2016 சட்டமன்றத் தேர்தல் - தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி திரும்பவும் ஏன்..?

14-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஐயோ பாவம் தாத்தா..!

இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு ஒரு காலத்தில் சகல அதிகாரத்துடன் இருந்தவர், இன்றைக்கு கூட்டணி வைக்க கட்சிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க. கூட்டணி மந்திரி சபையில் இருக்கும்போதே தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதை போல 2-ஜி ஊழலை வெளிப்படுத்தியது காங்கிரஸ் அரசு. தி.மு.க.வை பலவீனப்படுத்த நினைத்து அவர்கள் வெளியிட்டது கடைசியில் அவர்களையே வீட்டுக்கு அனுப்பிவிட்டது. ராகுல் செய்த முட்டாள்தனத்தில் இதுதான் தலையாயது..! கூடவே குடும்பத்துலேயே குழப்பம் விளைவிப்பதை போல சன் டிவியின் மேக்ஸிஸ் ஊழலையும் நாள் கணக்கில் புள்ளிவிவரங்களோடு வெளியிட்டு அசத்தியது காங்கிரஸின் உளவுத் துறை.

இன்னொரு பக்கம் பலத்த பாதுகாப்பு நிறைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்த விசாரணை டேப்புகளே ஒவ்வொன்றாக தானாகவே வெளியானது. அதிலும் நேராக எதிர்க்கட்சி வக்கீலின் கையிலேயே டேப்புகள் கிடைப்பதை போல தீயாய் வேலை செய்த காங்கிரஸின் உளவுத்துறையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. பிரசாந்த் பூஷனுக்கு பக்கபலமாக இருந்து அவரது கேஸுக்கு அனைத்துவித உதவிகளையும் செய்தது சாட்சாத் இதே காங்கிரஸ் கட்.சிதான்..!




தகத்தகாய சூரியனான தனது தம்பி ராஜாவை சிறை புகாமல் காப்பாற்ற நினைத்தார் தாத்தா. முடியவில்லை. அடுத்து தனது ஆசை மகளையாவது காப்பாற்றலாமே என்று துடியாய் துடித்தார். அதுவும் முடியாமல் போனது. அந்தத் தள்ளாத வயதிலும் வி்மானம் ஏறி டெல்லி ஆத்தாவை சந்தித்து மனு அளிக்கப் போனார்.. இவர் ஜன்பத் ரோட்டில் டெல்லி ஆத்தாவிடம் கருணை மனு போட்டுக் கொண்டிருந்த கிட்டத்தட்ட அதே நேரத்தில் அவரது பாச மகளுக்கெதிராக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தாத்தாவின் நெஞ்சை நேரடியாக தாக்கியது..

என்னத்த செய்தும் டெல்லி பட்டத்து இளவரசரின் கோபம் தணியவில்லை என்பதை மட்டும் உணர்ந்து அவரை கூல் செய்ய அம்புகளையெல்லாம் அனுப்பி வைத்தார்கள். குலாம் நபி ஆசாத்தும், அகமது பட்டேலும் ஒருவர் மாற்றி ஒருவர் நல்ல பிள்ளை நாடகமாடி ராகுலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார்கள். 

இனி இந்தக் கூட்டணி கதைக்குவாது என்பது தெரிந்துதான் ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டும், கூட்டணியில் இருந்தும் விலகினார் தாத்தா. கையோடு அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் தோல்வியடையப் போகிறோம் என்று தெரிந்தே வலிக்காத மாதிரியே நடித்தும் தோற்றார்கள்.

“காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலகியது எங்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசு..” என்று அப்போதே சொன்னார் காங்கிரஸின் தற்போதைய தலைவர் இளங்கோவன்.  “இனி ஒரு போதும் துரோக காங்கிரஸுடன் கூட்டணி இல்லை..” என்றார் தாத்தா.
   
“கடைசிவரையில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டுத்தானே போனார்கள். இதனால் எங்களுக்குக் கவலையில்லை...” என்று ஜெயந்தி நடராஜன் மூலமாக சொல்ல வைத்து மூக்குடைத்தார் இளவரசர்.



இரு கட்சிகளுமே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை இழந்து இன்றைக்கு தவித்து வரும் வேளையில் ஏன் இந்த புதிய மானம் கெட்ட முயற்சி..?  அரசியில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை.. நிரந்தரமான நண்பர்களும் இல்லை என்று சொல்லி தப்பிப்பார்கள்.. அவர்களுக்குத்தான் இரட்டை நாக்குகளாச்சே.. அது இப்போது நான்காககூட ஆகியிருக்கும். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு பாதகமாக வரும் என்று தி.மு.க. உறுதியாக நம்புகிறது. அந்த இடைவெளியை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம் என்று எண்ணுகிறது. பா.ஜ.க. அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பாததுபோல நடிக்கிறது. ஆனாலும் கூட்டணிக்கு ரகசியமாக அலைந்துதான் வருகிறது. 

தே.மு.தி.க.வுடன் மட்டுமே கூட்டணி வைத்தால் இரண்டாவது, மூன்றாவது இடம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஒரு சீட்டுகூட கிடைக்காது என்பது தமிழிசைக்கு மட்டுமல்ல அமித்ஷாவுக்கே தெரியும்.. அ.தி.மு.க. அழைத்துவிட்டால், தே.மு.தி.க.வை டீலில் விட்டு பா.ஜ.க. விலகிவிடும். கடைசியாக தே.மு.தி.க. அந்தரத்தில் நிற்க வேண்டியதுதான்..!

மச்சான் தேனாகப் பேசியிருந்தாலும், மனைவி தேளாகக் கொட்டியிருந்தாலும் தாத்தாவும், தளபதியும் தே.மு.தி.க.வுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க்க் காத்திருக்கிறார்கள்.  இப்போது தேர்தல் களம் வோட்டு விகிதத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுவதால் தே.மு.தி.க.வை இழக்க அவர்கள் விரும்பவில்லை. 

ஆத்தா ஜெயிலுக்கு போனால் அதிமுக, பா.ஜ.க.வுடன் கூட்டணி  என்று செய்தி வரும். தே.மு.தி.க. தனித்துவிடப்படும். அதனால்தான் இப்போதே வந்தால் சீட்டுகள்கூட  கிடைக்கும் என்று ஆடித் தள்ளுபடியை போல அறிவாலயத்தில் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வோடு போனால் சீட்டுக்களுடன் கரன்சி நோட்டுக்களும் நிறைய கிடைக்கும். தேர்தல் செலவை சமாளிக்கலாம் என்று எண்ணுகிறார் மனைவி. தி.மு.க.வோடு போனாலும் கரன்சி கிடைக்கும். அதற்கு நான் கியாரண்டி என்று அக்காவோடு மல்லுக் கட்டி வருகிறாராம் தம்பி. இப்போது கரன்சி முக்கியமா.. அல்லது சீட்டுகள் கிடைத்து ஒரு தலைவராக தான் சட்டமன்றத்திற்கு நடப்பது முக்கியமா என்பதை முடிவு செய்ய முடியாமல் தவியாய் தவிக்கிறார் கேப்டன்.

இன்னொரு பக்கம் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்துக்கே பாய்ந்துவிட்டார்கள் என்பதும் அறிவாலயத்திற்கு சற்று கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.  அவர்களது கூட்டணியை இனிமேல் உடைக்கவோ, முறிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் பக்கம் திரும்பாமலேயே இரு கட்சிகளும் யோசிக்கின்றன.

கட்சி ஆரம்பித்த நேரத்திலிருந்தே ஜி.கே.வாசன் அ.தி.மு.க. வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது இருந்தே 4 சீட்டுதான் என்று தூதுவர் ஞானதேசிகனிடம் சொல்லி வந்திருக்கும் அடிமை அமைச்சர்கள், சென்ற மாத கடைசியில்தான் 10-க்கு ஏறி வந்திருக்கிறார்கள். இது கடைசியில் 20 ஆகிவிடும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார் ஜி.கே.வாசன். அவருக்கும் வேறு வழியில்லை.
  
கட்சி ஆரம்பித்து இது முதல் தேர்தல் என்பதால் வாக்கு சதவிகிதத்தைக் காட்ட வேண்டும். கட்சிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும். வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போல தானும் ஒரு அரசியல் தலைவருக்கான அந்தஸ்தில் வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆக.. இவரும் தி.மு.க. அணிக்கு வரப் போவதில்லை.



மிச்சம் மீதியிருக்கும் சின்ன சின்ன கட்சிகளை வைத்து லோக்கலில் கூட்டத்தை சேர்க்க முடியுமே தவிர, அது வெற்றி பெற வைக்கும் அளவுக்கான வாக்குகளாக மாறாது என்பதை தாத்தாவும் புரிந்து கொண்டிருக்கிறார். 

இன்னொரு பக்கம் 2ஜி வழக்கின் தீர்ப்பும் விரைவில் வெளிவர இருக்கிறது. இனிமேல் தீர்ப்பில் ஏதும் மாற்றம் செய்து தப்பிக்க நினைப்பது முடியாது என்பது இந்திராகாந்திக்கே அல்வா கொடுத்த தாத்தாவுக்கு தெரியாததல்ல. ஆகவே எது வந்தாலும் சந்திப்போம் என்ற மனத்திடத்துடன் பா.ஜ.க. உறவை தூர வைத்தார்கள்.

இதேபோல் ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய பணக்கார குடும்பம் என்கிற பவுசோடு இந்தியாவின் புதிய பிரதமரான மோடியை சந்திக்க டெல்லியிலேயே 10 நாட்கள் தவம் கிடந்தும் மாறன் சகோதரர்களுக்கு மோடியின் முகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அருண் ஜெட்லி மட்டுமே அனுசரணையாகப் பேச.. ராஜ்நாத் சிங்கோ பைல்கள் மூலமாக சகோதரர்களை விரட்டும் வேலையும் நடந்திருக்கிறது..! ஆக பேரன்கள் மூலமாகவும் பா.ஜ.க.வை வளைக்க முடியாத துர்பாக்கியம் தாத்தாவுக்கு..!

இதையெல்லாம் மனதில் வைத்துதான்... எதையாவது செய்து கூட்டணியை பெரிதாக்க நினைத்து வேறு வழியில்லாமல் மானம், ரோஷம், வெட்கத்தையெல்லாம் அறிவாலய வாசலில் குழி தோண்டி புதைத்துவிட்டு ‘அன்னை சோனியா’ என்றும், ‘வருங்கால இந்தியாவே ராகுல்தான்’ என்றும் சொல்ல தயாராகிவிட்டது தி.மு.க.

ஆக மொத்தம் அரசியல் களத்தில் யாருக்கும் வெட்கமில்லை என்பதை தி.மு.க. நேற்றைக்கு திரும்பவும் காட்டிவிட்டது. அடுத்தது அ.தி.மு.க. முறை.  இதற்கு உச்சநீதிமன்ற சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரைக்கும் நாம் காத்திருக்க வேண்டும்..!

0 comments: