தொடரி - சினிமா விமர்சனம்

27-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தொடரி’ என்றால் ‘தொடர்ந்து கொண்டே செல்வது’ என்றுதானே பொருள். ‘தொடர் வண்டி’ என்றுதானே ‘ரயிலை’ குறிப்பிட்டுச் சொல்கிறோம். அந்த ‘தொடர் வண்டி’யையே இன்னமும் சுருக்கி ‘தொடரி’ என்று அழைக்கும் ஒரு புதிய பெயரை கொடுத்தமைக்காக இயக்குநர் பிரபு சாலமனுக்கு முதல் நன்றி.
அதிகப்பட்ச செலவில், மாஸ் ஹீரோவை வைத்து மிகப் பெரிய பேனரில் படம் செய்வது என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான். இயக்குநரின் திறமை மட்டுமே படத்தைக் காப்பாற்றும். நம்பிக்கை காத்திருக்க வைக்கும். ஆனால் செயல்படுத்த அது மட்டுமே போதாது. இந்தப் படத்தின் சிறிய வெற்றிக்கு காரணம் இயக்குநர் எழுதியிருக்கும் இடைவேளைக்கு பின்னான திரைக்கதையும், அழுத்தமான இயக்கமுமே..!

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கேண்டீனில் சப்ளையராகப் பணியாற்றுபவர் தனுஷ். அங்கே சூப்பர்வைஸர் தம்பி ராமையா. இந்த டீமில் கருணாகரனும் ஒருவர்.
அன்றைக்கு அந்த ரயிலில் பிரபல நடிகை சிரிஸ்ரீயும் வருகிறார். அவருடன் அவருடைய அம்மாவும், சிரிஸ்ரீயின் டச்சப் கேர்ளான சரோஜாதேவியும் பயணிக்கிறார்கள்.
இந்தியாவின் சாண எரிவாயு துறையின் மத்திய அமைச்சரான ராதாரவியும் அதே ரயிலில் சென்னைக்கு பயணமாகியுள்ளார். இவருக்குத் துணையாக இரண்டு கருப்பு பூனை படை வீரர்களும், அவருடைய அரசியல் பி.ஏ.வும் வருகிறார்கள்.
சிரிஸ்ரீக்கு உணவு சப்ளை செய்யப் போகுமிடத்தில் டச்சப் கேர்ள் சரோஜா தேவியைப் பார்க்கும் தனுஷ் திகைக்கிறார். ஹீரோயினைவிடவும் அழகாக இருக்கும் சரோஜா மீது பார்த்தவுடன் காதல் வருகிறது தனுஷுக்கு. இதற்காகவே அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்கிறார்.
இந்த நேரத்தில் அமைச்சரின் கருப்பு பூனை படை அதிகாரியான ஹரீஷ் உத்தமனுடன் சண்டை ஏற்பட அது இருவருக்குள்ளும் தீராத வன்மமாக உருவெடுக்கிறது. ஏற்கெனவே வீட்டுப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருக்கும் ஹரிஷ், ஒரே மாநிலத்தவராக இருந்தும் சரோஜாவின் உதாசீனத்தால் மேலும் அவமானப்படுகிறார்.
ஹரிஷின் கைத்துப்பாக்கி தொலைந்துபோய்விட.. அதை தனுஷ்தான் எடுத்திருப்பார் என்று நினைத்து அவரிடம் கேட்டு மேலும் அவமானப்படுகிறார் ஹரிஷ். ஆனால் இந்தத் துப்பாக்கியை அமைச்சர் ராதாரவியை எடுத்து வைத்திருந்து திருப்பிக் கொடுத்து மீண்டும் அவமானப்படுத்துகிறார் ஹரிஷை.
என்ஜின் டிரைவரான ஆர்.வி.உதயகுமாருக்கு அதுதான் கடைசி வேலை நாள். இன்றோடு ஓய்வு பெறுகிறார். உதவி டிரைவரான போஸ் வெங்கட்டுக்கும், அவரது திருமதியாருக்கும் இடையில் போனிலேயே கடும் மோதல். இந்தக் குழப்பத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்துவிட.. ரயில் தண்டவாளத்தில் குறுக்கே வந்த மாடுகளுடன் மோதி ரயில் நிற்கிறது.
டிரைவரும், உதவி டிரைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் ஹரிஷ் சரோஜாவையும், தனுஷையும் கொலை வெறியோடு தாக்க வருகிறார். அவரிடத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் சரோஜா திரும்பவும் ரயில் புறப்படும் சமயத்தில் வண்டியின் என்ஜின் அருகே ஏறிக் கொள்கிறார். அதே நேரம் தனுஷை ஒரு பெட்டியில் வைத்து பூட்டிவிடுகிறார் ஹரிஷ்.
ரயில் புறப்பட்ட சில நொடிகளில் டி.டி.ஆரு.க்கும், போஸ் வெங்கட்டுக்கும் இடையில் சண்டை நடக்க இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார்கள். இதனால், உதவியாளர் இல்லாமலேயே ஆர்.வி.உதயகுமார் வண்டியை செலுத்துகிறார். திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வந்து மயக்கமாக.. டிரைவரே இல்லாமல் ரயில், ஓவர் ஸ்பீடில் செல்கிறது.. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பஞ்சாய் பறக்கிறது.
ஒரு பக்கம் தனுஷ் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்ஜின் அருகே அமர்ந்திருக்கிறார். ஹரிஷ் இவர்களைத் தேடி வருகிறார். ரயில் வழியில் இருக்கும் ஸ்டேஷன்களுடன் தொடர்பே இல்லாமல் கட்டுக்கடங்காமல் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
முடிவு என்ன என்பதுதான் படம்..!
ஹிந்தி படமான ‘பர்னிங் டிரெயினின்’ கதையைத்தான் இப்போதைக்கு கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து திருத்தியிருக்கிறார் பிரபு சாலமன்.  படத்தின் முற்பாதியில் சவசவ என்று நீளும் காமெடி காட்சிகளால்தான் படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. படத்தில் 25 நிமிட காட்சிகளை தயவு தாட்சண்யமே இல்லாமல் நீக்கிவிடலாம். அப்படி நீக்கினால் ஒரு கிரிப் கிடைத்திருக்கும்.
முற்பாதி எதை நோக்கி படம் செல்கிறது என்பது தெரியாமலேயே நகர்வதால் இடைவேளை பிளாக்கில்தான் படத்தின் கருவே தென்படுகிறது. இதன் பின்னான பகுதிதான் படத்தின் ஜெட் வேகம். நகைச்சுவை, நடிப்பு, திரைக்கதையில் இருக்கும் சுவாரஸ்யமான டிவிஸ்ட்டுகள் என்று பலவும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
தனுஷ் படத்திற்கு படம் மெருகேறியே வருகிறார். இதிலும் அப்படியே.. நக்கல் செய்கிறாரா..? அல்லது கிண்டல் செய்கிறாரா..? அல்லது இயல்பாகத்தான் பேசுகிறாரா என்பதையே தெரியவிடாத அளவுக்கு பல காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுவே அவரது நடிப்புக்கு சான்று. அதிலும் தம்பி ராமையாவை ஓவராக கலாய்க்கும் காட்சிகளில் ‘பாவம்யா அந்தாளு’ என்று ரசிகனையே புலம்ப வைத்துவிட்டார் தனுஷ்.
சரோஜா என்னும் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் லவ்வுவது எல்லாம் இயக்குநரின் வேலை என்றாலும் அதையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடகியாக வேண்டும் என்கிற அவரது ஆசையைத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதுபோல நடித்து காதலியைக் கைப்பிடிக்க முயலும் ஆசை தப்புதான் என்றாலும்.. வழக்கமான சினிமா காதல்தானே என்ற ரீதியில் படத்தை அணுகும்போது மன்னித்துவிட்டுவிடலாம்.
கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடாமலேயே கொள்ளை அழகாகத் தெரிகிறார். நடிப்பும் பட்பட்டென தெறிக்கிறது. இறுதிக் காட்சியில் அந்த நேரத்திய டென்ஷனிலும் அவருடைய நடிப்பே படத்தைத் தாங்கியிருக்கிறது. இவருடைய அப்பாவித்தனத்தை பார்த்து ஒவ்வொரு முறையும் தனுஷ் ‘அடியே’ என்று இழுக்கும்போது ஏற்படும் சின்னச் சின்ன நகைச்சுவைகளே படத்தின் தூண்கள்.
இதேபோல் இன்னொரு பக்கம் தனது தனித்த நடிப்புத் திறனால் படத்திற்கு மேலும் சிறப்பு கூட்டியிருக்கிறார் ‘இளையவேல்’ நடிகர் ராதாரவி. சாண எரிவாயு துறை அமைச்சராக அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும், இன்றைய அரசியல் களத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
‘இந்த வேகத்துல போனா அந்தப் பாலம் இடிஞ்சு விழுந்திருமா?’ என்ற கேள்விக்கு, ‘ம்ஹூம்.. இடியாது. அது வெள்ளைக்காரன் கட்டின பாலம். நம்மாளு கட்டியிருந்தால் நிச்சயம் விழும்..’ என்று அவர் சொல்லும் பதிலுக்குத்தான் அதிகமான கைதட்டல் கிடைத்திருக்கிறது.
அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் வசனத்தை அவர் உச்சரிக்கும்விதமும், அதனூடேயே அவர் காட்டும் நடிப்பும், சோறை எடுத்து ஹரிஷின் முகத்தில் வீசிவிட்டு பெருங்கோபத்துடன் ‘வெளிய போடா‘ என்று சொல்லும்விதமும் அடாவடி அமைச்சரை அப்படியே காட்டியிருக்கிறது.
இன்னொரு பக்கம் பிரபு சாலமன் எந்தவொரு சினிமா இயக்குநரும் செய்யாத ஒரு வேலையைச் செய்திருக்கிறார். அது இந்திய செய்தி ஊடகங்களை நார், நாராக கிழித்திருப்பதுதான்.
இன்றைக்கு இந்தியாவில் தவறான, அவதூறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் திணிக்கும் வடக்கத்திய செய்தி சேனல்களின் பர்கா தத், அர்னாப் கோஸ்வாமி, பிரணாய் ராய் போன்றவர்களால்தான் இந்தியாவின் அரசியல், மக்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டு.. விளம்பரங்களை வாங்கிக் குவித்து மறைமுகமான பிரதிபலன்களையும் அடைந்து, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செயல்களைத்தான் இந்த செய்தி சேனல்களில் பெருவாரியானவை செய்து வருகின்றன.
டி.ஆர்.பி. போட்டியினால் ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை உடனடியாக குற்றவாளி என்றே முடிவு செய்து அவருடைய வாழ்க்கைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பது இந்த செய்தி சேனல்கள்தான்.
டிரெயனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் முதலில் டிரெயின் கடத்தப்பட்டது என்றும், என்ஜின் அருகே கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் பெண் தீவிரவாதி என்று திசை திருப்புவதும்.. டிரெயினில் கொள்ளையடிக்க வந்த கும்பலை டிரெயின் மீது பார்த்துவிட்டு அவர்கள்தான் டிரெயினை கடத்திய தீவிரவாதிகள் என்பதும், அமைச்சரை கடத்திவிட்டார்கள் என்றும் உண்மையே தெரியாமல் அள்ளிவிடும் கப்ஸா டிவிக்களை தோலுரித்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
இதேபோல் கலந்துரையாடலில் வந்து அமர்ந்து கொண்டு நல்லதுக்கும், கெட்டதுக்குமே ஆயிரத்தெட்டு விளக்கங்களை கொடுக்கும் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும் வறுத்தெடுத்திருக்கிறார். முக்கியமாக கோபண்ணாவும், ஹெச்.ராஜாவும் வறுபட்டிருக்கிறார்கள்.
ஒரு அவசர காலத்தில் ரயில்வே துறை என்ன செய்ய வேண்டும்..? என்னவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் ஆயிரத்தெட்டு அரசு பார்மாலிட்டீஸை வைத்துக் கொண்டு செய்வது என்பது முடியாத காரியம் என்பதையும் இதில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இப்படியொரு படத்திலும் காதல் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு.. இரு வேறு பதில்கள் இருக்கின்றன. வேறு வழியில்லை. இவ்வளவு பெரிய நடிகரை துணைக்கு வைத்துதான் இப்படியான பெரும் பொருட்செலவிலான படத்தை எடுக்க முடியும். போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் இப்படியொரு கதையம்சம் அவசியம் தேவையாய் இருக்கிறது. ரசிகன் மாறும் சூழல் வரும்போது இதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மாறிவிடும்.
லாஜிக் மீறல் இல்லாமல் இது போன்ற படங்களை எடுக்கவே முடியாது. சினிமாதானே மறந்துவிடுவார்கள் என்றுதான் அனைத்து இயக்குநர்களும் நினைப்பார்கள். இதையேதான் பிரபு சாலமனும் நினைத்திருக்கிறார்.
இந்திய ரயில்வேயின் தண்டவாளங்கள் இப்போதும் 140 கிலோ மீட்டர் வேகத்தை தாங்க கூடியவையாக இல்லை என்பது முதல் உண்மை. இத்தனை ஸ்பீடில் செல்லும் ஒரு டிரெயின் மீது ஒருவர் எந்தக் கைப்பிடியும் இல்லாமல் நிற்பதோ, நடப்பதோ சாத்தியமே இல்லாதது என்பதும் உண்மைதான்.  
ஆனாலும் இது ஹீரோயிஸ படம் என்பதால் ‘எந்திரன்’ போல், ‘கபாலி’யை போல சண்டையிட வைத்து எடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் மிகப் பெரிய காமெடியாக இத்தனை களேபரத்திலும் கீர்த்தி சுரேஷை லவ்வும் தனுஷ் கடைசியிலும் ஒரு டூயட்டை பாடுவது மகா கொடுமை. இதற்கும் அந்த ஹீரோயிஸம்தான் காரணமாகும்.
எல்லாம் முடிந்து ஹீரோ செத்துப் போவதாக கதையமைத்தால் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்காதே என்பதால் இத்தனை விபத்துகளுக்குப் பின்பும் ஹீரோவையும், ஹீரோயினையும் உயிருடன் காட்டியிருக்கிறார் பிரபு சாலமன். “அவருடைய சென்ற படமான ‘கயல்’ படத்தில் காதலர்கள் கடைசியில் சாகடித்ததால்தான் அந்தப் படமும் செத்துப் போனது..” என்று ஒரு மவுத் டாக் கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. இதையும் மனதில் வைத்துதான் பிரபு சாலமன் இந்த முடிவையெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் மிக பிரமாதமான இயக்கம். அதிகப்படியான காட்சிகள்.. அதிகப்படியான ஷாட்டுகள்.. பிரபு சாலமன் எப்படி இதை எடுத்தார்..? எத்தனை நாட்களில் முடித்திருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம்தான். நிரம்ப கஷ்டப்பட்டுத்தான் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை படம் பார்த்தால்தான் புரியும்.
பலவித எள்ளல்கள், எல்லை மீறல்கள்.. கேள்விகள் இருந்தாலும் படத்தின் துவக்கம் முதல் கடைசிவரையிலும் நகைச்சுவை மிளிர அதிலும் இடைவேளைக்கு பின்பு காமெடி தர்பாரே நடந்திருக்கிறது என்றால் நிச்சயம் இது இயக்குநர் பிரபு சாலமனின் சிறப்பான இயக்கத்தினால்தான். அவருடைய இயக்க திறமைக்கு நமது சல்யூட்.
நிச்சயமாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான் இந்தத் ‘தொடரி’ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை..!

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

24-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன். தன்னுடைய முந்தைய இரண்டு திரைப்படங்களையுமே திரைப்பட கல்லூரிகளில் திரைப் பாடங்களாக வைக்க வேண்டிய படைப்புகளாக கொடுத்து கொடை வள்ளலாக ஆகியிருக்கும் இயக்குநர் மணிகண்டன், இதோ இந்த மூன்றாவது படைப்பையும் அதே போல இன்னொரு பாடமாக வைக்க அளித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவுலகம் அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட வேண்டும்..!
நேர்மையாக பயணிப்பது கடினம்தான். ஆனால் அதுதான் நிலைக்கும். குறுக்கு வழி குறுகிய லாபத்தை அளிக்கும். ஆனால் நீண்ட கால சந்தோஷத்தைக் கொடுக்காது. இது அனைவருக்கும் தெரிந்த்துதான். இருந்தும் குறுக்கு வழியில் வெகு சீக்கிரமாக வேலையை முடிக்க வேண்டும். செல்வந்தராக வேண்டும் என்றெண்ணத்தில் இல்லாத்தையும், பொல்லாத்தையும் செய்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.
இடைத் தரகர்கள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர்களின் ராஜ்ஜியம் அனைத்துத் துறைகளிலும் சிலந்தி வலையாக பரவயிருக்கிறது. புரோக்கர்களே இல்லாமல் இன்றைக்கு டிரைவிங் லைசென்ஸோ, பாஸ்போர்ட்டோ, அரசு வேலையில் ஒரு உதவியோ நாம் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் குறுக்கீடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வளவு ஏன்..? ஒரு திரைப்படம் சென்சார் போர்டில் சென்சார் ஆக வேண்டும் என்பதற்குகூட நேர் வழிகள் பல இருந்தும் அந்த சென்சார் போர்டு அலுவலக வாசலில் இருக்கும் புரோக்கர்களே உடனுக்குடன் முடித்துக் கொடுப்பார்கள். என்ன சர்டிபிகேட் வேண்டும்..? அதற்கு என்ன செய்ய வேண்டும்..? பிரச்சினை வந்தால் யாரைப் பார்த்தால் காரியம் நடக்கும்..? என்பதெல்லாம் அந்த புரோக்கர்களுக்கு அத்துப்படி. அதையெல்லாம் சமாளித்துதான் இப்போதைய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அப்படியொரு இடைத்தரகர்களை நம்பிக் கெடும் ஒரு இளைஞனின் கதைதான் இந்த 'ஆண்டவன் கட்டளை'.

காந்தி என்கிற விஜய் சேதுபதி ஒரு பொறுப்பான இளைஞன். பெற்றோரை இழந்தவர். தனது அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய கடனையே இன்னமும் அடைக்க முடியாமல் இருப்பவர். அதற்கு மேலும் தொழில் செய்வதற்காக அக்காவின் நகைகளை வாங்கி அடகு வைத்து தொழில் செய்து நஷ்டப்பட்டு இப்போது கடனில் தத்தளித்து வருகிறார்.
அதே ஊர்க்காரரான நமோ நாராயணன், லண்டன் சென்று 3 வருடங்கள் கழித்து கையில் நிறைய பணத்துடன் ஊர் திரும்பியிருக்கிறார். அவரிடம் ஏதாவது வெளிநாடு சென்றாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் விஜய் சேதுபதி.
நமோ நாராயணன் ஒரு போன் நம்பரை கொடுத்து சென்னைக்கு சென்று அவரைச் சந்தித்தால் அவர் வழிவகை செய்து தருவார் என்கிறார். தனது நண்பனான யோகி பாபுவுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு படையெடுக்கிறார் விஜய் சேதுபதி.
நமோ நாராயணன் சொன்ன புரோக்கர் எஸ்.எஸ்.ஸ்டான்லியை சந்திக்கிறார் விஜய். அவரோ பலவிதமாக விஜய்யை மிரட்டி வைக்கிறார். இங்கிலாந்து சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை புட்டுப் புட்டு வைக்கிறார்.
ஆறு மாத டூரிஸ்ட் விசாவில் லண்டனுக்கு சென்று பாஸ்போர்ட்டையும், விசாவையும் தொலைத்துவிட வேண்டும். போலீஸில் பிடிபட்டால் இலங்கை தமிழர் என்று ஏதாவது ஈழத்தின் ஊர்ப் பெயரைச் சொல்லி சமாளிக்க வேண்டும். லண்டன் போலீஸ் கைது செய்தால் ஒரு ஆறு மாத காலம் சிறையில் அடைப்பார்கள். அதன் பின்பு அகதி அந்தஸ்து கொடுத்து ரிலீஸ் செய்துவிடுவார்கள்.
அதன் பின்பு நமக்கு வேலை கிடைக்கும்வரையில், மாதாமாதாம் ஐம்பதாயிரம் ரூபாயை நம்முடைய வாழ்க்கைச் செலவுக்காக கொடுப்பார்கள். கிடைப்பதில் சேமித்து வைத்து ஊருக்கு வந்து கடனை அடைக்கலாம் என்கிறார் ஸ்டான்லி.
இந்த்த் திட்டத்திற்கு விஜய்யும், யோகி பாபுவும் சம்மதிக்கிறார்கள். ஆனால் இதற்கு முதலில் பாஸ்போர்ட் வேண்டுமே..? பாஸ்போர்ட்டுக்கு முதலில் சென்னையில் தங்கியிருப்பது போல முகவரி சான்று வேண்டுமே..? இதற்காக வீடு தேடி அலையோ அலையென்று அலைந்து ஒரு வீட்டில் குடியேறுகிறார்கள் இருவரும். இவர்களுடன் இலங்கை தமிழரான நேசன் என்பவரும் இணைந்து கொள்கிறார்.
பாஸ்போர்ட்டில் பேச்சுலர் என்று இருந்தால் லண்டனுக்கு விசா கிடைக்காது. டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை கிடைத்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று சொல்லி விசா தர மாட்டார்கள் என்கிறார் ஸ்டான்லி. மாற்று வழியையும் அவரே சொல்கிறார். மனைவி பெயருக்கான இடத்தில் யாராவது ஒரு பெண்ணின் பெயரை ச்சும்மாவாச்சும் போட்டு வைக்கும்படி சொல்ல.. யோகி கார்மேகம் என்கிறார். அதனுடன் குழலியைச் சேர்ந்து கார்மேக குழலி என்று ஆளே இல்லாத மனைவிக்கு பெயர் சூட்டி வைக்கிறார் விஜய்.
ஆனால் விசாவுக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் விஜய் சொதப்பிவிட விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் யோகியின் விண்ணப்பம் ஏற்கப்பட அவர் லண்டனுக்கு பயணமாகிறார்.
அடுத்த முறையான விசா விண்ணப்பம் ஆறு மாதங்கள் கழித்துதான் ஏற்கப்படும் என்பதால் அதுவரையிலும் சென்னையிலேயே இருக்க நினைக்கிறார் விஜய். இதற்காக தனது ஊர்க்கார்ரும், நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் நாசரிடம் நடிப்புக் கலை பயில்பவருமான நண்பரிடம் சரணடைகிறார் விஜய்.
அவருடைய உதவியோடு நாசரின் அலுவலகத்திலேயே அக்கவுண்ட்டண்ட் வேலை பார்க்கிறார் விஜய். இப்போது திடீரென்று நாசர் லண்டனில் தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றம் செய்யப் போவதாகச் சொல்கிறார். இந்தக் குழுவினருடன் விஜய் சேதுபதியையும் அழைக்கிறார்.
லண்டனுக்கு செல்ல ஆசையாக இருக்கும் விஜய் இதற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் பாஸ்போர்ட்டில் அவருடைய மனைவியின் பெயர் இருப்பது இப்போது பிரச்சனையாகிறது. அந்தப் பெயரை நீக்க வேண்டும் என்று நினைக்கிறார் விஜய். இதற்கென்ன வழி என்று கேட்டு மீண்டும் புரோக்கர் ஸ்டான்லியை அணுகுகிறார் விஜய்.
அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார் என்று அவரைக் கை காட்டுகிறார். அந்த நண்பரோ, தனக்குத் தெரிந்த வக்கீலிடம் அனுப்புகிறார். வக்கீலோ யாராவது ஒரு பெண்ணை பிடித்து அழைத்து வந்தால், அவரை கார்மேகக் குழலியாக நீதிபதி முன் நிறுத்தி மியூச்சுவல் டைவர்ஸ் என்று சொல்லி டைவர்ஸ் வாங்கிக் கொடுத்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதை நீக்கிவிடலாம் என்று கிரிமினல் ஐடியா கொடுக்கிறார்.
இந்த நேரத்தில்தான் ஒரு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றும் கார்மேகக் குழலி என்ற பெயர் கொண்ட ரித்திகா சிங்கை பார்க்கிறார்கள் விஜய்யும், நேசனும். இருவரும் ரித்திகாவிடம் பேசுகிறார்கள். முதலில் ரித்திகாவிடம் தனக்குப் பேச்சு வராது என்று சொல்லி ஏமாற்றுகிறார் விஜய்.
பல வழிகளில் ரித்திகாவின் அன்பைப் பெற்று அவர் பெயரிலான வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை பெற்று டைவர்ஸுக்கு முயல்கிறார் விஜய். ஆனால் அன்றைக்கு பார்த்து வேறொரு நீதிபதி  குடும்ப நல கோர்ட்டுக்கு வந்து விசாரிக்க.. நேரடியாக ஆஜராகாமல் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார் புதிய நீதிபதி.
இப்போது நிஜமாகவே ஒரு பெண்ணை அழைத்து வர வேண்டிய கட்டாயம் விஜய் அண்ட் கோ-வுக்கு ஏற்படுகிறது. என்ன செய்தார்கள்..? யாரை அழைத்து வந்தார்கள்..? டைவர்ஸ் கிடைத்த்தா இல்லையா..? பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயர் நீக்கப்பட்டதா இல்லையா..? லண்டன் சென்ற யோகி பாபுவின் நிலைமை என்ன..? விஜய்சேதுபதி லண்டனுக்கு பயணமானாரா என்பதெல்லாம்தான் இந்த சுவையான திரைப்படத்தின் அதி சுவையான திரைக்கதையாகும்.
வெறும் 1300 ரூபாய் செலவில் செய்யப்பட வேண்டிய வேலைக்காக புரோக்கர் ஸ்டான்லி தனக்கு பணம் வேண்டுமே என்பதற்காக கதையைத் திருப்பிவிட.. விஜய்யின் வாழ்க்கையில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள்தான் படத்தின் அடிப்படையான கதை.
புரோக்கர்களை நம்பாதீர்கள். எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி.. அதனை நேர் வழியில் சென்று சந்தியுங்கள். கால தாமதம் ஆனாலும் அதுதான் நமக்கு நல்லது என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.
மூத்த பத்திரிகையாளரான டி.அருள் செழியன் தான் இயக்குவதற்காக வைத்திருந்த இந்தக் கதையை கேட்டு, இம்பரஸ்ஸாகி, தான் இயக்குவதாக அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கதையை வாங்கி பொறுப்பாக, அற்புதமாக இப்படி படமெடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் மணிகண்டனுக்கு முதற்கண் நமது கோடானு கோடி நன்றிகள்..!
படத்தின் துவக்கத்தில் தனது நண்பனான யோகி பாபுவை சைக்கிளில் வைத்து அழைத்து வரும் விஜய் சேதுபதியை, படத்தின் முடிவில் அவருடைய வருங்கால மனைவியான ரித்திகா சிங் தன்னுடைய டூவீலரில் அழைத்துச் செல்கிறார். இதுதான் முதலும், கடைசியுமான காட்சிகள்.. என்னவொரு குறியீடு..!? வாவ்..!
‘தர்மதுரை’க்கு பின்பு விஜய் சேதுபதிக்கு இன்னுமொரு வெற்றிப் படம் இது.  ‘மக்கள் செல்வன்’ என்று பட்டம் பெற்றிருக்கும் விஜய் சேதுபதி, படம் முழுவதையும் தனது நடிப்பால் நிரப்பியிருக்கிறார். காட்சிக்கு காட்சி அவரது இயல்பான நடிப்பால் நகைச்சுவையும் மிளிர்கிறது. கதையோட்டமும் புரிகிறது. கதையும் நகர்கிறது.
நல்ல பண்பட்ட நடிகரைப் போல காட்சிகளில் ஒன்றிப் போய் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தன் மூலமாகவே பல லட்சக்கணக்கான காந்திகளை சற்று யோசிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய அக்காவின் கழுத்தில் எதுவும் இல்லாத நிலைமை.. தன்னுடைய மாமனின் குத்தல் பேச்சுக்கள்.. அத்தனையும் அவரை எப்படியாவது பணம் சம்பாதித்து கடனை அடைத்து, அக்கா நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
இந்த நோக்கத்தை தொடர்ந்த பயணத்தில் காந்தியின் தொடர்செயல்பாடுகள் எதுவும் இயல்பு தன்மைக்கு மாறாத நிலைமையிலேயே சென்றிருப்பதால் எதுவும் தவறாகப் படவில்லை. மாறாக தப்பு பண்றானே.. எங்க போய் மாட்டப் போறானோ என்றெண்ணம்தான் ரசிகர்களின் மனதில் எழுகிறது.
ரித்திகா சிங்கிற்கு அதிகம் காட்சிகள் இல்லை என்றாலும், கிளைமாக்ஸில் விஜய் சேதுபதி கேட்கும் கேள்விக்கு அவர் காட்டும் ரியாக்ஷன்கள் செமத்தியான ஆக்சன்.. கோர்ட்டில் ஏதோவொரு உந்துதலில் விஜய்க்கு உதவப் போய் மாட்டிக் கொண்டு பின்பு கவுன்சிலிங்கிலும் கன்னா பின்னா கேள்வியிலால் டென்ஷனாகி தவிப்பதுமாக தனது கேரக்டரில் நியாயப்படியான நடிப்பில் பதற வைத்திருக்கிறார் ரித்திகா. இது இரண்டாவது படம் அல்லவா. நடிப்பு அம்மணிக்கு தானாகவே வருகிறது போலும்..!
பாண்டியாக நடித்திருக்கும் யோகி பாபுவின் சில பல கமெண்ட்டுகள் அப்போதைக்கு சிரிக்க வைத்தாலும் அவைகளும் ஆயிரம் கதைகளைத்தான் சொல்கின்றன. இந்த மூஞ்சிக்கு இப்படியொரு பொண்டாட்டியா..? மெட்ராஸ்ல சொந்த வீடு இருந்தா போதும். எல்லாம் அமைஞ்சிரும் போலிருக்கு என்று அவர் சொல்லும் கமெண்ட்டுகள் ச்சும்மா அல்ல. உண்மையான கமெண்ட்டுதான்..!
ஐ ஆம் எம லண்டன் சிட்டிஸன் என்று எம்பஸி வாசலில் நின்று விஜய்யுடன் சண்டையிடும்போதும், திரும்பி விஜய்யை சந்தித்துவிட்டு ஆட்டோவில் வரும்போது சுத்தி நின்னு பிரிஞ்சு மேய்ஞ்சுட்டாங்க என்று சிங்கள போலீஸை சொல்லிவிட்டு ஓயும்போதும் பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார். இத்தனையிலும் மதுரை பஸ்ல ஏத்திவிடுங்கடான்னா திருப்பதி பஸ்ல ஏத்தி விட்டிருக்கீங்க என்று கோபத்துடன் கேட்டுவிட்டு நடப்பதும் இன்ஸ்டண்ட் காமெடி.
நேசன் என்ற இலங்கை தமிழர் கேரக்டரில் நடித்திருப்பவரின் சிறிது நேர பதைபதைப்பும், அவருடைய நடிப்பும் அந்தக் கேரக்டருக்கு வெயிட் சேர்த்திருக்கிறது. குடியுரிமைத் துறையினர் தேடி வந்த நபர் தான்தான் என்பதை அமைதியாக ஒத்துக் கொண்டு பிரச்சனையை வளர்க்காமல் விஜய் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் அந்தப் பக்குவத்தினால் அந்தக் கேரக்டருக்கே பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
குடியுரிமைத் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஹரீஷ் போரடியின் நடிப்பும் படத்தில் நிச்சயம் பேசப்படும். மலையாளியான இவர் வரும் காட்சிகளிலெல்லாம் இயக்குநரின் அசத்தலான இயக்கத்தினால் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்புக்கு முன் பின் பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை தமிழ்த் திரை ரசிகன் பெறுகிறான் என்பதுதான் உண்மை.
கூத்துப் பட்டறை மு.ராமசாமியின் சாயலில் நாசரின் கூத்துப் பட்டறை ஒர்க் ஷாப். அந்த நாடக்க் குழுவினர். இடையிடையே நாடகம் நடக்கும் சூழல்.. நாசரின் பண்பட்ட நடிப்பு.. விஜய்யின் கடன் தொகையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுவது.. என்பதெல்லாம் படத்துடன் ஒன்றிப் போய்விட்ட உணர்வை காட்டுகிறது.
வக்கீலாக நடித்திருக்கும் ஜார்ஜூம், ஜூனியரான வினோதினியும் ஒரு இனம் புரியாத வக்கீல் பாசத்தை நம் மீது செலுத்தியிருக்கிறார்கள். இனிமேல் வக்கீலிடம் பேசும்போதும் போலீஸைவிடவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இவர்களே உணர்த்தியிருக்கிறார்கள். இடையிடையே சீனியருக்கும், ஜூனியருக்குமான உரசல், நெருடல், சண்டை இதையெல்லாமும் திரைக்கதையில் கொண்டு வந்து நம்மை கலகலப்பாக்கியிருக்கிறார் இயக்குநர்.
வீட்டு புரோக்கரான சிங்கம்புலி, வீட்டு ஓனர், அவருடைய மனைவி, பாஸ்போர்ட் ஆபீலிஸ் தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோவில் பார்த்திருக்கியா என்று கேட்கும் ஆங்கிலேய அதிகாரி.. போலி கையெழுத்தை அட்சரம் பிசகாமல் போடும் தாத்தா.. அழுத்தமான திருடன் என்கிற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு உதாரணமாக நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்க அல்லல்படும் மாமாவாக ஏ.வெங்கடேஷ், ரித்திகாவின் அம்மாவாக நடித்திருக்கும் ராஜேஸ்வரி பரமேஸ்வரன் என்று பலரும் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
வசனங்களே படத்திற்கு இன்னொரு பலமாகவும் அமைந்திருக்கின்றன. வீடு தேடும் படலத்தின்போது கிடைக்கும் அனுபவங்களே சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. “சம்பாதிக்கறது லண்டன்லேயும் சௌதிலயும். ஆனா முஸ்லீமுக்கும், கிறிஸ்டீனுக்கும் வாடகைக்கு விடமாட்டாங்களா..?”, “சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜெக்ட்..”, “வேலைக்கு விசுவாசமா இருக்கறதா.. இல்லாட்டி வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா..?” என்று விஜய் சேதுபதி கொதிப்பதெல்லாம், வசனத்தின் மூலம் மேலும் கொளுத்துகிறது..!
சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவும், அனு சரணின் படத் தொகுப்பும் படத்திற்கு மிகவும் உதவியிருக்கின்றன. இயக்குநர் திறமைக்காரராக இருந்தால் கூட்டாளிகளின் திறமையும் நன்றாகவே வெளிப்படும். இசையமைப்பாளர் கே-வின் மெல்லிய மெலடி இசையும், இதற்கான மாண்டேஜ் காட்சிகளும் அசத்தல். அதிலும் ரித்திகாவை இவர்கள் துரத்துகின்ற காட்சிகளிலேயே நகைச்சுவை தெறிக்கிறது.  
இயக்குநர் மணிகண்டன் தனது சிறப்பான இயக்கத்தினாலும், சுவையான, உண்மையான திரைக்கதையினாலும் படத்தை போரடிக்காமல் கடைசிவரையிலும் ஒரு செஞ்சதுக்கத்தில் வீர நடை போடும் ராணுவ வீரனை போல நகர்த்தியிருக்கிறார்.
சென்னையில் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பதில் இருக்கும் கஷ்டம்.. வீட்டு ஓனர்கள் செய்யும் அல்ட்ராசிட்டி.. நகரத்துக்கு வரும் புதியவர்கள் வீடு கிடைக்காமல் படும்பாடு என்று அனைத்தையையும் பிட்டு, பிட்டு காட்சிகளில் மிக சுவாரஸ்யமாக தொகுத்தளித்திருக்கிறார் மணிகண்டன்.
இதேபோல் ஒரு தப்பை செய்யப் போய்.. அந்தத் தப்பு எத்தனை தப்புகளை தொடர்ந்து செய்ய வைக்கிறது என்பதையும் சாதாரண பாஸ்போர்ட் விவகாரத்திலேயே பிட்டு, பிட்டு வைத்திருக்கிறார். வெறும் 1300 ரூபாயில் முடிய வேண்டிய விஷயத்தை காசுக்காக திசை திருப்பும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி இருக்கும்வரையிலும் இது போன்று அப்பாவிகள் அல்லல்படுவதும் நடக்கத்தான் செய்யும்.
பொய் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் காந்தி தானே அதிகமாக பேசி விசாவை கெடுத்துக் கொள்வது.. போலி கையெழுத்து தாத்தா, பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லி விவகாரத்து படிவத்தில் மட்டும் கையெழுத்து போடாமல் எஸ்கேப்பாவது. கோர்ட்டில் நீதிபதியின் அழுத்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயங்கும் வாதி, பிரதிவாதிகள்.. குடும்ப நலக் கோர்ட்டில் கியூவில் நிற்கும் இன்றைய இளைய சமூகத்தினர்.. காசுக்காக குடும்பத்தை பிரிக்கவும் தயங்காத வழக்கறிஞர்கள்.. எதைப் பற்றியும் யோசிக்காமல் ஐடியா மட்டுமே கொடுக்கும் ஜூனியர்கள்.. என்று பலதரப்பட்டவர்களையும் உரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஈழத்து அகதியாகவே இருந்தால்தான் என்ன..? அவன் சோகம் அவனுக்கு. ஆனால் நடந்து கொள்ளும் முறை சரியில்லையென்றால் யாராக இருந்தாலும் சொல்லுவோம் என்கிற பாணியில் நேசனின் காபி குடிக்கும் ஸ்டைலை குத்திக் காட்டுவது.. அதே சமயம் அவருடைய சோகக் கதையைக் கேட்டுவிட்டு அவர் ஊமையாக நடித்ததை மன்னித்துவிட்டுவிடுவதுமான திரைக்கதையும் இயக்குநருக்கு பெருமை சேர்க்கிறது.
தானாகவே வந்து சரணடையும் இலங்கை அகதியை போராளியா என்று சந்தேகிக்கும் போலீஸ் என்று நமது ஊடகங்கள் பட்டென்று நியூஸ் போட்டு தாக்குவதையும் விளம்பரப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
நம்முடைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைத்தான் காமெடியும், படபடப்பும், டென்ஷனும், உருக்கமும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.
ஒரு திரைப்படம் கடைசிவரையிலும் பார்க்க வைப்பதோடு, பார்ப்பவரின் மனதுக்கும் ஒரு கனத்தைக் கொடுத்து அதுவரையிலும் அவர் கொண்டிருக்கும் ஒரு கொள்கை தவறு என்று அவரைத் திருத்த முயற்சிக்குமெனில் அந்தப் படமும், இயக்குநரும் நிச்சயம் ரசிகனுக்கு சொந்தமானவர்களே..!  
அந்த வகையில் இந்தப் படம் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்.  
மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

உச்சத்துல சிவா - சினிமா விமர்சனம்

18-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உச்ச நடிகர்களைத் தவிர மற்ற இரண்டாம் நிலை நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும்போது ஒன்று காத்திருக்கத் தொடங்குவார்கள்.. அல்லது கிடைக்கும் வேடத்தில் நடிப்பார்கள். இதுவும் இல்லையெனில், சொந்தமாக படமெடுத்து தங்களது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வரவழைப்பார்கள்.
சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் இப்படித்தான் தனது சொந்தத் தயாரிப்பான ‘நம்பியார்’ படத்தை நடித்து, தயாரித்து வெளியிட்டார். அதே பாணியில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் கரண்.
15-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் ஹீரோவாகவே தனி ஆவர்த்தனம் செய்திருக்கும் கரண், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்கிற 2011-ம் வருடம் வெளிவந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அந்தப் படமும் நன்றாகவே ஓடியது. அதன் பின்பு வந்த ‘கந்தா’, ‘சூரன்’ இரண்டும் அதிகம் ஓடாததால் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.
வடிவுடையானின் இயக்கத்தில் இவர் நடித்த ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்ற படம், ஒரு வருடத்திற்கு முன்பேயே தயாராகி இப்போது ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இன்னமும் அந்தப் படத்திற்கு விடிவு காலம் கிடைக்கவில்லை.
அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. நம் திறமையை காட்ட நாமளே சொந்தமாக படமெடுத்து ரிலீஸ் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் ‘சுதேசி’ படத்தை இயக்கிய ஜேப்பியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் இந்தப் படத்தை தனது மனைவி தேவியின் பெயரில் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் கரண்.

ஹீரோவான சிவா என்னும் கரண் ஒரு கால் டாக்சி டிரைவர். தன்னுடைய தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்திருக்கும் இவர் தாய் மீது அபரிமிதமான பாசம் வைத்திருக்கிறார். நாளை 33-வது முறையாக பெண் பார்க்கப் போகும் விஷயத்தை பல முறை போனில் சொல்லி ஞாபகப்படுத்துகிறார் அம்மா.
அன்றைய இரவில் சவாரிக்கு போய்விட்டு திரும்பும் வழியில் ஒரு பெண்ணும், ஒரு வாலிபனும் பதட்டத்துடன் ஓடி வருவதையும், அவர்களை சிலர் காரில் துரத்துவதையும் பார்க்கிறார் கரண். காரில் வந்தவர்கள் ஓடி வந்த வாலிபனை சுட்டுக் கொல்கிறார்கள். அந்தப் பெண் கரணின் காரில் ஏறி அபயம் கேட்க.. அந்தப் பெண்ணை காரில் ஏற்றி பறக்கிறார் கரண். இவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்தவர்கள் காயம் பட்டு பின்பு, போலீஸில் பிடிபடுகிறார்கள்.
தான் அழைத்து வரும் பெண்ணின் அழகில் மயங்கும் கரண் பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் காதலிக்கத் துவங்குகிறார். அந்தப் பெண் ஒரு கதையைச் சொல்கிறார். தன்னுடைய காதலுக்கு தனது அப்பா எதிர்ப்பினை காட்ட.. தனது சகோதரன் பச்சைக் கொடி காட்டினார். இதனால் தனது அப்பா தன்னைத் தீர்த்துக் கட்ட அடியாட்களை அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
இதை நம்பும் ஹீரோ அவரை காப்பாற்றியே தீருவது என்று கொள்கை முடிவெடுக்கிறார். ஹீரோயின் தனது அண்ணன் என்று சொல்பவர் இவர்களைத் தேடி வர.. பின்னாலேயே வரும் அப்பா அவரைச் சுட்டுக் கொல்கிறார்.
இப்போதும் ஹீரோயினை விட்டுக் கொடுக்காத ஹீரோ கரண் அவரை காப்பாற்றும் நோக்கத்தில் செல்ல.. பின்னாலேயே போலீஸும் துரத்துகிறது. போலீஸிடம் சொல்லி அவளது அப்பாவை பிடித்துக் கொடுக்கலாம் என்று ஹீரோ சொல்ல.. ஹீரோயின் மறுத்து ஹீரோவை ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்று சொல்லிவிட்டு காரை ரேஸ் கார் கணக்கில் ஓட்டத் துவங்க.. ஹீரோவுக்கு பயம் வந்துவிடுகிறது..!
இந்த ரேஸ் ஓட்டம் முடிவுக்கு வர ஹீரோயின் தப்பியோட நினைக்கும்போது போலீஸ் அவரைச் சுடுகிறது. குண்டு காயம்பட்டு ஹீரோயின் கீழே விழுக.. போலீஸ் ஏன் அவரைச் சுட்டது..? உண்மையில் ஹீரோயின் யார்..? இதன் பின் நடப்பது என்ன என்பதை தியேட்டருக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சற்றே விறுவிறுப்பான கதைதான். நீட்டான திரைக்கதைதான். ஹீரோ கரண்தான் படம் மொத்த்த்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்டுகள் அணிவகுக்கும்போது திரைக்கதையில் வேகம் பிடிக்கிறது.
புதிய கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் இன்ஸ்பெக்டர் இளவரசுவும், அவரது கூட்டணியினரும், போட்டுக் கொடுக்கும் போலீஸாக ரமேஷ் கண்ணாவும், போதை இன்ஸ்பெக்டராக வருபவரும் கவனத்தை ஈர்க்கிறார்கள். மிக டீஸண்ட்டாக போலீஸ் மிடுக்குடன் பேசும் இளவரசு, அதே நாகரிகத்துடன் ரமேஷ் கண்ணாவிடம் போனிலேயே மிரட்டுவதுகூட அழகுதான்.
சிகரெட், மது அருந்தும் காட்சிகளில் அதெல்லாம் கூடாது என்று சப் டைட்டில் போடுவதுபோல, கார் ஓட்டும்போது செல்போனில் பேசக் கூடாது என்பதற்கும் சப் டைட்டில் போடணும் போலிருக்கு..! கரண் போனில் பேசிக் கொண்டே கார் ஓட்டும் காட்சியில் நமக்கு ‘பதக் பதக்’ என்று இருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் வரும் ஒரு சீன் ‘என்னடா இது துவக்கத்திலேயே இப்படியா’ என்ற கேள்வியை எழுப்பினாலும் இன்றைய சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தைத்தான் அதில் சொல்லியிருப்பதால் பாராட்டலாம். ஆனாலும் அந்தக் காட்சி கொஞ்சம் நீளம்ண்ணே.. அதேபோல் ஞானசம்பந்தன் காட்சியிலும் படத் தொகுப்பாளர் கத்திரியை போட்டிருக்கலாம்.
படத்தில் மிகப் பெரிய குறை நேஹா என்கிற ஹீரோயின். எந்தப் பக்கம் பார்த்தாலும் அவரை ரசிக்க முடியவில்லை. எத்தனை திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் கரண். அவருக்குத் தெரியாததா..? ஆனாலும் ஏன் இப்படி தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. நடிப்பும் வரவில்லை. கரணுக்கும் ஈடு கொடுக்கவில்லை. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் கொஞ்சம் பார்க்கலாம். அவ்வளவுதான்..!
கரண் சிறந்த நடிகர்தான். அதில் சந்தேகமில்லை. காட்சிக்கு காட்சி எந்த இடத்திலும் இயக்கத்தில் இடர்களே இல்லாமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் கரண். கரணின் பண்பட்ட நடிப்பில் மிமிக்ரி ஆக்டிங் சூப்பர். இப்படியொரு நடிகருக்கு ஏன் நல்லதொரு கேரியர் கிடைக்காமலேயே இருக்கிறது என்று தெரியவில்லை.
கடைசிவரையிலும் முகத்தைக் காட்டாமலேயே ரேணுகா, கரணின் அம்மாவாக வாய்ஸ் கொடுத்திருக்கிறார். குரலே நடிப்பைக் காட்டுகிறது. இவர்கள் இல்லாமல் நடுவில் போதை மருந்தை விற்பனை செய்யும் நரேன் டீமின் செயல்பாடுகள் பற்றிய போர்ஷன் மிக அழகு. அதைப் படமாக்கியவிதமும் அழகு.
இருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் படிக்கிற தங்கையின் படிப்பு செலவுக்காக போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறேன் என்று அந்தப் பையன் சொன்னாலும், அவனுடைய தங்கையை ஏதோ 9-ம் வகுப்பு மாணவி போல காட்டியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதேபோல் அவர் நாளை பெண் பார்க்கப் போகும் இடத்திற்கே நடுராத்திரியில் சுவர் ஏறிக் குதித்திருக்கிறார்கள் என்றெல்லாம் திரைக்கதை எழுதுவது டூ மச்சால்ல இருக்கு..?
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. சண்டை காட்சிகளில் மிகவும் முனைப்பாக நடித்திருக்கிறார் கரண். கனல் கண்ணனின் முதல் பாடல் காட்சியும், அதைத் தொடர்ந்த சண்டை காட்சியும்கூட நேரத்தை வீணாக்கிவிட்டன. படத் தொகுப்பாளர் கார் சேஸிங் காட்சிகளை கொஞ்சம் பதட்டத்துடன் நறுக்கியிருக்கிறார் போலும். அவைகள் மட்டுமே பயமுறுத்தியிருக்கின்றன.
நரேன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியதுபோல் மீதமிருக்கும் அனைத்தையும் சீரியஸாகவே படமாக்கியிருந்தால் படத்தின் தன்மை மாறியிருக்கும். இப்போது ஏதோ கமர்ஷியல் படம் செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
கரண் ஸார்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!

சதுரம்-2 - சினிமா விமர்சனம்

19-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில வகையான திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்படவே கூடாது என்று ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தன. அது அதீத வன்முறை எனப்படும் சித்ரவதைக் காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள்.
இவைகளெல்லாம் ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும், ஏன் தெலுங்கில்கூட எடுத்து முடிக்கப்பட்டும் தமிழில் அதிகமாக வரவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்கலில் சில காட்சிகளில் மட்டுமே காட்டப்படும். அவைகள்கூட ‘ஏ’ சர்டிபிகேட்டுடன் அதிகம் பார்வையாளர்களைக் கவராமலேயே போய்ச் சேர்ந்துவிடும்.
அரிவாள் வெட்டு, ரத்தக் களறியைவிடவும் இது போன்ற படங்கள் அதிகளவில் மனதைப் பாதிக்கும் வாய்ப்புண்டு என்பதாலும், தமிழ்ச் சூழலுக்கு இவை அன்னியமானவை என்று புறந்தள்ளப்பட்டிருந்தன.
2014-ம் ஆண்டு ‘SAW’ என்கிற பெயரில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் போட்ட முதலீட்டைவிடவும் 100 மடங்கு லாபம் சம்பாதித்து ஹாலிவுட்டையே அதிர வைத்தது. 5 அல்லது 10 மடங்கு என்றால்கூட பரவாயில்லை. 100 மடங்கு எனில் எப்படி..?
எப்படி கிடைத்தது இந்த வெற்றி..? புதுமையான கதை.. சுவையான திரைக்கதை.. அழுத்தமான இயக்கம்.. அற்புதமான நடிப்பு.. இதுவரையிலும் பார்த்திராத ஒரு திரைப்படம் என்று புதுமை வடிவத்தில் வந்திருந்த அந்த படத்தின் தொடர்ச்சியான சீரியஸ் வந்துவிட்டன. இருந்தாலும் முதல் பகுதி இப்போதும் தனித்தே நிற்கிறது.
அந்த ஹாலிவுட் படத்தின் கதையை முறைப்படி எழுதி வாங்கி.. அதில் தமிழுக்கேற்றாற்போல் சிற்சில மாற்றங்களை செய்து ‘சதுரம்-2’ என்கிற பெயரில் உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

2014 ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நெல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே இறந்து போகிறார்கள். இப்படித்தான் படம் துவங்குகிறது.
ஆனால் அடுத்தக் காட்சியிலேயே, இரும்பு ஷட்டரால் அடைக்கப்பட்ட ஒரு சதுர வடிவிலான அறையில் இரண்டு பேர் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் கண் விழிக்கிறார்கள். இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகமே இல்லை. யார், எதற்காக தங்களை இங்கே கடத்தி வந்து கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் நடுவில் வித்தியாசமான ஒரு கொலைக் கருவியை தலையில் மாட்டிய நிலையில் ஒரு பிணம் கிடக்கிறது.
முதல் லின்க்காக அவர்கள் இருவரின் பேண்ட் பாக்கெட்டிலும் கவருக்குள் ஆடியோ கேஸட் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. சற்றுத் தொலைவில் டேப் ரிக்கார்டரும் இருக்க மாட்டிக் கொண்டவர்களில் ஒருவரான ரோஹித் அதை எடுத்து அதில் கேஸட்டை போட்டுக் கேட்கிறார்.
“நீங்கள் இருவருமே தப்பு செய்தவர்கள். இந்த உலகத்தில் வாழவே தகுதியற்றவர்கள். இங்கேயிருந்து தப்பிக்க சில வழிகள் உண்டு. நீங்கள் ஒருவரையொருவர் கொலை செய்தால் தப்பிக்கலாம். இல்லையெனில் தப்பிக்கிறதுக்கு இதிலேயே க்ளூ உண்டு. முடிந்தால் சாயந்தரம் 6 மணிக்குள்ளாக தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நான் உங்களை கொலை செய்வேன்..” என்கிறது குரல்.
இருவருக்குமே இதே எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க.. இருவரும் சற்று யதார்த்த நிலைமைக்கு வந்து யோசிக்கிறார்கள். தாங்கள் யார்..? தங்களுக்குள் ஏதாவது தொடர்பு முன்பு இருக்கிறதா என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்..
உண்மையில் ரோஹித் ஒரு புகைப்படக் கலைஞன். அதிலும் வில்லங்கமான புகைப்படங்களை எடுத்து அதில் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு வித்தியாசமான புகைப்படக் கலைஞன். யோஜ் ஜெபி ஒரு மருத்துவர். மனைவி, மகள் என்று குடும்பம் இருந்தாலும், தனது கிளினிக்கில் பணியாற்றும் சக பெண் மருத்துவரான சனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் பிரதீப்பும், சுஜா வாருணியும் அன்னியோன்யமான தம்பதிகள். சுஜா இரட்டைக் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். பிரதீப் தான் வேலை செய்யும் நிறுவனத்தை லாபம் ஈட்ட வைத்தமைக்காக பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெற்று பெருமைக்குரியவராக இருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கேன்சர் என்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் அவர் உயிருடன் இருப்பார் என்பதே தெரியாத நிலையில் வாழ்க்கையை ஓட்டுகிறார். இந்த நேரத்தில் டெல்லிக்கு அலுவலக வேலையாக கிளம்புகிறார் பிரதீப். கூடவே சுஜாவையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். இவர்கள் சென்ற விமானம்தான் திடீரென்று விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் சுஜா இறந்து போக.. தனிக்கட்டையாகிறார் பிரதீப்.
இப்போது இந்த பிரதீப்புக்கும், டாக்டர் யோக் ஜெபிக்கும், ரோஹித்துக்கும் என்ன தொடர்பு..? கடைசியாக அந்த இடத்தில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா..? யார் அவர்களை இப்படி கட்டிப் போட்டு வைத்தது என்பதெல்லாம் சுவையான திரில்லர் கலந்த திரைக்கதையின் முடிவு.
ஒரு திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ அது அப்படியே இந்தப் படத்திலும் இருக்கிறது. முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரையிலும் செமத்தியான விறுவிறுப்பு.. திரைக்கதையில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்படும்போதும் சுவாரஸ்யங்கள் கூடிக் கொண்டே போவதால் படத்தின் மீதான ஈர்ப்பு பெரிதும் கூடுகிறது.
சுவர்க் கடிகாரம்.. உளவு கேமிரா.. சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடாரி, துப்பாக்கி, பர்ஸில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம்.. இருவரில் ஒருவர் அடையாளம் தெரிய ஆரம்பித்து இருவருக்குள்ளும் புகைச்சல் ஆரம்பிக்கும் சமயம்.. வேறொரு கோணத்தில் படம் நகர்வது.. என்று பல்வேறு வகையான சஸ்பென்ஸ், திரில்லர்களை திரைக்கதையில் இணைத்து நம்மை பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர்.
‘சா‘ படத்தின் தொடர்ச்சிகளின் வெற்றிக்குக் காரணமே விதம்விதமான சாவு கருவிகளை படத்தில் காட்டியிருப்பதுதான். இதிலும் ஒரு திருட்டு வழக்கறிஞரை அது போன்ற ஒரு கருவியினால்தான் கொலை செய்கிறார்கள். இதுவும் ஒரிஜினல் ‘சா’ படத்தில் இருப்பதுதான்.
“ஒரு நிமிடத்திற்குள் நம்பரைத் தட்டி கழட்டவில்லையெனில் துப்பாக்கி வெடித்து மூளை சிதறி பரிதாபமாய் சாவாய். நீயே நம்பரை தேடிக் கொள். அருகில் இருக்கும் பெட்டிக்குள் இருக்கும் 20 ரூபாய் நோட்டில் இந்தக் கருவியை செயலிழக்கச் செய்யும் பாஸ்வேர்டு இருக்கிறது. முடிந்தால் தப்பித்துக் கொள்…” என்கிறான் கொலைகாரன். அந்த நிமிட பதைபதைப்புடன் பெட்டியைத் திறந்தால் உள்ளே ஏகப்பட்ட 1000 ரூபாய் பண நோட்டுக்கள். அதில் அந்த 20 ரூபாய் நோட்டை தேடியெடுப்பதற்குள்ளாக நேரமானதால் ஆள் காலி.. ஆனாலும் அந்த நேர பரபரப்பையும், டென்ஷனையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
“வாழ்க்கையை நாம தேர்ந்தெடுக்கலாம். நம்மளையே தேர்ந்தெடுக்குற ஒரு விஷயம் மரணம் மட்டும்தான்..”, “வாழத் தகுதியில்லாதவங்களுக்கு மரணம்தான் பரிசு…”, “வாழணும்னு ஆசைப்படுறவனால வாழ முடியல; ஆனா கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்கா வாழலைன்னா மரணம் உறுதி…” – இது மாதிரியான வசனங்களை கட்டைக் குரலில் பேசி திகிலைக் கூட்டியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதைக்குப் பொருத்தமான வசனங்கள்தான்..!
‘பில்லா’ படத்தில் வில்லனாக நடித்து பயமுறுத்திய யோக் ஜெபிதான் இந்தப் படத்தின் நாயகனை போல வாழ்ந்திருக்கிறார். அடக்கமான கணவர்.. யோக்கியமான மருத்துவர்.. மகள் மீது அக்கறை கொண்ட அப்பா.. அதே சமயம் மனைவியையும் மீறி கேர்ள் பிரண்டை நேசிக்கும் குணம்.. என்று பலவிதங்களிலும் தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
அந்த சதுர அறைக்குள் முதலில் “கூல் டவுன்…” என்று சொல்லி நிதானமாக யோசிக்கச் சொல்கிறார். பின்பு இவரே தனது குடும்பத்தினரை கடத்தி வைத்திருக்கிறான் என்பது தெரிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து தனது காலை தானே கட் செய்துவிட்டு தப்பிக்க நினைக்கிறார். அந்த நேரத்து நடிப்பும், துடிப்பும் படத்தை தாங்கியிருக்கிறது.
இவருக்கு ஈக்குவலாக நடித்திருக்கும் ரோஹித்தும் அப்படியே.. அவருடைய பாகத்தில் பதட்டத்தையும், பரபரப்பையும் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார். அதே சமயம் அடக்கமான சி.இ.ஓ. போன்று இருக்கும் பிரதீப் கடைசியில் பொங்கியெழுந்து சாமியாடும்போது நம்பவே முடியவில்லை.
யோக் ஜெபியின் மனைவி, மகள், சனம் பிரசாத், காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் டிவி நடிகர்கள் என்று பலரும் தங்களது கேரக்டர்களில் கச்சிதமாகத்தான் நடித்திருக்கிறார்கள்.
ஜி.சதிஷீன் ஒளிப்பதிவும், கிரீஷின் பின்னணி இசை இயக்குநருக்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன. பயத்தைக் கூட்டிக் காண்பித்ததில் இருவருக்கும் பெரும் பங்குண்டு. இதேபோல் காட்சிகளை நறுக்குத் தெரித்தாற்போல் கிளைமாக்ஸில் காட்டி அசத்தியிருக்கும் படத் தொகுப்பாளர் ராஜா சேதுபதிக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒரு சிறிய கதை.. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை.. பாடல்கள் இல்லை. ஆடல்கள் இல்லை.. சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் படத்தை பயத்துடன் கடைசிவரையிலும் உட்கார வைத்து பயத்துடனேயே பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
குழந்தைகள் மட்டும் பார்க்கவே கூடாத படம். வயதுக்கு வந்தவர்கள் துணையுடன் பார்க்கலாம்.. ஆனால் படம் முடிந்தவுடன் அந்த கொலை வெறி மைண்ட்டை அங்கேயே கழட்டிவைத்துவிட்டு வீடு திரும்புவது அவருக்கும் நல்லது.. அவர்தம் குடும்பத்திற்கும் நல்லது.