பந்த் தேவைதானா..?

26-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி விரைவில் செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் முழு அளவிலான பந்த் நடத்தப்படும் என்று தமிழக அரசை ஆளும் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரான முதல்வர் அறிவித்துள்ளார்.

பந்த் என்றால் என்ன நடக்கும்?

அரசுப் பேருந்துகள் இயங்காது.. ரயில் சேவை நிறுத்தப்படும். தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்படும். சினிமா தியேட்டர்கள் மூடப்படும். சாலைகள் அமைதியாக யாருமற்று காணப்படும்.

இவை அனைத்தும் ஊடகங்களின் கவனத்திற்குட்பட்டு, 'பந்த் மாபெரும் வெற்றி' என அறிவிக்கப்படும்.

இதனால் யாருக்கு லாபம்..?

ஒரு நாளின் தொழிலும், வர்த்தகமும் நிறுத்தப்படுமாயின் எவ்வளவு ரூபாய்கள் அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு நாளைய வர்த்தகமே 5 கோடி என்கிறார்கள். இவை சாதாரண இடைநிலை, கடை நிலை வர்த்தகர்களுக்கு கிடைக்கப் போகும் பணம். அன்று ஒரு நாள் அவர்களுக்குக் கிடைக்காது. சரி.

ஆனால், அழுகும் நிலை காய்கறிகளை விற்பனை செய்யும் இந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அது இழுப்புதானே.. அன்றைக்கு அழுகிப் போன காய்கறிகளை மறுநாள் மார்க்கெட்டின் எதிர்ப்புறம் இருக்கும் குப்பையில்தான் போட வேண்டும். அதை உற்பத்தி செய்ய ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு போராடியிருப்பான்..? இதை யாரிடம் போய் இவன் சொல்லுவான்..?

பேருந்துகள் ஓடாது.. அன்றைக்கு தாம்பரத்தில் இருக்கும் ஒருவரின் உறவினர் வண்ணாரப்பேட்டையில் இறந்துவிட்டால் அவர் என்ன செய்வார்..? கால்டாக்ஸி பிடித்துச் செல்ல வேண்டுமா..? அல்லது அவரால்தான் முடியுமா? எத்தனை பேரால் இந்த சமூகச் சீர்கேட்டை உடனடியாக ஒரே நாளில் எதிர் கொள்ள முடியும்..? இதற்கான வசதியும், வாய்ப்புகளும் மக்கள் அனைவரிடமும் இருக்கின்றதா..?

ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவனைக்கு எப்படிச் செல்வது? ரோட்டில் பஸ், கார், லாரி எதுவும் போகக்கூடாது என்று சில கும்பல்கள் கையில் கம்புகளுடன் நடு ரோட்டில் வந்து நிற்கும்போது அந்த உயிரைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்..?

நகரப் பகுதிகளில் பரவாயில்லை.. எப்படியாவது ஆட்டோ, டாக்ஸி பிடித்தாவது சென்றுவிடுவார்கள். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முறை வந்து செல்லும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள்? அது அவர்களது தலையெழுத்தா..? அல்லது ஓட்டுப் போட்டதற்கு கிடைத்த பரிசா..?

வர்த்தகர்கள் குறித்த நேரத்தில் பணம் அனுப்பினால்தான் பொருட்கள் கிடைத்து அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் நம்பகத்தன்மைதான் அவருடைய மிகப் பெரிய முதலீடு. அதையும் உடைத்துவிட்டால் அவர் எங்கே போய் புலம்புவார்..?

பந்த் என்பதற்காக அன்றைய ஒரு நாளைய வட்டி கேட்கப்பட மாட்டாது என்று எந்த வங்கியும், லேவாதேவிக்காரர்களும், வட்டி பிஸினஸ் செய்பவர்களும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை..

அன்றைக்கு கடைசி தேதி என்று அறிவிக்கப்படும் எந்தவொரு தொழில், நுகர்வோர் விஷயங்களும் பந்த் என்பதால் விட்டுக் கொடுக்கப்பட்டு விடுமா..? இல்லையெனில் யாரிடம் போய் கேட்பது..?

அன்றைய நாளில் ஏதேனும் ஒரு கடை திறந்து வைக்கப்பட்டு அதனை கலவரக்காரர்கள் தாக்கினால் அதற்கு யார் பொறுப்பு..?

ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படியரு பந்தை நான் எதிர்க்கிறேன் என்று சொல்லி ஆங்காங்கே சிலர் கடைகளைத் திறந்து வைத்திருந்தால் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்கப் போவது யார்..?

அரசே சொல்லிவிட்டதால் கடைகளை இழுத்து மூடியே தீர வேண்டும் எனில் அந்த ஒரு நாளைய வருமானத்தை அந்தக் கடைக்காரர்களுக்கு யார் தருவது..? அந்தத் தொகையை இழக்க வைப்பது அவரிடமிருந்து திருடுவதற்கு சமமில்லையா..?

அரசுகள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் இங்கே என்ன கருத்து சுதந்திரம் உள்ளது..?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அவர்களுடைய அடாவடித்தனத்தைக் காட்டுவதற்கு ஒரு மேடை அமைத்துக் கொடுப்பதுதான் அரசின் வேலையா..?

நகரங்களில் பேச்சிலராக இருப்பவர்கள் சோத்துக்கு என்ன செய்வார்கள்?

இது மாதிரி பந்த் அறிவித்தால் முதலில் மூடப்படுவது ஹோட்டல்கள்தான். ஏனெனில் அன்றைக்கு கூட்டம் குறைவாக வந்துவிட்டால் செய்தது எல்லாம் வீணாகிவிடுமே என்பது ஒன்று.. மற்றொன்று கலவரக்காரர்கள் முதலில் குறி வைக்கப்போவது இது மாதிரியான ஹோட்டல்களைத்தான்.. அதுதான் இப்போது தட்டிக் கேட்கவும் ஆட்களே இல்லையே.. அரசே சொல்லிவிட்டதால் போலீஸ் கை வைத்துவிடுமா என்ன?

நானும் முன்னொரு சமயம் இதே போன்று ஒரு பந்த் தினத்தன்று கடைகளைத் தேடி நாயாக அலைந்து பின்பு வேறு வழியில்லாமல் 5 ஆண்டுகளாக நான் சென்னையில் இருப்பது தெரிந்திருந்தும் அழைக்காமல் இருந்த ஒரு வீட்டிற்கு, அழையா விருந்தாளியாகச் சென்று 'முழுங்கிவிட்டு' வந்ததை வெட்கத்துடன் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்..

சென்னையில் ரூம் டுத்துத் தங்கியிருப்பவர்களுக்கு அன்றைய உணவுக்கான பொறுப்பு எவருடையது என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.. அது அவர்கள் பாடு.. பேச்சிலர்களாக இருந்து, இது போல் கடைகளையே நம்பி வாழுகின்ற ஜீவன்களை உணவுக்காகவே "நாளை யார் வீட்டுக்குப் போகலாம்.." என்று யோசிக்க வைக்கின்ற கொடுமையை அரசுகளே செய்வது பசியின் கொடுமையைவிட கொடியது..

ஏற்கெனவே செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை... அக்டோபர்-1 திங்கள்கிழமை பந்த்-கட்டாய விடுமுறை, அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி.. விடுமுறை நாள்தான்..

இப்படி தொடர்ந்து மூன்று விடுமுறை நாட்கள் வந்ததெனில் அரசுத் துறையின் வேலைகள் எவ்வளவு பாதிக்கப்படும்..?

அன்றைய நாளில் கிடைப்பதாக இருப்பவை மூன்று நாட்கள் கழித்தெனில் அந்த மூன்று நாட்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படப் போவது யார்? பொதுமக்கள்தானே..

ஏற்கெனவே மாதத்திற்கு 10 நாட்களுக்குக் குறைவில்லாமல் விடுமுறை கிடைக்குமளவுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து கெடுத்து வைத்திருப்பவை அரசுகள்தான்.. இதில் இதுபோல் திடீர் விடுமுறைகளை வழங்கி அவர்களை வளைப்பது ஓட்டு வங்கியை வளைக்கின்ற நோக்கம் மட்டும்தானே..

அதிலும் இந்த முறை கூடுதல் கவன ஈர்ப்பாக அக்டோபர் 1-ம் தேதியன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் வருகிறது.

அன்றைக்கு அவருடைய ரசிகர்கள் ஊர்வலமாகச் சென்று கடற்கரையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலையணிவித்து நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்கள். இப்போது இந்த ரசிகர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

"உன் தலைவனை அடுத்த நாள் கும்பிட்டுக் கொள்.." என்றா..?

அப்படியென்றால் அனைத்துத் தலைவர்களின் விசேஷ நாட்களிலும் இப்படி ஆளுக்கொருவர் பந்த் அறிவித்தால் நம்மை வளர்த்த சான்றோர்களின் மீது நமக்கிருக்கும் அக்கறைதான் என்ன..?

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பந்த் எனில் தொழில் துறையில் மட்டுமே சுமாராக 2000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமாகும்..

இந்த நஷ்டம் வெளியில் தெரியாமல், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் இருப்பதினாலும்தான் இந்த பந்த் கூத்து அனைத்து அரசுகளாலும், அனைத்து அரசியல் கட்சிகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பந்த் நடத்தித்தான் மக்களின் கவனத்தைக் கவர முடியுமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுதத வேண்டும் என்பது கோரிக்கை.

அந்தத் துறை யாருடையது மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையுடையது. அந்தத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பாலு. தி.மு.க.வின் மேல் மட்டத் தலைவர். அவர் தலைமையில் இருக்கின்ற அமைச்சகமே சரிவர வேலை செய்யவில்லை எனில் அவரைத்தானே கேள்வி கேட்க வேண்டும்.. அவரையும் மீறி நடக்கிறது எனில் அவர் ராஜினாமா செய்துவிட்டு தன்னை மீறி தன் துறையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன என்று உண்மையை மக்களிடம் சொல்லாமே..?

மத்தியில் ஆளும் கூட்டணி அரசிற்கும், தமிழக முதல்வர்தான் தலைவர். புத்தக வெளியீட்டு விழாவுக்கும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும், தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும் நொடியில் போனில் பேசுகின்ற அளவுக்கு செல்வாக்கும் இருக்கின்றபோது அதன் வழியாக இந்தப் பிரச்சினையை விரைந்து செயல்படுத்துபடி பேசுவதை விட்டுவிட்டு அப்பாவி மக்களின் அடிமடியில் கை வைப்பது எந்த வகையில் சிறந்த அரசியல்..?

மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த ஆவணத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதை வெளியில் சொல்லி எங்கள் கருத்தை ஏற்காத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொல்லி கூட்டணியிலிருந்து வெளியேறலாமே..? மக்கள் மனமுவந்து ஏற்பார்களே..

இதைச் செய்யாமல் ஏதோ ரிக்ஷா ஓட்டுபவனும், கை வண்டி இழுப்பவனும்தான் இந்த விஷயத்தில் குற்றவாளி என்பதைப் போல், அவனது ஒரு நாள் பொழைப்பைக் கெடுப்பது சிறந்த நிர்வாகமா?

கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மத்தியில் ஆளும் நிர்வாகத்தினர். அவர்களுடைய நிர்வாகத்தில் இங்கே இருப்பவர்களும் பங்கு கொண்டுள்ளார்கள். அப்படியிருக்க தமிழகத்தில் பந்த் எதற்கு? பேசாமல் இங்கேயுள்ள ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடலாமே..?

'மத்திய அரசின் கவன ஈர்ப்புத்தானே' இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதை டெல்லியிலேயே போய்ச் செய்யலாமே..? உடனடி கவனம் பெறுமே..?

இப்போது அனைவருக்குள்ளும் எழுகின்ற கேள்வி யாதெனில், மக்களுக்கு உண்டாகப் போகின்ற கெடுதிகளை வருமுன் காக்கின்ற கடமையைச் செய்ய வேண்டியவை அரசுக்கு இருக்கிறதா? இல்லையா..?

விஷயம் கோர்ட்டின் பரிசீலனையில் உள்ளது என்பதனை மறைத்துவிட்டு, 'இதனால் நமக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. நாம் எப்போதும் நல்லவர்களாகத்தான் மக்களின் கண்களுக்குக் காட்சி தர வேண்டும்.. எப்போதும் நம்மை எதிர்ப்பவர்களே கெட்டவர்கள்.. நம்மை எப்போதும் ஆதரிப்பவர்களே நமது தோழர்கள்' என்கிற ஆளும்கட்சிகளின் அரசியல் சூத்திரத்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுப் போட்ட மக்கள்தான், இவை இரண்டையும் பார்த்துக் கொண்டு எப்போதும் அமைதியாக இருப்பவர்கள்..

இவர்களின் அமைதி என்றைக்கு முடிகிறதோ, அன்றைக்குத்தான் இது மாதிரியான முட்டாள்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

சகோதரர் சுரதா யாழ்வாணனுக்கு நன்றி..!

26-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"பக்கம், பக்கமாக எழுதித் தள்றீங்களே எப்படி ஸார்..?" இப்படி என்னிடம் கேட்காத வலைப்பதிவர்கள் கொஞ்சம் பேர்தான்..

அந்த அளவுக்கு என்னுடைய கட்டுரைகளின் நீளம் உங்களுக்கு அலுப்பையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கலாம்.

ஆனால் அந்தப் பக்கம் பக்கமாக டைப் செய்வது எப்படியெனில், நான் முதலில் MS-WORD-ல் டைப் செய்து பின்பு, அதனை suratha.com/reader.htm-ற்கு கொண்டு வந்து tsc font-ல் convert செய்து அதை copy செய்து, பின்பு வலைப்பதிவின் post பக்கத்திற்கு வந்து, அதனை paste செய்வேன்.

இப்படித்தான் நேற்று வரையிலும் பதிவுகளை பதிவு செய்து கொண்டிருந்தேன்.

காரணம் எனது typing method தமிழிலேயே மிகப் பழமையான method - Inscript Method.

இதனை உடனடியாகக் கைவிட்டு வேறு method-ஐ கையில் எடுக்க எனது இன்றைய பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காததால், இதனையே கட்டி அழுது கொண்டிருந்தேன்.

வலையுலகில் அனைவரும் மின்னல் வேகத்தில் கமெண்ட்ஸ்களை போடும்போது என்னால் அந்தளவிற்கு வேகமாக இயங்க முடியாமல் தவித்ததுண்டு. அதற்கெல்லாம் மொத்தமாக இப்போது ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.

இதற்கு முடிவு கட்டியவர் அருமை நண்பர் திரு.சுரதா யாழ்வாணன் அவர்கள்.

சென்ற மாதம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் மாலை நேரத்தில் நடந்த ஒரு வலைப்பதிவர் கூட்டமொன்றில்தான் அவரை முதன்முறையாக நான் சந்தித்தேன்.

அப்போதே அவரிடம் "உங்களால்தான் நான் வலையுலகில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.." என்றேன். ஆர்வத்துடன் எனது டைப்பிங் முறைகள் பற்றி விசாரித்தார். முழுவதையும் சொன்னேன்.

"unicode-ல் டைப் செய்யும் அளவுக்கு உங்களது டைப்பிங்லேயே ஒரு கீபோர்டை நான் வடிவமைத்துத் தருகிறேன். காத்திருங்கள்.." என்று நான் கேட்காமலேயே ஒரு வாக்குறுதியை எனக்கு அளித்தார்.

சில நாட்கள் கழித்து அவர் ஜெர்மனி செல்வதற்கு முதல் நாள் அவருடைய வீட்டருகே சந்தித்துப் பேசியபோதும், "உங்களுடைய கீபோர்ட் மேட்டர் என் நினைவில் உள்ளது. நிச்சயம் செய்து தருவேன்.." என்றார்.

சொல்லியது போலவே ஊர் போய்ச் சேர்ந்து சில நாட்களுக்குள் எனக்காக unicode-ல் type செய்யும் அளவுக்கு கீபோர்ட் ஒன்றை வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளார்.

இதோ, இந்த நன்றி பதிவுகூட அண்ணன் யாழ்வாணன் அவர்களின் கீபோர்டை வைத்து நேரடியாக வலைப்பதிவின் post Box-ல் Type செய்யப்பட்டதுதான்.

பார்த்ததே இரண்டு நாட்கள்தான்..

பேசியதோ அரை மணி நேரம்தான்.

செய்து கொடுத்ததோ பெரும் உதவி.

பிரதிபலன் எதிர்பாராமல் செய்த உதவிக்கு கைமாறு என்னால் முடிந்த இந்த ஒரு நன்றி அறிவிப்புதான்..

உதவுகின்ற எண்ணத்தை உள்ளுக்குள் தோற்றுவித்த நம் அன்னைத் தமிழுக்கும்,

உதவிய பெரும் நெஞ்சம் அண்ணன் சுரதா யாழ்வாணனுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..

சுரதா யாழ்வாணன் போன்ற திறமைசாலிகள் எங்கிருந்தோ தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்க..

இங்கே தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், தமிழை வைத்தே தமிழர்களிடமே வியாபாரம் செய்வது நமது சாபக்கேடு..

உங்கள் காதுகளுக்கும் இப்படி ஆகலாம்..!

24-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அது’ எப்போது, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல் எப்போதும் சாதாரணமாகத்தான் இருந்து வந்தேன்..

‘சானா, சர்ர்ர்ரு..’ என்று செல்லமாக என்னை அழைப்பவர்களிடம் சட்டென்று திரும்பிப் பார்த்துப் பேசியிருக்கிறேன். எந்த மாறுபாடும், வேறுபாடும் என்னிடம் காணப்படவே இல்லை. ஒரு மதிய நேரம் எனக்கு அந்த உண்மையைக் காட்டும்வரையில்..

அன்றும் வழக்கம்போல் திண்டுக்கல் ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக் வகுப்பில் அமர்ந்திருந்தேன். முதல் நாள் இரவு எனது தந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருந்ததால் அரைத் தூக்கத்தில் வகுப்பறையில் இருந்தேன்.

வகுப்பு ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் என்னை உற்று உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்தபடியே ஏதோ சொல்ல. ஒட்டு மொத்த வகுப்பும் என்னையவே திரும்பிப் பார்த்தது. அப்போதும் எனக்கு அவர் சொன்னது காதில் விழவில்லை.

ஆசிரியர் அருகில் வந்து என் கன்னத்தில் விட்ட ஒரு அறைதான் எனது அரைகுறைத் தூக்கத்தை விரட்டியது. "ஒண்ணு தூங்கு.. இல்லாட்டி பாடத்தைக் கவனி.. அரைத் தூக்கத்துல என்னைப் பார்த்து என்னையும் தூங்க வைக்கதடா.." என்றார் ஆசிரியர். அடித்ததைவிடவும் அவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நிறைய துக்கத்தைக் கொடுத்தது..

வகுப்பு முடிந்து வெளியில் வந்தவுடன் சக நண்பர்கள் "என்னடா ஸார் அவ்ளோ நேரம் உன்னைப் பத்தியே பேசுறாரு.. அப்படியே இடிச்சப்புளியாட்டம் உக்காந்திருக்கிறே..?" என்றார்கள். அப்போதும் நான் அவர்களிடம் கேட்டேன்.. "அப்படியா.. என்ன சொன்னார்..?" என்றேன்.. ஏதோ வித்தியாசமாக என்னைப் பார்த்தபடியே சென்றார்கள் நண்பர்கள்.

வீடு திரும்பியவுடன் எனது அக்கா வாசலிலேயே காத்திருந்தவர் சத்தம் போடத் துவங்கினார், "ஏண்டா காலைல எத்தனை தடவ கத்துறது.. நீ பாட்டுக்கு கண்டுக்கா போய்க்கிட்டே இருக்க.. சரி.. சரி.. சீக்கிரமா போ.. மாமா ஏதோ ஊருக்குப் போகணுமாம்.. அதுனால உன்னை உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.." என்று விரட்டினார்.

ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்பதைவிட காலையில் அக்கா கூப்பிட்டது என் காதில் ஏன் விழுகவில்லை என்பதே எனக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.

மருத்துவமனையில் இரவு நேரத்தில் எனது தந்தை தூக்கம் வராமல் “ஒரு ஊசியைப் போடச் சொல்லுடா.. செத்தாவது போகிறேன்..” என்று கண்ணீர் சொட்டாக வடிய கெஞ்சியபோது அதுகூட எனக்குக் கேட்காமல் போய் பக்கத்து பெட்காரர் அதைக் கேட்டு எனக்கு டிரான்ஸ்லேட் செய்தபோது சத்தியமாக எனக்குத்தான் சாவு வர வேண்டும் போல இருந்தது.

அங்கே இருந்த நர்ஸ் என்னைத் தோளைத் தட்டி இழுத்து "என்னாச்சு உனக்கு? காது கேட்காதா..?" என்று கேட்டபோதுதான் அப்படியரு விஷயமே எனது காதுக்கு வந்தது.

கொஞ்சம் லேசாக கேட்டேன்.. உற்றுக் கேட்டேன்.. ஆம்.. எனது காதில் ஏதோ ஒரு சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 'கிர்ர்ர்' என்ற சப்தம். டேபிள் பேன் ஓடினாலும் ஒரு லேசான சப்தம் எழுமே.. அதே போல்தான்.. எனது இனிய காதுக்கு ஏதோ ஒன்றாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது..

மருத்துவர்களிடம் ஓடினேன்.. தேனினும் இனிய செய்தியை நமது தேனமுத தமிழில் என் செவியில் திணித்தார்கள். “உங்களது செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி குறைந்துள்ளது. அதனால் உங்களுக்கு கேட்கும் சக்தியும் குறைந்துள்ளது..” என்று.. இந்தச் செய்தியை கேட்கும் சக்தியே எனக்கில்லை..

அப்போது நான் ஒரு வயதுக்கு வந்த 16 வயது வாலிபன். ‘விக்ரம்’ படத்தை 6 முறை பார்த்துவிட்டு, நானே கமல்ஹாசனைப் போல் மனதிற்குள் எண்ணிக் கொண்டு ஒரு கனவுலக கதாநாயகனாக எனக்குள்ளேயே ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு காது அவுட் என்று சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை ஜனகராஜ் இடத்திற்கு கொண்டு வந்தார் அந்த மருத்துவர்.

உதடு துடிக்கிறது. வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஏதாவது செய்யக்கூடாதா என்று கண்களில் திரண்டு நின்ற கண்ணீரோடு கேட்கிறேன்.

"இல்லை சரவணன்.. இது பரம்பரை வியாதியாக உங்களைத் தொற்றியிருக்கிறது. உங்களது அம்மாவின் 40-வது வயதில் பிறந்திருக்கிறீர்கள். அப்போது உங்களது அம்மாவுக்கும் உடம்பில் சக்தி குறைந்துள்ளது. அதனால் பிறக்கின்றபோதே இந்த வீக்னஸோடுதான் பிறந்திருக்கிறீர்கள். அதோடு உங்க அம்மாவுக்கும் இப்போது இந்த வியாதி வந்துள்ளது. ஸோ.. வருவதை.. வந்துவிட்டதை ஒன்றும் செய்ய முடியாது.." என்றார் டாக்டர் மோகன்ராவ்..

ஏற்கெனவே அப்பாவுக்கு கேன்சர் என்று ரணகளமாக இருந்த எனது இல்லம், இப்போது எனது காதுகளும் அவுட் என்றவுடன் இன்னும் கொஞ்சம் சோகத்தை அப்பிக் கொண்டுவிட்டது.

அதன் பிறகு தினமும் அனைவரும் எனது பாணியில் கத்தத் துவங்கினார்கள். “கத்திதான் பேச வேண்டும். வேறு வழியில்லை.. நாங்க சமாளிச்சுக்குறோம்..” என்று எனது அக்கா ஆறுதல் பாணியில் சொல்லி என்னைத் தேற்றினார்.

பின்னாளில் இந்த நோய்க்கு பரிகாரம் என்னவெனில் “எலும்பு மாற்று அறுவை சிகிச்சைதான்..” என்றார் சென்னையின் மிகப் பெரிய காது மருத்துவர். “ஆஸ்திரேலியாவிலிருந்து எலும்பை வரவழைப்போம். ஒரு சுமாரா 8 லட்சம் ரூபாய் செலவாகும்..” என்று கூலாகச் சொன்ன டாக்டரிடம் அவருடைய பீஸ¤க்கு ஆகும் பணத்தையே கடன் வாங்கி வந்திருக்கிறேன் என்பதை சொல்ல முடியுமா என்ன..?

“ஊரில் என் தாத்தாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன் ஸார்..” என்று சொல்லிவிட்டு வந்தவன்தான், இன்னும் அந்த கிளினிக் பக்கமே செல்லவில்லை.

ஒரு மாதம் நான் என் நினைவிலேயே இல்லை.. எனது தந்தையிடம்கூட நான் சொல்லவில்லை. அவரே “தன்னைக் கருணைக் கொலை செய்துவிடு” என்று என்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் நான் என் சோகத்தைச் சொல்லி என்ன செய்ய என்று விட்டுவிட்டேன்..

எப்படி வந்தது இது?

மருத்துவக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் செய்த அரிய செயல்களைப் பாருங்கள்..

கிரிக்கெட் என்றால் எனக்கு அப்போது உயிர். ரேடியோவை தலைமாட்டில் வைத்து கிரிக்கெட் கேட்டுக் கொண்டே இருப்பேன். “ரேடியோவை கொஞ்சம் தள்ளிதான் வையேண்டா...” என்று என் வீட்டினர் கெஞ்சினாலும் ரேடியோ என் காதோரம்தான் இருக்கும்.

ஐடிஐயில் படித்தபோது எனது நண்பன் மோகன்தாஸ் ஒரு சிறிய கையடக்க டேப்ரிக்கார்டரை கொண்டு வந்தான். அதில் கிரிக்கெட் கமெண்ட்ரியை கேட்பதற்காக hear phone-ஐ மாட்டி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.

முன் வரிசையில் இருக்கும் நண்பர்கள் என்னிடம் திரும்பி ஸ்கோர் கேட்கும்போது நான் வேண்டுமென்றே பந்தா செய்து ஒரு இரண்டு, மூன்று கெஞ்சல்களுக்குப் பிறகு சைகையில் சொல்வேன்.. ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. ஒரு வருடம் தொடர்ந்தது..

ஏற்கெனவே வைட்டமின் சி அல்லது டி எதுவோ ஒன்று குறைபாடுடன் இருந்த நான் இதையும் கேட்க கேட்க.. காதின் உள் எலும்பின் சக்தி தாக்கப்பட்டு வலுவிழக்க ஆரம்பித்து, கடைசியில் முக்கால் செவிடன் என்கிற இன்றைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..

நண்பர்களை விடுங்கள்.. அவர்கள் பரவாயில்லை.. பக்கத்திலேயே வந்து பேசுவார்கள்.. சமாளித்துக் கொண்டேன். மற்றவர்கள்.. முதலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசி எனக்கே வெட்கமாகி பின்பு வெளியாள் யாருடனும் பேசாமல் என்னை நானே குறுக்கிக் கொண்டேன்..

அப்போதுதான் “மருத்துவர் காது கேட்கும் கருவியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை..” என்று சொன்னவுடன் எனது கனவுலகத்தைக் கலைத்துவிட்டு ஒரு பெரும் மனப் போராட்டத்திற்குப் பிறகு காது கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்திக் கொண்டேன்.

அப்போதும், இப்போதும் சிலர் கத்த முடியாமல் வெறுப்பாக என்னிடமே தங்களது முகத்தைக் காட்டும்போது அப்படியே ஜன்னல் வழியாக கீழே குதித்துவிடலாமா என்ற எண்ணம்தான் எனக்குள் வரும்.. இதற்காகவே எங்கு வேலை பார்த்தாலும் அநாவசியமாக யாரிடமும் சென்று பேசாமல் இருந்துவிடப் பழகிவிட்டேன்.

முதலில் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடிந்திருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளை சிறிய வயதிலேயே நான் எடுத்திருந்தால் என் காது பிழைத்திருக்கும். அந்த அளவிற்கான அறிவுத்திறன் என் இல்லத்தில் யாருக்கும் இருக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..

இப்படியரு குறை இருக்கிறது என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அதிகமாக ஒலியைக் கேட்காமல் தவிர்த்து எனது காதைக் காப்பாற்றியிருக்கலாம்.

அன்றிலிருந்து வாக்மேனில் பாட்டு கேட்கும் பழக்கத்தைத் தொலைத்தே விட்டேன். இப்போதும் யாராவது “வாக்மேனில் மேட்டரைத் தருகிறேன். கேட்டு டைப் செய்து கொடுங்கள்..” என்று சொன்னால் எவ்வளவு பணம் தருகிறேன் என்றாலும் “முடியாது..” என்று சொல்லிவிடுவேன்.

ஏனெனில் அதிகமான ஒலியை இப்போதும் எனது காதில் கேட்டால் அன்று இரவே என் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ரீங்காரமான சப்தம் என்னைத் தூங்கவிடாமல் செய்து தலைவலியை கொண்டு வந்துவிடும்.

இந்தக் காரணத்திற்காகவும் நான் வெளியில் வண்டியோட்டிச் செல்லும்போதுகூட காது கேட்கும் கருவியை மாட்டாமல்தான் சென்று வருகிறேன்.

இந்தத் தலைவலியும், அதன் உடன்பிறப்பான காய்ச்சலும் தொடர்ந்து வந்தால் நான் அடித்துச் சொல்வேன்.. எனது காது கேட்கும் திறன் 2 டெசிபல்கள் குறைந்துள்ளது என்று..

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் எனது காது கேட்கும் திறனான டெசிபல்கள் குறையும். அதை நான் கவனித்தே வந்திருக்கிறேன்.

இந்த காது கேளாமை நோயும் இப்போது பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிகமான சத்தம், இரைச்சலான சப்தம் ஏற்படும் இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு முதலில் தொற்றக்கூடியது இந்நோயாகத்தான் இருக்கும்.

ஏனெனில் உடல் ஊனமுற்றவர்களில் இந்த காது கேளாமை வாயிலாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கைதான் உலகளவில் முதலிடமாம்.

இப்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் இந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிலும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்கள்தான்.

இந்தியாவில் 1000-த்துக்கு 2 அல்லது 3 குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை நோயோடு பிறக்கின்றன என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 6.3 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பவர்களாம்.

இன்றைக்கு கக்கூஸில் இருக்கும்போதுகூட செல்போனில் பேசிக் கொண்டே அவசர வாழ்க்கை வாழ்ந்து வரும் இளைஞர்கள் நிறைய பேர், நாளைய முதியவர்களாகும்போது காது கேளாமையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிகபட்சமான கூம்பு வடிவ ஸ்பீக்கரின் அருகில் நின்று பாட்டு கேட்பது, மேடை கச்சேரிகளின்போது அருகில் சென்று கேட்டு காதைக் கிழித்துக் கொள்வது.. நாடகம் பார்க்கச் சென்று நடிகர், நடிகைகளை அருகில் பார்க்க நினைத்து நம் காதிற்குள் வம்பாக அதிகப்பட்சமான ஒலியை திணித்துக் கொள்வது..

இவை போன்று நம்மால் முடிகின்ற விஷயங்களைத் தவிர்த்தோமானால் என்னைப் போன்ற தவிர்த்திருக்கக்கூடிய சிலரும் பிழைத்துக் கொள்ளலாம்.

நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று இப்போதே செக் செய்து கொண்டு அதற்கேற்ற மருத்துவம் எடுத்துக் கொண்டு வருமுன் காப்பது அனைவரின் குடும்பத்திற்கும் நல்லது.

அனுபவப்பட்டவன் சொல்கிறேன்..

ஏனெனில் அனுபவமே வாழ்க்கை..!

அனுபவமே இறைவன்..!

பின்குறிப்பு : இன்றைக்கு உலக காது கேளாதோர் தினம்.

புகழ் பெற்றவர் அயோத்தி ராமரா..? சேது ராமரா..?

22-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

போகின்ற போக்கைப் பார்த்தால் அயோத்தி ராமனைவிடவும் சேது ராமன் அகில உலகப் புகழ் பெற்று விடுவார் போலிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம் பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்து, திட்டமிடப்பட்டு, கடைசியாக சமீபத்தில் உருவாக்கப்பட்டபோதே ராமர் பாலத்தின் கதி என்னாவது என்று கண்ணீர் விட்டது பா.ஜ.க.

திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்போது 60 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து உடைக்கப்பட இருப்பது ராமர் பாலம்தான் என்றவுடன் மறுபடியும் ஒரு ராமர்-ராவணன் மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

போதாக்குறைக்கு கலைஞர் வேறு “ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்..?” என்று குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு எரிகிற தீயில் எண்ணெய்யை வார்த்துள்ளார்.

ராமர் பாலத்தை இடிக்காமல் தனுஷ்கோடி வழியாக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்கிற கருத்துக்கு ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு கலைஞரைத் தவிர ஆளும் மத்திய அரசுக் கூட்டணியின் மற்றத் தலைவர்களும் ஒத்துக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.

நானும் ஒரு பக்தன்தான். கடவுள் பக்தி உள்ளவன்தான். ராமாயணம் நடந்த கதைதான் என்பதில் உறுதியாக இருப்பவன்தான். அதே சமயம் மக்களுக்காகத்தான் கடவுளே தவிர.. கடவுளுக்காக மக்கள் இல்லை என்ற கருத்திலும் இருப்பவன்.

புராதன சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் அரசியல் ஆத்திகவாதிகள் நாடு முழுவதிலும் உள்ள கோயில்களின் நிலைமைகளை பார்த்து, அதைச் சரியாகப் பின்பற்றி வருகிறோமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள்.. அங்கேயுள்ள ஆயிரங்கால் மண்டபத்தைச் சுற்றிலும் 108 கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே கோவிலின் உள்பிரகாரத்துக்குள்தான்..

கோவிலே புராதானச் சின்னம் என்றிருக்க.. அந்த புகழ் பெற்ற கோவிலை பிளாட் போட்டு விற்பதைப் போல் எட்டுக்கு எட்டு என்ற அளவில் தங்களுக்குள்ளேயே பாகப்பிரிவினை செய்து கோவிலையும், அந்தப் புராதனச் சின்னங்களையும் அசுத்தமாக்கியிருக்கும் இந்த அரசியல் ஆத்திக வியாதிகளை என்னவென்று சொல்வது?

இவர்களை யார் முதலில் தட்டிக் கேட்பது..

அதே மதுரையிலேயே புதுமண்டபம் என்னும் தொன்மையான மண்டபமும் உண்டு. அந்த மண்டபம் முழுக்கவே இப்போது கடைகள்தான். கேட்டால் வாடகை கிடைக்க வேண்டுமாம்.. அதை வைத்துத்தான் இந்து சமய அற நிலையத் துறைக்கு வருடச் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமாம்.. கோவிலுக்கு ஆகும் செலவிற்கும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

மதுரை என்றில்லை சிதம்பரம், தஞ்சை, ராமேஸ்வரம் என்ற புகழ் பெற்ற கோவில்கள் அனைத்திலுமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் கோவில் இடங்கள் அனைத்தும் குப்பை மேடாக இருக்கிறது.

கண் முன்னே இருக்கின்ற ஒரு அசிங்கத்தைப் பார்த்து நிவாரணம் செய்ய அரசியல் வியாதிகளுக்கு நேரமில்லை.. விருப்பமும் இல்லை..

இப்போது இங்கே வாடகையாக கிடைக்கின்ற சொற்ப பணத்திலேயே இருக்கின்ற புராதானச் சின்னங்களை பராமரிக்க முடியாமல் திணறுகின்ற இந்த அரசுகளைத் தட்டிக் கேட்க முடியாதவர்கள் பூமிக்குள் அமிழ்ந்து கிடக்கும் பாலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்தனைக்கும் இன்றுவரையிலும் அந்தப் பாலத்தின் மீது நடந்து சென்றவர் யார்..?

அந்தப் பாலம் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. நாசாவின் புகைப்படத்தை வைத்துத்தான் சுப்பிரமணியம் சாமியிலிருந்து அத்வானி வரையிலும் அனைவரும் ராமனுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.

அந்த ஒரு பாலத்தை உடைத்து வழி ஏற்படுத்தினால் நாளைய எதிர்கால சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளும், மாநிலத்திற்கு வருவாய் வாய்ப்புகளும் கிடைக்கின்ற வாய்ப்பு இருக்கின்றபோது அதை செய்வதுதான் நாட்டிற்கு நல்லது.

அந்தப் பாலம் ராமர் கட்டியதாகவே இருக்கட்டும். கடவுளை வணங்குதல் என்பதே நம்முடைய நலனுக்காகத்தானே.. அப்படிப்பட்ட கடவுள் பக்தர்களுக்காக தன்னுடையதை விட்டுத் தர மாட்டாரா? என்ன செய்துவிடப் போகிறார்..?

ஆத்திகம் என்பதற்காக அதைத் தொட்டுக் கும்பிட வேண்டும் எனில் எத்தனையோ ஊர்களில் நட்ட நடு ரோட்டில் இருந்த கோவில்களையெல்லாம் சாலை அமைப்பிற்காக நாம்தானே இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

அவையெல்லாம் இப்போது கட்டிய கோவில்கள்.. புராதனச் சின்னங்கள் இல்லை என்று வாதமிட்டால், தமிழ்நாட்டின் புராதனச் சின்னங்களான கோவில்களின் இன்றைய நிலைமைக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்.

சென்ற வருடம்தான் இன்னொரு கொடுமையும் மதுரையில் நடந்தது.

மதுரை திருமலை நாயக்கர் மஹாலை புனரமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு திரைப்படத்தின் ஷ¥ட்டிங்கிற்கு அதை வாடகைக்கு விட்டார்கள். வாடகைக்கு எடுத்தவர்கள் லைட்டிங்ஸ் செய்வதற்காக மஹாலின் தரைத் தளத்தில் ஆங்காங்கே தோண்டி மணலை அள்ளி வெளியே கொட்டிவிட்டார்கள். இதையும் அரசு அதிகாரிகள்தான் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இதை எந்த ராமனிடம் போய் சொல்லி அழுவது?

ஒரு காலத்தில் தனுஷ்கோடி துறைமுகமாக இருந்த நகரம்தான். ஆனால் அது இன்று அழிந்து போய் கண்டு கொள்ளப்படாமலேயே சிதைந்து போய் நிற்கிறது.

புராதனச் சின்னம் என்று வாய்க்கூச்சல் போடுகிறவர்களுக்கு அதைப் பற்றிக் கண்டு கொள்ள நேரமில்லை. ஏனெனில் தனுஷ்கோடியில் இப்போது இருப்பது இவர்களுக்கு எதற்கும் பயன்படாத மீனவ குடும்பங்கள்.

ஆனால் ராமர் அப்படியல்ல..

தீயாய் பற்றிக் கொள்பவர். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரையிலும் நித்தம் நித்தம் தெய்வத்தைத் தொழுவதைத் தவிர வேறு வேலையில்லாமல் உழலுபவர்களின் மூளையை மழுங்கடிக்கும் சக்தி வாய்ந்தவர். அவர்களின் எதிர்வினை ஓட்டுச் சீட்டுக்களில் பதிந்து விடாதோ என்ற எண்ணம்தான்..

முதல் நாள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தை மறுநாள் வாபஸ் பெறுகிறது மத்திய அரசு. இரண்டு அரசு அதிகாரிகள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு பலிகடாவாக்கிவிட்டு தான் நல்ல பெயர் பெற்றுவிட்டது.

போதாக்குறைக்கு மந்திரிகளுக்குள் மோதல் என்றும் சூட்டைக் கிளப்பி மத்திய அரசின் கையாலாகதனம் என்ற பெயரையே மறைத்து அப்போதைக்கு தப்பித்துவிட்டது.

நல்லவேளை.. அதை வாபஸ் பெறவில்லையெனில் இத்தனை நாள்கள் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுதத இராமாயணக் கதையின் நோக்கமே மாறியிருக்கும்.

“ஒரு பொய்யான விஷயத்தை.. நடக்கவே நடக்காத அர்த்தமில்லாத ஒன்றை ‘பாடம்’ என்று சொல்லி ஏன் வைத்திருந்தீர்கள்?” என்று யாராவது ‘அறிவிப்பூர்வமாக’ கேள்விகளை கேட்டுவிட்டால் யார், என்ன பதில் சொல்வது என்று அர்த்தராத்திரியில் யாரோ ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தப்பித்துக் கொண்டார்கள்.

அது நடக்கவே நடக்காத கதைதான் என்று சொல்பவர்கள் இத்தனை நாட்கள் எனக்கு, என் தந்தைக்கு, என் தாத்தாவுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் வாய் திறக்காமல் அமைதி காத்தது ஏனோ..?

ஒரு பொய்யுரையை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கலாமா..? என்று கேள்வி எழுப்பி அதை நிறுத்தியிருக்க வேண்டுமே? செய்தார்களா?

அவ்வப்போது அவர்களுக்கு பேசுவதற்கு ஏதும் விஷயமில்லாத போது சொல்ல வேண்டியது இது போன்ற விஷயங்களைத்தான்..

ஏனெனில் ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும்தான் இங்கே நேரடி வாரிசுகள் இல்லையே என்ற அர்த்தமுள்ள தந்திரம்தான்..

எங்கும் விநாயகர்

விநாயகனே! வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞான முதல்வனே!
விநாயகனே! வினை தீர்ப்பவனே..!

ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். ‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.
விநாயகருக்கு மற்றொரு பெயர் விக்னேஸ்வரர். 'விக்னம்' என்றால் 'தடை' என்று பொருள். 'தடைகளை நீக்குகின்ற ஈஸ்வரன்' என்பதனால் இப்பெயர் பெற்றார்.

“குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்” என்ற பழமொழியை கேட்டிருப்பீங்க. உண்மையிலேயே “குட்டுப்பட்டாலும் மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்பதுதான் இதன் அர்த்தம்.

விநாயகரைத் தவிர நாம் வேறு எந்தத் தெய்வத்தின் முன்னாலும் நாம் குட்டுப் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் தினமும் விநாயகர் முன்னால் இதனைச் செய்கிறோம்.

விநாயகருக்கு ஐந்து கரங்கள் உண்டு. ஒரு கையை தாய், தந்தையரான பரமசிவம்-பார்வதிக்கும், மற்றொரு கையைத் தேவர்களின் நலம் பொருட்டும், ஒரு கையைத் தன் பொருட்டும், இரு கைகளை நமக்கு உதவுவதன் பொருட்டும் வைத்திருக்கிறார் என்று தணிகைப் புராணம் கூறுகிறது.

‘ஓம்’ என்ற எழுத்தின் வடிவமாய் ஓங்கார ரூபத்தில் எழுந்தருளி இருக்கும் சகல ஞானத்திற்கும் அதிபதியான விநாயகரைத் தொழும் சிறந்த கால் விநாயகர் சதுர்த்தி நாளன்றுதான்.

இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளான விநாயகர் எங்கும் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தனித்து நிற்கிறார்.

வழிபாடு

விநாயகர் வழிபாடு என்பது பாரத நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, போர்னியோ, இந்தோனேசியா, சீனா, சிரு, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி எனப் பற்பல நாடுகளிலும் பற்பல நூற்றாண்டுகளாகப் பரவி, நிலவியமைக்கும் பல சான்றுகள் உள்ளன.

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

ஊரும், பேரும் ஒரே பெயர். அவர்தான் பிள்ளையார்பட்டி பிள்ளையார்.

பரஞ்சோதி முனிவர் வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை திருச்செங்காட்டான் குடியில் பிரதிஷ்டை செய்தபோது பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருந்தான்.

பிள்ளையார் உருவம் அவன் மனதைப் பெரிதும் கவர்ந்தது. காரைக்குடியை அடுத்த குன்றக்குடி அருகே ஒரு குன்றில் அப்பிள்ளையார் உருவத்தை அமைத்தான். அங்கே கற்பக விநாயகர் அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்துவிட்டார்.

கும்பகர்ணப் பிள்ளையார்

இந்தப் பிள்ளையார் கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரைப் பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி எறி எனறு கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார். விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் விநாயகப் பெருமானுக்கு கும்பகர்ணப் பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஸ்ரீஆதியந்தப் பிரபு

சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் அழகிய கோயிலில் இந்த விநாயகர் அமர்ந்திருக்கிறார்.

இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான விக்கிரகத்தை இங்கு பார்க்கிறோம்.

இதில் மற்றுமொரு விசேஷம். நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்தக் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

இரட்டைப் பிள்ளையார் தரிசனம்

ஒரு விநாயகரை வணங்கினாலே சிறப்பு. இரட்டை விநாயகரை வணங்கினால் மிகவும் சிறப்பு.

ஆனால் இரட்டை விநாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில இடங்களில் இருக்கிறார்கள்.

சங்கரன்கோவிலில், சங்கரநாராயணர் கோவிலின் பின்புறம் வேலப்ப தேசிகர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.

இக்கோவிலில் இரட்டை விநாயகர் அமைந்து அருள் பாலித்து வருகின்றனர்.

வலம்சுழி வெள்ளை விநாயகர்

தமிழ்நாட்டில் கோவில்கள் சூழ்ந்த இடம் என்று கும்பகோணத்தைச் சொல்வார்கள்.

கும்பகோணத்திற்கு அருகில் இருப்பது சுவாமி மலை. சுவாமி மலைக்கு மிக அருகில் இருப்பது திருவலஞ்சுழி.

இந்தத் திருக்கோயிலில் வலம்சுழி வெள்ளை விநாயகர் தரிசனம் தருகிறார். வெள்ளை நிறக் கையினால் தொடப்படாதவர் இவருக்கு பச்சைக் கற்பூரத்தால்தான் அபிஷேகம். பார்க்கடல் கடையுமுன்னர் வழிபட்ட மூர்த்தி என்று கூறப்படுகிறது.

உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் வாணி, கமலா என்ற இரு தேவிமார்கள் இருக்கின்றனர்.

துதிக்கை வலமாக சுருண்டிருப்பதினாலேயே வலஞ்சுழி என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது.

இவருடைய திருவடிவை கடல் நுரையால் உருவாக்கி, தேவேந்திரன் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகத் தல புராணம் கூறுகிறது.
இந்த விநாயகரைத் தரிசிக்க வந்த கவி காளமேகம் மிக அழகான பாடலொன்றைப் பாடியுள்ளார்.

“பறவாத தம்பி கருகாத வெங்கரி பண் புரண்டேஇறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல்நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில்பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”

தும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன.

அவற்றை இப்பாடலில் விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம், நீல் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளகமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.

வினைகளைத் தீர்க்கும் வில்வ விநாயகர்

வேழமுகத்து விநாயகர் சில திருத்தலங்களில் வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கொலு வீற்றிருப்பார். அவரை வணங்கி அல்லல் நீங்கப் பெற்றிருப்போம்.

ஆனால் சிவனுக்கே உரிய வில்வ மரத்தடியில் அமர்ந்த வலம்புரி விநாயகராக அருள் புரியும் பிள்ளையார் பெருமானை நீங்கள் தரிசத்ததுண்டா?

சென்னை குரோம்பேட்டை உமையாள்புரம் என்னும் வீதியில் விநாயகப் பெருமான் வில்வ மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

நிறம் மாறும் அற்புத விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கேரளபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு அழகிய ஆலயம் உள்ளது. இதுவே மகாதேவன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியே கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. இங்கு எழுந்தருளியிருப்பவரே நிறம் மாறும் விநாயகராவார்.

ஆண்டு தோறும் உத்தராயண காலத்தில் (மாசி மாதம் முதல் ஆடி மாதம்வரை) இவ்விநாயகர் (ஆவணி மாதம் முதல் தை மாதம்வரை) நிறம் கருமையாக உள்ளது என்பது இதன் சிறப்பு.

ஈச்சனாரி விநாயகர்

கோவை மாவட்டத்தில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுவது பேரூர் ஆகும்.

இங்குள்ள பாடல் பெற்ற பராதனப் பெருமைமிக்க பண்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.

அப்படி வண்டியில் வைத்து எடுத்து வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.

விநாயகர் சிலையைப் பட்டீஸ்வரத்திற்கு எடுத்துச் சென்ற பக்தர்களால் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.

இறைவனின் விருப்பத்தை யார் தடுக்க முடியும்?

இறுதியில் அங்கேயே விநாயகப் பெருமான் கலியுகக் கர்ணாமூர்த்தியாக அருள் புரிய சித்தம் கொண்டார்.

ஆம், அவ்விடத்தில் பிள்ளையார் பெருமானுக்குப் புகழ் பெற்ற ஆலயம் எழும்பியது. அதுவே இப்போது ஈச்சனாரி விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜை

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.

விநாயகரின் திருவுருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளைச் சலவைக்கல், முத்து, பவழம், யானைத் தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைந்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.

அந்தப் பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயகப் பெருமானின் பலவிதப் பெயர்களைச் சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தைச் சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டைப் பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது. எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியைப் பெற்றுத் தரும்.

எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.

வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களைத் தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.

அவரே வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள்.

ரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்

13-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!“உடல் பாதுகாப்பு விஷயத்தில் கணவர்களை நம்பக்கூடாது. தங்கள் பாதுகாப்புக்கு பெண்களே ஆணுறையை வாங்கிக் கொள்ள பழக வேண்டும்..” என்று மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி அட்வைஸ் செய்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் செக்ஸ் கல்வி உட்பட பல பிரச்சனைகளில் தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து முன்னர் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரேணுகா சவுத்ரி. தற்போது ஆணுறை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் பேசியுள்ளார்.

சமீபத்தில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேசிய அமைப்பின் சார்பில் டில்லியில் நடந்த கூட்டத்தில்தான் மத்திய அமைச்சர் ரேணுகா இப்படி பேசியுள்ளார்.

"பெண்கள் எய்ட்சிலிருந்து தங்களைப் பாதுகாப்பதில் ஆண்களை நம்பக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் ஆண்களை சார்ந்திருக்காமல், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் ஆணுறையை வாங்கி வர தெரிந்து கொள்ள வேண்டும். ஆணுறையால் மட்டுமே நோயிலிருந்து ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். கடைகளிலோ அல்லது மருந்து கடைகளிலோ ஆணுறைகளை வாங்குவது குறித்து பெண்கள் கூச்சப்படக்கூடாது.

ஆண்களையோ அல்லது கணவன்களையோ பெண்கள் நம்புவது கூடாது. இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்பினால், நீங்கள் நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆண்கள் ஆணுறைகளை வாங்க மாட்டார்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதில் கணவர்கள் சந்தேகப்பட்டால் சந்தேகப்பட்டுக் கொள்ளட்டும்..

பாலியல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி சிறு வயதிலேயே அனைவரும் அறிய வேண்டும். இல்லாவிடில் எதிர்கால சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்படுவர். இதை உணர்ந்துதான் பள்ளி பாடத் திட்டத்தில் பாலியல் கல்வி பாடத்தைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை எதிர்ப்பவர்கள் கபடதாரிகள் என்றுதான் அர்த்தம்.." என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்.

எய்ட்ஸ் நோய் பொதுவாகவே 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவரையே தாக்குகிறது. இந்நோயைத் தடுக்க முடியும் என்றாலும் விரைவில் கண்டறியப்பட முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் அவ்வளவு எளிதில் ஒருவருக்கு நோய் இருப்பதை உணர்த்துவதில்லை.

கடந்தாண்டு ஆய்வுப்படி உலகில் 3.95 கோடி பேரும், இந்தியாவில் 25 லட்சம் பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் நைஜீரியாவைத் தொடர்ந்து இந்தியாவில்தான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

இந்நோய் உடலுறவால் 85.34 சதவீதமும், பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு 3.80 சதவீதமும், ரத்தம் சார்ந்த வகையில் 2.05 சதவீதமும், போதை ஊசி மூலம் 2.34 சதவீதமும் பரவுகிறது. இதில் ஆச்சரியப்படும் விஷயமாக 6.46 சதவீதம் நோய் பரவும் விதமே தெரியவில்லை என்கிறார்கள்.

தினமும் 1500 குழந்தைகள் உட்பட 11,000 ஆயிரம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 95 சதவீதத்துக்கு மேல் ஏழை மற்றும் நடுத்தர மக்களே அதிகம்.

ஆனாலும் எய்ட்ஸ் பாதித்த ஒருவர், பல ஆண்டுகள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடியும். குணப்படுத்த முடியாது என்றாலும் அவரின் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும். அவருடன் பணியாற்றுவதாலோ, பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலோ பாதிப்பு ஏற்படுவதில்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குள் திருமணங்கள்கூட நடந்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் முறையற்ற உடலுறவால்தான் மிக அதிகமாகப் பரவி வருகிறது என்பதால்தான் அதைத் தடுக்க ஆணுறை அவசியம் என்ற பிரச்சாரம் வலுப்பட்டு வருகிறது.

இப்போது ஆணுறைகளை வாங்குவதே யாருடைய வேலை என்கின்ற அளவிற்கு பேச்சு எழுந்துள்ளது ஆச்சரியமான விஷயம்தான்..

“ஆண்களையோ அல்லது கணவன்களையோ பெண்கள் நம்புவது கூடாது. இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்பினால், நீங்கள் நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்..” என்று ரேணுகா பேசியதிலிருந்தே தெரிகிறது.. இது யாருக்கான அட்வைஸ் என்று..

மத்திய அமைச்சரே என்றாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? எதற்கு வீணாக பெண்ணியத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து நிகழ்கால வாழ்க்கையோடு ஒத்துப் போகத்தான் வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார் ரேணுகா.

“ஆண்கள் ஆணுறைகளை வாங்க மாட்டார்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதில் கணவர்கள் சந்தேகப்பட்டால் சந்தேகப்பட்டுக் கொள்ளட்டும்..” -- இப்படிப் போட்டுத் தாளித்திருக்கிறார்.

குடிகார கணவர்களை ஒதுக்கும்படியோ, அவர்களிடமிருந்து விலகும்படியோ பெண்களுக்கு புத்தி சொல்ல முன் வரவில்லை அமைச்சர் ரேணுகா. “அவர்கள் அப்படித்தான் வருவார்கள். நாம்தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்..” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஏற்கெனவே ஒரு முறை இந்தியா டுடே பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியன்றில் “செக்ஸை நான் வெறுக்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. அதற்காக நான் இப்போது சாமியாரிணியாகவும் இல்லை” என்று கண் சிமிட்டிச் சொல்லி அசர வைத்திருந்தார்.

இந்தத் தைரியம்தான் ரேணுகாஜிகிட்ட எனக்கு ரொம்பப் புடிச்சது..

வலையுலக எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்

10-09-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வலையுக எழுத்தாளர்களின் பிம்பங்கள் மீது மீடியா பிம்பங்களின் பார்வை பட ஆரம்பித்துவிட்டது போலும். அதுதான் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஆனந்தவிகடனில் வலையுலகத்தினரின் அறிமுகப் படலம் வெளி வந்து கொண்டிருக்கிறது.

நீங்களே பாருங்கள்..

ஆகஸ்ட் 29 இதழில் tedujobs.blogspot.com

செப்டம்பர் 5 இதழில் குட்டீஸ் ஜங்ஷன் arumbugal.blogspot.com

செப்டம்பர் 12 இதழில் jazeela.blogspot.com

நம் கனவு மெய்ப்படத் துவங்கிவிட்டது.

வாழ்த்துக்கள் தோழர்களே.. தோழியர்களே.. ஜமாயுங்கள்.

இதோடு நண்பர் சிந்தாநதி இந்த மாதத்திய தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தட்டச்சை எளிமையாக்கும் தமிழ் 99 விசைப்பலகை என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவரையும் மனதார வாழ்த்த வேண்டும்.

கூடவே தமிழ் கம்ப்யூட்டர் இதழுடன் கொடுக்கப்பட்டுள்ள சிடியில் தமிழில் வலைப்பதிவுகளை எப்படித் துவக்க வேண்டும்? தமிழில் எவ்வாறு உள்ளீடு செய்ய வேண்டும்? தமிழில் எவ்வாறு டைப்பிங் செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி மிக அழகான வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நண்பர் சிந்திநதியாருக்கு உண்மைத்தமிழனின் சல்யூட்.

வாழ்க வளமுடன்..!

நவாஸ் ஷெரீப்பின் ஒரு நாள் நாடகம் முடிவு

பரபரப்பாக பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்பியதால் அந்நாட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒரு நாள் இரவோடு இரவாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறைவாசத்தையும் அனுபவித்து சவூதி அரேபிய அரச குடும்பத்தினர் உதவியால் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார்.

முதலில் சவூதி அரேபியாவில் ஐந்தாண்டுகள் கழித்த அவர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக லண்டனுக்கு குடியேறினார். முஷாரப்பை வீழ்த்துவதற்காக தனது பரம எதிரி பெனாசிர் பூட்டோவுடன் நல்லுறவு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்து அதனால் நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்பலையை சந்தித்த முஷாரப் தன் நிலை ஆட்டம் கண்டு போயுள்ளதை தற்போது உணர்ந்துள்ளார்.

முஷாரப்பை வீழ்த்துவதற்கு இதைவிட வேறு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்ட நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து, சவூதி அரேபியா நாடுகளின் நல்லெண்ண கோரிக்கைகளைக் கூட புறக்கணித்து தாய் நாடு திரும்ப முடிவெடுத்தார்.

இதற்கு ஏதுவாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றமும் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவதில் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்க பாகிஸ்தான் அரசியலே சூடுபிடித்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு லண்டனில் இருந்து பாகிஸ்தான் கிளம்பினார் நவாஸ். கூடவே இங்கிலாந்தின் மீடியா குழுமத்தையும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு விமானமேறினார்.

முன்னதாக விமானத்திலேயே பேட்டியளித்தபோது "எது நடந்தாலும் நான் இனி பயப்படப் போவதில்லை.." என்று உறுதியாகவே சொன்னார்.

நவாஸ் ஷெரீப்பின் வருகையை முஷாரப்பின் அரசும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாது. ஷெரீப் வந்தால் அவரைக் கைது செய்து சிறையில் வைக்கவும் தயாராக இருந்தது. சிறைச்சாலை முன்னாள் பிரதமருக்குரிய வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு ராணுவமும், போலீஸ¤ம் முற்றுகையிட்டிருந்தன. நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நாஸ¤க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமும், கிளர்ச்சியும் செய்தார்கள். கண்ணீர்புகை குண்டு, தடியடி என்று அனைத்துவித போராட்டக் குணங்களும் வெளிப்பட்டன.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தைச் சுற்றிலும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்போன் வசதியை தடை செய்திருந்தது அரசு. விமான நிலையத்திலும் தொலைபேசி வசதியை நிறுத்தி வைத்திருந்தது உள்துறை அமைச்சகம்.

இவ்வளவு முன்னேற்பாட்டுக்களுக்கிடையே இன்று காலை இந்திய நேரப்படி 9.15 மணிக்கு நவாஸ் ஷெரீப் வந்த விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையம் வந்தடைந்தது.

ஆனாலும் விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு நவாஸ் ஷெரீப் தவிர மற்றப் பயணிகளை தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

நிலைமை சர்வதேச மீடியாவின் கவனத்தில் இருந்ததால் சவூதி அரேபிய அரச குடும்பம் தொடர்ந்து முஷாரப்பிடம் பேசியதைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேர காத்திருத்தலுக்குப் பிறகு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மண்ணில் கால் வைக்க அனுமதிக்கப்பட்டார்.

விமான நிலைய விஐபி லவுன்ச்சில் அமர வைக்கப்பட்டார். அங்கு மீடியா குழுவினருக்கு பேட்டியளித்த நவாஸ் "முஷாரப் தவறு மேல் தவறு செய்கிறார். இது அவரது கடைசி யுத்தம்.. அவர் இந்த யுத்தத்தில் தோல்வியடைவது உறுதி. முஷராப்பின் ஈகோதான் எல்லாவற்றுக்கும் காரணம்.." என்றெல்லாம் பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து 2 மணி நேரம் கடந்த பின்பு மேலிட உத்தரவுப்படி பஞ்சாப் மாகாணத்தில் முன்பு நடந்த ஒரு படுகொலையில் நவாஸ¤க்கு சம்பந்தம் இருப்பதால் அவரை அந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்வதாக ராணுவ உயரதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இப்போதே அவர் மனம் மாறி திரும்பிச் செல்ல விரும்பினால் அவர் அப்படிச் செல்லவும் அனுமதிக்கப்படுவார் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் நவாஸ் ஷெரீப் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் தான் கைது செய்யப்பட்டாலும் கவலையில்லை. நாட்டிற்குள் செல்வேன் என்று கிளம்பியதைத் தொடர்ந்து மீடியா நெரிசலுக்கிடையில் அவர் கைது செய்யப்படுவதாக அறிவித்து தயாராக காத்திருந்த பஞ்சாப் மாகாண போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பஞ்சாப் போலீஸ் வசம் சென்ற சில நிமிடங்களில் நவாஸ் ஷெரீப்பை பஞ்சாப் மாகாணத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது என்ன பேரம் நடந்ததோ தெரியவில்லை. நவாஸ் ஷெரீப் வெளிநாட்டிற்குச் செல்ல ஒப்புதல் அளிக்க ஹெலிகாப்டர் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்குத் திரும்வும் கொண்டு வரப்பட்டு, அங்கு தயாராக இருந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் விமானத்தில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வகையில் ஒரு நாள் உலக மீடியாக்களை பரபரப்புக்குள்ளாக்கிய நவாஸ் ஷெரீப்பின் கவர்ச்சி நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நவாஸ் ஷெரீப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி சொல்லியிருக்கிறதாம்..

இப்போதைக்கு இந்த மட்டோடு முஷாரப் திருப்தி பட்டிருப்பார். இனிமேல்தான் நிஜ சோதனையே அவருக்குக் காத்திருக்கிறது.

அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக புதிய ஜனாதிபதி தேர்தலை அவர் சந்தித்தாக வேண்டும். கூடவே நவாஸ் ஷெரீப்பின் இந்த வீரச் செயலால் பாகிஸ்தான் முழுவதும் நவாஸ் ஷெரீப்பின் எண்ண அலைகள் அடிப்பதை பெனாசிர் பூட்டோ புரிந்து வைத்திருப்பார். அடுத்த டர்ன் அவருடையதுதான்..

அவரும் அநேகமாக இந்த மாதக் கடைசியில் நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இன்னொரு நாடகமும் நடந்தேறும்.

முஷாரப்புக்கு பாகிஸ்தான் மக்களிடமும், வெளிநாடுகளிடமும் ஆதரவு குறைந்துவிட்டது என்பதால்தான் முஷாரப்பால் ஜியாவுல்ஹக்கை போல் துணிச்சலான ஒரு முடிவை இந்த இரண்டு முன்னாள் பிரதமர்கள் விஷயத்தில் எடுக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

சுகுணா திவாகருக்கு இறுதியாய்ச் சில வார்த்தைகள்

மானமிகு சுகுணா ஐயா அவர்களுக்கு,


போலி டோண்டு பற்றி இறுதியாகச் சில வார்த்தைகள் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். வழமைபோல் உங்களது மேலாண்மையான அறிவுத்திறமை அதில் பளிச்சென வெளிப்படுகிறது.


எல்லாரும் செல்வது ஒரு பாதையெனில் நாம் வேறு பாதையில் சென்றால் அதில்தான் நமது அறிவுத்திறன் வெளிப்படும் என்கின்ற பொதுவான பகுத்தறிவின் காரணமாக எந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய கருத்துக்கள் வலையுலகில் அவசியம் கோரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


நீங்களும் வஞ்சகமில்லாமல் எங்களுக்கு தேவாலய அப்பத்தைப் போல் அவ்வப்போது பிட்டு பிட்டுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நாங்களும் கேட்டுக் கொண்டுதான்.. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. நன்றி..


முதலில் போலி டோண்டுவைப் போலவே நாமும் ஒரு மனநோயாளி என்றீர்கள். மெளனமாக அனைவரும் ஒத்துக் கொண்டோம். காரணம் உலக ஜீவராசிகளில் பேசக்கூடிய அனைவருக்கும் மனதில் ஒரு ஆற்றாமை இருக்கும். இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. அந்த அடைய முடியாத ஆற்றாமையை நீங்கள் மன நோய் என்ற நோக்கில் பார்க்கிறீர்கள் எனில் சந்தேகமேயில்லை. நாம் அனைவரும் மனநோயாளிகள்தான். ஒத்துக் கொள்கிறோம்.


ஆனாலும் மனநோயால் ஒருவனைத் திட்டுவதற்கும், கொலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே சுகுணா.. ஒருவரைத் திட்டினால், "பாவம் நோய் முத்திருச்சு. திட்டிட்டுப் போறான்.." என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் கொலையே செய்துவிட்டால்.. கத்தியை உருவி நாமே துடைத்து அவரிடம் கொடுத்து திருப்பி அனுப்ப முடியுமா?


இதில் திட்டுவது என்பது நமது வலையுலக மாற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாக எடுத்துக் கொள்ளுங்கள். கொலை என்பது திருவாளர் போலி டோண்டு இப்போது செய்து கொண்டிருப்பது.


//நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//


சுயநினைவோடுதான் இதை எழுதினீர்களா சுகுணா.. மாற்றுக் கருத்தை ஏற்கப் பிடிக்காமல் அவரை அவமானப்படுத்தி, அதன் மூலம் அவர் துன்புறுவதை நேரில் பார்த்து அனுபவிக்கும் சாடிஸ்ட் மனப்பான்மையை நீங்கள் ஆதிக்கச் சாதி வெறி என்று வழமை போல் உங்களது பகுத்தறிவு கட்சியின் தாக்கத்தினால் சாதி சாயம் பூசிவிட்டீர்கள்.


இந்த சாடிஸ்ட் மனப்பான்மையுள்ள மனிதர்கள் நிறைய பேர். அவர்களுடைய எண்ண அளவுகோல்தான் ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். தாங்கள் அறியாததல்ல. அப்படியிருந்தும் கண் முன்னே தெரிந்த ஒரு கற்பழிப்புக்கு சாதி சாயம் பூசி, கற்பழிப்பின் நோக்கமான மாற்றுக் கருத்தை ஏற்க முடியாமை என்கிற தனி மனித எண்ணக் குறைபாட்டை நீங்கள் போலியிடமிருந்து அப்புறப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம்?


ஆணாதிக்க பாசிஸ்ட் என்று இன்னொரு வரி.. இதற்கு என்ன அர்த்தம் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கம் நிறைந்தவர்கள்தான் மற்றவர்கள் வீட்டுப் பெண்களையும் தாங்களே பெண்டாள நினைப்பார்கள் என்று நினைத்தீர்களோ..? இங்கே நீங்கள் போலியாரை ஆணாதிக்கவாதி என்று சொன்னால் 'உண்மை'யானவர் ஆணாதிக்கத்தை மீறி திமிருபவர் என்று அர்த்தமாகி.. அது அவருக்கே அனர்த்தமாகிவிடும். 'உண்மை' அப்படியா எழுதுகிறார்..?


//மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//


இதை எப்படி ஸார் இவ்வளவு தைரியமாக எழுதுகிறீர்கள்? ஆச்சரியம்தான் போங்க.. போலியார் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் என்று நீங்கள் ஒத்துக் கொண்டாலும் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறீர்கள்.. இது என்ன லாஜிக்..? பிறகு எதற்கு அந்த 'கெட்ட வார்த்தை' என்கின்ற இரண்டு வார்த்தைகள். "கெட்ட வார்த்தைகள் என்று ஏதுமில்லை.. எல்லாமே ஒன்றுதான்.." என்று எழுதிவிட்டுப் போய் விடலாமே.. ஏன் உங்களுக்கே 'அது போன்ற நிறைய மெயில்கள் வந்தும் பப்ளிஷ் செய்யவில்லை..' என்றும் சொன்னீர்களே.. பேசாமல் அவற்றையும் பப்ளிஷ் செய்திருக்கலாமே நல்ல வார்த்தைகள்தான் எனில்..


"யாரை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். இதில் நல்ல வார்த்தையோ, கெட்ட வார்த்தையோ இல்லை.. எல்லாமே தமிழ் வார்த்தைகள்தான்.." என்ற உங்களது புதிய சூத்திரம் எனக்குப் புதிய பகுத்தறிவைப் புகட்டுகிறது.. "என் வீட்டில் உள்ள பெண்களைத் திட்டினால்கூட எனக்கு கோபம் வராது.." என்ற ரீதியில் எழுதியிருக்கிறீர்களே.. இது என்ன விளையாட்டா? உங்களைப் போலவே மற்றவர்களும் "அவைகள் அனைத்தும் நல்ல வார்த்தைகள்தான்.." என்று சொல்லி ஆளுக்கொரு நாலு பக்கம் பிரிண்ட் எடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து மனப்பாடம் செய்து மற்றவர்களிடம் சொல்லிக் கொடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறீர்களா?


//இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.//


போலியை எதிர்ப்பவர்கள் எதற்கு ஸார் எதிர்க்கிறார்கள்..? அவரென்ன தாவூத் இப்ராஹிமா நாட்டு நலனை முன்னிட்டு எதிர்ப்பதற்கு..? இந்த போலி விஷயத்தில் நிலைப்பாடு என்ற ஒன்றை எதற்கு எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லீங்கோ..


எதிர்ப்பாளர்கள் அனைவருமே ஏதோ கொள்கை குன்றுகளோ அல்லது கொள்கைக்காக வலையுலகில் வலம் வருபவர்களோ அல்ல.. தன்னுடைய எண்ணங்களை(எண்ணங்கள்தான்; கொள்கைகள் அல்ல. நாளையே சூழ்நிலை மாறும்போது அவர்கள் மாறித்தான் ஆவார்கள்) வெளிப்படுத்தி எதிர்வினையின் மூலம் கிடைக்கும் தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். இதுதானே வலைப்பூக்களின் நோக்கம். இதில் வருபவர்கள் அனைவரும் ஒரு கட்சியின் தொண்டனைப் போல.. கொள்கைக் குன்றின் மீது பளிச்சிடும் நட்சத்திரத்தைப் போல் தெரிய வேண்டும் என்றால் எப்படிங்கோ ஐயா..?


//போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை.//


எதற்கு இங்கே அறமும், சிந்தாந்தமும் தேவை? திருடனையும், கொலைகாரனையும் பிடிக்கச் சொன்னால் எந்த சிந்தாந்தத்தின் அடிப்படையில் அவன் திருடன், கொலைகாரன் என்று கேட்பீர்களோ..?

போலியாரை யாரும் எதிரியாக நினைக்கவில்லை.. தெருவில் குடியிருக்கும் ஒருவன் குடித்துவிட்டு அம்மணமாக தினமும் ரகளை செய்து வருகிறான் என்றால், அவனைக் கண்டால் ஓரமாக ஒதுங்கித்தான் போவார்கள் மற்றவர்கள். அவனை அந்தத் தெருவிலிருந்து அப்புறப்படுத்தினால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் நினைப்பார்கள்.
இதை எதிரி என்று நினைத்து என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று குடிகாரன் புலம்பினால் நீங்களும் அதற்கு ஒத்து ஊதுறீகளே சாமி..?


அசுத்தமான ரத்தம் யார் உடம்பில் ஓடினாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடித்தான் ஆக வேண்டும்.. உடனுக்குடன் அதை நீக்கித்தான் ஆக வேண்டும்..
நல்ல ரத்தம் அசுத்தமானது எப்படி என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, அதன் பின் அந்தக் காரணகர்த்தாவை கண்டுபிடித்து.. சிரச்சேதம் செய்துவிட்டு, அதன் பின்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும் என்றால்..


எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தினால் இவையெல்லாம் எங்கள் புத்தியில் ஏறி, எங்கள் மனது சாந்தியாகும் என்பதை முதலில் சொல்லுங்கள்.. கற்றுக் கொள்ள முயல்கிறோம்..

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

03-09-2007

அன்புள்ள திரு.டோண்டு ஸாருக்கு,

வணக்கம்.

வரைமுறை இல்லாமல், காரணமே இல்லாமல் அடுத்தவரைக் கண்மூடித்தனமாக நேரில் தாக்குபவரும், எழுத்தால் தாக்குபவரும், ஆபாச அர்ச்சனைகள் புரிவோரும் கண்டிப்பாகத் தண்டிக்கப்படக் கூடியவர்தான். சந்தேகமில்லை..

அதே சமயம், அந்த வரைமுறையற்ற தாக்குதல் நடத்துபவனை வம்பு சண்டைக்கு இழுத்து “பார்.. பார்.. என்னிடம் சண்டைக்கு வருகிறான்” என்று ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பவரும்கூட ஒரு வகையில் தண்டிக்கப்படக் கூடியவர்தான்..

இந்தப் போலி பிரச்சினைக்கே யார் முதற் காரணம்? நீங்கள்தான்..

உங்களுடைய எழுத்தால் ஒருவன் மனம் பாதிக்கப்படும் அளவுக்குச் சென்று இன்று மதுரைவீரன் சாமிக்கு படையல் வைப்பதைப் போல் எழுத்தில் வடித்துக் கொண்டிருக்கிறான்.

அது அவனது தலையெழுத்து என்று நீங்கள் சொன்னீர்களானால் இந்த நிகழ்வு உங்களை உடன் காரணியாக வைத்து அவனது விதியின் பெயரால் அமைந்தது. மகரநெடுங்குழைநாதனின் தீவிர பக்தரான உங்களுக்கு இது நன்றாகவே புரியும். இந்த நபரை நோயாளியாக்கியதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. இதை விதியின் விளையாட்டு என்றோ, நீங்கள் வணங்கும் கடவுளின் விளையாட்டு என்றோ நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அதுவும் சரிதான்.

இன்றைக்கு அந்த நபர் மீது வலையுலகமே பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவருக்கு என்ன ஆனதோ? ஏன் இப்படி.. நாமெல்லாம் சரியானபடி இருக்கும்போது இவருக்கு மட்டும் இப்படியரு நிலையா என்றுதான்.. இது ஒருவகை பரிதாப உணர்ச்சி. வேறு என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?

பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நீங்களே முதலில் சமாதானம் செய்து பின்பு அது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மறுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதைப் போல் எழுத ஆரம்பித்து இதனால் போலியும் தனது சத்தியத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து இதனால் பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல.. நாங்களும்தான்..

தினமும் காலையில் மெயிலை திறக்கும்போது அக்கம்பக்கம் யாரும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்றெண்ணி யோசனை செய்யும்போது எங்களுக்கு வரும் கோபம் எங்களுக்குத்தான் தெரியும்..

நான் முன்பே உங்களிடம் ஒரு முறை சொன்னேன்.. “உங்களது வலைத்தளத்தில் ஒரு விட்ஜெட் தயாரித்து வையுங்கள். எனது வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே எனது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை...” என்று சொல்லி எழுதி வைக்கும்படி சொன்னேன்.

அதற்கு நீங்கள், “முடியாது..” என்றீர்கள். புதிதாக “வலையுலகில் நுழைபவர்களுக்கு உங்களைப் பற்றியும் தெரியாது.. வலையுலக அரசியலைப் பற்றியும் தெரியாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் பின்னால் எழுத வந்ததற்கே வருத்தப்படுவார்கள்..” என்றேன். “அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.. எனக்கு கமெண்ட்ஸ் வந்தால் நான் பதில் போடுவேன்.. அவ்வளவே..” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டீர்கள்.

இப்போதும் இதையே உங்கள் முன் வைக்கிறேன். புதிதாக வலைத்தளத்திற்குள் வருபவர்களோ ஓய்வு நேரத்தில்தான் எழுதுகிறார்கள். அந்தப் பொன்னான நேரத்தை இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களில் செலுத்துவதற்கு நாம் உதவிடக்கூடாது.

உங்களுக்கு கமெண்ட்ஸ் போட்ட பாவத்திற்கு அவர்கள் குடும்பத்தினர் மனக்கஷ்டம் அடைய வேண்டுமா? யோசித்துப் பாருங்கள்..

இது ஒன்றும் யுத்த களம் அல்ல. குடும்பம் நடத்துகின்ற இல்லம். உங்களுடைய யோம்கீத்பூரோ, யோம்கீத்துபுரோவோ எதுவாக இருந்தாலும் உங்களுடைய வீட்டோடு வைத்துக் கொள்ளுங்களேன்.. அதற்கெதற்கு தேவையில்லாமல் எங்களை இழுக்குறீர்கள்..?

இப்போதுதான் போலியை வெளிப்படுத்தி உலகத்திற்கு அடையாளம் காட்டி முடித்திருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதுவரையிலும் உங்களுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு போலியின் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.

மேலும், மேலும் புதிய புதிய பதிவர்கள் உள்ளே வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தயங்கி நிற்கிறார்கள். யார் எந்தப் பக்கம்? யாருடைய பதிவு பிரச்சினையில்லாதது என்றெல்லாம் யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

இது, தமிழ் மொழி இல்லாத நாடில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நேரம் செலவழித்து எழுதிக் கொண்டிருக்கும் நம் வலைச் சமுதாயத்திற்கு நல்லதல்ல.

இதுதான் நீங்களும் உங்களுடைய பிடிவாதத்தைக் கைவிட வேண்டிய தருணம்.

நீங்கள் மேற் சொன்னதுபோல் விட்ஜெட்டை உங்களது தளத்தில் போடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இல்லையெனில் நான் எனது தளத்தில் நிச்சயம் இடுவேன்..

ஏனெனில் உங்களால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
இப்போது யோசித்துப் பார்த்தால் யார், யாரை வந்து மிரட்டுவது என்ற எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணத்தில் உங்களுக்குப் பின்னூட்டமிட்டுத்தான் போலியின் கவனிப்பிற்குள்ளான என்னைப் போன்ற வலைப்பதிவர்கள் பலரும் மாட்டிக் கொண்டுள்ளனர்.

ஆளுக்கொரு பக்கமாக உங்களைத் திரட்டிகளைவிட்டே விலக்க வேண்டும் என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்ட நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட ஒரு விதியின் செயலுக்கு நீங்களும் உடன் ஒரு காரணியாக இருந்த காரணத்தால் அதற்கான தீர்வை நோக்கி நீங்களும்தான் சென்றாக வேண்டும். இது உங்களுடைய கடமை.

இந்தக் கடமை எனக்கில்லை.. நான் பல யுத்தக் களங்களைக் கண்டவன் என்று புலம்புவீர்களானால்.. நில்லுங்கள்.. ஆனால் ஒன்று..

உங்களது எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்களே வெறும் காற்றுடன் மோதி, மனநோயாளியான போலிக்கு இன்னொரு துணை நோயாளி போலியாக காட்சி தரும் அவலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வேறு எதுவும் சொல்வதற்கில்லை..

வாழ்க வளமுடன்..

விடாதுகருப்பு-நான்-மூர்த்தி-போலியார்

01-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அவ்வப்போது பதிவுகள் போடுவது வழக்கமென்றாலும், இந்த விஷயத்தில் நான் முன்பே பதிவு போட்டிருக்க வேண்டும். முடியவில்லை. காரணம், என் அப்பன் முருகன் எனக்குத் தொடர்ந்து கொடுத்த சோதனைகள், இந்த முறை 4 நாட்களுக்குத் தொடர்ந்துவிட்டதால் சற்றே பெரிய தாமதம்.. மன்னிக்கவும்.

வாந்தியும், பேதியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படித்தான் டோண்டு ஸாருக்கு வந்த நோய்கள், இன்று தமிழ்மணத்தின் கோபக்கார இளைஞர்களுக்குத் தொற்றியவுடன் அவர்களின் கோபக் கனலில் தமிழ்மணம் எரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது மிக, மிகத் தாமதமான கோபக் குரல் என்றே நான் கருதுகிறேன். எப்பொழுதே ஒட்டு மொத்தக் குரலாக ஒலித்திருக்க வேண்டும். கொள்கை, கோட்பாடு, ஒரே தலைவர் என்கின்ற பத்தாம்பசலி அடையாளங்களை முன் வைத்து, இந்த சைக்கோவுக்கு வலையுலக நண்பர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அடையாளம் கொடுத்ததன் விளைவுதான், இன்றைக்கு அவரவர் வீடுகளில் தீ பற்றிக் கொண்டுள்ளது.

ஒரு மனநோயாளியை நம் உடன் வைத்திருக்கும்போது நம் முழு கவனமும் அவர் மீதுதான் இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.. எந்த நேரத்தில் என்ன செய்வார்? என்ன நடக்கும்? என்பது யாருக்கும் தெரியாது அல்லவா.. சில நிகழ்வுகள் நிகழ்ந்த பிறகு அது யாரால் நடந்தது என்று நோண்டிப் பார்த்து அது கடைசியில் மனநோயாளியை நோக்கிச் செல்லும்போது நம்மால் தார்மீக ரீதியாக அவரைக் குற்றம் சொல்ல முடியாதே.. அவர்தான் மனநோயாளியாச்சே..

விடாது கருப்புதான் மூர்த்தி. இந்த மூர்த்திதான் முத்தமிழ் மன்றத்தை நடத்துபவர். இவர்தான் ஆபாசக் களஞ்சியம் எழுதும் போலியார் என்பதை முதலில் பாதிக்கப்பட்ட டோண்டு ஸாரும், வரிசையாக பாதிக்கப்பட்ட பல தோழர்களும் ஆதாரத்தோடு எடுத்து வைத்திருந்தும் அவன் இல்லை.. அவனாக இருக்க முடியாது.. என்றெல்லாம் தங்களுக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அந்த சைக்கோவுக்கு அடையாளம் கொடுத்தவர்களே இன்றைக்கு பக்கம் பக்கமாக டைப் செய்து கொண்டிருக்கிறார்கள்..

கூடவே வலையுலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவரிடமே சமாதானப் பேச்சும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு சமாதானம் என்கின்ற வார்த்தைக்கு மதிப்பேது..?

இந்த சைக்கோ மேட்டரில் நானும் சிக்கிக் கொண்ட பிறகு நண்பர் செல்லாவிடம் பேசும் போதெல்லாம் தவறாமல் நான் கேட்ட கேள்வி, "விடாது கருப்புவிற்கு ஏன் நீங்கள் லின்க் கொடுத்திருக்கிறீர்கள்..?" என்று.. "இல்ல தலைவா.. அவர் பெரியாரோட தொண்டர்.. அவரா இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்.. ஏன்னா பெரியார் தொண்டர் எவரும் இப்படி எழுத மாட்டாங்க.." என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டேயிருந்தார்.

"டோண்டு ஸார் சொல்றாரே.." என்றால் "அவர் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டுமா? எனக்கு நம்பிக்கை இருக்கு.. விடாது கருப்பு, போலி இல்லை என்று.. அதனால்தான் லின்க் கொடுத்திருக்கிறேன்.." என்றார்.

ஆனால் எனது துவக்கக் காலத்திலேயே இந்த சைக்கோ விடாது கருப்புவாகத்தான் இருக்க வேண்டும் நான் நம்பினேன்.. அதற்கான நம்பிக்கை விதைகளையும் அந்த சைக்கோவே என்னிடம் விதைத்துவிட்டுச் சென்றார்.

சைக்கோ திடீரென்று வந்து, 'விடாது கருப்பு' வேஷத்தில் கூகில் டாக்கில் என்னோடு பேசுவார். அவர் பேசி முடித்துவிட்டுப் போன அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், போலியார் தனது ஆபாச கமெண்ட்டுகளை எனக்குப் போடுவார்.. நான் அதை ஒதுக்கித் தள்ளுவேன். இது தொடர் கதையாகவே இருந்தது. இது தொடர்ந்து நாள் கணக்கில் தொடரவே அன்றைக்கு யோசிக்கத் துவங்கினேன்..

ஒரு நாள் 'விடாது கருப்பு' கூகிள் டாக்கில் பேசி முடித்துவிட்டு 'பை' சொல்லிவிட்டுப் போன பிறகு தொடர்ந்து 5 முறை ஆபாச அர்ச்சனைகள் வந்தன. அவை எதையும் நான் தொடாமல் வைத்திருந்தேன். 6-வதாக வந்த அர்ச்சனையில் கூடுதலாக சில வரிகள்.. அவை "கூகிள் டாக்கை தொறந்து வைச்சுட்டு வெண்ணை.. என்னத்தடா புடுங்குற..? வந்த மெயிலை செக் பண்ணுடா புடுங்கி.." என்று முடிந்திருந்தது. இப்போது எனது கூகிள் டாக்கில் விடாது கருப்புவைத் தவிர வேறு யாரும் online-ல் இல்லை. இதுவும் எனது நம்பிக்கையை அதிகரித்தது.

தொடர்ந்து மறுநாளிலிருந்து விடாது கருப்பு கூகிள் டாக்கில் வரும்போது வேண்டுமென்றே "இப்போ குளோஸ் பண்றேன்.. வேலையிருக்கு.. ஒரு மணி நேரம் கழித்து வர்றேன்.." என்று சொல்லி கட் செய்வேன்.. சரியாக ஒரு மணி நேரம் கழித்து inbox-ஐ ஓப்பன் செய்தால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆபாச அர்ச்சனைகள் வரும்.

ஆனாலும் எனக்கு இருந்த பிடிவாதத்திற்கு, "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது..?" என்ற நியாயமான கோபத்தில் தொடர்ந்து டோண்டு ஸாருக்கு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டேயிருந்தேன்.

இப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்து போய்க் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு கண்ணில் கண்ணீர் வரக்கூடிய அளவுக்கு போலியாரைவிட அதிகமாகத் தண்ணி காட்டிக் கொண்டிருந்த போலி உண்மைத்தமிழன் மேட்டர் வெளியானது.

மிகச் சரியாக அன்றைக்குத்தான் சைக்கோ மூர்த்தி, என் பெயரிலும் ஒரு ஆபாசத் தளத்தை(unmaithamizan.blogspot.com) உருவாக்கி வெளியிட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னையும் இன்வைட் செய்திருந்தார். நானும் அவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக அந்தச் செய்தியை எனது தளத்தில் வெளியிட்டு, வெளியீட்டு விழாவிற்கும் நேரில் சென்று ஆஜர் கொடுத்துவிட்டு வந்தேன்.

அப்போது நண்பர் செல்லாவிடம் கேட்டபோது இப்போதுதான் அவருக்கும் ஓரளவுக்கு சந்தேகம் வந்திருந்தது.. ஆனாலும் அப்போதும் தனது 'தோழரை' விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.

இதற்கு முன் தம்பி செந்தழல் ரவி கோவை வலைப்பதிவர் கூட்டத்திலேயே என்னிடம் இந்த சைக்கோவைப் பற்றி புட்டு புட்டு வைத்தார். இவ்வளவும் ரவிக்கு மட்டும்தான் தெரியும் என்று நான் நினைத்தது என்னுடைய மடத்தனம்தான்.

வலைத்தளத்தின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களுக்கும் முத்தமிழ் மன்ற மூர்த்திதான் போலியார் மற்றும் விடாது கருப்பு என்பது தெரியும். ஆனாலும் சிலருக்கு, 'கொள்கை பாசம்' கண்ணை மறைக்க அமைதி காக்கின்றனர் என்பதும் எனக்குப் புரிந்தது.

இந்த நேரத்தில்தான் நானும் வேண்டுமென்றே ஒரு நல்ல செயலை செய்தேன். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு தொலைபேசி தகவலின்படி, மூர்த்தியின் தளத்திற்குள் சென்று பார்த்தேன்.

முத்தமிழ் மன்றம் நடத்தும் மூர்த்திதான் விடாது கருப்பு என்னும் மூர்த்தி என்னும் போலியார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த தளத்தில் இருந்த ஒரு ஆன்மிகச் செய்தியை எடுத்து எனது பதிவில் போட்டுக் கொண்டேன்.

மூர்த்தியின் பெயரைச் சொல்லாமல் "அந்தப் பதிவருக்கு எனது நன்றி" என்று சொல்லி எழுதியிருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அனுமதித்திருந்தேன்.

அடுத்த நாளே எனது ஜிமெயில் முகவரிக்கு மூர்த்தியிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அந்தப் பதிவு தன்னுடையது என்றும், பின்னூட்டத்தில் தனது மனைவியின் பெயர் இருப்பதாகவும் அதை நீக்கி விடும்படியும் எழுதியிருந்தார். (அவருடைய மனைவியின் பெயர் அன்றுவரையில் எனக்குத் தெரியாது. யாரோ போலி பெயரில் அனானி கமெண்ட் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துத்தான் நானும் அதை அனுமதித்திருந்தேன்.)

நானும் அதற்கு வருத்தம் தெரிவித்து மெயில் அனுப்பிவிட்டு அந்த பின்னூட்டத்தை நீக்கினாலும், எனக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகத்தையும் துடைத்தெறிந்தது இந்த மெயில்தான்.

காரணம், என்னுடைய ஜிமெயில் முகவரியை நான் இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே மறைத்துவிட்டேன். எனது ஜிமெயில் முகவரியை அறிந்து சாட்டிங் செய்ய வருபவர்களில் விடாது கருப்பு உட்பட 10 பேர்கள்தான்.. வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒன்று, தெரிந்தவர்கள் மூர்த்தியிடம் சொல்லியிருக்க வேண்டும். அல்லது விடாது கருப்புதான் இந்த மூர்த்தியாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இந்த உறுதியை உறுதி செய்வதைப் போல் மறுநாளிலிருந்து மூர்த்தி மெயில் மூலம் ஆபாச மொழியில் அர்ச்சனை மழை பொழிந்தார்.

எனக்கிருந்த சந்தேகங்கள் முழுவதையும் அவருடனான கூகிள் டாக்கிலேயே கேட்டுத் தெளிந்து கொண்டேன்.

உங்களுக்கும் சந்தேகங்கள் தீர வேண்டுமெனில் இந்தத் (http://www.zshare.net/download/3416645f499902) தளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்து படித்துத் தெளிந்து கொள்ளுங்கள்.

இன்றைக்கு மோதல் என்பது வெட்ட வெளிச்சமானவுடன், இத்தனை நாட்கள் தெரிந்து வைத்திருந்த செய்திகளெல்லாம் தேர்ந்த திரைக்கதையுடன் உங்கள் முன் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் என்னுடைய ஆதங்கம் ஒரே வரியில்..

"இதை முன்னாடியே செஞ்சு தொலைஞ்சிருக்கலாமே.."