தாண்டவம் - சினிமா விமர்சனம்

29-09-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 
வழக்கமான பழி வாங்கும் படலம் அடங்கிய கமர்ஷியல் படம்தான்..! ஆனால் இத்தனை ஆண்டுகளாக பார்த்து, பார்த்து சலித்துப் போன திரைக்கதையில் ஹீரோவுக்கு கண் இல்லை.. ஆனால் இருப்பது போன்ற புதிய கான்செப்ட்டாக வைத்து நம்மை திருப்திப்படுத்த முனைந்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஆனால் முடியவில்லை என்றே நினைக்கிறேன்..!
'ரா' அமைப்பின் உயரதிகாரியாக இருக்கும் விக்ரம் டெல்லியில் இருந்து தப்பித்த தீவிரவாதக் கும்பலைப் பிடிக்க லண்டனுக்கு படையெடுக்கிறார். அங்கே ஏகப்பட்ட “சீன்”களை போட்டு துப்பறிய முயலும்போது ஒவ்வொரு டிவிஸ்ட்டாக அவிழ்கிறது. அந்தப் போராட்டத்தில் தனது கண் பார்வையையும், மனைவியையும் இழக்கிறார். அந்த வலியோடு அதற்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடித்து கொலையும் செய்கிறார். இறுதியில் தப்பித்தாரா இல்லையா..? உலகின் நம்பர் ஒன் லண்டன் போலீஸ் அவரை சும்மா  விட்டதா என்பதையெல்லாம் காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்..!

திரைக்கதை இவ்வளவு திராபையாக இருக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை..! அடுத்தடுத்த காட்சிகளை மிக எளிதாக யூகிக்கும்வகையிலேயே திரைக்கதை அமைத்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இது நம்ம படம்ன்னு ஆடியன்ஸ் நினைச்சு கை தட்டுவாங்கன்னு நினைச்சாங்களோ என்னவோ..?

அதேசமயம் லண்டன் போலீஸை இதைவிடவும் வேறு யாரும் குறைவாக நினைத்து, கேவலமாக காண்பித்திருக்கவும் முடியாது.. சந்தானம் சிக்கிய பின்பும் அலட்சியமாக அவரை அனுப்பிவிட்டு, மேலும் ஒவ்வொரு கொலையின்போதும் அவரை தூக்குவது தமிழ்நாட்டு போலீஸின் பழக்கம். இதையே அந்த ஊர் போலீஸுக்கும் காண்பித்துவிட்டார் இயக்குநர்..!

ஐபேடை கையில் வைத்துக் கொண்டு நாசர் விசாரணை செய்வதெல்லாம் செம காமெடி.. வெறுமனே நோட்பேடில் எழுதி வைத்தெல்லாம் ஒரு கொலையின் முடிச்சை கண்டுபிடிக்க முடியுமா என்ன..? ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் விக்ரமை அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுப்பதும், விக்ரம் அழிக்கச் சொன்னதும் அழிப்பதும் அந்த ஊர் மனித உரிமை மீறலுக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் லாஜிக்கே இல்லாமல் இவர் ஏன் போட்டோ எடுக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை..! அதான் விபத்து ரிக்கார்டில் புகைப்படத்துடன் பதிவாகிவிடுமே..! அதைக்கூட சந்தானத்திடம் காட்டியிருந்தால் நமக்குத் தலைவலி 20 நிமிடத்தோடு போயிருக்கும்..!

இதைவிட அபத்தமான லாஜிக் மீறல். விக்ரமின் கல்யாணத்தில்.. படித்திருப்பது கண் டாக்டருக்கு.. வேலை பார்ப்பது டெல்லியில்.. இவ்வளவு எஜூகேட்டடாக இருக்கும் பெண்தான் தனக்கு வரப் போகும் கணவன் என்ன வேலை பார்க்கிறான் என்றுகூட தெரிந்து கொள்ளாமலா கழுத்தை நீட்ட சம்மதித்திருப்பாள்..?  அதிலும் இருவருக்கும் இடையில் லவ் வரும்வரையிலும் “நோ டச்சிங் டச்சிங்” என்று கவுரவமான ஒப்பந்தம் வேறாம்..! என்ன கண்றாவி திரைக்கதை இது..!?

கென்னியாக நடித்தவர் தனது சோகக் கதையைச் சொன்னவுடன்  அதற்காகவே காத்திருந்தாற்போல் அனைத்து வில்லன்களும் வரிசையாக விக்ரமின் கண் முன்னே ஒன்று சேர்கிறார்கள்.. திரைக்கதைக்காக ரூம் போட்டு யோசிக்காமல், காரில் போகும்போதே எழுதியிருப்பாரோ என்னவோ..?

சென்னை போலீஸ் மாதிரி லண்டன் போலீஸும் துரத்துது.. துரத்துது.. துரத்துது.. துரத்திக் கொண்டேயிருக்குது..! ஆனால் விக்ரமை பிடிக்க முடியவில்லை. அதே டிரெஸ்ஸை போட்டுக் கொண்டுதான் விக்ரம் லண்டனில் இதற்குப் பின்பும் வலம் வருகிறார்.. ரொம்ப பட்ஜெட் பற்றாக்குறையோ..?

இறுதிக் காட்சியில் இன்னும் காமெடி.. தளபதி படத்தின் தோல்விக்கு மிகப் பெரும் காரணமாய் இருந்தது அப்படத்தின் கிளைமாக்ஸ்தான்..! அதேதான் இங்கேயும்..! இத்தனை கொலைகளை செய்தவரை இரு நாட்டு அரசுகளும் பாராட்டுவதை கனவில்தான் காண முடியும்..! அதிலும் இங்கிலாந்தில்..!? முதலில் உளவுத்துறையின் ஏஜெண்ட், உயரதிகாரிகள் யாரையும் எந்த நாடுமே அடையாளம் காண்பிக்க மாட்டார்கள்..! உளவுத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் கண்காணிப்பில் இருக்கும் விருந்தினராக மட்டுமே செல்ல முடியும் என்று என் சிற்றறிவு  சொல்கிறது.. ஐயா.. கொலைகளையும் செய்துவிட்டு.. தப்பிக்கவும் செய்கிறார்.. சீரியஸ் டைப் கதைகளில் லாஜிக்கை பார்க்கத்தான் வேண்டும்..!

இதுதான் இப்படி என்றால் நடிப்பு.. மகா சொதப்பல்..! ராஜபாட்டையில் எந்தெந்த கோணங்களிலெல்லாம் விக்ரம் வயதானவராகத் தோன்றுவாரோ அது போலவே காட்சிகளை வைத்திருந்தார்கள். இதிலும் அப்படியே..! வயதாவதைத் தடுக்க முடியாதுதான்.. ஆனால் கேமிராவில் ஏமாற்றலாமே..? வழக்கமான விக்ரமையே காணோம்..! இறுக்கமான முகத்துடன் கண் பார்வையற்றவர் பேசும்பேச்சுக்கள் ஓகே.. ஆனால் கல்யாண மாப்பிள்ளை விக்ரமும் அப்படியேதான் பேச வேண்டுமா..? தில், தூள் விக்ரமெல்லாம் எங்கே போய்த் தொலைஞ்சார்..?

இதய தெய்வம்.. தங்கத் தாரகை அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்.. அனுஷ்காவும் இல்லையேல் படத்தில் உக்காந்திருக்கவே முடியாது என்பது இன்னொரு விஷயம்..! அவரது அழகையும், நடிப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தெலுங்குவாலாக்கள்தான்.. அந்த டெக்னிக் அவர்களுக்குத்தான் வரும்போலிருக்கிறது..! முழுக்க, முழுக்க போர்த்திக் கொண்டு நடித்தாலென்ன..? ஒரு கனவுக் காட்சியிலாவது நடனத் தாரகையை ஆட வைத்திருக்கலாமே..? “உயிரின் உயிரே” பாடலில் மட்டும்தான் கொஞ்சமாவது பார்க்க முடிந்தது..!  “அனிச்சப் பூவழகி” பாடலில் நீரவ் ஷாவின் கேமிரா செய்த சதி வேலையில் அம்மணியின் முகம் விக்ரமின் முகத்தைவிட பயங்கரமாக காட்சியளித்ததுதான் கொடுமையிலும் கொடுமை..!

சந்தானம், சரண்யா, டெல்லி கணேஷ், தம்பி இராமையா என்று பட்டியல்கள் இருந்தாலும் எதுவும் கதைக்கு ஆகவில்லை. சந்தானத்தின் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என்று பட்டிமன்றமே நடத்தலாம்..! அந்த அளவுக்கு கொடுமை..! தம்பி இராமையாவின் பேச்சையெல்லாம் சிரிப்பு வருது ரீதியில் பலரும் எழுதியிருப்பதை பார்த்தவுடன் எனக்கே என் மீது டவுட் எழும்பியிருக்கிறது. நான்தான் முசுடாகிவிட்டேனோ..? என்ன கொடுமை சரவணா இது..?

லண்டன் அழகிப் போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் எமி ஜாக்சன். இராம.நாராயணன்கூட நல்லபடியாக இந்தக் காட்சியை எடுத்திருப்பார். இதுக்குத்தான்யா இந்த விஷயத்துல ஷங்கரை அடிச்சுக்க முடியாதுன்னு சொல்றது.. மெகா பட்ஜெட் படம்.. மிகப் பெரிய சீன்ஸ் சீக்குவேஷன்ஸ் வேண்டாமா..? நிஜமாகவே ஏவி.எம். ஏசி புளோரில் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்..!  இது மட்டுமில்லை.. எமி ஜாக்சனுக்கு நடக்கும் பாராட்டு விழாவும் ஏவி.எம்.மில்தான். இந்தக் காட்சிக்குப் பின்புதான் படத்துக்கு பூசணிக்காய் உடைத்தார்கள். கூடவே கேக் வெட்டி எல்லாருக்கும் தன் கையாலேயே கேக்கை கொடுத்துவிட்டுத்தான் “ஐ” ஷூட்டிங்கிற்கு ஷிப்ட் ஆனார் எமி.. கேக் வாங்கிய புண்ணியவான்களில் அடியேனும் ஒருவன்..!

எந்தக் காட்சியிலும் அழுக வைக்காமல், மெல்லிதாக வருத்தப்பட வைத்தே நடிக்க வைத்திருப்பதால் எமியின் நடிப்புக்கு எதுவும் ஸ்கோர் சொல்ல முடியவில்லை. அடுத்தப் படத்தில் பார்க்கலாம். பெல்காம் அழகி  லட்சுமிராயும் இன்னொரு பக்கம் அவதாரமெடுத்திருக்கிறார். இதுவும் அடிக்கடி கண நேரத்தில் வந்துபோவதுதான்..! நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பார்க்க பளீச் சென்று பிரெஷ்ஷாக இருந்தது இந்த டோனியின் கில்லிதான்..!

அண்ணன் கஜபதிபாபுவைப் பத்தியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்..! தெலுங்கில் கொஞ்சம் மார்க்கெட் வேண்டும் என்பதற்காக நடிக்க வைத்திருக்கிறார்கள்..! இதைவிட பெரிய விஷயம் படத்தில் ஏதுமில்லை.. ஆனால் நேரில் மனிதர் அவ்வளவு அழகான தமிழ் பேசுகிறார். பிறந்ததும், படித்ததும் சென்னையில்தானாம்..! அண்ணாத்தே ரொம்ப லேட்டா கோடம்பாக்கத்துல எண்ட்ரியாகியிருக்காரு..! விக்ரமுடன் போனில் பேசும்போது அனுஷ்காவை வைத்துக் கொண்டு "ஜாக்கிரதை.. தொலைச்சிருவேன்" என்பது போல் மறைமுகமாக எச்சரிக்கும்போதுதான் கொஞ்சூண்டு வில்லத்தனம் தெரிந்தது..!

தாண்டவம் டைட்டில் சாங்கும், “அனிச்சப் பூவழகி” பாடலும், “உயிரின் உயிரே” பாடலும் கேட்கும்படி இருந்தது என்றாலும், பார்க்கும்படி இல்லை..! ஜி.வி.பிரகாஷின் அடுத்த படங்களில் இதுபோல் சுதந்திரமாக தான் செய்ததை தானே திரும்பவும் எடுத்துக் கொடுத்தால்கூட நலம்தான்..!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான்.. லண்டனையும், தமிழ்நாட்டையும் அழகாகக்  காண்பித்திருக்கிறார். ஆனால் அதற்காக அந்த ஆஸ்பத்திரியின் முகப்பையே எத்தனை தடவைதான் காட்டுவது..? வேறு கோணத்தில் இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாமே..? ஏரியல் வியூவில் லண்டன் நகரம் அழகுதான். ஆனால் குண்டு வெடிப்பதாகச் சொல்லி சிஜியில் ஆங்காங்கே காட்டுவதுதான் பல்லை இளிக்கிறது..! ரைட்டு.. விஜய்யை ரொம்பவும் ஓட்ட வேண்டாம்..! ஆனால் அதே சமயம், இந்தக் கதைக்கும், திரைக்கதைக்கும்தான் இத்தனை சண்டை, சச்சரவுகளா என்று ஆயாசமும் தோன்றுகிறது..!

படம் ரொம்ப மோசமும் இல்லை.. ரொம்ப ஓஹோவும் இல்லை. சராசரிதான்.. பார்க்கணும்னு நினைச்சா பார்க்கலாம். இல்லைன்னா விட்ரலாம்.. எதுவும் தப்பில்லை..!

சாட்டை - சினிமா விமர்சனம்

23-09-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமூக அக்கறையுடன், தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வந்திருக்கும் படம் இந்த சாட்டை..! முதல் நன்றி பிரபு சாலமனுக்கு.. இப்படியொரு அற்புதமான படத்தினை தயாரித்தமைக்கும்.. தனது சீடனுக்கு, புதுமுக இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்கும்..!


 
ஒழுக்கம், கட்டுப்பாடு, படிப்பு இது எதுவுமே இல்லாத திருவண்ணாமலை வந்தாரங்குடி அரசுப் பள்ளிக்கு மாற்றலாகிவரும் அறிவியல் ஆசிரியர் தயாளன், மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பள்ளியைத் தலைகீழாகப் புரட்டி.. ஆசிரியர்கள், மாணவர்கள் துணையுடன் பள்ளியை முன்னணிக்கு கொண்டு வருவதுதான் இந்தச் சாட்டை..!

சிறந்த திரைக்கதையுடன், கொஞ்சம் நாம் பார்த்து பழகிப் போன சீரியல் டைப் காட்சிகளுடனும், தேர்ந்த நடிப்புடனும் இந்தச் சாட்டை பலருக்கும் எதிராக தனது சாட்டையைச் சுழற்றியிருக்கிறது..!

வட்டிப் பணம் தராதவர்கள் என்று நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்டி வைக்கும் அளவுக்கு தரம் கெட்டுப் போயிருக்கும் பள்ளி என்பதை கனி வரும் முதல் காட்சியிலேயே உணர்த்திவிட்டார் இயக்குநர்.. பள்ளியின் அலங்கோல நிலை.. கக்கூஸின் அவலம்.. மாணவர்களின் தறிகெட்டத்தனம்.. ஆசிரியர்களின் பொறுப்பின்மை என்று வரிசையாக பலவும் இருப்பதை சில குறிப்புகள் மூலமாகவே உணர்த்திவிட்டு மிக வேகமாக தயாளனை பேச வைத்திருக்கும் அந்த்த் திரைக்கதையை படம் முடிந்த பின்புதான் யோசிக்கவே முடிந்தது..!

தனது முதல் கூட்டத்திலேயே தயாளன் அந்தப் பள்ளியைப் பற்றிப் பேசுவதும்.. தயாளனின் அறிமுகத்திலும், பேச்சிலுமே ஹெட்மாஸ்டர் ஜூனியர் பாலையா, தயாளன் மீது தனது பார்வையைச் செலுத்துவதும் சீரியல் டைப் காட்சிகள்தான் என்றாலும், கதையின் ஓட்டத்தில் எதுவுமே தெரியவில்லை..!

சமுத்திரக்கனி அலட்டல் இல்லாமல் வெகு இயல்பாக தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..! ஒரு ஆசிரியருக்கு முதல் தேவை நல்ல குரல்.. கம்பீரமான தோற்றம்.. உறுதியான பார்வை.. இவை மூன்றுமே கனியிடமிருந்து இயக்குநருக்கு கிடைத்திருக்கிறது..!

தம்பி ராமையா போன்ற வாத்தியார்கள் இன்றைக்கும் தனியார் பள்ளிகளில்கூட இருக்கிறார்கள்..! “படிச்சா படி.. படிக்காட்டி போ..” என்று சொல்லும் இந்த அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் அந்தக் கேரக்டருக்கு தம்பி ராமையாவை விட்டால் வேறு யார் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.. ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்ற மீட்டிங்கில் இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டு ஒரு ஆக்சன் கொடுக்கிறார் பாருங்கள்.. ஹாட்ஸ் அப்.. அசத்தல்..!

டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் காட்சியில் அவருடைய நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங்காக இருந்தாலும் ரசிக்கக் கூடியதே. பள்ளியில் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்தாலும் தனது அடிப்பொடிகளை வைத்து அவர் நடத்தும் வித்தைகள் சுவாரஸ்யமானவை.. தன்னுடைய ஈகோவை ஒரு மனிதன் எப்போதும் கைவிட மாட்டான் என்பதற்கு தம்பி இராமையாவின் கேரக்டரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும், கிளைமாக்ஸில் இருக்கும் திடீர் திருப்பம், வழக்கமான சினிமாத்தனமாக திரும்பி அதுவரையிலும் தம்பியின் கேரக்டர் மீதிருந்த ஒரு ஈர்ப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது என்பதும் உண்மை..

பாழாய்ப் போன தமிழ்ச் சினிமாவின் வழக்கப்படி பள்ளியென்றாலும், காதலை காட்டியாக வேண்டுமே என்பதற்காக யுவன், மகிமா காதலையும் காட்டியிருக்கிறார்கள்.  எங்கே இந்த இனக் கவர்ச்சியை காதல் என்று சேர்த்து வைத்துவிடுவார்களோ என்ற பயத்துடன் இருந்தேன்.. நல்லவேளை.. இறுதியில் எந்த முடிவும் சொல்லாமலேயே முடித்துவிட்டார்கள். அதுவரையிலும் சந்தோஷம்தான். ஆனாலும் இவர்களது காதலுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். “காதலிக்கு பிடித்ததுபோல் நடந்து கொள். நல்லா படிச்சாத்தான் அவளுக்குப் புடிக்கும்னா அதையே செய்..” என்கிற சமுத்திரக்கனியின் அட்வைஸ்.. அனைத்து காதல்களுக்கும் பொருத்தமானதுதான்..!

“கபடி கபடியை எழுதி, அதனை படி படி என்று மாற்றுவது.. ஆங்கில வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே பேசிப் பழகுங்கள் என்பது.. தோப்புக்கரணத்தில் இருக்கும் ஒரு அறிவியலை வெளிப்படுத்துவது.. குறைந்த மார்க் எடுத்தாலும், போன தடவைக்கு 2 மார்க் கூடுதல் என்றதால் அதனை பாராட்டுவது.. புத்தகத் திருடன் அட்டையுடன் சுற்றும் மாணவனை அன்புடன் கண்டிப்பது.. லேடீஸ் பாத்ரூமை எட்டிப் பார்த்த குற்றத்திற்காக தண்டனை பெறும் சிறுவனுக்காக பி.டி. டீச்சருடன் சண்டையிடுவது.. சத்துணவை கடத்தும் வாத்தியாரையும், நூலகத்தை திறக்காத நூலகரையும் மீட்டிங்கில் போட்டுத் தாக்குவது.. பாலையா வீட்டில் வைத்து தம்பி இராமையாவை சாத்துவது..” என்று படத்தில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை..!

செய்யாத குற்றத்திற்காக தான் அடி வாங்கியும், மாணவர்களின் எழுச்சியை தடை செய்வது.. மகிமாவின் வீட்டிற்குச்  சென்று அவளை மீண்டும் படிக்க அனுப்பும்படி சொல்வது.. ஒரு பாடல் காட்சியில் மாணவர்களின் மனதில் இடம் பிடிப்பது இதெல்லாம்.. பழமையான சினிமா பாணிதான் என்றாலும்,  வேறு வழியில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..! கிராமப் புறங்களில் இன்றைக்கும் இந்தக் காதலினால் பல பெண்களின் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.. குடும்பமே முக்கியம் என்ற சூழலில் இயங்கும் நமது கலாச்சாரம் மாறினால் ஒழிய.. இது போன்ற சம்பவங்களை நிறுத்தவும் முடியாது..!

ஹெட்மாஸ்டர் ஜூனியர் பாலையா, சமுத்திரக்கனியின மனைவி சுவாசிகா, மகிமாவின் அப்பா, மகிமாவைத் தொடும் வாத்தியார், தம்பி இராமையாவின் அல்லக்கை ஆசிரியர்கள்.. மாணவர்களின் காதல் கவிதையை சந்திக்கும் மிடில் ஏஜ் ஆசிரியை.. கோபக்கார பி.டி. டீச்சர், ஸ்கூல் பெஞ்சை வீட்டு விசேஷத்துக்கு எடுத்துச் செல்லும் ஆட்கள்.. என்று பலருமே சுவாரசியமான கேரக்டர்ஸ்..! சுவாசிகா மருத்துவமனை வாசலில் நின்று பேசும் அந்தக் காட்சியும், அதனை எடுத்தவிதமும் நன்று..!

கனியின் இறுதியான முடிவு எதிர்பார்த்துதான் என்றாலும், அதனை வைத்து அவர் பேசும் பேச்சும், அந்தக் காட்சிகளும்.. இடுப்பில் கத்தியுடன் மேடைக்கு வந்து அமரும் தம்பி இராமையாவின் ஆக்சனும், பின்பு அவருடைய மனம் நெகிழ்தலும்.. படத்தின் தன்மையை மாற்றியமைத்தாலும் ஜீரணிக்க வேண்டியதுதான்..!

பள்ளிக்கூடத்தைச் சுற்றியே கதை நகர்ந்தாலும், கொஞ்சமும் சலிப்பு வராத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்..! யுவன்-மகிமா காதல் காட்சிகளும் படத்தினை வேறு பக்கம் நகர்த்திக் கொண்டு போய்விடுமோ என்ற பயத்துடன் இருக்கும்போது மகிமா-போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தவுடன் ஜெட்வேகத்தில் பறக்கிறது..!

இமானின் இசையில் “ராங்கி.. ராங்கி” என்ற பாடலும், “சகாயனே” பாடலும் கேட்கும்படி இருந்தது.. மற்றபடி பின்னணி இசையே தேவையில்லாத படமாக இதனை எடுத்துக் கொடுத்திருப்பதால் கஷ்டமே படாமல் பணியாற்றியிருக்கிறார் இமான்..!

வியாபாரம் மட்டுமே நோக்கம் என்று, தமிழ்ச் சினிமா முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் சூழலில்,  ஒரு சமூக அக்கறையுடன்.. கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் புரியும்வகையில் ஒரு சிறந்த படத்தை இயக்கிக் கொடுத்தமைக்காக இயக்குநர் அன்பழகனுக்கு எனது நன்றிகள்..!

சாட்டை - அவசியம் பார்க்க வேண்டிய படம்..! 


சாருலதா-சினிமா விமர்சனம்

21-09-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திகில், மர்மக் கதைகளைப் படமாக்கவும் தனிக் கலைத் திறன் வேண்டும்... இந்தத் திறமையும் அனைத்து இயக்குநர்களுக்கும் வந்துவிடாது. இந்த உண்மையை இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்து இயக்குநர் பொன்குமரன் இதனை புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்..!

இந்தப் படம் தாய்லாந்து மொழியில் வெளியான அலோன் என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பு. முறையாக அனுமதி வாங்கிச் செய்திருக்கிறார்கள் என்கிற வகையில் இதன் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது பாராட்டுக்கள். அதே நேரத்தில், இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் இவர்களை பார்த்தாவது இது பற்றி தெரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்..!

 

20 ஆண்டுகளாக ஒட்டிய நிலையிலேயே இருக்கும் சாரு-லதா என்ற இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கையை காதல் என்ற கசமுசா கலைக்கிறது. சகோதரிகள் இருவருமே ஒருவரை காதலிக்க.. அந்த காதலனோ இரட்டையர்களில் சாருவை மட்டுமே விரும்பியிருக்க.. அந்தக் காதல் கை கூடியதா என்பதுதான் கதை.. முக்கோண காதல் கதையாகக் கொண்டு போயிருக்க வேண்டியது.. யார் பேச்சைக் கேட்டு இப்படி திகில், மர்மக் கதையாக கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை..!

படத்தில் 2 பேர் மட்டுமே பெரும் பாராட்டுக்குரியவர்கள்.. ஒருவர் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம்.. மற்றொருவர் ஹீரோயினும், வில்லியுமான பிரியாமணி..! திரையைவிட்டு கொஞ்சமும் அகலவிடாத அளவுக்கு நம் கண்களுக்கு பெரும் தீனி இந்தப் படத்தின் ஒளிப்பதிவு..!

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரையிலும் பிரேமுக்கு பிரேம் ஏதோவொரு ஓவியத்தின் நடுவில் கேரக்டர்கள் தங்களது பங்களிப்பை செய்வது போலவே இருந்தது...! காஷ்மீரின் அழகை இவ்வளவு ரம்மியமாக வேறு எந்தக் கேமிராவும் இதுவரையிலும் படம் பிடித்ததில்லை என்று நினைக்கிறேன்.. கூடவே அழகான பிரியாமணியும் இருக்க.. பாடல் காட்சிகளில் பாடலை மறந்து காட்சிகளில் ஒன்றிப் போகிறோம்..! திகிலூட்ட வேண்டிய பல காட்சிகளில் இயக்குநருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. சாரு-லதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிக மைனூட்டாகக்கூட, வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒளிப்பதிவு நேர்த்தியாக இருந்தது..! கிளைமாக்ஸ் காட்சியில் பிரியாமணியையும், இயக்குநரையும் தாண்டி இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளரும் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார்..

இந்தக் கேரக்டருக்கு பிரியாமணியை செலக்ட் செய்ததற்கு இயக்குநரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும்..! சாரு கேரக்டரைவிடவும் லதா கேரக்டரில்தான் வாழ்ந்திருக்கிறார் பிரியாமணி. அந்தக் கட்டைக் குரலும், திமிரான பார்வையும், சின்ன சின்ன பார்வையாலேயே தனது கோபத்தைக் காட்டும் அழகும்.. இந்தப் பொண்ணை ஏன் தமிழ்ச் சினிமா இன்னமும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரியவில்லை..! வருத்தமாகத்தான் இருக்கிறது..!

மேக்கிங்படி பார்த்தால் மிகவும் கஷ்டமான வேலை இது.. சில சமயங்களில் பக்கத்தில் ஒருவர் இருப்பதாகவும், பல சமயங்களில் இருப்பதாகக் கற்பyனை செய்து கொண்டும் நடித்திருப்பதில் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார் பிரியாமணி. அந்தக் கஷ்டத்திற்கெல்லாம் நிச்சயம் பாராட்டு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..! எப்போதும் ஒட்டியே இருப்பது போன்ற காட்சியமைப்பும், இரு வேறு மேக்கப்களில் அடுத்தடுத்து எடுக்கப்படும் காட்சிகளின்போதெல்லாம் அஸிஸ்டெண்ட் டைரக்டர் வேலை.. காஸ்ட்யூம்ஸ் அஸிஸ்டெண்ட் வேலையையெல்லாம் தானே இழுத்துப் போட்டுச் செய்ததாகச் சொன்னார் பிரியாமணி.. ஹாட்ஸ் அப்..! இறுதி 20 நிமிடங்களில் லதாவாக உருமாறி பிரியாமணி செய்யும் ஆக்ட்டிங் அசத்தலானது..!

புதுமுக ஹீரோ எதையும் ஈர்க்கும்விதமாகச் செய்துவிடவில்லை.. இருக்கிறார். நடித்திருக்கிறார். அவ்வளவுதான்.. தயாரிப்பாளர் பெரிய கைதான்.. தமிழுக்கும், தெலுங்குக்கும் தோதான வேறு ஹீரோவை நடிக்க வைத்திருக்கலாம்..!

திகிலூட்டும்விதமாக பின்னணி இசையை மூட்டிவிட்டு இடை, இடையே கிச்சுமுச்சு மூட்டுவதைப் போல அந்தச் சின்னப் பையன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே வேஸ்ட்டு..! இடைவேளைக்கு முன்பு படத்தில் ஒன்ற முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்..!

உள்ளே, வெளியே என்று விளையாட்டாக திகிலுக்குள் நுழைவதும், பின்பு வெளியே வருவதும்.. மறுபடியும் உள்ளே திணிப்பதுமாகக் கொண்டு சென்ற முன்பாதி காட்சிகளை கட் செய்திருந்தால் ஒருவேளை படத்தில் ஈர்ப்பு இருந்திருக்கலாம்..! தேவையற்ற வேலை..!

சீரியஸ் படங்களில் லாஜிக் பார்க்கலாம் என்கிற வகையில் பல லாஜிக் மீறல்களையும் சொல்லப்படாத விஷயங்களையும் வைத்துப் பார்த்தால் படமே தள்ளாடுகிறது..! அம்மா சரண்யா சீரியஸ் நிலையில் இருக்க பிரியாமணி பார்க்க வரும் காட்சியில் ஒரு துடிப்பு இல்லை.. திரைக்கதையில் ஒரு அனுதாப உணர்வும் வரவில்லை..! சொந்த வீட்டில் இருக்க வரும் பிரியாமணி அந்தப் பையனிடம் தான் சரண்யாவின் மகள் என்பதைச் சொல்ல வேண்டாம் என்று தடுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதனால் திரைக்கதையில் இயககுநருக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

சரண்யா கோமாவில் இருப்பதாக டாக்டர் சொன்ன பின்பும் அடுத்தடுத்த காட்சிகளில் திடீரென்று கூப்பிட்டவும் கண் விழிக்கிறார். பயப்படுகிறார். இறுதிக் காட்சியில் திடீரென்று தனியே காரில் வந்து இறங்குகிறார். வீ்ட்டில் ஆவி இருக்கிறது என்பதைக் காட்டி, ஆவியை உண்மையாக்கியிருக்கிறார்கள். இதை எந்த ஊர் ஆவி வந்து கேட்கும் என்று தெரியவில்லை..!?

திரைக்கதையின் வேகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்தச் சிறுவனின் இடுப்பில் இருக்கும் தாயத்து மற்றும், அந்த மந்திரவாதி.. செப்புத் தகடு கொடுப்பது.. அது எரிந்து போன பின்பு மந்திரவாதி தானே வாலண்டியராக வீடு தேடி வந்து ஆவியை விரட்டப் பார்ப்பது என்று கதையை தங்களுக்குத் தோதான லைனுக்கு இழுத்திருக்கிறார்கள்.. ஆனாலும் அநியாயத்திற்கு லாஜிக் இடிக்கிறது..!

ஒரு வித்தியாசமான கதைக் களன்.. பிரியாமணி போன்ற பெரிய ஹீரோயின்.. பெரிய தயாரிப்பாளர்.. நிச்சயமாக இதைவிடவும் வித்தியாசமான கோணத்தில் இரட்டைப் பிறவிகளைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்.. இரட்டைப் பிறவிகள் பற்றிய விழிப்புணர்வு, அவர்கள் படும் கஷ்டம்.. அவர்களுடைய வாழ்க்கை முறை.. இதையெல்லாம் ஆடியன்ஸுக்கு சொல்லாமல், கடைசியாக இதுவும் ஒரு வழக்கமான காதல் படமாகவே முடிந்து போனது நமது துரதிருஷ்டம்தான்..!

நெல்லை சந்திப்பு - சினிமா விமர்சனம்

16-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் பெயரைப் போலவே கதையும் நெல்லை மண்ணில் நடப்பதுதான்..! தீவிரவாதி என நினைத்து ஒரு அப்பாவியைக் கொலை செய்யத் துணிகிறது காவல்துறை. உயிர் பிழைத்துக் கொண்ட அந்த அப்பாவியை மீண்டும் உண்மையாகவே கொலை செய்ய வெறியாய் அலைகிறது அராஜக காவல்துறை. இறுதியில் அந்த அப்பாவி ஜெயித்தானா? மாண்டானா? என்பதுதான் கதை..!


அறிமுக இயக்குநர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையே பட்ஜெட்டுதான். சிறந்த கதையை கையில் வைத்திருந்தாலும் பெரிய நடிகர்களின் தயவு இல்லையெனில் அந்தச் சிறந்த கதை கொத்து புரோட்டோ போட்டது மாதிரி ஆகிவிடும்.. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால், முகம் தெரியாத நடிகர்கள் என்றால் அவர்களுக்காக அதனைத் திருத்தி, திருத்தி திரைக்கதை எழுதுவதற்குள் அதுவரையில் தங்களுடன் இருக்கும் போராட்ட குணத்தில், பாதியை இழந்துவிடுவார்கள் புதிய இயக்குநர்கள்..!

ஆனாலும் மனதுக்குள் ஒரு ஆசை.. சில நேரங்களில் கிரகம் தப்பி ஜெயித்துவிட்டால் பிழைத்துவிடலாமே என்று நினைத்து சிறந்த கதை இருந்தும், பட்ஜெட்டுக்காக பல சமரசங்களுக்குட்பட்டு மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி சில, பல பிரச்சினைகளுக்கு பின்பு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது இயக்குநர் திருமலையின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த நெல்லை சந்திப்பு..!

குடும்பம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஒரு அன்பான கூடாரம்.. அதில், ஒரு ஹீரோவான ரோஷனும், மேகாநாயரும், அக்கா, தம்பிகள்.. இவர்கள் இருவருமே முறையே தேவிகாவையும், பூஷணையும் வீட்டுக்கு தெரிந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்..!
நெல்லையில் தீவிரவாதிகளை பார்த்தவுடன் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற வெறியில் இருக்கும் போலீஸ் டீமின் தலைவர் துணை கமிஷனர் தேனப்பன். அவருக்கு ஒரு செட்டப், யுவஸ்ரீ. இவர்களுடைய மகள்தான் ரோஷன் காதலிக்கும் இந்தத் தேவிகா..! 

தங்கள் வீட்டு மாடியில் குடி வரும் பிரார்த்தல் பார்ட்டியின் தொல்லை தாங்காமல், வேறு வீட்டிற்கு குடி போகிறது ரோஷனின் குடும்பம். அங்கே ஏற்கெனவே தீவிரவாதிகள் 2 பேர் குடியிருந்த்த தகவல் கேட்டு வரும் போலீஸ் டீம் ரோஷனை சுட்டுவிட.. பின்பு நடப்பதுதான் போலீஸ்-திருடன் சேஸிங்..!

இடைவேளைவரையிலும் மிக நேர்த்தியாக கொண்டு போயிருக்கும் திரைக்கதை, இடைவேளை பிளாக்கில் உச்சத்திற்குப் போயிருந்தது. ஆனால் மீண்டும் சட்டென எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் சற்று நிலை தடுமாற.. மிகப் பரபரப்பாக ஓடத் துவங்கி பட்டென்று உட்கார்ந்துவிட்டது போன்ற நிலைமைதான் பார்ப்பவர்களுக்கு..!

இடையில் ரோஷன் சிறையில் சந்திக்கும் தேவராஜ் நல்லதொரு பாயிண்ட்..  அவரை வைத்தே கதையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருக்கலாம். நல்லதொரு வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தாதது இயக்குநரின் தவறுதான்..! 

நெல்லை சீமையில் தீவிரவாதம் என்றால் அவர்கள் யார்..? என்ன. மாதிரியானவர்கள் என்பதையெல்லாம் சுட்டாமல் பொத்தாம் பொதுவாக ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை..? கொலைகார அதிகாரிகளின் மீட்டிங் காட்சி காமெடியாக இருப்பதோடு, ஒருவரை துரத்திக் கொண்டு ஓடும் காட்சியும் இதையேதான் சொல்லாமல் சொல்கிறது.. பட்ஜெட்டில் சிக்கனம் தேவைதான் என்றாலும்.. இந்த அளவுக்கு சுருக்கணுமா என்பதையும் கேட்க வைக்கிறது..!

புது ஹீரோக்களில் ரோஷன் பரவாயில்லை.. ஆனால் இன்னொருவரான பூஷனுக்கு சரியான வாய்ப்பு தரப்படவில்லை. மலையாளத்து மேகா நாயர் கொஞ்சமே நடித்திருக்கிறார்...! கோர்ட்டில் இருந்து வெளியில் வரும்போது, பூஷனிடம், “பத்திரிகை பேரை வைச்சு இனிமே என்ன செய்வ..? உன்னால என்ன செய்ய முடியும்..?” என்று கேட்கும் அந்தக் கோப நடிப்பும் அவர் யார் என்று கேட்க வைக்கிறது..! 

இவரைவிட இன்னும் ஒரு படி மேலே அசத்தியிருப்பது இரண்டாவது ஹீரோயின் தேவிகாதான்.. தேனப்பனை வார்த்தைகளால் விளாசும் அந்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கக் கூடியதாக இருந்தது..! தன்னுடைய செட்டப் கதாபாத்திரத்திற்காக யுவஸ்ரீ தன் மகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் காட்சிகளெல்லாம் நேர்த்தியானவை. இது போன்ற குடும்பங்கள், இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் இது ஒரு மரண அவஸ்தைதான்..!

குடும்பமே கொண்டாடும் “இதுதானே எங்க வீடு” பாடல் காட்சிகள் நிரம்பவே கற்பனை வளம் சார்ந்தது..! இயக்குநர் மாண்டேஜ் ஷாட்ஸ்களுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் போலிருக்கிறது..! இசையமைத்திருப்பது மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்..! பின்னணி இசையில் மட்டும் முழு கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது புரிகிறது..!

எழுதி இயக்கியிருப்பது கே.பி.பி.நவீன். பாலுமகேந்திரா மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.. முன்பே சொன்னதுபோல இரண்டாம் பகுதியில் கொஞ்சம் வேறு மாதிரியான திரைக்கதை அமைத்திருந்தால் லாஜிக் மீறல்கள் இல்லாமல் படத்தினை ரசிக்க முடிந்திருக்கும்.. பழி வாங்குதலுக்காக தப்பிப்பது.. நாயை கடிக்க வைத்து கொலை செய்வது.. இதனை தேனப்பன் சந்தேகப்படுவது... இறுதியில்  திருவிழாவில் தேனப்பனுக்கு ரத்த அபிஷேகம் நடப்பது என்றெல்லாம் அம்மாவின் சாவுக்கு பழி வாங்குவதாகப் போய் திரைக்கதையை முன்பேயே நமக்குத் தெரிவதுபோல் அமைத்துவிட்டதுதான் வருத்தத்திற்குரியது..! 

நவீனுக்கு இதுதான் இவரது முதல் படம்.. இதற்குப் பிறகு உச்சக்கட்டம், 72 மணி நேரம் என்று 2 படங்களையும் இயக்கிவிட்டார். இவைகளும் வெளிவராமல் சிக்கலில் இருப்பதை என்னவென்று சொல்வது..? அடுத்தடுத்து வரப் போவதாகச் சொன்னார் நவீன்.. எவ்வளவுதான் திறமையிருந்தாலும், சினிமாவில் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள்.. இந்த அதிர்ஷ்ட தேவதை, அடுத்து வரும் படங்களிலாவது நவீனுக்கு கிடைக்க வேண்டும்..!

நெல்லை சந்திப்பு - ஒரு முறை பார்க்கலாம்..! 

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

15-09-2012என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான சசிகுமாரின் “நட்பு” கேட்டகிரி படம்தான்..! ஆனால் சக்ஸ்ஸில் நாடோடிகளைத் தொடும் என்றே நினைக்கிறேன்..!வீட்டில் அப்பத்தா, இரண்டு அம்மாக்களின் செல்லம்.. மற்றும் ஊரில் இருக்கும் பல்லு போன கிழவிகளுக்கும், பல்லு போகக் காத்திருக்கும் ஆண்ட்டிகளுக்கும் லவ்வர் பாய்தான் இந்த சுந்தரபாண்டி. வாயைத் திறந்தால் கேலி, கிண்டல், நக்கல்.. இதில் ஊர்க்கார பெண்கள், உறவுக்காரப் பெண்கள் என்றில்லாமல் எப்பவும், எல்லா விஷயத்துலேயும் நான் ஒப்பனா இருப்பேன்னு சொல்ற கேரக்டர்.. நண்பர்களுக்கு உதவுவதென்றால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்..!

நெருங்கிய நண்பனின் காதலுக்கு உதவப் போய்... அது இவருக்கே காதலாக மாறி.. இதனால் ஏற்படும் சிறு சண்டையில் ஒரு மரணம் நிகழ்ந்து கொலைக்குற்றத்துக்கு ஆளாகி நிற்கும் சசிகுமார், இறுதியில் காதலியை மணந்தாரா..? இல்லையா? என்பதுதான் கதை..!

சிறிதளவு கடுகாக சுப்பிரமணியபுரம்.. வெங்காயமாக நாடோடிகள்.. பூண்டுவாக தூங்கா நகரம்.. மற்றபடிக்கு ஆங்காங்கே மிச்சம் மீதியிருந்த தனது படங்களையே காப்பி பேஸ்ட் செய்து கொடுத்திருந்தாலும், வழங்கல் துறையினர் புதிய ஆளுகளாக இருந்ததால் இறுதி வரையிலும் ரசிக்கவே முடிந்தது..!

முதல் 20 நிமிடங்களுக்கு யார் பேசுவதற்கு சிரிப்பது என்ற யோசனையில் மூழ்கியிருந்த நமக்கு, ஆபத்வாந்தனாக வந்து வாய்க்கிறார் இனிகோ இளங்கோ.. இவரது காதல் கதையின் ஒரு டிவிஸ்ட்டை ஏற்படுத்த  சசிகுமார் களத்தில் குதித்த பின்புதான் பரோட்டா சூரி, சசி, இனிகோவின் தப்பாட்டம் துவங்கிறது.. சிறிது நேரத்தில் அப்புக்குட்டியும் சேர்ந்து கொள்ள இடைவேளை வரையிலும் படம் ஜிவ்வுதான்..!

சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர்தான்.. நடிப்பதே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் அண்ணனைவிட்டால் வேறு யாரும் இல்லை..! எந்த இடத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது.. இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படித்தான் கடைசிவரையிலும் இருக்கிறார்.. 

தாடியுடன் தான் நடிப்பதும்.. இது போன்ற அசால்ட்டாக வந்து போவதிலும் இதுதான் கடைசி படம் என்று பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கிறார் சசி.. இதனை உடனே நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்..! என்னதான் தலையில் இடி மாதிரி அந்த அடியை வாங்கிக் கொண்டும், காணாமல் போகும் காட்சியெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது..! ஹீரோயிஸம் தேவைதான்.. ஆனால் இந்த அளவுக்குத் தேவைதானா..? லட்சுமி மேனன் அசத்தல்.. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகு.. குறைவில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.. தான் பள்ளியில் படிக்கும்போது சசிகுமார் தன்னிடம் பேசிய அதே டயலாக்கை இப்போது திருப்பிச் சொல்லிவிட்டு போகும் அந்த ஒரு காட்சியிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துவிட்டார்..! பாடல் காட்சிகளின் மாண்டேஜ்களிலும், அப்பாவிடம் காட்டும் மெளனம்.. சசி அண்ட் கோவிடம் பேருந்தில் காட்டும் முறைப்பு.. தோழியிடம் காட்டும் அலட்சியப் பார்வை.. சிடுசிடுப்பு.. சசியின் அப்பாவை பார்த்தவுடன் படும் சந்தோஷம்.. கல்யாணத்தை எதிர்பார்த்து அவர் காட்டும் ரியாக்ஷன்ஸ்.. இன்னுமொரு அழகுடன் கூடிய நடிப்பு தேவதை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

இனிகோ, சூரியைவிடவும் அப்புக்குட்டிதான் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.. மன்னாரு போன்ற படங்களில் தனி ஹீரோவாக ஆக்ட் செய்து கொண்டே இது போன்ற படங்களில் தனி கேரக்டரில் நடிக்க துணிந்திருக்கும் அவருடைய ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்..! ஒரு மாசம் நீங்க.. ஒரு மாசம் அவங்க என்ற டீலிங்கிற்கு ஒத்துக் கொண்டு ஹீரோயினை கவர அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தும் செமத்தியான ஜோக்ஸ்..!  அதேவேகத்தில் லட்சுமியை பார்த்து பஸ்ஸின் கீழேயிருந்து கோபத்துடன் உதிர்க்கும் பேச்சுக்களும் சரவெடி.. 

இவருடைய எதிர்பாராத திடீர் முடிவைத்தான் எதிர்பார்க்க முடியவில்லை..! அதிலும் படத்தில் பல இடங்களில் வைத்திருக்கும் இது போன்ற டிவிஸ்ட்டுகள்தான் படத்தின் வெற்றியை இப்போது தீர்மானித்திருக்கிறது..! சசிகுமாரின் லவ் டிராக்ஸ்.. இனிகோவுக்காக சசி ஏற்றுக் கொண்ட பழி.. இனிகோவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்.. விஜய் சேதுபதியின் கிளைமாக்ஸ் ருத்ரதாண்டவம் என்று அனைத்துமே சற்றும் எதிர்பார்க்காதவை.. ஆனால் இது சுப்பிரமணியபுரத்தை நினைத்துப் பார்க்க வைத்தாலும், அடுத்தது என்ன என்றுதான் ஏங்க வைத்தது..!

சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலமாகவும் இந்தப் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.. சசியின் முறைப் பெண்ணாக வருபவர்.. லட்சுமியின் சித்தியாக வரும் சுஜாதா.. கல்லூரிக்கு எதிரில் தச்சு வேலை செய்யும் நண்பர்.. லட்சுமி அப்பாவின் மீசைக்கார நண்பர்.. அப்புக்குட்டியின் உறவினர்கள்.. விஜய் சேதுபதி மற்றும் அவரது அண்ணன்.. என்று பல இடங்களிலும் இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்சே சுவாரஸ்யமாக இருந்தது..!

தென்மேற்குப் பருவக் காற்றில் காற்றாய் ஒலித்த ரகுநந்தனின் இசையில் கொண்டாடும் மனசும், ரெக்கை முளைத்ததேனும் பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் இனித்தன..! ரோஜா படத்திற்குப் பிறகு கிழவிகளும் ஒரு தப்பாட்டத்தில் ஆடியது இந்தப் படத்தில்தானோ..? பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்ஸ்களை ரம்மியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்..! அதிலும் பேருந்தின் வாசலில் நின்று கொண்டு சசியும், லட்சுமியும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நிற்கும் அந்த ஒரு ஷாட்.. பிரமாதம்..! 

காதல் என்ற கத்திரிக்காயை தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் விதம், விதமாக சமைத்துக் கொடுத்தாலும் அது ருசிக்கத்தான் செய்கிறது.. காதலிக்கப்படும் பெண்களும், காதலிக்கத் துடிக்கும் ஆண்களும் என்னென்ன பாடுபடுவார்கள் என்பதை முதல் பாதியில் சசிகுமார் செய்து காட்டுவது அத்தனையும் சூப்பர்..! இந்த வித்தைக்காகவே இந்தப் படம் நிச்சயம் தலையில் தூக்கி வைக்கப்படும் என்றே நினைக்கிறேன்.. காதலில் டாக்டரேட் பட்டம் வாங்கியதுபோல் பேசும் சசி, லட்சுமியின் கண்களை வைத்தே உண்மையைக் கண்டுபிடித்துவிட்டு தான் திரும்பிக் கொள்வதும்.. லட்சுமி சொல்லி “அதை” கேட்டவுடன், அவர் காட்டும் ரியாக்ஷனும் காதலர்களுக்கு நிச்சயம் பிடித்தமானதுதான்..!

புதிய இயக்குநர் பிரபாகரன் தனது குருவுக்கு நல்லதொரு படத்தைக் காணிக்கையாக்கியிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் காதலர்களுக்கும், காதலுக்கும் ஜே சொல்லும் விதமாகவே காட்சிகளை வைக்க பிரம்மத்தனம் செய்யும் சசிகுமார், முதல் மூன்று நாட்களில் தியேட்டர்களுக்கு வந்து குவியும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், ஆர்வத்தோடு தேடி வரும் தன்னுடைய ரசிகர்களுக்கும் எந்தவிதத்திலும் ஏமாற்றம் தரக் கூடாது என்பதற்காகவே மெனக்கெட்டு இந்தப் படத்தின் திரைக்கதை விவாதத்தில் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது..! வாழ்க அவரது தொழில் பக்தி..!

“குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக் கூடாது...” - இதுதான் கிளைமாக்ஸில் சசிகுமார் சொல்லும் பஞ்ச் டயலாக்.. இனி வரும் காலங்களில் நட்புக்கு உதாரணமாக இதனை பலவிதங்களில் நாம் பார்க்கலாம்.. நட்புக்கும், காதலுக்கும் மீண்டுமொரு முறை மரியாதை தந்திருக்கும் சசிகுமாருக்கும், இயக்குநர் பிரபாகரனுக்கும் எனது வாழ்த்துகள்..!

கூடங்குளம் மக்களின் சாபமாவது பலிக்கட்டும்..!

11-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மீண்டும் தனது அரசியல் சர்வாதிகாரத்தை லத்திகளின் துணையோடு செய்து காட்டியிருக்கிறார் தமிழகத்து புரட்சித் தலைவி..! இவருக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை இவரது முதல் ஆட்சிக் காலத்தில் இருந்தே நாம் பார்த்துதான் வருகிறோம். ஆனாலும் கேவலங்கெட்ட இந்திய அரசியல் முறையினால் மிக மோசமான அரசியல்வியாதிகளில் ஒருவராக இருக்கும் இந்த தாய்தான் மீண்டும், மீண்டும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!

மீன் பிடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத மீனவர்கள் தாங்கள் காலம், காலமாக வாழ்ந்து வரும் அதே இடத்தில்தான் தங்களது சந்ததிகளும் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..? நாளைய பொழுதுகளில் தங்களது பரம்பரையினருக்கு மீன் வலைகளையும், படகுகளை மட்டுமே சொத்தாக வைத்துவிட்டுப் போகவிருக்கும் இந்த குடும்பத் தலைவர்கள், தங்களுடைய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..? அந்த வகையில்தான் என்றோ ஒரு நாள் அவர்களுடைய உயிரைக் கொள்ளையாக அடித்துப் போகக் காத்திருக்கும் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..!


திருவள்ளுவருக்கு எந்த “ள்” போட வேண்டும் என்றுகூட தெரியாத கட்சி பிரமுகருக்காக பஸ் மீது கல்லெடுத்து அடிக்கும் கட்சிக்காரர்களை பார்த்திருக்கும் தமிழகத்து மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மெளனமாக, அற வழியில்.. உண்மையான சத்தியாக்கிரக முறையில் போராட்டம் நடத்தி வரும் இந்த கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட எதிர்ப்புகளை கவனித்தே வந்திருக்கிறார்கள்..!

ஊர்வலம் நடத்திக் காண்பித்தார்கள். ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் காட்டினார்கள்.. நீண்ட, நெடிய உண்ணாவிரத்த்தைக்கூட நடத்தினார்கள்.. ஆனாலும் கல்நெஞ்சக்காரர்களையே அரசியல்வியாதிகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் இன்றுவரையில் இந்த மக்களின் சக்தியை உடைக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள் இந்த ஈனப் பிறவிகள்..!

முறையாகத் தகவல் சொல்லிவிட்டு, ஊர்வலமாக வந்த மக்களிடத்தில் சமாதானம் பேசுவதற்கு ஒரு அமைச்சரைக்கூட அனுப்பத் தெரியாத முக்கா லூஸு முதலமைச்சரை வைத்துக் கொண்டு நாம் என்னதான் செய்வது..? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு இதுதான் என்று முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், இந்த ஆலையின் துவக்கமே சர்வாதிகாரத்தில்தானே துவங்கியிருக்கிறது..! எங்கோ டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அதை செய். இதைச் செய்.. அதை இங்கே வை.. இதை அங்கே வை என்று ஆணையிடுபவர்கள் இந்த ஆலையை டெல்லியிலேயே அமைத்திருக்கலாமே..? ஜனாதிபதி மாளிகையை இடித்துக்கூட கட்டியிருக்கலாமே..? இந்திய ஜனநாயகத்திற்கு பலிகடா அப்பாவி மக்கள்தானா..? அரசியல்வியாதிகளுக்கு இல்லையாமா..? 


சுற்றுப்புற மக்களிடம் கருத்து கேட்காமல், அவர்களுடைய ஆதரவைப் பெறாமல் அவர்களுக்கு அறிவுறுத்தாமலேயே அவர்களுடைய உயிருடன் விளையாடும் ஆபத்துக்குரிய அந்த ஆலையை அங்கே கொண்டு வந்து அமைத்ததே ஜனநாயகமானதல்ல..!  அந்த மக்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லையெனில் அப்படியொரு ஆலைதான் அங்கே எதற்கு..? கல்பாக்கத்தின் அருகே குடியிருக்கும் மக்களில் 100-ல் ஒருவர் ஏதோ ஒரு இனம் புரியாத நோயால் இன்னமும் பாதிக்கப்படுகிறார்..! அங்கே அணு மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும்கூட சொன்னபடியாக செட்டில்மெண்ட்டும், வேலையும் தரப்படவில்லை. போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு இப்போதுவரையிலும் எத்தனையோ குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறந்து வருகின்றன.. இதையும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த நாயும் கேட்டபாடில்லை.. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியுதவியைக்கூட வாங்கித் தர வக்கில்லாத பரதேசிகள்தான் இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..! இப்படிப்பட்ட அரசியல் சூழலில், இந்த மக்களின் இந்தக் கோரிக்கை மிக, மிக நியாயமானதுதான்.. 

நேற்று ஊர்வலத்தில் வந்தவர்கள் எங்களுக்கு ஒரு இறுதி முடிவு தெரியும்வரையில் இடத்தைக் காலி செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு இரவில் கடலோரத்தின் தாலாட்டலில் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். அந்த மக்களின் ஒத்துழைப்பையும், பயத்தையும், போராட்ட உணர்வையும் புரிந்து கொள்ளாத இந்த ஜெயலலிதாவின் பாசிஸ அரசு.. விடிந்தபோது  தனது காவலாட் படைகளைக் கொண்டு நாயை விரட்டியடிப்பது போல சொந்த நாட்டு மக்களையே பந்தாடியிருப்பது கேவலமானது..!


இன்றைக்கு நடந்த இந்தக் கொடூரத்தின் மூலம் இந்த மக்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் பலிக்காது..! தங்களுடைய எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை அந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. எந்த சதிவேலையை செய்தும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நேற்றைய அவர்களது போராட்டமும் வெளிப்படுத்திவிட்டது. தமிழகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத அளவுக்கான கூடங்குளம் மக்களின் போராட்ட வெறியும், நேர்மையான வழிமுறையைப் பின்பற்றிய அவர்களது குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. அவர்களுக்கு எனது சல்யூட்..!

அதே சமயம் அதிகார வர்க்கம் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஊடகங்களையும் வளைத்துவிட்டது என்பதும் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது..! எல்லோருக்கும் நான் நட்ட நடுநிலையாளன் என்று தன்னைத் தானே புகழ்ந்து சொல்லிக் கொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று காலையில் இருந்து தனது ஒளிபரப்பில் சொல்லிக் கொண்டிருந்த கூடங்குளம் பற்றிய செய்திகளும், முறைகளும் அதன் உரிமையாளரின் குடுமி டெல்லிக்கும், சென்னைக்குமாக மாட்டியிருப்பதால் அரசுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகிறது..! இந்தக் கேவலத்திற்கு இந்த்த் தொலைக்காட்சியைத் துவக்கிய காசில் மேலும் 2 கல்லூரிகளைத் துவங்கி அங்கேயாவது கொள்ளையடித்து மொத்தமாக பாவத்தில் மூழ்கியிருக்கலாம்..!

தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு தி.மு.க. தொண்டன் போலீஸால் மிரட்டப்பட்டான் என்றாலே ஆண்டி போண்டியிலும், சிந்து, பொந்துவிலும் பஞ்ச் வசனம் பேசியும், முழுப் பக்கத்துக்கு ஒப்பாரியும் வைக்கும் மஞ்சத்துண்டு மைனர்.. இந்தக் கொடூரத்தை டிவியில் பார்த்து பேதி கண்டு வீட்டில் அமைதியாகப் படுத்திருக்கிறார்.. இதில் ஏதாவது வாயைக் கொடுத்து டெல்லியை பகைத்துக் கொண்டால், தனது அருமை மகளும், மகனும், பேரன்களும் தப்பிக்க முடியாதே என்று பச்சையான தனது சுயநல நோக்கத்தை வெளிக்காட்டிவிட்டார்..! 


இவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் தக்காளி சூஸ்தான் உடலில் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கும் இந்த முத்தமிழ் வித்தகர் தமிழர்களின் முதல் துரோகி பட்டியலில் இருந்து இறங்க மறுத்து அடம் பிடிப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஆட்சிக் கட்டில் இருந்தபோதுதான் அப்படியென்றால், இப்போதும்கூடவா..? 

இவர்களுடைய கலைஞர் தொலைக்காட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் சுப.உதயகுமார் தப்பி ஓட்டம் என்று பிளாஷ் நியூஸ் போட்டுத் தாளித்தார்கள். அட பக்கிகளா..? கிரானைட் ஊழல் வழக்கில் இவரது அருந்தவ புத்திரனின் மகன் தயாநிதி அழகிரி ஒரு மாதமாக தலைமறைவாகத்தானே இருக்கிறார்.. அதைப் பற்றி போட வக்கில்லாமல், உண்மையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி அந்த மக்களின் உண்மையான உணர்வுகளை கேவலப்படுத்தும் இந்தப் பொழைப்பெல்லாம் தேவைதானா..?

ஆத்தாவுக்கு எப்போதுமே மக்கள் பிரச்சினைகள் என்றால் என்னவென்றே தெரியாது..? முன்பே தெரியாது.. இப்போது மட்டும் என்ன தெரிந்துவிடவா போகிறது..? எப்படியாவது பெங்களூர் வழக்கில் இருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற பயத்துடன் இருக்கும் அம்மையார், நேற்றைக்கு ஊருக்குள்கூட வராத ஒண்ணுமில்லாத மண்ணுமோகனசிங்கை விமான நிலையத்தில் பார்த்து வணக்கம் சொல்கிறார்.. தானும், தனது கட்சிக்காரர்களும் ஓட்டே போடாத ஜனாதிபதியை பார்த்து வணங்கியும் இருக்கிறார்.. கூடவே பாஜகவுடன் இணக்கமாகவும் இருக்கிறார். இத்தாலிய மம்மியை பற்றி கிண்டலடித்தவர் தற்போதெல்லாம் தி.மு.க.வை மட்டுமே தாக்கிவிட்டு மற்றவர்களை சைக்கிள்கேப்பில்கூட கண்டு கொள்வதில்லை..!

“நான் உன் ஊழலை கண்டு கொள்ள மாட்டேன்.. நீ என் ஊழலை கண்டு கொள்ளக் கூடாது..” என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்படி இனி காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஓஹோவென வளரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இந்தப் போராட்டத்தை எந்த வகையிலாவது ஒடுக்கி சுத்தமாக இல்லாமல் செய்தால் ஒருவேளை ஆத்தா ஜெயில் கம்பி எண்ண வேண்டிய சூழலில் இருந்து 2 பெரிய கட்சிகளும் சேர்ந்து காப்பாற்றலாம்... இந்த காரணத்துக்காகவே ஆத்தா பொதுமக்களுடன் இப்படி மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்..! 

இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ..?

மண்ணை வாரி தூற்றி வீசியிருக்கும் அந்தச் சாபக் குரல்களுக்கு சக்தி இருக்கோ இல்லையோ.. அரசியல்வியாதிகள் கோவில், கோவிலாக சுத்தும் அந்த பக்திக்கு பலன் கிடைக்குமோ கிடைக்காதோ..? இந்தக் கேடு கெட்டவர்கள் விரைவில் மாண்டொழிந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. இல்லாவிடில் அதுவரையில் இது போன்ற பலிகளில் நாம் நமது குடும்பத்தினரை இழந்துதான் ஆக வேண்டும்..!

இது நமக்குக் கிடைத்திருக்கும் சாபக்கேடு..!

கள்ளப்பருந்து - சினிமா விமர்சனம்

08-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதணுமான்னு மொதல்ல யோசிச்சேன்.. அப்பால நாம எழுதாமவிட்டா தமிழ்ச் சினிமாவின் இன்னொரு பக்கம் நிறைய பேருக்குத் தெரியாமலேயே போயிருமே என்பதால எழுதுறேன்..!


மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல்ல ஒரு பணக்கார டாக்டர் அப்பன்.. அவனுக்கு ஒரு பொண்டாட்டி.. கணவன் சொல்லைத் தட்டாத மாதரசி.. இவுங்களுக்கு 2 பொண்ணுக.. மூத்தப் பொண்ணு கண்ணாலம் கட்டி அமெரிக்காவுக்கு போயாச்சு.. 2-வது பொண்ணு காலேஜ்ல படிச்சுக்கிட்டிருக்கு.. அப்பன்காரன் தமிழ்க் கலாச்சாரப்படி வாழணும்னு நினைச்சு மகள்களையும் அப்படியே வளர்க்கச் சொல்றான்..! 

ஆனா 2-வது பொண்ணு அப்பன் தலை தெரியாத நேரத்துல, தொடை தெரியற மாதிரியும் அரை குறை டிரெஸ்ஸை போட்டுக்கிட்டும் வீட்லயே நடமாடுது.. பெத்த அம்மாவை பேர் சொல்லிக் கூப்பிட்டு “அவளே”, “இவளே”ன்னு பேசுறா... அப்பனை பார்த்தவுடனே மட்டும் சமர்த்துப் பிள்ளையா டிரெஸ்ஸை மாத்திட்டு அடங்கிருது..!

இந்த நேரத்துலதான் வீட்டுக்கு கார் டிரைவரா நம்ம ஹீரோவை கூட்டிட்டு வர்றாரு அப்பனோட பிரெண்டு..! வர்றவன் ஏற்கெனவே கல்யாண மன்னன்னு பேர் எடுத்து, ஊருக்கு ஒரு கல்யாணம் செஞ்சு.. குஜாலா இருந்திட்டு குட்டு வெளியானவுடனேயே நல்ல பிள்ளையா சரண்டராகி ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு.. பணத்தைக் கொடுத்து கேஸை குளோஸ் பண்ணிட்டு வந்தவன்.. 

கூட்டிட்டு வந்தவன்.. ஹீரோவுக்கே அட்வைஸ் பண்றான்..! “மாப்ளை.. அந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்கு.. மொதல்ல அதை கரெக்ட் பண்ணப் பாரு.. அப்புறமா  அவ ஆத்தாவையும் கரெக்ட் செஞ்சிரு.. மொத்த சொத்தும் ஒனக்குத்தான்.. விஷயம் சக்ஸஸா முடிஞ்சா, சொத்துல பாதி எனக்கு..” - விலை மதிக்க முடியாத இந்த டீலிங்கிற்கு ஒத்துக்கிட்டுத்தான் ஹீரோ அந்த வீட்டுக்குள்ள வர்றாரு..!

முகத்தை பார்த்தாலே நாலு சுவத்துல போய் நம்ம மூஞ்சியைத் தேக்கணும்ன்ற ரேஞ்ச்சுல இருக்கும் 2-வது பொண்ணு.. அதைவிட கர்மமான மூஞ்சியோட இருக்கிறவன்கூட தேரோட்டிக்கிட்டிருக்கா..!  இதை அப்பனிடம் சொல்லாம இருந்தா கூடுதலா 10 ஆயிரம் மாசாமாசம் தர்றேன்னு ஹீரோகிட்ட சொல்றா 2-வது பொண்ணு..!

ஹீரோ கணக்குப் போடுறான்.. பணத்துக்காக ஒத்துக்குற மாதிரி நடிச்சு அந்தப் பொண்ணும், அந்தக் கர்மமும் தனியா ஒதுங்குறதை செல்போன்ல படம் புடிச்சு வைச்சுக்குறான்.. இந்த தேரோட்டம் வீட்லேயே தொடர.. அங்கேயும் செல்போன் டேப்பிங் நடக்குது..!

ஒரு சுபயோக.. சுபதினத்தில் கர்மம் புடிச்ச லவ்வரை துரத்திட்டு இப்போ நம்ம ஹீரோவே ஆண்ட்டி வில்லனாகிறான்.. செல்போன் மேட்டரை சொல்லி 2-வது பொண்ணை “அபேஸ்” செஞ்சர்றான்.. ஏற்கெனவே தேரோட்டத்துல கரை கண்ட சொக்கத் தங்கமா இருக்கும் அந்தப் பொண்ணு.. ஹீரோவை தீவிரமா லவ் பண்ண ஆரம்பிக்குது..!

இந்த நேரத்துலதான் முதல் பொண்ணும் அமெரிக்கால இருந்து திரும்பி வருது.. இது தங்கச்சிக்கும் மேல.. புருஷன்காரன் அமெரிக்கால இருந்தாலும் அப்பப்போ பொறந்த வீட்டுக்கு வரும்போதெல்லாம் தன் லவ்வரை தேடி போய் “குஷால்” ஆகிட்டிருக்கா.. இந்த விஷயமும் ஹீரோவுக்கு தெரிய.. பயபுள்ளை அக்காவையும் “கரெக்ட்டு” செஞ்சர்றான். கூடவே, அக்கா-தங்கச்சிக்குள்ள கலகத்தை உண்டு பண்ணி.. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமா மாறி மாறி தேரோட்டுறான்..!

அக்கா-தங்கச்சி சண்டை சென்னை தளபதி-மதுரை தளபதி சண்டையைவிட உக்கிரமாக நடக்க.. அக்காக்காரி ஹீரோவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டுப் போக முடிவு செஞ்சு அப்பன்கிட்ட சொல்றா.. அப்போ நடக்குற வாய்ச் சண்டைல அப்பன்காரனுக்கு இதுல ஏதோ ஒண்ணு இருக்குன்னு புரியுது.. இதைக் கண்டுபிடிக்கணும்னு நினைச்சு கை, கால் இழுத்து போலியோ அட்டாக் வந்த மாதிரி நடிச்சு வீட்ல படுக்குறான்..!

இதுதான் சமயம்ன்னு ஹீரோ, ஆத்தாவுக்கே லுக்கு விடுறான்.. ஏற்கெனவே தாவணி போட்டுவிட்டா அக்கா, தங்கச்சிக்கு மூத்த அக்காவா ஷோ காட்டுற மாதிரியிருக்குற அம்மாக்காரியை மகள்களோட சேட்டையைச் சொல்லி மடக்கிர்றான் ஹீரோ.. இதையும் கேட்டும், பார்த்தும் தொலைஞ்சிர்றாரு அப்பன்..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளை, அஸ்திவாரத்தோட தோண்டியெடுத்து பார்த்தா மாதிரி அப்பனின் மனசு உடைஞ்சு போவுது.. குடும்பத்தோட பரமபதம் அடைய நினைச்சவன்.. கூடவே ஹீரோவையும், ஹீரோவை கூட்டிட்டு வந்த பிரெண்டையும் சேர்த்துத் துணைக்கு அழைச்சிக்கிட்டு சொர்க்க லோகம் போய்ச் சேர்றாரு.. அம்புட்டுத்தான் கதை..!

படத்தோட டைரக்டரு பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போலிருக்கு..! ச்சும்மா டயலாக்குலேயே ரேப் பண்ணிட்டாரு.. சீன்லாம் இருக்க வேண்டிய இடத்துல அதுவெல்லாம் இல்லாம, அதுக்கு லீடிங்கா டயலாக்கை வைச்சு நாமளே கற்பனை செஞ்சுக்க வேண்டியதான்ற மாதிரி பயங்கரவாதம் பண்ணியிருக்காரு.. 

அக்கா, தங்கச்சிக தொடையழகி ரம்பாவுக்கு தோஸ்த்தா வர்ற மாதிரி ஒரு சில காட்சிகள்தான் இருக்கே தவிர.. மற்றபடி பிட்டுக்கு வாய்ப்பே இல்லாத மாதிரிதான் எடுத்திருக்காங்க.. ஆனா சிச்சுவேஷனும், திரைக்கதையும், டயலாக்கும் ரொம்ப ஆபாசமா, எதிர்க்கலாச்சாரமா இருக்கு..!

இந்த மாதிரி மொக்கை படத்தோட டைரக்டரெல்லாம் படத்தோட வெற்றி, தோல்வியை பத்தியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க. அவங்களுக்கு தேவை ஒரு தியேட்டரிலாவது படத்தை ஓட்டிட்டு, நானும் டைரக்டராயிட்டேன்னு எழுதி வைச்சுக்கணும்ன்றதுதான்.. அது நிச்சயமா நடந்திருச்சு..! 

பல வசனங்கள்.. சில காட்சிகளை கட் செய்தால் "ஏ" சர்டிபிகேட்டாவது கிடைக்கும் என்ற நிலையில் சர்டிபிகேட்டே கிடைக்கவில்லை என்று விளம்பரம் செய்து.. ரீவைஸிங் கமிட்டிக்குச் சென்று சர்டிபிகேட் வாங்கி வந்திருக்கிறார்கள். இதையும் விளம்பரம் செய்து கூட்டத்தைக் கூட்ட பார்த்திருக்கிறார்கள்..! என்ன செய்வது..? இவர்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதான்..!!!

இந்தக் கொடுமைதான் தாங்கலையேன்னு பார்த்தா.. படத்தோட காமெடி டிராக்குன்னு சொல்லி விநியோகஸ்தர் சங்கத்தின் செயலாளர் கலைப்புலி சேகரனை காமெடியனாக்கி நம்மையும் காமெடியாக்கிட்டாங்க.. இந்தத் தொல்லைக்கு ஹீரோவோட நடிப்புத் தொல்லையே பரவாயில்லையேன்னு பல இடத்துல நினைக்க வைச்சுட்டாங்க..! 

பிட்டு படங்களுக்கே உரித்தான இடங்கள் பல இருந்தும், நேர்மையாக பிட்டுகள் எடுக்கப்படாமலேயே விட்டுவிட்டதாக இதன் இயக்குநர் சொல்கிறார்.. தமிழகத்தின் பி அண்ட் சி தியேட்டர்களில் பிட்டுகள் சேர்த்து ஓட்டினாலும் இதனைப் பார்ப்பது கொடுமையாகத்தான் இருக்கும்..!

புதிய இயக்குநர்கள் தேவைதான்.. புதுமுகங்களும் தேவைதான்.. புதிய கதைகளும் தேவைதான்.. ஆனால் அதற்காக இப்படியா..? இது போன்ற கதைகளை பேப்பரில், பத்திரிகைகளில் படித்துவிட்டு தூர எறிந்துவிட்டுப் போய்விடலாம்.. ஆனால் இதை தியேட்டரில் குடும்பத்தோடு பார்க்க நேர்ந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்..? எதைப் பற்றியும் கவலைப்படாமல், “நாங்களென்ன.. ஒண்ணும் தெரியாததை.. யாரும் சொல்லாத்தை சொல்லிடலையே..? குமுதம் உட்பட பல பத்திரிகைகளில் வந்த கதையைத்தான எடுத்திருக்கோம்.. இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு..?” என்கிறார்கள் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள்..!

கதைக் கருவே.. முறைகேடான உறவைத் தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு இளைஞனின் கதையாக இருப்பதால், இந்த மாதிரி கர்மத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கிறவன்.. அடுத்து 6 மாசத்துக்கு தியேட்டர் பக்கமே வர மாட்டானே என்ற அடிப்படையை  இவர்களிடத்தில் யார் போய்ச் சொல்வது..? இப்படியே நல்ல படத்துக்கு வரக்கூடிய கூட்டத்தைக்கூட, இவங்க இப்படி கெடுத்துக்கிட்டிருந்தா தமிழ்ச் சினிமாவின் நிலைமை என்னவாகும்..?

சின்ன பட்ஜெட் படங்களின் எதிரிகள் கண்டிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள் அல்ல.. இது மாதிரியான குப்பையான சின்ன பட்ஜெட் படங்கள்தான்..! ஏற்கெனவே டிக்கெட் கட்டணக் கொள்ளை.. பார்க்கிங் கொள்ளை.. கேண்டீன் கொள்ளை என்று முத்தரப்பு கொள்ளையால் பாதிக்கப்பட்டிருக்கும், தியேட்டருக்கு வராமல் இருக்கும் ரசிகர் கூட்டத்தை மேலும் தடுக்கும் இந்த மாதிரியான படங்களை எடுப்பவர்கள்தான் தமிழ்ச் சினிமாவிற்கு மிக முக்கியமான எதிரிகள்..!

“இதே மாதிரிதான் எல்லா சின்ன பட்ஜெட் படமும்  மொக்கையாத்தான் இருக்கும்.. விடு.. வீட்லேயே பார்த்துக்கலாம்..” என்று சொல்லிச் சொல்லியே பல மதியக் காட்சி ரசிகைகளை இழந்தது  தமிழ்ச் சினிமாவுலகம்.. இப்போது இன்னும் கொஞ்சம் கூட்டத்தை இழந்து, சின்ன பட்ஜெட் படங்கள் தங்களுக்குத் தாங்களே கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொள்வதற்கு இந்த ஒரு படத்தையே உதாரணமாகச் சொல்லலாம்..!

கள்ளப்பருந்து -  பார்க்காமலேயே தொலைந்து போகட்டும்.. தேடாதீர்கள்.. தொலைந்து போவீர்கள்..!

மன்னாரு - சினிமா விமர்சனம்

07-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்த மூஞ்சிக்கெல்லாம் இப்படியொரு அதிர்ஷ்டமா என்று இந்த ஒரு புகைப்படத்தை பார்த்தே புஸ்ஸாகிப் போனார்கள் பல புதுமுக ஹீரோக்கள்..! ஆனால் ஹீரோவான அப்புக்குட்டியோ தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த இந்த முதல் முத்தத்தை நினைத்தே இன்றுவரையில் உருகிப் போயிருக்கிறார்..!

1985-90-களில் உள்ள போனோமா.. எதையும் மண்டைல ஏத்திக்காம வெளில வந்தோமா.. என்ற டைப்பில் வெளியான புல் எண்ட்டெர்டெயிண்மெண்ட் டைப் கதை இது..! இதன் கருவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஏற்கெனவே பல வடிவங்களில் கொத்துப் புரோட்டா போட்டுவி்ட்டார்கள் என்றாலும், இதில் புதிய நேட்டிவிட்டியில், புதிய திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர்..!


கொடைக்கானலை பூர்வீகமாகக் கொண்ட அப்புக்குட்டி 3-ம் வகுப்பு வரை படித்துவிட்டு லாரியில் மணல் லோடு அள்ளும் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார். கூடவே மல்லிகா என்றொரு உறவுக்கார பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறார்.! ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் ஷகிலா போஸ்டரின் அழைப்பின்பேரில் பிட்டு படம் பார்க்கப் போகும் அன்றைய இரவில்தான் நம்ம அப்புக்குட்டிக்கு சனி பிடிக்கிறது..! அவ்வப்போது அறையில் தங்க இடம் கொடுக்கும் நண்பனுக்காக, அவனது ரிஜிஸ்தர் மேரேஜூக்கு சாட்சி கையெழுத்து போடப் போய்.. வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறான் மன்னாரு..!

கல்யாணம் முடிந்த கையோடு நண்பனோடும், அவனது புது மனைவியோடும் மன்னாரு கொடைக்கானலுக்குக் கிளம்பும்போது பெண்ணின் அப்பாவும், வில்லன் கோஷ்டியும் தேடி வர.. மாப்பிள்ளை நண்பன் பயந்து போய் "நீங்க ரெண்டு பேரும் இதே பஸ்ல முன்னாடி போங்க, நான் பின்னாடியே வந்தர்றேன்.." என்று சொல்லி நின்று விடுகிறான்..!


அப்புக்குட்டியும், ஸ்வாதியும் மட்டும் கொடைக்கானலில் வந்திறங்கி ரூமில் தங்குவதற்காக கணவன், மனைவி என்று பொய் சொல்லத் துவங்க.. லாட்ஜில் நின்று கொண்டிருந்த அப்புக்குட்டியின் மாமா, அண்ணனிடம் சிக்கிக் கொண்டு ஊருக்குக் கொண்டு போகப்பட்டு, உண்மையைச் சொல்ல முடியாமல் தம்பதிகளாக காட்சியளிக்க வேண்டிய கட்டாயம்..! 

காதலித்த முறைப் பெண் அழுது வடிய.. இங்கே பெண்ணின் அப்பாவும், வில்லனும் கொலை வெறியோடு தேடத் துவங்க.. மாப்பிள்ளை போலீஸ் லாக்கப்பிலும், பின்பு வில்லனின் லாக்கப்பிலும் சிக்கிக் கொண்டிருக்க.. எப்படி முடிந்தது கதை என்பதை தியேட்டருக்கு போய் பாருங்க..!

மனைவியாக அழைத்து வந்தவரை அப்படிச் சொல்ல முடியாமல் வேலைக்காரியாக காட்டும் கதைகள் நிறையவே வந்திருக்கின்றன..! தன் மனைவியை, நண்பனின் மனைவி என்று சொல்லும் ஆள் மாறாட்டக் கதைகளும் நிறையவே வந்திருக்கின்றன.. இதில்தான் இப்படியொரு தினுசான கதையை வைத்து கொஞ்சம் கவர்ந்திருக்கிறார் இயக்குநர்..!

அப்புக்குட்டி நிறைவாகவே நடித்திருக்கிறார்..! தண்ணியடித்துவிட்டு அவர் ஆடும் ஆட்டமும், பஸ்ஸில் அவர் செய்கின்ற கலாட்டாவும் மனிதருக்கு நகைச்சுவையும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது..! மல்லிகாவை நினைத்து ஒரு பக்கம் கோபப்பட்டும், ஸ்வாதியிடம் பேசவும் முடியாமல் மனிதர் தவியாய் தவித்து மனதுக்குள் எதுவும் இல்லாத அப்பாவித்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார்..!

ராட்டினம் ஸ்வாதி ஹீரோயின் என்றாலும், உடன் நடித்திருக்கும் வைசாலிதான் எனக்குப் பிடித்தமானவராக இருக்கிறார்..! ஆள் நல்ல கலர்.. களையான முகம்.. இந்தப் படத்துக்காக கருப்பு மேக்கப்பை போட்டு கொஞ்சம் அழகை குறைத்துவிட்டார்கள்..!

அந்த இயல்பான கிராமத்து இன்னொசென்ட் முகத்தை பார்த்த மாத்திரத்தில் கொண்டு வந்துவிட்டார்.. அப்புக்குட்டியின் கல்யாணச் செய்தி கேட்டவுடன் ஓடி வந்து பார்க்கும் அந்த வேகமும், அதே அப்புக்குட்டி தனது வீட்டு வாசலில் நிற்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு மருகுவதும்.. காதல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்கள் ரொம்பவே இம்ப்ரஸ்ஸிவ்..! தற்கொலைக்கு முயலும் 2 காட்சிகளிலும் ஒரு பாட்டி தண்ணி இறைத்துக் கொடுக்கும்படி கேட்கும்போது எரிச்சலுடன் “சாகவும் விட மாட்டேன்றீங்களே..?” என்ற தனது வெகுளி குணத்தை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறார்.. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம்..!


ராட்டினத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை நன்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார் இந்த ஸ்வாதி..! உருட்டும் விழிகளும், கேரளத்து மெதுவடை முகமும், உருளைக்கிழங்கு தோற்றமுமாக இன்னும் கொஞ்சம் அழகாய் காட்சியளிக்கிறார். அப்புக்குட்டியின் அப்பாவை குற்றம் சொல்லி பேசுகின்ற ஒரு காட்சியில் மட்டுமே ஏதோ ஒன்றாக நடித்திருக்கிறார். மற்றபடி இவருக்கு அதிகப்பட்சம் பரிதவிப்பு எக்ஸ்பிரஷன்களையே கொடுத்திருப்பதால் அப்புக்குட்டியை பார்த்து நாம் பொறாமைப்பட மட்டுமே இந்தச் சிவப்பழகியைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்று நினைக்கிறேன்...!

கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளின் இயற்கை அழகை.. அந்த நேட்டிவிட்டியை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..! “இசையமைப்பாளர் உதயனின் இசையில் எனது குடும்பத்தின் சாயல் தெரிகிறது..” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.. அதற்கு அச்சாரமே “ஊரையெல்லாம் காவல் காக்கும்”  பாட்டுதான்..! மனதை வருடும், வார்த்தைகளை மென்று விழுங்காமல் அழகாக ஒலித்து, அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது..! 

தம்பி இராமையா பாடல்களை எழுதி, வசனத்தை எழுதியிருக்கிறார். நாய்கூட அப்புக்குட்டியை மதிப்பதில்லை என்பதை நிரூபிப்பதற்காக டீக்கடையில் வறுக்கியை வாங்கி நாய்க்கு போட்டு சோதனை செய்யும் காமெடி, வசனமும், கதையும் சேர்ந்தது.. அண்ணியின் கையைத் தட்டிவிட்டு மரியாதை முக்கியம் என்று அப்புக்குட்டி மிரட்டுவதும்.. தம்பி இராமையாவின் மீதான மரியாதையை நிரூபிக்கும் வகையில் பலரும் அவரை கிண்டல் செய்யும் வசனங்களும் அவர் நல்லதொரு ரைட்டர் என்பதை நிரூபிக்கிறது..!

அந்த புது மாப்பிள்ளைக்காரன் அடுத்த பஸ்ஸை பிடித்து ஓடி வந்திருந்தாலோ, அல்லது போலீஸிடம் சிக்கிய பின்பு தப்பித்து இவர்களைத் தேடி வந்திருந்தாலோ படம் உடனுக்குடன் முடிஞ்சு போயிருக்கும்.. அல்லது ஸ்வாதியே திரும்பிப் போயிருந்தாலும் கதை காலிதான்.. இரண்டேகால் மணி நேர படத்திற்காக கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதியிருப்பதால், அந்த லாஜிக்கை நாம் சந்தேகிக்கவே கூடாது.. முடியாது..! எடுத்தவரைக்கும் படம் ரசிக்கும்படியாகத்தான் உள்ளது..! 

ஒரேயொரு குறை.. திருநங்கைகளை கிண்டல் செய்வது போல பாடல் காட்சியை வைத்திருப்பதும், அது கதைக்கு ஒட்டாமல் தனித்து நிற்பதும்தான்..! இந்த ஆட்டத்தில் பாண்டியராஜன் வேறு..!? ஏன், எதற்கு என்றுதான் தெரியவில்லை..!

வன்முறை. ஆபாசம்.. அதீத கவர்ச்சி.. இது எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்று நினைத்தீர்களேயானால் அவசியம் இந்தப் படத்திற்குச் செல்லவும்..!  

முகமூடி - சினிமா விமர்சனம்

02-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..!


இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..?

காதலிக்காக பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டாரா..? இல்லையா..?

ஜீவாதான் ஹீரோ என்றாலும், முழுமையாக பாராட்டைப் பெறுவது நரேன்தான்.. “அஞ்சாதே” பிரசன்னாவை போன்று இந்த வில்லத்தனத்தை கேட்டுப் பெற்ற நரேனின் புத்திசாலினத்தை மிகவும் பாராட்ட வேண்டும்..! அவருடைய அறிமுகக் காட்சியில் துவங்கி, அஸ்தமிக்கும் காட்சிவரையிலும் அவர் இருக்கின்ற ஸ்கிரீனில் அவர் மட்டுமே தனித்து தெரிகிறார்..!

மருத்துவமனையில் மாஸ்க்கை எடுத்துவிட்டு தனது ஒரு புற முகத்தை மட்டும் காட்டிவிட்டு ஓடத் துவங்கும் நரேனின் அந்த ஸ்டைல் ஸ்கிரீனுக்கே அழகு சேர்க்கிறது.. செல்வாவை தேடி கொலைவெறியுடன் ஆனால் எந்தவித அலட்டலும் இல்லாமல் கையில் சுத்தியலுடன் படியேறி வரும் அந்த அலட்சிய நரேனை யாருக்கும் பிடிக்காமல் போகாது.. தியேட்டரில் முழு கைதட்டலையும் இந்தக் காட்சி பெறும் என்றே நினைக்கிறேன்..! 

இதே வேகத்தோடு இறுதியில் “சூப்பர்மேன்.. பேட்மேன்.. ஸ்பைடர்மேன்..” என்று ஜீவாவை கிண்டலடித்து பேசும் காட்சியில் நரேனைவிடவும் வேறொரு சிறப்பான வில்லன் மிஷ்கினுக்கு கிடைத்திருக்க மாட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது..!

மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் குங்பூ, கராத்தேயில் தானும் ஒரு கில்லிதான் என்பதை நிரூபிக்கும்வகையில் சண்டைக் காட்சிகளில் மிக பிரயத்தனம் செய்து நடித்திருக்கிறார் ஜீவா.. தமிழ்ச் சினிமாவில் இந்த குங்பூ கலை இந்த அளவுக்கு வியாபித்திருப்பது இந்தப் படத்தில் மட்டுமே என்று நினைக்கிறேன்..!

இந்த பேட்மேன் ஜீவாவைவிடவும், சாக்லேட் பாய் ஜீவாதான் அசத்தியிருக்கிறார்..! மீன் மார்க்கெட்டில் “என் கையை வெட்றா” என்று வம்புச் சண்டைக்கு இழுக்கும் அந்த ஸ்டைல்.. ஹீரோயினை பார்த்தவுடன் சொக்கிப் போய் நிற்பது.. அவள் அடிப்பதையும், செருப்பை எடுத்து வீசுவதையும்கூட அலட்சியமாக ஒதுக்குவது.. ஸ்பிரே செய்வதைக்கூட மாலை, மரியாதை லெவலுக்கு ஏற்றுக் கொண்டு சரிவதுமான அந்தக் காட்சியில் அனைத்து காதலர்களுக்கும் ஜீவாவை பிடிக்கும் என்று நினைக்கிறேன்..!

ஹீரோயினைத் தேடி கோபத்துடன் கிளம்பி வரும் காட்சியில் வரும் வசனங்களும், நண்பர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியும் செம கலகலப்பு..! ஹீரோயினிடம் பேசுவதற்காக வந்து தன்னைப் பற்றி பீலாவிட்டுக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா வந்து குட்டையை உடைப்பதும் இயல்பான நகைச்சுவையில் ஒன்று..! 

மாஸ்டருக்கு ஒரு அவமானம் என்றால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிஷ்யர்களை வைத்திருக்கும் கேரக்டர் செல்வாவிற்கு.. அநியாயமாய் பரமபதம் அடையும்வரையிலும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருந்த ஒரு மர்மக் கதை சூப்பர்.. அதன் திருப்பம் திரைக்கதைக்கு அந்த இடத்தில் மேலும் ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது..! செல்வா,. நரேன் மோதலில் சந்தேகமில்லாமல் நரேன் ஜெயித்தார் என்றாலும், செல்வாவின் அந்த ஈடு கொடுத்தலும் நிஜமான பைட்டுதான்..

ஹீரோயின் பூஜா ஹெக்டே புதுமுகம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.. இன்னும் 2 படங்களிலாவது நடிக்கட்டும். பின்பு பேசலாம்..! 

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் இது மிஷ்கினின் படம் என்பதை பல காட்சிகளும், பல ஷாட்டுகளும் சொல்லிக் கொண்டே வருவதுதான் இப்படத்தின் சிறப்பு.. மக்களுக்கான சினிமா என்பதைவிட  கலைக்கான சினிமாவில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..! 

ஜீவா சாப்பிடும்போது அங்கேயிருந்து கேமிரா நகர்ந்து படுக்கையில் படுத்திருக்கும் அவர் அப்பாவிடம் வருவதும். தொடர்ச்சியான வசனக் காட்சிகள் எடுக்கப்பட்டவிதம் கவர்கிறது..! கையில் சிக்கிவிட்ட ஒரு கொலையாளியிடம் உண்மையை வரவழைக்க நாசர், செல்போனில் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் பேசும்காட்சி உம்மணா மூஞ்சிகளைகூட சிரிக்க வைத்துவிடும்..! 

அதேபோல் மருத்துவமனையில் தன்னைக் கொல்ல வரும் பத்ரியை பிடிக்கும் இடத்தில் நடிப்பும் டைரக்ஷனும் ஏ ஒன்..! ஆனால் அதற்கடுத்து நரேன் கும்பலை பிடிக்க துவங்கும் நேரத்தில்தான் ஆயிரம் அனர்த்தங்கள்.. இதற்கு பின்புதான் முந்தைய மிஷ்கினின் படங்களைவிட இப்படம் திரைக்கதையில் அநியாயத்திற்கு நொண்டியடித்திருக்கிறது..!

நரேன் பணயக் கைதிகளை விடுவிக்க அரசுடன் பேரம் பேசும் திரைக்கதை இது மிஷ்கினின் படம்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவிட்டது.. லாஜிக் பார்க்க முடியாதவைகள் நகைச்சுவை படங்களும் சிலவகை கமர்ஷியல் படங்களிலும். ஆனால் தமிழ்ச் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம்.. இதுதான் இந்த வரிசையில் முதல் படம் என்றெல்லாம் பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட படத்தில் சொத்தையான லாஜிக் ஓட்டைகள் என்றால் எப்படி..?

கிரீஷ் கர்நாட் மற்றும் அவரது குரூப்பின் செயல்பாடுகள் என்ன..? கிரீஷ் கர்நாட்டின் அந்த ரோபோ மனிதன் தயாரிப்பு எதற்காக..? பேட்மேன் உடையை போன்று பல உடைகள் அங்கே எதற்காக இருக்கின்றன..? அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் கோட்டைவிட்டுவிட்டு, அவர்களை வைத்தே குழந்தைகள் தப்பிக்கிறார்கள் என்றெல்லாம் கொண்டு சென்றது சூப்பர் மொக்கைத்தனம்..!

ஒரு துணை கமிஷனர் சுடப்பட்டிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டிருக்கிறார்.. பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டாமா..? தமிழ்நாடு போலீஸை சப்பையாக்க் காட்டி அந்த மருத்துவமனை சண்டைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் கொலை செய்ய ஆட்கள் வருவதை பார்த்தவுடன் ஒரு இன்ஸ்பெக்டர் "ஹலோ" என்று செல்போனில் பேசியபடியே விலகி ஓடுவது ஒன்றுதான் இதில் இருக்கும் யதார்த்தம்..!

கடலோர காவல் படையின் அதிகாரியைக் கடத்திச் சென்றால், மாநில அரசுதான் விடலாம். மத்திய அரசுமா சும்மா இருக்கும்..? சாதாரண செயின் திருடர்களுக்கே ஸ்கெட்ச் போடும் போலீஸ் இதுக்கெல்லாம் பயப்படுவார்கள்.? இந்திய எல்லைக்கு அப்பால போயிட்டா இவங்களை கண்டுபிடிக்க முடியாதாக்கும்..? சோமாலிய கடற் கொள்ளையர்களை அவர்களது கடற் பிரதேசத்திற்கே நமது இந்திய விமானப் படையை அனுப்பி குண்டு போட்டு பரலோகம அனுப்பியவர்கள் இவர்கள்.. இதெல்லாம் பிளஸ்டூ கிளாஸ்ல ஆத்திச்சூடி சொல்லித் தர்ற மாதிரி இருக்கு..! இன்னொரு மிகப் பெரிய முரண்பாடு.. அதுவரையிலும் பேட்மேன் தமிழகத்து மக்களுக்கு அப்படியென்ன நல்லது செஞ்சுட்டாருன்னு தெரியலை.. ஆனா நாசர் பேட்டி கொடுக்குறாரு.. “தமிழகமே கொண்டாடும் பேட்மேன்..” அப்படீன்னு..! என்னத்த சொல்றது..? 

படத்தில் மொத்தமுள்ள 3 பாடல்களில் இடைவேளைக்கு முன்பே  2 பாடல்களை வைத்து நிரப்பிவிட்டார். துவக்கத்தில் வரும் அந்த நீண்ட ஷாட்.. அதைத் தொடர்ந்த ஈர்ப்பான நடனம்.. கண்ணதாசன் காரைக்குடி டைப்பில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது..! வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா பாடல் துவங்கும் காட்சியும் ரசனையானது.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. அக்காட்சியை படமாக்கியவிதமும் சூப்பர்தான்.. ஆனால் இதற்காக சுவிட்சர்லாந்து போயிருக்க வேண்டுமா என்றும் கேட்கத் தோன்றுகிறது.. 

3-வது பாடலான "மாயாவி", மருத்துவமனையில் நாசரை கொல்ல வரும் ஆட்களை ஜீவா தாக்கி திருப்பியனுப்பிய பின்பு பூஜாவின் லீட் காட்சியோடு வரும்.. அது அந்த இடத்தில் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என்று சொல்லி நீக்கிவிட்டார்களாம்.. இது மட்டுமல்ல மொத்தம் 3 மணி நேர படமாக திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.. அந்த பாடல் காட்சியை வைத்திருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் டொக்குதான்..!

"இந்தப் படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.. அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.. ஒரு பாட்டியோட கதையைத்தான் இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏற்றாற்போல் கொடுத்திருக்கேன்.. இதில் எந்தக் காட்சியிலும் விரசமில்லை.. ஆபாசமில்லை.. தாராளமாக என்னை நம்பி வரலாம்..” என்று குரல் கொடுத்தார் மிஷ்கின்.. இப்படிச் சொல்லிவிட்டு, ஹீரோ ஒண்ணுக்கு போவதை ஹீரோயின் பார்த்து வெட்கப்பட்டு “பார்த்துட்டேன்” என்று குழந்தைகளிடம் சொல்லும் காட்சி ரொம்ப ஓவர்.. இதை நீக்கிவிட்டுத்தான் யு சர்டிபிகேட் கொடுத்திருக்க வேண்டும்.. சரி போகுது விடுங்க.. ‘கந்தசாமி’யையும், ‘சிவாஜி’யையுமே ‘யு’ சர்டிபிகேட்ல பார்த்த ஜனங்க நாம..! 

தமிழ்ச் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர்களில் மிஷ்கினும் ஒருவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், பக்தியும் உண்டு. இது அவரது படைப்பின் மீது எழுந்த விமர்சனம் மட்டுமே.. அந்த வகையில் இப்படம் எனக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது என்பதை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.. 

இந்த ‘முகமூடி’ தொடர்ச்சியான படங்களாக வரப் போகிறது என்று மிஷ்கினும், தயாரிக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று ‘யு டிவியும்’ சொல்லியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்.. ஆனால் அடுத்த பாகத்திலாவ்து இந்த ‘பேட்மேன்’ ரசிகர்களைக் கவரும்வகையில் இருக்கட்டும்..!

முகமூடி - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!