13-02-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடிகர் சித்தார்த் தனது சொந்த நிறுவனமான ஏடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் படம் இது.
இது போன்ற காமிக்ஸ் பேண்டசி படங்கள் மிக அரிதாகத்தான் வருகின்றன. ஆனால் வந்தவையும் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதால் இது போன்ற படங்களை எடுக்கவும் ஆட்கள் குறைவாகவே இருக்கிறார்கள். சித்தார்த் துணிந்து தயாரித்திருக்கிறார். அவரது துணிச்சலுக்கு நமது பாராட்டுக்கள்..!
பெத்த அப்பனின் முன்பாகவே சிகரெட் பிடித்து, அப்பன் கற்றுக் கொடுத்த ஏமாற்று. சித்து வேலையைக் கற்று அதன் மூலமாக பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் கொஞ்சம் நாகரிகமான வேலையைச் செய்து வருபவர் ‘ஜில்’ என்னும் நாஞ்சில் சிவாஜி. ஜாக்குவார் ஜகன் என்னும் ‘ஜங்’, ஜக்குலிங்கம் என்னும் ‘ஜக்’.. இந்த மூவரும்தான் கதையின் நாயகர்கள்.
2020-ம் வருடம் உலகம் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளத்தான் போகிறது என்று இயக்குநர் தீரஜ் வைத்தி உறுதியுடன் நம்புகிறார். பெட்ரோல் தட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் பொருளாதாரத் தேக்க நிலை. இதனால் பண வீக்கம் ஏற்பட்டு நாடே சிக்கலில் தவிக்கும் காலம் அது என்கிறார் தனது திரைக்கதையில்.
இந்தச் சூழலில் பெரும் கடத்தல் புள்ளியான தெய்வநாயகம் என்னும் அமரேந்திரனும் இந்தச் சிக்கலில் தவித்து வருகிறார். அவருடைய முந்தைய பிஸினஸ்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்து பெரும் பணச் சிக்கலில் இருக்கிறார். இப்போது அவரது கையில் இருப்பது 5 கிலோ கொகையின் போதை மருந்து மட்டுமே. இதனை பத்திரமாக ஹைதராபாத்திற்கு கொண்டு போய் சேர்த்தால் பெரும் தொகை கிடைக்கும் என்பதால் இந்த டீலை தனது வாழ்க்கையின் முக்கிய நேரமாக கருதுகிறார் தெய்வநாயகம்.
பழைய ஆட்களையே அனுப்பி வைத்தால் சிக்கலாகிவிடும். புதிய ஆட்களை அனுப்பினால் சக்ஸ்ஸ் ஆகும் என்று நம்பி தனது உதவியாளரின் ஏற்பாட்டில் ‘ஜில் ஜங் ஜக்’ மூவரிடமும் கடத்தல் வேலையை ஒப்படைக்கிறார்.
இதற்கு முன்பாக மருந்து என்னும் பகவதி பெருமாளின் துணையோடு போதை மருந்தை திரவமாக்கி, அதனை இவர்கள் செல்லும் காருக்கு பெயிண்ட்டாக அடித்து கடத்தலை நூதன முறையில் அனுப்பி வைக்கிறார்கள்.
காரை விட்டுவிட்டு வந்தால் நிறைய பணம் கிடைக்குமே என்கிற சந்தோஷத்தில் தங்களது பயணத்தைத் துவக்குகிறார்கள் மூவரும். இடையில் பல தடங்கல்கள் ஏற்பட்டு காரே ஏறிந்து சாம்பலாகிவிடுகிறது. இந்த விஷயம் தெய்வநாயகத்திற்குத் தெரிந்தால் தங்கள் கதி முடிந்துவிடும் என்பதால் தெய்வநாயகத்தை ஏமாற்றவும் ஒரு பிளான் போடுகிறார்கள்.
அவர்களின் அந்தத் திட்டம் பலித்ததா..? இல்லையா..? தப்பித்தார்களா..? இல்லையா..? என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
காட்சியமைப்புகள், சில வினாடிகள், சில நிமிடங்கள் கழித்து யூகித்து புரிந்து கொள்ளும்படியான வசனங்கள்.. வித்தியாசமான கலை அமைப்பு, அரங்குகள்.. அலாதியான நடிப்பு.. எதிர்பார்க்காத கேரக்டர் ஸ்கெட்ச்.. எதிர்பார்க்காத சில திரைக்கதைகள்.. என்று படம் மொத்த்த்தையும் பலவும் அவ்வப்போது திசை திருப்பிக் கொண்டேயிருப்பதால் படம் நெடுகிலும் கொஞ்சம் கலகலகப்பு.. கொஞ்சம் அமைதி என்கிற தன்மையாகவே சென்று முடிகிறது. இடைவேளைக்கு முன்பு ஜிவ்வாக துவங்கி பின்பு சட்டென்று தடம் மாறி இடைவேளைக்கு பின்பு ரிலாக்ஸாக நகர்வதுதான் படத்தின் மைனஸ்..
சில காட்சிகளில் தெறிக்கும் நகைச்சுவை படத்தை பெரிதும் காப்பாற்றுகிறது. பல காட்சிகளில் இருக்கும் மெல்லிய இயக்கம் படத்தை சோர்வையடவும் செய்கிறது. ராதாரவிக்கு எந்த இடத்தில் கேன்சர் வந்திருக்கிறது என்பதை அந்த பயந்த டாக்டர் சுட்டிக் காட்டும் இடமும், பைந்தமிழ் டயலாக் பேசுகின்ற அனைத்து காட்சிகளிலும், மூவரணி அட்டாக் ஆல்பர்ட்டிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகளிலும் கலகலப்பு..!
தெய்வநாயகமாக நடித்திருக்கும் அமரேந்திரனும், ராதாரவியும்தான் மிரட்டியிருக்கிறார்கள். ரோலக்ஸ் ராவுத்தரான ராதாரவி தனக்கு கேன்சர் என்பதைக் கேட்டுவிட்டு காட்டும் ஆக்சனும், அடுத்தடுத்து தனது வாழ்க்கையில் தான் சந்திக்கும் தோல்விகளை அவர் சந்திக்கும்விதமும் பண்பட்ட நடிகரை சரியாகத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
ராதாரவியிடம் பேரம் பேசும் இடத்திலும், அடுத்து தனக்கு நேரப் போவதை உணர்ந்துவிட்டு அமரேந்திரன், “இனிமேல் நீ வாழப் போற ஒவ்வொரு நிமிடமும் நான் போட்ட பிச்சைன்னு நினைச்சுக்க..” என்று பேசும் டயலாக்கும், படத்தின் மீதான கனத்தை அந்த இடத்தில் அதிகப்படுத்தியிருக்கிறது.
மூவரணியில் கார் டிரைவராக நடித்திருப்பவரின் சின்னச் சின்ன டயலாக் டெலிவரிகூட ரசிப்புத் தன்மையுடன் இருந்த்து. சித்தார்த் தனக்கேற்ற வேடமாக ஜில்லை ஏற்றாலும் இதில் அவர் நடிக்காமல் வெறும் தயாரிப்பாளராகவே இருந்திருக்கலாம் என்றும் சொல்லத் தோன்றுகிறது. இது அவருக்கான இடமல்ல..!
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படம் முழுவதிலும் அவரது பெயரைச் சொல்கிறது. டிஐ கலரிஸ்ட்டுக்கு இந்தப் படத்தில்தான் அதிக வேலை போலிருக்கிறது. அதேபோல் கலை இயக்குநரும் கடைசி காட்சிவரையிலும் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரேம் பை பிரேம் கலைப் படைப்புகளின் அணிவகுப்பு இதை சாட்சியமாக சொல்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஷூட் தி குருவி’ அதிகமாக பாதிக்காமல் போனது வருத்தமான விஷயம். மாண்டேஜ் ஷாட்டுகளாலேயே காட்சிகளை நிரப்பி பாடல்களை இரண்டாம்பட்சத்திற்கு கொண்டு போய்விட்டார்கள்.
அநாவசியமாக ஒரு ஆளைக்கூட பிரேமுக்குள் கொண்டு வராமல் காட்சிகளை நீட்டி முழக்காமல் கச்சிதமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் தீரஜ் வைத்தி. அதேபோல் திரைக்கதையும் குழப்பமில்லாமல் கொண்டு சென்றாலும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். இறுதியில் படம் ஒட்டு மொத்தமாக என்ன மாதிரியான மனநிலையை ரசிகனுக்குள் திணிக்கிறது என்பதுதான் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். அது இந்தப் படத்தில் மிஸ்ஸானது வருத்தமான விஷயம்..!
மற்றபடி ஒரு நல்ல அட்டெம்ட் என்றுதான் இந்தப் படத்தைக் குறிப்பிட முடியும்..! தயாரிப்பாளர் சித்தார்த்துக்கு நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
|
Tweet |
0 comments:
Post a Comment