பாம்பு சட்டை - சினிமா விமர்சனம்

31-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் மனோபாலா தயாரித்திருக்கும் படம் இது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  
K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகியிருக்கிறார். கவிப் பேரரசு வைரமுத்து,  யுகபாரதி,  விவேகா,  கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படத் தொகுப்பை ராஜா சேதுபதி மேற்கொண்டுள்ளார். பாண்டியராஜ் கலையமைப்பில், பிருந்தா நடனம் அமைத்துள்ளார். பில்லா ஜகன் சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். புதுமுக இயக்குநரான ஆடம் தாசன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். 

பாபி சிம்ஹா அம்மா, அப்பா இல்லாதவர். கடைசியாக சொந்த அண்ணனையும் இழந்தவர். தற்போது அவரது அண்ணியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அவரது அண்ணனும், அண்ணியும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணியின் பெற்றோரும் அவரை ஏற்றுக் கொள்ளாததால், வேறு வழியில்லாமல் இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.
குறைவான படிப்பினால் சிம்ஹாவுக்கு வேலை கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது. கிடைத்தாலும் சிம்ஹா அதில் நிலைப்பதில்லை. கடைசியாக ‘மொட்டை’ ராஜேந்திரனிடம் வேலை கேட்டு வருகிறார். நீண்ட காமெடியான நேர்முகத் தேர்வுக்கு பின்பு, வேலைக்கு தேர்வாகிறார் சிம்ஹா. அது தண்ணி கேன் போடும் வேலை.
தண்ணி கேனை போடும் இடத்தில் வேலை செய்யும் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் லவ்வாகிறார் சிம்ஹா. கீர்த்திக்கு லவ் என்றாலே கோபம் வருகிறது. அவரது அப்பாவான சார்லி சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறார். இதனால் தனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் கீர்த்தி சுரேஷ், சிம்ஹாவின் காதலை ஏற்க மறுக்கிறார்.
ஆனாலும் விடாப்பிடியாய் சிம்ஹா நிறைய டிராமாக்களையெல்லாம் செய்து கீர்த்தியை காதல் வலையில் வீழ்த்துகிறார். இதே நேரம் சார்லி தன் மகள் போகுமிடத்தில் நன்றாக இருக்க வேண்டுமே என்பதற்காக ஊரே அவல் போல மெல்லும் சிம்ஹா மற்றும் அவரது அண்ணிக்கான தொடர்பு பற்றிப் பேச கோபப்பட்டு போகிறார் சிம்ஹா.
அண்ணிக்கு மறுபடியும் ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால் தான் கல்யாணம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறார். அண்ணியான பானுவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு கடன் சிக்கலில் மாட்டியிருக்கிறார். அதற்கு 5 லட்சம் ரூபாய் தேவையாய் இருக்கிறது என்று அவரது அம்மா சொல்ல.. அந்தக் கடனுக்காக அலைகிறார் சிம்ஹா.
இதற்காக கள்ள நோட்டு பிஸினஸ் செய்யும் குரு சோமசுந்தரத்திடம் கடன் கேட்கிறார். அவரோ கள்ள நோட்டுத் தொழிலில் இறங்க சிம்ஹாவை அழைக்கிறார். முதலில் மறுக்கும் சிம்ஹா, பின்பு தனது பிரச்சினைகளினால் தூண்டப்பட்டு களத்தில் குதிக்கிறார்.
தனது காதலி கீர்த்தி சுரேஷ் மற்றும் அண்ணி பானு கொடுத்த நல்ல ரூபாய் நோட்டுக்களுடன் கள்ள நோட்டுக் கும்பலை சந்திக்க வந்த நேரத்தில் போலீஸ் ரெய்டு வர.. தப்பித்து ஓடும் அவசரத்தில் பணத்தை இழக்கிறார் சிம்ஹா. இதனால் பல பிரச்சினைகள் எழுகிறது.
ஒரு பக்கம் காதலி கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்காக காத்திருக்க.. இன்னொரு பக்கம் அவரது அண்ணி பானுவும் தனக்கு கல்யாணம் ஆக வேண்டுமே என்று எதிர்பார்ப்புடன் இருக்க.. இனி சிம்ஹா என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கதை..!
பாபி சிம்ஹாவுக்கு தனித்துவம் தரும்படியான கதை இது. மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்க வேண்டிய வேலை அவருக்கு. அதை அவர் சரியாகவே செய்திருக்கிறார். அப்பாவியாய் பேசி மொட்டை ராஜேந்திரனிடம் வேலை வாங்கும் காட்சி முதல், இறுதிவரையிலும் அவரது நடிப்பு எந்தக் காட்சியிலும் சோடை போகவில்லை.
மொட்டை ராஜேந்திரனிடம் நடிக்கும் காமெடி.. கீர்த்தி சுரேஷிடம் காட்டும் கெத்தும், காதலும், சார்லியிடம் காட்டும் கோபம்.. குரு சோமசுந்தரத்திடம் காட்டும் கையாலாகதத்தனம்.. கடைசியில் வில்லன் கே.ராஜனை அவரது பாணியிலேயே போட்டுத் தள்ளிவிட்டு பொசுங்கி நிற்கும் காட்சியில் ஒரு சாதாரண பொதுஜனத்தால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் செய்து காட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா.
முகமும், மேக்கப்பும், உடையும், தோரணையும் நாயகனுக்கு தேவைதான். ஆனால் கதையின் நாயகர்களுக்கு அது தேவையில்லை என்பதை இந்தப் படத்தின் ஹீரோ உணர்த்தியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மெல்லிய மேக்கப்பில் பார்க்கவே அழகாக இருக்கிறார். நிறைவாக நடித்திருக்கிறார். அவருடைய காதல் எதிர்ப்பிற்கு அவர் காரணம் சொல்லும் காட்சியிலும், காதலை மறுதலிக்கும் காட்சிகளிலும் கோபம் வராத அளவுக்கு இருக்கிறது அவரது நடிப்பு.
இவர்களையும் தாண்டிவிட்டார் நடிகர் சார்லி. ஒரு சோற்றுப் பருக்கையைக்கூட கீழே சிந்தக் கூடாது என்று அவர் சொல்லும் உதாரணம் விகடனில் தம்பி பாரதி தம்பி எழுதியதுதான் என்றாலும், படத்தின் ஹைலைட்டான வசனம் அதுதான்.
அதேபோல் தன்னுடைய சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையைக்கூட கேவலமாக நினைக்காமல் அதையும் ஒரு தொண்டாகவே நினைத்து செய்து வரும்வேளையில் பானுவுக்காக புதைக்குழிக்குள் இறங்கி வேலை பார்த்து சம்பாதித்து அதையும் சிம்ஹாவும் கொடுக்க நினைக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் எங்கயோ போய்விட்டார் சார்லி. இயக்குநருக்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.
தயாரிப்பாளர் கே.ராஜனும், குரு சோமசுந்தரமும் வில்லன்களாக அசத்தியிருக்கிறார்கள். சோமசுந்தரம் தூண்டிலை போட்டு மீனை பிடிப்பதுபோல செண்டிமெண்ட் வசனங்களை பேசி சிம்ஹாவுக்கு தூண்டில் போடுவதும்.. அந்த தூண்டிலில் புழுவை மாட்டும் வேலையை கே.ராஜன் செய்வதும் கனகச்சிதம்.. அண்ணியாக நடித்திருக்கும் தாமிரபரணி பானுவும் தனக்குரிய காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்றாலும், ஒளிப்பதிவும், இசையும்கூட பலம் சேர்த்திருக்கின்றன. பாடல் காட்சிகளில் கீர்த்தியின் அழகை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிக் காட்டியிருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஜே போடலாம்..!
“தவறு செய்பவர்கள் கண்டிப்பாக அதன் பலனை அந்தப் பிறவியிலேயே கண்டிப்பாக அனுபவிப்பார்கள். அதில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..” என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்கிறார் இயக்குநர் ஆடம்தாசன்.
அதேபோல் “சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத நற்குணம் வாய்ந்த ஏழை மக்கள் பிழைப்புக்காக தவறான வழியை மேற்கொள்ள மாட்டார்கள்.. அந்த எண்ணம்கூட அவர்களுக்கு வராது..” என்றும் சொல்லி மேன்மேக்களை உயர்த்தியே பேசியிருக்கிறார்.
“கொள்ளையடித்து வில்லன் கொடுக்கும் காசில் சாப்பிட்டு கல்யாணம் செய்து பிள்ளை பெற்றால் அந்தப் பிள்ளையையும் அந்தப் பாவம் தொடுமே..?” என்கிறார் சிம்ஹா. இப்படி செண்டிமெண்ட்டலாக படம் பார்ப்பவர்களை ஆங்காங்கே நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர்.
கண் பார்வையில்லாத ஆள் டிரெயினில் பாடிக் கொண்டே வர அவனது மகன் சின்னப் பையன் ஒரு ஆளிடம் பிக்பாக்கெட் அடித்துவிட.. அந்தப் பையனை அடித்து, அந்த பர்ஸை வாங்கி இழந்தவரிடமே மன்னிப்பு கேட்டு திருப்பிக் கொடுக்கும் காட்சியை வைத்திருக்கும்விதம் அழகானது. ரசனையானது. அந்த ஒரு காட்சியே பாபி சிம்ஹாவின் ஊசலாடும் மனதை திசை திருப்புகிறது என்பதை சிம்பாலிக்காக காட்டியிருக்கிறார் இயக்குநர். வெல்டன் இயக்குநரே..!
இருந்தாலும், ஒரே வீட்டில்.. அதுவும் குடிசை வீடு.. அண்ணியும், கொழுந்தனும் வாழ்வது என்பது கிராமப்புறத்தில்கூட பார்க்க முடியாத்து. பானு படித்தவராக இருக்கிறார். அவருக்குத் தெரியாத வழியா..? அவருக்கில்லாத நண்பிகளா..? அவருடைய பெற்றோரே நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். பானுவுக்கு போவதற்கு வழியா இருக்காது..? இந்த ஒரு லாஜிக் மீறலான கேள்வியொன்றுதான் இந்தப் படத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் பானுவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சை மாற்றியிருக்கலாம். ஏழைப் பெண்ணாகக்கூட காட்டியிருக்கலாம். எதிரெதிர் வீட்டில் குடியிருப்பதாகக்கூட சொல்லியிருக்கலாம். ஒன்றும் தவறில்லையே..?! ஏனோ தோணவில்லை போலிருக்கிறது.. இதுவொன்றுதான் படத்திலிருக்கும் ஒரேயொரு குறை.
மற்றபடி இந்த ‘பாம்பு’ தனது ‘சட்டை’யை கச்சிதமாக உரித்துக் காட்டியிருக்கிறது எனலாம்..!

தாயம் - சினிமா விமர்சனம்

28-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பியூச்சர் ஃபிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘கதை, திரைக்கதை, வசனம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக ஹீரோயின் ஐரா அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – பாஜி,  இசை – சதீஷ் செல்வம், படத் தொகுப்பாளர் – சுதர்சன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – முத்தமிழ், அருண்ராஜா காமராஜ். பாடகர்கள் – எம்.சி.ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி, அல்போனேஸ் ஜோசப், ஒலிப்பதிவு – கார்த்திக். எழுத்து, இயக்கம் – கண்ணன் ரங்கசாமி.

ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலைக்கு நேர்முகத் தேர்வு நடக்கிறது. 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் இந்த வேலைக்காக வந்திருக்கிறார்கள்.
அவர்களை ஒரு அறைக்குள் அழைத்து வருகிறார் கம்பெனியின் பொறுப்பு அதிகாரி. அங்கேயுள்ள டேபிள்களில் அவர்களை அமர வைக்கிறார்.
பின்பு, “நான் இப்போது கதவை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிடுவேன்.  ஒரு மணி நேரம் கழித்துதான் திரும்பி வருவேன். இதே நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக வேலை பார்த்தவர் இந்த அறையில்தான் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த அறையில்தான் ஆவியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்த ஆவி இப்போது இங்கே வரும். அந்த ஆவியிடமிருந்து தப்பித்து உயிருடன் இருக்கும் ஒருவருக்குத்தான் இந்தப் பதவி தரப்படும்..” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
வந்தவர்கள் அனைவருக்கும் திக்கென்றாகிறது. அடுத்து தேர்வு எழுத துவங்கும்போது சில அசம்பாவிதங்கள் நடக்கத் துவங்க.. அவர்கள் அனைவருக்குமே தாங்கள் யார் என்கிற விஷயமே மறந்து போகிறது. எப்படி உள்ளே வந்தோம்..? எதற்காக வந்தோம்..? என்பது தெரியாமல் ஒருவருக்கொருவர் வாக்குவாத்த்தில் ஈடுபடுகிறார்கள்.
சண்டையிடுகிறார்கள்.. குத்திக் கொள்கிறார்கள். சுட்டுக் கொல்கிறார்கள்.. இது இப்படியே தொடர.. ஒருவர் பின் ஒருவராக மரிக்கிறார்கள். பின்னர் கடைசியாக யார் உயிருடன் இருந்து வேலையை கைப்பற்றினார் என்பதுதான் படத்தின் கதை.
2010-ம் வருடம் வெளிவந்த பிரிட்டிஷ் படமான EXAM என்பதன் கதைக் கருவை காப்பியடித்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் தேர்வு எழுத வைத்து.. அதில் உள்ள பிரச்சினைகளை உளவியல் ரீதியாக இணைத்து படமாக்கியிருக்கிறார்கள். இதில் நேரடியாக மோதவிட்டு கொலை செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
சென்ற ஆண்டு இதே உளவியல் ரீதியான படமாக ‘நம்பியார்’ வெளிவந்து படு தோல்வியானது. அதே நிலைமைதான் இந்தப் படத்திற்கும். எந்தவிதக் கருத்தைச் சொன்னாலும், எளிய மக்களுக்கு புரியும்வகையில் அவர்களது மொழியில் சொன்னால்தான் அந்தப் படம் பேசப்படும். ஓடும்.. லாபத்தையும் சம்பாதிக்கும்.
இப்படி இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த கழுத்தைச் சுற்றி வந்து மூக்கைத் தொடும்விதத்தில் கதையும், திரைக்கதையும் இருந்தால் இதை எப்படி வெகுஜன ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று தெரியவில்லை..?
Multiple Personality DisOrder என்ற மன நல வியாதியின் ஒரு பிரிவை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்று படத்தின் இறுதியில்தான் சொல்கிறார்கள். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் திரைக்கதையில் சுவாரஸ்யமே இல்லை என்பதால் ஒரு அளவுக்கு மேல் படத்தை ரசிக்கவே முடியவில்லை.
நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், ‘காதல்’ கண்ணன், ஐரா அகர்வால், அன்மோல், ஆஞ்சல் சிங், ஷியாம் கிருஷ்ணன், ஜெயக்குமார், ஜீவா ரவி  உள்ளிட்டோர் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.
ஆனால் எதற்காக இந்தக் கூத்து..? என்னதான் நடக்குது என்கிற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லாத்தால் சுவாரஸ்யமே இல்லாத டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிரா ஆகும்வரையிலும் விடாமல் பார்த்த உணர்வைத்தான் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
தொழில் நுட்ப ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பதினைந்துக்கு பதினைந்து அடி கொண்ட அந்த அறையில் கேமிராவை தோளில் சுமந்து கொண்டு எப்படித்தான் படமாக்கினாரோ தெரியவில்லை.. கேமிராமேன் பாஜி நிச்சயமாக பாராட்டுக்குரியவர்.
இதேபோல் நடிகர்களை முடிந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் வினோத்குமாருக்கும் பாராட்டுக்கள்..
ஒரே ஒரு லொகேஷன்தான். ஒரு நீட்ட வாக்கில் நகரும் அறை.. கலர் கலரான சுவர்கள்.. திடீரென்று லைட்டை போட்டு அடையாளம் காட்டும்விதம், அவர்களது தலைவிதியை நிர்ணயிக்க ஓடிக் கொண்டிருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட அந்த சுவர்க் கடிகாரம்.. என்று அனைத்திலும் கலை இயக்குநர் வினோத் ராஜ்குமார் தன்னுடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.
படத் தொகுப்பாளர் சுதர்சன் தனது பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் புரிவதை போல கிளைமாக்ஸை முன்கூட்டியே வைத்துவிட்டு கதையைச் சொல்லியிருந்தால், நிச்சயமாக படம் புரிந்திருக்கும். இதேபோல் காதுக்கு வலிக்காதவரையில் பின்னணி இசையை அமைத்திருக்கும் இசையமைப்பாளருக்கு நமது நன்றிகள்.
பூட்டப்பட்ட ஒரு அறைக்குள் 7 நடிகர்களை நடிக்க வைத்து.. அனைத்து காட்சிகளையும் திட்டமிட்டு திரைக்கதை அமைத்திருப்பதெல்லாம் காப்பியடித்து செய்திருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றியிருக்கலாம்..!
படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ஒரேயொரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டார்கள். அது கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றி..! நம் அனைவரின் சுற்றியுள்ள அனைவரையும் அழித்துவிட்டு தான் மட்டும் முன்னேறுவதுதான் கார்ப்பரேட் கலாச்சாரம் என்று இயக்குநர் ஆர்ட்டிஸ்ட் மூலமாக சொல்வது அப்பட்டமான உண்மைதான்.
அறிமுக இயக்குநரான கண்ணன் ரங்கசாமி தான் நினைத்ததுபோல ஒரேயொரு அறைக்குள்ளேயே நடக்கும் ஒரு வித்தியாசமான படத்தை வழங்கிவிட்டார். அது வெற்றி, தோல்வி என்பதெல்லாம் தனக்கு தேவையில்லாத விஷயமாக அவர் நினைக்கிறார் என்பதை இந்தப் படத்தின் மேக்கிங்கை பார்த்தாலே தெரிகிறது. வருத்தம் தரும் விஷயம் இது..!
கடைசியில், தாயம் உருட்டாமலேயே 12 விழுந்துவிட்டதாகச் சொல்லி கள்ளாட்டம் ஆடியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை..!

எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

27-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர்.வி.பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
நட்டி நட்ராஜ், ராஜாஜி, ராதாரவி, விஜய் முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் மற்றும் பலர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கணேஷ் சந்த்ரா, இசை – நடராஜன் சங்கரன், படத் தொகுப்பு – அத்தியப்பன் சிவா, கலை – கே.ஆறுச்சாமி, பாடல்கள் – யுகபாரதி, நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – கே.வி.சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் – எம்.வி.ரமேஷ், பி.ஆர்.ஓ. – ரியாஸ் கே.அஹ்மத், டிசைனஸ் – விஜய். எழுத்து – இயக்கம் – ராமு செல்லப்பா.
முந்தைய இரண்டு தலைமுறையில் இருந்த கலைஞர்களின் ரசிகர் மன்றங்கள் இந்தக் கால ரசிகர் மன்றங்களை போல நடிகர்களாலேயே நடத்தப்படாதவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் ரசிகர்கள் உள்ளத்தளவில் அவரவர் தலைவர்களை தங்களது குடும்பத் தலைவர்களாகவே பாவித்து அவர்களைக் கொண்டாடி வந்தார்கள்.
இவர்களுக்குப் பின்னர் கோடம்பாக்கத்தில் கோலோச்சிய ரஜினியும், கமலும் இதேபோல தத்தமது ரசிகர்களை தங்களது அன்பிற்குக் கட்டுப்பட்டவர்களாகவே வைத்திருந்தனர். இப்போதைய நடிகர்களை போல சொந்தக் காசை கொடுத்து ரசிகர் மன்றத்தை நடத்தவில்லை. அந்தந்த ரசிகர்களே தங்களுடைய சொந்தப் பணத்தில் குடும்பத்தை பற்றியே கவலைப்படாமல் மன்றமே கதி என்று அலைந்து, திரிந்தது தனிக் கதை.
அப்படியொரு கதையைத்தான் இந்தப் படத்தில் சுவையான அளவில் தொட்டுக் காண்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராமு செல்லப்பா.

கதை 1987-ம் ஆண்டில் துவங்குகிறது. நட்டி நட்ராஜும், ராஜாஜியும் நாகர்கோவிலில் விளம்பரங்களுக்கு படம் வரையும் வேலையைச் செய்து வருகிறார்கள். அப்போது ரிலீஸான ‘வாழ்க்கை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் விளம்பரம் வரைந்தது தொடர்பாக கம்பெனியின் உரிமையாளருக்கும் இவர்களுக்கும் பிரச்சினை வர.. சட்டென்று பேச்சுவார்த்தை முறிந்து தனிக்குடித்தனம் என்று கிளம்புகிறார்கள்.
ஆனால் நாகர்கோவிலில் அல்ல. நட்டி நட்ராஜின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடி வருகிறார்கள். அங்கேயே இருக்கும் சினிமா தியேட்டர்களில் கட்அவுட் வரைந்தும், ஓவியம் வரைந்தும், சுவர் விளம்பரங்களை வரைந்தும் பிழைக்க முடிவெடுக்கிறார்கள்.
ராஜாஜி தனது அம்மா, மற்றும் தங்கை சஞ்சிதாஷெட்டியை திருநெல்வேலிக்கு அழைத்து வருகிறார். நட்டி நட்ராஜ் சமையல் வேலை செய்யும் தனது தாத்தாவுடன் தங்கிக் கொள்கிறார்.
பார்வதி நாயரை பார்த்தவுடன் லவ்வாகிறார் ராஜாஜி. அதேபோல் ராஜாஜியின் தங்கை சஞ்சிதாவை காதலிக்கிறார் நட்டி நட்ராஜ். இவர்களின் காதல் தொய்வில்லாமல் போய்க் கொண்டிருக்கும்போது வாழ்க்கை போராட்டம் துவங்குகிறது.
திருநெல்வேலி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான ராதாரவிக்கு சொந்தமான தியேட்டரில் கேண்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார் விஜய்முருகன். கொஞ்சம் அடாவடி பேர்வழி. ராதாரவி கண் ஜாடை காட்ட.. இவர் செய்து முடிப்பார்.
ராதாரவியின் தியேட்டரில் ‘நாயகன்’, ‘மனிதன்’ படத்தின் ரிலீஸின்போது ஏற்படும் மோதலில் விஜய்முருகனின் கேண்டீன் அடித்து நொறுக்கப்படுகிறது. தியேட்டரில் தீ விபத்தும் ஏற்படுகிறது. இதனால் கோப்ப்படும் விஜய்முருகன் ராதாரவியை தூண்டிவிட்டு மாவட்டத்தில் இருக்கும் எந்த்த் தியேட்டரிலும் ரஜினி, கமல் படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று முடிவெடுக்க வைக்கிறார்.
அதற்குள்ளாக தீவிர ரஜினி ரசிகராக இருக்கும் நட்டி நட்ராஜ் திருநெல்வேலி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்திற்கு தலைவராகவே ஆகிறார். அதேபோல் ராஜாஜியும் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தில் சேர்கிறார். இருவருக்குள்ளும் லேசான போட்டியும், பொறாமையும் எட்டிப் பார்க்க.. இதற்கு மொத்தமாக உலை வைக்கிறது நட்ராஜ், சஞ்சிதா இருவரின் காதல்.
இதைத் தொடர்ந்து நட்ராஜ்-ராஜாஜி நட்பு உடைகிறது. தொடர்ந்து தியேட்டரில் கட்அவுட் வைக்கும் கலாச்சாரத்திற்கு ராதாரவி அண்ட் கோ தடையுத்தரவு போடுகிறது.. இதை எதிர்க்கும் நட்டி நட்ராஜை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறது ராதாரவி கும்பல்.. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படமே..!
நட்டி நட்ராஜுன் உடல் வாகுக்கும், நடிப்புத் திறனுக்கும் ஏற்ற கதை. தனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்வது சாலச் சிறந்தது என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். மிக எளிமையான இயக்கத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பைக் காட்டியிருக்கிறார். இவருடைய டைமிங்சென்ஸ் வசன உச்சரிப்புகூட அசத்தல்..
உதாரணம்.. சஞ்சிதாவை கல்யாணம் செய்யப் போவதாக நட்ராஜ் சொல்ல.. “முடிஞ்சா செஞ்சுக்க…” என்று ராஜாஜி சொல்ல.. “அதுனாலதாண்டா சொல்றேன்…” என்று அப்பாவியாய் நட்ராஜ் சொல்கின்ற காட்சி ரசனையானது.
நம்முடைய கேப்டனை போலவே ராதாரவியிடம் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சொல்லி இதில் ரசிகர்கள் நினைத்தால் என்னென்ன மாற்றங்களை செய்ய முடியும் என்பதை அவர் எடுத்துக் கொடுக்கும் பாங்கும், உடனேயே ராதாரவி காட்டும் ரீஆக்சனும் அபாரம்..!
ராதாரவி எந்த வேடமேற்றாலும் அதனை நிறைவாகச் செய்வார். இவரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாதே என்கிற தோற்றத்தை உருவாக்கிவிடுவார். இதிலும் அதையே செய்திருக்கிறார். தன்னுடைய அரசியல் பாதையில் குறுக்கிடும் நபர்களை என்னத்த செய்தாவது அகற்றிவிட வேண்டும் என்று அவர் துடிப்பதும், தேர்தலில் நிற்கும்போது சில சமரசங்கள் செய்தாக வேண்டும் என்கிற உண்மையை சட்டென்று உணர்ந்து நட்ராஜிடம் சமாதானத்துக்கு இறங்குவதும் நல்லதொரு எடுத்துக்காட்டு நடிப்பு.
ராஜாஜி இப்போதுதான் தேறியிருக்கிறார். இன்னும் நிறைய படங்களில் நடித்தால் தெளிவு வரும். சஞ்சிதா ஷெட்டி முதல்முறையாக கிராமத்து வேடத்தில் பாவாடை, தாவணியில் கலக்குகிறார். சுசிலீக்ஸ் சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக மாறிப் போயிருக்கிறார் சஞ்சிதா ஷெட்டி. மாடர்ன் கேர்ள் வேடம்தான் இவருக்கு மிகப் பொருத்தம் என்பதை இந்தப் படமும் நிரூபித்திருக்கிறது.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகியாகவே தெரியாத பார்வதி நாயரை எப்படித்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிகிறதோ தெரியவில்லை. முடியலை..! நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் குளோஸப் காட்சிகளில்தான் பார்க்கவே முடியவில்லை.
இவர்களையும் தாண்டி விஜய்முருகன் தனது அழுத்தமான நடிப்பை இதில் பதிவு செய்திருக்கிறார். இவருக்கும் நமது பாராட்டுக்கள்..!
கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவில் குறையில்லை. இன்னும் கொஞ்சம் வித்தை காட்டியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால் வரிகள் மிக எளிதாக காதுகளில் புகுந்தன என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
இயக்குநர் ராமு செல்லப்பாவின் சொந்த ஊரே நெல்லைதான் என்பதால் அந்த வட்டார மொழியை கச்சிதமாக கொண்டு வந்து பேச வைத்திருக்கிறார். 1988 காலத்து கதை என்பதால் அதற்காக மெனக்கெட்டு தற்போதைய சூழலே இல்லாத இடங்களிலெல்லாம் கஷ்டப்பட்டு படப்படிப்பு நடித்தியிருக்கிறார். இதற்காக கலை இயக்குநருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
அந்தந்த ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும்விதமாக பல வசனங்களும், காட்சியமைப்புகளும் இருப்பதால் இப்போது மத்திய வயதைத் தொடும் தமிழகத்து ஆண்கள், இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால் நிச்சயமாக ஒரு நிமிடமாவது தங்களுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பார்கள் என்பது உறுதி.
கலைஞர்களின் ரசிகர் மன்றத்தினரின் பொற்காலம் 1980-1995 காலக்கட்டம் மட்டுமே என்பது திரையுலகத்தினருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அப்போதைய திரைப்படங்களும் மக்களை மகிழ்விப்பவையாக மட்டுமே இருந்தன. இப்போது ரசிகர்களின் ஆரவாரமும், எழுச்சியும், சந்தோஷமும் இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதில் உண்மைத்தன்மை இல்லை என்பது வருத்தமான விஷயம்.
அப்போதும் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் மற்றும் மாலை போடுவது.. சூடம் காட்டுவது.. முதல் காட்சியை ரசிகர் மன்றத்தினர் கைப்பற்றி அதிக விலைக்கு விற்று படத்தைப் பார்த்துவிடுவது.. அந்தப் படத்தில் தங்களது தெய்வமான நடிகர் அணிந்திருக்கும் உடை போலவோ, மேக்கப் போன்றோ தங்களையும் மாற்றிக் கொண்டு அலப்பறை செய்த அந்த ரசிகர்களெல்லாம் இன்றைக்கு எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
ஆனால் அவர்களின் தடயங்கள் இன்னமும் தமிழ்ச் சினிமாவில் அப்படியேதான் இருக்கின்றன. அதனை மறுபடியும் தட்டியெழுப்பி நினைக்க வைத்திருக்கிறது இந்த ‘எங்கிட்ட மோதாதே’ திரைப்படம்..! இதுதான் இத்திரைப்படம் பெற்றிருக்கும் உண்மையான வெற்றி..!
‘எங்கிட்ட மோதாதே’யை கொண்டாட்டமாக பார்க்கலாம்..!

வைகை எக்ஸ்பிரஸ் - சினிமா விமர்சனம்

26-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை மக்கள் பாசறை நிறுவனத்தின் சார்பில் ஆர்.கே. தயாரித்து, நடித்து வழங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆர்.கே, நீத்து சந்திரா, இனியா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சுமன், ரமேஷ் கண்ணா, சித்திக், ஜான் விஜய், சுஜா வருணி, கோமல் ஷர்மா, சிங்கமுத்து, அனுமோகன், அனுப் சந்திரன், அர்ச்சனா, இவர்களுடன் இயக்குனர் R.K. செல்வமணி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
இயக்குநர் – ஷாஜி கைலாஷ், இசை – S.S.தமண், ஒளிப்பதிவு – சஞ்சிவ் சங்கர், வசனம் – V. பிரபாகர், படத் தொகுப்பு – டான் மேக்ஸ், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், மக்கள் தொடர்பு – ஆ. ஜான், தயாரிப்பு – மக்கள் பாசறை.
நடிகரும், தயாரிப்பாளரும் மிகப் பெரும் தொழிலதிபருமான ராதாகிருஷ்ணன் என்னும் ஆர்.கே. பல ஆண்டுகளாக திரையுலகத்தில் அறிமுகமானவராகத்தான் இருக்கிறார்.
இதற்கு முன்னர் பல படங்களில் சில காட்சிகளில் நடித்து வந்தவர், 'அவன் இவன்', 'ஜில்லா' போன்ற படங்களில் கவனத்தை ஈர்க்கும்வகையிலான கேரக்டர்களில் நடித்திருந்தார்.
'என் வழி தனி வழி' படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்தப் படத்தை மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார். மீண்டும் அவரது இயக்கத்திலேயே இந்தப் படத்தில் நடித்து, தயாரித்து, வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.
பரபரப்பான திரைக்கதை அமைந்த படங்களெனில் மலையாள சினிமாவில் இன்னும்கூட ஜோஷி, கே.மது, ஷாஜி கைலாஷை மிஞ்ச புதிய இயக்குநர்களால் முடியவில்லை. மக்களின் ரசனை அறிந்த இந்த அனுபவமிக்க இயக்குநர்களால் இப்போதுகூட புதியவர்களுடன் போட்டி போட்டு படத்தை இயக்கித் தர முடிகிறது.
அப்படிப்பட்டவர்களில் ஒருவரான ஷாஜி கைலாஷின் திரைக்கதை, இயக்கம் என்றால் சும்மாவா..?

ஒரு நாள் இரவு வேளையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் சினிமா நடிகையான இனியா, அவரது அக்காவான அர்ச்சனா, அக்காவின் கணவர்..  இந்த மூவரும் ஒரு கூபேயில் பயணிக்கிறார்கள். இவர்களுடன் அதே கூபேயில் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திராவும் பயணிக்கிறார்.
இன்னொரு கூபேயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்யும், கன்னித்தீவு கார்மேகம் என்ற எழுத்தாளரான மனோபாலாவும் பயணிக்கிறார்கள்.
இன்னொரு கூபேயில் துளசி மணி என்னும் நடனப் பெண் தனியே பயணிக்கிறார்.
அடுத்த கூபேயில் மருத்துவரான சுஜா வாருணி தனது 3 ஆண் டாக்டர் பயணிகளுடன் பயணிக்கிறார்.
இன்னொரு கூபேயில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் மற்றும் மனைவியுடன் சிங்கமுத்து பயணிக்கிறார். இதே கூபேயில் கோமல் ஷர்மாவும் செல்கிறார்.
இவர்களுடன் டிக்கெட்டே எடுக்காமல் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஆர்.கே.செல்வமணியும் செல்கிறார்.
கூடவே, சீட்டு விளையாட்டில் பெரும் விருப்பம் கொண்ட டிடிஆர் எம்.எஸ்.பாஸ்கரும், கம்பார்ட்மெண்ட்டின் அட்டெண்டரான அனூப் சந்திரனும் பயணிக்கின்றனர்.
இந்த ஒட்டு மொத்தக் குழுவும் மதுரைக்கு வேறு வேறு காரணங்களினால் சென்று கொண்டிருக்க திண்டுக்கல் அருகில் 2 மணி நேரம் வண்டி நின்றிருக்கும் நேரத்தில் ரயிலில் பயணம் செய்த 3 இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்தக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு RATs எனப்படும் Railway Anti-Criminal Task Force பிரிவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பிரிவில் கமிஷனராக இருக்கும் சர்புதீன் என்னும் ஆர்.கே. இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார்.
ரயில்வே ஸ்டேஷனின் சிசிடிவி கேமிராவை சோதனையிட்டதன் பலனாக தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஆர்.கே.செல்வமணி சிக்குகிறார். அவரிடம் விசாரணை செய்ய.. அவருக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
உடனேயே தனது விசாரணையின் திசையை மாற்றுகிறார் ஆர்.கே. ரயிலில் பயணித்தவர்கள் அனைவரையும் விட்டுவிடாமல் விசாரிக்கிறார் ஆர்.கே. அவருடைய புலன் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்க.. கதையும், திரைக்கதையும் விரிந்து கொண்டே செல்கிறது.
டிரெயினின் வேகத்தைவிடவும் வேகமாக செல்லும் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதையில்தான் படத்தின் முடிவும், கொலை செய்த குற்றவாளிகள் யார் என்பதும் தெரிய வரும்.. அவைகளை படத்தைத் தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே..?
2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நதியா கொலையான ராத்திரி’ என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம். இந்த மலையாள மூலத்தை மலையாள இயக்குநர் கே.மது இயக்கியிருந்தார். ஆனால் தமிழ் ரீமேக்கை ஷாஜி கைலாஷ் இயக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆர்.கே. மத்திய வயதை எட்டியவர். இளைஞரோ, கண் கவரும் வாலிபரோ இல்லை என்பதால் அவருக்கு எது வருமோ.. எந்தக் கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரியான கதையை தேர்வு செய்து கச்சிதமாக படமாக்கி அதில் நடித்திருக்கிறார். இது ஒன்றுக்காகவே இவரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்.
படத்தின் திரைக்கதைக்கேற்பவே இவருடைய ஆக்சன் காட்சிகளும், நடிப்புத் திறனும் இருப்பதால் அது தேவையே இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. தொழில் நுட்ப உதவியுடன் நடைபெறும் அனைத்து சேஸிங் காட்சிகளிலும் மெய் மறக்கச் செய்யும் அளவுக்கு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
இந்த சண்டை காட்சிகளுக்காக உடலை வருத்தி, வளைத்து, நெளித்து தனியாக ஒரு டிரெயினிங்கும் எடுத்து வந்திருக்கிறார் ஆர்.கே. அதற்கேற்ற பலன் திரையில் தெரிகிறது.
காதல் காட்சிகள் எதுவுமில்லாமல், காமெடி காட்சிகள்கூட இவரை மையப்படுத்தி இல்லாமல் இருப்பதால்தான் படத்தில் கமிஷனர் வேடத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்.கே.
நீத்து சந்திரா முதல்முறையாக இரு வேடங்களில் நடித்துள்ளார். ஆக்ரோஷமான அக்கா வேடத்தைவிடவும் அமைதியான தங்கை வேடத்தில் ஜொலிக்கிறார். நடிப்பிலும், அழகிலும் கவர்கிறார். கிடைத்த இரண்டு, மூன்று காட்சிகளில்தான் நடிப்புக்கான ஸ்கோப் இருப்பதால் அதையும் குறையில்லாமல் செய்திருக்கிறார் நீத்து.
இனியாவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவருடைய அக்காவாக நடித்திருக்கும் அர்ச்சனாவுக்கு மிகப் பெரிய ‘வாய்’ப்பு எனலாம்.. பேசிப் பேசியே தீர்க்கிறார் அனைவரையும்.. இதுவரையிலும் சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்த அர்ச்சனா இனி வெள்ளித்திரையிலும் மின்னலாம். அதற்கான முழு தகுதி அவருக்கு உண்டு என்பதை இந்தப் படத்தில் அவரது நடிப்புத் திறமை எடுத்துக் காட்டுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் தனி ராஜ்யமே நடத்தியிருக்கிறார். சீட்டுக் கட்டு பிரியராக அது தொடர்பான வசனங்களை ஒவ்வொரு இடத்திலும் இழுத்துவிடுவதும்.. கொலை நடந்த பிறகு தான் சிக்கலில் மாட்டிக் கொண்ட பின்பு அதில் இருந்து தப்பிக்க அவர் பேசும் பேச்சுக்களும், அந்த நேரத்தில் நம்மையும் ரிலாக்ஸ் செய்கின்றன.
அனூப் சந்திரன் என்னும் மலையாள நடிகர் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார். முகத்தில் நவரசத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். ஒரே ஷாட்டில் குரோதம், பாசம், அன்பு, விரோதம் என்று அனைத்தையும் கலந்து கட்டி அடித்து ஆடியிருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் பாராட்டுக்குரியது.
“முருகா”, “முருகா” என்றபடியே சுற்றித் திரியும் நாசரும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். தனது இத்தனை வருட கால நடிப்பு அனுபவத்தை வைத்து இவர் பேசியிருக்கும் டைமிங் வசனங்கள் அனைத்தும் முத்தானவை. படத்தின் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது நாசரின் கேரக்டர்.
மத்திய அமைச்சர் சுமன், இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், அவ்வப்போது கடித்து வைக்கும் எழுத்தாளர் மனோபாலா, நீத்துவின் மாமாவாக வரும் சித்திக், டாக்டராக நடித்திருக்கும் சுஜா வாருணி, துளசி மணியாக நடித்திருக்கும் நடிகை என்று படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைவருமே குறிப்பிடத்தக்க அளவில் நடித்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பும் சம அளவில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. அனைவரையும் அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். டான் பாஸ்கோவின் படத் தொகுப்பும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். இடையிடையே ரயிலின் வேகத்தையும் காட்டிக் கொண்டு கூபே, கூபேயாக நடைபெறும் கதையையும், ஆர்.கே.வின் விசாரணை போகும் பாதையையும் டச் விடாமல் இணைத்திருப்பதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். அது எடிட்டர் டான் பாஸ்கோவிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
எஸ்.எஸ்.தமணின் பின்னணி இசை காதைக் கிழித்திருப்பது மட்டும்தான் படத்தின் நெருடலான விஷயம். கொஞ்சம் ஒலியைக் குறைத்து மெளனத்தைக்கூட சில இடங்களில் நிரப்பியிருக்கலாம். நன்றாகத்தான் இருந்திருக்கும்..! படத்தின் வசனங்கள்கூட பல இடங்களில் படத்தை கவனிக்க வைத்தும் திரைக்கதையில் டெம்போவையும் ஏற்ற உதவியிருக்கிறது. இதற்காக வசனகர்த்தா ஆர்.பிரபாகருக்கு பெரிய பாராட்டுக்கள்..!
என்ன இருந்தும்.. ஒரு போலீஸ் கமிஷனர் வழக்கை விசாரிக்கிறார் என்றாலும் ஆர்.கே. படம் முழுவதிலும் ஒரே மாதிரியான கோபத்திலும், ஆத்திரத்திலுமே வசனங்களை உதிர்ப்பது கொஞ்ச நேரத்திலேயே சலிப்பாகிறது. காதல் வேண்டாம். நடனம் வேண்டாம்.. காமெடி வேண்டாம்.. ஆனால் அவரது இறுக்கமான மன நிலையை தாண்டி அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அமைத்திருக்கலாம். ‘சி.பி.ஐ. டைரி குறிப்பு’ ஹீரோ மம்முட்டியை போல..!
முடிவில் யாராலும் ஊகிக்க முடியாத ஒரு விஷயத்தைத் தொடும் திரைக்கதைதான் படத்தின் மிகப் பெரிய பலமே..! இதனால் கிளைமாக்ஸில் சீட்டின் நுனிக்கு வந்து காத்திருக்கும் சூழலை கொண்டு வந்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு செமத்தியான திரில்லர் மூவியை பார்க்க விரும்புவர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்..!

கடுகு - சினிமா விமர்சனம்

25-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரஃப் நோட் புரொடெக்சன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் ராஜகுமாரன், பாரத் இருவரும் மிக முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் ராதிகா பிரஷிதா, சுபிக்சா, ஏ.வெங்கடேஷ், தயா வெங்கட், சக்தி, ஷான்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.டி.விஜய்மில்டன், இசை – எஸ்.என்.அருணகிரி, பின்னணி இசை – அனூப் சீலின், பாடல்கள் – மதன் கார்க்கி, படத் தொகுப்பு – ஜான் ஆபிரஹாம், கலை இயக்கம் – ஆர்.ஜனார்த்தன்ன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், உடைகள் – சீனு, நடனம் – ஸ்ரீதர், மேக்கப் – மோகன், ஸ்டில்ஸ் – அஜய் ரமேஷ், தயாரிப்பு நிர்வாகம் – அண்ணாமலை, செல்வா, தயாரிப்பு – பாரத் சீனி, விநியோகம் – 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட், எழுத்து, இயக்கம் – எஸ்.டி.விஜய்மில்டன்.
“கெட்டவங்களவிட மோசமானவங்க யாருன்னா.. கெட்டது நடக்கும்போது அதைத் தடுக்காத நல்லவங்கதான்…” என்கிற உண்மையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

அடிப்படையில் கேமிராமேனான விஜய்மில்டன் ‘கோலிசோடா’வை இயக்கிக் காண்பித்தபோது தமிழகமே அந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்தது. அந்தாண்டின் மிகச் சிறந்த படமாக அனைத்து விருதுகளையும் அந்த ஒரு படமே வென்றது.
அடுத்து அவர் இயக்கிய ‘10 எண்றதுக்குள்ள’ படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதால்.. அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க  வேண்டுமே என்றெண்ணி மிக, மிக கவனமாக தன்னுடைய பழைய பார்முக்கு விஜய்மில்டன் திரும்பிவிட்டார் என்பதை அறிவிக்கும்விதமாக இந்த ‘கடுகு’ படத்தை இயக்கி அளித்திருக்கிறார்.
படம் முழுவதிலும் தரங்கம்பாடியை சுற்றியே வலம் வருகிறது. புலி வேஷம் போடும் கலைஞனான மத்திய வயதை எட்டியிருக்கும் ராஜகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷுடன் அவருக்கு உதவியாக அவருடைய வீட்டிலும், போலீஸ் ஸ்டேஷனிலும் பணி செய்கிறார். அவ்வப்போது யாராவது புலி வேஷம் போட கூப்பிட்டால் போய் ஆடிவிட்டு வருவார்.
சூது, வாது தெரியாத தன்மையான மனிதர். அப்பழுக்கில்லாதவர் என்றே சொல்லலாம். அனைத்து உயிர்களுக்கும் அன்பை போதிப்பதே தன் லட்சியம் என்பதை வெளியில் சொல்லத் தெரியாமல், ஆனால் அதன்படியே வாழ்பவர்.
இன்ஸ்பெக்டரான ஏ.வெங்கடேஷுக்கு சென்னையில் இருந்து தரங்கம்பாடிக்கு டிரான்ஸ்பர் போடுகிறார்கள். தனக்கு சமையல் வேலைக்கு ஆள் வேண்டுமே என்றெண்ணி ராஜகுமாரனையும் அழைத்துக் கொண்டு தரங்கம்பாடிக்கு வருகிறார் வெங்கடேஷ்.
இங்கே வெங்கடேஷின் வீட்டில் அவருக்காக சமைத்து சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதோடு, ஸ்டேஷனில் அனைவருக்கும் காபி, டீ போட்டுக் கொடுக்கும் வேலையையும் முகச் சுழிப்பே இல்லாமல் செய்து வருகிறார் ராஜகுமாரன்.
அதே தரங்கம்பாடியில் மிகப் பெரிய பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் பரத். இளைஞர். இன்னமும் திருமணமாகாதவர். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர். ஆனால் போலீஸுக்கு மாதாமாதம் படியளந்து, அவர்களுக்கு வேண்டும் என்கிற அனைத்து வசதிகளையும் செய்து தருபவர்.
அந்த ஊரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ராதிகா பிரஷிதா. இவருக்கு ஆதரவு கொடுத்திருக்கும் ஒரு அம்மாவும், அவரது பள்ளிக்குச் செல்லும் மகளும்தான் இவருக்கான உறவுகள்.
பரத் எப்படியாவது அரசியலில் நுழைந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார். இந்த நேரத்தில் லோக்கல் அமைச்சர் ஒரு நாள் அந்த ஊருக்கு வரவிருப்பதாகத் தகவல் வர.. அவரை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்கிறார் பரத்.
வரும் அமைச்சரோ குடிப் பழக்கத்துடன் பெண் மோகம் கொண்டு அலைபவராகவும் இருக்கிறார். ராதிகா வேலை பார்க்கும் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் பரத். இதே நிகழ்ச்சியில் புலி வேஷம் போட்டு ஆடுகிறார் ராஜகுமாரன்.
பள்ளிக்கு வரும் அமைச்சர் எதிர்பாராதவிதமாக கீர்த்தி என்னும் அந்த மாணவியை பார்த்தவுடன் மோகம் கொண்டு அந்த இடத்திலேயே அவளை அடைய நினைக்கிறார். இதனை தெரிந்து கொண்ட பரத், கடைசி நிமிடத்தில் தனக்கு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தரவிருக்கிறாரே என்பதற்காக கீர்த்தியை காப்பாற்றாமல் விட்டுவிடுகிறார்.
ஆனால் கீர்த்தியைத் தேடி வரும் ராதிகா இந்த அலங்கோலத்தைத் தடுத்து கீர்த்தியைக் காப்பாற்றுகிறாள். இதன் பின்பு கீர்த்தியின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுகின்றன. சரியாகச் சாப்பிட மறுக்கிறாள். எப்போதும் பயந்த உணர்வோடு இருக்கிறாள்.
அவளது இந்த நிலைமை ராஜகுமாரனை பயமுறுத்துகிறது. இதற்கான காரணத்தை அவர் அறிய முற்பட இந்த ரகசியங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவருக்குத் தெரிகிறது. இதன் பின்பு சாதாரண அடையாள அட்டைகூட இல்லாத அந்த புலி வேஷம் போடும் பாண்டி என்னும் பிரஜை என்ன செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
கடுகு மிகச் சிறியதுதான். ஆனால் எண்ணெய்யில் போட்டவுடன் தன்னுடைய உடல் அளவுக்காவது கொஞ்சம் பொறுமலை காட்டும். அருகில் இருப்பவர்களின் உடம்பில் படும் அளவுக்கு தன்னுடைய வீரத்தைக் காட்டும். அதனால்தான் இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமாக ‘கடுகு’ என்கிற பெயரை சூட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு சாதாரண நபரால் ஒரு அநியாயத்தை எதிர்த்து தன்னந்தனியே நின்று ஜெயிக்க முடியுமா என்பதை யதார்த்தமான சூழலில் படமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை கண்டறிய முடியாது என்பதை போல எந்தவொரு நடிகனுக்குள்ளும் வேறொரு குணாதிசயத்தைக் காட்டும் ஒரு திறமை இருக்கும் என்பதை போல நடிகர் ராஜகுமாரனுக்கு இந்தப் படம் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.
அவர் நடித்த முந்தைய படம் கமர்ஷியலாக இருந்தாலும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடித்திருக்கிறார் என்றுகூட சொல்ல முடியாது.. வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“யாருக்கும் தெரியாது என்கிறதுக்காக நம்ம மனசுக்குப் பிடிக்காமல் ஒரு கெட்டதை செய்யக் கூடாதுங்களே…” என்கிற விளக்கவுரையோடு திரையில் அறிமுகமாகும் ராஜகுமாரன், படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சமும் கெட்டுவிடாமல் இயல்பு மாறாமல், மென்மையாக நடித்திருக்கிறார்.
பேஸ்புக் சாட்டிங்கை தற்செயலாக கற்றுக் கொண்டு யாரோ ஒரு பெண் தன்னிடம் பேசுவதை நினைத்து பெருமைப்படுவதும்.. அவளைப் பார்க்க ரயில் நிலையத்திற்கு ஓடி வந்து ரயிலில் அந்தப் பெண்ணின் கதையைக் கேட்டு இவர் படும் சங்கடமும், துயரமும் ஒருங்கே அவரது முகத்தில் தெரிகிறது.
தன்னை கிண்டல் செய்கிறார்கள். அடித்து அவமரியாதை செய்கிறார்கள் என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர் படும் துயரம்தான் அவருடைய கேரக்டருக்கு கனம் சேர்த்திருக்கிறது.
கீர்த்தியின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு “பாவம் ஸார் அந்தப் பொண்ணு.. பச்ச மண்ணு.. அதைப் போய் இப்படி செஞ்சுட்டாங்களே..?” என்று போகிற இடமெல்லாம் அப்பாவியாய் கேட்பதையும், கிளைமாக்ஸில் பொறுத்தது போதும் பொங்கியெழு என்கிற மனோகரா ஸ்டைலில் இதே கேள்வியை ஆக்ரோஷமாக கேட்பதிலும் ராஜகுமாரன் காணாமல் போய் புலி பாண்டியே கண்ணுக்குத் தெரிகிறார். ஒரு நல்ல இயக்குநரின் கை பட்டால் மண்ணும் சிற்பமாகும் என்பதற்கு ராஜகுமாரன் மிகச் சிறந்த உதாரணம்.
நடிகர் பரத்திற்கு மிகப் பெரிய பாராட்டு. முதலில் இது மாதிரியான கேரக்டரில் நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஹீரோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படியொரு வில்லத்தனம் கலந்த கேரக்டர் என்றால் பலரும் யோசிக்கத்தான் செய்வார்கள். ஆனால் தனக்கு கேரக்டரே முக்கியம் என்றெண்ணி இதில் நடித்திருக்கிறார் பரத்.
முதல் அறிமுக்க் காட்சியில்கூட இவரது கேரக்டரை கணிக்க முடியாமல்.. ராஜகுமாரனை வைத்து ஜிம் பாய்களுக்கு டெமோ செய்து காட்டும் காட்சியிலும், அடுத்து பாரத் சீனியிடம் ஓடிப் போயிரு என்று மிரட்டும் காட்சிக்கும் பின்புதான் அவரது ஒரிஜினலாட்டி குணமே தெரிகிறது.
அமைச்சரின் பிடியிலிருந்து கீர்த்தியை விடுவிப்பார் என்று எதிர்பார்த்த தருணத்தில் வெறும் ஒற்றை தலையசைப்பில் அந்த அக்கிரமத்திற்கு தானும் உடந்தை என்பதைச் சுட்டிக் காட்டும்போது, இந்த நாட்டில் அரசியல் களம் எத்தனை ஆபத்தானது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.
அரசியல், அதிகாரம், பதவி, பணம், பெயர், புகழ் இதனை பெறுவதற்காக அப்பாவிகள் எத்தனை பேர் அழிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் தினம், தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த கீர்த்தி கேரக்டர்..!
பாரத் சீனி புதுமுக நடிகர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர். ரவுடி என்பதையே சுற்றி வளைத்து சொல்லி அறிமுகமாகிறார். கடைசிவரையிலும் ராஜகுமாரனுக்கு துணையாய் நின்று ஒரு அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியிருக்கிறார்.
இரண்டு முறை காதலைச் சொல்ல வாய்ப்பு கிடைத்தும் அது தற்செயலாக பரத்தின் காதலுக்கு துணையாக மாறுவதெல்லாம் சுவையான திரைக்கதை. பரத்தின் கைப்பிடிக்குள் சுபிக்சா இருக்கிறார் என்று தெரிந்தும் அவரது வீடு இருக்கும் தெருவுக்குள் போலீஸுடன் வர சங்கடப்படுவதும்.. அவர்களிடமிருந்து தப்பித்து சுபிக்சாவிடம் வந்து தான் யார் என்பதை குறிப்பால் உணர்த்திவிட்டுப் போகும் அந்த ஒரு காட்சி கைதட்டல் பெற்றது என்பது உண்மை.
‘குற்றம் கடிதல்’ படத்தில் பார்த்த அதே ராதிகாவை இதிலும் பார்க்க முடிகிறது. தன்னுடைய சொந்தக் கதையைச் சொல்லியழும் அவலத்தில் இருப்பவர்.. தன் மீதும் ஒருவர் இரக்கம் காட்டுகிறார் என்றவுடன் பட்டென்று ராஜகுமாரன் மீது அவர் காட்டும் கரிசனமும், நட்பும், காதலும்.. இயல்பானவை. அவருடைய கண்களே சில காட்சிகளில் பல விஷயங்களைச் சொல்கின்றன. அவருக்கு நேர்ந்த கொடுமையை கடைசிவரையிலும் சஸ்பென்ஸாக வைத்திருந்து வெடிக்கும் காட்சியில் அதன் அழுத்தத்தை பார்வையாளர்கள் மீது திணித்திருக்கிறார். நல்ல குணச்சித்திர நடிகையொருவர் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
கீர்த்தி, மற்றும் கீர்த்தியின் அம்மாவாக நடித்தவர், போலீஸ் ஏட்டுவாக நடித்தவர் என்று அனைவருமே கதையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பரத்தின் பாட்டியாக வருபவர் கடைசியில் உண்மை தெரிந்து, தனது பாரம்பரியமான குடும்பத்தின் பெயர் கெட்டுவிட்டதே எண்றெண்ணி கதறி அழுவதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய மிகச் சிறந்த குறியீடாக கருதலாம்..!
அமைச்சராக நடித்திருக்கும் தயா வெங்கட்டிற்கு இது முக்கியமான படம். அவருடைய கண் காட்டும் காமப் பார்வையையும், வேஷ்டி அவிழ்ந்து மாட்டிக் கொள்ள.. டிரவுசருடன் நிற்கும் அவமானத்தில் இருவரையும் மாறி, மாறி பார்க்கும் வெட்கம் கலந்த பார்வையும்.. அந்த ஒரு காட்சியின் கொடூரத்தை உணர்த்தியிருக்கிறது.
எப்போதும் போல ஒளிப்பதிவை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலத்தான் செய்திருக்கிறார் விஜய் மில்டன். தரங்கம்பாடியின் உள் அழகையும், வெளி அழகையும் அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், சில காட்சிகளுக்கு வைத்திருக்கும் கேமிரா கோணங்களும் அவருடைய ஒளிப்பதிவு திறமையை பறை சாற்றுகிறது.
சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தரின் சிறப்பான சண்டை பயிற்சியில்தான் கிளைமாக்ஸ் காட்சி தூள் பறக்கிறது. கற்ற தொழில் என்றாவது ஒரு நாள், எதற்காகவாவது உதவும் என்பதை ராஜகுமாரன் அந்த சண்டை காட்சியில் காட்டியிருக்கிறார்.
அருணகிரியின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள். இரண்டும் முத்தானவை. முழு பாடலும் காதில் கேட்கும் அளவுக்கு இனிமையாக உள்ளன. பாடலுக்கான காட்சிகள் கதையை நகர்த்த உதவியிருப்பதால் அவற்றையும் ரசிக்கவே முடிந்தது.
ஜான் ஆபிரஹாமின் படத் தொகுப்பும், கலை இயக்கம் செய்திருக்கும் ஜனார்த்தனனுக்கும் ஒரு ஷொட்டு. படத் தொகுப்பாளரின் பணியால்தான் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அற்புதமாக வந்திருக்கிறது.
ராஜகுமாரன், பாரத் சீனி, ராதிகா சம்பந்தப்பட்ட முகநூல் காட்சிகளெல்லாம் இயல்பான நகைச்சுவையை கொடுத்திருக்கிறது. இதேபோல் திடீரென ஏற்பட்ட டிவிஸ்ட்டால் இன்னொரு ஹீரோயினான சுபிக்சா, பரத்தை காதலிக்க துவங்குவதும்.. அவர்களுடைய மெஸேஜ் சாட்டிங்குகளும் ரசிக்க வைத்திருக்கின்றன.
ராதிகாவின் வாழ்க்கைக் கதையை அனிமேஷனில் காட்டியிருப்பது சிறப்பு. பள்ளிக்கூட நிகழ்ச்சியில் குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் கேட்கும் நகைச்சுவையான, ஆனால் உண்மையான கேள்விகளை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.
படத்தின் இன்னொரு பலம் வசனங்கள்தான். அனைத்திலும் அனல் பறக்கின்றன. “புளூபிலிமில் நடிக்கிற நடிகைகளை தேடிப் பிடித்து ஆட்டோகிராப் வாங்குறீங்க. ஆனால் உங்க பக்கத்து வீட்ல இருக்குற தப்பே செய்யாத பெண்ணை பார்த்து தப்பா பேசுறீங்களே..? என்னதாண்டா உங்க பிரச்சினை…?” என்று ராஜகுமாரன் கேட்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களிடமும்தான்..! பதில்தான் கிடைக்காது..!
ஒரு அமைச்சர் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்திற்கு புறம்பாக அனைத்து அதிகார அமைப்புகளையும் திசை திருப்பலாம்.. ஒரு நேர்மையான அதிகாரி நினைத்தால்கூட அது இந்தியாவில் நடக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அமைச்சர் தயா வெங்கட் மூலமாகவும், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மூலமாகவும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
“இந்த நேரத்தில் நீங்களாக இருந்தால், உங்களது பிள்ளைகளுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?” என்று ராஜகுமாரன் நம்மிடம் கேட்கிறார். இதற்கான பதிலை நம்மை நாமே கேட்டு விழித்துக் கொள்ளும்படி இந்தப் படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
சமீப காலமாக பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும்..
படத்தின் கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த டிவிஸ்ட்டில்கூட ராஜகுமாரன் தனது இயல்பான குணத்தைவிட்டுவிடாமல் பரத்திடம் கெஞ்சி கேட்பதும், பரத் அதற்கான தார்மீகமான பதிலை அடுத்தக் காட்சியில் செய்து காண்பிப்பதும் நியாயமானதே.
அரசியல் அதிகாரத்தின் மூலமாக எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
நியாயமான அவரது இந்தக் கோபத்திற்கு நமது சல்யூட்..!
கடுகு – அவசியம் பார்க்க வேண்டிய படம்..!