தமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..?!

25-03-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டிஜிட்டல் நிறுவனத்தினரின் திரையிடல் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. போராட்டம் துவங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
தற்போது நடைபெறும் போராட்டத்தினால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போல தியேட்டர்காரர்கள் தங்களது தியேட்டர்களை திறந்து வைத்து பழைய தமிழ்ப் படங்களையும், ஆங்கில படங்களையும், ஹிந்தி படங்களையும் வெளியிட்டு ஈயோட்டி வருகிறார்கள்.
தமிழக அரசோ இப்படியொரு பிரச்சினை இருப்பதே இதுவரையிலும் எங்களது கவனத்திற்கு வரவில்லை என்பது போலவே கண்டும் காணாமல் இருக்கிறது. இன்னொரு பக்கம் அவ்வப்போது சமரச பேச்சுவார்த்தை என்கிற தகவல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டாய வேலை இழப்பினால் அன்றாடங் காய்ச்சிகளான சினிமா தொழிலாளர்கள் மட்டும் வயிற்றில் ஈரத் துணியோடு வீட்டில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து வரப் போகும் பள்ளியாண்டுக்காக குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த மாத வீட்டு வாடகை கொடுக்க வேண்டும்.. திடீரென்று முளைக்கும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்று மும்முனை போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
இன்னொரு பக்கம், “தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை. இதனால் வெளியாகும் 99 சதவிகித படங்கள் தோல்வியடைகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..” என்று பல சினிமா மேடைகளில் தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் புலம்பித் தள்ளுகின்றனர்.
முதலில் ஒரு விஷயத்தை திரைத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா பார்ப்பதென்பது தமிழக மக்களுக்கு இருக்கும் பொழுது போக்குகளில் ஒன்றுதான்.. அதுவே அவர்களது வாழ்க்கையில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறை இப்போதில்லை. மக்களுக்கு பிரச்சினைகள் கூடிக் கொண்டே செல்கின்றன. பொழுது விடிந்து, பொழுது போனால்… ஏதாவது ஒரு பிரச்சினை வந்து அவர்களுடைய வாழ்க்கையை திசை திருப்பிக் கொண்டேயிருக்கிறது.
ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், குடும்பங்களின் பிரிவால் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருக்கின்ற எல்லா பிரச்சினைகளையும் ஒரு குடும்பத் தலைவரோ, ஒரு தலைவியோ அல்லது ஒரு மகனோ, அல்லது ஒரு மகளோதான் சமாளித்தாக வேண்டும்.
இந்த சமாளிப்பில் அவர்களது பெரிய பிரச்சினையே பணம் சம்பாதிப்பதுதான். பணத்தை சம்பாதிக்கவே அவர்கள் அல்லலோகப்பட்டுக் கொண்டிருக்கும்போது வாரத்துக்கு 5 படங்களை வெளியிட்டுவிட்டு “அனைத்து படங்களையும் மக்கள் பார்த்தே தீர வேண்டும்…” என்று எதிர்பார்ப்பது நியாயமா..?
அப்படியே வந்தாலும் அவர்களால் அனைத்து படங்களையும் பார்க்க முடியுமா..? பார்க்கும் அளவுக்கு யார் இங்கே ஓய்வில் இருக்கிறார்கள்..? 
காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். ஒரேயொரு நாள்தான் விடுமுறை. அந்த தினத்தில் அவர்களது குடும்பப் பிரச்சினைகளைப் பார்ப்பார்களா அல்லது சினிமா தியேட்டர்களை நோக்கி ஓடி வருவார்களா..?
அப்படியே ஓடி வந்தாலும் அவர்களை அரவணைக்கும்விதமாகவா சினிமா தியேட்டர் கட்டணங்கள் இருக்கின்றன…? இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு சினிமா பார்ப்பதற்கே டிக்கெட் கட்டணம் மற்றும் நொறுக்குத் தீனி கட்டணங்களெல்லாம் சேர்த்து 1000 ரூபாய் தேவைப்படுகிறது.
இதில் ஒரு வாரத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்த்து முடிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்தில் 5 படங்களுக்கென்று வைத்துக் கொண்டால் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் தேவைப்படுகிறது. இதுவே மாதத்திற்கு என்றால் 20000 ரூபாய் தேவை.
மாதம் 20000 ரூபாயை சினிமாவுக்கே செலவழிக்க வேண்டும் என்றால் அந்தக் குடும்பம் ஒன்று, கவலையே இல்லாத பணக்கார குடும்பமாக இருக்க வேண்டும். அல்லது சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்ட குடும்பமாக இருத்தல் வேண்டும். நடைமுறையில் இது சாத்தியம்தானா..?
வாரத்துக்கு ஒரு படம் அல்லது நல்ல படம் என்று சொல்லப்படும் சினிமாவிற்கு மட்டுமே செல்வது என்கிற கொள்கையை தமிழக மக்கள் எடுத்து வெகு நாட்களாகிவிட்டது. இது சினிமாக்காரர்களுக்கு ஏன் இன்னமும் புரியவில்லை..?
சென்ற ஆண்டு வெளியான ‘பாகுபலி-2’ படத்தை தமிழகத்தில் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்தார்கள் என்றால் அந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால்தான் அதுவரையிலும் சேமித்து வைத்திருந்த பணத்தை, இந்த ஒரு படத்துக்காகவே செலவழித்திருக்கிறார்கள் பெரும்பாலான குடும்பத்தினர்.
மேலும், ‘மாதத்திற்கு ஒரு முறைதான் சினிமாவுக்குச் செல்ல வேண்டும்’ என்ற கொள்கையில் இருக்கும் பல குடும்பத்தினரும், சில நல்ல படங்களை மட்டுமே கேள்விப்பட்டு.. ‘அறம்’, ‘அருவி’ போன்ற படங்களை தியேட்டருக்கு வந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.
இந்த மாதிரியான நல்ல படங்கள் தொடர்ச்சியாக வராதது மக்களின் குற்றமல்ல.. தமிழ்ச் சினிமா துறையினரின் குற்றம். ஆக.. இதில் பொது மக்களை குற்றம், குறை சொல்லி என்ன புண்ணியம்..?

தற்போது தமிழகத்தில் ஆதார் கார்டு பிரச்சினையே இன்னமும் முடியவில்லை. பல குடும்பங்களை ஆதார் அலைக்கழித்து வருகிறது. இது போன்று தினம்தினம் ஏதாவது ஒரு புதிய பிரச்சினை அரசுகளால் மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது.
இந்த மூச்சுமுட்டும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க நினைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இப்போதைய தேவையே பைசா காசு செலவழில்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸாக இருத்தல் வேண்டும் என்பதே.
இப்போது சென்னையில் மெரீனா கடற்கரையில் கூட்டம் கூடுகிறது. தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணமே ஆயிரக்கணக்கில் எகிறுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள்தான். முதலில் இதை புரிந்து கொள்ளாமல் “நான் படம் எடுத்திட்டேன். ரிலீஸ் பண்ணிட்டேன். பொதுமக்கள் அவசியம் வந்து பார்த்தே தீர வேண்டும்…” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா..?
பணத்தைச் சேமிப்பது என்பதும் இப்போதைக்கு நடுத்தர குடும்பங்களின் லட்சியமாக உள்ளது. இதனால் சினிமாவுக்கு போவதை குறைத்துக் கொண்டே போகிறார்கள் பொதுமக்கள். இதையும் தமிழ்ச் சினிமா துறையினர் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனால்தான் தங்களுக்குக் கிடைக்கும் மிக எளிதான வழிகளில் சினிமாக்களை பார்க்கிறார்கள் பொதுமக்கள். திருட்டு டிவிடிக்களின் ஆதிக்கம் அதிகமானதற்கு அடிப்படையான முதல் காரணமே சினிமா தியேட்டர் கட்டணங்கள்தான். இந்தக் கட்டணங்களை குறைக்காமல் “திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்…” என்று சொல்வதற்கு, திரைத்துறையினருக்கு உரிமையே இல்லை.
தியேட்டர்காரர்கள் டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்களின் கட்டணம் என்று எல்லாவற்றிலும் கொள்ளையடித்துவிட்டு “தியேட்டருக்கு ஆட்கள் வரவில்லையே… நாங்கள் என்ன செய்ய…?” என்கிறார்கள்.
தியேட்டர் உரி்மையாளர்கள் ஏற்கெனவே பெரும் லட்சாதிபதிகள்.. கோடீஸ்வரர்கள். அவர்கள் மேலும், மேலும் பணம் சம்பாதிக்கத்தான் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தில்தான் தியேட்டர் தொழிலையே நடத்துகிறார்கள். மக்களின் பொழுது போக்கில் நாம் பங்கு பெறுவோம் என்கிற எண்ணமே தியேட்டர்காரர்களுக்கு இல்லை. முகமூடி போடாத கொள்ளைக்காரர்களாக இவர்கள் இருக்க.. இவர்களிடமிருந்து பங்கு பெற்று சாப்பிடும் இன்னொரு கொள்ளைக் கூட்டமாக விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

இப்போதுகூட வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் “புரொஜெக்சனுக்கான கட்டணத்தை நாங்கள் கொடுக்க மாட்டோம். தியேட்டர் உரிமையாளர்கள்தான் கொடுக்க வேண்டும்..” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய.. “பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் தியேட்டர் கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள், தின்பண்டங்களின் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்…” என்ற பொதுமக்களின் பிரச்சினைக்காக போராடவில்லை.  பின்பு எப்படி பொதுமக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பார்கள்..?
பொதுமக்களைப் பொறுத்தவரையில் இப்போது நடக்கும் போராட்டம் நடந்தாலும் ஒன்றுதான். நடக்காமல் இருந்தாலும் ஒன்றுதான். சுருக்கமாக சொல்லப் போனால் சினிமா தியேட்டர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான் என்கிற எண்ணத்திற்கு மக்கள் ஏற்கெனவே வந்துவிட்டார்கள்.
இப்போதுவரையிலும் தியேட்டர்களை நோக்கி கொஞ்சமே வந்து கொண்டிருந்த கூட்டம், இந்த ஸ்டிரைக் முடிந்த பிறகு அப்படியே அள்ளிக் கொண்டு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தியேட்டர்கள் மூடப்பட்ட காலத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை நினைத்துப் பார்த்து “இதையே இனிமேலும் ஃபாலோ செய்யலாமே…” என்று பொதுமக்கள் நினைத்துவிட்டால் தொலைந்தது.. தமிழ் சினிமா துறை அதோ கதியாக வேண்டியதுதான்..!
இப்போதைக்கு பெரிய ஹீரோக்கள், ரசிகர்கள் பட்டாளம் உள்ள ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே அவர்களது ரசிக மணிகள் முதல் நாள் முதல் ஷோவுக்கே வந்து குவிகிறார்கள். படம் நன்றாக இருந்தால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் வருகிறார்கள். இல்லாவிடில் அந்த ஹீரோவின் ரசிகர்கள் கொடுத்த கட்டணத்தோடு அந்தப் படம் பேக்கப்பாக வேண்டியதுதான்.
இதுவே சின்ன பட்ஜெட் என்றால் படம் நன்றாக இருந்து, பரவலாக விளம்பரம் செய்யப்பட்டு, அதிக தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தால் படத்திற்கு கூட்டம் விரைந்து ஓடி வரும். இல்லாவிடில் தியேட்டரைவிட்டு படம் சீக்கிரமாக ஓடிவிடும். இதுதான் தொடர் கதையாய் நடந்து வருகிறது.
இத்தனை தூரம் சினிமாக்காரர்கள் பொதுமக்களிடம், “தியேட்டருக்கு வாங்க.. படம் பார்த்து எங்களைக் காப்பாத்துங்க..” என்று கூவி வருகிறார்களே.. இதனை முதலில் தங்களது குடும்பத்தினரிடமே திரைத்துறையினர் கேட்கலாமே..!?
வேறு மாதிரி யோசித்துப் பார்ப்போமா..?

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துடன் இணைந்து 23 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கினால் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் சென்னையில் உள்ளனர். குடும்பத்திற்கு 4 பேர் என்று கணக்கிட்டால்கூட மொத்தமாக 1,20,000 திரைத்துறை சார்ந்த குடும்பத்தினர் சென்னையில் இருக்கிறார்கள்.
சென்னையில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களையும் இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேரும், வாராவாரம் பார்த்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒருவருக்கு சராசரியான நுழைவுக் கட்டணம் 75 என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். 1,20,000 X 75 = 90,00,000. 90 லட்சம் ரூபாய் வருகிறது. இது ஒரு திரைப்படத்திற்கு. வாரந்தோறும் 5 திரைப்படங்களாவது வெளியாகின்றன. இதன்படி பார்த்தால் 90 லட்சம் X 5 = 4 கோடியே 50 லட்சம் ரூபாய் திரைத்துறையைச் சேர்ந்த மக்களால் ஒரு வாரத்திற்கு தமிழ்ச் சினிமாத் துறைக்கு கிடைக்கும்.
பெப்சி அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் சென்னையில் வெளியாகும் அனைத்து படங்களையும் தங்களது குடும்பத்தினருடன் சென்று பார்க்க வேண்டும். மாதாமாதம் அவர்கள் பார்த்த படங்கள் ஓடிய தியேட்டர் டிக்கெட்டுக்களை அனைவரும் அவரவர் சங்கங்களிடம் ஒப்படைத்தல் வேண்டும். இதை செய்யாமல் போனால் அந்த ஊழியர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்று நிபந்தனை விதித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி பாருங்கள்.
இதனை செய்தால் ஒவ்வொரு படத்திற்கும் சென்னையில் மட்டும் தோராயமாக 90 லட்சம் ரூபாய் சினிமா துறை சார்ந்த குடும்பங்கள் மூலமாகவே கிடைக்கும். இது சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிகப் பெரிய தொகையாச்சே..? அவர்கள் மூச்சு விடுவதற்கு பேருதவியாக இருக்குமே..!?
அதிலும் பெப்சியில் அங்கம் வகிக்கவில்லையென்றாலும் தமிழ்ச் சினிமா துறையின் தலை போலிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களது சக உறுப்பினர்களின் படங்களை அவர்களே பார்க்கவில்லையென்றால் எப்படி..?
தமிழ்த் திரையுலகத்தினர் இதனை ஏன் செய்து பார்க்கக் கூடாது..? பொது மக்களிடம் போய் “சினிமா பார்க்க வாங்க.. வாங்க…” என்று கூப்பாடு போடுவதற்கு முன்பாக, இதைச் செய்து காண்பித்தால், தமிழ்த் திரையுலகம் கொஞ்சமேனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளலாம்.
தமிழ்ச் சினிமா துறையை சினிமாவிற்குள் இருக்கும், சினிமாவால் வாழும் குடும்பத்தினர்களே காப்பாற்றவில்லையென்றால் வேறு யார் காப்பாற்றுவார்கள்..?

ஒச்சாயி - சினிமா விமர்சனம்

25-03-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் போரடிக்குதே என்றிருந்த நேரத்தில் ‘ஒச்சாயி’ என்றொரு படம் ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் வெளியாகிறது என்று கேள்விப்பட்டோம்.
நாம் பார்க்காத படம் போல தெரிகிறதே என்றெண்ணி இந்தப் படம் பற்றி கூகிளாண்டவர் துணையுடன் விசாரித்தபோது இத்திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியானது என்றும், அப்போது தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காதது மற்றும் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளினால் அதிகமாக வெளியில் தெரியாமலேயே போய்விட்டது என்பதை அறிந்தோம்.
அதோடு கூடவே நமது ‘உண்மைத்தமிழன்’ வலைத்தளத்தில்கூட இந்தப் படத்தைப் பார்க்கப் போய் முடியாமல், வேறு படத்தைப் பார்த்த கதையும் பதிவாகியிருந்தது.
அதனால் இதுவரையிலும் பார்க்காத இந்தப் படத்தை இந்த முறை பார்த்தே தீர வேண்டும் என்று நினைத்துதான், நேற்றைக்கு நண்பகல் 12 மணி காட்சிக்கு ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் ஆஜரானோம்.
தியேட்டரில் 50 பேர் அளவுக்குக் கூட்டம் இருந்தது.. பரவாயில்லையே என்று சந்தோஷப்பட்ட வைத்தது.
இனி ‘ஒச்சாயி’ படத்தின் விமர்சனம்.

‘ஆச்சி கிழவி திரைக்கூடம்’ சார்பில் தயாரிப்பாளர் திரவிய பாண்டியன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘அம்மா-அப்பா பிலிம்ஸ்’ சார்பில் விநியோகஸ்தர் எம்.சி.சேகர் இந்தப் படத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் தயா, தாமரை என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும், ராஜேஷ், ஒ.முருகன், கஞ்சா கருப்பு, சந்தானபாரதி, திரவிய பாண்டியன், ஷகிலா ஆகியோரும் நடித்துளனர்.
ஜீ‌வரா‌ஜா‌ இசை‌யமை‌க்‌க, சி‌னே‌கன்‌ பா‌டல்‌களை‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. சி‌வசங்‌கர்‌. வா‌மன்‌ மா‌லி‌னி‌, ரவி‌தே‌வ்‌ ஆகி‌யோ‌ர்‌ நடன கா‌ட்‌சி‌களை‌ அமை‌த்‌துள்‌ளனர்‌. சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களை‌ ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌ அமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ பிரே‌ம்‌ சங்‌கர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. ஜி‌.சசி‌க்‌குமா‌ர்‌ படத் தொகுப்பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர். நி‌ர்‌வா‌கத்‌ தயா‌ரி‌ப்‌பு‌ –ஒமுரு, மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌- ஜி‌.பா‌லன்‌, எழுதி, இயக்கியவர் ஒ.ஆசைத்தம்பி. 
படத்தின் தலைப்பான ‘ஒச்சாயி’ என்பது ஒச்சாண்டம்மன் என்கிற தெய்வத்தின் பெயர். ஒச்சாயி என்பது மதுரை மாவட்டம் ‘பாப்பாபட்டி’, ‘கருமாத்தூர்’, ‘தும்மக்குண்டு’ போன்ற ஊர்களை பூர்வீகமாகக் கொண்ட பிறமலைக் கள்ளர் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயர். முக்குலத்தோரின் மூத்த கடவுள்.
இந்த ‘ஒச்சாயி’ தற்போதைய துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் குல தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து, பருவ வயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரிய வைத்து, மறைந்த நொச்சியம்மாதான் காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழி‌படும்‌ தெய்வமாக மாறியிருக்கிறது என்கிறது கர்ண பரம்பரைக் கதை.
அந்தச் சமுதாயத்தில் குடும்பத்தின் தலை பிள்ளையாக ஆண் குழந்தை பிறந்தால் ‘ஒச்சாத் தேவன்’, ‘ஒச்சப்பன்’ என்றும், பெண் குழந்தை பிறந்தால் ‘ஒச்சம்மா’, ‘ஒச்சாயி’ என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அப்‌படி‌ பெ‌யருடன் வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த‌ ‘ஒச்‌சா‌யி’ திரைப்படம்‌.
‘மொக்கச்சாமி’ என்னும் தயா தனது குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருடனாகிறான். அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று அடியாள் வேலைக்கு ஆளாகி முற்றிலும் சமூக விரோதியாகிக் கிடக்கிறான். இப்போது அதே ஊரில் இருக்கும் வசதியான ஆனால் பாசமான திரவிய பாண்டியனிடம் வேலை செய்து வருகிறான்.
இவனது தந்தை ராஜேஷ். ராஜேஷின் முதல் மனைவிக்கு பிறந்தவன் தயா. தயா சிறிய வயதில் இருக்கும்போதே மனைவியை இழந்துவிடுகிறார் ராஜேஷ். தனது பையனை பார்த்துக் கொள்ளவே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் ராஜேஷ்.
ஆனால் அந்தப் பெண்ணோ தனக்கென ஒரு  காதலனை  வைத்துக் கொள்கிறார். ஊர் முழுக்க செய்தி பரவி இது ஒரு நாள் ராஜேஷுக்கும் தெரிய வருகிறது. கோபத்தில் வீட்டுக்கு வந்தவர் சல்லாபத்தில் இருந்த மனைவியையும், அவளது கள்ளக் காதலனையும் அரிவாளால் வெட்டி கொலை செய்கிறார்.
ராஜேஷ் இந்த வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்க.. அப்போது 13 வயது சிறுவனாக இருக்கும் தயா, பள்ளிக் கூடத்துக்குப் போக முடியாமலும், கவனிக்கவே ஆளில்லாமல் கெட்டுப் போகிறான். அவனது மனதில் பெண்கள் மீதான பார்வை மிக மோசமானதாக இருக்கிறது. பெண்கள் அனைவருமே கெட்டவர்கள். கணவனுக்குத் துரோகம் செய்பவர்கள். கள்ளக் காதலனை தேடுபவர்கள்.  இவர்களால் குடும்பமே சிதறிவிடும் என்பதுதான் தயாவின் எண்ணவோட்டம்.
தயாவின் சொந்த அத்தை மகளான ஒச்சாயி சின்ன வயதில் இருந்தே தயாவின் மிக நெருங்கிய நண்பி. தோழி. குடும்பம் சிதறு தேங்காயாக மாறுவதற்கு முன்புவரையிலும் இருவரும் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வந்தவர்கள். இப்போது தயாவின் வாழ்க்கை மாறிப் போய்விட.. இன்னொரு பக்கம் ஒச்சாயி இன்னமும் தயாவை எண்ணியே இருக்கிறாள்.
ஊரில் மிகப் பெரிய கையான சந்தான பாரதியின் தம்பியையும், அவரது சின்ன வீடாக இருந்த பெண்ணையும் ஒரு பகல் பொழுதில் வெட்டிச் சாய்க்கிறான் தயா. இது சந்தான பாரதியை கோபமாக்க.. திரவிய பாண்டியனிடம் மாமூல் வாங்கிப் பழகியிருந்தாலும் வேறு வழியில்லாமல் தயாவை தேடிப் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார் இன்ஸ்பெக்டர்.
இது தயாவின் காட் பாதரான திரவிய பாண்டியனுக்கும், சந்தான பாரதிக்கும் இடையே மோதலை உருவாக்கிறது. இந்த நேரத்தில்தான் ராஜேஷ் தனது தண்டனை காலம் முடிந்து வெளியில் வருகிறார். மீண்டும் தனது ஊருக்கே திரும்பி வீட்டுக்கு வந்தவரை தயா, மனம் போன போக்கில் பேசுகிறான்.
தன் மகன் தன்னை அப்பா என்கிற மரியாதைகூட கொடுக்காமல் பேசுவதை ராஜேஷால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் தயா இல்லை என்பதால் அவரால் எதுவும் சொல்ல முடியாத நிலை.
இந்த நேரத்தில் ஒச்சாயியின் அம்மா இறந்துபோக, ராஜேஷ் தனது தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டு அனாதையாக இருக்கும் ஒச்சாயியை தன் வீிட்டிற்கே அழைத்து வருகிறார். தன் வீட்டில் எந்தப் பெண்ணையும் தங்க அனுமதிக்க மாட்டேன் என்று கத்துகிறான் தயா. அன்பாகவும், பாசமாகவும் பேசி தயாவை சமாதானப்படுத்தி ஒச்சாயியை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் ராஜேஷ்.
எப்படியாவது தயாவுக்கு ஒச்சாயியை திருமணம் செய்துவைத்துவிட்டு அவனை நல்வழிப்படுத்த நினைக்கிறார் ராஜேஷ். இதற்கு தயா ஒத்துக் கொள்ளாமல் இருக்க.. ஒச்சாயி தயாவின் நினைப்பிலேயே இருக்கிறாள்.
இடையில் தனது தம்பியின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க சந்தானபாரதி துடியாய் துடிக்கிறார். தனியாய் மாட்டும் தயாவை அரிவாளால் வெட்டித் தள்ளுகிறார்கள் அடியாட்கள். ஆனாலும் தப்பித்துக் கொள்கிறார் தயா. அவனை அனுசரனையாய் பார்த்துக் கவனித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார் ராஜேஷ்.
இப்போதும் தனது பெண்கள் பற்றிய பார்வையை மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் தயாவை பொங்கியெழுந்த ஒரு தருணத்தில், ஒச்சாயி வார்த்தைகளாலேயே பாடம் கற்றுக் கொடுக்க தயாவின் மனம் மாறுகிறது. ஒச்சாயியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான் தயா.
இந்த நேரத்தில்தான் திடீரென்று சந்தான பாரதியின் மரணம் நிகழ்கிறது. அவரை கொலை செய்தது யார் என்று போலீஸ் விசாரிக்கிறது. ஒரு சதியின் காரணத்தால் திரவிய பாண்டியனும், தயாவும்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது.
நாளைய தினம் திருமணம் என்றிருக்கும் நிலையில் இன்றைக்கு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாய் போலீஸிடமிருந்து தப்பியோடுகிறான் தயா.
முடிவு என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.
‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதை 1001-வது முறையாகச் சொல்லியிருக்கும் சினிமா கதைதான் இது.  
இருந்தாலும், பெ‌ற்றவர்கள் என்‌ன பா‌வம்‌ செ‌ய்‌தா‌லும்‌ அது பி‌ள்‌ளை‌களின் வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படியெல்லாம்‌ பா‌தி‌க்‌கும்‌ என்‌பதை இந்தப் படம்‌ உணர்‌த்‌துகிறது. இன்‌றை‌ய இளை‌ஞர்‌கள்கூட நா‌ளை‌ய பெ‌ற்‌றோ‌ர்‌கள்தான்‌. அதனா‌ல்‌ அவர்‌களுக்‌கு   நே‌ர்‌மை‌யா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படி‌ வா‌ழ்‌வது என பு‌ரி‌ய வை‌க்‌கும்‌ வகையில் உணர்‌வு ரீ‌தியாகவும் படம் உருவாகியிருக்கிறது. ஒரு மனிதன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவின் விளைவு எப்படி அவனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதையும் இந்தப் படம் சுட்டிக் காட்டியிருக்கிறது.
உண்மையில் இத்திரைப்படம் பரபரப்‌பா‌ன சம்‌பவங்‌கள்‌‌, வி‌றுவி‌றுப்‌பா‌ன தி‌ரை‌க்‌கதை‌, யதா‌ர்‌த்‌தமா‌ன வசனங்‌கள், கதாபாத்திரங்களின் இயல்‌பா‌ன நடி‌ப்‌போ‌டு பாராட்டும்படியாகத்தான் உருவா‌கியிருக்கி‌றது. ஆனால் முக்குலத்தோர் பெருமையைச் சொல்லும்விதமாக வந்திருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை.
பல திரைப்படங்களில் அடியாளாகவே நடித்திருக்கும் தயாதான், இதில் முக்கிய கதாபாத்திரமான மொக்கச்சாமி கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த குலத்திற்கேற்ற முகம், ஒரு ரெளடிக்கேற்ற உடல் வாகுடன் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
எப்போதும் மது போதையுடன், தெனாவெட்டுடனான ஸ்டைலில் அந்தப் பகுதி லோக்கல் வசனங்களை உச்சரிக்கும்விதத்திலும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்துவிட்டார் தயா.
படம் ‘ஒச்சாயி’ என்று நாயகியின் பெயரைக் கொண்டிருந்தாலும் இது நாயகனின் படம்தான். ‘ஒச்சாயி’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும் தாமரை என்ற பெண் மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். சினிமாத்தனமே முகத்தில் தெரியவில்லை.
ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பாகவும், சூட்டிகையில்லாமல் செயற்கைத்தனமும் இல்லாமல் இந்தப் பொண்ணுக்கு என்னய்யா குறைச்சல் என்று படம் பார்ப்பவர்களே தயாவிடம் சிபாரிசுக்கு போகும் அளவுக்கு அமைதியாக நடித்திருக்கிறார்.
ஒரேயொரு காட்சியில் மூச்சுவிடாமல் பெண்களின் பெருமையைப் பற்றிச் சொல்லி பேசும் வீர வசனக் காட்சியில்தான் இவரது நடிப்புத் திறமை பளிச்சிடுகிறது. இந்த ஒரு படத்தோடு இவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. கிராமத்து கேரக்டர்களுக்கு இவர் நிச்சயம் பொருத்தமானவர். காணவில்லையே..?
இவர் மட்டுமல்ல.. திரவிய பாண்டியனின் மனைவியாக நடித்தவரும், சந்தான பாரதியின் மனைவியாக நடித்த சிந்துவும்கூட நடிப்பில் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தயா அண்ட் கோஷ்டி, திரவியபாண்டியனின் மனைவியை ‘மதினி’, ‘மதினி’ என்றழைத்து உரிமையோடு பேசுவதும், சண்டையிடுவதும், மிக இயல்பான காட்சிகள் என்று இயக்குநருக்கு பெருமை சேர்க்கும் காட்சிகள்.
இதேபோல் சந்தான பாரதியின்  மனதளவில் ஊனமுற்ற மகனாக நடித்தவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவருடைய கதை நகர்த்தலில் இருக்கும் குடும்பச் சிக்கலையும், இவரால் இதுதான் நடக்கப் போகிறது என்பதையும் ஊகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இந்த நடிகருக்கு நமது வாழ்த்துகள்.
பண்பட்ட நடிகரான ராஜேஷின் நடிப்பைப் பற்றி தனியே சொல்ல தேவையில்லை. பொறுப்பான தந்தையாகவும், மகனது நிலைமையைக் கண்டு எதுவும் செய்ய முடியாத தனது கையாலகத்தனத்தை எண்ணி வருந்தும் ராஜேஷின் நிலைமை பரிதாபம். அந்த உணர்வை பார்வையாளர்களிடத்தில் இருந்து மிக எளிதாக தனக்குக் கடத்திக் கொண்டுவிட்டார் ராஜேஷ். பாராட்டுக்கள் ஸார்..!
முக்குலத்தோர் பெருமையை பல இடங்களில் பேசினாலும் அதே குலத்தில் இருந்து கொண்டு தனி மனித விரோதச் செயல்களையும் அவர்களே செய்கிறார்கள் என்பதை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
கள்ளச் சாராயம் காய்ச்சுவது.. போலீஸுக்கு மாமூல் கொடுப்பது.. அடுத்தவர் மனைவியை கவர்வது.. பெண்கள் கள்ளக் காதலனை தேடுவது.. நட்புக்காக மெளனம் காக்காமல் உண்மையை உரக்கச் சொல்லும் நட்புகள்.. திடீரென்று உறவுகள் அத்துவிடுவது.. உறவுகள் அல்லாதவர்கள் திடீரென்று அரவணைப்பது.. கணவனின் உடன் பிறவா தம்பிகள் என்றாலும் அவர்களையும் வளர்த்தெடுக்கும் பெண்கள்.. என்று பலவித உணர்ச்சிக் கலவைகளையும் இந்தப் படத்தில் காணலாம்.
அதோடு சாவு செய்தி சொல்ல வரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் செய்தியைச் சொல்லிவிட்டு கிளம்பும்போது அவரை சைக்கிளில் ஏறவிடமால் தடுத்து “தெரு முக்கு வரையிலும் உருட்டிட்டுத்தான் போகணும்…” என்று மிரட்டி அனுப்புவதையும் பகிரங்கமாக ஒளிவுமறைவில்லாமல் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்றால் அது கஞ்சா கருப்பு, ஷகிலா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது என்றாலும் சில இடங்களில் கொடுமையான காட்சியமைப்பினால் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் படத்தில் குபீர் சிரிப்பை, இரண்டு இடங்களில் வரழைத்திருப்பது கஞ்சா கருப்புதான் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இசையமைப்பாளர் ஜீவராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே இன்னிசை ரகம். ‘பத்தூரு பட்டி’ பாடல் காட்சியில் ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழாவை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். காட்சிப்படுத்தலும், பாடலும் தேவரினத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன. ‘கம்பங் காட்டுக்குள்ளே’, ‘மரிக்கொழுந்து’ பாடல்கள் இனிமையான இசையையும், எளிமையான பாடல் வரிகளில் சொல்லும் காதலையும் பேசுகின்றன.
இந்தப் படத்தின் ரிலீஸின்போது ‘ஒச்சாயி’ என்கிற பெயர் தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே. எப்படி வரிவிலக்கு தர முடியும் என்று வரி விலக்கு தரும் கமிட்டி மறுத்துவிட்டது.
அதே ஆண்டில் வெளியான ‘எந்திரன்’ எந்த அளவுகோலில் தமிழ் வார்த்தையானது என்று சொல்லி இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் கடுமையாக சண்டையிட்டு பத்திரிகைகளில் பேட்டி கொடுத்த பின்பு, விஷயம் கேள்விப்பட்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலையிட்டு வரி விலக்கு தரச் சொல்லியிருக்கிறார்.
இப்போது இந்தப் படம் யுடியூபில் முழுமையாகத் தெரிந்தாலும் இன்னும் தங்களுடைய படைப்பு பரவலாக தெரிய வேண்டும் என்கிற முனைப்புடன் இப்போது மீண்டும் பணம் செலவழித்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
உண்மையில் 2010-ம் ஆண்டிற்கான மாநில அரசின் சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது இத்திரைப்படத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான முழு தகுதியுள்ளது இத்திரைப்படம்..!
எதையும் பெறவில்லை என்பது சோகமான விஷயம்..!!!

க்யூப் நிறுவனம் திரையிடலுக்கான கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது..!

12-0-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

க்யூப் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் ஒரு பகுதியாக எதிர்வரும் மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்தவதாக அறிவித்துள்ளனர்.
இதன் அடுத்தக் கட்டம் பற்றி விவாதிக்க இன்று மாலை 6 மணிக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலைமையில் சற்று நேரத்திற்கு முன்பாக க்யூப் நிறுவனம் தமிழ்த் திரைப்படங்களை திரையிடும் கட்டணத்தைக் குறைத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி சிங்கள் ஸ்கிரீன் மற்றும் 2, 3 தியேட்டர்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு படத்தை ஒரு காட்சிக்குத் திரையிட 290 ரூபாய் கட்டணம் என்று சொல்கிறது க்யூப். முன்பு இந்தக் கட்டணம் 325 ரூபாயாக இருந்தது.
மேலும் 2-வது வாரத்தில் இந்தக் கட்டணம் 250 ரூபாயாகவும், 3-வது வாரம் இந்தக் கட்டணம் 200 ரூபாயாகவும், 4-வது வாரம் இந்தக் கட்டணம் 100 ரூபாயாகவும், 5-வது வாரம் இந்தக் கட்டணம் 75 ரூபாயாகவும் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அல்லது ஒட்டு மொத்தமாய் ஒரு காட்சிக்கு 275 ரூபாயாக வசூலிக்கவும் திட்டம் உண்டு என்கிறது.
மேலும் இந்தத் தியேட்டர்களில் பேக்கேஜிங் கட்டணமாக இப்போது இருக்கும் 21000 என்பதை 20000 ஆக குறைக்கவும் ஒத்துக் கொள்கிறது.
மால் தியேட்டர்களில் ஏற்கெனவே இருக்கும் பேக்கேஜிங் கட்டணமான 27,500 ரூபாயில் இருந்து 21,750 ரூபாயாக குறைக்கவும் ஒத்துக் கொண்டுள்ளது.
இதேபோல் முதல் வாரம் இந்தத் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கான திரையிடல் கட்டணம் 500 ரூபாயில் இருந்து 450 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மால் தியேட்டர்களின் பேக்கேஜிங் கட்டணத்தை முதல் வாரம் 10,750 என்றும், 2-வது வாரம் 8,550 என்றும் 3-வது வாரம் 6,350 என்றும், 4-வது வாரம் 4000 ரூபாய் என்றும் 5-வது வாரம் 2,000 என்றும் க்யூப் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
மேலும் இந்தக் கட்டணக் குறைப்பை சதவிகிதக் கணக்கில் பார்த்தால் முந்தையைக் கட்டணத்தில் இருந்து சுமார் 18-ல் இருந்து 23 சதவிகிதம்வரையிலும் குறைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது க்யூப் நிறுவனம்.
இந்தக் கட்டணக் குறைப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று புதிய படங்களை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று க்யூப் நிறுவனம் கேட்டுள்ளது.
மேலும் தாங்கள் எந்தவொரு புதிய டிஜிட்டல் நிறுவனத்திற்கும் எதிரியல்ல என்றும், யார்  வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் எங்களுடன் போட்டியிட வரலாம் என்றும் அறிவித்துள்ளது. கடந்தாண்டுகூட 2 புதிய நிறுவனங்கள் தொழிலில் இணைந்துள்ளதை அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இது பற்றி முடிவெடுக்க கூட்டம் நடத்தப்படவிருப்பதால் க்யூப் நிறுவனத்தின் இந்த முடிவு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது இன்றைக்கே தெரிந்துவிடும்..!

தயாரிப்பாளர் சங்கம் – க்யூப் நிறுவனம் மோதல் – என்னதான் நடக்கிறது..? ஒரு விரிவான அலசல்..!

10-03-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவின் உண்மையான நிலைமை கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒரு காட்சிக்கு 5 பேர், 10 பேர், 15 பேர் என்று வருவதால் சில தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல தியேட்டர்களில் ஒரு நாள் முழுவதுமே காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ‘புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது’ என்று விதித்த தடையுத்தரவுதான். புதிய திரைப்படங்கள் இல்லாமல், ஏற்கெனவே சென்ற வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் தொடர்ந்து திரையிடப்பட்டாலும் அவற்றுக்கும் சுத்தமாக வரவேற்பில்லை.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த தடையுத்தரவுக்குக் காரணம் தியேட்டர்களில் படங்களை திரையிடும் டிஜிட்டல் கம்பெனியான ‘க்யூப்’ என்ற நிறுவனத்தின் திரையிடல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கைதான்..!

க்யூப் நிறுவனம் இப்போது ஒரு படத்தைத் தியேட்டரில் திரையிட ஒரு காட்சிக்கு 325 ரூபாய் வாங்குகிறது. இந்தக் கட்டணம் அதிகமானது என்று சொல்லி இதனைக் குறைத்தாக வேண்டும் என்றும், படங்களின் இடையே காட்டப்படும் விளம்பரக் கட்டணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கோரியும்தான் தென்னிந்தியா முழுவதுமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என்று ஐந்து மாநில திரைப்பட துறையினரும் ஒன்று சேர்ந்து ‘மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிடுவதில்லை’ என்ற தங்களது போராட்ட முடிவை அறிவித்தன.

அனைத்து வகையான பட்ஜெட் படங்களுக்கும் க்யூப்புக்கான VPF எனப்படும் கட்டணத் தொகை மிகப் பெரிய சுமையாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பினர் சொல்கிறார்கள்.

க்யூப் தரப்போ, “முன்பு திரைப்படங்கள் பிலிமில் தயாராகி பெட்டியில் அடைக்கப்பட்டு ஊர், ஊராகக் கொண்டு செல்லப்பட்டு தியேட்டரில் ஓட்டப்பட்டு, அறுந்து போனால் ஒட்டப்பட்டு… இப்படி மிகுந்த சிரமத்திற்கிடையில் படத்தை திரையிட்டு வந்தபோது கஷ்டமே இல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பலன் தரும்வகையில்தான் இந்த சிஸ்டத்தை நடத்தி வருகிறோம். இதற்கு எங்களுக்கு ஆகும் நியாயமான கட்டணத்தைத்தான் வசூலித்து வருகிறோம்..” என்கிறார்கள்.

“சினிமா தியேட்டர்களில் புரொஜெக்டரை வாங்கி வைத்திருப்பது தியேட்டர்காரர்களின் கடமை. அது இருந்தால்தான் அது தியேட்டர். இதற்காக தியேட்டர்காரர்களிடத்தில்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். எங்களிடம் அல்ல…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

“20 லட்சம், 30 லட்சம் என்று பணம் போட்டு க்யூப் சிஸ்டத்தை வாங்கி வைக்க எங்களால் முடியவில்லை. அதனால்தான் ஒரு பைசாகூட முதலீடு இல்லாமல் செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு நாங்களும் ஒத்துக் கொண்டோம். நாங்களே க்யூப் சிஸ்டத்தை விலைக்கு வாங்கி வைப்பதென்பது நடவாத காரியம்…” என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

“ஹாலிவுட்டின் ஆங்கில சினிமாக்களுக்கு மட்டும் வெறும் பத்தாயிரம் ரூபாயை ரவுண்ட்டாக வாங்கிக் கொண்டு ஆயுள் கால உரிமையைத் தருகிறீர்களே.. தமிழ்ப் படங்களுக்கு மட்டும் ஏன் அந்தச் சலுகையைத் தர மறுக்கிறீர்கள்…?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

“ஆங்கில படங்கள் குறைவான தியேட்டர்களில் குறைவான காலங்களில் குறைவான எண்ணிக்கையில்தான் வெளியாகின்றன. அதனால்தான் அந்தச் சலுகை…” என்கிறது க்யூப் நிறுவனம்.

“தமிழ்நாட்டில் க்யூப் சிஸ்டம் இருக்கும் தியேட்டர்களில் 1 கே மற்றும் 2 கே தொழில் நுட்பம் உள்ள தியேட்டர்களும் இருக்கின்றன. இதில் 1 கே தொழில் நுட்பத்தில் திரையிடுவதற்கு கட்டணமாக 325 ரூபாயும், 2 கே தொழில் நுட்பம் உள்ள தியேட்டர்களில் திரையிடுவதற்கான கட்டணமாக 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இரண்டிற்குமே ஒரே தியேட்டர் கட்டணம்தான். தியேட்டரின் கட்டண சீட்டில்கூட அது குறிப்பிடப்படுவதில்லை. ரசிகர்களுக்குக்கூட அதன் வித்தியாசம் தெரியாது. புரியாது.. பின்பு எதற்காக இந்த வித்தியாச கட்டணம்..?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

“2-கே தொழில் நுட்பத்திற்காக கொஞ்சம் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்தக் கூடுதல் கட்டணம்…” என்கிறது க்யூப் நிறுவனம்.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரான தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இது பற்றி பேசுகையில், “அருவி’ போன்று 2 கோடி சின்ன பட்ஜெட்டில் தயாரான படத்தை தியேட்டரில் வெளியிட திரையிடல் கட்டணமாக 50 லட்சம் செலவழிக்க வேண்டியிருந்தது. இதற்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய்தான் திரையிடல் கட்டணமாக இருந்திருக்க வேண்டும். 35 லட்சம் ரூபாய் அதிகமாக கொடுத்திருக்கிறேன்.

இதேபோல் என்னுடைய நிறுவனமான ட்ரீம் வேரியர்ஸின் சார்பில் இந்தாண்டு வெளியான 4 படங்களின் திரையிடல் கட்டணமாக மட்டுமே 2 கோடியே 20 லட்சம் ரூபாயை செலுத்தியிருக்கிறேன். இதில் ஒன்றரை கோடி ரூபாய் சிலருடைய பாக்கெட்டுகளுக்கே போய்ச் சேர்ந்திருக்கிறது. இந்தப் பணத்தில் இன்னும் ஒரு படத்தையே தயாரித்திருப்பனே..?” என்று கோபப்படுகிறார்.

“2010-ம் ஆண்டில் இருந்து கடந்த எட்டாண்டுகளாக க்யூப் நிறுவனம் இந்த கட்டணத்தின் மூலமாக கோடி, கோடியாக சம்பாதித்துவிட்டது. இதன் ஒட்டு மொத்தக் கணக்கையும் சேர்த்துப் பார்த்தாலே 600 கோடியைத் தாண்டிவிடும். அப்போது போட்ட முதலீட்டை க்யூப் நிறுவனம் எடுத்துவிட்டதாகத்தானே அர்த்தம். இனியும் அவர்கள் ஏன் கட்டணம் கேட்கிறார்கள்..? இனிமேல் இலவசமாக திரையிட அனுமதிக்கலாமே…?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

“நாங்கள் அந்த அளவுக்கெல்லாம் சம்பாதிக்கவில்லை. எங்களுடைய வருடாந்திர வரவு-செலவு 100 கோடி அளவுக்கு இருந்தாலும் அதில் தியேட்டர்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்களிப்பு, எங்களுடைய தொழிலாளர்களுக்கான சம்பளம், தொழில் நுட்ப வசதிகளுக்காக வருடந்தோறும் நாங்கள் செய்யும் செலவுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் வருடத்திற்கு 30 கோடிதான் எங்களுக்கு கிடைக்கிறது. அதுவும் இப்போது கடந்த 3 ஆண்டாகத்தான் கிடைத்துள்ளது.. எனவே கட்டணத்தை அறவே நீக்க முடியாது…” என்கிறார்கள் க்யூப் நிறுவனத்தார்.

“நாங்கள் ஒரு படத்தின் மாஸ்டரிங் காப்பியை இலவசமாக செய்து தருகிறோம். சினிமா பிரதியை இலவசமாக அனைத்து தியேட்டர்களுக்கும் கிடைக்கச் செய்கிறோம். வருடக் கணக்காக தயாரிப்பாளரின் பிரதியை பத்திரமாக பாதுகாக்கிறோம்.. இதெல்லாம் நாங்கள் தயாரிப்பாளர்களுக்கு செய்து வரும் சேவைதானே..” என்கிறது க்யூப்.
ஆனாலும், “இந்த க்யூப் வேண்டவே வேண்டாம்.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டு இதைவிட மிகக் குறைந்தக் கட்டணத்தில் இருக்கும் ஒரு புதிய நிறுவனத்தை நாம் ஆதரிப்போம். அதற்குக் கை கொடுங்கள்…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
ஆனால் தியேட்டர்காரர்களோ, “எங்களுக்கும், க்யூப் நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் வலுவானதாக இருக்கிறது. அதை முறித்தால் நாங்கள் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்கும்படி இருக்கும். அதனை எங்களால் தாங்கவே முடியாது…” என்கிறார்கள்.
ஆக மொத்தம்.. இரண்டு பக்கமும் இடியாப்பச் சிக்கலாய் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
இந்த நேரத்தில் இந்த க்யூப் கட்டணம் பற்றிய சில விஷயங்களை பார்ப்போம்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 1100 தியேட்டர்களில் 100 தியேட்டர்களில் க்யூப் சிஸ்டத்தை சொந்தமாகவே விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
மீதமிருக்கும் 1000 தியேட்டர்களில் 100 தியேட்டர்கள் PXD மற்றும் வேறு டிஜிட்டல் முறைகள் உள்ள தியேட்டர்களாக இருக்கின்றன. மீதமுள்ள 900 தியேட்டர்களில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனத்தின் சாப்ட்வேரின் மூலமாகத்தான் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த டிஜிட்டல் டெலிகேஸ்ட் சர்வீஸ் கடந்த 2011-ம் ஆண்டில்தான் கொஞ்சம், கொஞ்சமாக தமிழகத்தில் துவங்கியது. பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஊர், ஊராக அலைய முடியவில்லையே என்று நினைத்த தயாரிப்பாளர்களும் முதலில் இதற்கு ஒத்து ஊத.. மின்னல் வேகத்தில் மிக வேகமாகப் பரவி.. 2013-ம் ஆண்டிற்குள்ளாக க்யூப் நிறுவனம் தமிழகத்தில் முக்கால்வாசி தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டது.
க்யூப்புக்கு போட்டியாக இருந்த யுஎஃப்ஓ டிஜிட்டல் நிறுவனத்தையும் க்யூப் நிறுவனம் தற்போது கையகப்படுத்திவிட்டதால், அதனையும் சேர்த்து இப்போது கடந்த ஆண்டுவரையிலுமான கணக்கில் 900 தியேட்டர்களை தன் கையில் வைத்திருப்பதாக க்யூப் நிறுவனம் சொல்கிறது.
தயாரிப்பாளர்கள் தங்களது படம் திரையிடப்படும் திரையரங்கு என்ன டிஜிட்டல் பார்மெட்டில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அந்தந்த டிஜிட்டல் நிறுவனங்களிடம் திரையிடல் கட்டணாக அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்ட வேண்டும்.
அதன் பின்புதான் அந்தந்த டிஜிட்டல் நிறுவனங்கள் அந்த சினிமாவின் மாஸ்டரிங் காப்பியை வாங்கிக் கொண்டு தங்களது ஹார்ட் டிஸ்க்கில் அவற்றை ஏற்றிக் கொண்டு எந்த ஊரில், எந்த தியேட்டரில் இது திரையிடப்பட வேண்டுமோ அந்தத் தியேட்டரில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்கில் படம் டவுன்லோடு ஆகச் செய்யும்படி செய்வார்கள். இதற்கென்று சில பார்மாலிட்டிகள், பாஸ்வேர்டுகளும் உண்டு.
தயாரிப்பாளர்கள் க்யூப்புக்கு கட்ட வேண்டிய தொகை ஒரு காட்சிக்கு 325 ரூபாய். இதனை ஒரு வாரத்திற்கு மொத்தமாக சேர்த்து 325 X 4 X 7 = 9.100 ரூபாயாகக் கட்ட வேண்டும்.
ஒரு படம் தமிழகம் முழுவதும் க்யூப் சிஸ்டம் இருக்கும் 100 தியேட்டர்களில் 4 காட்சிகளாக வெளியாகும்பட்சத்தில் 9100 X 100 =  – 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை ஒரு வாரத்திற்கான திரையிடல் கட்டணமாக முன்கூட்டியே க்யூப் நிறுவனத்தில் செலுத்தியாக வேண்டும். 
இதே படம் முதல் வாரமே நல்ல வரவேற்பைப் பெற்று, அடுத்த வாரமும் அதே தியேட்டர்களில் ஓடும் என்பது உறுதியானால் அடுத்த வாரத்திற்கான பணத்தையும் அந்த வாரம் முடிவதற்குள்ளாக க்யூப் நிறுவனத்தில் செலுத்த வேண்டும்.
இரண்டாவது வாரமும் அந்தப் படம் தியேட்டரில் ஓடும்போது க்யூப் கட்டணம் குறைக்கப்பட்டு 300 ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது. அதற்கடுத்து மூன்றாவது வாரமும் தொடர்ந்தால் அது 275 ஆகவும், ஷிப்ட்டிங் முறையில் வேறு தியேட்டர்களுக்கு அந்தப் படம் மாற்றப்படும்போது இன்னும் 50 ரூபாய் குறைக்கப்பட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை அந்தந்த வாரம் முடிவதற்குள்ளாக கட்டினால்தான், க்யூப் படத்தை ஒளிபரப்பு செய்யும். இதான் தற்போதைய நடைமுறை..!
இதே வேளையில் சாதாரண தியேட்டர்களில் 1-கே தொழில் நுட்ப முறையிலும், ‘சத்யம்’, ‘அபிராமி’, ‘பி.வி.ஆர்.’, ‘ஐநாக்ஸ்’ போன்ற மால் தியேட்டர்களில் 2-கே தொழில் நுட்ப முறையிலும் க்யூப் நிறுவனம் தனது ஒளிபரப்பை செய்து வருகிறது. 
மால் தியேட்டர்களில் அல்லது இரண்டு தியேட்டர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கொண்ட காம்பளக்ஸில் ஒரு படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வேறு, வேறு ஸ்கிரீன்களில் ஷிப்ட்டிங் முறையில் ஓட்டுவதற்காக ஒரு தனி ஸ்கீமை க்யூப் நிறுவனம் வைத்துள்ளது.
இதன்படி ‘சத்யம்’, ‘அபிராமி’, ‘பி.வி.ஆர்.’, ‘ஐநாக்ஸ்’ போன்ற மால் தியேட்டர்கள், 27,500 ரூபாயை கட்டினால் அதே தியேட்டரில் உள்ள எத்தனை ஸ்கிரீன்களில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதே படத்தை திரையிட்டுக் கொள்ளலாம். 
இதேபோல் 2, 3 காம்ளக்ஸ் தியேட்டர்கள் கொண்ட ‘உதயம்’, ‘உட்லண்ட்ஸ்’, ‘தேவி’ தியேட்டர் போன்றவை 21,000 ரூபாயைக் கட்டினால் அதே தியேட்டரில் உள்ள எத்தனை ஸ்கிரீன்களில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதே படத்தை திரையிட்டுக் கொள்ளலாம். 
இந்தத் திரையிடல் கட்டணத்தை டிடியாகவோ, பணமாகவோ மட்டுமே கட்ட வேண்டுமாம். செக் வாங்குவதில்லையாம். தயாரிப்பாளர்கள் கொடுத்த சில செக்குகள் பவுன்ஸ் ஆன கதை நடந்திருப்பதால், அனைத்து டிஜிட்டல் நிறுவனங்களும் காசோலை வழி பரிவர்த்தனைக்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டன.

இதனை கணக்காகவே கணக்கிட்டுப் பார்ப்போம்..!
க்யூப் நிறுவனம் இப்போது ஒரு தியேட்டருக்குரிய திரையிடல் கட்டணமாக ஒரு காட்சிக்கு வசூலிக்கும் தொகை = 325 ரூபாய்
தினமும் 4 காட்சிகள் என்றால் 1 நாளைக்கு = 325 X 4 = 1300 ரூபாய்
ஒரு வாரத்திற்கு என்றால் 7 நாட்களுக்கு = 1300 X 7 = 9,100 ரூபாய்
ஒரு மாதத்திற்கு என்றால் = 9,100 X 4 = 36,400 ரூபாய்
ஒரு வருடத்திற்கு என்றால் = 36,400 X 12 = 4,36,800 ரூபாய்.
இதன்படி பார்த்தால் ஒரு தியேட்டருக்கு, ஒரு வருடத்திற்கு திரையிடல் கட்டணமாக க்யூப் டிஜிட்டல் அமைப்பிற்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கும் கட்டணத் தொகை 4,36,800 ரூபாய்.
தமிழகத்தில் தோராயமாக இப்போது 900 தியேட்டர்களில் க்யூப் டிஜிட்டல் சிஸ்டம் இருப்பதால் ஒரு வருடத்திற்கான வாடகை கட்டணமாக மட்டுமே 4,46,800 X 900 = 39,31,20,000. – 39 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் க்யூப் டிஜிட்டல் நிறுவனத்திற்குக் கிடைக்கிறது.
க்யூப் தமிழகத்தில் கால் பதித்தது 2011-ம் வருடம் என்கிறார்கள். இப்போதைய 900 தியேட்டர்கள் இதன் கைக்கு கிடைத்திருக்க எப்படியும் 5 வருடங்களாவது ஆகியிருக்கும். அதனால் இதுவரையிலும் க்யூப் நிறுவனம் எவ்வளவு தோகையை திரையிடல் கட்டணமாக வசூலித்திருக்கும் என்பதைக் கணக்கிடுவது முடியாத காரியம்.
அதனால் கடைசி 5 ஆண்டுகளுக்கு என்று மட்டும் தோராயமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் 39,31,20,000 X 5 = 196,56,00,000 ரூபாய்களாகும். அதாவது 196 கோடியே 56 லட்சம் ரூபாயாகும்.
துவக்க நிலையில் 2 ஆண்டுகளுக்கான திரையிடல் கட்டணமாக இதில் பாதி தொகையை சேர்த்து பார்த்தாலும் இதுவரையிலும் கடந்த 7 ஆண்டுகளில் சேர்த்து மொத்தம் 250 கோடி ரூபாயை  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களிடத்தில் இருந்து படத்தைத் திரையிடும் கட்டணத் தொகையாக க்யூப் நிறுவனம் பெற்றிருக்கும். இந்தத் தொகையில் கொஞ்சம் குறைவாகவும் இருக்கலாம். அல்லது கூடுதலாகவும் இருக்க வாய்ப்புண்டு.
இதன் கூடவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலமாகவும் க்யூப் நிறுவனத்திற்கு பண வரவு வருகிறது. 2 அல்லது 3 நிமிடம் கொண்ட டிரெயிலரை வெளியிட 60,000 ரூபாயை க்யூப் நிறுவனம் வசூலிக்கிறதாம். இப்படி கிடைக்கும் தொகையில் 60 சதவிகிதத் தொகை தியேட்டர்காரர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலும் படத்தைத் திரையிட்ட பின்பு காட்சிகள் சிலவற்றை சேர்த்தாலும், சிலவற்றை நீக்கினாலும் அதற்கென தனி சர்வீஸ் கட்டணமாக 50,000 ரூபாயை க்யூப் வசூலித்து வருகிறது.
எங்காவது படம் திருட்டு விசிடியாக வந்துவிட்டால் அது எந்தத் தியேட்டரில் இருந்து படமாக்கப்பட்டது என்பதை கண்டறிய அதற்கான கட்டணமாக 59,000 ரூபாயை க்யூப் நிறுவனம் வசூலித்து வருகிறது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த 7 ஆண்டுகளில் க்யூப் நிறுவனம் தோராயமாக 400 கோடி ரூபாயை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மூலமாக பெற்றிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் தயாரிப்பாளர்களோ க்யூப் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பண வசூல் செய்துவிட்டது என்கிறார்கள். அதற்கான வாய்ப்பில்லை என்றாலும், 400 கோடி அல்லது அதற்கு சற்றுக் கூடுதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சினிமா துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
“அதான் 400 கோடியை வசூலிச்சாச்சே.. போதாதா..? அப்படியே விட்ரலாமே..?! இப்போதும் எதற்கு கட்டணம் வசூலிக்கிறீர்கள்…?” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
க்யூப் நிறுவனமோ, “இது பழைய புரொஜெக்டர் போன்று பிலிமை தூக்கி லூப்பில் மாட்டி அப்படியே சுத்திவிட்டு கோச்சிங்கில் நுழையவிட்டு பத்தியை பொருத்திவிட்டு அப்படியே ஓட்டிவிடக் கூடியதல்ல..
ஒரு புதிய படம் வந்தால் அதனை க்யூப் சிஸ்டத்துக்கேற்ற சாப்ட்வேரில் மேலும் மெருகேற்ற வேண்டும். க்யூப் சாப்ட்வேருக்கேற்றவாறு படத்தின் பிரதியை வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு புதிய படத்திற்கும் இந்த மெருகேற்றல் தேவைப்படுகிறது. இந்த க்யூப் சாப்ட்வேரை படத்துக்கு படம் புதிதாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதால் கட்டணம்  எங்களுக்கு மிகவும் அவசியமாகிறது.
அதோடு க்யூப் சிஸ்டத்தை பராமரிக்க ஊருக்கு 2 நபர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம். இதன்படி பார்த்தால் தமிழகம் முழுவதும் எங்களுடைய நிறுவனத்திற்காக 700 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும். தியேட்டர்களில் இருக்கும் க்யூப் சிஸ்டத்தின் முழு பராமரிப்பையும் நாங்களேதான் மேற்கொள்கிறோம். தியேட்டர்காரர்களிடத்தில் சல்லிக் காசுகூட வாங்கவில்லை. இதற்கெல்லாம் தனியாக பணம் செலவாகிறது. இதற்கெல்லாம் கட்டணம் வாங்காமல் இருக்க முடியாது.
க்யூப் சிஸ்டம் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டியது. கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் போல.. அதனால் அதனை அப்படியே தியேட்டர்காரர்கள் பொறுப்பில்விட்டுவிட்டு போக முடியாது. அப்படியே கொடுத்தாலும் எங்களுடைய தினசரி உதவியின்றி தியேட்டர்காரர்களால் அதனை பராமரிக்க முடியாது…” என்கிறார்கள்.
“அப்படியானால் நீங்கள் கழன்று கொள்ளுங்கள். நாங்கள் எங்களுக்கு ஏற்ற ஆளை வைத்து நடத்திக் கொள்கிறோம்…” என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர். “இதனை நீங்கள் தியேட்டர்காரர்களிடம் பேசிக் கொள்ளுங்கள். அவர்கள் ஒத்துக் கொண்டால் எங்களுக்குக் கவலையில்லை…” என்கிறார்கள் க்யூப் நிறுவனத்தார்.
தியேட்டர்காரர்களோ, “எங்களது தியேட்டரில் எந்த டிஜிட்டல் நிறுவனத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். வெளியாட்களுக்கு அதிலும் குறிப்பாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உரிமையே இ்ல்லை…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
தியேட்டர்காரர்களை பொறுத்தவரையில் தயாரிப்பாளர் சங்கம் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபடியும் புரொஜெக்டர் அறையில் குழப்பம் செய்து தங்களுக்குத் தாங்களே சூனியம் வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. அதனால் க்யூப் பக்கமே கை தூக்கி நிற்கிறார்கள்.
க்யூப் நிர்வாகமும் சொன்ன சொல் தவறாமல், கொடுத்த வாக்கை மீறாமல், தியேட்டர் உரிமையாளர்களுக்குரிய ஷேரை கண் கலங்க வைக்காமல் கொடுத்துவிடுவதால் தியேட்டர்காரர்களுக்கு க்யூப், இப்போது சகோதர நிறுவனம்போல் ஆகிவிட்டது. அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் குறிப்பாக அதன் தலைவரான விஷால், மும்பையில் இருந்து கே.எஸ்.எஸ். நிறுவனம் என்ற டிஜிட்டல் நிறுவனத்தின் ‘இ-சினிமா’ என்னும் சாப்ட்வேரை கொண்டு வர நினைக்கிறார். ஆனால் இதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக்  கொள்ள மறுக்கிறார்கள். “எங்களுக்கு அது தேவையில்லை…” என்று ஆரம்பத்திலேயே மறுதலித்துவிட்டார்கள்.
“அந்த ‘இ-சினிமா’ டிஜிட்டல் சர்வீஸ் மும்பையிலேயே தோல்வியடைந்த திட்டம்” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அந்த ‘இ சினிமா’ சிஸ்டத்தின் மூலமாக மிக எளிதாக திருட்டு டிவிடியை உருவாக்க முடியுமாம். காப்பி செய்யப்பட்டதை கண்டுபிடிக்கவே முடியாதாம். “இப்போதே இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் சில தியேட்டர்களில் திருட்டு டிவிடியில் படமாக்குகிறார்கள். இந்த லட்சணத்தில் அந்த ‘இ-சினிமா’வை இங்கே கொண்டு வந்தால் என்ன நடக்கும்…?” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
அதோடு தொழில் நுட்பமும் இப்போது மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்களை வெளியிடும் டிஜிட்டல் முறையில் 1-கே, 2-கே, 4-கே என்று ஒளிப்பதிவின் தரம் அப்கிரேட் ஆகி வந்திருக்கிறது. இப்போது க்யூப் 4-கே அளவுக்கான ரிசல்யூஷனில் படத்தைத் திரையிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. ஆனால் அந்த மும்பை நிறுவனத்தின் ‘இ சினிமா’ டிஜிட்டல் சிஸ்டம் 1-கே அளவுக்குத்தான் ஒளிபரப்பு செய்யுமாம்.. “தொழில் நுட்பம் மேல போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஏன் சட்டையைப் பிடித்து கீழே இழுக்கிறது…?” என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இப்போது கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகியவை இப்போதைய தொகையில் இருந்து 20 முதல் 21 சதவிகிதம்வரையிலுமான கட்டணக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டு ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுவிட்டன. ஆனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்து இப்போதுவரையிலும் ஸ்டிரைக்கை நடத்தி வருகிறது.
இப்போது க்யூப் நிறுவனம் தமிழகத்தில் வாங்கி வரும் ஒரு காட்சிக்குரிய கட்டணமான 325 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைப்பதாக இறங்கி வந்திருக்கிறது. இதன்படி பார்த்தால் ஒரு வாரத்திற்கான கட்டணமாக 6,000 ரூபாய்தான் இருக்கும்.
இதேபோல் மால்களுக்கான பேக்கேஜிங் கட்டணத்தை 27,500 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக குறைக்கவும், காம்ளக்ஸ் தியேட்டர்களின் பேக்கேஜிங் கட்டணத்தை 21,000 ரூபாயில் இருந்து 14,000 ரூபாயாக குறைக்கவும் க்யூப் நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
இந்த அளவுக்கான கட்டணக் குறைப்பையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து ‘ஸ்டிரைக் தொடரும்’ என்று அறிவித்திருக்கிறது. க்யூப் நிறுவனமோ, “இதற்கு மேலும் தங்களால் கட்டணக் குறைப்பை செய்ய முடியாது…” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இதனால்தான், “இனிமேல் திரையரங்கு உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை…” என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
திரையரங்கு உரிமையாளர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல், மாநில அரசிடம் பல கோரிக்கைகளை முன் வைத்து ‘அது தீர்க்கப்படாவிட்டால் மார்ச் 16 முதல் தாங்களும் தியேட்டர்களை மூடப் போவதாக’ எச்சரித்துள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் எப்படியும் தங்களுடன் பேச்சுவார்த்தை வரப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கும் தயாரிப்பாளர் சங்கம், மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக, அதே மார்ச் 16-ம் தேதி முதல் ஒட்டு மொத்தமாக தமிழ்த் திரையுலகமே வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
தற்போதைக்கு இரு தரப்பினரின் எதிர்பார்ப்பே, மாநில அரசு இதில் தலையிட்டு ஒரு சுமூகத் தீர்வை காண்பிக்க வேண்டும் என்பதுதான்.
தமிழக முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும்.. ‘நித்ய கண்டம் பூரண ஆயுசு’ என்பதைபோல தள்ளாடியபடியிருக்கும் தங்களது ஆட்சியை நினைத்து பயத்தில் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வரவிருக்கும் எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லுமா.. செல்லாதா என்கிற தீர்ப்பை எதிர்நோக்கி பதட்டத்துடன் காத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
போதாக்குறைக்கு தமிழ்ச் சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் கோட்டையை நோக்கி ஆயிரம் கனவுகளுடன் நகரத் தொடங்கிவிட்டதால் இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வைக்கும் என்று ஏவி.எம். ஸ்டூடியோவின் எதிரில் இருக்கும் பரோட்டா கடையில் பரோட்டா மாஸ்டர்கூட நம்ப மாட்டார்..!
இதனை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் நம்பியிருக்கிறார்கள் என்றால், எல்லாம் வல்ல முருகப் பெருமான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பதை காண நாமும் காத்திருப்போம்..!
இதைவிடவும் நமக்கு வேறு வழியில்லை..!