24-09-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழகத்தில் இன்றைய முக்கியப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் தடைப் பிரச்சினை, அயோத்திப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை, எதிர்வரும் தேர்தல் நிலவரம் - இது பற்றியதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள். அது பிரபுதேவா-நயன்தாராவின் முறைப்படியான திருமணம் நடந்தேறுமா என்பதுதான்..!
முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம் சொல்லும் அளவுக்கு பத்திரிகைகள் இதில் சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கின்றன. அந்த அளவுக்கு தேசிய பிரச்சினையாகிவிட்டதுபோலும்.
நான் ஏற்கெனவே இந்தப் பதிவில் எழுதியிருந்த பாலிவுட் கட்டுரைக்கு அடுத்து உடனேயே இதனை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பல தகவல்கள் உடனேயே கிடைக்கவில்லை என்பதால் சிறிது தாமதமாகிவிட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்..!
பல பத்திரிகைகளைப் பார்த்தும், புரட்டியும், படித்தும்.. பத்திரிகைத் துறை நண்பர்கள், சினிமா துறை பெரியவர்களைச் சந்தித்துப் பேசியும் சில தகவல்களைப் பெற முடிந்தது. ஆனால் அவர்கள் சொன்னது முழுவதையும் எழுத முடியாத சூழல். பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பக்கம், பக்கமா எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பதால் அதிகமாக இழுக்கக் கூடாது என்பதால் மையக்கருத்தையும் சுருக்கமாகவே தந்திருக்கிறேன்.
இது நாட்டுக்கு ரொம்ப அவசியமா என்று கேட்பவர்கள் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். இதனைத் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.. பிழைகள், குறைகள், குற்றங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்..!
1. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம்
‘வசந்தசேனா’ என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தன்னைப் போலவே ஈகை குணத்துடன் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பழக்கமே இல்லாத மதுரம்மாவின் குணநலன்களே, என்.எஸ்.கே.வுக்கு அவர் மீது பிடிப்பு வரக் காரணமாக இருந்தது.
அப்போது ஏற்கெனவே என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திருமணமாகியிருந்தது. ஆனாலும் மதுரம் அம்மையார் மீது அதீத காதல் கொண்டுவிட்டார். ‘வசந்தசேனா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பீகாருக்கு ரயிலில் சென்றபோதுதான் மதுரம் அம்மாவிடம் தான் அவரை விரும்புவதாகச் சொல்லி தனது மனதைக் கலைத்து மதுரம்மாவின் மனதையும் கலைத்தார்.
மதுரம் அம்மாவும் மிகவும் யோசித்து அந்த ஷூட்டிங்கின்போதே தனக்கும் சம்மதம் என்று சொல்ல.. பீகாரிலேயே அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது.
ஆனால் சென்னை திரும்பிய பிறகுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது மதுரம் அம்மாவுக்குத் தெரிய வந்து சில நாட்கள் பேசிக் கொள்ளாமல் சண்டையிட்டபடியே இருந்ததும் நடந்திருக்கிறது.! மதுரம் அம்மாவுக்குக் குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. வாரிசு வேண்டும் என்பதற்காக மதுரம் அம்மாவின் தங்கை வேம்பு அம்மாளையும் கலைவாணர் திருமணம் செய்து கொண்டது வேறொரு கதை..!
ஆனாலும் இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும் யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும்..
2. எம்.ஜி.ஆர். - சதானந்தவாதி - வி.என்.ஜானகி
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி இறந்த பின் தனது தாயார் சத்யா அம்மையாரின் வற்புறுத்தலுக்காக சதானந்தவதியை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே சதானந்தவதி நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையானார்.
இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு முதல்முதலாக திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ‘மோகினி’, ‘நாம்’, ‘மருத நாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து வி.என்.ஜானகியுடன் ஜோடியாக நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும்போதுதான் வி.என்.ஜானகி எம்.ஜி.ஆரை தான் விரும்புவதாக அவரிடமே சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
எம்.ஜி.ஆர் சட்டென முடிவெடுக்காமல் தனது தாயார், மற்றும் தனது மனைவி சதானந்தவதியிடம் இது பற்றிச் சொல்லி அவர்கள் அனுமதியுடன்தான் ஜானகியை 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜானகியுடனான இந்தத் திருமணத்திற்குப் பிறகு 1968-ல் சதானந்தாவதி அம்மா மரணமடையும்வரையிலும் ஜானகி அம்மையாரும், அவரும் ஒரே வீட்டில்தான் எம்.ஜி.ஆருடன் வசித்து வந்தார்கள்.
இந்த சிச்சுவேஷனுக்கு ஜானகியம்மாவை துரத்தியது அவரது உறவுக்காரர்தான். ஜானகியம்மாவுக்கு அப்போதே திருமணமாகி கணவரிடமிருந்து விலகியிருந்தார். ஒரு ஆண் குழந்தையும் அவருக்கு இருந்தது. அப்பு என்றழைக்கப்பட்ட அவரை எம்.ஜி.ஆர்.தான் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினார். தி.நகரில் இப்போதும் இருக்கும் அப்பு ஹவுஸ் ஜானகியம்மாவின் மகன் அப்புவுடையதுதான். இவரும் தற்போது உயிருடன் இல்லை.
தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே ஜானகியம்மா தானே விரும்பி எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். மிச்சமிருக்கும் இந்தக் தம்பதிகளின் காதல் கதை உலகமறிந்தது..!
3. சிவாஜிகணேசன்-ரத்னமாலா
இவருமா..? இருக்காது.. இல்லைவே இல்லை என்கிற நம்பிக்கையோடுதான் நானும் பல ஆண்டுகளாக இருந்து வந்தேன். ஆனால் சினிமா உலகத்திற்குள் கால் வைத்த பின்புதான் எனது அந்த நம்பிக்கை புஸ்ஸானது.
ஆம்.. நடிகர் திலகத்திற்கும் இன்னொரு குடும்பம் உண்டு. அவர் ரத்னமாலா என்னும் நடிகை. இவரும் ஆரம்பக் காலச் சினிமாக்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் இருந்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக நாடக வாழ்க்கையிலேயே ரத்னமாலா, சிவாஜிக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.
வெகு நாட்களாக சினிமாவுலகத்தில் மிக நெருங்கியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இரகசியத்தை வெளியிட்டவர் எம்.ஜி.ஆர்தான். விகடனில் தான் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் ஒரு கிசுகிசு பத்திரிகையாளரைப் போல் ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர். “நான் கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வரும்போது தம்பி சிவாஜி தினம்தோறும் தவறாமல் எங்களது நாடகக் கொட்டகைக்கு வந்து செல்வார்” என்று பூடகமாக எழுதியிருந்தார். அப்போது எம்.ஜி.ஆருடன் அன்றைய நாடகங்களில் நடித்து வந்தவர் இந்த ரத்னமாலாதான்.
இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து பட்டென்று போட்டு உடைத்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக அவர் இருந்த காலத்தில் ‘இதயம்’ பத்திரிகையில் தேவையே இல்லாமல் ‘இரு மலர்கள்’ படம் பற்றிக் குறிப்பிட்டு “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில் அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார்..” என்று எழுதித் தொலைத்துவிட்டார். இந்த ஒரு விஷயத்துக்காகவே மணியன் மீது சிவாஜி இறுதிவரையில் கோபத்துடனேயே இருந்தார் என்கிறார்கள் திரையுலகப் பத்திரிகையாளர்கள்.
சினிமா பத்திரிகையாளர்களையும் தாண்டி, அரசியல் பத்திரிகையாளர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தும், சிவாஜி மீது அவர்களுக்கு இருந்த அபிமானம் காரணமாகவே அனைவருமே இது பற்றி எழுதாமல் விட்டதாக இப்போது சொல்கிறார்கள்.
ரத்னமாலா மூலமாக சிவாஜிக்கு இன்றைக்கு பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். சிவாஜி மறைந்த பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ரத்னமாலாவும் இறந்து போனார், யாருக்குமே தெரியாமல்..! ‘தினமலர்’ பத்திரிகை மட்டுமே அன்றைக்கு அவரது இறப்புச் செய்தியோடு அவர் யார் என்பதையும் எழுதியிருந்தது..!
சிவாஜி-பத்மினி ஜோடி பற்றிய செய்தியில் சிறிது உண்மையிருந்தும், அது கூடாமல் போய்விட்டது என்பதில் சிவாஜியின் ரசிகர்களுக்கு நிரம்பவே வருத்தம்தான். எனக்கும்தான்..!
4. எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி
சிவாஜியைவிடவும் தெள்ளுத் தமிழைத் தீயாய் உச்சரிக்கும் பாங்கு உடையவர் என்று திரையுலகில் பாராட்டைப் பெற்றவர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்களால் பெண் என்பவளுக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட கண்ணகிக்கு உருவகம் கொடுத்தவர் விஜயகுமாரி.
‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘பூம்புகார்’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘தங்கரத்தினம்’, ‘சாரதா’, ‘சாந்தி’ என்று பல படங்களில் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடியாகத் திகழ்ந்தது எஸ்.எஸ்.ஆர்.-விஜயகுமாரி ஜோடி.
அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு பங்கஜம் என்ற மனைவியும், மகன்களும் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து தனக்கு ஜோடியாக நடித்து வந்த விஜயகுமாரியை தீவிரமாக விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். எல்லாரும் செய்றதுதான..? நம்ம என்ன தப்பாவா பேசிட்டோம்.. செஞ்சிட்டோம் என்று நினைத்து விஜயகுமாரியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனத்தைத் துவக்கினார் எஸ்.எஸ்.ஆர்.
எல்டாம்ஸ் சாலை வீட்டில் முதல் மாடியில் முதல் மனைவியும், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியுடனும் குடியும், குடித்தனமுமாக இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
எந்த அளவுக்கு நடிப்பையும், அரசியலையும் விரும்பினாரோ அதே அளவுக்கு மதுவையும் விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். பல தலைவர்களிடம் சொல்லியும், பேசியும் பஞ்சாயத்து செய்தும் பலனளிக்காமல் போக, விஜயகுமாரி தன் மகன் ரவியோடு எஸ்.எஸ்.ஆரிடம் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. இன்றுவரையிலும் தொடர்பில்லாமல் தனித்துதான் இருக்கிறார் விஜயகுமாரி.
அவர் விலகிச் சென்ற சிறிது காலத்திலேயே தாமரைச்செல்வி என்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக்கிக் கொண்டு எல்டாம்ஸ் சாலை வீட்டின் மூன்றாவது மாடியில் குடி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். இத்தோடு இவரது காதல் முடிந்தது.
இந்த நேரத்தில் ‘நவசக்தி’ பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆரின் திருமணங்கள் பற்றி கார்ட்டூன் போட்டு கிண்டலடித்திருந்தார்களாம். பத்திரிகையைப் பார்த்த பெருந்தலைவர் காமராஜர் காலையிலேயே தனது வீட்டில் பஞ்சாயத்தைக் கூட்டி அனைவரையும் திட்டித் தீர்த்துவிட்டாராம்..! சம்பந்தப்பட்டவர் எஸ்.எஸ்.ஆரிடம் நேரில் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்த பின்புதான் காலை சாப்பாட்டில் கை வைத்தார் காமராஜர் என்கிறார்கள் அன்றைய பத்திரிகையாளர்கள். இதெல்லாம் அந்தக் காலம்..!
5. ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி
“என் சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பெண்களையாவது நான் பார்த்திருப்பேன்” என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொண்ட காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கையே இந்த விஷயத்தில் ஒரு பாடம்தான்.
ஜெமினியின் முதல் மாட்டுதல் புஷ்பவல்லியிடம்தான். ஜெமினி ஹீரோவாக அறிமுகமான ‘மிஸ் மாலினி’யின் ஹீரோயின் புஷ்பவல்லிதான். ஜெமினி ஸ்டூடியோவில் கேரக்டருக்குத் தகுந்தாற்போன்ற நடிகர்-நடிகையரைத் தேர்வு செய்யும் பொறுப்பான பதவியில் இருந்த ஜெமினியின் கண்களில் தானாக விழுந்தவர் புஷ்பவல்லி. இத்தனைக்கும் புஷ்பவல்லியின் தங்கையான சூர்யபிரபாதான் ஜெமினிக்கு முதல் பிரெண்டு. இந்த பிரெண்டு மூலமாகவே புஷ்பவல்லியும் பிரெண்டாக நட்பு ஓரளவோடு நின்றிருந்தது..!
இடையில் புஷ்பவல்லிக்கு வேறொருவருடன் திருமணமாகி ஒரு பையனும் இருந்த நிலையில்தான் மீண்டும் ஒரு முறை யதேச்சையாக ஜெமினிகணேசனை பீச்சில் சந்திக்கப் போய் வினையாகிவிட்டது. பரவுவதற்கு நல்லதொரு கொடி மரம் தேடிக் கொண்டிருந்த புஷ்பவல்லி, ஜெமினியை வலுக்கட்டாயமாக நெருங்க.. ஜெமினி சரண்டரானார்.
அடுத்த வருடமே பானுரேகா என்னும் ரேகாவும், தொடர்ந்து ராதா என்ற பெண்ணுமாக அவசரமாகப் பிறக்க.. தொடர்ந்து அவர்களது பிரிவும் அவசரமாகவே இருந்துவிட்டது. காரணம் ஈகோதான்.
சிறிய இடைவெளியாக இருந்த இந்த விஷயத்தை மீளவே முடியாதபடிக்கு மாற்றியது சாவித்திரியின் வருகை. ஹீரோயினாக ஜெமினியுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடி போட்ட சாவித்திரியிடம், ஜெமினியின் நட்பு குறித்து ஸ்டூடியோவுக்கே நேரில் போய் புஷ்பவல்லி வாய்ச்சண்டையெல்லாம் போட்டதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இதை ஒரு காரணமாக வைத்து ஜெமினியை விட்டு முற்றிலுமாக விலகினார் புஷ்பவல்லி..!
இந்த உறவு பத்திரிகைகளில் லேசுபாசாக மட்டுமே கிண்டி கிளறி எழுதிக் கொண்டிருந்த நிலையில், பானுரேகா அசத்தல் ரேகாவாக ஹிந்தியில் கொடி கட்டிப் பறந்தபோது, தன்னுடைய தந்தை ஜெமினிகணேசன்தான் என்று பேட்டியளித்த பின்புதான் எல்லாமே வெட்டவெளி்ச்சமானது.
இத்தனைக்கும் ஜெமினியும், புஷ்பவல்லியும் முறைப்படி திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்..!
6. ஜெமினி கணேசன் - சாவித்திரி
திரையுலகின் பொருத்தமான ஜோடிகள் என்று தென்னிந்திய திரையுலகமே போற்றிப் புகழும் வண்ணம் வாழ்ந்த காதல் ஜோடிகள் இவர்கள்..!
ஆந்திராவில் பிறந்து வளர்ந்து 1955-ல் எல்.வி.பிரசாத் இயக்கம் செய்த ‘மிஸ்ஸியம்மா’வில் ஹீரோயினாக அறிமுகமான சாவித்திரி அந்தப் படம் முடிவடைவதற்குள் தன்னுடன் இணைந்து நடித்த ஜெமினிகணேசனிடம் தனது மனதைப் பறி கொடுத்தார்.
ஏற்கெனவே ‘மனம் போல மாங்கல்யம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்து அதிலேயே இவர்களது காதல் ஆரம்பித்து எல்.எஸ்.எஸ். பேருந்து போல் நான் ஸ்டாப்பாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போதும் வளர்ந்து கொண்டேயிருந்தது. புஷ்பவல்லி மீதான உறவில் ஜெமினிக்கு இருந்த வருத்தத்தையெல்லாம் சர்ப் பவுடர் போட்டுத் துடைத்தது சாவித்திரியின் நட்புதான்.
சாவித்திரி தனது அப்பாவின் தொல்லை தாங்காமல் ஒரு இரவு நேரத்தில் ஜெமினியின் வீட்டிற்கே சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ள.. இப்படித்தான் இந்தத் தெய்வீகக் காதல் தம்பதிகளின் காதல் திருமணம் நடந்தேறியது.
அப்போது ஜெமினிகணேசனுக்கு பாப்ஜியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும், புஷ்பவல்லியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும் காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று இருவரின் கண்ணையும் மறைத்தது..!
யார் கண் பட்டதோ இருவருக்குமிடையில் பிளவு ஏற்பட்டு. பிரிவு வந்து யார் சொல்லியும் கேட்காமல் ‘பிராப்தம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதனால் சொத்துக்கள் அத்தனையையும் இழந்து துயரப்பட்ட நடிகையர் திலகம் சாவித்திரி, தனது 44-வது வயதிலேயே இறந்தது தமிழ்த் திரையுலகம் சந்தித்த ஒரு மிகப் பெரும் கொடூரம். (இவங்களைப் பத்தி தனியா ஒரு பதிவு போடணும்ப்பா..)
7. பீம்சிங் - சுகுமாரி
‘பா’ வரிசைப் படங்களையெடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த இயக்குநர் பீம்சிங். இயக்கத்திலேயே தலை சிறந்தவராக அந்தக் காலத்தில் கொண்டாடப்பட்டவர்.
கதைகளுக்காகத்தான் நடிகர்களே தவிர.. நடிகர்களுக்காக கதை இல்லை என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். எந்தவித காம்பரமைஸ்களுக்கும் உட்பட மறுத்து ‘பா’ வரிசைப் படங்களின் கிரேஸ் முடிந்த பின்பு, ஜெயகாந்தனின் கதைகளையே வரிசையாக படமெடுக்கத் துவங்கியவர்.
இவரும் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வேளையில் அப்போது கதாநாயகிகளுக்கு நண்பியாகவும், குரூப் நடனமாடியும் வந்த தற்போது ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று சொல்லப்படும் பழம் பெரும் நடிகை சுகுமாரியை 'பா' வரிசைப் படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் வெளிப்படையாக தெரிந்தபோது சுகுமாரி இது பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாதவர்.. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
8. டி.ஆர்.ராமண்ணா - பி.எஸ்.சரோஜா - ஈ.வி.சரோஜா
ரொம்பவே அதிர்ஷ்டக்காரக் கணவர் இவர். இவருடைய மூன்று மனைவிகளில் இருவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோயின்களாக நடித்தவர்கள். மூன்று மனைவிகளின் பெயர்களும் சரோஜாதான்.
அந்தக் கால கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியின் உடன் பிறந்த தம்பியான இவர் தனது 14-வது வயதிலேயே திரையுலகில் கால் பதித்தவர். சவுண்ட்டு அஸிஸ்டெண்ட், ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குநராக பல படிகளைத் தொட்டவர் இவர். எம்.ஜி.ஆர். சிவாஜி மட்டுமல்லாமல் என்.டி.ராமராவ், ஜெயலலிதாவையும் வைத்து இயக்கியிருக்கிறார்.
இவர் இயக்கிய ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’, ‘குலேபகாவலி’, ‘காத்தவராயன்’, ‘மணப்பந்தல்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பாசம்’, ‘குமரிப்பெண்’, ‘நான்’, ‘சொர்க்கம்’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நீ’, ‘மூன்றெழுத்து’, ‘உன்னைப் போல் ஒருவன்’ என்று பல படங்களிலும் அன்னாரின் இயக்கம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய பல கமர்ஷியல் இயக்குநர்களின் முதல் குருவாக இவரைத்தான் சொல்ல வேண்டும்.
ராமண்ணா நடித்த முதல் படமான ‘என் தங்கை’ என்ற படத்தில் இவருடன் இணைந்து நடித்தவர்தான் ஈ.வி.சரோஜா. இவர் பின்பு 'மதுரை வீரன்', 'குலேபகாவலி', 'வீரத்திருமகன்', 'பாக்கியலட்சுமி', கொடுத்து வைத்தவள், ‘படிக்காத மேதை’ உட்பட பல படங்களில் நடித்தவர். ராமண்ணாவுடன் நடித்தும், அவர் இயக்கிய படங்களில் நடித்தும் வந்தபோதுதான் காதல் கைகூடி இவரை மணந்தார் ராமண்ணா.
அடுத்தவர் பி.எஸ்.சரோஜா. ‘வண்ணக்கிளி’ படத்தில் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாடலில் சோகத்தைப் பிழிந்தெடுப்பார் பாருங்கள். அவர்தான் பி.எஸ்.சரோஜா. பி.யூ. சின்னப்பா நடித்த. ‘விகடயோகி’ என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சரோஜா. .ராமண்ணா இயக்கிய ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’ படங்களில் நடித்தபோது இவர் மீதும் காதல் கொண்டு இவரையும் திருமணம் செய்து கொண்டார்.
இது விரும்பியே மணந்ததுதான் என்பதால் எதுவும் சொல்வதற்கில்லை. இப்போது ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் இறந்துவிட்டார்கள். பி.எஸ்.சரோஜா மட்டுமே உயிருடன் இருக்கிறார்.
9. ரவிச்சந்திரன் - ஷீலா
ஒரு ச்ச்ன்ன ஸ்லிப்தான் வாழ்க்கையை திசை திருப்பியது என்பார்கள். அது இவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. பாசம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக டி.ஆர்.ராமண்ணாவால் அறிமுகப்படுத்த ஷீலா, ஜோஸப் தளியத்தால் மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் மலையாள உலகின் உச்சத்திற்கே போயிருந்தார். அந்தச் சூழலில் அவ்வப்போதுதான் தமிழ்ப் படங்களில் தலை காட்டுவார்.
அப்படி நடிக்கத் துவங்கிய இவர்களது நட்பு மலையாளப் படங்களுக்கு ரவிச்சந்திரனை சிபாரிசு செய்யும் அளவுக்கு ஷீலாவை கொண்டு சென்றது..! ரவிச்சந்திரனுக்கு அப்போது விமலா என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தது.
இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாததால் திருமணமும் செய்து கொண்டார்கள். தம்பதிகள் ‘மஞ்சள் குங்குமம்’ என்ற பெயரில் சொந்தமாகத் திரைப்படமும் தயாரித்தார்கள். படம் படுதோல்வி.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ஷீலா முறைப்படி டைவர்ஸ் செய்து கொண்டு மகனுடன் வெளியேற.. ரவிச்சந்திரன் மறுபடியும் தனது முதல் மனைவியுடன் இணைந்து கொண்டார்.
தோல்வியடைந்த காதலுக்கு இவர்களும் ஒரு உதாரணம்..!
10. விஜயகுமார் - மஞ்சுளா
தமிழ்ச் சினிமாவில் மேற்கண்ட ஜோடிகளைப் போல திருமணம் செய்து கொண்டு இன்றுவரையிலும் ஒற்றுமையாக இருப்பவர்கள் விஜயகுமார்-மஞ்சுளா ஜோடிதான்.
எம்.ஜி.ஆர். படவுலகில் இருந்து விடுபட்டு கோட்டையில் முதலமைச்சராக அமர்ந்த பிறகு அடுத்த நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவுடன் எடுத்த எடுப்பிலேயே ஜோடி போட்டுவிடவில்லை விஜயகுமார். இரண்டாவது கதாநாயகன், ஹீரோவின் நண்பன் என்றுதான் பல படங்களில் மஞ்சுளாவுடன் நடித்து வந்தார்.
இந்த இருவரும் அல்லி தர்பார் படத்தில்தான் முதலில் ஜோடியாக நடித்தார்கள். பின்பு சங்கர், சலீம், சைமன், குப்பத்து ராஜா என்று வரிசை தொடர்ந்து போது தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் வாழ்ந்து வந்தார் விஜயகுமார்.
ஸ்ரீப்ரியா, சுஜாதா, லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீதேவி என்று தனக்குப் போட்டிக்கு ஆட்கள் நிறைய வந்துவிட்டதால் மஞ்சுளாவும் தன்னுடைய ரிட்டையர்டுமெண்ட் பற்றி யோசித்து வந்தவேளையில் விஜயகுமார் மஞ்சுளாவின் தனது காதலைத் தெரிவிக்க, அவர் "எங்கம்மாகிட்ட வந்து பேசுங்க.." என்று பொறுப்பாகப் பதில் சொன்னாராம்.
தனது முதல் மனைவியின் ஒப்புதலுடன்தான் மஞ்சுளாவை திருமணம் செய்தார் விஜயகுமார். அப்போதிலிருந்து இப்போது வரையிலும் ஒரே வீட்டில் ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகிறது இவர்களது குடும்பம்..!
11. பாலுமகேந்திரா - ஷோபா - மெளனிகா
சாவித்திரிக்குப் பிறகு நடிப்பு என்பதற்கு அடையாளம் இவர்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டவர் ஷோபா. நவீன தமிழ்ச் சினிமாவின் துவக்கப் புள்ளியில்தான் இவரும் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் 'கோகிலா', ‘அழியாத கோலங்கள்’, 'மூடுபனி,' ஆகிய படங்களில் நடித்த ஷோபா, ‘பசி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற ஷோபா, ஏன் இந்த முட்டாள்தனத்தை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிர்...!
பாலுமகேந்திராவுடனான காதலை வளர்த்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷோபா, பாலுமகேந்திராவின் முதல் மனைவி அகிலா தன்னை ஏற்றுக் கொள்ளாத சோகத்திலும், இது தொடர்பாக பாலுமகேந்திராவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையிலும் சட்டென்று எடுத்த ஒரு முடிவால் தமிழ்த் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகையை இழந்துவிட்டது.
இதன் பின்பு கேமிரா கவிஞர் அறிமுகப்படுத்திய அனைத்து நடிகைகளையும் அவருடன் இணைத்து கதைகள் பல பேசப்பட்டு கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டும் எல்லாம் பொய் என்று நினைத்திருந்து எத்தனை தவறு என்பது கடைசியாகத்தான் தெரிந்தது.
‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் செய்துவைத்த மெளனிகாவுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டு. இப்போது துணைவியாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார் கேமிரா கவிஞர்.
12. கமல்ஹாசன் - வாணி - சரிகா
கமல்ஹாசன்-வாணி என்கிற நட்சத்திர ஜோடியின் திருமணம் சட்டென்று நடந்து முடிந்ததா? அல்லது நீண்ட நாள் காதலின் முடிவுதானா? என்பது பற்றி இப்போது பேச்சில்லை. ஆனால் சர்ச்சைகள் இருந்ததுண்டு. இதுவும் நன்றாகத்தான் இருந்தது பத்தாண்டுகள் வரையிலும்..
திடீரென்று கமல்ஹாசன், “சரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நான்தான்” என்று அறிவிக்கும்வரையில், இந்தத் தம்பதிகளின் உட்பூசலும், பிரச்சினையும் வெளியில் வரவே இல்லை.
செய்தி வந்த பின்பு நடந்த சமரசப் பேச்சுக்களும், சில அடிதடிகளும் எந்தவிதத்திலும் வாணிக்கு உதவாமல் போனது அவரது துரதிருஷ்டம்தான்.
கர்ப்பமாக இருந்த சரிகாவை பெங்களூரில் வழிமறித்த கூலிப்படைகளிடம் இருந்து காப்பாற்ற, நடுரோட்டில் டாக்ஸியில் இருந்து ரிக்ஷா வண்டிக்கு மாற்றியனுப்பி சரிகாவை பாதுகாக்கும் அளவுக்கு ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய கமலின் அப்போதைய நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான். இதுதான் பஞ்சாயத்து பேச சொம்புடன் தயாராக இருந்த கோடம்பாக்கத்து நாட்டாமைகளை, மவுனம் கொள்ள வைத்தது. .
ஆனால் இந்த அடிதடியே கமலுக்குள் வைராக்கியத்தை விதைத்துவிட, “பாத்ரூமில் தாலியைக் கழட்டி வீசியெறிந்து அலட்சியப்படுத்தும் இவருடன் நான் எப்படி வாழ்வது?” என்ற அக்மார்க் தமிழ் கணவனின் பேச்சைப் போன்ற கமல் தரப்பு நியாயத்தைக் கேட்டு பேஸ்த்தடித்துப் போனது கோடம்பாக்கம்.
கடைசியில், பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டுடன் ‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடிக்க சென்னைக்கு வந்து இங்கேயே மருமகளாக செட்டிலான வாணி கமல்ஹாசன், வாணி கணபதியாக மீண்டும் உருமாறி தனது சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.
இந்தக் காதல் நீடித்தது பத்தாண்டுகள் என்றால் அடுத்து சரிகாவுடனான கமலஹாசனின் காதலும் முறிந்ததை விதி என்று சொல்லலாமா..? யாராலும் நம்ப முடியவில்லை. அதிலும் ஆழ்வார்பேட்டை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு ஆபத்தான நிலைமையில் இருந்த சரிகாவை கண்ணும், கருத்துமாக கவனித்து வந்தார் கமல்ஹாசன்.
சரிகா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி மூன்று மாதங்களுக்குள் அதே ஆழ்வார்ப்பேட்டை தெருக்களில் 'குமுதம்' பத்திரிகை ஒட்டியிருந்த “சரிகாவிடமிருந்து பிரிந்துவிட்டேன்” என்ற கமலின் ஒப்புதல் வாக்குமூலம் தாங்கிய நோட்டீஸ்தான் பார்ப்பவர்களைத் திகிலடைய வைத்தது. என்ன எழவு ஈகோவோ தெரியவில்லை..?
இந்த முறிவுக்குப் பின்பு இடையில் ஒரு மெல்லிய தென்றலாய் புகுந்தார் இடையழகி சிம்ரன். 'விருமாண்டி' ஷூட்டிங்கிற்காக உத்தமபாளையத்தில் முகாமிட்டிருந்த கமலை சந்திக்க காண்டசா கிளாஸிக் காரில் பவனி வந்து கொண்டிருந்த சிம்ரனைப் பார்த்தவுடன் அடுத்தது இவர்தான் என்று முடிவே செய்திருந்தது கோடம்பாக்கத்து கிசுகிசு பத்திரிகைகள். ஆனாலும் கதை புஸ்ஸானது சிங்கப்பூரிலாம்..!
நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஏதோ ஒரு பிரச்சினையால் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக் கதவைத் திறக்க மறுத்து சிம்ரன் அடம் பிடிக்க.. அறை வாசலில் நீண்ட நேரம் இருந்து பெல் அடித்துப் பார்த்து வெறுத்துப் போனார் கமல்ஹாசன் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
அன்றைய இரவில் காரிடாரில் கமல் இருந்த கோலத்தைப் பார்த்து உச்சுக் கொட்டிய உடன் சென்ற நடிகர்கள்தான் அவரைச் சமாதானம் செய்து அவரது அறைக்கு அனுப்பி வைத்தார்களாம்..! காதல்தான் எதை, எதையெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்..! இதனாலேயே சென்னை திரும்பும்போது கமல்ஹாசனின் மனதில் சிம்ரன் தொடர்பில்லை என்றாகிவிட்டது.
இப்படி சிம்ரன் வந்த வேகத்தில் விலகிப் போக... அப்போதுதான் தனது நீண்ட நாள் தோழியான கவுதமியை புற்றுநோய் தாக்கிய நிலையில் அப்போலாவில் பார்த்த மாத்திரத்தில் உருகிப் போனார் கலைஞானி.
தனது பி.ஜே.பி. கட்சித் தொடர்புகளை வைத்து தொழிலில் முன்னேற நினைத்த கணவனால் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்துபோய் டைவர்ஸ் கேட்டிருந்த நிலையில்தான் புற்றுநோய்த் தாக்கி சீரியஸாகி இருந்தார் கவுதமி. அவருக்கு ஆறுதல் சொல்லியபடியே துவங்கிய கமலின் நட்பு, மீண்டும் துளிர்விட்டு இப்போது உடன் வாழும் துணைவி என்று நிலையில் வந்து நின்றிருக்கிறது..!
இந்தக் கலைஞனுக்குள் இருக்கும் மனதை யார் புரிந்து கொள்வது..?
13. பிரபு - குஷ்பு
இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த பாவத்தைச் செய்தவர்கள் சாட்சாத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள்தான். அதில் எனக்குச் சந்தேகமில்லை.
பிரபு-குஷ்புவுக்கே தோன்றியிருக்காத ஒரு எண்ணத்தை... "காதல் இருக்கா..? இருக்கோ..? இருக்காம்ல்ல..? என்ன சொல்ல மாட்டேங்குறீங்க?" என்றெல்லாம் தினம்தோறும் அந்த எண்ணத்தை, அவர்களது மனதில் விதைத்து திருமணம் வரையிலும் கொண்டு போய்ச் சேர்த்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது தமிழ்ச் சினிமா பத்திரிகையுலகம். போதாக்குறைக்கு இந்த இருவருக்குமே ஒருவரே பி.ஆர்.ஓ.வாகவும் இருந்ததினால் நட்பு, காதலாகி, கசிந்து திருமணத்தில் முடிய வேண்டிய கட்டாயம்..!
அதுவரையிலும் 'அன்னை இல்ல'த்தின் அடுப்படிவரையிலும் உரிமையுடன் சென்று தானே எடுத்துப் போட்டு சாப்பிட்டு வரும் அளவுக்கு பழக்கமாகி இருந்த குஷ்புவை, திரும்பவும் அந்த வீட்டுக்குள் கொஞ்ச காலம் நுழையாதபடிக்குக் கொண்டு சென்றது அந்த மண விவகாரம்.
நடிகர் திலகத்திற்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மூன்று மாதத்தில் இந்த ஜோடி பிரிய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. அந்த நேரத்தில் பிரிவது என்று இருவரும் எடுத்துக் கொண்ட முடிவு பாராட்டுக்குரியது. ஒரு திருமணத்தால் குடும்பமே பிரியக்கூடிய அளவுக்கு போகுமென்றால், பத்து பேரின் சந்தோஷத்திற்காக இருவர் துயரத்தை அனுபவிப்பதில் தவறில்லை என்பதால் துன்பத்தைத் தாங்கிக் கொண்டார்கள்.
பத்திரிகைகளுக்கு இதுவும் ஒரு பரபரப்புச் செய்திதான்.. மஞ்சள் குளித்தன பத்திரிகைகள்.! ஆனாலும் ரசிகர்களுக்கு மனம்கொள்ளா வருத்தம்தான்..! அவர்களுக்குப் பிடித்த ஜோடியல்லவா..!?
14. அம்பிகா - ரவிகாந்த்
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சொத்தையே ஒட்டு மொத்தமாக அள்ளிக் கொண்டு போன நட்சத்திர நடிகைகள் குடும்பத்தில் இவர்தான் மூத்தவர்.. அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் ஒரு மணாளனுக்கு வாழக்கைப்பட்டுச் சென்றவர் மிகச் சில ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் திரும்பி வந்தார்.
தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் அவரை டைவர்ஸ் செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கினார். ‘அருணாச்சலம்’ படத்தில் ரஜினியுடன் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றி தனது செகண்ட் இன்னிங்ஸை துவக்கினார்.
இந்த நேரத்தில் தொலைக்காட்சியிலும் நடிக்க வாய்ப்பு வரவே அதிலும் நடிக்கத் துவங்கினார். அப்படி தன்னுடன் நடிக்க வந்த ரவிகாந்த் என்கிற நடிகருடன் ஜோடியாக நடித்தவர், வெகு சீக்கிரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ரவிகாந்துடனேயே ஜோடி சேர விரும்பினார். ரவிகாந்த் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.
பல இரண்டாவது மனைவிகள் சொல்வதைப் போலவே, “ரவியின் முதல் மனைவி அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். ஆகவே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..” என்றார் அம்பிகா. ரவிகாந்த் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்த பின்பு, இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த ஒருமித்தத் தம்பதிகள் பத்தாண்டுகள் கழித்து மிகச் சமீபத்தில்தான் தங்களிடையே ஒத்து வரவில்லை என்பதை உணர்ந்து முறைப்படி பிரிந்துவிட்டார்கள். பிரிந்த வேகத்தில் ரவிகாந்த் மீண்டும் ஒரு திருமணம் செய்து செட்டிலாகிவிட்டது ஒரு தனிக்கதை..!
-----------------------------
இதில் பழகிப் பார்த்து திருமணம் முடிந்து, பின்பு மனம் மாறி பிரிந்து சென்ற சில ஜோடிகளை தவிர்த்திருக்கிறேன். யார் என்று உங்களுக்கே தெரியும்..! நல்லதொரு மண வாழ்க்கையில் இப்போதும் அவர்கள் இருக்கையில் வாழ்க வளமுடன் என்று வாழ்த்திவிட்டு போவதுதான் நமக்கு நல்லது..!
இதுவெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று இன்றைக்குச் சொல்லக் கூடிய அளவுக்கு சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையேயும் இந்தப் பழக்கம் இருந்து வருவது அனைவரும் அறிந்தது.
இதற்கான முதல் காரணம் சிறு வயதிலேயே.. அதாவது 25 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னொரு பெண் வருவது என்பது தவிர்க்க முடியாததாக இருந்து தொலைக்கிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராமண்ணா, எஸ்.எஸ்.ஆர். என்று பட்டியலிட்ட அத்தனை பேருமே மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் செய்தவர்கள்தான். அது குடும்பப் பெரியவர்களின் பெயரைத் தட்டக் கூடாது என்பதற்காகத்தான்..
இப்படியொரு கட்டாயத்திற்காக திருமணம் செய்துவிட்டு பல வருடங்கள் கழித்து தங்களுக்குப் பொருத்தமாக இல்லையே என்றெண்ணிதான் பலரும் அப்போதைக்கு மனதுக்குப் பிடித்த வேறொருவரை நாடுகிறார்கள். இது இரு பாலரும் செய்யக் கூடியதுதான்.. நிறைய பேர் இதில் பக்குவப்பட்டு சிறந்திருக்கிறார்கள். பலர் தரித்திரமாகப் போயிருக்கிறார்கள்.
காதல் என்பதை மட்டுமே வைத்து திருமணம் செய்தவர்கள் இன்றைக்கும் நன்றாகத்தான் உள்ளார்கள். கவுரவம், அழகு, பெயருக்காக செய்தவர்கள் பாதியிலேயே அலங்கோலமாகி தங்களது வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள்.
இங்கே குறிப்பிட்டது கொஞ்ச பேர்தான். திரைத்துறையைத் தவிர்த்து மற்ற சமூகத்தினரிடையே தேடினால் ஊருக்கு நூறு பேராவது இப்படியிருப்பார்கள். அவர்களும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்வார்கள். அவைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.
ஒரு கோணத்தில் பார்த்தால் சமூகத்தின் பார்வையில் இது குற்றம். ஆனால் தனி மனித விருப்பத்திலும், அவர்களது பார்வையிலும் இதில் தவறில்லை. தவிர்க்க முடியாதது.
காதல் எப்போது, யார் மீது யாருக்கு வரும் என்பதைச் சொல்லிவிட முடியாது என்பதாலும், இதில் தனி மனித உரிமையும் அடங்கியிருக்கிறது என்பதாலும் இதற்கு மூக்கணாங்கயிறு போடுவது என்பது சட்டப் புத்தகங்களால் முடியவே முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும்விட சமூக நலன் முக்கியமா? தனி மனித உரிமை முக்கியமான என்ற கேள்விக்கு விடை தேடும்போதுதான் இது போன்ற விஷயங்களுக்கும் நாம் தீர்வு காண முடியும். அது நிச்சயம் முடியவே முடியாது என்பது மட்டுமே முடிவானது..!