24-07-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஐந்து அண்ணன், தம்பிகள். இதில் மூத்தவர் நாசர். அடுத்தவர் முகேஷ், மூன்றாவது தம்பிதான் பிரபாகரன் என்னும் சுந்தர்.சி. நான்காமவர் விவேக். ஐந்தாவது ஒரு டிவி நடிகர். எதிரணியிலும் அண்ணன், தம்பிகள் கூட்டம்தான். அதற்குத் தலைமை தாங்குவது தனுஷ்கோடி என்னும் அண்ணன்.
அண்ணன் ஒன்று என்றால் இரண்டாக இருந்தாலும் ஒன்றை ஒடித்துப் போட்டு ஒன்றாக்கிக் காட்டும் செல்லத் தம்பி சுந்தர்.சி. தெருவில் கோலம் போடும் இடத்தில் கதாநாயகியைப் பார்த்து ஜொள்ளிவிட்டு தனது காதலைத் துவக்குகிறார்.
அதே ஊரில் ஒரு திருவிழாவுக்காக நடனமாட வரும் நாட்டியத் தாரகையாக சிம்ரன். சுந்தரும், விவேக்கும் சிம்ரனை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்ததால் கோபப்பட்டு தனது சலங்கையை கழட்டி எறிந்து இனி எப்போதும் நடனமாடப் போவதில்லை என்று சூளுரைக்கிறார் சிம்ரன்.
இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கப் போன நாசரை சிம்ரனின் பெரியப்பாவான தனுஷ்கோடி அண்ட் கோ அடித்துவிட கோபம் கொண்ட உடன்பிறப்புகள் சுந்தரும், விவேக்கும் சிம்ரன் வீட்டுக்குள் நுழைந்து ரகளை செய்கிறார்கள். பின்பு நாசரின் தலையிட்டீல் மன்னிப்பு கேட்டு உடைத்தவைகளை ஒட்ட வைக்க அங்கேயே தங்குகிறார்கள். தங்குவதற்கு இன்னொரு காரணம் சுந்தரின் காதலி அங்கே பரதம் பயில்வதுதான்.
உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் இருக்கும் சுந்தரின் இந்த பெவிகால் வேலையை பார்த்ததும் சிம்ரனுக்குள் காதல் கெமிஸ்ட்ரி உருவாகிறது. இதை அறியாத நாசர் தனது முதல் தம்பி முகேஷுக்கு சிம்ரனை பேசி முடிக்கிறார். திருமண நாளன்றுதான் தனக்கு ஜோடி முகேஷ் என்பது சிம்ரனுக்குத் தெரிய வருகிறது.
இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுந்தரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் சிம்ரன். சுந்தர் மறுத்துவிட.. சிம்ரன் வேறு வழியில்லாமல் முகேஷை திருமணம் செய்து கொண்டாலும் சுந்தரை பழி வாங்க பத்தினி சபதம் எடுக்கிறார்.
தனது பெரியப்பாவான தனுஷ்கோடி குடும்பத்தாருடன் கூட்டணி சேர்ந்து வாக்கப்பட்டு வந்த ஐந்து சகோதரர்கள் குடும்பத்தை டெர்ரராக்குகிறார். இரண்டு சகோதர குடும்பங்களுக்கும் என்ன மோதல் என்பது பிளாஷ்பேக்கில் கொட்டப்படுகிறது.
தனுஷ்கோடியின் தம்பிகளில் ஒருவரான ராஜ்கபூர் சாராயம் காய்ச்சுகிறார். அதைக் குடித்து சிலர் சிவலோகத்திற்கு கப்பல் ஏறிப் போய்விட.. நாசருக்கு பேசி முடிக்கப்பட்டிருந்த பிரபல சமூக சேவகி தேவயானி, அந்தப் பகுதி மக்களை ஒன்று திரட்டி ராஜ்கபூரை எதிர்க்கிறார். துணைக்கு சூப்பர் கொழுந்தன் சுந்தரும் வருகிறார். தனுஷ்கோடியும் தனது ஆதரவாளர்களுடன் வந்து ரகளை செய்ய.. போலீஸ் வர.. கலவரம் வெடிக்க.. அந்த ஊர் அல்லலோகப்படுகிறது.
“இனிமேல் இந்த ஊரில் சாராயம் காய்ச்ச மாட்டோம்..” என்று தனுஷ்கோடி சகோதரர்கள் கலெக்டர் முன்னிலையில் பாண்டு பேப்பரில் கை நாட்டு வைத்துவிட்டு வருகிறார்கள்.
நாசர்-தேவயானி திருமணத்தில் இடையில் புகுந்து கலாட்டா செய்கிறார் ராஜ்கபூர். கோவிலுக்கு எதிரே நட்ட நடுரோட்டில் தேவயானியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார். தடுக்கப் பாய்ந்த நாசரை ராஜ்கபூர் வீச்சறிவாளால் வெட்ட வர.. அது அவர் கழுத்திலேயே பூமாராங்காக பாய.. ஸ்பாட்டிலேயே மண்டையை போடுகிறார் ராஜ்கபூர். நிமிடத்தில் தேவயானி பைத்தியமாகிறார். இத்தனை நாட்களாக அவர் தனுஷ்கோடியின் வீட்டில்தான் அடைந்து கிடக்கிறார்.
மணல் குவாரியை ஏலம் விடும் கவுரவப் போட்டியில் சிம்ரன் இரட்டை வேடம் போட்டுவிட, கான்ட்ராக்ட் தனுஷ்கோடியின் கைகளுக்குச் சென்றுவிடுகிறது. சிம்ரன்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று விவேக்கும் தெரிந்து கொள்கிறார்.
சுந்தருக்காக அவளது காதலியை பெண் கேட்டு அந்த வீட்டுக்கு சிம்ரன் தலைமையில் குடும்பமே செல்ல.. அதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகத்தான் தனுஷ்கோடியின் கடைசித் தம்பிக்கு அந்தக் காதலியை நிச்சயம் செய்துவிட்டு அந்த டீம் வெளியே வருகிறது. சிம்ரனின் சதி வேலைதான் இது என்று புரிந்து கொள்கிறார் சுந்தர்.
மறுநாளே திருமணம். “தனது காதலியின் கழுத்தில் நான்தான் தாலியைக் கட்டுவேன். அதையும் நீதான் எடுத்துக் கொடுக்கப் போற...” என்று பத்து லட்சத்து பத்தாயிரத்து பத்தாவது முறையாக ஹீரோ சுந்தர் சபதமெடுக்க சிம்ரன் “அதையும் பார்ப்போம்..” என்கிறார். கட்டுனாரா இல்லையான்றதுதான் கிளைமாக்ஸ்.
இது மாதிரி கமர்ஷியல் திரைப்படங்களில் அதிகமாக நடிப்புக்கு ஸ்கோப் இருக்காது. இது சுந்தர் படம் வேற.. ஸோ.. சுத்தமா சுந்தருக்கு இல்லே.. பாவம் அவரு.. ஏதோ அவரால வந்தவரைக்கும் நடிச்சு முடிச்சிட்டாரு..
சிம்ரன் இப்பவும் நல்லாவே டான்ஸ் ஆடுறாரு.. நிறுத்தி, நிறுத்தி வசனம் பேசுறாரு.. மத்தபடி முகம்தான் பார்க்கவே முடியாத கோலத்துல இருக்கு.. 60 ரூபா கொடுத்து உள்ள போனதால பார்த்துத் தொலைச்சுட்டோம்.. ஆனாலும் நடிப்பு.. அதேதான்.
ஹீரோயினா அதிதி. புது ஹீரோயின்னு புடிச்சா சம்பளத்தை கர்ச்சீப்புல சுருட்டிக் கொடுக்கலாம்ன்ற சுருட்டல் ஐடியாலதான் இந்தப் படத்துக்கு புது ஹீரோயின் என்கிறார்கள். நடிப்பு பரவாயில்லை ரகம். அடுத்து ஏதாவது படத்துல சான்ஸ் கிடைச்சு நடிச்சா பார்த்துக்கலாம்..
இசை இமான்.. ரீமிக்ஸ் என்கிற பெயரில் “ஓரம்போ.. ஓரம்போ ருக்மணி வண்டி வருது” என்கிற அட்டகாசமான பாட்டை குதறித் தள்ளியிருக்கிறார்கள். இதுக்கு புதுசா வேற பாட்டை போட்டிருக்கலாம். அப்படியொரு கொடுமை அது..
இன்னொரு பாடல் யாரோ ஒரு அம்மணியோ, ஐயாவோ.. குடிகார குரலில் மென்று ஏதோ ஒரு பாடலை பாடித் துப்பியிருக்கிறார். எப்படித்தான் கேக்குறாங்களோ தெரியலப்பா.. மற்றபடி சுந்தருக்கு ஒரு கஷ்டமும் இல்லை. பாட்டு சீன்லகூட ஜாலியா வர்றார்.. போறார்.. கூட ஆடுறவங்கதான் பாவம்..
சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டுக்காரர் தடா போட்டுவிட்டார் போலிருக்கிறது. இந்த மட்டுக்கும் சந்தோஷம்.
சிம்ரனின் ஹஸ்பெண்ட்டாக வரும் முகேஷ் பேச்சிலேயே மலையாளம் தெறிக்க, தெறிக்கப் பேசுகிறார். சிம்ரனை பார்க்க ஆசைப்பட்டு அண்ணன், தம்பிகளுக்குத் தெரியாமல் தென்காசிக்கு ஓடி அல்லல்படும் காட்சியில் கொஞ்சூண்டு சிரிக்க வைக்கிறார். பாவம், மசாலா படத்துல வந்து மாட்டுனதால இதுக்கு மேல அவரால ஒண்ணும் பண்ண முடியல..
நாசர் அதேதான்.. அலுங்காம, குலுங்காம தேவயானிக்கு மாப்பிள்ளையா வந்து நடிச்சிருக்காரு. ரொம்ப நாள் ஆயிருக்கும் இவரு மாப்பிள்ளை கோலத்துல உக்காந்து..
சொல்லி வைச்ச மாதிரி பாட்டும், சண்டையும் மாறி மாறி வந்து போறதால திட்டவட்டமா இதுதான் கமர்ஷியல் பார்முலான்னு முடிவு பண்ணிக் கொடுத்திருக்காங்க.
கமர்ஷியல்ன்னு சொன்னாலும் சீன் போட வேண்டிய சீன்லயெல்லாம் சட்டு.. சட்டுன்னு பிளாஷை போட்டு சீனை பிரேக் பண்ணிட்டதால, டச்சிங் சீன்ஸ்கூட மனசுல நிக்க மாட்டேங்குது.
ஆனா ஒண்ணு மட்டும் உண்மை..
விவேக் மட்டும் இந்தப் படத்துல இல்லேன்னா..!
அவ்ளோதான்..!
மனிதர் நெல்லைத் தமிழில் புகுந்து விளையாடியிருக்கிறார்.. ஏதோ அவரால முடிஞ்சதையெல்லாம் செஞ்சு குஷ்பூவை காப்பாற்றியிருக்கிறார். வாழ்த்துவோம்.
பரத நாட்டியக் கலைஞர் ஷோபனா ரமேஷ் அதே பெயரில் அதே குருவாகவே ஒரு சீனுக்கு மட்டும் வந்து சிம்ரனின் “இனி சலங்கையை கட்ட மாட்டேன்..” என்கிற சபதத்தை முறித்துவிட்டுப் போகிறார்.
கிளைமாக்ஸ் காட்சி திருப்பமாக மந்திரி ராதாரவியும் அவரது செட்டப்பாக குகிலி பாபிலோனாவும் வந்து செல்கிறார்கள். எவ்வளவோ செலவு செய்றோம்.. இதுனால என்ன ஆயிறப் போகுதுன்னு நினைச்சு நம்ம குஷ்பக்கா கடைசி நேரத்துல துட்டை வாரி இறைச்சிருக்கிற மாதிரி தெரியுது.
‘மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்திற்கு முன்பாகவே இப்படம் தயாராகி காத்திருந்தது. ஆனால் வாங்கத்தான் ஆளில்லாமல் இருந்ததாம். கேட்பவர்கள் ஏரியாவுக்கு ஏரியா அடிமாட்டு விலைக்கு கேட்க.. யாரிடமாவது மொத்தமாக படத்தை தள்ளிவிட நினைத்து காத்திருந்தார்கள்.
கடைசியில் கோடம்பாக்கத்தின் ஆஸ்தான சினிமா பைனான்ஸியர்கள் கை கொடுக்க.. படத்தினை ஐங்கரன் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்டிருப்பதாகத் தகவல்.
பார்க்கவே வேண்டாத திரைப்படம் அல்ல.. பார்த்தே தீர வேண்டிய படமும் இல்லை..
போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!
டிஸ்கி : இடைவேளைல போட்ட ‘நந்தலாலா' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தவுடன் ‘மிஸ் பண்ணவே கூடாத படம் அது' என்பது புரிந்தது.. காத்திருப்போம்..!
|
Tweet |