வாயை மூடிப் பேசவும் - சினிமா விமர்சனம்

29-04-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற காதல் படத்தைக் கொடுத்த பாலாஜி மோகன் மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது.

வித்தியாசமான கதைக் களம்தான். பனிமலை என்கிற மலைப் பிரதேச ஊரில் ஒரு புதுமையான வியாதி பரவுகிறது. சிலருக்கு பேச்சு நின்று போய் விடுகிறது. அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய்ப் பரவுவதை தடுக்க முடியவில்லை. யாரும், யாருடனும் பேசவே கூடாது.. ஊரைவிட்டு யாரும் வெளியேறக் கூடாது.. என்று தடா உத்தரவு போடுகிறார்கள்.
இந்தச் சூழலில் ஹீரோ துல்கர் சல்மான் சளசளவென்று பெண்களுக்கே சவால் விடும் வகையில் பேசக் கூடியவர். பேசினால்தான் பிரச்சினைகள் தீரும் என்ற கொள்கையுடையவர். ஹீரோயின் நஸ்ரியா நேர் எதிர். பேசவே கூடாது என்ற கொள்கையில் இருப்பவர். சிகிச்சைக்காக நஸ்ரியாவிடம் வரும் துல்கர் அவரை காதலிக்கிறார். ஆனால் நஸ்ரியாவுக்கு வேறொருவருடன் திருமண நிச்சயத்தார்த்தமே ஆகிவிடுகிறது. ஆனாலும் அந்த மாப்பிள்ளையை பிடிக்காத சூழலில்தான் இருக்கிறார் நஸ்ரியா. இந்த நிலைமையில் ஊரில் ஒரு பக்கம் பேசக் கூடாது என்கிற தடை உத்தரவு.. இன்னொரு பக்கம் இந்த காதல் ஜோடிகள்.. எப்படி நோயைத் தீர்த்தார்கள்.. காதலில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை..!
முதல் கண்டனம் படத்தின் இயக்குநருக்கு. தொலைக்காட்சிகள் மேல் அவருக்குக் கோபம் இருக்கலாம். எழுத்துப் பிழையுடன் ஸ்குராலிங் நியூஸ் ஓடுவதைக் கண்டு அவரது தமிழுணர்வு அவருக்குள் பொங்கி கோபம் எழுந்திருக்கலாம்.. போட்டிகளுக்கிடையே ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு செய்தியை அணுகும் கோணங்கள் குறித்த கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் அவர் ஏதாவது ஒரு காட்சியிலோ அல்லது திரைக்கதையிலோ தொட்டுக் காட்டியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு தொலைக்காட்சிகளை இமிடேட் செய்வதை போல ஒரு டிவி கான்செப்ட்டை வைத்து அதில் அவரே தொலைக்காட்சி செய்திகளை கிண்டல் செய்வதுபோல காட்சிகளை வைத்திருப்பதை ரசிக்க முடியவில்லை. இதேபோல் இந்தப் படத்தைக் கிண்டல் செய்து தொலைக்காட்சிகள் சீரியல் எடுத்தால் இவருக்கு எப்படியிருக்கும்..?  சகிப்புத்தன்மை பலருக்கும் குறைந்து கொண்டே செல்கிறதோ..?  இயக்குநர் ஒரு கட்டத்தில் டிவியில் தோன்றி பேசுகிறார்.. “எல்லாரும் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலே போதும்..” என்று.. இதை அவரே செய்திருக்கலாம்..
துல்கர் சல்மான், மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன். இதுவரையிலும் மலையாளத்தில் 11 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இது முதல் படம். இவருக்குப் பொருத்தமான கேரக்டரோ என்று சொல்ல வைத்திருக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் துல்கரின் குரலும் இவருக்கு மிகப் பெரிய பலம். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே படித்து வளர்ந்தவர் என்பதால் மிகச் சரளமாக தமிழ்ப் பேசுகிறார். நடிப்பும் கூடவே பொறந்தது போல வந்திருக்கிறது.
தனது பிரொடெக்ட்டை விற்பனை செய்வதற்காக அவர் சொல்லும் தந்திர வார்த்தைகள்.. அதை வீசும் டயலாக் டெலிவரிகள்.. முக பாவனைகள்.. நஸ்ரியாவை பார்த்தவுடன் வரும் ஈர்ப்பு.. ஒவ்வொருவரையும் சமாளிக்கும் விதம்.. அலுவலகத்தில் நண்பனுக்கு உதவிகளை அடுக்கடுக்காய் செம ஸ்பீடாய் சொல்வது.. இப்படி பல இடங்களிலும் இவர் ஸ்கிரீனில் இருக்கும் காட்சிகளிலெல்லாம் கண்களை நகட்ட முடியாமல் செய்திருக்கிறார். வெல்டன் துல்கர்.. தமிழிலேயே தொடர்ந்து நடிக்கத் துவங்கினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் உட்காரலாம்..
நஸ்ரியாவை இப்படியொரு அமைதிப் பூங்காவாக எதிர்பார்க்கவில்லை. நஸ்ரியா பேசினால்தான் அழகு.. அதுதான் நடிப்பு. இதில் மெழுகு பொம்மையை போல நிற்கிறார். நடக்கிறார். ஓடுகிறார்.. மெதுவாகப் பேசுகிறார்.. அவனுடைய ஸ்பெஷலாட்டியான எக்ஸ்பிரஷன்ஸ்கள் மிஸ்ஸிங் ஆனதால் நஸ்ரியாவின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான்..
இந்த பேச்சுக் கதையுடனேயே ஒரு நடிகருக்கும், அவரை எதிர்க்கும் குடிகார சங்கத்தினருக்கும் இடையிலான பிரச்சினையையும் அப்படியே கடைசிவரைக்கும் இழுத்திருக்கிறார்கள். இதற்கும் இயக்குநர் சொல்லும் அட்வைஸ்.. எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குங்க.. பேசாமல் இருந்து போராட்டம் நடத்தி நேரத்தை வேஸ்ட் செய்யாதீங்க என்பதுதான்..!
இந்த குடிகாரர்கள் சங்கத்தினர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் கொஞ்சம் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. ரோபா சங்கரின் பாடி லாங்குவேஜ் அசத்தல்.. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதை போல முந்தைய நாள் இரவில் கையெழுத்திட்டுவிட்டு மறுநாள் காலையில் போராட்டத்திற்கு வந்து நிற்பவர்களை பார்த்து துல்கர் திடுக்கிடுவது நல்ல காமெடி.. கடைசியாக இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு சப்பை திரைக்கதையை வைத்து முடித்திருக்கிறார். வேறு யோசிக்க முடியவில்லை போலும்..!
பொறுப்பான மந்திரியாக பாண்டியராஜன். மக்களை நம்ப வைக்க அரசியல்வியாதிகள் எதையும் செய்வார்கள் என்பதை இவரை வைத்தும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அமைச்சருக்கும் பேச்சு பறி போனது என்று வதந்தியை பரப்பிவிட்டுவிட்டு அதனால் இவர் படும் அவஸ்தைகள்.. விவரமான பி.ஏ.விடம் அவமானப்படும் உதாரண மந்திரியை இங்கே பாண்டியராஜன் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
மீண்டும் மதுபாலா.. வெகு நாட்கள் கழித்து. சின்ன கேரக்டர்தான்.. ஆனால் கொடுத்த பில்டப்பிற்கு படத்தில் ஏதுமில்லை. மதுபாலாவின் பையனை வைத்து இயக்குநர் சொல்லியிருக்கும் ஒரு விஷயம் நிச்சயம் குறிப்பிடத்தக்கது. படிப்பு மட்டுமே போதுமானது இல்லை.. பையன்களுக்கு இருக்கும் தனித்திறமையை வளர்த்தெடுத்தாலே போதும். அதுவும் அவனது எதிர்காலத்தை நிச்சயமாகத் தீர்மானிக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.
முற்பாதியில் இடையிடையே வரும் பிரைம் டிவி செய்திகளைத் தவிர மற்றபடி ரசிக்கும்படியாகத்தான் இருந்த்து. பிற்பாதியில் பேசாமல் சைகையிலேயே கொண்டு போயிருக்கும் சில ரீல்களில்தான் கொஞ்சம் அலுப்புத் தட்டியிருக்கிறது.. அதிலும் நஸ்ரியான துல்கர் மீதான காதலை புரிந்து கொண்டும் அதனை ஏற்காமல் அலையவிடுவது கொஞ்சம் கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.. ரீல்களை அதிகப்படுத்த காட்சிகளை நிரப்பி இப்படியா இழுக்க வேண்டும்..?
ஷான் ரால்டனின் இசையில் ‘வாயை மூடிப் பேசு’ பாடல் ஓகே.. மற்றபடி தூர்தர்ஷன் நாடகத்தில் வரும் பின்னணி இசையை இங்கே அசத்தலாக போட்டு அசத்தியிருக்கிறார். பாராட்டுக்கள். பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன். பனிமலை பிரதேசத்திற்குச் சென்று அழகு காட்சிகளைச் சுடவில்லையென்றால் எப்படி..? பாடல் காட்சிகள் அனைத்திலுமே அழகை காண்பித்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் இது ஒன்று மட்டுமே போதாதே..?
சிட்டிகளில் இப்படத்தை ரசித்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் சிட்டி தாண்டி மற்ற ஏரியாக்களில் ரசிக்க முடியவில்லை என்று ஒரு சாரார் வருத்தப்பட்டிருக்கிறார்கள். புரியவில்லை என்று இன்னொரு குரூப் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்காகத்தான் இடையிடையே டிவியில் தோன்றி இயக்குநர் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் கதை புரியலை என்று சொன்னால் எப்படி..?
எத்தனை விமர்சனங்கள் இந்தப் படம் பற்றி எழுந்தாலும், வித்தியாசமான கதைக்களனை தேர்வு செய்ததால் தமிழ்ச் சினிமாவில் ஒரு முக்கியமான படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை..

என்னமோ நடக்குது - சினிமா விமர்சனம்

29-04-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹீரோவுக்கேற்ற கதையாக இல்லாமல் கதைக்கேற்ற நாயகனாக நடிப்பதுதான் இப்போதைய நாட்களில் திரையுலகில் முன்னேற சிறந்த வழி. இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய் வசந்த். ‘சென்னை-28‘ திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவருக்கென்று தனியான ஸ்பெஷலாட்டி எதுவும் இல்லாத்தால் தனித்து அடுத்தடுத்து படங்கள் செய்ய முடியவில்லை.

பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால் தாங்களே சொந்தமாகத் தயாரித்தால் என்ன என்ற அக்கறையோடு விஜய் வசந்தின் தம்பி தயாரிக்க அண்ணன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வித்தியாசமான கதை. நேர்த்தியான திரைக்கதை.. சிறப்பான இயக்கம்.. தப்பே சொல்ல முடியாத நடிப்பு.. ஒரு வெற்றிப் படத்திற்கு இது போதுமே..!படத்திற்குள் செல்லும் முன்பு ஒரு பிளாஷ்பேக்..

ஏ.ஆர்.அந்துலே மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலம் அது. மும்பையில் இருக்கும் இந்தியன் வங்கியின் தலைமை வங்கிக் கிளைக்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவின்பேரில் கரன்சி நோட்டுகள் வந்து கொண்டிருந்தன. அவைகள் அடுத்தடுத்த நாட்களில் கட்டுக்களாக பிரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகளுக்கு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டு வந்தன.

தலைமை வங்கிக் கிளைக்கு  ஒரு புதிய அக்கவுண்ட்ஸ் சீப் மேனேஜர் பணி மாற்றலாகி வந்தார். வந்து சேர்ந்த ஒரு மாத்த்திலேயே ஒரு புதிய ஆலோசனையை வங்கியின் மேலிடத்தில் வைத்தார். அதாவது “வாரத்தில் நினைத்த நாட்களில் வந்து கொண்டிருந்த புதிய கரன்சி நோட்டுக்களை சனிக்கிழமைகளில் கொண்டு வரச் செய்தால் நல்லது. நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு ஆட்களை வைத்து வார நாட்களில் அவற்றைப் பிரித்து எடுத்து வைப்பது கடினமாக உள்ளது. சனிக்கிழமைகளில் பணம் வந்தால் சனி மதியத்தில் ஓவர் டைமாக ஆட்களை வைத்து பிரித்து வைத்துவிட்டால் திங்கட்கிழமையன்று கிளைகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை மட்டுமே பார்க்கலாம்”  என்று ஓதிவிட்டார்.

வங்கியின் மேலிடத்தில் என்ன செய்தார்களோ.. என்ன பேசினார்களோ தெரியவில்லை. திட்டம் ஓகேவானது. அதன்படியே ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் அனுப்பப்பட்டு  அங்கிருந்து பணம் அனுப்பும் இடத்திற்கும் கடிதம் பறந்து ஒரு வழியாக வாராவாரம் சனிக்கிழமை மதியத்திற்குள் பணப்பெட்டிகள் மும்பைக்கு வந்து சேர்ந்தன.

இங்கேதான் நம்ம புதிய அக்கவுண்ட்ஸ் சீப் மேனேஜர் விளையாடிவிட்டார். வந்து சேர்ந்த பணத்தை தனது பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்தப் பணத்தில் கொஞ்சத்தை எடுத்து மும்பையில் இருக்கும் தனது ஏஜண்ட்டுகள் மூலமாக வட்டிக்குவிட்டார். ஒரு மணி நேர வட்டி, நாள் வட்டி என்ற ரேஞ்ச்சில் திங்கள்கிழமை காலைக்குள் பணம் திரும்ப வந்தாக வேண்டும் என்பது இவரது விளையாட்டின் விதி.

அதோடு வந்து சேர்ந்த மொத்தப் பணத்தையும் வங்கிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதில்லை. கொஞ்சத்தை வங்கிக் கணக்கில் வைத்துவிட்டு மிச்சத்தை இது போல இறைத்திருக்கிறார். வட்டிப் பணத்தை அவர் சாப்பிட்டு திரும்பவும் பணத்தை பத்திரமாக திருப்பி வாங்கி கொஞ்சம், கொஞ்சமாக கிளைகளுக்கு பணத்தைச் சப்ளை செய்திருக்கிறார். அப்போது கம்ப்யூட்டர்கள் இல்லாத நேரம். மொத்தப் பணத்தையும் வரவு வைத்தாகிவிட்டது. ஆனால் எங்கே என்பது நம்ம ஹீரோவுக்கு மட்டுமே தெரியும்.

இப்படியே பல லட்சங்களை வாரி இறைத்து, சில லட்சங்களை மாதக்கணக்கில் கொடுத்து வாங்கி திரும்பவும் வங்கியில் சேர்த்து ரிஜிஸ்தரை திருத்தி இல்லாத கோல்மாலெல்லாம் செய்திருக்கிறார். இவரது அன்பளிப்பில் சொக்கிப் போன மேலதிகாரிகள் எதுவும் சொல்லாமல் சைலண்ட்டாக கொடுப்பதை வாங்கிக் கொண்டு ரிட்டையர்டுமாகி போய்க் கொண்டேயிருக்க.. 2 வருடங்கள் இந்த விளையாட்டு தொடர்ந்திருக்கிறது.

பல நாள் திருடனும் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக மும்பையில் கொடுக்கப்பட்ட பணம், பூனே நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கியது.. பணம் அத்தனையும் காற்றில் பறந்தது.. அத்தனையும் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்கள்.. இன்னமும் பிரிக்கப்படாதது.. காவல்துறையினர் வழக்கை பதிவு செய்து ரூபாய் நோட்டுக்கள் வந்தவிதத்தை தேடியபோது அது மும்பை இந்தியன் வங்கிக்கு சென்றடைந்தது..

விசாரணையின்போது திடுக்கிடும் திருப்பங்கள் தினம்தோறும் நடந்தன. சீப் மேனேஜரின் தில்லுமுல்லுகள் வெளியாக, வெளியாக இந்தியாவே அதிர்ச்சியடைந்தது.. இப்படியெல்லாம் திருட முடியுமா என்கிற  ஆச்சரியத்தில் இந்தியப் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இதனை வெளியிட்டு தங்களது பிரமிப்பை வெளியிட்டன.

அப்போது திண்டுக்கல்லில் நடந்த மிக பிரபலமான வங்கி ஊழியர் கொலை வழக்கில் அவரது மனைவி சசிகலா, காதலருடன் கைது.. கொலை செய்தது எப்படி..? என்கிற செய்தியைவிடவும் இந்தச் செய்திதான் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் பெரிதாக வந்திருந்தது. இன்றைக்கும் மறக்க முடியாத நிகழ்வு இது.. இது போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். நிச்சயம் பாராட்டுக்குரிய கதை..

போஸ்டர் ஒட்டிக் கொண்டும், தனது அம்மாவை அடித்துக் கொண்டும், மிதித்துக் கொண்டும், தாயை மதிக்காத தனயனாக இஷ்டம்போல் வாழ்ந்து வருகிறார் விஜய் வசந்த்.  வழக்கமான சினிமாவைப் போல இவருக்குள்ளும் ஒரு காதல் பூக்கிறது. நர்ஸான மஹிமாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முதலில் எரிந்து விழும் ஹீரோயின், தனது அப்பாவை ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த கணத்தில் இருந்து ஹீரோவை காதலிக்கத் துவங்குகிறார்.

காதலியின் படிப்புச் செலவுக்காக அவரது அப்பா கந்துவட்டி நமோ நாராயணனிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். ஏஜென்ட் பணத்தை வாங்கிவிட்டு எஸ்கேப்பாகிவிட நமோ நாராயணன் “ஒண்ணு பணத்தைக் கொடு. இல்லைன்னா பொண்ணை கொடு..” என்று மிரட்டுகிறான். காதலியைக் காப்பாற்ற உடனடியாக பணத் தேவைக்காக தம்பி ராமையாவிடம் சரண்டராகிறார் ஹீரோ.

தம்பி ராமையா சொல்லும் இந்த பணப் பரிவர்த்தனை வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கிறார் ஹீரோ. கடைசி நாளில் 10 கோடியை எடுத்துக் கொண்டு செல்லும்போது அது களவாடப்படுகிறது. ஹீரோதான் அதனை சுட்டுவிட்டார் என்று தம்பி ராமையாவும், அவரது பாஸ் ரஹ்மானும் நினைத்து ஹீரோவைத் துவைத்தெடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹீரோயினை நமோ நாராயணன் துரத்துகிறார். ஹீரோ எப்படி தனது காதலியை மீட்டெடுத்து ரஹ்மான் கோஷ்டியிடமிருந்தும் தப்பிக்கிறார் என்பதுதான் கதை..

விஜய் வசந்துக்கு பொருத்தமான கேரக்டர்தான்.. வீட்டுக்கு அடங்காத புள்ளை.. உலகமறியாத இளைஞர். காதலிக்க ஆசையுடன் ஆள் தேடும் காதலர்.. இதெல்லாம சரிதான்.. ஆனால் பெத்த தாயையே அடிப்பது போலவும், உதைப்பது போலவும்தான் கேரக்டர் ஸ்கெட்ச் அமைய வேண்டுமா..? இதனைத் திருத்தியிருக்கலாம்..

படத்தின் திரைக்கதை ஓட்டத்தில் விஜய் வசந்தின் நடிப்பும் மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டேயிருப்பதால் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் ஆள் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்.. படத்துக்குப் படம் தோற்றத்தையும் மாற்றி, கேரக்டர்களையும் மாற்றினால்தான் ஒரு கலைஞன் மோல்டு ஆக முடியும்.. விஜய் வசந்த் புரிந்து கொண்டால் சரி..

‘சாட்டை’ படத்தில் பார்த்த சின்னப் பொண்ணு மஹிமாதான் இதில் ஹீரோயின். அப்பா அழகம்பெருமாளுடன் நட்புடன் பேசும் காட்சிகளில் ஒரு மகள் போல தோன்றுகிறார். இது போன்ற அப்பாக்களைத்தான் மகள்களுக்கு நிறையப் பிடிக்கும்.. இயக்குநருக்கு இதற்காகவே தனியாக ஒரு பாராட்டு..! விஜய் வசந்துடன் சண்டை போடுவது.. மருத்துவமனையில் கடுகடுவென்று பேசுவது.. அதே மருத்துவமனையில் தான் ஒளிந்து கொண்டு நமோ நாராயணனிடம் இருந்து தப்பிக்க நினைப்பது என்ற காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அடுத்தது சரண்யாவுக்குத்தான்.. அம்பானியோட அம்மாவா இருந்தாலும் சரி.. அமாவாசையோட அம்மாவா இருந்தாலும் சரி.. சரண்யாவின் வேஷம் கச்சிதமாகத்தான் இருக்கும்.. இதிலும் அப்படியே..! மஹிமாவின் புகைப்படத்தை வைத்து மகன் விஜய் கனவு காணத் துவங்கும் காட்சியில் அதைப் பார்த்து பெருமைப்படும் சரண்யாவின் எக்ஸ்பிரஷன்ஸ் சிம்ப்ளி சூப்பர்ப்..!

இசையமைப்பில் பிரேம்ஜி இதில் நல்லபடியாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். 2 பாடல்கள் கேட்கும்படி இருந்த்து. மற்றபடி பின்னணி இசையில்தான் கொஞ்சம் கவனமெடுத்து உழைத்திருக்கிறார் போலும்.. பிற்பாதியில் நடைபெறும் ரஹ்மான்-பிரபு மோதல் காட்சிகள்.. கிளைமாக்ஸ் காட்சிகளில் கவனம் மாறாமல் களத்தைக் கவனிக்க வைத்திருக்கிறது பின்னணி இசை. வெல்டன் பிரேம்ஜி..!

இதில் இடைவேளைக்கு பின்பு வரும் ரஹ்மான்-பிரபு கிளைக் கதை.. இதைத் தொடர்ந்து பிரபுவின் பழி வாங்குதல்.. இதற்கு துணை போகும் செளந்தர்ராஜன் குரூப். அவர்களைத் துரத்தும் விஜய் வசந்த்.. மாருதி வேனில் பணத்தை வைத்துக் கொண்டு சுற்றும் அடியாள் குரூப்.. அழுத்தமான முக பாவனையிலேயே வில்லித்தனத்தைக் காட்டியிருக்கும் சுகன்யா… இந்த அண்டர்வேல்டு பிஸினஸின் இன்னொரு முகத்தையும் மிக சுவாரஸ்யமாகக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜபாண்டி.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு நபர் படத்தின் வசனகர்த்தா ராதாகிருஷ்ணன். சன் டிவியில் பல வருடங்களாக காமெடி நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதியே குவித்திருக்கும் ராதாவுக்கு இதுவும் ஒரு வெற்றிப் படம்தான்.. பாணா காத்தாடியும் இவரது கை வண்ணம்தான்.. ரஹ்மான் கட்சிக் கூட்டத்தில் பேசுகின்ற பேச்சு.. தலைவரின் சமாதானம்.. அண்ணன் கவிதா பாரதியின் முறைப்பு.. இந்தக் காட்சியில் இருக்கும் வசனங்களே ராதாவுக்கு போதும்.. கொஞ்சம் காமெடியும் கலந்து கொடுக்க வேண்டுமே என்றெண்ணி நமோ நாராயணனிடத்தில் நிறைய சரக்குகளை கலந்து கொடுத்திருக்கிறார். கலகலக்க வைத்திருக்கிறார் நமோ நாராயணன் ராதாவின் புண்ணியத்தில்.

லாஜிக் மீறல்களை பற்றிச் சொல்லத் தேவையில்லாத அளவுக்கு படத்தின் ஈர்ப்பு நம்மை இழுப்பதால் என்னவோ நடக்குது படத்தில் எதுவோ நடக்குது.. அவசியம் பார்க்க வேண்டிய படம் என்பதற்கு இந்த டைட்டிலே ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறது.. அவசியம் பாருங்கள்..

2014 நாடாளுமன்றத் தேர்தல் - யாருக்கு வாக்களிக்க வேண்டும்..?

23-04-2014

என் இனிய வாக்காளப் பெரும் ‘குடி’மக்களே..!

என் பேச்சை எவன் கேக்குறான்..? நானும் இந்த இணையவுலகம் வந்து 7 வருஷமாச்சு. கரடியாய் கத்துறேன்.. ஒரு பய கேக்கலை.. திரும்பத் திரும்ப ஆத்தா.. இல்லாட்டி தாத்தா.. இதோ இப்போ இன்னொரு தேர்தலும் வந்தாச்சு.. இடைல ஒரு நாள்தான் இருக்கு. இப்பவாச்சும் யோசிங்கப்பா..!

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை நம்மை கொள்ளையடிக்கப் போகும் கூட்டம் மாறினாலும், கொள்ளைகள் மட்டும் மாறியதில்லை.  இதோ அடுத்து நம்மளைச் சுரண்டியெடுக்க நம்மகிட்டேயே பெர்மிஷன் கேட்டு வந்திருக்காங்க. இப்படி கூட்டணி சேர்ந்திருக்கிறவங்க எல்லாரும் என்ன கொள்கைப்படியா கூட்டணி சேர்ந்திருக்காங்க..? காலைல ஒரு கட்சியோட கூட்டணி பேச்சு.. மதியம் வேற கட்சியோட.. ராத்திரி இன்னொரு கட்சியோட.. இப்படி, எவன் அதிகம் சீட்டு தருவான்.. எவன் அதிகமா காசு தருவான்னு பார்த்து, பார்த்து கூட்டணி வைக்குறதுக்கு பேரு மக்கள் தொண்டா..? 

ஒரு பக்கம் சென்ற 5 வருடங்களில் இந்தியா என்ன உலகமே கண்டிராத அளவுக்கு ஊழல் அடித்த பெருமையுடன் இருக்கும் திமுக. இன்னொரு பக்கம் தனி நபர் ஊழலில் தனி சகாப்தமே படைத்துவிட்ட அதிமுக.. இவங்களுக்கு நடுவுல அயோத்தில ராமர் கோயிலை கட்டியே தீருவோம்.. எவன் வந்தாலும் போட்டுத் தள்ளாம வுடமாட்டோம்ன்னு நிக்குற பா.ஜ.க.. அனைத்து சாதிக்காரர்களும் அவரவர் சாதி சனங்களை கூட்டி வைத்து சங்கம் ஆரம்பிங்க.. அதோட கட்சியும் ஆரம்பிங்க.. அப்புறம் எல்லா சாதியும் சேர்ந்து மெகா கட்சிகளின் கூட்டணி வைத்து திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கொள்கையோடு பா.ம.க.. கொள்கையாவது மண்ணாவது.. எவன் என் மச்சானுக்கு சீட்டு கொடுக்குறானோ.. என் மனைவி பேச்சை எவன் கேக்குறானோ அவன்கூடத்தான் கூட்டணின்னு கேப்டன் கட்சி.. இவங்களை நம்பிக்கிட்டு ஒட்டியும், ஒட்டாமலும் டிராமா போடும் சின்னச் சின்ன கட்சிகள்.. இவர்களெல்லாம் சேர்ந்துதான் நம்ம நாட்டைக் காப்பாத்தப் போறாங்களாக்கும்..!

ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு 20 வருஷமா கோர்ட்ல இழுத்துக்கிட்டிருக்கு. இதைப் பத்தி என்னன்னு கேக்க நாட்டுல நாதியில்லை.. முகவரியே தெரியாத ஆளுங்க 200 கோடி ரூபாயை ஒரு டிவி சேனலுக்குத் தூக்கிக் கொடுத்திட்டு போயிட்டாங்க. அதைப் பத்தியும் கேக்க முடியலை.. கலவரம்ன்னு சொல்லி உயிரோட அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் எரிச்சிருக்காங்க. அவங்க யாருன்னே கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்றாங்க.. இவங்கெல்லாம் திரும்பவும் நம்மகிட்டயே வந்து வெட்கமில்லாமல் ஓட்டுக் கேட்க வந்துட்டாங்க..

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசியல்வியாதிகள்.. இத்தனை ஊழல் செஞ்சிருக்காங்களே.. இவ்வளவு கோடிகளை சுருட்டியிருக்காங்களே.. இவங்களை வீட்டுக்கு அனுப்புவோம்னு நம்ம முட்டாள் மக்களுக்கும் அறிவில்லை.. புருஷன் சொல்றான்.. புள்ளை சொல்றான்.. அப்பன் சொல்றான்.. ஆத்தா சொல்லுதுன்னு அறிவே இல்லாம எவனுக்கோ ஓட்டைக் குத்திட்டு வந்திர்றது.. அப்புறமா நாடு நல்லாயில்லே.. கெட்டுப் போயிருச்சுன்னு புலம்ப வேண்டியது.. 

“அதான் நீ எப்படியும் நாலு காசு சம்பாதிக்கத்தான போற..? போன தேர்தலப்போ 500 கொடுத்தீங்க. இப்போ விலைவாசி ஏறிருச்சுல்ல.. ஆயிரம் ரூபா கொடு.. ஓட்டுப் போடுறேன்”னு சொல்ற ஜனங்க இருக்கும்போது இந்த அரசியல்வியாதிகளும் இப்படித்தானே இருப்பார்கள்.?

இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிதான் ஜெயிக்கும் என்று நினைக்கிறேன். மோடி பிரதமராக வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் இங்கே தமிழகத்தில் இருந்து ஆத்தா முதல் ஆளாய் மோடிக்கு கை கொடுக்கப் போவதும் உறுதி. பதிலுக்கு கர்நாடகாவில் நடக்கும் தனது சொத்துக் குவிப்பு வழக்கை பணால் ஆக்க உதவி கேட்பார். 

இதில் தாத்தா இடையில் புகுந்து கெடுக்க முயல்வார். அவருக்கு சற்று குறைவான எம்.பி.க்களே கிடைக்கவிருப்பதால் மோடியுடன் ஐக்கியமாகும் வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் இவர் மோடியை நாடத்தான் செய்வார். 

அவருடைய கண்ணின் மணி, கனிமொழியின் வாழ்க்கை சிபிஐ கோர்ட்டில் இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது தயவு தாத்தாவுக்குத் தேவை. ஆகவே மதியாதார் வாசல் என்றாலும் நிச்சயம் மோடியைத் தேடி ஓடப் போகிறார் தாத்தா.

மூன்றாவது அணி நிச்சயம் உருவாகாது. ஜெயலலிதா பிரதமராகவே மாட்டார்.  ஆனால் பிரதமரை உருவாக்கும் கீயாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அது மோடியாக இருந்தால் நடக்காது. மோடி அத்வானியின் இன்னொரு ஆன்மா. இன்னொரு முகம்.  ஆத்தாவின் பாச்சா அவரிடம் பலிக்க வாய்ப்பில்லை. கிடைக்கிற அமைச்சர்கள் பதவியில் ஆட்களை உட்கார வைத்து நிலைமையைத் தனக்குச் சாதகமாக்க நினைப்பார் ஆத்தா.. தாத்தா இதனை முறியடிக்க நினைப்பார்.. 

ஒருவேளை(ஒருவேளை என்றுதான் சொல்கிறேன்) காங்கிரஸும், பி.ஜே.பியும் சம அளவுக்கு பலமாக வந்தால் தாத்தா நிச்சயம் காங்கிரஸுக்குத்தான் சப்போர்ட் செய்வார்.  பாரதீய ஜனதா என்றால் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இனிமேல் தமிழகத்தில் உச்சரிக்க முடியாதே என்கிற பயம்தான்..! இப்படி ஒவ்வொரு கொள்ளையர்களும் ஆளுக்கு ஒரு கொள்ளை கொள்கையோடு, களத்தில் இருப்பதால் நாம் என்னதான் செய்வது..?

சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே நான் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன்..

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கம்யூனிஸ்டு இயக்கங்களின் தோழர்கள் மட்டுமே மக்களுடன் கொஞ்சம் நெருக்கமாக உள்ளார்கள். ஆகவே அந்த கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் அனைவரும் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். ஆலந்தூர் தொகுதியைத் தவிர..! அந்தத் தொகுதில் நமது மனதிற்கினிய நேர்மையான பத்திரிகையாளர் என்ற அடையாளத்திற்குச் சொந்தக்காரரான அண்ணன் ஞாநி வெற்றி பெற்றாக வேண்டும். அவருடைய வெற்றி நிச்சயமாக ஜனநாயகத்தின் வெற்றியாகத்தான் இருக்கும்..! 

கம்யூனிஸ்டுகள் நிற்கும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி நின்றிருந்தார்கள் அவருக்கு நிச்சயம் வாக்களியுங்கள்.. குறைவான வாக்குகளாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அவர்களுக்குக் கொடுக்கின்ற வாக்குகள் அனைத்தும் திராவிட இயக்கங்களுக்கு எதிரானதாக நமது உணர்வை மங்கிப் போகாமல் பாதுகாக்கும்.

கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி கட்சிகள் நிற்கும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளெனில் சுயேச்சை வேட்பாளர்களில் யார் உங்களுக்கு நேர்மையாளர் என்று தெரிகிறதோ அவருக்கே வாக்களியுங்கள். 

இந்தத் தேர்தலில் ஒரேயொரு மன வருத்தமான விஷயம்.. அண்ணன் வைகோவுக்கு ஆதரவளிக்க முடியாத சூழல் இருப்பதுதான். இது அவராகவே இழுத்துக் கொண்டதுதான்.. வைகோவின் உயிரான ஈழ விஷயத்தில் காங்கிரஸ் எந்த அளவுக்கு எதிர்ப்பாக உள்ளதோ, அதே அளவுக்கு எதிர்ப்பாளர்கள் உள்ள கட்சி பாரதீய ஜனதா. அதனுடன் கூட்டணி வைத்து இவர் எதனைச் சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அந்தக் கூட்டணியில் இருப்பதாலேயே அண்ணன் வைகோவுக்கு என்னால் ஆதரவளிக்க முடியவில்லை. அண்ணன் மன்னி்ப்பாராக..!

இருப்பது ஒரு ஓட்டு.. வாக்களிக்க இருப்பவர்களோ கோடிக்கணக்கில்.. நீங்கள் செலுத்தப் போகின்ற வாக்குகள்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களது தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யப் போகிறது.. இப்போதாவது முழித்துக் கொண்டு செயல்படுங்கள்.

இத்தனை பள்ளிக்கூடங்கள்.. இத்தனை பாடங்கள்.. இத்தனை படிப்புகள் என்று அத்தனையையும் படித்துவிட்டும், ஊழல்வாதிகளை தங்களது இதய தெய்வம் என்றும் நெஞ்சில் சுமக்கிறோம் என்றும் சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்கும் படித்தவர்களை பார்க்கும்போது நமது சமூகத்தின் முட்டாள்தனம் நன்கு தெரிகிறது.. நம்முடைய அடிப்படை தவறே நமது சுயநலம்தான். அடுத்தவனைவிட நாம நல்லாயிருக்கணும் என்ற எண்ணமும், அரசியலில் நுழைந்தால் மிக எளிதாக பணம் சம்பாதித்து பணக்காரனாகிவிடலாம் என்ற எண்ணமும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக போதிக்கப்பட்டுவிட்டது. அதன் பலனை நமது எதிர்கால சந்ததிகளும் அனுபவிக்கத்தான் போகிறார்கள். 

இதை மனதில் கொண்டு யோசியுங்கள் வாக்காளர்களே.. கடைசியாக ஒரு விஷயம்.. 

இப்போ இந்தியாவுலேயே எல்லாரையும்விட கில்லாடி, புத்திசாலி யாருன்னு பார்த்தா.. நம்ம மண்ணுமோகனசிங்குதான்.. இன்னும் பாதி இடங்கள்ல வாக்குப்பதிவே நடக்கலை.. அதுக்குள்ள எப்படியும் நம்ம போஸ்ட் காலியாகப் போவுதுன்னு புரிஞ்சிக்கிட்டு பொண்டாட்டியை கூட்டிட்டு டெல்லியையே ரவுண்டு அடிச்சு.. அவங்களுக்குப் பிடிச்சா மாதிரி.. தனி வீடு பார்த்து பால் காய்ச்ச நாளெல்லாம் குறிச்சு வைச்சிட்டு சூட்கேஸை தூக்க ரெடியா இருக்காரு பார்த்தீங்களா..? இவரோட தொலைநோக்குப் பார்வை இந்தியால எவனுக்கும் இல்லை..!

வாழ்க மண்ணுமோகனசிங்கு..!

டமால் டுமீல் - சினிமா விமர்சனம்

21-04-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இத்திரைப்படம் 1999-ல் தாய்லாந்து நாட்டில் அந்நாட்டு மொழியான ‘தாய்’ மொழியில் வெளியான A Funny Story About 6 and 9 என்ற படத்தின் தமிழ் ரீமேக்..!

ஒருவன் மிக அவசியமான பணத் தேவையில் சிக்கித் தவிக்கும்போது இன்னொருவருக்குப் போய்ச் சேர வேண்டிய பணம் அவனிடத்தில் வந்து சேர்ந்தால் அவன் என்ன செய்வான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..!
சராசரி மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பானோ அதைத்தான் ஹீரோவும் செய்கிறான். ஆனால் அதனை செய்ய ஆரம்பித்து அடுக்கடுக்காய் வரும் சம்பவங்களும், அதன் பின் விளைவுகளும் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடுகின்றன. பின் ஏன் இந்த ஆசை என்கிறீர்களா..? அதனால்தான் ஆசை பயமறியாத்து.. வெட்கமும் அறியாத்து என்கிறார்கள்.
ஹீரோ வைபவ் ஒரு ஐடி கம்பெனியில் பிராஜெக்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறார். அவருக்கு ஒரு காதலியும் உண்டு. அவருடைய தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் நிச்சயத்தார்த்தம்.. 50 பவுன் நகையும், ஒரு பைக்கும் வரதட்சணையாக்க் கேட்கிறார்கள். ஒரே தங்கச்சி. நான் செய்ய மாட்டேனாம்மா என்று தன் அம்மாவிடம் போனிலேயே உறுதிமொழி தருகிறார் ஹீரோ.
அன்றைக்கு அவருக்கு மோசமான நாள். அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது. இவரையும் தூக்கிவிடுகிறார்கள். சோகத்துடன் வீடு திரும்பிய அவருக்கு மறுநாள் ஒரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. போலி மருந்து கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளியான சாயாஜி ஷிண்டே ஹீரோ குடியிருக்கும் குடியிருப்பில் மேல் மாடியில் வசித்து வருகிறார். அவருக்கு போக வேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை இன்னொரு ரவுடியான  கோட்டா சீனிவாசராவின் ஆட்கள் முகவரி மாறியிருப்பதன் குழப்பத்தின் காரணமாய் ஹீரோவின் வீட்டு வாசலில் வைத்துவிடுகிறார்கள்.
பணம் ஆண்டவனா பார்த்து தனக்குக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்து அதனை தனதாக்கிக் கொள்ள நினைக்கிறார் ஹீரோ. பணம் வராத நிலையில் சாயாஜி, கோட்டாவை வறுக்கியெடுக்க.. அவர் பணம் கொண்டு வந்து வைத்தவர்களை திரும்பவும் அனுப்பி வைக்கிறார். அவர்கள் வந்து ஹீரோவிடம் பணம் கேட்கத் துவங்கியவுடன் ஆண்டவனின் ஆட்டமும் துவங்கிவிடுகிறது.. இறுதிவரையில் செம ஆட்டம்..!
மிகக் குறைந்த நேரத்தில் மிகக் குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமாக சென்டிமெண்ட்ஸ் சேர்த்து இப்படியும் நடக்கலாமோ என்கிற ஐயத்தை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள் அவருக்கு..!
ஒரே நாளில் நடக்கும் கதை என்பதாலும் அடுத்தடுத்து நடப்பதெல்லாம் விறுவிறுப்பாகச் செல்கிறது. சுவையான திரைக்கதை. அனைத்து நிகழ்வுகளுக்கும் கச்சிதமாக முடிச்சுப் போட்டிருக்கிறார் இயக்குநர். சில, பல லாஜிக் மீறல்கள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதைவிட பெரிய அளவு ஓட்டைகளை வைத்துக் கொண்டெல்லாம் சில குப்பை படங்கள் வெற்றியாகியிருக்கின்றன. ஆகவே இந்தப் படத்தின் தவறுகளை நாம் பொறுத்தருள்வோம்..
வைபவ்.. இப்போதுதான் முதல் முறையாக தனித்து ஹீரோவாகியிருக்கிறார். இன்னமும் நடிக்க ஸ்கோப் கிடைக்கும் படங்களில் நடித்து வெற்றி பெறட்டும்.. பரபரப்பான திரைக்கதையில் ஆக்சனான காட்சிகளில் நடிப்பு கொஞ்சமே காட்டினாலும் அதனை திரைக்கதையினால் ரசிக்க முடிகிறது. இதேதான் ஹீரோயின் ரம்யா நம்பீசனுக்கும்..! அழகாகத்தான் தெரிகிறார்.. அழகாகத்தான் நடிக்கிறார். அழகாகவே பாடியிருக்கிறார். அப்படியிருந்தும் ஏன் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
கோட்டா சீனிவாசராவும், சாயாஜி ஷிண்டேவும் ஒருவரையொருவர் மாற்றி சந்தேகப்படும் காட்சிகளில்தான் படத்தில் இயல்பான நகைச்சுவை காட்சிகள். இதற்காக இவர்களின் அருகிலேயே இருக்கும் முட்டாள் அல்லக்கைகள் ஆளுக்கொரு கதையை அள்ளிவிட.. இதை நம்பி இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் போட்டுத் தள்ள ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வருவது ஏக கலகலப்பு. மணி என்கிற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு விதம்விதமான டயலாக் டெலிவரிகளில் நடிப்பைக் காட்டும் கோட்டா சீனிவாசராவை மிஞ்ச ஆளில்லை.. மனிதர் எத்தனை அழுத்தமாக நடிக்கிறார்..? ஹாட்ஸ் ஆஃப் ஸார்..!
படத்தில் டென்ஷனை கூட்டிவிடும் காட்சிகளில் இயக்குநரின் வேலைத்திறன் அமர்க்களமாக இருக்கிறது.. அடியாட்கள் உள்ளே பிணமாக இருக்க.. அவர்களைத் தேடி இரண்டு பேர்.. இப்போது இவர்களுடன் ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.. இவர்களுக்காக 5 அலமாரிகளை வாங்க வேண்டிய நிலைமை என்று அடுத்தடுத்து வரும் காட்சிகளில் ஐயோடா என்பதற்குப் பதிலாக சிரிக்கத்தான் முடிந்தது..! இதனாலேயே இவர் நல்லவர் என்று பெயரெடுக்கும் அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்தாலும் இதனால் நம் மனதில் எந்தப் பாரமும் ஏறவில்லை. மாறாக இரண்டு மணி நேர பொழுது போக்குப் படமாக அமைந்தது என்ற பெயர் மட்டுமே..!
எஸ்.எஸ்.தமனின் இசையமைப்பில் உஷா உதூப், ஆண்ட்ரியா, நாயகி ரம்யா நம்பீசன் ஆகிய மூவருமே பாடியிருக்கிறார்கள். ஆனால் படத்தில் எதுவும் தேறவில்லை. பின்னணி இசையில் மட்டுமே இசை என்பது இருந்த நினைவு..! இது போன்ற படங்களில் இதெல்லாம் தேவையே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
தவறுகளைச் செய்யத் துவங்கினால் அது சங்கிலித் தொடர் போல நம்மை நரகத்திற்குள் இழுத்துவிடும் என்பதை சீரியஸாக சொல்ல ஆரம்பித்து ஆனால் முழுமையாகச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் படத்தின் குறை. மற்றபடி இரண்டு மணி நேர பொழுது போக்கிற்கு படம் நிச்சயமாக கியாரண்டியைத் தருகிறது..!

தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

19-04-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிட்டத்தட்ட 3 ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு வைகைப் புயல் நடித்திருக்கும் படம் என்பதால் முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஆவலை தமிழகம் முழுவதிலும் இருக்கும் சினிமா ரசிகர்களிடத்தில் இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு மட்டுமே 95 சதவிகித சென்டர்களில் ஹவுஸ்புல் என்று பாக்ஸ் ஆபீஸ் அறிக்கை தயாரிக்கும் பிரபலங்கள் சொல்கிறார்கள்.
தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, படம் பார்க்கும் சராசரி ரசிகனின் சார்பில் திரையில் பேசும் சக அண்ணனாக, தம்பியாக வடிவேலு காட்சியளிப்பதுதான் அவரது மிகப் பெரிய பலம். இந்தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார். ஆனால் நகைச்சுவைதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது.
அரசனுக்குரிய கடமைகளைத் துறந்த தனது மனைவிகள், குழந்தைகள் நலனையே முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு அரசனின் அமைச்சரவையில் திட்டம் போட்டு அமைச்சராக சேரும் ஒரு புரட்சியாளன், தனது மதியூக அறிவினால் அந்த அரசனை எப்படி திருத்தி நல்வழிப்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் கதை.
விகடபுரம் அரசரின் அமைச்சரவையில் நவரத்தின மந்திரிகளாக வீற்றிருக்கும் 9 அமைச்சர்களும் பக்கத்து ஊர் குறுநில மன்னரான ராதாரவியின் பேச்சைக் கேட்டு சீன நாட்டு வர்த்தகர்களை தங்களது நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்க நினைக்கிறார்கள். இதனை எதிர்க்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கொல்லப்படுகிறார். அவர் இடத்திற்குத்தான் தெனாலிராமன் தேர்வாகிறார்.
இவர் அரசவைக்கு வந்த பின்பு இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட மந்திரிகள் குழு, சதித் திட்டம் போட்டு தெனாலிராமனை நாடு கடத்துகிறார்கள். ஆனால் ஏற்கெனவே தெனாலிராமன் மேல் மையல் கொண்டு காதல் பித்தம் தலைக்கேறி புலம்பிக் கொண்டிருக்கும் அரசரின் மகள், தன் தந்தையின் மனதை மாற்றி தெனாலிராமனை மீண்டும் நாட்டிற்கே அழைத்து வரச் செய்கிறாள்.
அதற்குள்ளாக சீன வணிகர்கள் நாட்டுக்குள் வந்துவிட.. நாடு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த தெனாலிராமன் அரசனை திட்டம்போட்டு சாதா மனிதனாக்கி நாட்டுக்குள் அனுப்பி வைக்க.. அங்கே உண்மைகள் தெரிந்து அரசன் என்ன செய்கிறான் என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..!
அரசனாகவும், மதியூக தெனாலிராமனாகவும் வடிவேலுவே இரட்டை வேடங்களில் ஜொலித்திருக்கிறார். இரண்டுக்கும் அதிகப்பட்ச வித்தியாசம் அந்த மீசைதான். அரசனிடம் இருக்கும் படபடப்பு, அவசரம், திமிர்.. இவையெல்லாம் தெனாலிராமனிடம் இல்லை. ஆனால் குசும்பு நிறையவே இருக்கிறது.
சீரியஸாக பேசுகிறாரா அல்லது காமெடியாக பேசுகிறாரா என்பதையே உணர முடியாத அளவுக்கு சில காட்சிகளில் தெனாலிராமனின் நடிப்பு இருப்பதால்தான் நகைச்சுவை காட்சிகளில் நமக்கு சிரிக்க வராமலேயே போய்விட்டது.
கோவில் உண்டியலை திருட வரும் திருடர்களை தந்திரமாக கிணறு தோண்ட வைத்து மாட்டுவது.. பின்பு அவர்களை கழுதையை வைத்து உதைக்க வைப்பது..
அரண்மனை தலைமை வாயிற்காப்பாளன் லஞ்சம் கேட்டான் என்பதற்காக அவனைச் சிக்க வைத்து சவுக்கடி கொடுக்க வைப்பது..
ஒரு அமைச்சர் தெலுங்கர் என்று கண்டுபிடிப்பது..
யானைக்குள் பானையை திணிக்க வேண்டும் என்று சொல்வது..
மன்சூரலிகானிடம் போய்ச் சிக்கிக் கொள்ளும் அரசனிடம் தப்பிப்பது..
தெனாலிராமனை சாகடிக்க மன்னன் போடும் கனவு திட்டத்தை அதே பாணியில் முறியடிப்பது..
கிளைமாக்ஸில் டிவிஸ்ட் செய்து தப்பிப்பது..
என்று பல இடங்களிலும் தெனாலிராமன் கதையை எளிதாகப் புகுத்தியிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையை கொண்டு வராததுதான் குறையே தவிர.. படமாக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது..
தெனாலிராமனாக அமைதியான நடிப்புடன் வரும் வடிவேலு, அரசனாக தனது அனைத்துவித கோபத்தையும், பதற்றத்தையும் முகத்தில் காட்டியபடியே அசுர வேகத்தில் டயலாக்கை ஒப்புவிக்கும் காட்சியெல்லாம் எப்படி இவரால் முடிகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இப்போதும் சிரிப்பு வரவில்லை.
36 மனைவிகள், 52 குழந்தைகள் என்று சொல்லி இவர்களுக்குச் சொல்லும் ஒரு கதை.. மற்றபடி மேலே சொல்லப்பட்ட பல கதைகளிலும் கொஞ்சத்தை குறைத்துக் கொண்டிருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும்..
மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். எப்போதும் தனது மத்தியப் பிரதேசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியபடியே இருக்கும் இவருக்கு லிப்ஸ் டங்க்ஸ் ஆவது ஒண்ணுதான் பிரச்சினை. மொழி தெரியாதவர்களை நடிக்க வைத்தால் வரும் சிரமம் இதுதான். குரல் கொடுத்திருக்கும் தீபா வெங்கட்டிற்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!
தமிழ்ச் சினிமாவின் அனைத்து குணச்சித்திர கேரக்டர்கள், நகைச்சுவை கேரக்டர்களையும் இழுத்துப் பிடித்து இதில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜி.எம்.குமார், ராதாரவி, பாலாசிங், மனோபாலா, ஷண்முகராஜா, கிருஷ்ணமூர்த்தி, நமோ நாராயணன், ஜோ மல்லூரி, சக்திவேல், செல்லத்துரை, சந்தானபாரதி, ராஜேஷ், போஸ் வெங்கட், மன்சூரலிகான், தேவதர்ஷிணி என்று குவிந்திருக்கும் நட்சத்திர பட்டாளங்களை ஒரே ஸ்கிரீனில் பார்க்க வைத்திருப்பதும் இந்தப் படத்தின் சாதனைதான்..!
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் போலவே இதுவும் சிறந்த நகைச்சுவையாக இருக்குமென்று நினைத்துதான் அனைவரும் ஓடியிருக்கிறார்கள். ஆனால் அது போல இல்லையென்றாலும் இந்திரலோகத்தில் நா அழகப்பனைவிட கொஞ்சம் நன்றாகவே இருப்பதால்.. லேசான நிம்மதிப் பெருமூச்சு ரசிகர்களிடத்தில் இருந்து கிளம்பியுள்ளது.
பழம்பெரும் கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸின் மிக எளிமையான தமிழ் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். ஒரு அமைச்சர் தெலுங்கர் என்பதை கண்டுபிடிக்க வடிவேலு போடும் டிராமா காட்சி நிச்சயமாக விஜயகாந்தை குறி வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதேபோல் வடிவேலுவின் இப்போதைய அரசியல் நிலைப்பாடுகளை அவ்வப்போது சில வசனங்கள் மூலமே தெளிவுப்படுத்தியுள்ளார். இதை நோட் செய்து வைத்து அடுத்து ஆட்சிக்கு வரும்போது நம்மை கவனிப்பார்களே என்ற பயமே இல்லாமல் அனைத்து கட்சியினரையும், ஊழல்வாதிகளையும் அடித்து ஆடியிருக்கும் வடிவேலுவின் தைரியம் பாராட்டுக்குரியது.
அந்நிய நாட்டு முதலீடு என்பதே எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை ரத்தினச்சுருக்கமாக உரைப்பது போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சீன தேசத்து உணவுகளை காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டும் கூட்டம், கஞ்சி குடிக்க வருவதில்லை என்பதையும், இருந்த கடையை காலி செய்யச் சொல்லி.. அந்த இடத்தில் சீன கடைகள் வந்து வியாபாரம் செய்யும் தந்திரத்தையும் காட்டியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இப்போதைய இந்தியாவில் கார் கம்பெனிகள், குளிர்பான நிறுவனங்கள், உடைகள், அணிகலன்கள் என்று எல்லாவற்றிலும் வெளியில் இருந்து வருபவையே மக்கள் முன் அதிகம் வைக்கப்படுவதும், உள்ளூரில் தயாராவது கண் பார்வையிலேயே படாமல் இருப்பதும் இந்த அந்நிய ஆதிக்கத்தின் காரணமாகத்தான்.. சரியான சமயத்தில், சரியான விஷயத்தை கையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் அவருக்கு ஒரு சல்யூட்..
இமானின் இசையில் ‘ஆணழகன்’, ‘ரம்ப்பப்பா’, ‘நெஞ்சே நெஞ்சே’ மூன்று பாடல்களுமே கேட்க வைக்கின்றன. குழந்தைகளை மையமாகவே வைத்தே படம் முழுவதும் காட்சிகளை செதுக்கியிருப்பதால் டூயட்டை தவிர மற்றவற்றில் சிறுசுகளின் ஆட்டம்தான் அதிகம்..!
ராம்நாத்ஷெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் இன்னுமொரு சிறப்பு. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இத்தனை பெரிய பட்ஜெட் செட்டுகளை அழகுற எடுத்துக் காண்பித்தால்தான் செய்த செலவுக்காச்சும் புண்ணியம் கிடைக்கும். அதனை ராம்நாத் ஷெட்டி கச்சிதமாகச் செய்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் புறா ஒன்றை பறக்கவிட்டுவிட்டு பின்னால் வடிவேலு நடந்து வரும் காட்சி ஒன்று வருகிறது.. அற்புதம் என்றே சொல்ல வேண்டும். மிக அழகான ஷாட் அது.. வெல்டன் ஸார்..
பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் நகைச்சுவை வராது என்பது வடிவேலுவுக்கு தெரிந்ததுதான். இந்திரலோகத்தில் படத்தின் தோல்விக்கும் அதுதான் காரணம். ஆனால் அதையே இந்தப் படத்திலும் தொடர்ந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. தெனாலிராமனின் அனைத்து நாடகங்களிலும் வசனங்கள்தான் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர.. சிரிப்புதான் வரவில்லை.. சிற்சில இடங்களில் மட்டுமே வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் சிரிப்பை வரவழைக்கிறது என்பதை மட்டுமே ஒப்புக் கொள்ள வேண்டும். அரசரின் தந்தை கனவில் வந்து தெனாலிராமனை சாகச் சொன்னார் என்ற கதை இதற்கு மிக சிறந்த உதாரணம். நிறைய கத்திரி போட்டிருக்கலாம் இந்தக் காட்சியில்.
அரசனாக நடிக்கும் வடிவேலு பல முறை வாயைத் திறக்காமலேயே விடுக்கும் ஒரு ஒலி.. அட அடடா.. அட அடடா.. என்று அடிக்கொரு தரம் சொல்லும் ஸ்டைலும் ரசனைக்குரியது.. அமைச்சர்கள் பலரும் அவ்வப்போது கூடி கூடி பேசும் காட்சிகளும், ராதாரவி சமரசம் செய்யும் காட்சிகளும் மட்டும்தான் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தன.
தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கும் 25 வயதான யுவராஜ் தயாளன் என்ற இந்த இயக்குநரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இத்தனை பெரியவர்களை வைத்து.. இத்தனை பெரிய நடிகரை வைத்து.. இத்தனை பெரிய பட்ஜெட்டில் சாதித்துக் காட்ட வேண்டுமென்பது சாதாரண விஷயமல்ல.. யுவராஜ் நிச்சயமாக அவரளவுக்கு மிகக் கடுமையாக உழைத்துதான் இதனை படைத்திருக்கிறார். அவருக்கு நமது வாழ்த்துகள்..!
இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக இந்த ஒரு படம்தான் இப்போதைக்கு வந்திருக்கிறது. அடுத்த வாரம் அமேஸிங் ஸ்பைடர்மேன் வந்துவிடும். ஆனாலும் இதையும் அவசியம் பார்த்துவிடுங்கள்.
அட்லீஸ்ட் அரசரின் 36 மனைவிகள்.. 52 பிள்ளைகள் கதையாவது.. உங்களது பிள்ளைகள் உங்களிடம் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்குமான ஒரு காரணமாக அமையலாம்..!

பா,ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்காதீர் - கலைஞர்கள், எழுத்தாளர்களின் கோரிக்கை..!

தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்!

April 15, 2014 at 8:55pm

இன்று (15.04.2014) மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: 

(தமிழக வரலாற்றில் 220 கலைஞர்கள்-எழுத்தாளர்கள் ஒன்று கூடி இப்படி ஒரே குரலில் ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் மத்தியில் ஒலித்தது சமீப காலங்களில் இதுவே முதல் முறை)

இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 

2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ்செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். 

இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும், வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம். 

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஆதிக்கச் சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக்கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. மதச்சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும், இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன. 

இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். 

பா.ஜ.கவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத, - சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம். 

“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong  bid for power  in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002  and has never accepted  his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.

"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.

" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.“We urge all responsible individuals and political formations to ponder over the situation andurgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."

(In total 220 writers and artistes have signed below)

1. கி.இராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், புதுவை. 

2. பிரபஞ்சன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர், சென்னை.

3. இந்திரா பார்த்தசாரதி, மூத்த தமிழ் எழுத்தாளர். டெல்லி.

4. முனைவர் தொ.பரமசிவன், எழுத்தாளர்/ வரலாற்றறிஞர், திருநெல்வேலி.

5. கவிக்கோ அப்துல் ரஹ்மான், மூத்த தமிழ்க் கவிஞர், சென்னை.

6. விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன், சென்னை.

7. வெங்கடேஷ் சக்கரவர்த்தி, திரைக் கோட்பாட்டாளர், ஹைதராபாத்.

8. கலாப்ரியா, மூத்த கவிஞர், திருநெல்வேலி.

9. அப்பண்ணசாமி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை.

10. வெளி ரங்கராஜன், எழுத்தாளர் / இதழாசிரியர், சென்னை.

11. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், த.மு.எ.க.ச, பத்தமடை.

12. எஸ்.வி.இராஜதுரை, மூத்த எழுத்தாளர், கரூர்.

13. மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர், சென்னை.

14. எஸ்,ராமகிருஷ்ணன், எழுத்தாளர், சென்னை.

15. வஹீதையா கான்ஸ்டான்டின், எழுத்தாளர், நாகர்கோவில்.

16. அம்பை, எழுத்தாளர், டெல்லி.

17. வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர், திருநெல்வேலி.

18. வ.கீதா, எழுத்தாளர், சென்னை.

19. கோணங்கி, எழுத்தாளர், கோவில்பட்டி, 

20. முனைவர் ஆனந்தி, பேராசிரியர், சென்னை.

21. அ.மார்க்ஸ், எழுத்தாளர், சென்னை.

22. சந்திரா, எழுத்தாளர், சென்னை, 

23. கவின்மலர், எழுத்தாளர், சென்னை, 

24. கோ.சுகுமாரன், மனித உரிமைப் போராளி / எழுத்தாளர், புதுவை, 

25. ராமானுஜம், எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர், சென்னை, 

26. தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், சென்னை,  

27. யூமா வாசுகி, எழுத்தாளர், சென்னை, 

28. முனைவர் சாதிக், கவிஞர் / முன்னாள் துணைவேந்தர், சென்னை, 

29. ஞாநி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

30. துரைராஜ், மூத்த இதழாளர், திருச்சி.

31. வாசுதேவன், எழுத்தாளர் / விமர்சகர், சென்னை, 

32. முனைவர் ராஜன் குறை, எழுத்தாளர், டெல்லி, 

33. யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர், லண்டன், 

34. ஓவியர் விஸ்வம், சென்னை, 

35. ஓவியர் நடேஷ், சென்னை, 

36. பா.ரஞ்சித், திரைப்பட இயக்குனர், சென்னை, 

37. அமீர், திரைப்பட இயக்குனர், சென்னை, 

38. வெற்றிமாறன், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர், சென்னை.

39. பொ.வேல்சாமி, எழுத்தாளர் / தமிழறிஞர், நாமக்கல், 

40. வி.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர், திரை இதழாசிரியர், சென்னை, 

41. சு.வெங்கடேசன், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தளர், மதுரை, 

42. பாரதி தம்பி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

43. கிராமியன், எழுத்தாளர் / விமர்சகர், திருச்சி, 

44. ஷோபாசக்தி, எழுத்தாளர், பாரிஸ், 

45. முகம்மது சிப்லி, இதழாளர், சென்னை, 

46. அஜயன் பாலா. எழுத்தாளர், சென்னை, 

47. அசதா, எழுத்தாளர், விழுப்புரம், 

48. முனைவர் வீ.அரசு, எழுத்தாளர் / பேராசிரியர், சென்னை, 

49. பாஸ்கர் சக்தி, எழுத்தாளர், சென்னை, 

50. முருகேச பாண்டியன், எழுத்தாளர் / விமர்சகர், மதுரை, 

51. முருக பூபதி, அரங்க இயக்குனர், கோவில்பட்டி, 

52. பிரளயன், அரங்க இயக்குநர், சென்னை, 

53. சுபா தேசிகன், இதழாளர் / எழுத்தாளர், சென்னை, 

54. சி.மோகன், எழுத்தாளர் / சிறு பத்திரிக்கை எழுத்தாளர், சென்னை, 

55. தளவாய் சுந்தரம், எழுத்தாளர், சென்னை,  

56. சங்கர ராம சுப்பிரமணியன், எழுத்தாளர் / இதழாளர், சென்னை,  

57. மீனா, எழுத்தாளர், திருவண்ணாமலை, 

58. பிருந்தா, எழுத்தாளர், சென்னை, 

59. நேசமித்திரன், கவிஞர் / இதழாசிரியர், நைஜீரியா, 

60. ச.கோபால கிருஷ்ணன், இதழாளர், சென்னை, 

61. ஜெயராணி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

62. தீஸ்மாஸ் டீ சில்வா, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

63. லஷ்மி சரவணகுமார், எழுத்தாளர், சென்னை, 

64. சிபி செல்வன் எழுத்தாளர், சேலம், 

65. அழகிய பெரியவன் எழுத்தாளர், வேலூர், 

66. தேவிபாரதி, எழுத்தாளர், சென்னை, 

67. கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர் / இதழாளர், சென்னை, 

68. மனுஷ்யபுத்திரன், கவிஞர், சென்னை, 

69. சுசீந்திரன் நடராசா, எழுத்தாளர், பெர்லின். 

70. ஏ.மெஹபூப் பாஷா, மனித உரிமைச் செய்தி இதழாசிரியர், மதுரை, 

71. ரியாஸ் குரானா, எழுத்தாளர் / விமர்சகர், இலங்கை, 

72. ஆர்.பி.அமுதன், திரைப்பட இயக்குநர், சென்னை, 

73. பிரகதீஸ்வரன், நாடகக் கலைஞர் / பதிப்பாளர், புதுகை, 

74. சுகுணா திவாகர், எழுத்தாளர் / கவிஞர், சென்னை,  

75. விஷ்ணுபுரம் சரவணன், கவிஞர், சென்னை, 

76. நீலகண்டன், பதிப்பாளர், சென்னை. 

77. பா.ம.மகிழ்நன், ஊடகவியலாளர், சென்னை, 

78. இரா.தெ.முத்து, எழுத்தாளர், சென்னை, 

79. ப,கு,ராஜன், நூலாசிரியர், சென்னை, 

80. அருள் எழிலன், எழுத்தாளர், சென்னை, 

81. ஜீவ சுந்தரி, எழுத்தாளர்,  சென்னை,

82. அபு சாலிஹ், இதழாசிரியர். சென்னை, 

83. ஷாஜஹான், எழுத்தாளர், டெல்லி, 

84. ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர், சென்னை, 

85. தி.கண்ணன், எழுத்தாளர், ஸ்ரீரங்கம், 

86. வினி சர்ப்பனா, இதழாளர், சென்னை, 

87. புதுஎழுத்து மனோன்மணி, இதழாசிரியர், வேரிப்பட்டிணம், 

88. ஜமாலன், எழுத்தாளர் / விமர்சகர், ஷார்ஜா, 

89. கமலக்கண்ணன், திரைப்பட இயக்குனர், கோவை, 

90. ஆத்மார்த்தி, கவிஞர், மதுரை, 

91. ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் / இதழாசிரியர், ஓசூர், 

92. தேனுகா, ஓவிய விமர்சகர், கும்பகோணம், 

93. பேரா. பா.கல்யாணி, கல்வியாளர், திண்டிவனம், 

94. பேரா. ப.சிவகுமார், கல்வியாளர், சென்னை, 

95. பேரா. மு.திருமாவளவன், கல்வியாளர், சென்னை, 

96. ஜாபர் சாதில் பாகவி, இதழாசிரியர், சென்னை,

97. ரஜினி, மனித உரிமைப் போராளி, மதுரை, 

98. குட்டி ரேவதி, கவிஞர், சென்னை,

99. அருண், திரைப்பட இயக்கம், சென்னை, 

100. இளங்கோ கிருஷ்ணன், கவிஞர், 

101. சுதிர் செந்தில், இதழாசிரியர், திருச்சி, 

102. ஐயப்ப மாதவன், கவிஞர், சென்னை, 

103. தாமிரா திரைப்பட இயக்குனர், 

104. வ.கீரா திரைப்பட இயக்குனர், 

105. நக்கீரன், கவிஞர், நன்னிலம், 

106. லிபி ஆரண்யா, கவிஞர், மதுரை, 

107. குமார செல்வா, எழுத்தாளர், மார்த்தாண்டம், 

108. ஜே.ஆர்.வி.எட்வர்ட், எழுத்தாளர், நாகர்கோவில், 

109. இசை, கவிஞர், கோவை 

110. மகுடேஸ்வரன், கவிஞர், திருப்பூர், 

111. மேகவண்ணன், எழுத்தாளர், இராமேஸ்வரம், 

112. றஞ்சி, எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த், 

113. அன்புச் செல்வன், கவிஞர், மதுரை,

114. பவுத்த அய்யனார், எழுத்தாளர் / பதிப்பாளர், சென்னை, 

115. முத்துமீனாள், எழுத்தாளர், சென்னை, 

116. யாழன் ஆதி, கவிஞர், ஆம்பூர், 

117. தை.கந்தசாமி, கவிஞர், திருத்துறைப்பூண்டி,

118. முனைவர் ரவிச்சந்திரன்,

119. ஸ்ரீராமச்சந்திரன், எழுத்தாளர், கோவை,

120. நிஷா மன்சூர், கவிஞர், மேட்டுப்பாளையம்,

121. சே.கோச்சடை, எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்,  காரைக்குடி, 

122. முனைவர் ஜீவரத்தினம், ஆய்வாளர், ரெட்டைவயல், 

123. சி. சரவண கார்த்திகேயன், எழுத்தாளர், பெங்களூரு,

124. போஸ் பிரபு(பிரேமா), கவிஞர், சிவகாசி, 

125. யுவ கிருஷ்ணா, பத்திரிகையாளர், மடிப்பாக்கம், 

126. லீனா மணிமேகலை, கவிஞர், சென்னை, 

127. சா.விஜயலக்ஷ்மி, கவிஞர், சென்னை, 

128. நந்தகுமார், எழுத்தாளர், கடார், 

129. பா.ரவீந்திரன், எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்த், 

130. பூ.இராமு, திரைக் கலைஞர், சென்னை, 

131. கருப்பு கருணா, குறும்பட இயக்குநர், திருவண்ணாமலை, 

132. சிவக்குமார், திரை ஆய்வு எழுத்தாளர், சென்னை, 

133. உமர் ஃபாரூக், எழுத்தாளர், கம்பம், 

134. தமிழ்நதி, கவிஞர், கனடா, 

135. சுகன் கனகசபை, கவிஞர், பாரிஸ், 

136. அ.வெற்றிவேல், எழுத்தாளர், சவூதி அரேபியா, 

137. கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை, 

138. அதிஷா, இதழாளர், சென்னை, 

139. வெய்யில், கவிஞர், காரைக்கால், 

140. நடராஜன் கிருஷ்ணன், எழுத்தாளர், குன்றத்தூர், 

141. நந்தகோபால், இதழ் ஆசிரியர், சென்னை, 

142. எஸ்.காமராஜ், எழுத்தாளர், சாத்தூர், 

143. ஜபருல்லா ரஹ்மானி, எழுத்தாளர், சிங்கப்பூர், 

144. நீரை மகேந்திரன், இதழாளர், சென்னை, 

145. கவுதம சக்திவேல், மனித உரிமைப் போராளி, பொள்ளாச்சி, 

146. நரன், கவிஞர், சென்னை,

147. கவிதா முரளீதரன், இதழாளர், சென்னை, 

148. முனைவர் பெருந்தேவி, எழுத்தாளர், நியூயார்க், 

149. விஷ்ணுராம், ஊடகவியலாளர், சென்னை, 

150. ராஜவேலு, லேபர் நியூஸ் நிர்வாகி, சென்னை, 

151. சிவகுமார், எழுத்தாளர் / பேராசிரியர், சென்னை, 

152. மாரிச்செல்வன், எழுத்தாளர், சென்னை,

153. முகம்மது ஆசிக், கவிஞர், வல்லம், 

154. இரா.ஜவஹர், மூத்த இதழாளர், சென்னை, 

155. டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர், சென்னை, 

156. ஃபைஸ் ஃபைசல், இதழாசிரியர், சென்னை, 

157. மு.சிவகுருநாதன், எழுத்தாளர், திருவாரூர், 

158. டாக்டர் ஹிமானா சையத், எழுத்தாளர், சென்னை, 

159. பாரதிநாதன், நாவலாசிரியர், சென்னை, 

160. இரா,வினோத், ஊடகவியலாளர், பெங்களூரு, 

161. இளவேனில், கவிஞர், பள்ளிப்பட்டி, 

162. சக்தி ஜோதி, கவிஞர், மதுரை, 

163. எஸ்.ஷங்கர். இதழாளர், மடிப்பாக்கம், 

164. ஸ்ரீகுமார், விமர்சகர், சென்னை, 

165. கார்த்திகைப் பாண்டியன், எழுத்தாளர், மதுரை. 

166. தேவரசிகன், கவிஞர், கும்பகோணம், 

167. ஜி.சரவணன், எழுத்தாளர், அம்மாசத்திரம், 

168. சிராஜுதீன், பதிப்பாளர், சென்னை, 

169. பிரேமா ரேவதி, எழுத்தாளர், சென்னை, 

170. கு.ப, விமர்சகர், மதுரை, 

171. ஜி.ஸ்ரீதரன், எழுத்தாளர், ஓசூர், 

172. அத்தாவுல்லா, எழுத்தாளர், நாகர்கோவில், 

173. ஆளூர் ஷாநவாஸ், எழுத்தாளர், சென்னை, 

174. ஆர்,முருகப்பன், நூலாசிரியர், திண்டிவனம், 

175. மா.ச.மதிவாணன், ஊடகத்துறை, சென்னை, 

176. சாம்ராஜ், கவிஞர், மதுரை,  

177. யவனிகா ஸ்ரீராம், கவிஞர், திண்டுக்கல்,  

178. செல்மா பிரியதர்ஷன், கவிஞர், திண்டுக்கல்,  

179. அ.கரீம், எழுத்தாளர், கோவை, 

180. அறிவழகன், எழுத்தாளர், சேலம்,  

181. ம.மதிவண்ணன், கவிஞர், பெருந்துறை,  

182. குமார் அம்பாயிரம், எழுத்தாளர், திருவண்ணாமலை,  

183. பிரியாபாபு, எழுத்தாளர், சென்னை,

184. முனைவர் தி.பரமேஸ்வரி, கவிஞர் / பதிப்பாசிரியர், காஞ்சீபுரம், 

185. பவா செல்லத்துரை, எழுத்தாளர், திருவண்ணாமலை, 

186. கே.வி.சைலஜா, எழுத்தாளர் / பதிப்பாளர், திருவண்ணாமலை, 

187. கே.வி. ஜெயஸ்ரீ, எழுத்தாளர், திருவண்ணாமலை, 

188. அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை, 

189. கடற்கரை, கவிஞர் / பதிப்பாளர், சென்னை,  

190. ஃபிர்தௌஸ் ராஜகுமாரன், எழுத்தாளர், கோவை, 

191. தமயந்தி, எழுத்தாளர், சென்னை, 

192. நவீன், திரைப்பட இடக்குனர், சென்னை,  

193. பிரின்ஸ் என்னாரெசு பெரியார், திரைப்பட இயக்குனர், சென்னை, 

194. பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எழுத்தாளர், சென்னை, 

195. நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர் / இதழாசிரியர், சென்னை,

196. ராஜ்முருகன், திரைப்பட இயக்குனர், சென்னை,  

197. புகழேந்தி, ஓவியர், சென்னை, 

198. ட்ராட்ஸ்கி மருது, ஓவியர், சென்னை, 

199. ரோகிணி, நடிகை, சென்னை,

200. ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், மதுரை, 

201. கரிகாலன், கவிஞர், விருதாசலம்,

202. தமிழ்ச்செல்வி, எழுத்தாளர், விருத்தாசலம், 

203. அ,வெண்ணிலா, கவிஞர், வந்தவாசி, 

204. பாரதி கிருஷ்ணகுமார், இயக்குனர், சென்னை,  

205. யாழினி முனுசாமி, எழுத்தாளர், சென்னை, 

206. பி.ஜி. சரவணன், கவிஞர், மதுரை, 

207. மீனா கந்தசாமி,  எழுத்தாளர், சென்னை, 

208. கோவி லெனின், பத்திரிகையாளர் , சென்னை,  

209. புதிய மாதவி, எழுத்தாளர்   மும்பை, 

210. கண்மணி ராஜா முகமது, திரைத்துறை, சென்னை,

211. காலபைரவன், எழுத்தாளர், விழுப்புரம்,  

212. சீனு இராமசாமி, திரைப்பட இயக்குனர், சென்னை, 

213. நாச்சியாள் காந்தி, ஊடகவியலாளர், சென்னை,  

214. வெற்றிவேல், ஆவணப்பட இயக்குநர், சென்னை, 

215. நறுமுகை தேவி, கவிஞர், கோவை,

216. ஏகாதேசி, பாடலாசிரியர், சென்னை, 

218. ஸ்ரீஜித், அரங்கக் கலைஞர், சென்னை. 

219. லிவிங்ஸ்மைல் வித்யா, அரங்கக் கலைஞர், சென்னை, 

220. மு.வி.நந்தினி, இதழாளர், சென்னை.