வில் அம்பு - சினிமா விமர்சனம்

13-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘தா’ என்றொரு சிறப்பான படத்தைக் கொடுத்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.
அந்தப் படம் வெளியான அன்று மாலை தமிழகமெங்கும் கொட்டத் துவங்கிய மழை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தனது வித்தையையெல்லாம் காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தது.
இந்த பெருமழையினாலேயே ‘தா’ என்ற அந்த அற்புதமான திரைப்படம் திரைக்கு வந்த சுவடே தெரியாமல் போனது.
திறமைக்காரர்களுக்கு எந்தத் தடை வந்தாலும் அதைத் தாண்டி வருவார்கள் என்பதை நிரூபிக்கும்விதமாக இதோ… இந்த ‘வில் அம்பு’ படம் மூலமாக தனது பெயரை நிலை நாட்டியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.
இரு வேறு கதைகள்.. வேறு, வேறு கதையின் நாயகர்கள்.. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள்.. ஒருவருக்கொருவர் தெரியாமலேயே இன்னொருவரின் நிகழ்வுகளுக்குக் காரணமாகிறார்கள். எல்லாம் முடிந்தும் அவர்களுக்கே அந்தச் சூழல் தெரியாமல் நண்பர்களாகிறார்கள்.. வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள் இருப்பினும் இயக்கத்தில் குறை சொல்ல முடியாத திரைப்படம்.


கதிர் என்னும் ஸ்ரீ, சின்னச் சின்னத் திருட்டுக்களில் ஈடுபடும் அடாவடி வாலிபன். துடுக்கான பேச்சு. எகத்தாளமான நடவடிக்கைகள் என்று வருங்கால ஏரியா தாதாவாக வரக் கூடிய அளவுக்கு தகுதியுள்ளவன். அதே ஏரியாவில் வசிக்கும் ஆளும் கட்சி பிரமுகரான நந்தகுமாரின் மகளான பூங்கொடி என்னும் சமஸ்கிருதி ஸ்ரீ-யை காதலிக்கிறாள். பூங்கொடி இப்போது 12-ம் வகுப்பு மாணவிதான். ஆனாலும் ஸ்ரீ-யின் தைரியமான பேச்சுக்கள், நடவடிக்கைகள் அவளுக்குள் ஒரு இனம் புரியாத ஆசையை உருவாக்கிவிட அது காதலாக மாறிவிடுகிறது.
ஸ்ரீ-யின் முழு நேரத் தொழிலே ரவுடித்தனம், திருட்டு என்பதையறிந்த ஸ்ருதி இதையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று வழக்கமான காதலியைப் போல ஆணையிடுகிறாள். காதலிக்காக ரவுடித்தனத்தை கைவிட நினைக்கும் ஸ்ரீ கடைசி முயற்சியாக ஒரேயொரு கடத்தல் வேலையை மட்டும் செய்துவிட்டு அந்த்த் தொழிலுக்கே முழுக்கு போட நினைக்கிறான். அதையும் செய்கிறான். ஆனால் அந்தக் கடத்தல் திட்டம் பெத்த அப்பனாலேயே சொதப்பலாகிவிட போலீஸிடம் மாட்டிக் கொள்கிறான்.
தன்னுடைய தெனாவெட்டு பேச்சால் போலீஸிடம் இருந்து தப்பித்தாலும் ஸ்ருதியின் அப்பாவிடமிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. இருவரும் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். நந்தகுமாரும் அடியாட்களை வைத்து காதலர்கள் இருவரையுமே போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார்.
இன்னொரு பக்கம் இன்னொரு ஹீரோவான அருள் என்னும் ஹரீஷ் கல்யாண். சிறந்த புகைப்படக் கலைஞராக வர வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஹரீஷை அவரது தந்தை புரிந்து கொள்ளவில்லை. விரைவில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று குடும்பத்தின் சுமையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வைக்கிறார். விளைவு.. அரியர்ஸ் வைத்திருக்கும் நிலையில் கல்லூரி வாழ்க்கையை முடிக்கிறார் ஹரீஷ்.
இவருக்கும் ஒரு காதலி. அந்தக் காதலியின் ஊடல்கள்.. வீட்டில் அப்பாவின் தொண தொணப்பு இதையெல்லாம் தாங்கிக் கொண்டு வலம் வரும் நேரத்தில் இவரது வாழ்க்கையிலும் விதி விளையாடுகிறது.
இவரது அக்காவின் திருமணத்தன்று இரவில் டூவீலரில் உடன் வரும் நண்பனின் குடிப் பழக்கத்தினால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டியிருக்கிறது. இந்தக் கோபத்தில் அப்பா ஹரீஷை தண்டச் சோறு என்றும், காசு சம்பாதிக்க துப்பில்லை என்று சொல்லி அடித்துவிட  மூட் அவுட்டாகி தனக்குப் பழக்கமான ஹரீஷ் உத்தமனை சந்திக்கிறார்.
அன்றைய இரவில் வெளியூரில் இருந்து வரும் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருக்கும் உத்தமன், இந்தக் களப் பணியில் ஹரீஷையும் இணைத்துக் கொள்கிறார். ஹரீஷ் பணம் கிடைக்குமே என்றெண்ணி என்ன வேலை என்றுகூட தெரியாமல் அவர்களுடன் செல்கிறார்.
இந்த்த் திட்டத்தின் கடைசி நேரத்தில் ஹரீஷ் உண்மை தெரிந்து கொள்ளை நடக்காமல் தடுக்கப் போக இவன்தான் கொள்ளையடிக்க வந்தவன் என்றெண்ணி பொதுமக்களின் தர்ம அடியையும் வாங்கிக் கொண்டு போலீஸிடம் சிக்குகிறார். சிறைக்கும் செல்கிறார்.
இவனது அக்கா கணவர் தன்மையான மனிதராக இருப்பதால் அவரே முன் வந்து ஹரீஷை ஜாமீனில் வெளியில் கொண்டு வருகிறார். வீடும், சக மனிதர்களும் தன்னை குற்றவாளியாக பார்ப்பதை உணர்ந்து வீட்டுக்கே வராமல் வெளியில் சுற்றுகிறார் ஹரீஷ்.
இவரை தூரத்தில் இருந்து பார்த்தே மனதுக்குள் காதலித்த சாந்தினி ஒரு நாள் இரவில் ஹரீஷுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறார். தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய உத்தமனை தேடியலைகிறார் ஹரீஷ். கடைசியில் கண்டுபிடிக்கிறார்.
போலீஸில் வந்து உண்மையைச் சொல்லி தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கேட்கிறார் ஹரீஷ். உத்தமன் முடியாது என்று மறுக்க இருவருக்குள்ளும் சாடல் வெடித்து அது மோதலாகிறது.. கிட்டத்தட்ட இதே நேரம் ந்ந்தகுமார் தன் மகளைத் தேடி அங்கே வர.. மகளும், ஸ்ரீயும் அதே இடத்தில் கண்ணாமூச்சி ஆட.. ஒரு 20 நிமிடங்கள் கேமிராவின் நகர்த்தலில் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறுகிறது.
இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்திருக்கும் இறுதிச் சுற்று, விசாரணைக்கு பின்பு இந்தப் படமும் சினிமா ஆர்வலர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதுமையான திரைக்கதையில்.. இப்படியும் யோசிக்க முடியுமா என்பதற்கு முடியும் என்பதைக் காட்டி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஸ்ரீயும், ஹரீஷும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் ஸ்ரீயைவிடவும் ஹரீஷின் நடிப்பில் வெளிப்படும் சோகமே படத்தின் பின்பாதியை மிக அதிகமாகத் தாங்கியிருக்கிறது. இயக்குநரின் கதாபாத்திர தேர்வு மிக கச்சிதமானது. எந்தவகையிலும் ஸ்ரீயை ஹரீஷின் கேரக்டரில் பொருத்தப் பார்க்க முடியவில்லை. இருவருடைய இயல்பான குணத்தையும், உடலமைப்பையும் நினைத்தே இந்த கதாபாத்திரங்களை அவர்களை சுமக்கச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஸ்ரீயின் தெனாவெட்டு பேச்சும்.. போலீஸை பார்த்தும் பயப்படாமல் நடந்து கொள்ளும் தன்மையும், அரசியல் புள்ளிகளிடம் மரியாதை கொடுத்தும் அதே நேரம் மாட்டிக் கொள்ளாமலும் ஜாக்கிரதையாக அவர் பேசுகின்ற பேச்சு மிக இயல்பானது.
காதல் வந்தவுடன் டூயட்டுகளை பாடிவிட்டு கச்சிதமாக காதலனாக மாறுகிறார். வழக்கம்போல ஒரேயொரு திருட்டை மட்டும் செய்துவிட்டு தான் திருந்தி வாழ ஆசைப்படும் கதையைச் சொல்லும்போது நம்மால் பரிதாபப்படத்தான் முடிகிறது.  
காதலிகளின் நொச்சு, ஊடல்களால் சின்னப் பையன்களின் கவனம் சிதறி எந்த அளவுக்கு டென்ஷனாகிறார்கள் என்பதையும் அவர்களே ரசிக்கும்வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
பார்த்தவுடன் காதலாகி.. இவனெல்லாம் என்னைய காதலிப்பானா என்கிற ஏக்கத்திலும், தயக்கத்திலும் ஹரீஷை பார்த்தபடியே இருந்துவிட்டு பின்னாளில் காதலுக்காக தனது கெளரவத்தைவிட்டுக் கொடுத்து அவனைத் தூக்கி வந்து தன் வீட்டில் வைக்கும் காதலி கேரக்டரில் சாந்தினி.. நடுவில் காதலித்து ஹரீஷ் ஜெயிலுக்கு போனவுடன் வீட்டாரின் எதிர்ப்பினால் மனம் மாறி வேறு கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்து விலகும் சிருஷ்டி.. இவர்கள் இருவரையும்விட பூங்கொடியாய் வந்திருக்கும் சமஸ்கிருதி ஷெனாய் ஒரு படி மேலே போய் மனதைத் தொட்டிருக்கிறார்.
தவறான காதல்.. தவறான நேரம்.. செய்யக் கூடாத்து என்றெல்லாம் நாம் நினைத்தாலும் நிஜத்தில் அப்படியே நிறைய நடக்கிறதே என்று நினைத்து நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்..!
18 வயதில் காதல் தேவையா என்கிற கேள்விக்குள் போகுமுன் இதுவரையில் தன் வீட்டு வாசலில் ஒருவர் கூட குரலை உயர்த்தி பேசியதில்லை என்கிற ஆச்சரியத்தில் ஸ்ரீயின் மீதான பார்வை காதலாக மாறி, பின்பு அவனது கேரக்டரையே மாற்றியமைப்பது போல செல்வது இந்தக் காதல் ஜெயிக்கணுமே என்று ரசிகனையும் சொல்ல வைத்திருக்கிறது..! சிருஷ்டியும், ஷெனாயும் பாடல் காட்சிகளில் அழகுடன் காட்சிகளையும் அழகாக்கியிருக்கிறார்கள்..!
இன்றைய அரசியல்வாதிகளை பிரதிபலிக்கும் கேரக்டர்களில் வரும் நந்தகுமாரின் சேம் சைட் கோல் ஆட்டம்.. கிளைமாக்ஸில் எம்.எல்.ஏ. ஆனவுடன் சேர்ந்து கொள்வது.. ஸ்ரீயின் அப்பாவின் அலம்பல்.. என்று சில சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
மார்ட்டின் ஜோ-வின் ஒளிப்பதிவும், நவினின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் கை கொடுத்திருக்கின்றன. படத் தொகுப்பாளர் ரூபனின் கைவண்ணத்தில் கிளைமாக்ஸ் விரட்டுதல் காட்சியில் பரபரப்பும், படபடப்பும் ஒருசேர உண்டாகியிருக்கின்றன..
இருந்தாலும் இதனை முழுமையான திரைக்கதை என்று சொல்லிவிட முடியாது.. இதிலும் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. ஸ்ரீயை ‘கவனிக்க வேண்டும்’ என்று துடிப்புடன் போலீஸ் காத்திருக்கும்போது கையும், களவுமாக மாட்டும்போது அவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுவார்களா..? அதிலும் அத்தனை போலீஸ் அடிகளை வாங்கிவிட்டு மறுநாள் சர்வ சாதாரணமாக நடந்து வருவதெல்லாம் டூ மச் இல்லையா இயக்குநர் ஸார்..?
உத்தமன்தான் இந்த வேலையைச் செய்யச் சொன்னவன் என்பதை போலீஸிடம் எப்பாடுபட்டாவது ஹரீஷால் சொல்லியிருக்க முடியும். அந்தக் கொள்ளையில் பங்கெடுத்தவனை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தபோது உடனேயே அவனைக் காட்டிக் கொடுத்திருக்கலாம். உத்தமன் இருக்குமிடத்தை போலீஸிடம் சொல்லியிருந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்களே..? ஹரீஷே ஏன் தேடி ஓட வேண்டும்..?
இப்படி பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை வைக்க முடிந்தாலும் படம் ஒட்டு மொத்தமாக ஒரு புதுவித அனுபவத்தைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒருவரின் செயல் இன்னொருவரை மறைமுகமாக பாதிப்பதை கதையின் அடித்தளமாகக் கொண்டு இதற்காக மெனக்கெட்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியத்தின் இயக்குநர் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

0 comments: