நாளை முதல் குடிக்க மாட்டேன் - சினிமா விமர்சனம்

07-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2014-ம் வருடம் ‘அப்பா வேணாம்பா’ என்ற குடியை எதிர்க்கும் ஒரு அற்புதமான படம் வந்தது. அதில் இருந்த நேர்த்தியும், திரைக்கதையாக்கமும் சிம்ப்ளி சூப்பர்ப்.. அதில், ‘தொடையழகி’, ‘இடுப்பழகி’ என்று வர்ணிக்க வாய்ப்பே இல்லாத காரணத்தினால் அந்தப் படத்திற்கு தியேட்டர்கள்கூட கிடைக்காமல் அரசின் வரிச்சலுகைகூட கிடைக்க வாய்ப்பில்லாமல் வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது.
அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் புதிய படம் இது.

குடியால் தவிக்கும் ஒரு இளைஞனின் கதை. அதே குடியால் தனது மனைவியை இழந்து அந்தக் குற்றவுணர்வில் தன்னையும் மாய்த்துக் கொள்ளும் இன்னொரு இளைஞனின் கதையும் இதில் சொல்லப்படுகிறது..!பகலில் பக்தி மயமாய் ஒழுக்கமாய் பள்ளியில் மணியடிக்கும் வேலையைப் பார்க்கும் காந்தராஜ், மாலையானால் டாஸ்மாக் கடைக்கு போகாமல் வீடு திரும்புவதில்லை. சொந்த வீடு என்றெண்ணி பக்கத்து வீட்டிற்குள் சென்று சிறுநீர் கழிக்கும் அளவுக்கு மிதமிஞ்சிய போதையில் மிதக்கிறார்..  பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் வெளக்கமாத்து அடி வாங்கிய பிறகும்கூட குடியைவிட முடியாமல் தவிக்கிறரார்.
இன்னொரு பக்கம் ஹீரோவாக நடித்திருக்கும் ராஜ் அதே பள்ளியில் ஆசிரியர். நல்லவராக நடித்து ஊரையே ஏமாற்றும் வித்தகர்.. இரவானால் தான் மட்டும் தனியே அமர்ந்து கட்டிங் போட்டு அமுக்கமாக இருப்பவர்.  ஆனால் ஊரே இவரை நல்லவர்.. குடிக்கவே மாட்டார் என்று நம்புகிறது..!
அதே ஊரில் அதே பள்ளிக்கு டீச்சராக வரும் ஹீரோயின் சசிரேகாவிற்கு சிறு வயதில் இருந்தே குடி என்றால் பிடிக்காது. காரணம் அவளுடைய தந்தை குடிப் பழக்கத்தினால் தனது தாயை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போய்விட்டதை நினைத்து நினைத்தே குடிகாரர்களையே வெறுப்பவர்.ரொம்ப நல்லவர் என்றெண்ணி ஹீரோ ராஜை காதலிக்கிறார் சசிரேகா. தவிர்க்க முடியாமல் காதலில் மாட்டிக் கொள்ளும் ராஜ், தாலி கட்டிய பின்பு சமாளித்துக் கொள்ளலாம் என்றெண்ணி திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் முதலிரவன்றே ஸ்மால் கட்டிங்கை போட்டு ஹீரோயினுக்காக காத்திருக்கிறார் ஹீரோ.  அருகில் வந்ததும் வாடையை வைத்தே கண்டுபிடித்துவிடும் ஹீரோயின் அதிர்ச்சியாகிறார். கத்தித் தீர்க்கிறார். “வெளியே போ” என்று கணவனை விரட்டியடிக்கிறார்.
அன்றிலிருந்து ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் கர் புர்ராகி இருக்கிறார்கள். தனித்தனியே ஸ்கூலுக்கு செல்கிறார்கள். வருகிறார்கள். டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு செல்கிறார் ஹீரோயின்.
இந்த நேரத்தில் காந்தராஜுக்கு தண்ணி வாங்கித் தந்த ஒரு சின்னப் பையன் அவர் வீட்டிற்கு சாப்பிட வருகிறான். வந்த இடத்தில் காந்தராஜின் மனைவி மீது கை வைக்க.. இந்த தள்ளு முள்ளில் மனைவி அடிபட்டு உடனேயே சாகிறாள். இதனை பார்த்து அதிர்ச்சியான காந்தராஜ் ஒரு முடிவெடுத்து ஹீரோ ராஜுவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு தானும் செத்துப் போகிறார்.
இப்போது ஊரே கூடி அய்யோ.. அச்ச்ச்சோ பாடிக் கொண்டிருக்க தன் வாழ்க்கையை இனி அடுத்து எப்படி கொண்டு போவது என்று யோசிக்கிறார் ஹீரோ ராஜ். என்ன செய்தார் என்பதுதான் மீதமான திரைக்கதை.
சிறந்த கதைதான். ஆனால் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையாயிருந்தாலும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் குடிகாரர்களை 12 விதமாக பிரித்து வைத்து அந்த நாட்டு வைத்தியர் சொல்லும் காட்சியில் தியேட்டரே கிளாப்ஸ் மழையில் நனையும் என்பது உறுதி. மேலும் குடி சம்பந்தமான அனைத்து வகையான செய்திகளுக்கும் டிக்சனரியே போடும் அளவுக்கு டீடெயிலாக அடித்து தள்ளியிருக்கிறார் வசனத்தில்..! வசனகர்த்தாவான இயக்குநருக்கு இதற்காகவே தனி பாராட்டுக்கள்..!
அப்ரண்டிஷிப் இயக்குநர்தான்.. அடுத்தப் படத்தில் சிறந்த இணை இயக்குநர் ஒருவரை உடன் வைத்துக் கொண்டு இயக்கினால் நன்றாக இருக்கும்.  நடிகர், நடிகைகளில் காந்தராஜை தவிர மற்றவர்கள் சினிமாவுக்கு புதிது என்பதாலும், இயக்கம் என்பதே இல்லாத நிலையில் இருப்பதாலும் ஏதோ வைத்து செய்திருப்பதுபோல ஒப்பேற்றியிருக்கிறார்கள். “எனக்குத் தெரிந்த அளவுக்கு இயக்கம் செய்திருக்கிறேன்..” என்று இயக்குநரே வெளிப்படையாகச் சொல்லிவிட்டதால் இதற்கு மேல் அவரை சாட முடியாது.
நடிப்பென்று பார்த்தால் காந்தராஜ் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படி நடித்திருக்கிறார். ஹீரோ.. சொல்லவே வேண்டாம்.. ஹீரோயின்.. பாவம்.. தான் ஹீரோயினாக நடித்த படத்தைக்கூட பார்க்க முடியாத துர்பாக்கியம். அதற்குள்ளாக கொலை செய்யப்பட்டுவிட்டார். பரிதாபமான செய்திதான். 30 வயதைக் கடந்த நிலையில் இவரை ஹீரோயினாக போட்டு படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு தயாரிப்பாளருக்கு என்ன கட்டாயமோ தெரியவில்லை. வீணான கேரக்டர் ஸ்கெட்ச்..!
மேலும் படத்தில் இயக்கம், கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருப்பதால் நடிகர்களை மட்டுமே குற்றம் குறை சொல்லி புண்ணியமில்லை என்பதால் விட்டுவிடுவோம்.
ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேர்மையாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுவரையிலும் இந்தப் படக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
முதல் காட்சியின் பின்னணியில் அனைத்தையும் ரீவைண்ட்டில் சொல்கின்ற பாணியை கையாண்டிருப்பது அதிபுத்திசாலித்தனம். இது தெரியாத அளவுக்கு கடைசிவரையிலும் படத்தைக் கொண்டு போய் முடித்திருப்பதும்கூட ஓகேதான்..!
கிளைமாக்ஸில் “குடியை உடனடியாக சட்டென விட முடியாது. விடவும் கூடாது.. படிப்படியாக விட்டிரலாம். குறைத்துக் கொண்டே போய் கடைசியாக முற்றிலுமாக கைவிடலாம்..” என்பதை மருத்துவ அறிவுரையோடு முடித்திருக்கிறார்கள். இதற்காகவே இவர்களுக்கு ஒரு கை கொடுக்கலாம்..!
பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சிவசுப்ரமணியனின் இசையும், பாடல்களும் திரும்ப ஒரு முறை கேட்கும் அளவுக்கு மிக எளிமையான தமிழில் இசையின் சப்தத்தைக் குறைத்து பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கும் அளவுக்கு ரிக்கார்டிங் செய்திருக்கிறார்கள். இதற்கும் இவர்களுக்கு ஒரு பாராட்டு..!
இதெல்லாம் ஒரு படமா..? இவர்களெல்லாம் சினிமா எடுக்கணுமா..? இப்படியெல்லாம் சினிமா எடுக்கணும்னு எவன் அழுதது என்றெல்லாம் திட்டுவதைவிட்டுவிட்டு, “இப்படியாச்சும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கீங்களே.. நல்லாயிருங்கப்பா..” என்று வாழ்த்துங்க.
அவர்கள் சொல்லியிருப்பது இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு, இன்றைய நிலைமைக்கு தேவையான ஒரு கருத்தை..! அதிலும் தமிழக அரசு சொல்ல வேண்டிய.. செய்ய வேண்டிய விஷயத்தை தனி மனிதர்களாய் காசு, பணத்தை செலவழித்து சொல்லும் இவர்களல்லவா பாராட்டுக்குரியவர்கள்..!?
இதற்காக படக் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.. வந்தனங்கள்..!

0 comments: