திரைக்கு வராத கதை - சினிமா விமர்சனம்

30-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழில் இதுவரையிலும் சொல்லப்படாத கதைதான்.. ‘லயனம்’ படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? 1989-ல் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சிக்காகவே பட்டி தொட்டியெங்கும் வருடக்கணக்காக ஓடி பல்வேறு விநியோகஸ்தர்களுக்கு பெட்டி, பெட்டியாக பணத்தை வாரிக் கொடுத்த படம்.
நம்ம சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்த முதல் படம். இதோடு இது மாதிரியான படங்களுக்கு அவர் மங்களம் பாடிவிட்டார். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் துளசிதாஸின் 35-வது படம் இது. ஏற்கெனவே தமிழில் ‘வீட்டைப் பார் நாட்டை பார்’ என்ற பெயரில் சிவக்குமார் நடித்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.
மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி என்று பலரையும் வைத்து ஹிட் படங்களை இயக்கியவர் துளசிதாஸ். 25 வருடங்கள் கழித்து தமிழில் படம் இயக்கியிருக்கிறார். நல்ல படமாக இருக்குமே என்று நினைத்தால்..?

ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவிகளுக்கு பிராஜெக்ட் வொர்க் தரப்படுகிறது. அந்த பிராஜெக்ட் வீடியோ வடிவில் ஒரு படமாக தரப்பட வேண்டும் என்பதால் இனியா, ஆர்த்தி, அர்ச்சனா சுசீலன், காயா, ரேஷ்மா அடங்கிய அணி புதிய கதையை யோசிக்கிறது.
இதுவரையிலும் நம்ம காலேஜ் வரலாற்றிலேயே யாருமே கொடுக்காத பிராஜெக்ட் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லும் இனியா, லெஸ்பியன் கதை ஒன்றை தயார் செய்கிறார். இதற்காக இவர்கள் மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்குச் செல்கிறார்கள்.
செல்லும் வழியில் கார் ரிப்பேராகி தனியே நிற்கும் ஈடனை பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் பொருட்டு அவரையும் தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு சமையல் வேலைக்கு கோவை சரளா வருகிறார்.
ஷூட்டிங்கின்போது இனியாவுடன் நண்பியாக நடிக்கும் ரேஷ்மா ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி விலகிக் கொள்ள.. அதே வீட்டில் இருக்கும் ஈடனை நடிக்க அழைக்கிறார்கள் அனைவரும். ஈடனும் முதலில் மறுத்து பின் சந்தேகத்துடன் நடிக்கத் துவங்கி, கடைசியில் முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுக்கிறார்.
ஈடன் விடைபெற்றுச் செல்ல.. இவர்களும் கல்லூரிக்கு திரும்புகிறார்கள். இப்போது திடீரென்று ஒரு தினசரியில் ஈடனின் புகைப்படத்தை போட்டு அவருக்கு அஞ்சலி என்று செய்திக் குறிப்பு வந்திருக்கிறது.
இதைப் பார்த்து பயந்து போன மாணவிகள் டீம் தங்கள் வசமிருக்கும் வீடியோவை போட்டுப் பார்க்க அதில் ஈடன் இருக்க வேண்டிய இடத்திலெல்லாம் வெற்றிடமே காணப்படுகிறது. என்ன இது என்று சொல்லி அதிர்ச்சியாகிறார்கள்.
இதே நேரம் இனியாவுக்குள் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுகிறது. ஈடனின் ஆவி இனியாவுக்குள் புகுந்து ஆட்டிப் படைக்கிறது. அதுவரையிலும் அமைதியாக இருந்த இனியாவின் செயல்பாடுகள் அத்துமீறி போகத் துவங்க.. அவருடைய அம்மா சபீதா ஆனந்த் தோழிகளிடம் புலம்பித் தள்ளுகிறார்.
ஈடனின் வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார்கள். ஈடன் இறந்தது உண்மை என்பது தெரிய வர.. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைத்து போலீஸுக்கு வருகிறார்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான நதியாவிடம் இந்தக் கேஸ் வருகிறது. அவர் ஒரு ஆர்வத்துடன் இந்த வழக்கில் குதிக்கிறார்.
மூடப்பட்ட கேஸ் டைரி திறக்கப்படுகிறது. நதியா ஒரு பக்கம் விசாரணையில் இறங்க.. இன்னொரு பக்கம் இனியாவின் நடவடிக்கைகள் ஈடனின் பேயினால் தாறுமாறாக நடக்கிறது. முடிவென்ன..? ஈடனை கொலை செய்தது யார்..? இனியா என்ன ஆனார் என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய கதைதான்..!
இரண்டு பெண்களுக்கு இடையேயான நட்பில் ஒரு பெண் அதீத பொஸஸ்ஸிவ்னெஸ் காரணமாக தன்னைவிட்டு விலகக் கூடாது என்கிறார். இதனை ஏற்காத இன்னொரு பெண் விலகிச் செல்ல முயல.. தனக்குக் கிடைக்காத அந்தப் பெண் இன்னொருவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைத்து கல்யாணத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது கொலை செய்கிறாள் காதலித்தவள். செத்துப் போனவள் ஆத்மா சாந்தியாகாமல் தன்னைக் கொலை செய்தவளின் தங்கையின் உடலுக்குள்ளேயே புகுந்து, அக்காவை பழி வாங்குகிறாள்.
இதில் பெண் ஓரினச் சேர்க்கை விஷயத்தை நாசூக்காக, ஆபாசமில்லாமல் வசனத்தாலேயே சொல்லி தாண்டிச் சென்றிருப்பது ஒன்றுதான் இந்தப் படத்திலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.
படத்தை மொத்தமாக பார்த்தால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை. சுவையான வசனங்களோ, காட்சிகளோ இல்லாமல் வெற்று தரையில் சோற்றை கொட்டி சாப்பிட்டதற்கு சமமாக இருக்கிறது இந்தப் படம்.
ஈடனுக்கும், இனியாவுக்கும் மேக்கப் போட்ட செலவே தனி பில்லாக வந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இருவருமே நன்றாகவே நடித்திருக்கிறார்கள். இதேபோல் ஆர்த்தியும், கோவை சரளாவும்தான் கொஞ்சம், கொஞ்சம் செல்போனில் இருந்து தலையை எடுத்து ஸ்கிரீனை பார்க்க வைத்திருக்கிறார்கள். நதியாவுக்கும் இந்தப் படம் எந்த பெயரையும் சம்பாதிக்கக் கொடுக்கப் போவதில்லை.
திரைக்கதையில் ஈர்ப்பில்லை. நடிகைகளும் அதிகமாக நடிக்க வைக்கப்படவும் இல்லை. இயக்கமும் சரியில்லை. படத்துக்கு முக்கியமான தேவையான கதையோ நமக்கு முற்றிலும் அன்னியமான கதை என்பதால் மனதில் ஒட்டவே இல்லை..!
இந்தப் படத்தில் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள் என்பதையே ஒரு பெரிய சாதனையாக சொன்னார் இயக்குநர் துளசிதாஸ். அப்படி பெண்கள் மட்டுமே நடித்து இந்தப் படம் என்ன சாதனை செய்துவிட்டது என்பதுதான் தெரியவில்லை. இந்தக் கதைக்கு இது போன்ற செட்டப்புகள் தேவையே இல்லை.
ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, படத் தொகுப்பு போன்றவைகளை பற்றி பேசவே தேவையில்லை என்பது போலவே இருக்கின்றன. மலையாளத்தில் நல்ல ஹிட்டுகளை முன்பு கொடுத்திருக்கும் இயக்குநர் துளசிதாஸுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. இப்படியொரு விமர்சனமே எழுத முடியாத அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.
மலையாளத்தில் இந்தப் படம் ஓடினால்கூட நிச்சயமாக அது ஆச்சரியம்தான்..!

கொடி - சினிமா விமர்சனம்

30-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சம காலத்திய தமிழகத்தின் அரசியலை அலசிப் போடுகிறது இந்த ‘கொடி’ திரைப்படம். ‘காக்கிசட்டை’, ‘எதிர்நீச்சல்’ என்று இரண்டு பக்கா கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார் மூன்றாவது படமாக முற்றிலும் டிராக் மாறி அரசியல் படமான இதைக் கொடுத்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்ட இயக்குநர் தனுஷுக்கும், தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கும் நமது நன்றிகள்.

பொள்ளாச்சியில் வசிக்கும் கருணாஸ் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. ஆனால் அவர் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அக்கட்சியின் தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது தீராத பாசம் கொண்டவர். அரசியல், அரசியல், அரசியல் என்றே 24 மணி நேரமும் அலைந்து கொண்டிருக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள்.. ஒருவன் கொடி. இன்னொருவன் அன்பு.
இதில் கொடி அரசியல் ஆர்வத்துடனும், அன்பு அதற்கு நேர்மாறாக அம்மா பிள்ளையாகவும் வளர்கிறான். சிறு வயதிலேயே கொடிக்கு மேடைகளில் பேசுவதற்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்கிறார் அப்பா கருணாஸ்.
அந்தப் பகுதியில் பாதரசம் கழிவுகளை வெளிப்படுத்தும் ஒரு ஆலை அமைந்திருக்கிறது. இதனால் அக்கம்பக்கம் வசிப்பவர்களில் பெரும்பாலோருக்கு கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதையடுத்து கருணாஸின் கட்சியினர் அந்த ஆலையை மூடும்படி கோரிக்கை வைத்து போராடுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை பெரும் போராட்டமாக்க நினைத்த கருணாஸ் அந்த ஆலை முன்பாகவே தீக்குளித்து செத்துப் போகிறார். இதனால் அவரது குடும்பமே அனாதையாகிறது.
இப்போது கொடி வளர்ந்து வாலிபனாகி அதே கட்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். அன்பு பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
கொடியுடனேயே ஒரே வகுப்பில் படித்தபடியே மேடைகளிலும் சரிக்கு சரி பேசி தன்னை வளர்த்துக் கொண்ட ருத்ரா என்னும் த்ரிஷா கொடியின் எதிர்க்கட்சியும் தற்போதைய ஆளும் கட்சியுமான குடியரசு கட்சியில் பரபரப்பான பேச்சாளராக இருக்கிறார். ஆனாலும் எல்லை தாண்டிய காதல் போல், கட்சி தாண்டிய காதலாக கொடிக்கும், ருத்ராவுக்கும் இடையே காதல் தொடர்கிறது.
இன்னொரு பக்கம் அன்புவுக்கும் முட்டை பிஸினஸ் செய்து வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் இடையில் மோதலில் உருவான நட்பு, மெதுவாக காதலாக மாறியிருக்கிறது.
அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான நமோ நாராயணன் தேர்தலில் நிற்கும்போது கொடுத்த படிப்புச் சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரிய வந்ததால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கிறது. இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது.
இந்த நேரத்தில் அன்புவின் காதலியான அனுபமா தனது வீட்டில் நடத்தும் முட்டை தொழிற்சாலையில் சாதாரண லகான் முட்டையை டீத்தூளில் முக்கியெடுத்து கலர் சாயம் பூசி கடைகளுக்கு விற்பனை செய்வதை அன்பு பார்த்துவிடுகிறான். இதற்குக் காரணம் கேட்க.. தனது அக்கா குழந்தை உட்பட பல சின்னக் குழந்தைகள் பாதரச ஆலையின் கழிவுகளால் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதாகவே இந்த வேலையைத் தான் செய்வதாகவும் சொல்கிறார்.
விஷயம் அன்பு மூலமாக கொடிக்கு செல்கிறது. அந்த பாதரச ஆலையின் முன்பாகத்தான் தனது தந்தை தன் கண் முன்பாக தீக்குளித்து இறந்தது கொடிக்கு நினைவில் இருப்பதால் இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி பிரச்சினையில் இறங்குகிறார்.
ஆலை மூடப்பட்டபோது இந்த்த் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மாரிமுத்து 200 கோடி ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு ஆலையின் சுத்திகரிப்பு பணிகள் முடிந்துவிட்டன என்று சர்டிபிகேட் கொடுத்த தகவல்கள் அனைத்தும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த ஆவணங்கள் மூலமாக கொடியின் கையில் சிக்குகிறது.
இதனை வைத்து தனது தலைவரிடம் நியாயம் கேட்கிறார் கொடி. அந்தப் பணத்தில் பாதி பங்கு கட்சிக்கும், தனக்கும் கிடைத்துவிட்டதை சொல்லி இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கும்படி சொல்கிறார் தலைவர். இதே நேரம் எதிர்க்கட்சியில் ருத்ராவுக்கு இடைத் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
தனது காதலியிடம் பாதரச ஆலை பற்றிய விஷயத்தை கொடி சொல்ல.. அதை அவர் தனக்குச் சாதகமாக்கும்விதமாக தன்னுடைய கட்சியின் பிரச்சார மேடையில் சொல்லிவிடுகிறார். இதனால் கோபமான கொடியின் கட்சித் தலைமை அவரை கடுமையாக கண்டிக்கிறது. இதனால் கோபமான கொடியும் ருத்ராவுடன் சண்டைக்கு போகிறார்.
அதே நேரம் கொடியை சமாதானப்படுத்த அவரையே தனது கட்சியின் வேட்பாளராகவும் நிறுத்துகிறது கொடியின் கட்சி. தேர்தல் களத்தில் உண்மையான காதலர்கள் இருவரும் போட்டிக்கு நிற்க இந்த விஷயம் அரசல், புரசலாக இரண்டு கட்சிக்குள்ளும் பரவ.. த்ரிஷாவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் தனியாக சந்திக்க வேண்டும் என்று கொடியை அழைக்கிறார் ருத்ரா. இருவரும் சந்தித்துப் பேசுகையில் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறாய் என்று சொல்லி த்ரிஷாவே  கொடியை கொலை செய்துவிடுகிறார்.
இதையடுத்து தொகுதி முழுவதும் கொடிக்கு அனுதாப அலை வீச.. த்ரிஷா தந்திரமாக கொடியின் தம்பி அன்புவை தங்களது கட்சிக்கு இழுத்து அவரையே சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்க வைக்கிறார். எப்படியும் நாங்கள் தோற்றுவிடுவோம் என்பது உறுதியானதால் எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் போக, எதிர்ப்பே இல்லாமல் மிக எளிதாக சட்டமன்ற உறுப்பனராகிறார் அன்பு.
இப்போது அவரது முதல் வேலை தனது அண்ணன் கொடியை கொலை செய்தவரை கண்டுபிடிப்பதும்.. அந்த பாதரச ஆலையின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதுதான்.. இதற்கு த்ரிஷா அவ்வப்போது தடையாக இருக்க இதனை எப்படி முறியடித்து செய்து காட்டுகிறார் என்பதும் கொலையாளி த்ரிஷாதான் என்பதை அவரால் கண்டறிய முடிகிறதா என்பதும்தான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை.
கடந்த 2011-ம் ஆண்டு புதுவையை ஆண்ட என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த கல்யாண சுந்தரம் பிளஸ்டூ தேர்வில் தனக்குப் பதிலாக வேறு ஒருவரை எழுத வைத்து இந்த ஆள் மாறாட்டம் தெரிந்தவுடன் பிடிபட்டு தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் போலி படிப்பு சான்றிதழ்களை வழங்கியதாக டெல்லி போலீஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீதும் போலி சான்றிதழ் சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல் சர்ச்சைக்குரிய பெண் அமைச்சரான ஸ்மிரிதி இரானியும் போலியான கல்விச் சான்றிதழை சமர்ப்பித்திருப்பதாக போலீஸே அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆக மொத்தம்.. இந்தியாவில் லஞ்சம், ஊழல் கலாச்சாரத்திற்கு அடுத்து மிக முக்கியமான விஷயமாக இந்த போலி சான்றிதழ் விவகாரமும் இருக்கிறது.
இதையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே கல்லூரி படிப்பை முடித்ததாக சர்டிபிகேட் கொடுத்து மாட்டிக் கொள்கிறார் நமோ நாராயணா.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, திருப்பூரில் சாய ஆலைகள், பெப்சி மற்றும் கோக் ஆலைகள் என்று மக்களை பாதிக்கும் விஷயங்களை உள்ளடக்கிய பல நிறுவனங்களிடமிருந்து அனைத்து அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் கையூட்டு வாங்கிக் கொண்டு, அவர்களை எதிர்த்து போராடுவதுபோல போக்குக் காட்டி பிரச்சினையை மெல்ல, மெல்ல அமுங்கிப் போகும்படி செய்திருக்கிறார்கள்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு வகையில் உடல் உபாதைகள் ஏற்பட்டு அந்த வட்டாரத்தில் இறப்பு விகிதங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இன்னமும் பலர் நடைப்பிணமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் அரசியல் கட்சிகள் ஒரு நாள் கூத்தாக ஒரு போராட்டத்தை நடத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவ்வளவுதான்..!
உலகத்தில் இரண்டாவது மிகப் பெரிய இயற்கை கேடு பாதரசக் கழிவுகள்தான் என்று ஐ.நா. அமைப்பு சொல்கிறது. அப்பேர்ப்பட்ட கழிவுகளால் இன்றைக்கும் பல அப்பாவிகள் கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர். இன்னும் பலர் உயிருடன் போராடி வருகிறார்கள். இது பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த கமர்ஷியல் திரைப்படத்தின் மையக் கருவாக கையாண்டிருப்பதற்கு இயக்குநருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்..!
தனுஷ் முதன்முதலாக இரு வேடத்தில் நடித்திருக்கிறார். இரண்டுமே வேறு வேறு கேரக்டர் ஸ்கெட்ச். ஒருவர் தைரியசாலி. மற்றவர் அதைரியசாலி. மற்றைய படங்களை போலவே இந்த இரண்டு ஸ்கெட்ச்சுகளை வைத்து பல காட்சிகள் எழுதப்பட்டுள்ளன. சண்டை காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
தனுஷ் கொடியாக வில்லத்தனம் நிறைந்த கட்சிக்காரனாகவும், வீறாப்பு பிடித்த மகனாகவும், கட்சியின் உண்மைத் தொண்டனாகவும், கலக்கலான காதலனாகவும், இரக்க குணம் உள்ளவனாகவும் பல்வேறுவிதமான குணாதிசயங்களை தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார்.
இதற்கு நேர் மாறாக அன்பு என்னும் தனுஷ், அப்பாவியாக.. அம்மாவின் செல்லமாக.. பயந்த சுபாவம் உள்ளவராக.. காதலிக்கு கட்டுப்படும் காதலனாக என்றெல்லாம் தனக்கான கேரக்டரில் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்.
மாஸ் ஹீரோவுக்கான தீம் மியூஸிக்குடன் சற்றே ஸ்டைலான நடை, உடை, பாவனையுடன் தனுஷ் தனது ‘கொடி’யை இதில் நிலை நாட்டியிருக்கிறார். தொடர்ந்தால் சந்தோஷம்தான்..!
த்ரிஷா இந்தப் படம்தான் தனக்கு முதல் படம் என்பதுபோல நடித்திருக்கிறார். தனது அரசியல் சதிகளை காதல் போர்வைக்குள் அடுக்கடுக்காக நகர்த்திக் கொண்டே போவதும், கொடியை காதல் பேச்சாலேயே அடக்குவதும்.. நமோ நாராயணனிடம் சீறித் தள்ளுவதும்.. தன்னை பெண் என்கிற ஒரே காரணத்துக்காக ஏகடியம் பேசுபவர்களை திட்டம் போட்டு பழி வாங்குவதுமாக இப்போதைய பல உண்மை அரசியல் பெண் புலிகளை அடையாளம் காட்டுகிறார் த்ரிஷா. அவருடைய கோபத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் பொருத்தமான வாய்ஸும், உடல்கட்டும் அவரிடத்தில் இல்லை என்பதுதான் ஒரே மைனஸ்.
மலையாள வரவான புதுமுகம் அனுபமா பரமேஷ்வரின் இன்னொரு பக்கம் கலக்கியிருக்கிறார். வெகு சில நடிகைகளுக்கே குளோஸப் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இவருக்கு அது மிக அழகாக இருக்கிறது. நடிப்பில் குறையே வைக்காமல் “யார்ரா இந்த பாப்பா…?” என்று கேட்க வைத்திருக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் அலட்டல் இல்லாத யதார்த்தமான கட்சித் தலைவராகவும், இன்னொரு பக்கம் விஜயகுமார் குடியரசு கட்சித் தலைவராகவும் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஏ.சி.யின் நடிப்புக்குத்தான் நிறைய சான்ஸஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.  கருணாஸ் கொஞ்ச நேரமே வந்தாலும் நெகிழ வைக்கிறார். தனது மகனின் வளர்ச்சிக்காக அவர் செய்யும் முன்னேற்பாடுகளெல்லாம் அப்பாவி தமிழனை அடையாளம் காட்டுகிறது.
வழக்கம்போல பாசமான அம்மாவாக சரண்யாவும், தோள் கொடுத்த தோழனுக்கு நன்றிக் கடன் காட்டும் நண்பனாக காளி வெங்கட்டும் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட் கடைசியாக த்ரிஷாவின் கதையை முடிக்கும்போது பேசும்பேச்சு அவர் செய்ததையே நியாயப்படுத்திவிட்டது.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு, பிரகாஷ் மப்புவின் படத் தொகுப்பு இதையும் தாண்டி சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒலித்திருக்கிறது. பாடல்களைவிடவும் பின்னணி இசையே தனுஷை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது. ‘வேட்டை போட்டு கொண்டாடு’ தனுஷ் ரசிகர்களுக்காகவும், ‘சிறுவாசம் காத்தாட’ பாடலை மெலடி ரசிகர்களுக்காகவும் போட்டு சமன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
மற்றைய மாநில மொழி படங்களை போல தமிழில் நேரடியாக எந்தவொரு அரசியல் கட்சியையும் தாக்கி சினிமாக்கள் வெளிவரவே முடியாது. ஆனால் கேரளாவில் கட்சி, அரசியல் என்றால் இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியையும், காங்கிரஸ் கட்சியின் கொடியையும் தைரியமாக காட்டுவார்கள். அவற்றின் பெயரைக்கூட பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழில் அவ்வளவு தைரியமான தயாரிப்பாளர் இதுவரையிலும் யாரும் இல்லாததால் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்காச்சும் பேசினார்களே என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!
த்ரிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை பார்க்கும்போது புலவர் இந்திரகுமாரி, வளர்மதி, கோகுல இந்திரா, சசிகலா புஷ்பா, விஜயதாரணி போன்ற தற்போதைய கட்சி சார்பானவர்கள் நினைவுக்கு வந்து தொலைகிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதையை தற்போதைய அரசியல் உலகத்துடன் தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறார் இயக்குநர்.
இவருக்கு உறுதுணையாக வசனம் எழுதிய வசனகர்த்தா அமிர்தராஜுக்கும் நமது பாராட்டுக்கள். “மக்களுக்கு சேவை செய்யணும்னா ஒருத்தனும் பத்து பைசாகூட தர மாட்டான்.. ஆனால் லஞ்சமா கொடுக்கணும்னா லட்சம், லட்சமா அள்ளிக் கொடுப்பான்..” என்ற ஒரு வசனமே இந்தியாவின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திரைக்கதையின் பல டிவிஸ்ட்டுகள்தான் படத்தைத் தாங்கியிருக்கின்றன. த்ரிஷா – கொடி காதலை இப்போதிலிருந்து துவக்காமல் முதலிலேயே இருப்பது போல காட்டி நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். காதலன் சொன்ன ரகசியத்தை த்ரிஷா மேடையில் சொல்வதும், அதைத் தொடர்ந்த சம்பவங்களும், கொடியின் கொலையும் அதிர்ச்சி ரகம்தான்.
ஆனால் தம்பி திடீரென்று அண்ணனின் குணத்தில் மாறி, அடிதடியிலும், அடாவடியிலும் இறங்குவது எதிர்பாராத டிவிஸ்ட். இதற்கு மருத்துவரை சாட்சிக்கு அழைத்திருப்பது இயக்குநரின் டேலண்ட்.
த்ரிஷா செல்போன் டவரின் மேல் ஏறி நின்று கொண்டு மாவட்டச் செயலாளருக்கு முதல்வரையே சப்போர்ட் செய்ய வைத்து டிராமா போடுவது.. பின்பு மாவட்டச் செயலாளரையே அவரது வாயால் தன்னை வேட்பாளராக அறிவிக்க வைப்பது.. கொடியின் மரணத்திற்கு ஈடு கட்டுவதுபோல அன்புவை தங்கள் கட்சிக்கு இழுத்து வந்து அவரை வேட்பாளராக்குவது.. தான் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதால் நியமன எம்.பி. பதவி வேண்டும் என்று கட்சித் தலைவரிடம் தைரியமாக கேட்பது.. கூடவே மாவட்டச் செயலாளர் போஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு த்ரிஷா தனது தெனாவெட்டை காட்டுவது.. இன்ஸ்பெக்டரிடம் டிராமா போட்டு அவரை காட்டிக் கொடுத்து சாகடிப்பது… என்று படத்தின் கதையை முழுக்க, முழுக்க அரசியல் திரைக்கதைகளால் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். இதனாலேயே படத்தை அதீதமாக ரசிக்க முடிந்திருக்கிறது.
தனுஷின் கேரியரிலேயே இயக்குநர் செல்வராகவனைத் தவிர்த்து ‘இது இயக்குநர் படம்’ என்று பெயரெடுத்திருப்பது இந்தப் படம்தான். அந்தப் பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமாருக்கு நமது வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..!
இந்தக் ‘கொடி’யை நிச்சயம் நம்பிப் போகலாம்.. ஏமாற்றவில்லை. ஆனால் புதிய விழிப்புணர்வு ஒன்றை நமக்கு உணர்த்துகிறது.
அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்..!

காஷ்மோரா - சினிமா விமர்சனம்

30-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வருடம் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம்தான் முதல்முறையாக இறந்து போன ஆவிகளுக்கு உதவி செய்து அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி மேலுலகத்திற்கு அனுப்பி வைக்கும் கதை, திரைக்கதையுடன் வெளிவந்தது. அதன் பின்பு இன்னும் இரண்டு படங்களில் இதே போன்ற கதையம்சத்துடன் படங்கள் திரைக்கு வந்தன. இப்போது இந்தப் படம்.

பேயை ஓட்டுகிறேன்.. செய்வினை வைக்கிறேன். செய்வினையை தீர்த்து வைக்கிறேன்.. பில்லி, சூனியத்தை அகற்றுகிறேன் என்று இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைத்து கோல்மால் செய்து பணத்தை அள்ளுகிறது விவேக் அவரது அம்மா, அவரது மகள்,  மற்றும் அவரது மகனான காஷ்மோராவை உள்ளடக்கிய ஒரு பிராடு பேமிலி கும்பல். தொலைக்காட்சிகளில்கூட பில்லி சூனியம், ஆவியுலகம் பற்றியெல்லாம் லெக்சர் அடிக்க, பட்டிதொட்டியெங்கும் பரவி பெயரெடுக்கிறார் காஷ்மோரா.
இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரான சரத் லோகிதஸ்வாவின் மீதிருக்கும் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி காஷ்மோராவை அணுகுகிறார்கள் அடிப்பொடிகள். பெரிய இடம் என்பதால் சிக்கலான ஸ்கெட்ச்சை போட்டு, சரத்தை மடக்கி அவரது அன்புக்கு பாத்திரமாகிறார் காஷ்மோரா.
அதே நேரம் ஆவிகளை ஓட்டுவதாகச் சொல்பவர்கள் அனைவருமே போலிகள்.. திருடர்கள்.. பணம் பறிக்கும் கும்பல்கள் என்று நினைக்கும் ஸ்ரீதிவ்யா இதைப் பற்றி ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டி காஷ்மோராவிடம் அஸிஸ்டெண்ட்டாக சேர நினைக்கிறார். தன்னுடைய ஆராய்ச்சி பட்டப் படிப்புக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லி விவேக்கிற்கு தட்சணை கொடுத்து சேர்கிறார்.
இந்த நேரம் சரத் லோகிதஸ்வா தன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வரப் போவதாகத் தகவல் தெரிந்தவுடன் தன்னிடமிருந்த 500 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை காஷ்மோராவின் ஆசிரமத்தில் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்கிறார்.
ஆனால் இத்தனை பெரிய தொகையைப் பார்த்தவுடன் சபலப்படும் விவேக் பணத்துடன் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே ஓடுகிறார். இந்த நேரத்தில் ஆந்திராவில் ஒரு வீட்டில் பேய் இருப்பதாகவும் அதை ஓட்ட வேண்டும் என்றும் சொல்லி ஒரு ஆஃபர் காஷ்மோராவுக்கு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்கிறார் காஷ்மோரா. பின்னாலேயே அவரது குடும்பமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறது.
ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு அரசரின் சாம்ராஜ்யத்தில் அவரது தளபதியாக இருந்த ராஜ் நாயக்கால் ஏகப்பட்ட குழப்பம். வில்லாதி வீரனாக இருக்கும் ராஜ் நாயக் என்றாவது ஒரு நாள் தனது பதவிக்கு வேட்டு வைப்பான் என்று நினைத்து பயப்படுகிறார் அரசர்.
இந்த நேரத்தில் அரசரின் மகளான இளவரசி ரத்ன மகாதேவியை, பக்கத்து நாட்டு இளவரசன் கவர்ந்து செல்கிறான். இதையறிந்த அரசன் ராஜ் நாயக்குதான் இளவரசியை கவர்ந்து சென்றிருக்கிறான் என்று தவறாக நினைத்து ‘இளவரசியை மீட்டுக் கொண்டு வருபவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியை கொடுத்து, இளவரசியையும் அவருக்கே திருமணம் செய்து கொடுப்பதாக’வும் சொல்கிறார். ஆனால், ராஜ் நாயக் அந்த இளவரசனை கொலை செய்துவிட்டு இளவரசியை அரண்மனைக்கு திரும்பவும் அழைத்து வருகிறான்.
அரசர் இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்காமல் திகைக்க.. கிடைத்த இடைவெளியில் தற்போதைய ராஜாவையும், அவருடைய மகனான பட்டத்து இளவரசரையும் கொலை செய்துவிட்டு இனிமேல் அந்த நாட்டுக்கு தானே ராஜா என்கிறான். இளவரசி ரத்ன மகாதேவியுடன் திருமணத்திற்கு நாளும் குறிக்கிறான். ஒரே நாளில் தனது தந்தை, சகோதரனை இழந்து தவிக்கும் ரத்ன மகாதேவி, ராஜ் நாயக்கை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறாள்.
தனது கூந்தலில் விஷம் கலந்த மூலிகையை கலந்து அதன் மூலமாக தன்னுடன் ஆடிப் பாடி களிப்படையும் ராஜ் நாயக்கை கொல்கிறாள். இதே சம்பவத்தில் ராஜ் நாயக்கும் இளவரசியையும் கொலை செய்கிறான்.
ராஜ் நாயக்கின் ஆசை அப்போது நிறைவேறாத காரணத்தினால் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் ஆவியாகவே திரிகிறான். ஆத்மா சாந்தியாகி மேலுலகம் சென்றடைய வேண்டுமெனில் ஒரு நிறைந்த பெளர்ணமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பலி கொடுக்க வேண்டும். இந்தக் கொலை பலியை பரம்பரையிலேயே ஒரேயொரு வாரிசாக இருக்கும் பெண் ஒருத்திதான் முன்னின்று நடத்த வேண்டும் என்ற விதியிருக்கிறது என்பதை அறிகிறான் ராஜ் நாயக்.
இதற்காக்கத்தான் திட்டமிட்டு காஷ்மோராவும், அவன் குடும்பமும் அந்த அரண்மனையில் மாட்டிக் கொள்ளும்படி நேர்கிறது. கூடவே ஸ்ரீதிவ்யாவும் மாட்டிக் கொள்கிறார். இப்போது ஆவியாக இருக்கும் ராஜ் நாயக் உண்மையைச் சொல்லாமல் தனக்கு உதவி செய்யும்படி காஷ்மோராவிடம் கேட்கிறான்.
உண்மை தெரிந்த காஷ்மோரா அங்கேயிருந்து தப்பிக்க நினைக்கிறான். உள்துறை அமைச்சரோ தன்னுடைய 500 கோடி பணத்தை அவர்களிடமிருந்து மீட்க நினைத்து போராடுகிறார். இறுதியில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இந்த காஷ்மோராவின் கதை.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதை. ஆனால் மிக நுணுக்கமான தேடல், அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. திறமைசாலிகளின் கூட்டணியுடன் வெற்றிப் படமாக்கும் அளவுக்கு கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் கோகுல். ஏற்கெனவே ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்கிற படங்களை இயக்கியிருக்கும் கோகுல், இந்த மூன்றாவது படத்திற்கு முற்றிலும் வேறுவகையான கதைக்கு தாவியிருப்பது ஆச்சரியம்தான்..!
காஷ்மோராவைவிடவும் ராஜ் நாயக் கார்த்திதான் படத்தைத் தாங்கியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் மட்டுமே வந்தாலும் படத்தின் இறுதிவரையிலும் தனது தனித்த நடிப்பால் படத்திற்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார் கார்த்தி.
ராஜ் நாயக்கின் ஆணவச் சிரிப்பு, அகங்காரமான பார்வை.. போரில் தோற்றுப் போன அரசனின் அனைத்து பெண்களையும் அழைத்து வா என்று மோகிக்கும் குறுகுறுப்பு.. நயன்தாராவுடன் கொண்டிருக்கும் மோகத்தை வெளிப்படுத்தும்விதம்.. அப்பாவியாய் ராஜ் நாயக்கிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது என்று பலவித திறமைகளை கிடைத்த இடங்களிலெல்லாம் காட்டியிருக்கிறார் கார்த்தி.
தலை வேறு முண்டம் வேறாக மூன்றாவது வேடமாக ஏற்றிருக்கும் ராஜ் நாயக்கின் பேய் வேடத்தில் சத்தியமாக கார்த்தியை முதலில் அடையாளமே தெரியவில்லை. அந்த அளவுக்கு மேக்கப் கலை விளையாடியிருக்கிறது. அந்தக் கோலத்தில் கார்த்தியின் நடிப்பு அவருடைய நடிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். “இன்னொரு முறை ஓட்டம் எடுத்தால் உன் உயிரும் ஓடிவிடும்..” என்று மிரட்டும்போதும் பயமுறுத்தியிருக்கிறார்.
காஷ்மோரா கேரக்டரில் படு டீஸண்ட்டான கிரிமினலை காட்டியிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பயந்து கொண்டே போய் கடைசியில் அவர்களே ஒரு உதவி கேட்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தெனாவெட்டாக, “பாலும், முட்டையும் வாங்கிட்டு கோவிலுக்கு வாங்க…” என்று சொல்லும் திமிரும்.. சிரித்துப் பேசிய ஆளை மயக்கிவிடும் அந்த இயல்பான நடிப்பும் காஷ்மோராவுக்கு பக்க பலம்.
இதற்கு நேர் மாறாக ராஜ் நாயக் பேயிடம் காஷ்மோரா மாட்டிக் கொண்டு தவிக்கும்போது தனது உண்மை நிலையைச் சொல்லிவிட்டு, “ஒரு ஆட்டக்காரன் இன்னொரு ஆட்டக்காரனை பாராட்டணுமாம். ‘கரகாட்டக்காரன்’லேயே சொல்லியிருக்காங்க. நான் உன்னை பாராட்டிட்டேன்.. கதவைத் தொறந்துவிட்டீங்கன்னா ஓடிருவேன்…” என்று கெஞ்சலாக கேட்குமிடத்தில்தான் தியேட்டரில் அதிக கை தட்டல் கிடைக்கிறது.
ஹீரோவுக்கு இணையாக இன்னொரு ஹீரோவாகவே நடித்திருக்கிறார் நயன்தாரா. எப்போது வருவார்.. எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்புக்கிடையே காட்சிக்கு வரும் நயன்ஸ் தனது அப்பா கொலையுண்ட பின்புதான் தனது அழுத்தமான நடிப்பையே காட்டியிருக்கிறார். அவர் அணிந்திருந்த இரண்டு மூக்குத்திகளுமே அவரது அழகைக் குறைத்திருக்கின்றன என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
விஷம் தலைக்கு ஏறிய நிலையில் நிற்கும் ராஜ் நாயக்கிடம் “என்ன அடி சறுக்குகிறதா ராஜ் நாயக்..?” என்று கேட்டபடி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமரும் அந்த ஒரு காட்சியில், ‘படையப்பா’ நீலாம்பரியை ஞாபகப்படுத்துகிறார் நயன்ஸ்..
“இந்தப் பிறவியல்ல.. இனிமேல் நீ எத்தனை பிறவி எடுத்தாலும் உன் முடிவு என் கையில்தான்…” என்று ஆக்ரோஷமாக பேசும் காட்சியும், அதைத் தொடர்ந்த மரணக் காட்சியும் நயன்ஸின் ரசிகர்களை நிச்சயம் சந்தோஷப்படுத்தும். ஆனாலும் அம்மணியின் முகத்தில் உயர்ந்து கொண்டே போகும் வயதின் அடையாளம் தெரிவதுதான் சங்கடமாக இருக்கிறது.
டூயட்டே இல்லாமல் ஆராய்ச்சிப் படிப்பு மாணவியாக வலம் வந்திருக்கும் ஸ்ரீதிவ்யா கொஞ்ச நேரமானாலும் தனது பாத்திரத்தை நிரம்ப செய்திருக்கிறார். காஷ்மோராவிடம் உதவியாளராக வேலை பார்ப்பது போல் நடித்து ‘ஆவியும் அது சார்ந்த பித்தலாட்ட வணிகமும்’ என்கிற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதும் இரட்டை வேடத்தை இதில் புனைந்திருக்கிறார்.
“எங்க தாத்தா குட்டிச் சாத்தானுக்கு குட்டிக் கதை சொல்லி வீட்டு வாசலிலேயே அதுகளை கட்டிப் போட்டிருக்காது. அதுகதான் இதுக.. ரத்தம்தான் குடிக்குங்க..” என்று வாசலில் கட்டிப் போடப்பட்டிருக்கும் சங்கிலியை மட்டும் காட்டி உண்மையை நம்ப வைக்கும் காஷ்மோராவின் தங்கை மதுமிதாவும், மேஜிக் செட்டப்புகளை செய்து வைக்கும் அவரது பாட்டியும் இன்னொரு பக்கம் கவர்ந்திருக்கிறார்கள்.
தனியொரு மனிதனாக விவேக் படத்தை சில நேரங்களில் தாங்கியிருக்கிறார். என்னிக்கு “கோயிலுக்குள்ள கேமிராவும், எலெக்ட்ரிக் டிரம்மும் வந்துச்சோ அன்னிக்கே சாமிங்கெள்லாம் கோயில்ல இருந்து கிளம்பி வாக்கிங் போயிருச்சுக…” என்று பொருத்தமாக பன்ச் வசனம் பேசி கொஞ்சம், கொஞ்சம் நகைச்சுவையை படம் முழுவதும் தெளித்திருக்கிறார்.
ஓம் பிரகாஷின் அற்புதமான ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். போர்க் களக் காட்சிகளை கிராபிக்ஸில் வடிவமைத்திருந்தாலும் ஒரு சிறிய ஜெர்க்கூட இல்லாமல், அனைத்து பிரம்மாண்டமாத்தையும் பிரேமுக்குள் பதிவாக்கியிருக்கிறார் ஓம் பிரகாஷ். நயன்தாராவின் அழகுக்கும், ராஜ் நாயக்கின் பயமுறுத்தலுக்கும், காஷ்மோராவின் அலட்டல் நடிப்புக்கும் உறுதுணை ஒளிப்பதிவாளர் என்பதில் சந்தேகமேயில்லை.
அன்பறிவ் சகோதரர்களின் சண்டை பயிற்சிக்கும் ஒரு ஷொட்டு.  கலை இயக்குநர் ராஜீவனின் கைவண்ணத்தில் அரண்மனை மற்றும் ராஜ் நாயக் தங்கியிருக்கும் வீட்டின் உட்புற அமைப்பு, வெளிப்புறத் தோற்றமெல்லாம் படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் உடுக்கை ஒலியுடன் முதலில் அறிமுகமாகும் காஷ்மோராவும், பின்பு படத்தின் தீம் மியூஸிக்காக அவ்வப்போது ஒலிக்கும் இசையும் ரம்மியம். ‘திக்கு திக்கு ஸார்..’, ‘ஓயா ஓயா..’ மற்றும் ‘தகிட தகிட’ பாடல்கள் கேட்கும் ரகம். இதில் ‘திக்கு திக்கு ஸாரை’ வேறு ஒரு நல்ல கம்பீரமான குரல் வளம் கொண்ட பாடகரை வைத்து பாட வைத்திருந்தால் அந்தப் பாடல் மட்டுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கும்.
படத்தின் திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை சேர்த்திருந்தால் ஆங்காங்கே தொங்கலில் நிற்கும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கலாம்..!
சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும், படம் காட்டும் பிரம்மாண்டம்.. ராஜ் நாயக்கின் கேரக்டர் ஸ்கெட்ச்.. தலையும், உடலும் தனித்தனியே மிதப்பது.. நயன்தாரா, இளவரசருடன் ராஜ் நாயக் மோதும் பிரமிப்பூட்டும் சண்டை காட்சிகள்.. அதீத ஆர்வத்தைத் தூண்டும் போர்க்களக் காட்சிகள்.. நயன்தாராவின் அழகு.. ராஜ் நாயக்கின் கம்பீரம் என்று பலவும் சேர்ந்து படத்தை பார்த்தே தீர வேண்டிய படம் என்கிற லிஸ்ட்டில் இடம் பிடிக்க வைத்திருக்கிறது.
காஷ்மோரா – சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

அம்மணி - சினிமா விமர்சனம்

15-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடமே தமிழ்ச் சினிமாவுக்கு ஸ்பெஷல்தான் போலிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒருவகையில் சிறந்த படமாக சொல்லும் அளவுக்கு சிறந்த படைப்புகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இந்த மாதத்திய சிறந்த படம் கோட்டாவில் சந்தேகமில்லாமல் இடம் பிடித்திருக்கிறது இந்த ‘அம்மணி’.
என்னதான் பாசத்தைக் கொட்டி வளர்த்தாலும், வளர்ந்த பிள்ளைகளுக்கு பணத்தின் மீதான ஆசை மட்டும்தான் அதிகமாக இருக்கும். இப்போதைய காலக்கட்டத்தில் நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கும் கீழான நிலையில் இருக்கும் குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளுக்கு மிகப் பெரிய காரணமாக சொத்து, பணம் இவையிரண்டும்தான் முக்கியப் பங்களித்து வருகின்றன. இந்த ‘அம்மணி’ திரைப்படம் சொல்வதும் இதைத்தான்.
ஜீ தமிழ்த் தொலைக்காடசியில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஒரு நாள் பங்கெடுத்த ஒரு முதிய பெண்மணியின் சொந்தக் கதைதான் இந்த ‘அம்மணி’.

வடசென்னையில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயாவாக வேலை செய்கிறார் ‘சாலம்மா’ என்கிற லட்சுமி ராமகிருஷ்ணன். இவருடைய கணவர் இதே மருத்துவமனையில் வேலை பார்க்கும்போதே இறந்து போனதால், கருணை அடிப்படையில் அந்த வேலை சாலம்மாவுக்குக் கிடைத்திருக்கிறது.
கணவர் இறந்தபோது மூத்த மகனுக்கு 7 வயது. இரண்டாவது மகனுக்கு 5 வயது.  அப்போதிலிருந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இதில் இளைய மகனான நிதின் சத்யா ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் பெயிண்டராக இருக்கிறார். ஆனால் மகா குடிகாரன்.  இரண்டு மகன்களுக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டார். இரு மகன்களுக்குமே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சாலம்மாவுக்கு இவர்களையும்விட மூத்த மகளும் ஒருவர் இருக்கிறார். அவர் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டதால் அவரோடு ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருக்கிறது சாலம்மாவின் குடும்பம்.
தண்டையார்பேட்டை ரயில்வே லைன் பக்கத்திலேயே சாலம்மாவின் கணவருக்கு சொந்தமாக இடம் இருந்திருக்கிறது. அலுவலகத்தில் லோன் போட்டு அங்கே வீடு கட்டி குடியிருக்கிறது சாலம்மாவின் குடும்பம். அதே குடியிருப்பில் இன்னொரு ஒற்றை அறை கொண்ட வீட்டில் தெருவில் குப்பைகளை பொறுக்கி பிழைத்து வரும் ‘அம்மணி’ என்ற வயது முதிர்ந்த பெண்மணியும் இருக்கிறார்.
திடீரென்று மகள் வயிற்று பேரன் சாலம்மாவை தேடி வருகிறான். தனக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகவும் அதனால் இங்கேயே தங்கிக் கொள்வதாகவும் சொல்கிறான். சாலம்மாவின் குடும்பத்தினருக்கு இதில் ஒப்புதல் இல்லாமல் இருக்கிறது. அவனை விரட்டுவதில் குறியாய் இருக்கிறார்கள். சாலம்மாள் மனது கேட்காமல் அம்மணியின் அறையிலேயே அவனை தங்க வைக்கிறாள்.
ரிட்டையர்டாகும் வயது வந்துவிட்டதால் ஊழியர் சேமநல வருங்கால வைப்பு நிதி பணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் சாலம்மா. அவள் மட்டுமல்ல.. அவளுடைய மகன்களும்கூடத்தான்.
மூத்த மகனான பெயிண்ட்டர் அம்மாவின் பி.எஃப் பணத்தை எதிர்பார்த்து பெயிண்ட் காண்ட்ராக்ட் எடுத்து நஷ்டப்பட்டு அவலத்தில் இருக்கிறார். இளைய மகனான நிதினும் ஆட்டோ கடனை அதை வைத்துதான் அடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார். ஆனால் வரவிருக்கும் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயில் வீடு கட்டியதற்கான கடனான 2 லட்சத்தை கொடுத்துவிட்டால் மீதமாக கையில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை.
மூத்த மகனைவிடவும் இளைய மகன் சற்று விவரமாக இருப்பதால் பி.எஃப். பணம் எதுவும் இல்லை என்கிற சூழலில் அந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி கேட்டு அடம் பிடிக்கிறான். மூத்த மகனுக்குக் குடுத்தால் அவன் குடித்தே அழித்துவிடுவானே என்பதால் அவன் சொல்படியே எழுதிக் கொடுக்கிறாள் சாலம்மா.
இடையில் மகள் வயிற்றுப் பேரன் தான் வெளிநாட்டிற்குச் சென்று பணம் சம்பாதித்து குடும்ப கடனை அடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அதற்காக 2 லட்சம் ரூபாயை சாலம்மாவிடம் கேட்கிறான். பெரிய பேரன் உண்மையான பாசத்தோடு வந்திருக்கிறான் என்று நினைத்திருந்த சாலம்மாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாகிறது. பணமில்லை என்றவுடன் இந்தப் பேரனும் பாட்டியுடன் சண்டையிட்டுவிட்டு கிளம்புகிறான்.
ஒரு நாள் மூத்த மகனுக்கும், இளைய மகனுக்கும் இடையில் ஒரு பெரும் சண்டை ஏற்பட.. “இது என் வீடு. அம்மா எனக்கு எழுதிக் கொடுத்திருச்சு..” என்று சொல்லி தன் அண்ணனை வீட்டைவிட்டு வெளியே போகும்படி சொல்கிறான் இளையவன். கூடவே அம்மாவையும் கூட்டிக் கொண்டு போகும்படி சொல்ல.. பெரும் அதிர்ச்சியாகிறார் சாலம்மா.
தன்னுடைய கடைசி காலத்தில் தன்னை கவனித்துக் கொள்வான் என்று நினைத்த மகனே, தன்னை தள்ளி வைத்ததை ஜீரணிக்க முடியாத அவலத்தில் இருக்கும் சாலம்மா, இதன் பின்பு அவர் எடுக்கும் ஒரு முடிவுதான் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அது என்ன என்பதும். இதன் பின்னான கதை என்ன என்பதும்தான் படத்தின் திரைக்கதை.
மிகச் சிறிய வயதில் வீட்டுக்கு பின்னே கொய்யா மரத்தில் சாய்ந்தபடியே அந்த மாதத்திய ராணி முத்துவில் வெளிவந்த திரிபுரசுந்தரி என்னும் லட்சுமியின் ஒரு நாவலைப் படித்து முடித்த திருப்தியை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும், வளர்ப்பதும், குடும்பமாக வளர்வதும்கூட பெற்றோர்களின் சுயநலம்தான். ஆனால் இதுதான் மனித வளர்ச்சியின் நோக்கம். அதன் அடிப்படையே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்தல்தான். குடும்பம்தான் முக்கியம் என்ற கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் தமிழகத்தில்தான், சமீபமாக இதன் நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன.
ஒரு பக்கம் பிள்ளைகளின் தனிக்குடித்தனம் அதிகமாக.. இன்னொரு பக்கம் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டே போக.. ஏன், எதற்கு இத்தனை கஷ்டப்பட்டு பிள்ளைகளை பெற்று வளர்க்க வேண்டும்.. என்று முதிய வயதில் அனைத்து தாய், தந்தையரையும் யோசிக்க வைக்கிறது இன்றைய இளைய தலைமுறையினரின் செயல்.
மிடில் கிளாஸ் குடும்பத்துக்கே உரித்தான போலி கவுரவம், மாமியார், மருமகள் சண்டை, அண்ணன் தம்பி மோதல்.. ஈகோ, வறட்டு கவுரவம், பணத்தின் மீதான ஆர்வம்.. சொந்த பந்தம் என்றாலும் பணம் என்றவுடன் குணம் மாறும் இயல்பு.. என்று பலவற்றையும் இந்தக் குடும்பத்து கதையில் மிகைப்படாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி.
இன்னொரு பக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரவு நேரத்தில் குப்பைகளை அள்ளி அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வரும் அம்மணியும், அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் படத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பெரிய பலம்.
ஒரு ஆத்திரத்தில் அம்மணியை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் மகன்.. அம்மணியிடம் பணமும், நகைகளும் இருப்பதைப் பார்த்தவுடன் குணம் மாறி செல்வதும், பின்பு மருமகள்கள் இருவரும் அம்மணி மீது காட்டும் போலி பாசம், பரிவு எல்லாவற்றையும்கூட திரைக்கதையில் உண்மையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
யாருமே இல்லாத அனாதையாக இருந்தாலும் கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிற அம்மணியின் கொள்கையை சாலம்மாவால் பின்பற்ற முடியவில்லை என்றாலும், இறுதியில் அப்படியொரு முடிவைத்தான் எடுக்கிறார் சாலம்மா.
“இந்த உலகத்துல நமக்குன்னு எதுவுமே சொந்தமில்லடி. இதோ.. இந்த லைட்டு மட்டும் போயிட்டா.. நம்ம நிழல்கூட நமக்குச் சொந்தமில்லை..” என்று அம்மணி  பாட்டி பேசும் வசனம், சாலம்மா போன்று, குடும்பம் இருந்தும் அனாதையாகிவிட்டோமே என்கிற தாழ்வுணர்ச்சியில் இருப்பவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்குதான்.
அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்கு இந்த அம்மணி பாட்டியின் கதை ஒரு பூஸ்ட்டு. அம்மணியாக நடித்திருக்கும் மலையாள நடிகையான சுப்புலட்சுமி, பல மலையாளப் படங்களில் பாட்டியாக களமிறங்கியவர். இப்போது அதிக வயதில் நடிக்கும் நடிகை என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்.
தன்னுடைய கணவரைப் பற்றிச் சொல்லிவிட்டு, தான் ஆசையாய் வளர்த்த தங்கை மகளே 100 ரூபாய் கொடுத்து வெளியில் அனுப்பியதை அம்மணி பாட்டி குறிப்பிடும்போது உருகாத மனசும் உருகும்.
அந்த கூன் விழுந்த உருவம்.. சுருங்கிப் போன தோல்களுடன் அழகிழந்த முகம்.. ஆனால் கண்ணில் சோகத்தையே காட்டாமல் முகத்தில் எப்போதும் சிரிப்புடனும், தைரியத்துடனும் பரிகாசத்துடன் இருக்கும் அம்மணி, பிள்ளைகள், மருமகள்கள், பேரன், பேத்திகள் இருந்தும் நிம்மதியில்லாமல் தவிக்கும் சாலம்மாவிற்கு சொல்லும் சமாதானங்களும், தைரியமும்தான் இந்தப் படம் சொல்லும் நீதி..!
சாலம்மா கேரக்டரில் லட்சுமி ராமகிருஷ்ணனே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் வீட்டில் அம்மாவாக, மாமியாராக.. இன்னொரு பக்கம் மருத்துவமனையில் ஆயாவாக என்று தன்னுடைய கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
இரண்டாவது மகன் மீதிருக்கும் பாசத்தில் சொத்தையெல்லாம் அவன் மீது எழுதிவைத்துவிட்டு அடுத்த சில நாட்களிலேயே மகனே “நீ தனியா போயிரு..” என்று சொல்லும் சொல்தான் சாலம்மாவை நிலை குலைய வைக்கிறது. அதை மிக அழகாக பதிவாக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கணமே தான் இறந்துவிட்டேன் என்பதை உணர்ந்த லட்சுமியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்தான் படத்தின் கிளைமாக்ஸ். என்ன இருந்தாலும் அந்த ஒரு வார்த்தைக்காக தனது சுயத்தை இழந்து, மறைந்து வாழ என்ன அவசியம் வந்தது சாலம்மாவுக்கு.. அவர்கள் கண்ணெதிரேயே வாழ்ந்து காட்ட வேண்டாமா..? அதைத்தானே அம்மணியும் அவருக்கு உணர்த்தியிருக்கிறார்..! பின்பு ஏன் அந்த திடீர் முடிவு..?
கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த டிவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காத்து.. ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற சஸ்பென்ஸுக்குள் கொண்டு போனாலும், விடை கிடைத்தவுடன் அம்மணிக்கு கிடைத்த கடைசி மரியாதையை நினைத்து ரசிகனின் மனம் ஆசுவாசப்படுகிறது.
மருமகள்களில் மூத்த மருமகளாக நடித்தவர் அசத்தியிருக்கிறார். குளோஸப் காட்சிகளில் அழுகையும், வெறுமையும்.. ஏமாற்றமுமாக பொங்கித் தீர்த்திருக்கிறார். கொஞ்சம் அழகாக இருக்கும் திமிரில் எப்போதும் இருக்கும் இளைய மருமகள், தனது சதி வேலையை கொஞ்சம், கொஞ்சமான வார்த்தைகளில் காட்டுவதெல்லாம் மிக இயல்பு. நிதின் சத்யாவும், மூத்த மகனாக நடித்தவரும்கூட தங்களது கேரக்டருக்கு பங்கமில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் ஒரு காட்சியில்.. ஒரு ஷாட்கூட தேமே என்று படமாக்கப்படவில்லை. அனைத்தும் பெர்பெக்ஷன். இயக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சிறிய தேக்கம்கூட இல்லாமல் செய்திருக்கிறார்.
இம்ரான் ஹமத் மற்றும் கே.ஆரின் ஒளிப்பதிவு படத்திற்கு கிடைத்திருக்கும் பலம். இதேபோல் படத் தொகுப்பு செய்திருக்கும் ரெஜித், கே.ஆர். இருவருமே தங்களது பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வீட்டுக்குள் நடக்கும் அக்கப்போரின் காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கும்விதம் சூப்பர்.
“என்னுடைய சாவு எப்படியிருக்கும் தெரியுமா..?” என்கிற சாலம்மாவின் கற்பனையில் விரிகின்ற ‘லைஃப் மச்சான்’ பாடலும், இந்தப் பாடலுக்கான ஆடலும் அசத்தல். இப்படியெல்லாம் சுடுகாட்டுக்கு போய்ச் சேர யாருக்குத்தான் ஆசை இருக்காது..? இசையமைப்பாளர் கே-யின் அசத்தல் டியூனில் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கும் ‘மழை இங்கில்லையே’ பாடல் அமர்க்களம். படம் முடிந்த பிறகும் பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
வெறும் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு நாவலை வாசித்த உணர்வைக் கொடுத்திருக்கும் இந்தப் படம் நிச்சயமாக ஓட வேண்டும். இது போன்ற படைப்புகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பளித்தால்தான் குப்பையான கமர்ஷியல்கள் தோல்வியடைந்து அவைகள் வெளியேற்றப்படும்.
நமக்கு எது தேவை என்று நாம் விரும்புகிறோமோ அதைத்தான் நாம் வரவேற்க வேண்டும். அப்படி தமிழகத்து மக்களிடையே வரவேற்கப்பட வேண்டிய திரைப்படம் இது.
அவசியம் பார்த்து மகிழுங்கள்..!