ஞானத்திலேயே உழலும். எங்க அம்மாவும் அப்படித்தான்.

Kannan said...

அண்ணே, நீங்க நம்மூர்ல தான் வேலை பாத்தீங்களா, அநேகமா புதூர்ல தங்கி இருந்திருப்பீங்க. அட என்விஜிபீ theatrara ... என் காலேஜ் மேட் அதனுடைய ஒரு பங்குதாரர். சௌராஷ்டிர சமூகத்தை சார்ந்தவர். இப்போது எல்லாம் அவருக்கு போய்விட்டது. பழனிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த போது ஒரு விடுதியில் கணக்கு எழுது கொண்டு இருந்தார். நெஞ்சை தூக்கி விறைப்பா நடந்தவன் எல்லாம் காலத்தினால் கடத்தி செல்ல பட்டு விட்டான். உங்களுடைய ஒழிவு மறைவு இல்லாத இந்த கட்டுரை உங்களுக்கு மிக ஒரு சுதந்திரத்தை கொடுத்து இருக்கும். பின்னே உள்ளே இருக்குறதை வெளிய கொட்டி தானே ஆவணும். கொட்டாமல் போனால் தான் பிரச்சனை. இன்னும் நிறைய கொட்டுங்கள். மற்றவர்கள் படிப்பதற்காக அல்ல, உங்களுக்காக. பாத்திரத்தை காலி ஆக்குங்கள். ஒரு முக்கியமான மேட்டர் என்னன்னு சொன்னா, "வக்காளி, எவன் என்ன பத்தி என்ன நினைச்சாலும் பரவாயில்லை"-ன்னு எழுதுனீங்க பாத்தீங்களா அங்க தான் நீங்க நிக்குறீங்க.

G.Ganapathi said...

:(((

Ganesh-Vasanth said...

நண்பா ,

உங்க பதிவ ரெம்ப நாட்களாய் படித்து வருகிறேன்,இந்த பதிவு என்னை ரெம்ப உலுக்கி எடுத்து விட்டது, படிக்கும்போது பழைய சரவணன் மேல் பயங்கர கோபம் வந்தது.ஆனாலும் உங்கள் தாயின் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.கடவுள் அதினதை அதினதின் காலங்களில் உங்களுக்கு நேர்த்தியாய் செய்வார். நான் ஒட்டன்ஞ்சதிரத்தை சேர்ந்தவன் , முடிந்தால் சந்திப்போம்.you dont have to worry about your past now, just continue your good work and you will achieve what you are deserved to.

Cheers

Shiva

Kalee J said...

நேர்மையாய் எழுதுவது என்பது நேர்மையாய் வாழ்பவர்களால் மட்டுமே முடிகிற ஒன்று .....நேர்மையாய் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரு வித ஆசி பெற்றவர்கள் தான்....ஆகவே நீங்கள் பெற்ற ஆசி உங்களை எப்போதும் காக்கும்...உங்கள் பெற்றோர் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்...கவலையை விடுங்கள்...

அ. வேல்முருகன் said...

கடவுள் காதடைக்கையில் கஞ்கி ஊத்த போவதில்லை. மனிதன் தவறிலிருந்து சரியை கண்டு கொள்ளும்போது தனித்து விடப்படுவதில்லை

துணையை கடவுள் தேர்ந்தெடுக்கப் போவதில்லை நீங்கள்தான், தேர்ந்தெடுங்கள் வாழ்க்கையை வாழுங்கள்

வாழ்த்துக்கள்

Anonymous said...

நீ உருப்படவே மாட்ட பண்ண எல்லாத்தயும் பண்ணிட்டு இப்ப மன்னிப்பு சீ என்ன ஜென்மம் நீ

Vijay Subramanian said...

Hi,

I have never read such a post and was never expecting one like this from yoou. I ve thought that u r another blogger who keeps writing dumb tamil cinema reviews. Shook my ground... since i am from Sholavandan i could relate to your train journeys etc, etc. Hats off to u mate for such a open-hearted post.

clayhorse said...

அருவி மேலிருந்து கீழே விழும் போது சில துளிகள்தான் திரும்ப மேலே தெறிக்கின்றன. பாசமும் அதுபோலத்தான். யாருக்குத்தான் இந்த அனுபவம் இல்லை?

kathir said...

சிலதை எழுத்தில்தான் கரைக்க முடியும்! :(

Unknown said...

மயிர்க்கூச்செரியும் பதிவு,
உங்கள் பதிவு ஒருபக்கம் கலங்க வைத்தால்... கருத்துரையில்... தொடர்வர்கள் அள்ளுறாங்க...

அப்பா போனதுக்கு அப்பொறம் அம்மாவை அழவைக்கவும் சிரிக்க வைக்கவும் செய்து கொண்டே என் நாட்கள் நகர்கின்றது..

இனி அழ வைக்கக்கூடாதுன்னு நினைக்குறேன்... என் தாயோட பிரிவை தாங்கிக்கும் அளவுக்கு மனசில் வலு இல்லை என்பதை உங்க பதிவின் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்...

சுலபத்தில் எதற்கும் கலங்காதவன் இன்றைக்கு கலங்கிட்டேன், கலங்க வைச்சுட்டீங்க பாஸு....

க.பாலாசி said...

இன்னைக்கும் அம்மாதான் உயிர் மத்ததெல்லாம் மயிர்ன்னு நெனைக்குற ஆள்தான் நான். இருந்தாலும் இதப்படிக்கிறப்ப அழுகையே வந்திடுச்சி.. இந்த மனுஷன் தலையில அம்மிக்கல்ல தூக்கிப் போட்டாயென்னன்னு தோணுச்சி.. தவறுவது இயல்பு, அதை உணர்ந்தால் போதும்.. இறையென்று நம்புவதுகூட உங்களை மன்னிக்கும், காக்கும்.

க.பாலாசி said...

எதுக்கும் வாசன் ஐ கேர் விளம்பரத்த அடிக்கடி பாருங்க... நாங்க இருக்கோம்..

perumal karur said...

ஜெயமோகன் சாரின் கொடுத்த லிங்கில் இருந்து வந்தேன்.

வாசித்தேன்.கண் கலங்கினேன்.

----

உங்கள் பதிவுகளின் எழுத்துரு திக் காக உள்ளது. அதை தின்னாக மாற்றினால் வாசிக்க எளிதாக இருக்கும். மட்டுமல்லாமல் பேக்ரவுண்ட் கலர் இன்னும் லைட்டாக இருக்கணும்.

IKrishs said...

சண்டை கோபம் லாம் நெருக்கமானவர்களிடம் மட்டும் தான் வரும்..அம்மா கிட்ட தான கோபப்படமுடியும்.. உங்கள் குற்ற உணர்ச்சி அவசியமற்றது..

A.SESHAGIRI said...

நானும் மதிப்பிற்குரிய ஜெமோ அவர்கள் கொடுத்த இணைப்பின் மூலம் தான் தாங்கள் மிக நேர்மையாகவும் ,உண்மையாகவும் எழுதிய பதிவை படித்தேன்.மனது மிகவும் கலங்கிவிட்டது.ஆனால் ஒரு விஷயம் எனது அன்னையார் இன்றும் என்னுடன் இருக்கிறார்.அதை சரியாக தக்க சமயத்தில் நினைவு படுத்தியதற்கு தங்களுக்கு எனது நன்றி.


அ.சேஷகிரி.
ஆழ்வார்திருநகரி

அ.வெற்றிவேல் said...

கலங்க அடிச்சுருச்சுங்க..இவ்வள்வு நல்ல தம்பி சரவணனா இதுன்னு கொஞ்சம் யோசிக்கவும் வைத்தது.. சொர்க்கத்தில் இருக்கும் அந்தத் தாயின் ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு..வருத்தப்பட வேண்டாம்..

சிவாஜி said...

என்ன சொல்ல? தனிமை தான் எல்லாத்தையும் காட்டிக்கொடுக்குது. கவலைப்படாதிங்க. நீங்க பாசம் காட்ட நாங்க இருக்கோம்... :)

Raashid Ahamed said...

திரு சரவணன். தாங்கள் செய்தது மிகப்பெரும் தவறு. ஆனால் ஒன்று இத்தனை நீங்கள் செய்தும் உங்கள் தாய் ஒரு முறை கூட உங்களை “நாசமாய் போ” என்று சபிக்கவில்லை. எனவே தான் இன்னும் தாங்கள் இந்த நிலையிலாவது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு ஒரே ஒரு பிராயச்சித்தம் உள்ளது. மகனால் உதாசீனப்படுத்த பட்ட ஏதாவது ஒரு தாய்க்கு மகன் ஸ்தானத்தில் இருந்து ஏதாவது செய்யுங்கள். (முதியோர் இல்லம் சென்று தான்) உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு உங்கள் வாழ்வும் செழிக்கும்.

Simulation said...

தாய்ப்பாசம் பற்றிய எனது கருத்து:- ஒரு அம்மா தனது குழந்தைகளிடம் அளவு கடந்த பாசம் வைத்த போதும், பிள்ளைகள் ரெஸிப்ரொகேட் செய்வதில்லை என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு. ஆனால் அந்த அம்மா தனக்கு முந்தைய தலைமுறையினரிடம் (தனது அம்மா, அப்பா, மாமனார், மாமியார் அகியோரிடம்) எப்படி மரியாதையோடும், அன்போடும் நடந்து கொள்கின்றாரோ அதன்படியே குழந்தைகளும் நடந்து கொள்ளும். அம்மாக்கள் குழந்தைகளிடம் பெரும் பாசத்துடன் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தாத்தா, பாட்டியினரை எப்படி நடத்துகின்றனர் எனபதைப் பொருத்தே மேல் நோக்கிய பாசம் செல்லும். இல்லையென்றால் அவரவர் குழந்தைகள் அவரவருக்கு. - சிமுலேஷன்

. said...

ம்...

1. விதைத்த நெல்லும், சொல்லிய சொல்லும் திரும்ப பெற முடியாது... நேற்றைய நடப்பை இனி மாற்ற முடியாது.

2. நடந்ததை தவறு எனவும், பாவம் எனவும் மனம் இடித்துரைப்பதால், பாவ உணர்ச்சி தங்களை துரத்துகிறது...

3. பொது வெளியில் அதை சொல்லி உங்களுக்கு ஆறுதல் பெறவும், இன்னொருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது எனவும் விரும்பியே இந்த பதிவு படைக்கப்பட்டிருக்கிறது என கொள்கிறோம்...

4. உங்கள் சிந்தனை தெளிவு பெற, மன அமைதி பெற... உளமாற விரும்புகிறோம்...

5. கலக்கிட்டீங்க பாஸ்... உருக்கிட்டீங்க பாஸ் என சில பின்னூட்டத்தில் படித்த போது, இப்படி பாராட்டுக்கள் பெற பொது வெளியில் இன்னும் சில அந்தரங்கங்களை அச்சிட மாட்டீர்கள் எனவும் நம்புகிறோம்...

mohamedkamil said...

ஜெயமோகன் எழுதிய கட்டுரை லிங்க் மூலமாக இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. உள்ளம் கலங்கி போனது. தாயை திட்டிய பாவம்தான் உங்களை இப்பொழுது பாடுபடுத்துகிறது என நீங்கள் நினைக்கீர்கள் ஆனால் எந்த தாயும் தன் மகனுக்கு சாபத்தை விடமாட்டார். எப்பொழுது நீங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறீர்களோ அப்பொழுதே நீங்கள் புதுமனிதனாக அவதாரம் எடுத்துவிட்டீர்கள். தயவுசெய்து இந்த கட்டுரையை நீட்டீக்காதீர்கள். அதை படிக்கும் வலு எங்களுக்கு இல்லை

கே.ஜே.அசோக்குமார் said...

தாய் இன்னேரம் மன்னித்திருப்பார், இனி உங்களுக்கு ஜெயம் தான்.