இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-30-10-2009

30-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கேசரி




இந்த 'டிஸைன்' நல்லாயிருக்குல்ல.. சத்தியமா 'டிஸைனை'த்தான் சொன்னேன்.. யாருன்னு யோசிச்சு வையுங்க..!!!

இட்லி

ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அடித்த அதிரடி சோதனை ஒரு எச்சரிக்கை மணிதானாம். பொழுது விடிந்து பொழுது போனால் தமிழகத்தின் உறவுகள் ஆளுக்கொருவராக 'சிபாரிசு' என்று சொல்லி உயிரை வாங்குவதாகத் தனது புரட்சித் தலைவி அம்மாவிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறாராம் கழகத்தின் அடக்கமான ஒரே தொண்டரான மன்னமோகனசிங் அவர்கள்.

தன்னை எதிர்த்து கட்சியைவிட்டு விலகிப் போன சரத்பவாரே டெல்லியில் கொடுத்த வீட்டை எதிர்ப்பேச்சில்லாமால் வாங்கிக்கொண்டு போகும்போது கேவலம் செகரட்டரியை மாற்றியே தீர வேண்டும். இல்லாவிடில் வேலைக்கு வர மாட்டேன் என்று ஒரு தமிழகத்து கேபினட் மந்திரியே ஸ்கூல் பையன் மாதிரி அடம்பிடித்ததும் டெல்லியை கொஞ்சம் கோவப்படுத்திவிட்டதாம்..

இதற்கு முன்னதாக இந்தக் களேபரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட ஜெய்ராம்ரமேஷை குறி வைத்து அவரைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும் டெல்லியை உசுப்பிவிட்டதாம். பாவம் ரமேஷ்.. அவர் என்ன செய்வார்..?

எப்போதும் கேரளாவில் ஒரு முறை கம்யூனிஸ்ட்டுகள் என்றால் அடுத்த முறை காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். இது தொடர்ந்து நடந்து வருவதுதான். இதன்படி அடுத்து கேரளாவில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் தயாராக இருக்கும் நிலையில் ஆளுகின்ற கம்யூனிஸ்ட் ஒரு நப்பாசையாக அடுத்த முறையும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதனால்தான் நம்மூர் கழகங்களின் அடிச்சுவடைத் தொட்டு முல்லை பெரியாறு பிரச்சினையைத் தோள் கொடுத்துத் தூக்கியிருக்கிறது.

இப்போது இந்தப் பிரச்சினைக்கு நாம் தோள் தூக்காவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மைத் தூக்க ஆள் இருக்காது என்பதை கேரளத்து காங்கிரஸ்காரர்கள் வேப்பிலை அடிக்காத குறையாக டெல்லிக்கு காவடி எடுத்து புலம்பியதன் பலன்தான் ஜெய்ராம்ரமேஷின் அந்த ஒப்புதல் உத்தரவு.

இது தமிழகத் தலைமைக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அதை தெரியும் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? மாமியாருக்கு இடுப்புல அடி என்றாலும் அடிபட்டுச்சா அத்தை என்று அக்கறையாக விசாரிப்பதுதான் மருமகளின் கடமை. அதைத்தான் தமிழக அரசு இப்போது செய்திருக்கிறது. டெல்லியையும் கூல் செய்ததுபோல் கடைசி நேரத்தில் கோர்ட்டில் உங்களது தரப்பைத்தான் நாங்களும் சொல்லப் போகிறோம் என்று மத்திய அரசு வக்கீல் கொடுத்த உறுதிமொழியை நம்பி கண்டனப் பொதுக்கூட்டத்தை ரத்து செய்திருக்கிறது.

உண்மையான காரணம் அதுவல்ல என்பது இப்போது தெரிகிறது. இப்படி ஆளாளுக்கு பச்சைப் புள்ளை மாதிரி அழுதா ஆத்தா என்ன செய்வா? கைல கிடைக்கிறதை தூக்கி நாலு சாத்து சாத்த மாட்டா..? அதான் சோனியா ஆத்தா செஞ்சிருக்காங்க.. ஒரே கல்லுல நாலு மாங்கா.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாட்டம் ஸ்பெக்டரத்தை கிளப்பிவிட்டாச்சு. இனி பதில் சொல்லி மாள வேண்டியது ஆ.ராசாவும், தி.மு.க.வும்தான். 'மவனுகளா ஏதாவது ஆய்.. போய்.. ஊய்..ன்னீங்க.. அவ்ளோதான்.. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்திரும். அடக்கமா எங்களுக்கு ஒத்து ஊதுங்க' என்கிற எச்சரிக்கைதான் இந்த சிபிஐ ரெய்டும், கொஞ்சூண்டு பரபரப்பும்.

தோசை

கோடம்பாக்கத்தில் மூலைக்கு மூலை இப்போதே நாலைஞ்சு பேர் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு நின்னுக்கிட்டு பெட் கட்டுறானுக..


'கோவா' படம் 'ஹேங்க் ஓவரோட' காப்பிதான்னுட்டு.. இப்படிச் சொல்றவனுக 'ஹேங்க்ஓவரை' பார்த்திருப்பானுகளான்றதே சந்தேகம். ஆனா சினிமாக்காரங்கள்லாம் இப்படித்தான். ஒரு மேட்டர் கிடைச்சா போதும்.. வாய்ல ரத்தம் வர்ற அளவுக்கு பேசிட்டுத்தான் ஓய்வாங்க..

அவங்களுக்குத் தெரியாமயே இன்னொரு படமும் பரபரப்பா அடுத்த வாரம் வருது. 'அதே நேரம் அதே இடம்' அப்படீன்ற படம். இது ஒரு கொரியன் படத்தோட ரீமேக்தானாம்.. 'My Sassi Girl' என்கிற கொரிய படத்தின் ரெண்டு வரி ஸ்டோரியை வைச்சுத்தான் இந்தப் படம் அப்படீன்றாங்க..

ஆனா பாருங்க.. இந்தப் படத்தோட கதையை வைச்சு மூணு டைரக்டர்களுக்கு மூணு ஸ்கிரிப்ட்டை நானே என் கையால டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன். மூச்சு விடுவேனா நானு..? இப்பல்லாம் நான் ரொம்ப நல்லவனா திருந்திட்டேன் சாமிகளா.. எனக்கு காசுதான் முக்கியம்.. வாங்கிக் கல்லால போட்டுட்டு வாய்க்கு பூட்டு போட்டுக்கிட்டேன்..


பொங்கல்

இந்த மாசத்து 'காலச்சுவடு' புத்தகத்தை லேட்டா இப்பத்தான் படிச்சேன். அதுல ஆஷ்துரை பத்தின கட்டுரை ரொம்ப நல்லா இருக்குது.. ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதியிருக்கிறார். அவருடைய கடின உழைப்புக்கும், எழுத்திற்கும் தலைவணங்குகிறேன். ஆஷ் துரை கொலை செய்யப்பட்டது, விசாரணை, அவருடைய கடிதங்கள், குடும்பத்தினர், என்று 180 டிகிரி கோணத்துல எழுதியிருக்காரு.. படிக்கப் படிக்க ரொம்ப ஆர்வமா இருந்தது. 'காலச்சுவடு' படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த ஒரு விஷயத்துக்காகவே வாங்கிப் படிங்க.. கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்குங்கப்பா..

வடை

பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் திரையுலகினர் பொங்கியெழுந்த கூட்டத்தில் நடிகை ரோகிணி பேசியதை கேட்டேன். அதுல ஒரு விஷயம் சொல்லிருக்காங்க.. ரொம்ப நல்லாயிருக்கு.


"ரகுவரன் இறந்தன்னைக்கு என் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்றேன்.. ஒரு அரைமணி நேரத்துக்கு என்னையும், என் பையனையும் ரகு உடலோட கொஞ்சம் தனியா விடுங்க.. எங்களுக்கு பிரைவஸி தேவைப்படுது"ன்னு பத்திரிகையாளர்கள்கிட்ட முன்கூட்டியே பேசியிருக்காரு. ஆனா பத்திரிகைக்காரங்க மாட்டேன்னுட்டாங்களாம்..

வேற வழியில்லாம அவரோட பையன் ஸ்கூல்ல இருந்து ஒண்ணுமே தெரியாம வீட்டுக்குள்ள வந்து சவப்பெட்டிக்குள்ள இருந்த அப்பாவை பார்த்ததும் திடீர்ன்னு ஏதோ ஒரு பயம் வந்து அழுததை கச்சிதமா படம் புடிச்சு நினைச்சதை சாதிச்சுக்கிட்டாங்க பத்திரிகைக்காங்க.. பையனுக்கு அந்த நேரத்துல ஏதாவது ஆகிருமோன்னு ரோகிணி பயந்தாங்களாம். அதுனாலதான் பத்திரிகையாளர்கள்கிட்ட அப்படி கேட்டுக்கிட்டாங்களாம். நம்மாளுகளா விடுறவங்க..?


அன்னிலேர்ந்து வைராக்கியமா ஒரு முடிவுல இருக்காங்களாம் ரோகிணி.. இனிமே ஒரு பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கிறதில்லைன்னு.. இன்னிவரைக்கும் அதை பாலோ பண்ணி வந்திட்டிருக்காங்களாம்..

குட்.. வெரிகுட்.. வெரிவெரிகுட்.. இது மாதிரி எல்லாரும் செய்ய ஆரம்பிச்சா நல்லத்தான் இருக்கும்..

இது தொடர்பான இன்னுமொரு விஷயம் பின்னாடி வருது..

சட்னி

ICAF அமைப்பு வருஷா வருஷம் நடத்துற உலகத் திரைப்பட விழா இந்த வருஷமும் சென்னைல நடக்கப் போகுது.. டிசம்பர் 16ம் தேதியிலிருந்து 24-ம் தேதிவரையிலும் 9 நாட்கள் நடக்கப் போகுது.. கிட்டத்தட்ட 110 படங்களுக்கும் மேல காட்டப் போறாங்க.

இந்த வருஷம் புதுசா சிறந்த தமிழ்ப் படங்களுக்கு விருது கொடுக்கப் போறதா சொல்லி நம்ம வயித்துல அடிச்சிருக்காங்க.. எப்படீன்னா குத்துமதிப்பா முப்பது தமிழ்ப் படங்கள் போட்டிக்கு வருதுன்னு வைங்க.. அந்த 110-ல இந்த 30 கழிச்சு மிச்சம்தான் மத்த வெளிநாட்டுப் படங்கள்.. நமக்கு படம் குறையுதுல்ல சாமி..

எஸ்.வி.சேகர் என்கிற ஒரு எம்.எல்.ஏ.வை இழுப்பதற்கு சென்ற ஆண்டு அரசு செலவிட்ட தொகை 25 லட்சம் ரூபாய்.. என்ன புரியலையா..? ICAF அமைப்பின் துணைத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகர்தான். போன வருஷம் தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் ரூபாயை மானியமாக பெற்றுக் கொடுத்தார் சேகர். இது விஷயமாக முதல்வரை சந்திக்கப் போய் அப்படியே உடன்பிறப்பாகவும் மாறிப் போய்விட்டார் சேகர். இது நடந்த கதை..

சேகரின் கட்சி தாவலுக்கு அஸ்திவாரம் போட்டதும் 2007-ம் ஆண்டு நடந்த உலகத் திரைப்பட விழாதான். அன்றைய துவக்க விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு சேகரும் விழாவில் கலந்து கொண்டதுதான் போயஸ் தோட்டம் அவரோடு நடத்திய கபடி, கபடி விளையாட்டின் துவக்கம்.

சரி விடுங்க.. போன தடவை நம்ம பணம் 25 லட்சத்தை வாங்கிட்டும் பார்வையாளர்களிடம் 500 ரூபாயை வசூலிச்சாங்க... இந்த முறை 50 லட்சம் ரூபாய் மானியமாக கேட்டிருக்கிறார்களாம்.. முதல்வர் கொடுத்துவிட்டால் பார்வையாளர்களுக்கு கட்டணத்தைக் குறைப்பார்களா..? ம்ஹூம்.. சத்தியமா நடக்காது.. அப்புறம் எதுக்குங்க மக்களுடைய பணத்தை எடுத்து தனியார் அமைப்புக்குக் கொடுக்கணும்? அதுக்கு பதிலா தமிழக அரசே கேரள அரசு செய்வதைப் போல் தனியாக விழா நடத்திவிடலாமே..?

சாம்பார்

இந்த போட்டால இருக்கிறவரை நல்லா உத்துப் பாருங்க..


யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு.. புத்திசாலின்னு ஒத்துக்குறேன்..

கொத்தமல்லி சட்னி

மீண்டும் சினிமாவுக்கே வருவோம்.. இந்த வருஷம் தெலுங்கு மணவாடுகள் ராஜ்ஜியத்துல சூப்பர்டூப்பர்ஹிட் 'மகாதீரா'தான்.. கிட்டத்தட்ட 60 கோடி வசூல் என்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனுக்கு அப்படியொரு மார்க்கெட்டை ஏத்திவிட்டிருக்கு இந்தப் படம்.. ஆனால் இந்தப் படத்துக்கு பின்னால ஒரு சோகம் இருக்குன்றது இப்பத்தான் தெரிய வந்திருக்கு.


தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்தை சந்தித்து இந்தக் கதையை கையெழுத்துப் பிரதியாகவும், திரைக்கதையை ஒரு டேப்பில் பதிவு செய்தும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இப்போது அவர் சொன்ன கதையில் சாமியார்களின் பெயர்களையும், ஊர்களையும் மட்டும் மாற்றிவிட்டு அப்படியே எடுத்திருக்கிறார்கள். விழி பிதுங்கிப் போய் நிற்கிறார் கதாசிரியர். பாவம்.. கஷ்டப்படுபவர். இதுவரையில் சினிமாவில் அடையாளம் இல்லாமல் இருப்பவர். இப்படியா செய்வார்கள்..?

விஷயம் இப்போது 'பெப்ஸி'யிடம் போயிருக்கிறது.. பார்ப்போம்.. ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும். ஏன்னா தயாரிப்பாளர் தாணு ஒன்றரை கோடி கொடுத்து ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அவருக்கும் இந்த விவகாரம் சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள்.

மிளகாய் சட்னி

தாணு ஸார் சிக்கலை தானாவே உருவாக்கிக்குவார் போல.. தாணு எவ்ளோ பெரிய தயாரிப்பாளர்? அவரே இப்படி செய்யலாமா என்று குமுறுகிறார்கள் நடிகர், நடிகைகள் வட்டாரத்தில்..


'தினமலமும்' ஸாரி 'தினமலரும்', சினிமாக்காரங்களும் ஒருவருக்கொருவர் 'டூ' விட்டுக் கொண்டபின்பு வந்த வெள்ளிக்கிழமையன்று 'தினமலர்' ரோஷப்பட்டு 'வெள்ளித்திரை'யை வெளியிடவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பலரும் போன் போட்டு குடைய ஆரம்பித்தார்கள். எல்லாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்கு பத்திரிகை விளம்பரத்தை வைத்துத்தான் மார்க்கெட்டிங்கே செய்ய முடியும். இப்படி முடக்கிப் போட்டால் அவர்களது படத்திற்கு ஓசி விளம்பரம் யார் கொடுப்பது..?

'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யோசித்துக் கொண்டிருக்க தாணுவோ ஒரு படி மேலே போய் பூனையைத் தூக்கி மடியிலேயே வைத்துக் கொண்டார்.


'தினமலர்' பத்திரிகைக்கு 'கந்தசாமி'யின் மெகா ஹிட் பற்றி இரண்டு பக்கங்களுக்கு ஒரு பேட்டியை கொடுத்து அசத்திவிட்டார். இது சென்ற வார ஞாயிறு 'வாரமலரில்' பிரசுரம் ஆகியிருக்கிறது..


“இப்படி கலையுலகத்துக்குள்ள ஒற்றுமை இல்லாம இருக்கிறதாலதான் போறவன், வர்றவன் எல்லாம் நம்மளை காறித் துப்புறான்..” என்று நடிகர் சங்கத்தில் கோபக் குரல் எழும்பியுள்ளது..


இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் "மக்களோட விஷயங்கள்ல நாம நேரிடையா கலந்துக்கிட்டு போராடணும்.." என்ற சத்யராஜின் ஆவேசப் பேச்சைக் கேட்டு மூன்றாம் தரப்பினர் மகிழ்ச்சியடைந்தார்கள். குசும்பு புடிச்ச பத்திரிகையாளர்கள் சிலரின் உள்ளடி வேலையில் சத்யராஜ் வசமாக மாட்டத் தெரிந்து கடைசி நிமிடத்தில் தப்பித்தாராம்..

சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை சத்யராஜின் வீட்டுப் பக்கம் அனுப்பி வைத்து "எங்க போராட்டத்துக்கு துணைக்கு வாங்க.." என்று கேட்க வைத்துள்ளார்கள் குசும்பான பிரஸ்காரர்கள் சிலர். மிளகாப் பொடியை தானே எடுத்துக் கண்ணுல கொட்டிக்க அவருக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு..? 'அது..' 'இது..' என்று சொல்லி தப்பிப்பதற்குள் மனிதருக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டதாம்.

அந்த மீட்டிங்கிற்கு கொங்கு பெல்ட்டின் மருமகளும், தமிழகத்தின் ஒரே தைரியமான பெண்ணுமான குஷ்பக்கா ஏன் வரவில்லை என்று அனைவரும் கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்க.. அக்காவோ ரொம்ப கூலாக, "இதையெல்லாம் கண்டுக்காமத்தான் போகணும்.. ஏன்னா எல்லா பத்திரிகைகளும் இப்படி எழுதறதில்லை. ஒருத்தர் ரெண்டு பேர்தான எழுதுறாங்க. அப்புறம் எதுக்கு எல்லாரையும் திட்டணும்..?" என்று திருவாய் மொழிந்திருக்கிறார். அக்காவோட ரூட்டு எப்பவும் தனிதான்..

பனியாரம்

கொஞ்சம் பிளைட் ஏறி போவோமா..? உலகப் புகழ் பெற்ற மூக்கழகி ஏஞ்செலீனா ஜூலியைப் பற்றி ஒரு பகீர் மேட்டர் இன்னிக்கு ரிலீஸாயிருக்கு.


அதாகப்பட்டது என்னவெனில் அம்மணி அவரோட 16 வயசுல ஒரு ஆணோட உறவு வைச்சுக்கிட்டாராம். இது என்ன பெரிய விஷயமா அப்படீங்குறீங்களா..? அதுவல்ல விஷயம். அந்த ஆண், ஜூலியின் அம்மா மார்செலின் பெர்ட்ராண்ட்டின் அப்போதைய காதலராம்.. அந்த சமயத்துல ஜூலியோட அம்மாவும், அவரோட காதலரும் சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருந்தாங்களாம். இது எப்படி இருக்கு..?

இந்த விஷயம் அப்போதே ஜூலியின் அம்மாவுக்குத் தெரிஞ்சு மகளோட 'கா' விட்டுட்டாங்களாம். கூடவே அந்தக் காமாந்தக் காதலனையும் கழட்டிவிட்டுட்டாங்களாம்.. ஆண்ட்ரூ மார்ட்டன் அப்படீன்றவரு ஜூலியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதியிருக்காராம். அதுலதான் இந்த மேட்டரும் வந்திருக்கு அப்படீன்றாங்க..

ம்.. இதெல்லாம் தனி மனித சுதந்திரம்ங்க.. எவனுக்கு கேள்வி கேட்க ரைட் இருக்கு.? என்ன நான் சொல்றது..?

துவையல்

பதிவின் துவக்கத்தில் இருக்கும் அந்தப் போட்டால இருக்கிறது யாருன்னு தெரியலையா..?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|


இவுங்கதான்..



சாப்பிட்டாச்சா? வயிறு நிறைஞ்சிருச்சா..?

சரி.. அடுத்த டிபன்ல சந்திக்கலாம்..!

குட்பை அண்ட் குட்நைட்..
!!!

திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசனின் நூலகச் சேவை..!

26-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!!!

'ஆயிரம் கோவில்களை அமைப்பதைவிடவும், ஒரு பள்ளிக்கூடம் நிறுவுவது சாலச் சிறந்தது' என்பார்கள். அதேபோல் இன்றைக்கு 'ஒரு சினிமா திரையரங்கை நிர்மாணிப்பதைவிட, ஒரு நூலகத்தை அமைப்பது நாட்டுக்கும், ஊருக்கும், வீட்டுக்கும் நல்லது' எனலாம். அந்த நல்ல வேலையை இப்போது செய்து வருகிறார் 85 வயதான திரையுலகப் பெரியவர் திரு.முக்தா வி.சீனிவாசன்.

கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பெரியவர் தீவிரமான காங்கிரஸ்காரர்.


தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர். பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.

பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் 'முதலாளி' வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.

இவர் தயாரித்து, இயக்கிய 'தாமரைக்குளம்' திரைப்படத்தில்தான் 'நகைச்சுவைத் திலகம்' நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய 'சூரியகாந்தி' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி. அந்தப் பெருமையுடன் எனதருமை கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான 'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது' பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.

'நடிகர் திலகம்' சிவாஜியின் உற்ற நண்பரான இவர், 'அந்தமான் காதலி', 'இமயம்', 'பரீட்சைக்கு நேரமாச்சு', 'கீழ்வானம் சிவக்கும்' போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் 'அந்தமான் காதலியும்', 'இமயமும்' நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.. 'அந்தமான் காதலி'யின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 'சூப்பர்ஸ்டார்' அண்ணன் ரஜினியின் 'பொல்லாதவன்', 'சிவப்புசூரியன்' திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவரும் இவரே.

இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக 'டைம்' பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் 'நாயகன்' திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய 'முக்தா பிலிம்ஸ்'தான்..

1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்' முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..

துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன் அவர்கள், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத ஒரு தலைவர் உண்டென்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்..

எதற்கு இவரது வரலாறு என்கிறீர்களா..?

இவர் தற்போது செய்து வருகின்ற தன்னலமற்ற ஒரு சமூகத் தொண்டை குறிப்பிட்டுச் சொல்லும்முன் இவரைப் போன்றவர்களின் வரலாற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்ட முக்தா சீனிவாசன் துவக்கக் காலத்தில் இருந்தே பெரும் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் இருந்திருக்கிறார். இதன் விளைவாக கதை, வசன எழுத்தாளராகவும் உருமாறியிருக்கிறார்.

எழுத்தாளர் என்றால் சும்மா இல்லை.. இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் 'தமிழ்த் திரைப்பட வரலாறு', 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு', 'கலைஞர்களோடு நான்', 'கதாசிரியர்களோடு நான்', 'அறிஞர்களோடு நான்' போன்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.


இவர் எழுதிய மிக, மிக முக்கியமான புத்தகத் தொகுப்பு 'தமிழகம் கண்ட இணையற்ற சாதனையாளர்கள்' என்ற புத்தகம்தான். இதில் ஐந்து பாகங்களாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்து சாதனை படைத்த அத்தனை முக்கியப் புள்ளிகளின் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தந்திருக்கிறார். இது நிச்சயம் மிகப் பெரும் சாதனைதான் என்பதை அந்தப் புத்தகங்களை லேசாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிகிறது.

மேலும் காளிதாஸனின் 'சாகுந்தலம்', 'மேகதூதம்', 'ருது சம்ஹாரம்', 'வடமொழி இலக்கியம்' போன்றவற்றை தமிழில் மொழி பெயர்த்தும் தந்திருக்கிறார். மாணவர்களுக்கான 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை' எழுதியிருக்கிறார்.

இப்படி தனது கலையுலகப் பணிகளுக்கிடையே இப்படி எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கும் முக்தா சீனிவாசன், இத்தனை ஆண்டு காலமாய் படிப்பதற்காக அவர் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றனவாம்.

சும்மா நாமே படித்து முடித்துவிட்டு அடுக்கி வைப்பதற்காக புத்தகங்கள்..? மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்பதற்காக இந்த வயதில் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கியிருக்கிறார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும்.. சிலரிடம் அதைக் கூட கேட்பதில்லை.. ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். 5 அல்லது 6 நாட்கள் டைம் கொடுக்கிறார். படித்துவிட்டு மீண்டும் வந்து வேறு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்.

ஆனால் ஒன்று.. திரும்பி வரும்போது யாராக இருந்தாலும் "புத்தகத்தைப் படித்தீர்களா..? முழுசாகப் படித்தீர்களா..? எனக்குச் சந்தேகமா இருக்கு.. எங்க நான் கேள்வி கேட்கிறேன்.. பதில் சொல்லுங்க.." என்று புத்தகத்தைப் பார்த்து கேள்வி கேட்டு அவர்களை அசடு வழியவும் வைக்கிறார். பார்ப்பதற்கு கொஞ்சம் காமெடியாகவும் உள்ளது.

மனிதர் நிறைய பேசுகிறார். அரசியல், பொதுவாழ்வு, சினிமா என்று எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு அடித்திருப்பதால் அத்தனையிலும் தெளிவாக இருக்கிறார்.

பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து அதீதமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சினிமா துறையை போதும் என்று ஒதுக்கி வைத்துவிட்டதாகச் சொல்கிறார். "என்னை மாதிரியான ஆட்களுக்கு இனிமேல் இங்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்துதான் ஓரமாக ஒதுங்கியிருக்கிறேன்.." என்கிறார் இவர்.

வயசான காலத்தில் அக்கடாவென்று ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேளாவேளைக்கு சாப்பிட்டுக் கொண்டு ஓய்வெடுக்காமல் இப்படி எதுக்கு சின்னப்புள்ளைத்தனமா இப்படி ஒரு வேலை..?

"மக்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரணும் தம்பி.. எல்லாரும் டிவிலேயே மூழ்கிட்டு இருக்காங்க.. வரலாறை படிக்கணும்.. நாம எப்படி இருந்தோம்..? நாடு எப்படி இருந்துச்சு..? எதனால் நமக்கு இத்தனை வசதிகள் கிடைச்சது..? இப்படி எதுவுமே தெரியாம ஒரு தலைமுறை உருவாகிக்கிட்டிருக்கு.. பார்க்கிறதுக்கும், கேக்குறதுக்கும் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு தம்பீ.. அதுக்குத்தான் இதை ஆரம்பிச்சேன்.." என்று உண்மையான வருத்தத்தோடு சொல்கிறார் பெரியவர். "ரீடிங் ஹேபிட்டை உருவாக்கியே தீரணும். அதுக்காகத்தான் படிச்சீங்களா.. படிச்சீங்களான்னு திருப்பித் திருப்பிக் கேக்கிறேன்.." என்று அழுத்தமாக தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரம்பத்தில் கேள்விப்பட்ட நான், சாதாரணமாகப் போய்ப் பார்க்கலாம் என்றுதான் சென்றேன். ஆனால் அங்கிருக்கும் புத்தகங்கள் என்னை மேலும், மேலும் இழுத்துக் கொண்டுவிட.. இப்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை சென்று வந்து கொண்டிருக்கிறேன்.

மனிதருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் போச்சு.. புத்தகத்தில் கேள்விகளை கேட்கத் துவங்கி விடுகிறார். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பலரும் தவிக்கின்ற சங்கடத்தை உணர்ந்தாலும், "திரும்ப இதையே எடுத்திட்டுப் போங்க.. நல்லா படிச்சிட்டு உங்களால எப்ப வர முடியுமோ அப்ப வாங்க.. போங்க.." என்று நயமாகச் சொல்லித் திருப்பி அனுப்புகிறார்.

இந்த நூலகத்தில் பல அரிய பழைய காலப் புத்தகங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், இங்கே வைப்பதற்கு இடமில்லாததால் வைக்க முடியவில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

நூலக முகவரி

திரு.முக்தா சீனிவாசன்
5, வைத்தியராமன் தெரு
தி.நகர்
சென்னை-600 017.

பதிவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் நூலகம் இயங்குகிறது. சீனிவாசன் ஐயா கலந்துரையாடலிலும் மிகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். பதிவர்களுக்கு இவருடனான ஒரு அறிமுகம் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். சென்று வாருங்கள்..

பொறுமையாகப் படித்தமைக்கு எனது நன்றிகள்..

ஆதவன் - வடிவேலு மட்டும் இல்லைன்னா..?

23-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தற்போதைய திரை ரசிகர்கள் எந்த மாதிரியான திரைப்படத்தினை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை நீண்ட கால அனுபவம் வாய்ந்த இயக்குநர்களால் சற்றுக் கணிக்க முடியும். கே.எஸ்.ரவிக்குமார் பல வருட கால அனுபவம் வாய்ந்தவர். நன்றாகவே கணித்திருக்கிறார்..

சூர்யா போன்ற குட் ஓப்பனிங் உள்ள நடிகர்களை கையில் வைத்துக் கொண்டு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு மிக, மிக உதவிகரமாக இருந்தது கதாசிரியர் அல்ல.. 'நகைச்சுவை திலகம்' வடிவேலுதான்..!


படத்தின் ஹீரோவான வடிவேலு நாட்டையே உலுக்கியிருக்கும் உடல் உறுப்புகளை திருடுதல் தொடர்பான விசாரணை கமிஷனுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீதிபதி பரத்முரளியின் வீட்டு வேலைக்காரன். அந்த வீட்டில் குடியிருக்கும் ஒரு காலனிக்கே சோறு பொங்கி படைத்துக் கொண்டிருக்கிறார்.

கொலை செய்வதையே குலத் தொழிலாகச் செய்து வரும் செகண்ட் ஹீரோ சூர்யாவுக்கு நீதிபதி பரத்முரளியை கொல்ல வேண்டிய கட்டாயம். அவருடைய சர்வீஸில் முதல் முறையாக முரளியைக் கொல்ல முயன்ற நிகழ்வில் தோல்வி கிடைக்க.. அதனை ஏற்றுக் கொள்ளாதவராக முரளியை கொன்றே தீர வேண்டும் என்ற வெறிக்கு ஆளாகிறார்.

இதற்காக முரளியின் வீட்டிற்குள்ளேயே நுழையத் திட்டமிட்டு நம்ம ஹீரோ வடிவேலுவை மடக்கி அவர் மூலம் உள்ளே நுழைகிறார் சூர்யா. பின்பு தான் நினைத்ததை முடித்தாரா இல்லையா என்பதுதான் கதை..

படத்தின் முற்பாதி முழுவதும் உட்கார வைத்திருப்பது ஹீரோவான அண்ணன் வடிவேலுதான்.. அவர் இல்லாமல் வேறு ஒரு ஹீரோ இருந்திருந்தால் அவனவன் சீட்டைக் கிழித்துப் போட்டுவிட்டு பாதியிலேயே போயிருப்பான். தூணாக இருந்து படத்தினை தனது முதுகில் சுமந்திருக்கிறார் வடிவேலு.

சூர்யா வழக்கம்போல.. கதைப்படி கொலைகாரன் என்பதால் அதற்கேற்றாற்போல் அவ்வப்போது முகத்தை இறுக்கமாக்கி நடித்திருக்கிறார். அவ்ளோதான்.. அந்த சிறுவன் கேரக்டருக்காக போட்டிருக்கும் மேக்கப் மட்டுமே ரசிக்க வைக்கிறது. அடிதடி, ஆக்ஷன், த்ரில்லர் என்று போய்விட்டதால் காட்சிகள் ஜம்ப் ஆகிக் கொண்டே செல்வதாலும் சூர்யாவின் நடிப்பைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அயன் படத்தின் பாதிப்பு இப்படத்திலும் தொற்றியிருக்கிறது. போலீஸ் விரட்டும் வேட்டையில் சூர்யா ஓடுகின்ற ஓட்டம் பலவிதங்களில் லாஜிக்கை மீறியிருந்தாலும் கண்கட்டுவித்தையைக் காட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டதால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தக் காட்சியில் கேமிராவின் வேகம் சூப்பர்ப்..

டயானா மரியம் கூரியன் எப்போதும்போல பாடல் காட்சிகளில் கோல்கேட் பேஸ்ட் விளம்பரம் மாதிரியான சிரிப்புதான்.. எப்போது நிறுத்துவார் அதை..? ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடிப்பதற்கு அவருக்கு ஸ்கோப்.. அதிலும் கேமிராவை சூர்யாவின் முகத்திலேயே போய் ஒட்ட வைத்துவிட்டதால் பாவம்.. அந்த வேலையும் இல்லாமல் போய்விட்டது. இப்படியே தொடர்ந்து பொம்மை மாதிரி வந்துபோனால் சீக்கிரத்தில் பொட்டியைக் கட்டிவிட வேண்டியதுதான்..

வடிவேலுக்குப் பிறகு பாராட்டுக்குரிய நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் முரளி. இன்னொன்று சாயாஜி ஷிண்டே.. இந்தக் கேரக்டருக்கு முரளியை விட்டால் வேறு யார் பொருத்தமானவராக இருக்க முடியும்..? பாவம்.. அற்புதமான நடிகர்.. பாவிப்பய முருகன் அதுவும் பொறுக்காம கூப்பிட்டுட்டான்.. வர்றேன்.. வர்றேன்னு நானெல்லாம் தயாரா இருக்கேன். என்னைய கூப்பிடாம.. சாதிக்கிறவங்களையும், சாதிக்கத் துடிக்கிறவங்களையும் கூப்பிட்டுக்குறான்.. நல்லா இருப்பானா அவன்..?

பிள்ளைகள் கொலை செய்யும் தொழிலில் இருக்கிறார்கள் என்பதைக்கூட இவ்வளவு மகிழ்ச்சியாகவா சொல்ல முடியும் ஒரு தகப்பனால்..? நச்சுன்னு இருக்கு சாயாஜியின் கேரக்டர்.. டயலாக் டெலிவரியில் மனிதர் பின்னுகிறார். பொதுவாக மேடை நாடக நடிகர்களுக்குத்தான் இந்த வித்தை நன்கு தெரியும். மனிதர் நாடகத்தில் நடித்திருப்பாரோ தெரியவில்லை..

'முன்னாளைய கனவுக்கன்னி', 'கன்னட ரத்னா', 'பெங்களூர் பைங்கிளி'யான சரோஜாதேவியின் கொஞ்சும் தமிழை கொஞ்சூண்டு கேட்டபோதே தாங்க முடியலை.. அந்தக் காலத்துல எப்படி தாங்கிக்கிட்டாங்கன்னு தெரியலை.. ஆனாலும் இழுத்து, இழுத்து பேசறதை பார்த்தா.. கொஞ்சம் லேட்டா பொறந்ததால நாம தப்பிச்சோம்னுதான் சொல்லத் தோணுது..

நீண்ட நாட்கள் கழித்து ஆனந்த்பாபுவிற்கு நல்ல கேரக்டர். விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்டிருக்கும் அவரது மனதைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். கால் கருகிப் போயிருக்கும் நிலையிலும் டான்ஸ் ஆடியும், பைட் செய்தும் அவர் காட்டியிருக்கும் நடிப்பு தீவிரத்தை பார்த்து அசந்துதான் போனேன். அவருடைய இந்த இரண்டாவது இன்னிங்ஸ் நல்ல பலனைக் கொடுக்கட்டும்..

'கதை : ரமேஷ்கண்ணா' என்று டைட்டில் சொல்கிறது. இடைவேளைக்குப் பின்னர் வருகின்ற அந்த ட்விஸ்ட்டுகள் அருமை. நான் எதிர்பார்க்கவே இல்லை.. அதுதான் திரைப்படத்திற்கு பிற்பாதியில் உயிர் ஊட்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.. பரவாயில்லை.. கதையின் அடித்தளம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்ததுதான் என்றாலும், இதன் திரைக்கதையாக்கம் பாராட்டுக்குரியதுதான்..

ஆனாலும் சிற்சில லாஜிக் சொதப்பல்கள் இருந்து தொலைந்தாலும், எதில்தான் இல்லை என்ற நினைப்பில் ஓரம்கட்ட வேண்டியதுதான்.. விசாரணை கமிஷனுக்கு தண்டனைக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரமும் உண்டா என்பது சந்தேகமானது. குற்றம் நடந்ததைத்தான் சொல்ல முடியும்.. மீதியை அரசு மேலும் புலனாய்வு செய்து நீதிமன்றத்திற்கு கொண்டுபோக முடியும். இதுதான் நடைமுறை. இங்கே சிறை தண்டனை வழங்கவே ஆலோசனை சொல்வது கொஞ்சம் டூமச்சுதான்..

படத்தின் எடிட்டிங் குறிப்பிட்டு பாராட்டக் கூடிய நிலையில் இருந்தது.. பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இளசுகளுக்குப் பிடித்தாற்போன்று கட் அண்ட் ஷாட்டுகள் சொருகப்பட்டுள்ளது தெரிகிறது.

ஆனால் டோட்டலாக பெயிலியர் ஆனது பின்னணி இசைதான். ஏதோ 'வள்ளி திருமணம்' நாடகத்திற்கு போடும் பின்னணி இசையை இங்கே போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கக் கூடாதா..?

ஏதோ ஐந்து பாடல்கள் ஒலித்தன. பாடல் வரிகள் என் நினைவுக்கு வர மறுக்கின்றன. ஏதோ ஒண்ணை போட்டு, அவங்க வெளிநாட்டுக்குப் போய் ஷூட் பண்ணிட்டு எடிட் பண்ணி தேத்திட்டாங்க. அவ்ளோதான்..

என்ன இருந்தாலும் பாருங்க. அந்தக் கால இசையமைப்பாளர்களை அடிச்சுக்க முடியாதுன்ற மாதிரி.. இப்ப வர்ற சினிமாக்கள்ல பழைய சினிமாப் பாடல்களை இடை, இடையே ஒளிபரப்பி கொஞ்சம் கவன ஈர்ப்பு பண்ணிக்கிறாங்க.. இதுலேயும் அதே கதைதான்.. சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும். இதுல ஒவ்வொரு இசையமைப்பாளரும் 40 லட்சம், 50 லட்சம் சம்பளம் வாங்குறாங்களாம்.. பாவம் பெரியவர்கள் எம்.எஸ்.வி.யும், ராமமூர்த்தியும். இந்தக் காலத்துல பொறந்து தொலைச்சிருக்கக் கூடாதா..?

தியேட்டரில் கூட்டம் பெருமளவுக்குக் கூடியிருந்தது. தமிழ்நாடு முழுக்க நல்ல வசூல்தான். காரணம் இதோட சேர்ந்து வந்த ரெண்டு படங்கள் சரியில்லாததால.. இதையாவது பார்த்துத் தொலைப்போமே அப்படீன்னு கூட்டம் இங்க வர ஆரம்பிச்சிருக்காம்.. பிக்கப் ஆயிரும்னு தயாரிப்பு தரப்பு தெம்பா சொல்லுது.. ஏதோ போட்ட காசு வந்தா நமக்கும் சந்தோஷம்தான்..

எண்டெர்டெயிண்ட்மெண்ட்டுன்னு போனா படம் ஓகேதான்..

ஆனா அண்ணன் வடிவேலு மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க..?

ஜெகன்மோகினி - ஜெகத்தையும் காணோம்..!! மோகினியையும் காணோம்..!!!

20-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விட்டலாச்சார்யா என்னும் கலைவித்தகர் காட்டிய இந்தப் பூச்சாண்டி திரைப்படம் நான் பார்த்த அந்த பால்ய வயதில் எனக்குள் பல்வேறு புதிய அனுபவங்களைக் கொடுத்திருந்தது. முக்கியமானது விழுந்து விழுந்து சிரிக்க வைத்த அந்த மூன்று குள்ளர்களின் நகைச்சுவைக் காட்சிகள்.

ஆவிகளின் பேயாட்டமும், மந்திர தந்திர காட்சிகளுமே என்னைப் போன்ற அக்கால சிறுவர்களை ஈர்த்திருந்தது. அந்தக் காலத்திய குறைவான வசதிகளை கையில் வைத்துக் கொண்டே வித்தையை முழுமையாகக் காட்டியிருந்தார் வித்தகர் விட்டாலாச்சார்யா.

பருவமெய்தி வயசுக்கு வந்த பின்பு மீண்டும் ஒரு முறை இத்திரைப்படத்தை பார்த்தபோது அந்தக் குள்ளர்களைவிடவும் 'கவர்ச்சி சுனாமி' ஜெயமாலினி என் மனதை ரொம்பவே ஆக்கிரமித்துக் கொண்டார். அவருடைய உடலில் இருந்த நெகிழ்வைவிட, முகத்தில் இருந்த ஒரு களையே சுள்ளென்று தமிழர் ரசிகர்களை இழுத்து வைத்திருந்தது.

படங்களை ரீமேக் செய்வது கத்திமேல் நடப்பது போன்றதுதான்.. அதிலும் மெகா ஹிட்டடித்த திரைப்படங்களை மீண்டும் ஒரு சூப்பர்ஹிட்டுக்கு கொண்டு போக வேண்டுமெனில் நிச்சயம் இயக்குநர் அதற்குத் தகுதியுள்ள ஆளாக இருக்க வேண்டும்.

தற்போதைய 'கவர்ச்சி சூறாவளி'யான 'மச்சான்ஸ் புகழ்' நமீதாவை வைத்து இத்திரைப்படம் உருவாகிறது என்பது தெரிந்து ஒரு த்ரில்லிங் இருந்தாலும் இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் என்றவுடன் பொசுக்கென்றானது. இராம.நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகப் பல படங்களுக்கு பணியாற்றிய அனுபவம் இருப்பதினாலும், நகைச்சுவைத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கிய அனுபவம் இருப்பதாலும் இவரை இயக்கத்திற்கு சிபாரிசு செய்திருந்தார் இராம.நாராயணன்.


விழிமேல் விழி வைத்து காத்திருந்ததற்கு போதும், போதும் என்கிற அளவுக்கு போட்டு புரட்டி எடுத்துவிட்டார்கள் தியேட்டரில்..

நமீதா, துட்டு, கிராபிக்ஸ் வசதிகள், விநியோக சுதந்திரம் என்று பல்வேறு வசதி, வாய்ப்புகள் இருந்தும் இப்படி ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டிய அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்ததுபோல் செய்து கொடுக்க அந்த இயக்குநருக்கு எப்படி மனசு வந்ததோ தெரியவில்லை..? கொடுமை..

ஒரிஜினல் 'ஜெகன்மோகினி'யில் கதாநாயகனாக நடித்த நரசிம்மராஜூதான் இத்திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார். இவரது மனைவி மங்கையர்க்கரசியாக நடிக்க ஜெயமாலினியை அணுகியிருக்கிறார்கள். விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம்.. தப்பிச்சது ஆத்தா..

கதை அதேதான்.. ஆனால் எடுத்தவிதம்தான் கோரமானது..

பச்சைத்தீவின் மாமன்னன் நரசிம்மராஜூவுக்கும், மங்கையர்க்கரசி(யுவராணி)க்கும் ஒரே மகன் ஜெகதலப்பிதாபன்(ராஜா). இவனுக்கு கழுத்தை நீட்ட இவனது மாமன் மகள் அழகு நாச்சியார்(நிலா) காத்திருக்கிறாள். பிரதாபன் கடல் கொள்ளைக்கூட்டத் தலைவனான அலைக்கள்ளனை(ரியாஸ்கான்) பிடிக்க சங்குத் தீவுக்குச் செல்கிறான்.


அங்கு அலைக்கள்ளனை பிடிப்பதற்கு முன்பாகவே முத்தெடுக்கும் மீனவப் பெண்ணான மோகனியைப்(நமீதா) பிடித்துவிடுகிறான் பிரதாபன். இருவருக்குள் காதல் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்க.. அலைக்கள்ளனையும் பிடித்துவிடுகிறான் பிரதாபன்.

அழகு நாச்சியாருக்கு டாட்டா காண்பித்துவிட்டு மோகினியை கரம் பிடிக்க பெற்றோரிடம் ஆதரவு கேட்கிறான் பிரதாபன். அம்மா கோபப்பட, அப்பா நம்ம ஊர் டிபிக்கல் வில்லன் கம் அப்பனைப் போல் ஆக்ட்டிங் கொடுத்து பிரதாபனை நம்ப வைக்கிறார்.

அலைக்கள்ளனின் அப்பா(பாலாசிங்)வான சங்குத்தீவின் சிற்றரசனிடம் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து மோகினியை அவர் கொலை செய்தால், அவர் மகனான அலைக்கள்ளனை விடுவிப்பதாகச் சொல்கிறார் நரசிம்மராஜூ. அதன்படியே மோகினி கொல்லப்படுகிறாள். ஆனால் பிரதாபனிடம் மோகினி வேறொரு அரசனுடன் ஓடிப் போய்விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் ஓதப்பட அவனும் நம்பி விடுகிறான்.

இடையில் நாகபஞ்சமி என்னும் சக்தியை அடைய சித்தரான ஒரு மந்திரவாதி(கோட்டா சீனிவாசராவ்) முயற்சி செய்கிறார். அதற்கு பிரதாபனை பலி கொடுக்க முயற்சி செய்கிறார். இதற்காக அரண்மனையில் நல்லவர்போல் வேடம் காட்டி பிரதாபனின் உயிருக்கு உலை வைக்கும் பாக்கியத்தைச் செய்கிறார்.

தன் காதல் நிறைவேறாமலேயே இறந்துபோய்விட்ட கொடுமையினால் ஆவியாக வரும் மோகினி, பிரதாபன், அழகுநாச்சியார் திருமணத்தைத் தடுத்து நிறுத்துகிறாள்.

நான் எப்படியாவது பிரதாபனை அடைந்தே தீருவேன் என்று அலையோ அலை என்று ஆவியாகவே அலைகிறாள் மோகினி.

இன்னொரு பக்கம், மணந்தால் பிரதாபன்; இல்லையெனில் வீரப்பிராப்தம் அடைவேன் என்கிறாள் அழகு நாச்சியார்.

நாகபஞ்சமியை அடைந்தே தீருவேன்.. இல்லையெனில் நானும் வீரமரணம்தான் என்கிறான் மந்திரவாதி..

மூன்றும் நடந்ததா என்பதே திரைப்படம்.

ம்ஹும்.. நேற்றைய தினம் காலண்டரில்கூட எனது ராசிக்கு முன்னேற்றம் என்றுதான் போட்டிருந்தார்கள். அதை நம்பி போய்த் தொலைந்துவிட்டேன். இந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ரீமேக் திரைப்படங்கள் எனில் காட்சிக்கு, காட்சி அப்படியே எடுக்க வேண்டும் என்பதில்லை. அந்தக் காட்சியில் இருந்த உணர்வுகள் மீண்டும் எடுக்கப்பட்டதில் இருக்க வேண்டும். இங்கே டோட்டல் வேஸ்ட்டு..

ராஜா காலத்து கதை என்று சொல்லத் துவங்கி பேச்சுத் தமிழை எவ்வளவு கொலை செய்யணுமோ அவ்வளவுக்கு கொலை செய்து துப்பியிருக்கிறார்கள். "மச்சான் அரண்மனைக்கும் வரவில்லை.. அந்தப்புரத்திற்கும் வரவில்லை.. வராமலேயே எனக்கு வைச்சான் ஆப்பு.." என்று ராஜாவே பேசுகிறார்.


எந்த வருஷத்து ராஜா என்பதைச் சொல்லவில்லை என்றாலும் இவர்களாகவே குத்துமதிப்பாக ஒரு காலத்தை நினைத்து எடுத்திருக்கிறார்கள். இடையில் கோட்டு, சூட்டு போட்டு அன்னிய சக்திகளெல்லாம் முத்துக்கள் வாங்க கடற்கரைக்கு வருகிறார்களாம்.. இன்னும் கிழக்கிந்திய கம்பெனியை மட்டும்தான் காட்டவில்லை.

ஆர்ட் டிபார்ட்மெண்ட் எவ்ளோ பெரிய ஓட்டை என்பது துவக்கத்திலேயே தெரிந்துவிட்டது.. பாசி மாலைக்கு ஒரு குளோஸப்பை வைத்துவிட்டு அதனை முத்து மாலை என்று பீலாவிடும் அந்த ஆர்ட் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். ஒரு மாடல் கூடவா கிடைக்கவில்லை..?

திருமலை நாயக்கர் மஹாலில் படப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்பதில் இயக்குநர் குறியாக இருந்ததால் மதுரையின் மாமன்னன் மு.க.அழகிரிக்கு படத்தின் துவக்கத்திலேயே தனி கார்டு போட்டு நன்றியையும், விசுவாசத்தையும் காட்டிவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்த படப்பிடிப்புகள் இப்போது நாயக்கர் மஹாலில் தங்குத் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தனை நாளைக்கு தாங்கும் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் அரண்மனைகளுக்கு பஞ்சம் போலிருக்கிறது..


அலைக்கள்ளனுக்கே போலிகளாம்.. மூன்று போலிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிய மார்பிங் முகங்கள் எகிறுவதைப் பார்த்து நமக்கு பகீரென்கிறது.. டைரக்டர் இவ்ளோ நல்லவராவா இருப்பாரு..?

எந்த வகையிலும் ஈர்க்காத திரைக்கதையும், நடிக்கவே நடிக்காத நட்சத்திரங்களின் நடிப்பும் சேர்ந்து நம்மை ரொம்பவே கொடுமைப்படுத்துகின்றன.

நமீதாவின் பிரம்மாண்டம் இன்னும் எத்தனை நாளைக்கு அம்மணிக்கு சோறு போடும் என்று தெரியவில்லை. நமீதாவிடம் இல்லாத ஒன்று.. ஜெயமாலினி காட்டிய முகக் கவர்ச்சி. ஈர்ப்புத் தன்மை.. சுத்தமா டோட்டல் அவுட்டாகி அம்போவென நிற்கிறார் நமீதா.

முதல் பாதி முழுக்க ஒரு செட் டிரெஸ்தான் அம்மணியின் காஸ்ட்யூம். ஒரே நாளில் எடுத்து முடித்தார்களோ என்னவோ..? அம்மணிக்கு நடிப்பாவது வருகிறதா என்றால்.. அதுவும் இல்லை. கீ கொடுத்த பொம்மையாட்டம் இருக்கும் அம்மணியின் பேச்சும், நடையையும் பார்த்தால் சீக்கிரமே சூரத்திற்கு பொட்டியைக் கட்டிவிடுவார் என்று நினைக்கிறேன்..

ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..


அழகு நாச்சியாராக நிலாவாம்.. மூஞ்சில ஒண்ணையும் காணோம்.. ஏதோ வாயைத் தொறக்குது.. பேசுது.. ஆடுது.. அம்புட்டுத்தான்.. மெயினே ஆடாமல் இருக்கும்போது சைடுகள் மட்டும் நடித்துவிடுவார்களா என்ன?


படத்தில் நடித்திருக்கும் ஒரே ஒருவர் கோட்டா சீனிவாசராவ்தான். மனிதருக்கு பொருத்தமான கேரக்டர்.. உருப்படியாகச் செய்திருக்கிறார். ஆனால் மேக்கப்தான் கண்ணை உறுத்துகிறது..

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் நம்மை அசத்துவது கிராபிக்ஸ்தான்.. சத்தியமா சொல்றேன் சாமிகளா.. இது போன்ற கிராபிக்ஸ் சித்து வேலைகளை நீங்க எந்த சினிமாவுலேயும் பார்த்திருக்க முடியாது.. அவ்வளவு அட்டகாசம் போங்க..

இந்த கிராபிக்ஸ் வேலையை பார்த்துதான் சினிமாக்காரங்கள்லாம் அசந்து போனாங்களாம்.. டிரெயிலர் ரிலீஸ் பங்ஷன்ல உருகி, உருகி பேசியிருக்காங்க.. எல்லாருக்கும் கண்டிப்பா கண் ஆபரேஷன் பண்ணணும்ப்பா..

அதிலும் சீனிவாசராவ் சிலந்தி வடிவில் வருவார் பாருங்கள்.. வடிவேலுவின் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானேன்ற வசனத்தைவிடவும் சூப்பர் காமெடி சீன்..

டோட்டலா இதுவே வாஷ் அவுட் என்பதால் பிரமிப்பும், மந்திர, தந்திர எழவுகள் ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை. அத்தனையும் வேஸ்ட்டாகிவிட்டது.

ஒரிஜினிலில் இருந்தவற்றில் பத்து சதவிகித பிரமிப்புகூட இந்த ரீமேக்கில் இல்லை. "ஆவிகளின் அட்டாகசத்தைப் பாரீர்" என்றுதான் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அந்தக் காலத்தில் எங்களையெல்லாம் கூவி, கூவி அழைத்தது.

முக்கியமான நகைச்சுவையையும், மந்திரக் காட்சிகளையும் குப்பையாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த ஆவிகளின் சேட்டைகளையும், குள்ள ஆவிகளையாவது படத்தில் சேர்த்திருக்கலாம். ஒரிஜினிலை அப்படியே ரீமேக் செய்துதான் தொலைத்திருக்கலாமே..


இதில் வைகைப்புயல் வேறு கதையில் ஒட்டாமல் தனி ஆவர்த்தனமாக வருகிறார். இதுவும் ஒரு கொடுமை. எல்லாம் எடுத்து முடித்தும் விற்க முடியாமல் தவிக்க.. கை கொடுத்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அதையாவது உருப்படியாக செய்தார்களா..? அதுவும் இல்லை.. இயக்குநர் இன்னமும் 'பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்' காலத்திலேயே இருக்கிறார்..

'இசை இளையராஜா' என்று டைட்டிலில் பார்த்தேன். பின்னணி இசைக்கு ஏதோ ஒன்றை போட்டு தேற்றிக் கொடுத்திருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆனால் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை.. ராகம் மட்டுமே கேட்க வைக்கிறது.. படத்தின் விளம்பரத்திற்குத் தன்னால் முடிந்த உதவியினைச் செய்திருக்கிறார் இசைஞானி. அந்த மட்டுக்கும் உழைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் 'ஆனந்தா பிக்சர்ஸ்' சுரேஷ் இத்திரைப்படத்தின் வினியோகத்தை எதற்காக வாங்கினார் என்று தெரியவில்லை? மூணே மூணு படம்தான ரிலீஸ்.. கூட்டம் அள்ளிரும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. ஒரு படமே ரிலீஸானாலும்.. ரிசல்ட் எங்க காதுக்கு நல்லபடியா வந்தால்தான் வருவோம் என்று ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

'ஜெய் ஜ்வாலாமுகி.. இன்னுமொரு சந்திரமுகி' என்று எந்த தைரியத்தில் இதற்கு விளம்பரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை. தியேட்டர்கள் காத்தாடுகின்றனவாம். தமிழகம் முழுவதிலும் இருந்து தியேட்டர் ரிசல்ட்டுகள் அட்டகாசமாக வந்து கொண்டிருக்கின்றன.

நல்ல சினிமா, கெட்ட சினிமா இரண்டில் ஒன்றாக இருந்து தொலைத்தால்தான் யாருக்காச்சும் உதவிகரமா இருக்கும். இப்படி ரெண்டும்கெட்டானாக இருந்து தொலைத்தால் என்னவென்று சொல்வது?

"கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள்.. கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. ஏதோ ஒன்று அசத்தலாக இருக்கிறது.. ஒரு முறை பார்க்கலாம்.." என்றெல்லாம் ஒரிஜினல் சினிமாக்காரனைப் போல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.. இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள் புண்ணியவான்கள்..

நல்லவேளை.. வித்தகர் விட்டலாச்சார்யா உயிருடன் இல்லை...!

தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்க பதிவர்களே..!

16-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குறும்படம் எடுத்தது பெரிசில்லை.. வீட்ல வைச்சு நானே ஆயிரம் வாட்டி பார்த்ததும் பெரிசில்லை. ஏதோ தெரியாத்தனமா பிரெண்டானவங்களையெல்லாம் பார்க்க வைச்சு கதறடிச்சதும் பெரிசில்ல.. ஊர்க்காரங்க பட்ட இம்சையை உலகம் பூரா பரப்பி அவுகளையும் நோகாம நொங்கெடுக்கணும்ன்றதுதான் இப்ப நம்மளோட கொள்கை.. லட்சியம்..

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நான் எடுத்த புனிதப்போர் குறும்படத்தைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்கக் கூடாது.

இருந்தாலும், "இவனெல்லாம் ஒரு படம் எடுத்திட்டானே.. அதுலேயும் முப்பதாயிரம் ரூபா செலவுல.. டைரக்டர்ன்னு வேற பேர் போட்டுக்கிட்டானானே"ன்ற வயித்தெரிச்சல்ல நிறைய பேர் 'பொங்கித் தீர்த்த கதை'யையெல்லாம் அப்பவே நான் என் அப்பன் முருகன்கிட்ட 'பாஸ்' பண்ணிட்டு 'லூஸ்'ல விட்டுட்டேன்.

ஆனாலும் நீங்க பட்ட அந்த இம்சையை ஸ்டேட் முழுக்க கொண்டு போகணும்னு நினைச்சுத்தான், தமிழ்நாட்டுல நடந்த அத்தனை குறும்படப் போட்டிகளுக்கும் அனுப்பி, போஸ்ட்லேயே எல்லாருக்கும் 'தூக்குத் தண்டனை' கொடுத்திட்டிருக்கேன்.

அந்த வகைல என்னுடைய.. இல்ல.. இல்ல.. தப்பு.. தப்பு.. நம்முடைய 'புனிதப்போர்' குறும்படம், இதுவரைக்கும் தமிழ்நாட்டுல இது மாதிரி போட்டி நடத்துற அத்தனை ஊர்களுக்கும் பயணப்பட்டு, தன்னோட கொடுமையை நிறைவேத்தியிருக்கு..

இப்போ இன்னொரு முயற்சியா டெல்டா மாவட்டத்தில் இருந்து டால்டா செய்ய ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கு.. விட்டுற முடியுமா? களத்துல குதிக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

நம்ம திருவாரூர் மாவட்டத்துல இருக்குற பன்னாட்டு லயன்ஸ் சங்கம்(324-A2 மாவட்டம்) படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி 2009-2010 என்கிற தலைப்பில் ஒரு போட்டியை நடத்துது. கூடவே குறும்படப் போட்டியும் நடத்துதாம்.

இந்த மாசம் வெளிவந்த 'கிழக்கு வாசல் உதயம்' அப்படீன்ற புத்தகத்துல இந்த நியூஸ் வெளியாகியிருக்கு.

இந்தப் போட்டிக்காக சிறுகதை எழுத்தாளர்களும், குறும்படத் தயாரிப்பாளர்களும் அவங்கவங்க எழுதின சிறுகதைகளையும், குறும்படங்களையும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்காங்க..

சிறுகதைப் போட்டிக்காக சில விதிமுறைகளைக் கொடுத்திருக்காங்க.. அது என்னன்னா..?

1. போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கதைகள் A4 அளவில் 7 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே அளவில் ஈ-மெயிலிலும் அனுப்பலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத கதையாக இருத்தல் வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை வேறு எந்த இதழுக்கும் அனுப்புதல் கூடாது.

3. தழுவல் அல்லது மொழி பெயர்ப்புக் கதையாக இருக்கக் கூடாது. சொந்தக் கற்பனை என்ற உறுதி தேவை.

4. பரிசுக்குரிய கதைகள், அதற்கென அமைக்கப்படும் தேர்வுக் குழுவால், தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அந்த முடிவே இறுதியானது.

5. அனுப்பும் கதைகளுக்கு நகல் எடுத்துக் கொண்ட பின், கதைகளை அனுப்பவும். தேர்வு பெறாத கதைகளை திருப்பியனுப்ப இயலாது.

சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம். இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம்.. மூன்றாம் பரிசு ரூபாய் மூவாயிரம்.

இவை தவிர சில கதைகள் ஆறுதல் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுமாம்.

குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள்

1. கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட குறும்படங்களாக இருத்தல் வேண்டும். ஆவணப் படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.

2. 30 நிமிடங்களுக்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.

3. குறும்படத்தின் இரண்டு CDக்களை அல்லது DVDக்களை அனுப்ப வேண்டும்.

4. போட்டிக்கென குறும்படத்தை அனுப்புபவர் எந்த உரிமையின் அடிப்படையில் அதை அனுப்புகிறார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

போட்டிக்கு வரும் குறும்படங்களில் சிறந்த 5 படங்கள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒவ்வொரு படத்துக்கும் தலா ரூபாய் ஐந்தாயிரம் பரிசாகத் தரப்படும்.

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

சிறுகதைகளும், குறும்படங்களும் அனுப்ப வேண்டிய முகவரி

லயன் உத்தமச்சோழன்
மாவட்டத் தலைவர் - கலை, இலக்கியம்
525, சத்யா இல்லம்
மடப்புறம்-614 715
திருத்துறைப்பூண்டி
தொலைபேசி எண் : 04369-223292
அலைபேசி எண் : 94433-43292
மின்னஞ்சல் முகவரிகள் : kizhakkuvaasal@gmail.com / kizhakku_vaasal@yahoo.co.in

படைப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி தேதி 31-10-2009

என்ன பதிவர்களே.. முழுவதுமாக படித்து விட்டீர்களா..?

சிறுகதைப் போட்டியாம்.. ஆனால் '7 பக்கந்தான்' அப்படீன்னு கண்டிஷன் போட்டிருக்கிறது எனக்கு ஒத்து வரலை. அதுனால வேற யாராச்சும் எனக்குப் பதிலா பரிசை வாங்கிக்கட்டும்னு ஒதுங்கிட்டேன்.

ஆனா அந்தக் குறும்படப் போட்டியை விடுறதா இல்லை..

கண்டிப்பா என்னோட 'புனிதப்போர்' காவியத்தை இந்தப் போட்டிக்கு அனுப்பப் போறேன்.. நிச்சயம் ஜெயிப்பேன் என்று இதுவரையில் அனுப்பிய அத்தனை போட்டிகளிலும் நம்பினதைப் போல இந்தத் தடவையும் உறுதியா நம்புறேன்..

நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'.. அவங்கவங்க எடுத்த குறும்படத்தை அனுப்பி என்னோட 'புனிதப்போரோட' போட்டி போடுங்க பார்ப்போம்..

ஒரு கை பார்த்திருவோம் மக்களே..!

வாங்க.. வாங்க.. தயாராயிருக்கேன்..!!!

மறந்திராதீங்க.. வர்ற அக்டோபர் 31, கடைசி நாளு..

அதுக்குள்ள உங்களோட படைப்புகளை அனுப்பிருங்க..

நன்றி..!!!

கலைஞர் கருணாநிதிக்கு கலை உலகப் படைப்பாளி விருது - பாராட்டு விழா நிகழ்ச்சிகள்..!

13-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தின் மக்கள் பட்டியலில் திரைப்படத்துறையினர் மட்டும் ஒரு விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையான சலுகைகளையும், செல்வாக்கையும், ஆதாயங்களையும் யார் கொடுத்தாலும் சரி.. அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடனமாட தமிழ்த் திரையுலகம் தயங்கியதே இல்லை.

இதோ சமீபத்தில் அப்படித்தான்... தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்திருக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கு 'கலை உலகப் படைப்பாளி' என்னும் விருதை கொடுத்து சந்தோஷப்பட்டிருக்கிறது திரையுலகம்.

ஒருவகையில் கலைஞர் தமிழ்ச் சினிமாவுக்கு செய்திருக்கும் சாதனைகள் குறிப்பிடத்தக்கவைதான். போற்றப்பட வேண்டியவைதான். அந்த வகையில் இந்த விருதுகூட அவருக்குப் பொருத்தமானதுதான்.

இன்றுவரையிலும்கூட விடியற்காலை முதல் நள்ளிரவுவரையிலும் அவர் உழைக்கின்ற உழைப்பு அசாத்தியமானது. ஆனால் அந்த உழைப்பின் பலன் யாருக்குப் போய்ச் சேர்கிறது என்பதில்தான் அனைவருக்குமே பலத்த கருத்து வேறுபாடு.

ஆனாலும் கலைஞர் தமிழ்ச் சினிமாவில் செய்திருக்கும் எழுத்துப் புரட்சியை மறுப்பதற்கில்லை. 1947-ம் ஆண்டு முதன் முதலாக அவர் 'ராஜகுமாரி' என்ற படத்துக்கு கதை-வசனம் எழுதி தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார். இப்போது அவர் கதை, வசனம் எழுதி வரும் 'பொன்னர் சங்கர்' அவரது 74-வது கலைப் படைப்பாகும்.

இதை மனதில் கொண்டும், எந்த வகையிலாவது முதல்வரைச் சந்தோஷப்படுத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆவல் கொண்டும், முதல்வருக்கு அவர் மனம் குளிர ஒரு விருதையும் கொடுத்து தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டது பெப்ஸி அமைப்பு.

ஒரு பக்கம் இலங்கையில் ஈழத்து முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை இழிவாகப் பேசிய இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணனை சென்னையில் இருந்து வெளியேற்றும்படி இயக்குநர் சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இதே வேளையில்தான், கலைஞருக்கு இந்த விருது வழங்கும் விழாவும் நடந்தேறியிருக்கிறது.

பெப்ஸி என்றழைக்கப்படும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அகில இந்தியத் தொழிலாளர்கள் மாநாடு கடந்த 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக கலைஞருக்கு விருது வழங்கும்விழா கடந்த 9-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. பெப்ஸி அமைப்பில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் இந்த விழாவுக்குச் சென்றிருந்தேன்.

இந்த விருது வழங்கும் விழா கொஞ்சம் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது. காரணம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சமீப காலமாக ஈழப் பிரச்சினையால் முதல்வரோடு முரண்பட்டு நின்றிருந்த இயக்குநர் இமயம், இந்த விழாவுக்கு வருவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. நிகழ்ச்சி முன்னேற்பாடுகளில் அவருடைய தலை தெரியவில்லை என்றாலும், இயக்குநர் இமயத்தின் தளபதி அண்ணன் ஆர்.கே.செல்வமணி, விடுதலைப்புலிகளின் யூனிபார்மோடு எல்லா இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தது உண்மை. இருந்தாலும் நடுநிலைமையாளர்களுக்கு ஒரு நப்பாசை.. பாரதிராஜா போக மாட்டார் என்று...

ஆனால் விழாவின் துவக்கத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வின் ரத்தத்தின் ரத்தங்களான நடிகர்கள் விஜயகுமாரும், முரளியும் கலைஞரின் மருமகன் அமிர்தத்திடம் கொஞ்சிக் குலாவியதைப் பார்த்தபோது, நிச்சயம் பாரதிராஜாவும் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தேன். பொய்க்கவில்லை எனது நம்பிக்கை. மிகச் சரியான நேரத்தில் ஆஜரானார் இயக்குநர் இமயம்.

அவரவர்க்கு கஷ்டங்கள் வரும்போதுதானே அதிகாரத்தில் இருப்பவர்கள் துணை தேவை என்பதை நினைத்துப் பார்ப்பார்கள். அந்தவகையில், இதுநாள் வரையிலும் கலைஞரின் கோபாலபுரத்து வீட்டுப் பக்கம் தலைகாட்டிராத விஜயகுமார், இப்போது பத்திரிகைகளுடனான மோதல் சம்பவத்தில் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க நட்சத்திரக் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் கலைஞரை சந்தித்துவிட்டார்.

நடிகர் முரளியும் சப்தமில்லாமல் அம்மா கட்சியிலிருந்து ஒதுங்கி விலகி விட்டார் என்று சொல்கிறார்கள். இனிமேல் அதிகாரப்பூர்வமாக அம்மா கட்சியில் இருந்து 'கட்டம் கட்டிய' அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்போம். அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்த நடன இயக்குநர் ரகுராம், தற்போது கலைஞரின் பொன்னர் சங்கருக்கே டான்ஸ் மாஸ்டராக வந்துவி்ட்டதால் அவரும் தாவிவிட்டார் என்றே நினைத்துக் கொள்ளலாம். இனி அம்மா கட்சியில் மிஞ்சியிருக்கும் திரை நட்சத்திரங்கள் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனும், இயக்குநர் விசுவும், நடிகை விந்தியாவும்தான் என்று நினைக்கிறேன்..

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தண்டாரம்பட்டு வேலு, நெப்போலியன், பொன்முடி என்ற கூட்டணி வந்திருந்தாலும் கலைஞரின் குடும்பத்தினர் ஒருவரும் வராததன் மர்மம் என்ன என்றுதான் புரியவில்லை..


இயக்குநர் இமயமும், இயக்குநர் சிகரமும் இரு புறமும் அமர்வதை முதலில் நீங்கள் உறுதி செய்தால்தான் முதல்வர் வருகை உறுதியாகும் என்று அரசுத் தரப்பில் இருந்து முன்கூட்டியே ஒரு செல்லமான எச்சரிக்கை பெப்ஸி நிர்வாகிகளுக்கு வந்ததாக ஒரு கிசுகிசு. ஏனெனில் எதுக்கெடுத்தாலும் விருதா.. என்ற முணுமுணுப்பும், சினிமா விருதுகள் தொடர்பான முணுமுணுப்பும் கலைஞர் காதுவரை எட்டியதால்தான் இந்த கண்டிப்பு என்கிறார்கள் பத்திரிகை நண்பர்கள்.

விழா 4.30 மணிக்குத் துவங்கும் என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும், அப்படி குறித்த நேரத்தில் துவங்கினால் நிகழ்ச்சிக்கு மரியாதை இல்லையே என்பதினால் கொஞ்சம் தாமதமாக 5.15 மணிக்குத் துவங்கியது. கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. அழைப்பிதழ்கள் முதல் நாள்தான் ரெடியானதால் சில சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்கு சரிவர கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். கேலரியில் பல இடங்கள் காலியாக இருந்தது..

முதல்வர் வருகிறார் என்பதால் காவல்துறையினர் கெடுபிடியால் புகைப்படக்காரர்களின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. ஒருத்தரைக்கூட ஒழுங்காக படம் பிடிக்க முடியாமல் போய்விட்டதாக கடைசியில் புலம்பிக் கொண்டே சென்றார்கள் புகைப்படக் கலைஞர்கள்.

மேடையின் ஒரு புறம் ஆணி அடித்தல்.. பெயிண்ட் பூசுதல்.. போர்டுகளை அடுக்குதல் என்று வேலைகள் நடந்து கொண்டேயிருக்க, மறுபுறம் மிருதங்க வித்வான் திரு.உமையாள்புரம் சிவராமன் தனது குழுவினருடன் தனது இசைக் கச்சேரியை ஒரு கால்மணி நேரத்திற்கு நடத்திவிட்டு சப்தமில்லாமல் எழுந்து போனார்.

அகில இந்தியாவைச் சேர்ந்த சினிமா விழா என்பதால் ஹிந்தியில் இருந்து மகேஷ்பட், சுபாஷ்கய், நடிகர் ராஜேஷ்கண்ணா, தெலுங்கில் இருந்து டி.இராமாநாயுடு, தாசரி நாராயணராவ், கன்னடத்தில் இருந்து நடிகை ஜெயந்தி, நடிகர் துவாரகீஷ், மலையாள உலகத்தில் இருந்து மெகா ஸ்டார் மம்மூட்டி, இயக்குநர் சிபிமலயில்.. மேலும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், மணிப்பூர் மாநில சினிமாவுலகின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் மகேஷ்பட், ரஜினி, மம்முட்டி, கமல், இளையராஜா, பாரதிராஜா, கே.பாலசந்தர், தாசரிநாராயணராவ், டி.இராமாநாயுடு, ஏவி.எம்.சரவணன், ராஜேஷ்கண்ணா, சுபாஷ்கய், அகில இந்திய பெப்ஸி தலைவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.


நடிகை ஸ்ரீப்ரியா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மிகச் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே கலையுலகம், இதே நேரு ஸ்டேடியத்தில் இதே கலைஞருக்கு நடத்திய பாராட்டு விழாவின்போது, தனக்கு நேர்ந்த அவமானத்தால் அதன்பின் கலைஞர் சம்பந்தப்பட்ட விழா என்றாலே தலைவைத்துப் படுத்திராத ஸ்ரீப்ரியா, சமீபத்தில் பத்திரிகையாளர்களுடனான மோதலுக்குப் பின் வேறு வழியில்லாமல் கலைஞரின் கட்சிக்குத் திரும்பி வந்துவிட்டார்.

பத்திரிகையாளர்களின் புகார் மனுவில் முதல் பெயராக அவரே உள்ளதால் ஆட்சிக்கு நெருக்கம் காட்ட வேண்டி வந்திருப்பதாக காட்டமான பத்திரிகையாளர்கள் கூட்டம் முனங்கியது..

முதல் நபராக துதியை துவக்கி வைத்தார் இசைஞானி இளையராஜா.


பாடல் ஒன்றை ராகத்துடன் பாடி முடித்து தனது கடனை முடித்துக் கொண்டார். "தானாய் செதுக்கி, தானே கல்லாய், தானே உளியாய், தானே சிற்பமாய் உருவானவர் கலைஞர். நானும், நீயும் அவருக்கு என்ன செய்ய முடியும்..? மேலும் அவரது புகழ் பாடுவோம்" என்று புகழ் பாடினார்.

வரவேற்புரை நிகழ்த்த இப்போதைய 'கலையுலக பூசாரி' இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை அழைத்தார் ஸ்ரீப்ரியா.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்

"பேச்சு, எழுத்து, நிர்வாகம் இப்படி எதுவென்றாலும் அனைத்திலும் கலைஞர் முதல்வர்தான். பள்ளி பருவத்தில் எழுத தொடங்கியவர் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதற்காக எழுதிக்கொண்டு இருக்கிறார். வாழும் வரலாறாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டிற்கும், பாரத தேசத்திற்கும் நீங்கம் வழிக்காட்டியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கம். நான் வாழும் நாளும் சேர்த்து பண்ணன் வாழ்க.." என்றார்.

அடுத்துப் பேசிய பெப்ஸியின் தலைவர் வி.சி.குகநாதன் கலைஞரை 'விருதுக்கு அலைபவர்' என்று சொல்லியும், எழுதியும், கிண்டல் செய்தும் வருகின்றவர்களை ஒரு பிடிபிடித்தார்.

"இந்த விழா எடுப்பதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தேட வேண்டியது இல்லை. கலைஞரை உட்கார வைத்து பார்ப்பதற்கு எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதனாலேயே அவருக்கு நாங்கள் அடிக்கடி விழா எடுக்கிறோம். இதில் என்ன தவறு இருக்க முடியும்..?

விழா எடுக்கும் அளவிற்கு நிறைய சாதனைகளை நீங்கள் நிகழ்த்தி விட்டீர்கள். சாதனைகளுக்கே சாதனையாக நீங்கள் திகழ்ந்து வருகிறீர்கள். ஆனால் இதைக்கூட சிலர் கேலி செய்கிறார்கள். நலிந்த சினிமாவை தலை நிமிரச் செய்தவர் நீங்கள். உங்களுக்கு பட்டம் கொடுப்பது தவறா? அப்படியென்றால் அந்த தவறை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்போம்.

பராசக்தி படத்தில் 'நடைபாதைவாசிகள் நாடாள முடியாதா..?' என்று அப்போதே எழுதியவர் கலைஞர். அந்த வார்த்தைகள் இன்றைக்கு உண்மையாகிவிட்டது. ஈழத்து அகதிகளை நினைத்து அவர்களுக்காக கலைஞரிடம் பேசலாமா என்று நினைத்திருந்த நேரத்தில்தான், கலைஞரே 'அகதிகளுக்கு குடியுரிமை தர வேண்டும்' என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துவிட்டார். இப்படிப்பட்ட உண்மையான தலைவருக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்..

எங்கள் கஷ்டங்களை தெரிந்தவர்கள் நீங்கள். இப்போதுகூட உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். சினிமா தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நீங்கள் இடம் ஒதுக்கி தர வேண்டும். எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது..." என்று எதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்து பேச வருபவர்களை சுருக்கமாகப் பேசி முடித்துக்கொள்ளும்படி ஸ்ரீப்ரியா சொல்ல பெரியவர் திரு.ஏவி.எம். சரவணன் அவர்கள், இதையே சாக்காக வைத்து நான்கே வரிகளில் தனது சிற்றுரையை முடித்துக் கொண்டார்.

கூடவே, "சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வீடு கட்டும் காலத்தில் இருந்து முடியும்வரையிலும் மாதம் ஒன்றுக்கு ஒன்றே கால் லட்சம் ரூபாய் ஏவி.எம். நிறுவனம் சார்பில் நன்கொடையாக வழங்கப்படும்" என்று திடீர் அறிவிப்பையும் வெளியிட்டார். ஐயாவுக்கு எனது நன்றிகள்..

அடுத்து பேசிய தாசரி நாராயணராவ் தனக்குத் தமிழ் நன்கு தெரியுமென்றாலும் தான் தெலுங்கில்தான் மாடலாடப் போவதாகச் சொல்லி பாதி தெலுங்கு, காலவாசி ஆங்கிலம், கால்வாசி தமிழுமாகச் சேர்ந்து ஒரு காக்டெயில் கலக்கினார்.

இவரும் கடைசியாக 'பெப்ஸி ஊழியர்களுக்கு நிலம் வேண்டும்' என்ற எங்களது சங்க கோரிக்கையை முதல்வரிடம் முன் வைத்துவிட்டுச் சென்றார். இதை மட்டும் தமிழில் சொல்லி பலத்த கை தட்டலை அள்ளிக் கொண்டு சென்றார்.

நடிகர் விக்ரம் :

"தொழிலாளர்கள் இல்லாமல் நான் இல்லை. ஏனெனில் நானும் ஒரு தொழிலாளிதான். நடிகன் என்பதும் தொழிலாளி வர்க்கம்தான்..

எனக்கு தேசிய விருது கிடைத்த போது முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தவர் கலைஞர் ஐயாதான். அவர் போனில் பேசியவுடன் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. தடுமாறிப் போனேன்..

ஐயாவை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் கூர்மையானவை. காலத்திற்கு ஏற்றவாறு அமைந்து இருக்கிறது. தமிழக மக்களுக்காக நீங்கள் நிறைய செய்து இருக்கிறீர்கள். எங்களுக்கும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது..." என்றார்.

நிகழ்ச்சிகள் துவங்கிய பின்புதான் நடிகர் விவேக் அரங்கத்திற்குள் வந்தார். அவரைப் பேச அழைத்தவுடன் செம ரெஸ்பான்ஸ். தான் கையோடு கொண்டு வந்திருந்த பொன்னாடையை கலைஞருக்குப் போர்த்திவிட்டு தனது உரையைத் துவக்கினார்.

அனைவரையும் அரசியல் கட்சி பாணியில் 'அவர்களே' போட்டு அழைத்த விவேக் வழக்கம்போல ரஜினிக்கு மட்டும் நின்று, நிதானித்து பட்டப் பெயர்களைச் சூட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இரண்டு நாட்களாக தனது பெயர் பத்திரிகைகளில் பொரிகடலையாக வறுக்கப்பட்டதால், எடுத்த எடுப்பிலேயே கலைஞரை பத்திரிகைகளுடன் சம்பந்தப்படுத்தி தனது பேச்சைத் துவக்கினார் விவேக்.

"கலைஞர் சிறந்த பத்திரிகையாளர்.. பத்திரிகையாளர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கலைஞர்தான்.." என்றார். தான் நடிக்க வந்து 22 வருடம் கழித்து இப்போதுதான் முதல் முறையாக அவருடைய வசனத்தில் 'பொன்னர் சங்கரில்' நடித்துக் கொண்டிருப்பதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

அடுத்து ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணாவை பேச அழைத்தார்கள்.

அவருடைய கையில் பொன்னாடையை கொடுத்து கலைஞருக்கு போர்த்தச் சொல்ல.. அந்தப் பொன்னாடையை விரித்து அரங்கத்தில் இருந்த அத்தனை பேருக்கும் அப்படியும், இப்படியுமாக காட்டிவிட்டு முதல்வருக்குப் போர்த்தினார் ராஜேஷ்கண்ணா. என்ன கிண்டல் என்று புரியவில்லை..?

ஆனால் ராஜேஷ்கண்ணா பேச்சில் வெளுத்துக் கட்டிவிட்டதாக பிறகு ரஜினி தன் பேச்சில் தெரிவித்தார்.

ராஜேஷ்கண்ணா 'வணக்கம்' என்பதை மட்டும் தமிழில் ஆரம்பித்து பின்பு முழுக்க, முழுக்க ஹிந்தியில் பொளந்து கட்ட.. பாஷை புரியாமல் கூட்டம் அமைதி காத்தது. ஆனாலும் பின்பு கலைஞரைப் பாராட்டித்தான் பேசுகிறார் என்பது புரிந்து கை தட்டி தீர்த்தது.

ராஜேஷ்கண்ணாவின் ஹிந்தி பேச்சை தாசரி கலைஞரின் பி.ஏ. சண்முகநாதனுக்கு மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ராஜேஷ்கண்ணாவின் முழு பேச்சின் மொழி பெயர்ப்பையும் அன்று இரவே அறிந்து கொண்ட கலைஞர், மறுநாள் ராஜேஷ் கண்ணாவை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டி நன்றி தெரிவித்தாராம்.

அடுத்தது மெகா ஸ்டார் மம்முட்டி :

'நமஸ்கார்' என்று ஆரம்பித்த இவரும் தொடர்ந்து மலையாளத்தில் பொளந்து கட்ட ஏமாற்றமானது கூட்டம். "நான் மலையாள நடிகர் மட்டுமல்ல. தமிழ் நடிகரும்கூட. தமிழ் திரையுலகத்தினர் கொடுத்து வைத்தவர்கள். கலைஞரை பெற்று இருக்கிறார்கள். உங்களுக்கு தமிழ் என்றால் உயிர். தமிழக மக்களுக்கு நீங்கள் என்றால் உயிர்.." என்று அவரும் உடன்பிறப்பாக மாறினார்.

கடைசியில் ஸ்ரீப்ரியாவை கலாக்க வேண்டி, "என்னை சுருக்கமாக பேசச் சொன்னதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.." என்று தமிழில் சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்துப் பேச வந்தார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு.இராம.நாராயணன் :

"தாயினும் மேலாக என்னை வாழ வைத்து வரும் தங்கத் தலைவரே.. நீங்க நல்லா இருக்கணும்.. நாடு முன்னேற.." என்று எம்ஜிஆரின் பாடலைக் காட்டி வாழ்த்திவிட்டுப் போனார்.

அடுத்தது நடிகர் ராதாரவி :

"கலைஞருக்கு வாழ்த்துச் சொல்லி ரொம்ப நாளாச்சு.. சில சமயம் அடிபட்டாத்தான் தெரியும்.. எனக்கும் அப்படித்தான் தெரிஞ்சுச்சு.. தெளிஞ்சு வந்திருக்கேன்.." என்றார்.

பத்திரிகைகளுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு கமலஹாசனை நேரில் சென்று அழைத்தும், அவர் வராத கோபத்தை இங்கும் லேசுபாசாக குத்திக் காட்டினார் ராதாரவி.

"கலையுலகத்திற்கு ஒன்று என்றால் கலைஞர்தான் முன்னால் ஓடி வருகிறார். அவர் இருக்கிறார் என்பதால்தான் நாங்களும் தைரியமாக இருக்கிறோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட ஒரு கண்டனக் கூட்டம் நடிகர் சங்கத்துல நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு நிறைய கலைஞர்கள் வந்தும், பல கலைஞர்கள் வரவில்லை. என்றாலும் வராதவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கலைஞர் இருக்கிறார் என்பதால் நான் எதற்கும் கவலைப்படமாட்டேன்.

என்னுடைய அப்பா அவ்ளோ பெரிய வீட்டைக் கட்டி வைச்சிட்டுப் போயிட்டார். அதுல இருக்குற ஒவ்வொரு செங்கல்லும் இங்கே இருக்கிற தொழிலாளர்களின் உழைப்பால் கிடைத்தது. அதனை நானும், என் குடும்பமம் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டேன். அந்த நன்றிக் கடனைச் செலுத்தத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்.." என்றார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா :

"உலகத் தலைவரே.. தமிழனத்தின் தலைவரே.. பிறப்பால், இனத்தால், மொழியால், உறவால் ஓருடலான அந்த ஈழத்தமிழருக்காக இதுவரையிலும் மவுனம் காத்தேன். கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன். இதற்கு காரணம் அவர் மீது கொண்ட அன்புதான். இது அவருக்குப் புரியும்.

அவர் உலகின் சிறந்த சாதனையாளர். இலக்கியவாதி.. ஞாபகசக்தியில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. சிறந்த நிர்வாகி.. சிறந்த முதல்வர்.. எளிமையானவர்.. மனிதர்களை நேசிப்பவர்.. உங்களுடைய உழைப்பின் ரகசியத்தை தமிழகத்து இளைஞர்களிடம் சொல்லுங்கள்..

அவருக்கும் எனக்கும் தந்தை, மகன் உறவு. மகன் மீது அவருக்கு கோபம் இருக்கலாம். அது பற்றி அவரிடம் நான் தனியாக பேசி தீர்த்து கொள்வேன்.

உலகத் தமிழர்கள் நீங்கள் நிறைய செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நானும் நம்புகிறேன். நீர் உள்ள அளவு, நிலம் உள்ள அளவு நீர் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.." என்றார்.

அடுத்து கவிதை பாட வந்தார் கவிஞர் பா.விஜய் :

"கோபாலபுரத்து குடி கொண்ட கண்ணன் கீதை கொடுத்தான்.. என் அண்ணன் வீட்டையே கொடுத்திருக்கிறான்.." என்ற ரீதியில் கவிதை மழை கொட்டியது.. கடைசியில் "கலைஞரே நீர் ஒரு திரீஷா" என்று சொல்லி முடிக்க செம கலகலப்பு.. "இதுவரையில் 2000 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் எந்தவொரு கதாநாயகியையும் நான் இதுபோல் வர்ணித்ததில்லை.." என்று தன்னிலைவிளக்கம் கொடுத்துவிட்டுப் போனார்.

நடிகர் விஜய் :


"தமிழ்நாட்டையும், தமிழையும் நம்முடைய முதல்-அமைச்சர் எவ்வுளவு நேசிக்கிறாரோ அந்த அளவிற்கு சினிமாவையும் நேசிக்கிறார். இங்கு நடக்கும் விழாவில் ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே கலந்து கொண்டு இருக்கிறது. இது போன்ற விழாவை நான் இப்போதுதான் பார்க்கிறேன். இந்த தருணத்தை சந்தோஷமாகவே நான் உணருகிறேன்..." என்று தனது கீச்சுக் குரலில் பேசிவிட்டுப் போனார்.

'உலக நாயகன்' கமலஹாசன் :

"தமிழக முதல்வர் அவர்களே..!

எங்கள் திரையுலகத்திற்கும் முதல்வர் நீங்கள்தான்.. என்னுடைய உலகத்தில், நான் அறிந்த உலகினிலே எனக்கு தெரிந்த முதல் கலைஞன் நீங்கள்தான். இவை மேடை அலங்காரத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல. இது என் வாழ்க்கையின் நிஜம். இங்கே தயாரிப்பாளர் சரவணன் இருக்கிறார். அவர் என்னிடம் 'வசனம் பேச வருமா..?' என்று கேட்ட போது நான் பேசி காண்பித்த வசனம் உங்களுடைய வசனம்தான். அப்போது அது உங்களுடைய வசனம் என்றுகூட தெரியாத வயது எனக்கு. சொல்லி கொடுத்தார்கள். திருப்பிச் சொன்னேன். அதனால் ஒரு பதவி கிடைத்தது எனக்கு..

அதற்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடம் அழைத்து சென்று 'இந்தக் குட்டி பையன் கலைஞர் வசனத்தை பேசுகிறான்..' என்றார். உடனே அவர் என்னிடம் 'எவ்வளவு சொல்வாய்..?' என்றார். நான் அவரிடம் 'முழுவதுமாக சொல்கிறேன்' என்றேன். உடனே அவர், 'யப்பா எனக்கே கஷ்டம்ப்பா நீ எப்படி சொல்ல போற..?' என்றார். 'சொல்லிக் காட்டுகிறேன்..' என்றேன். உடனே அவர் 'எங்க சொல்லிக் காட்டு. பார்ப்போம்...' என்றார்.

ஏதோ என்னுடைய மழலை மொழியில் நான் சொன்னபோது என்னை அவர் மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். அவரது மடியில் ஏறி அமர காரணமாக இருந்தது உங்களின் வசனங்கள். பிறகுதான் தெரிந்துகொண்டேன் அவர் அரங்கேறக் காரணமாக இருந்ததே உங்கள் வசனங்கள்தான் என்று.

இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் வந்து இருக்கிறீர்கள். இது எங்களுக்கும் தெரியும். இதை சொல்லி எனக்கு பெருமை தேடிக்கொள்கிறேன். ஒரு நாள் என்னை வீட்டுக்கு அழைக்கிறீர்கள். 'கமல் நீ பத்மஸ்ரீ' என்றீர்கள். 'சரி ஐயா' என்றேன். அதன் பிறகு கொஞ்சநாள் கழித்து எனனை மீண்டும் அழைக்கிறீர்கள். 'நீ கலைஞானி' என்கிறீர்கள். 'சரி ஐயா' என்கிறேன்.

இப்படி படிப்படியாக எனக்கு என் உழைப்புக்கு மார்க் போடும் வாத்தியாராக இருந்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு புகழ் சேரும் போது உங்களிடம் மண்டியிட்டு என் பெருமையைச் சொல்லிப் புளகாங்கிதப்பட்டிருக்கிறேன். நீங்களும் அதற்கு இணையாக ஆனந்தப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மேடையில் சொன்னீர்கள். நான் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் ஆறி இருக்காது என்று. அது ஆறப் போவதில்லை.. அது என் மனதில் என்றும் ஈரமாக இருந்துகொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட உங்களுக்கு பட்டமளிக்கும் விழாவில் நான் என்ன பேசப் போகிறேன்..? எனக்கு பட்டமே நீங்கள்தான். எங்கள் பட்டமே நீங்கள்தான்..

வழக்கமாக இந்த மாதிரி விழாக்களில் உங்களுக்கு உங்களுக்கு பாராட்டுக்களை சொல்லி விட்டு எங்களுக்கு தேவையான குறைகளையும் அல்லது தேவைகளையும் சொல்வோம். அது நிறைவேற்றப்படும். உங்களை 'கோபாலபுரத்து கண்ணன்' என்று இங்கே பேசினார்கள். இப்படி அவலை அள்ளி அள்ளித் தந்து கொண்டிருக்கிறீர்கள். யாருமே தடுக்க ஆளில்லை. ஏனென்றால் முடிவு செய்வது நீங்கள்தான். உங்கள் கஷ்டம்.. நீங்கள் நல்லது செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இப்போதுகூட சமீபத்தில் எனக்கு ஒரு புதிய பதவி. 'பிக்கி பிரண்ட்ஸ்' என்று. மும்பையில் மட்டுமே நடந்து கொண்டிருந்த ஒரு தொழில் ஆய்வு, நிகழ்வு இங்கும் நடக்க நாங்கள் போராடிப் பெற்று அதற்கு என்னை சேர்மன் என்று நியமித்தார்கள். அந்தப் பட்டத்தையும் உங்களிடம்தான் முதலில் வந்து காட்டினேன். அந்த விழாவுக்கும் நீங்கள் வர வேண்டும் என்று அழைக்க வந்தேன். இங்கு இருக்கும் அரங்கத்தில் பலர் அங்கும் இருப்பார்கள். உங்களைப் பாராட்ட இப்படி பல அரங்குகள் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த அரங்கத்தில் மற்றவர்கள் பாராட்ட, இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்கும் அருகதை மட்டுமே எனக்கு இருக்கிறது.." என்றார்.

(அண்ணன் கமலஹாசனின் இந்த ஒப்புதல் பேச்சின் மூலம் பத்மஸ்ரீ விருதுகளெல்லாம் எங்கிருந்து, யாரால், எப்படி, எதற்காக கொடுக்கப்படுறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.)

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் :

"இந்தித் திரைப்பட நடிகர் ராஜேஷ்கண்ணா அவர்களே.. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மேடையில் உங்களை நான் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மும்பையில் நான் உங்களோடு இருன்த காலத்தில் பழகியதையெல்லாம் மறந்துவிடவில்லை. என்னிடம் காட்டிய அன்பையும், பரிவையும் நான் மறந்துவிடவில்லை. நீங்கள் பேசுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த அளவுக்கு உரை நிகழ்த்துவீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு என் பாராட்டுக்கள். (இதை மட்டும் ராஜேஷ்கண்ணாவுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் சொன்னார்)

இங்கே எல்லாத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறீர்கள். தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகள் இல்லை. முதலாளிகளுக்கு பலவிதமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொழிலாளிகளிலே ஒரே விதமானவர்கள்தான் உண்டு. அதுதான் உழைக்கும் வர்க்கம்.

கிடைக்கிற லாபத்தில் 100 சதவீதத்தையும் எடுத்துக்கிற முதலாளி 'கொள்ளைக்கார முதலாளி'. 75 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 25 சதவீதத்தை தொழிலாளிகளுக்கு கொடுக்கிறவன் 'திருட்டு முதலாளி'. 50 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 50 சதவீதத்தை கொடுக்கிறவன் 'வியாபாரி முதலாளி'. 25 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 75 சதவீதத்தை தொழிலாளிகளுக்கு கொடுக்கிறவன் 'மகா முதலாளி'. 100 சதவீதமும் கொடுக்கிறவன் 'ஆண்டவன்' மட்டும்தான். நீங்க மகா முதலாளியும் ஆக வேண்டாம். கொள்ளைக்கார முதலாளியும் ஆக வேண்டாம். திருட்டு முதலாளியும் ஆக வேண்டாம். 50 சதவீதம் தொழிலாளிகளுக்கு கொடுங்க. நானும் தொழிலாளியாக வந்து முதல்வரிடம் இடம் கேட்கிறேன். (இந்த ஒரு பாரா மட்டும் 'முரசொலி'யில் வெளியான ரஜினியின் பேச்சில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

ஜெயலலிதா ஒருமுறை ஒரு இடத்தை உங்களுக்கு கொடுத்தாங்க. ஆனா நீங்க அதை கைவிட்டுட்டீங்க. அது இப்ப டைமண்ட். இப்போது இடத்தை தள்ளிக்கொடுத்தாகூட அதை நீங்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள். வாங்கிக்குங்க..

இங்க கலைஞருக்கு பாராட்டு விழா. அவருக்கு விருது கொடுத்து இருக்காங்க. அவருக்கு என்ன விருது கொடுத்திருக்காங்க. கலை சேவைக்காக இங்கே எல்லோரும் அவரை பாராட்டியிருக்காங்க.

'மாற்றான் வீட்டு தோட்டத்து மல்லிகை பூவிற்கும் மணம் உண்டு' என்று சொன்ன தலைவர், அந்த தலைவன் போட்ட தோட்டத்துக்கு ஒரு காவலாளியாக இருந்து, வேலியாக இருந்து தோட்டக்காரனா இருந்து எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வலிகள், எத்தனையோ துன்பங்களைத் தாண்டி அந்த தோட்டத்தை நல்ல வனமாக்கி பெரிய பெரிய அரசியல் கட்சிகளே வந்து இந்த தோட்டத்தில் வந்து அமர செய்தவரை நான் எப்படி பாராட்ட? அந்த அண்ணா விட்டுப் போன கழகத்தை எப்படி வளர்த்து இருக்கீங்க..! அதற்கு என்ன மூலதனம்..? என்ன ஆணிவேர்? அது உங்களுடைய எழுத்தில்லையா? உங்களுடைய பேனா இல்லையா..?

இங்கே பேசியவர்கள் எல்லாம் உங்களுடைய 'பராசக்தி பத்தியே பேசுறாங்க... பேசுறாங்க..' என்றால் எதனால்? கம்பரைப் பற்றிபேசும்போது ராமாயணத்தைப் பற்றிதான் சொல்லமுடியும். வள்ளுவரை பத்திபேசும்போது குறளை பற்றிதான் சொல்லமுடியும். கலைஞர்ன்னா 'பராசக்தி' பற்றிதான் பேசுவோம். ஏனென்றால் பராசக்தி படம் இல்லை.. பாடம். சமுதாயத்தில் புரட்சி உண்டாக்கிய படம் 'பராசக்தி'.

மனோகரா திரைப்படம் எடுக்கும்போது கலைஞரே சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தில் மனோகரன் இரும்புச் சங்கிலியை உடைத்து வெளியே அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் அவர்கள் எல்லாம் கலைஞர்களிடம் சொன்னார்களாம். இரும்புச் சங்கிலியை உடைத்துவிட்டு வருவது மனித சக்தியால் முடியாது. கடவுளிடம் பிரார்த்தனை செய்யணும். கடவுளிடம் முறையிடுவது போல ஒரு பாட்டை போட்டு, கடவுள் சக்தியாலே அந்த இரும்புச் சங்கிலியை உடைத்துவருவது போல காட்சியமைக்கலாம் என்று கலைஞரிடம் சொன்னபோது, கலைஞர் சொன்னாராம், "அந்தக் கடவுள் சக்தி என்ன கொடுக்கிறது? அதை நான் எழுத்தில் கொடுக்கிறேன்.." என்றாராம்.

என் எழுத்திலே கொடுக்கிற கடவுள் சக்தியை என் மனோகரா படத்தில் ஒவ்வொரு வசனத்திலும் கொடுக்கிறேன் என அந்தச் சக்தியை கொடுத்தார். அந்த வசனத்தை கண்ணாம்பா பேச கலைஞர் எழுதிய வசன வார்த்தைகள் வந்து விழும்போது அந்த இரும்புச் சங்கிலி தானாக உடைஞ்சுபோச்சு. ஜனங்க அதை பார்த்தாங்க. ஆமாம்.. அந்த சக்தி அந்த இடத்தில் வந்துவிட்டது. அந்த மாதிரி அவர் எழுதுகோலை செங்கோலாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. நீங்கள் ஒரு மிகப் பெரிய சாணக்கியர். உண்மையைத்தான் சொல்கிறேன்.. நான்கூட லேட்டாதான் புரிஞ்சுக்க முடிஞ்சது..

கலைஞர் இப்படி உழைக்கிறார்.. இப்படி உழைக்கிறார் என்று பேசுகிறார்கள். அதிலே பெரிய அர்த்தம் இருக்கிறது. ஒரு தலைவர் பறந்து போனால் தொண்டன் ஓடி வருவான். தலைவர் ஓடி வந்தால் தொண்டன் நடப்பான். தலைவர் நடந்தால் தொண்டன் உட்காருவான். தலைவர் உட்கார்ந்தால் தொண்டன் தூங்கிருவான். தலைவர் தூங்கிவிட்டால், தொண்டன் காணாமல் போய்விடுவான். தொண்டனுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள். தொண்டனாக ஓடி, ஓடி உழைக்கிறீர்கள். அப்படி ஓடி ஓடி உழைக்கும்போது உங்களுக்கு ஓய்வு வேண்டும். அதுதான் உங்கள் எழுதுகோல். உங்கள் எழுத்து.. அந்த எழுத்துக்காக இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்..."

என்று சொல்லித் தன் உரையை முடித்துக் கொண்டார் ரஜினி.

நிகழ்ச்சிகளின் இடையிடையே...

ஆந்திரா

மேற்குவங்கம்


கர்நாடகா

மும்பை

ஆகிய மாநில சம்மேளன நிர்வாகிக கலைஞருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் சார்பில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், விக்ரமன், தரணி, எழிலன், பார்த்திபன்


நடிகர்கள் சங்கம் சார்பில் ராதாரவி, விஜய், விக்ரம், விஷால், கார்த்திக், சந்திரசேகர், விஜயகுமார்

நடிகைகள் சார்பில் திரிஷா, சுனைனா,

இராம.நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர்கள்

உட்பட ஏராளமானவர்கள் கலைஞருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

தொடர்ந்து பெப்ஸியின் அகில இந்திய நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து "கலை உலகப் படைப்பாளி" என்று பட்டத்தை 1001-வது பட்டமாக வழங்கினார்கள்.

மாநாட்டு சிறப்பு மலரை சினிமா கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து வெளியிட, அதனை கலைஞர் பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றினார்.

கலைஞர் மு.கருணாநிதி :

"இங்கு தம்பி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசும்போது, 'கடந்த கால ஆட்சியில் வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போதாவது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். நான் அந்த நிலத்தை பற்றி எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் எப்போது வரும் என்று என்னால் ஆரூடம் கணிக்க முடியாது.

ஆனால் கடந்த சில நாட்களாக தம்பி குகநாதனும், மற்ற நண்பர்களும் என்னை சந்தித்து, இந்த நிகழ்ச்சிக்கு முன்பே திரைப்பட தொழிலாளர்களுக்கு வாழ வீடு, வசிக்க குடில் தேவை என்பதை வற்புறுத்தி சொல்லியிருக்கின்றார்கள். அது என்னுடைய இதயத்தில் சிறிதளவும் மாறாமல் மறக்க முடியாமல் பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றி அவர்களுடைய முகத்தில் எல்லாம் புன்னகையை வரவழைப்பதுதான் என்னுடைய கடமை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இதைப்பற்றி சொல்ல வேண்டுமேயானால், ஆந்திரத்திலே திரைப்படத் தொழிலாளர்களுக்காக சித்திரபுரி என்ற ஒரு பகுதியை 'ஆந்திர பிரதேஷ் சினி ஒர்க்கர்ஸ் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட்' என்ற நிறுவனத்தின் மூலமாக மிக அழகான வீடுகளை கட்டி பலரும் வாழ்வதற்கு ஏற்ப வசதிகள் செய்து ஐதராபாத் மணிகொண்டா என்ற இடத்தில் பிரபாகர் ரெட்டி சித்திரபுரி அமைக்கப்பட்டு அதனுடைய மாடலை சிலர் நேற்று என்னிடத்தில் காட்டினார்கள்.(அந்த மாடலை மேடையில் காட்டினார் கலைஞர்)

இதைப் பார்த்தவுடன் நான் அவர்களிடத்திலே சொன்னது இதைப் போல நம் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டில் கட்டித் தரலாமே என்று சொன்னேன். இதில் எனக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு உதாரணமாகத்தான், சொன்னதோடு நிற்காமல் இதை இங்கே கொண்டு வந்து, குகநாதனிடமும் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் தலைவர்களிடத்திலும், திரைப்படக் கலைஞர்களிடத்திலும் காட்ட வேண்டுமென்பதற்காகவே வீடுகள் அடங்கிய அந்தப் புகைப்பட அட்டையை எடுத்துக்கொண்டு வந்தேன்.

இதை நான் உங்களிடம் இப்போது காட்டியிருக்கிறேன். அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு - சில காலத்திற்குப் பிறகு, இன்னொரு தேர்தல் வருவதற்கு முன்பேயே(கலைஞர் கொஞ்சம் இடைவெளிவிட.. கூட்டம் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்து ஓய்ந்தது) - 'சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்' என்ற அந்த என்னுடைய முழக்கத்தை- மெய்ப்பித்துக் காட்டி - அந்த இல்லங்களின் திறப்பு விழா இன்றைக்கு இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற அத்தனை பேரையும் கொண்டு - இவர்களையெல்லாம் அழைத்து - இதே இடத்தில் நடைபெறும் என்பதையும் - அந்தத் திறப்பு விழாவிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும் என்பதையும் இப்போதே அழைப்பாக நான் விடுக்க விரும்புகிறேன். வெகு விரைவில் இந்த கட்டிடங்கள் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

'சித்திரபுரி' என்ற பெயருடன் இங்கும் அமையுமா என்று கேட்பீர்களேயானால், 'சித்திரம்' வடமொழி என்பதால், அதற்குப் பதிலாக 'ஓவியம்' போன்றதொரு சொல்லைப் பயன்படுத்தி - ஓவிய உலகமாக அதனை அமைத்து - அதிலே என்னுடைய அருமைத் தொழிலாளர்களை அமரவைத்து அழகு பார்க்கின்ற காலம் விரைவில் வந்தே தீரும் என்பதை நான் தெரிவித்துக்கொம்கிறேன். இதற்கு நீங்கள் எதுவும் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது நன்கொடை வழங்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி கேட்கத் தேவையில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 'மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை' நீங்கள் அறிவீர்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் - ஒரு இன்சூரன்ஸ் திட்டம். இன்சூரன்ஸ் திட்டத்திற்கு 'பிரிமியம்' கட்ட வேண்டும். யார் இன்சூரன்ஸ் செய்துகொள்கிறார்களோ, அவர்கள்தான் அந்த பிரிமியத்தைக் கட்ட வேண்டும்.

இப்படி கட்டினால், அவர்களுக்கு தீராத நோய் அல்லது உயிர் கொல்கின்ற நோய் வரும் போது - அதற்குரிய செலவினை இந்த இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டு - அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பிரிமியத் தொகையை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு அவர்களை காப்பாற்றுகின்ற திட்டத்திற்குப் பெயர்தான் கலைஞர் காப்பீட்டு திட்டம்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 4000 அல்லது 5000 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளெல்லாம் நடைபெற்று அவர்களெல்லாம் நலமோடு இருக்கிறார்கள் என்ற செய்தியை உங்களுக்கு நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த திட்டம் ஆந்திராவிலே இருப்பதாக இங்கே பேசிய நம்முடைய தாசரி என்னிடத்திலே சொன்னார்கள். அந்த திட்டத்திற்கு பிரிமியம் - ஒவ்வொரு பயனாளியும் கட்ட வேண்டும். ஆனால் இந்த திட்டத்திலே - தமிழகத்திலே அந்த பிரிமியம் தொகையை அரசே கட்டிவிடும் என்று திட்டம் வகுத்து அது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆண்டு ஒன்றுக்கு 572 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தொழிலாளர்களின் உயிர் காத்தல் மட்டும் போதாது, உயிர் காக்க அவர்களுடைய உடைமைகளையும் காக்க வேண்டும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவர்களுடைய உறையுளும் காக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட உறையும் அமைய நிச்சயமாக என்னுடைய தலைமையிலே உள்ள தி.மு.க. அரசு பாடுபடும் என்ற வாக்குறுதியை இவ்வளவு பேர் மத்தியிலே பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியிலே என்று மாத்திரம் சொல்ல மாட்டேன் - இந்திய மக்கள் மத்தியிலே இன்றைக்கு நான் சொல்லியிருக்கின்றேன்.

நான் கடந்த சில நாட்களாக மதுரையில், கோவையில், திருச்சியில் பேசும்போது - எங்கம் கட்சி இப்போது வளருகின்ற வேகத்தைப் பார்த்தால் விரைவில் இது தேசிய இயக்கமாக மாறும் என்று சொன்னேன். முதன் முதலாக கலையுலகத்திலே நாங்கள் தேசிய இயக்கமாக மாறி இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த விழா இங்கே நடைபெறுவதாக நான் அறிகின்றேன்.

இந்த தேசியத்தில் எவ்வளவு இனிமை இருக்கிறது. இந்த தேசியத்தில் எவ்வளவு கலை உணர்வு இருக்கிறது, நான் ராஜேஷ் கன்னாவின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அவரிடம் ஒரு தனி அபிமானம் உண்டு. இன்றைக்கு அவருடைய பேச்சைக் கேட்கும் போது அவரா, இவர் என்று பாரதிராஜாவைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். காரணம் அந்த அளவிற்கு வயது முதிர்ந்திருந்தாலும், முதுமை அவரைத் தாக்கியிருந்தாலுங்கூட, அந்த குரல் இன்றைக்கும் என்னுடைய நண்பர் சிவாஜியின் குரலாகவே இருப்பதைப் பார்த்தேன்.

அத்தகைய ராஜேஷ்கன்னாக்களை இன்று மலையாளத்திலே பிரபல நட்சத்திரமாக விளங்குகின்ற மம்முட்டியை இங்கே சந்திக்கும் இந்த நேரத்தில் - நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

ரஜினிகாந்தை, கமல்ஹாசனை பற்றியெல்லாம் நான் கூற வேண்டாம். அவர்களைப் பற்றி நான் சொல்வது - என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொள்வதைப்போல! அப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி நீ வேறுபடுத்தி புகழ்கிறாயா என்று யாரும் எண்ணிக் கொள்ளக் கூடாது. என்ன இருந்தாலும் அவர்கள் என்னுடைய உணர்வோடு-என்னுடைய உறவாக-தமிழகத்திலே-திரையுலகத்திலே-அந்த நட்பின் சின்னங்களாக அவர்கள் விளங்குகின்றார்கள்.

கமல்ஹாசன் ஆனாலும், ரஜினிகாந்த் ஆனாலும் அவர்களெல்லாம் இன்றைக்கும் கலை உலகத்திலே இரு கண்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மற்றவர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது. உடல் என்றால் கண்கள் மாத்திரமல்ல, வேறு பல முக்கிய அவயங்களும் இருக்கின்றன. அந்த அவயங்களை நான் சொன்னதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோரும் ஒருமித்த கருத்தோடு-அந்த உணர்வோடு இங்கே கூடி இந்த விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இங்கே நான் இரண்டு அறிவிப்புகளை செய்ய வேண்டுமென்று வந்தேன்.

முதல் அறிவிப்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், விரைவில் கட்டித் தரப்படும் என்று சொன்னேன். என்ன திடீரென்று சொல்கிறாய் என்று நினைக்கக் கூடாது. காலையிலே நிதித்துறை செயலாளரை அழைத்துப் பேசி பணம் ஒதுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடக்கூடாது.

இதற்கான இடத்தை பார்க்க வேண்டியது குகநாதனின் வேலை. திரைப்படத் தொழிலாளர்களின் வேலை. அந்த பணியினை அவர்கள் ஆற்றினால் உடன் இருந்து அதை நிறைவேற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இன்னொன்று-தமிழகத்திலே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கம் உருவாக்கப்பட்டு-அந்த வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் - தமிழ்த் திரையுலக வளர்ச்சியிலும், அதன் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் தங்களது உழைப்பை நாளும் அளித்திடும் கலை உலகத்தினருக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழ் திரை உலகின் சார்பிலும் தம்பி ராதாரவி அளித்த கோரிக்கையினை ஏற்று - இந்த அரசு சின்னத்திரை துறையினருக்கும் சேர்த்து - திரைப்படத் துறையினர் நலவாரியம் ஒன்றை புதிதாக உருவாக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழைத்தீர்கள்; வந்தேன். விருது வழங்கினீர்கள். இந்த விருதினை வழங்கும்போது குகநாதன், 'உனக்கென்ன, விருது ஒரு கேடா..?' என்று யார் யாரோ கேட்டதாக சொன்னார். நான் அப்போதே பாரதிராஜாவிடம் சொன்னேன் - வேண்டாம் என்று..! 'சொன்னவர்களைப் பற்றியெல்லாம் இங்கே சொல்ல வேண்டாமே?' என்றேன். இருந்தாலும் அவர் பேசிவிட்டார்.

நான் எப்போதும் இது போன்ற விமர்சனங்களை பற்றி விமர்சிப்பது எனக்கு வழக்கம் இல்லை. அப்படி விமர்சிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால், பெரியார் படாத பாடா? காமராஜர் படாத பாடா? அண்ணா படாத பாடா? இவர்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, இன்னும் பாக்கியிருக்கின்றது நமக்கு படவேண்டிய பாடுகள் என்று எண்ணிக் கொள்வேனே தவிர, அதற்காக நான் வருத்தப்படமாட்டேன்.

அப்படியே எனக்கு வருத்தம் இருந்தாலும், நீங்கள் தருகின்ற இந்த மகிழ்ச்சி - நீங்கள் வழங்குகின்ற இந்த விருதுகள் எல்லாம் - அந்த வருத்தத்தைப் போக்க வல்லவை. போக்கக்கூடிய மருந்துகள் என்பதை நான் மிக மிக நன்றாக அறிவேன். இந்த மருந்தை எனக்களித்து என்னுடைய பயணத்திலே களைப்பு ஏற்படாமல் என்னை நடக்கச் செய்கின்ற உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை-ஆயிரமாயிரம் நன்றியை உங்கம் காலடியிலே குவித்து விடைபெறுகிறேன்..."

என்று சொல்லித் தனது பேருரையை முடித்துக் கொண்டார்.

கலைஞரின் பேச்சுக்குப் பிறகு கலைஞர்கள் விடைபெற்ற சமயத்தில் பாரதிராஜாவை தனியே பிடித்து உலுக்கியெடுத்துவிட்டார் அண்ணன் கமலஹாசன். தனக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தது ஏன் என்று மேடைக்கு கீழே நின்றவர்களுக்குக் கேட்கின்ற அளவுக்கு சப்தமிட்டு கமல் கேட்க.. கமலை என்னென்னவோ கூல்செய்து பார்த்தும் முடியாமல் கமல் முறைத்தபடியே நிற்க.. அப்படியே கமலை கட்டியணைத்து கன்னத்தில் ஒரு கிஸ் கொடுத்து சமாளித்தார் பாரதிராஜா.

கலைஞரால் ஒன்றரை மணி நேரம்தான் உட்கார முடியும்.. அதற்குள்ளாக விழாவை நடத்தி முடித்துவிடுங்கள் என்று முதல்வரின் மருத்துவர்கள் முதல் நாளே கண்டிப்பான உத்தரவை விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்திருந்ததால், எப்போதும் விழாவின் துவக்கத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், இந்த விழாவில் தலைகீழாக கடைசியில் நடைபெற்றது.

பேசி முடித்ததும் பெருந்தலைகள் அனைத்தும் சென்றுவிட ரசிகர்கள் கூட்டத்திற்காக மட்டுமே கலைநிகழ்ச்சிகள் நடந்தேறின.

கலை நிகழ்ச்சிகள் அனைத்துமே கலைஞர் டிவியின் Concept என்பதால் அத்தனையும் கலைஞர் புராணங்களை பாடின. இந்தக் கொடுமையால் சீக்கிரத்தில் கூட்டம் கலையத் துவங்க.. கலை நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனதென்னவோ உண்மைதான்..

கலைஞரின் இந்த நிலம் பற்றிய பேச்சால் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பு கூடியிருக்கிறது. நன்றிப் பெருமூச்சுக்களால் கோடம்பாக்கம் மூச்சுத் திணறிப் போயிருக்கிறது.

இந்த இடத்தில் நானும் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவன் என்பதால் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. தொழிலாளர்கள் என்பவர்கள் தினம்தோறும் 300 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள்தான் என்பதால், அவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இடம் பார்க்க வேண்டிய வேலை பெப்ஸியின் தலைவர் குகநாதனின் பொறுப்பு என்று முதல்வர் சொல்லிவிட்டதால், பெப்ஸியின் நிர்வாகிகளும், பெப்ஸியில் இணைந்துள்ள சங்கங்களின் நிர்வாகிகளும் இடம் தேடி சென்னை புறநகர்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

நேரு ஸ்டேடியத்தைவிட பத்து மடங்கு பரப்பளவுள்ள இடம் எங்களுக்காக தேவை..

பதிவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அந்த அளவுக்கு பெரிய புறம்போக்கு இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்.. இடம் தேர்வானால், பதிவர்களையும் 'கொஞ்சூண்டு' கவனிக்க ஏற்பாடு செய்கிறேன்..

நிறைய வேலைகள் இருந்ததால், உடனுக்குடன் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்..

பொறுமையாக கடைசிவரை படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள் காணிக்கையாகட்டும்..!