எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்துவது?

என் இனிய தமிழ் மக்களே...

உண்மைத்தமிழனுக்கும், சோதனைகளுக்கும் நெருங்கிய நட்புண்டு. அந்த வகையில் இப்பொழுது உங்களது அன்பு உண்மைத்தமிழனுக்கு, இன்னுமொரு சோதனை வந்துள்ளது. "நீயே எங்களுக்கொரு சோதனைதாண்டா.." என்று நீங்கள் அனைவரும் கோரஸாகச் சொல்வது என் காதில் விழுகிறது என்றாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலே தொடர்கிறேன்.. இனி சீரியஸாக..

"பகுத்தறிவு என்றால் என்ன?" இந்தக் கேள்வி என் மனதுக்குள் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.. ஏனெனில் ஆண்டவனோ, அல்லது இயற்கையோ-இவை படைத்தவற்றில் மிகச் சிறந்தது, உயர்ந்தது மனிதப் பிறவிதான் என்று பலரும் சொல்லி, எழுதிப் படித்திருக்கிறேன்.

அப்படிச் சொன்னவர்கள் அனைவருமே ஒருமித்தக் குரலில் சொல்லியிருப்பது "மனிதர்களுக்கும் மற்றப் படைப்புகளுக்கும் இருக்கும் வித்தியாசம், மனிதனிடம் இருக்கும் பகுத்தறிவுதான்.." என்று எழுதியிருந்தது எனது இளமைக் கால 'கனவுக்கன்னியான சில்க்ஸ்மிதா' பற்றிய எனது ஞாபகத்தினைத் தொடர்ந்து இரண்டாவதாக நினைவில் இருக்கும் ஒரு விஷயம்..

பகுத்தறிவு என்றால் 'பகுத்து+அறிவு=பகுத்தறிவு' என்று எனது தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 'அறிவையே பகுத்து அறிவது' என்றார்கள் இன்னும் சுருக்கமாக.. "அதெப்படிங்கய்யா.. அறிவைப் பகுத்து அறிவது..?" என்ற எனது கேள்விக்கு "குறுக்க குறுக்க பேசாதடா பல்லழகா.." என்று 9-ம் வகுப்பு கணபதி ஐயா, பிரம்பால் 'பேசியது' எனக்கு இன்றைக்கும் ஞாபகமிருக்கிறது.

"எந்த விஷயமாக இருந்தாலும் அது அறிவுடையதுதானா? அறிவூப்பூர்வமானதுதானா? கற்றவர்கள் அறிவார்ந்த செயல் என்று ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தகுதியுடைய விஷயம்தானா? என்று பல்வேறு டைப்புகளில் 'எலிக்குட்டி' சோதனை செய்து பார்த்துவிட்டு, பின்பு அதனை ஏற்றுக் கொள்வதுதான் அல்லது ஏற்றுக் கொள்ள வைப்பதுதான் பகுத்தறிவு.." என்றார்கள் நான் படித்தச் சில புத்தகங்களை எழுதியிருந்த சில 'பெரியவர்'கள்.

"சரி.. அதுக்கென்ன இப்போ" என்கிறீர்களா? கதை இங்கே.. இங்கேதான் ஆரம்பிக்கிறது..

என் வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் நானே என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இப்படி: "பிறந்து வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான எந்தச் சாதனையும் இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.." என்று..

உண்மைதான். ஒன்றுமே செய்யாமல், எதையுமே முயற்சி செய்யாமல் சும்மாவே இருந்தால் என்ன வரும்? தூக்கம்கூட வராது. ஆகவே, எதையாவது செய்து சரவணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இந்த உண்மைத்தமிழனின் பெயரை, தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றில் நீங்காத இடமாக பொறித்து வைத்துவிட வேண்டும் என்ற வெறி என் மனதுக்குள், எனக்குப் 'பகுத்தறிவு' என்ற ஒரு 'வஸ்து' தோன்றிய நாளிலிருந்தே இருந்து வருகிறது.

அதைச் செயல்படுத்தும்விதமாக எனக்குப் பிடித்தத் துறையான சினிமாவின் முதல் படியாக குறும்படம்(Short Film) ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பட்ஜெட் மிகக் குறைவாக இருந்தாலும் தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லல்பட்டு கடைசியில் ஒரு அன்புச் சகோதரி, "உன்னைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்குடா.. ஒரு வருஷத்துக்கு பிச்சைக்காரங்களுக்கு போடுற காசை, மொத்தமா உனக்குப் போட்டுட்டதா நினைச்சுக்குறேன்.. இந்தா பிடிச்சுத் தொலை.." என்று தயாரிப்புப் பணத்திற்கான செக்கை என் கையில் பாசத்துடன் திணித்தார்.

இன்றே, இப்போதே, அடுத்த நொடியே ஷ¥ட்டிங் என்று பீலா விட்டுக் கொண்டு சுற்றியவன், இன்றைக்கு தலைசுற்றி விழும்படியான நிலைமையில் இருக்கிறேன். காரணம், எனக்கு இருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் 'பகுத்தறிவு'.

கதையின்படி மேடை போன்ற அமைப்பு வேண்டும். அதற்காக இடம் தேடத் துவங்கினேன். ஏஸி வசதி செய்யப்பட்ட அரங்குகளின் வாடகைக் கட்டணங்கள் நான் போட்டிருக்கும் பட்ஜெட்டின் மொத்தத்தையும் சுருட்டிவிடுவதால் அதைவிடக் குறைந்த கட்டணத்திற்கு இடம் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இருக்கின்ற இடங்களும் உண்மைத்தமிழனின் 'ராசி'ப்படி "இப்போது நாங்கள் ஷ¥ட்டிங்கிற்கு தருவதில்லை.." என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.

பள்ளிகளைத் தேடத் தொடங்கினேன். "முதலில் டொனேஷனாக பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள். பின்பு நீங்கள் எடுக்கப் போகும் ஸ்கிரிப்ட்டை கொடுங்கள். நாங்கள் படித்துப் பார்த்துவிட்டு எங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், இடம் கொடுக்கிறோம்.." என்றார்கள். சினிமா உலகில் யாருக்குமே பிடிக்காத விஷயம் "சப்ஜெக்ட் என்ன..?" என்று கேட்பதுதான். உண்மைத்தமிழனும் அதற்கு விதிவிலக்கல்ல.. "வேண்டாம்.." என்று புறக்கணித்துவிட்டேன்.
கடைசியாக, "மாநகராட்சி சமுதாய நலக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே மேடை போன்ற ஒரு அமைப்பு இருக்கிறது. சென்று பாருங்கள்.." என்றொரு தகவல் கிடைத்தது. சென்றேன். பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. 'சரி இதையே முடித்துவிடலாம்..' என்று நினைத்து என் வேலைகளை ஆரம்பித்தேன். உண்மைத்தமிழனின் உடன் பிறவா சகோதரனான, 'சனி' பகவான் தன் 'வேலை'களை இங்குதான் ஆரம்பித்தான்.

முதலில் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு சென்றேன். "குறும்பட ஷீட்டிங். வாடகைக்கு வேண்டும். கட்டணம் எவ்வளவு?" என்றேன். "3000 ரூபாய்.." என்றார்கள். "மின்சாரச் செலவும், சேர்களுடைய கட்டணமும் தனி.." என்றார்கள். "சரி.." என்று ஒத்துக் கொண்டு "பணத்தை எங்கே கட்ட வேண்டும்..?" என்றேன்.. "மொதல்ல இந்த வார்டு கவுன்சிலரைப் போய் பார்த்துட்டு வாங்க.." என்றார் அங்கிருந்த அலுவலர். "அவரை எதற்கு பார்க்க வேண்டும்..?" என்றேன். "இல்ல ஸார்.. அவர் சொல்லாம யாருக்கும் வாடகைக்கு கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க ஸார்.." என்றார் அலுவலர்.

"என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு..? அது ஒன்றும் கவுன்சிலரின் சொந்த அரங்கம் கிடையாதே.. பின்பு எதற்கு நான் அவரைப் போய் பார்க்க வேண்டும்..?" என்றேன். "ஸார்.. இத்தனை நாளா எந்த நாட்ல இருந்தீங்க? ஆஸ்திரேலியாலயா?" என்றார் அலுவலர். நான் முறைத்தேன். "பின்ன என்ன ஸார்? நாட்டு நடப்புத் தெரியாம இப்படி காலங்கார்த்தால வந்து கழுத்தை அறுக்குறீங்க.. போங்க ஸார்.. மொதல்ல அவரைப் பார்த்துட்டு வாங்க ஸார்.." என்றார்கள்.

'சரி.. இவ்ளோ தூரம் வந்தாச்சு.. அவரையும் பார்த்துத்தான் தொலைவோமே?' என்ற எண்ணத்தில் கவுன்சிலரைத் தேடத் துவங்கினேன். காலையில் தொடங்கிய எனது தேடுதல் வேட்டை, மாலையில்தான் முடிந்தது. "அவர் இப்ப ரொம்ப பிஸி ஸார்.. மக்கள் பணியில் மும்முரமாக இருக்கிறார். உங்களுடைய பிரச்சினை என்னன்னு சொல்லுங்க.. எங்களால முடிஞ்சா நாங்க உதவி செய்றோம்.." என்றார்கள் கவுன்சிலரைப் பார்க்கப் போன இடத்தில் இருந்த கரை வேட்டிகள்.

சொன்னேன்.. "அவ்ளோதான... இதுக்குத்தான் இம்புட்டு தூரம் அண்ணனைத் தேடி அலைஞ்சீங்களா...?" என்ற ஒரு மீசைக்கார அண்ணன் தன் கைப்பேசியை எடுத்து ஒரு தட்டு தட்டினார். மறுமுனையில் இருப்பவரிடம், "ஏம்ப்பா ஒரு 'கலெக்ஷன்' வந்திருக்கு.. உடனே சொல்ல வேணாமா? என்னய்யா வேலை பார்க்குறீங்க நீங்க...?" என்று எகிறினார். மறுமுனையில் இருந்தவர் எதையோ சொல்ல.. இவரும் என் இருப்பிடத்திலிருந்து சற்றுத் தள்ளிப் போய் நின்று, திட்டித் தீர்த்துவிட்டு என்னருகில் வந்தார்."ஸார் நீங்க இப்பவே ஆபீஸ¤க்கு போங்க.. உங்களுக்குத் தரச் சொல்லிட்டேன். தருவாங்க.. வாங்கிக்கங்க.." என்றார். 'ஆஹா.. உண்மைத்தமிழா.. இன்னிக்கு சனீஸ்வரன் தோத்துட்டான்..' என்ற சந்தோஷத்தில் அலுவலகத்திற்குச் சென்றேன். கோபப் பார்வையுடன் அந்த அலுவலர் என்னை எதிர்கொண்டார்.

"ஏன் ஸார்.. நீங்க படிச்சவர்தான.. ஒரு மேட்டரை எப்படி முடிக்கணும்னு தெரியாதா? இதெல்லாம் தெரியாம எப்படி ஸார் நீங்க படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு வர்றீங்க.." என்று ஏகத்துக்கும் எகிறினார். நானும் பதிலுக்கு "நீங்க சொன்னதுனாலதான அவரைப் பார்க்கப் போனேன்.." என்றேன். "சரி ஸார்.. 'அவரைப் பார்க்கப் போறேன்'னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி¢ருந்தா.. 'என்ன செய்யணும்?' 'எப்படிப் பேசணும்'னு நான் சொல்லிக் கொடுத்திருப்பேன்ல.. இப்படி திடுதிப்புன்னு நீங்களா நேர்ல போய் 'அம்பானி' மாதிரி டீலிங்கை முடிச்சா எப்படி?" என்று கடுகடுவென்று பேசி முடித்தார்.

நான் எதுவும் பேசவில்லை. இப்போது வீறாப்பு பேசினால் இந்த இடமும் கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்தேன். "சரி.. சரி.. 4500 ரூபாய் கட்டிட்டு ரசீதை வாங்கிட்டுப் போங்க.." என்றார். எனக்குத் திக்கென்றானது. "என்ன ஸார் இது? காலைலதான் 3000 ரூபாய்னு சொன்னீங்க.. இப்போ 4500 ரூபாய்ன்னு சொல்றீங்க?" என்றேன் அதிர்ச்சி விலகாமல்.

"இதுக்குத்தான் சொன்னேன். என்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கலாம்னு.." என்றவர் "நீங்க பார்த்துப் பேசினவர் ஒண்ணுமே சொல்லலியா..?" என்றார். "இல்லையே.. 'போங்க.. தருவாங்க.. வாங்கிக்கங்க'ன்னு மட்டும்தான் சொன்னார்.." என்றேன். "அந்த xxxx மகன்களுக்கு வேற வேலை இல்லை.. செய்ற பாவத்தை முழுசா, அவனுகளே செஞ்சு தொலைய வேண்டியதுதான.. இதுக்கெதுக்கு எங்களை இழுக்குறானுக.." என்று மீண்டும், மீண்டும் தனது அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

நான் அவரை அவசரமாகத் தடுத்து, "ஸார்.. நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க.. எனக்குத் தெரியுது. ஆனா முழுசையும் கேட்க எனக்கு நேரமில்லை.. என்ன விஷயம்னு சொல்லுங்க.." என்றேன்.. ஒரு நிமிட தாமதத்துக்குப் பின்னர் "உட்காருங்க.." என்றார். அதுவரையில் நின்று கொண்டிருந்த நான் 'இப்போதாவது கண்ணு தெரிஞ்சுச்சே மனுஷனுக்கு' என்ற நினைப்போடு அமர்ந்தேன்.

"ஸார் இதப் பாருங்க.. நான் நேரடியாவே சொல்லிடறேன்.. இங்க வாடகை 3000 ரூபாய்தான். 3000 ரூபாய்க்குத்தான் நாங்க பில்லும் கொடுப்போம். நீங்க கூட கொடுக்கிற 1500 ரூபாய், கவுன்சிலருக்குப் போகும். இதான் மேட்டர்.." என்றார்.சுற்றி வளைத்து 'லஞ்சம்' என்பது எனக்குப் புரிந்தது. "அதெப்படி ஸார் லஞ்சம் தர முடியும்?" என்று நான் கேட்க, "அதான் கேக்குறாங்கள்லே" என்று பட்டென்று பதில் வந்தது. "இது என்ன கணக்கு ஸார்? இடம் மாநகராட்சியோடது. நானும் மாநகராட்சி எல்லைக்குள்ளதான் குடியிருக்கிறேன். மாநகராட்சித் தேர்தல்ல ஓட்டும் போட்டிருக்கேன். மாநகராட்சில எனக்கும் ஒரு பங்கு இருக்கு.. நான் முறையா மாநகராட்சி அனுமதித்திருக்கும் கட்டணத்தைத்தான் கட்ட வேண்டும். கூட கவுன்சிலர் கேட்டார்னு, நீங்க எப்படி என்கிட்ட கேக்கலாம்.." என்றேன் கோபமாக.

நிறைய பேர் உடன் இருக்க.. அனைவரும் எங்களைப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது. அலுவலர் சற்று சங்கடத்துடன் "கொஞ்சம் வெளில வர்றீங்களா? பேசலாம்.." என்றார். 'சரி' என்று அமைதியாக அவருடன் வெளியில் வந்தேன். ஒரு மரத்தடிக்கு வந்ததும் 'வெண்குழல்' ஒன்றைப் பற்ற வைத்து 'இழு இழு' என்று இழுத்தார். பக்கத்தில் இருந்து புகையை இழுத்தக் காரணத்தால் சத்தியமாக எனக்கு கேன்சர் வர வாய்ப்புண்டு. அவ்ளோ புகை.. அவ்ளோ ஸ்பீடு.

கையில் நெருப்பு சுட்ட பிறகுதான், தீர்ந்துவிட்டது என்ற சுயநினைவுக்கு வந்தவர் அந்த 'பிட்'டை கீழே போட்டார். பின்பு என்னை ஏறெடுத்துப் பார்த்தவர், "உங்க வயசென்ன?" என்றார். "37.." என்றேன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு. "கல்யாணம் ஆயிருச்சா?" என்றார். "இல்லை.." என்று உண்மையைச் சொன்னேன். "நினைச்சேன். அதான் இப்படி இருக்கீங்க.." என்றார். பின்பு பெருமூச்சு ஒன்றை விட்டவர் பேசத் தொடங்கினார்.

"நான் சொல்றதை குறுக்கிடாம கடைசிவரைக்கும் கேளுங்க.. அப்புறமா உங்க பதிலைச் சொல்லுங்க.. நாங்க கவர்ன்மெண்ட் ஸ்டாப் கிடையாது. மாநகராட்சி ஊழியர்கள். எங்களுக்கு மேலதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தாலும், நிஜமான மேலதிகாரிகள் அந்தந்தப் பகுதி கவுன்சிலர்கள்தான். அவங்க சொல்றதை நாங்க கேட்டுத்தான் ஆகணும்.. இல்லேன்னா நான் சரியா வேலை பார்க்கலைன்னு சொல்லி இன்னிக்கே, இப்பவே அவுங்களால என்னை வீட்டுக்கு அனுப்ப முடியும். எங்களுக்குன்னு ஒரு வலு வாய்ந்த ஊழியர்கள் சங்கமோ, அமைப்போ இன்றுவரை இல்லை. இது ஒரு விஷயம்.

அடுத்தது என்னன்னா.. இப்ப புதுசா ஜெயிச்சு வந்திருக்கிற கவுன்சிலர்கள்ல நிறைய பேரு கோர்ட்டு உத்தரவால் ரெண்டு தடவை காசை செலவு பண்ணி போஸ்ட்டுக்கு வந்திருக்காங்க.. இப்ப இருக்குற கவர்ன்மெண்ட்டு ஓரளவுக்கு வெளிப்படையா செயல்பட்டு வர்றதால, இவுங்களால போட்ட காசை அள்ள முடியலை. பார்த்தாங்க.. அதுக்குத் தோதா கிடைச்சதுதான் இந்த மாதிரி இடைல புகுந்து அள்ளுற டெக்னிக்..

இப்ப நான் அவுங்களை எதிர்த்து உங்ககிட்ட பணத்தை வாங்கிட்டு ரசீது போட்டுக் கொடுத்திருவேன். ஆனா அதுக்கப்புறம் என்ன நடக்கும்னா.. கரெக்ட்டா உங்க நிகழ்ச்சி நடக்கிற அன்னைக்கு, அந்த பில்டிங்குக்கு மட்டும் கரெண்ட் வராது.. கேட்டால் "மின் சப்ளையில் பிரச்சினை" என்பார்கள். இல்லாட்டி அங்க வேலை பார்க்குற எங்க ஊழியரே, 'இல்லாத பாட்டி ஒண்ணு செத்துப் போச்சு'ன்னு அலகாபாத்துக்குக்கூட பிளைட் ஏறிப் போயிருவான். அதுவும் இல்லாட்டி.. அன்னிக்குன்னு பார்த்து கவுன்சிலர் தன் கட்சியோட செயல் வீரர்கள் கூட்டத்தைத் திடீர்ன்னு அங்க கூட்டிருவாரு.. உங்களால ஒண்ணும் செய்ய முடியாது.

மிஞ்சிப் போனா கமிஷனர்கிட்ட புகார் செய்யலாம். கமிஷனர் மின் வாரியத்துக்கிட்ட விளக்கம் கேட்பாரு. அதுவும் எப்படி? கடிதம் மூலமா.. அங்க லெட்டர் போயி.. அது மின் வாரிய ஆபீஸையே சுத்தோ சுத்துன்னு சுத்திட்டு எங்க கமிஷனருக்குப் பதில் கடிதம் வர்றதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆயிரும். அப்படியே கடிதம் வந்தாலும் அதுல என்ன இருக்கும்னு என்னால இப்பவே சொல்ல முடியும்.. "தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தக் கட்டிடத்திற்கு அன்றைக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம்.." என்று இருக்கும். கமிஷனரும் உங்ககிட்ட இதைத்தான் சொல்வார். உங்களால என்ன செய்ய முடியும்? சொல்லுங்க..

இல்லாட்டி.. நீங்க நுகர்வோர் கோர்ட்ல கேஸ் போடலாம். அதுனால எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஏன்னா எப்படியும் நாங்க கோர்ட், கேஸ¤ன்னு அலையப் போறதில்லை. நீங்கதான் அலையணும்.. எங்க ஆபீஸ்லேர்ந்து லெட்டர்தான் வரும். மின் வாரியத்துக்கு ஒரு நோட்டீஸ், வேலை பார்த்தவனுக்கு ஒரு நோட்டீஸ், கவுன்சிலருக்கு ஒரு நோட்டீஸ்ன்னு பறக்கும்.. எல்லாருமே சாமான்யத்துல பதில் சொல்ல மாட்டாங்க. ஆளுக்கொரு ரெண்டு, ரெண்டு மாசம் இழுத்துதான் தங்களோட பதிலை தாக்கல் செய்வாங்க.. அதுக்கே ஒரு வருஷம் ஓடிரும். அப்புறம் அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள தீர்ப்பு வந்திரும். எப்படின்னா.. நீங்க கட்டின பணத்தைத் திருப்பித் தரச் சொல்லி.. அதுக்குள்ள நீங்க எடுக்கப் போற குறும்படத்தோட கதையே உங்களுக்கு மறந்து போனாலும், போயிரும்..

இல்லேன்னா.. லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்ல புகார் செய்யுங்க.. மொதல்ல அவுங்க இந்தப் புகாரை வாங்குவாங்கலான்றதே சந்தேகம். ஏன்னா கவுன்சிலர் இருக்குற கட்சியோட தலைவர்தான் இந்தத் துறைக்கு சுப்ரீம் லீடர். ஆட்சில இருக்குற கட்சியோட பேர் கெடுற மாதிரியான ஒரு காரியத்தை எந்தப் போலீஸ்காரனும் செய்ய மாட்டான் ஸார்.

இந்த லஞ்சத்தை நீங்க proof பண்றதும் ரொம்பக் கஷ்டம்தான்.. ஏன்னா, இப்ப நான் உங்களுக்கு 3000 ரூபாய்க்குத்தான் ரசீது தருவேன். மீதி 1500 ரூபாயையும் நான் என் கையால வாங்க மாட்டேன். இந்த ரசீதோட 1500 ரூபாய் பணத்தைக் கொண்டு போய் அந்த கவுன்சிலர் கை காட்டுற ஆளுகிட்ட கொடுத்திட்டு அவர் அங்க இருந்து எனக்கு ஒரு போன் போட்டு 'ஓகே'ன்னு சொன்ன பின்னாடிதான் ரிஜிஸ்தர்ல உங்க பேரையும், அட்ரஸையும் எழுதி பதிவு செய்வேன். 'ஓகே'ன்னு போன் வரலைன்னா.. அந்த ரசீது 'கேன்ஸல்'ன்னு எழுதி வைச்சிருவேன். உங்களுக்குப் பணம் வேணும்னா, நீங்களே திரும்பி வந்து பணம் கேட்பீங்கள்லே... அப்ப அந்த ரசீதை வாங்கி வைச்சிட்டு பணத்தைப் பத்திரமா திருப்பிக் கொடுத்திருவேன்..

கவுன்சிலருக்கு லஞ்சப் பணம் கிடைக்காம மாநகராட்சிக்கு மட்டும் பணம் வருதுன்னா, அது தேவையில்லைன்னு அவுங்களே முடிவு பண்ணிட்டாங்க. இதுல இந்தக் கட்சியோட கவுன்சிலர்ன்னு இல்லை ஸார்.. போன தடவை இருந்த கட்சியோட கவுன்சிலரும் இதைத்தான் செஞ்சார்.. இந்த விஷயத்துல மட்டும் எல்லாக் கட்சிக்காரர்களும் ஒண்ணுதான்.. இதுல என்னை மாதிரி சாதாரணமான கூலிக்கு மாரடிக்கிற நாய்க என்ன செய்ய முடியும்? சொல்லுங்க..

நீங்க இன்னொன்னும் செய்யலாம். மினிஸ்டர்கிட்ட போகலாம்.. பத்திரிகைகள்ல பேட்டி தரலாம். என்ன வேண்ணாலும் பண்ணலாம். ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வைச்சுக்குங்க.. போன்ல எப்படி ஒட்டுக் கேக்குறதுன்னு சிபிஐக்கே கத்துக் கொடுத்தது நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான்.. இதெல்லாம் அவுங்களுக்கு ஒரு சாதாரண விஷயம். 'கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டிட்டோம். அங்க பங்ஷன் இருந்தது எனக்குத் தெரியாது'ன்னு கவுன்சிலர் கூலா அவுங்க கட்சி மேலிடத்துல சொல்லித் தப்பிச்சிருவாரு.. அங்கேயும் ஒண்ணும் நடக்காது.

பத்திரிகைல சொன்னீங்கன்னா.. அவுங்களும் தன் பங்குக்கு பக்கம் நிரம்புதேன்னு வெளியிட்டிருவாங்க.. கமிஷனரும் விசாரிக்கிறேன்னு சொல்வாரு. கவுன்சிலரும் நான் அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன்னு சொல்வாரு. அதுக்காக நீங்க அரிச்சந்திரனையா போய் பார்க்க முடியும்? சொல்லுங்க.."

- இப்படி நீட்டமாக ஒரு மகாபாரதத்தைச் சொல்லி முடித்தார் அந்த அலுவலர்.

வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான் "ஏன் ஸார்.. இவ்ளோ விஷயத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே.. லஞ்சம் வாங்குறதும் தப்பு.. அதை வாங்கிக் கொடுக்கிறதும் தப்புன்னு உங்களுக்குத் தெரியுமே ஸார்.. நீங்க முடியாதுன்னு உறுதியா நிக்கலாமே.." என்றேன்.

"நிக்கலாம்தான்.. யார் இல்லேன்னா.. அப்புறம் என் குடும்பம் நிக்க முடியாதே.. என் டேபிள்ல இருக்கிற பைல்ஸ்ல ஏதோ ஒண்ணு என் கண்ணு முன்னாடியே காணாமப் போகும்.. சில பைல்ஸ்ல சில பக்கங்கள் கிழித்து எறியப்பட்டிருக்கும். மறுநாள் என் மேல டிபார்ட்மெண்ட் என்கொயரி நடக்கும். உண்மை தெரியறவரைக்கும் நான் சஸ்பெண்ட் ஆவேன்.. இப்பவே கொடுக்குற சம்பளம் பிச்சைக்காரத்தனமா இருக்கு. இதுலயே பாதின்னா வடபழனி முருகன் கோவில் வாசல்ல இருக்குற பிச்சைக்காரனுக்கு, ஒரு நாள்ல கிடைக்கிற காசைவிட கம்மியாத்தான் என் சஸ்பெண்ட் சம்பளம் இருக்கும். அதை வைச்சு நான் என்ன பண்றது?

எனக்கும் பேமிலி இருக்கு ஸார்.. நானும் ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு பெத்து வைச்சிருக்கேன். ஆசைக்கு பெத்தது +2 படிக்குது. அடுத்த வருஷம் அவளை காலேஜுக்கு அனுப்பணும்.. அதுக்கு காசு யார் தருவா? ஆஸ்திக்குப் பெத்தது இப்பத்தான் பத்தாம்கிளாஸை மூணாவது தடவையா படிச்சிட்டிருக்கு.. அவனுக்கு ஆஸ்தின்னு நான் கொடுக்கப் போறது என் இன்ஷியல் மட்டும்தான்னு தெரிஞ்சா, என் எழவுக்குக்கூட வர மாட்டான் ஸார் அவன்.. நான் என்ன செய்றது? சொல்லுங்க..

இந்தப் பாவப் பொழைப்பே வேண்டாம்டா சாமின்னுட்டுத்தான் லஞ்சமா கொடுக்கிற காசை நான் மட்டும்.. இந்த ஆபீஸ்லயே நான் மட்டும்தான் கைல வாங்காம 'எவன்கிட்டயாவது கொண்டு போய் கொடுங்க.. எவனோ எடுத்துத் தொலைங்க'ன்னு சொல்லி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டிருக்கேன்.. என்னால முடிஞ்சது இவ்ளோதான் ஸார்.." என்று சொன்னவர் மூச்சு வாங்கியபடியே ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துவிட்டார்.

எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. "இதுல வேற ஏதாவது வழியிருக்கா..?" என்றேன். ஒரு நிமிடம் ஏறெடுத்துப் பார்த்தவர், "ஒண்ணே ஒண்ணு இருக்கு.." என்றவர், "பேசாம ஒரு கத்தியை எடுத்துட்டுப் போய் அவன் வயித்துல சொருகிறுங்க.. போலீஸ் வரும். பின்னாடி பத்திரிகைக்காரங்க வருவாங்க. மேட்டரைச் சொல்லுங்க.. பரபரப்பாகும். உங்க கோபத்துக்குப் பின்னாடி இருக்கிற சோகத்துல நியாயம் இருக்குன்னு நினைச்சு, எல்லாரும் உங்களைப் பாராட்டுவாங்க.. பேட்டி எடுப்பாங்க.. பொன்னாடை போர்த்தி விழா எடுப்பாங்க.. என்ன ஒரு விஷயம்.. அதுக்கு முன்னாடி குறைந்தபட்சம் ஒரு மூணு மாசமாச்சும் நீங்க ஜெயில்ல களி திங்கணும்.. எது உங்களுக்கு நல்லதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க. அப்புறமா இந்த சினிமா, short film-ன்னு சொன்னீங்கள்லே.. அதை எடுங்க..." என்றவர் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.

இனிமேலும் வீணாகச் சென்று அவரைத் தொந்திரவு செய்வது நாகரிகமல்ல என்பதால் திரும்பிவிட்டேன். இரவு படுக்கையில் தலையைச் சாய்த்தவுடன், அவர் பேசிய பேச்சுக்களில் இருந்த அரசியல் நியாயம், அரசியல் அநியாயம் இரண்டுமே எனக்குப் புரிந்தது..

'லஞ்சம் கொடுப்பது குற்றம். அது ஒரு பாவச்செயல் அதைச் செய்யாதே' என்கிறது எனக்குள் இருக்கும் பகுத்தறிவு. 'கொடுக்காவிட்டால் அந்த இடத்தில் ஷ¥ட்டிங் செய்ய முடியாது..' என்கிறது இன்னொரு எச்சரிக்கை பகுத்தறிவு. 'நீ ஒரு இந்தியக் குடிமகன். நியாயம், நேர்மை, நீதி என்பவற்றை போராடித்தான் எதையும் பெற வேண்டும். போராடு' என்கிறது இன்னொரு பகுத்தறிவு..

லஞ்சம் வாங்குவது என்பதே இப்போது சட்டப்பூர்வமாகிவிட்டதைப் போல் அரசியல்வாதிகள் நடந்து கொண்டிருக்க.. 'லஞ்சம் கொடுக்காமல் எதுவுமே நடக்காது. இதெல்லாம் ஜனநாயகத்துல சர்வசாதாரணம்' என்ற மனரீதியில் பொதுமக்களும் இருக்க.. இவர்களிடம் பகுத்தறிவு என்ற 'வஸ்து' இருக்கிறதா? இல்லையா? அல்லது இருப்பதைப் போல் நடிக்கிறார்களா? இந்தக் குழப்பம் இப்போது உண்மைத்தமிழனை தூங்க விடாமல் செய்துள்ளது.

எனக்கோ இந்த மாதத்திற்குள் இந்தக் குறும்படத்தை எடுத்தேத் தீர வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. காரணம், இந்தக் குறும்படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டவர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பவர்கள். இந்த உண்மைத்தமிழனுக்காக ஊதியமாக ஒரு பைசா கூட கேட்காமல் ஒத்துக் கொண்டவர்கள். கொஞ்சம் பிரபலமானவர்கள். அவர்களது மனம் நோகாமல் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே நாளில் படத்தை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது உண்மைத்தமிழனின் முன்னால் இருப்பது கீழ்க்கண்ட 'பகுத்தறிவு வழிகள்'தான்.

1. லஞ்சப் பணத்தைக் கொடுத்துவிட்டு சப்தமில்லாமல் ஷ¥ட்டிங்கை எடுத்து முடித்து விடுவது என்ற நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போகும் பகுத்தறிவு.
2. லஞ்சம் தர மாட்டேன் என்று உறுதி கொண்டு, லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் செய்ய வேண்டும் என்று பேப்பரில் எழுதி வைத்ததைப் படிக்கும் பகுத்தறிவு.

3. மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்து, அவரது முடிவுக்காகக் காத்திருக்கச் சொல்லும் பகுத்தறிவு.

4. வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கச் சொல்லும் பகுத்தறிவு.

5. டெஹல்கா போன்ற பத்திரிகைகளைப் போல் லஞ்சம் கேட்பதையும், லஞ்சம் கொடுப்பதையும் பதிவு செய்து வெளியிட்டு பரபரப்பு பார்க்கலாம் என்ற பகுத்தறிவு.

6. கட்சிக்காரர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாத, குறும்படத்தில் நடிக்கவிருக்கும் பிரபலங்களைத் தூக்கிவிட்டு, சாதாரண நடிகர்களை கூடுதல் சம்பளத்திற்கு புக் செய்ய நினைக்கும் பகுத்தறிவு.

7. விஷயம் வெளியானால் படத்தில் நடிக்க இருப்பவர்களுக்கு ஏற்படும் மனச்சங்கடங்களை உறுதியுடன் எதிர் கொள் என்று சொல்லும் பகுத்தறிவு.

8. இப்போது நடிக்க இருப்பவர்களின் வீடுகளுக்கு அழைக்காமல் சென்று சாப்பிட்டு விட்டு வரும் பாசத்தின் அடிப்படையிலான உரிமை, இந்த விஷயத்தால் கை நழுவிப் போகும் அபாயம் உண்டு என்றாலும் துணிந்து செய்தியை வெளியிடு என்று சொல்லும் பகுத்தறிவு.

9. மாநகராட்சி முன்னர் திடீர் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை உண்டாக்கச் சொல்லும் பகுத்தறிவு.

10. 'எதற்கும் அஞ்சாதே.. துணிந்து நில்.. வருவது வரட்டும்.. யாரிடமும் பயம் வேண்டாம்.. கவுன்சிலரை எதிர்த்து தனியொரு மனிதனாகப் பிரச்சாரம் செய்...' என்ற வாலிப முறுக்கை ஞாபகப்படுத்தும் பகுத்தறிவு.

11. 'இந்தப் பகுத்தறிவுன்ற விஷயமே வேண்டாம்டா உண்மைத்தமிழா. அதெல்லாம் இருக்கிறவங்கதான் கவலைப்படணும்.. உனக்கில்லை.. குறும்படமும் வேண்டாம்.. ஒரு மண்ணும் வேண்டாம்.. இருக்கின்ற வேலையைப் பார்...' என்று சொல்லும் ஸ்பெஷல் பகுத்தறிவு.

உண்மைத்தமிழன் இதில் எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும்?

நீங்களே சொல்லுங்கள்..

ஜெய்ஹிந்த்!!!

பெருகும் தமிழ்க்'குடி'மகன்கள்-யாருக்கு இருக்கு கவலை?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


பயப்படாதீங்க.. இது சின்ன மேட்டர்தான்.. காலைல பேப்பர் படிச்சிட்டிருக்கும்போது இந்த விஷயம் நம்ம கண்ணுல பட்டுச்சு.. பட்டுன்னு சுட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க.. அப்புறமா 'பெருமைப்பட்டுக்குங்க..'

"..தமிழகத்தில் மதுபானக் கொள்முதலை முன்பு 'டாஸ்மாக்' நிறுவனம் செய்து வந்தது. சில்லரை விற்பனைக் கடைகளை தனியார் நடத்தி வந்தனர். இதில், பல வகைகளில் போலி சரக்குகளும், அரசுக்கு ஆயத்தீர்வை செலுத்தாமல் நேரடியாகச் சப்ளை செய்யப்படும் சரக்குகளும் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.

கடந்த 2003-ம் ஆண்டு நவம்பரில் இருந்து 'டாஸ்மாக்' நிறுவனமே சில்லரை விற்பனையை நடத்தத் துவங்கியது. இதன் மூலம் போலி சரக்குகள் கட்டுப்படுத்தப்பட்டன. 'டாஸ்மாக்' விற்பனையைத் துவக்கிய பின்னர், ஆண்டுக்கு ஆண்டு மதுபானங்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல வருவாயும் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் பெரிய அளவில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டவில்லை. 'டாஸ்மாக்' விற்பனையைத் துவக்கிய பின்னர், 'குவார்ட்டர்' எனப்படும் 180 மி.லி. சரக்குகளின் விலை இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது.
இப்படியிருக்கும்போது அரசுக்கு கிடைத்துவரும் வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பது குடிமகன்களின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியுள்ளதையே வெளிப்படுத்துகிறது.

கடந்த 1996-97ம் ஆண்டில் மது வகைகள் ஒரு கோடியே 39 லட்சத்து 57 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டுள்ளன. (ஒரு பெட்டியில் 750 மி.லி. அளவு கொண்ட 12 முழு பாட்டில்கள் இருக்கும்) இதே விற்பனை 2002-03-ம் ஆண்டில் ஒரு கோடியே 42 லட்சத்து 23 ஆயிரம் பெட்டிகளாகத்தான் இருந்தது.
ஆனால் சில்லரை விற்பனையை அரசே எடுத்து, 'டாஸ்மாக்' மூலம் 2003-ம் ஆண்டு முதல் கடைகளை நடத்தத் துவங்கிய பின்னர், விற்பனை அளவு ஆண்டுக்கு ஆண்டு உயரத் தொடங்கியது. 2003-04-ம் ஆண்டில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்ட நிலையில் 2006-07-ம் ஆண்டில் இரண்டு கோடியே 71 லட்சத்து 54 ஆயிரமாக விற்பனை அளவு உயர்ந்துள்ளது.

இதே போல, பீர் வகைகள் விற்பனை 1996-97-ம் ஆண்டில் ஒரு கோடியே 43 ஆயிரம் பெட்டிகளாக இருந்தன. கடந்த 2002-03-ம் ஆண்டில் இதன் பெட்டி அளவு 97 லட்சத்து 16 ஆயிரம் பெட்டிகளாக குறைந்தது. ஆனால் 2006-07-ம் ஆண்டில் ஒரு கோடியே 77 லட்சத்து 33 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

இப்படி விற்பனை அளவு ஐந்தாண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளதால், அரசுக்குக் கிடைத்து வந்த வருவாயும், பத்தாண்டுகளில் ஐந்து மடங்குக்கு மேல் கூடியுள்ளது.

மதுபான விற்பனை மூலம் கடந்த 1996-97-ம் ஆண்டில் ஆயிரத்து 646 கோடியே 66 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்தது. இதுவே 2002-03-ம் ஆண்டில் மூவாயிரத்து 807 கோடியே 45 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

'டாஸ்மாக்' மூலம் மதுபான விற்பனையைத் துவக்கிய பின்னர், வருவாய் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்தும் உள்ளது.

இதன்படி 2006-07-ம் ஆண்டில் ஏழாயிரத்து 441 கோடியே 44 லட்சம் ரூபாய் 'டாஸ்மாக்' மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

மது குடிப்போரின் எண்ணிக்கை உயர்ந்தாலும், இந்த வருமானத்தை அரசு பெரிதும் நம்பியுள்ளது.

'இலவசத் திட்டங்கள்' பலவற்றை அறிவிப்பதற்கு மதுவகைகள் மூலம் கிடைக்கும் ஏழாயிரம் கோடி ரூபாய் வருமானம்தான் இந்த அரசுக்கு கை கொடுத்து வருகிறது.."

வாழ்க தமிழகம்!
வளர்க அரசியல்!!
பல்லாண்டு வாழ்க தலைவர்கள்!!!
சில காலம் வாழட்டும் தமிழக மக்கள்!!!!

ஏப்ரல்-22 வலைப்பதிவர் கூட்டம்-வெளிவராத சில உண்மைகள்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

வருடாவருடம்தான் ஏப்ரல் மாதம் வந்து செல்கிறது. அதிலும் 22-ம் தேதி என்பதும் வருகிறது.. சப்தமில்லாமல் கடந்து விடுகிறது. ஆனால் இந்த முறை அந்த ஏப்ரல்-22 எனக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல். ஏதோ ஒரு ஏஸி ரூமுக்குள்ள உக்கார்ந்து யாரோ, எவரோ எழுதினதுக்கு பின்னூட்டம் போட்டு நக்கல் பண்றோம். அவர் யாரோ? நாம யாரோ? அவர் கருப்பா? சிவப்பா? வெள்ளையான்னுகூடத் தெரியாது.. ஆனாலும் எழுத்தால் பேசிக் கொள்கிறோம்.

எப்படி இருப்பார்களோ என்ற எண்ணத்தில் இப்படி இட்டுக் கட்டி இட்ட இடுகைகளுக்கு மத்தியில் அவர்களை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற உற்சவத்தை துவக்கி வைத்தார் 'தலை' பாலபாரதி. நான் சிறுவனாக இருக்கும்போது "தீபாவளி அடுத்த மாதம் வருதே.." என்று காலண்டரைப் பார்த்து தற்செயலாக எனது அக்கா சொன்னபோது ஸ்கூல் பேகைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு அந்தப் புது டிரெஸ்ஸிற்காகவும், எனக்குப் பிடித்த ரவா உருண்டையை நினைத்தும் உற்சாகமிட்டது, ஏனோ அன்றைக்கு என் நினைவுக்கு வரத்தான் செய்தது.

அடுத்த இரண்டொரு நாட்களில் பின்னூட்டமிட்ட பதிவுகளில் எல்லாம் ஜாக்கிரதையாக ஒன்றுக்கு மூன்று முறை படித்துப் பார்த்து ஏதாவது அசம்பாவிதமாக எழுதியிருக்கேனா? எழுதித் தொலைந்துவிட்டால் நேரில் முகம் பார்த்து பேச முடியாதே என்ற நினைப்பில் பார்த்துப் பார்த்து எழுதினேன். அப்படியும் ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டு மரண அடி வாங்கி அதைத் தனிப் பதிவாகப் போட்டு அல்லல்பட்டதும் நடந்துவிட்டது.

இடையில் நடந்த சில அசம்பாவித நிகழ்வுகளால் வலையுலகமே இரண்டு பிரிவாகப் பிரிந்து மைக் இல்லாமல் பொதுக்கூட்டங்களை ஆங்காங்கே நடத்தத் துவங்க.. இந்த மீட்டிங் பற்றிய எதிர்பார்ப்பு சில நாட்கள் களையிழந்து போயிருந்தது. திடீரென்று நண்பர் தங்கவேலு, லக்கிலுக், இட்லிவடை என்று பலரும் சோர்ந்து போயிருந்த வலைத்தளத்திற்கு உற்சாகமூட்டுவதற்காக வலைப்பதிவர் சந்திப்பை தனிப்பதிவுகளாகப் போட்டுத் தள்ளினார்கள். 'தலை' பாலபாரதியும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீட்டிங் வேலையில் மும்முரமானார்.

கடைசி நிமிட கேன்வாஸாக தளபதி லக்கிலுக் 'தலை'க்காக என்னென்னமோ ஜிகினா, ஒட்டு வேலையெல்லாம் செய்தார். கூடவே டெல்லி மாநிலச் செயலாளர் திரு.சென்ஷி அவர்களும் ஒரு பதிவைப் போட்டு தானும் கட்சியில் இருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொண்டார். கடைசி இரண்டு நாட்களிலும் மட்டற்ற, மாசற்ற உடன்பிறப்பு லக்கிலுக் SMS மூலம் மீட்டிங் பற்றி ஞாபகப்படுத்தினார்.

அந்த ஏப்ரல் 22-ம் வந்தது.. காலையில் இருந்து எனக்கு வீட்டில் கையும் ----------------காலும் -------------------.. Fill in the Blanks-ல் என்ன வார்த்தை இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அதை எழுதவில்லை. மதியம் நேரில் சந்திக்க வரும்படி சொன்ன ஒரு சின்னத்திரை இயக்குநரிடம் சராமரியாக திட்டுக்களை வாங்கிக் கொண்டு "ஒரு முக்கியமான வேலை இருக்கு ஸார்.." என்று சொல்லித் தப்பித்தேன்.. "பிச்சையெடுக்கும்போது வருவீல்ல.. அப்ப வா.. பேசிக்கிறேன்.." என்றார் அவர். நமக்கு மீட்டிங் முக்கியமா? கதை டைப் செய்றது முக்கியமா? அதான் கிளம்பிட்டேன்..

2.45 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி 3 மணிக்கு நடேசன் முதலியார் பார்க்கிற்கு வந்து சேர்ந்தேன். 'அஞ்சாத உடன்பிறப்பு' லக்கிலுக் அரை மணி நேரத்திற்கு முன்பே வந்து தொலையும்படி அன்புடன் கேட்டுக் கொண்டிருந்தபடியால் முன்னாலேயே வந்தேன்.
வாசலில் பிச்சைக்காரர்களைத் தவிர வேறு யாருமில்லை.(பின்ன.. "புதிய உறுப்பினர் உண்மைத்தமிழன் அவர்களே வருக.. வருக.." அப்படீன்னு போஸ்டர் அடிச்சு, போர்டு வைச்சு, பேனர் கட்டி.. பூ போட்டு வரவேற்பாங்கன்னா நினைச்ச..?)

வாசலில் இருந்து 'கழகத்தின் கண்மணி' லக்கிலுக் அவர்களுக்கு போன் செய்தேன். "அப்படியே உள்ளே வந்துக்கிட்டே இருங்க ஸார்.." என்றார். உள்ளே சென்றேன். ஒரு மிஸ்டு கால். குனிந்து கைப்பேசியைப் பார்த்துவிட்டு நிமிர ஒரு கை என்னை நோக்கித் திரும்பி தன்னை நோக்கி வரும்படி பணித்தது. "யாரோ ஒருத்தர்" என்று நினைத்துக் கொண்டு அருகில் செல்லச் செல்ல.. அந்த மொட்டைத் தலையை எங்கயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று எனக்குள் சந்தேகம் எழுந்தது.

அருகில் சென்றவுடன் "வாங்க தலைவா.." என்று மொட்டைத் தலையிலிருந்து குரல் எழும்ப.. அட ஆண்டவா.. 'தலை'யேதான்.. 'தலை'ன்னு எதுக்குப் பேர் வைச்சோம். கொஞ்சமாச்சும் தலைல 'இருக்க' வேணாமா? இப்படி National Highways ரோடு மாதிரி மொட்டையடிச்சுட்டாரு.. "என்ன தலை?"ண்ணேன்.. "சும்மாதான் தலைவா.. எல்லாம் ஒரு சேப்டிக்குத்தான்.." என்றார் தலை. "எங்க திருப்பதியா..?" என்றேன்.. "என்ன நக்கலா? எல்லாம் இங்கனதான்.. அயனாவரம். ராயல் சலூன்.." என்றார்.(அடப்பாவி மனுஷா.. 'இங்கனதான் மொட்டை அடிக்கப் போறேன்'னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானே கத்திரியோட ஓடி வந்திருப்பனே.. எனக்காவது ஒரு நூறு ரூபா கிடைச்சிருக்குமே.. பொழைப்புல மண்ணை அள்ளிப் போட்டுதீரே..)
பக்கத்தில் தொண்டரணி வீரர் போல் அமர்ந்திருந்த ஒருவரைக் கை காட்டிய 'தலை' "இவர்தான் லக்கிலுக்.." என்றார். ஆத்தாடி.. உண்மையாகவே இவர்தாம்ல 'உடன்பிறப்பு'.. டிரெஸ்லகூட 'யூனிபார்ம்'லதான இருந்தார்னா பார்த்துக்குங்க.. எதிரில் இருந்தவரைக் காட்டி "இவர்தான் சிறில் அலெக்ஸ்.." என்றார். கை குலுக்கிக் கொண்டோம்.

'தலை'க்கு போன் மேல் போன் வரத் துவங்கியது.. "வேற யாரும் வரலியா..?" என்ற கேள்விக்கு தூரத்தில் ஒரு நான்கு பேர் உட்கார்ந்திப்பதைக் கை காட்டி "பாஸ்டன் பாலாவும், நடராசன் ஸாரும் வந்திருக்காங்க.. வருவாங்க.." என்றார் பாலா. திடீரென்று இன்னொருபுறத்தில் இருந்து ஒருவர் பளீரென ரின் சோப் & கோல்கேட் டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் ஹீரோ போல் வந்தார். அருகில் வந்தவுடன் தானே முன் வந்து கை குலுக்கினார் "மா.சிவக்குமார்.." என்று.. ஆத்தி.. மென்மையா எழுதுவாரேன்னு நினைச்சா ஆளும் அப்படியேதான் இருக்காருன்னு நினைச்சேன்.

அடுத்து ஐயா இராம.கி அவர்கள் வந்தார்கள். "3.30 மணின்றது அதிகம். ஒரு 4, 4.30 மணின்னு வைச்சிருக்கணும்.." என்று தன் அபிப்ராயத்தைச் சொன்னார். "இல்லீங்கய்யா.. 3-ன்னு சொன்னாலே எல்லாரும் வந்து சேர்றதுக்கு 4 ஆயிரும். அதான்.." என்று சமாளித்தார் பாலா. அடுத்து 'இனமானப் பேராசிரியர்'(யார் யாரையோ சொல்லும்போது நம்ம ஐயாவைச் சொன்னா என்ன? குறைஞ்சா போச்சு)தருமி ஐயா அவர்கள் வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து தம்பி வினையூக்கி, நண்பர் பகுத்தறிவு, உங்கள் நண்பன் சரவணனும் வந்து சேர்ந்தார்கள். மணியும் 3.30 ஆனது.. சொல்லி வைத்தாற்போல் பாஸ்டன் பாலா குழுவினர் எழுந்து வந்து எங்களுடன் இணைந்தனர். 'தலை' "நான்தான் பாலபாரதி.." என்ற முன்னுரையுடன் உலகப் புகழ் பெற்ற.. 2007-ம் ஆண்டின் வலையுலக மாநாடு துவங்கியது.

முதலில் 'தேன்கூடு' நிறுவனர் இனியவர், நண்பர் திரு.சாகரன் அவர்களின் நினைவைப் போற்றும்வகையில் அவரைப் பற்றிய ஒரு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து சாகரனின் மறைவுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
"இன்னும் சிலர் வந்தவுடன் இப்போது இருப்பவர்களின் அறிமுகத்தை வைத்துக் கொள்ளலாம்.." என்று 'தலை' பாலபாரதி சொல்ல.. நிகழ்ச்சி நிரலின்படி முதலில் நண்பர் திருவாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள் "பெட்டகம்" குறித்து பேசத் துவங்கினார். நல்ல களையான முகம். அடிக்கடி செல்லமாக, சிணுங்கலாக சிரித்த சிறில் தான் அதிகம் கத்தி பேச முடியாத நிலையில் இருப்பதாகச் சொன்னார். "பரவாயில்லை.. கூர்ந்து கேட்கிறோம்.." என்று பாலா சொல்ல.. அப்படியே தனது சன்னமான குரலில் பேசத் துவங்கினார்.

இங்கனதாங்க உண்மைத்தமிழனை 'சனி' புடிச்சது. இந்த இடத்தில் வலையுலக மக்களுக்கு ஓர் உண்மையைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளான் உண்மைத்தமிழன்.
அது என்னவெனில் உண்மைத்தமிழனுக்கு ரெண்டு காதுமே 75 சதவீதம் அவுட்.. முக்காச் செவிடு.. நண்பர் சிறில் அலெக்ஸின் பேச்சைக் கூர்ந்து கேட்பதற்காக காதில் மாட்டியிருந்த ஹியரிங் எய்டில் சவுண்ட்டை கூட்டிப் பார்த்தும் ஒன்றும் கேட்கவில்லை. சரி.. இதுக்கு மேல கஷ்டப்பட்டால் வழக்கம்போல் தலைவலி வரும். அப்புறம் தொடர்ந்து காய்ச்சல் வரும்.. அப்புறம் திரும்பவும் 'டெசிபல்' குறையும். எதுக்கு வம்பு.. 'உண்மைத்தமிழா நிறுத்திட்டு வேற வேலையப் பாரு'ன்னு என் மண்டைக்குள்ள யாரோ உக்காந்து சொன்னாங்க பாருங்க.. அந்த ஒரு செகண்ட்தான் இந்தப் பதிவையே எழுத வைச்சிருக்கு..

நண்பர் சிறில் அலெக்ஸ் பேசத் துவங்கினார். பேசிக் கொண்டிருக்கிறார். உண்மைத்தமிழன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அனைவரையும் பார்க்கிறான். எதையாவது செய்ய வேண்டுமே என்று எண்ணி சாகரனின் அஞ்சலி புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க.. இப்போதும் சிறில் அலெக்ஸ் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

உண்மைத்தமிழனின் கண்கள் மரம் விட்டு மரம் தாவத் துங்க.. அங்கனதான் புடிச்சது நான் முன்னமே சொன்ன சனி.. தூரத்தில் ஒரு மரம்.. அந்த மரத்திற்கு கீழே ஒரு வாலிபன்.. அந்த வாலிபனின் அருகே குனிந்த தலை நிமிராமல் ஒரு யுவதி.. என்ன வயதோ? யாருக்குத் தெரியும்?(இப்ப இது ரொம்ப அவசியம்..) அந்த வாலிபன் எதையோ சொல்கிறான். யுவதிக்கு அது ஏற்புடையதாக இல்லை. மறுக்கிறாள் அதுவும் எப்படி? தன் முகத்தைக் கீழே தரையைப் பார்த்துக் கொண்டு தன் உடலை மட்டும் குலுக்கி..

சற்றுத் தள்ளியே அமர்ந்திருந்த வாலிபன் சற்று நெருக்கமாக வர சட்டென நிமிர்ந்த அந்த யுவதி தானும் சற்றுத் தள்ளிப் போக.. இரண்டாவது முறை நெருங்கி அமர்வதற்கான முயற்சியில் இருந்த வாலிபன் லேசான கோபத்துடன் யுவதியை முறைக்க.. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில் உண்மைத்தமிழன் இருக்க..

திடீரென்று ஒரு பெருங்குரல். அது நம் பாலாதான்.. "சிறில் ஸார்.. நீங்க சொன்னது சுத்தமா எனக்குப் புரியலை.. கொஞ்சம் விளக்கமாச் சொன்னா நல்லது.." - வெறுத்துட்டார்யா மனுஷன் சிறில்.. ஆனாலும் அசரவில்லை. மறுபடியும் விளக்கம் சொல்ல முற்படத் துவங்க.. பட்டென்று நம்ம கதை ஞாபகம் வர.. திரும்பி அங்கே பார்க்க..

அதற்குள் அங்கே சீனும் மாறியிருந்தது. அந்த யுவதி இப்போது தன் முகத்தைக் காட்டியபடியே எங்களைப் பார்த்தே அமர்ந்திருந்தாள். பக்கத்தில் அவளது காதலன் அமர்ந்து ஒண்ணாம் வாய்ப்பாடை ஒப்பிப்பதுபோல் கடகடவென பேசிக் கொண்டேயிருக்க.. அந்த யுவதியின் முகத்தில் ஏதாவது ஆக்ஷன் வேணுமே? ம்.. நரசிம்மராவ் மாதிரி மூஞ்சிய வைச்சுக்கிட்டு.. எனக்கு பார்க்கச் சகிக்கல.. அப்படியே கண்ணைத் திருப்புறேன்.. பக்கத்துல இன்னொரு காதல் ஜோடி..

இந்த செகண்ட் காதல் ஜோடி கொஞ்சம் டீஸண்ட்டான ஜோடி போல.. காதலனும் காதலியின் தோளில் கை போட்டு அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்க அந்தக் காதலி 'வர மாட்டேன் போடா..' என்பதைப் போல் செல்லமாக சிணுங்கிக் கொண்டிருக்க.. எப்படியும் இழுத்துப் பிடித்துவிடுவேன் என்பதைப் போல் 'நம்மாளு' முயற்சி செய்ய.. முடிச்சிருவான்யா(நம்ம ஜாதிதான.. புத்தி தெரியாமய்யா போகும்..) என்று நான் நினைக்கும்போது.. திடீரென்று ஒரு பெரிய சப்தம்.. திரும்பிப் பார்த்தால் அண்ணன் பாஸ்டன் பாலா பேசத் துவங்கிவிட்டார்.

"பெட்டகத்துல.." அப்படின்னு பேசத் துவங்க.. திடீரென்று ஒரு கரிய உருவம்.. முகமே தெரியலை.. அதுல ஒரு கண்ணாடி வேற.. அருகில் வந்து அமர.. யோசித்தேன். எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.. ஆஹா.. இது ஓசை செல்லா.. "நேத்துதான் நமீதா படம் போட்டு ஏன்யா ஊரைக் கெடுக்குறீங்கன்னு.." பின்னூட்டம் போட்டுத் தாக்கினோமே அவர்தானா? என்ற நினைப்பில் ஒரு வணக்கம் போட்டேன். அவரும் 'தலை'யின் அருகில் இருக்கானே.. சரி.. நம்மாளாத்தான் இருப்பான்னு நினைச்சு அவரும் ஒரு வணக்கத்தைப் போட்டு வைச்சாரு..

திடீர்ன்னு மா.சிவக்குமாரண்ணேன்.. கட்டுரை நோட்டு ஒண்ணுல வந்திருந்தவங்க பேர், Blogspot அட்ரஸ், போன் நம்பர் வேணும்னு கேட்டு ரவுண்ட்டுக்கு விட்டுட்டாரு.. அது ஒவ்வொருத்தர் கைக்கும் போயிட்டு வந்துக்கிட்டிருக்கு.. நம்ம கதைக்கு போவோம்..

திரும்பவும் மரத்துப் பக்கம் பார்த்தா.. முதல் ஜோடில யுவதி கொஞ்சம் இளகிட்டாங்க.. பின்ன பதினாறு பக்கத்தை ஒரே மூச்சுல ஒப்பிச்சிருக்கானே பயபுள்ளை.. ஆள் மயங்கிர மாட்டாங்க.. அப்படியொரு கிறக்கப் பார்வை போங்க.. பய செத்தான்.. அப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டே கிடக்காக..

ரெண்டாவது ஜோடி.. இன்னும் கொஞ்சம் அந்நியோன்யமா நெருங்கிட்டாங்க.. எனக்குத் தெரிஞ்ச நாலு கைல யாருது எது.. எங்க வைச்சிருக்காங்கன்னு எனக்கே குழப்பம் வந்திருச்சுன்னா பார்த்துக்குங்க...

திடீர்ன்னு பாஸ்டன் பாலா தன் பேச்சை நிறுத்திவிட்டு "அங்க பாருங்க.." என்று சொல்லிப் பின்னால் கை காட்ட.. அனைவரும் திரும்பிப் பார்க்க நானும் பார்த்தேன். அங்கே ஒரு வயதான மனிதரை ஒரு நடுத்தர வயது மனிதர் கீழே தள்ளி பெண்டு நிமிர்த்திக் கொண்டிருந்தார்.. பாவம்..

பாலா இதைப் பார்த்தவுடன் "ஐயையோ.. யாருய்யா கூட்டிட்டு வந்தது" என்று டைமிங் ஜோக்(எப்படித்தான் வருதோ தெரியலை..) அடித்து கலகலப்பாக்கினார். அங்கேயிருந்த பூங்கா ஊழியர்கள் ஒரு வழியாக அவர்களைப் பிரித்துவிட பிரச்சினை, வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆனது.. (என்ன சண்டை என்பதை கடைசியில் வந்து படித்துக் கொள்ளவும்)

சரி.. திரும்பி நம்ம வேலைய பார்க்கலாம் என்று நினைக்கும்போது பாலா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "இப்ப எல்லாருமே ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமாகிக் கொள்ளலாமே.." என்றார். "சரி.." என்று அனைவரும் சொல்ல.. ஒவ்வொருத்தராக பெயரையும், Blogspot அட்ரஸையும் சொல்லத் துவங்க.. நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் புதிதாக சேரும்போது மாணவர்கள் எழுந்து நின்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டது எனக்கு நினைவுக்கு வந்தது.

இதற்கே ஒரு ஐந்து நிமிடம் ஆனதா? அடுத்து கட்டுரை நோட்டில் பேர், அட்ரஸ், போன் நம்பர் எழுத வேண்டி வந்ததா? அதற்கொரு ஐந்து நிமிடம். யார், யார் என்று ஒவ்வொருவரின் முகத்தையும் நிமிர்ந்து பார்த்து பார்த்துத் தெரிந்து கொண்டேன்.. அப்பாடா இது போதும்.. இப்ப நம்ம வேலைய பார்க்கலாம் என்று பார்க்கத் துவங்க.. விதி வேறு ரூபத்தில் வந்து சேர்ந்தது.

இப்போது வந்தது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரேயொரு பெண் பதிவர் இனிய சகோதரி பொன்ஸ் மூலமாக. அவர் திடுதிப்பென்று வந்து அமர்ந்திருக்க.. யார்.. என்று தெரியாமல் குழம்பிப் போனேன்.. இவராகத்தான் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் மேற்படி கதையை பார்க்க முடியவில்லை. காரணம் நான் எந்தத் திசையில் பார்க்கிறேனோ அதே திசையில்தான் அவரும் அமர்ந்திருந்தார்.

அனைவரும் கையெழுத்திட்ட கட்டுரை நோட்டைப் பார்த்து பார்த்து ஒவ்வொருவரையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் பொன்ஸ். "சரி.. நாமதான் உண்மைத்தமிழன்னு தெரிஞ்சிருக்கும். ஏற்கெனவே அவுங்க விட்ட ஸ்கட் ஏவுகணைத் தாக்குதல்ல முதுகெலும்பு உடையறாப்புல செம அடி.. இப்ப இது வேறய்யா.. எப்படிய்யா அவுகளை மீறி அந்தப் பக்கம் பாக்குறதுன்னு ஒரு டவுட்டு.. சரி.. இப்ப விடுவோம். அப்புறமா பார்ப்போம்.." என்று நினைத்தேன்.
சரியாக அதே நேரம் ஓசை செல்லா பேசத் துவங்கினார்.கோவையில் தான் வலைப்பதிவர் முகாம் ஒன்றை நடத்த உத்தேசித்திருப்பதாக ஆரம்பித்தார். இப்போது பாலாவின் போனில் வலைப்பதிவு அன்பர்கள் பலரும் மாறி மாறி வந்து "அவர்கிட்ட கொடு.. இவர்கிட்ட கொடு.." என்று இன்ப டார்ச்சர் செய்ய பாலாவும் முகம் சுழிக்காமல் பலரிடமும் எழுந்து சென்று போனை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு சூழ்நிலையில் சகோதரி பொன்ஸ¤ம் எழுந்து செல்ல.. நம்ம லைனுக்குப் போயிட்டேன்.

இப்ப என்ன நடக்குதுன்னா.. முதல், இரண்டாவது ஜோடியோடு மூணாவதா ஒரு ஜோடியும் சிக்குச்சு.. இந்த ஜோடியோட ஸ்பெஷலாட்டி என்னன்னா.. காதலி கையை தன் இடுப்பில் வைத்துக் நின்று கொண்டேயிருக்க.. காதலன் அவள் எதிரில் கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறான். சரணாகதி போலும்.. பேசிக் கொண்டேயிருந்த காதலி திடீரென்று முன்னால் சென்று காதலனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். என் கண்ணால் நம்பவே முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று நான் ஆவலுடன் பார்க்க.. இங்கே அதற்குள்ளாக புதிது. புதிதாக நிறைய பேர் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.

அம்சமா பீமபுஷ்டி ஹல்வா போட்டோவில் பார்த்ததுபோல் ஒருவர் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தார். கையை நீட்டியவுடன் "நாமக்கல் சிபி.." என்றார். "அடடே.. பின்னூட்டத் திலகமாச்சே.." என்று நினைத்து என் பெயரையும் சொன்னேன். சிரித்துக் கொண்டார். பாலாவையும் திடீரென்று காணவில்லை. துணைக்கு அவர் அழைத்து வந்திருந்த ஒரு அனானி திடீரென்று சகோதரி பொன்ஸின் கேமிராவில் எங்களையெல்லாம் புகைப்படம் எடுக்கத் துவங்க..

வந்தது வந்தாச்சு.. போட்டாக்காச்சும் ஒழுங்கா போஸையாவது கொடுப்போம்னு நினைச்சு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கேமிராவை பார்த்து ஒழுக்கமா இருந்தேனாக்கும்.. போட்டா முடிஞ்சுச்சா.. திடீர்ன்னு பாலா கைல தண்ணி பாட்டிலோட வந்தார்.. வெறும் மினரல் தண்ணிதாங்க.. கூடவே கொஞ்சம் தட்டை முறுக்கையும் வாங்கிட்டு வந்திருந்தார்.. ஆஹா.. முழு பாக்கெட்டையும் வாங்கி நானே சாப்பிடத் துவங்கினேன்.. நாமக்கல் சிபி "நாங்களும் இருக்கோமாக்கும்.." என்று சொல்லித் தான் வாங்கிச் சாப்பிடத் துவங்கினார்..

இடை இடையே வெண்குழல் பற்ற வைப்பதற்காக பாலாவைச் சிலர் தள்ளிக் கொண்டு போன கதையும் நடந்தது. தொடர்ந்து 'இனமானப் பேராசிரியர்' தருமி அவர்கள் பேசத் துவங்கினார். திடீரென்று புத்தனுக்கு ஞானதோயம் வந்ததைப் போல் எனக்கும் 'நம்ம கதை' ஞாபகம் வர கழுத்தைத் திருப்பினேன்.. இப்போது அடி வாங்கிய காதலன் இன்னும் கொஞ்சம் இளகிப் போய் கெஞ்சிக் கொண்டிருந்தான். அடித்த காதலி மெளனமாக அவனை முறைத்துப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள். (எம்புட்டு நேரம்..?)

இரண்டாவது காதலர்களில் காதலி கவிழ்ந்துவிட்டிருந்தார். பய 'கரெக்ஷன்' பண்ணிக்கிட்டிருந்தான்.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. முதலாவது ஜோடிக்கு வந்தேன். அங்கே இப்பத்தான் நம்மாளு பிட் போட ஆரம்பிச்சிருந்தான்.. அவன் இழுக்க.. இவள் நழுவ.. அப்படியே மெதுவா தாவாங்கொட்டையைப் பிடிச்சு மெது மெதுவா இழுத்து பக்கத்தில் கொண்டு வர.. திடீரென்று என் அருகில் பெரும் சப்தம்.. பாலாதான்..

அவ்ளோ நேரம் 'இனமானப் பேராசிரியர்' பேசிக் கொண்டிருந்தார். "ஐயா அந்தப் பக்கம் போயிருவோம்.. பக்கத்து மண்டபத்துல யாரோ பாடுறாங்க.. சூஸைட் பண்ணிக்கலாம் போலிருக்கு.." என்றார் பாலா. சரி என்று அனைவரும் சொல்லி எழுந்து செல்ல.. என்னையும் யாரோ தூக்கிவிட்டது போல் தெரிகிறது. அப்படியே முன்னால் பார்த்தபடியே பின்னால் நடந்து வந்து "இங்கயே உக்காருங்க.." என்று ஒரு குரல் கேட்டு அமர்ந்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.. ஐயா இராம.கி அவர்கள் என் அருகில்..

இனி என்ன பார்க்கிறது? என்ன செய்றது? தெய்வம்தான் இப்படியெல்லாம் சோதனையை நமக்கு வைக்குதுன்னு கிளியர்கட்டா நமக்குத் தெரிஞ்சு போச்சு. ஆனா எப்படியெல்லாம் வைக்குது பாருங்க.. எனக்கோ பெரிய சங்கடம்.. தப்பித் தவறி நான் பார்க்குறது ஐயாவுக்குத் தெரிஞ்சு போய்.. அவர் என்னைத் தப்பா நினைச்சு..(இப்ப மட்டும் என்ன நினைப்பாராக்கும்?) ஐயகோ என்று நினைத்து சிந்தை தடுமாறி.. குழப்பத்தில் ஆழ்ந்து காதல் மரங்களை ஓரக் கண்ணால் பார்க்கத் துவங்க..

இன்னொரு அடி தானாகவே வந்து விழுந்தது.. சகோதரர் தடாலடி கெளதம் நேராக என் அருகில் வந்து என் பின்னால் அமர்ந்துவிட்டார். அவருக்கும் எனக்குமான நட்பு ஐந்தாண்டு காலத்திற்கும் மேல் இருக்கும். அவர் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்ததே ஐம்பது ரூபாய் என்றாலும், அதில் இருபது ரூபாயை பிடுங்கிச் சென்ற நாட்களெல்லாம் எனது வாழ்க்கையில் உண்டு என்பதால் "சரி.. என்ன செய்றது.. ஒட்டு மொத்தமா சூனியத்தை இன்னிக்கு நம்ம மேல திருப்பிருக்கு சமயபுரம் ஆத்தா"ன்னு கொஞ்சம் மனசைத் தேத்திக்கிட்டு, வந்த வேலையைப் பார்ப்போம்னுட்டு கண்ணைத் திருப்பினேன்.

'இனமானப் பேராசிரியர்' திரு.தருமி ஐயா "உங்களைப் போன்ற இளைஞர்கள் மீது எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு.." என்று தொடங்க.. மொத்தக் கூட்டமும் அவர் மீது பாய்ந்தது. 'தடாலடி' கெளதமும், இராம.கி. ஐயாவும் தருமி ஐயாவின் பேச்சில் சொக்கிப் போக.. நான் தாவி விட்டேன் மரத்தடிக்கு..
இப்போது சீன் கொஞ்சம் மாறியிருந்தது. முதல் ஜோடியின் யுவதி கொஞ்சம் காதலனுடன் ஒட்டிக் கொண்டு அவன் தோள்பட்டையில் சேர்ந்திருந்தாள். அங்கிருந்தும் தன் முகத்திற்கு 'டிரான்ஸ்பர்' செய்ய காதலன் நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருந்தான்.

இரண்டாவது ஜோடி எங்கய்யோயோயோயோ போயிட்டிருந்தாங்க.. மூன்றாவது ஜோடியில் இன்னமும் அந்தப் பெண் நின்று கொண்டிருக்க.. காதலன் மட்டும் சற்று அயர்ச்சியாக அருகில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்துவிட்டான். இருக்காதா பின்ன? என்ன அடி அது? கெஞ்சுகிறான்.. விஞ்சுகிறான்.. மிஞ்சுகிறான்.. ம்ஹ¤ம்.. அசையவில்லை அம்மணி..

முதல் காதல் ஜோடிக்குத் தாவியது என் கண்கள்.. இன்னும் மி.மீட்டர் தூரம்தான்.. 'சத்யா' படத்துல கமல், அமலாவுக்குக் கொடுப்பாரே இதே மாதிரி மரத்தடில.. (உண்மைத்தமிழா உனக்கு ஞாபகசக்தி அதிகமப்பூ..) டென்ஷனில் இருந்தேன் நான். திடீரென்று ஒரு சப்தம். "நான் என்ன சொல்றேன்னா ஸார்.." என்று இராம.கி. ஐயா அவர்கள் ஆரம்பிக்க.. திரும்பிப் பார்க்க வேண்டியதாகிவிட்டது..

இப்போது 'ஐயா'க்கள் இருவரும் பேசத் துவங்க.. நிமிடத்தில் ஒட்டு மொத்தமாக அனைவரின் 'கண்விழிப்பாப்பா'வில் நானும் விழுந்துவிட்டதால் ஒழுக்கமாக இருக்க வேண்டிய கட்டாயம் வந்தது.. "ஐயோ.. எப்ப முடிக்கப் போறாங்க"ன்னு பதற்றத்துல இருந்தா(என் டென்ஷன் எனக்குத்தான தெரியும்).

இராம.கி. ஐயா 'தினமலர், விகடன், தினமணி, தினத்தந்தி' என்று அனைத்துப் பத்திரிகைகளின் தனித்தனி டைப்பிங் methods பற்றிப் பேசி முடிச்சார் பாருங்க.. பட்டுன்னு தாவுனேங்க மரத்தடிக்கு. அங்க பார்த்தா.. 'புதிய பறவை' படத்துல சரோஜாதேவி 'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டனே' பாட்டுல ஒரு shot-ல சிவாஜி குனிவாரு.. திரும்பி நிமிரும்போது 'என்னமோ' செஞ்சிட்ட மாதிரி தன் உதட்டை ஸ்டைலா துடைப்பாரு பார்த்தீங்களா.. அதான் அங்கேயும்.. வயித்தெரிச்சலா ஆயிருச்சு.. ஆனாலும் ஒரு வித்தியாசம்.. பய உதட்டைத் துடைச்சது யுவதியோட துப்பாட்டாவால.. ம்ஹ¤ம்.. 'உண்மைத்தமிழா நீ கொடுத்து வைச்சது அவ்ளோதான்'னு நினைச்சு ரெண்டாவது ஜோடியை பார்க்கப் போனேன்...

தீடிரென்று பீரங்கி வெடிக்கும் சப்தம். நம்ம ஓசை செல்லாதான்.. பின்னாடி நின்னுக்கிட்டிருந்தவருக்கு திடீர்ன்னு கோபம் வந்திருச்சு. "அதெப்படிங்க ஒருத்தருக்கு இவ்ளோதான் பின்னூட்ட எல்லைன்னு முடிவு செய்யலாம்...?" என்று பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார். ஆளாளுக்கு பேசத் துவங்க.. யார் என்ன பேசுறாங்கன்னு எனக்குப் புரியல சாமி.. ஓசை செல்லாவுக்கு கோபமோ கோபம்.. "இது வலைப்பதிவர்கள் மாநாடு.. தமிழ்மணத்தின் மாநாடு அல்ல.. தமிழ்மணத்துக்கு நீங்க சப்போர்ட் பண்ணணும்னா தனியா மாநாடு போட்டுப் பேசுங்க.." என்றார் செல்லா...

பேச்சு பின்னூட்டம் வராத பதிவர்களுக்கு பொறாமை, கடுப்பு, கோபம் என்றெல்லாம் பேச்சு போக சூடாகிவிட்டார் மா.சி. "அதெப்படி நீங்க அப்படி பேசலாம்.." என்று சட்டையைப் பிடிக்காத குறையாக பிடிபிடியென பிடித்துவிட்டார் மா.சி. "உங்களுக்குப் பின்னூட்டம் போடலைன்னா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நீங்க மொத வாரம் பூனையைப் பாருங்க. நாயைப் பாருங்கன்னு வீடியோவை போட்டுட்டு அடுத்த வாரம் தாய்லாந்து நைட் கிளப் டான்ஸை போட்டா எந்தப் பதிவர் வந்து பார்ப்பாங்க.. யார் வந்து பின்னூட்டம் போடுவாங்க..?" என்றார் மா.சி. மா.சி. ஸார்.. நிசமாவே உங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடணும் ஸார். பிச்சுப்பிட்டீங்க போங்க..

ஏன்னா இந்த வலைப்பதிவர் கூட்டத்திலேயே உண்மைத்தமிழன் ஒரு நொடி பேசினது இந்த இடத்துலதான்.. "நான்கூட திட்டி பின்னூட்டம் போட்டேன் ஸார்.." என்று உண்மைத்தமிழன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கூட்டத்தில் தன் கன்னிப் பேச்சைப் பதிவு செய்தான் என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறான்.

"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது.." என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. "அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers.." என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. "பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..?" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்.

கிடைத்த இடைவெளியில் மனம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற.. எங்கே.. என்று தேட ஆரம்பித்தேன்.. இப்ப பாருங்க. முதல் ஜோடில எப்படியோ நைஸ் பண்ணிக் கவுத்துட்டான்யா நம்ம பய.. எவ்ளோ பிலிம் காட்டினாலும் எப்படியாச்சும் மயக்கிடறானுகளேயப்பா.. பலே கில்லாடிகப்பா நம்ம பய புள்ளைக.. இரண்டாவது ஜோடியில் ஒரு தலை மட்டுமே எனக்குத் தெரிந்தது.. இன்னொரு தலை எங்கே இருந்தது என்பதை சிபிஐ வந்துதான் கண்டுபிடிக்க வேண்டும் போல் இருந்தது.. மூன்றாவது ஜோடியில் இப்போது யுவதியும் கீழே உட்கார்ந்து கொள்ள.. அருகில் குனிந்து தலை நிமிராமல் யுவதியிடம் சரண்டர் ஆகிக் கொண்டிருந்தான் நம்மாளு.. "ச்சே.. இப்படியா இருப்பானுக.. நம்ம மானத்தை வாங்குறானுகப்பா சில பேரு.."

திடீரென்று கூட்டத்தில் சலசலவென ஒரு சப்தம்.. திரும்பிப் பார்த்தேன். உண்மைத்தமிழன் சும்மாவே உட்கார்ந்து நிறைய டயர்டு ஆகிவிட்டதால் (ஏதோ வட்டமா இருந்துச்சு.. சிப்ஸா..?) Snacks வந்தது. இதையும் முதல் ஆளாக வாங்கிப் பிரித்து சாப்பிடத் துவங்க..

இவ்ளோ நேரமும் மா.சிவக்குமார் பேசிக்கிட்டிருந்தாருப்பு.. கேட்க மறந்திட்டேன்.. தாலாட்டு மாதிரி இருந்துச்சு அவர் வாய்ஸ¤.. ஹி..ஹி.. சரி வயித்தை ரொப்பியாச்சு.. மேல பார்க்கலாமேன்னு பார்த்தா..

திடீர்ன்னு தடாலடி கெளதம் பேச ஆரம்பிச்சார்.. போதாக்குறைக்கு நம்ம தோள் மேல கை போட்டு மண்டிபோட்ட நிலையில் காதோரம் பேச ஆரம்பிச்சாரு.. எப்படி கவனிக்காமப் போறதுன்னுட்டு கொஞ்சம் நம்ம மரத்தடி கதையை ஒத்தி வைச்சுப்புட்டு கெளதம் சொன்னதைக் கேட்டனாக்கும்.. மக்கள் தொலைக்காட்சியில் வலைப்பதிவர்களின் அறிமுகம், அவர்களது படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது.. இணையதளத்தில் இலவசமாக இறக்குமதி செய்யும் இ-கலப்பையை பிரபலப்படுத்துவது பற்றியெல்லாம் பதினைந்து நிமிடம் பேசி நிறைய கை தட்டலை வாங்கிக் கொண்டு போனார்..

பேசி ஓய்ஞ்சாரா.. 'அண்ணா இந்தாங்கண்ணா'ன்னு சொல்லி என் கையில் இருந்த பாக்கெட்டை அவர் கையில் கொடுத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தா பின்னாடி சத்தமில்லா வந்து நிக்குறாங்க அண்ணன், தம்பி ரெண்டு பேர் கமுக்கமா சொல்றேன்.. நீங்களே புரிஞ்சுக்குங்க..
ஒருத்தர் ஒரு ஊர்ல மலைக்கோட்டை பக்கத்துல வீடு இருக்கு. இப்ப மெட்ராஸ்ல இருந்து 'நவீன'த்தைப் பத்திப் பேசுறவரு.. இன்னொருத்தரு 'நான் ரொம்ப விவகாரமான ஆளு'ன்னு உலகம் முழுக்கப் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டு, இப்ப மெட்ராஸை கெடுக்கிறதுக்குன்னே முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல என்ஜின் ரூம்ல ஏறி எக்மோர் வந்து இறங்கினவரு.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. 'அவருதான் இவரு..' 'இவருதான் அவரு'ன்னு நானும் மண்டையப் போட்டு பிச்சுக்கிட்டேன்..

நல்லவேளை.. 'ஓய்வறியாத உழைப்பாளி-ஒப்பற்ற செயல்வீரர்-கட்டி வா என்றால் வெட்டி வரும் இளம் வீரன்' லக்கிலுக் என் அருகில் வந்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். அவர்தான் இவரா.. சரி போய் பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் மீட்டிங் முடிந்துவிட்டதோ என்பதைப் போல் அவரவர்கள் எழுந்து நிற்கத் துவங்கினார்கள்.
ஐயையோ.. நம்ம குலத்தொழில் என்னாகுறதுன்னு எல்லாரையும் விலக்கிட்டு மரத்தடியைப் பார்த்தா.. முதல் ஜோடில யுவது நம்ம பயகிட்ட சரண்டராகி அவன் நெஞ்சுல தன் பிஞ்சு விரலால இந்தியா மேப்பை வரைஞ்சுக்கிட்டிருந்தாங்க.. இரண்டாவது ஜோடில இப்பத்தான் சூரியனைப் பாக்குறாப்புல அந்தப் பொண்ணு நம்மாளு மேல சாய்ந்து உட்கார்ந்து மேல பார்த்துக்கிட்டிருந்துச்சு.. இப்பவும் நம்மாளோட கை என் கண்ணுக்கு சிக்கலை.. மூணாவது இடத்துல இப்பவும் கர்ரு.. புர்ருதான்.. சட்டுப்புட்டுன்னு மேட்டரை முடிக்கத் தெரியாம முழிக்கிறான்பா பையன்..

அதுக்குள்ள பாலா வந்து "குங்குமம்' பத்திரிகைல இருந்து காவரேஜுக்கு வந்திருக்காங்க.. போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும்.. போட்டோல சிக்க வேணாம்னு நினைக்குறவங்கல்லாம் கொஞ்சம் ஒதுங்கிருங்க ப்ளீஸ்.." என்று சின்னப்புள்ளை மாதிரி கேட்டுக் கொள்ள.. ஒரு டீம் தனியே போக.. நான் மொதல்ல முன் வரிசைல நின்னு முகத்தைக் காட்டினேனாக்கும்.. போட்டால அம்சமா இருக்கப் போறது உண்மைத்தமிழனாத்தான் இருக்கும். போட்டா கிடைச்சாப் பாருங்க.. சட்டைப் பாக்கெட்ல இருந்து ஒரு வயர் போய் காதுல ஹியரிங் எய்டுல மாட்டிருக்கும்.. அவன்தான் உண்மைத்தமிழன்.. ஓகேயா?

தொடர்ந்து கெளதம் அண்ணன் கூட்டிட்டு வந்திருந்த 'மக்கள் டிவி'யோட ஒளி ஓவியர் எங்களோட அழகு முகத்தையெல்லாம் அப்படி அப்படியே சுட்டுத் தள்ளிக்கிட்டிருந்தார்.. உலகத்துலேயே முதல் முதல்லா டிவில வந்த வலைப்பதிவர்கள் நாங்கதானாக்கும்.. நன்றி கெளதம் அண்ணா.. நன்றி தலை..

போட்டோவுக்கு போஸ் கொடுத்த டீம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தனித்தனியா போய் பேச ஆரம்பிச்சாக.. அவருதான் இவரான்னு நான் நினைச்சவர்ட்ட போய் மொதல்ல பேச ஆரம்பிச்சேன். "நீங்கதான் உண்மைத்தமிழனா.. சின்னப் பையனா இருப்பீங்கன்னு நினைச்சேன்.." என்றார். ஏன் சாமி.. என் எழுத்தைப் பார்த்தா அப்படியா தெரியுது.. வெக்கமா போச்சு போங்க.. பக்கத்துல அந்த முத்துநகர்காரரும் இருந்தாக.. அவர்கிட்டேயும் பேசினேனா..

விதி.. அந்தப் பக்கமா திடீர்ன்னு சகோதரி பொன்ஸ் வந்து நிற்க.. "இவர்தான் உண்மைத்தமிழன்னு" மில்லியன் டாலர் மேட்டரை படார்ன்னு போட்டு உடைச்சிட்டாரு நவீனம்.. ஐயா நவீனம்.. உங்க 'அன்பு'க்கு அளவே இல்லீங்களா ஐயா.. இப்படியா போட்டுக் கொடுக்கிறது? திக்குன்னு ஆயிப் போச்சு எனக்கு.. பொன்ஸ் ஏதாவது செஞ்சிரப் போகுதோன்னு.. "அப்படியா"ன்னு ஒரு சிரிப்போட நிறுத்திக்கிட்டாக. அதான.. நாலு பேர் முன்னாடியா அடிக்க முடியும்..? தனியா சிக்கலடா சாமி.. விட்டாப் போதும்னு ஒரே ஜம்ப்பா எதிர்ப் பக்கம் தாவிட்டேன்..

ஆனாலும் கண்ணு என்னமோ அந்தப் பக்கமே போய்கிட்டிருந்துச்சு.. ஆஹா இனியாச்சும் மீதிக் கதையைப் பார்ப்போம்னு நினைச்சா "நீங்க.." அப்படின்னு சொல்லி கை நீட்டினார் ஓகை நடராசன் ஸார்.. "உண்மைத்தமிழன்" என்றேன். "ஓ.. அது நீங்கதானா?" என்றவர் பேசத் துவங்க.. "நான் எங்க வேலை பார்க்குறேன்.. நீங்க எங்க வேலை செய்றீங்க.." இப்படியெல்லாம் பேசி முடிச்சிட்டுத் திரும்பினா..

மொத ஜோடில யுவதி எழுந்து நின்று "நேரமாச்சு.." என்று சிணுங்கிக் கொண்டிருந்தார்.. நம்மாளு "உக்காரு.. இருட்டினாத்தான் நமக்கு செளகரியம்.." என்று இழுக்க.. அங்கே ஒரு கபடி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.

இரண்டாவது ஜோடில பையன் பொண்ணு மடில தலை வைச்சு படுத்திருக்கான்.. பொண்ணு அன்பா, ஆசையா அவன் தலைமுடியைப் பிடிச்சு இழுத்துவிட்டு(மவனே மாட்டுன.. இதே தலைமுடியைக் கொத்தாப் புடிச்சு திருகிறுவாங்க..) அன்பைப் பொழிந்து கொண்டிருந்தார்.

மூன்றாவது ஜோடி.. அதிசயமே நடந்துவிட்டது.. அந்த வாலிபனின் மடியில் யுவதி அமர்ந்திருந்தாள். அடப்பாவிகளா.. உங்களுக்கெல்லாம் சூடு, சொரணையே இல்லையாடா? கன்னத்துல அடியையும் வாங்கிட்டு மடியையும் காட்டுறீங்களேடா.. போலீஸ்ல அடி வாங்கினா மட்டும் மனித உரிமைக் கழகம், கோர்ட்டு, கேஸ¤ன்னு கேக்குறீங்க.. இதுக்கெல்லாம் கேட்க மாட்டீங்களா? என்னமோ போய்த் தொலைங்க.. உங்களாலதான் நம்ம மானம், மரியாதையெல்லாம் காத்துல பறக்குது.. வேறென்னத்த சொல்றது..?

மனசு வெறுத்துப் போச்சுங்க.. அப்படியே கூட்டத்தைப் பார்த்தா ஆளாளுக்கு ஒரு பக்கம் கூட்டமாக நிக்குறாக.. நான் மட்டும் தனியா அம்போன்னு நிக்குறேன்.. என்ன செய்றதுன்னே தெரியலை.. யார்கிட்ட போய் பேசுறதுன்னே தெரியலை.. சரி உண்மைத்தமிழா.. நீ இப்படியே மனம் போன போக்குல பின்னூட்டம் போட்டுக்கிட்டே இரு.. கடைசியா இப்படியேதான் இருக்கப் போறன்னு மனசு சொல்லிச்சா.. வருத்தத்தோட யார்கிட்ட போலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.

அதுக்குள்ள பாலா வந்து "வாங்க தலைவா.. காபி குடிக்கலாம்.. வாங்க.." என்று அன்பொழுக அழைக்க.. இடத்தைக் காலி பண்ணணுமான்னு யோசித்து சரி கடைசியா ஒரு வாட்டி பார்த்து சொல்லிட்டுக் கிளம்பலாம்னு பார்த்தா.. மொதல் ஜோடி ஜூட் விட்டுட்டாங்க.. ரெண்டாவது ஜோடி கிட்டத்தட்ட காணோம்.. ஆனா நல்லா உத்துப் பார்த்தா பார்ட்டிக ரெண்டுமே சிமெண்ட் தரைல பிளாட்டு.. மூணாவது ஜோடில பய இப்பத்தான் 'தேரோட்ட' ஆரம்பிச்சிருந்தான்.. "சிக்கிருச்சு.. ஓட்டுறான். உனக்கென்னடா..?" என்ற நினைப்போடு கூட்டத்தோட கூட்டமா வெளிய வந்தேன்..

வெளில வந்து பார்த்தா பாலா தலைமைல ஒரு டீமே வெண்குழல் பத்த வைச்சுக்கிட்டிருக்காக.. காபி இல்லேன்னுட்டாக.. சரி இருக்கிறதை கொடுங்கன்னு சொல்லி அஞ்சு ஜூஸை வாங்கி யார் யார் இருக்காகளோ அவுககிட்ட நீட்டினேன். சகோதரி பொன்ஸ் எனக்கு வேணாம்னுட்டாங்க.. ஆனா பாருங்க.. அவுக கொஞ்ச நேரம் கழிச்சு கொடுத்த எள்ளுருண்டை(அதுதான்னு நினைக்கிறேன்)யை நான் வாங்கிக்கிட்டேன். எப்பவும் உண்மைத்தமிழனுக்கு பரந்த மனசாக்கும்..

இங்கேயும் ஆள் மாத்தி ஆள் மொக்கையும், மட்டையும் போட ஆரம்பிச்சாக.. யார் யார் பேசிக்கிட்டிருக்காங்களோ அங்கேயெல்லாம் போய் நின்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டிருந்தனா.. அப்பத்தான் பாக்குறேன்.. அந்த மொதல் ஜோடி கடையைத் தாண்டி நடையைக் கட்டிக்கிட்டிருந்தாக.. பொண்ணு மொதல்ல முன்னாடி போகுது.. பையன் பின்னாடி பத்தடி தூரத்துல யாரோன்னு நினைச்சு போய்க்கிட்டிருக்கான்.. நம்ம கண்ணுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் சிக்குதுன்னே தெரியலைப்பா..

ஒவ்வொருத்தரா கை குலுக்கிட்டு "வரேன்.." "வாரேன்.." "தேங்க்ஸ் தலை.." "தலை கல்யாணமாம்ல.. பத்திரம்.." "சொல்லியனுப்பு.. பாட்டிலோட வந்திர்றேன்.." என்றெல்லாம் அன்பொழுக பேசிவிட்டுக் கிளம்ப.. "ஒரு முடிவோடதான் வந்திருக்கீக.." என்ற 'தலை'யின் பேவரிட் வார்த்தையைக் கேட்டுவிட்டுக் கிளம்பினர் சிலர்.

கெளதம் அண்ணனை ஏற்றிக் கொண்டு டாட்டா சுமோ கிளம்ப.. முத்துநகர்காரரும், நவீனத்தையும் "வீட்டுக்கு வாங்க ஸார்.." என்றழைத்தேன். "வரோம்.. வரோம்ப்பூ.." என்று இருவரும் சொல்லி விடைபெற்றார்கள்.

நாமக்கல் சிபி "உண்மைத்தமிழன் என்ற பெயரில் நீங்க மட்டும்தான எழுதுறீங்க?" என்றார். "ஏனுங்கண்ணா உங்களுக்கு இந்தக் குழப்பம்?" என்றேன். "இல்ல.. இனிமே உங்க பேர்ல நாங்க எழுதலாம்ல..?" என்று கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார். 'ஆத்தி.. இனிமே நாம சுதாரிப்பா இருக்கணும்ப்பு' என்று நினைத்துக் கொண்டேன்.

ஓசை செல்லா ஒரு முறைக்கு மூன்று முறை நான்தானே உண்மைத்தமிழன் என்று உறுதி செய்து கொண்டு "கோவை மாநாட்டுக்கு கண்டிப்பா நீங்க வரணும்.." என்று அழைப்பு விடுத்து விடை பெற்றார்.

முத்துதமிழினியும், உடன்பிறப்பு லக்கிலுக்கும் "உங்களுக்கு பெரியார் மேல் ஏன் கோபம்..?" என்று ஆரம்பிக்க "அது இங்கே வேண்டாமே.." என்று பேச்சை திசை மாற்றினேன்.. "அதெல்லாம் முடியாது. நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும்" என்று முத்துதமிழினி சொல்ல சிரித்தே சமாளித்தேன்.

நாமக்கல் சிபி டீம் ஒரு யூனோ காரில் ஏறி செல்ல.. முத்துதமிழினி பைக்கில் ஏற லக்கிலுக்கும் ஒரு டீமும் தனியே கிளம்ப.. அப்புறம்தான தெரிஞ்சது.. (தாகசாந்தி.. ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடதா?) நான் மட்டும் தனியே..

சரி ஒரு மாசத்துக்கு ஒரு மொக்கை போடலாம்னு நினைச்சா மூணு மொக்கையை ஒரே மாசத்துல போடுற மேட்டர் கிடைச்சிருச்சேன்னு நினைச்சு என் 'மெர்சிடிஸ் பென்ஸான டிவிஎஸ் 50 XL' பக்கத்துல வந்து நிக்குறேன். அந்த ஆள் எதிர்த்தாப்புல வந்துக்கிட்டிருந்தான்.

யாரு? பாஸ்டன்பாலா பேசிக்கிட்டிருக்கும்போது பின்பக்கம் சண்டை வந்து அடி வாங்கினானே ஒரு ஆள். அவரேதான்.. வந்தார். பார்த்தார். எதிரில் இருந்த கார் கம்பெனி வாசலில் வந்து நின்றார். கார் டிரைவர்கள் இரண்டு பேர் "யோவ்.. ஒழுங்கா ஓடிரு.. அடிபட்டிருவ.." என்று கீழே கிடந்த கல்லைத் தூக்கிக் காட்ட என்னவோ ஏதோ என்று எனது பத்திரிகை புத்தியில் லைட் எரிந்தது.

அந்த ஆள் இடது புறமாக ஓடத் துவங்கியவுடன் மெதுவாக டிரைவர்களை அணுகி, "என்ன ஸார் மேட்டர்?" என்றேன். "அது எதுக்குங்க உங்களுக்கு..? விடுங்க.." என்றார் டிரைவர் ஒருவர். "இல்ல சும்மா சொல்லுங்க.. தெரிஞ்சுக்கணும்.. இவர் மதியானம் உள்ள வந்து ஒருத்தர்கிட்ட அடி வாங்கினாரு.." என்றதும் இருவருமே கலகலவென சிரித்தார்கள். "இன்னிக்கும் அடி வாங்கிட்டானா.. ஸார்.. இந்தாள் ஒரு மாதிரியான ஆளு.." என்றார் டிரைவர். "ஒரு மாதிரின்னா..? - இது நான். "ஒரு மாதிரின்னா? யாராச்சும் சிவப்பா இருந்துட்டா போதும்.. பக்கத்துல வந்து நிப்பான். அப்புறம் உரசுவான்.. அப்புறம் தொடைல கை வைப்பான்.." என்று சொல்லி நிறுத்திக் கொண்டு சிரிக்க..

புரிந்தது எனக்கு.. ஏதோ பெண்கள்தான் பட்டப்பகலில் தனியே நடமாட முடியலைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இப்ப ஆம்பளைங்களும் நடக்க முடியாதா? ஏப்பு.. தமிழ்நாடு ரொம்பவும்தான் முன்னேறிறுச்சுப்பு.. என்றபடியே வீடு நோக்கிக் கிளம்பினேன்..

பெட்டிச்செய்தி : வீட்டிற்கு வந்து தலைகாணியில் தலையை வைத்தவுடன்தான் ஒரு விஷயம் மூளையில் பளீரென வெளிப்பட்டது. சாகரன் பற்றிய அஞ்சலி புத்தகத்தின் பக்கங்கள் குறைவு என்றாலும் அதை அச்சடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு ஐயாயிரம் ரூபாயாவது ஆயிருக்குமே.. 'தலை' எப்படி சமாளித்தார்..?

வலைத்தளத்தில் மட்டுமே நட்பு கொண்டு மரணித்த ஒரு மனிதருக்காக தன் உழைப்பில் ஒரு பெரும் பகுதியை ஒதுக்கிச் செலவிட்டு புண்ணியம் செய்த 'தலை'யே நீ வாழ்க..

அப்புறம் அந்த முறுக்கு, சிப்ஸ், தண்ணி பாட்டில், ஜூஸ்.. இதெல்லாம் யாருடைய செலவு என்பதே தெரியவில்லை. கொடுத்தார்கள் வாங்கினேன்.. முழுங்கிக் கொண்டேன். கேட்கவே இல்லை.. வந்துவிட்டேன். இப்போது நினைத்துப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது.. ச்சே.. என்ன புத்தி இது? என்று என்னைத்தானே நொந்து கொண்டேன்..

'தலை' பாலபாரதி அவர்களே.. நீவிர் இருக்கும் அயனாவரம், விருகம்பாக்கத்திலிருந்து எந்தத் திசையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இருந்தாலும் வீட்டு வாசலில் இருந்து குத்துமதிப்பாக ஒரு திசை நோக்கித் திரும்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து ஒரு தேங்க்ஸ் சொல்கிறேன்.. நன்றி.. கோடானு கோடி நன்றி.. வாழ்க வளமுடன்.
"உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணமாகணும்..
நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கணும்..
ஒரே attempt-ல நாலு புள்ளைக பொறக்கணும்..
அவுகளோட நீங்க சந்தோஷமா வாழணும்.."

- இம்புட்டுத்தான் என் வேண்டுதலு.

கொசுறு நியூஸ் : அடுத்த மீட்டிங்கை மெரினா பீச்ல வை 'தலை'.. அப்பத்தான்.. உண்மைத்தமிழனுக்கு ரொம்பச் சவுகரியமா இருக்கும்..

இது கண்டிப்பா ஜாலிக்குத்தான்..
நிசமா மீட்டிங் மினிட்ஸ் புக்ல இருக்கிறதைப் படிக்கணும்னா இங்கல்லாம் போங்க..

ராஜீவ்காந்தி-சிவராசன்+சுபாXசி.பி.ஐ.=சயனைடு

குப்பி


சினிமா விமர்சனம்

'சினிமா என்பது ஒரு மொழி'. 'சினிமா என்பது ஒரு வாழ்க்கை'. 'சினிமா என்பது ஒரு கலை'. 'சினிமா என்பது வியாபாரம்'. 'சினிமா என்பது கானல்நீர்..'

- இப்படி சினிமாவைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் பிரதான மோதல் "சினிமா என்பது கலையா? வியாபாரமா?" என்பதில்தான் இருக்கிறது.

இந்த இரண்டுக்கும் இடையில் சினிமா ஒரு வாழ்க்கைப் புத்தகமாக ஒரு சிலரால் அடையாளம் காட்டப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் கடந்து போன, கிழிந்து போன நாட்காட்டிகளை அடையாளம் கண்டு ஞாபகப்படுத்தும்போது, வழிப்போக்கனொருவன் தன் பிறந்த மண்ணை தற்செயலாக மிதிக்கும்போது என்ன உவகை அடைவானோ, அப்படியொரு உவகை அங்கே நமக்கு வரும். அப்படியொரு சிறிய மகிழ்ச்சியை எனக்கு அளித்தது 'குப்பி' திரைப்படம்.

1991 மே 21-ம் நாள் தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகிவிட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாட்டை தான் மிகவும் நேசிப்பதாகச் சொன்ன இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி இதே தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலையாளிகளைத் தேடும் பணியில் இறங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக் கொண்டே வந்து ஒரு புள்ளியில் வந்து நின்றது.

அந்தப் புள்ளியைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கோலம்தான் இந்தக் 'குப்பி'. சிவராசன்-சுபா. ராஜீவ்காந்தி கொலைச் சம்பவத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அத்தனை பேரும் உச்சரித்த பெயர்கள் இவைகளாகத்தான் இருக்கும்.

சென்னையிலிருந்து நாற்றமடிக்கும் யில் டேங்க் ஒன்றின் வயிற்றுப் பகுதிக்குள் ஒளிந்து பெங்களூருக்குச் செல்லும் சிவராசன்-சுபா குழுவினர், பெங்களூரில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களது முடிவுவரை அதிகப்பட்ச உண்மைகள், சிறிதளவு சினிமாத்தனமான காட்சிகளோடு நம் முன் வைத்திருக்கிறார் இயக்குநர்.

'கொலையாளிகள்' என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து ஒருவிதத்தில், அவர்களது விரைவான மரணத்திற்கும் காரணமாக இருக்கிறார் ரங்கநாத் என்கிற ஒரு லேத் பட்டறை ஓனர்.

பெங்களூருக்கு வரும் சிவராசனும், சுபாவும் ஏற்கெனவே அங்கு தங்கியுள்ள மற்றொரு புலிகளின் எதிர் வீட்டில் அவர்கள் துணையோடு தங்குகிறார்கள். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் பிடிபட்ட ஒரு புலியிடம் கிடைத்த தகவலில் பெங்களூரில் ஏற்கெனவே தங்கியிருக்கும் புலிகள் பற்றிய தகவல் கிடைக்க போலீஸ் அவர்களைப் பிடிக்க முயல்கிறது.

பத்து நேரத்தில் இருக்கவே இருக்கிறது சயனைடு என்று நினைத்து புலிகள் அதைக் கடித்துவிட.. ஒருவர் ஸ்பாட்டிலேயே மரணிக்கிறார். மற்றவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கழித்து, அனைவரையும் அதிகப்பட்ச பி.பி,க்கு ஏற்றிவிட்டு மரணமடைகிறார். சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு டீம் பெங்களூர் வந்து விசாரிக்கிறது.

தன்னை இரண்டு நாட்களாக போலீஸ் தேடுவதை அறிந்த வீட்டு புரோக்கர் பயந்து கொண்டே ஸ்டேஷனில் வந்து சரண்டராகிறார். அவரை விசாரிக்கிறது போலீஸ். "இவுங்க மட்டுமில்ல.. இன்னும் நாலைஞ்சு பேருக்கும் இதே மாதிரி வீடு பிடிச்சுக் குடுத்தேன்.." என்கிறார் புரோக்கர். பதறிப் போய் போலீஸ் "அவர்கள் எங்கே..?" என்று கேட்க.. "அதே வீட்டுக்கு எதிர் வீட்டில்தான்.." என்று புரோக்கர் சொன்னதும் போலீஸ் மட்டுமல்ல.. நாமும் சேர்ந்து ஸ்தம்பிக்க வேண்டியிருக்கிறது.

மறுபடியும் போலீஸ் தேடுதல் வேட்டை. வெள்ளை நிற மாருதி வேனிலேயே இரண்டு நாட்களாகச் சுற்றுகிறார்கள் சிவராசன்-சுபா குழுவினர். இந்த நேரத்தில்தான் வேறொரு புரோக்கர் மூலமாக ரங்கநாத் சிக்குகிறார். அவருடைய வீட்டில் அவரை இறக்கிவிட்டுவிட்டு செல்லும் கொலைகார டீம், அடுத்த நிமிடத்தில் வந்து கதவைத் தட்டுகிறது.

ரங்கநாத் கதவைத் திறக்க.. துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்கிறான் சிவராசன். "எங்களுக்கு நல்ல வீடு கிடைக்கிறவரைக்கும் இங்கனதான்" என்கிறான்.

தொடர்ந்து இவர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்க வெளியில் இவர்களைத் தேடி அலையோ அலை என்று அலைகிறது போலீஸ். டிவியில் சிவராசனின் பல்வேறு வேடங்களை கிராபிக்ஸ் மூலம் செய்து அதை நியூஸில் காட்டுகிறார்கள். அப்போதுதான் ரங்கநாத்தின் மனைவிக்கே இவர்கள்தான் ராஜீவ் கொலையாளிகள் என்பது தெரியவருகிறது.

இந்த இடத்தில் சிவராசனாக நடித்தவரின் நடிப்பைச் சொல்லியாக வேண்டும். சாப்பிட்டபடியே "சிவராசனைப் பிடிக்கப் போறாங்களாம்.." என்று புறையேறும் அளவுக்கு சிரிக்கும் சிரிப்பு.. சிறந்த தேர்வு. கடைசி வரையில் தனது ஒற்றைக் கண்ணை மூடியே வைத்திருக்க எவ்வளவு கடினப் பயிற்சி எடுத்தாரோ தெரியவில்லை. மனிதரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்தது ரங்கநாத்தின் மனைவியாக அப்பாவியாக நடித்து வெளுத்துக் கட்டியிருக்கிறார் கன்னட நடிகை தாரா.. (நினைவிருக்கிறதா-இங்கேயும் ஒரு கங்கையின் கதாநாயகி) 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருப்பவர். படத்தில் வஞ்சனையில்லாமல் நடிப்பில் பின்னியிருக்கிறார்.

இறுதிக் காட்சியில் தான் போலீஸில் பிடிபட்டபோதும் தன் வீட்டு கேஸ் சிலிண்டர் சிவராசன் வீட்டில் இருப்பதாகவும், அது தனது அப்பா வீட்டுச் சீதனம் என்றும் அதை வாங்கிக் கொடுங்கள் என்று போலீஸிடம் கெஞ்சுவது அக்மார்க் சினிமாத்தனமா காட்சி என்றாலும் ரசிக்கத்தக்க வகையில்தான் இருக்கிறது.

படத்தின் இயக்குநர் இந்தக் கொலை வழக்கில் பிற்பாடு கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தண்டனையடைந்து விடுதலையான ரங்கநாத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் நிறைய 'உண்மை'களை வெளிப்படையாக எடுத்து விட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை பற்றி நான் படித்த பல புத்தகங்களிலும் இந்தக் 'குப்பி'யின் திரைக்கதை உள்ளது. உள்ளபடியே உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்து சுபாவாக நடித்த மாளவிகா. தன்னுடைய பேமஸான உருட்டு விழி கண்களுடன் பல இடங்களில் தங்களுடைய செய்கைக்கு மக்களிடம் அனுதாபம் சம்பாதிக்கும்விதமான வசனங்களுடன் வலம் வருகிறார். படத்தில் நடித்த அனைவரும் இந்தியர்கள் என்பதாலும் ஈழத்துத் தமிழ் மட்டும்தான் படத்தில் சரிவர அமையவில்லை என்பது என்னுடைய கருத்து.

இறுதியில் நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்றை நினைப்பார் என்பதை உறுதி செய்வதைப் போல் ரங்கநாத் மாட்டிக் கொள்வது மிக எளிமையானதாக அமைந்துவிட்டது. யாரோ மூன்றாம் நபர் தன் காதைத் தீட்டிக் கேட்ட ஒரு விஷயத்தை மிக யதார்த்தமாக போலீஸிடம் சொல்ல அந்த விளைவாக மாட்டிக் கொள்கிறார்கள் அனைவரும்.

மாலை செய்தித்தாளும், பெட்ரோலையும் வாங்கிக் கொண்டு புலிகளைப் பார்க்க வரும் ரங்கநாத் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் நிற்பதைப் பார்த்து திரும்பிப் போய் இரவு முழுக்க ஒரு கடை வாசலில் தூங்குகிறார். மறுநாள் காலை என்னதான் நடக்கிறது பார்த்து விடுவோமே என்ற நினைப்பில் அங்கே வர.. எலி, வலையில் தானே வந்து மாட்டியது போல் போலீஸிடம் சிக்குகிறார். நிஜத்திலும் இப்படியேதான்.. இப்படியொரு கேரக்டர் ரங்கநாத்.

இடையிடையே அவ்வப்போது தேடுதல் வேட்டையில் நடந்த மற்ற சம்பவங்களையும் தொகுத்துதான் கொடுத்துள்ளார் இயக்குநர். கதை என்னவோ இந்தியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்த கதைதான் என்பதால் இசையமைப்பு தேவையில்லை என்று நினைத்துவிட்டார் இயக்குநர். பின்னணியில் புலிகளை காட்டும்பொழுதுகூட அமைதிதான்.

சிவராசன், சுபா, இருவரின் ஈழம் போய்ச் சேர வேண்டும் என்கிற ஆவல்.. ரங்கநாத்தின் ஆர்வக் கோளாறு.. மாட்டிக் கொண்டால் என்னாகுமோ என்கிற ரங்கநாத்தின் மனைவியின் தவிப்பு.. முடிவு அனைவருக்குமே தெரிந்ததுதான் என்றாலும் சாகின்றபோதுகூட பெரிசு என்ன சொல்லிச் செத்தது என்று 30-வது நாள்கூட கறியைக் கடித்துக் கொண்டே கிசுகிசுக்கும் நம் மக்களுக்கு இது ஒரு பெரிய எதிர்பார்ப்பு. அதனை கிட்டத்தட்ட இயக்குநர் நிறைவேற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

இறுதியாக ஒரு வார்த்தை.. கல்லூரியில் புத்தகத்துடன் நுழையும் அன்றே கையில் ரோஜாவைப் பிடித்துக் கொண்டு எவளிடம் கொடுத்து லவ் பண்ண ஆரம்பிக்கலாம் என்ற அபத்தங்கள்.. 45 கிலோ எடையை வைத்துக் கொண்டு 100 கிலோ எடையில் உள்ளவர்களை அந்தரத்தில் பறந்து பறந்து அடிக்கின்ற ஹீரோயிஸ முட்டாள்தனங்கள்.. நிமிடத்திற்கு நிமிடம் தொப்புளை காமிரா முன் காட்டிவிட்டு மீதி நேரம் ஹீரோவுக்கு அந்த இடத்தையே பட்டா போட்டுக் கொடுக்கும் ஹீரோயினின் நடனங்கள்.. அர்த்தமே இல்லாத வசனத்திற்கு பின்னணியில் காதைக் கிழிக்கும் சவுண்டை போட்டுக் கொலை செய்யும் காட்சிகள்..

இப்படி எதுவும் இல்லாமல் தான் சொல்ல வந்ததை கிட்டத்தட்ட சொல்லி முடித்திருக்கும் இயக்குநருக்கு.. ஒரு அரசியல் கொடூரத்தின் பதிவை திரையுலக வரலாற்றில் பதிவு செய்த திரை இயக்குநருக்கு.. குடும்பத்துடன் உள்ளே சென்று கடைசிவரை நெளிய வைக்காத வசனங்களால், கண்ணை உறுத்தாத காட்சியமைப்புகளால் அழகை காட்டியிருக்கும் இயக்குநர் ரமேஷ¤க்கு எனது வாழ்த்துக்கள்..

படங்கள் உதவி : indiaglitz.com

வந்துட்டேனுங்கோ..! வணக்கமுங்கோ..!

எனது இனிய வலைத்தமிழ் மக்களே..

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற மார்ச் மாதம் 23-ம் தேதியன்று துவங்கப்பட்ட எனது இந்த வலைத்தளம், இன்று முதல் தமிழ்மணத்தின் திரட்டியில் இணைக்கப்பட்டு உங்களையெல்லாம் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்துப் பெருமையடைகிறேன்.

இப்படியொரு வலைப்பதிவு உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சகோதரர் 'தடாலடி' ஜி.கெளதம் அவர்களுக்கு முதற்கண் எனது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைத்தளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டாகிவிட்டது. அதில் நாமும் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் யாரிடம் சென்றால் அதற்குத் தீர்வு கிடைக்கும் என்று நான் சென்னைத் தெருக்களில் அலைந்தபோது, "எல்லாச் சாலைகளும் ரோமபுரி நோக்கியே செல்கின்றன" என்ற புகழ் பெற்ற வாக்கியத்தைப் போல் அனைவரும் கை காட்டியது அருமைச் சகோதரர், எனதருமை கெழுதகை நண்பர் திரு.பாலபாரதியை நோக்கி..!

தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது வாஞ்சையுடன் அழைத்தார் திரு.பாலபாரதி. அவர் கொண்டுள்ள கொள்கைளும், நான் கொண்டுள்ள கொள்கைகளும் வேறு வேறு என்றாலும்கூட அதைப் பற்றி சிறிதும் மனதில் கொள்ளாமல் அருகில் அமர வைத்து, கை பிடித்து சொல்லிக் கொடுத்து, விழி மேல் விழி வைத்து வரைந்து காட்டி எனது வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்த அவர்தம் கைகளை முத்தமிடுகிறேன். சகோதரர் பாலபாரதிக்கு எனது அன்பார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

அன்பிற்கினிய பதிவர்களே.. வலைப்பதிவிற்கு நான் புதியவன்; மாணவன். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகளில் பல லட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி தங்களுக்குள் இணையதளம் மூலம் ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெரும் உவகை ஏற்பட்டது.

ஆனால் உள்ளே வந்து வலைப்பதிவுகளை படிக்கத் துவங்கியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. பொதுவாக வலைப்பதிவு ஏற்படுத்தும் திறமைசாலிகள் கண்டிப்பாக பட்டறிவும், எழுத்தறிவும் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அப்படியே. அப்படியொரு அறிவாளிகளின் சபையை நானும் பார்க்கப் போகிறேன் என்ற ஆனந்தத்தில் உள்ளே நுழைந்த எனக்கு இங்கே படித்த, கண்ணில்பட்ட சில விஷயங்கள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்ட முள் மாதிரி இருக்கிறது.

அன்பர்களே.. நண்பர்களே.. சகோதரர்களே.. சகோதரிகளே.. நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். பின்பு பிறந்த நாட்டால் இந்தியர்கள். பேசுகின்ற மொழியால் தமிழர்கள். அவ்வளவே.. நமக்குள் வேறு எந்தப் பேதமும் இல்லை. பேதம் பார்ப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது.

பிராமணர், பிராமணல்லாதார் என்று வலைப்பதிவிலேயே பிரச்சினைகள் வந்துவிட்டது, எந்த அளவிற்கு இந்த அரசியல்வாதிகள் நம் இளைஞர்களான சகோதரர்களை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

உலகத்தில் நீ என்ன ஜாதி என்று கேட்டு பேசத் தொடங்குகிற பழக்கம் அநேகமாக இந்தியாவில், நம் தமிழ்நாட்டில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பொழுது விடிந்து, பொழுது போனால் இங்கேதான் 'ஜாதி', 'ஜாதி' என்று சொல்லி இளைய சமூகத்தினரின் மூளையை சலவை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளால்தான் தமிழ்நாட்டில் 'ஜாதி' என்கிற வார்த்தையே அழிக்க முடியாத ஒரு அங்கமாகப் போய்விட்டது.

சகோதரர்களே..!

நாம் 2007-ம் ஆண்டில் இருக்கிறோம். இனி வரும் காலங்களிலாவது நம் இளைய தலைமுறை அதாவது நம்முடைய பிள்ளைகள், பேரன்களாவது 'ஜாதி' என்ற அரக்கன் இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு நாம் செயல்படுவோம்.

அப்போதுதான் நம் பிள்ளைகளை நாம் இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டிற்கு தயார் செய்ததாக ஒரு அர்த்தம் இருக்கும்.

தயவு செய்து வலைப்பதிவுகளில் ஜாதி மோதல் வேண்டாம். நாம் அனைவரும் பேசுகின்ற தமிழ் மொழியால் தமிழர்கள். அவ்வளவே..

உலகில் நிகழும் நிகழ்வுகளை நமக்குள் கருத்து பேதமில்லாமல் பகிர்ந்து கொள்வோம். நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதனை யாரும் யாருக்கும் கேட்காமல் கொடுத்து உதவுவோம். பண்பட்ட, மனிதத்தனம் உள்ள ஒரு சமூகத்தை உருவாக்க நாம் நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

நமக்குள் கோபம் வேண்டாம். குரோதம் வேண்டாம். பகை வேண்டாம். முட்டல், மோதல்கள் வேண்டாம்..

சாதி, சமய, சடங்குகளற்ற புதிய தமிழகத்தை படைக்க இந்த நேரத்தில் உறுதி காண்போம்.

வாழ்க.. வளர்க..

உண்மைத் தமிழனின் தன்னிலை விளக்கம்

எனது இனிய வலைத்தமிழ் மக்களே..
வணக்கம்.
கடந்த மூன்று நாட்களாக நமது வலைத்தளம் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சிக்கித் தவித்தது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
அதன் தொடர்ச்சியாக http://suttapons.blogspot.com/2006/11/blog-post_21.html என்ற வலைத்தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு எனதருமைச் சகோதரி பொன்ஸ் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

"'உண்மைத்(?!)'தமிழன்,

1. இந்தப் பதிவு மீள்பதியப்பட வில்லை. புதிய பின்னூட்டங்கள் மட்டுமே இப்போது பிரசுரிக்கப்படுகின்றன.
2. இங்கு நடந்த "நாடகத்தின்" ஒரு பக்கத்தை நீங்கள் சொல்லாமல் விட்ட பகுதி: தேன்கூட்டில் அந்த போலிப் பதிவைப் பார்த்ததாக ஆரம்பத்தில் சொல்லிய நீங்கள், ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள் என்பதையும் எழுதியிருந்தால், இங்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

கடைசியாக, தயவு செய்து இனிமேல் என் பதிவுகளில் எந்தப் பின்னூட்டமும் இட வேண்டாம். இந்தப் பின்னூட்டத்துக்குப் பதில் சொல்வதானாலும் உங்கள் சொந்தப் பதிவில் எழுதுங்கள்..."
- பொன்ஸ்

மேலும் எனது தளத்திற்குள் சென்று பதிலளித்துக் கொள்ளும்படியும் தனது தளத்திற்கு இனிமேல் எக்காரணம் கொண்டும் வரவேண்டாம் என்றும் கதவடைப்பும் செய்துவிட்டார். இது நான் முற்றிலும் எதிர்பாராதது.
எனது தரப்பு நியாயங்களை உங்களிடம் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

//1. இந்தப் பதிவு மீள் பதியப்படவில்லை. புதிய பின்னூட்டங்கள் மட்டுமே இப்போது பிரசுரிக்கப்படுகின்றன.//

//2. இங்கு நடந்த "நாடகத்தின்" ஒரு பக்கத்தை நீங்கள் சொல்லாமல் விட்ட பகுதி: தேன்கூட்டில் அந்த போலிப் பதிவைப் பார்த்ததாக ஆரம்பத்தில் சொல்லிய நீங்கள், ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள் என்பதையும் எழுதியிருந்தால், இங்கு பொருத்தமாக இருந்திருக்கும். //

அன்புள்ள பொன்ஸ் அக்கா அவர்களுக்கு,
நீங்கள் என் மீது சுமத்தியுள்ளவை மிகக் கொடுமையான கொலை குற்றச்சாட்டு என்று நான் கருதுகிறேன்.

நான் தேன்கூடு திரட்டியில் பார்த்தது "திரட்டி 'ஜி' என்ற பகுதியில். நான் இதை தற்செயலாகத்தான் பார்த்தேன். மேலோட்டமாகப் படித்துப் பார்த்த பிறகு 'இதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது.. முக்கியமாக தங்களுக்குத் தெரியக்கூடாது..' என்று நினைத்தேன். தெரிந்தால் நீங்கள் மனம் வருத்தப்படுவீர்களே என்றுதான் நான் கருதினேன்.

அதனால் உடனேயே அதே தேன்கூட்டில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பதிவிற்குச் சென்று என்னுடைய 'உண்மைத்தமிழன்' பெயரைப் பயன்படுத்தியே "வலையுலகத்தில் பலராலும் மதிக்கப்படும் மூத்த வலைப்பதிவர் பொன்ஸ் என்கிற பெண் பதிவரின் பெயரில் யாரோ ஒருவர் போலியான காமாக்கதைகளை உருவாக்கி வலைத்தளத்தில் விட்டுள்ளார்கள். இது உங்களது திரட்டி 'ஜி' பகுதியில் வந்துள்ளது. உடனே இந்த வலைத்தளத்தை தேன்கூட்டிலிருந்து நீக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.." - இது போன்று வாசகங்களைக் கொண்டு தமிழில் டைப் செய்யப்பட்ட தகவலை அனுப்பினேன்.

அத்தோடு சரி.. அதற்குப் பிறகு அன்றைய பொழுதில் நான் தேன்கூடு இதழை பார்க்கவில்லை. மறுநாள்தான் பார்த்தேன். அதில் அந்தப் பதிவு இல்லை. நிம்மதியுடன் நின்று கொண்டேன்.நான் இதை வேறு யாரிடமும் சொல்லாமல் விட்டதற்குக் காரணம் பலரும் இதைப் பார்க்காமல் விட்டிருந்தால்.. ஒருவேளை நானே இதை பகிரங்கப்படுத்தியது போலிருக்குமே என்பதால்தான்.. இதில் எனது தவறு என்ன இருக்கிறது? நான் நினைத்தது சரிதானே..

அந்த நபர் யார் என்று உடனே கண்டுபிடித்து அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எனக்கு அப்போது எந்த விதத்திலும் தோன்றவில்லை. காரணம் எனக்கும் தெரியவில்லை. இதை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. நான் உங்களை நேரில் பார்த்ததுகூட கிடையாது. பேசியது கிடையாது. வலையுலகில் அனைவருமே உங்களை 'அக்கா' என்று அழைப்பதால் நம்மைவிட வயதில் மூத்தவரோ என்று நானாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதுதான் உண்மை.
நண்பர் பாலபாரதியிடம் ஒரு நாள், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். 'பொன்ஸ் என்பவர் யார்?' என்றேன். "அவங்க விப்ரோ கம்பெனில வொர்க் பண்றாங்க தலைவா.." என்று மட்டுமே சொன்னார் பாலா. நானும் மேற்கொண்டு உங்களைப் பற்றி எதையும் கேட்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவது? எனக்குச் சங்கடமாக இருந்தது. அதனால்தான் செய்யவில்லை. சங்கடத்திற்கு என்ன காரணம் என்று கேட்காதீர்கள்.. அது அவரவர் வளர்ந்து வந்த சூழ்நிலையால் உருவாகியிருக்கும் தனிப்பட்ட குணங்கள்.. நிற்க..

அந்த வலைப்பதிவு பிரச்சினை உங்களால் வெட்டவெளிச்சமாக்கப்பட்ட பிறகு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர் பாலபாரதி அவர்கள் போன் செய்து "என்ன தலைவா? ஒரு வார்த்தை அன்னிக்கே சொல்லிருக்கக் கூடாதா?" என்று கேட்டார். அப்போதும் நான் இதையேதான் அவரிடமும் சொன்னேன். "எல்லாரிடமும் எதுக்கு பரப்பணும்.. அதான் தேன்கூட்டுலேயே அடுத்த நாள்ல இருந்து வரலியே. வெளில தெரிஞ்சா அக்காவுக்கு சங்கடமாச்சே.." என்றேன். "வரலைன்னா.. அப்படியே விட்ரதா? தனியா போட்டுட்டிருப்பான்ல.. எதையாவது செஞ்சிருக்கணும் தல.." என்றார் பாரதி.

அடுத்த நாள் காலை மறுபடியும் போன் செய்து "தேன்கூட்டில் எந்த இடத்தில் பார்த்தீர்கள்? நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றெல்லாம் கேட்டார் பாலபாரதி. நானும் சொன்னேன். "தேதியை சரியாகச் சொல்ல முடியுமா..?" என்று வினவினார். என்னால் சொல்ல முடியவில்லை. தேதியை நான் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே, "ஒரு 10 நாளைக்கு முன்னாலன்னு நினைக்கிறேன்.." என்றேன். ஏனெனில் இதுதான் உண்மை. எனக்கு சுத்தமாக அன்றைய தேதி ஞாபகமில்லை. அடுத்து "நீங்கள் என்ன எழுதியனுப்பினீர்கள்..?" என்றார். நான் மேலே சொன்ன வாக்கியங்களை ஞாபகப்படுத்தி "இந்த மாதிரி.. இதே போல்தான் எழுதி அனுப்பினேன்.." என்றேன். மறுபடியும், "நீங்க அன்னிக்கே சொல்லிருந்தீங்கன்னா.. இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது.." என்று சொல்லி வருத்தத்துடன் போனை வைத்தார் பாலா.

நான் சுரதா.காமில் உள்ள Typing Space-ல் Type செய்து அதை TSC Font-க யூனிகோட் பார்முக்கு மாற்றி அதை Cut செய்து தேன்கூடு திரட்டியின் தகவல் பலகையில் கொண்டு போய் Paste செய்தேன். கவே இதை எனது கம்ப்யூட்டரிலும் Save செய்யவில்லை. எனவே நண்பர் பாலா கேட்ட உதவிகளில் என்னால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது.

ஆனால் நீங்கள் இப்போது "ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள்.." என்று எழுதியிருப்பது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

உங்களை அவமானப்படுத்துவது போல் இருக்கும் ஒரு செய்தியை நான் தங்களிடம் காட்டாமல் போனதுதான் எனது தவறா? பத்து நாட்களுக்கு முன்பான தேதியை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாமல் போனது எனது தவறா? உங்களிடம் கேட்காமலேயே யாரிடமும் லோசனை செய்யாமலேயே தேன்கூடு திரட்டி நிர்வாகிகளுக்கு உங்களைப் பற்றிச் சொல்லி எனது கண்டனத்தைத் தெரிவித்தது எனது தவறா?

சகோதரியே.. நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். தேன்கூடு திரட்டியில் அடுத்த நாளே அந்த வலைத்தளம் இல்லை என்றவுடனேயே எனக்கு அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஏனெனில் வலைத்தளத்தில் என்னுடைய அனுபவம் குறைவு. உங்களுக்கே தெரியும். இதில் நான் எங்கே வசதியாகக் கழன்று கொண்டேன்?

நண்பர் பாலபாரதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் என்னால் முடிந்தவரையில் பதிலளித்தேன். இதுதான் உண்மை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நண்பர் பாலபாரதியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள். நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. எதையும் மூடி மறைக்கவும் விரும்பவில்லை. யாரையும் காப்பாற்றவும் விரும்பவில்லை.

நண்பர் பாலபாரதி சொன்ன பிறகுதான் அந்த நபரின் பெயர் ஜெயராமன் என்பது எனக்குத் தெரிந்தது. அதுகூட பாலபாரதியின் வலைத்தளத்தில் பூடகமாக போட்டிருந்தது எனக்குப் புரியாமல் "யார்.. யார்.." என்று கேட்டு மீண்டும் மீண்டும் கமெண்ட்ஸ் செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக பாலபாரதியே எனக்கு போன் செய்து "அவர் பெயர் ஜெயராமன், கிண்டியில் உள்ள Alcatel கம்பெனியில் பணியாற்றுவதையும்" தெரிவித்தார்.

அதன் பிறகு இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் என்று நான் வினவியதற்கு "எனது தளத்திலேயே சில இணைய முகவரிகளைக் கொடுத்திருக்கிறேன். அங்கே சென்று பாருங்கள் தலைவா.. அவன் ஜாதகமே தெரியும்.." என்றெல்லாம் சொன்னார். அதே போல் நானும் மறுநாள் அந்தத் தளங்களுக்குள் சென்று அவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இதுதான் நடந்த உண்மை. நண்பர் பாலபாரதியின் தளத்திற்குள் நீங்கள் சென்று பார்த்தீர்களானால் நான் போட்ட பின்னூட்டமும், நண்பர் பாலபாரதியின் பின்னூட்டமும் இருக்கும்.

அடுத்து இந்தப் பதிவு பற்றியச் செய்திக்கு வருகிறேன். வெட்டியாய்ச் சுட்டவைகள் blog-ஐயே நான் நேற்றுதான் பார்த்தேன். அதில் 'நேற்று இன்று நாளை' என்ற பகுதியை படித்தேன். அதில் படித்ததில் இருந்து எனக்குத் தெரிந்தது நண்பர் திரு.ஜெயராமன் இதற்கு முன்பே பலருக்கும் போலிப் பதிவு பின்னூட்டம் போட்டு அனைவரின் மனதையும் கஷ்டப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். திரு.ஜெயராமனே இதில் மன்னிப்பும் கேட்டு பின்னூட்டம் போட்டிருக்கிறார். அதையும் படித்தேன். கடைசியாக நண்பர் திரு.பெ.மகேந்திரன் அவர்கள் போட்டிருந்த பின்னூட்டம் நேற்றையச் சூழலுக்கு பொருத்தமாக இருந்ததாக எனக்குப் பட்டது. காரணம் கடந்த மூன்று நாட்களாக உங்களுக்கு ஓய்வில்லாத மன உளைச்சலைத் தந்த திரு.ஜெயராமனும், இந்த போலி ஜெயராமனும் ஒருவர்தான் என்று நான் நினைத்துவிட்டேன். இதுதான் நான் செய்த தவறு. கொஞ்சம் அவசரக் குடுக்கைதான். ஒத்துக் கொள்கிறேன். அவசரத்திற்குக் கொஞ்சம் காரணம் இருக்கிறது.

இவ்ளோ தூரம் இரண்டு நாட்களாக மூன்று பதிவுகளைப் போட்டு தகவல் அளித்த நண்பர் திரு.பாலபாரதி அந்த நண்பர் திரு.ஜெயராமன் நேரில் வந்து மன்னிப்பு கேட்டு, எழுதிக் கொடுத்தவுடன் 'மன்னிக்கலாம்' என்று சொல்லி பிரச்சினையை முடித்துவிட்டது நான் எதிர்பாராதது. அத்தோடு விட்டுவிடாமல் 'அவரையும் ஏப்ரல்-22 வலையாளர்கள் மீட்டிங்கிற்கு அழைக்கிறோம்' என்று சொல்லி ஒரு பதிவில் தெரிவித்திருந்தார். இது எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது.

நேற்றுவரை வில்லனாக தெரிந்தவர் ஒரே நாள் இரவில் நண்பராவது அரசியலில்தான் நடக்கும். நாமுமா அப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது கருத்தை அதே பதிவில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருந்தேன்.

1. "தல.. நீங்கள் செய்ததும், சொல்வதும் மிகத் தவறு.

அந்த நபர் இனிமேல் யோக்கியவானாக தன்னைக் காட்டிக் கொண்டு பெண்ணுரிமையை பற்றியும், பெண் விடுதலையைப் பற்றியும், பெண் சுதந்திரத்தைப் பற்றியும் எழுதித் தள்ளப் போகிறார். நம் அனானிகள் அவருடைய ஜாதகம் தெரியாமல் அங்கே போய் ஜல்லியிடப் போகிறார்கள். மறுபடியும் என்றாவது ஒரு நாள் அவருடைய வலைத்தளத்தில் நாமே பின்னூட்டமிட வேண்டிய கட்டாயம் ஒன்றும் வரும்.. இதெல்லாம் தேவையா?

இவர் போன்ற ஆசாமிகளை வெளிப்படுத்தி அவர்களை ஒதுக்கி வைப்பதுதான் நமக்கு நல்லது. பெயரையும் சொல்லக் கூடாது.. வலைத்தளத்தையும் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டால் நாளை நம் வலையுலகத்திற்குள் வரும் புதியவர்களுக்கு அவரைப் பற்றித் தெரியுமா? ஏன் நல்லவர் போல் நடித்து நாளை வேறொருவரைப் பற்றி இதே போல் எழுத மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

முதலில் இவரை மாதிரி ஆட்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். தண்டனையிலேயே மிகக் கொடிய தண்டனை 'புறக்கணிப்பு'தான்.. இனி இந்த ஆள் எந்த ரூபத்தில் எழுதினாலும் அங்கே யாரும் சென்று பின்னூட்டம் இடக்கூடாது.. ஏன் பார்க்கக் கூடக் கூடாது என்று நமக்குள் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டால் நமக்கு நல்லது. நம்முடைய நேரத்தை இவர் போன்ற திருடர்களிடம் செலவிடக்கூடாது.

முதலில் பெயரையும், அவருடைய ஜாதகத்தையும் சொல்லி நம்முடைய புறக்கணிப்புத் தீர்மானத்தை கழகத்தின் பொதுக்குழுவிற்கு கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். புறக்கணிப்போம் இவர் மாதிரியான ஆட்களை..

அதோட என்ன.. என்ன.. ஏப்ரல்-22 சந்திப்புக்கும் அவருக்கு அழைப்பா..? தல.. எனக்கும் கோபம் மண்டை உச்சில நிக்குது.. அந்தாளை நேர்ல பார்த்தேன்.. அதுக்கப்புறம் நடேசன் முதலியார் பார்க்ல 'எது' நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு.."

ஆனால் இதற்குப் பதிலளித்த நண்பர் திரு.பாலபாரதி இதை முற்றிலும் மறுத்துவிட்டார். இதுவும் எனக்கு அதிர்ச்சியளித்தது. மேற்கண்ட பதிவில் இருக்கும் நியாயமான காரணத்தில் நான் இன்னமும் உறுதியாகவே இருக்கிறேன்.

இந்த நேரத்தில் உங்களுடைய 'நேற்று இன்று நாளை' என்கிற பதிவைப் படித்தவுடன் அந்த ஜெயராமன்தான் இந்த ஜெயராமனோ என்று நினைத்துவிட்டேன். முன்பு மன்னிப்பு கேட்க வைத்துவிட்ட கோபத்தால்தான் இந்த அளவிற்கு மோசமாக எழுதியிருக்கிறாரோ என்று நினைத்தேன்.

மேலும் ஒரு முறை தவறு செய்பவனை மன்னிக்கலாம். விட்டுவிடலாம். ஆனால் மீண்டும் அதைவிட பெரிய தவறை செய்பவனை மீண்டும் மன்னிப்பது என்பது தனிப்பட்ட விஷயங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். பொதுவான இது போன்ற வலைத்தளத்தில் ஊடுறுவி ஒருவரை அவமானப்படுத்தும் நபரை மீண்டும் நண்பர் என்று கட்டிக் கொள்வது என்பது நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்வது போலாகும்.

இதில் வந்த போலி ஜெயராமன்தான் இந்த சல்மா அயூப் ஜெயராமன் என்பது உண்மையானால் நான் பாலபாரதியின் பதிவில் போட்டிருந்த மேற்கண்ட எனது ஆதங்கமும் சரிதான். நான் 'நாடகம்' என்று குறிப்பிட்டிருந்தது தங்களது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கணும் சகோதரியே.. மன்னிக்கணும்..

"கொஞ்ச நாட்களுக்காவது இந்த மாதிரி ஆட்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவையாவது எடுங்கள்.." என்று நண்பர் பாலபாரதியிடம் சொன்னேன். இதேபோல் தங்களது பதிவிலும் போட்டு தங்களுடைய பார்வைக்கும் போக வேண்டுமே என்று நினைத்தேன். அதற்குள் தாங்கள் அவரை மன்னித்துவிட்டதைப் போல் பின்னூட்டங்களில் படித்தேன். இல்லாவிட்டால் நண்பர் திரு.பாலபாரதி அவரையும் கூட்டத்திற்கு அழைப்பு விட்டிருக்க மாட்டாரே என்று நினைத்தேன்.

அதனால்தான் நான் 'நாடகம்' என்று வர்ணித்திருந்தேன். ஒரு முடிவை எடுத்தால் அது தனக்கு மட்டுமல்ல.. இனிமேல் வரக்கூடிய வாரிசுகளுக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கின்ற முடிவுகள்தான் வெற்றி பெறும் என்பது எனது கருத்து.

தாங்கள் பெருந்தன்மையானவர், பரந்த மனதுடையவர். மன்னிக்கும் மனப்பாங்கு உடையவர்.. ஆகவே மன்னித்துவிட்டீர்கள். இனி இவர் நாளைய பொழுதுகளில் வேறு என்னெல்லாம் செய்ய மாட்டார் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவது? இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் நான் இவரிடம் என்ன பேசுவது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

"மன்னிப்பு என்பது புறக்கணிப்பு என்கிற தண்டனையோடு தாருங்கள் என்பதுதான்.." எனது கோரிக்கை. இது எங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினை என்று நீங்கள் இப்போது சொல்வீர்களானால் இந்தப் பிரச்சினையில் தலையிட்டததற்காக கடைசி முறையாக நான் மன்னிப்பு கேட்டு இன்று முதல் உங்களிடமிருந்து முற்றிலும் விலகிக் கொள்கிறேன்.

ஆனால் தயவு செய்து என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.. நான் நிஜமாகவே 'உண்மைத் தமிழன்'தான்.

நன்றி வணக்கம்.

சிந்தாநதியாரின் போட்டியில் எனது வாதம்

எனது இனிய வலைத் தமிழறிஞர்களே..


சிந்தாநதியார் தனது http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post.html-ல் கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்திருந்தார். நானும் அவசர அவசரமாக எழுதி அனுப்பிட்டு, பரிசு இன்னைக்கு கப்பல்ல வருது.. நாளைக்கு பிளேன்ல வரப் போகுதுன்னு ஊர் முழுக்கச் சொல்லி அலம்பல் பண்ணிட்டுத் திரியறேன்.. திடீர்ன்னு பாருங்க.. ஒரு ரெண்டு வரில ஒண்ணைச் சொல்லி அதுல மண்ண அள்ளிப் போட்டுட்டாரு சிந்தாநதியாரு..
நீங்களே நியாயம் சொல்லுங்க.. என் சார்பா நீங்க எல்லாம் சிந்தாநதியாருக்கு கண்டன அறிக்கை கொடுக்கணும்.. 'சக்தி' உள்ளவங்க ஆட்டோ அனுப்பலாம்.. இந்த அ.மு.க.ல உள்ளவங்கல்லாம் இப்ப எங்க போய்த் தொலைஞ்சாங்கன்னு தெரியல.. கொஞ்சம் ஹெல்ப்புக்கு வரலாம்ல..
ஆனாலும் இந்த உண்மைத்தமிழன் அசரலங்க..

சிந்தாநதியாரின் அடுத்தப் போட்டிலேயும் குதிச்சிட்டான்ல..

"படிக்கிற வயசில் மாணவர்களுக்கு அரசியல் தேவை-தேவையில்லை" இதுதான் அந்தப் போட்டி..

இதோ என் தரப்பு வாதம் :

கல்லூரி மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்பது எனது கருத்து. காரணம் கல்லூரி என்பது கல்வி கற்பிக்கும் இடம். அங்கே உள்ளே நுழையும் மாணவர்களுக்கு அந்தக் கல்விதான் அவர்களுடைய வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும். மாணவர்கள் தங்களது கவனங்களை வேறுவேறு தளங்களில் செலவிட்டால் அவர்களது கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும். இத்திறன் பாதிக்கப்படும்போதுதான் அம்மாணவர்களுக்கு தங்கள் மீதே கோபம் வந்து அதை இந்தச் சமுதாயத்தின் மீது திசை திருப்புகிறார்கள்.

உதாரணமாக பஸ் டே என்ற பெயரில் நூறு மாணவர்கள் பஸ்ஸின் மீது ஏறி நின்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக வலம் வருகிறார்கள். சில இடங்களில் இந்த ஆட்டம் அளவுக்கதிகமாகிவிட பஸ் சேதத்திற்குள்ளான சம்பவங்களும் நடந்தன. இப்போது அந்த சேதத்தை யார் ஈடுகட்டுவது. பேருந்து என்பது பொதுச் சொத்து. அதை வாங்குவதற்குரிய பணத்திலும், கமிஷன் கொடுத்த பணத்திலும், பராமரிப்பு செய்யும் பணத்திலும் அம்மாணவரின் குடும்பமும் தனது பங்கைச் செலுத்தியிருக்கிறது என்பது அம்மாணவருக்குத் தெரியுமா? தெரியாது.. புரியாது.. காரணம் அதற்கேற்ற அடிப்படை கல்வி அவனிடம் இல்லை.

இப்போதைய பொருளாதார நுகர்வின் காரணமாக விலைவாசிகள் உயர்ந்துதான் உள்ளன. கல்லூரிக் கட்டணங்களும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டன. ஒவ்வொரு தாய், தகப்பனும் பைசா, பைசாவாக காசு சேமித்து தங்களது பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். இந்த பிள்ளைகள் கல்லூரியில் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களோடு வெளியில் வந்து வேலைக்குச் சேர்ந்து தாங்கள் கடன்பட்ட ந்த படிப்புக் கடனையாவது அடைத்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு உண்டு. இந்த நம்பிக்கையை பிள்ளைகள் காப்பாற்றியே ஆக வேண்டும்.

அரசியல், சினிமா என்று தங்களது கவனத்தைப் படிக்கும் காலத்திலேயே செலவிட்டால் படிப்பில் ஆர்வம் குறையும். அதனால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது. மதிப்பெண்கள் குறைந்தால் வேலை வாய்ப்பும் குறைவுதான். இப்போதெல்லாம் பட்ட மேற்படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு வைத்திருக்கிறார்கள். அவற்றில் பாஸ் செய்தால்தான் மேற்படிப்பு படிக்க இயலும். போதாக்குறைக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரை மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளில் மாணவர்கள் நுழைய முடியாத தடைகளும் உள்ளன. இந்த நேரத்தில் அந்த அரை மதிப்பெண் அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியதாக உள்ளது பாருங்கள்..

கல்லூரிகளில் படிக்கும்போது அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குச் சென்று வருவது. அரசியல்வாதிகளுடன் கலந்து பேசுவது என்பது மாணவர்களுக்கு போதை தரக்கூடிய விஷயங்கள் அவர்தம் மனதில் வித்தாவதற்கு காரணமாகிவிடும். அரசியல்வாதிகளின் நாளொன்றுக்கு, பொழுதொன்றுக்கு பேசும் பேச்சும், யாரையும் மதிக்காமல் ஏளனமாகப் பேசுகின்ற பேச்சு, அதிகாரிகளை மதிக்காத மமதை, எதையும் அதிகாரத்தால் சாதிக்கும் தற்பெருமை, கடைசியாக யாருக்குமே அடங்காத பண்பு இவையனைத்தும் அரசியல்வாதிகளிடமிருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விஷமாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது.

இதன் தொடர்ச்சியாக இதையே மாணவர்களும் ஹீரோத்தனம் என்ற பார்முலாவின் அடிப்படையில் தொடர்ந்தால் அவர்களுடைய வீட்டிலும், வெளியிலும் அவர்களுடைய நடவடிக்கைகள் மாறும். பெற்றோரை எடுத்தெறிஞ்சு பேசுவது.. பொய் சொல்வது. திருடுவது, அசிங்கமான வார்த்தைகளை சர்வசாதாரணமாக பயன்படுத்தவது முக்கியமாக யாருக்கும் பயப்படாமல் இருப்பது.. இவையெல்லாம் ஒரு மனிதனின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கக் கூடிய விஷயங்கள்..

இந்த மாணவனின் பெற்றோர் எவ்வளவு சையோடு தங்கள் பிள்ளைகளை வளர்த்து கல்லூரிக்கு கொண்டு வந்து விட்டிருப்பார்கள். தங்கள் பிள்ளை நன்கு படித்து நல்ல பெயரெடுக்க வேண்டும் என்றுதான் அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள். கல்லூரிப் படிப்பில் மனதை அலைபாய விடாமல் தடுத்து கல்வி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மாணவர்கள் படித்து முன்னேறினால்தான் அவர்களால் வெகு சீக்கிரம் நல்ல வேலையில் சேர முடியும்.

மாணவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவு இருந்தாலே போதும்.. அரசியல் தேவையில்லை. முதலில் தங்களது குடும்பத்தை நல்லவிதமாக வைத்துக்கொண்டு அதன் பிறகு இப்போது தனக்கு நிறைய நேரம் இருக்கிறது.. தன்னால் பொதுநல வாழ்க்கையில் உண்மையாக, நேர்மையாக நடந்து கொள்ள முடியும் என்று ஒருவன் நினைத்தால் அவன் பொது வாழ்க்கைக்கு வரலாம்.. தவறில்லை.

னால் படிக்கும் பொழுதே வந்தால், அவர்களை இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், தங்களை வாழ்த்தி கோஷம் போடவும், தங்களுக்குப் பதிலாக காவல் துறையிடம் அடி வாங்குவதற்கும், உண்ணாவிரதத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக ஜர்படுத்துவதற்கும்தான் பயன்படுத்தவார்கள்.

காரியம் முடிந்ததும் கருவேப்பிலையாக இந்த மாணவர்களைத் தூக்கியெறியவும் தயங்க மாட்டார்கள். ஒரு வேளை அப்போது இந்த மாணவர்கள் மனம் திருந்தி கல்விதான் முக்கியம் என்று திரும்பி வந்தால்.. ஸாரி.. காலம் திரும்பி வர முடியாதே.. அவர்களுடைய பொன்னான வாழ்க்கையே வீணாகப் போயிருக்குமே..

நம் நாட்டின் இன்றைய அரசியல், சமூக சூழ்நிலைக்கு மாணவர்கள் அரசியல் வருவது, அவர்கள் தங்கள் கழுத்தில் தாங்களே தூக்குக் கயிற்றை மாட்டிக் கொள்வது போலாகும்.

எனவே மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்தில் கல்வியைத் தவிர வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்து கல்வியின் முதலிடம் பெற்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.

நன்றி.. வணக்கம்..

இது எப்படி இருக்கு?


நன்றி : துக்ளக்

இது எப்படி இருக்கு?



















நன்றி : துக்ளக்