சில மொக்கை சினிமா விமர்சனங்கள்..!

27-02-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில சினிமாக்களின் விமர்சனங்களை தனிப் பதிவாகப் போட்டு உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. அதனால் மொத்தமாக ஒரே மொக்கையாகப் போட்டு தாளித்துவிட்டேன்.. பொறுத்துக் கொள்ளவும்..!பாவி-சினிமா விமர்சனம்

ஹீரோ டாக்டராக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சியில்கூட ஒரு நோயாளியைக்கூட காட்டவில்லை.. வீட்டில் அக்காவும், வேலைக்காரியும் இருக்கிறார்கள். அக்கா பகலில் பரம பக்தையாகவும், இரவில் பரம பதிவிரதையாகவும் மாறிவிடுகிறார். ஹீரோவுக்கு தொழில் திருமணம் செய்துவிட்டு கொஞ்ச நாளில் புராதானத் தொழலுக்கு விற்றுவிடுவதுதான். இது தெரியாமல் ஹீரோயின் அவரிடம் சிக்குகிறார். 

கொடைக்கானலுக்கு போய் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். திரும்பி வந்த்தும் அக்கா பட்டப் பகலில் அவுத்துப் போட்டு ஆடுவதைப் பார்த்துவிட்டு பயந்து போய் ஹீரோவுக்கு போன் செய்து சொல்கிறாள். ஹீரோவும் நடிக்கிறான். இப்படியே குஜாலுக்காக அக்காவை அவ்வப்போது ஆட விட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். கடைசியில் பாவமாய் முடித்திருக்கிறார்கள். 


ஹீரோவை பார்த்தாலே படத்தின் தரத்தை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேதான்.. ஏதோ முடிந்த அளவுக்கு எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்..! அவ்வளவுதான்..! நமக்குத் தலைவலி வருவதுதான் மிச்சம்..! 


ஹீரோயின் பொண்ணு நிஜமாகவே அப்பிராணியாகத்தான் இருக்கிறது. நல்ல நடிப்புதான்.. இந்தப் பொண்ணின் போன் நம்பர் கேட்டு இந்தக் கம்பெனிக்கு போன் மேல் போன் போட்டும் கம்பெனிக்காரர்கள் மசியவில்லை. நம்பரைச் சொல்லவே இல்லையாம்..! ஒரு நல்ல நடிகையை நம் கண்ணில் காட்டவே மறுக்கிறார்கள்..! பாவம்.. என்ன பிரச்சனையோ..?சூழ்நிலை-சினிமா விமர்சனம்

நிழல்கள் ரவி ஆச்சாரமான ஐயங்கார். லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையில் பணியாற்றுபவர். மகளும், மகனும் கல்லூரியில் படிக்கிறார்கள். அலுவலகத்தில் சுத்தத்தையும், ஆச்சாரத்தையும் எதிர்பார்க்கிறார் ரவி. கிடைக்காதபோது எரிந்து விழுகிறார். இன்னொரு பக்கம் அவரது பிள்ளைகள் ஆளுக்கொரு காதலையும் செய்கிறார்கள். தனக்கு வரப் போகும் மருமகள் வேறு மதம் என்றவுடன் கோபமாகி அவர்களது வீட்டிற்கே போய் கத்திவிட்டு வருகிறார்.  சூழ்நிலைக்கேற்றாற்போல் நாமளும் இப்போ மாறித்தான் ஆகணும் என்கிற தனது குடும்பத்தாரின் பேச்சை காது கொடுத்துக் கேட்க மறுக்கிறார் ரவி.


இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு என்ற புகாரை விசாரிக்க அந்தமானுக்குச் செல்கிறார் ரவி. அங்கே அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஒரு இடத்தில் விழுகிறது. ரவி உயிர் பிழைக்கிறார். அங்கே செந்தமிழில் பேசும் ஒரு மலைவாசிப் பெண் ரவியைக் காப்பாற்றி தன்னுடன் தங்க வைக்கிறார். சூழ்நிலைக்கேற்றாற்போல் நாமும் மாறத்தான் வேண்டும் என்ற தனது குடும்பத்தாரின் அறிவுறுத்தலை ஏற்காத ரவி, இங்கே சூழ்நிலைக்கேற்றாற்போல் மாறி அந்தப் பெண்ணுடன் கலவித் திருமணம் செய்துவிடுகிறார். 

பின்பு சில நாட்கள் கழித்து வேறு சிலரின் கண்ணில் பட்டு அவர்களால் காப்பாற்றப்பட்டு சென்னைக்கு வருகிறார். சென்னை வந்தவுடன் புத்தி வந்து தனது மகனின் காதலைச் சேர்த்து வைக்கிறார். அப்படியே அவரைக் கடத்த வந்த சுனாமி நிதியைச் சூறையாடிய கும்பலையும் கைது செய்கிறார். இவ்ளோதான் படம்..!

டைரக்சனா..? அப்படின்னா என்ன என்று கேட்க வைத்து நெளிய வைக்கிறார்கள்.. அதிலும் கஞ்சா கருப்பு அண்ட் கோ செய்யும் அலம்பலும் தாங்க முடியவில்லை. யாருக்காவது டென்ஷனாக இருந்தால் கஞ்சா கருப்பு கோஷ்டிக்கு போன் வரும். இந்த டீம் சென்றவுடன், டென்ஷனில் இருப்பவர் ஆத்திரம் தீர கஞ்சா கருப்புவை அடித்து, உதைத்து அனுப்பலாம். கூடவே காசும் தரணும். இதுதான் பிஸினஸாம்.. படத்தின் பிஸினஸுக்குக்கூட கஞ்சா உதவவில்லை..! 

இப்படத்தின் மூலம் அனுகூலம் பெற்றவர் இசையமைப்பாளர் தினாதான். படத்தில் வில்லனாக நடிப்புத் திறமையைக் காட்டியவர், நிஜ வாழ்க்கையிலும் "ஒரு மாதிரி" வில்லனாகிவிட்டாராம்..! வாழ்க..!


விளையாட வா-சினிமா விமர்சனம்

கேரம் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். பொன்வண்ணன் வீடுகளுக்கு சென்ட்ரிங் போடும் வேலை. ஒரு மகன்.. லிவிங்ஸ்டன், மயில்சாமியுடன் மாலை வேளைகளில் கேரம் போர்டு விளையாடுகிறார். தெருவில் அனாதையா இருக்கும் ஒரு சிறுவன் மீது பரிதாப்ப்பட்டு அவனையும் மகனாக நினைத்து அவனுக்கு கேரம் போர்டு சொல்லிக் கொடுத்து பெரிய ஆளாக்குகிறார்.


கொடைக்கானலில் டோர்னமெண்ட்டுக்காக போன மகன், அங்கேயே ஒரு லவ்வில் குப்புறடித்து விழுகிறான். வருடா வருடம் அந்த ஊரில் ஜெயித்து வரும் காதலியின் அண்ணன் செய்யும் உள்ளடி வேலையில் காயம்பட்டாலும் இறுதியில் ஜெயிக்கிறார் ஹீரோ. இப்போது ஹீரோவுக்கு ஹீரோயின் தனது கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கிறார். எடுபிடி வேலை. அங்கேயே மேனேஜராக இருக்கும் நெடுநாள் குடும்ப நண்பரின் மகன் ஹீரோயின் தனக்குத்தான் என்று எண்ணியிருக்க.. ஹீரோவின் காதல் தெரிந்து அவனை டார்ச்சர் செய்கிறான். கடைசியில் மேனேஜர் வெளியேற்றப்பட.. ஹீரோவின் குடும்பத்திற்குள்ளேயே கலகம் செய்து குடும்பத்தை இரண்டாக்குகிறான் மேனேஜர்.. இறுதியில் இதற்காக தனது உயிரைக் கொடுத்து குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார் பொன்வண்ணன்..
இதுவும் ஆர்வக் கோளாறில் எடுத்த படமாகத்தான் இருக்கிறது..! ஒரே ஒரு ஆறுதல் ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மாவாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணனும், ஹீரோயின் திவ்யா பத்மினியும்தான்..! 


சிற்சில இடங்களில் கவனிக்க வைத்தாலும்.. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும், கொஞ்சமாவது இயக்கத்தில் கவனத்தைச் செலுத்தி நல்லவிதமாக எடுத்திருந்தால் இயக்குநருக்காச்சும் பெயர் கிடைத்திருக்கும்..!


ஒரு மழை நான்கு சாரல்-சினிமா விமர்சனம்

கதை இருந்தால் திரைக்கதை இருக்காது. திரைக்கதை இருந்தால் இயக்கம் இருக்காது.. இது மூன்றும் இருந்தால் நடிப்பும் இருக்காது. இதில் ஏதாவது மூன்று இருந்தாலாவது படம் வெளியில் பேச வைக்கும். நமக்கு எது வருதோ, அதை மட்டும் சிறப்பாக செய்துவிட்டு மற்ற வேலைகளுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் சிறப்பான படைப்புகள் வெளியாகும்.

இந்தப் படத்தின் இயக்குநர் கொஞ்சம் சிரத்தையுடன் செயல்பட்டு வேறு யாரிடமாவது இயக்கத்தையும், திரைக்கதை, வசனத்தையும் கொடுத்திருந்தால் கொஞ்சமாவது பேசப்பட்டிருக்கும். எல்லாத்தையும் நானேதான் செய்வேன் என்றால் இப்படித்தான் நடக்கும்.


ரவி, கர்ணா இருவரும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். ரவி எதற்கெடுத்தாலும் கமிஷன் அடிக்கும் ஆள். கர்ணா ஆண்ட்டிகளை கவிழ்க்கும் பார்ட்டி. இருவருக்குமே நல்ல காசுதான். சுதர்சன், சதீஷ் என்னும் 2 பேரிடம் கமிஷனை வாங்கிக் கொண்டு தங்களது அறையில் சேர்த்துக் கொள்கிறான் ரவி. இதில் சதீஷ் சினிமாவில் உதவி இயக்குநர். சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர். கோடீஸ்வர்ரான அருள்மணியின் தங்கச்சியான ஹீரோயினை லவ்வித் தொலைக்கிறார்.

சுதர்சன் படிக்க பண உதவிகளை நண்பர்கள் செய்கிறார்கள். ஹீரோயினும் உதவுகிறாள். சுதர்சனுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து செல்கிறார். திடீரென்று திரும்பி வருகிறார். வந்தவுடன் மீண்டும் தனது காதலைத் தொடர கோடீஸ்வர அண்ணன் கோபப்படுகிறார். நண்பர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து நட்பை பிரிக்க முயல்கிறார். சதீஷிற்கு படத் தயாரிப்புச் செலவைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, சுதர்சனை கொலை செய்யச் சொல்கிறார். ரவியை போலீஸில் சொல்லி முட்டிக்கு முட்டி அடித்து உள்ளே தள்ளுகிறார். கர்ணாவையும் மடக்குகிறார்.. நண்பனை கொலை செய்ய விரும்பாமல் சதீஷ் தற்கொலை செய்து கொள்ள.. அடுத்தடுத்து ஹீரோயின் உட்பட அனைவருமே வீட்டு ஹாலில் பிணமாகிறார்கள்..! எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்..! 


இதிலும் டைரக்சனை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரே ஆறுதல் சிங்கமுத்துதான். அவரும் இல்லையெனில் சீட்டைக் கிழித்துவிட்டுத்தான் வெளியில் வர வேண்டியிருக்கும்..! பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறார் சிங்கமுத்து. மனிதர் முயற்சி செய்தால் பல ரவுண்டுகள் வரலாம்..! எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்..!


காதல் பாதை-சினிமா விமர்சனம்


இங்கேயிருந்து ஆக்ராவரைக்கும் நம்மை அழைத்துப் போய்க் காட்ட இயக்குநருக்கு ரொம்ப ஆசை. அதனால் தயாரிப்பாளரின் காசில் எடுத்துத் தள்ளிவிட்டார்..!


இதுவரையில் ஹீரோயின்களுக்காக உயிரையும்விடத் தயாராக இருக்கும் ஹீரோக்களை பார்த்திருக்கலாம். இதில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோயினுக்காக கொடைக்கானலில் இருந்து ஆக்ராவரைக்கும் சைக்கிளிலேயே பயணம் செய்கிறார்கள். கூடவே நம்மையும்தான்..! கொஞ்சம், கொஞ்சம் அறுவை, இழுவையுடன்.. எல்லார் வாயிலும் கம் போட்டு ஒட்டினால் என்று நினைக்கும் அளவுக்கு பேசித் தள்ளிவிட்டார்கள்.  மன்சூர் அலிகானின் கர்ஜனையைக் கேட்டு வயிறு கலங்கியதுதான் மிச்சம். நிஜத்தில் அழகாக பேசும், மன்சூர் திரைப்படத்தில் மட்டும் ஏன் இப்படி..?

என்னமோ காதல் படமென்றால் விழுந்தடித்து ஓடிவிடும் என்று நினைப்பு இவர்களுக்கு. படமாக்கியதிலாவது கொஞ்சம் ஜீவன் வேண்டாமா..? ஒளிப்பதிவை மட்டும் நல்லபடியாக வைத்துவிட்டால் இதற்காகவே கடைசிவரையிலும் அனைவரும் அமர்ந்திருப்பார்கள் என்று ஒரு நப்பாசை..!  என்ன இருந்து என்ன புண்ணியம்..? பாடல்களையும், பாடல் காட்சிகளையும் மெனக்கெட்டு இத்தனை பிரமோட் செய்தும், பலனில்லை..! எப்படியோ ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தாகிவிட்டது என்ற புண்ணிய லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது..! ஒரே ஆறுதல் ஹீரோயின்தான்.. ஹி.. ஹி.. ஹி..!


உடும்பன்-சினிமா விமர்சனம்

அவசியம் இது பத்தி பேசணுமா..? வேணாம்னு நினைச்சேன். பதிவு பண்ணி வைச்சுத் தொலையலாமேன்னு லேசா தோணுது..!

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்காங்களாம்..! எப்படின்னு மட்டும் கேக்காதீங்க.. உங்களுக்குத் தைரியம் இருந்தா படத்தை போய் பாருங்க..!


களவாணி தொழில் செய்யும் ஹீரோ ஐ.ஜி.யின் வீட்டில் கொள்ளையடிக்கப் போகிறார். “இப்பத்தான் காலைல பட்டப்பகல்ல ஸ்கூல்ல என் பொண்ணை சேர்க்கப் போனப்ப எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டாங்க”ன்னு ஐ.ஜி. லேசா பொளம்புறாரு. அவ்ளோதான். இந்த ஒரு வார்த்தையே ஹீரோவை தலைகீழா மாத்திருச்சாம். உடனே வீட்டுக்குள்ள புதைச்சு வந்திருந்த கொள்ளையடிச்ச பணத்தை வைச்சு ஸ்கூல் கட்டுறாரு. அதுக்குள்ள 

ஜெயிலுக்கு போன அவரோட அண்ணன்காரன் வெளில வர்றாரு.. இடைல ஹீரோ ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்க.. அதுக்குள்ள அண்ணன் ஸ்கூலை வேற லெவலுக்குக் கொண்டு போய் அசத்திர்றாரு.. கடைசீல அண்ணனையும் விரட்டிட்டு, ஸ்கூலையும் காப்பாத்தி, பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்குற கல்வித் தந்தையா உருமாறாராம் ஹீரோ.. இதைத்தான்பா ஒரு அழுத்தமும் இல்லாம சொல்லிருக்காங்க..!

எல்லாத்தையும், எல்லாத்தையும்விட... ஹீரோவோட அண்ணன்காரன் அப்பப்போ முழிச்சிக்கிட்டே, வெறிச்சுக்கிட்டே நிப்பாரு பாருங்க.. அப்படியே அந்த டைரக்டரை.. சரி.. வேணாம்.. விட்டுர்றேன்..! இந்தப் படத்தைப் பார்க்காதவங்கதான் பாக்கியசாலிங்க.. ஒரு பாடலும், பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட விதம் அருமை. நல்ல பாடல். ஆனால் தேறாத படத்தில் இடம் பெற்று வீணாகிப் போனதுதான் மிச்சம்..!

இயக்கம் தெரிந்த ஒருவரிடம் படத்தின் கதையைக் கொடுத்து எடுக்கச் செய்திருக்கலாம்.. எல்லாம் வீண்..! இந்த லட்சணத்துல இது மாதிரி படத்துக்கெல்லாம் தியேட்டர் கிடைக்கலைன்னு பொலம்பல் வேற.. அடப் போங்கப்பா..!

இது மாதிரி குறைந்த பட்ஜெட் படங்களையெல்லாம் அதிகப்பட்சம் 1 கோடிக்குள் எடுத்துவிடலாம். ஆனால் படத்தை வாங்கத்தான் ஆளில்லாமல் இருக்கிறது. இதனை மட்டும் ஆரம்பத்தில் அவர்கள் உணர்வதில்லை. அல்லது இந்தச் செய்தியே தயாரிப்பாளர்களுக்கு மறைக்கப்படுகிறது. அதிலும் தற்போதைய லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள் யார், யார் என்றால், தங்களது மகனையோ அல்லது தங்களையோ முன்னிறுத்தி படம் எடுப்பவர்கள்தான் .

மேற்குறிப்பிட்ட வரிசையில்கூட பாவி படத்தின் ஹீரோதான் தயாரிப்பாளர். விளையாட வா படத்தின் ஹீரோவின் தந்தைதான் தயாரிப்பாளராம். ஒரு மழை நான்கு சாரல் படத்தில் வீட்டு ஓனராக நடித்தவர்தான் தயாரிப்பாளராம். இதற்காகவே இவருக்கு படத்தில் சண்டைக் காட்சி ஒன்றும் உண்டு. பவர் ஸ்டாரெல்லாம் செத்துட்டாரு. அப்படியொரு ஸ்டண்ட்டு..! உடும்பன் படத்தின் தயாரிப்பாளர் பாடம் புத்தகத்தின் பப்ளிஷர், ஆசிரியர்.  ஏற்கெனவே நாகரிகக் கோமாளி என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியவர். காதல் பாதையும் இதே கதைதான்.. படத்தின் தயாரிப்பில் ஹீரோவின் பங்களிப்பும் உண்டாம்.  சூழ்நிலை மட்டுமே இயக்குநருக்கான படமாக தயாராகியிருக்கிறது..!

எல்லாஞ் சரி.. இப்படி படத்தையெல்லாம் எடுத்துவிட்டு படம் பார்க்க வாங்க என்று எந்தத் தைரியத்தில் இவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மாதிரி படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்கும் மகா ஜனங்கள் என்ன படம் எடுத்திருக்கானுவ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு போனால், செத்தாலும் திரும்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள். எல்லா படமும் இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஏற்கெனவே தியேட்டர் கட்டணத்தைக் காட்டி குடும்பத்துடன் வர தயக்கத்துடன் இருக்கும் ரசிகர்களை மேலும், மேலும் சோகத்தில் தள்ளி அவர்களை தியேட்டர் பக்கமே வர விடாமல் தடுப்பதைத்தான் இது போன்ற படங்கள் செய்கின்றன. அதிகப்பட்சம் 10-ல் இருந்து 30 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கும் இப்படங்கள் அடுத்தடுத்த ரவுண்டுகளில் சொற்ப விலைக்கு விற்கப்பட்டு போஸ்டர் காசு கூட கிடைக்காமல் திருப்தியை மட்டுமே அளிக்கப் போகின்றன..! 

லோ பட்ஜெட்டில் இப்படி ஏதோ ஒன்றை எடுத்து வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொள்வதைவிட இந்தப் பணத்தில் தங்களது பிள்ளைகள் பெயரில் சொத்தாவது வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்காச்சும் உதவும். எதுக்கு இந்த கலைச் சேவை..? 


போலீஸ் கொலையாளிகளுக்கு ஒரு அட்வைஸ்..!

24-02-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வெகுநாட்களாகிவிட்டது நமது போலீஸுக்கு.. ரத்தச் சகதியை ஏற்படுத்தி..! தங்களுக்கு எப்போதெல்லாம் அவமானங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதனைத் துடைப்பதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாரையாவது என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுவது அவர்களது வழக்கம்.

கோவையில் மோகன்ராஜ் கொல்லப்பட்டு ஒன்றேகால் வருட இடைவெளிக்குப் பின்பு சென்னையில் தங்களது வெறியைக் காண்பித்திருக்கிறார்கள். வழக்கம்போல “உங்க வீட்டுச் சொத்தை கொள்ளையடிச்சா ச்சும்மா விட்ருவீங்களா..? உங்க பணத்தைக் களவாண்டிட்டு போனா பார்த்துக்கிட்டிருப்பீங்களா..? போட்டுத் தள்ளணும்.. விடக் கூடாது..” என்றெல்லாம் வெட்டி நியாயம் பேசும் கனவான்களின் அனர்த்தமும் காலையில் இருந்து இணையத்தளங்களில் அளவுக்கு அதிகமாகவே புழங்குகிறது.

செய்தது கொள்ளை. அளவு 35 லட்சம். நேரடி ஆதாரங்கள் இல்லை. வீடியோவில் கிடைத்தது சந்தேகப் புள்ளி மட்டுமே..! ஆளைத் தேட பத்திரிகைகளுக்கு மட்டும் புகைப்படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். 300 பிளக்ஸ் பேனர்கள் வைக்க உடனுக்குடன் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் டெண்டர்கள் ஏதும் இல்லாமலேயே..! காத்திருக்கிறது விசாரணைகள்..!


இரவில் தொலைபேசியில் துப்பு கிடைத்த்தாம்..! உடனே ஓடிச் சென்றார்களாம்.. இருப்பது ஒரேயொரு வாசல் கொண்ட வீடு. முன்புறம் மட்டுமே. வெளியில் வர வேறு வழியில்லை. இரவு நேரம். உள்ளே 5 பேர்தான்.. வெளியில் வாருங்கள் என்று அழைத்தபோது சுட்டார்களாம். மயிறே போச்சுன்னுட்டு வெளியில் காத்திருந்திருக்கலாமே..! எப்படியும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். அதுதான் நடிப்புலத் திலகங்களான அடிபட்ட 2 துணை ஆய்வாளர்களும் ஆஸ்பத்திரியில் வந்துதானே கட்டு போட்டார்கள். பிறகென்ன..? விடியும்வரையும் காத்திருந்திருக்கலாம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதனையும் மீறி அவர்களே தற்கொலை செய்து கொண்டால் போய்த் தொலையுது என்று விட்டிருக்கலாம்.. இல்லை.. அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் வெளியில் வந்திருப்பார்கள். அக்கம் பக்கத்து சாட்சிகள் பார்த்திருப்பார்கள். 


எதற்குமே வாய்ப்பளிக்காமல், ஜன்னல் வழியாக அரிவாளால் வெட்டினார்கள் என்று இராம.நாராயணன் படத்தின் ஜிகினா வேலை போல் முதலில் ஒரு கமெண்ட்டை சொல்லிவிட்டு, பின்பு துப்பாக்கியால் சுட்டார்கள். அதனால் திருப்பிச் சுட்டோம் என்று தோசையைத் திருப்பிப் போடுகிறார்கள்.

அதென்னவோ தெரியவில்லை. போலீஸ் சுட்ட ஐந்து குண்டுகளும் மிகச் சரியாக இறந்து போனவர்களின் நெஞ்சில்தான் பாய்ந்துள்ளது. அவர்கள் சுட்ட குண்டுகளோ போலீஸாரின் தலையிலும், தோள்பட்டையிலும், தொடையிலுமாக பாய்ந்துள்ளது. தலையில் குண்டு பாய்ந்து யாராவது உயிருடன் இருக்க முடியுமா..? அதுவும் அழகாக சோப்பு டப்பா போல் ஒருத்தர் மேக்கப் போட்டு படுத்திருக்கார் பாருங்க.. அசத்தல்..! சினிமாலகூட இதைச் செய்ய முடியாது..!


அந்த வீட்டின் ஜன்னல் பகுதியை திருப்பித் திருப்பிக் காட்டுகிறார்கள்.  இரும்பு கிரில் போட்டது. அதில் அரிவாளை நீட்டி போலீஸாரை எப்படி வெட்டி..? உஷ்.. சினிமாக்காரங்களே யோசிக்க முடியாதுப்பா..! இப்போதுவரையிலும் கதவைத் திறக்கவேயில்லை என்றுதான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட கொலையாளியும், ஆணையருமான திரிபாதி கூறி வருகிறார். அப்படீன்னா நாம இப்படித்தான யோசிக்க வேண்டியிருக்கு..? அரிவாள் எங்கிட்டிருந்து வந்துச்சுன்னு..!? தலைல குண்டு பாய்ஞ்சது கரெக்ட்டா..? அரிவாள்ல வெட்டினது கரெக்ட்டான்னு யாராச்சும் கேட்டுச் சொல்லிட்டீங்கன்னா எங்களுக்கும் ஒரு விளக்கம் கிடைச்ச மாதிரியிருக்கும்..!

அவங்க கதவைத் திறக்க மாட்டேன்னு சொன்னாங்களாம்.. இவங்க உடனே கதவை உடைச்சு உள்ள போய் சுட்டாங்களாம்.. செத்துட்டாங்களாம்.. ஏம்ப்பா இவங்களையெல்லாம் அப்படியே ஒரு படகுல ஏத்தி இராமேஸ்வரம் கடல் பகுதில விட்டுட்டா என்ன..? ஒரு நாள்விட்டு ஒரு நாள் சிங்கள போலீஸ்காரன் தமிழகத்து பகுதிக்குள்ள வந்த நம்ம இந்தியனை, நம்ம தமிழனை சுட்டுட்டுப் போறான். காப்பாத்த நாதியில்லை..! இங்க, இவ்ளோ குறி பார்த்து சுடுற போலீஸ்காரங்களை வீட்ல ஆர்டர்லி வேலை பார்க்க வைச்சே இடுப்பொடிய வைக்குறாங்களே ஸ்டார் அந்தஸ்து அதிகாரிகள்.. எதுக்கு..? திரிபாதியையும் சேர்த்தே பார்சல் செஞ்சுரலாம்..!

உள்ளே இருப்பது அந்தக் கும்பல்தான் என்றால் ஆட்களை உயிருடன் பிடித்திருக்கலாம். அவர்கள் மூலமாக இப்பவும் காணாமல் போன 31 லட்சம் ரூபாயை மீட்டிருக்கலாம்.. இப்ப அதுவும் போச்சு. அந்த 31 லட்சத்தை யார்கிட்டேயிருந்து இனிமேல் தேடுவாங்களாம்..? பணம் இவர்களிடம்தான் கைப்பற்றப்பட்டதுன்னு போலீஸ் விடுற கதையையெல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை. போலீஸின் ரகசிய நிதியே கோடிக்கணக்கில் இருக்கும்..! கொஞ்சூண்டு அள்ளிவிட்டு கணக்கைக் காட்டி முடிச்சிட்டா போதும்தான்..!

எதையாவது செய்து கேஸை முடித்துவிட நினைத்திருக்கிறார்கள்..! வசதியாக கிடைத்திருக்கிறார்கள் வெளி மாநில இந்தியர்கள். நன்கு கவனிக்கவும் இவர்கள் இந்தியர்கள்தான். இந்திய தேசியம் பேசும் இந்தியர்கள் மிகவும் கவனிக்கவும். இறந்து போன இந்த இந்தியர்களைத்தான்.. இந்த அப்பாவிகளைத்தான்(குற்றம் நிரூபிக்கப்படும்வரையிலும் அவர் அப்பாவிதானாம்..! எல்லா அரசியல்வியாதிகளும் இதைத்தான் சொல்லுதுக.. அதுனால இவங்களையும் நாம இப்படியே அழைக்கலாமே..?) சமூக விரோதிகள்ன்னு திருப்பித் திருப்பிச் சொல்லுது அரசு அதிகார வர்க்கம்..!

ஐயோ பாவம்.. ஐ.பி.எஸ். படித்த பிதாமகன்கள்.. பொறுப்பில் இருக்கும் கொஞ்ச காலத்தையே அதிகாரத்துடன் வாழ்ந்து, குடும்பத்திற்காக கொஞ்சம் சம்பாதித்துவிட்டு ஓய்வு பெற்று பின் பொறுப்பில் இருந்தபோது வாலாட்டியதை நினைவுபடுத்தி மீண்டும் ஒரு பதவியைப் பிடித்து சாகும்வரை ஆட்சி, அதிகாரத்தில் இருக்கத் துடிக்கும் கேவலப்புத்தி கொண்டோர்தான் அதிகாரிகளாக இருந்து தொலைகிறார்கள்..! 

5 பேரை உயிருடன் பிடிக்கத் துப்பில்லாத இவர்கள்தான் இந்தியாவிலேயே மிகச் சிறந்த போலீஸாம்.. இதை இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்..! சம்பவத்தில் பலவித ஓட்டைகளை வைத்துக் கொண்டு இவர்கள் பின்னியிருக்கும் திரைக்கதையில்தான் இந்தியாவின் ஜனநாயகம் பல்லைக் காட்டுகிறது..! இந்த லட்சணத்துல இந்தியர்கள் ஒரே ஜாதியாம்.. இந்தியர்கள் ஒரே இனமாம்..! 

கேட்க நாதியில்லாத, தேடி வராத இந்தியர்களை பரலோகத்திற்கு பார்சல் கட்டியிருக்கும் இந்த ஐ.பி.எஸ்.கள்தான் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் மார்பில் கேடயங்களைக் குத்திக் கொண்டு தங்களது திருமதிகளை மகிழ்விக்கப் போகிறார்கள்..! அடுத்த வருஷ பரம்வீர்சக்ரா விருதை சந்தேகமே இல்லாமல் திரிபாதிக்கு வாரி வழங்கலாம்..!

இந்த 14 லட்சம் மீட்புக்கே 5 கொலைகள் என்றால் திரிபாதி இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது..!

60 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத பணத்தினை சொத்தாக காட்டியிருக்கும் போயஸ் ஆத்தாவையும் இதேபோல் போட்டுத் தள்ளிவிட்டு வீட்டில் இருப்பவைகளை அள்ளிக் கொண்டு வந்தால் புண்ணியமாக இருக்கும்..!

ஆத்தாவின் முன்னாள் உடன்பொறவா சகோதரி மற்றும் அவரது உற்றார், உறவினர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமே பார்க்காமல் ஒரு குண்டைகூட வீணாக்காமல் செலவழித்தால் இன்னும் ஒரு 1000 கோடி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்..!

அப்படியே கோபாலபுரத்து பக்கம் போய் அங்கேயும் தனது வீர பராக்கிரமங்களைக் காட்டினால் 200 கோடி ரூபாய் கிடைத்தது போல.. 
கோபாலபுரத்து சொந்தங்களையும் இதேபோல் ரவுண்டு கட்டினால் நிச்சயமாக 10000 கோடி கிடைக்கும்.. இதை வைத்து 10 லட்சம் போலீஸாரை நியமித்து ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியின் வீட்டுக்கு 200 போலீஸாரை ஆர்டர்லியாக நியமித்து அவரவர் மனைவிமார்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம்..!

சி.ஐ.டி. காலனியில் ஒரு அம்மா இருக்கிறார். இப்போதுதான் உள்ளே போய்விட்டு வந்திருக்கிறார். கேட்கவே வேண்டாம். டெல்லி சிபிஐ கோர்ட்டே குற்றவாளி என்றே இப்போதும் கருதி வருகிறது. நீங்கள் துப்பாக்கியைத் தூக்கினால் அவர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, உங்களுக்கு பதவி உயர்வு உடனேயே கிடைத்தாலும் கிடைக்கலாம்..!

அப்படியே கொஞ்ச நாள் காத்திருங்கள். டெல்லியை வென்ற மாவீரன்.. தி.மு.க.வின் மானம் காத்த கொள்கை பரப்புச் செயலாளர் என்ற போஸ்டர் பாராட்டுதல்களோடு ராசா என்பவர் சென்னை விமான நிலையம் வழியாகத்தான் தமிழ்நாட்டுக்குள் கால் வைப்பார். இவரை போட்டுத் தள்ளினால் உங்களுக்கு எப்படியும் 1000 கோடியாவது கிடைக்குமாம்..!

உங்களிடம்தான் நிறைய உளவுத் துறை ஆட்கள் இருக்கிறார்களே..! ஏன் வீணாக்குகிறார்கள். ஒவ்வொரு அரசியல்வியாதி, கருப்புப் பணத்தில் உண்டு, களித்து உறங்கும் தொழிலதிபர்கள் என்று லிஸ்ட் எடுத்து எல்லோரையும் இதே போல் போட்டுத் தள்ளுங்க..! 

சர்வதேச நீதிமன்றமும், சர்வதேச போலீஸும் உங்களை அழைத்து கெளரவப்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். நாங்களும் உண்மையான இந்தியர் ஒருவரை இப்போது அடையாளம் கண்டு கொண்டோம் என்று பெருமைப்படுவோம்..!

போனால் போகட்டும் போடா..!

21-02-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்திய சோப்ளாங்கிகள் மீண்டும் தோத்துட்டாங்களாமே..? 

இந்த நேரத்தில் எப்பொழுதோ, ஏதோ ஒரு பத்திரிகையில் நான் படித்த “போனால் போகட்டும் போடா” ஸ்டைல் பாடல் நினைவுக்கு வந்தது..!

படித்துதான் பாருங்களேன்..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
அடித்தவர் யாரடா..?
போனால் போகட்டும் போடா..!
போனால்.. போகட்டும் போடா..!


வந்தது பந்து; போனது ஸ்டம்பு 
அவுட்டானதேதான் தெரியாது..!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த இன்னிங்ஸ் முடிவது எப்போது..?


நமக்கும் நேரே அம்பயர்டா..!
அவர் எல்லாந் தெரிந்த தலைவனடா..!
இந்த பேட்ஸ்மேனை ஆட்டும் கலைஞனடா..!
போனால் போகட்டும் போ..போ..போ..போடா..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
ஜெயித்தவர் யாரடா..?
போனால் போகட்டும் போடா..


சிக்ஸரும், பவுண்டரியும் லீக்கினில் அடித்தேன்..
இங்கே ஒரு ரன் எடுத்தேனா..?
எடுத்திருந்தால், தலைகுனிந்தே நானும் 
பெவிலியனுக்குள் நுழைவேனா..?


கிரிக்கெட் என்பது வியாபாரம் - இது 
போர்டுக்கு போனால் ஜெயிக்காது - ஆட்டம்
கோட்டை விட்டால் திரும்பாது..! 
போனால் போகட்டும் போடா..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
அடித்தவர் யாரடா..?

குறிப்பு : இதில் இன்னொரு சரணமும் உண்டு. மூளையை எப்படி கசக்கிப் பார்த்தும் அது மட்டும் நினைவுக்கு வர மறுக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் பெரிதும் மகிழ்வேன்..!


அம்புலி 3-D - சினிமா விமர்சனம்

18-02-2012என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மை டியர் குட்டிச்சாத்தானில் அறிமுகமான 3 டி திரைப்படம் அப்போதைய வயதில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.. அடுத்து வந்த அன்னை பூமி, யானையின் தும்பிக்கை நம் மூக்கைத் தொட வருவதையும், குரங்கின் வால் நம் முன்னால் ஆடுவது போலவும், இடையிடையே விஜய்காந்தின் கால் ஷூ நம் முகத்தில் படுவது போலவும் எபெக்ட்ஸாக காட்டி அப்போதைக்கு ஒரு சாதனையாக கருதி முடித்திருந்தார்கள்.


இப்போது, இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு 3-டி. இடையில் ஆங்கிலப் படங்கள் நிறையவும் பார்த்தாகிவிட்டது. அவதார்கூட 3 டி பார்மெட்டில் வந்து இன்னொரு பக்கம் காசை அள்ளிவிட்டது..! தமிழில் தற்போதைய டிஜிட்டல் தரத்துக்கேற்ப மீண்டும் ஒரு 3-டியை கொண்டு வருவது என்கிற நினைப்புடன் சாதித்துக் காட்டியிருக்கும் அந்த இரண்டு இளைஞர்களுக்கும் எனது நன்றி..!

வெற்றியோ, தோல்வியோ ஏதாவது புதிய முயற்சிகள் செய்தால்தான் அத்துறையின் வளர்ச்சி கிடைக்கும். யாரோ ஒருவர் முயன்று தோற்றுப் போக, அடுத்தவர் வந்து ஜெயித்துக் காட்டுவதுதான் உலக நியதி. இதில் அனைத்துத் துறையின் வளர்ச்சிகளும் அடக்கம். அந்த வரிசையில் இந்த இரட்டை இயக்குநர்களான ஹரிசங்கர், ஹரிஷ் நாராயணனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது..!

இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயே ராணுவத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்த விஞ்ஞானி ஒருவர் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காலத்திலேயே வந்து சேர்கிறார். இந்தியா சுதந்திரமான பிறகும், ஒரு கல்லூரியை நிறுவி அதை நடத்திவருகிறார். அப்போது தான் ராணுவத்தில் இருந்தபோது செய்து பார்த்து பாதியிலேயே நிற்கும் ஒரு ஆராய்ச்சியை தன்னிடம் மருத்துவச் சிகிச்சைக்காக வந்த மாடந்திபுரத்து கர்ப்பிணிப் பெண்ணான உமா ரியாஸிடம் செய்து பார்க்கிறார். விளைவு.. உமா ரியாஸுக்கு வினோதமான விலங்கு முகத்துடன் குழந்தை பிறக்கிறது..! இதைப் பார்த்த அதிர்ச்சியிலும், வேதனையிலும் உமா ரியாஸ் தற்கொலை செய்து கொண்டு உயிரைவிட.. அந்தக் குழந்தை அப்போதே கிராமத்து மக்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறது..


அந்த ஊரின் எல்லையில் இருக்கும் சோளக்காட்டுக்குப் பின்பக்கம் இருக்கும் ஒரு பாழடைந்த கோவிலுக்குள் குடியிருக்கும் அந்த மனித-விலங்கு பிறவி, சோளக்காட்டு வழியாக வருபவர்களை தாக்கிக் கொல்கிறது. இதனால் அந்தப் பாதையை மறித்து சுவர் எழுப்பிவிட்டு தங்களுடைய ஊரையே காலி செய்துவிட்டு கொஞ்சம தள்ளி புது மாடந்திபுரம் என்றொரு ஊரை உருவாக்கி தங்களைக் காத்துக் கொள்கிறார்கள் மாடந்திபுரத்து மக்கள்..!

அந்தச் சோளக்காட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் காதலர்கள் அந்தச் சோளக்காட்டை கிராஸ் செய்ய.. மனித விலங்கின் பார்வையில் பட்டு பயப்படுகிறார்கள். ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிய வர.. வாலிப வயசுக்கேற்றவாறு அதனை எப்படியாவது கண்டறிய வேண்டும் என்று துடிக்கிறார்கள். கண்டறிந்தார்களா என்பதுதான் மிச்சச் சொச்சக் கதை..!

3-டி கண்ணாடி அணியாமல் பார்த்தால் இரண்டிரண்டாகத் தெரிகிறது. அணிந்து பார்த்தால் பளபளவென்ற வெல்வெட் கண்ணாடியில் நம் கண்ணுக்கு மிக அருகில் நடப்பதாகவே தெரிகிறது..! பெரிய நகரங்களில் இருக்கும் டீலக்ஸ் தியேட்டர்களில் 3-டியின் அழகை ரசிக்கலாம்..! சிற்றூர்களில் எப்படியோ தெரியவில்லை..!

சின்னக் குழந்தைகளின் பரவசத்திற்காக பாம்பு கண்ணின் அருகே வருவது, பூக்கள் நம் மீதே விழுவது.. செடி, கொடிகளுக்கிடையே நாம் செல்வது.. வேல் கண்ணைக் குத்த வருவது.. என்று 3-டி எபெக்ட்ஸ் படத்தில் ஆங்காங்கே உள்ளன..! இருந்தாலும் போதவில்லை என்றே தோன்றுகிறது..!


காதலோடு சேர்த்து திரில்லரையும் சேர்த்தால்தான் பெட்ரோலையும், தீப்பெட்டியையும் ஜோடி சேர்த்தது போலாகும் என்பதால் காதல் கதைக்காக அஜய், ஸ்ரீஜித், சனம் மற்றும் திவ்யா நாகேஷ் என்று இரண்டு ஜோடிகள். இரண்டு ஹீரோயின்களும் மாடந்திபுரத்திலேயே வசிக்கிறார்கள். அஜய் தனது ஹீரோயினை பார்க்க சோளக்காட்டு வழியாக நள்ளிரவில் செல்லும்போதுதான் மனித விலங்கை பார்த்து பயப்படுகிறான். இதில் இருந்து துவங்குகிறது படத்தின் வேகம். அந்த விலங்கை காட்டுகின்றவரையில் எப்படித்தான் அது இருக்கும் என்கிற சஸ்பென்ஸை அப்படியே டெப்த் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் இயக்குநர்கள்..!

இருக்கா, இல்லையா என்ற கேள்விக்குறியை கருப்புச் சட்டைக்கார தோழருடன் கூடிய உரையாடலில் அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, கலைராணியுடன் பேச வைத்திருப்பது செம ட்விஸ்ட்டு.. கலைராணியின் அறிமுகக் காட்சி சிறந்த இயக்கத்திற்கு ஒரு சான்று. அவர் காட்டும் தழும்பிற்கு பிறகே உருவம் என்ற ஒன்று இருப்பதையே லேசுபாசாக உணர முடிகிறது..!


அந்த சோளக்காட்டுக்குள் பார்த்திபனை பார்த்தவுடன் ஒருவேளை இவர்தானோ என்கிற எண்ணமும் ஏற்படுகிறது. ஆனால் அவருக்கு அதிக வேலையில்லை. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் அவசரத்தனமாக இருப்பதும் படத்தில் ஒரு மைனஸ்..! தன் தாய்க்கு இரண்டாவதாக பிறந்த மனித விலங்கை தீர்த்துக் கட்ட இத்தனை நாட்களாக இவர் ஏன் காத்திருக்க வேண்டும்..? உடனேயே போட்டுத் தள்ளியிருக்கலாமே..? அம்மாவுக்கு வைத்தியம் பார்த்த அந்த ஆங்கில ஆராய்ச்சியாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய் திரும்பியிருக்கும் பார்த்திபனின் இந்தத் தாமதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. அதுவும் மனித விலங்கின் இருப்பிடத்தைத் தெரிந்து வைத்திருந்தும் அவர் ஏன் அதனைக் கொல்லாமல் விட்டுவிட்டார் என்பதும் சரியாகச் சொல்லப்படவில்லை..! நான் கடவுள் ராஜேந்திரனை பார்த்திபன் கொலை செய்வதும், அதற்கான பழியை மனித விலங்கின் மீது திணிப்பதும் சர்ரென்று நம் மண்டையில் ஏற மறுக்கிறது..!

ராஜேந்திரனின் மகளின் கெஞ்சல், அவளுடைய பார்வை.. ராஜேந்திரனின் பார்வையில் மகளின் கால் மட்டும் தெரிவது, மனித விலங்கை பார்த்துவிட்டு இளசுகள் ஓடும் ஓட்டம்.. திவ்யா நாகேஷின் கிராமத்து அப்பாவித்தனம்.. லைப்ரரியில் அவர்களது காதல் மொழிகள்.. கிராமத்து வீட்டில் திவ்யா அப்பாவியாய் கேட்கும் கேள்வி... மனித விலங்கிற்கு பெளர்ணமியன்று பலியாடு கொடுக்கும் விதம்.. என்னதான் செய்வது என்று பஞ்சாயத்து போட்டு பேசும் யதார்த்தம்..! இறுதிக் காட்சியில் நடக்கும் யுத்தம்.. என்று பல காட்சிகள் இடையிடையே ரசிக்கும்வகையில்தான் இயக்கியிருக்கிறார்கள்.


ஒரு திரில்லர் படத்திற்கேற்றாற்போன்று திரைக்கதை இருந்தும் இறுதிக் காட்சியில் கேரக்டர்களின் வருகைக்கு லாஜிக் இல்லாமல் போனதுதான் மிகப் பெரிய துரதிருஷ்டம். தேசிய பாதுகாப்புப் படையும், காவல்துறையும் பெரும் போராட்டம் நடத்தி மீட்பதுவரையிலும் ஓகேதான். ஆனால் அவர்கள் எப்படி இங்கே நுழைந்தார்கள் என்ற கேள்விக்கு இன்ஸ்பெக்டரிடம் சொல்கின்ற ஒற்றை வரி வசனத்தையே அடையாளம் காட்டுகிறார்கள் இயக்குநர்கள்.  அந்த இணைப்புக் காட்சிகளை எடுத்திருந்தும் சென்சார் எதிர்ப்பு காரணமாக வைக்க முடியவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள் இயக்குநர்கள். பரவாயில்லை என்று விட முடியாத காட்சிகள் அவை என்பதால் அதனை மன்னித்து விடுவதே சிறந்தது..!  


பெரும்பாலும் இரவுக் காட்சிகள்தான் என்பதால் ஒளிப்பதிவாளர் சதீஷிற்கு நிறையவே வேலை கொடுத்திருக்கிறார்கள். சோளக்காட்டின் பிரமாண்டத்தையும், பார்த்திபனின் வீட்டையும் காட்டியிருக்கும்விதமும், பலியாட்டை அனுப்பி வைக்கும் காட்சியிலும், கிளைமாக்ஸிலும் கேமிரா பட்டையைக் கிளப்பியுள்ளது.

110 நாட்கள் ஷூட்டிங்கில் மிகுந்த கஷ்டத்திற்கிடையில், கடும் உடல் உழைப்புடன் இதனைச் சாதித்திருக்கிறார்கள். 3 டி படங்களால் ஒரு பெரிய உதவி தயாரிப்பாளர்களுக்கு உண்டு. அது திருட்டு டிவிடியில் இதனை யாரும் காப்பி செய்ய முடியாது என்பதுதான்.. இது ஒன்றுக்காகவே இந்த தொழில் நுட்பத்தைக் கையாளலாமே என்றாலும், திரில்லிங் வகைகளும், குழந்தைகளுக்கான படங்கள் மட்டுமே இதுவரையில் 3-டியில் உலக அளவில் வெளிவந்திருக்கிறது. நம்முடைய மசாலா படங்களுக்கும், குடும்ப படங்களும் இதில் வெளிவந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் இனிமேல் சோதித்துதான் பார்க்க வேண்டும்..!

இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தமிழ்த் திரையுலகத்தின் வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் உரமாக இருக்கும்.. கை கொடுப்போம்..!  இந்தாண்டு கலக்கப் போகும் சினிமா கானா பாடல்..!

11-02-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் குத்துப் பாடல்கள் இடம் பெறாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு காலம் கெட்டுப் போய்க் கெடக்கிறது. இதில் இசையமைப்பாளர் தேவாவால் புகழடைந்த சென்னைவாழ் கானா பாடல்களும் சத்தம் போடாமல் ஒரு பக்கம் ஜெயித்துதான் வந்திருக்கின்றன. சித்திரம் பேசுதடியில் ஒலித்த “வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற பாடலின் அசுர வெற்றி கானா பாடல்கள் பற்றி சமீபத்திய தமிழ் இளைஞர்களுக்கு ஒரு தேடுதல் வேட்கையை ஏற்படுத்திக் கொடுத்தது.


அந்த வரிசையில் வரவிருக்கும் பழைய வண்ணாரப்பேட்டை என்கிற படத்தில் ஒரு கானா பாடல் ஸ்பெஷலாக இடம் பெற்றிருக்கிறது. கிருஷ்ணா டாக்கீஸின் சார்பில் எம்.பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்தை மோகன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். பிரஜன், ரிச்சர், ரேணிகுண்டா நிஷாந்த் நடித்திருக்கும் இப்படத்தின் ஹீரோயின் டாசு. 


இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் மோகனே எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் “உன்னதான் நெனைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல” என்ற கானா பாடல். இதற்கு இசையமைத்திருப்பவர் ஜூபின். ஜூபினுக்கு இது 3-வது படமாம். இந்தப் பாடலை புகழ் பெற்ற நாட்டுப் புறப் பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லாலே என்ற பாடலை பாடியவர்.


ஒரேயொரு டிரம்பட் மற்றும் ஒரேயொரு டேப் கருவியை வைத்தே இந்த முழு பாடலுக்கும் இசையமைத்திருப்பதாகச் சொல்கிறார் ஜூபின். பொதுவாக இந்த மாதிரியான ஸ்பெஷல் பாடல்களை ஷூட் செய்து முதலில் தனியே வெளியிட்டு விளம்பரம் தேடுவார்கள். ஆனால் இந்தப் படக் குழுவினர் இதிலும் தனி ஸ்டைலாக இந்தப் பாடலுக்கு அமைக்கப்பட்ட பாடல் காட்சியை மட்டும் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சியில் பாடகர் வேல்முருகனே நடித்தும் இருக்கிறார்.  

பாடல் எடுக்கப்பட்ட காட்சிகயை உங்களுக்காக யூடியூபில் ஏற்றி இணைத்துள்ளேன்.. பாருங்கள். கேளுங்கள்..!


ஒரு நடிகையின் வாக்குமூலம்..! - சினிமா விமர்சனம்

11-02-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இவ்வளவு தைரியமாக இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பார்கள் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்திருக்காது..! அந்தத் தைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.


“சினிமாவுலகில் மின்மினிப் பூச்சிகளாய் மின்னி மறைந்த தேவதைகளுக்கு சமர்ப்பணம்..” என்ற வாசகங்களுடன் அகால மரணமடைந்த தமிழ்த் திரையுலகத் தாரகைகள் அனைவரின் புகைப்படங்களோடு காண்பித்து அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் படத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

புதிய தொலைக்காட்சி ஒன்றுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த வேண்டி ஏதாவது புதுமையான நிகழ்ச்சியொன்றை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக டிவி ஓனரின் குடும்பத்து அசிங்கக் கதைகளை படமாக்க விரும்பாமல்.. அப்படியெல்லாம் எதுவுமே தங்களுக்குள் இல்லை என்று நினைத்துக் கொண்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சூப்பர் ஹீரோயின் அஞ்சலி இப்போது எங்கேயிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து அவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வர நினைக்கிறார்கள். 

இதற்காக டிவி ஓனரின் மகளும், சீனியர் தயாரிப்பாளருமான இப்படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் கீதா கிளம்புகிறார். கஷ்டப்பட்டு 4 சீன்களுக்குப் பிறகு பட்டென்று கண்டுபிடித்துவிடுகிறார். சோனியாவும் கஷ்டப்பட்டு காட்சிகளை வெளக்காமல், தன் கையில் வைத்திருக்கும் ஒரு டைரியை கொடுத்து இதுல என் சோகத்தையெல்லாம் கொட்டி வைச்சிருக்கேன். படிச்சுத் தெரிஞ்சுக்குங்க என்று சொல்லிவிட்டு கடைசி ரீலில் வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறார்.

கீதா டைரியைப் படிக்க, படிக்க அஞ்சலியின் நிஜக் கதை பிளாஷ்பேக்கில் விரிகிறது. ஆந்திராவில் நாடக்க் கலைஞரான தனது தந்தை, தாய், அக்கா, மாமா, மற்றும் தங்கையுடன் வாழ்ந்துவரும் சோனியா அகர்வால் அந்த ஊர் நாடகத்தில் நடிக்க ஊர் மக்கள் அனுமதி மறுத்த கோபத்தில் அவரது தாயால் சினிமா நடிகையாக்கும் சபதத்திற்கு இரையாகிறார்.

சென்னைக்கு படையெடுக்கிறார்கள் அம்மாவும், மகளும். வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் அவர்கள் படக் கம்பெனிகளில் ஏறி, இறங்குகிறார்கள். வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கையில் பணம் இல்லாத சூழலுக்கு வந்தவுடன் மூத்த “அனுபவசாலியான” ஜோதிலட்சுமியின் அறிவுரையின்படி முதலில் அம்மா மட்டும் “தொழிலுக்கு” சென்று வருகிறார். கிடைத்த பணத்தில் கொஞ்சம் மூச்சு விடுகிறார்கள். 

அடுத்து சோனியாவுக்கு புதிய படம் கிடைக்கிறது. ஆனால் அப்படத்தின் இயக்குநரோ சோனியா தன்னுடன் ஒரு நாள் “தங்க” வேண்டும் என்கிறார். அம்மாவே மகளை அனுப்பி வைக்கிறார். சோனியா அறிமுகமாகிறார் அஞ்சலியாக..! 

ஹிட்.. ஒரே ஹிட்.. மளமளவென்று ஏணிகளில் ஏறுகிறார்.. இல்லை. ஏற்றப்படுகிறார்.. பணம் குவிய, குவிய அவருடைய குடும்பத்தினரின் நடை, உடை, பாவனைகளில் மாற்றம்.. இடையிடையே தங்களுடன் ஒரு நாள் “டிஸ்கஷனுக்கு” வரும்படி அழைக்கும் அரசியல்வியாதிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அஞ்சலிக்கு வாழ்க்கையில் வெறுப்பு வரும் அளவுக்கு அவருடைய குடும்பத்தில் பணம் விளையாடுகிறது..!

ஒரு பெரிய ஹீரோவுடன் “லின்க்” செய்து விடுகிறாள் அம்மா. அது கல்யாணம்வரையிலும் போய்ச் சேர்ந்தால் நல்லது என்கிறாள். அஞ்சலியும் சம்மதிக்க, அது படுக்கைவரையிலும் போய் வயிற்றிலும் வாரிசு வந்துவிடுகிறது. இப்போது ஹீரோ, “போடி” என்று சொல்லிவிட, அஞ்சலியும் “போடா” என்று சொல்லிவிட்டு அடுத்த காதலனைத் தேடுகிறாள். புத்தம் புதிய படம் செய்யும் ஒரு துணை இயக்குநர் கிடைக்கிறான். அஞ்சலி அவனை மனதிற்குள்ளேயே காதலித்து வரும்வேளையில் அப்படத்தின் தயாரிப்பாளர் மூலமாக மேற்கொண்டும் பிரச்சினைகள் வர.. அந்தக் காதலனும் தாவி விடுகிறான்..

எல்லா வழியிலும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்த அஞ்சலி, தற்கொலை மட்டும் செய்து கொள்ளாமல், இவர்கள் கண்ணில் படாமல் போய்த் தொலைவோம் என்றுதான் அந்த மடத்தில் துறவியாகிவிட்டாராம். இந்தச் சோகத்தைப் படித்துப் பார்த்த கீதா, மீண்டும் இந்தப் புண்ணைக் கிளறி சேனல் காசு சம்பாதிக்க விரும்பவில்லை என்ற திடீர் பாசத்துடன் கதையை முடித்துக் கொள்கிறார். இம்புட்டுதான் கதை..!

நாடு இன்னிக்கு இருக்குற இருப்புல, ஒரு சினிமா பத்திரிகையாளனுக்கு ஆர்ட்டிஸ்டுகள் மத்தில என்ன மதிப்பும், மருவாதையும் இருக்குன்றது இயக்குனருக்கு தெரியலை போலிருக்கு. ஏதோ சி.பி.ஐ. ஆபீஸர் ரேஞ்சுக்கு கீதா கொடுக்கும் அலப்பறை ரொம்ப ஓவர்.. இயக்குநர், நடிகர், டச்சப் கேர்ள், அஞ்சலியின் அம்மா - இவர்களிடம் கீதாவுக்கு கிடைக்கும் மருவாதையை பார்த்து, பிரிவியூவில் அமர்ந்திருந்த நிஜ பத்திரிகையாளர்களே சிரித்துவிட்டார்கள்..!


இதுவரையில் நீங்கள் கேள்விப்பட்டிருந்த தமிழ்த் திரையுலக கதைகளைத்தான் ஆங்காங்கே கொத்து புரோட்டா போட்டிருக்கிறார்கள். குடும்பத்திற்காகவே ஓடாய். உழைத்து ஓய்ந்து போயிருக்கும் அத்தனை நடிகைகளும் தங்களின் துவக்கக் கால வாழ்க்கையில் சந்தித்திருக்கும் சில சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்பே இது..! நிச்சயம் சந்தித்திருக்க வாய்ப்புண்டு..

படம் பார்த்தபோதே எந்த நடிகையின் கதை என்றெல்லாம் யோசித்து, யோசித்து மண்டை காய்ந்து போய், பல நடிகைகளின் கதைகளை தொகுத்து போட்டிருப்பது கடைசியில்தான் புரிந்தது.. 2 அக்கா, தங்கை நடிகைகளின் துவக்கக் கால வாழ்க்கைக் கதை, நள்ளிரவில் சுவர் ஏறிக் குதித்து காதல் இயக்குநர்களுக்கு கழுத்தை நீட்டிய நடிகைகளின் கதை, நான் ஏற்கெனவே ஒரு இட்லிவடையில் சொன்னதுபோல, மகளுக்காக அவருடைய அம்மா தன் வாழ்க்கையை பயணம் வைத்து கடைசியில் நடுத்தெருவுக்கு வந்த கதை, மகள் செத்தாலும் பரவாயில்லை.. சொத்துக்களே போதும் என்று நினைத்த உற்றார், உறவினர்களை புரிந்து கொள்ளாமலேயே பரிதாபமாய் செத்துப் போன நடிகை என்று பலரையும் கொத்துக் கொத்தாக பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.


அஞ்சலியாக சோனியா. அதே சோக மயமான முகம். சிரிக்கும்போது மட்டும் பார்க்கப் பிடிக்கிறது. அம்மணிக்கு சுட்டுப் போட்டாலும் நடனம் வராது என்பதால் ஸ்டெப்ஸ்களை குறைவாக வைத்து இடுப்பு சுளுக்காமல் ஆடியிருக்கிறார். ஒரு பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் ஜோடி. போஸ்டரில் இதையே பெரிதாகப் போட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். ஆந்திராவில் பாவாடை, தாவணியில் பார்த்த முகத்தை, கோடம்பாக்க ஹீரோயினாக பார்க்க சகிக்கவில்லை..! எப்போதும் ஒரே மாதிரி பீலிங்ஸ் வராமலேயே வசனம் பேசும் பழக்கத்தை அம்மணி எப்போது கைவிடுவாரோ தெரியவில்லை. இயக்குநர்களாவது சொல்லிக் கொடுத்தால் தேவலை..! 


மலையாள அம்மே ஊர்மிளா உண்ணிதான் அஞ்சலியின் அம்மா.. முதற்பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் வரும் பணக்காரத் தோற்றத்திற்கு ஏற்ற உருவம்.. அதென்னமோ.. நடிகைகளை மட்டும் அசத்தலாகத் தேடிப் பிடிக்கும் இயக்குநர்கள், அவர்களது கணவர்களுக்கு மட்டும் கஷ்டப்படாமல் ஒருவரை பிடித்துவிடுகிறார்கள். ஒருவேளை நிஜ உலகத்தில் இப்படித்தான் என்கிறார்களோ..? பத்திரிகையாளர் தேவராஜ் அண்ணன், சோனியாவுக்கு அப்பாவாக இப்படித்தான் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்..! நிஜவுலக ஹீரோயின்களின் அப்பாக்கள் பலருக்கும், இந்த அண்ணன் பரவாயில்லைதான்.. வசனங்கள் மென்று விழுங்காமல், பளிச்சென்று தெறிக்கிறது. ஒவ்வொரு முறையும் தனது மனைவியையும், மச்சானையும் கடுப்படிக்கும் அந்த ச்சின்ன சின்ன ஷாட்டுகளுக்கு அவரது குரலே பக்க பலம்..!

கதையில் இன்னொரு உள்ளடி கதையாக படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் சவுத்ரிகளையும் வாரியிருக்கிறார்கள். ஒரு படவுலக பைனான்ஸ் சேட்டுக்கு செட்டப்பாக இருக்கும் கோவை சரளாவின் தங்கச்சி நிக்கோலை ஹீரோயினாக ஆக்க வேண்டும் என்பதற்காக அஞ்சலியின் படத்தில் தேவையில்லாமல் கதையை மாற்றி, நிக்கோலை புகுத்தி.. படம் கந்தரலோகமாகும் கதையை கொஞ்சம் நகைச்சுவையுடன் சொல்லி முடித்திருக்கிறார்கள்..!

மனோபாலா, கஞ்சா கருப்பு என்று இரண்டு பேர் இருந்தும் கஞ்சாவுக்கு பெரிய வேலையில்லை. மனோபாலா கோவை சரளாவுக்கு கொஞ்சம் ஈடு கொடுத்திருக்கிறார்..! “படுக்கைக்கு வா..” என்றழைக்கும் இயக்குநராக, இயக்குநர் ராஜ்கபூரே நடித்திருக்கிறார். ஆச்சரியமாக உள்ளது. “கோடம்பாக்கத்துல நடக்காத கதையவா சொல்லியிருக்கோம்..?” என்று தனிப்பட்ட முறையில் அவர் சொல்லி வருவதாகக் கேள்வி. பத்திரிகையாளர்கள் அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர் சிக்க மாட்டேன்றார்..!

ஆர்.பி.சவுத்ரியில் துவங்கி, இன்றைய டாப்மோஸ்ட் தயாரிப்பாளர்கள் அனைவரின் பெயரையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் தைரியமாக..! தற்போதைய கோடம்பாக்கத்தைச் சுட்டிக் காட்டுவதால் படமும் உண்மைதானே என்று கேட்டால், “இல்லவே இல்லை..” என்கிறார் இயக்குநர். வெறும் 10 சதவிகிதம் மட்டுமே உண்மையாம். அவர் சில காலம் சினிமா பத்திரிகையாளராக இருந்தபோது பல நட்சத்திரங்களைச் சந்தித்தாராம். அப்போது அவரிடம் அவர்கள் சொன்ன கதையைத்தான் இப்போது படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார்.

சோனியாவும் இதனையேதான் சொல்கிறார். “என் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் ஒரு நாளும் நடக்கவில்லை. நான் படவுலகில் நுழைந்தபோது மரியாதையாகவே நடத்தப்பட்டேன்..” என்றார் பிரஸ் மீட்டில். “ஆனாலும் படிப்பறிவில்லாத லோ கிளாஸ் பெண்கள்தான் இப்படியொரு இக்கட்டில் மாட்டிக் கொள்கிறார்கள்..” என்று பட்டும் படாமலும் சொன்னார் சோனியா.


சினிமா கதை என்பதால் எந்தெந்த இடங்களில் பாடல் காட்சிகள் வரும் என்று உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவைப்படும் இடங்களிலெல்லாம் வைத்து ரீலை நிரப்பிவிட்டார்கள்..! உச்சத்திற்கு வருவதற்கு முந்தைய கதைகளை எடுத்த விதம்தான் சர்ச்சையாகியிருக்கிறதே தவிர.. நடிகையானதற்குப் பின்னால வாழ்க்கைக் கதைகள் நிச்சயமாக கோடம்பாக்கத்தில் வரவேற்கப்படும். உதாரணமாக ராஜ்கபூர் சோனியாவை மீண்டும் புக் செய்ய வரும்போது அவருக்குக் கிடைக்கும் மரியாதை..  புதுமுகம் ராஜ்கிருஷ்ணாவின் முதல் திரைப்படம் இது என்பதால் இடையிடையே வரும் நாடகத்தனமான காட்சிகளை மன்னித்துவிட்டுவிடலாம். வேறு வழியில்லை. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் படம் ஒரு முறை பார்க்கும் அளவுக்குத்தான் இருக்கிறது..!

சினிமாவுலகத்தில் கிடைக்கும் பணம், புகழ், வெளிச்சம் இவைகளால் இரையாக்கப்படும் நடிகைகளின் வாழ்க்கையைப் பற்றி சினிமா ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு நடிகைகளே புரிந்து கொண்டதில்லை.. அவர்கள் தங்களது வெளிச்சத்தை விட்டு சிறிது நேரம்கூட விலகி நிற்க விருப்பம் கொள்ளாததே இதற்குக் காரணம்..

மிகச் சிறந்த உதாரணம் சில்க் ஸ்மிதா. அவர் கடைசி காலத்தில் தெலுங்கில் சொந்தப் படம் எடுத்து நஷ்டமடைந்து பணக் கஷ்டத்திற்கு உள்ளானார் என்றார்கள். ஆனால் அந்தத் தொகை மிக்க் குறைவுதான். அப்போது ஐம்பதாயிரம் ரூபாய் கடனில்தான் இருந்தாராம். இதனை பத்து படங்களில் நடித்து சம்பாதித்திருக்கலாம். இல்லையெனில் நடித்து கடனை அடைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்..! 

இரண்டுமில்லாமல் இதுவரையில் யாரிடமும் பணத் தேவைக்காக நிற்காமல் நின்ற என்னை காலம் நிற்க வைத்துவிட்டதே என்ற மன அழுத்தம்தான் அவருக்குக் கடைசி நேரத்தில் இருந்தது என்கிறார்கள். சில்க் ஸ்மிதா என்ற பெயரை மறந்துவிட்டு கொஞ்சம் யோசித்திருந்தால் அத்தனை மனிதர்களின் வாழ்க்கையிலும் வந்து செல்லும் இந்தத் துன்பவியல் நாடகத்தை அவரும் உணர்ந்திருப்பார். சில்க் என்ற பெயரே அவரை கொலை செய்துவிட்டது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது..!

எல்லா துறைகளிலும் நல்லது உண்டு, கெட்டதும் உண்டு என்ற வரிசையில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். கோடம்பாக்கத்தின் ஒரு பக்க அவலத்தை உரித்துக் காட்டிய வகையில் இயக்குநர் ராஜ்கிருஷ்ணாவுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்..!

ஒரு முறை பார்க்கலாம்..!

தோனி-சினிமா விமர்சனம்

10-02-2012என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் பிரகாஷ்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்தி பார்த்தால் அவர் மீது பலருக்கும் பலவித விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரது டூயட் மூவிஸின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் இந்தப் படமும் நிச்சயமாகப் பேசப்படக் கூடியது.

பல ஆண்டுகளாக நான் மறந்து போயிருந்த என் வாழ்க்கை நினைவுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது இப்படம். எனக்கு மட்டுமல்ல.. படம் பார்க்கும் அனைவருக்குமே நிச்சயமாக இதுவொரு ஆட்டோகிராபாகத்தான் இருக்கும்..!

2010-ல் வெளிவந்த மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தி மொழிப் படமான Shikshanachya Aaicha Gho -வின் தழுவல்தான் இப்படம்..!


சப் ரிஜிஸ்தர்ர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கும் சுப்பு என்னும் பிரகாஷ்ராஜ் மனைவியை இழந்தவர். 9-ம் வகுப்பு படிக்கும் பையனும், 7-ம் வகுப்பு படிக்கும் பெண்ணும் உண்டு. சம்பளத்திற்கு மட்டுமே கை நீட்டும் பழக்கம் கொண்ட சுப்பு, அதற்கு மேல் நியாயமான முறையில் சம்பாதிக்க விரும்பி வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்து அதனையும் விற்பனை செய்து வருகிறார்.

தானே சமையல் செய்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து, மாலையில் மீண்டும் சமையல் செய்து அக்மார்க் பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருந்துவரும் அவருக்கு ஒரே பிரச்சினை அவருடைய பையன் கார்த்திக்குதான். தோனி மீது பைத்தியம் பிடித்தாற்போல் இருக்கும் அவரது பையன் கார்த்திக் படிப்பில் மக்காக இருந்தாலும், கிரிக்கெட்டில் புலியாக இருக்கிறான். அந்தப் பள்ளியோ பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்வுகளைக் காண்பிக்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் நிர்வாகிகளைக் கொண்டது. 

கார்த்திக் கணிதத்தில் ஆர்வம் இல்லாமலும், மண்டையில் ஏறவில்லை என்றும் சொல்லி அதில் தோல்வியடைந்து கொண்டே வர, கடைசி மாதாந்திர தேர்விலும் அவன் தோல்வியடைகிறான். 9ம் வகுப்பில் அவனுக்கு பாஸ் போட முடியாது என்று பள்ளி நிர்வாகம் உறுதியுடன் சொல்லிவிட, கிரிக்கெட் மீதான அவனது பைத்தியத்தைக் கண்டு கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்திக்கை தாக்கிவிடுகிறார். அந்தத் தாக்குதல் கோரமாகி, கார்த்திக்கை மரணப் படுக்கையில் போட்டுவிடுகிறது..! துயரத்திலும், துயரமாக தனது பையனை மீட்கப் போராடும் ஒரு அக்மார்க் மிடில் கிளாஸ் மாதவனின் கதைதான் மீதிக் கதை..!

கதை தேர்விலும், இயக்கத்திலும் செஞ்சுரி அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். சிற்சில இடங்களில் அவருடைய அழுகையும், செயலும் ஓவர் ஆக்டிங்கோ என்று சொல்லவும் வைக்கிறது. பிள்ளைகளிடம் கெஞ்சல், பாச உணர்ச்சி, பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் போராட்டம், கிரிக்கெட் கோச் நாசரிடம் தோழமையுணர்வு, நீயா நானாவில் தனது கருத்தை, தனது மன அழுத்த்த்தை பகிரங்கமாக பதிவு செய்தல், அலுவலகத்தில் சிரித்த முகம், கந்து வட்டிக்காரனிடம் பயப்படுதல், முதல்வரை சந்திக்க முனைப்பு காட்டி சாதித்தல்.. என்று அத்தனையிலும் பிரகாஷ்ராஜே சாதித்திருக்கிறார். மனிதரின் நடிப்புத் திறனை பற்றி யாருக்கும் சந்தேகமில்லை என்பதால் இப்படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது அவரது நடிப்பும், இயக்கமும்தான்..!


'ரத்தச் சரித்திரம்' படத்தில் விவேக் ஓபராய் மனைவியாக நடித்து நம் கண்களை கொள்ளை கொண்ட ராதிகா ஆப்தேயை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரகாஷ். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் திடுக்கிட வைத்தது. ஆனாலும் அவரது செயலுக்கு நியாய, காரண காரியங்களை அடுத்தடுத்து திரைக்கதையில் சாமர்த்தியமாக திணித்திருக்கிறார். பாராட்டுக்கள்..! இவருடைய சிரிப்பு அபாரம்தான்.. போட்டோஜெனிக் முகம்..! அசத்தல்..! அதிகம் நடிப்புக்கு இடமில்லை என்பதால் அடுத்து யாராவது முழுமையாக நடிக்க வைப்பார்கள் என்று நம்புவோமாக..!

கந்துவட்டிக்காரரின் திடீர் ஸ்டண்ட்டும், அதனால் விளையும் நன்மையுமாக பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கும் அந்தப் பாசத்தையும் கச்சிதமாக அளித்திருக்கிறார் அவர். திரையுலகத்துக்குப் புதுமுகமா அவர்..? பாராட்டுக்கள்..! இன்னும் எத்தனை படங்களில்தான் பிரம்மானந்தம் இதே கேரக்டரில் நடிக்கப் போகிறார்..? தெலுங்கிலேயே 50 படங்களில் நடித்திருப்பார். கதைக்கு உதவாது என்றாலும், தெலுங்கிலுகில் படத்திற்கு ஒரு விளம்பரமாக இணைக்கப்பட்டிருக்கிறார்..!

கார்த்திக்காக நடித்த சிறுவன் ஆகாஷ்பூரி இடைவேளைக்கு பின்பு கோமா ஸ்டேஜில் இருக்கும்போது எப்படித்தான் நடித்தானோ தெரியவில்லை.. பொதுவாக இவன் வயதுக்கார்ர்களால் இது போன்ற காட்சிகளில் ஒன்றிப் போய் நடிக்க இயலாது. ஆனால் பையன் பின்னியிருக்கிறான். கணிதம் வரவில்லையே என்று தங்கை திட்டும்போது தோனியின் கிரிக்கெட் வரலாற்றையே எடுத்துவிடும் காட்சியில் என்னை மறந்து கை தட்டினேன்..! 


பள்ளியில் கார்த்திக்கின் லாக்கரை திறந்து பார்த்துவிட்டு பிரகாஷ்ராஜின் அந்த ஆக்சன், தொடர்ச்சியான காட்சிகளின் வேகம் செம பரபரப்பு..! ஹிஸ்டரி டீச்சர் ஹேமாவிடம் அவர் கேட்கும் கேள்வியும், கிடைக்கப் பெறாத பதில்களும்தான் இப்படத்தின் முக்கிய காட்சி. இதில்தான் நாம் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் கல்வித் துறை பற்றிய கொள்கை அடங்கியிருக்கிறது.

பாடங்களை வெறுமனே மனனம் செய்து பரீட்சை எழுதி ரேங்க் எடுத்து தேர்வு செய்து சர்டிபிகேட்டை வாங்கி வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வதுதான் லட்சியமா..? அல்லது படிப்பு இல்லாமல் வேறு திறமையை வைத்து வாழ்க்கையில் உயர விரும்புவது தவறா..? இதில் அந்தப் பள்ளிகளின் சுயநலத்தன்மையையும் சுட்டிக் காட்டியுள்ளார் பிரகாஷ். பையன் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.. பிளேயராக இருந்தாலும் கவலையில்லை. நூறு சதவிகிதம் தேர்ச்சி மட்டுமே எங்களது குறிக்கோள் என்று சொல்லும் பள்ளிகளை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் பிரகாஷ். பதில் சொல்லத்தான் யாருமில்லை..!

இதே கேள்வியைத்தான் இறுதியில் முதல்வரிடமும் கேட்கிறார். கொஞ்சம், கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும் என்கிறார் அவர். ஆனால் நிச்சயமாக மாற்ற மாட்டார்கள்..! நேர்மையாக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் அது கிடைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதிக்கும் அளவுக்கு படிப்பாற்றல் வேண்டும். அவ்வளவுதான். இது ஒன்றை மையமாக வைத்துதான் தமிழ்நாட்டில் இத்தனை பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. இவைகள் நல்ல மாணவர்களை உருவாக்கியிருக்கலாம்.. ஆனால் தரம் குறைந்த கல்லூரிகளில் இருந்து வெளிவந்திருக்கும் குறைவான சதவிகித்த்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் உயரத்தைத் தொட முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்..!

விளையாட்டு சோறு போடாது என்றாலும், அது ஒரு தனி திறமை. அதனை வளர்த்துக் கொள்ள குழந்தைகளுக்கு நாம் அனுமதியளிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ். ஆனால் இது எத்தனை பேருக்கு பிடிக்கும் என்றுதான் தெரியவில்லை. யதார்த்த நிலைமை தனது அண்டை வீட்டாரைவிட, தனது உறவினர் குழந்தைகளைவிட தன் குழந்தை நன்கு படித்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். அடுத்த டோனியாக, யுவராஜ்சிங்காக, சேவாக்காக வளர எந்தப் பெற்றோரும் அனுமதியளிப்பதில்லை..! ஏன் கூடாது..? அவன் போக்கிலேயே விடுவோமே என்கிறார் பிரகாஷ்..!


பிரபல பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் வசனங்களை ஈர்ப்பாய் எழுதியிருக்கிறார். “இந்த டோனி, சச்சின், சேவாக் இவனுகளையெல்லாம் மொத்தமா நாடு கடத்திரணும் ஸார்..” என்ற பிரகாஷின் வெறுப்பான ஆசைக்கு தியேட்டரில் என்ன கை தட்டல் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் இப்படி ஒவ்வொரு அப்பனும் நாட்டில் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதையும் மறுப்பதற்கில்லை..! “இனிமே பிள்ளைக போடுற ஜட்டியகூட ஸ்கூல் கலர்ல போடச் சொல்வானுங்க போலிருக்கு..” என்ற வரியில் இருக்கும் நக்கல் நாடு தழுவியது..! போகிறபோக்கில் ராதிகாவிடம் டேட் ஊறுகாய் செய்து தருவதாகச் சொல்வதும், அதற்கு ராதிகாவின் ரியாக்ஷனும் அசத்தல்..!

இளையராஜாவின் இசை என்றார்கள். வாங்கும் பணத்துக்கும் பாடலுக்கு மட்டுமே இசை தெரிகிறது..! அதிலும் பிரபுதேவா சம்பளம் வாங்காமல் நட்புக்காக ஆடிக் கொடுத்திருக்கிறார். அதிகம் வெளியூரெல்லாம் பறக்காமல் பாண்டிச்சேரியிலேயே பாதி படத்தை முடித்திருக்கிறார்கள். வாழ்க..!

இந்தப் படத்தை பார்த்துவிட்டு அந்தத் தாக்கத்துடன் இருந்த வேளையில் இன்று காலை சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவரொருவன் குத்திக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. காரணம், படிப்பு டார்ச்சர். பையனுக்குப் பிடிக்கவில்லை. பெற்றோர்களிடம் சொல்லி மாட்டிவிட்டாரே என்கிற கோபம்..! இதில் யாரைக் குற்றம் சொல்வது..? பையனையா..? ஆசிரியையா..?

ஒவ்வொருவரும் அவரவர் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது..! எந்தப் படிப்பு வரவில்லையோ அதனை வேண்டா வெறுப்பாகவே இருந்தாலும் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தைத்தான் இப்போதைய கல்வி முறை நமக்குள் புகுத்தி வருகிறது.. இந்த முறை நிச்சயமாக மாற வேண்டும்..! 

அதற்கான துவக்கத்தை முதன்முதலில் ஒரு திரைப்படம் மூலமாக நமக்குள் உருவாக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். தழுவலான படம் என்றாலும்கூட, இந்த நேரத்தில்,  தனது பொன்னான நேரத்தை கைவிட்டு, தனது சொந்தப் பணத்தில் இப்படியொரு படத்தை எடுத்துத் தந்திருக்கும் அவருக்கு எனது அன்பான வணக்கங்கள். ஹாட்ஸ் அப் பிரகாஷ் அண்ணே..! 

தோனி - அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!

சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டமால் டுமீல்..!

07-02-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1960-களில் வங்கத்தைச் சேர்ந்த நிமாய்கோஷும், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.சீனிவாசனும் இணைந்து உருவாக்கிய பெப்சி என்னும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு மாற்றாக புதிய தொழிலாளர் சங்கத்தை நாம் உருவாக்குவோம் என்று சொன்ன தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது டமாலாகிவிட்டது..!

ஏற்கெனவே புறக்கணிப்பின் வெறுப்பில் இருந்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யின் தலைமையில், இயக்குநர் கே.ஆர்., பழம் பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன், இவரது ஆத்மார்த்த நண்பரும், இயக்குநருமான சி.வி.ராஜேந்திரன் மற்றும் நடிகை ஜெயசித்ரா இவர்களது தலைமையில் 75-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணி அமைக்கத் தயாராகிவிட்டார்கள்.

இந்த அணியில் பெரும்பாலோர் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமையன்று(03-02-2012) தங்கள் தரப்பு வாதத்தை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தார்கள். SAC என்பதற்கு “Service Against Chinna Thayarippaalargal - சர்வீஸ் அகைன்ஸ்ட் சின்னத் தயாரிப்பாளர்கள்” என்றுதான் அர்த்தமாம்.

இராம.நாராயணன் பதவி விலகி, எஸ்.ஏ.சந்திரசேகர் பொறுப்புத் தலைவராக பதவியேற்றவுடன் இயக்குநர் கே.ஆர்., எஸ்.ஏ.சி.யிடம் “இதென்ன புதுசா இருக்கு..? துணைத் தலைவர், தலைவரா வரலாம்னு துணை விதிகூட இல்லையே..? நீங்க ஏன் பதவி ஏத்துக்கிட்டீங்க..?”ன்னு கேட்டாராம்.. அதற்கு எஸ்.ஏ.சி. “நான் ஒரு பத்து மாசம்தான் இந்தப் பதவில இருப்பேன். அதுக்கப்புறம் அடுத்த 4 வருஷம் என் பையனோட கட்சியை வளர்க்கப் போயிருவேன்.. 10 மாசம் மட்டும் என்னை இங்க இருக்க விடுங்களேன். அதுக்கப்புறம் இந்தக் கருமத்தை எவன் கட்டிக்கிட்டு அழப் போறான்..?” என்றாராம். “இப்போ புது ஆட்சியும் பொறுப்பேத்தாச்சு. இன்னும் 4 வருஷம் இருக்கு. அதுக்குள்ள இவர் கட்சி ஆரம்பிச்சு, நடத்தி, தேர்தலை சந்திச்சு இவர் முதலமைச்சரா வருவாரா..? இல்லாட்டி இவர் பையன் வருவாரான்னு பார்ப்போம்.. என்றார் கே.ஆர்.  

அங்கே பேசிய அனைவருமே எஸ்.ஏ.சி.க்கு சங்கத்தை நடத்தவே தெரியவில்லை. சங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் குழப்பத்தையே உண்டாக்கியிருக்கின்றன என்று குற்றம் சாட்டினார்கள். எப்போதோ, அமைதியான முறையில் பேசித் தீர்த்திருக்க வேண்டிய பெப்சி சம்பளப் பிரச்சினையை கையாளத் தெரியாமல்தான் எஸ்.ஏ.சி. இப்போது முடிக்க முடியாமல் திணறுகிறார் என்றார்கள்.


“தலைவராகப் பொறுப்பேற்ற மறுநாளே மூலிகை சிகிச்சைக்காக கேரளா சென்ற எஸ்.ஏ.சி., 48 நாட்கள் கழித்துதான் திரும்பி வந்தார். இப்படி எந்தத் தொழிலாளர் தலைவனாச்சும் செய்வானா..?” என்றார்கள் கோபத்துடன். சங்க உறுப்பினர்களின் குடும்ப நிதிக்காக வைத்திருக்கும் பணத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயை எடுத்து தானே புயல் நிவாரண நிதியாக கொடுக்கவிருக்கும் செயலை வன்மையாகக் கண்டித்தார்கள்.. “இவர் பையன்தான் கோடி, கோடியா சம்பாதிக்கிறாரே.. அதுல ஒரு 50 லட்சத்தை கொண்டு போய் கொடுக்கட்டுமே.. அதுக்கு சங்க உறுப்பினர்களின் பணம்தான் கிடைத்ததா..?” என்று விளாசினார்கள்.

மேற்கொண்டு தாங்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் பிரசுரமாக விநியோகித்தார்கள். அதன் ஒரு பிரதி இங்கே உங்களுக்காக :

S.A.சந்திரசேகர் பதவி விலகினால் தமிழ்ச் சினிமாவிற்கு விடிவுகாலம்

கடந்த சில மாதங்களாகவே தமிழ்த் திரைப்படத் துறையில் நிச்சயமற்ற நிலை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. பெப்சி தொழிலாளர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்கள் சங்கத்திற்கும் இடையிலான ஊதிய ஒப்பந்தம் கடந்த வருடம் ஜனவரி 15-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.

ஆனால், அப்போது பெப்சியில் நிர்வாகிகளாக இருந்தவர்களும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்களும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். தேர்தல் முடிவுக்குப் பிறகு இரண்டு அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்களும் ராஜினாமா செய்துவிட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் பொறுப்புத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும்போதே பெப்சி தொழிலாளர்களிடம், நான் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் 60 சதவிகிதம் சம்பள உயர்வு பெற்றுத் தருகிறேன் என்று மறைமுகமாக வாக்குறுதி கொடுத்தார். அதே நேரத்தில் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களிடம் தொழிலாளர் சம்பள விகித்த்தை A, B, C என மூன்று பிரிவுகளாகப் பிரித்து நிர்ணயித்து தருவேன். அப்படிச் செய்யவில்லை என்றால், என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஸ்டண்ட் அடித்தார்.

அப்போதிலிருந்தே பெப்சி தொழிலாளர்கள் 60 சதவிகிதம் சம்பளத்தை உயர்த்தி வற்புறுத்தி வாங்கத் தொடங்கிவிட்டனர். அப்போதே படப்பிடிப்புகளை நிறுத்தியிருந்தால், இந்தப் பிரச்சினையை சுமூகமாக்க் கையாண்டிருக்கலாம். தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டார். பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதில் கை தேர்ந்தவர் எஸ்.ஏ.சி. என்பதற்கு இதுவே சாட்சி.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்குப் பிறகாவது தமிழ்ச் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்க, தேர்தலுக்கு மறுநாளே, தன் ஆரோக்கிய சிகிச்சைக்காக கேரளா சென்றுவிட்டார் எஸ்.ஏ.சி. சுமார் 48 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் திரும்பி வந்து பார்த்தால், பிரச்சினை இன்னும் பெரிதாகிப் போயிருந்தது.

தயாரிப்பாளர்களுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் எஸ்.ஏ.சி., இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாரா..? இந்தச் சூழ்நிலையில்தான் பெப்சி அமைப்பினரும், தங்கள் சம்பள உயர்வை தன்னிச்சையாகவே அறிவித்த்துடன் புதிய சம்பளம் தந்தால் மட்டுமே வேலை செய்வோம் என்று அறிக்கைவிட்டனர். 


கடந்த ஆண்டில் வெளிவந்த நேரடி தமிழ்ப் படங்கள் 144. அவற்றில் 5 படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட். 5 படங்கள் மட்டுமே பணத்தை மீட்டுக் கொடுத்தன. மற்ற 134 படங்களினாலும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதலான தயாரிப்புச் செலவுகள், திருட்டு வி.சி.டி., நடிகர், நடிகைகளின் சம்பள உயர்வு, தியேட்டர் கிடைக்காத்து போன்ற பல்முனை தாக்குதல்களால் நொந்து போயிருந்த தயாரிப்பாளர்களுக்கு பெப்சியின் இந்த சம்பள உயர்வு அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்த்து.

இந்தப் பிரச்சினை பற்றிப் விவாதிக்க அவசர சிறப்புக் கூட்டமும் நடந்த்து. அதில் பேசிய அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஊதிய உயர்வு தர முடியாது என்பதையும் தாண்டி, பெப்சி அமைப்பின் கடுமையான சட்ட திட்டங்களால் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு குமுறிக் கொட்டினர். அந்தக் கூட்டத்திலேயே சம்பள உயர்வு தரலாம் என்று எஸ்.ஏ.சி. சொல்ல அனைவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  இறுதியில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து “இனி பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. தயாரிப்பாளர்கள் சுதந்திரமாக யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்து கொள்ளலாம்..” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்த் திரைப்படத் துறைக்கு என தனியாக ஒரு தொழிலாளர் அமைப்பும் உருவாக்கப்படும்..” என்று எஸ்.ஏ.சி. தெரிவித்தார்.

இதற்கிடையே நடந்து கொண்டிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இனி யாரை வைத்து வேலை செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட அவசரச் சூழ்நிலையில் போர்க்கால நடவடிக்கை எடுப்பதுபோல 24 மணி நேரமும் செயல்பட்டு நமது தயாரிப்பாளர்கள் தொய்வின்றி படப்பிடிப்பை நடத்துவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி.

சில பெரிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு அளிக்கலாமா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார். இது இரட்டை வேடம் அல்லவா? ஒட்டு மொத்தமாக உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்த தயாரிப்பாளர்கள் முன்னிலையில், இனி பெப்சியுடன் ஒப்பந்தம் இல்லை என்று அறிவித்துவிட்டு ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் நலனுக்காக சங்கத்தை அடகு வைக்கும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.

பெப்சி பிரச்சினை என்பது வெறும் 10 சதவிகிதம்தான். திருட்டு விசிடி, நடிகர், நடிகைகளின் சம்பள உயர்வு, சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம், புதிய வரிகள், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத்து போன்ற 90 சதவீத பிரச்சினைகள் தமிழ்த் திரையுலகை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதில் அவற்றைத் திசை திருப்பதற்காகவே இந்த பெப்சி பிரச்சினையை பூதாகாரமாக்கி, அப்பாவித் தயாரிப்பாளர்களை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. உங்கள் விபரீத விளையாட்டுக்கு வேறு மைதானத்தை பாருங்கள்.

தீர்மானம் போட்டுவிட்டால் போதுமா..? அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாமா..? உடனடியாக தயாரிப்பாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க உறுதியான முடிவை எடுத்து செயல்படுத்துங்கள். இல்லையேல், “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி” தயாரிப்பாளர்களை குழப்பமால் உடனடியாக உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள். ஒரு சிலரின் பதவியைவிட, ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரியின் நலன்தான் முக்கியம் என்பதை இனியாவது உணருங்கள்.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக என்ன செய்தார் எஸ்.ஏ.சி..?

1. நான் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானால் சன் தொலைக்காட்சி நிர்வாகத்திடமிருந்து 2000 கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வாங்கித் தருவேன் என்றது என்னவாயிற்று..? (2000 கோடி லட்சம். ஆனால் ரூபாய் 200 கோடி நிச்சயம் என்ற முழக்கத்தின் இன்றைய நிலைமை என்ன..?)

2. சன் தொலைக்காட்சி தமிழ்நாட்டை ஆளுகிறதா? கலைஞர் தமிழ்நாட்டை ஆளுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பிய தாங்கள், சன் தொலைக்காட்சியால் பல தயாரிப்பாளர்கள் இன்னல்களுக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில், சிறு படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து சன் தொலைக்காட்சியில் நண்பன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விற்று, மண்டியிட்டுக் கிடப்பதன் மர்மம் என்ன..?

3. எண்ணற்ற சிறு படத் தயாரிப்பாளர்களின் சாட்டிலைட் உரிமை விற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் அதைத் தீர்ப்பதற்காக இதுவரை என்ன செய்தீர்கள்..? என்ன செய்யப் போகிறீர்கள்..?

4. படம் முடிந்து திரையிட முடியாமல் நிலுவையில் உள்ள படங்களை பதவி ஏற்ற உடன், வெளியிட ஆவண செய்வதாக்க் கூறினீர்கள்.. அதன்படி இதுவரை எத்தனை படங்கள் திரைக்கு வந்துள்ளன என்பறு கூற முடியுமா?

5. சிறு முதலீட்டு படங்களின் வெளியீட்டின்போது சங்கத்தின் மூலம் 2 லட்சம் தருவதாக உறுதியளித்தீர்கள். நீங்கள் பதவிக்கு வந்து 4 மாதங்களாகிவிட்டது. இதுவரை எத்தனை படங்கள் 2 லட்சம் ரூபாய் பெற்று திரைக்கு வந்தன என்ற பட்டியலை வெளியிட முடியுமா..?

6. தொலைக்காட்சியில் செய்யப்படும் விளம்பரங்களை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்தீர்கள். இதுநாள்வரை அதற்கான முயற்தி எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.. ஏன்..? தங்கள் மகனின் வளர்ச்சி பாதிக்கும் என்ற எண்ணமா..? தங்கள் மகனுக்காக ஒட்டு மொத்தத் தயாரிப்பாளர்களின் நலனை பலி கொடுக்கலாமா..?

7. தேர்தலில் வெற்றி வாகை சூடி தலைவர் பதவியில் அமர்ந்த உடன், நலிந்த தயாரிப்பாளர்கள் 60 பேருக்கு அரை கிரவுண்ட் நிலம் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். வழங்கப்படவில்லை என்றால்..? பலமான ஒரு வார்த்தையைச் சொன்னீர்கள். அதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

8. பொங்கலுக்கு முன்பாக நடந்த செயற்குழுக் கூட்டத்தில் பத்திரிகை விளம்பரம் 2 தமிழ் 2 ஆங்கிலப் பத்திரிகை மட்டும் என்று முடிவு செய்யப்பட்டதை மீறி நண்பன் பட விளம்பரம் இன்றுவரை (20 நாட்களாக) அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளிலும், தினமணி தமிழ்ப் பத்திரிகையிலும் தொடர்ந்து கால் பக்க விளம்பரம் கொடுப்பது எந்த விதியின் கீழ்..? இது தங்கள் மகனின் படம் என்பதால் நீங்கள் வழங்கிய சலுகையா..? இது நியாயமா? தர்ம்மா?

9. சேம்பரில் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் தியேட்டரில் டிக்கெட் விலை குறைப்பு என்று அனைவரும் ஒப்புக் கொண்டபோது தாங்களும் அனைவரின் முன்பாகவும் இதனை ஒத்துக் கொண்டு வெளியே வந்தவுடன் சில பெரிய தியேட்டர் அதிபர்களிடம் உங்கள் மகனின் படத்திற்கு மட்டும் விலையை உயர்த்திக் கொள்ளக் கேட்டது எந்த வகையில் நியாயம்..? இது யாரை ஏமாற்றும் வேலை..?

10. தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சூழ்நிலையில், முதல்வர் அம்மா அவர்கள் புயல் நிவாரண நிதி கேட்டபொழுது திரையுலகத்தைச் சார்ந்த எண்ணற்றவர்கள் முதல்வர் அம்மா அவர்களை நேரில் சந்தித்து நிதி வழங்கிக் கொண்டிருக்கும்போது தங்கள் மகன் விஜய் மட்டும் முதல்வர் அம்மா அவர்களை நேரில் சந்தித்து நிதி தராமல், கடலூருக்குச் சென்று ஒரு சிலருக்கு மட்டும் 5 கிலோ அரிசி வழங்கியது அரசியல் சுயலாபத்திற்காகவா? இல்லை தங்கள் மகனின் தமிழக அரசின் மீதான எதிர்ப்பைக் காட்டவா? தங்கள் மகனின் செயலால் பாதிக்கப்படப் போவது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களே..!

11. கடந்த நிர்வாகத்தால் திரைத்துறையில் நீண்ட காலமாக இருக்கும் தயாரிப்பாளர்களை கெளரவிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட கருணைத் தொகையை பெற்றுக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் இன்று ரத்தக் கண்ணீரோடு ஒவ்வொரு மாதமும் அவமானப்பட்டுத்தான் அத்தொகையை வாங்க முடிகிறது. உரிமைத் தொகை கருணை இல்லாமல் போன காரணம் என்னவோ..?

12. கேபிள் டிவியில் படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் பெரும் மோசடி நடந்திருப்பதாகவும், அதைக் கண்டுபிடித்து பணத்தை மீட்டு தயாரிப்பாளர்களுக்கு வழங்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரைக் கொடுத்தீர்கள். அது கிணற்றில் விழுந்த கல்லாக இருக்கிறது. இந்தப் புகாரின் மேல் ஏன் விரைந்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை..?

13. கடந்த நிர்வாகத்தில் ஏகப்பட்ட ஊழல் நடந்த்தாகவும், அதைக் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவேன்(ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்) என்றது.. அமைதியானது ஏன்..? தாங்கள் பதவியேற்றவுடன் அவர்கள் அனைவரும் புனிதர்களாகிவிட்டார்களா..?

14. பெப்சி உடன் ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது. இனி யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்யலாம் என்று பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன்..? தங்கள் சொல்லுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை ரத்து செய்த தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் அவர்கள் படப்பிடிப்பைத் தொடர மாற்று திட்டம் அறிவிக்காமல் காலம் கடத்துவது ஏன்..?

15. பாதுகாப்புக் குழுவிற்காக வாங்குவதாக சொன்ன வேன்களின் நிலைமை என்ன..?

16. கடந்த காலங்களில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக முதல்வரைச் சந்திப்பதும், அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதும் நாம் கண்டதே.. ஆனால் தாங்கள் பதவிக்கு வந்து நான்கு மாதங்களாகியும் இதுவரை நிர்வாகிகளுடன் முதல்வரை சந்திக்காதது ஏன்..?

17. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பு தலைவராக 4 மாதங்களும், தலைவராக 4 மாதங்களும் பதவியில் இருக்கும் தாங்கள் பெப்சி பிரச்சனையை தீர்க்காமல் இழுத்தடிப்பது ஏன்..? இன்று பெப்சி பிரச்சினை இந்த அளவிற்கு மோசமானதுக்கு முழுக் காரணம் தலைவரான தாங்கள்தான்..!

03-02-2012 அன்று பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

23-01-2012-ல் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பெப்சியுடனான ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினையில் விரிவாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை இதுநாள்வரை நடைமுறைப்படுத்த தலைவர் திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வருத்த்த்திற்குரியது. கண்டனத்துக்குரியது.. எனவே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக பொதுக்குழுவின் முடிவின்படி தொழிலாளர்கள் அமைப்பை புதிதாக உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள திரு.அமீர் அவர்கள் தன்னிச்சையாக இயக்குநர்களுக்கு 10 லட்சம், இணை இயக்குநர்களுக்கு 4 லட்சம், முதல் உதவியாளர்களுக்கு 2 லட்சம் என்றும், தினப்படி இயக்குநருக்கு 1000 ரூபாய் என்றும் அறிவித்திருப்பதும், மேலும் இயக்குநர் சங்கத்தில் படத்தின் தலைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதும்.. பட வெளியீட்டிற்கு இயக்குநர் சங்கத்திலும் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று அறிவித்திருப்பதும் தயாரிப்பாளர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகத் தெரிகிறது. ஆகவே அமீரின் இந்தச் செயலை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது..

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலின்போது தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களிடம் வாக்குகளைப் பெற்று.. வெற்றி பெற்ற நாளில் இருந்து இதுநாள்வரையிலும் முதல்வர் அம்மா அவர்களைச் சந்திக்க முடியாமல் உள்ள நீங்கள்.. மற்றும் சங்கம் அறிவித்த தானே புயலுக்கான நிதி 25 லட்சத்துக்கான காசோலையை இன்றுவரையிலும் தர முடியாமல் காத்திருக்கும் தாங்கள் எப்படி முதல்வர் அம்மா அவர்களிடம் பேசி தயாரிப்பாளர்களுக்கு நன்மை பெற்றுத் தர முடியும்..?

மேலும் தாங்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் இன்றுவரை நிறைவேற்றாத்தால் தங்கள் மீது சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, தாங்கள் இயலாமை செயலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகி இச்சங்கத்திற்கு நன்மை செய்யுமாறு இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

- இப்படி ஒட்டு மொத்தமாக எஸ்.ஏ.சி.யை சங்கத்தைவிட்டு வெளியேற்றும் ஒற்றைக் குறிக்கோளுடன் இவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனாலும் பெப்சி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் சங்கத்தின் தற்போதைய முடிவையே இவர்கள் ஆதரிப்பதாகச் சொல்லியிருப்பதால், பெப்சி இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை..!


எஸ்.ஏ.சி. சங்கத் தேர்தலில் வெற்றி பெற காரணமே, எப்படியாவது ஜெயலலிதாவிடம் பேசி குறும்பட தயாரிப்புக்கான நிதியுதவியை பெற்றுத் தந்துவிடுவார் என்று நினைத்து சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அளித்த அதிகப்படியான வாக்குகளினால்தான்..! 

கடந்த 4 ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அரசு தரும் மானியமான 7 லட்சம் ரூபாய் தரப்படவே இல்லை என்பதுதான் பெரும் சோகம். இந்தக் குறும்படத் தயாரிப்பு லிஸ்ட்டிற்குள் செல்லவே சில விதிமுறைகள் உள்ளன. 8 முதல் 25 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டிருக்க வேண்டும். முழுக்க, முழுக்க தமிழ்நாட்டிற்குள்ளேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் ஏதாவது ஒரு தியேட்டரிலாவது படத்தை ஓட்டியிருக்க வேண்டும் என்ற வகையில் சில நிபந்தனைகள் உள்ளன. 2 கோடிக்கு படமெடுத்து வெறும் 25 பிரிண்டுகள் மட்டுமே யாரும் போட்டிருக்க மாட்டார்கள் என்பதால், இந்த விதிமுறையில் அதிகம் பலனடையப் போவது 35-ல் இருந்து 65 லட்சம் வரையில் படம் எடுத்த புண்ணியவான்கள்தான். அவர்களே 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணமாவது கிடைத்தால் இனி வரும் காலத்திற்காவது உதவும் என்று ஏக்கத்துடன் இருக்கிறார்கள் அவர்கள்.


தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக படமெடுத்து வருபவர்கள் 20 பேருக்குள்தான் இருப்பார்கள். சங்கத்தின் விதிமுறைப்படி 5 ஆண்டுகளுக்குள் ஒரு திரைப்படமாவது தயாரித்தவர்கள்தான் சங்க நிர்வாகிகளில் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்காகவே சிலர் கஷ்டப்பட்டு படத்தைத் தயாரித்து வருகிறார்கள். போட்டியிட முடியாதவர்கள் ஒதுங்கிப் போய் அமைதியான உறுப்பினர்களாக சங்கக் கூட்டத்திற்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால்தான் பிரச்சினை என்று பெப்சியும், மற்ற சினிமா துறையினரும் சொல்கின்றனர். பெரிய தயாரிப்பாளர்கள் யதார்த்த நிலைமையை உணர்ந்து, பெப்சி ஊழியர்களின் ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள முன் வந்தாலும், சிறு படத் தயாரிப்பாளர்கள்தான் இதனை எதிர்க்கிறார்கள்..! பொதுக்குழுவில் எஸ்.ஏ.சி.யை கடைசி நிமிடத்தில் கெரோ செய்து சாதித்தது சிறு பட தயாரிப்பாளர்கள்தான். சங்கத் தலைவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசைக்கு அவரே பலிகடாவாக்கிவிட்டார் என்கிறார்கள் சேம்பர் வட்டாரத்தில்.

பெப்சியின் உண்ணாவிரதக் கூட்டத்தில் இதைத்தான் சொன்னார் பெப்சியின் செயலாளர் சிவா. “ஏற்கெனவே ஒத்துக் கொண்ட ஊதிய விகிதத்தை, வழங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தை, சில நாட்களில் கையெழுத்திடலாம் என்று சொல்லியிருந்த்தை எஸ்.ஏ.சி. ஏதோ ஒரு காரணத்திற்காக பகிரங்கமாக வெளியில் சொல்ல மறுத்து, பெப்சி ஊழியர்களுக்கு எதிரியாகிவிட்டார். அதே நேரத்தில் தனது பதவிக்காகவும், தனது மகன் விஜய்யின் வளர்ச்சிக்காகவும் பெரிய தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து சின்ன தயாரிப்பாளர்களை எதிர்த்து, தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் தனது செல்வாக்கை இழந்துவிட்டார். ஆக மொத்தம், எங்கள் பக்கம் வந்திருந்தால் அவர் ராஜாவாக இருந்திருப்பார். ஆனால் வராத காரணத்தினால், அந்தப் பக்கம் கூஜாவாககூட இல்லாமல் போய்விட்டார்” என்றார் சிவா.

பெப்சியை இரண்டாக உடைக்கலாம் அல்லது புதிய தமிழ்த் தொழிலாளர் அமைப்பை உருவாக்கலாம் என்று தெரிவித்த யோசனை புதைகுழிக்குப் போய்விட்டது. பெப்சியின் அகில இந்திய அமைப்பு பெப்சிக்கே தனது முழு ஆதரவையும் அளித்திருப்பதால் அதனை எதிர்த்து புதிய அமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் பேசியவைகளும், எஸ்.ஏ.சி.யை எதிர்க்கும் அணியினரின் வீர ஆவேசமும் காற்றில் கரைந்துவிட்டன.


அமீர் அறிவித்த ஊதிய உயர்வு பற்றி கே.ஆர்.ஜி.யிடம் கேட்டபோது, "அமீர் யார் இதைச் சொல்வதற்கு..? அதன் தலைவர் சொல்லட்டும். நிர்வாகிகள் சொல்லட்டும். அப்புறம் பேசுறோம்..." என்றார். ஆனால் அடுத்த நாளே இயக்குநர்கள் சங்கத்தின் அவசரச் செயற்குழு கூட்டம் நடந்து அதில் இயக்குநர்களின் ஊதிய உயர்வுக்கு அனைவருமே ஒப்புக் கொண்டுவிட்டார்கள். தேனியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்த பாரதிராஜாவிடம், பெப்சி சிவா போனில் பேசி சமாதானப்படுத்தி தன் பக்கம் இழுத்துவிட்டார். அமீர் தலைமையில் பெருவாரியான இயக்குநர்களும், துணை இயக்குநர்களும் ஊதிய உயர்வுக்காக ஒன்றுகூடிவிட்டதை சற்று தாமதமாக உணர்ந்துவிட்ட பாரதிராஜா, தனது இயக்குநர்கள் கூட்டத்தோடு நிற்கவே முடிவெடுத்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தான் தெரிவித்த இயக்குநர்கள் சங்க ஆதரவை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து, அமீரின் தலைமையில் ஐக்கியமாகிவிட்டார். 

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு மேடையில் தோன்றி தயாரிப்பாளர்களுக்கு மந்திராலோசனை தெரிவித்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவிதான் பெப்சியின் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார்.  அவருடைய ஆதரவும் புஸ்ஸாகிப் போய் தற்போதைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே தனித்து நிற்கிறது..!

பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்குமான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்துள்ளது. சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சிலவைகள் காத்திருப்பில் உள்ளன. வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்த ஊதிய உயர்வை தயாரிப்பாளர்கள் சங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் எஸ்.ஏ.சி. தனது தலைவர் பதவியைத் துறந்து, தான் ஏற்கெனவே சொன்னதுபோலவே தனது மகனின் கட்சியை உடனடியாகத் துவக்கி அதன் பிரச்சாரத்திற்குக் கிளம்புவார் என்று உறுதியுடன் நம்பலாம்..!