இன்றைய அரசியல் - காமெடி கருத்துகள் - துக்ளக்

படிக்க : சிந்திக்க


படிக்க : சிரிக்க













கலைஞரின் குடும்ப அரசியல்-துக்ளக் கார்ட்டூன்

May 31, 2007




எனக்கு இது போன்ற கருத்து தோன்றியது. ஆனால் கார்ட்டூன் வரையத் தெரியவில்லை. எனவே துக்ளக்கிடம் இரவல் வாங்கிப் போட்டுள்ளேன். பார்க்க.. படிக்க.. புரிந்து கொள்க..










தினகரன் வெளியிட்ட பிரச்னைக்குரிய கருத்துக் கணிப்பு, அதைத் தொடர்ந்து நடைபெற்றத் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி, சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது :


".....கனிமொழி இப்போதுதான் தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும், சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார்.."

- சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேச்சு (முரசொலி : 11.5.2007)


இதன் பிறகு மே 26-ம் தேதி, கனிமொழியை ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவித்ததை ஒட்டி வந்த செய்தி இது :


".....கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால்தான் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.."

- ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கருணாநிதி கூறியது ('தி ஹிந்து' : 27.5.2007)

அதாவது மே 10-ம் தேதி வரை கனிமொழி அரசியலில் இருக்கவும் இல்லை; அரசியலில் நுழைய விரும்பவுமில்லை. "தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஒரு கவிஞர் என்ற முறையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.." என்பது முதல்வரே கூறியது..
ஆனால் திடீரென்று 26-ம் தேதி அவர், "ஏற்கெனவே அரசியலில் இருப்பராகிவிட்டார். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்தார் என்று வைத்துக் கொண்டாலும் வந்து, உடனே ராஜ்யசபை அங்கத்தினராகவிருக்கிறார். வரலாறு காணாத வளர்ச்சி!

இந்த நியமனத்தை விளக்குவதற்கு, மாற்றி மாற்றிப் பேசி முதல்வர் திண்டாட வேண்டியதில்லை.

'கழகம் ஒரு குடும்பம்' - 'அது என் குடும்பம்' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். அதற்குப் பின் கேள்விக்கு ஏது இடம்!

என் சொத்துக்கள் முழுவதும் உங்களுக்கே..!

May 31, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே,


நோயற்ற வாழ்க்கை ஒரு மனிதனுக்குக் கிடைத்தது என்றால் அவன் நிச்சயமாக பாக்கியசாலிதான். நோய் எதனால் உண்டாகிறது என்றால் உடலின் ஏதோ ஒரு உறுப்புக்கு ஒவ்வாத ஒன்றை மனிதன் தன்னுள் திணித்திருக்கிறான். அல்லது திணிப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறான் என்று சொல்லலாம்.


மரணங்கள் இல்லங்கள் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதே போல் பிறப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு வித்தியாசம்தான். பிறப்பின்போது வீடு முழுவதும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. ஆனால் மரணத்தின்போது அந்த வீட்டையே துக்கம் சூழ்ந்திருக்கிறது. மரணத்தை வெல்வது சாத்தியமில்லை என்றாலும், அதை முடிந்தபட்சம் தவிர்க்கலாம்.


ஆண்டு தோறும் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அதில் புகையிலை என்னும் கொடிய வஸ்துவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இரண்டாமிடம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் கூடிக் கொண்டே செல்வதாகவும் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.


புகையிலை என்னும் ஆள் விழுங்கும் வஸ்து பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகை பிடிக்கும் முறையிலும், மென்று முழுங்கும் வகையிலும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


சென்னையில் 10 ஆண்டுகளாக நான் வசித்து வந்தாலும், எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக மிக குறைவு. என் வீட்டிற்கு தற்போது கடன்காரர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. நான்தான் நண்பர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். காரணம் வெரி சிம்பிள். எனக்குப் புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருக்கும் மீடியா துறையில், இது இரண்டும்தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு ஆக்ஸிஜன்.


நான் பேச்சிலராகவும் இருப்பதால் வீட்டுக்கு வரும் நண்பர்கள் "சிகரெட் பிடிக்கலாமா..?" என்பார்கள். நான், "வீட்டின் உள்ளே வேண்டாமே.." என்று மறுதலித்ததும், வாசலில் நின்று பிடிப்பார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பறந்துவிடுவார்கள். தொடர்ந்து நான்தான் அவர்களைத் தேடி ஓடுவேன். இப்படித்தான் எனது பத்தாண்டு கால சென்னை வாழ்க்கையில், நண்பர்களைத் தேடும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.


முதலில் ஆண்கள் என்றாலே அவர்கள் கையில் சிகரெட்டுடன் இருந்தால்தான் அது அவர்களுக்கு கவுரவம், மரியாதை என்ற ரீதியில் இந்த சிகரெட் என்னும் போதையை நம் இளைஞர்கள் மத்தியில் புகுத்திவிட்டார்கள்.


போதாக்குறைக்கு அவர்களுடைய 'திரையுலகத் தெய்வங்கள்' முதல் காட்சியிலேயே சிகரெட்டை ஸ்டைலாக உதட்டோரமாக வைத்து கை தட்டலுடன் தோன்ற, அந்தப் பழக்கம் அப்படியே விசிலடிச்சான் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கும் நமது இளைஞர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.


இந்த சினிமா, தனி நபர் மயக்கத்திலிருந்து அவர்கள் விடுபட குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆனாலும்கூட, அதற்குப் பின்னும் அந்த போதை அவர்களை விடாது. அல்லது இவர்களும் அதை விடுவதில்லை. அது அவர்களின் ஸ்டேட்டஸை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவே இப்போது மாறிவிடுகிறது.


சமீப ஆண்டுகளாக பெண்களும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. சென்னையில் சத்யம் தியேட்டர் வளாகம், ஸ்பென்ஸர் பிளாஸா என்று பொருளாதார நுகர்வு அதிகமுள்ள இடங்களில் இது மாதிரியான பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கின்ற அனைவருக்கும் இது டேக் இட் ஈஸியாக தோன்றுகிறது.


இது அவர்கள் உயிர்வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் குறைத்துக் கொண்டே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா? தெரியும். கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தும் ஏன் அதைப் பிடிக்கிறார்கள். வேறென்ன போதைதான்.. விட முடியவில்லை என்பார்கள்.


நிகோடின், பென்சோபைரின் போன்ற புற்று நோயை உருவாக்கக்கூடிய நச்சுப் பொருட்கள்தான் இந்தப் புகையிலையில் உள்ளன. புகைப்பிடிக்கும்போது புகையுடன் சேர்த்து இந்த நச்சுப் பொருட்களும் புகைப்பவரின் ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்பட்டு புற்று நோய் ஏற்படுகிறது.


நகர்ப் பகுதியில் இருப்பவர்களும், படித்தவர்களுமே மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் புகை பிடிக்கும்போது, கிராமப் புறங்களில் புகையிலையை மெல்லும் மக்களை என்னவென்று சொல்வது?


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை என்பது நமது கிராமப் புறங்களில் தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து வரும் ஒரு கலாச்சாரமாக இருந்து வருகிறது.


சுக்குமல்லி காபியும், கஷாயமும், நீராகாரமும், காபித்தண்ணி என்ற பால் இல்லாத காபியும் மணக்கும் கிராமப் பகுதிகளில், இந்த புகையிலை என்னும் அரக்கனும் கோலோச்சிக் கொண்டிருக்கிறான்.


கிராமங்களில் வாழும் மக்களில் அநேகம்பேர் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதால், இதனால் வரக்கூடிய தீமைகளை அதிகம் அறிந்தவர்களாக இல்லை. அப்படியே ஊரில் ஒருவருக்கு இந்த நோய் வந்து அவர் இறந்ததை கண்ணார பார்த்திருந்தும்கூட இதை விட முடியாமல் தவிக்கிறார்கள். அதற்கான மன தைரியத்தையும், மனத் தெளிவையும் தரக்கூடிய அளவுக்கு அவரது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் கல்வி கற்றவர்களாக இல்லாததால், இவர்களும் பின்னாளில் அதே நோய்க்கு பலியாகிறார்கள்.


நமது மத்திய அரசும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் புகையிலைப் பொருட்களுக்கு வரி அதிகமாக விதித்தாலும்கூட, சிகரெட், புகையிலை விற்பனை குறையவில்லை. எந்த விலையைக் கொடுத்தாவது வாங்கிப் புகைக்கின்றனர். உலகமயமாக்கல் காரணமாக எது எது ஏழை நாடுகளைப் பாதிக்கக்கூடாதோ, அதுவெல்லாம் இப்போது வளர்ந்து வரும், மற்றும் வளர்ந்த நாடுகளையும் பாதிக்கத் துவங்கிவிட்டது. அதன் முதல்படிதான் இந்த புகையிலை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரிப்பது.


இந்தக் கொடிய புகையிலையை மெல்லுவது, சுவைப்பது, புகைப்பது ஆகிய காரணங்களால் உலகில் ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் புகைக்குப் பலியாகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்து நீடித்தால் வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் பலியாகக் கூடிய நிலைமை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தற்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகரித்துள்ள போதிலும், பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை, பீடி, சிகரெட் விளம்பரங்களுக்குத் தடை என்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. கூடிக் கொண்டேதான் செல்கிறது.


தற்போது உலகம் முழுவதும் 65 கோடி பேர் புகைக்கின்றனர். இவர்கள் அனைவருமே புகையிலையால் புஸ்வாணமாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கென்ன வழி? சிறு வயதிலிருந்தே அதாவது பள்ளிப் பருவத்திலிருந்தே இது போன்ற போதைப் பொருட்களை, நமது குழந்தைகளிடமிருந்து நாம் தள்ளியே வைக்க வேண்டும். எத்தனை வீடுகளில் இதைப் பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள்? வீட்டின் உள்ளேயே குழந்தைகள் முன்பாகவே சிகரெட் பிடிக்கும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். அது குழந்தைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் அறிவதில்லை.


இன்னும் சில பேர் சிகரெட், பீடி முதலியவைகளை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வாங்கி வரச் சொல்கிறார்கள். இப்படி பழக்கமான பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வருவார்கள்? அதே பழக்கம் அவர்களையும் தொற்றும்தானே..


குழந்தைகளிடமிருந்து இந்த போதைகளை நாம் விலக்கியே வைக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை பெரியவர்களாகிய நாம் பார்க்கச் செல்லும்போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் இப்படியரு கொடுமைக்கு நாம் ஆளாக நேரிடுமே என்ற பய உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.


இது போதாது என்று பலரும் புகை பிடிக்கும்போது அதை அருகிலிருந்து சுவாசிப்போருக்கும் புகையிலை தொடர்பான நோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தவர் புகையால் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதால் - சிகரெட் புகையை சுவாசிக்காமல் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால்தான் பல்வேறு நாடுகளிலும் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதற்கு ஆதரவு பெருகி வருகிறது.


தற்போது புகைப்பதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை புகை பிடிப்பவர்கள்கூட வரவேற்றுள்ளனர். புகை இல்லாத சூழ்நிலையில் பழக்கப்படும்போது, புகை பிடிப்பவர்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்க வாய்ப்புண்டு.


இந்த அரசுகளும் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக புகையிலையை ஆரம்பத்தில் வளர்த்தார்கள். நிறைய வரி கிடைக்கிறதே என்றெண்ணி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காமல் குடிசைத் தொழில் போல் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தவர்கள், எல்லாம் கையை மீறிப் போனவுடன் இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.


புகையிலை மற்றும் சிகரெட்டினால் வரும் வரி வருவாய், இந்திய அரசின் பட்ஜெட்டில் கணிசமான அளவைக் கொண்டிருப்பதால் அவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய முடியாத சூழ்நிலையில் அரசு இருக்கிறது. ஆனால் அதே நேரம் இதே புகையிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகும் சிகிச்சைக்கான செலவும் இதே அளவுதான் ஆகிறது. வேறென்ன செய்வார்கள் ஆட்சியாளர்கள்?


"வரவுக்கும், செலவுக்கும் சரியாப் போச்சு..." என்று சொல்லி தேய்ந்து போன ரிக்கார்டாக வருடாவருடம் பட்ஜெட்டின்போது கிளிசரின் போடாமலேயே அழுத நிலையில் பேசுகிறார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நடிப்பும் காணாமல் போய்விடும். அடுத்த நடிப்பு அடுத்த பட்ஜெட்டின் போதுதான்..


புகையிலையால் பாதிக்கப்பட்டு மரணமடையும் நபரின் குடும்பம் எந்தளவுக்குத் துன்பப்படும் என்பதை அவரவர் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.


இந்த உண்மைத்தமிழன் ஏன் இவ்வளவு உருகி, உருகி எழுதுகிறான் என்றால் அவனும் இப்படியரு கொடுமையான அனுபவத்தைப் பெற்றவன்தான். அதிலும் அவனுடைய வாலிப வயதில் பார்க்கக் கூடாத கொடுமைகளை இந்தப் புகையிலை என்னும் அரக்கன் அவனது தந்தையின் மூலமாகக் காட்டிவிட்டான். அந்த அனுபவத்தால்தான் சொல்கிறான்.. தயவு செய்து.. தயவு செய்து.. புகையிலையைத் தவிருங்கள்..


வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அது முடிகின்றபோது தானாக முடியட்டும். நாமே அதைத் தேடிச் சென்று அடைய வேண்டாம்..


புகை பிடிக்கும் பழக்கமுள்ள வலைப்பதிவர்கள் அதைக் கைவிட உண்மைத்தமிழனின் சில உருப்படியான(!) யோசனைகள்


1. எப்போதும் வீடு அல்லது அலுவலகத்திற்குள்ளேயே இருக்கவும். வெளியே வர முயற்சிக்க வேண்டாம்.


2. எப்பொழுதும் சட்டைப் பாக்கெட்டில் குடும்பத்தினரின் சிறிய புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.


3. அலுவலகத்திலும் ஒரு புகைப்படத்தை பிரேம் செய்து கண் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்கள்கூட பேரன், பேத்திகளை பார்க்க வேண்டுமே என்ற வைராக்கியத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.


4. குச்சி மிட்டாய் அல்லது இஞ்சி மிட்டாய் அல்லது TITBITS அல்லது சூரி மிட்டாய் இவைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து முழுங்கி விடுங்கள்.


5. புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள உங்களுடைய மாம்ஸ்கள், மச்சான்கள், மாப்பிள்ளைகள் வந்தால் நீங்கள் 'இல்லை' என்று சொல்லச் சொல்லிப் பழகுங்கள்.


6. அப்படியும் வெளியில் செல்லும்போது மாட்டிக் கொண்டால் "எனக்கு சிகரெட் பிடித்தவுடன், ஒட்டக பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும். வாங்கித் தர்றியா மாம்ஸ்..?" என்று கேளுங்கள். உங்களது 'மாம்ஸ்' ஒட்டகம் பாணியிலேயே தவ்வித் தவ்வி ஓடி விடுவார்.


7. வலையுலகில் கொள்கை ரீதியான எதிரிகளை நிறைய சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைப் பற்றி நிறைய புலம்பல்களும் இடுகைகளும் வரும். தொடர்ந்து அதற்குப் பதிலளித்துக் கொண்டே இருக்கலாம். புகை பிடிக்க நேரம் இல்லாமல் போனாலும் போகலாம்.))))


8. குளிக்கும் நேரம், பாத்ரூம் செல்லும் நேரம், அலுவலக நேரம், சாப்பிடும் நேரம்.. இவை போக மீதி நேரமெல்லாம் தமிழ்மணத்தை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவாச்சும் வெறுமனே பார்த்துக் கொண்டாவது இருங்கள். புகை பிடிப்பது நாளடைவில் மறந்து விடும்.)))))


9. கவிதைகளைப் பிடிக்காதவர்கள் தப்பித் தவறிக்கூட கவிதைகள் பக்கம் போக வேண்டாம். அதேபோல் கட்டுரைகளைப் பிடிக்காது கவிதைகளைச் சுவாசிப்பவர்கள் கட்டுரைகளின் பக்கமே செல்ல வேண்டாம். இரண்டுமே கடைசியில் டென்ஷனில் கொண்டு போய் முடிந்து சிகரெட்டை தொட வைத்துவிடும்.


10. 2077-ம் ஆண்டு மே-31ம் தேதி சென்னை நடேசன் முதலியார் பார்க்கில் நடைபெறவிருக்கும் 300-வது வலைத்தமிழர்களின் மாநாட்டின்போது உண்மைத்தமிழன் அதுவரை தான் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுவதையும் வலையுலகப் பதிவர்கள் சங்கத்தில் பதிவு பெற்ற பதிவர்கள் அனவருக்கும் சம பங்காகப் பிரித்துத் தர எண்ணியுள்ளான். அன்றுவரை இருந்து எனக்குரிய பங்கை வாங்கித்தான் தீருவேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். புகையிலை வஸ்துவை நாட மனசு வரவே வராது.)))))

வாழ்க வளமுடன்

வேஷ்டியில் இருக்கிறதா கவுரவம்?

May 30, 2007


என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


'தமிழர் என்றோர் இனமுண்டு; அவருக்கோர் தனியே குணமுண்டு!' என்று தமிழர் பெருமையைப் பெருமையாகச் சொல்லியே, இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிப் போய்விட்டது.


ஆதி காலத்துத் தமிழன் எப்படியிருந்திருப்பான் என்றெல்லாம் நாம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை. அந்தந்தக் காலக்கட்டத்திற்கேற்ப பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து தன் காலத்தை முடித்துக் கொண்டிருப்பான்.


இந்தத் தமிழன் எப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்திருப்பான் என்பதெல்லாம் இப்போது கேள்வியல்ல. கலாச்சாரம் என்பதெல்லாம் அந்தந்தக் காலக்கட்டத்தில் மக்களுடைய பயன்பாட்டுப் பொருட்களாக எது இருக்கிறதோ, எது கிடைக்கிறதோ அதை வைத்து அவர்கள் வாழும் வாழ்க்கை, அல்லது வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்புதான் என்று நான் அறிகிறேன்.


இந்தக் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக உடனடியாக பிடிபடுவது உடைகள்தான். "அந்தக் காலத்துல.." என்று 90 வயது முதியவர் ஆரம்பித்தாலும் உடையில்தான் தன் சோகக் கதையை ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து நான் முதலில் பார்த்த உடை வேஷ்டியும், சட்டையும் ஆண்களுக்கு. சேலை, ஜாக்கெட் பெண்களுக்கு. பின்பு சினிமாவில் மட்டும்தான் ஜிகினா உடைகள், பேண்ட் என்றழைக்கப்பட்ட ஆதி காலத்து குழாய் டைப் சராய்கள்..


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது தந்தை அலுவலகம் புறப்படும்போது மட்டும்தான் பேண்ட் அணிவார். மீதி நேரமெல்லாம் வேஷ்டிதான்.. இந்த வேஷ்டியை எதற்காக அணிகிறார்கள் என்ற ஆராய்ச்சியிலெல்லாம் நான் இறங்கவில்லை. அது பெரியவர்கள் அணியும் ஒரு உடுப்பு என்பதாகத்தான் எனக்குப்பட்டது.


ஆனால் வேஷ்டி தங்களுக்கு வசதியானதுதானா என்று என் தந்தையும், என் அண்ணணும் ஒரு போதும் தங்களுக்குள் பேசியிருந்து நான் பார்த்ததில்லை. அயர்ன் செய்து வைத்திருப்பதை எடுக்கிறார்கள். பிரிக்கிறார்கள். ஒரு தக்கையின் மீது அடிபடுவதுபோல் சப்தம் வரும் அளவுக்கு அதை உதறுவார்கள். இந்த சப்தம் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு மட்டுமல்ல.. என் வீட்டில் அதற்குப் பிறகு வளர்ந்த சிறு குழந்தைகளுக்குக்கூட பிடிக்கும்.


என் அக்காவின் மகன் தவழும் குழந்தையாக இருந்தபோதெல்லாம் என் அண்ணன் வேண்டுமென்றே வேஷ்டியை இரண்டு, மூன்று முறை உதறுவார். பால் குடித்துக் கொண்டிருந்தால்கூட அந்த சப்தம் கேட்டு ஓரக்கண்ணால் திரும்பி என் அண்ணனைப் பார்த்துச் சிரிப்பான். என் அண்ணனுக்கு அப்படியரு பூரிப்பு.. ஒரு குழந்தையை பைசா செலவில்லாமல் சிரிக்க வைத்தோமே என்று..


இந்த வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரமான உடை என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர தமிழ்நாட்டின் மற்ற ஊரகப் பகுதிகள், கிராமங்களில் அதிகமானோர் இன்னமும் வேஷ்டியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.


இந்த அரசியல் கட்சிகளால் தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்த ஒரே ஒரு பயன் கட்சிக்காரர்கள் வேஷ்டியை தேசிய உடையைப் போல் அணிய.. இன்றைய தலைமுறையினருக்கு இது எனது அப்பாவின் உடை. தாத்தாவின் உடை என்று நாங்கள் அறிமுகப்படுத்தி வைக்க ஏதுவாக உள்ளது.


இந்தக் கலாச்சார உடைக்கு மாற்றாக நாம் வெளிநாட்டிலிருந்து தருவித்த பேண்ட் என்னும் உடை, தமிழர்களை ராஜாக்கள் போல் காட்டியதோ இல்லையோ.. அந்த மாதிரியான உடை தயாரிப்பவர்களை நிஜமான ராஜாக்களாக மாற்றிவிட்டது.


பேண்ட் ஒரு நவீன மனிதனின் சிம்பல்.. அடையாளம்.. அதை அணிவதுதான் அழகு.. என்றெல்லாம் எழுத்தும், பேச்சும் வர.. இன்னும் தமிழ்நாட்டு மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் மட்டும்தான் அந்த உடையை அணியவில்லை. மற்றபடி சகலமும் இங்கே அதுதான்..


இதை அணிந்தால்தான் மனிதர்.. இல்லையேல் மனிதர் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு ஒரு தரம் தாழ்ந்த நம்பிக்கை, மனித நம்பிக்கையின் ஊற்றாக கருதப்படும் தமிழ்நாட்டிலேயே உருவாகியிருப்பது வருத்தத்திற்குரியது.


சென்னை கிரிக்கெட் கிளப்பில் ஒரு மீட்டிங்கில் பேச சென்ற ஒருவரை, அவர் வேஷ்டி அணிந்து வந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் கிளப் நிர்வாகிகள். வந்தவரோ கிரிக்கெட் கிளப்பில் வேலை கேட்டு வரவில்லை. அங்கே நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுவதற்காக வந்த ஒரு பேச்சாளர்தான்.


மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையில் கெளரவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் நாராயணன் என்பவர். இவர்தான் அந்தப் பிரமுகர். பெயருக்கு முன்னால் சும்மா 'அமெரிக்கா' என்று சேர்த்து 'அமெரிக்கா நாராயணன்' என்று சொன்னால் தமிழக அரசியல் கட்சிக்காரர்கள், அரசியல் நோக்கர்கள் அனைவருக்குமே தெரியும். அந்தளவுக்கு முக்கியமானவர்தான்.


அமெரிக்காவில் படித்து, வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று தாய் நாடு திரும்பி சமுதாயப் பணி செய்யப் போகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாளில் சென்னையில் கால் வைத்தவரை, கட்சிப் பணிக்கு இழுத்து இந்தியப் பிரதமரிடமே நேரிடையாகப் பேசுகின்ற அளவுக்கு இந்த நாராயணனை செல்வாக்கு பெற வைத்தவர் அன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் திரு.கருப்பையா மூப்பனார்தான்.


அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைத்ததில் தற்போதைய மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர் இவர்.


கிராமங்கள்தோறும் கிராமத் தொழில் மையத்தைத் துவக்க தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நாராயணன், அது தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளத்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் இருக்கும் உள்ளரங்கிற்கு வந்துள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது சென்னை ரோட்டரி கிளப்.


கருத்தரங்கு நாட்டு நலன் சம்பந்தப்பட்டது. பேச வேண்டியவரோ இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க மனிதர். அவர் பேசப் போவதும் நாட்டு நலனின் முன்னேற்றத்திற்காக ஒரு துறையில் வளர்ச்சியை எப்படிப் பெருக்குவது என்பதைப் பற்றியதுதான்.. இதில் வேஷ்டி என்ன பாவம் செய்தது? அதைக் கட்டிக் கொண்டு ஒரு அரங்கத்திற்குள் நுழைவது என்ன பாவப்பட்டச் செயலா?


தில்லி, ராஷ்டிரபதி பவன், அசோகா ஹாலில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய பல தலைவர்களும் இதே வேஷ்டி சட்டையில்தான் அதற்கான பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதில் என்ன அழுக்கு இருக்கிறது? இதில் என்ன கவுரவக் குறைச்சல் இருக்கிறது?


'கிங் மேக்கர்' என்று பெயரெடுத்த கர்மவீரர் காமராஜர் தன் கடைசிக் காலம்வரையிலும் இதே வேஷ்டியில்தான் உலா வந்தார். பீஜிங் விமான நிலையத்தில் அந்த மாமனிதருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தபோது அந்தக் கடும் குளிரிலும் வேஷ்டி அணிந்த அந்த கம்பீர உருவம், நாற்பது தப்படிகள் நடந்து மரியாதையை ஏற்றுக் கொண்டபோது கிடைத்த பெருமை தமிழ்நாட்டுக்குத்தானே..


லால்பகதூர்சாஸ்திரி என்ற பரம பரதேசியான இந்தியப் பிரதமர் ஒருவர் 'பிரதமர்' என்ற பதவிக்கே பெருமை சேர்த்தவர். தாஷ்கண்ட்டில் இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காகச் சென்றவரிடம் இரண்டே இரண்டு வேஷ்டிகள்தான் இருந்தது. ஹோட்டல் அறையில் தினமும் இரவு தன்னுடைய வேஷ்டியை தானே துவைத்து காய வைத்து மறுநாள் அதையே அணிந்து கொண்ட வரலாற்றையும் இந்தியா பார்த்திருக்கிறது..


அன்றைய தினம் நாராயணனால் அந்த நிலைமையில் யாரிடமும் பேச முடியவில்லை. "Naaraaayaaanaan..." என்று ஸ்டைலாக பத்திரிகையாளர்கள் முன்பாகவே அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் செல்லமாக அழைக்கும் அளவுக்குச் செல்வாக்கில் இருந்த இந்த நாராயணன், இன்றைக்கு அந்தக் கருத்தரங்கில் பேசியே தீர வேண்டுமே என்பதற்காக அருகில் இருக்கும் ஒரு கடைக்கு ஓடிப் போய் புதிதாக ரெடிமேட் பேண்ட் ஒன்றை அணிந்து வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிவிட்டு வந்திருக்கிறார்.


பாவம் அவர் என்ன செய்வார்? நாடு முழுவதும் நடக்கும் இந்தக் கருத்தரங்குகள் பற்றிய செய்திகளை வாரந்தோறும் பிரதமருக்கு அனுப்பி வைக்கும் பணி அவருக்குக் காத்திருக்கிறது. கருத்தரங்கில் பேசி முடித்துவிட்டு மறுநாள்தான் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.


அந்த கிளப் நிர்வாகியோ இதற்கு சமயோசிதமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். "எங்களுக்கு முன்னால் இருந்த நிர்வாகிகள் இந்த விதிமுறையை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் அதனை நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம்.." என்று.. ஏன் அந்த நிர்வாகியின் பெயரைக் கொண்டவர்கள் யாரும் அங்கே பணியாற்றக் கூடாது என்று ஒரு நிபந்தனையை விதித்திருந்தால், இந்த நபர் சும்மா விட்டிருப்பாரா?


அப்படியென்ன அந்த வேஷ்டியில் ஒரு கறையைக் கண்டார்கள் இந்தக் கயவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. கருத்தரங்கம் ஏற்பாடு செய்வதே பேசுவதற்காகத்தான்.. யார், யார் எந்த மாதிரி உடையில் வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக யாரும் அங்கே வரப் போவதுமில்லை. பிறகென்ன?


இந்த கிளப் நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளில் சென்று படித்து முடித்துவிட்டு இந்தியாவிற்கு ஓய்வெடுப்பதற்காக வந்தவர்கள். வீட்டில் ஓய்வெடுப்பது போதாது என்று இது மாதிரியான கிளப்பிற்கும் வந்து ஓய்வெடுக்கிறார்கள். இவர்களது பார்வையில் வேஷ்டி கட்டிய ஒருவன் கிராமத்தான், பட்டியான், முட்டாள், அருவெருக்கத்தக்கவன் என்பதுதான்..


இப்படியரு முட்டாள்தனமான விதிமுறை இன்றோ, நேற்றோ இவர்கள் வைத்திருக்கவில்லை. ஏற்கெனவே இதேபோல் இதே கிளப்பிற்கு ஒரு மீட்டிங்கிற்கு வந்த இந்தியத் திருநாட்டின் ஒரு முக்கியப் பிரமுகரை அனுமதிக்க மறுத்து சர்ச்சையைக் கிளப்பினார்கள். அவர் யார் தெரியுமா?


இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி, மூதறிஞர் ராஜாஜியின் சீடர், கர்ம வீரர் காமராஜரின் அமைச்சரவையில் விவசாயத் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மத்தியில் பண்டித நேரு அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர், இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புண்ணியவான், ஹிந்தி மொழி பிரச்சினைக்காக தன் மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்த தூயவர், மகாராஷ்டிர மாநில கவர்னராக பதவி வகித்தவர், எல்லாவற்றிற்கும் மேலாக 'பாரதரத்னா' விருதையும் பெற்றவர். அவர் அமரர் திரு.சி.சுப்ரமணியம்.



அப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் சொன்ன பதில், "இது எங்களது கிளப்பின் விதிமுறைகளுக்கு முரணானது.." அவ்வளவுதான் சிம்பிளான பதில். அப்போது ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு சி.எஸ். என்றழைக்கப்படும் இந்தப் பெரியவர் மீது கிண்டல் எழுப்ப ஒரு சமயமும், காரணமும் கிடைத்ததால் அதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அலட்சியப்படுத்தினார்கள்.


இந்த கிளப் இப்போதும் சொசைட்டிஸ் ஆக்ட்டின்கீழ் செயல்படும் ஒரு அமைப்புதான். சொஸைட்டிஸ் ஆக்ட்டின் கீழ் செயல்படும் அமைப்புகளின் விதிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கும், மக்கள் பொது நலனுக்கும் விரோதமாக இருந்தால் அந்த அமைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்போதே அந்த வேலையைச் செய்திருந்தால் இந்த உயர்குடி கனவான்கள் இப்படி ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்திருக்க மாட்டார்கள்.


ஆனால் யார் கேட்பது? அங்கே உறுப்பினர்களாக இருப்பவர்களெல்லாம் ஆட்சியாளர்களின் 'கற்பகத்தரு'க்கள்.. பெரும் செல்வந்தர்கள். தமிழ்நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியப் புள்ளிகள். எப்போது வேண்டுமானாலும் எந்தக் கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாரி, வாரி நன்கொடை வழங்கும் பழக்கமுள்ள எட்டப்பர்கள். எந்தக் கட்சிக்காரர்கள் அவர்களைப் பகைத்துக் கொள்வார்கள்? சொல்லுங்கள்..


அவர்களும் சாமான்யப்பட்டவர்களல்ல.. அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்தால் வேஷ்டியுடன்தான் வருவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு விழா வைத்து நடத்தி முடித்தி அனுப்பிவிடுவார்கள். அல்லது அலுவலக வாசலில் ஒரு மேடை போட்டு நடத்தி முடித்து வணக்கம் போட்டுவிடுவார்கள். தப்பித்தவறிக்கூட உள்ளேயிருக்கும் உள்ளரங்கில் மட்டும் மீட்டிங் வைக்கவிட மாட்டார்கள். அந்தளவிற்கு தங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை நீடித்து வருகிறார்கள்.


அந்த வேஷ்டி உடை என்ன அவ்வளவு மோசமானதா? எதற்காக அவர்கள் வேஷ்டி அணிந்து உள்ளே வரக்கூடாது என்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. இன்றுவரை அந்த ரகசியத்தை அவர்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்கள். யார் கேட்பது..?


வேஷ்டி என்பது தமிழர்களின் கலாச்சார உடை. அதை அணிவதுதான் தமிழர்களின் கடமை என்று நான் சொல்லவில்லை. விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். அசெளகரியமாக இருப்பவர்கள் அணியாமலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.


ஆனால் பொது விழாக்களுக்கு வரும்போது வேஷ்டி அணிந்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் ஒரு இடத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று சொல்வது தென்னாப்பிரிக்காவில் 'இங்கே இந்தியர்கள், கருப்பர்களைத் தவிர மற்றவர்கள் நுழையலாம்' என்று போர்டு எழுதி மாட்டி இனவெறியைக் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டார்களே, அந்தக் கொடுமைக்குச் சமமானது.


இப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் வெளியில் சொல்கிறார்கள். "எங்களிடம் மட்டும் இந்த அரசியல்வாதிகள் விளையாட முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே எங்களது பாக்கெட்டில்தான் இருக்கிறார்கள்.." என்று..


மதுரை அருகே புகைவண்டியில் சென்று கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர், இந்த வேஷ்டிகூட இல்லாமல் கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலில் உழுது கொண்டிருந்த ஒரு தமிழனைப் பார்த்துத்தான் தன் கோலத்தையும் மாற்றிக் கொண்டு 'மகாத்மா' என்று பெயரெடுத்தது இந்த உயர்குடி கனவான்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.


வேறென்ன சொல்வது...?

என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?

May-29, 2007


என் இனிய வலைத்தமிழ் மக்களே,


சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் அனைவரும் தவறாமல் கேட்கின்ற கேள்வி 1. கலைஞர் டிவி எப்ப வரும்? 2. ஹெல்மெட் வாங்கிட்டீங்களா? என்பதுதான்.


இதில் முதல் கேள்விக்கான பதிலாக சேனல் துவங்கப்படும் தேதியை சொல்லிவிட்டாலும், அது எந்த ரூபத்தில் வரும் என்பது தெரியாததால் இது தொடர்பான துணைக் கேள்விகள் எழத்தான் செய்யும். அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். அடுத்த கேள்வியான ஹெல்மெட்டை பார்ப்போம்.


'இனிமேல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும்..' என்ற உத்தரவின் மூலம் தமிழக அரசும், காவல்துறையும் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. "விபத்தில் இறப்பவர்கள் பலரும் பின்னந்தலையில் அடிபட்டுத்தான் இறக்கின்றனர். தலையில் ஹெல்மட் அணிந்திருந்தால் இந்தச் சாவிலிருந்து தப்பிக்கலாம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.


பைக்கில் செல்லும்போது விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிக அதிகமாக தலையில்தான் அடிபடுகிறார்கள் என்கிறார்கள். காரணம் என்ன? பின்னால் வரும் வண்டி மோதினாலோ அல்லது இடித்துக் கொண்டு சென்றாலோ விழும் போது, உடல் பின்நோக்கித்தான் செல்லும். அது உடல் இயல்பு. அறிவியல் உண்மை. இதற்கு எந்த மருத்துவரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம்.


கீழே விழுகிறான். தலையில் அடிபடுகிறது. ரத்தம் தலைக்குள்ளேயே சிந்தி உறைந்து போகிறது. இதன் விளைவாய் கோமா ஸ்டேஜுக்கு சென்று சில நாட்கள் 'இழு, இழு..' என்று இழுத்துவிட்டு அவன் குடும்பம் கையில் வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் கரைத்த பிறகு, சப்தமில்லாமல் 'விதியின் வெற்றி'யுடன் இறந்து போகிறார்கள். சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் வருடக்கணக்காக படுக்கையில் படுக்கிறார்கள்.


இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று சொல்லி யாரும் உண்மையை வெளிக்கொணர முடியாது. அந்தச் சமயத்தில் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கும் போல.. நடந்துவிட்டது. அவ்வளவுதான்.. இது நம்மை நாமே தேற்றிக் கொண்டு, துக்கத்தை மறக்க நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள்.


தமிழ்நாட்டில் சென்ற ஐந்து வருட காலத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் 5 சதவிகிதத்தினருக்கும் குறைவுதான். இப்படித்தான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதிகமான விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவை.. கார் மற்றும் வேன்கள், பஸ், லாரி மோதல், ரயில்வே கிராஸிங்கை கடக்க முயலும்போது ரயில்களுடன் பிற நான்கு சக்கர வாகனங்கள் மோதுதல்.. இவற்றின் மூலம் மொத்தமாக ஜனங்களை 'மேலே' அனுப்புவது... இப்படித்தான் கொத்து, கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்திருக்கின்றன.


இவற்றில் புதிய கண்டுபிடிப்பாக சென்ற ஆண்டு டாடாசுமோ வேன் மற்றும் மாருதி காரில் பயணம் செய்யும்போதுதான் நிறைய விபத்துக்களும், மரணங்களும் நேரிடுகின்றன என்று அந்தக் கார்களைத் தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு கண்டன அறிக்கையெல்லாம் வழங்கினார்கள் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடிய காவல்துறையினர்..


இந்த சாலை பாதுகாப்பு வாரத்தை சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் தெருத்தெருவாகக் கொண்டாடியபோது இதை பேச்சுக்கு பேச்சு சொன்னவர்கள், இப்போது திடீரென்று 'ஹெல்மெட்' என்ற பேச்சு வந்தவுடன் அந்த புள்ளிவிவரத்தையே மறந்துவிட்டார்கள். அல்லது மறைத்துவிட்டார்கள்.


ஹெல்மெட் அணியாமல் வண்டியோட்டுபவர் முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாய் அபராதம் என்றும், அடுத்தடுத்த முறைகள் என்றால் 300 ரூபாய் அபராதம் என்றும், தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமை ரத்தாகும் என்றும் காவல்துறை உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.


அதோடு வண்டியின் பின்னால் அமர்ந்து செல்பவரும், கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டுமாம். 4 வயது குழந்தைக்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்று 'இந்த தேவாதி தேவர்கள்' சொல்லிவிட்டார்கள். "இனி எந்தக் காலனும் உங்களை அணுகமாட்டான். நாங்கள் உங்களைக் குடும்பத்தோடு காப்பாற்றுவோம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.


எல்லாம் சரி.. விபத்துக்கள் நடப்பதற்கு யார் காரணம்? மனிதத் தவறுகள்தானே. விபத்தில் பாதிக்கப்படும் இருவரில் ஒருவர்தான் அந்த மீறலைச் செய்திருப்பார். அவரிடம் கேட்டால் "போய்விடுவார் என்றுதான் நான் நினைத்தேன்.." என்பார். அடிபட்டவரிடம் கேட்டால் "அவன்தான் நான் கிராஸ் செய்வதற்குள் மோதி விட்டான்.." என்பார்.


இது முதல் வகை விபத்துக்கள்.. இரண்டாம் வகை விபத்துக்கள்.. ரோடு. சாலைகள் சரியில்லாமல் பல்லை இளித்துக் கொண்டிருப்பதற்கு யார் காரணம்?


ரோட்டோரமாக இருக்கின்ற கடைகளை 'விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்லி நாள்கணக்கில் மணலையும், செங்கல்லையும் ரோட்டோரமாக கொட்டி வைக்கிறார்கள். சாப்பிடக்கூட நேரமில்லாமல் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருப்பவனுக்கு கல்லும், மண்ணுமா ஒரு விஷயம்.. ஒடித்து, ஒடித்து திரும்பும்போது ஸ்லிப்பாகி கீழே விழுகிறான்.. அடிபடுகிறான். 'ஆயுசு கெட்டியாக' இருந்தால் பிழைப்பான். இல்லையெனில் 'டிக்கெட்டு'தான்..

ஆனால் இதற்கான வழியை ஏற்படுத்தி வைத்திருப்பது யார்? இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது எதனால்? மணல் கொட்டியிருப்பதினால்தானே.. அதை தடுத்தால்தான் என்ன?


அரசியல்வாதிகளுக்கு கை அரித்தால் எப்படியெல்லாம் காசு பார்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் பணம் பண்ணத் தயங்க மாட்டார்கள். வானமும், பூமியும் சும்மாதான கிடக்குது.. ஆண்டவனோட இடம்தானே.. மக்களோடது இல்லையே..? மக்களுடைய இடத்தையே நம்ம 'மாமியார் வீட்டு இடம்'ன்னு சொல்றோம்.. கண்ணுக்குத் தெரியாத ஆண்டவனைப் பத்தி யாருக்கு என்ன கவலை..? 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என்பதைச் சொல்லாமல் சொல்லி அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், அள்ள ஆரம்பித்ததுதான் ஆற்று மணல் கொள்ளை.


ஒரு நாளைக்கு ஒரு மணல் லாரி கண்டிப்பாக இருபத்தைந்து டிரிப் அடிக்க வேண்டும். மணல் அள்ளும் இடத்திலிருந்து மணலை கொட்டப் போகும் இடம்வரைக்கும் உள்ள இடம் எத்தனை கிலோ மீட்டராக இருந்தாலும், டிரிப்ஷீட் புல்லாக வேண்டும். அப்போதுதான் கட்சிக்காரர்கள், ஆட்சியாளர்கள், காண்ட்ராக்ட் எடுத்தவர்கள்.. என அனைவருமே பணம் பார்க்க முடியும்.


இந்த மணல் அள்ளும் விஷயத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தமிழகத்தையே சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள். இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லை.. எல்லாக் கட்சி அரசியல் நாய்களும், ஒன்றாகவே கூட்டணி வைத்து கொள்ளையடித்து வருகிறார்கள்.


கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துக்களில் இறந்து போனவர்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் 80 சதவிகிதம் பேர் இந்த மணல் லாரிகளால் தாக்கப்பட்டு இறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதற்கு என்ன தீர்வு சொல்வார்கள் காவலர் திலகங்கள்.


"அவர்கள் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள். ஆளுவதற்காகவும், வாழ்வதற்காகவுமே அவதாரம் எடுத்தவர்கள். நீ சாதாரண மிடில் கிளாஸ்.. எங்களைச் சந்தோஷப்படுத்த மட்டுமே உனக்கு அனுமதி.. நீ சந்தோஷப்படுவதை பற்றி நினைத்துக்கூடப் பார்க்காதே..." என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.


இன்றுவரை ஆட்சி மாறி, வேறு ஆட்சி வந்தாலும்கூட மணல் கொள்ளையும் இதன் விளைவாய் மணல் லாரி மோதி விபத்துக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எந்தக் கனவான் வந்து தடுப்பானாம்..?

இப்போது ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு போலீஸ் சொல்வது இதைத்தான்.. "அவர்கள் இடிப்பார்கள். அடிப்பார்கள். உன் தலையில் ஹெல்மெட் இருக்கு. உயிர் போகும் அபாயம் இல்லை. காயத்தோடு பிழைத்துக் கொள்வாய்.. பொழைச்சுப் போ.. போ.." இதுதான் காவல்துறை நமக்குச் சொல்லும் செய்தி..


அடுத்தது நம் ஊர் சாலைகள் இருக்கும் லட்சணம். ஒரு வருடத்திற்கு சாலைப் பராமரிப்பில் மட்டும்தான் நமது அரசியல்வாதிகள் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இல்லாத இடத்தில் ரோடு போட்டதாக பில் போடுவார்கள். பணம் சாங்ஷன் ஆகிவிடும்.. அந்த ரோடு எங்கே இருக்கிறது என்று நீங்கள் 'நாஸா'விடம் சொல்லித்தான் தேட வேண்டும்.


இருக்கின்ற நல்ல சாலைகளிலும் மேற்கொண்டு 'பராமரித்தோம்' என்று சொல்லி பில் போடுவார்கள். இதற்கான செங்கல்லும், மணலும் அவரவர் வீடுகளுக்குப் போய்விடும். பணத்தையும் பங்கு போட்டுக் கொள்வார்கள். நாமும் எதுவும் தெரியாதது போல் அதே சாலையில் நடப்போம்.


ஒரே சாலைக்கு ஒரே ஆண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்ததாக பில் போடுவார்கள். தொலைந்தது.. அடுத்த பத்து வருட சம்பாத்தியத்தை இந்த ஒரே பில்லில் சாப்பிட்டுவிடுவார்கள் நமது அரசியல் நாய்கள்.. நாம் அதே குண்டும், குழியுமான ரோட்டில் வயிறு கலங்கிப் போய் நடக்கத்தான் வேண்டும்.


இப்போதும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை சாலையைச் சென்று பாருங்கள்.. எத்தனை முறை ரோடு போடுவார்களோ தெரியாது.. அத்தனையும் ஒரு அரை மணி நேர மழைக்குக்கூடத் தாங்காது.. அடுத்த நாளே பெரிய, பெரிய பள்ளமாக உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கிப் போய் தெரியும். மறுபடியும் இன்னொரு முறை கான்ட்ராக்ட், பில்.. கமிஷன்.. அப்பப்பா.. பொழைக்கத் தெரியாத நம்மை மாதிரி மனிதர்கள் மட்டுமே அதில் வண்டியை ஓட்டி சிலர் காயம்படுகிறோம்.. பலர் 'மேலே' போய்ச் சேர்கிறார்கள். இவர்களை யார் கேட்பது?


தங்களது வீடு, உறவினர்கள் வீடுகள், அமைச்சர்கள் வீடுகள் இருக்கின்ற இடங்களில் மட்டும் சாலைகளை அலங்கரித்து வைத்துக் கொள்கிறார்கள். சென்னையின் மத்திய பகுதியை மட்டும் பளபளவென்று வைத்து என்ன புண்ணியம்? மேடவாக்கம் சென்று பார்த்திருக்கிறீர்களா? ஏன் விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்கின்ற ரோட்டில் போய் பாருங்கள்.. குடலே கலங்கிவிடும்.. அந்த அளவிற்கு 'அற்புதமாக' உள்ளது.


வெளிநாடுகளில் இருக்கும் சாலைகளைப் பற்றி கேட்கும்போதும், திரைப்படங்களில் அவற்றைப் பார்க்கும்போதும் நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான் என்றுதான் தோன்றுகிறது. அங்கேயும் அரசியல் இருக்கிறதே.. ஆட்சிதானே நடக்கிறது.. அங்கு மட்டும் எப்படி? முகமே தெரியுமளவுக்கு பளாபளா என்று ரோடு..? பாவம் அவர்கள்.. கமிஷன் வாங்கத் தெரியாத 'பகுத்தறிவில்லாத' முட்டாள் அரசியல்வாதிகள்.. என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.


ரோடு பராமரிப்பு, சாலை வசதி, உள் கட்டமைப்பு முறையாக இல்லாமை இப்படி அடுக்கடுக்கான வசதிக் குறைவுகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு "விபத்தினால் காயம் ஏற்படாமல் தவிர்த்து விடுங்கள்.." என்று வெட்கம்கெட்டத்தனமாக கூவுகிறார்களே கேடுகெட்ட அரசியல்வாதிகள்... இவர்களையெல்லாம் என்ன செய்வது?


முதலில் விபத்தே ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கலாமே..? யாருக்குமே கமிஷன் கொடுக்காமல், கமிஷன் வாங்காமல் நல்லதொரு சாலை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்போம் என்ற அக்கறை இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உண்டா?


"இதெல்லாம் எதற்கு? அந்த அக்கிரமக்காரர்கள் என்றைக்குத் திருந்தியிருக்கிறார்கள்? நீங்கள் என்ன எழுதினாலும் அவர்களுக்கு உரைக்காது.. நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க.. வாழ்க்கைல ஒரு முறைதானே.. வாங்கிருங்களேன்.." என்கிறார்கள் சிலர்.


சரி வாங்கிக் கொள்கிறேன். தலையில் மாட்டிக் கொள்கிறேன்.. சாவே வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்..?


ஒரு மனிதன் இறப்பே வராமல் வாழ்ந்தே தீர வேண்டும் என்று எண்ணினால் முதலில் சாவு தன்னை நெருங்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி..? முதலில் சாவு அவனை எப்போது நெருங்கும் என்பது அவனுக்குத் தெரியுமா..? பிறகு எப்படி அவனது சாவை அவனே தள்ளிப் போடுவது..? தடுப்பது..?


சாவு எப்படியிருந்தாலும் எந்தவொரு ஜீவராசிக்கும் வந்தே தீரும். அதைத் தடுக்க யாருக்கும் சக்தி இல்லை என்னும் 'பகுத்தறிவு' உள்ள மனிதன், காலம் காட்டும் திசையில் அது போகும்போக்கிலேயே போய்க் கொண்டிருப்பான். சாவின் மீது பயமில்லாமல், தைரியமாக அதனைச் சந்திக்கும் துணிச்சலுள்ளவன், அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்பான்.


பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், காலன் அழைக்காமல்விடப் போவதில்லை. 80 வயதில் இமயமலையில் ஏறினாலும், அழைக்கின்ற காலம் இல்லையெனில், அப்போதும் அழைக்க மாட்டான் காலன். அது அவரவர் வினைப்பயன் என்பது இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தெரியும்.


சாதாரணமாக சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது தவறி கீழே விழுந்து செத்தவனும் இருக்கிறான். 80-வது மாடியிலிருந்து தவறி விழுந்து, உயிர் பிழைத்தவனையும் காண்கிறோம். இரண்டுமே அதிசயம்தான்.. ஆச்சரியம்தான். ஆனால் நடந்திருக்கிறதே..


நிற்க.. விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.


"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.


அதிலும், வாழ்ந்து கிழித்தது போதும். போய்ச் சேரத் தயாராக இருக்கிறேன் என்ற நினைப்பில் வெறும் பூதஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் இந்த 'உண்மைத்தமிழனைப்' போல பல கோடி பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் காப்பாற்றி வைத்து யாரிடம் நல்ல பெயர் எடுக்கப் போகிறார்கள்?


கடைசியாக,


இதைப் போட்டுக் கொண்டு வண்டியில் செல்கிறோம். விபத்து ஏற்பட்டால் சாவே வரக்கூடாது. வந்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்களா? அப்போது வந்து, "இது அவன் விதி.. கதை முடிஞ்சிருச்சு.. எமதர்மன் பின்னாடியே 'ஒளி வேகத்துல' வந்து தூக்கிட்டான்.." அப்படி.. இப்படின்னு கதை விடக்கூடாது..


என்ன செய்வார்கள்-சொல்வார்கள் காவல்துறையினர்..?

அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


தமிழக ரசிகர் பெருமக்களுக்கு 'சிவாஜி' பட ரிலீஸில் எவ்வளவு குழப்பமோ அதைவிட அதிகமான குழப்பம் டெல்லி அரசியல்வாதிகளுக்கு.


இந்தியாவின் 12-வது ஜனாதிபதியாக யாரை உட்கார வைப்பது என்று யோசனை செய்து, யோசனை செய்து மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள் அனைத்துக் கட்சியினரும்.


11-வது ஜனாதிபதியாக கொடி கட்டிப் பறந்த திரு.அப்துல்கலாம் அவர்களால்தான், இந்த 12-வது ஜனாதிபதி தேர்வு மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்திருக்கிறது. காரணம் இந்த ஐந்து வருடத்தில் தற்போதைய 'பொம்மலாட்ட' பிரதமரைவிட, கயிற்றைத் தன் கையில் வைத்திருக்கும் 'பொம்மலாட்ட ஆசிரியையை' விடவும் அதிகமாக மக்களிடையே நெருங்கிவிட்டார் தற்போதைய ஜனாதிபதி. இது அரசியல்வாதிகளுக்கு ஆபத்தான விஷயம்தானே..


தங்களைத் தவிர வேறு யாராவது மக்களிடையே பிரபலமானால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? அடுத்த நபரையும் அப்படி ஆளாக கொண்டு வந்து வைத்தால் நமக்குத்தானே சிக்கல் என்று இப்போது அனைவருமே வட்டமேசை மாநாடு போடாத குறையாக தங்களுக்குள் மீட்டிங் பேசி கொண்டிருக்கிறார்கள்.


உலகளவில் மற்ற நாடுகளைப் போல இந்திய ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதையே இப்போதைய ஜனாதிபதியும் குறையாகச் சொல்லி கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.


பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும், மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டுத்தான் இந்தியாவில் மக்களுக்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


இந்தியாவில் நடப்பது மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி முறை என்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் அதிகாரம் மக்களுக்கில்லை. எங்களுக்குத்தான் என்கிறார்கள் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும்.


மற்றத் தேர்தல்களைப் போல இதுவும் ஒற்றை எண்ணிக்கை ஓட்டு அல்ல. ஒவ்வொரு எம்.பி.க்கும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கும் மதிப்பு உண்டு. இந்த மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுமாம்.


தொகுதியின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்குச் சென்று தூங்குவதால் எம்.பி.க்களின் ஓட்டுக்கு மதிப்பு அதிகம். அவரவர் மாநிலத் தலைநகரங்களில் இருக்கும் சட்டமன்றத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தாவி, தாவி அடிப்பதால் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு சற்று குறைவாம்.


தற்போது ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு மாநிலத்தின் அளவுக்கேற்ப 100 முதல் 200 வரை இருக்கும்.


அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எதற்கும் அஞ்சாத வீராதி வீரர்களை எம்.எல்.ஏ.க்களாக வைத்திருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு 208.


அதே சமயம் என்றைக்காவது ஒரு நாள் முடிந்தால் பஸ் மீது கல்லெறியும் அளவுக்கு வீரத்தைக் காட்டும் தமிழக எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 178.


கையில் வாளுடன் சொர்க்கம் போகக்கூடத் தயார் என்று தெருவில் வந்து போராடும் சிங்கங்களான பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ.க்களின் மதிப்பு 116.


காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ.க்கள் விவரமில்லாதவர்களாகவும், அடிதடியில் அவ்வளவு பக்குவம் இல்லாதவர்களாக இருப்பதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு 72-தானாம்.


மாநிலங்கள்வாரியாக எம்.எல்.ஏ.க்களின் மானாவாரி ஓட்டு மதிப்பையும் கொஞ்சம் பாருங்கள்..


உத்தரபிரதேசம் 208
தமிழகம் 176
மகாராஷ்டிரா 175
பீகார் 173
கேரளா 152
மேற்கு வங்கம் 151
ஒரிசா 149
ஆந்திரா 148
குஜராத் 147
கர்நாடகா 131
மத்தியபிரதேசம் 131
சட்டீஸ்கர் 129
ராஜஸ்தான் 129
அசோம் 116
பஞ்சாப் 116
அரியானா 112


எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும், இந்த ஜனாதிபதி தேர்தல் ரகசிய ஓட்டெடுப்பு முறையில்தான் நடக்கும்.

'அந்த வேட்பாளர் இன்னும் கல்யாணமாகாதவர், மக்களோட கஷ்டத்தை நல்லாத் தெரிஞ்சவர், அவர்தான் பதவிக்கு வரணும்..' அப்படீன்னு நீங்களா எதையும் நினைச்சுக்கக் கூடாது.. இதெல்லாம் தனி நபர்களின் சர்வாதிகாரம்.. கட்சி யாருக்கு ஓட்டுப் போடச் சொல்லுதோ அவருக்குத்தான் எல்லாரும் ஓட்டுப் போடணும். இதுதான் கட்சிகளின் ஜனநாயகம்.


லோக்சபாவில் இருக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 275. இந்த இரு அவை எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,47,000. அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5.48,000. இரண்டையும் சேர்த்தால் ஜனாதிபதி தேர்தலில் விழப் போகும் ஓட்டுக்களின் ஒட்டு மொத்த மதிப்பு 10,95,000.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர் 5,48,000 அளவுக்கு பெரும்பான்மை ஓட்டுக்களைப் பெற வேண்டும். இந்த அளவு ஓட்டை எதிர்பார்த்துத்தான் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.


தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்காக ஐந்து அணிகள் தயாராக கியூவில் நிற்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜ்வாதி கட்சி உருவாக்கியுள்ள மூன்றாவது அணி(அ.தி.மு.க., தெலுங்கு தேசம் உட்பட) மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடது சாரி கட்சிகள், உ.பி.யின் புதிய 'புரட்சித்தலைவி' மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஐந்து அணிகளே முக்கியமாக கருதப்படுகின்றன.


அனைத்து மாநிலங்களிலும், பாராளுமன்றத்திலும் பாரதீய ஜனதா அணியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 3,47,000 ஓட்டுக்கள் இருக்கின்றன. இவர்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால் கூடுதலாக இன்னும் 2,01,000 ஓட்டுக்கள் தேவைப்படுகின்றன.


முலாயம்சிங்கின் சமாஜ்வாடி தலைமையிலான மூன்றாவது அணியிடம் 1,13,000 ஓட்டுக்கள் உள்ளன. முலாயம்சிங்கோ காங்கிரஸைவிட பாரதீய ஜனதாவைத்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திட்டித் தீர்த்தார். ஆனாலும் அரசியல்வாதிகள் இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள். நாளையே கொஞ்சிக் கொள்வார்கள் என்ற ரீதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முலாயம் கட்சியினர் ஓட்டு போட்டால், இவர்களின் ஓட்டுகளையும் சேர்த்து இக்கூட்டணிக்கு 4,60,000 ஓட்டுக்கள் கிடைக்கும். அப்படியும் 88,000 ஓட்டுக்கள் இன்னமும் தேவை. மீதிக்கு என்ன பண்ணுவாங்க தாமரைக் கட்சிக்காரங்க..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


காங்கிரஸ் பக்கம் பாருங்க.. அவுங்க என்னமோ தெரியலை.. சம்பந்தமே இல்லாம ஐக்கிய முற்போக்கு கூட்டணின்னு பேரு வைச்சிருக்காங்க.. இவர்களிடம் மொத்தமாக 4,24,000 ஓட்டுக்கள் உள்ளனவாம். இவுங்க சொல்ற ஜனாதிபதி ஜெயிக்கணும்னா, இவுங்களுக்கு இன்னமும் 1,24,000 ஓட்டுக்கள் வேணும்.


"ஆதரிப்போம். தட்டிக் கேட்போம், அட்ஜஸ்ட் செய்து கொள்வோம், போர்க்கொடி தூக்குவோம், ஆட்சியைக் கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்"னு டெய்லி பொழுது விடிஞ்சு பொழுது போனா புலம்புறாங்க பார்த்தீங்களா நம்ம அரிவாள், சுத்தியல் கட்சிக்காரங்க.. அவுங்ககிட்ட 1,11,000 ஓட்டு இருக்குதாம்.


தப்பித் தவறி இவுக மன்மோகன்சிங் மேல பாசம் வைச்சு காங்கிரஸ¤க்கு ஓட்டுப் போட்டா அப்ப கூட்டணியின் பலம் 5,35,000 ஓட்டுகளா மாறிரும். அப்பவும் கூடுதலா இன்னும் 13,000 ஓட்டுகள் வேணும். இவுக என்ன பண்ணுவாங்க..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


இப்போது டெல்லியில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில் தாங்கள் சொல்கின்ற வேட்பாளர்தான் ஜெயிக்க வேண்டும் என்று உலகத்தின் ஒரேயரு ஜனநாயக கம்யூனிஸ்ட்களான இந்திய இடதுசாரி கட்சிகள் விரும்புகின்றன. தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்ற மப்பான மனநிலையில் உள்ளார்கள் தோழர்கள்.


இப்போது இரு தரப்பாரின் பார்வையும் உத்தரப்பிரதேசத்தின் புதிய 'புரட்சித் தலைவி' மாயாவதி மீதும், ஆட்சியைப் பறி கொடுத்த முலாயம்சிங்கின் மீதும் படிந்திருக்கிறது.


மாயாவதி என்ற 'புரட்சித் தலைவி'யிடம் 60,000 ஓட்டுக்கள் உள்ளன. இந்தப் 'புரட்சித் தலைவி', 'இந்தியாவின் புரட்சித் தலைவி'யான அன்னை சோனியாவுக்கு கை கொடுத்தால், பெரும்பான்மையைவிட 48,000 ஓட்டுக்கள் அதிகமாகவே கிடைக்கும்.


அதே நேரத்தில் தன்னை ஒரு காலத்தில் முதுகில் குத்தி, கீழே போட்டு உருட்டி, மிரட்டி, பல வழக்குகளைத் தொடுத்து, இருந்த கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்து தன்னை அலைக்கழிக்க வைத்த பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக மாயாவதி சாய்ந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5,26,000 ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இப்போதும் அவர்களுக்கு 28,000 ஓட்டு கம்மி.
என்ன செய்வாங்க வாஜ்பாயும், அத்வானியும்..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


இப்பத்தான் இந்த சுயேச்சைகளுக்கு மவுசு கூடுது. சுயேச்சைகளாகவும், எந்த கட்சியிலும் சேராமல் நடுநிலைமைக் கருத்துக்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அள்ளி வீசும், இந்த உண்மைத்தமிழனைப் போன்று இருப்பவர்களின் ஓட்டு மதிப்பு 39,000 உள்ளது.


இவுங்க யாருக்கு ஓட்டுப் போடப் போறாங்கன்னு இவுகளுக்கே இன்னிவரைக்கும் தெரியாது. எந்தக் கட்சி, யார் வேட்பாளர் அப்படீங்கறதுக்காக யாரும் வெயிட் பண்ணலை.. யாரு 'சூட்கேஸை அதிகமாகத் திறப்பாங்க'ன்னு பார்த்துட்டு அப்புறமாத்தான் இவுக அவுகளோட முடிவைச் சொல்வாங்க.. ஸோ.. அதுவரைக்கும் மத்தக் கட்சிக்காரங்க என்ன செய்வாங்க..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


ஆக, காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட்டுகள் இவர்களுடன் சமாஜ்வாதி கட்சியோ, அல்லது பகுஜன் சமாஜ் கட்சி என்று பொருந்தாக் கூட்டணி ஒன்று பொருந்தி வந்தால் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிப்பார்.


காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக கட்சியின் துணைத் தலைவரான அமர்சிங்கை அனுப்பி வைத்தும், சினிமா பாணியில் அந்த வீட்டுக்காரம்மா சோனியாஜி அவரைக் கண்டு கொள்ளாமல் காபிகூட கொடுக்காமல் மூலையில் அமர வைத்து "யார் அவரு? கொல்லைப்புற வாசல் அந்தப் பக்கம் இருக்கு.." என்று சொல்லாமல் சொல்லி வெளியேற்றியதை முலாயமே தன் வாயால் சொன்னதைப் போல் 'சிதையில் படுத்திருக்கும்போது'கூட மறக்க மாட்டார்.



ஆக முலாயம்ஜி, காங்கிரஸ¤க்கு சப்போர்ட் பண்ணுவாரான்றது இந்த இடைப்பட்டக் காலத்தில் மாயாவதி அம்மா அவர் மீது என்ன ஆக்ஷன் எடுக்கப் போறாருன்றதை பொறுத்துத்தான் அமையும்.


மாயாவதி அம்மாவுக்கோ தன் மீது சிபிஐ தொடுத்திருக்கும் வழக்கை சிபிஐ எந்தத் திசையில் கொண்டு போகிறது என்பதைப் பொறுத்துத்தான் காங்கிரஸ¤க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா என்று முடிவு செய்வார். எது எப்படி போனாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில், அதிக 'அறுவடை' செய்யப் போவது உ.பி.யின் புரட்சித்தலைவிதான். அதில் சந்தேகமில்லை.


இந்தப் பக்கம் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மாயாவதி, சுயேச்சைகள் என்று அனைவரையும் வலைவீசி ஒன்று திரட்டினால்தான் தாமரைக் கட்சி வேட்பாளரால் ஜெயிக்க முடியும்.


தாமரைக்கு சப்போர்ட் செய்தால் உத்தரப்பிரதேசத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்குற ஆதரவையும் இழந்துவிட நேரிடும் என்பது முலாயம்ஜிக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இனிமேல் மாயாவதி தனக்குக் கொடுக்கப் போகும் பேதி மாத்திரைகளுக்கு பி.ஜே.பியிடம் இருந்துதான் குளுகோஸ் மருந்துகளை வாங்க வேண்டியிருப்பதால், முலாயம்ஜி இந்தப் பக்கம் சாய்வதும், சாயாததும் மாயாவதியின் கையில்தான் இருக்கிறது.


மாயாவதிக்கு பி.ஜே.பியின் பக்கம் சாய்வது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஒரு ரூபாவுக்கும் பிரயோசனப்படாத விஷயம். எனவே அதற்கு சான்ஸே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடலாம். அவருக்கு கில்லி விளையாட ஒரு கிரவுண்ட்டையே காங்கிரஸ் தயாராக வைத்திருக்கும்போது, அவர் எதற்கு பம்பர விளையாட்டிற்கு வட்டம் போட இடம் தேடி அலையணும்?


ஜனாதிபதி வேட்பாளர் யாருன்னு அறிவிக்கிறதுக்கே, இன்னொரு மகாபாரதத்தை அனைத்துக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.


காங்கிரஸ் கட்சி சார்பா முதல்ல சுஷில்குமார் ஷிண்டே, கரண்சிங் அப்படீன்னு ரவுண்டு கட்டினாங்க.. சுஷில்குமார் 'நாளைக்கேன்னாலும் நான் ரெடி'ன்னு சிரிச்சுக்கிட்டே டிவில சொன்னாரு..


விடுவாங்களா நம்ம அரிவாளு, சுத்தியலுக்காரங்க.. "நீங்க என்ன முடிவெடுக்கிறது? நாங்க சாம்பார் ஊத்தினாத்தான் நீங்க சோத்துல பிசைஞ்சு திங்க முடியும்.. நாங்க ஊத்துறோம் பாரு சூப்பர் சாம்பாரு.."ன்னுட்டு சோம்நாத் சாட்டர்ஜியை இறக்கிட்டாங்க..


ஏதோ அப்துல்கலாமுக்கு தூரத்து சொந்தக்காரர் மாதிரி அப்பப்ப '•பிலிம்' காட்டுறதுனால சோம்நாத் சாட்டர்ஜி மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு இருக்கு. ஐயையோ ஆபத்தாச்சேன்னு 10, ஜன்பத் ரோடு கண்ணைக் கசக்கிக்கிட்டு ஆளைத் தேட ஆரம்பிச்சு.. கடைசியா, "எப்படியும் ஒரு வங்காளிதான உங்களுக்கு வேணும்..? இதோ எங்ககிட்ட இருக்கார் பாருங்க.. ஒரு முகர்ஜி.. பிரணாப்முகர்ஜி.. அவர்தான் எங்க வேட்பாளர்.." அப்படின்னு பேர் சொல்லாம வெளில நியூஸை பரப்பிவிட்டது காங்கிரஸ்..


வுடுவாங்களா அரிவாளுக்காரங்க.. "முகர்ஜி'க்கு 'சாட்டர்ஜி' எந்த வகையிலும் குறையில்லை. வேண்ணா அவரை துணை ஜனாதிபதியாக்கிருங்க.." அப்படீன்னு நூல் விட்டிருக்காங்க.. ஆனா தில்லி 'அம்மாவும்' அம்மாவோட கிச்சன் காபினெட்டும் "இப்போதைக்கு நாமதான் மெஜாரிட்டி.. நம்ம ஆளுதான் ஜனாதிபதியாகணும். வேண்ணா அவுக ஆளை துணை ஜனாதிபதியாக்கிரலாம்.." அப்படின்னூ உப்பமா செஞ்சு வெளில விட்டிருக்காங்க..


இந்தப் பக்கம் பார்த்தா நம்ம தாமரைக் கட்சிக்காரங்க.. இப்போதைய ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான பைரோன்சிங் ஷெகாவத்தே ஜனாதிபதியாகணும். அதுதான் அவருக்கும் மரியாதை. எங்களுக்கும் மரியாதை.. அப்படி.. இப்படின்னு சொல்லிட்டிருக்காக.. யார் இதைக் காதுல வாங்குறா..?


ஷெகாவத் பாவம்.. முன்னாடி ராஜஸ்தான்ல தெருத்தெருவா அலைஞ்சு, திரிஞ்சு பி.ஜே.பி. கட்சியை வளர்த்தவரு.. அங்கனேயே சீப் மினிஸ்டராவும் கொஞ்ச நாளைக்கு இருந்தவரு.. இப்ப வயசாயிருச்சு இல்லையா.. நடக்கவே கஷ்டப்படுறாரு. ஆனா ரெண்டு, மூணு மாசமாவே இந்த சோனியா அம்மா கலந்துக்குற பங்ஷன்னா.. நடக்க முடியலைன்னாலும் யாரையாவது பிடிச்சுக்கிட்டு முன்னால வந்து நின்னுக்குறாரு.. 'பெரிசு எப்படி பிராக்கெட் போடுது பாரு'ன்னு டெல்லில அம்புட்டு பத்திரிகைக்காரனும் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.


"அவர் வேணாமா? சரி.. ஜனாதிபதியா ஆகுறதுக்கு என்ன தகுதி வேணும்? குச்சி ஊன்றி நடக்கணும்.. இல்லைன்னா ரெண்டு பேர் அல்லக்கைல கை வைச்சு அழைச்சுக்கிட்டு வரணும். அவ்ளோதான.. இதோ எங்ககிட்ட வாங்க.. இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் இருக்கார். பேரு அடல்பிஹாரி வாஜ்பாய். அவரை தேர்ந்தெடுத்திருவோம்.. பொது வேட்பாளரா சொல்லிருங்க.." அப்படின்னு அத்வானிக்கு வேண்டப்பட்ட தலைவர் ஒருத்தர் சொல்லிப்புட்டாரு.


இதை கவிஞர் வாஜ்பாய் கேட்டுப்புட்டு பதறிப் போய், 'வேணாம்.. இது அத்வானி அடுத்த பிரதமரா வர்றதுக்கான சதி வேலை'ன்றதை வெளில சொல்லாம.. "எனக்கு அந்தப் பதவி மேல ஆசையில்லை.."ன்னு அப்படின்னு இந்த வயசுலேயும் பச்சைப் பொய்யை முனங்கிக்கிட்டே சொல்லிட்டாரு..


இவுக ரெண்டு பேரும், தான் சொல்ற ஜனாதிபதிதான் அவ்ளோ பெரிய மாளிகைல உக்காரணும்னு ஏன் நினைக்கிறாங்க? டெய்லி இவுங்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட போறாரா புது ஜனாதிபதி? இல்ல.. கம்யூனிஸ்டுக மாதிரி வாங்குற சம்பளம் முழுசையும் இவுகளுக்கே நீட்டப் போறாரா? அதெல்லாம் இல்லீங்கோ..


இந்திராகாந்தி பிரதமரா இருந்தப்ப, அவர் ரேஸ்கோர்ஸ் வீட்ல இருந்து கிளம்பிட்டாருன்னா, அப்ப ஜனாதிபதியா இருந்த பக்ருதீன் அலி அகமது தன் வீட்டு வெளிவாசல்ல வந்து காத்துக்கிட்டிருப்பாராம்.. அவர் ஜனாதிபதி. இப்ப..


"எங்களின் நம்பிக்கை நட்சத்திரம், ராக்கெட் விஞ்ஞானி.. அவர்தான் எங்களது மானசீகத் தலைவர்.." அப்படி இப்படின்னு பில்டப் கொடுத்து நம்ம APJ.அப்துல்கலாமை, நெப்போலியன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாக நம்ம பய புள்ளைக..


ஒரு அளவுக்கு மேல அவரை நெருக்க முடியல எல்லாக் கட்சிக்காரனாலேயும். அதான் அடுத்த தடவ உஷாரா இருந்து, நமக்கு கைச்செலவுக்கு காசு இல்லேன்னா கூட உடனே எடுத்துக் கொடுக்குற மாதிரி ஒரு ஜனாதிபதி ஆளை ரெண்டு கட்சிக்காரவுகளும் தேடுறாங்க. தேடிக்கிட்டே இருக்காக.. கிடைப்பாங்களா?


அதுவரைக்கும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..

கண்டேன் கண்டேன் என் அய்யன் முருகனைக் கண்டேன்

23-05-2007

என் இனிய வலைத் தமிழ் மக்களே..!

'சரவணன்' என்கின்ற திருநாமத்தை உடையவன் நான் என்பதால், எனக்கு சிறு வயதிலிருந்தே 'முருகன்' என்கின்ற கடவுள் மீது மட்டும் ஒரு தனிப் பாசம் உண்டு. காரணம், இருக்கின்ற சாமிகளிலேயே அழகான சாமி, அவர்தான் என்பது குழந்தைப் பிராயத்திலிருந்தே என் மனதில் இருக்கும் ஒரு அபிப்ராயம்.



எல்லாக் குழந்தைகளுக்கும் போலவே எனக்கும் கடவுள் பக்தி என் அம்மா மூலமே வந்து சேர்ந்தது. என் அம்மாவுக்கு முருகன் மீதும், மாரியாத்தா, காளியாத்தா, சமயபுரம் ஆத்தா என்கின்ற இடைநிலை சாமிகள் மீதும் கொள்ளைப் பிரியம்.

வருடத்திற்கொருமுறை ஏதாவது ஒரு கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன் என்று சொல்லி எனது தந்தையின் உயிரை வாங்கிப் பணம் பறித்துக் கொண்டு ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்வார். மொட்டை போட்டுக் கொண்டு திரும்புவார். அவருக்குத் துணையாக எனது அண்ணனோ, அல்லது அக்காக்களோ செல்வார்கள்.

ஆனால் எனது அண்ணன் ஒரு போதும் மொட்டையடித்து நான் பார்த்ததில்லை. அவருக்கும் கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதை மொட்டையடித்துத்தான் வெளிக்காட்ட வேண்டியதில்லை என்பார்.

எனது தந்தை கோவிலுக்குச் சென்று நான் பார்த்ததில்லை. எப்போதாவது தீபாவளி, பொங்கல் அன்று மட்டும் எனது தாய் அவர் நெற்றியில் விபூதியைப் பூசிவிடுவார். என் தாயின் தலை மறைந்தவுடன், அடுத்த நொடியே அவருடைய நெற்றியிலும் விபூதி மறைந்துவிடும். அப்படியரு 'கொள்கைக் குன்று' அவர்.

திடீர், திடீரென்று இரவு நேரத்தில் முழித்தெழுந்து அமர்ந்து கொண்டு 'லைட்ட போடுடி' என்று சத்தம் போடுவார் எனது அம்மா. எனது அக்காக்களும் எழுந்து லைட்டைப் போட்டவுடன், 'சமயபுரம் ஆத்தா கனவுல வந்துச்சு..' என்பார் எனது அம்மா . என் அப்பா தலையில் அடித்துக் கொண்டு "இவளைக் கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு வாங்கடா.." என்று அலுத்துக் கொள்வார்.

இப்படி 'ஆத்தா கூப்பிட்டுச்சு; அப்பன் கூப்பிட்டான்' என்று சொல்லி சமயபுரத்துக்கு மூன்று தடவையும், பழனி, திருப்பரங்குன்றம், திண்டுக்கல் அருகேயுள்ள திருமலைக்கேணி முருகனுக்கு இரண்டு தடவையுமாக மொட்டை போட்டாகிவிட்டது. இதில் பழனிக்கு மட்டும் நான் துணைக்குப் போய் நானும் மொட்டை போட்டுக் கொண்டேன். அது ஒரு சுவையான அனுபவம்.

நான் மொட்டை போட்டுக் கொண்டதற்கு ஒத்துக் கொண்டதே மொட்டையடித்தால்தான் அப்போது பேமஸாகிக் கொண்டிருந்த கெளபாய் தொப்பியை வாங்கித் தருவேன் என்று என் அண்ணன் ஆசை காட்டினார். அதன் விளைவாகத்தான் மொட்டை போட்டேன்.

இப்படி குடும்பத்தில் என் அம்மாவின் பக்தி, பரமபத விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில்தான் திடீரென்று ஆத்தா போய் முருகன் வந்துவிட்டான். சாதாரண முருகன் அல்ல இவன்.. மருதமலை முருகன். இந்தப் பெயரை நான் அப்போதே கேள்விப்பட்டிருக்கிறேன். உபயம் ஒரேயொரு திரைப்படப் பாடல். 'மருதமலை மாமணியே..'

என் அப்பா இதைக் கேட்டவுடன் தலையில் கை வைத்துக் கொண்டார். "அது கோயமுத்தூர் பக்கத்துல இருக்குடி.. போக வரவே ஐம்பது ரூபா ஆகும்டி.." என்றார். என் அம்மாவோ "முருகன் வரச் சொல்லி உத்தரவு போட்டுட்டான். போயே தீருவேன்.. காச எடுங்க.." என்று வட்டிக்கடைக்கார சேட்டுக் கணக்காக மல்லுக்கு நின்றார்.

அப்போது எனது தந்தையின் மாதச் சம்பளமே நானூற்றி இருபது ரூபாய்தான். நாங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர்.. இந்தச் சம்பளமே பத்தவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் இப்படியரு பக்தி தேவையா என்றார் எனது தந்தை. ம்ஹ¤ம்.. எனது அம்மா அசைந்து கொடுக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் திடீரென்று எனது தந்தைக்கு மதுரை டிரான்ஸ்பர் ஆனது.. 'ரொம்பச் சந்தோஷம்டா ராசா' என்ற நினைப்பில் மதுரைக்கு எங்களை அழைத்துச் சென்று குடியமர்த்தினார் எனது அப்பா. மதுரையில் அரசரடியில் வெள்ளைக்கண்ணு தியேட்டருக்கு பின்புறம் முத்துராமலிங்கத் தேவர் சந்தில்தான் வீடு.

இந்த நேரத்தில் திடீரென்று எனது அம்மாவுக்கு உடல் நிலை மோசமானது. ஒரு நாள் என் அம்மாவுக்கு மூச்சு இழுத்துக் கொண்டு இப்பவோ, அப்பவோ என்றாக இருந்தது. அப்போதும் முருகன் படத்தைக் காட்டி 'கூட்டிட்டுப் போகலீல்லே..' என்று என் அப்பாவை முறைத்துப் பார்த்த என் அம்மாவின் கோபமான முகம், இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.

நல்லவேளையாக அப்போது முருகன் கருணை புரிய, அந்த நேரத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் படுக்கையில் இருந்து உயிர் பிழைத்தார் எனது அம்மா. அதற்குப் பிறகு ஒரு நாலு எட்டு நடப்பதற்குள் பத்து நிமிடம் உட்காரும் அளவுக்கு உடல் நிலை இருந்ததால், முன்பு மாதிரி கோவிலுக்கு படை எடுக்கும் வேலையை விட்டுவிட்டார் எனது அம்மா.

இப்போதுதான் எனது அப்பாவுக்கு பரம திருப்தி. "பேசாம வீட்ல உக்காந்து கும்பிடு. எங்க இருந்து கும்பிட்டாலும் அவனுக்குக் கேட்கும்.." என்று முணுமுணுப்பார் எனது அப்பா. அவர் தலை மறைந்தவுடன், அவ்வளவுதான்.. வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதியை திட்டுகின்ற, வாக்காளர் பெருமக்களைப் போல் எனது அம்மா திட்டித் தீர்ப்பார் அவளுடைய வீட்டுக்காரரை.

இப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருக்க மூன்று வருடங்கள் கழித்து எனது தந்தைக்கு மறுபடியும் திண்டுக்கலுக்கே டிரான்ஸ்பர் கிடைத்தது. இம்முறை திண்டுக்கலில் குமரன்திருநகரில் கன்னிமார்பாறையில் ஒரு வீட்டிற்கு குடி வந்தோம்.

இப்போதும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் விடியற்காலையில் 'மருதமலை மாமணியே..' என்ற பாடலைக் கேட்டுவிட்டால் போதும், அன்று முழுவதும் எனது அப்பாவுக்கு 1008 அர்ச்சனைதான்..

பாவம் எனது அப்பா. "இவளைக் கூட்டிட்டுப் போனா திரும்பி வர்றப்ப பொணமாத்தான்டா கொண்டு வரணும். இவ எப்படி அவ்ளோ தூரம் நடப்பா.. மலைல ஏற வேணாமா?" என்று எங்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புவார் எனது அப்பா. ஆனாலும் முருகனுக்கு எனது அப்பா மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவரையும் படுக்கையில் படுக்க வைத்து இரண்டு வருடங்கள் பாடாய்ப்படுத்திவிட்டு சாகடித்தான்.

எனது அம்மாவுக்கு இப்போது ஒரு தெளிவான எண்ணம் வந்துவிட்டது. "மருதமலை முருகன் கூப்பிட்டும் போகவில்லை. அதுனாலதான் உங்கப்பனுக்கு இப்படி வந்திருச்சு..?" என்று என்னிடம் சொல்லாத நாளே இல்லை. "இப்பவாவது என்னைக் கூட்டிட்டுப் போங்கடா.." என்று என் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பித்தார். என் அண்ணன் நழுவவதில் கம்யூனிஸ்ட்காரர்களைவிட வித்தகர். அப்படி, இப்படி என்று மூன்று வருடங்களை ஓட்டிவிட்டார்.

கடைசியில் இப்போது முருகனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது போலும். என் அம்மாவுக்கும் கடைசியில் நோயைக் கொடுத்துவிட்டான். அரசு ஆஸ்பத்திரி வார்டைப் போல வீடு வாடையடிக்கத் துவங்க.. வீட்டில் இருந்த நான், எனது அக்கா, அண்ணன் மூவரும் நடைப்பிணமானோம். அம்மாவோ தாங்க முடியாத வலியையும் தாங்கிக் கொண்டு, "கூட்டிட்டுப் போறேன்.. கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்களேடா பாவிகளா.." என்று சொன்னபடியேதான் இருந்தார்.

ஒரு நாள் இரவு 12.30 மணிக்கு என் கண் முன்னே வீட்டிலேயே இறந்தவர், அன்றைய தினம் மாலை 4 மணிவரை மருதமலை முருகனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இதில் "ஏமாத்திட்டானுங்க.. ஏமாத்திட்டானுங்க.." என்ற வார்த்தைகள்தான் அதிகம்..

இந்தக் காலக்கட்டத்தில் உங்களது உண்மைத்தமிழனுக்கு கொஞ்சம் கிறுக்குப் பிடித்திருந்தது. ஆமாம்.. அப்போது உண்மைத்தமிழன் கோவிலுக்குப் போக மாட்டான். சாமி கும்பிட மாட்டான். காரணம், வெரி சிம்பிள்.. மதுரை சிம்மக்கல்லில் இருந்த மத்திய பொது நூலகத்தில் பெரியார் புத்தகங்கள் முழுவதையும் படித்து முடித்துவிட்டான். இது போதாதா?

"எவ்ளோ பக்திமானாக இருந்த என் அம்மாவுக்கு இவ்ளோ கஷ்டத்தைக் கொடுத்தியே.. நீயெல்லாம் ஒரு கடவுளா? நீ கடவுளே இல்லை.. உன்னை நான் எதுக்குக் கும்பிடணும்.. கும்பிட மாட்டேன்.." - இது உண்மைத்தமிழனின் அப்போதைய உறுதிமொழி.

அசட்டுத்தனமான, சிறுபிள்ளைத்தனமான உறுதிமொழிகளெல்லாம் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சாகப் பறந்து சென்றுவிடும். அப்படித்தான் இந்த உறுதிமொழியும் என் மானசீகக் காதலன், பெருங்கவிஞன், கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்கின்ற புத்தகத்தைப் படித்தவுடன் பறந்து சென்றுவிட்டது.

அதுவரையில் இலக்கில்லாமல் போய்க் கொண்டிருந்த எனது வாழ்க்கை, இனி இதுதான் உன் வாழ்க்கை.. இதன் வழியே செல் என்று திசை திருப்பிவிட்டது இடையில் நுழைந்த உறுதியான ஆத்திக மனசு. இப்பொழுதுதான் நினைத்துப் பார்த்தேன் 'ஆத்திகம்' என்பது எதுவுமே இல்லாதவனுக்கு எவ்வளவு பெரிய செல்வம் என்று..

என் தாய் இறந்த பின்பு கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தவன், மருதமலை முருகனை மட்டும் பார்க்கப் போகவில்லை. காரணம் வாய்ப்பு கிடைக்கவில்லை. போலாம்.. போகலாம்.. செல்வோம்.. என்றெல்லாம் திட்டமிட்டிருந்தும் பல சமயங்களில் ஏதாவது ஒரு குறுக்கீடுகள் வந்து தொலையும். அம்மாவே போயிருச்சு.. அப்புறம் நாம போயி என்ன பண்ண? போறதுக்கு மனசே இல்லை.. இப்படி என் மனசு சொல்லிச் சொல்லி என்னைத் தேற்றிக் கொண்டே வந்தது..

மனது மிகவும் கஷ்டமாக இருக்கும் நேரத்தில் பக்கத்தில் இருக்கும் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று மனதைத் தேற்றிவிட்டு வந்துவிடுவேன். இப்படித்தான் சென்ற ஞாயிற்றுக்கிழமைவரைக்கும் என் பொழைப்பு ஓடிக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் ஏப்ரல்-22 தி.நகர், நடேசன் பார்க்கில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் நண்பர் ஓசை செல்லா, கோவையில் ஒரு வலைப்பதிவர் முகாம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் அடுத்த கணமே இப்பொழுது செல்லா அழைக்கவில்லை. முருகன்தான் அழைக்கிறான் என்றே நினைத்துக் கொண்டேன்.

இந்த முறை எப்படியாவது மருதமலைக்குப் போய் அவனை வணங்கிவிட்டு, என் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்போம் என்று கங்கணமே கட்டிக் கொண்டேன்.

இதற்காகவே சென்ற மாதத்தில் ஒரு சினிமா கம்பெனியில் அவர்கள் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கான வசனப் பகுதியை இரவு நேரப் பணியாக டைப்பிங் செய்து கொடுத்து, பணத்தைச் சேமிக்கத் துவங்கினேன். 2000 ரூபாய் சேர்ந்தது. முருகனைப் பார்க்கும் சந்தோஷத்தில் மே 19 அன்று கோவைக்கு வண்டியேறினேன்.

மே 20 அன்று நடந்த வலைப்பதிவர் முகாமில் கலந்து கொண்டுவிட்டு அன்று இரவு அங்கேயே தங்கியிருந்து மறுநாள் மருதமலைக்குச் செல்வது என்று பிளான். வலைப்பதிவர் முகாமும் அமைதியாகவே நடந்து முடிய, அன்று இரவு அங்கேயே தங்கினேன்.. காலை 8 மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்பினேன். "பஸ்ஸ்டாண்டில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை மருதமலைக்கு பஸ் இருக்கு ஸார்.." என்றார் நான் தங்கியிருந்த மேன்ஷனின் ஓனர்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் ஏஸியிலேயே இருந்து பழகிவிட்டோமா.. அந்த நாளில் கோவை வந்திருந்த பல வலைப்பதிவர்கள் வெயிலில் வாடி வதங்கிய காட்சி கொடுமையாக இருந்தது. அந்தத் தாக்கம் எனக்கும் இருந்தது.

70 என்ற எண்ணுள்ள பேருந்தில் தொற்றிக் கொள்ள.. மேன்ஷனில் குளித்தது பத்தாது என்று இங்கே பஸ்ஸிற்குள்ளும் அனைவருமே வியர்வையில் குளித்து முடித்தோம்.

R.S.புரம், காந்தி பூங்கா, வடவள்ளி, வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அரசு சட்டக்கல்லூரி இவற்றையெல்லாம் தாண்டி சுமாரான ஒரு மணி நேரத்தில், மருதமலை அடிவாரத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டது பேருந்து.

"மேல ஒரு தேங்கா பத்து ரூபா. இங்க ரெண்டு தேங்கா பத்து ரூபா ஸார்.." என்று தமிழ்நாட்டுக்கே உரித்தான வியாபார நுணுக்கங்களை ஒரு தாய்க்குலம் கையில் தேங்காயை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருக்க.. கடந்து சென்றேன்.

நான் அங்கு செல்வது இதுதான் முதல் முறை என்பதால் பஸ்ஸில் சென்றுவிடுங்கள் என்று அங்கேயிருந்த வாட்ச்மேன் அக்கறையாகச் சொன்னார். சரி.. பெரியவர் சொல்கிறார். கேட்போமே என்ற எண்ணத்தில் பஸ்ஸ¤க்கு டிக்கெட் எடுத்து.. (மருதமலை கோவில் நிர்வாகமே மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் இருக்கும் சன்னதிதானம் வரைக்கும் பேருந்தை இயக்குகிறது) பஸ்ஸில் மலைக்குச் சென்றேன்.

கீழே இறங்கியதும் ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது.. "அண்ணே அபிஷேகத் தட்டுண்ணே.. நம்மகிட்ட இருபது ரூபாதாண்ணே.. மேல நாப்பது ரூபாண்ணே.." என்று ஒரு வருங்கால ரஜினிகாந்த் தோரணையில் இருந்தவன் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

நான்கு படியேறுவதற்குள் இடது புறம் 'முடி காணிக்கைச் செலுத்துமிடம்' என்ற போர்டு இருந்தது. வெறும் பத்தே ரூபாய்தான்.. ஒட்டு மொத்த முடியும் தலையிலிருந்து உதிர்ந்துவிடும்..

நினைத்துப் பார்த்தேன். நான் குடியிருக்கும் சென்னை, விருகம்பாக்கத்தில் என் தலையில் இருக்கின்ற தலைமுடியில் அரைவாசியை கட் செய்து, அவர்களே எடுத்துக் கொள்வதற்கு நான் நாற்பது ரூபாய் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது.. என்ன கொடுமை பாருங்கள்..

பத்து ரூபாயை நீட்டியவுடன் ஒரு பிளேடை இரண்டாக உடைத்து பாதி பிளேடை நம் கையில் கொடுத்தார் அங்கிருந்த கணக்காளர். கைலிக்கு மாறிக் கொண்டு அமர்ந்தேன். முடி அழித்தல் தொடர்ந்தது. சில நிமிடத்தில் தலையில் கை வைத்துப் பார்க்க.. ஏதோ ஒரு பாறாங்கல்லில் கை வைத்தது போல் இருந்தது.

முடித்துவிட்டு எழுந்தவுடன் எனக்காகவே காத்திருந்ததைப் போல் கணக்காளர் எழுந்து வெளியேற.. முடி வெட்டியவர் "எனக்குப் பணம் கொடுப்பா.." என்றார். "அதான் பத்து ரூபாதான்னு வெளில போட்டிருக்கேன்.." என்றேன். "அது அப்படித்தான் எழுதிருக்கும்.. எனக்கும் கொடுக்கணும்.." என்றார் விடாப்பிடியாக.

அப்போது எனக்கு முன்பாக முடி வெட்டிக் கொண்டுச் சென்றவர் திடீரென்று உள்ளே நுழைந்து தன் கையில் இருந்த ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அவர் கையில் திணித்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தார். இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் யார் வளர்த்துவிடுவது என்பது எனக்கு அப்போது கண நேரத்தில் புரிந்தது. "உங்க கேஷியர் சொல்லட்டும். தர்றேன்.." என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினேன்.

அதே படியில் இரண்டு படிகள் கீழே இறங்கி வலது பக்கம் திரும்பினால், குளிக்கும் இடம். அங்கேயும் ஒரு பெண் இரண்டு ரூபாய் சோப்புக்களை விரித்து வைத்துக் கொண்டு ஐந்து ரூபாய்க்கு சளைக்காமல் விற்றுக் கொண்டிருந்தார். யார் கேட்பது?

நான் சோப்பு கொண்டு போயிருந்தபடியால் குளிப்பதற்கான இடத்திற்குச் சென்றேன். "மலையிலிருந்துதான் தண்ணீரை போர் போட்டு எடுத்திருக்கிறார்கள்" என்றார்கள். தொட்டுப் பார்த்தேன்.. ஜில்லென்ற உணர்வே இல்லை. ஆனால் சூடாகவும் இல்லை. ஒருவித மதமதப்பாக இருந்து. 'அரோகரா..' சொன்னபடியே குளித்து முடிச்சாச்சு.

உடைகளை மாற்றிக் கொண்டு கிளம்பும்போது எனக்கு முன்பாக குளித்த ஒரு பக்தர் தன்னுடைய விலையுயர்ந்த Gold வாட்ச்சை மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தார். அங்கே யாரிடம் கொடுப்பது என்பது தெரியாததால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், "யாராவது வாட்ச்சை தேடி வந்தா மேல உங்க ஆபீஸ¤க்கு வந்து வாங்கிக்கச் சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு(அந்தப் பெண்ணின் முகம் போன போக்கைப் பார்க்கணுமே.. என்ன செய்றது?) படியேறினேன்..

வழியிலேயே இடது புறங்களும், வலது புறங்களும் கடைகள் பரந்து கிடக்கின்றன. அங்கேயும் சில பெண்கள் வளையல், நெற்றிப் பொட்டை பார்த்து, பார்த்து வாங்கிக் கொண்டிருந்ததார்கள்(!).

வழியில் அன்றைய அன்னதான நிகழச்சி நடந்து கொண்டிருந்தது. வர்க்க வித்தியாசம் இல்லாமல் காரில் வந்தவர்கள்கூட அதைச் சாப்பிடுவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. என்ன காரணம் என்று விசாரித்தேன். "அது தெய்வப் படையல். சாப்பிட கொடுத்து வைச்சிருக்கணும்.." என்றார்கள்.

மேலே ஏறியவுடன் நேராக அலுவலகத்திற்குள் நுழைந்து என் கையிலிருந்த வாட்ச்சை அவர்களிடம் ஒப்படைத்தேன். "யாராவது வந்தா கண்டிப்பா கொடுத்திர்றோம் ஸார்.." என்றார்கள். 'சரி' என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.

கீழே கடை வைத்திருப்பவர்கள் சொன்னது போலவே மேலே சன்னதியின் அருகில் இருக்கும் கடையில் அர்ச்சனைத் தட்டு நாற்பது ரூபாய்.. இதுக்காக யாராவது படியிறங்கி கீழ போயா வாங்கிட்டு வர முடியும்? அதையே வாங்கினேன்..

அந்தக் கடைக்காரப் பையன் என் தலையைப் பார்த்துவிட்டு "ஏன் சந்தனம் பூசவில்லை..?" என்றான். "உள்ளேதான தருவார்கள்.." என்றேன் அப்பாவியாய்.. "இல்ல ஸார்.." என்று சிரித்தவன் ஒரு சிறிய வாழை இலையில் சிறிதளவு சந்தனத்தை எடுத்துக் கொடுத்து உடன் ஒரு பன்னீர் பாட்டிலையும் கொடுத்து, "பன்னீரை சந்தனத்துல ஊத்திப் பிசைஞ்சு அதை எடுத்துத் தலைல தடவிக்குங்க.. அதுதான் வழக்கம்.." என்றான்.

சரி.. முன்ன பின்ன மொட்டையடிச்சிருக்கணும்.. இல்ல யாரையாவது மொட்டையடிக்க கூட்டிட்டு வந்திருக்கணும்.. ரெண்டுமே இல்லை. இப்படி ஏதாவது நடக்கத்தான் செய்யும்னு நினைச்சு அவன் சொன்னபடியே செய்தேன்.

அர்ச்சனைத் தட்டுக்கு சீட்டு (இரண்டு ரூபாய்) வாங்கவும் ஒரு கூட்டம். சிறப்புப் பாதையில் செல்லவும் ஒரு சீட்டு. பத்து ரூபாய். வாங்கினேன்.. என் பின்னால் வந்த ஒரு கூட்டம், அப்படியே என்னைத் தள்ளிக் கொண்டு போய் உள்ளே விட்டது.

சன்னிதான வாசலில் நிற்கும் ஒரு பெண் என் சிறப்பு அனுமதிச் சீட்டை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு என்னை உள்ளே அனுமதித்தார். உள்ளே சென்றேன். குருக்கள் வந்து "கொடுங்கோ.." என்று சொல்லி கையை நீட்ட, நானோ ஆண்டிக் கோலத்தில் நின்று கொண்டிருந்த எம்பெருமான் முருகனையே பக்திப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஐயர் கிட்டத்தட்ட என் கையிலிருந்து அர்ச்சனைத் தட்டைப் பிடுங்கித்தான் சென்றார். போன வேகத்தில் திரும்பி வந்து "என்ன பேருக்கு அர்ச்சனை செய்யணும்..?" என்றார். "சரவணன்.." என்றேன்.. அதற்குப் பிறகு அவர் உச்சரித்த வார்த்தைகளில் "சரவணன்.." என்கிற வார்த்தை மட்டும்தான் எனக்குப் புரிந்தது. மீதி அவருக்கும், அந்த முருகனுக்கும் மட்டுமே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கையில் வேலோடு ஆண்டிக் கோலத்தில் நிற்கிறான் முருகன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகட்டும் என்ற உமாதேவியின் ஆணைப்படியே இந்த இடமும் குமரனின் இடமாக அமைந்துவிட்டதாக தல புராணம் சொல்கிறது.

ஒரு மாலையைக் கொண்டு வந்த குருக்கள் என் கழுத்தில் போட்டார். பரவசமாகிவிட்டேன் நான். ஐந்து நிமிடங்கள் அங்கேயே நின்று என் கவனத்தில் இருந்த அத்தனை பேரையும் வாயால் உச்சரித்து "எல்லாரையும் நல்லா வைச்சிருய்யா முருகா.." என்று சொல்லி முடிக்கவும், குருக்கள் "இந்தப் பக்கமா போங்கோ.. இன்னும் ஆள் காத்திருக்காங்கள்லே.." என்று சொல்லவும் சரியாக இருந்தது.

அப்படியே வெளியே வந்தேன். சன்னிதானத்திற்கு இடது புறம் இருக்கும் தெய்வத்தையும், அதைச் சுற்றிப் பின்புறமாக வந்து என் அர்ச்சனைத் தட்டைக் கையில் வாங்கிக் கொண்டு பிரகாரத்திற்குள் வந்து நின்றேன். அங்கே வீற்றிருந்த பெருமாளையும் வணங்கிவிட்டு அப்படியே பிரகாரத்தில் அமர்ந்தேன்.

சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சப்தத்தைத் தவிர வேறு எந்தச் சப்தமும் அங்கே எழவில்லை. அமைதி.. அமைதி.. அமைதி.. கோவிலை நாடி பக்தர்கள் ஏன் ஓடோடி வருகிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் அந்த அமைதிதான்..

இந்த அமைதியைத் தேடித்தான் மனிதர்கள் நாயாய், பேயாய் அலைகிறார்கள். கிடைக்கின்ற இடம் கோவிலில் மட்டும்தான் என்பதால் ஆண்டவன் எவ்வளவோ கஷ்டங்கள் கொடுத்தாலும், திரும்பத் திரும்ப பக்தன் கோவிலுக்கு வந்து ஆண்டவனைச் சேவித்துக் கொண்டுதான் இருக்கிறான். இதுதான் ஆத்திகம் வளர்ந்து கொண்டே செல்ல முழுமுதற் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த எனக்கு என் குடும்பத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் கண் முன்னே ஊஞ்சலில் ஆட.. அந்த கணத்தில் என் மனதிற்குள் எனக்கும், என் அப்பன் முருகப் பெருமானுக்கும் இடையிலே கடும் வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டது.(இது என்னவென்று புதிய பதிவொன்றில் சொல்ல ஆசைப்படுகிறேன்) கூடவே என் அம்மாவின் கடைசி நிமிட ஆசையை இந்தக் கணத்திலாவது செய்து முடித்தேனே என்ற திருப்தி.. இந்த நேரத்தில் என்னுடைய பூரிப்பை சொல்வதற்கான வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை..

ஒரு வழியாக முருகனிடம் கத்தி முடித்துவிட்டு, எழுந்து படியிறங்கியவனின் கண்ணில் பட்டார்கள் நம்முடைய நவக்கிரக தெய்வங்கள். மனிதர்களை முறை வைத்து ஆட்டி வைப்பவர்களே அவர்கள்தானே.. மூவர், மூவராக ஒன்பது பேரும் ஆளுக்கொரு பக்கமாக முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு மனிதர்களைப் பாடாப் படுத்துறாங்கப்பா..

எள்ளும், திரியும் வாங்கி ஒன்பது முறை நவக்கிரங்களைச் சுற்றி வந்தேன். திரியை எனது தலையை மூன்று முறைச் சுற்றி, முன்னால் இருந்த நெருப்பில் இட்டேன். எள்ளைத் தூக்கி நவக்கிரக சாமிகளின் பாதத்தில் வீசிவிட்டு தட்டை மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

நேராக முன்புறம் சென்று கொடி மரத்தின் முன்பாக இருந்த பிள்ளையாருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு, கையில் வைத்திருந்த ஒரு மாலையை அந்தப் பிள்ளையாருக்குச் சாத்தினேன். மூன்று தோப்புக்கரணங்களை போட்டுவிட்டு நடந்தால் கீழே தான்தோன்றிப் பிள்ளையார் அமர்ந்திருந்தார். அவருக்கு "எண்ணெய் சட்டியை வாங்கி கொளுத்தி வைக்க வேண்டும்" என்றார்கள். அதையும் கனகச்சிதமாகச் செய்து அவருக்கும் ஒரு மூன்று தோப்புக்கரணங்களைப் போட்டுவிட்டு படியிறங்கினேன்..

அங்கேயே ஒரு மூலையில் மூலஸ்தானத்தில் பூர்வீக முருகன் தன் இரண்டு மனைவிகளுடன் வாசம் செய்கிறான். வலது புறம் வள்ளி, இடது புறம் தெய்வானை. அங்கேயும் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அவனிடமும் என் பெட்டிஷனை போட்டுவிட்டு அங்கே ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்து எழுந்து வந்தேன்..

கோவிலின் பின்புறம் பாம்பாட்டிச் சித்தரின் குகை இருப்பதாகச் சொன்னார்கள். அதை நோக்கியும் பக்தர்கள் கூட்டம் போக நானும் சென்று பார்த்தேன்.. அது ஒரு குகைதான். உள்ளே சித்தரின் புகைப்படம் இருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பாறையில் ஒரு பாம்பு ஊர்வதைப் போன்ற ரத்தக் கலரில் ஓவியம் இருந்தது.. இந்தக் குகை எப்போது உருவானது? அந்தச் சித்தர் யார் என்பதையெல்லாம் சொல்வதற்கு அங்கே யாருமே இல்லை.. போர்டில் இருந்ததைப் படித்துவிட்டு வெளியே வந்தோம். அரசுத் துறைகளின் லட்சணம் இப்படித்தானே இருக்கும்..?

மலையின் ஒவ்வொரு இடத்திலும் ஐந்தைந்து நிமிடங்களாக அமர்ந்து, அமர்ந்து கீழே இறங்கத் துவங்கினேன். ஒரு புத்தகக் கடையில் மருதமலையின் தல புராணம் பற்றிய புத்தகம் கேட்டேன். "அது மேல இந்து சமய அறநிலையத் துறை ஆபீஸ்லதான் ஸார் இருக்கும்." என்றார் புத்தகக் கடையில் இருந்த பெண்.

மீண்டும் மேலே அலுவலகத்திற்குச் சென்றேன். "அந்தப் புத்தகம் இப்பத்தான் பிரிண்டிங் பண்ண ஆர்டர் கொடுத்திருக்கோம். இன்னும் வரலை.." என்றார்கள். நல்ல பதில்தான் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் படியிறங்கினேன்.

கீழேயும் பஸ்ஸ¤க்காக ஒரு கியூ.. இந்தியாவில் எங்கே சென்றாலும் கியூதான்.. அப்போதுதான் ஒரு எண்ணம் உதிர்த்தது. வரும்போது பஸ்ஸில் வந்தோம். போகும்போதாவது முருகனுக்காக நடப்போமே.. இரண்டு கிலோ மீட்டர் தூரம்தானே.. என்ன ஆகிவிடப் போகிறது? நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் கீழே நடக்கத் துவங்கினேன்..

அதிகப் பழக்கம் இல்லாததால் அடிவாரம் வரையிலும் இருந்த ஓய்வெடுக்கும் மண்டபங்களில் பத்து நிமிடங்கள் அமர்ந்து, அமர்ந்து சரியாக ஒரு மணி நேரத்தில் அடிவாரத்தைத் தொட்டேன்.

வரும் வழியில் பல பக்தர்கள், கையில் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொளுத்துகின்ற வெயிலில் செருப்பு கூட போடாமல் நேர்த்திக் கடன் செய்ய நடந்து வருவதைப் பார்த்தவுடன் என்னை நினைத்து மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டேன். சிறு பையன்களும், சிறுமிகளும்கூட நடந்து வருவதைப் பார்த்தவுடன் வரும்போதும் நடந்தே படியேறி இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதற்காக முருகன் என்னை மன்னிப்பான் என்று நம்புகிறேன்.

வழியில் படிகள்தோறும் ஓரத்தில் சில முருகன்களும், சில வள்ளிகளும், சில தெய்வானைகளும், சில முருகன்களுமாக அமர்ந்திருந்து தங்களது திருமணத்தின்போது எந்த அண்ணன் யானை ரூபத்தில் வந்து தங்களைக் காப்பாற்றப் போகிறான் என்பதைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்கு மேல் இந்த இடத்தில் இவர்களைக் கவனத்தில் கொள்வது தவறு என்பதால் மேற்கொண்டு எந்த 'விவரத்தையும்' நான் பார்க்கவில்லை. 'ரசிகர்கள்' மன்னிக்கவும்.

பக்தர்களோடு பக்தராக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். என் தலையைப் பார்த்தவுடன் "அண்ணா.. தொப்பிண்ணா.." என்றபடியே திடீர் தங்கையான ஒரு பெண் என்னை நோக்கி ஓடி வந்தாள். அந்த ஒரு வார்த்தைக்காகவே இருபது ரூபாய் கொடுத்து, அந்தத் தொப்பியை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு நடந்தேன்.

அப்போது மிகச் சரியாக பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், இந்தப் பாட்டும் ஒலிக்கத் துவங்கியது.. அமைதியாக அந்தக் கடையோரமாக அமர்ந்து முழுப் பாடலையும் கேட்டேன். நீங்களும் கேளுங்கள் பக்த கோடிகளே..

கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே
புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம்
தேடி வரும் மருத மலை..
மருத மலை.. முருகா..

மருதமலை மாமணியே.. முருகய்யா..
மருதமலை மாமணியே.. முருகய்யா...

தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்..

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்..
அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே..

மருதமலை மாமணியே முருகய்யா...
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..
மருதமலை மாமணியே முருகய்யா...


தைப்பூச நன்னாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
தைப்பூச நன்னாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா...
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..
மருதமலை மாமணியே முருகய்யா...

கோடிகள் கொடுத்தாலும்
கோமகனை மறவேன்..
நாடியென் வினை தீர நான் வருவேன்..
நாடியென் வினை தீர நான் வருவேன்..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக..
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்....
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக..
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்....
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா...
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..
மருதமலை மாமணியே முருகய்யா...

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்..
நான் மறவேன்..
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன்..
நான் வருவேன்..
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்..
நான் மறவேன்..
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன்..
நான் வருவேன்..
பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே...
பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே...
காண்பதெல்லாம்..
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது பலம் உறுதுணை முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது..
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது..
பனியது மழையது நதியது கடலது..
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே.. வேலய்யா....
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...அ..அ..அ.அ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

மருதமலை முருகா..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.."

மருதமலை முருகன் மீது தீராத காதல் கொண்ட திரையுலக ஜாம்பவான் திரு. சாண்டோ M.M.A.சின்னப்பத்தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி வெளியான 'தெய்வம்' படத்தின் இந்தப் பாடல்தான் தமிழ் மக்களிடையே மருதமலை முருகனைப் பற்றிப் பிரபலப்படுத்தியது.

குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மிக வைர வரிகளில், மதுரை சோமு அவர்கள் உச்சஸ்தாயியில் பாடி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தப் பாடல் இது.

அதேபோல் 1972-க்கு பின்பான இளைய சமுதாயத்தினரிடையே கடவுள் பக்தி மானாவாரியாகப் பரவியதற்கு இந்தப் பாடலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

திரு.சின்னப்பத்தேவரும் இக்கோவிலுக்கு பெரும் பொருட்செலவில் பல அறப் பணிகளைச் செய்திருக்கிறார். மலைப்பாதையில் இரவு நேரத்திலும் பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக அப்போதே மின் விளக்கு வசதிகளை செய்து கொடுத்ததும் அவர்தான். படியேறுபவர்கள் தங்கும் சில மண்டபங்களை மராமத்து செய்து புதுப்பித்துக் கொடுத்தவரும் அவர்தான் என்று அங்கே இருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார். வாழ்க தேவர்.. 'ஒருவர் மறைந்தாலும் அவர் செய்த புண்ணியங்கள் மறையவே மறையாது..' என்பதற்கு தேவர் அவர்கள் ஒரு மிகப் பெரிய உதாரணம்..

பேருந்து நிலையம் வரும்வரையிலும் என் மனம் ஒரு நிலையில் இல்லை. என் அம்மா என்னுடனேயே நடந்து வருவதைப் போன்றே எனக்குத் தோன்றியது.. இப்போது எனது அம்மா நிஜமாகவே உடனிருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்..?

அந்தச் சந்தோஷத்தைப் பார்த்து ஒரு மகன் என்ற முறையில் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்..?

ஒரு கார் வைத்தாவது என் அம்மாவைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரு முறை முருகனைக் காட்டியிருக்கலாமே என்று இப்போது எனக்குத் தோன்றியது..

என்ன செய்வது? எல்லாம் முருகன் செயல்.. இப்போது என்னை இந்த ரூபத்தில், இந்தச் சமயத்தில் வரவழைத்திருப்பதுகூட அவன் செயல்தான் என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு மகன் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய ஒரு கடமையை வேண்டிய நேரத்தில் செய்ய வைத்திருக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த எனதருமை நண்பர் திரு.ஓசை செல்லா அவர்களுக்கும், 'தல' பாலபாரதி அவர்களுக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக இந்த உண்மைத்தமிழனின் பாதம் தொட்டு வணங்கும் வணக்கங்களும், நன்றிகளும்..

நீவிர் வாழ்க.. சிறப்புடன் வாழ்க..

கந்தனுக்கு வேல்! வேல்! முருகனுக்கு வேல்! வேல்! அரோகரா ! அரோகரா!