பாகுபலி - சினிமா விமர்சனம்

13-07-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியத் திரை வரலாற்றில் ஒரு உன்னதமான திரைப்படம் என்று திரைக்கு வந்த முதல் நாளிலேயே பெருமை பெற்றுவிட்டது இந்த ‘பாகுபலி’ திரைப்படம்.
பிரமாண்டம்.. பிரமாண்டம்.. என்றெல்லாம் பல்வேறு திரைப்படங்களின் செய்தித் துணுக்குகளில் படித்துப் படித்து சலித்துப் போயிருந்த வார்த்தைக்கு, இத்திரைப்படம் உண்மையாகவே ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது. இதுதான் பிரமாண்டம்..
அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி, தெலுங்கு இயக்குநர் கே.ராகவேந்திரராவ்,  இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் சுமாராக 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
தெலுங்கு ஹீரோக்களான பிரபாஸ், ராணா இருவரும் தமிழில் முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள். மேலும் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கிறது.

மகிழ்நதி தேசம், குந்தல தேசம்,  இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் தட்சணப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலத்தில் நடைபெறும் ராஜா, ராணி கதைதான் இது. ஆட்சி, அதிகாரம் இவையிரண்டுக்கும் ஆசைப்பட்டு சொந்தங்களுக்குள்ளேயே படுகொலைகளை செய்து ஆட்சியைப் பிடித்து புதிய மன்னர் பரம்பரையை உருவாக்கியதற்கு நிறைய சரித்திரங்கள் நமது நாட்டில் உண்டு. அதில் ஒரு கதைதான் இந்த ‘பாகுபலி’.
படத்தின் கதையை ஒட்டு மொத்தமாகவும் சொல்ல்லாம். அல்லது படத்தின் துவக்கத்தில் இருந்தே திரைக்கதை விரிய விரிய நம் கண்கள் அகல அகல விரிந்து பரவசப்பட்டதையும் வரிக்கு வரியாக சொல்லலாம். எப்படி சொன்னாலும் அது பாதி கதையாகத்தான் இருக்கும். ஏனெனில் இது ‘பாகுபலியின் துவக்கம்’ என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். முடிவுரை அடுத்த பாகத்தில்தான்.
இந்த முதல் பாகத்தில் முடிச்சவிழ்க்கப்படாத புதிர்களின் விடைகள் அடுத்த பாகத்தில்தான் கிடைக்கவிருக்கின்றன. எனவே இப்போதுவரையிலும் நாம் பார்த்த கதையை மட்டும் சுருக்கமாக சொல்கிறோம்.
படத்தின் துவக்கத்திலேயே ஒரு நொடிகூட தாமதிக்காமல் கதையும் துவங்குகிறது. முதுகில் குத்திய அம்புடன் மகிழ்நதி நாட்டின் அரசியான சிவகாமி  கையில் ஒரு குழந்தையுடன் வானத்தை தொடும் நீர்விழ்ச்சியின் அடிவாரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் கரை புரண்டோடும் நதியில் தத்தளித்து நடந்து வருகிறாள். பின்னாலேயே வாளேந்திய வீரர்கள் அவளைத் துரத்துகிறார்கள்.
தன் முதுகில் சொருகியிருந்த அம்பை எடுத்து அதன் மூலமாகவே வீரர்களை கொல்லும் சிவகாமி பேரிரைச்சலுடன் அலைபாயும் நதியுடன் அல்லல்பட முடியாமல் ஓங்கி உயர்ந்து நிற்கும் நீர்வீழ்ச்சியை பார்த்து ‘சிவனே’ என்று அழைத்து, தன் கையில் இருக்கும் குழந்தையை நீருக்கு மேலே தூக்கிப் பிடித்தபடியே நீரில் முழ்கி இறக்கிறாள்.
அந்த வழியே வரும் அந்தப் பகுதியின் வேடுவப் பகுதி மக்களின் தலைவியான ரோகிணி அக்குழந்தையை மீட்டு தனக்கு ஈசனால் வழங்கப்பட்ட குழந்தை என்றெண்ணி வளர்க்கிறாள். அந்த ஆண் பையன் ‘ஷிவடு’ என்றே அழைக்கப்படுகிறான்.
அவனுக்கு எப்போதும் ஒரேயொரு ஆசைதான். அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியைத் தொட்டுவிட வேண்டும் என்று.. அதற்காக பலமுறை முயல்கிறான். தோற்கிறான். ஆனாலும் விடா முயற்சியாக முயன்று கொண்டேயிருக்கிறான்.
அப்படியொரு முயற்சியின்போது மரத்தாலான முகமூடி ஒன்று அவன் கையில் கிடைக்கிறது. அதனை தற்செயலாக மணலில் வைத்திருந்தபோது அது ஒரு பெண்ணுக்குரிய முகமூடியாக தெரிய வர.. அந்த நீர்வீழ்ச்சி மீதிருந்த மோகம் தலைக்கேறுகிறது ஷிவடுவுக்கு..
மீண்டும் முயல்கிறான். இம்முறை அவன் கண்ணுக்கு ஒரு காரிகையும் தென்படுகிறாள். அவன் இதுவரையில் பார்த்திராத ஒரு அழகில் அவள் இருப்பதால் இள வயதுக்கே உரிய தினவுடன் தன் உடல் வலிமையை பயன்படுத்தி நீர் வீழ்ச்சியின் உச்சியை அடைகிறான். அவளைத் தேடுகிறான்.
அந்த அவள் அவந்திகா. நீர்வீழ்ச்சியின் எல்லையோரம் இருக்கும் காட்டுப் பகுதியில் முகாமிட்டிருக்கும் ஒரு படையினரின் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவர்களெல்லாம் மகிழ்நதி நாட்டில் சிறைப்பட்டிருக்கும் தங்களது ராணியான தேவசேனாவை விடுவிக்க திட்டம் தீட்டி காத்திருக்கும் புரட்சிப் போராளிகள்.
இந்தத் திட்டம், புரட்சி, தேவசேனா, மகிழ்நதி நாடு  இது எதுவும் தெரியாத ஷிவடுவுக்கு அவந்திகா மட்டுமே முக்கியமானவளாகத் தெரிகிறாள். அவளையே பின் தொடர்கிறான். அவளுக்கே தெரியாமல் அவள் உடம்பில் கோட்டோவியம் வரைந்து அவளை திகைக்க வைக்கிறான்.
வாள் வீச்சில் வல்லவளாக எதிரிகளை அழிக்கொழிக்கும் புரட்சிப் பெண்ணாக இருக்கும் அவந்திகாவை ஒரு பேரழகியாக, தேவதையாக மாற்றிக் காட்டுகிறான் ஷிவடு. அந்தக் கணமே தன்னை மறக்கிறாள் அவந்திகா. அவள் ஷிவடு மீது கொண்ட மையல் காந்தர்வ மணத்திலும் கொண்டு போய் முடிகிறது.
இதற்குப் பின்னர் எதிர்பாராதவிதமாக அவளை பிடித்துவிடும் மகிழ்நதியின் இப்போதைய அரசன் பல்லல தேவாவின் படை வீரர்களிடமிருந்து தன் காதலியை மீட்கிறான் ஷிவடு. இனி அவளது பிரச்சினை தன் பிரச்சினை என்று சொல்லும் ஷிவடு.. மகிழ்நதி தேசத்திற்கு சென்று தேவசேனாவை தான் மீட்டு வருகிறேன் என்று சொல்லி அங்கே பறக்கிறான்.
எதையும் தாங்கும் உடல் கொண்ட பராக்கிரமசாலியான ஷிவடுவால் மிக எளிதில் மகிழ்நதி ராஜ்ஜியத்திற்குள் ஊடுருவ முடிகிறது. அங்கே மகிழ்நதி நாட்டின் முந்தைய அரசனான பாகுபலியின் காதல் மனைவி தேவசேனா பொதுவிடத்தில் கை, கால்களில் சங்கலியால் பிணைக்கப்பட்டு அரசியல் கைதியாக்கப்பட்டிருக்கிறாள். 25 வருடங்களாக அவள் அப்படித்தான் இருக்கிறாள்.
என்றாவது ஒரு நாள் தான் பெற்ற மகன் தன்னை மீட்டெடுக்க வருவான் என்று உறுதியாக நம்பிக் காத்திருக்கிறாள். மகன் தன்னைக் காப்பாற்றும் அதேவேளையில் தான் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் மரக்கிளைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் நெருப்புப் பொதியினுள் பல்லலதேவா சிக்கிண்டு எரிந்து சாம்பலாவான் என்று சாபமிட்ட நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.
ஷிவடு வந்த நேரம் அங்கே பல்லலதேவா அந்த தேசத்திற்கே கடவுளாகிறான். அவனது உருவச் சிலை நகரின் மையப்பகுதியில் நிறுவப்படுகிறது. அதனைத் தூக்கி நிறுத்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரைக் கொடுத்து போராடி வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று அந்த சிலை நிற்க கை கொடுக்கிறான் ஷிவடு.
ஆனால் நொடி நேரத்தில் அவனது முகத்தை பார்த்துவிடும் ஒரு தொழிலாளி ‘பாகுபலி’ என்று குரல் கொடுக்க.. வீசப்படும் சவுக்கடியை மறக்கவும், தங்களது உடல்வலியை மறக்கவும் ‘பாகுபலி’ என்ற பெயரை உச்சரிக்கிறார்கள் தொழிலாளர்கள்.
இது தற்செயலாக நடந்ததல்ல.. இதில் ஏதோவொரு சதி நடந்திருக்கிறது என்று நினைத்து பல்லலதேவா தனது வீரர்களிடத்தில் விசாரணை நடத்த அந்த நேரம் அந்த வீரர்கள் கூட்டத்தில் இருக்கும் ஷிவடு அங்கேயிருந்து தப்பிக்கிறான். அவனைப் பிடிக்க வீரர்கள் கூட்டம் முயன்று கொண்டிருக்கும் வேளையில், தேவசேனாவை விலங்கு பிடியில் இருந்து காப்பாற்றி அவளைத் தூக்கிச் செல்கிறான் ஷிவடு.
அந்த தேசத்தின் அடிமை வம்சத்தின் தலைவரான கட்டப்பாவின் தலைமையில் அதி பயங்கர விசுவாசக் கூட்டம் ஷிவடுவைத் துரத்திப் பிடிக்கிறது. பல்லலதேவாவின் மகனே நேரடியாக களத்தில் இறங்கி ஷிவடுவுடன் மோதுகிறான். இறுதியில் ஷிவடுவின் வாளால் தலை கொய்யப்பட்டு இறந்து போகிறான்.
ஷிவடுவை கொல்ல நினைக்கும் கட்டப்பாவிற்கு இப்போது ஷிவடுன் முகம் தென்பட சிலையாகிப் போய் நிற்கிறார். இப்போது இவரும் ‘பாகுபலி’ என்று உச்சரிக்கிறார். அனைவரும் தன்னை ‘பாகுபலி’ என்கிறார்களே என்ற குழப்பத்தில் “நான் யார்.. பாகுபலி யார்..?” என்கிறான் ஷிவடு.
இதே நேரம் அவனை இதுநாள்வரையிலும் வளர்த்த தாய் ரோகிணியும் அவளுடைய வேடுவர் கூட்டத்தினரும் அங்கே வந்து சேர, அவனது பிறப்பும் அவனது உண்மையான குடும்பத்தினர் பற்றிய ரகசியமும் வெளியாகிறது.
கட்டப்பா கதையை விரிவாகச் சொல்ல பிளாஷ்பேக் விரிகிறது.
மகிழ்நதியை ஆண்டு வந்த பாகுபலியின் தாத்தா இறந்த பிறகு அரியணைக்கு வந்திருக்க வேண்டிய மூத்தவரான நாசர் அரசக் கட்டிலில் அமர முடியவில்லை. ஒரு கை சூம்பிப் போய் ஊனமுற்றவராக இருப்பதாலும், அரசனுக்குரிய குணாதிசயங்கள் இல்லாததாலும் அவருக்கு பட்டம் சூட்டாமல் பாகுபலியின் தந்தைக்கு மணி மகுடம் கிடைக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு போர்க்களத்தில் பாகுபலியின் தந்தை உயிர் துறக்கிறார். அந்த நேரம் நாசரின் மனைவியான சிவகாமி அந்த நாட்டை அரசாட்சி செய்கிறாள். பாகுபலியின் தந்தை உயிர் துறந்த நேரம் அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணி. அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிரசவித்த வேதனையில் அவளும் இறந்து போக.. தன் கையில் தான் பெற்ற ஆண் குழந்தை இருக்க.. பெரிய பாகுபலியின் குழந்தையையும் தன் குழந்தையாக நினைத்து முலைப்பால் ஊட்டி வளர்க்கிறாள் சிவகாமி.
இடையில் இவளது ஆட்சியை கவிழ்க்க நினைத்த தளபதியையும், அவனது ஆட்களையும் தனது நம்பிக்கைக்குரிய கட்டப்பாவின் படையினரை வைத்து தீர்த்துக் கட்டுகிறாள் சிவகாமி. இதனால் தனது கணவர் நாசரின் கோபத்தைக்கூட சம்பாதிக்கிறாள் சிவகாமி.
இரண்டு இளவரசர்களான பாகுபலியும், பல்லலதேவாவும்  வளர்ந்து பெரியவர்களானதும் “இருவரில் யார் விவேகமும், வீரமும் மிக்கவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கே அரசுரிமை…” என்கிறாள் சிவகாமி. எப்படியும் தனது மகனான பல்லலதேவாவுக்குத்தான் அரசுரிமை கிடைக்கும் என்று காத்திருந்த நாசருக்கு இது கோபத்தை உருவாக்குகிறது.
இளவரசர்களில் பாகுபலி பல்லலதேவாவின் மீது பாசத்துடனும், நேசத்துடனும், அன்புடனும் இருந்தாலும் பல்லலதேவா அப்படியல்ல. பாகுபலியை ஒழித்துக் கட்ட நேரம், காலம் பார்த்துக் காத்திருக்கிறான்.
அந்த நேரம் நாகரிகமற்ற நாடோடி கூட்டமான காகக்கத்தியர் கூட்டத்தினர் மகிழ்நதி நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறார்கள்.  சமரசமாக போக நினைத்து அவர்களுடன் பேசிய அரசி சிவகாமியை அந்தக் கூட்டத்தின் தலைவன் அவதூறாகப் பேச.. “அவனை உயிருடன் பிடித்துத் தர வேண்டும். இவனது உடலை பருந்துகளும், கழுகுகளும் கொத்தித் தின்ன வேண்டும். இதற்காக கை, கால்கள் அங்கஹீனமாக்கப்பட்டு இவன் உயிருடன் கிடைக்க வேண்டும். இதைச் செய்பவன் எவனோ அவனுக்கே மகிழ்நதியின் பேரரசு…” என்று அறிவிக்கிறாள் சிவகாமி.
மகன்கள் இருவரும் போர்க்குணத்துடன் போர்க்களத்தில் குதிக்கிறார்கள். திரிசூல அரண் அமைத்து காகக்கத்தீயர்களை எதிர்கொள்கிறார்கள். தலைவனை பிடிக்க இருவருமே வேறு வேறு வழிகளில் முயல்கிறார்கள். ஆக்ரோஷமான சண்டையின் முடிவில் அந்த அரக்கர் தலைவனை சிவகாமி சொன்னதுபோல பிடிக்கும் வாய்ப்பு பாகுபலிக்கு கிடைக்கப் போகும் தருணத்தில், பொறாமை கொண்ட பல்லலதேவா தனது கதாயுதத்தால் அவனை கொன்றே விடுகிறான். தலைவன் இறந்து போனதால் காகக்கத்தியர் கூட்டம் சிதறியோட மகிழ்நதி படைகள் வெல்கின்றன.
“போரில் வீரம் மட்டுமில்லாமல் விவேகத்துடனும் செயல்பட்டு நம் நாட்டு மக்களைக் காப்பாற்றிய பாகுபலிதான் இந்நாட்டு மன்னர்…” என்று அறிவிக்கிறாள் சிவகாமி. நாசருக்கும், இளவரசன் பல்லலதேவாவுக்கும் இது எதிர்பாரத அதிர்ச்சியையும், கோபத்தையும், பொறாமையையும் ஏற்படுத்துகிறது.
“அந்த மாவீரனான பாகுபலியின் மகன்தான் நீ. உன்னை பெற்றெடுத்த தாய்தான் நீ மீட்டு வந்த தேவசேனா..” என்கிறார் பிளாஷ்பேக் கதையைச் சொல்லி முடிக்கும் அடிமை வம்சத்தின் தலைவன் கட்டப்பா.
“அப்புறம் என் அப்பாவுக்கு என்ன ஆச்சு..?” என்கிறான் இளைய பாகுபலி. “அவர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்…” என்கிறார் கட்டப்பா. “எப்படி…?” என்கிறான் அதிர்ச்சியுடன். “நான்தான் அவரை கொன்றேன்..” என்கிறார் கட்டப்பா.. இத்துடன் இந்த ‘பாகுபலி’ துவக்கத்தின் காட்சிகள் முடிகின்றன.
பாகுபலி மன்னனை கட்டப்பா கொலை செய்தது ஏன்..?
கட்டப்பாவை கொலை செய்யத் தூண்டியது யார்..?
சிவகாமியை கொலை செய்ய விரட்டியது யார்..?
பல்லலதேவா எப்படி ஆட்சியைப் பிடித்தான்..?
தேவசேனாவுக்கும், பல்லலதேவாவுக்குமான முன் கதை என்ன..?
இளைய பாகுபலி இனிமேல் என்ன செய்யப் போகிறான்..?
தன்னுடைய மகிழ்நதி நாட்டை மீட்டானா..?
தன் தாயின் சபதமான தன் சித்தப்பன் பல்லலதேவாவை நெருப்புப் படுக்கையில் வைத்து எரித்தானா..? என்பதெல்லாம் அடுத்த பாகத்தில் தெரிய வரும்..!
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவும் ஒரு மகாபாரதக் கதைதான்.
தர்மனாக மூத்த பாகுபலி.. துரியோதனனாக பல்ல்லதேவா.. கர்ணனாக கட்டப்பா.. திரெளபதியாக தேவசேனா.. இவர்களை மீட்டெடுக்க வரவிருக்கும் அபிமன்யூவாக இளைய பாகுபலி.. என்று கதை சுற்றிச் சுற்றி இங்குதான் வருகிறது..!
ஒரு கதையாகப் பார்க்கப் போனால் புதியது அல்ல. எத்தனையோ படங்களில் பார்த்ததுதான்.. ஆனால் சொன்ன விதம் புதியது.. காட்சிக்கு காட்சி கண்களை இமை கொட்டாமல் பார்க்க வைக்க வேண்டும் என்கிற வித்தையை ராஜமெளலியிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஒரு நிமிடம்கூட அவர் வீணாக்கவில்லை.
ஒவ்வொரு ஷாட்டையும் கவனித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தை ரசிகனுக்குள் திணித்திருக்கிறார். கதையோடு நகர்கிளது திரைக்கதை. திரைக்கதைக்குள் இருக்கிறது பரபரப்பு. வசனத்துக்குள் அடங்கியிருக்கிறது கதாபாத்திரங்களின் தன்மை.. அத்தனையையும் ஒரு சேர நகர்த்தியிருக்கிறது சிறப்பான இயக்கம்.
பாகுபலி ரோகிணி கைக்கு கிடைப்பது.. பாகுபலியின் வளர்ச்சி. நீர்வீழ்ச்சியை எட்டிப் பிடிக்க முயல்வது.. அவந்திகாவை பார்ப்பது. அவளை பின் தொடர்வது.. காதலிக்க வைப்பது.. அவளது பிரச்சினையை தெரிந்து கொண்டு மகிழ்நதிக்குள் ஊடுறுவுவது என்று கொஞ்சமும் யோசிக்கவே நேரம் கொடுக்காமல் பரபரப்பாக செல்கிறது திரைக்கதை.
இடையிடையே மகிழ்நதியின் தற்போதைய  நிலவரம்.. கட்டப்பாவின் நிஜமான வாழ்க்கை. அவருக்குள் இருக்கும் சோகம். தேவசேனாவின் வைராக்கியம்.. பல்லலதேவாவின் உள்ளுணர்வு எச்சரிக்கை.. தொடர்ச்சியாக தேவசேனா மீட்கப்படுதல் என்று ரன் வேக தாக்குதலில் படத்தின் தீயான ஓட்டம் ரசிக்க வைத்திருக்கிறது.
இடைவேளைக்கு பின்பு வரும் போர்க்களக் காட்சிகள் ஹாலிவுட் சினிமாவுக்கே சவால் விட்டிருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் கிடைக்கப் பெற்றிருக்கும் வசதி, வாய்ப்புகள், பண முதலீட்டை வைத்து இத்தனை பெரிய போர்க் களத்தை அமர்க்களமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் இது நிச்சயம் சாதனைதான்.
மகிழ்நதி அரசின் போர்க்களத் திட்டங்கள்.. திரிசூல அமைப்பு போர் முஸ்தீபு.. கட்டப்பாவின் முன் அரண் தாக்குதல் திட்டம்.. பல்லலதேவாவின் இடைமறிப்பு தாக்குதல்.. பாகுபலியின் குதிரைப்படை தாக்குதல்.. என்று அத்தனையையும் விரிவாக வசனத்தில் சொன்னதுபோலவே, பரபரப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.
காக்கதீயர்களுக்கு செய்தியனுப்பிய ஒற்றனை கண்டுபிடிக்க இளவரசர்களின் பயணம். அங்கே ஒரு கிளப் டான்ஸ். அந்த நடனத்தில்கூட ஒரு புதுமையான பாணியில் நடனமாட வைத்து அதையும் அழகுற காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
பொதுவாக தான் இயக்கும் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையைக் காட்டிவிடலாம் என்று பல பிரபல இயக்குநர்கள் நினைப்பார்கள். இதற்கு ராஜமெளலியும் விதிவிலக்கல்ல. இதில் அவர் தலையைக் காட்டியிருக்கும் அந்த ஒரு காட்சி மிக, மிக பொருத்தமானது. ரசிகர்களால் மிகவும் விரும்பி ரசிக்கப்படும் காட்சியாக அது இருக்கும் என்பதை உணர்ந்தேதான் ராஜமெளலி அதில் தனது முகத்தைக் காட்டியிருக்கிறார். ஹாட்ஸ் அப் இயக்குநர் ஸார்..!
பனிமலை பிரதேசத்தில் இருந்து தமன்னாவுடன் தப்பிக்கும் காட்சி மிகவும் பரபரப்புடன் படமாக்கப்பட்டிருக்கிறது. கிடைக்கப் பெற்ற வசதிகளுடன் குறைவான சி.ஜி.க்களுடன் அற்புதமாக படமாகியிருக்கிறது இந்த சேஸிங் காட்சி.. பல ஆங்கிலப் படங்களில் இது போன்ற காட்சிகளை பார்த்ததுதான் என்றாலும், ஒரு தமிழ்ப் படத்தில் இந்தக் காட்சியை பார்க்க நேர்ந்தது நமது அதிர்ஷ்டம்தான்..!
பல்லலதேவாவின் வீசிய வேகத்தில் போய்த் தாக்கிவிட்டு திரும்பவும் கைக்கு வந்து சேரும் திறமைமிக்க கதாயுத பலம்.. பாகுபலியின் உடல் பலம். விவேகமான வீரம்.. கட்டப்பாவின் வாள் வீச்சு.. உலகத்தின் தலைசிறந்த கொடூரமான கிரேக்க நாட்டு மன்னனான கலிகுலா தனது அரசியல் எதிரிகளை கொலை செய்ய தயாரித்த விசேஷமான பிளேடு போன்ற அமைப்பில் இருக்கும் சுழலும் சக்கரம்.. அந்தக் கால போர்க் கருவிகள்..  எரிகுண்டுகள்.. அந்த எரிகுண்டுகளைப் பயன்படுத்தி எதிரிகளைக் கொல்லும் யுக்தி.. ஒரே நிமிடத்தில் பல நூறு அம்புகளை ஏவிவிடும் மரத்தலானான அமைப்பு.. போர்க்களத்தில் முதலில் தளபதிகளையும், தலைவனையும் கொலை செய்ய வேண்டும் என்கிற திட்டமிடல்.. இப்படி அனைத்தையும் ஒரு போர்த் தளபதியின் திட்டத்துடன் நமக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் போர்க் காட்சிகளை பார்த்த பிரமிப்பு  ‘பாகுபலி’ ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தை பார்க்கும்வரையிலும் நிச்சயம் இருக்கும்.
இந்தப் படத்திற்காக ஒன்றரை வருடங்கள் முன் பணித் திட்டங்களை செய்து.. சி.ஜி. வேலைகளுக்காக பல மாதங்கள் எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக உழைத்து, உழைத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் அதற்கான பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
நேர்த்தியாக நெய்யப்பட்ட சேலை அதை அணிந்த பிறகு அணிபவருக்கும் ஒரு கம்பீரத்தையும் கொடுத்தால்தான் அது அழகு. இந்தப் படமும் அதைத்தான் செய்திருக்கிறது. படத்தைப் பார்த்த ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் ஊடுறுவி அவன் மனதை பாதித்திருக்கிறது. அதனால்தான் ‘பாகுபலி பீவர்’ நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஒரு இயக்குநரின் வேலை என்பது அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து, அவரவர் திறமையை சரியான விகிதத்தில் கலந்து தயாரிப்பதுதான் என்பார்கள். இதில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி எக்ஸ்பர்ட் என்று உறுதியாகச் சொல்ல்லாம். அதனால்தான் தொடர்ச்சியாக 9-வது வெற்றியை அவர் ருசித்திருக்கிறார்.
நடிப்பென்று பார்த்தால் பாகுபலியான பிரபாஸ், பல்லலதேவாவான ராணாவைவிடவும்  அரசி சிவகாமியான ரம்யா கிருஷ்ணனும், அடிமை கட்டப்பவான சத்யராஜூம் பெரிய அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணனின் இயல்பான மிடுக்கு இந்தப் படத்தில் அந்த கேரக்டரை வெகுவாக உயர்த்தியிருக்கிறது.  “அரச குடும்பத்து விசுவாசிகள் என் பக்கம் வாருங்கள்..” என்று அழைத்துவிட்டு “கட்டப்பா..” என்று கோபக்குரல் எழுப்பி துரோகிகள் தலையை வெட்டச் சொல்லும் காட்சியில் ஒரு அரசியாகவே தெரிகிறார்.
தான் பெற்ற பிள்ளைக்கு முலைப்பால் கொடுத்தபடியே இன்னொரு மார்பில் ‘பாகுபலி’க்கும் பால் கொடுத்துக் கொண்டே, ‘இந்த அரியணையை இந்த இருவரில் எவர் வல்லவரோ அவர்தான் அலங்கரிப்பார்கள். இது அரசாணை’ என்று கட்டளையிடும் சிவகாமியின் பேச்சு, அந்த வேடத்துக்கு இவர் மிகப் பொருத்தமான தேர்வு என்று சொல்ல வைத்திருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் கத்திச் சண்டை, கம்பு சுழற்றல் இவற்றிலெல்லாம் புகழ் பெற்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் சத்யராஜ். இன்னொருவர் அர்ஜூன். இதில் சத்யராஜின் தேர்வு பொருத்தமானது. இவரைவிட்டால் வேறு யாரும் இந்த கேரக்டரை செய்திருக்கவே முடியாது என்பதுபோல முதல் அறிமுகக் காட்சியில் சுதீப்புடனான இவரது மோதலின்போதே தெரிந்துவிட்டது.
தேவசேனாவிடம் தான் அவளை விடுவிப்பதாகக் கூறி தப்பிச் செல்ல சொல்லிவிட்டு தன் இயலாமையைக் குறிப்பிட்டு வருத்தப்படும் கட்டப்பாவின் அடிமைத்தனம் கோழைத்தனம் என்று கூற முடியாது. அது தங்களது கூட்டத்தின் நன்றியுணர்வு என்பதை மென்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் சத்யராஜ்.
பல்லலதேவாவின் மகனை கொன்றுவிட்டு இளைய பாகுபலி தன் முகத்தைக் காட்டியவுடன் ‘பாகுபலி’ என்று சொல்லி மண்டியிட்டு பேசும் அந்த கட்டப்பாவின் நடிப்பெல்லாம் படத்துடன் ஒன்றச் செய்துவிட்டது.. வெல்டன் சத்யராஜ் ஸார்..!
பிரபாஸ் இந்தப் படத்திற்காக சிக்ஸ் பேக்கை குறுக்குவெட்டில் வளர்த்து பேரிளம் ஆணாக வளர்ந்திருக்கிறார். என்ன செய்தாலும் அவர் உடலுக்கு எதுவும் ஆகாது என்கிற சிவனின் வரம் கிடைத்தாற்போல் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டதால் இவரது பராக்கிரமங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. சிவலிங்கத்தை அவர் தூக்கிச் சென்று நீர்வீழ்ச்சியின் கீழ் வைக்கும் அநாயச காட்சி அவரது பலத்தைக் காட்டுவதற்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது.
அவந்திகா என்னும் தமன்னாவுடனான காதல் காட்சியில் பல ஆயிரம் தமிழகத்து பெண் ரசிகைகளை பிரபாஸ் நிச்சயம் ஈர்த்திருப்பார் என்பது சர்வ நிச்சயம். இதில் இயக்குநரின் பங்களிப்பும் அதிகம்தான். பச்சைப் பாம்பு கண்ணைக் கொத்தக் காத்திருக்கும் அந்த நேரத்தில் தமன்னாவின் தோள்பட்டையில் படம் வரையும் அந்தக் காட்சி ஒரு ஓவியம்.. பிரமாதம் என்று சொல்ல வைத்திருக்கிறது அந்த படமாக்கல்..!
சண்டை காட்சிகளில் வீரம் காட்டியிருக்கிறார் பிரபாஸ். எத்தனையோ தெலுங்கு படங்களில் லாஜிக்கெல்லம் பார்க்காமல் உழைத்திருக்கும் பிரபாஸுக்கு இந்தப் போர்க்களக் காட்சிகள் நிச்சயமாக வேறு ஒரு உணர்வை தந்திருக்கும். ராணாவுடன் போட்டி போட்டு நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தும் தனது கேரக்டரில் ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்.
ராணா டக்குபதியும் இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் பலத்தைக் கூட்டியிருக்கிறார். காளையை அடக்குகின்ற காட்சியில் சி.ஜி. செய்திருந்தாலும் அவருடைய உடல் பலத்தைக் காட்டும் கேமிராவின் கண்களோடு, அவருடைய வெறி பிடித்த கண்களும் நடித்திருக்கிறது.
தேவசேனாவிடம் பாகுபலியை பற்றி இழிவாகப் பேசி தனது பெருமையை உயர்த்திக் கொண்டு கொக்கரிக்கும் ஆவேசத்தில் ராஜா பல்லலதேவா பேசும் வசனங்களைக் கேட்டால், ஒருவேளை தேவசேனாவை ராணா விரும்பி அவள் கிடைக்காமல் பாகுபலிக்குக் கிடைத்ததால் திட்டமிட்டு பாகுபலியை இவர் தீர்த்துக் கட்டினாரோ என்கிற அடுத்த பாகத்தின் கதையை நாமே இப்போது எழுதலாம் போலத் தோன்றுகிறது.
ஓடோடி வந்த தனது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருக்கிறார் அனுஷ்கா. தேவசேனாவாக கிழிந்த சேலையுடன் கை, கால்கள் கட்டப்பட்ட பரதேசி நிலைமையில் காட்சியளிக்கும் அனுஷ்காவை பார்த்து திக்கென்றாகிறது. ஆனால் அழுத்தமான நடிப்பு. “ச்ச்ம்மா கொள்ளி பொறுக்கிறேன்னு நினைச்சியா..?” என்று கட்டப்பாவிடம் சீறிவிட்டு “நான் தப்பிச் செல்ல விரும்பவில்லை. என் மகன் நிச்சயம் என்னை மீட்க வருவான்..” என்று உறுதியுடன் சொல்லும்போதே அந்த மகன் பிரபாஸ் என்னும் பாகுபலிதான் என்று தெரிந்துவிடுகிறது. அடுத்த பாகத்தில் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து ராணியாக ஸ்கிரீனை அலங்கரிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
தமன்னாவிற்குள் இத்தனை நடிப்புச் சுரங்கம் இருக்கிறதா என்பது தெரியாமல் போய்விட்டதே..? வாள் வீராங்கனையாக, புரட்சிப் பெண்ணாக அவர் சண்டையிடும் காட்சிகளெல்லாம் பரபர.. இந்தப் படத்தில்தான் நடிப்புக்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது எனலாம்.
ஆற்று நீரில் தன் அழகான முகத்தைப் பார்த்தவுடன் அவருக்கு வரும் பீலிங்கும், கைகளில் வரையப்பட்ட ஓவியத்தை பார்த்து சந்தேகப்பட்டு அதே இடத்துக்கு மீண்டும் வந்து பிரபாஸை தேடும்விதமும், கண்டுபிடித்தவுடன் ஒரு பாடல் காட்சியிலேயே தான் புரட்சிப் பெண்ணல்ல.. ஒரு தேவதை என்பதை அவரே உணரும் காட்சியும் ரம்மியமாக படமாக்கப்பட்டிருப்பதால் உண்மையாகவே ஸ்கிரீன் முழுவதிலும் தேவதையாக காட்சியளிக்கிறார் தமன்னா.
அவருடைய ஸ்பெஷலாட்டியான ‘மத்திய’ பிரதேசத்தை அதுவரையிலும் பொருட்படுத்தாமல் இருந்த கேமிரா, பாடல் காட்சிக்கு பின்பு அங்கேயே முகாமிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பாகத்தில் இன்னும் நிறைய ‘தரிசன’ங்களை தமன்னா தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் கை சூம்பிய நிலையில் இருந்து ஒரு நொடி கூற மாறாத தோற்றத்துடன் நாசரின் பண்பட்ட நடிப்பு.. மற்றும் கிச்சா சுதீப்பின் கம்பீரமான நடிப்பும் படத்தில் இருக்கிறது..
இது நிச்சயம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. பேசும் வசனங்களிலேயே இது நன்றாகத் தெரிகிறது. தமன்னாவின் முதல் தனிமையான பாடல் காட்சி மட்டுமே தெலுங்கில் இசைக்கப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தமன்னாவின் உதட்டசைவுகளை வைத்து அறிய முடிகிறது.
தொழில் நுட்பத்தில் இந்தப் படம் மிகப் பெரிய ஒரு மைல் கல். முதல் பாராட்டு சி.ஜி. செய்த தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு.. பனி மலை சண்டை காட்சி.. போர்க்களக் காட்சிகளில் வித்தை காட்டியிருக்கிறார்கள்.. இரண்டாவது பாராட்டு, சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின். ச்சும்மா சாதாரண சண்டையெல்லாம் இல்லை இது. வெறித்தனமான அதே சமயம் பயிற்சிக்கேற்ற சண்டையாகவும் இருக்கிறது.
போர்க்களத்தில் காக்கத்தீய தலைவனுடன் பிரபாஸ் சண்டையிடும் காட்சி உக்கிரம். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பத்து குண்டர்களை பிரபாஸ் மீது தூக்கி வீசிவிட்டு நிற்கும் காக்கத்தீய அரசன் அந்த ஒரு காட்சிக்காகவே கைதட்டல் பெறுகிறான். இத்தனை ஜனத்திரளை வைத்துக் கொண்டு பிரேமுக்குள் வரும் எவரும் சும்மா கையை, காலை உதைக்காமல் நிஜமாகவே சண்டையிடுவது போல நடிக்க வைத்திருப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.. பீட்டர் ஹெயினுக்கு ஒரு ஆஞ்சநேய மாலை வாங்கி சாத்த வேண்டும்.
அடுத்து ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் அற்புதமான ஒளிப்பதிவு. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இதுவரையில் எத்தனையோ திரைப்படங்களில் பார்த்ததுதான். ஆனால் இதில் பார்க்கும்போது அத்தனை புதியதாய் இருக்கிறது.  காரணம் கேமிரா. ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.
அவ்வப்பொழுது மகிழ்நதி நாட்டை ஏரியல் வியூவில் விதவிதமான கோணத்தில் காட்டி அசர வைத்திருக்கிறார். தமன்னா-பிரபாஸ் காதல் காட்சியை ஓவியமாக காட்டுவதற்கு கேமிராமேன் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். போர்க்களக் காட்சியை எத்தனை கேமிராக்களை வைத்து எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை. எந்த இடத்திலும் இடறல் இல்லாமல் நீட்டாக இருக்கிறது.
இத்தனைக்கும் இன்னொரு பெரிய பலம் படத் தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ். படத்தில் தொய்வு என்பதே வராமல் அடுத்தடுத்த காட்சிகளின் கலவையை மிகச் சரியான விகித்த்தில் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார். ஒரு சினிமா எத்தனை பரபரப்பை நமக்குக் கொடுத்தாலும் அது எடிட்டிங் டேபிளில்தான்  செய்யப்படுகிறது என்பது உண்மை.
“இந்தப் படத்தின் போர்க்களக் காட்சிகளின் எடிட்டிங் பணிக்காக ஆறு மாதங்கள் உழைத்தேன்…” என்கிறார் எடிட்டர். 20 நிமிட காட்சிகளுக்கு 6 மாத உழைப்பு எனில் அது எப்படிப்பட்ட வேலையாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். சல்யூட் டூ எடிட்டர் ஸார்..!
படத்தின் பாடல்களுக்கான இசையமைப்பைவிடவும் பின்னணி இசைதான் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. படத்தின் இடைவேளை காட்சியின்போது இதனை உணரலாம்.  தமன்னா-பிரபாஸ் காதல் காட்சியின்போது அதிகம் நம் கவனத்தைத் திசை திருப்பாமல் மென்மையாக இசையமைத்து காட்சியை மட்டும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் மரகதமணி. போர்க்களக் காட்சிகளில் விளையாடியிருக்கிறார். ‘மகாதீரா’வில் உணர்ச்சி பொங்க வந்திருந்த அந்த கிளைமாக்ஸ் காட்சியின் இசை இதில் மிஸ்ஸிங் என்பது மட்டும் உண்மையோ உண்மை.
படம் பட்டென்று முடிந்தாற்போன்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியதே இப்படத்தின் வெற்றிக்கு உதாரணமாகச் சொல்லலாம். எப்போதும் ஒரு படத்தின் முடிவுதான் படம் பற்றிய  தன்மையை உணர்த்தும். இதில் படம் பாதியிலேயே முடிந்திருப்பதால் பார்வையாளர்களால் ஒரு கட்டுக்குள் தங்களது உணர்ச்சியைக் கொண்டு வர முடியவில்லை.
பாதி கதையோடு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அடுத்த வாரத்தில் வரும் அடுத்த பாகத்திற்காக காத்திருப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது இந்தப் படம். அதிலும் நல்ல மனுஷன்யா என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கட்டப்பாவை கொலைகாரராக்கியிருக்கும் கொடுஞ்செயலை சற்றும் நினைத்துகூட பார்க்க முடியவில்லை. இதனை இந்த பாகத்தில் சொல்லாமலேயே விட்டிருக்கலாம் என்பது பெருவாரியான ரசிகர்களின் ஏகோபித்த கருத்து.
இப்போது 40, 45 வயதினை தொடும் ரசிகர்களின் சின்ன வயது ஏக்கமாக இருக்கும் ‘அம்புலிமாமா’, ‘ரத்னபாலா’ கதைகளில் வரும் ஒரு கதையை இப்போது எடுத்துக் கொடுத்து அதனை விஷுவலாக காட்டி ஏங்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
இந்த முதல் பாகத்தை பொறுத்தமட்டில் கதையைவிடவும் மேக்கிங்கும், போர்க்களக் காட்சிகளும்தான் முக்கிய இடத்தைப் பிடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. இனி அடுத்த பாகத்திற்காக காத்திருப்போம். அது அடுத்த வருடம்தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதுவரையிலும் இந்தப் படம் காட்டியிருக்கும் புதிய தொழில் நுட்பத்தை தமிழ் சினிமா இயக்குநர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் அலசி, ஆராய்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிக அவசியமாகிறது. இதற்காக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு எத்தனை முறை சல்யூட் செய்தாலும் போதாது போலிருக்கிறது.
ராஜமெளலியின் எந்தப் படமும் தவறவிடக் கூடாத படம் என்பது தெலுங்கு திரையுலகின் நீதி. ‘நான் ஈ’ படத்தில் இருந்து அது தமிழ் ரசிகர்களுக்கும் பொருத்தமான நீதியாக இருக்கிறது.
குழந்தைகளுடன், குடும்பத்துடன் பார்த்தே ஆக வேண்டிய திரைப்படம் இது..! 
மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

பாபநாசம் - சினிமா விமர்சனம்

03-07-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மலையாளத்தில் 4.5 கோடியில் தயாரிக்கப்பட்டு 54 கோடியை வசூலித்த சூப்பர் ஹிட் படம். எந்த மொழியில் வேண்டுமானாலும் இந்தப் படத்தின் கதையை வைத்து படமெடுக்கலாம் என்பதற்கு உத்தரவாதம் தரக்கூடிய அளவுக்கான சிறப்பான கதை. இயக்கம் தெரிந்த இயக்குநர். சிறந்த கதையின் நாயகனாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் உன்னத கலைஞன் கமல்ஹாசனுக்கு பம்பர் பரிசாகக் கிடைத்துள்ளது இந்த படம்.

தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழும் ஒரு சராசரி தந்தை தனது மகள்களுக்காக ஒரு பக்கம் போராடுகிறார். இன்னொரு பக்கம் பணம், செல்வாக்கு இருந்தும் தனது ஒரே மகனை காணவில்லை என்கிற பதைபதைப்போடு போராடுகிறார் ஐ.ஜி. கீதா.
அதிகார வர்க்கம் தனது அனைத்துவிதமான சக்திகளையும் பயன்படுத்தும் என்பதை தான் பார்த்த சினிமாக்கள் மூலம் புரிந்து வைத்திருக்கும் 4-ம் வகுப்பு வரையிலுமே படித்த சுயம்புலிங்கம் என்கிற தந்தை அதனை எப்படியெல்லாம் தவிர்க்கிறார்.. ஏமாற்றுகிறார் என்பதும், தங்களை ஏமாற்றுகிறான் என்பது தெரிந்தும் ஒரு சிறிய ஆதாரம்கூட கிடைக்காமல் அல்லாடும் போலீஸும், அதிகார வர்க்கமும் இன்னொரு பக்கமாக திரைக்கதை சுவாரஸ்யமாக விரிகிறது.
3 மணி நேர படமென்றாலும் கடைசிவரையிலும் போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். மலையாள மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையில்லாதது என்றாலும் மூலத்தைவிடவும் 15 நிமிடக் காட்சிகளை கூடுதலாக வைத்து தமிழ் ரசிகர்களுக்கு சிச்சுவேஷனை இன்னும் கொஞ்சம் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்கு தமிழச் சினிமா குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும் புரிந்து வைத்திருப்பதற்கு அவருக்கு எமது பாராட்டுக்கள்.
கொஞ்சம் சிக்கனக்காரர். ஆனால் கருமியில்லை. ஒரு கூலியாளாக ஊருக்குள் வந்து இன்றைக்கு அந்த ஊருக்கே கேபிள் டிவி சர்வீஸ் செய்து தருபவர். 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். சொந்த வீடு இருக்கிறது. மனைவி, இரண்டு மகள்கள்.. அழகான குடும்பம்.
கடுமையாக உழைத்து முன்னேறியிருப்பதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்களை கண்டாலே கோபம். அநியாயங்களை எதிர்க்க நினைப்பவர். அதிகார பலத்தை வெறுப்பவர்.. இப்படிப்பட்டவருக்கு வாழ்நாள் முழுக்க ஓசியிலேயே ஹோட்டலில் சாப்பிடவும், அதிகாரத்தை வைத்து காசு சம்பாதிக்க நினைக்கும் கான்ஸ்டபிள் பெருமாள் எதிரியானதில் சந்தேகமில்லை. தன்னை நிறைய முறை இண்டர்கட் செய்து நோஸ்கட் செய்யும் சுயம்புலிங்கம் மீது வெறுப்புடன் இருக்கும் பெருமாள் “மவனே.. ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது உன்னை பார்த்துக்குறேன்…” என்று கருவுகிறார்.
அதுவரையில் செல்போன்கூட வைத்துக் கொள்ள விரும்பாத சுயம்புலிங்கத்தின் குடும்பத்திற்கு செல்போன் மூலமாகவே வில்லங்கம் வருகிறது. மூத்த மகளான செல்வி பள்ளியில் டூர் போன இடத்தில் போலீஸ் ஐ.ஜி. ஆஷா சரத்தின் மகனான ரோஷனின் கண்ணில் படுகிறாள். அவளது அழகு அவனை ஆட்கொள்கிறது. அவள் குளிக்கும்போது மறைந்திருந்து வீடியோ எடுக்கிறான் ரோஷன். அதைக் காட்டி மகளை அடைய நினைக்கிறான். கொட்டுகின்ற மழையின் இரவில் அந்த போராட்டம் நடக்க.. என்ன ஏதென்று யோசிப்பதற்குள் அவனது உயிர் பிரிகிறது.
காலையில் வந்து பார்க்கும் சுயம்புலிங்கம் குறுகிய நேரத்தில் சுய நினைவுக்கு வந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றும் அனைத்து வழிகளையும் தான் பார்த்த சினிமாக்களின் மூலம் கிடைத்த அறிவினால் கண்டறிகிறார். அதனைச் செயல்படுத்துகிறார்.
இன்னொரு பக்கம் தனது மகன் காணாமல் போனது பற்றி விசாரிக்கத் துவங்கும் ஐ.ஜி. கீதாவிடம் சுயம்புலிங்கம் அவளது மகனின் மாருதி காரை ஓட்டிச் சென்றதை தான் பார்த்த உண்மையைச் சொல்கிறார் கான்ஸ்டபிள் பெருமாள்.
இதற்குப் பின் சுயம்புலிங்கத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது விசாரணை.. மனிதர் அசராமல் போலீஸை கலங்கடிக்கிறார். இறுதியில் கண்டு பிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த சுவையான திரைக்கதையின் முடிவு..!
சுயம்புலிங்கமாகவே உருமாறியிருக்கிறார் கமல். அவருக்குப் பொருத்தமான கேரக்டர்தான். அந்த மீசை கெட்டப்பை மறந்துவிட்டால் பாபநாசத்தான் மாதிரியேதான் இருக்கிறார். கமலின் நடிப்பை பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் படத்தின் திரைக்கதையமைப்பின்படி அவரது ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் தந்தையின் அடையாளம் இருக்கிறது.
வயதாக, வயதாக மனிதர்களின் முகத்தில் மாற்றம் வரத்தான் செய்யும். கமலுக்கு நிறையவே வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய கண்ணின் பிரமாண்டம், ‘என்ன கண்ணுடே’ என்று சொல்ல வைக்கிறது. இத்தனையாண்டு கால கமல்ஹாசனின் பட அனுபவத்தில் மிக எளிமையான அறிமுகக் காட்சி இதுவாகவும் இருக்கலாம்..
ஸ்டேஷனுக்கு ஜாமீன் கையெழுத்து போட வந்த நிலையில் சினிமா பாடல் எந்தப் படத்தில் வந்தது.. எந்த ஆண்டு..? யார் இயக்குநர்..? என்றெல்லாம் சொல்லிவிட்டு அமைதியாகும் கமலின் முகத்தில் இருந்துதான் இத்தனை கதையும் விரிகிறது. எதுவும் நடக்காதது போல அமைதியான அதே முகத்தில்தான் மறுபடியும் படம் முடிவடைகிறது.. சிறப்பான திரைக்கதையாக்கம்.
கவுதமியிடம் கொஞ்சல், கெஞ்சல், வழிசல்.. என்று மகள்களிடம் பாசத்தைக் காட்டுவது.. பணம் என்றவுடன் யோசிப்பது.. “5000 ரூபாய்க்கு செலவு வைச்சீட்டீங்களே.,..?” என்று அங்கலாய்ப்பது.. தான் கருமி அல்ல. சிக்கனக்காரன் என்பதை அவ்வப்போது சில வசனங்களின் மூலம் காட்டுகிறார் கமல்.
பதைபதைக்கும் அந்தக் காட்சி நடந்த பின்புதான் கதையின் ஓட்டம் தீவிரமாகிறது. எதற்கும் பயப்படாமல், சனலப்படாமல் அனைத்து கில்லி வேலைகளையும் தானே செய்துவிட்டு போலீஸுக்கு எப்படியெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுக்கும் அந்த கிளாஸ்.. இத்தனையாண்டு கால நடிப்பில் ஒரு துளி. கொஞ்சமும் மிகையில்லை.
“எந்த சூழலிலும் உங்களை ஜெயிலுக்கு அனுப்ப நான் விடமாட்டேன்..” என்ற அவருடைய உறுதியான பேச்சு.. ரசிகர்களையே தாக்குகிறது.  கிளைமாக்ஸில் மலையாளத்தைவிடவும் அதீத உணர்ச்சிப்பெருக்கில் “நான் மிகப் பெரிய சுயநலக்காரன். எனக்கு என் குடும்பம் தவிர வேற எதுவும் முக்கியமில்லைன்னு நினைச்சு வாழ்ந்துட்டேன். வளர்ந்துட்டேன். அதுதான் இத்தனைக்கும் காரணமாயிருச்சு. ஆனா நீங்க அப்படியில்லை. தான் செய்த பாவங்களையெல்லாம் இந்த பாபநாச தீர்த்தம் நாசம் செய்யும்” என்று தன்னை குறை சொல்லி பேசுவதும், ஐ.ஜி.யும், அவரது மனைவியும் புரிந்து கொண்டு அவரைக் கடந்து செல்லும் காட்சியில் அப்போதே கை தட்ட வைக்கிறது.
ஆனந்தின் நீண்ட நெடிய வசனத்திற்கு தனது உடல் மொழி எதையும் காட்டிவிடாமல் இருந்துவிட்டு தன்னுடைய பேச்சில் வெடித்து அழும் நிலைக்கு வந்து தன்னை நிறுத்திக் கொண்டு பதிலளித்து தனது பாவத்தைத் தீர்க்கும் கமலின் நடிப்பையெல்லாம் எந்த விமர்சனத்தாலும் சொல்லிவிட முடியாது.. சல்யூட் டூ யூ ஸார்..!
கவுதமியின் முதிர்ச்சியடைந்த முகம் பல நேரங்களில் நம்மை கவராமல் இருக்க.. அதேபோல் அவருக்குக் குரல் கொடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணனின் ஹிஸ்கி வாய்ஸ் வசன உச்சரிப்பும்தான் நம்மை அநியாயத்திற்கு சோதிக்கின்றன. மீனாவே நடித்திருந்தால் ‘டபுள் ஓகே’ என்று சொல்லியிருக்கலாம்.
கமலுக்கு பின்பு எனில் அது நிச்சயம் ஐ.ஜி.யாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்புதான்.  மிகையில்லாத போலித்தனமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.. அதே சமயம் பட், பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் அவர் பேசும் அரை வசனங்களால் படத்தின் டெம்போ கூடிக் கொண்டே செல்கிறது..
ஆகஸ்ட் 2-ம் தேதியையே எல்லாரும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்க.. ஒருவர் ஆரம்பித்தவுடன் ,கெட் அவுட், என்று அவர் கத்தியதில் சோகத்திற்கு பதில் கைதட்டல்கள் பறக்கின்றன. தனது ஒரே மகனை இழந்த தவிப்பில் அவர் நிற்க.. தனது குடும்பத்தை இழக்கக் கூடாது என்கிற தவிப்பில் கமல் நிற்க..  இந்த ஆடுபுலி ஆட்டத்தில் கமலுக்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார்.
கிளைமாக்ஸில் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் எந்த தோரணையும் இல்லாமல் சாதாரண அம்மாவாக தனது மகனின் கதியை அறிய விரும்பி காத்திருந்து பேசுவதிலும் மின்னுகிறார்.  இவருடைய நடிப்புத் திறனை பார்த்து கமலே ஆச்சரியப்பட்டு ‘தூங்காவனம்’ படத்தில் டாக்டர் வேடத்தை கொடுத்திருக்கிறாராம். வெல்டன் மேடம்..
நிவேதா தாமஸின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. அழகும், நடிப்பும் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. இவரது தங்கையான எஸ்தர் அனில், கமலிடம் சென்று ‘தப்பா சொல்லிட்டனப்பா..?’ என்று சொல்லி கேட்கும் நடிப்பில் நம்மையும் கொஞ்சம் கண் கலங்க வைத்திருக்கிறார்.
இதில் இருக்கும் அனைத்து நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை. பெருமாளாக நடித்திருக்கும் கலாபாவன் மணியின் நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கமல் குடும்பத்தினரை அடித்து. உதைத்து இம்சித்து விஷயத்தை வரவழைக்க செய்யும் முயற்சியில் பயங்கரமாக இருப்பது, பின்னணி இசையைவிடவும் கலாபாவன் மணியின் வில்லன் முகம்தான். 
ஆஷா சரத்தின் கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன், கமலின் கேபிள் டிவி அலுவலகத்தில் வேலை செய்யும் ஸ்ரீராம், மாமனார் டெல்லி கணேஷ், மாமியார் சாந்தி வில்லியம்ஸ், மச்சின்ன் அபிஷேக், சார்லி, வையாபுரி, நெல்லை சிவா, வில்லனான ரோஷன் என்று நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து இந்தப் படத்தை நகர்த்தியிருக்கிறது. அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்..!
மலையாளத்தில் ஒளிப்பதிவு செய்த அதே சுஜித் வாசுதேவ்தான் இதனையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பாபநாசம்’ என்றவுடன் நெல்லை மாவட்டத்தின் கண் கவர் காட்சிகளை கவர் செய்திருப்பார்கள் என்று நினைத்தோம். கொஞ்சம்தான் இருக்கிறது. ‘திரிஷ்யம்’ படத்தில் வரும் அதே வீட்டிலேயே படத்தை எடுத்தார்களோ என்னவோ? அதுவும், இதுவும் ஒன்றாகவே தெரிகிறது.
எடிட்டர் அயூப்கானின் எடிட்டிங் படத்திற்கு மிகப் பெரிய பலம். பல காட்சிகள் அடுத்தடுத்து வேக வேகமாக நகர்ந்தாலும் அதில் இம்மிளயவும் சலிப்பில்லாமல் தொகுத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் தைரியமாக வசனத்தை ‘தின்னவேலி’ பாஷையில் கொடுத்து அசர வைக்கிறார் இயக்குநர். இதே பாஷையில் எடுக்கப்பட்ட ‘கடல்’ படம் இந்த ஒரு காரணத்திற்காகவே.. வசனங்கள் புரியாததாலேயே ரசிகர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. தெரிந்திருந்தும் படக் குழுவினர் மிகத் தைரியமாக இதனை தொட்டிருக்கிறார்கள் என்றால் மிகவும் தைரியந்தான்.
அண்ணன் ஜெயமோகனின் எளிமையான வசனங்கள்.. நண்பர் சுகாவின் வசன உச்சரிப்பு உதவி.. இதுவும் படத்திற்குக் கிடைத்த பலங்களில் ஒன்றுதான்.. நல்ல வேளையாக பிள்ளைகள் பேசும் வசனங்களை எளிமைப்படுத்தியிருப்பதன் மூலம் குழப்பம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை கேட்கும்படி இருந்தது. பாடல்களெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல மாமாங்களாகிவிட்டதால் அதனை விட்டுவிடுவோம்.. ஆனால் பாடல் காட்சிகளை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.  துணிக்கடையில் கவுதமி தனது பெண்களுடன் புதிய உடையில் நடந்து வரும் காட்சியில் கமல் காட்டும் எக்ஸ்பிரஷன்.. ‘வாவ்’ என்று சொல்ல வைக்கிறது..
இது போன்ற குடும்பச் சூழல்களை முதலில் காட்டவிட்டு பின்பு அக்குடும்பத்திற்கு ஏற்படும் கெடுதல்களை காட்டினால் மக்கள் நெகிழ்வார்கள் என்பது உலக சினிமா இயக்குநர்களின் அரிச்சுவடி பாடம். இதனை இப்படத்தில் இயக்குநர் ஜீத்து ஜோஸப் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்.
இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் பண்பட்ட இயக்கத்தை பாரட்ட வார்த்தைகளே இல்லை. அத்தனை அற்புதமான இயக்கம். ஒரு சிறிய விஷய்த்தைக்கூட மிஸ் செய்துவிடாமல் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டும் வகையில் காட்சிகளை அடுத்தடுத்து வைத்திருக்கிறார். திரைக்கதையும், இயக்கமும் ஒரு சேர ரசிகர்களை கை தட்ட வைத்திருக்கின்றன.
படத்தில் லாஜிக் எல்லை மீறல்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலையாளத்தில் மக்கள் அதனை மிக இயல்பானதாகவே எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். தமிழில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கின்ற அட்டூழியங்களெல்லாம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிவாகியிருப்பதால் இதில் வரும் முதற்கட்ட போலீஸ் விசாரணையெல்லாம் நமக்கு ஜூஜூபியாக தெரிகிறது.
எஃப்.ஐ.ஆரே போடாமல் விசாரிப்பது. தென் மண்டல ஐ.ஜி. என்பதால் அவரே நேரடியாக இறங்கி விசாரிப்பது. தனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றாலும் ஆதாரம் இல்லாமல் கை வைக்க முடியாது என்று இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஐ.ஜி.யிடமே சொல்வது. கவுதமி அவசரப்பட்டு தேதியை சொல்லி அருள்தாஸிடம் மாட்டிக் கொள்ள.. ஸ்கூல்ல இருந்து போன் வந்திருக்கு என்று கமல் சொல்லி சமாளிப்பது.. இத்தனை டிவிக்கள் இருந்தும் அதில் இது சம்பந்தமான காட்சிகள் வராதது.. மீடியாவை பயன்படுத்தியிருந்தாலே இதில் பாதி காட்சிகள் தேவையில்லாமல் போயிருக்கும்..
கமல் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் விடப்பட்டிருக்கும் நிலைமையை சற்று அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். மேலும், சன் டிவி செய்திகளில் ‘சுயம்புலிங்கம்தான் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது’ என்றெல்லாம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்.
இந்த அளவுக்கு திரைக்கதையின் சிறு பகுதிகள் இடறல்களாக இருந்தாலும் இந்தத் தவறுகள் வெளியில் தெரியாதவண்ணம் கதாபாத்திரங்களின் நடிப்பு நம்மை கவர்ந்திழுக்கிறது.
படத்திற்கு மிகப் பெரிய பலமாக  அமைந்திருக்கிறது நடிகர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்.  கமல்ஹாசனின் குடும்பத்தையே ஹை கிளாஸ் சொஸைட்டியாக மாற்றியிருந்தால்  வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மிடில் கிளாஸ்.. அதற்கும் கீழே உள்ளவர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து எப்படியெல்லாம் போராடுகிறார்கள். போராட வேண்டும் என்கிற ஒரு விஷயத்தை இந்தப் படம் சொல்வதுதான் படத்தின் மிகப் பெரிய பலம். இதனால்தான் தியேட்டர்களிலும் ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகிறார்கள்.
அதேபோல் ஆஷா சரத்தின் மீதான அனுதாபமும் கிடைக்காமல் இல்லை. கவுதமி சொல்வதுபோல “அவங்களும் ஒரு அம்மாதானே..? ஒரே பையனை இழந்துட்டாங்க.. அவங்க பாவமில்லையா..?” என்பதற்கு “ஒருவேளை.. நம்ம பொண்ணு செத்து அந்தப் பையன் தப்பிச்சிருந்தான்னா அவங்க உன்னை மாதிரி நினைப்பாங்கன்னு நினைச்சியா..?” என்று கமல் கேட்கும் கேள்வியில் இருப்பதுதான் அதிகாரம் படைத்தவர்களுக்கும், அதிகாரம் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்..!
தொழில் நுட்பம் வளர, வளர அதன் இன்னொரு பக்க விளைவாக இது போன்ற குற்றங்களும் பெருகிக் கொண்டேதான் வருகின்றன. இதனை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் இதனை தடுக்க முடியும். தவிர்க்க முடியும்.
குடும்பமே முக்கியம் என்று வாழும் இந்தியச் சமூகத்தில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வரும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.  அவர்களது பிள்ளைகளுக்கும் இதுவொரு முன்னெச்சரிக்கையாகவும் இருக்கும்.
அதே சமயம் ஆஷா சரத் போன்ற தாய்களும் சுயநலம் சார்ந்தில்லாமல் யோசித்துப் பார்த்து தங்களது மகனின் தவறை ஒப்புக் கொண்டு அவர்களைத் திருத்த முயன்றாலே அது, இந்தப் படத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும்.
கமலுக்கு மட்டுமல்ல தமிழ்ச் சினிமாவுக்கும் இதுவாரு முக்கியமான படம்தான்..!
குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!  மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!