தியா - சினிமா விமர்சனம்

29-04-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரை தன் படத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததால் பெயர் பிரச்சினை சர்ச்சையானது. உச்சநீதிமன்றம்வரையிலும் பிரச்சினை சென்றது.
இடையில் தங்களுடைய பெயர் அதிலிருந்து வித்தியாசமானது என்பதைக் காட்ட படத்தின் தலைப்பை ‘லைகாவின் கரு’ என்றுகூட மாற்றினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இதற்கும் தடை விதித்துவிட்டது.
படத்தை வெளியிடும் நாள் நெருங்கிவிட்டதால், வேறு வழியில்லாமல் படத்தின் நாயகியான ‘தியா’வின் பெயரையே படத்தின் தலைப்பாகவும் மாற்றி வைத்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் மலையாள ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நாயகியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுவேயாகும். சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நாக ஷவ்ரியா ஹீரோவாக நடித்திருக்கிறார்.
மற்றும், ஆர்.ஜே.பாலாஜி, நிழல்கள் ரவி, ஜெய்குமார், ரேகா, சுஜிதா, குமாரவேல், டி.எம்.கார்த்திக், சந்தானபாரதி இவர்களுடன் பேபி வெரோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – விஜய், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இசை – சி.எஸ்.சாம், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத் தொகுப்பு – ஆண்டனி, வசனம் – அஜயன் பாலா, பாடல்கள் – மதன் கார்க்கி, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், ஆடை வடிவமைப்பு – வினையா தேவ், சப்னா ஷா, எக்ஸ்கியூட்டிவ் புரொடியூஸர் – எஸ்.பிரேம், தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, தயாரிப்பு மேலாளர் – எஸ்.எம்.ராஜ்குமார், ஒலிப்பதிவு – எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், ஒப்பனை – பட்டணம் ரஷீத், உடைகள் – மோதபள்ளி ரமணா, ஸ்டில்ஸ் – ராமசுப்பு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, வி.எஃப்.எக்ஸ் – சரவணன் சண்முகம், ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.சிவசரவணன், பிரத்தியுஷா, விளம்பரம் – ஷ்யாம், விளம்பர வடிவமைப்பு – முகில் டிசைன்ஸ், பாடகர்கள் – ஸ்வாகதா, டி.எம்.கார்த்திக்.

“கருக் கலைப்பு செய்வது பாவச் செயல். அது எத்தகைய தருணத்தில் உருவான கருவாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிரே…” என்பதை போதிக்க வந்திருக்கிறது இத்திரைப்படம்.
2011-ல் வெளிவந்த தாய்லாந்து நாட்டு படமான ‘Unborn Child’ என்கிற படத்தைத் தழுவித்தான், இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது படத்தைப் பார்த்தால் புரிகிறது. தெரிகிறது.
துளசியும், கிருஷ்ணாவும் பள்ளிப் படிப்பை முடித்த நிலையிலேயே காதலிக்கிறார்கள். நெருங்குகிறார்கள். இதன் விளைவாய் துளசியின் வயிற்றில் கரு வளர்கிறது. விஷயம் தெரிந்து துளசியின் அம்மாவும், அவளது தாய் மாமனும் கொதிக்கிறார்கள். அதேபோல் கிருஷ்ணாவின் அப்பாவும், அம்மாவும் மகனைக் கண்டிக்கிறார்கள்.
ஆனாலும் அடுத்து ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம் என்று யோசிக்கும்போது படிக்க வேண்டிய வயதில்.. அதுவும் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும் சூழலில் துளசி பிள்ளை பெறக் கூடாது என்று சொல்லி அவளது கருவை அவளது அனுமதியில்லாமலேயே கலைக்கிறார்கள் இரு தரப்பு பெரியோர்களும்.
ஆனாலும் துளசிக்கும், கிருஷ்ணாவுக்கும் இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து திருமணம் செய்து வைப்பதாகவும் இரு தரப்பு பெற்றோர்களும் வாக்குறுதி அளிக்கிறா்கள். அதேபோல் கல்யாணமும் செய்து வைக்கிறார்கள்.
இ்ப்போது துளசி மருத்துவர். கிருஷ்ணா சிவில் என்ஜீனியர். துளசி தன் மனதுக்குள் தனக்குள் முதல் கருவாய் வளர்ந்திருந்த குழந்தை நினைப்பிலேயே இருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு ‘தியா’ என்று பெயர்கூட வைத்திருக்கிறாள்.
துளசியின் மனக்கண்ணிலேயே இருந்த அந்த ‘தியா’.. இப்போது பேயாய் மாறி குழந்தை உருவத்தில் அவளை பின் தொடர்கிறது. தான் தனது அம்மாவுடன் இருக்க முடியாமல் செய்தவர்களைப் பழி வாங்க முடிவெடுக்கிறது.
இதன் முதல் பழியாய் கிருஷ்ணாவின் தந்தை சிக்கி உயிரிழக்கிறார். இதன் பின்பு துளசியின் தாய் கொல்லப்படுகிறார். அடுத்து துளசியின் தாய் மாமனும் கொல்லப்படுகிறார். அடுத்து தனது கணவன் கிருஷ்ணாதான் கொல்லப்பட இருக்கிறான் என்பதை யூகிக்கும் துளசி இதனை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் அவர் ஜெயித்தாரா..? கிருஷ்ணாவை பேய் விட்டுவிட்டதா..? என்பதுதான் படத்தின் கதை.
குழந்தைகளை வைத்து பேய்ப் படம் என்றாலும் அதில் சஸ்பென்ஸ் இருக்க வேண்டும். இதில் கொலை செய்வதே பேய்தான் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதால் படத்தின் மீதான சுவாரஸ்யமே போய்விட்டது. அதிலும் எப்படி சாகிறார்கள் என்பதைக்கூட கொஞ்சமும் சுவாரஸ்யப்படுத்தாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே படம் சஸ்பென்ஸ், திரில்லர் கேட்டகிரிக்குள் வரவேயில்லை.
‘பிரேம’த்தில் பார்த்து பிரேமம் கொண்ட சாய் பல்லவியை இதில் கொஞ்சம் மெச்சூர்டான அம்மா கேரக்டரில் பார்க்கும்போது எதுவும் தோன்றவில்லை. ஆனால் அழகாக நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் எமோஷனாலான காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாய் பல்லவிக்கே உரித்தான காட்சிகளை வைக்க முடியாத அளவுக்குக் கதைக் களன் இருப்பதால், அதுவே அவருக்கு மைனஸாகிவிட்டது.
ஹீரோவாக நாக சவுரியா நடித்திருக்கிறார். தமிழுக்கு புதுமுகம். ஹீரோவுக்கு ஏற்ற முகம் என்றாலும் இதில் ஆக்சனும் இல்லை.. நடிப்பும் இல்லாமல் சுமாரான காட்சிகளே இவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் மென்மையாக நடித்திருக்கிறார்.
படத்தில் நடித்த மற்றவர்களான நிழல்கள் ரவி, ரேகா, ஜெயக்குமார், சுஜிதா என்று நால்வருமே அந்தந்த கேரக்டர்களுக்குரிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியான காட்சிகளும், திரைக்கதையும் இல்லை என்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை.
குழந்தை தியாவாக நடித்திருக்கும் பேபி வெரோனிகாவுக்கு வசனமே இல்லை. ஆனால் முகத்தைக் காட்டியே நடித்திருக்கிறார். அந்த வெறுமை காட்டும் முகம் சோகத்தைக் காட்டியும், கொஞ்சம் ஏக்கத்தைக் காட்டியும் இருக்க.. குழந்தை வரும் காட்சிகளிலெல்லாம் கொஞ்சம் பரிதாபம் நமக்குள் எட்டிப் பார்க்கிறது என்பது மட்டும் உண்மை.
காமெடி சப்-இன்ஸ்பெக்டராக ஆர்.ஜே.பாலாஜியும், கான்ஸ்டபிள் குமாரவேலும் செய்யும் கூத்து ரொம்பவே ஓவர். இப்படியொரு அரைவேக்காடு சப்-இன்ஸ்பெக்டரை தமிழகத்தில் எங்கேயுமே பார்க்க முடியாது. இயக்குநர் விஜய் ஏன் இந்த அளவுக்கு இறங்கிப் போனார் என்று தெரியவில்லை.
விஜய்யின் இத்தனை படங்களில் காட்சிகளை இணைப்பதற்கான லின்க் ஷாட்டுகளாக சூரிய உதயத்தைக் காண்பித்திருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறோம். இந்த அரதப் பழசான டெக்னிக்கை இப்போது ஏன் விஜய் கைப்பிடித்திருக்கிறார் என்று தெரியவில்லை.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது. காட்சிக்குக் காட்சி அழகுற படமாக்கியிருக்கிறார்கள். சாய் பல்லவியின் அழகை மேலும் மெருகேற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளின் பரபரப்பையும், இறுதியில் ஒரு நொடியில் சாய் பல்லவி அந்த லோகத்துக்குள் போய் தன் மகளைப் பார்த்துவிட்டு அவள் செய்யப் போகும் கொலையைத் தடுக்கும் காட்சியில் தோன்றிய பரபரப்பையும் கொஞ்சம் சிரத்தையுடன் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இந்த ஒரு காட்சிக்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.
இதேபோல் கலை இயக்குநரும் பாராட்டுக்குரியவர். வீட்டுக்குள் இருக்கும் பொருட்களும், பேய் இருக்கா இல்லையா என்பதற்கான அடையாளமான ஒலிக்கும் அந்த ராட்டினம் டிஸைன் அழகுப் பொருளும் கலை வண்ணமயமாய் இருக்கின்றன.
சி.எஸ்.சாமின் இசையில் மதன் கார்க்கியின் பாடல்கள் ஒலிக்கின்றன. ‘ஆலாலிலோ’ பாடல் கேட்கும் ரகம். ஆனால் வரிகள் முழுவதும் கவிதையாச் சொட்டுவதால் தியேட்டர் ரசிகர்களின் மனதில் நிற்காது. ‘கொஞ்சலி’ பாடல் கொண்டாட்டத்துடன் காட்சிகளுடன் ஓடியதால் அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தது.
பேய்ப் படங்களுக்கே உரித்தான சஸ்பென்ஸ் என்று சொல்லப்பட்ட காட்சிகளும், அவசரத்தனமான திரைக்கதையும் இருப்பதால் இதற்கேற்றவாறு பின்னணி இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் சாம்.
இவருக்கு சற்றும் குறையாமல் தனது படத் தொகுப்பு திறமையைக் காட்டி படத்தை கனகச்சிதமாக வெறும் 106 நிமிடங்களிலேயே முடித்து வணக்கம் போட வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஆண்டனி. ஆனால் இன்னும் ஒரு 20 நிமிடக் காட்சிகளை படமாக்கியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.
பேய் குழந்தை வடிவில் வந்து பழி வாங்குவதெல்லாம் ஏற்கெனவே வந்த கதைதான். ஆனால் கருவில் இருந்த குழந்தையே, உயிராய் வந்து பழி வாங்குவது தமிழ்ச் சினிமாவில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறோம். பேய்ப் படத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றால் வேறு என்னதான் செய்வது..? இயக்குநரும் பாவமில்லையா..?! பொறுத்துக் கொள்வோம்.
படத்தின் மேக்கிங்கைவிட்டுவிட்டு பார்த்தால் படம் இறுதியாய் சொல்லும் நீதி பெரும் அநீதியாய் இருக்கிறது.
கருக்கலைப்பை தவறு என்கிறது திரைப்படம். இந்தக் கருத்தே தவறு என்பது இயக்குநருக்குத் தெரியவில்லை. இப்போதுதான் பல போராட்டங்கள் நடத்தி கருக்கலைப்பு செய்வது பெற்றோரின் உரிமை என்று சொல்லி அந்த உரிமையை பெற்றிருக்கிறார்கள்.
இப்போது வாடிகனின் பேச்சை ஆமோதிப்பதை போல ‘கருக்கலைப்பு பாவச் செயல். அதுவும் ஒரு உயிர். அதனை அழிக்காதீர்கள். அதன் மூலமாக பிறக்கப் போகும் உயிர் ஒரு அன்னை தெரசாவாகவோ, இந்திரா காந்தியாகவோ இருக்கலாம்’ என்றெல்லாம் பேசுவது அறிவிலித்தனம்.
இந்திய நாட்டில் கருக்கலைப்பு என்பது அந்தந்தக் குடும்பச் சூழலை முன்னிட்டுத்தான் செய்யப்படுகிறது. இதே படத்தில் சொல்லப்படும் நீதியின்படி பிளஸ்டூ முடித்த பெண், மருத்துவம் படிக்க எத்தனித்திருக்கும் பெண்.. எதிர்பாராமல் ஏற்பட்ட உறவினால் விளைந்த கருவைச் சுமப்பதனால்… படிக்க முடியாமல் போய்.. வாழ்க்கையும் போய் பிள்ளையை பெற்றுவிட்டு வீட்டில் உட்கார்வதுதான் தர்மமா.. சரியானதா..? இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை.
இப்படியான அரைவேக்காட்டுத்தனமான கருத்தை இந்தப் படத்தில் புகுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். இதற்காக நமது கடு்ம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றபடி இயக்குநர் எப்போதும்போல தனது அழுத்தமான இயக்கத்தினால் அனைவரையும் சிறப்பாகவே நடிக்க வைத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இருந்தும் படம் குடும்பப் படமா, பேய்ப் படமா என்கிற குழப்பத்தின் நடுவில் சிக்கிக் கொண்டதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
‘பிரேமம்’ மலர் டீச்சரை பார்த்த திருப்தி ஒன்றுதான், இந்தப் படத்தின் மூலமாய் நமக்குக் கிடைத்திருக்கிறது..!

மெர்க்குரி - சினிமா விமர்சனம்

25-04-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கார்த்திகேயன் சந்தானம், ஜெயந்திலால் காடா ஆகியோர் தயாரிப்பில் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
படத்தில் பிரபுதேவா, சனந்த், இந்துஜா, தீபக் ரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷான்க் புருஷோத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன், கலை இயக்கம் – சதீஷ்குமார், சண்டை இயக்கம் – அன்பறிவ், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், ஜெயந்திலால் காடா, எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்.

பாதரசம் தயாரிக்கும் நிறுவனங்களால் உலகம் முழுவதுமே பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொடைக்கானலில் தெர்மாமீட்டரை தயாரிக்கும்விதமாக பாதரசத்தை உருவாக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.
இந்த ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு பாதரசக் கழிவுகளால் உடல் உபாதைகள் ஏற்பட்டன. அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பலரும் உடல் ஊனமுற்றவர்களாக பிறந்தனர். பலருக்கு பேச்சுக் குறைபாடு இருந்தது. சிலருக்கு கண் பார்வையில்லாமல் போனது. பாதரச கழிவுகள் காற்றில் கலந்ததினால் சுற்றுப்புறச் சூழலும் கெட்டு, நிலத்தடி நீரும் கெட்டு கொடைக்கானலின் சுகாதரத்திற்கே கேடு விளைந்தது. இதன் பின்பு மக்கள் பெரும் போராட்டம் நடத்தி அந்த ஆலையை மூட வைத்தனர்.
ஆனால் அந்த ஆலையினால் உடல் ஊனமாகி, பேசாக் குழந்தைகளாகி, கண்ணில்லாதவர்களுக்கு இன்றுவரையிலும் எந்தவித நஷ்டஈடும் கிடைக்கவில்லை. இன்றுவரையிலும் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதரச ஆலையை மையமாக வைத்து ஒரு பேய் கான்செப்ட்டையும் இணைத்து, திகில், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
சனந்த், இந்துஜா, தீபக் ரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷான்க் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஐவருக்குமே காதும் கேட்காது, வாய் பேசவும் முடியாது. ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரி முடித்தவர்கள். தங்களது படிப்பு முடிந்த சந்தோஷத்தை கொடைக்கானலில் நண்பனின் வீட்டில் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய இரவில் இந்துஜாவிடம் தனது காதலைச் சொல்வதற்காக அவளை வெளியில் அழைத்துச் செல்கிறார் சனந்த். இவர்களுடன் கூட்டாளிகளும் சேர்ந்து கொள்கிறார்கள். வீடு திரும்பி வரும்போது எதிர்பாராதவிதமாக பிரபுதேவா மீது கார் மோத.. அவர் பலியாகிறார்.
தப்பிக்க நினைக்கும் ஐவரணி பிரபுதேவாவை தங்களது காரிலேயே வைத்து தூக்கிச் செல்கிறார்கள். எங்கேயாவது ஓரிடத்தில் பிணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் மூடப்பட்டிருக்கும் பாதரச ஆலை இவர்களின் கண்ணில் சிக்குகிறது.
உடனேயே ஆலைக்குள் போய் அங்கே பிரபுதேவாவை ஒரு பெரிய பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பிக்கிறார்கள். மறுநாளே ஊரைவிட்டு போக நினைத்திருக்கும்போதுதான் தீபக்கின் ஐபாட் காணாமல் போனது தெரிகிறது. இந்த ஐபாட் போலீஸ் கையில் சிக்கினால், இவர்கள் கூண்டோடு மாட்டுவார்கள் என்பது தெரியுமாதலால் மறுபடியும் பாதரச ஆலைக்கு ஓடி வருகிறார்கள் நண்பர்கள்.
அங்கே தேடியலைந்து ஐபாடை எடுத்தாலும் புதைத்துவிட்டு போன இடத்தில் பிரபுதேவா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகிறார்கள். ஒருவேளை பிரபுதேவாவுக்கு உயிர் இருந்து எழுந்து போய்விட்டாரோ என்றெண்ணி அவசரமாக திரும்புகிறார்கள்.
ஆனால் இவர்கள் திரும்பி வரும்போது  காரில் அமர்ந்திருந்த இந்துஜா அங்கே இல்லை. இந்துஜாவை தேடி ஆலைக்குள் செல்கிறார்கள் நண்பர்கள். தேடுகிறார்கள். அங்கே தீபக்கின் கண்களுக்கு ஒரு பீரோவுக்குள் அமர்ந்த நிலையில் இருக்கிறார் பிரபுதேவா.
தாங்கள் புதைத்துவிட்டு போன பிரபுதேவா இங்கே எப்படி என்று யோசிப்பதற்குள் தீபக் பிரபுதேவாவால் தாக்கப்பட்டு பலியாகிறார். இப்படி நண்பர்களுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையில் கண்ணா மூச்சி ஆட்டம் தொடர்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த ‘மெர்க்குரி’ படத்தின் சுவையான திரைக்கதை.
படத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வோடு ஒரு கதையைக் கொடுக்கவிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தைத் தூண்டினார்கள். ஆனால் போகப் போக அது பேய்ப் படமாக உருவெடுக்கிறது. கடைசியில் மீண்டும் இதுவொரு சமூக விழிப்புணர்வு படமாக முடிகிறது. இந்த விந்தையான திரைக்கதையை கார்த்திக் சுப்பராஜ் ஏன் கையிலெடுத்தார் என்று தெரியவில்லை.
ஒன்று சமூக விழிப்புணர்வை உணர்த்தும் படமாகவே இதனைக் கொணர்ந்திருக்கலாம். அல்லது பேய், பிசாசு இரண்டும் கலந்த மர்மம், திகில் படமாகவே கொண்டு சென்றிருக்கலாம். இரண்டையும் தொட்டுச் சென்றுள்ளதால் இது எந்த மாதிரியான திரைப்படம் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.
ஆனால், இயக்கத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை கார்த்திக். அவருடைய முந்தைய படங்களை போலவே இதுவும் எழுத்து, இயக்கத்தில் இவருக்கு பெயர் சொல்லும் படம்தான்.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1987-ம் வருடம் வெளிவந்த ‘பேசும் படம்’ என்னும் திரைப்படம்தான் தமிழில் கடைசியாக வெளிவந்த மெளனப் படம். அதற்கு பின்பு 30 வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் அழுத்தமான கதையுடன், மெளனப் படம் என்பதற்கான சரியான காரணத்துடனும் வந்திருக்கிறது.
வாய் பேச முடியாத, காது கேளாத தன்மையுடன் வாழும் 5 நண்பர்கள் பற்றிய கதையுடன் பிரபுதேவாவின் ஒரு பாதிக்கப்பட்ட தன்மையும் சேர்ந்து கொள்ள இது நிச்சயமாக கலை வடிவ படமாகத்தான் எடுக்கப்பட்டாக வேண்டும். அப்படித்தான் கார்த்திக்கும் படமாக்கியிருக்கிறார்.
பிரபுதேவா எப்படி இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இதுநாள்வரையிலான பிரபுதேவாவை வேறு ஒரு வடிவத்தில் இந்தப் படத்தில் பார்க்கலாம். தனது இயலாமையை சைகை மொழியிலேயே வெளி்ப்படுத்தும் காட்சியில் மனதைத் தொட்டுவிட்டார்.
இதேபோல் அந்த குறைபாடு உள்ளவர்களை போலவே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அதே முகபாவனை, காதுகளின் கூர்மையைக் காட்டும் செயல்.. ஒட்டு மொத்த அவயங்களின் வெறியையும் கை, கால்களில் காட்டுவது.. தன்னால் முடியாத காரியத்தை இந்துஜாவின் கண்கள் மூலமாகப் பார்த்துவிட்டு பின்பு தனது இலக்கு நோக்கிச் செல்வது என்று அந்தக் காட்சிகளை காவியம்போல படமாக்கியிருக்கிறார் கார்த்திக். அதில் கவிதையாய் படர்ந்திருக்கிறார்கள் பிரபுதேவாவும், இந்துஜாவும்.
இந்துஜா இன்னுமொரு நடிப்பு திலகமாக வர வாய்ப்பிருக்கிறது. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். காதலனிடம் ஏன் இத்தனை தாமதமாக காதலைச் சொல்கிறாய் என்று செல்லக் கோபத்தோடு கேட்கும் இந்துஜாவை நமக்கே பிடித்துப் போகிறது. இடையில் ஒரு அரை மணி நேரம் அவர் இல்லாமலேயே கதை நகர்ந்தாலும் கிளைமாக்ஸில் இவர்தான் படத்தை முடித்து வைக்கிறார். படத்தின் ஹைலைட்டே இந்துஜாவின் மூலமாக பிரபுதேவா இந்த உலகத்தைப் பார்க்கும் காட்சிதான். வாவ்.. வெல்டன் கார்த்திக் சுப்பராஜ்.
இந்துஜாவின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைவருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்துஜாவின் காதலனாக நடித்திருக்கும் சனந்த். இவர் தப்பித்து ஓடும் காட்சியை மிகவும் பரபரப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
படத்திற்கு பலம் சேர்த்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும்தான். பாதரச ஆலையின் உட்புறத்தில் நடப்பது அனைத்தையும் கலர் டோனில் வடிவமைத்திருந்தாலும் அந்த இருள் கவியும் காட்சிகளெல்லாம் கண்ணுக்குக் குளுமையாகவே தெரிகின்றன.
இதேபோல் பாடல்கள் இல்லாததை போக்கும்வகையில் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். படத்தின் சஸ்பென்ஸ், திரில்லரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இசையமைப்பாளருக்கு இருந்ததால் அதனை செவ்வனே செய்திருக்கிறார் சந்தோஷ்.
கார் விபத்தாகி நிற்கும் காட்சியிலும், இந்துஜா கடத்தப்படு்ம் காட்சியிலும், பிரபுதேவா அவர்கள் ஒவ்வொருவரையும் சம்ஹாரம் செய்யும் காட்சியையும், சண்டை காட்சிகளையும் ஒரு திடுக் உணர்வோடு பார்க்க வைக்கும்வகையில் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒட்டு மொத்தமாய் படம் பேய்ப் படம் என்பதாக உருமாறியிருந்தாலும் அதில்கூட பிரபுதேவா செய்வதில் கொஞ்சமும் நியாயம் இல்லாததுபோலவே தெரிகிறது. பிரபுதேவாவின் கேரக்டர் ஸ்கெட்ச் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.
தெரியாமல் செய்தார்களா.. தெரிந்து செய்தார்களா என்பதே தெரியாமல் அவர்களை கொலை செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா..? அதேபோல் இந்த இளைஞர்கள் அனைவரும் ஏன் இப்படி அநியாயத்துக்கு பயந்து சாகிறார்கள் என்பதற்கும் காரணம் இல்லை. ஒருவருக்குக்கூடவா தைரியம் இல்லை..? பேயா இல்லை பிசாசா.. என்பதெல்லாம் தெரிவதற்கு முன்பாகவே இவர்களின் பய உணர்வே தேவையற்றதாகியிருக்கிறது.
மெளனப் படம் என்பதன் மூலமும் ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாதரசம் மட்டுமல்ல.. மக்களின் உயிரோடு விளையாடும் எந்தவகையான ஆலைகளும், வேலைவாய்ப்பு என்கிற பொரியைக் காட்டி மக்களிடத்தில் வரக் கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை, காவிரி நீர்ப் படுகையில் மீத்தேன் வாயு, நியூட்ரினோ திட்டம், கூடன்குளம் அணு உலை என்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாய் இருக்கும் இந்த நேரத்தில் இவை போன்ற படங்கள் வரவேற்கத்தக்கதுதான்..!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு இதற்காகவே நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..!

18-04-20128

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“வருகிற ஏப்ரல்  20-ம் தேதி முதல் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பும், வெளியீடும் ஆரம்பமாகும்…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் அறிவித்திருக்கிறார்.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தரப்பு முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இது குறித்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதற்கடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழ்த் திரையுலகத்தின் அடுத்தக் கட்ட நகர்வுகளைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் விஷால் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
இனிமேல் சினிமா தியேட்டர்களின் கட்டணம் 150 ரூபாய்க்கு மேல் இருக்காது.
தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
டிக்கெட் விற்பனை இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும்.
தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதிவரையிலான வெளியீட்டு படங்களை இப்போதே பட்டியலிட இருக்கிறோம்.
இனி வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்படும். இதைக் கண்காணிக்கவும் ஒரு புது குழு அமைக்கப்படும். 
வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகும். முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியாகும்.  
கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகளும் வரும் ஏப்ரல் 20, வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.
ஆனால், படப்பிடிப்பை துவக்க புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்.
ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அந்த படக் குழு தயாரிப்பாளர் சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்.
அதற்கு அந்த படக் குழுவினர் முழு கதையையும் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும்,
எந்தெந்த நாட்களில், எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்கிற விவரத்தை கொடுக்க வேண்டும்.
படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில் நுட்ப கலைஞர்களின் ஒப்பந்த பட்டியலை கொடுக்க வேண்டும்.
இந்த விபரங்களையெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கடிதம் கொடுக்கும்.
அந்த அனுமதி கடிதத்தை பெப்சி அமைப்பில் படக் குழுவினர் கொடுத்தால் மட்டுமே, பெப்சி தொழிலாளர்கள் அந்த படத்தில் பணியாற்றுவார்கள்.
இந்த புதிய விதியின்படியே வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். 
சம்பளப் பிரச்சினை தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் முடிவெடுக்கப்படும்.
‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ‘காலா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது. இதற்கு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப் பெரியது.” என்றார் விஷால்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, கௌரவ செயலாளர் கதிரேசன், FEFSI தலைவர் R.K.செல்வமணி, கௌரவ செயலாளர்  S.S.துரைராஜ், செயற்குழு உறுப்பினர்களான R.K.சுரேஷ், உதயகுமார், A.L.உதயா, பிரவீன் காந்த், மிட்டாய் அன்பு மற்றும் S.S. குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..!

17-04-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே இன்றைய முத்தரப்பு பேச்சு வார்த்தையின் விளைவாக கடந்த 47 நாட்களாக நடந்து வந்த தமிழ்த் திரைப்படத் துறையினரின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இது இன்றைக்கு இப்படித்தான் முடியும் என்று ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான்..!
விஷால் இந்த வேலை நிறுத்தத்தைத் துவக்கியது சரியானதே.. தியேட்டர் உரிமையாளர்களும், கியூப் நிறுவனத்தினரும் இணைந்து தயாரிப்பாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தைத் திருடிக் கொண்டேயிருப்பதால் இந்தத் திருட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாய் விஷால் துணிந்து களத்தில் குதித்து கடைசியாய் ஒரு வழியாக வெற்றி பெற்றுவிட்டார்.


தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனமும் என்னதான் செய்வார்கள் பார்த்துவிடுவோம் என்று ஒரு பக்கம் விஷாலும் அவரது சங்கத்தினரும் தனித்து நின்றாலும்.. தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் போராட்டத்தில் இருக்கும் உண்மைத்தனத்தை சினிமா துறையையும் தாண்டியிருக்கும் பொதுவான மக்களிடத்திலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொண்டு போயிருக்கிறது. அந்தத் திட்டமிடலுக்கு நமது பாராட்டுக்கள்.
அன்றாடங் காய்ச்சிகளான பெப்சி ஊழியர்களும் வேறு வழியில்லாமல் இந்த வேலை நிறுத்தத்தில் உள்ளே இழுக்கப்பட்டனர். அப்போதுதான் தமிழக அரசின் கவனம் திரைப்படத் துறை மீது விழும் என்பது தயாரிப்பாளர் கவுன்சிலின் எண்ணம். பெப்சி அமைப்பு இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து உதவியிருக்கிறது.
ஆனால் முட்டாள்களும், திருடர்களும் நிரம்பிய தமிழக அரசும், அமைச்சரவையும் முதலில் திரையுலகத்தினரின் இந்த வேலை நிறுத்தத்தை உதாசீனப்படுத்தினார்கள்.
பத்திரிகையாளர்கள் அமைச்சர்களிடத்தில் இது குறித்து கேட்டபோது “விஷாலே பெரிய ஆள்தானே.. அவரே தீர்த்து வைப்பார்…” என்று சந்தர்ப்பம் கிடைத்தாற்போல் நக்கலடித்தார்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவாய் சமீபத்தில் ‘காவிரி பிரச்சினையின்போது ஐபிஎல் கொண்டாடுவதா?’ என்று கொதித்தெழுந்த தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் தமிழகத்தின் தற்போதைய கொதி நிலைமை டெல்லிவரைக்கும் போய்விட்டன.
இதையடுத்து ‘புதிய பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அல்லல்பட வேண்டாம்’ என்று நினைத்துதான் இந்த திரையுலக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசும் முனைந்தது.
தயாரிப்பாளர் சங்கமோ தியேட்டர்களை கையில் வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களை அதட்டி வழிக்குக் கொண்டு வர முடியாமல் தவித்து, கடைசியில் எப்படியாவது ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர எண்ணியது.
இதேபோல்தான் தியேட்டர் உரிமையாளர்களும்.. கடந்த 47 நாட்களாக தியேட்டரில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்குக் கூட பணம் வசூலாகாமல் தவித்துப் போனார்கள்.
ஆனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினருக்குமே ஈகோ பிராப்ளம் இடித்ததால், வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்கள்.
தமிழக அரசே கூப்பிட்டு சமரச பேச்சை நடத்துவதால் எப்படியாவது ஏதாவது ஒரு இடத்திலாவது விட்டுக் கொடுத்து பழியை தமிழக அரசின் மீது சுமத்திவிட்டு ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினரும் திட்டமிட்டுத்தான் பேச்சுவார்த்தைக்கே போயிருக்கிறார்கள்.
அவர்கள் நினைத்ததுபோலவே அரசு தரப்பு பிரச்சினையை தற்காலிகமாவது தீர்க்க வேண்டும் என்ற நினைப்பில் பேச.. இரு தரப்பினரும் அதேபோல் இறங்கி வந்து பேசி கடைசியில் எல்லாவற்றையும் சுமூகமாக முடித்திருக்கிறார்கள்.
இந்த முடிவின்படி சில முக்கிய பிரச்சினைகளை பேசி முடித்திருக்கிறார்கள் இரு தரப்பினரும்.
1. க்யூப் நிறுவனம் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒப்புக் கொண்ட அதே அளவுக்கான VPF கட்டணக் குறைப்பை இப்போது தமிழக அரசின் முன்னிலையிலும் ஒத்துக் கொண்டுள்ளது.
இதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும்.
இதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது.
அதுவும் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே. அதற்கடுத்து வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்கு தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியுள்ளதாம். எனவே இந்த 6 மாத காலம் மட்டுமே க்யூப் தனது ஆதிக்கத்தை தமிழகத்தின் தியேட்டர்களில் செலுத்த முடியும்.
2. தியேட்டர் கட்டணத்தை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும். இதனால் இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
3. தியேட்டர்களில் செய்யப்படும் முன் பதிவுக் கட்டணம் இதுவரையிலும் 35 ரூபாய்வரையிலும் இருந்து வந்தது. இனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்களாம்.
அதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித் தரப் போகிறதாம். இதனால் தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கான செலவு பெருமளவு குறையும்.
4. தியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணி மயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முதல் அமலாகுமாம்.
இதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தப் படங்களில் ஒரு வகையில் நிலை நிறுத்தப்படும். இதனால் சமச் சீரான சம்பளம் நடிகர்களுக்கு தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறையும்.
5. இதேபோல் தியேட்டர் அதிபர்களுக்கு உதவும்வகையில் மற்ற மாநிலங்களில் இருக்கும் தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை தியேட்டர் கட்டணத்தில் சேர்ப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிடுமாம். இது தியேட்டர் அதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கை . இக்கோரிக்கை நிறைவேறியதில் தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதானாம்..!
இன்றைக்கு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் பற்றி நாளைக்குக் கூடவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டு வருவது, படப்பிடிப்புகளை துவக்குவது எப்போது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.
இப்போது, இதுவரையிலான இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் நடிகர் விஷால்தான். அவருடைய சங்க செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விஷால் இல்லாமல் வேறு யாராவது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக இந்த அளவுக்குத் திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக தியேட்டர் அதிபர்களையும், கியூப் நிறுவனத்தாரையும் அரசின் முன் உட்கார வைத்து அவர்களை சமரசத்துக்கு கொண்டு வந்திருக்க முடியாது.
இது முழுக்க, முழுக்க விஷால் மற்றும் அவரது குழுவினரின் வெற்றிதான். இந்த வெற்றிக்காக நடிகர் விஷாலையும், அவரது குழுவினரையும் பெரிதும் பாராட்டுகிறோம்..!
விஷாலின் எதிர்ப்பாளர்கள்கூட இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் என்றால், அது இந்த வேலை நிறுத்தத்திற்காக விஷால் சொன்ன காரணங்கள்தான்.
இப்படி தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தலைவலியாய் இருந்த முக்கியமான பல விஷயங்களை விஷாலும் அவரது குழுவினரும் தங்களது புத்திசாலித்தனத்தால் செய்து காட்டியிருக்கிறார்கள்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது தங்களது சொந்த, சுய, ஈகோக்களை கைவிட்டு விஷாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சங்கத்தை நல்வழிப்படுத்துவதன் மூலம், தமிழ்த் திரைப்படத் துறையையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.