ஆ.ராசா அமைச்சராகக் காரணமே கனிமொழிதான்..!

30-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனையோ திருப்புமுனைகளைக் கடந்து வந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது  கனிமொழி அத்தி​யாயத்தில் நிற்கிறது. இனி, வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவு தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.

  

சி.ஏ.ஜி. அறிக்கையையும் 2-ஜி ஊழலையும் ஆளும் கட்சியைத் தவிர்த்து சில எதிர்க்கட்சிகளும் இணைந்து மிகைப்படுத்திப் பேசினாலும், இந்த ஊழலை இதயமே இல்லாதவர்களின் செயல் என்றுதான் வர்ணிக்க வேண்டும்.

2008-ன் நடுவிலேயே பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும், போட்டித் தனியார் நிறுவனங்களும், '2-ஜி விவகாரத்தில் அரசுக்கு என்னென்ன நஷ்டம்? ஆ.ராசா என்னென்ன தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்..? அவரும் தி.மு.க. குடும்பமும் என்ன பலன் அடைந்தனர்...? அரசு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டாமா..?’ என்று கண்டனங்களும் கேள்விகளும் எழுப்பின.

இத்தனை எதிர்ப்புகள் இருந்த நேரத்தில்தான், அதாவது 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி. 200 கோடியைப் பெற்று உள்ளது. இதைத்தான் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, கடந்த 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையில் வெளியிட்டது சி.பி.ஐ.!

இந்தக் குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் என்றாலும், சி.பி.ஐ. இப்போதுதான் ஆதாரப்பூர்வமான சாட்சியங்களோடு உறுதி செய்துள்ளது.

'கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்ட​மன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதனால், கனிமொழியைப் பற்றியும் கலைஞர் டி.வி-யைப் ​பற்றியும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றால், தேர்தல் பிரசாரத்தில் வீணான சர்ச்சைகள் கிளம்பும் என்று தி.மு.க-வினர் காங்கிரஸிடம் மன்றாடினர். அவர்​கள் கோரிக்கைக்கு, மத்தியில் உள்ளவர்களும் அப்போது செவிசாய்த்தார்கள். அதனால்தான், குற்றப் பத்திரிகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு சி.பி.ஐ. ஆளானது’ என்கிறார்கள். 

முதல் குற்றப் பத்திரிகையில், தனியார் கம்பெனி​களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், ஆ.ராசா மேற்கொண்ட தில்லுமுல்லுகளை சி.பி.ஐ. வெளியே கொண்டுவந்தது. ஆனால், இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 2-ஜி ஊழலின் முக்கியக் கருவை எடுத்து ​வைத்திருக்கிறது.  இதில்தான் கனிமொழியை சி.பி.ஐ. இறக்கியுள்ளது.

இதில், ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, ஷாகித் பால்வா​வின் சகோதரரும் குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநருமான ஆசிப் பால்வா, இதே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ராஜீவ் பி.அகர்வால், சினியுக் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ஆகியோரோடு கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், கனிமொழி, சரத்குமார், கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை. மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர்.

சம்மன் அனுப்பப்பட்ட மேற்கண்ட மூவரும் வரும் மே 6-ம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது, சிறைக்கு அனுப்பப்படலாம். இதில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது. மற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கனிமொழிக்கும் இதே நிலை வரலாம்.

2007-ல் சன் டி.வி. நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும், பிரச்னை ஏற்படவே, கலைஞர் டி.வி. தொடங்கும் ஆயத்தப் பணிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கனிமொழி தீவிரமாக இருந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., 'இந்த விவகாரங்களில் ஆ.ராசாவை அவ்வப்போது தொடர்பு கொண்டு தொலைக்காட்சிக்கான அனுமதி பெற முயற்சி செய்தார்’ என்கிறது.

'மத்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பதிவு பெற முயற்சித்தது, டாடா ஸ்கை பிளாட்ஃபாரத்தின் மூலம் கலைஞர் டி.வி-யை ஒளிபரப்ப அனுமதி கேட்டது  போன்ற விவகாரங்களில், எந்தவிதமான தாமதமும் ஏற்படாமல் இருக்க ஆ.ராசா உதவியுள்ளார். இதற்காக, கனிமொழி அடிக்கடி ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்’ என்கிற சி.பி.ஐ., ''கனிமொழி, கலைஞர் டி.வி. பங்குதாரர் மட்டும் அல்ல... அவர் ஓர் இயக்குநராகவும் இருந்தார். ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுப்பதில் தாமதம் ஆனது. அதனால், கலைஞர் டி.வி. தொடங்குவதில் கால தாமதம் ஆகக் கூடாது என்கிற காரணத்தால் கனிமொழி பதவியில் இருந்து விலகினார். ஆனால், அந்த டி.வி-யின் மூளையே கனிமொழிதான். அதன் செய்திகளில்கூட இவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!'' என்கிறது சி.பி.ஐ. 

''ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆவதற்குக் காரணமாக இருந்ததே கனிமொழிதான். ஆ.ராசாவுக்காக தி.மு.க-வின் தலைமை​யகத்தில் இவரே பேசினார்'' என்றும் குற்றம் சாட்டி, 2-ஜி ஊழல் வழக்கில் 17-வது குற்றவாளியாக  கனிமொழியை சேர்த்துள்ளது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்​களாக இருப்பவை, இரண்டு சாட்சியங்கள். ஒன்று, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலம். இது குறித்து ஜூனியர் விகடன் 20.4.11 இதழில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். மற்றொருவர், நீரா ராடியா.


ஆ.ராசாவை சந்தித்து கலைஞர் டி.வி. தொடங்க முயற்சி செய்தது, நீரா ராடியாவுடன் நேரடியாகவும் தொலைபேசியிலும் பேசி லீக் ஆன விவகாரங்கள் எல்லாம் கனிமொழிக்கு எதிரான சாட்சியங்களாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. வைக்கும் முக்கியத் தகவலே, கலைஞர் டி.வி-க்கு 200 கோடி வந்த விவகாரம்தான். இது ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள் லஞ்சமாகக் கொடுத்த பணம் என்கிறார்கள்.

'ஒரிஜினலாக, ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம். மறைமுகமாக இந்த நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.எம். மொபைல் உரிமங்களைப் பெற ரிலையன்ஸ் முயற்சி செய்தது. பின்னர் இரட்டை உரிமத்தின் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு நேரடியாகவே முறைப்படி ஜி.எஸ்.எம் உரிமங்கள் கிடைத்தன. இப்படிக் கிடைத்தும், ஸ்வான் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிலையன்ஸ் வாபஸ் வாங்கவில்லை.

ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிபி ரியாலிட்டி குரூப் நிறுவனத்தினர் ஷாகித் உஸ்மான் பால்வாவும் வினோத் கோயங்காவும் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'ஸ்வானுக்கும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை. 2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிம வழிகாட்டி விதிமுறைகளின்படி ஸ்வான் மற்றும் யுனிடெக் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

தகுதி இல்லாத சான்றிதழ்களை வைத்துக் ​கொண்டு உரிமங்களைப் பெற முயற்சித்த இவர்களிடம், ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத் துறை உரிமங்களைக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. சொல்கிறது.  இதன்படி, வந்த ஊழல் பணம் கறுப்புப் பணமாக இருக்க... இதை வெள்ளையாக மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் இரண்டாவது குற்றப் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

'இதன் முதல் சுற்று, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. 2004-ல் சுற்றுச்சூழல் அமைச்சரானவுடன் ஆ.ராசா தொடங்கிய பினாமி நிறுவனம் இது.  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பட்சாவின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் சாதிக் பாட்சாவின் மனைவி போன்ற வேறு சிலரை இயக்குநர்களாக ஆக்கினார். இந்த நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விலகினார்.

2-ஜி கறுப்புப் பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. கூறுகிறது. 'ஆனால், இந்த நிறுவனத்துக்கு சில கோடிகள் பணம் வந்துள்ளது. ரியல் எஸ்டேட்டுக்கு நிலங்களை வாங்க டிபி ரியாலிட்டி சில கோடிகளை க்ரீன் ஹவுஸுக்கு கொடுத்துள்ளது. பின்னர் இதே பணத்தை க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்தது...’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்குப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி எல்லாம் பணம் புழங்கியது..?’ என்பதற்கு சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சொல்கிறது.

'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிய ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட டி.பி. ரியாலிட்டி, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பெரும் அளவில் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டது. ஆனால், அது வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் கொடுக்கப்பட்ட பணத்தையும் க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், 'இதற்குக் காரணம் க்ரீன் ஹவுஸ் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியானதுதான்’ என்று, சி.பி.ஐ. கருதுகிறது.

ஆனால், 2-ஜி கறுப்புப் பணத்தை கலைஞர் டி.வி. மூலமாக வெள்ளையாக்கும் முயற்சிகள் பின்னர் நடந்துள்ளன. சுமார் 200 கோடி ஸ்வான் டெலிகாம் பணம், கலைஞர் டி.வி-க்கு வந்துள்ளது. அதிலும், இந்த ஊழல் விவகாரம் உச்சக்கட்டமாக வெடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், பணப் பரிவர்த்தனைகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடந்துள்ளது. இதில்தான் கருணாநிதி குடும்பத்தினரின் மனோதைரியம் குறித்து ஆச்சர்யத்தோடுதான் பேசிக்  கொள்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

லாபம் 1.36 கோடி... கடன் 214  கோடி... எப்படி?!

ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதும், முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார்.

நீண்ட நேர ஆலோசனைக்குப் பின், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில்,  '2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில், கலைஞர் டி.வி. வாங்கிய கடன்  214 கோடி திருப்பித் தரப்பட்டுவிட்டது.  அதற்கான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த பிறகும், குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயரை சேர்த்து உள்ளது சி.பி.ஐ. இதைப் பற்றி விவாதிக்க தி.மு.க-வின் உயர் நிலைக் குழு கூடுகிறது’  என்று ஓர் அறிக்கை வெளியானது. ஆனால், உண்மை நிலையோ வேடிக்கையானது! 

கலைஞர் டி.வி-யின் 20 சதவிகிதப் பங்குகள் கனிமொழிக்கும், 20 சதவிகிதப் பங்குகள் சரத் குமார் ரெட்டிக்கும், 60 சதவிகிதப் பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது.  'டிபி ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து, தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று 27.7.07-ல் கலைஞர் டி.வி. போர்டு மீட்டிங் நடந்ததுபோல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.


'தயாளு அம்மாளுக்கு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாது, மேலும் வயதாகிவிட்டது. எனவே, அவருடைய பங்குக்கு உள்ள அதிகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிக்குக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது’ என்று உள்ள அந்த மினிட்ஸ் நகலை, டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போது, சரத்குமார் ரெட்டி கொடுத்தாராம். அந்த மினிட்ஸின் அடிப்படையில்தான் 60 சதவிகிதப் பங்குகள் இருந்தும், குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாளைச் சேர்க்கவில்லை என்கிறார்கள்.

கலைஞர் டி.வி. ஒப்படைத்த வரவு - செலவுக் கணக்கில், 'டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி, எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவல்படி, கலைஞர் டி.வி-யின் ஆண்டு வரவு  63.12 கோடி. செலவு  61.47 கோடி.

நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி. வரி செலுத்திய பின் லாபம் 1.36 கோடி மட்டும்தான். ஆனால், இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல், 214.8 கோடியை எப்படிக் கடனாகக் கொடுக்க முன் வந்தது டி.பி. ரியாலிட்டி நிறுவனம்?

கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில்  214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்? 

மேலும், கலைஞர் டி.வி-யின் வரவு - செலவுக் கணக்கில், 'கண்ணுக்குப் புலப்படாத சொத்துக் கணக்கில் 2008-09-ல் 123.25 கோடி என்றும் அது 2009-10-ல் 159.16 கோடி’ என்றும் காட்டப்பட்டு உள்ளது. ''கண்ணுக்குத் தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'' என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கலைஞர் டி.வி-யின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.

என்ன பதில் சொல்லப் போகிறார் சார்..?

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

ஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை..!

29-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தக் கூத்து நடந்து முடிந்து சில ஆண்டுகளாகிவிட்டது.. ஆனாலும் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிகழ்வு இது என்பதால் என் மனதில் இருந்து மட்டும் அகற்ற முடியவில்லை..!

'வருவாய் ஆய்வாளர்' என்னும் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' பதவிக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடத்தியது. அடியேன், அப்போது வெறும் ஊர் சுற்றியாக மதுரையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தேன்..!

இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து எனது அக்காமார்களும், அண்ணனும் “இதுக்கு அப்ளிகேஷனை போட்டுட்டு ஒழுங்கு மருவாதையா படிச்சு பாஸ் பண்ணி, வேலைக்குப் போற வழியை பாரு..” என்று மிரட்டத் துவங்கினார்கள். அதெப்படி ஒரே நாளில் கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்ள முடியுமா..?

பின்பு என்னையே நம்பியிருக்கும் ‘தீபா’. ‘ரூபா’, ‘சிடி சினிமா’, ‘சக்தி’, ‘சிவம்’, ‘மது’, ‘மதி’ தியேட்டர்களின் கதி என்னாவது..? ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களால்தான் அவர்களின் பொழைப்பே ஓடிக் கொண்டிருந்தது.. அடுத்தவர் வயிற்றில் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் மசியாமல் இருக்கானே என்ற ஆதங்கத்தில் என்னோட ரெண்டாவது அக்காவான செல்வமணி என்னும் செல்வாக்கா, ஒரு ஸ்கட் ஏவுகணையை வீசுச்சு. “நான் பிளஸ் டூதான் படிச்சேன். அப்புறம் எக்ஸாம் எழுதி இந்த ஆபீஸ் வேலையை வாங்கலையா..? எனக்கு மட்டும்தான் அறிவிருக்கா..? நீயும்தான என் கூட பொறந்திருக்க..? என் அறிவுல பாதியாவது உனக்கு இருக்கும்ல.. படிச்சுத் தொலையேண்டா. ஏன் உன்னால முடியாதா..?” என்று என் தன்மானத்தை சீண்டிவிடுவதைப் போல தீக்குச்சியை உரசிப் போட்டுச்சு..!

கொஞ்சம் அசைந்து கொடுத்தேன்.. அப்ளிகேஷனை வாங்கி பில்லப் செய்து ஒரு நல்ல நாளில் போஸ்ட் செய்துவிட்டு அப்படியே புதுமண்டபம் போய் அண்ணன் கொடுத்த காசில் டி.என்.பி.எஸ்.சி. மாடல் கொஸ்டீன் பேப்பர் புஸ்தகத்தையும் வாங்கி வந்தாச்சு..!

இங்கே ஒரு சிக்கல்.. தேர்வில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று பொது அறிவுத் திறனை சோதிக்கும் முதல் கட்டத் தேர்வு. இதில் வெற்றி பெற்ற பின்பு, அடுத்தக் கட்டத் தேர்வு. அதுவொரு சோகத்தைத் தாங்கியது. வேப்பங்காயைவிட எனக்குக் கசக்கும் ஆங்கில அறிவை பரிசோதிக்கும் தேர்வு. முடியலை.. யோசித்துப் பார்த்தேன்..!

எப்படியும் முதல் தேர்வில் ஜெயித்தால்தானே அடுத்ததுக்குக் கூப்பிடுவாய்ங்க.. நமக்குத்தான் நம்பிக்கையில்லையே.. பிறகென்ன? என்ற நினைப்பில் ஏதோ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே புத்தகத்தையும், தினசரி பேப்பர்களையும் மேய்ந்துவிட்டு, புல் கட்டு கட்ட நம்ம தியேட்டர்களுக்கு நேரில் சென்று ஆஜரையும் கொடுத்துவிட்டுத்தான் வந்து கொண்டிருந்தேன்.

முதல் கட்டத் தேர்வும் வந்தது.. “சுதந்திர இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்..?  கல்லணையைக் கட்டியது யார்..? சூரியனைச் சுற்றி பூமி சுழல்கிறது - இது சரி.. அல்லது தவறு..” - இந்த மாதிரி கேணத்தனமான கேள்வியா கேட்டுத் தொலைச்சிருந்தாங்க..! ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு கிறுக்கி வைச்சிட்டு வந்தேன்..!

தேர்வில் பாஸ்..! நம்ப முடியலை.. குவார்ட்டர்ஸ்ல 'பி' பிளாக்ல ஒரே 'சரவணன்' நான்தான்றதால, நம்பித் தொலைய வேண்டியதா போச்சு. அடுத்த ரோதனை ஆரம்பிச்சுச்சு.. இரண்டாம் கட்டத் தேர்வுல தமிழோடு, கொஞ்சம் இங்கிலீபீஷுலேயும் எழுதணும்..

நானும் இங்கிலீஷும் எம்.ஜி.ஆர். நம்பியார் மாதிரி.. ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து பத்தாம் கிளாஸ்வரைக்கும் பரம எதிரி..! அதுலேயும் 9, 10-ம் வகுப்புகளில் பாலன் கே.நாயரை பார்த்து மலையாள ஹீரோயின்கள் பயப்படுவாங்களே.. அது மாதிரி எனக்கு அதைக் கண்டாலே அப்படியொரு டர்ரு..! இந்த லட்சணத்துல எப்படிங்கய்யா இந்தக் கண்டத்தை தாண்டுறதுன்னு ஒரே யோசனை..!

செல்வாக்கா தினம் ராத்திரி ஒரு மணி நேரம் எனக்கோசரம் உக்காந்து மண்டைல கொட்டி, கொட்டி "VERB"ன்னா என்ன? "NOUN"ன்னுன்னா என்ன..? "SENTENCE"ன்னா என்னன்னு விலாவாரியா எடுத்து எடுத்துச் சொல்லுச்சு.. அப்பவும் நம்ம மரமண்டைல ஏறலை..

சரி.. தெரியறவரைக்கும் ஒப்பேத்திருவோம்னுட்டு தைரியமா எக்ஸாமுக்கு போனேன்.. கோடிட்ட இடத்தை நிரப்புன்ற மாதிரி அஞ்சு மார்க் கொஸ்டீன்ஸ் இருந்துச்சு.. அப்புறம் எதிர்ச்சொல் சொல்லுன்ற மாதிரி 5 கொஸ்டீன்ஸ்.. இதையும் கொஞ்சம் யோசிச்சு தாண்டியாச்சு.. அப்புறம் ஒரே வாக்கியத்தில் வார்த்தைகளை மாத்திப் போட்டு வைச்சிருந்தாங்க. அதுக்கான சரியான வாக்கியத்தை செலக்ட் செய்யச் சொல்லியிருந்தாங்க. கைல எச்சிலை வைச்சு, எப்படியோ கண்டுபிடிச்சுப் போட்டுட்டேன்..

கடைசியா ஒரு மொய் வைச்சிருந்தானுங்கப்பா..! இது ஒண்ணுதான் என் வாழ்க்கைய இப்போவரைக்கும் இப்படி புரட்டிப் போட்டதுக்கு ஒரே காரணம்..!

பத்து வரில ஒரு கதையைக் கொடுத்துப்புட்டு, அந்தக் கதை தொடர்பா சில கேள்விகளைக் கேட்டு பதில் எழுதச் சொல்லியிருந்தாங்க. இதுக்கு 10 மார்க்கு..!

நானும் படிச்சேன்.. படிச்சேன்.. படிச்சேன்.. திருப்பித் திருப்பிப் படிச்சேன்.. CLOTHS, WASHING, RIVER, MAN எல்லாம் புரிஞ்சுச்சு.. ஒரேயொரு வார்த்தைக்கு மட்டும்தான் அர்த்தம் புரியலை..! இதையெல்லாம் கூட்டிக் கழிச்சு பார்த்து ஏதாவது தோணுதான்னுகூட யோசிச்சுப் பார்த்தேன்.. ம்ஹூம்.. ஒண்ணும் தோணலை..

சரி விடு கழுதை...! வராததுக்காக எதுக்கு கொஞ்சூண்டு இருக்குற நம்ம ஹைப்போதலாமஸை வேஸ்ட்டாக்கணும்னு சொல்லிட்டு அதுல கேட்டிருந்த எல்லா கேள்வியையும் விட்டுட்டேன்..! ஆனாலும் அந்த ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு..!

தேர்வு மதியானம் முடிஞ்சு, அப்படியே நேரா அடுத்த பஸ்ஸை புடிச்சு மது தியேட்டருக்குப் போய் மனசை சாந்தப்படுத்திட்டு திரும்பவும் வீட்டுக்குப் போன பின்னாடியும் அந்த ஒத்தை வார்த்தை திரும்பத் திரும்ப மனசுக்குள்ள வந்துகிட்டே இருந்துச்சு.. வீட்ல செல்வாக்கா கேட்டதுக்கு “எல்லாம் நல்லாத்தான் எழுதியிருக்கேன். என்னை செலக்ட் செய்யாம போயிருவானுகளா?”ன்னு ச்சும்மா ரூட் விட்டுட்டு எஸ்கேப்பானேன்..! வீட்ல அக்கா, அண்ணன் எல்லாரும் இந்த முடிவுக்காக ரொம்ப ஆர்வமா காத்திருக்க ஆரம்பிச்சாங்க. ஆனாலும் செல்வாக்கா ரொம்ப, ரொம்ப அப்பாவி.. அப்படியே என்னை நம்பிட்டுருந்துச்சு..!

ஒரு நல்ல நாள் அதுவுமா, ரிசல்ட் வீட்டுக்கு வந்துச்சு.. 4 மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருப்பதால் தேர்வில் தோல்வி என்று..! இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து ஆவரேஜா 60 சதவிகிதத்துக்கு மேல எடுத்திருந்தால் பாஸ். நான் எடுத்திருந்தது 56.

அண்ணனுக்கும், செல்வாக்காவுக்கும் தாங்க முடியாத வருத்தம், சனியனை இத்தோட ஒழிச்சுக் கட்டிரலாம்னு பார்த்தா மறுபடியும் டவுசரை கிழிச்சுட்டு நடுவீட்ல உக்காந்துட்டானேன்னு..! இருக்காதா பின்ன..? சம்பாதிச்சுக் கொட்டுறது அவங்க..! அந்தக் காசுல ஊரைச் சுத்துறது நானுல்ல..!

அக்காவோட வருத்தம் தாங்க முடியாம, அந்த கொஸ்டீன் பேப்பரை அப்பத்தான் தேடியெடுத்து “அந்த” வார்த்தையைக் காட்டி விஷயத்தைச் சொல்லி, “இதுக்கு என்னக்கா அர்ததம்”ண்ணே..!?

அப்படியே ஏற இறங்க பார்த்துட்டு அப்புறம் திட்டுச்சு பாருங்க.. ஒரு திட்டு.. அவுங்க வீட்டுக்காரரைகூட அதுக்கப்புறம் இப்படி திட்டலை செல்வாக்கா... அப்படியொரு வசவு.. "நீயெல்லாம் ஒரு புள்ளையாடா..? நீ எப்படிடா டென்த் படிச்சு முடிச்ச..? அப்புறம் ஐ.டி.ஐ. வேற.. அதுல அப்ரண்டீஸும் படிச்சு முடிச்சுக் கிழிச்சிட்ட..? கழுதை.. கழுதை.. இது என்னன்னுகூட தெரியாம இப்படி தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க.. சனியன். சனியன்....”னு வாய்க்கு வந்ததெல்லாம் திட்டி ஓய்ஞ்ச பின்னாடி, நானே ஒரு சொம்பு நிறைய தண்ணியை கொடுத்து அக்காவை ஆசுவாசப்படுத்திட்டு மறுபடியும், “அந்த வார்த்தைக்கு என்னக்கா அர்த்தம்...?”னு அப்பாவியா கேட்டேன்..

நான் கிண்டல் செய்யலை. நிசமாவே தெரியாமத்தான் கேக்குறேன்னு புரிஞ்சுக்கிட்ட செல்வாக்கா, கடைசீல ரொம்ப வருத்தமா சொல்லுச்சு “DONKEY-ன்னா 'கழுதை'டா..”ன்னு..!

அடங்கொக்காமக்கா.. கழுதையைத்தான் இப்படி DONKEY-ன்னு கூப்பிடுறானுவகளா..? 25 வயசுவரைக்கும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு பய வளர்ந்திருக்கேன்னா, என்னத்தடா சொல்லிக் கொடுத்தீங்கன்னு, என் ஸ்கூலை நான் திட்டாத திட்டுல்ல..!

அது மட்டும் “கழுதை”ன்னு தெரிஞ்சிருந்தா அதுல இருந்த 5 கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருப்பனே..? 10 மார்க் கிடைச்சு பாஸ் பண்ணியிருந்தா ஐயா இந்நேரம், ரெவின்யூ இன்ஸ்பெக்டரா ஜம்முன்னு கவர்ன்மெண்ட்டு வேலை பார்த்திட்டு நிம்மதியா சீட்டைத் தேய்ச்சிட்டிருந்திருப்பேன்.. முக்கியமா எங்கிட்டாவது, யாருக்காவது கழுத்தை நீட்டி.. புள்ளைய பெத்துட்டு நிம்மதியா குடும்பஸ்தனாகியிருப்பேன்..!

விட்டானா முருகன்..!? அயோக்கிய ராஸ்கல்..! தமிழ்.. தமிழ்ன்னு அவனை மட்டுமே படிக்க வைச்சு கடைசியா இப்போவரைக்கும் பிச்சையெடுக்க வைச்சிட்டானே என்ன..!?

சரி.. அவன் கெடக்கட்டும்.. வருஷக்கணக்கா என் வீட்ல என்னோட அப்பா, அம்மா, அக்காமார்கள், அண்ணன்னு அத்தனை பேரும் என்னை ரவுண்டு கட்டி, முறை வைச்சுத் திட்டியிருக்காங்க.. இதே மாதிரி “எருமை மாடு, கழுதை, சனியன், பீடை, எங்கயோ கழுதை மாதிரி ஊர் சுத்திட்டு வருது பாரு..” என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்..!


அப்படித் திட்டும்போதாவது “தோ பாரு.. DONKEY மாதிரி சுத்திட்டு வந்திருக்கான்.. இங்க பாரு.. MONKEY மாதிரி அலைஞ்சிட்டு வந்திருக்கான்.. அங்க பாரு.. DOG மாதிரி ஓடிட்டு வந்திருக்கான்.. இங்க பாரு… PIG மாதிரி திரியறான்”னு கொஞ்சம் இங்கிலீஷு வார்த்தையையெல்லாம் போட்டுத் திட்டியிருந்தா, ஒருவேளை இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சு நான் பாஸ் பண்ணித் தொலைஞ்சிருப்பனே..?

இந்த பிளாக்கு, சினிமா, பிச்சையெடுக்க வைத்திருக்கும் சென்னைன்னு எதையும் தொடாம, எதையும் எதிர்பார்க்காத ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மனுஷனாவே இருந்து, ஏன் நிம்மதியா செத்து கூட போயிருக்கலாம்.. ம்.. என்னத்த சொல்றது..? எல்லாம் அந்த ஒத்த வார்த்தையால முடிஞ்சு போச்சு..!?

கண்ணுகளா.. இனிமேலாச்சும் நீங்க வீட்ல பிள்ளைகளை திட்டும்போது, கொஞ்சம் இங்கிலீஷ்லேயும் சேர்த்து வைச்சுத் திட்டுங்கப்பா.. அப்படியாச்சும் அவுங்க நாலு இங்கிலீஷை கத்துக்கிடட்டும்..!

கலைஞர் டி.விக்குள் வந்த பணம் கடனா...? ஊழலா...? பங்கா...?

27-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆ.ராசாவின் தயவில், ஏர்​டெல், பி.எஸ்.​என்.எல். தவிர, கிட்டத்தட்ட மற்ற அனைத்துத் தொலைபேசி நிறுவன அதிகாரிகளும் திகார் ஜெயில் நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தக் கட்டக் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன!

கடந்த 2-ம் தேதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் யுனிடெக் வயர்​லெஸ் (தமிழ்நாடு) லிமி​டெட், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய மூன்று நிறுவனங்கள் உட்பட 12 நபர்களைக் குற்றவாளி​களாக அறிவித்தது.

இந்த விவகாரத்தில் கைதான ஷாகித் பால்வா மட்டுமே, டெலிகாம் நிறுவனம் சம்பந்தப்​பட்டவர். மற்ற டெலிகாம் நிறுவன உரிமையாளர்களை சி.பி.ஐ. அழைத்து விசாரித்ததே தவிர, யாரையும் கைது செய்ய​வில்லை. ஆனால், சி.பி.ஐ. அவர்களின் பெயர்களை நேரடியாகக் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இந்த டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும், பலமிக்க தொழில் அதிபர்களின் பின்புலத்தில் இருந்த காரணத்தால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் சி.பி.ஐ. நினைத்ததை சாதித்தது.

குற்றப் பத்திரிகையில் இடம் பெற்று இருந்த மூன்று நிறுவனங்களுக்கும் பயம் தொற்றிக்கொண்டது. 'இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, சி.பி.ஐ. நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரும்’ என்று தகவல் வரவே, இந்த டெலிகாம் நிர்வாகிகள் கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

ஷாகித் பால்வாவின் கூட்டாளியும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் மற்றும் டி.பி. ரியாலிட்டி எம்.டி. ஆகிய பொறுப்பில் உள்ள வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் டெலிகாம் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கௌதம் தோஸி, ஏ.டி.ஏ.ஜி. தலைவர் சுரேந்தர பைப்பாரா, இதே நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹரி நாயர் ஆகிய ஐந்து பேரும் முன் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவர்களுக்காக, முகுல் ரோத்தாக், கே.டி.எஸ்.துள்சி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜாரானார்கள்.

''இவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு​களுக்கு, ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனை​யோ கிடைக்கப்போவது இல்லை. ஒரு வேளை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆனாலும், அதிகபட்சம் ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை கொடுக்கப்படும். சி.பி.ஐ. புலன் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இவர்களைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ. அழைத்த நேரத்தில் எல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், இவர்களைக் கைது செய்ய வேண்டியது இல்லை. அப்படிக் கைது செய்தால், ஜாமீனில் விடுவிக்க வேண்டும்!'' என்று வாதாடினார்கள்.

இவர்களது மனுவுக்குப் பதில் அளித்த சி.பி.ஐ., ''இவர்களை வெளியேவிட்டால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களைக் கலைத்து​ விடுவார்கள்!'' என்றது. மூன்று நாட்கள் தொடர்ந்து வாதங்கள் நடந்தன. இறுதியில், கடந்த 20-ம் தேதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, இவர்களது முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தததோடு, ஐந்து பேர்களையும் நீதிமன்றக் காவலில், திகார் ஜெயிலிலுக்கு அனுப்பினார். 

ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயங்கா கதறி அழ, ஆ.ராசாவும் ஷாகித் பால்வாவும் அவரைத் தேற்றினார்கள். ரிலையன்ஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டனர்.

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத் தலைவர் சுரேந்திர பைப்பாரா, தனக்கு உள்ள இருதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைச் சொல்ல, சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித், 'அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதில் தடை இல்லை’ என்றார். ஆனால் நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள​வில்லை. 'அவரது உடல்​நிலை அவ்வளவு மோசம் இல்லை’ என்றும், 'இந்த சமயத்தில் இவர்கள் வெளி​யே இருந்தால், விசாரணை பாதிக்கும்’ என்று கூறி முன் ஜாமீன் தர மறுத்தார்.

இதன் எதிரொலியாக இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சந்தையில் மளமளவென இறங்கின. டி.பி. ரியாலிட்டி நிறுவனம் 2-ஜி ஊழலுக்குப் பின்னர் 77 சதவிகிதம்வரை பங்கு மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்தது. இதே மாதிரி, யுனிடெக் நிறுவனத்துக்கும் 5,000 கோடிவரை நஷ்டமாம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒட்டு மொத்தமாக சுமார்  26,000 கோடிவரை இழந்து உள்ளது.

கைதாகியுள்ள வினோத் கோயங்காவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஷாகித் பால்வாவைப் போன்று கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தந்தையின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலில் குதித்தார்.

குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட், ஹோட்டல், பால் என்று 30 விதமான தொழில்​களில் முத்திரை பதித்தவர். சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர். அதுவும், ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சரான பின்னர், வினோத் கோயங்காவின் ரியல் எஸ்டேட் தொழில் கிடுகிடுவென வளர்ந்தது. பின்னர், ஷாகித் பால்வாவுடன் சேர்ந்து, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்​தை உருவாக்கி, டெலிகாம் பிசின​ஸில் ஈடுபட்டார்.

அனுபவ ரீதியில் வினோத் கோயங்காவின் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ந்தது என்றால், சஞ்சய் சந்திராவும் அவரது தந்தையும் யுனிடெக் நிறுவனத்தை முறைப்படி தொழில் நுட்பத்தைப் படித்து வந்து உயர்த்தினார்கள்.

சஞ்சய் சந்திராவின் தந்தை ரமேஷ் சந்திரா, ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து, ரூர்க்கி அரசு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். தந்தை வழியிலேயே மண்ணியல் சம்பந்தப்பட்ட தொழில்​ நுட்பப் படிப்பைப் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்து, அங்கேயே பணியாற்றினார் சஞ்சய்.

பின்னர் 1965-ல் தந்தையும் மகனும், மண்ணியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூடங்களைத் தொடங்கி, ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அதன் பின்னர் மின்சாரம், ஹோட்டல், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று ஒவ்வொன்றாகக் கால் பதிக்க, இவர்களின் சொத்து மதிப்பு  40,000 கோடி வரை உயர்ந்தது. 

ஷாகித் பால்வாவின் டி.பி. ரியாலிட்டி மற்றும் டைன​மிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து வந்த பணம், குஸேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வந்து, பின்னர் சினியுக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. அதன் பிறகு, சினியுக் நிறுவனம் அதை, கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்கிறது.  டி.பி. ரியாலிட்டி, குஸேகான், சினியுக் ஃபிலிம்ஸ் என்று வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், இயக்குநர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவர்கள்.

கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட பணம் தங்களுக்குத் திரும்பிவிட்டது என்று இவர்கள் கணக்கு சொல்ல, சி.பி.ஐ. சந்தேகித்துக் கைது செய்துள்ளது. சினியுக் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் முரானி, பணத்தை கலைஞர் டி.வி-க்கு முன் பணமாகக் கொடுத்தாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்த குஸேகான் நிறுவனம், இதை கலைஞர் டி.வி-க்கு கொடுக்கக் கூறியதாக முரானி குறிப்பிட்டார்.

குஸேகான் நிறுவனம், பணத்தைக் கடனாகக் கொடுத்ததாகவும், பின்னர் கலைஞர் டி.வி. பங்குகளை வாங்கத் திட்டம் இட்டதாகவும், ஆனால் விலை வித்தியாசத்தில் பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் குறிப்பிட்டது. ஆனால், ஆதாரங்​களை சரியாகக் கொடுக்கத் தவறியதற்காக, குஸேகான் நிறு​வனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பால்வாவையும், ராஜீவ் பி.அகர்வாலையும், சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது.


 

இந்த விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி போன்றோர் சிக்குவார்களா அல்லது சரத்குமார் மட்டும் சிக்குவாரா என்று கேள்​விகள் எழுந்த்துள்ள நிலையில், இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சரத்குமார், கனிமொழி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கொடுக்கப்பட்டதற்காகவே, ஆ.ராசா சம்பந்தப்பட்ட கட்சியின் தொ​லைக்காட்சிக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் சரத்குமாரோ, ''கடனாக வாங்கினோம், பின்னர் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கூறியுள்ளார்.

கடன் கொடுத்த காரணத்தை சி.பி.ஐ. கேட்டபோது, குஸேகான் நிறுவனத்தினர், 'போர்டு மீட்டிங்கில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக’ சொன்னது. அந்த மீட்டிங்கின் மினிட்ஸ் குறிப்பு என ஒரு நகலை மட்டும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தனர். ஒரிஜினல் மினிட்ஸ், கலைஞர் டி.வி-க்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால் சரத்குமார், 'எங்களுக்கு தகவல்தான் கொடுத்தார்களே தவிர, குறிப்பு அனுப்பவில்லை’ என்று பதில் கொடுத்தார்.

ஒரிஜினல் மினிட்ஸ் கொடுக்காத குஸேகான் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆசிப் பால்வாவும் ராஜீவ் பி. அகர்வாலும் கைது செய்யப்​பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கைதுகள் இனி தொடரலாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-05-2011

சாய்பாபாவிற்கு எனது அஞ்சலிகள்..!

25-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சாய்பாபா என்றொரு மனிதர் இறந்துவிட்டார் என்று சொல்லத்தான் மனம் விரும்புகிறது..! ஆனால் பொது அறிவு "அப்படியானால் இத்தனை பேர் அவரை விரும்பியிருக்கிறார்களே..? எப்படி..? எதற்கு..? ஏன் அந்தப் பெருமையை நீ அவருக்குக் கொடுக்கக் கூடாது..?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறது..!


உலகத்தில் இருக்கும் மதங்களில் மிகச் சிக்கலானது இந்து மதம்தான்.. சாதி அடுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மேல் கட்டி வைக்கப்பட்ட மேடைதான் இந்து மதம் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்..! எல்லாவிதமான உலகப் பார்வைகளுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்து மதம்தான். அதனால்தான் அதனுள் இத்தனை வலிந்து திணிக்கப்பட்ட கதைகள் உள்ளன என்கிறார்கள் ஆதரவாளர்கள்..!

இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை சாதாரண பொது ஜனங்களுக்கு இல்லை..! தங்களுக்குத் தோல்வி என்றவுடன் கடவுளைத் தேடி ஓடுவதும், தோல்வியைத் தோற்கடித்தவுடன் மீண்டும் பழையபடி கடவுளை மறந்து தொலைத்துவிட்டு ஆடிப் பாடுவதும் இவர்களது வாடிக்கையாகிவிட்டது..!

சாய்பாபா என்னும் இந்த மனிதர் இத்தனை அற்புதங்கள் செய்தார் என்று வருடக்கணக்காகக் கேட்டு கேட்டு சலித்துப் போயிருந்த நிலையில், புதிய தொழில் நுட்பங்களின் கண்களுக்கு அவரது ஏமாற்று வேலைகள் கண்கூடாகத் தெரிந்து பரபரப்பாகிவிட்டது. இன்றளவும் இதைப் பற்றி மகான் சாய்பாபா எந்தவிதக் கருத்தையும் கூறாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்..!

உதவியாளர் கொடுக்கும் செயினை வாங்கி "ஜீ பூம் பா.. எல்லாரும் பார்த்துக்குங்க.. செயின் வர வைக்கிறேன் பாருங்க.." என்று சொல்லாமல் சொல்லி செயினை வரவழைத்து மோடி மஸ்தான் வேலையைக் காட்டிய சாய்பாபா எப்போது கடவுளின் அவதாரமானார் என்று தோண்டித் துருவித்தான் படிக்க வேண்டியுள்ளது..

இதேபோல் விரல் இடுக்கில் மாத்திரை வடிவத்தில் விபூதியை வைத்துக் கொண்டு கணப்பொழுதில் அதனை நசுக்கு தூளாக்கி கைகளை பரப்பி கீழேயும், மேலேயுமாக அசைத்து விபூதியை கொடுத்துதான் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவையும் இவர் ஏமாற்றியிருக்கிறார் என்பதை இன்றைக்கு நினைக்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது. நல்லவேளை எம்.எஸ். அம்மா.. இதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்..!



வாயில் இருந்து லிங்கம் எடுப்பது என்பது மனித வடிவில் இருப்பவரால் முடியாத விஷயம் என்று ஐ.ஏ.எஸ்., மருத்துவம், பொறியியல் படித்த மாமனிதர்களுக்குத் தெரியாததல்ல.. புரியாததல்ல.. ஆனாலும் எப்படி இதனை நம்பினார்கள்..? ஆச்சரியமாக இருக்கிறது..!


வாய்க்குள் லிங்கத்தை வைத்துக் கொண்டு ஏதோ திடீரென்று வயிற்றின் உள்ளேயிருந்து லிங்கம் வெளி வருவதைப் போல் ஆக்ஷன் காட்டி எடுத்துக் காட்டி புளகாங்கிதமடையும் மகான் சாய்பாபாவின் அந்த ஆக்ஷனை பார்த்தபோது சிரிப்புதான் வந்தது..!

கூடவே இன்னொரு முறை, கையில் வைத்திருந்த துண்டில் மறைத்து வைத்திருந்த லிங்கத்தை தன் வாயில் இருந்து விழுந்ததைப் போல பாவ்லா காட்டி கூட்டத்தினரை வசியப்படுத்துகிறார்.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள்..!

இந்த லீலைகளை எல்லாம் கடந்த சில வருடங்களாகவே பாபா நிறுத்திக் கொண்டார் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். அதாவது இந்த பிராடுத்தனத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பு..!

ஆனாலும் ஏன் அவரைத் தேடி இவ்வளவு கூட்டம்..? என்ன காரணம்..? கும்பகோணத்தில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளை சாவுக்குக் கொடுத்துவிட்டபோதும் அந்த மக்கள் ஒன்றுமறியாமல் அதே ஊரில் குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கும் பல சாமிகளைத் தேடி இப்போதும் சென்று வருகிறார்களே.. அதுவேதான் இதற்கும் காரணம்..!

நம்பிக்கை.. இந்த அசாத்திய நம்பிக்கையை நன்றியுணர்வு என்கிற ஒரு வார்த்தையையும் சேர்த்தே சொல்லலாம்..!

சாய்பாபாவை சந்தித்தவுடன், தான் அங்கு போய் வந்தவுடன் தனது பிரச்சினை தீர்ந்ததாக ஒருவர் சொன்னாலே போதாதா..? ஒரு தெருவே கிளம்பிவிட்டது.. இப்படி ஒருவருக்கொருவர் தங்களது சுய துக்கங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டபடியேதான் சாய்பாபாவை தரிசிக்கச் சென்றார்கள். பலருக்கும் பிரச்சினைகள் ஏதோ ஒரு வழியில் முடிந்திருக்கிறது.. சிலருக்கு முடியவில்லை..! முடிந்தவர்கள் தங்களது நன்றியை கரன்சியாக்கிக் கொட்டியிருக்கிறார்கள். முடியாதவர்கள் சாமி தங்களிடம் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறதோ என்று நினைத்து வந்து கொட்டியிருக்கிறார்கள்..!

ஒரு நிழல் அரசாங்கத்தையே புட்டபர்த்தியில் நடத்தி வந்திருக்கிறார் சாய்பாபா. கி்ட்டத்தட்ட வாடிகனை போல..! ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு வேண்டியதைச் செய்திருக்கிறார். அவர்களிடமிருந்து அவர் எதையும் பறிக்கவில்லை. தன்னிடம் சேர்ந்ததை பிரித்துக் கொடுத்திருக்கிறார்..!

அவரை நாடி வந்து கொடுத்தவர்களெல்லாம் திருடர்களோ, கொள்ளைக்காரர்களோ இல்லை.. அப்பாவிகள்தான்.. பணமிருந்தும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள்தான்.. அவர்களுக்கு நல் வழி காட்டுகிறேன் என்று சொல்லித்தான் இந்த மோடி மஸ்தான் வேலையை சாய்பாபா செய்து வந்திருக்கிறார்..!

ஆக.. வந்திருக்கும், சேர்ந்திருக்கும் பணமெல்லாம் சட்டப்பூர்வமான பணம்தான்.. கொள்ளையடித்த பணமல்ல.. கொட்டு வந்து கொட்டியவர்களின் சாபம் பாபாவையோ, அவரால் அந்தப் பணத்தின் மூலம் பலன் பெற்றவர்களையோ சாராது..!

ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும் தனது எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு ஆன்மிகம் என்னும் ஒரு ஆயுதத்தை மக்களிடத்தில் ஆழமாக விதைத்துவிட்டுச் சென்ற ஒரு காரணத்திற்காக இவரை பாராட்டத்தான வேண்டும்..!

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி.. பிரதமர்களோ, ஜனாதிபதிகளோ, துணை ஜனாதிபதிகளோ இங்கு வராதவர்களே இல்லை..! இவரை வணங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அரசியல் பின்புலமும் அபரிமிதமாக இவரை வளர்த்து வைத்திருக்கிறது..!

தீவிரமான ஆத்திகக் கொள்கைகளை கொள்கையாக கொண்டிருக்கும் வீடுகளின் இல்லத்தரசிகள்கூட பாபாவின் அடிபணிந்த பக்தைகளாக மாறியதற்கு என்ன காரணம் என்று எதைத்தான் சொல்வீர்கள்..? இவர்களிடத்தில் இல்லாத பணமா? அதிகாரமா..? இவை இரண்டும் இருந்தாலே போதும்.. இதையும் தாண்டி இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். புரியவில்லை..!

இவரை நாடிச் சென்றவர்கள் சொல்லும் குறைகள் உடனுக்குடன் தீர்ந்தன என்றுதான் முதலில் சொன்னார்கள். எனக்குத் தெரிந்து அப்படி சொன்னவர்களில் பி.சுசீலாவும் ஒருவர்.  கடைசியாகச் சொன்னவரும் பாடகிதான். அவர் சித்ரா..!

ஒரு சமயத்தில் சுசீலாம்மாவின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தை பாபாதான் தீர்த்து வைத்ததாக சுசீலாம்மா பேட்டியளித்திருந்தார். பாபாவின் முன்னிலையில் ஒரு கச்சேரியில் தான் பாடத் துவங்கியபோதே தனது பழைய குரல் மீண்டும் கிடைத்துவிட்டதாக புளகாங்கிதப்பட்டிருந்தார்..!

நிறுவனமயமாக்கப்பட்ட ஆன்மிகத் தலங்களில் புட்டபர்த்தி பிரகாசமானதற்கு ஒருவகையில் சுசீலாம்மா, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களும் காரணம்..!

புட்டபர்த்தியில் சாய்பாபா முன்பு பாடாத கர்நாடக இசைப் பாடகிகளும், பாடகர்களும், வாத்தியக் கருவியை இசைக்கும் இசைக் கலைஞர்களும் யாருமில்லை என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் முறை வைத்து அழைத்துச் சென்று பாட வைத்தார்கள் ஆசிரமத்தினர்.

தாங்கள் விரும்பியவர்களே தெய்வமாக வணங்குகிறார்களே என்ற ஆர்வத்தில் மேலும், மேலும் சாய்பாபா தெய்வமாகிக் கொண்டே போனது இதனால்தான்..! அத்தனை பேருக்கும் சாய்பாபாவின் கருணை கிடைத்துவிடவில்லை..! ஆனால் நேரில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஊடகங்களும், அதில் தெரிந்த பி.ஆர்.ஓ. பிரபலங்களும் உண்டாக்கினார்கள்..!

வருடாவருடம் கொடைக்கானலுக்கு பாபா வரும்போது அங்கு செல்லும் கூட்டத்தை பார்க்க வேண்டுமே..! 4 நாட்கள் தொடர்ந்து நான் அங்கே இருந்தபோது பார்த்தேன்.. ஒரு சப்தம்.. ஒரு கூச்சல்.. இல்லை. அனைவரும் அமைதி காக்கிறார்கள். அவர் வருகிறார். பார்க்கிறார். நடக்கிறார். திரும்புகிறார். அனைவரும் கை கூப்புகிறார்கள். சிலரின் தலையில் கை வைக்கிறார். மீண்டும் வந்த வழியே திரும்புகிறார். மேடையில் இருக்கும் அரியாசனத்தில் அமர்கிறார். லேசாக திரும்பிப் பார்த்தவுடன் பஜனை கோஷ்டி தனது கோஷ்டி கானத்தை ஆரம்பித்தது.. அவ்வளவுதான்.. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பாபா புராணம்தான்..!

இரண்டாவது நாளே எனக்கு போரடித்துவிட்டது..! என்னதான் செய்கிறார் இந்த சாமி என்கிற ஆர்வத்தில் உள்ளூர்காரர்களும் ஒட்டிக் கொண்டு எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். சுற்றுலா பயணிகளாக வந்தவர்களும் விழுந்தடித்துக் கொண்டு வந்து பார்க்கிறார்கள்.. அனைவரையும் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையிலேயே பார்க்கிறார்..! அட.. சிறு குழந்தைகள் டாட்டா காட்டியும், அவரை நோக்கி பிஞ்சு கைகளைக் குவித்து வணக்கம் சொல்வதைக்கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டதை நினைத்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்..! மனுஷன் என்னமா இறுக்கமா இருக்காருய்யா என்று..!

மனிதன் தெய்வமாகலாம் என்பதை அவனுடைய குணத்தை வைத்துச் சொல்கிறார்கள். ஈகை, மன்னிப்பு, இரக்கம், அன்பு, பாசம், வருமுன் உரைப்பது... இவற்றையெல்லாம் செய்யும் மனிதர்களே தெய்வங்கள் என்கிறார்கள். ஏனெனில் இவைகளையெல்லாம் மனிதர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. ஆகவே இவர்கள் தெய்வங்கள் என்பார்கள்..!

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார், பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!

இவர்களது நம்பிக்கையை நாம் குலைப்பதென்பது சாமான்யமானதல்ல..! அது முடியவும் முடியாது..! இவ்வளவு நடந்த பின்பும் நித்யானந்தாவைத் தேடியும் ஒரு கூட்டம் போகின்றது என்றால் மனிதர்களின் குணத்தை எத்தனை, எத்தனை விதமாக படைத்திருக்கிறார் இறைவன் என்று யோசிக்கத்தான் வேண்டியுள்ளது..!


1912-ல் சித்தியடைந்த ஷீரடி சாய்பாபாவின் வாரிசு நான்தான் என்று கூறித்தான் இந்த சாய்பாபா தனது ஆன்மிகத்தை துவக்கினார்.. இப்போது தனக்குப் பின்பு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரேம்சாய் என்ற பெயரில் நானே அவதாரமெடுப்பேன் என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் இந்த இரண்டாவது சாய்பாபா..! மூன்றாவது சாய்பாபாவின் வருகைக்காக நாமும் காத்திருப்போம்..

இவருடைய மரணத்தினால் அவரது பக்த கோடிகள் தங்களது ஒரேயொரு நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்..! அவரது அறக்கட்டளையின் உதவியினால் வாழ்க்கை நலம் பெற்ற மக்கள் இப்போது கண்ணீர் விடுகிறார்கள்..! அவருடைய ஆசியினால் நல்வாழ்வு பெற்றவர்கள் இப்போது கதறுகிறார்கள்..! அனைத்துமே நம்பிக்கை மற்றும் அனுபவத்தினால் விளைந்தது..!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் மரணமுண்டு என்பதை உணர்ந்தால் இதுவும் புட்டபர்த்தியில் நேற்று நடந்த ஒரு மரணத்தில் ஒன்று என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்..! இதுவரையில் கடவுளாகவே கருதப்பட்டவர் இந்த நிமிடத்தில் இருந்து மனிதனாக்கப்பட்டு ப்ரீஸருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது சட்டென்று பல பக்தர்களால் ஏற்க முடியாமல்தான் உள்ளது..!

இது அத்தனையையும் ஒரே வார்த்தையில்.. முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இவர்கள் யாரும் நம்மூர் முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிடும் சாமான்யர்கள் இல்லை.. மெத்தப் படித்த மேதாவிகள்தான்..! சிந்தை கலங்கும் அளவுக்கு ஆன்மிகத்தை தமது மனதில் நிறுத்தி வைத்திருக்கும் இவர்களுக்கு, இவர்கள் விரும்பிய சாய்பாபாவின் அருள் என்றென்றும்  நிலைத்திருக்கட்டும்..!

சாய்பாபா விட்டுச் சென்ற ஆன்மிக, சமூகப் பணிகளை அவரது அறக்கட்டளையினர் தொடர்ந்து செய்து வந்தார்களேயானால் அதுவே அவருக்கு பெருமை..!

சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்த கோடிகளின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!

ராசாவுக்கு எதிராக செவன் ஸ்டார்ஸ்களின் வாக்குமூலம்...!

22-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி அலைவரிசை ஊழலில், ஆ.ராசாவிடம் 1999-ம் ஆண்டு முதல் 2008வரை கூடுதல் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி​யின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மேலும் ஆறு நபர்களின் வாக்குமூலங்கள் அடுத்த முக்கியத்​துவத்தைப் பெற்று உள்ளதாக டெல்லி​யில் உள்ள சி.பி.ஐ. கருதுகிறது!

ஆர்.பி.அகர்வால் (வயர்லெஸ் ஆலோசகர்), அசோக்வதா (தலைமை நிர்வாக அதிகாரி, அம்பித் ஹோல்டிங் நிறுவனம்), அசிஸ் காரயாக்கர் (பொது மேலாளர், ரிலையன்ஸ்), ஏ.கே. ஸ்ரீவஸ்தவா, ராம்ஜிசிங் குஸ்வா (இணை வயர்லெஸ் ஆலோசகர்), தேடாட்டா பண்டிட் (முன்னாள் கம்பெனி செயலாளர், ரிலையன்ஸ்) ஆகிய ஆறு பேர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 164 பிரிவின்படி வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஆசீர்வாதத்தையும் சேர்த்து இந்த ஏழு பேரையும் 'ஸ்டார் சாட்சிகள்’ என்று சி.பி.ஐ. வர்ணிக்கிறது. இவர்களுக்கு இப்போது  பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேலும் சில சாட்சிகள் இருப்பதாக, சி.பி.ஐ-யின் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. இந்த சாட்சிகள், 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள்.

எஸ் டெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியாமிக்தாஸ், லூப் மொபைல் இந்தியா லிமிடெட் துணைப் பொது மேலாளர் சௌமியா நாராயணன், ஐடியா செல்லு​லார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் வாட்ஸ், ஸ்பைஸ் குளோபல் துணைத் தலைவர் அகிலேஷ் குமார் சக்ஸேனா, டாடா டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் தலால் மற்றும் ராகேஷ் மகோத்ரா ஆகியோர் தங்களது நிறுவனத்துக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குமான தொடர்புகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

யுனிடெக் லிமிடெட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொகிட் குப்தா மற்றும் முன்னாள் ஆலோசகர் அருண் குமார் டால்மியா, சிஸ்டாமா ஸ்யாம் டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைமை அதிகாரி டி.நரசிம்மன், ரிலையன்ஸ் (எடிஎஜி) குரூப் தலைவர் சேதுராமன், ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் சுப்ரமணியன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்தர் சிங்கி, ரிலையன்ஸ் (எடிஎஜி) பொது மேலாளர் அசிஸ் காரையாக்கர், மூத்த துணைத் தலைவர் அசிஸ்தாம்பவாலா, கூடுதல் துணைத் தலைவர் பாரத் அம்பர்க்கர் ஆகியோர் அந்தக் காலகட்டத்தில் நடந்த பரிவர்த்தனைகள், ஆவணங்​களை சமர்ப்பித்து உள்ளனர்.
 
இவை அனைத்துமே திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக அமையும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.

2-ஜி அலைவரிசையில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஆ.ராசாவுக்கு  எதிராக, செயல்பாடுகளை வாக்குமூலமாகக் கொடுக்க சி.பி.ஐ-யிடம் எழுத்து மூலம் உறுதி அளித்துள்​ளார்கள்.

ஸ்டார் சாட்சிகளின் வாக்குமூலங்கள்...

ஏ.கே.ஸ்ரீவஸ்தவா : ''ஆ.ராசாவின் பெர்சனல் உதவியாளர் சந்தோலியா 24.9.2007 அன்று என்னை அழைத்தார். 'யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் இப்போதுதான் என் கைக்கு வந்துள்ளது. உடனே அந்த விண்ணப்பத்தை யு.ஏ.எஸ். லைசென்ஸ் கொடுக்கும் பட்டியலில் சேர்க்கவும், இனி எந்த நிறுவனத்தின் விண்ணப்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றும் சொன்னார்.

'அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற புதிய கொள்கையைச் செயல்படுத்துங்கள்’ என்றும் சொன்னார். 'சந்தோலியா சொல்வது போல் செயல்படவும்’ என்று ஆ.ராசாவும் அறிவுறுத்தி​னார். தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, 'ஸ்வான் நிறுவனத்தின் விண்ணப்பங்களில் சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவ்வப்போது, அமைச்சர் ஆ.ராசா என் செல்போனில் வந்து சில உத்தரவுகளைப் போட்டார். ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் விதிமுறையை மீறி ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டது உண்மைதான்!''

ஆர்.பி.அகர்வால் : ''அமைச்சர் ராசாவும், சந்தோலியாவும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படச் சொல்லி என்னை மிரட்டினார்கள். ஸ்வான் டெலிகாம் நிறுவன விண்ணப்பம் மிகவும் தாமதமாக வந்தது. ஆனால், அந்த விண்ணப்பத்தை முன்னதாகவே வந்ததுபோல், முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர, கோப்புகளில் மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தினார்கள். அதன்படி கோப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது!''

ராம்ஜி சிங்குஸ்வா :  ''சந்தோலியா, பெஹுரா இருவரின் ஆலோசனைப்படி செயல்​​பட வேண்டும் என்று அமைச்சர் ராசா என்னிடம் கூறினார். ஸ்வான் டெலிகாமை முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர அவர்கள் கட்டாயப்படுத்தியபோது, சில அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட அதி​காரிகளை மாற்றினார்கள். அதனால்​தான், நான் சந்தோலியா, பெஹுரா சொன்னதை அப்படியே செய்தேன்!''

அசிஸ் காராயக்கர் : ''ரிலையன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் முன் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 25, 2007 ரிலையன்ஸ் போர்டு மீட்டிங்கில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதுபோல் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்​பட்டது. இதன் பின்னணியில் கிராப்பி கன்சல்டன்சி இருந்தது. இந்த கன்சல்டன்சி, டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனமாகும்!''

தேடாட்டா பண்டிட் :  ''ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக போலியான ஆவணங்கள், ரிலையன்ஸில் அக்டோபர் 2007-ல் தயாரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்று போர்டு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஸ்வான் டெலிகாம் தொடர்பாக அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்​டதாகவும் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஸ்வான் டெலிகாமுக்கு அலைவரிசை ஒதுக்கீடு கிடைத்தது. போலியான போர்டு மீட்டிங் மினிட்ஸில் என்ன இருக்க வேண்டும் என்பதை சந்தோலியா, பெஹுரா, அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் டிக்டேட் செய்தனர்!''

அசோக்வதா :  ''ஸ்வான் டெலிகாம், டைகர் டிரேடர்ஸ் பிரை​வேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்​களுக்கு, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு கிடைப்பதற்கான நிதி உதவி செய்தும் அந்த நிறுவனங்களில் முதலீடு இருப்பதுபோல் ஆவணங்கள் தயாரித்தும் கொடுத்தேன்!''

கடந்த இதழில் நாம் குறிப்​பிட்ட ஆசீர்வாதம் ஆச்​சாரி​​​யின் வாக்குமூலத்துடன் இந்த ஆறு வாக்குமூலங்களும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களின் வாக்குமூலங்​களை அடிப்படையாக வைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சாட்சிகளை அடிப்​படையாகக்கொண்டும்  'ஆ.ராசா... குற்றவாளிதான்’ என்று நீதிமன்றத்தில் உறுதியாகச் சொல்லக் காத்திருக்​கிறது சி.பி.ஐ.!

''லைசென்ஸ் பெறவே நீரா ராடியாவும் ராசாவும் பேசினர்...''

வருமான வரித் துறை இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால், நீரா ராடியா பற்றி டெல்லி போலீஸ் அதிகாரி வினீத் அகர்வாலுக்கு நவம்பர் 20, 2009-ல் எழுதிய கடிதத்தில், 'நீரா ராடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி இணைப்புகள் எங்களுக்கு வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நீரா ராடியா வைஷ்ணவி கார்ப்பரேட் கன்சல்டன்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளன.

இந்த நிறுவனங்கள் வெறும் ஊடக மேலாண்மை செய்வது மட்டுமல்ல, அவர்கள் உரையாடல் அடிப்படையில், தங்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பக் கொள்கை முடிவுகளில் மாற்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றை செய்து வருகின்றன.

அவர்களின் உரையாடலைப் பார்க்கையில், நீரா ராடியாவுக்கு தொலைத் தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுப்பதில் பங்கு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் உரையாடலில், புதிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு நீரா ராடியா ஆலோசனை வழங்குகிறார். இந்த லைசென்ஸ் பெறுவதால் அவர்களுக்கு உடனடி ஆதாயம் எதுவும் வந்துவிடாது என்று அரசாங்கத்தை நம்பும்படி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை காலம் தாழ்த்தி பெறும்படியும் அவர் அறிவுரை கூறுகிறார்.

நீரா ராடியாவுக்கும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே நேரடி தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்து உள்ளன. சில உரையாடல்கள், சில தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் லைசென்ஸ் பெற உதவும் வகையில் உள்ளன. நீரா ராடியா சந்தோலியாவுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவை தேவைப்பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்...’ என்று கூறப்பட்டு உள்ளது!

(தொடரும்)

நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011


எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

21-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்​திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு,  முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ்  பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வை​யிடக் கிளம்பியது.


போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயல​​லிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்​கொள்ள​வே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்​களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்​படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்​​படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்​டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.



வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்​கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடி​மட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கி​யடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடிய​வில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற,  போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.


சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு,  அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!

(தொடரும்)

நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011

சுஜாதா என்னும் கவிதா எங்கே போனாள்..?

19-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 6-ம் தேதி புதன்கிழமை, மதியவாக்கில் நடிகை சுஜாதா மரணம் என்ற செய்தி திரையுலகத்தில் பரவியபோது பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள் உச்சரித்த வார்த்தை ஒன்றுதான். ஆனால் அதனை நான் இங்கே குறிப்பிடவே முடியாது..!



நடிகை என்பவளுக்கு தனி இமேஜூம், தனி வாழ்க்கை முறையும், தனியான ஆசைகளும் இருந்து வந்து கொண்டிருக்கிறது என்பது பத்திரிகைகள் அவர்கள் மீது திணித்து வைத்திருக்கும் ஒரு பிம்பம்தான். ஆனால் குளத்தில் கல்லெறிந்து உருவாக்கும் அலைகளைப் போல அவர்களது வாழ்க்கையும் அலைக்கழிக்கிற வாழ்க்கைதான் என்பதை மட்டும் மீடியாக்கள் வெளிச்சம் போடுவதில்லை.

சுஜாதா என்ற இந்த நடிகையின் திரையுலக வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்திருந்த திரையுலகம், மறு பக்கத்தை கடைசிவரையில் பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு இரும்புக் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டிருந்த புள்ளிமானாக இருந்தவர் சுஜாதா..!




சினிமா பத்திரிகையாளர்களுக்குள் போட்டி என்று ஒன்று வைத்தால் அதில் முதலிடத்தில் சுஜாதாவிடம் யார் பேட்டி கண்டு வருவது என்கிற ஆப்ஷன்தான் முதலிடத்தில் இருக்கும். அந்த அளவுக்கு தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தானே சிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுஜாதா..!

கடந்த 5 ஆண்டு காலமாக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அவர் அலைந்திருந்தபோதிலும் அது பற்றிய விஷயங்கள்கூட மீடியாக்களுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டனர் அவரது குடும்பத்தினர்..!




அவருடைய நீண்ட நாள் மேக்கப்மேனான சுந்தரமூர்த்தியின் நட்பு மட்டுமே, அந்த வீட்டுக்கும் திரையுலகத்துக்கும் இருந்த ஒரேயொரு தொடர்பு என்கிறது கோடம்பாக்கம்..!

சுஜாதா தமிழில் அறிமுகமான அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவுக்கு மேக்கப் போட்டவர் சுந்தரமூர்த்தியின் அப்பாதான். அதன் பின்பு சுந்தரமூர்த்தி அத்தொழிலைக் கையில் எடுத்தபோது பாபாவரையிலும் ரஜினிக்கும், சுஜாதாவுக்கும் ஆஸ்தான மேக்கப்மேன் இவரே..! சுஜாதாவின் அஞ்சலியில் அவரது பெண் திவ்யாவின் கண்ணீருக்குப் பின்பு இந்த சுந்தரமூர்த்தியின் கதறல்தான் அதிகமாக இருந்தது..!




சுஜாதா மலையாள தேசத்தில் இருந்து இறக்குமதி ஆனவர். ஆனால் இலங்கையில் பிறந்தவர். அவர் 1952-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் இலங்கை நெல்லித்தீவில் பிறந்துள்ளார். இந்த வலைத்தளத்தில்(http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=113:2011-04-14-23-22-57&catid=26:2011-03-06-20-34-42&Itemid=48)  உறுதியான ஆதாரத்துடன் இந்தத் தகவல் எழுதப்பட்டுள்ளது. இவருடைய தந்தை மேனன், கேரளாவில் இருந்து இலங்கைக்கு விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றவர். நெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேனன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சுஜாதாவும் ஆரம்பக் கல்வியை அங்கேயே முடித்திருக்கிறார். 1966-ம் ஆண்டில்தான் கேரளாவுக்கே அவரது குடும்பம் திரும்பியிருக்கிறது..!

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி.வரை மட்டுமே படித்து முடித்த சுஜாதா தனது 16-வது வயதிலேயே மலையாள நாடகங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். இது அவரது குடும்பத்தினரின் தூண்டுதலினால்தான் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.




தமிழ்நாட்டை போலவே கேரளாவில் அப்போது நாடகக் கலை வளர்ந்திருந்த நேரத்தில் சுஜாதாவின் கண்ணை ஈர்க்கும் முக அழகும், இயல்பாகவே அவருக்கிருந்த நடிப்பும் அவரை நடிப்புத் துறையிலேயே கொண்டு வந்துவிட்டிருக்கிறது..!

போலீஸ் ஸ்டேஷன் என்ற நாடகம்தான் அவர் முதன் முதலில் நடித்த நாடகம் என்கிறார்கள். இந்த நாடகம் அப்போது தமிழகத்தில்கூட பிரபலமாகப் பேசப்பட்டதாம்.

இதற்கிடையில் 1968-ல் டூ கல்யாண் என்ற இந்திப் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரக்கூடிய அளவுக்குத் தலையைக் காட்டியிருக்கிறார் சுஜாதா..!

அதே 1968-ல் மலையாளத்தில் தபஷ்வனி என்கிற திரைப்படத்தில் ஜோஸ் பிரகாஷ் என்னும் இயக்குநர்தான் சுஜாதாவை மலையாளத் திரையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதன் பின்பு பல மலையாளப் படங்களில் சிற்சில வேடங்களிலும், குரூப் டான்ஸிலும் வந்து முகத்தைக்  காட்டியிருக்கிறார் சுஜாதா. 

1971-ம் ஆண்டு எர்ணாகுளம் ஜங்ஷன் என்னும் திரைப்படத்தில்தான் சுஜாதா என்ற தனித்த நடிகை மலையாளத் திரையுலகத்தினருக்குத் தெரிந்திருக்கிறது.  காரணம், இத்திரைப்படத்தில்தான் மலையாளத்தில் அப்போதைய காலக்கட்டத்தில் வேறு எந்த புதுமுக நடிகையும் துணிந்து நடிக்க முன் வராத அளவுக்கு டூ பீஸ் உடையில் சுஜாதா நடித்திருந்தது மலையாள திரையுலகத்துக்கே அதிர்ச்சி..!

இந்தத் திரைப்படத்தின் பெயரும், புகழும் இதே காரணத்துக்காகவே சுஜாதாவின் பெயரை கேரளா தாண்டி இங்கேயும் கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸார் அறிமுகப்படுத்திய டூ பீஸ் உடை அழகிகள் பட்டியலில் இன்னொருவராக இவரை அறிமுகப்படுத்திவிடலாம் என்று நினைத்து கோடம்பாக்கத்துக்கு சுஜாதாவை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.




ஆனால் இங்கே அவர் எதிர்பார்த்தது என்னவோ கேரக்டர் ரோல்ஸ்.. மலையாளத்தில் தன்னுடன் நடித்திருந்த பத்ரகாளி படத்தின் ஹீரோயின் ராணிசந்திராவின் உதவியோடுதான் தமிழ்த் திரையுலகத்துக்குள் காலெடுத்து வைத்திருக்கிறார் சுஜாதா..!

1973-ல் அவள் ஒரு தொடர்கதை படத்திற்காக புதுமுகம் தேடிக் கொண்டிருந்த கே.பாலசந்தரிடம் வழக்கமான புதுமுகமாகத்தான் சுஜாதா அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். நெடு நெடு என்ற உயரமும், அக்கா போன்ற தோற்றமும் கேரக்டருக்கு ஏற்றாற்போல் கிடைத்துவிட அவர்தான் அந்தக் கவிதா என்று முடிவு செய்துவிட்டார் கே.பி.




இந்த ஒரு படத்தின் வெற்றி அவருக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், 1976-ல் வெளிவந்த அன்னக்கிளிதான் அவரை தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது..!

இளையராஜாவின் புதுமையான இசை.. கிராமந்தோறும் காதுகளில் கிசுகிசுக்கப்படும் செய்திகளின் தொகுப்பாக அன்னம் என்ற அந்த அபலையின் கதையை உரக்கச் சொன்ன அன்னக்கிளி, சுஜாதா என்றொரு பண்பட்ட நடிகையை தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அடையாளம் காட்டியது..

இடையில் மீண்டும் தன் தாய்வீட்டுப் பக்கம் கவனத்தைத் திருப்பினாலும் தமிழ் திரைப்பட உலகம் அவருக்குக் காட்டிய வரவேற்பினால் இங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது சுஜாதாவின் குடும்பம்.

திரையுலகில் வெற்றி பெற்ற நடிகைகளின் பின்புலத்திலெல்லாம் யாரோ ஒருவரின் ஆசையும், வெறியும் கலந்திருக்கும் என்பது கோடம்பாக்கத்து விதி. இது சுஜாதாவுக்கும் பொருந்தும். தன்னை மேலும், மேலும் நடிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க வேண்டி வழக்கமாக எல்லா நடிகைகளும் செய்த அதே தவறைத்தான் சுஜாதாவும் செய்தார்.

மவுண்ட்ரோட்டில் பழைய ராஜகுமாரி தியேட்டர் அருகில் குடியிருந்த சுஜாதாவின் வீட்டு மாடியில் ஒண்டுக் குடித்தனத்தில் தங்கியிருந்தவர் ஜெயகர் என்பவர். சுஜாதாவின் வருத்தங்களுக்கும், சோகங்களுக்கும் ஆறுதல் சொல்ல படியிறங்கியவர் சுஜாதாவின் மனதுக்குள்ளும் புகுந்துவிட்டார். வழக்கம்போல தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஜெயகரை திருமணம் செய்து கொண்டு தனது அடுத்தக் கட்ட வாழ்க்கையைத் துவக்கினார் சுஜாதா. இதுவரையில்தான் அவரது சினிமாவின் பொற்காலம் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.




இதுவெல்லாம் பிற்காலத்தில் நடக்கப் போகிறது என்பது தெரியாமலேயே இயக்குநர் சிகரத்தின் அவர்கள் படத்தில் 1976-ல் நடித்து முடித்தார் சுஜாதா. ஒரு பக்கம் தேளாகக் கொட்டிய கணவன்.. மறுபக்கம்  தன்னை விரும்பும் இரண்டு நல்ல நண்பர்கள் என்று கே.பி. காட்டிய அந்தத் திரைக்காவியத்தில் முதல் வரி  கதை, சுஜாதாவின் நிஜ வாழ்க்கையில் அப்படியே நிகழ்ந்துவிட்டது அவரது துரதிருஷ்டம்தான்..!

1977-ல் நடந்த அவரது திருமணத்திற்குப் பிறகும், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் அவரது திடீர் சினிமா பிரவேசங்களும், திடீர் தலைமறைவுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பத்திரிகைகள் விரட்டிப் பிடித்துதான் அவரைப் பேச வேண்டிய கட்டாயம்..! எதையும் வெளிப்படையாகப் பேசும் சுஜாதாவுக்கு தனது கணவர் கட்டியிருந்த இரும்புக் கோட்டைக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம்..!




இன்றுவரையிலும் அவருடன் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் அவரது நிலைமை நன்கு தெரியும். அத்தனை பேரிடமும் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இதற்காக தான் இந்தத் திருமணப் பந்தத்தை மீறப் போவதி்ல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதுதான் பலராலும் ஏற்க முடியாமல் போயிருந்தது.

சுஜாதாவின் இறப்புச் செய்தி கேட்டவுடன் அவருடன் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சொன்ன வார்த்தைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை என்கிறார் அவருக்குத் தகவல் கொடுத்த சினிமா பத்திரிகையாளர்..!

இடையில் தனது நடிப்பு கேரியரில் எந்தப் பங்கமும் வைக்காமல் நடிப்பு வேட்டையைத் தொடர்ந்துதான் வந்திருக்கிறார் சுஜாதா.  அவர்கள் படத்தில் கே.பி.யின் இயக்குதல் பசிக்கு சுஜாதா நிறைய தீனி போட்டிருந்தாலும் சுஜாதாவுக்கே தன்னைப் பிடித்திருந்தது நூல்வேலியில்தான்..! இதையும்விட எனக்குப் பிடித்திருந்தது அவள் ஒரு தொடர்கதையின் நாயகி கவிதாதான்..!

இப்படியொரு சகோதரி வீட்டுக்கு வீடு இருக்கிறார்களே.. இவர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை என்றெல்லாம் யோசிக்க வைத்தது இத்திரைப்படம். இதில் இவர் காட்டியிருந்த நடிப்பு நிச்சயம் ஒரு புதுமுகம் என்றே சொல்ல முடியவில்லை. வசன உச்சரிப்பில் சுஜாதா ஒரு ஸ்டைலிஸ்ட் என்றே சொல்ல வேண்டும்..!

“சம்பாத்தியத்துக்கு ஒரு தங்கச்சி.. சமைச்சுப் போட ஒரு அம்மா.. படுக்கைக்கு ஒரு பொண்டாட்டி.. த்தூ.. வெட்கங்கெட்ட ஜென்மம்..” என்று ஜெய்கணேஷை பார்த்து பொறுமித் தள்ளும் சுஜாதாவின் வசன உச்சரிப்பை கவனித்துக் கேட்டுப் பாருங்கள். நம்மையும் சேர்த்தே சொல்லியிருப்பார். அல்லது சொல்ல வைத்திருப்பார்..




இதே போன்றதுதான் அந்தமான் காதலி படத்தின் இறுதிக் காட்சி.. சிவாஜி எரிமலையை நோக்கி போய்க் கொண்டிருக்க தாங்க மாட்டாத அளவுக்கு பொறுமை காத்துவிட்டு பின்பு அதனையும் இழந்து.. “அவர்தாண்டா உங்கப்பா...” என்று வெடித்து சிதறுகின்ற காட்சியை எத்தனை முறை இலங்கை வானொலியில் கேட்டும் சலிக்கவில்லை.. படத்தை பார்க்காமலேயே குரலிலேயே தனது நடிப்பை செதுக்கியிருந்தார்..!

இதற்குப் பிறகு சுஜாதாவின் பெயரை ஊரெல்லாம் கொண்டு போய் சேர்த்தது விதி திரைப்படம்தான்.. தன்னை கெடுத்து, பிள்ளையையும் கொடுத்தது “இதோ இந்த டைகர் தயாநிதிதான்..” என்று கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும் ஜெய்சங்கரை பார்த்து கையை நீட்டிச் சொல்கின்ற அந்தக் காட்சி.. மறக்க முடியுமா..? அதிலும் அந்த நீதிமன்றக் காட்சிகளின்போது அவ்வப்போது, “டைகர் தயாநிதி..” என்று அவர் உச்சரிக்கும்போதெல்லாம் வரும் வெறித்தனம், அந்த கேரக்டராகவே அவர் மாறியிருந்ததைக் காட்டியது.




பட்டிதொட்டியெங்கும் விதி படத்தின் ஆடியோ கேஸட்டுகள் பட்டையைக் கிளப்பியபோது சுஜாதாவின் அனல் தெறித்த வசனக் காட்சிகளே படத்திற்கு மீண்டும், மீண்டும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு வந்தது..!




இதன் பின்பு ஹீரோயின்களாக இளையவர்களும், எதற்கும் துணிந்தவர்களுமாக அறிமுகமானவுடன் தன்னுடன் அறிமுகமான கமல், ரஜினிக்கே அம்மா வேடம் போடவும் சுஜாதா தயங்கவில்லை.

தமிழ்ச் சினிமா தவிர்த்து தெலுங்கு, கன்னட உலகத்திலும் சுஜாதாவின் நடிப்புலகம் விரிந்தது.. தெலுங்கில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு என்ற மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் ஆடி முடித்தார் சுஜாதா.. தமிழைவிட தெலுங்கில்தான் மிக அதிகப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சுஜாதா என்கிறார்கள் தெலுங்குக்காரர்கள்..! இதன் பின்பு இன்றுவரையிலும் தெலுங்கு ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் அம்மாவாக வேடம் போட்டு ஓய்ந்துவிட்டார்.

இதனால்தான் இவருடைய மரணத்திற்கு தமி்ழ்த் திரைப்படத் துறையின் வருத்தப்பட்டதைவிடவும், தெலுங்கு திரையுலகமும், ஆந்திராவும் அதிகமாகவே அஞ்சலி தெரிவித்தன.

நீலாங்கரை வீட்டில் முதல் நாளில் இருந்து மறுநாள் அவருடைய உடல் சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்லப்படும்வரையிலும் இருந்தது தெலுங்கு சேனல்காரர்கள்தான். ஆந்திராவில் மிக அவசர செய்தியாகவே சுஜாதாவி்ன் மரணச் செய்தி அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.



“சுஜாதா மிக மிக ஒழுக்கமான பெண்மணி..” என்று கூறியிருக்கிறார் ராமாநாயுடு..! “நடிப்பு ஒன்றைத் தவிர சுஜாதாவுக்கு வேற ஒண்ணுமே தெரியாது. எப்படிப்பட்ட கஷ்டம் என்றாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார்..” என்று சொல்லியிருக்கிறார் நாகேஸ்வரராவ்..! ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியே சுஜாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

தெலுங்கு சேனல்களில் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பல நடிகர், நடிகைகள் தங்களது சோகத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்..!  ஆனால், தமிழ்ச் சேனல்கள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததினாலும் நீலாங்கரைவரைக்கும் போய் படம் எடு்க்க வேண்டுமா என்கிற சோம்பேறித்தனத்தினாலும் ஒரேயொரு முறை கடமைக்கு வந்து எடுத்துக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். அதையும்கூட சரிவர காட்டவில்லை. ஆனால் தெலுங்கு சேனல்கள் அனைத்திலும் அத்தனை செய்தி நேரங்களிலும் குறைந்தபட்சம் 3 நிமிடங்களாவது சுஜாதாவுக்காக ஒதுக்கியிருந்தார்கள்..!




தெலுங்கில் அவருக்குக் கிடைத்த அமைதி.. பத்திரிகையாளர்களின் விரட்டுதல் இல்லாத தனிமை.. இது சுஜாதாவுக்கு மிகவும் பிடித்துப் போக கடைசி சில வருடங்களில் அவர் அதிகம் நடித்தது தெலுங்கு படங்கள்தான்.. இவர் கடைசியாக நடித்ததுகூட தெலுங்கில் நாகார்ஜூனாவின் படமான 2006-ல் வெளி வந்த ஸ்ரீராமதாசுதான். ஆனால் இதற்கு முன்பே 2004-ம் ஆண்டே வரலாறு என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து முடித்து தனது தமிழ்த் திரையுலக வரலாற்றை முடித்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா..!




தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருக்கும் சுஜாதாவை திரைப்பட விழாக்களில் பார்த்ததாக யாராவது சொல்லியிருந்தாலே அது மிகப் பெரிய விஷயம்..!

சில வருடங்களுக்கு முன்பாக பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..!



அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..! கடைசியாக சுஜாதா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் மரணத்தின்போது..

சிவாஜியின் உடல் தகனம் நடைபெற்ற நாளன்று காலையில் பாண்டிபஜார் அருகே இருந்து தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சிவாஜியின் வீடு நோக்கி நடந்து வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் முன் வரிசையில் மனோரமாவுடன் கைகோர்த்து தலையைக் குனிந்த நிலையிலேயே சுஜாதா வந்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உடலுக்கு மாலை அணிவித்த கையோடு பட்டென்று சிவாஜியின் வீட்டுக்குள் சென்று பதுங்கிவிட்டார் சுஜாதா. அவரிடத்தில் இரங்கல் செய்தி கேட்பதற்காக அனைத்து சேனல்காரர்களும் சிவாஜியின் வீட்டைச் சுற்றிச் சுற்றி தேடியலைந்ததை நேரில் கண்டேன்..!

சில நடிகர், நடிகைகள் லாரியில் சிவாஜியின் உடலுக்குப் பின்னால் சென்றபோதாவது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர் வெளியில் வரவே இல்லை..!

“கண்ணிலே என்னவென்று கண்கள்தான் அறியும்..!

கையிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்..?”

- இப்படி அவள் ஒரு தொடர்கதையில் தனக்கான கேரக்டரில் பாடிய சுஜாதா, நிஜத்திலும் அவர் யார் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சூழலையே உருவாக்கி வைத்திருந்தார்..! ஆனால் இது அத்தனைக்கும் பத்திரிகையாளர்கள் குற்றம் சொல்வது அவரது கணவரைத்தான்.

சுஜாதா நடிக்கின்றவரையிலும் அவரது கால்ஷீட்டை அவரது கணவர் ஜெயகர்தான் கவனித்துக் கொண்டார். ஜெயகரையே போனில் பிடிப்பது மகா கஷ்டம். சுஜாதாதான் நடிக்க வேண்டும் என்றாலே தயாரிப்பு நிர்வாகிகள் அலுத்துக் கொள்வது அவரை நினைத்துத்தான்..!




பத்திரிகைகளுக்கு பேட்டி. அனாவசியமாக அரட்டைகள் என்று எதற்கும் இடம் கொடுக்காமல் சுஜாதாவை அழைத்து வருவது.. கூட்டிச் செல்வதாக இருந்தவர் ஜெயகர். அவரை மீறி பத்திரிகையாளர்கள் நெருங்க முடியாமல் தவித்து பின்பு அதையே குற்றம்சாட்டி பத்திரிகைகளில் பகிரங்கமாக எழுதிய பின்புகூட சுஜாதாவே இதற்கு மறுப்பளிக்கக்கூட மறுத்துவிட்டார்.

மீறி சுஜாதாவைத் தேடி வீட்டிற்குச் சென்றவர்களைக்கூட ஜெயகரே வரவேற்று பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு “மேடம்.. இப்போ தூங்குறாங்க.. போன்ல பேசிட்டு வாங்க..” என்றோ, இல்லையெனில் ஏதாவது ஒரு பொய் சொல்லியோ வாசலிலேயே திருப்பியனுப்பிய கதை தமிழ்த் திரையுலகில் கி்ட்டத்தட்ட அத்தனை சினிமா பத்திரிகையாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது..!

அப்படியிருந்தும் சிற்சில சமயங்களில் தேர்ந்தெடுத்த சில மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்த சுஜாதா தனது கணவர், குழந்தைகள் குடும்பம் பற்றி மட்டும் மூச்சுவிட்டதில்லை.




தற்போது அவருக்கு மாலை போடச் சென்ற சினிமா பிரபலங்கள் அவரது மகள் திவ்யாவை இத்தனை ஆண்டுகள் கழித்துதான் நேரில் பார்த்திருக்கிறார்கள். அத்தோடு கடந்தாண்டுதான் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறதாம். சஜீத் என்ற சுஜாதாவின் மகனையும் அன்றைக்குத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. மாலை போட்ட கையோடு பிரபலங்கள் திகைப்போடு திரும்பி வந்திருக்கிறார்கள்..!



உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டு கடந்த மாதத்தில் சுஜாதாவை பார்க்க விரும்பி நேரில் சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் வாசலில் இருக்கிறார் என்று தெரிந்து இறப்புக்கு முதல் நாள் எப்படியாவது பார்த்துவிடலாம் என்று கடும் முயற்சி செய்த சினிமாவின் மூத்த நிருபர்களுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை..!




அவரது இறுதிக் காலத்திலாவது அவருடன் பணியாற்றியவர்களை பார்க்க அனுமதித்திருந்தால் அவர் கொஞ்சமாவது மனம் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.. கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் என்ற நிலையில் 5 ஆண்டு காலமாக இருந்தவரை கடைசியில் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்பது கொடூரமான விஷயம்..!

அவருடைய இறப்பைக் கேள்விப்பட்டு வேகமாக விரைந்தோடிய சினிமா பத்திரிகையாளர்களுக்கு முதலிலேயே அனுமதி மறுக்கப்பட்டு, “வீட்டில் கரண்ட் இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று பொய் சொல்லி வாசலிலேயே நிறுத்தியிருக்கிறார்கள்..! பின்பு ஒரு மணி நேரம் கழித்துதான் பத்திரிகையாளர்களையே அனுமதித்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்..! சுஜாதாவின் நெஞ்சார்ந்த அன்புக்கும், பண்புக்கும் முதல் பாத்திரமான சினிமா பத்திரிகையாளர்களின் நெஞ்சத்தை கீறியிருக்கிறது இந்தச் சம்பவம்.. ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை..!

ஒரு முறை டயலாக்கை வாசித்துக் காண்பித்துவிட்டாலே போதும்.. அதனை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன், மிகச் சரியான டைமிங்கில் கதாபாத்திரங்களை நோக்கி கை காட்டிப் பேசும்  வித்தைக்காரரான சுஜாதாவுக்கு தனது திரையுலக வாழ்க்கையை தமிழ்த் திரையுலகத்தில் மிகச் சரியான விதத்தில் பதிந்துவைக்க முடியாமல் போனது நமது துரதிருஷ்டம்தான்..!




1979-ல் நூல்வேலியில் நடித்த பின்பு தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரத்தை பல ஆண்டுகளாக சந்திக்கக்கூட விரும்பாமல் ஒதுங்கியே இருந்ததன் காரணம்தான் என்ன என்று தெரியவில்லை..! பாவம் கே.பி.க்கும் இது தெரியவில்லை..! இறுதியில் இந்தக் கோலத்தில்தான் இவரை நான் பார்க்க வேண்டுமா என்கிற தனது ஆதங்கத்தை அவரது சிஷ்யப்பிள்ளை கமலஹாசனுடன் அந்த வீட்டிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கே.பி..!

எனக்கு தமிழ்த் திரையுலகம் மீது ஒரு பிடிப்பையும், ஆர்வத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்திய கேரக்டர் அவள் ஒரு தொடர்கதையின் நாயகியான கவிதாதான். இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா பார்த்திருந்த அம்மாக்கள், அக்காக்களுக்கு ஆதர்ச நாயகி கவிதாதான்.. யாரிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்..!

கே.பி.யை பல்வேறு சந்திப்புகளிலும், பேட்டிகளிலும் அனைத்து பத்திரிகையாளர்களும் கேட்கின்ற கேள்விகளில், “அதுக்குப் பின்னாடி அந்தக் கவிதா என்ன ஸார் ஆனாங்க..? ஏன் அப்படியே அவங்களை நிறுத்திட்டீங்க..? அடுத்த பாகம் வருமா..?” என்ற கேள்வி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்..!

இன்றைக்கும் அதே கேள்விதான் எனக்குள்ளும் தோன்றுகிறது. அந்தக் கவிதா நிஜத்திலும் ஏன் இப்படியிருந்தார்..? ஏன் இப்படியே மறைந்தார்..? யார் சொல்வது..?

தகவல்கள மற்றும் புகைப்படங்கள் : பல்வேறு இணையத்தளங்கள்