தமிழென்ன..? சிங்களமென்ன..?

15-10-2007

AGANTHUKAYA (OUTCAST)

சிங்களத் திரைப்பட விமர்சனம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எந்த நாடாக இருந்தாலென்ன..?

எந்த மொழியாக இருந்தாலென்ன..?

எந்த இனமாக இருந்தாலென்ன..?

கலைஞர்கள் மட்டும் ஒரே ஜாதிதான்..

மக்களை மகிழ்விப்பதற்கு மட்டுமே கூத்தாடிகளாக தொன்மையான காலத்திலிருந்து உலகக் களத்தில் நிற்கும் கலைஞர்கள், இன்றைக்கு சமூகத்திற்கு ஒரு மருந்தாகவும், விழிப்புணர்வாகவும் மாறிக் கொண்டே செல்கிறார்கள்.

ஜனநாயகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் செய்கின்ற கேலிக்கூத்துக்களை மக்களிடம் அம்பலமாக்குவதில் ஊடகத் துறையில் இந்தக் கலைஞர்களே முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தொகை குறைவாக இருந்தாலும் இக்கலைஞர்களின் வீச்சு அளப்பரியது.. நாடு விட்டு நாடு.. அல்ல கண்டம் விட்டு கண்டம் தவ்வக்கூடிய ஏவுகணைகள் போன்றது இக்கலைஞர்களின் வீரிய சக்தி.

தமிழ் தவிர மற்ற மொழிப் படங்களில் கிட்டத்தட்ட நம் ஊர் வாசனையோடு பார்ப்பதற்கு ஒரு ஆவலையும் தூண்டுவதைப் போல் இருப்பவை மலையாள மொழிப் படங்களும், சிங்கள மொழித் திரைப்படங்களும்தான்.

மலையாளத் திரைப்படங்களுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்திழுப்பது சிங்கள மொழித் திரைப்படங்கள்தான்.. வேறு வேறு நாடாக இருந்தாலும், உணவு, உடை, பழக்கவழக்கங்களில் கிட்டத்தட்ட நம்மைத் தொட்ட கதை, விட்ட கதையாக வியாபித்திருப்பது அவர்களுடைய வாழ்க்கை களம்.

எம்மைப் போலவே சென்டிமெண்ட், குடும்பம், காதல் என்று சில படங்கள் இருந்தாலும் பெரும்பாலான படங்கள் யதார்த்தைத் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் அமைந்துவிடுகின்றன.

அப்படி என் நெஞ்சைத் தொட்ட ஒரு சிங்களத் திரைப்படத்தைப் பற்றி இந்தப்(http://truetamilans.blogspot.com/2007/08/blog-post.html) பதிவில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. அந்த வரிசையில் மற்றுமொரு திரைப்படம்தான் 'AGANTHUKAYA' என்கின்ற இந்த சிங்களத் திரைப்படம்.

ஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக சர்வாதிகார ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொண்டால், ஜனநாயக நாட்டில் என்ன நடக்கும் என்பதனை மிக அழகாகவும், அதே சமயம் உண்மையாகவும் சொல்லியுள்ளார் படத்தின் இயக்குநர் Vasantha Obeyesekere.

சம்பத் முனவீரா ஒரு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.. கண்டிப்பு மிகுந்தவர். அதே சமயம் நேர்மையும் வாய்ந்தவர். அவருடைய மனைவி குசும் முனவீராவும் வேறொரு பள்ளியில் பாட்டு டீச்சர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள்.

நீதி, நேர்மை, நியாயம், நாணயம் என்பதையெல்லாம் சாதாரண குடிமக்களுக்கு மட்டும்தான்.. அரசாளும் ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை இந்த சாதாரண தலைமையாசிரியர் மூலமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கமே இந்த சம்பத் என்கின்ற தலைமையாசிரியரின் தற்கொலையில்தான் துவங்குகிறது.

“சாயந்தரம் சீக்கிரம் வந்து என்னை வெளில கூட்டிட்டுப் போகணும்ப்பா..” என்று பேகில் தன் புத்தகத்தை வைத்தபடி கேட்கும் மகளிடம் “அப்படியே ஆகட்டும்..” என்கிறான் சம்பத். “எந்தப் பிரச்சினையும் வேண்டாம்.. ஸ்கூலுக்கு போயிட்டு சாயந்திரம் சீக்கிரமா வீட்டுக்கு வந்திருங்க..” என்று சொல்லி தானும் ஸ்கூலுக்கு கிளம்புகிறாள் மனைவி.

இருவரையும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைக்கிறான் சம்பத். மகளோ திடீரென்று ஓடி வந்து அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். மனைவியும் திரும்பி வந்து “எதையும் மனசுல நினைச்சுக்காதீங்க.. நான் இருக்கேன்.. பார்த்துக்கலாம்..” என்று ஏதோ ஒரு தைரியம் சொல்லிவிட்டுப் போகிறாள்.

முகத்தில் எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் வாசலில் நிற்கும் ஸ்கூட்டரை எடுத்து வீட்டுக்குள் வைக்கிறான் சம்பத். வாசலின் கண்ணாடிக் கதவுகளை மெதுவாக மூடுகிறான்.

அவ்வளவுதான்.. இறுக மூடிய மேகக்கூட்டத்தின் அரவணைப்பில், இயற்கை எழில் கொஞ்சும் அந்த வீட்டின் முன்புறத்தை இறுக்கமான குளோஸ்அப்பில் காட்டுவதோடு ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறார் இயக்குநர்.

அடுத்த காட்சியில் கல்வித்துறை அமைச்சர் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இப்படி கேட்கிறார், “சம்பத் ஏன் தற்கொலை செய்து கொண்டான்..?” என்று..

இப்போது ஆரம்பிக்கின்ற திரைப்படம் இறந்து போன சம்பத்தின் உடல் வீட்டில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலியில் கரைந்து கொண்டிருக்க.. இடையிடையே அவனது தற்கொலைக்கு முன்புவரையில் நடந்தவைகள் ஒன்றன் பின் ஒன்றாக காட்சிக்கு காட்சி கதையின் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டே செல்வது சிறப்பானதாக இருந்தது.

அமைச்சரிடம், “சம்பத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த போக வேண்டாம். அங்கே மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள்” என்று கைத்தடிகள் சிலர் சொல்வதிலேயே அத்திரைப்படம் அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களுக்குமான போரைக் குறித்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.


‘பள்ளி ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். மது, சிகரெட் பழக்கத்தை அடியோடு மாணவர்களுக்கே தெரியாத அளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்’ என்று ஆசிரியர்களுக்கும் அட்வைஸ் செய்கிறார் சம்பத்.

ஆனால், அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே “வந்துட்டான்யா புத்தன்.. எங்கிட்டிருந்துதான் இப்படி கூட்டியார்றானுகளோ..” என்று சொல்லியபடியே ஒரு புவியியல் ஆசிரியர் சிகரெட்டை பற்ற வைத்தபடியே பள்ளிக்குள் உலாத்துகிறார். ஒரு விஷயம் தவறு என்றால் அதை சரி என்று சொல்பவனும் இருக்கத்தானே செய்வான்..

அமைச்சருக்கும், சம்பத்திற்கும் முதல் பிரச்சினை அரசியல் பின்னணியுடன் துவங்குகிறது. 10 மில்லியன் நன்கொடைத் தொகையுடன் அப்பள்ளிக்கு புது பில்டிங் கட்டுவதற்கான ஆணை அரசிடமிருந்து வெளியாகிறது. அந்த கான்ட்ராக்ட்டை தனக்கு நெருக்கமான கட்சிக்காரர் ஒருவருக்குக் கொடுக்கும்படி அமைச்சர் ‘அன்பாகவே’ சொல்கிறார். “அதற்கென செலக்ஷன் கமிட்டி பள்ளியில் உள்ளது என்பதால் அது முடிவெடுக்கும்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார் சம்பத்.

வீட்டிலும் அதே கான்ட்ராக்டர் அமைச்சர் சொன்னதாகச் சொல்லி ‘கமிஷன் தருகிறேன்’ என்று சொல்லி ஆசை காட்டுகிறார். ‘அமைச்சருக்கும் இதில் தொடர்பு உண்டே’ என்று தன் மனைவியிடம் சொல்லிப் புலம்புகிறார் சம்பத். “உங்க ஒருத்தரால இந்த சமூகத்தைத் திருத்த முடியாது. ஊரோடு ஓத்துப் போங்கள்..” என்கிறார் மனைவி. சம்பத் தெளிவாகவே சொல்கிறார் “முடியாது” என்று.

செலக்ஷன் கமிட்டி, அமைச்சர் சிபாரிசு செய்த கான்ட்ராக்டரை நிராகரித்து வேறு ஒருவருக்கு பணியினைத் தருகிறது. அமைச்சர் கூப்பிட்டனுப்புகிறார். “என் ஆளுக்கு அந்த வேலையைத் தரலைன்னா நாளைக்கு எவன்யா எனக்கு அங்க ஆதரவா இருப்பான்..? யார் எனக்கு நாளைக்கு ஓட்டுப் போடுவா.. நீ என்னை ரொம்ப அவமானப்படுத்திட்ட..” என்று கொந்தளிக்கிறார்.

சம்பத் அமைச்சரை எதிர்த்துப் பேச தயங்குகிறார். ஏற்கெனவே நான்கு டிரான்ஸ்பர்களை சந்தித்து அல்லல்பட்ட அனுபவத்தால் பக்குவத்துடன் பேசுகிறார். “அது ஸ்கூல் செலக்ஷன் கமிட்டி செய்த செயல் ஸார்.. நான் ஒருவனே முடிவு எடுத்ததல்ல..” என்கிறார். அமைச்சரைவிட கைத்தடிகளின் கோபம்தான் உச்சத்தில் இருக்கிறது.

விஷயம் வெளியே தெரிந்தால் பதவிக்கு ஆபத்து என்பதால் அப்போதைக்கு அதை கை விடுகிறார் அமைச்சர். ஆனாலும் அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதையெல்லாம் அடுத்தடுத்து உணர்கிறார் சம்பத்.

பள்ளியில் அமைச்சரின் ஆதரவாளர்களான ஆசிரியர்கள் சம்பத்தை மதிக்காமல் பேசவும், நடக்கவும் துவங்குகிறார்கள். அதில் ஒரு ஆசிரியர் அமைச்சரின் அடியாள் வேலையுடன் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாணவர்களை சேர்க்கும் வேலையையும் சேர்த்தே செய்து கொண்டிருக்கிறார்.

கஷ்டப்பட்டு இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தில் கட்டத் துவங்கும் அவருடைய புது வீட்டை, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள்.

பள்ளியில் கட்டிக் கொண்டிருக்கும் புது பில்டிங் பற்றிய பைல் ஒரே நாளில் பள்ளியிலேயே காணாமல் போகிறது. இப்படியாகும் என்று நினைத்து ஒரு காப்பியை மறைத்து வைத்திருக்கும் சம்பத், அதை சோதனை செய்ய வரும் மேலதிகாரிகளிடம் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.

அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை துவங்குகிறது. அதற்கும் ஒரு செலக்ஷன் கமிட்டி இருக்கிறது. அந்தக் கமிட்டிக்கு அமைச்சரின் அடியாளான புவியியல் ஆசிரியர்தான் செயலாளர். தன் வீட்டிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, “உன் பையனுக்குத்தான் சீட்..” என்று கேட்காமலேயே வரம் வழங்கி அந்த வரத்திற்கு காணிக்கையாக சில ரூபாய் தாள்களை கத்தையாக வாங்கி ஜோப்பியில் போட்டுக் கொள்கிறார்.

இந்த விவகாரம் சம்பத்திற்குத் தெரிய வர, அந்த புவியியல் ஆசிரியரை செயலாளர் பதவியிலிருந்து அகற்றுகிறார். கைத்தடிக்கு கோபம் கொப்பளிக்கிறது. சம்பத்திடம் வந்து நியாயம் கேட்கிறான். சம்பத் நாகரிகமாக அவனது லஞ்ச லாவண்ய பிஸினஸை குறிப்பிட்டுச் சொல்கிறார். “எனக்கும் ஒரு நேரம் வரும்..” என்று கருவிக் கொண்டே செல்கிறான் அந்த கைத்தடி.

கல்வித்துறையின் செயலாளரின் மகளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த ஊரிலேயே மிகப் பெரிய ரெளடி என்று பெயரெடுத்தவனின் மகளுக்கு சீட் கிடைக்கிறது. செயலாளர் நேரிலேயே வந்து சம்பத்தை மிரட்டுகிறார். சம்பத் எதற்கும் பயப்படவில்லை.

புவியியல் ஆசிரியரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அந்த ஆசிரியரின் குருவான அமைச்சரிடம் சொல்லிப் புலம்புகிறார்கள். தன் தொகுதி மக்களின் கண்ணீரைத் துடைக்க அமைச்சர் சம்பத்தை வரவழைக்கிறார். தன் ஆதரவாளர்களுக்கு கொடுக்காததைவிட செயலாளரின் மகளுக்குக் கொடுக்காததை அமைச்சர் விமர்சிக்கிறார்.

“லஞ்சத்தை வாங்கிட்டுப் போயிட்டு இருக்கிறதைவிட்டுட்டு நீ எதுக்கு காந்தி வேஷம் போடுறே..” என்கிறார் அமைச்சர். சம்பத் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார். “செயலாளருக்கு என்ன பதில்..” என்று கேட்கிறார் அமைச்சர். “கல்வி அமைச்சரவை சிபாரிசு கடிதம் கொடுத்தால் சீட் தருகிறேன்..” என்கிறார் சம்பத். இதுவே அமைச்சருக்கு மிகப் பெரிய அவமானமாகப் போகிறது.

அமைச்சரின் நெற்றிக்கண் திறக்கிறது.. ஏவுகணைகளாக உத்தரவு பறக்க.. ஒரு உத்தரவின்படி மறுநாள் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும்போது ஒரு வேன் அவரை இடிப்பதைப் போல் இடித்து பயத்தை உண்டு பண்ணுகிறது.

அடுத்த நாள் முதல் தன் மனைவி, மகளை தனியே வேனில் செல்லும்படி பணிக்கிறார் சம்பத். மனைவிக்கு பயம் கொள்ளுகிறது. கணவனுக்கு அட்வைஸ் செய்கிறாள். “நமக்கு குடும்பம்னு ஒண்ணு இருக்கு..” என்கிறாள். சம்பத் காந்தீயத்தில் மூழ்கிவிட்டான். இனி முத்தெடுக்காமல் வெளியில் வர மாட்டான் என்பது தெரிகிறது மனைவிக்கு.

மறுநாளை சம்பத்தை அமைச்சரின் அடியாட்கள் போட்டுத் தாக்குகிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் சம்பத் அசராமல் இருக்கிறான். “எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வேன்..” என்கிறான். அவனுக்காக பள்ளி மாணவ, மாணவிகள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

பள்ளியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடக்கிறது.. ஆசிரியர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுவிடுகிறது. விஷயம் அமைச்சருக்குப் போக.. பள்ளியை தற்போதைக்கு இழுத்து மூடும்படி உத்தரவிடுகிறார். ஆனாலும் சம்பத்தின் அசராத போக்கு அவருக்கு கவலையைத் தருகிறது.

இடத்தைக் கொடுத்தால் மடத்தையே கேட்பவர்களாயிற்றே அரசியல்வாதிகள். அமைச்சரின் அரசியல் புத்தி யோசிக்கிறது. மும்முனைத் தாக்குதலைத் துவக்குகிறார்.

சம்பத்தின் மனைவி வேலை செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியை அவளை அழைத்து, “இது வேண்டாத வேலை.. குடும்பத்தை பார்த்துக்க..” என்று சொல்லி அட்வைஸ் செய்கிறாள்.

சம்பத் குடியிருக்கும் வீட்டு ஓனர், “ஒரு மாத கால அவகாசத்தில் வீட்டைக் காலி செய்யும்படியும் என்ன காரணம் என்று தயவு செய்து கேட்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள்..” என்று முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே சொல்கிறாள். புரிந்து கொள்கிறாள் சம்பத்தின் மனைவி.

இப்போது பாதியில் நிற்கும் புது வீட்டின் நிலைமை என்ன? இன்னொரு டிரான்ஸ்பர் கணவருக்கு வந்து விடுமோ என்று மனைவி பயந்து கொண்டிருக்க சம்பத்தின் மன அமைதிக்கு கையெறி குண்டையே வீசுகிறார் அமைச்சர் வேறு ரூபத்தில்.

அமைதியாக பள்ளி நடந்து கொண்டிருக்க தனது படை, பரிவாரங்களுடன் பள்ளிக்கு வரும் அமைச்சர் உடனடியாக அசெம்பளியைக் கூட்டும்படி சம்பத்திடம் சொல்கிறார். சம்பத்தும் அதை கடமையேற்று செய்ய..
அனைத்து மாணவ மாணவிகளும் கூடியிருக்க அமைச்சர் பேசத் துவங்குகிறார்.

“இந்தப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக கிரேடு உயர்த்தப்பட்டுள்ளது..” என்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாகிறார்கள். தொடர்ந்து தனது பேச்சில் குண்டை வீசுகிறார் அமைச்சர். “மேல்நிலைப் பள்ளியானதால், இனிமேல் சம்பத் இங்கே தலைமை ஆசிரியராக வேலை பார்க்க முடியாது. அவருக்குப் பதிலாக ஏற்கெனவே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு ஆசிரியருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு என்பதால் சம்பத் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார்” என்கிறார்.

சம்பத் சிலையாகிப் போய் நிற்கிறார். கூடவே அமைச்சரின் ஆணவம் பேசுகிறது இப்படி, “இப்போதைய தலைமை ஆசிரியர் சம்பத், இனிமேல் இதே பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியராக வேலை பார்ப்பார்.. இது அரசு முடிவு..” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

செத்த பிணம் போல் வீடு திரும்பும் சம்பத்திடம் வீட்டைக் காலி செய்யும் உத்தரவு வந்துள்ளதை மனைவி சொல்ல, வீடு இருளடைகிறது..

தொடர்ந்ததுதான் மறுநாள் காலை நிகழும் சம்பத்தின் தற்கொலை..

படத்தினை கோர்வையாக இதே போல் எடுத்திருந்தால் நிச்சயம் படம் அலுப்பைத் தந்திருக்கும். ஆனால் அதைப் போக்கும்விதத்தில் Cut to Scene-களாக இப்போது நடப்பவைகளையும், முன்பு நடந்தவைகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்ததில் படம் தொய்வில்லாமல் சென்றது.

நடிப்பைப் பொறுத்தமட்டில் இதில் ஹீரோவாக சம்பத்தாக, நடித்த சம்பத் முனீவீரா என்ற நடிகரின் முகத்தில் அப்படி ஒரு சாந்தம். அமைதியான நடிப்பு.

அதிலும் இறுதிக் காட்சியில் அவர் இதே பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சொல்லிவிட்டு அவரைப் பார்க்கின்ற போது அவர் காட்டும் முகபாவத்தை சொல்லியே ஆக வேண்டும்.

ஏதோ திரைப்படங்கள் என்றால் அநியாயம் நடக்கின்றபோது அதை ஆரவாரமாக எதிர்த்துக் கூச்சலிட்டு, கூப்பாடு போட்டால்தான் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நிற்கும் என்றில்லை. அமைதியான ஒரு பார்வையே போதும் என்பது உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

அதே போல் இதே காட்சியில் தொடர்ந்து கை தட்டிக் கொண்டே வரும் மாணவ, மாணவிகள் சம்பத் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அமைச்சர் சொன்னவுடன் புரியாத குழப்பத்தில் கை தட்டலை மறந்து நிற்கின்றபோது படம் பார்த்த எனக்குத்தான் கை தட்ட வேண்டும் போலிருந்தது. தட்டினேன்..

அமைச்சராக நடித்தவரும் அலட்டலான மனிதர். இவர் நடிப்பில் ஏற்கெனவே சில திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். போலியாகப் பேசுகிறோம், போலியாகவே பாராட்டுகிறோம்.. போலியாகவே மக்களிடம் பழகுகிறோம் என்பதை வஞ்சகமில்லாமல் நிஜமாகவே தன் நடிப்பில் காட்டியிருக்கிறார் அவர்.

சம்பத்தின் உடல் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்க பத்திரிகைகள் அவரது மரணத்தைப் பற்றி எழுதத் துவங்குகின்றன. அதைத் தடுக்கப் பார்க்கும் அமைச்சர் சில பத்திரிகைகளை மிரட்டால் அரவணைக்கிறார்.

இதைப் பார்த்து இன்னொரு பத்திரிகை ‘இந்த ஒரே காரணத்துக்காகவே இதை கவர் செய்யப் போவதாக’ தனது பத்திரிகா தர்மத்தை வெளிப்படுத்துகிறது. அதையும் கச்சிதமாக இறப்பு வீட்டில் செய்கிறார்கள்.

சம்பத்தின் மாமனார் தன் மருமகனுக்கு மாலை, மரியாதை செய்வது, அஞ்சலி செலுத்திப் பேசுவது என்பதெல்லாம் பிடிக்காது என்று சொல்லியும் எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதையே செய்வது தனி மனிதர்களைவிட அரசியல்வாதிகள் என்ற இனத்திற்கு தனியே ஒரு குணமுண்டு என்பதை உணர்த்துகிறது.

பத்திரிகைகள் மாணவ, மாணவிகளின் எதிர்ப்பை பதிவு செய்து வெளியிடுகின்றன. சம்பத்தின் வீட்டில் அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் பேட்டி காண்கிறார் நிருபர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி செலுத்த வரும்போது யாரும் கேட்காமலேயே ஒரு அஞ்சலி பேச்சை நடுவீட்டில் சம்பத்தின் உடலருகே உரையாற்றுகிறார்.

“இது நிச்சயமாக அரசியல் பாஸிஸத்தின் விளைவு. ஆளும் கட்சியின் அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாகத்தான் இந்த அப்பாவியின் மரணம் விளைந்திருக்கிறது..” என்று எதிர்க்கட்சிகளுக்கே உரித்தான குணத்தை காட்டிவிட்டுச் செல்கிறார் அதன் தலைவர்.

இதை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு “இப்போது நான் அங்கே போகவில்லையெனில் மக்கள் நிஜமாகவே நான்தான் கொலைகாரன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதால் நான் போயே ஆக வேண்டும்.” என்று சொல்லும் அமைச்சர், அஞ்சலி செலுத்த சம்பத் வீட்டிற்கு வருகிறார்.

வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகை சிரிப்புடன், எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை ஒப்புவிக்கும் நடிப்புடன் அமைச்சர் அந்த வீட்டில் நடந்து கொள்ளும்விதம் அரசியல் காமெடிக்கு ஒப்பானதாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அறைக் கதவைச் சாத்திக் கொண்டு தன் மகளுடன் அழுது கொண்டிருக்கும் சம்பத்தின் மனைவியைத் தேடி கைத்தடிகளுடன் உள்ளே வருகிறார் அமைச்சர். சம்பத்தின் மனைவி அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் வெளியே போகும்படி சொல்ல..

அமைச்சர் ஆர்வமிகுதியிலும், கேமிராமேன் அருகில் நிற்பதைப் பார்த்தும் ஓடோடிச் சென்று சம்பத்தின் மகளை வாஞ்சையுடன் அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி ஒன்றுதான் இப்படத்தின் ஒரேயரு காமெடி சீன் என்றே சொல்லலாம்.

ஒன்றன் பின் ஒன்றாக சம்பத் சந்திக்கும் சோதனைகளை இறப்பு வீட்டில் அந்த நேரம் நிகழும் சம்பவங்களுக்குப் பிறகு துண்டு, துண்டாகக் காட்டிவிட்டு கடைசியில்தான் சம்பத்தின் தற்கொலைக்குக் காரணமான அவருடைய பதவி இறப்பு நிகழ்ச்சியைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இதுதான் இத்திரைப்படத்தின் மையப்புள்ளி. அரசியல்வாதிகளும், அரசியலும் நினைத்தால் ஒரு சாதாரண குடிமகனை என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இத்திரைப்படத்தின் வசனங்கள் குறிப்பாக அமைச்சர் பேசுகின்ற வசனங்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை பிரதிபலிப்பதைப் போலத்தான் எனக்குத் தோன்றியது.

அங்கே மட்டுமல்ல.. இந்தியாவில், ஏன் தமிழ்நாட்டிற்குக்கூட அந்த வசனங்கள் கச்சிதமாகப் பொருந்தும்தான்.

“நீங்க ஒருத்தர் மட்டுமே இந்தச் சமூகத்தைத் திருத்த முடியாது..” என்கின்ற மனைவியின் எதிர்ப்புக்கு பதில் சொல்லும் சம்பத், “எனக்கும் தெரியும்.. ஆனால் அப்படி ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்ற அளவிலாவது என் பெயர் குறிக்கப்படுமே..” என்கிறான்.

ஆம்.. நிச்சயம்.. பொறிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழென்ன..? ஆங்கிலமென்ன? - ஒரு எதிர்வினை

12-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!‘தமிழ் எம்.ஏ.’ என்கின்ற ‘கற்றது தமிழ்’ திரைப்படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மீதான ஒரு நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் கூட்டியுள்ளது என்னவோ உண்மைதான்.

‘ராம்’ என்கின்ற புதிய இயக்குநர் புதிய வடிவத்தில், புதிய கோணத்தில் இத்திரைப்படத்தை நம் பார்வைக்கு வைத்துள்ளார். அத்திரைப்படம் பற்றிய எனது விமர்சனம் இங்கே(http://truetamilans.blogspot.com/2007/10/blog-post_12.html).

திரைப்படத்தில் சொல்லப்பட்ட ‘பல’ விஷயங்களில் ஒன்றான கல்லூரியில் தமிழை முதன்மைப் பாடமாகப் படித்து, ஆசிரியர் வேலை தேடியலையும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலமே இல்லை என்ற ரீதியில் ‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம் தொட்டுள்ள ஒரு விஷயம்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் பரவலாக ஒரு பேச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

“தமிழ் படித்தவர்களெல்லாம் மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய, ஆங்கிலம் படித்தவன் மாதம் 30000 ரூபாய் சம்பளம் வாங்குவது எப்பேர்ப்பட்ட வெட்கக்கேடு..” என்கிறார் இயக்குநர்.

தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை எனில் அதற்கு என்ன காரணம் என்று இயக்குநர் வேறு கோணத்தில் யோசித்திருந்தால், அவருக்கு இன்னொரு திரைப்படத்திற்கான கரு கிடைத்திருக்கும்.

தமிழ் மொழி தமிழ்நாட்டில் இன்னமும் பேச்சு மொழியாகவே இருந்து வருகிறது.. தொழில் மொழியாகவோ, பயிற்று மொழியாகவோ இன்னமும் 100 சதவிகிதம் முழு மூச்சுடன் வளரவில்லை. காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.. பொருளாதார நுகர்வால் விளைந்த ஆசை.

தமிழ் மொழியை தமிழ்நாட்டிற்குள்தான் பயன்படுத்தியாக வேண்டும் என்பதால், அதற்கேற்றவாறுதான் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

BPO என்கின்ற தொழிலையும், கம்ப்யூட்டர் என்ற தொழிலையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். உலகம் பரவிய அந்த இணைப்பு மொழி இன்றைக்கு நிலாவரையிலும் வியாபித்திருக்கின்றபோது அதன் தாக்கத்தை நாமும் உணரத்தான் வேண்டும்.
அதற்காக அவர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

பட்டப்படிப்பில் தமிழை பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு அடுத்து என்ன வேலை கிடைக்கும்..? அவர்கள் தொடர்ந்து மேலும் டீச்சர் டிரெயினிங் முடித்தால் தமிழாசிரியர் வேலை கிடைக்கலாம்.

இப்போது அரசு பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்களுக்கான சம்பளம் நியாயமானதாக உள்ளது. மற்றபடி தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் பள்ளிகளில் ஒரே ஆசிரியர்தான் அனைத்துப் பாடங்களையும் எடுக்கிறார். அந்த அளவிற்குத்தான் அவர்கள் தங்களது பள்ளியின் செலபஸை வைத்துக் கொள்கிறார்கள். சற்று பெரிய தனியார் பள்ளிகளிலும் 5000-த்திற்கு மேல் சம்பளம் இல்லை.

ஆனால் இதை கம்யூட்டர் பொறியாளர்களுடன் எதற்கு இயக்குநர் ஒப்பிட முயன்றார் என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டுமே வேறு வேறு விளைவுகளை கொண்டவை என்பதை இயக்குநர் புரிந்து கொள்ளவில்லை.

இங்கே சம்பளம் என்பதே வரவை எதிர்பொறுத்துதான்.. அரசுப் பள்ளிகள் மக்களுக்காக நடத்தப்படுபவை. அவை தொழிலகங்கள் அல்ல. கல்வி நிறுவனங்கள்.. அங்கே லாப, நஷ்டம் பார்க்கவே முடியாது..

அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களைப் போலவே சம்பளம் பெறுகிறார்கள். அதாவது அரசுப் பணியாற்றுகிறார்கள். என்ன பணி என்பதில்தான் கோட்டையில் வேலை செய்யும் ஒரு செக்ஷன் கிளார்க்கிற்கும், ஆசிரியனுக்கும் வேறுபாடுகள் எழுகின்றன.. அவ்வளவே..

ஆனால் ஒரு BPO கம்பெனியோ அல்லது சாப்ட்வேர் நிறுவனங்களோ அப்படி அல்ல.. அவை லாப நோக்கில் நடத்தப்படுபவை. அவைகள் செய்யக்கூடிய தொழில்களோ மிகப் பெரிதான பணத்தை கணக்கில் கொண்டு செய்யப்படுபவை. அப்படியாயின் அங்கே ஊழியர்களுக்கான சம்பளமும் உயர்ந்துதான் இருக்கும். இது தொழில் நியதி. இதில் நாடு, மொழி, இனம், கலாச்சாரம் என்பதற்கெல்லாம் சம்பந்தமே இல்லை.

அவர்கள் கேட்கின்ற பணத்தைக் கொடுக்கிறார்கள். கொடுப்பவர்கள் கேட்கின்ற வேலையை அவர்கள் செய்து தருகிறார்கள். அவ்வளவுதான்.. ஆனால் இணைப்பாக அவர்கள் இதற்கு பயன்படுத்தும் மொழி ஆங்கிலம். ஆகவே ஆங்கிலம் படித்தவர்களும், கணினி அறிவியல் பயின்றவர்களும் ராஜகுமாரர்களாக இருப்பது கண்கூடு.

தமிழாசிரியரால் இச்சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்ற நோக்கில் பார்த்தீர்களானால் ஒரு நல்ல மாணவனை உருவாக்க முடியும். அந்த அனைத்து மாணவர்களுமே தமிழாசிரியர்களாக சென்றடைவார்களா என்பது சந்தேகமே..

ஒரு மாணவன் தனக்கு எதில் அதிக ஆர்வமோ அதைத்தான் தேடிச் செல்கிறான். அதில் அவனை குற்றமே சொல்ல முடியாது.. இந்த ஆர்வத் தேடலில் அவனுடைய குடும்பச் சூழலும் இணைந்திருக்கும்.

தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்று சொல்லும்போதே மருத்துவம், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமே என்ற நோக்கில் இப்போதும் அது ஆய்வு நிலையில்தான் உள்ளது.

மிகப் பெரிய அளவுக்கு பணத்தைச் செலவழிக்கும் தகுதி கம்யூட்டர் சம்பந்தப்பட்டத் தொழில்களுக்குத்தான் உண்டு. இதில் தமிழுக்கு இடமே இல்லையே..
தமிழ் மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தத் தொழிலும் வடிவமைக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழிலேயே BPO கம்பெனி ஒன்றை நிறுவுவோம் என்று வைத்துக் கொள்வோம். அதை எவ்வாறு செயல்படுத்துவது..? தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாநில மக்கள் இந்தக் கம்பெனியை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள்..?

ஒரு இந்தி மட்டுமே தெரிந்தவரோ, அல்லது தெலுங்கு மட்டுமே தெரிந்தவரோ அல்லது அரைகுறையாக தமிழறிந்த ஒருவரால் இந்தக் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ன..?

முழுக்க முழுக்க தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே என் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சென்னையை மையமாகக் கொண்ட எந்த நிறுவனமும் சொல்லாது.

தமிழ் நம் மாநிலத்தைவிட்டுத் தாண்டாத சூழலில் இணைப்பு மொழியின் தேவையும் உயரத்தான் செய்யும். அந்த வகையில் ஆங்கிலத்தின் வளர்ச்சி கணக்கிலடாங்காதது..

கணினியில் இவ்வளவு வசதியும், வாய்ப்புகளும் கிடைத்தவிட்ட போதும்கூட இந்த நேரத்திலும் தமிழில் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யலாம் என்பதே தமிழறிந்த நம்மவர்களுக்கு இன்னமும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது எனில் எந்த அளவிற்கு நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண டீக்கடைகளில்கூட இப்போது வெளி மாநில கம்பெனிகளின் விளம்பரப் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அங்கே அந்த டீக்கடைக்காரர் சொல்வது, “கடை வாடகைல பாதியாவது இதுல வருதுல்ல.. நான் ஏன் விடணும்..? ‘தமிழ்..’ ‘தமிழ்’ன்னு சொன்னாப்புல இங்க எல்லாத்தையும் குறைக்கவா போறாங்க.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..” என்பார்கள்.

தொழில் வாய்ப்புகளில் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே வரக்கூடிய வாய்ப்புகள் குறைந்து அகில இந்திய அளவிலும், வெளிநாடு வழியாகவும் செல்லவும், வரவும்கூடியவைகள்தான் அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன.

இதில் முதலிடம் பிடிக்கக்கூடிய சாப்ட்வேர் துறையும், ஆயத்த ஆடை தொழிலும் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது. அங்கே தொழில் பெருக நமக்கு ஒரு இணைப்பு மொழி கண்டிப்பாக தேவைதான்..
தமிழ் மட்டுமே போதும் என்று நினைத்தால் திருப்பூர் பனியனும், டைட்டல்பார்க்கும் நமக்குத் தேவையில்லாத ஒன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் இதன் மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளில் எத்தனை, எத்தனை லட்சம் தமிழ் குடும்பங்கள் பயன் பெறுகின்றன என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகம் முழுவதையுமே ஒரே இணைப்பின் மூலம் கொண்டு வர முடிந்திருக்கிறது என்றால் அது இப்போதைக்கு கணினி அறிவியல் மூலம்தான். இதைப் பயன்படுத்தி நாம் தமிழையே தற்போது மேம்படுத்தி வருகிறோம்.. இதை யாரும் மறுக்க முடியாது..

தமிழ் வழி சார்ந்து தொழில் வாய்ப்புகள் பெருகினால் மட்டுமே தமிழுக்கென்றே தனி அடையாளமும், அதற்குரிய பொருளாதார பலன்களும் கிட்டும். அது நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு நாளும் விதவிதமான கண்டுபிடிப்புகள் உலகின் பல்வேறு மொழிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்க, நாமும் அதனுடே பயணப்பட்டுத்தான் போக வேண்டும்.

நம் மொழியே போதும்.. என் மொழியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது பூனை கண்ணை மூடிக் கொள்ளும் கதைதான்..

ஏற்றத்தாழ்வுகள் என்பது படிப்பின் மூலமும் கிடைக்கும் என்பதால்தானே மதிப்பெண்கள் என்ற ஒரு விஷயமே இருக்கிறது.. இல்லாவிடில் அனைவருமே தமிழில்தானே படிக்கிறார்கள். எதற்கு மதிப்பெண் என்று சொல்லிவிடலாமே..

தமிழாசிரியர்களுக்கான சம்பளம் குறைவு என்பதைப் போல் பல தனியார் பள்ளிகளிலும் மற்றப் பிரிவு ஆசிரியர்களுக்கும் சம்பளம் குறைவுதான்.. தமிழுக்கு மட்டுமே அல்ல. அதை இயக்குநர் சொல்ல மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

அதிலும் தமிழாசிரியராகப் படித்தவர்களுக்காவது தமிழைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு தளங்கள் காத்திருக்கின்றன. ஆனால் வரலாறு, புவியியல் படித்த ஆசிரியப் பயிற்சியாளர்களைக் கேட்டுப் பாருங்கள். தெரியும் அவர்களது சோகக் கதை..

அதைப் படமெடுக்க இன்னொரு இயக்குநர் யாராவது ஒருவர் முன் வருவார் என்று நினைக்கிறேன். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

கற்றது தமிழ்! திரை விமர்சனம்

12-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரபாகரன் என்ற ஒரு இளைஞனுக்கு இளம் வயதில் ஏற்படுகின்ற சோதனைகள் அவனை எப்படியெல்லாம் வாழ்க்கையின் ஓரத்திற்குக் கொண்டு சென்றன என்பதை சொல்ல வந்த இயக்குநர் தனது முதல் திரைப்படம் என்கின்ற பய உணர்விலும், மாஸ் நடிகர் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறோமே என்கின்ற பயத்திலும் மனம் பிறழ்ந்த நோயாளி ஒருவரின் கதையாக மாற்றி ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்க மாட்டாத பின்னவீனத்துவ திரைப்படமாக மாற்றிக் காண்பித்திருக்கிறார். ஆனாலும்..

முதலில் தற்கொலை செய்யப் போகும் பிரபாகர் என்ற ஹீரோவைக் காட்டுவதிலிருந்து துவங்கும் கதையின் போக்கு பின்னவீனத்தனமான மாடலில் காட்சிகளை மாற்றிப் போட்டதில் ஏற்பட்ட குழப்பம்தான் படம் பற்றிய இன்றைய நிலைமைக்குக் காரணமாகிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனாலும்..

பள்ளிக்கூட வகுப்பறையில் மானம் பற்றிய வள்ளுவரின் குறளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அன்றைய தினமே ஒரு அவமானத்தைச் சந்திக்க நேரிடுகிறது பிரபாகரனுக்கு.

தமிழாசிரியர் என்பதற்காக அந்த இன்ஸ்பெக்டர் பொதுவிடத்தில் சிகரெட் பிடித்த ஹீரோ பிரபாகரனை ஸ்டேஷனுக்கு கொண்டு வரவில்லை. தனக்கு ஒரு நொடியில் ஏற்பட்ட ஒரு அவமானத்தைத் துடைக்க வேண்டி ஒரு அப்பாவியை வதைக்க முற்படுகிறார். அதற்குத் தோதாக கையில் சிக்கும் பிரபாகரன் ஜட்டியுடன் லாக்கப்பில் அமர வைக்கப்படுகிறார்.

ஏற்பட்ட இந்த அவமானத்தால் தற்கொலை முடிவுக்குச் செல்கிறார். அங்கேயிருந்து காப்பாற்றப்பட்டு காவல்துறையினரால் கஞ்சா கேஸ் போட்டு பத்து வருஷம் உள்ளே வைக்க முயற்சிக்கும் கடமை தவறாத நேர்மையான முயற்சியில், தப்பித்து ஓடுபவர் போகின்ற வழியில் ஏதோ குருவிகளைச் சுடுவதைப் போல் தனது மனம் பிறழ்ந்த நோயால் 22 கொலைகளைச் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.

தனது பால்யகால காதலியைத் தேடிச் சென்று பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து, மீண்டும் ஒரு பிரார்த்தல் வீட்டில் அவளைக் கண்டெடுத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

‘அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்பதற்கேற்ப அவரைத் தேடி போலீஸ் வரும்போது தனது காதலியுடனே என்றோ ஒரு நாள் தன் ஆசைக்குரிய நாய்க்குட்டி தனது ஆயுளை எதிர்வரும் ரயிலில் மோதி முடித்துக் கொண்டதைப் போல் தங்கள் வாழ்வையும் முடித்துக் கொள்ள ஓடுவதோடு கற்றது தமிழ் முடிகிறது..

ஜீவாவின் நடிப்பைப் பொறுத்தமட்டில் இத்திரைப்படம் வெளிக்கொணர்ந்திருக்கும் அவருடைய புதிய தேடல் முயற்சிகளை மென்மேலும் தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.. அருமையான நடிப்பு. அவருக்குள் இருப்பதை, இருந்ததை வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குநரைப் பாராட்டியே தீர வேண்டும்.

குறிப்பாக, அந்த மருத்தவரை கொலை செய்வதற்கு முன் அவரிடம் பேசியே படபடக்க வைக்கும் இடத்தில் ஜீவாவின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இன்னொன்று இரவில் மதுவருந்திவிட்டு காரில் வரும் BPO Staff ஒருவரைப் புரட்டியெடுக்கும் காட்சியில் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நடத்தையை ஒத்திருக்கிறது அவருடைய பாடி லாங்குவேஜ். மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார் ஜீவா என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயம்.. அதென்ன கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் அனைவரையும் 'தொடை நடுங்கி பயில்வான்'களாகவே நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..? ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. இதிலும் அப்படித்தான்.. அந்த BPO ஊழியர் அநியாயத்திற்குப் பயப்படுவதைப் போல் காட்டியிருப்பது மிகைப்படுத்தப்பட்டச் செயல் என்று நினைக்கிறேன். இன்னொன்று, இத்திரைப்படத்தின் இயக்குநருக்கு நம் வலைத்தளத்தில் இருக்கும் 'வீராதிவீர', 'சூராதிசூர', 'சூரக்கோட்டை சிங்கக்குட்டி'களாக இருக்கும் கம்ப்யூட்டர் பொறியாளர்களைப் பற்றித் தெரியாது போலிருக்கிறது.. தெரிந்திருந்தால் இப்படி எடுத்திருக்க மாட்டாரோ, என்னமோ..? ஆனாலும்..

சின்ன வயது ஹீரோவாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சிறுவனும், சிறுமியும் மிகப் பொருத்தம்.. அதிலும் வாலிப வயது ஜீவாவைவிட அந்தச் சின்னப் பையன் “நிசமாவே சொல்றியா” என்ற கேள்விக்கு செய்யும் தலையசைப்பை அருமை என்றே சொல்லலாம்.


சிறு வயசு ஆனந்தியும், பிரபாகரும் செல்லும் அந்த மலை உச்சி காட்சியின் பிரமிப்பில் கேமிரா சொக்கத்தான் வைத்துவிட்டது. அவ்வளவு அழகான லொகேஷன். கூடவே அந்தச் சிறுவன் சொல்லும் அழகழகான பொய்கள்..
இப்படி காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக யுவான் ஷ¤வாங்கிடம் சொல்லச் சொல்ல நமக்குக் கொடுக்கும் விதம் இங்கே தமிழகத்தில் புதுசு என்று நினைக்கிறேன்.

திரையுலக வரலாற்றிலேயே ஒரு ஹீரோயின் அழுதபடியே அறிமுகமாவது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு வரும் குளோஸ்அப் காட்சியில் ஹீரோயினின் நடிப்பில் புதுமுகம் என்பதே தெரியவில்லை..

இசையமைப்பும், ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இயக்குநருடன் ஒத்துழைத்துள்ளன..

யுவான் சுவாங்கிடம் கதையைச் சொல்லும்போது அவ்வப்போது கேமிராவின் கோணத்தை மாற்றி அந்த விசுக்கென்ற ஒலியமைப்பில் காட்சிகளைத் துவக்குகின்ற விஷயங்கள் இயக்குநர் விஷயமுள்ளவர் என்பதை உணர்த்துகிறது. காட்சிகளின் அழுத்தம் இங்கேதான் இருக்கிறது...

தமிழாசிரியராக வரும் அழகம்பெருமாளின் காட்சிகள் குறைவு என்றாலும் அழுத்தமும் குறைவு என்றாலும் நடிப்பு மிகைப்படுத்தப்படாதவை என்றே சொல்லலாம்..

ஆனால்..

திடீர் திடீரென்று மாறுகின்ற காட்சிகளாலும், கேரக்டர்களின் தொடர்பில்லாத முடிவுகளாலும் கதையின் போக்கு எதை நோக்கிச் செல்கிறது என்பதே புரியாமல் போய்விட்டது.

முதல் குழப்பம் முதல் சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு கிடைத்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் பிரபாகர் போலீஸாரிடம் அடிபடுவது சிகரெட் பிடித்ததனால் கொண்டு வரப்பட்ட காட்சிக்காகவா.. அல்லது தற்கொலைக்கு முயன்று பிடிபட்டதனால் ஏற்பட்ட விளைவா என்பதை வசனத்தில் ஒரு வரியில் சொல்லி முடித்துவிட்டார் இயக்குநர். ஆனாலும்..

தொடர்ந்து வரும் காட்சிகளை கங்காரு ஸ்டைலில் தவ்வ வைப்பதற்காக வசனங்களின் மூலம் கதையை நகர்த்தும் யுக்தியை இயக்குநர் தேர்ந்தெடுத்தது சரிதான் என்றாலும், இன்னமும் அலுமினிய தகரடப்பா கதவுகளும், மக்கர் செய்யும் ஸ்பீக்கர்களையும் கொண்ட இன்றைய சராசரி தமிழகச் சினிமாத் தியேட்டர்களில் இந்த வசனங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களின் காதுகளை எட்டும் என்பது இயக்குநருக்குத் தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம். ஆனாலும்..

வீட்டில் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் ஹீரோயினிடம் பிரபாகர் “நான் இருக்கிறேனே..” என்றவுடன் “நிசமாவா சொல்றே..” என்று உடனுக்குடன் நிஜ உலகிற்கு மாறுகின்றவிதம் அதுவரையில் கேரக்டரோடு ஒன்றிப் போயிருந்த ரசிகர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போல் இருந்தது. ஆனாலும்..

இதே போல், ஆனந்தியைத் தேடிக் கண்டுபிடித்து பேசிவிட்டு விடைபெறும்போது “எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிரும்.. அப்புறம் வந்து உன்னையும், அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்..” என்று பிரபாகர் சொல்லும்போது ஆனந்தி கேட்கும் “நிசமாவா சொல்ற..” என்பதிலும் நாடகத்தனமாகிவிட்டது. ஆனாலும்..

பிரார்த்தல் வீட்டில் பிரபாகர் தன்னோடு வரும்படி அழைக்கும்போது ஆனந்தி இதே போன்று சொல்லும்போதும் இது தொடர்கதையான ஒன்றாகி சப்பென்றானது. ஆனாலும்..

தமிழ் படிப்பதற்கான காரணமாக பிரபாகரன் சொல்வதில் அத்தனை வலு இல்லை என்பது உண்மை. அதனால்தான் இயக்குநரால் தமிழ் வாத்தியாரால் தமிழ்ச் சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என்று நிதர்சனமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும்..

தமிழாசிரியர் மீதிருந்த பாசத்தால் மட்டுமே தமிழ் படிக்க விரும்புவதாகச் சொல்லும் பிரபாகர் பின்பு ஏன் தமிழுக்கும், ஆங்கிலத்திற்குமிடையே பொருளாதார அளவுகோல் எடுத்தார் என்பதும் தெரியவில்லை.(இது பற்றி எனது தனிப்பதிவு http://truetamilans.blogspot.com/2007/10/blog-post_3711.html) ஆனாலும்..

கம்ப்யூட்டர் பொறியாளரான தனது முன்னாள் ஹாஸ்டல் நண்பனைத் தேடி அவனது அலுவலகம் செல்லும் பிரபாகர் அங்கேயே தனது கிறுக்குத்தனமான நடவடிக்கைகளைத் துவக்க. அவருடைய மனப்பிறழ்வு நோய் எங்கே, எதனால் துவங்கியது என்பதே புரியாமல் போய் அவர் மீதான அனுதாபம் வராமல் குழப்பம்தான் வந்தது. ஆனாலும்..

BPO ஊழியனைத் தாக்கும்போது பிரபாகர் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்துமே தமிழ், ஆங்கிலம் என்ற ரீதியிலேயே போய்விட இப்போது மனப்பிறழ்வு இந்த சம்பள வித்தியாசத்தால் விளைந்ததா அல்லது போலீஸ் ஸ்டேஷனில் அவர் பட்ட அவமானத்தினாலா என்பதும் தெரியாமல் அந்த இடத்தில் தியேட்டரில் பல இடங்களில் விசிலடிச்சான் குஞ்சுகளின் கை தட்டலை மட்டும் அள்ளிக் கொண்டுள்ளார் பிரபாகரான ஜீவா.. ஆனாலும்...

பிரபாகர் இரவில் தனியே நடந்து செல்லும்போது ‘பிரார்த்தல் வீடு.. அலறல் சப்தம்.. ஜீவா உள்ளே சென்று ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது. அந்தப் பெண்ணே அவருடைய ஆனந்தியாக இருப்பது’ என்பதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட காட்சியமைப்புகளைக் கொண்டு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.. ஆனாலும்..

இடையிடையே வந்த டாக்குமெண்ட்ரித்தனமான பேட்டிகள், பேச்சுகளும் சற்று ஆயாசத்தைத் தருகின்றன. ஆனாலும்..

இயக்குநருக்கு தமிழ் மொழியின் மீதிருந்த ஆர்வம் படத்தில் பயன்படுத்தியிருந்த பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மூலம் தெரிய வருகிறது என்றாலும், விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டம், கூட்டமாக ஓடி வந்தால்தான் கல்லா பெட்டி நிறையும் என்பதையும் கொஞ்சம் மனதில் வைத்திருந்திருக்கலாம்..

ஆனாலும்..

ஒரு ஊர்..

ஒரு வில்லன்..

ஒரு கோவில்..

அடியாட்கள்..

‘எத்தனை பேர்..?’
‘ஒருத்தன்தான்..’
என்ற எதிர்பார்த்த டயலாக்குகள்..

ரோட்டோரம் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஒரு பெண்ணைப் பார்த்த இரண்டாவது நிமிடமே சுவிஸ்லார்ந்து சென்று டூயட் பாடுவது..

பாடல் காட்சிகள் என்ற போர்வையில் குனிய வைத்து, நிமிர வைத்து பெண்களின் அங்கங்களை அப்பட்டமாகக் காட்டும் புண்ணியக் காட்சிகள்..

விட்டால் கழன்று விழுந்தாலும் விழுந்துவிடும் போன்ற உடையணிந்து தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்கும் ஹீரோயினின் ஆட்டம்..

இடைவேளையில் சாப்பிட்ட தின்பண்டம் செரிக்க விசிலடிச்சான் குஞ்சுகளை ஆர்ப்பரிக்க வைக்க ஒரு குத்தாட்டம் என்ற போதை வஸ்து..

70 கிலோ எடையுள்ள பத்து பேரை 50 கிலோ எடையுள்ள ஹீரோ பறந்து பறந்து தாக்கி, கொஞ்ச நஞ்சமிருக்கும் காதையும் கிழிக்கும் சண்டைக் காட்சிகள்..

ஒரே ஒரு சென்டிமெண்ட்டல் சீன் வைத்து ரசிகர்களை சீட்டிலேயே உட்கார வைத்துவிடலாம் என்ற மென்ட்டல் நினைப்பில் வைத்த காட்சிகள்..


இப்படி எதுவுமேயில்லாமல் பாடல்களில்கூட தமிழை உச்சஸ்தாயியில் உச்சரிக்க வைத்து குறிப்பிடும்படியாக அனைத்து நடிகர்களிடமிருந்தும் நடிப்பை வாங்கியிருக்கும் இந்த இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும்..
பாராட்டுகிறேன்..


வாழ்த்துகிறேன்..

இனியும் நல்லதொரு திரைப்படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

கிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்

08-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் என்றைக்கும் போலவே என் குடும்பத்தாருக்குத் தெரிந்தாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷல்.. காலையில் வேகவேகமாக எழுந்து ரெடியாகி சாப்பாட்டை முடித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு ரேடியோவின் அருகில் நான் உட்காரும் ‘அழகைப்’ பார்த்தவுடனேயே என் அக்கா கேட்பார், “ஓ.. இன்னிக்கு மேட்ச் இருக்கா..?” என்று.. “அப்புறம்.. டெஸ்ட் மேட்ச்சு...” என்பேன்.. அவ்வளவுதான் எனது பேச்சு.. அதற்குப் பின் மாலை 4.40 மணிக்கு மேட்ச் முடியும்வரை ரேடியோவே கதி.

நான் மட்டுமல்ல.. அன்றைக்கு இந்தியா முழுமைக்குமே இருந்த இளைய சமுதாயத்தினரை கட்டிப் போட்டிருந்தது கிரிக்கெட்.. எப்படி..?

கிரிக்கெட் கிரவுண்டின் சுற்றளவு எவ்வளவு..? பந்து எதனால் ஆனது..? பிட்ச் என்றால் என்ன? கிரிக்கெட் பேட் என்ன விலை..? அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? என்கின்ற கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாதவர்கள்கூட ரேடியோவில் தலை சாய்த்துப் படுத்துறங்கினார்கள் என்றால்... என்ன காரணம்? கிரிக்கெட்டா..? அல்லது பொழுது போகாமல் இருந்தார்களா..?

என்னைக் கேட்டால் இவை இரண்டுமில்லை.. மொழிதான் முதல் காரணம்.. என்பேன்.

ஆம்.. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளிலும், ரேடியோ கோலோச்சிக் கொண்டிருந்த கிராமப்புறங்களிலும் கிரிக்கெட் என்னும் விளையாட்டை வளர்த்தவர்கள் யாரெனில், கிரிக்கெட் வீரர்களைவிட கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையாளர்கள்தான்.

காலை 9 மணிக்கெல்லாம் ரேடியோவில் நிகழ்ச்சிகள் முடிந்து, “மீண்டும் ஒலிபரப்பு, சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பற்றிய நேரடி தமிழ் வர்ணனையோடு காலை 9.55 மணிக்குத் துவங்கும்..” என்ற அறிவிப்போடு முடிவடையும்.

இந்த 55 நிமிடத்திற்குள்தான் வீட்டினர் யாராக இருந்தாலும் என்னிடம் வேலை சொல்ல வேண்டும். அதற்கு மேல் என்றால், வீட்டில் ஒரு ‘இராமாயணம்’தான். என் தந்தையும் கொஞ்சம் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதால் அவரும் தயாராக இருப்பார்.

நேரம் நெருங்க, நெருங்க அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். கிரிக்கெட் கேட்கப் போகிறேன் என்பதைவிட, எனக்குத் தெரிந்த மொழியில் கேட்கப் போகிறேன் என்கிற சந்தோஷம்தான் அதிகம்.

மணி 9.55 மணிக்கு ஒருவித அறிமுக இசையோடு ரேடியோ தனது ஒலிபரப்பைத் துவக்கும். முதலில், “வணக்கம். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்.. நேரம் காலை 9 மணி 55 நிமிடங்கள். இப்பொழுது சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று துவங்கும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பற்றிய நேரடி ஒலிபரப்பு, இன்னும் சில நொடிகளில் சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும்..”

இந்த வரிகளைக் கேட்டதும் என்னையறியாமல் கை தட்டுவேன்.. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத மட்டற்ற ஒரு சந்தோஷம் அன்றைக்கு..

தொடர்ந்து, “நேயர்களே.. இப்பொழுது உங்களை சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செல்கின்றோம்..” என்று சென்னை வானொலி நிலையத்திலிருந்து பேசுவார்கள்..

இதுவரைதான் நான் நானாக இருப்பேன்.. இதற்குமேல் நான் பொம்மலாட்டக் கலைஞர்கள் போன்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கையில்தான்.. அவர்கள் மதியம் லன்ச் பிரேக் விடும்போதுதான் எனது கவனமும் வீட்டுப் பக்கம் திரும்பும். அதுவரையில் நான் அவர்களது அடிமைதான்.. காரணம் அவர்கள் பேசிய தமிழ்.. தமிழ்.. தமிழ்..

முதலில் கேட்பது கிரிக்கெட் ரசிகர்களின் கூச்சலும், விசில் சப்தமும்தான்.. அப்போதே என்னை யாரோ மாயக் கம்பளத்தில் வைத்து தூக்கிச் சென்று ஸ்டேடியத்தில் அமர வைத்திருப்பது போல் தோன்றும்.

“வணக்கம் நேயர்களே.. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலிருந்து கூத்தபிரான் பேசுகிறேன்..” என்று முதல் குரல் ஒலிக்கும்.. அடுத்து அவர் என்ன பேசுவார் என்பதை நானே முடிவு செய்து ரேடியோ குரலுக்கு ஊடாக பேசுவேன்.

“இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நொடிகளில் துவங்க இருக்கிறது.. ‘பூவா’, ‘தலையா’ போட்டுப் பார்த்ததில் இங்கிலாந்து அணி டாஸ் ஜெயித்து, பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.. முதலில் இரு அணியிலும் உள்ள வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்..” என்று சொல்லி இரு அணி வீரர்களின் பெயர்களையும் சொல்வார்.

அநேகமாக இந்திய அணி நான் ரேடியோவில் தமிழ் வர்ணனை கேட்கத் துவங்கிய காலக்கட்டத்தில் இப்படித்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

சுனில் மனோகர் கவாஸ்கர், அன்ஷ¤மன் கெய்க்வாட், திலீப் வெங்க்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பாட்டீல், மொஹீந்தர் அமர்நாத், கபில்தேவ், கிர்மானி, யஷ்பால் சர்மா, ரோஜர் பின்னி, திலீப் தோஷி, கார்சன் காவ்ரி” என்று இருக்கும்.(என் நினைவில் இருக்கும்வரையிலும் எழுதியிருக்கிறேன்)

“வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளிக்கிறது.. போதுமான அளவு வெளிச்சம் மைதானத்தில் பரவியுள்ளது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது..” என்று கூத்தபிரான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ரசிகர்களின் கை தட்டல் ஓசை பலமாகக் கேட்கத் துவங்க.. முதல் பந்தை வீச கபில்தேவ் தயாராகிவிட்டார் என்பதை நான் புரிந்து கொள்வேன்.

“இதோ இந்தப் போட்டியின் முதல் பந்தை வீசுவதற்காக ஆயத்தமாகிறார் ஹரியானா சிங்கம் கபில்தேவ்.. ஆஜானுபாகுவான தோற்றம்.. நெடு நெடு என்ற உயரம்.. இதோ வாலாஜா சாலை முனையிலிருந்து தனது ஓட்டத்தைத் துவக்குகிறார் கபில்தேவ்.. குதிரையின் ஓட்டத்தைப் போல், படிப்படியாக, சீரான வேகம் பெற்று, வலக்கை விக்கெட்டின் மேல் வர பந்தை வீசுகிறார். பந்து off stemp-க்கு சற்று வெளியே விழுந்து செல்ல இயான் போத்தம்(என்று நினைத்துக் கொள்ளுங்கள்) அதை ஆடாமல் அப்படியே விட்டு விடுகிறார். ரன் எடுக்கும் வாய்ப்பு இல்லை...” என்று முதல் பந்திற்கான கமெண்ட்ரி முடிவடையும்.

நான் அப்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் என்பதனால் இந்த வார்த்தைப் பிரயோகங்கள் என்னைக் கட்டிப் போட்டிருந்தன. இதில் சொல்லப்பட்ட “ஆஜானுபாகுவான தோற்றம், நெடு நெடு என்ற உயரம்..” போன்ற வரிகள் ஒரு புதிய தமிழை எனக்கு அப்பொழுதே கற்றுக் கொடுத்தன.

கபில்தேவை புகைப்படத்தில் பார்த்திருப்பதினால் ‘குண்டா, உசரமா இருந்தா இப்படிச் சொல்வாங்க போலிருக்கு’ என்று நானே நினைத்துக் கொள்வேன்..

“படிப்படியாக, சீரான வேகம் பெற்று..” என்ற வரிகள் ஓடி வருவதை வர்ணித்துச் சொன்னவைகள் என்றாலும், ஒரு கவன ஈர்ப்பைச் செய்தன என்பதை மறுப்பதற்கில்லை.

“வலக்கை விக்கெட்டின் மேல் வர..” என்ற வரிகள் நிரம்பவே யோசிக்க வைத்த வரிகள். இதற்கான விளக்கத்தை நான் அப்போது விளையாடி வந்த கிரிக்கெட் டீம் கேப்டனும் நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் மகனுமான ஏசு அண்ணனிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

வலது கையைத்தான் 'வலக்கை' என்றும், அம்பயர் நிற்குமிடத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டம்ப்புகளைத்தான் 'விக்கெட்டுகள்' என்றும் வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது. அதென்ன “மேல் வர..?” இதற்கும் ஒரு தனி விளக்கம் கிடைத்தது. பந்தைப் பிடித்து வீசுகின்ற கை, அந்த ஸ்டம்ப்புகளின் மேலே உயரத்தில் செல்வதைத்தான் “மேல் வர..” என்று வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது.

“வாலாஜா சாலை முனை, பட்டாபிராம் கேட் முனை” என்று இரண்டு இடங்களில் இருந்துதான், பந்து வீச்சாளர்கள் பந்து வீச வருவதாக வர்ணனையாளர்கள் சொல்வார்கள்.

‘அதென்ன வாலாஜா சாலை முனை, பட்டாபிராம் கேட் முனை..?’ என்று முனைப்புடன் விசாரித்து சென்னை எந்தப் பக்கம் இருக்கிறது என்பது கூடத் தெரியாத நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் அமைந்திருக்கும் ரோட்டின் பெயர் ‘வாலாஜா ரோடு’ என்ற செய்தியை ஏதோ எனக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம்போல் சக மாணவர்களுடன் வகுப்பறையில் கிசுகிசு பாணியில் பகிர்ந்து கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டது நினைவுக்கு வந்து தொலைகிறது..

தொடர்ந்து வர்ணனையில் “இதோ அடுத்த பந்தை வீச ஓடி வருகிறார் கபில்தேவ். வீசுகிறார். அளவு குறைந்து வந்த பந்து.. போத்தம் அதை மிக அழகாக மிட்ஆன் திசையிலே திருப்பி அடித்துள்ளார்.. பந்து எல்லைக் கோட்டை நோக்கிச் செல்கிறது. மொஹீந்தர் துரத்திச் செல்கிறார். இல்லை.. அவரால் பிடிக்க முடியவில்லை.. பந்து எல்லைக் கோட்டைக் கடந்து சென்று விட்டது.. நான்கு ரன்கள்.. இங்கிலாந்தின் எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்களாக உயர்ந்துள்ளது. இயான் போத்தம்(என்று நினைத்துக் கொள்ளுங்கள்) நான்கு ரன்களுடன் களத்தில் இருக்கிறார்..” என்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் வெளியாகும் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்படும் முதல் விஷயம்.. “எப்படி இவ்ளோ ஸ்பீடா பேசுறாங்க..?” என்று..

பந்து வீச்சைத் தொடர்ந்து சென்று மட்டையில் அடி வாங்கி, அடிக்கப்பட்ட திசையில் பந்து சென்று ஓரிடத்தில் முட்டி மோதி நிற்கும்வரையிலும் இவர்கள் கொடுத்த வர்ணனை இருக்கிறதே.. அதைக் கேட்கும்போதே ஏதோ நானும் உடன் கூடவே ஓடிச் செல்வதைப் போலவே இருக்கும்.

இந்த ‘எல்லைக்கோடு’, ‘பவுண்டரி லைன்’, ‘விக்கெட் இழப்பின்றி’ என்ற புதிய தமிழ் வார்த்தைகளெல்லாம் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்திய வார்த்தைகள்.

ஒரு முறை மணீந்தர்சிங் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். யார் பந்து வீசினார்கள் என்பது தெரியாது. ஆனால் மணீந்தர்சிங் கிளீன்போல்டு ஆனார், அதை மிக அழகாகச் சொன்னார்கள் வர்ணனையில் இப்படி..

“பந்தும் வந்தது.. மணீந்தர்சிங்கும் பாதி மைதானம் இறங்கி மட்டையை வீசினார். வீசின வேகத்துடனேயே ஒரு சுற்று சுற்றித் திரும்பிப் பார்த்தார். மிடில் ஸ்டம்ப்பை காணவில்லை..” என்று.. அவுட் ஆனதையே கொஞ்சம், கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியது வர்ணனைக்கு அழகு சேர்த்த விஷயம்.

மொஹீந்தர் அமர்நாத் வீசிய இந்தப் பந்தை முடாசர் நாசர் ஏறி வந்து அடித்தார். பந்து எல்லைக் கோட்டை அல்ல.. மைதானத்தை வானத்திலேயே கடந்தது..” என்று சிக்ஸர் அடித்த அழகை, இவர்கள் சொன்ன தமிழ் இன்னும் கொஞ்சம் கூட்டியது.

சுனில் கவாஸ்கர்.. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.. இதோ தயாராக இருக்கிறார். அவருக்கு பந்து வீச வருவது மால்கம் மார்ஷல்.. இதோ வருகிறார் மார்ஷல்.. வீசுகிறார்.. out side of the off stump.. கவாஸ்கர் இதை மிக மிக அழகாக டிரைவ் செய்தார்.. கண்டிப்பாக நான்கு ரன்கள். சந்தேகமேயில்லை...” என்று பவுண்டரியை இவர்களே முடிவு செய்து சொல்லும்போது கவாஸ்கரைவிட வர்ணனையாளர்தான் எங்களுக்குப் பிடித்தமானவராக இருந்தார்.

வர்ணனையாளர்கள் யார், யார் என்று பார்த்தால் கூத்தபிரான், கணேசன், அப்துல்ஜப்பார், ராமமூர்த்தி என்ற நான்கு பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. இவர்களோடு புள்ளியியல் நிபுணராக சாரி என்பவர் இருப்பார்.

கணேசன் எதற்கெடுத்தாலும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லி நம்முடைய புள்ளியாளர் சாரி அவர்கள் இதைச் சொல்கிறார் என்று அவரையும் எங்களிடத்தில் அறிமுகப்படுத்துவார்.

கூத்தபிரானின் குரல் கொஞ்சம் வெண்கலக் குரல்.. ஒலி அதிகமாகவே இருக்கும். கணேசனின் குரல் நடுவாந்திரம்.. அதில் மென்மை கலந்திருக்கும். ஆனால் அப்துல்ஜப்பார்.. ?

“அடுத்து பட்டாபிராம் கேட் முனையிலிருந்து மால்கம் மார்ஷல் பந்து வீச வருகிறார். இங்கே வர்ணனையைத் தொடர நண்பர் அப்துல்ஜப்பார் அவர்கள் வருகிறார்.. வாருங்கள் ஜப்பார்..” என்று சொல்லி கணேசன் விலகியவுடன் “வணக்கம் நேயர்களே..” என்று ஜப்பார் ஸார் ஆரம்பித்தவுடன் என் தந்தை “டேய் சவுண்டை குறைடா..” என்பார். எனக்கு அப்போதெல்லாம் பிடிக்காத ஒரு விஷயம் ரேடியோவில் சவுண்டை குறைப்பதுதான்.. “முடியாது..” என்பேன். வீட்டினர் அனைவரும் சவுண்ட்டை “குறையேண்டா..” என்று கத்தியவுடன் வேண்டாவெறுப்பாக குறைப்பேன். அவ்வளவு உச்சஸ்தாயி சவுண்ட்.. ஆனாலும் மிக மிக கவர்ச்சியான குரல் அந்த மனிதருக்கு..

“மூன்று ஸ்லிப்கள், ஒரு கவர் பாயிண்ட், மிட் ஆன், மிட் ஆ·ப், மிட் விக்கெட், லாங் ஆன், லாங் ஆ·ப் என்ற பரந்த வியூக அமைப்பு” என்று அப்துல் ஜப்பார் அவர்கள் சொல்கின்ற அழகே தனி அழகு.

இதில் இந்த ‘பரந்த வியூக அமைப்பு’ என்கிற வார்த்தைக்கு மறுநாள் தமிழ் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

இது போன்ற தமிழ் வார்த்தைகள் அநேகம் கல்லூரி பாட நூல்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.. மிக, மிக எளிதாக இதையெல்லாம் பள்ளிச் சிறுவர்களிடம் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்கள் இந்த ஆசான்கள்தான்.

மற்ற வர்ணனையாளர்களைவிட எனக்கு ஜப்பாரையை அதிகம் பிடிக்கும். காரணம் அவரது குரல் வளம்தான்..

சில சமயங்களில் மதிய நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்குத் திரும்பிப் போகும்போது ரோட்டோர கடைகளிலும், வீடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் ரேடியோவில் கமெண்ட்ரியை நின்று, நின்று கேட்டபடியே பள்ளிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அனைவரையும்விட நிமிடத்திற்கு நிமிடம் ஸ்கோர் போர்டை சொன்னது ஜப்பார் ஸார்தான்.

இந்த நான்கு வர்ணனையாளர்களும் ஆளுக்கு 10 அல்லது 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவரவரின் நேரங்களில் தங்களுக்குத் தெரிந்த தமிழை, விளையாட்டோடு இணைத்து உணர்ச்சி ததும்ப சொன்னதுதான் இவர்களது சிறப்பு.

கவாஸ்கரோ, கபில்தேவோ அவுட்டானால் சாதாரணமாகச் சொல்ல மாட்டார்கள். “இந்தியா தனது விலை மதிக்க முடியாத விக்கெட்டை இழந்துவிட்டது” என்பார்கள். இதில்கூட ஒரு அழகுத் தமிழைப் புகுத்தி கேட்பவரை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஆற்றல் இந்த வர்ணனையாளர்களுக்கு இருந்தது.

கவாஸ்கர் எப்போதுமே காட்டடியெல்லாம் அடிக்க மாட்டார். அவருடைய ஸ்ட்ரோக்குகள் எல்லாமே அழகாக இருக்கும். இப்போது டெண்டுல்கர் விளையாடுவதைப் போல..

“ஹாட்லி வீசிய அந்தப் பந்தை மிக அழகாக, பந்து காலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதே தெரியாத அளவுக்கு மிக நுணுக்கமாக தனது கால் திசையிலே திருப்பி விட்டார் கவாஸ்கர்.. பந்து எல்லைக் கோட்டை மின்னல் வேகத்தில் கடந்தது..” என்பார்கள்.

இதிலே காலில் கட்டிக் கொள்ளும் Pad-ஐ கால்காப்பு என்றழைப்பதாக தெரிந்து கொண்டேன். இதிலே சொல்லப்படுகின்ற தமிழாலேயே, கவாஸ்கர் என்றாலே மிக அழகாக அடிப்பவர் என்று நானே நினைத்துக் கொண்டேன்.

அன்றைய காலக்கட்டத்தில் மைதானத்தில் ஜென்டில்மேன் என்றால் திலீப் வெங்ச்சர்க்காரைத்தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர் ஆர்ப்பாட்டமில்லாமல் வருவார். அதேபோல் திரும்பிச் செல்வார்.

“நான் பேசிக் கொண்டிருக்கும்போதே பந்தை வீசுகிறார் இம்ரான்கான். அளவு குறைந்து வந்த பந்து. வெங்க்ச்சர்க்காரின் கால்காப்பில் படுகிறது.. வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டுள்ளார்.. ஆம்.. வெங்க்ச்சர்க்கார் அவுட். இந்தியா தனது நான்காவது விக்கெட்டை இழக்கிறது...” என்பார்கள்..

இதில் எல்.பி.டபிள்யூ என்பதற்கான விரிவாக்கமான 'Leg Before Wicket' என்பதை கிரிக்கெட் மேட்ச் விளையாடப் போகும்போது சக வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

“இதுக்கு என்னடா அர்த்தம்..?” என்று என் அப்பா கேட்க நான் அதற்கு “Leg Before Wicket” என்று கிளாஸ் ரூமில் சொல்வதைப் போல் சத்தமாகச் சொல்ல, என் அம்மா அப்பாவிடம் பெருமையாக, “எம்புள்ளை எப்படி இங்கிலீஷ் பேசுறான் பாருங்க..” என்று சொல்லி சிரித்ததை இப்போது நினைத்தாலும் ஒரு மாதிரி வெட்கமாகத்தான் உள்ளது.

ஆனாலும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஒரு நொடி மகிழ்ச்சிக்கும் ஒரு மொழி காரணகர்த்தாவாக இருக்க முடிகிறதே என்பது, உங்களது வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்திருக்கும்.

அப்துல் காதீர் வீசிய அந்தப் பந்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் கால் காப்பில் பட்டுள்ளது. வீரர்கள் அவுட் கோருகின்றனர். ஆனால் அம்பயரோ திட்டவட்டமாக அது அவுட் இல்லை என்று தலையை அசைத்து மறுக்கிறார். இதனால் இந்திய அணிக்கு எந்த ஆபத்தும் இல்லை..” என்று சற்று டென்ஷனைக் கூட்டிச் சொல்லும்போது உட்கார்ந்து கேட்கின்ற நான் அப்படியே எழுந்து ரேடியோவின் அருகில் சென்று காதை வைப்பேன்.. அந்த அளவுக்கு வர்ணனையின்போதே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெறியாக மாற்றிய பெருமை, இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கே உண்டு.

ஒரு டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி வீரர்கள் ஒரு நாள் மேட்ச்சைப் போல் விளையாடி ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து, “யாராவது இந்திய அணி வீரர்களிடம் சென்று இன்றைக்கு நடப்பது டெஸ்ட் மேட்ச் என்று ஞாபகப்படுத்தினால் நல்லது என்றே நினைக்கிறோம்.. ஒரு நாள் போட்டியின் தாக்கம் இன்னும் நமது வீரர்களை விடவில்லை போலும்..” என்று இவர்களே இந்திய அணியின் ரசிகர்களாக மாறி எங்களைப் போன்றவர்களின் எண்ணங்களையும் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு முறை சென்னையில் ரவிசங்கர் சாஸ்திரி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு நாங்கள் ‘கட்டை மன்னன்’ என்று பெயர் வைத்திருந்தோம். அவ்வளவு ஸ்லோவாக ரன் எடுப்பார்.. அது ஒரு நாள் போட்டி. அன்றைக்குப் பார்த்து தொடர்ந்து 2 ஓவர்களில் ரவிசாஸ்திரி ரன் எடுக்காமல் ‘தடவிக்’ கொண்டிருக்க.. ரசிகர்கள் கூச்சலிடத் துவங்கினார்கள்.

அப்போது வர்ணனை செய்தவர், “ரவிசங்கர் சாஸ்திரி தனது கால் காப்பு, கை காப்பு, ஹெல்மெட் என்று அனைத்தையும் சரி செய்து கொண்டு இதோ விவியன் ரிச்சர்டின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.. ரிச்சர்டும் பந்து வீச தயாராக இருக்கிறார்.. ரசிகர்களும் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு இப்போதாவது ரவிசாஸ்திரி தனது மட்டைக்கு வேலை கொடுக்க மாட்டாரா என்ற பரிதவிப்போடு உள்ளார்கள். இதோ commentators-ஆன நாங்களும், எங்களது கமெண்ட்ரி வேலைக்கு ஒரு வாய்ப்பு வராதா என்று காத்திருக்கிறோம்..” என்று சற்று நகைச்சுவையாகச் சொன்னது இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது.

ஆட்ட நேரம் முடிந்தவுடன் அன்றைய போட்டியின் ஸ்கோர் போர்டை வாசிக்கும் அழகுக்கே தனி சல்யூட் செய்யலாம்.

கவாஸ்கர் caught சர்பிராஸ்நவாஸ் bowl இம்ரான்கான் 32. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 64..” என்று ஆரம்பித்து 10 பேர்களின் பெயர்களையும் சொல்லி முடிப்பதற்குள் நான் அதை குறித்து வைக்கத் திணறுவேன்.. ஆனால் இதில் அனைத்திலும் ஒரு அழகு இருந்தது.. வேகம் இருந்தது.. சுவை இருந்தது.

கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும், அதன் உபகரணங்களையும், கிரிக்கெட் பீல்டின் அமைப்புகளையும் அந்தச் சிறு வயதிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் இந்த பிரதிபலன் எதிர்பாராத தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்தான்.

அப்போதெல்லாம் ‘கல்லி’ எங்கே இருக்கிறது.. ‘ஸ்லிப்’ எங்கே இருக்கிறது.. ‘டீப் ஸ்கொயர் லெக்’ எங்கே இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்..? நாங்கள் விளையாடுகின்ற மேட்ச்சில்கூட நாங்க பார்த்து எங்கே ஆளை நிறுத்துகிறோமே அதுதான் ‘கல்லி’.. அதுதான் ‘ஸ்லிப்’.. அதுதான் ‘ஸில்லி பாயிண்ட்’..

இப்படி கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் எந்தப் பள்ளியிலும் சொல்லித் தராமல் நாங்களே கற்றுக் கொண்டோம் என்றால் அது இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களால்தான்.

காலம் மாறியது.. காட்சிகளும் மாறியது.. கோலங்களும் மாறின. தொலைக்காட்சிகள் வீட்டின் சமையல்கட்டுவரைக்கும் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியவுடன், ரேடியோவின் தமிழ் வர்ணனை கொஞ்சம் கொஞ்சமாக தனது முக்கியத்துவத்தை இழந்தது.

நானும் ஒரு முறை சென்னையில் நடந்த மேட்ச்சை ரேடியோ கமெண்ட்ரியையும், டிவியையும் அருகருகே வைத்து பார்த்தும், கேட்டும் கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எப்பேர்ப்பட்ட ரசிகர்கள் என்று.. எப்பேர்ப்பட்ட ஆசான்கள் என்று..

ஒவ்வொரு முறையும் பந்து பவுண்டரி லைனைக் கடக்கும்போது ரசிகர்களின் கை தட்டலுக்கு ஈடாக, இந்த வர்ணனையாளர்களும் ஒரு உற்சாகத்தை தங்களுக்குள் வரவழைத்து ரேடியோ ரசிகர்களையும் பரவசப்பட வைத்துள்ளார்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

காலம் செல்லச் செல்ல ஒதுக்கப்பட்ட ரேடியோவைப் போலவே, இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் லேட்டஸ்டாக சென்னையில் நடந்த ஒரு மேட்ச்சில் தமிழில் வர்ணனை செய்யப்படவில்லை. காரணம் கேட்டால் யாரும் பதில் சொல்ல முன் வரவில்லை.

தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் ரேடியோவில் கமெண்ட்ரியாவது கேட்டு ஆசுவாசப்படுவார்களே என்றால், இப்போது கிரிக்கெட்டிற்கு தமிழ் மொழி தேவையில்லாததாகிவிட்டது போலும்.. ஆங்கிலம், இந்தி கமெண்ட்ரி மட்டுமே.

என்னைக் கேட்டால் இந்தியாவில் எங்கே கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் அங்கே அனைத்து பிராந்திய மொழி நேரடி வர்ணனைகளும் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும். இது கிரிக்கெட்டிற்காக அல்ல.. என்னைப் போன்ற இப்போது வளர்ந்து வரக்கூடிய சிறுவர்கள் தத்தமது மொழியை இலகுவாக கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

மொழி ஒரு பிரச்சினை இல்லையெனில், எந்தவொரு விஷயத்தையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும்.

எங்கோ இங்கிலாந்தில் ஆரம்பித்து இன்றைக்கு இந்தியா முழுமைக்குமே மூணு குச்சி, ஒரு பேட், ஒரு பால் என்று வைத்து இணைக்க முடிந்ததெனில் அது மொழியால் மட்டுமே முடிந்த செயல்..

அந்த நல்லிதயம் படைத்த தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு என்னைப் போன்ற அவர்களது தயவால் வளர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’

05-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்தப் பெண்கள் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.

‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதை உலகத்திலேயே அதிகமாக நம் நாட்டுப் பெண்கள்தான், அப்படியே அட்சரப் பிசகாமல் பின்பற்றி வருகிறார்கள் போலும்.

இது இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின் சுருக்கம்.

சென்னை, பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் வசித்து வருபவர் 31 வயதான பாத்திமா சுல்தானா. இவரது கணவர் பெயர் அமீர் அலி மெகதி. இவர்களது திருமணம் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.

பாத்திமா பி.ஏ.பட்டதாரி ஆவார். அமீர் அலி மெகதி எம்.காம். பட்டப்படிப்பை முடித்து தற்போது துபாயில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் மாதம் ரூபாய் 1 லட்சம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்.

பாத்திமா தரப்பினர் திருமணத்திற்காக 50 பவுன் நகைகளை வரதட்சணையாகக் கொடுத்து, 5 லட்சம் ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நடந்துள்ளது.

திருமணம் நடந்த போது அமீர் அலி சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் 5000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்பு பாத்திமாவின் அண்ணன் 50 ஆயிரம் ரூபாய் செலவு துபாயில் அமீர் அலி மெகதிக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

வேலை கிடைத்து அமீர் துபாய் போன பிறகு மாமியார் சித்திகாவும் மாமனார் அமீர் அலி உசேனும் தன்னை சித்ரவதை செய்ததாக போலீஸில் புகார் செய்துள்ளார் பாத்திமா.

அந்தப் புகார் மனுவில், “தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்கு தனக்குத் தடை விதித்தார்கள். தனது கணவர் வருடத்திற்கு 10 நாட்கள் விடுமுறையில் சென்னை வரும்போது அவருடன் இருக்க விடுவதில்லை..” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

“மாமனார், மாமியாரை மீறி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றதைக் காரணம் காட்டி தன்னை பெற்றோர் வீட்டிற்கே அடித்து விரட்டி விட்டதாகவும், தற்போது கணவர் சென்னை வந்தபோது அவரைப் பார்க்கவே தன்னை அனுமதிக்கவில்லை” என்றும் சொல்லியுள்ளார் பாத்திமா.
“கூடுதலாக இன்னும் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் என் கணவரோடு சேர்ந்து வாழ முடியும்..” என்று தனது மாமனார், மாமியார் நிபந்தனை விதிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தனது கணவரோடு சேர்த்து வைத்து, மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து தனக்கு விடுதலை வாங்கித் தரும்படி கேட்டு போலீஸிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

மனுவை வாங்கிய போலீஸார் அமீர் அலியின் பெற்றோரையும், அவரையும் அழைத்து விசாரித்துள்ளார்கள்.

வழக்கம்போல் முதலில் கவுன்சிலிங் முறையில் ஆலோசனைகள் சொல்லியுள்ளார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அமீர் அலி மெகதி தனது மனைவி பாத்திமா தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமெனில் சில நிபந்தனைகள் உள்ளது. அதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி 20 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை தயாரித்து அளித்துள்ளார்.

அதில் சில நிபந்தனைகள் கீழே..

“1. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த மறுநிமிடம் முதல் பாத்திமா அவரது பெற்றோர்களை மறந்துவிட வேண்டும்.

2. செல்போனிலும் பாத்திமா அவரது பெற்றோர்களையோ, உறவினர்களையோ தொடர்பு கொண்டு பேசக்கூடாது.

3. நான் துபாயில் இருக்கும்போது எனது பெற்றோரின் அனுமதியின்றி பாத்திமா வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

4. அவ்வாறு வெளியில் போகும்போது மற்ற ஆண்மகன்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது.

5. நான் துபாயில் இருக்கும்போது பாத்திமா ஒழுக்கமாக நடந்து கொண்டாள் என்று எனது பெற்றோர் நற்சான்றிதழ் வழங்கினால்தான் தொடர்ந்து அவளோடு வாழ்வேன்.

6. எனது 6 வயது மகள் தற்போது கான்வென்ட் பள்ளியில் படிக்கிறாள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்வேன்.

7. நான் சென்னை வரும்போது என்னுடைய விருப்பப்படிதான் பாத்திமா உடை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். என்னுடைய விருப்பப்படிதான் அவள் சாப்பிட வேண்டும். என்னுடன் மட்டும்தான் அவள் வெளியில் வர வேண்டும். என்னோடு வரும்போது மற்ற ஆண் மகன்களை திரும்பிப் பார்க்கக் கூடாது.

8. இரவு படுக்கை அறைக்குள் என்னுடைய அனுமதி பெற்ற பின்புதான் பாத்திமா உள்ளே வர வேண்டும். அவளாக விருப்பப்பட்டு செக்ஸ் உறவுக்கு என்னை வற்புறுத்தக்கூடாது. நான் விரும்பினால் மட்டுமே அவளோடு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வேன். செக்ஸ் உறவில் என்னுடைய விருப்பப்படி பாத்திமா நடந்து கொள்ள வேண்டும்.

9. நான் எங்கு செல்கிறேன், யாரைப் பார்க்கிறேன் என்பது போன்ற கேள்விகளை பாத்திமாவோ அவரது பெற்றோர்களோ என்னிடம் கேட்கக் கூடாது.

10. பாத்திமாவை நான் வேலை பார்க்கும் துபாய் நாட்டிற்கு கண்டிப்பாக அழைத்துச் செல்ல மாட்டேன். அவள் கடைசிவரை சென்னையில்தான் வசிக்க வேண்டும்.

11. உலகத்தில் எந்த நாட்டிலும், எந்த இடத்திற்கும் எந்த பெயருடனும் தங்குவதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது..”

- இவை போன்ற 20 நிபந்தனைகள் அடங்கிய ஒரு ஒப்பந்தப் பத்திரத்தைத் தயாரித்த அமீர் அலி மெகதி அதில் தனது கையெழுத்தையும் போட்டார்.

பின்பு, “தனது மனைவியான பாத்திமாவும் இந்த ஒப்பந்தப் பத்திரத்தை ஏற்று அதன்படி நடப்பேன் என்று சம்மதித்து கையெழுத்துப் போட்டால்தான் நான் அவளுடன் குடும்பம் நடத்துவேன்..” என்று அமீர் அலி மெகதி போலீஸாரிடம் கண்டிப்போடு கூறியுள்ளார்.

இந்த நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தை பார்த்த போலீஸார் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாத்திமாவோ இதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அடுத்து, “தனது காலில் விழுந்து வணங்கி இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாகச் சொல்ல வேண்டும்..” என்று திடீர் நிபந்தனை விதித்துள்ளார் அமீர் அலி. இதையும் செவ்வனே செய்திருக்கிறார் பாத்திமா.

கடைசியாக எனது பெற்றோர் பாத்திமாவை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை அவர்களிடம் கேட்டுவிட்டு பின்பு நானும் ஒத்துக் கொள்வதாக அமீர் அலி சொல்லியுள்ளார்.

இதன் பிறகுதான் ஆன்ட்டி கிளைமாக்ஸ¤ம் நடந்தேறியுள்ளது.

இதுவரை பொறுத்தது போதும் என்றிருந்த பாத்திமா, “இனி பொறுக்க முடியாது. எனக்கு இவர் இனி வேண்டாம். நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று போலீஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்பின் வேறு வழியில்லாமல் போலீஸார் அமீர் அலி மெகதியையும், அவருடைய அம்மா சித்திகாவையும் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமீர் அலியின் அப்பா 60 வயதைத் தாண்டியவர் என்பதால்(!!!) அவர் மீது வழக்கு மட்டுமே போட்டுள்ளார்களாம்.

என்னத்த சொல்றது..?

கல்வியறிவு என்பதே வாழ்க்கையை மேம்படுத்தத்தான்.. இதில் யாருடைய படிப்பறிவு யாருக்குப் பயன்பட்டிருக்கிறது..?

படிப்பதினால் பெற்ற கல்வி வாழ்க்கைக்கு உதவாதெனில் அது என்ன வாழ்க்கை..?

எவ்வளவு படித்திருந்தாலும், என்ன படித்திருந்தாலும் அது சமூகம் உருவாக்கியுள்ள மதம், ஜாதி, மொழி, திருமணம், சடங்குகள், கட்டுப்பாடுகள் போன்ற விலங்குகளுக்குள் உட்பட்டதுதானா..?

பின்பு எதற்கு படிப்பு..? கல்வியறிவு..?

தன்னை ஒரு மனுஷியாகவே நடத்த முடியாது என்பதை நிபந்தனைகளைப் போட்டு சொல்பவனிடம் எதற்காக இந்தப் பெண் ஒத்துக் கொள்கிறாள்..?
தனது மகளுக்காகவா..? அல்லது இந்த சமூகத்தின் முன் தனியே நிற்க முடியாது என்று போதையூட்டி வரும் நமது வாழையடி வாழையான குடும்ப போதனைக்காகவா..?

இவ்வளவு படித்தவனுக்கே இப்படியெல்லாம் கவுன்சிலிங் நடத்த வேண்டியுள்ளது..

அந்தப் பெண்ணை மனைவி என்று நினைத்தானா அல்லது அடிமை என்று நினைத்தானா..?

புனிதமான குடும்ப உறவுகள் என்பதையே ஆண்டான்-அடிமை என்ற இலக்கணத்திற்குள் கொண்டு வந்து அதற்கு கொடூரமான தனது சாடிஸ்ட் மனப்பான்மையை வெளிப்படுத்தி நிபந்தனைகளை போட்டிருக்கிறானே.. இவனையெல்லாம் என்ன செய்வது..?

ரோட்டோரமாக கிடக்கும் தண்ணீர் குழாய்களை இருப்பிடமாக ஆக்கிக் கொண்டு, கிடைப்பதை குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டு, எதிர்காலம் பற்றிய கவலையில்லாமல் இன்றைய பொழுதுக்கு தன் குடும்பத்தை பட்டினி போடாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு படிப்பறிவில்லாத ஆணுக்கு முன் இந்த அமீர் அலி மெகதியை போன்ற ஜென்மங்கள் எல்லாம் வெறும் விலங்குகள்தான்..

குடியினால் 'குடி' இழந்தவர்கள்

02-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில சமயங்களில் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளைவிட அதற்கு வரும் எதிர்வினைகள்தான் அருமையாக இருக்கும்.

அதேபோன்று நான் சமீபத்தில் படித்த 'குமுதம் தீராநதி'யில், வெளி வந்திருக்கும் எதிர்வினை இது. படித்துப் பாருங்கள்.

"கடந்த தீராநதி இதழில் அ.மார்க்ஸ் அவர்கள் குடி சம்பந்தமாக எழுதியிருந்தார். 'மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு தினமும் இரண்டு பெக் விஸ்கி குடிப்பார்' என்று வேறு சொல்லியிருந்தார்.

இதைப் படித்ததும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அண்மையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், விஜயகாந்தை 'குடிகாரன்' என்று சொல்ல பதிலுக்கு 'அவர் பக்கத்திலிருந்து ஊத்திக் கொடுத்தாரா..?' என்று கேட்க, குடிமக்கள் பிரச்சினையைவிட இவர்களுக்கு குடிப் பிரச்சினை பெரியதாய் போயிருந்தது.

சமீபத்தில் ஒரு முறை கலைஞர்கூட ஜெயலலிதாவை விமர்சிக்கையில், 'நேத்து கொஞ்சம் அதிகமா போச்சு' என்று சொல்லியிருந்தார்.

'இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்' என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது.

யார் அந்தப் பிரபலமான நடிகர்? அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்த பிரபல நடிகர்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய 'சந்திரகாந்தா' படத்தில் இணை கதாநாயகனாக சினிமா உலகத்திற்குள் வந்தவர் பி.யூ.சின்னப்பா. இந்தப் படத்தில் அவரது சொந்தப் பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமி.

அடுத்து வந்த 'ராஜமோகன்', 'அனாதைப் பெண்',' ய்யாதி', 'பஞ்சாப் கேசரி', 'மாத்ருபூமி' போன்ற எல்லாப் படங்களும் ஹிட். அதனால் புதுக்கோட்டை சின்னச்சாமி, 'பி.யூ.சின்னச்சாமி' என்று பெயர் மாறுகிறது.

1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளிவந்த 'உத்தமபுத்திரன்' என்ற படம் சூப்பர் ஹிட். இதனால் சின்னப்பாவும் சூப்பர் ஹிட்டானார். சின்னப்பாவிற்கு சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்தே மதுப் பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு அவரது புகழ் வளர வளர மதுப் பழக்கமும் வளர்ந்துவிட்டது.

முடிவு, புதுக்கோட்டையில் தனது நண்பர்களுடன் 'மணமகள்' படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பி.யூ.சின்னப்பா அன்றிரவே சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று ரத்தம், ரத்தமாக வாந்தியெடுத்து மயக்கமடைந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர், கையை விரித்து விட்டார். ஆமாம், மிதமிஞ்சிய குடியால் பி.யூ.சின்னப்பா இறந்து போனார்.

இதேபோல், 1948-ல் 'குண்டூசி' என்ற இதழில் ஒரு செய்தி. 'நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருமலையில் சென்ற பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மதுவிலக்கு விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக சித்தூர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டால் இம்மாதம் 17-ம் தேதியன்று ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டார்..'

1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் ராஜரத்தினம் பிள்ளை. இதைக் கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை நேரு வாசித்தார்.

'சினிமா ராணி' என்று போற்றப்பட்ட டி.பி.இராஜலட்சுமிதான் முதன் முதலில் இயக்கிய 'மிஸ் கமலா(1936)' படத்தில் கடைசியில் வரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசித்தார். இதுதான் சினிமாவுக்கு அவர் அறிமுகமான விதம்.

பிறகு 1940-ல் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'காளமேகம்' படத்தில் டி.என்.இராஜரத்தினம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார்.

இப்படி புகழ் பெற்றிருந்த டி.என்.இராஜரத்தினம் ஒரு மணி நேரத்தில் ஒரு கேஸ் அதாவது 12 பாட்டில்கள் மதுவை அருந்தும் அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தார். 1930-லிருந்து 1950-வரை அவர் சம்பாதித்த தொகை 5 கோடி. முதலில் கார் வாங்கிய நாதஸ்வர வித்வான்.

ஆனால் மிதமிஞ்சிய குடியினால் 1956 டிசம்பர் மாதம் 12-ம் தேதி மாரடைப்பால் இறந்து போனார். தன் வாழ்நாளில் 5 கோடி சம்பாதித்த டி.என்.இராஜரத்தினம் இறந்தபோது அவரது ஈமச்சடங்கு செலவை என்.எஸ்.கிருஷ்ணன்தான் செய்தார்.
மதுவிலக்குப் பிரச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுத்த என்.எஸ்.கிருஷ்ணன், அதிக மது அருந்தி வந்ததன் காரணமாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை, குலை வீக்கம் நோயினால் 1957 ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இறந்து போனார்.

அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாப் பிரவேசம் செய்தது 1935-ம் ஆண்டு ன்றால், அதே வருடம் வெளியான 'ரத்னாவளி' படத்தின் மூலம்தான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மதுரமும் சினிமா நடிகையானார்.

'வஸந்தசேனா' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, இந்தப் படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக பீகார் சென்றபோதுதான் அங்கே டி.ஏ.மதுரத்தை என்.எஸ்.கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். கலைவாணர் இறந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த டி.ஏ.மதுரம், அவருக்கும் ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் உடல் நலிவுற்று இறந்து போனார். அவர் இறந்தது 23.05.1974-ல்.

அடுத்ததாக நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி. அன்றைய காலத்தில் புகழ் பெற்ற நாடக சபாக்களில் ஒன்றான மங்கள கான சபா பெரும் நஷ்டத்தில் யங்கி வந்தது. இதை என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபா என்று பெயர் மாற்றி கே.ஆர்.ராமசாமியிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். கே.ஆர்.இராமசாமி குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், கம்பெனி மீண்டும் அதே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நாடக சபா மூலமாகத்தான் அண்ணாவின் 'வேலைக்காரி' நாடகம் பிரபலமடைந்தது. இந்த நாடக சபாவிற்காக காஞ்சிபுரத்தில் 'திராவிட நாடு' ஏட்டை நடத்தி வந்த அண்ணாவிடம் ஒரு நாடகம் எழுதித் தருமாறு கே.ஆர்.இராமசாமி வேண்டினார். அண்ணாவைச் சந்திக்கும்போதுகூட கே.ஆர்.இராசாமி போதையிலேயே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து அண்ணாவே அப்பவே கண்டித்திருக்கிறார்.

பிறகு அண்ணா 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். கே.ஆர்.இராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் சிபாரிசில் 'சிவசக்தி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'நம் நாடு' படம்வரையிலும் நடித்துப் பெரும் புகழைப் பெற்று வந்தார். அடுத்த இரண்டு வருடத்திலேயே அதாவது 1971 செப்டம்பர் மாதத்தில் தனது அதிகப்பட்ச குடியினால் இறந்து போனார்.

சரி அடுத்த நபர் யார்..? சாவித்திரி..

தமிழில்-85, தெலுங்கில்-92, இந்தியி-3, கன்னடத்தில்-1, மலையாளத்தில்-1. இதெல்லாம் அவர் நடித்தப் படங்கள்.

'·பாரின் ஸ்காட்ச்', 'வாட் 69', 'ஜின்', 'விஸ்கி', 'ரம்', 'பிராந்தி', 'பீர்', 'சர்க்கார் சாராயம்', 'ஜிஞ்சர் பிரிஸ்'.. இதெல்லாம் அவர் குடித்து முடித்த மதுவகைகள்.

இவர் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் இரண்டாவது மனைவி. 1951-ல் நடிகையான சாவித்திரி தனது சொந்த நிறுவனமான ஸ்ரீசாவித்திரி புரொடெக்ஷன்ஸ் சார்பில் 'குழந்தை உள்ளம்' என்ற படம் எடுத்தார். ஜெமினிகணேசன் கதாநாயகன். சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகள். படம் படு தோல்வி.

இரண்டாவதாக சிவாஜியை வைத்து 'பிரதாப்' (1971) என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் படு தோல்வி. இதனால் தனது சொத்து பெரியளவிற்குத் தொலைந்தன. துக்கம் தாளாமல் எப்போதும் மதுவுடனேயே இருந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி.

வாழ்வின் ஒட்டு மொத்த நிம்மதியும் இழந்த சாவித்திரி, 1981 டிசம்பர் 26 நள்ளிரவில் இறந்து போனார்.

தனது உழைப்பால் வெற்றி முகத்தில் இருந்த சமயத்தில்தான் சொந்தப் படம் எடுத்து அதில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து, கடைசியில் குடியில் மூழ்கி கல்லீரல் வீங்கி இறந்து போனார் சந்திரபாபு.

குடியினால் அழிந்த சினிமா பிரபலங்கள் இவர்கள் மட்டுமல்ல, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வயலார், ராமவர்மா, கம்பதாசன் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

- தமிழ் உத்தம்சிங்
புனல்குளம்

எனது கனவு இதுவேயாகும்!!!


இது நமது நாடு என ஏழை எளியோர்களை உணர வைக்க,

இந்திய மக்களில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்று எவருமில்லை.

இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கடுமையாக பாடுபடுபவர்களைக் கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தீண்டாமை கொடுமை அல்லது மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளும் தீமைகள் இல்லாத ஒரு இந்தியா.

ஆண்களைப் போல பெண்களும் சம உரிமைகளை அனுபவித்தல்..

உலகின் பிற அனைத்துப் பகுதியிலும் அமைதி நிலவ நாம் பாடுபடுவது.

இந்தியாவைப் பற்றிய எனது கனவு இதுவே ஆகும்.

கனவு கண்டவர்

திரு.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

பந்த் தேவைதானா..?

26-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி விரைவில் செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் முழு அளவிலான பந்த் நடத்தப்படும் என்று தமிழக அரசை ஆளும் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரான முதல்வர் அறிவித்துள்ளார்.

பந்த் என்றால் என்ன நடக்கும்?

அரசுப் பேருந்துகள் இயங்காது.. ரயில் சேவை நிறுத்தப்படும். தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்படும். சினிமா தியேட்டர்கள் மூடப்படும். சாலைகள் அமைதியாக யாருமற்று காணப்படும்.

இவை அனைத்தும் ஊடகங்களின் கவனத்திற்குட்பட்டு, 'பந்த் மாபெரும் வெற்றி' என அறிவிக்கப்படும்.

இதனால் யாருக்கு லாபம்..?

ஒரு நாளின் தொழிலும், வர்த்தகமும் நிறுத்தப்படுமாயின் எவ்வளவு ரூபாய்கள் அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு நாளைய வர்த்தகமே 5 கோடி என்கிறார்கள். இவை சாதாரண இடைநிலை, கடை நிலை வர்த்தகர்களுக்கு கிடைக்கப் போகும் பணம். அன்று ஒரு நாள் அவர்களுக்குக் கிடைக்காது. சரி.

ஆனால், அழுகும் நிலை காய்கறிகளை விற்பனை செய்யும் இந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அது இழுப்புதானே.. அன்றைக்கு அழுகிப் போன காய்கறிகளை மறுநாள் மார்க்கெட்டின் எதிர்ப்புறம் இருக்கும் குப்பையில்தான் போட வேண்டும். அதை உற்பத்தி செய்ய ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு போராடியிருப்பான்..? இதை யாரிடம் போய் இவன் சொல்லுவான்..?

பேருந்துகள் ஓடாது.. அன்றைக்கு தாம்பரத்தில் இருக்கும் ஒருவரின் உறவினர் வண்ணாரப்பேட்டையில் இறந்துவிட்டால் அவர் என்ன செய்வார்..? கால்டாக்ஸி பிடித்துச் செல்ல வேண்டுமா..? அல்லது அவரால்தான் முடியுமா? எத்தனை பேரால் இந்த சமூகச் சீர்கேட்டை உடனடியாக ஒரே நாளில் எதிர் கொள்ள முடியும்..? இதற்கான வசதியும், வாய்ப்புகளும் மக்கள் அனைவரிடமும் இருக்கின்றதா..?

ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவனைக்கு எப்படிச் செல்வது? ரோட்டில் பஸ், கார், லாரி எதுவும் போகக்கூடாது என்று சில கும்பல்கள் கையில் கம்புகளுடன் நடு ரோட்டில் வந்து நிற்கும்போது அந்த உயிரைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்..?

நகரப் பகுதிகளில் பரவாயில்லை.. எப்படியாவது ஆட்டோ, டாக்ஸி பிடித்தாவது சென்றுவிடுவார்கள். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முறை வந்து செல்லும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள்? அது அவர்களது தலையெழுத்தா..? அல்லது ஓட்டுப் போட்டதற்கு கிடைத்த பரிசா..?

வர்த்தகர்கள் குறித்த நேரத்தில் பணம் அனுப்பினால்தான் பொருட்கள் கிடைத்து அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் நம்பகத்தன்மைதான் அவருடைய மிகப் பெரிய முதலீடு. அதையும் உடைத்துவிட்டால் அவர் எங்கே போய் புலம்புவார்..?

பந்த் என்பதற்காக அன்றைய ஒரு நாளைய வட்டி கேட்கப்பட மாட்டாது என்று எந்த வங்கியும், லேவாதேவிக்காரர்களும், வட்டி பிஸினஸ் செய்பவர்களும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை..

அன்றைக்கு கடைசி தேதி என்று அறிவிக்கப்படும் எந்தவொரு தொழில், நுகர்வோர் விஷயங்களும் பந்த் என்பதால் விட்டுக் கொடுக்கப்பட்டு விடுமா..? இல்லையெனில் யாரிடம் போய் கேட்பது..?

அன்றைய நாளில் ஏதேனும் ஒரு கடை திறந்து வைக்கப்பட்டு அதனை கலவரக்காரர்கள் தாக்கினால் அதற்கு யார் பொறுப்பு..?

ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படியரு பந்தை நான் எதிர்க்கிறேன் என்று சொல்லி ஆங்காங்கே சிலர் கடைகளைத் திறந்து வைத்திருந்தால் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்கப் போவது யார்..?

அரசே சொல்லிவிட்டதால் கடைகளை இழுத்து மூடியே தீர வேண்டும் எனில் அந்த ஒரு நாளைய வருமானத்தை அந்தக் கடைக்காரர்களுக்கு யார் தருவது..? அந்தத் தொகையை இழக்க வைப்பது அவரிடமிருந்து திருடுவதற்கு சமமில்லையா..?

அரசுகள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் இங்கே என்ன கருத்து சுதந்திரம் உள்ளது..?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அவர்களுடைய அடாவடித்தனத்தைக் காட்டுவதற்கு ஒரு மேடை அமைத்துக் கொடுப்பதுதான் அரசின் வேலையா..?

நகரங்களில் பேச்சிலராக இருப்பவர்கள் சோத்துக்கு என்ன செய்வார்கள்?

இது மாதிரி பந்த் அறிவித்தால் முதலில் மூடப்படுவது ஹோட்டல்கள்தான். ஏனெனில் அன்றைக்கு கூட்டம் குறைவாக வந்துவிட்டால் செய்தது எல்லாம் வீணாகிவிடுமே என்பது ஒன்று.. மற்றொன்று கலவரக்காரர்கள் முதலில் குறி வைக்கப்போவது இது மாதிரியான ஹோட்டல்களைத்தான்.. அதுதான் இப்போது தட்டிக் கேட்கவும் ஆட்களே இல்லையே.. அரசே சொல்லிவிட்டதால் போலீஸ் கை வைத்துவிடுமா என்ன?

நானும் முன்னொரு சமயம் இதே போன்று ஒரு பந்த் தினத்தன்று கடைகளைத் தேடி நாயாக அலைந்து பின்பு வேறு வழியில்லாமல் 5 ஆண்டுகளாக நான் சென்னையில் இருப்பது தெரிந்திருந்தும் அழைக்காமல் இருந்த ஒரு வீட்டிற்கு, அழையா விருந்தாளியாகச் சென்று 'முழுங்கிவிட்டு' வந்ததை வெட்கத்துடன் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்..

சென்னையில் ரூம் டுத்துத் தங்கியிருப்பவர்களுக்கு அன்றைய உணவுக்கான பொறுப்பு எவருடையது என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.. அது அவர்கள் பாடு.. பேச்சிலர்களாக இருந்து, இது போல் கடைகளையே நம்பி வாழுகின்ற ஜீவன்களை உணவுக்காகவே "நாளை யார் வீட்டுக்குப் போகலாம்.." என்று யோசிக்க வைக்கின்ற கொடுமையை அரசுகளே செய்வது பசியின் கொடுமையைவிட கொடியது..

ஏற்கெனவே செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை... அக்டோபர்-1 திங்கள்கிழமை பந்த்-கட்டாய விடுமுறை, அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி.. விடுமுறை நாள்தான்..

இப்படி தொடர்ந்து மூன்று விடுமுறை நாட்கள் வந்ததெனில் அரசுத் துறையின் வேலைகள் எவ்வளவு பாதிக்கப்படும்..?

அன்றைய நாளில் கிடைப்பதாக இருப்பவை மூன்று நாட்கள் கழித்தெனில் அந்த மூன்று நாட்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படப் போவது யார்? பொதுமக்கள்தானே..

ஏற்கெனவே மாதத்திற்கு 10 நாட்களுக்குக் குறைவில்லாமல் விடுமுறை கிடைக்குமளவுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து கெடுத்து வைத்திருப்பவை அரசுகள்தான்.. இதில் இதுபோல் திடீர் விடுமுறைகளை வழங்கி அவர்களை வளைப்பது ஓட்டு வங்கியை வளைக்கின்ற நோக்கம் மட்டும்தானே..

அதிலும் இந்த முறை கூடுதல் கவன ஈர்ப்பாக அக்டோபர் 1-ம் தேதியன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் வருகிறது.

அன்றைக்கு அவருடைய ரசிகர்கள் ஊர்வலமாகச் சென்று கடற்கரையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலையணிவித்து நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்கள். இப்போது இந்த ரசிகர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

"உன் தலைவனை அடுத்த நாள் கும்பிட்டுக் கொள்.." என்றா..?

அப்படியென்றால் அனைத்துத் தலைவர்களின் விசேஷ நாட்களிலும் இப்படி ஆளுக்கொருவர் பந்த் அறிவித்தால் நம்மை வளர்த்த சான்றோர்களின் மீது நமக்கிருக்கும் அக்கறைதான் என்ன..?

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பந்த் எனில் தொழில் துறையில் மட்டுமே சுமாராக 2000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமாகும்..

இந்த நஷ்டம் வெளியில் தெரியாமல், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் இருப்பதினாலும்தான் இந்த பந்த் கூத்து அனைத்து அரசுகளாலும், அனைத்து அரசியல் கட்சிகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பந்த் நடத்தித்தான் மக்களின் கவனத்தைக் கவர முடியுமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுதத வேண்டும் என்பது கோரிக்கை.

அந்தத் துறை யாருடையது மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையுடையது. அந்தத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பாலு. தி.மு.க.வின் மேல் மட்டத் தலைவர். அவர் தலைமையில் இருக்கின்ற அமைச்சகமே சரிவர வேலை செய்யவில்லை எனில் அவரைத்தானே கேள்வி கேட்க வேண்டும்.. அவரையும் மீறி நடக்கிறது எனில் அவர் ராஜினாமா செய்துவிட்டு தன்னை மீறி தன் துறையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன என்று உண்மையை மக்களிடம் சொல்லாமே..?

மத்தியில் ஆளும் கூட்டணி அரசிற்கும், தமிழக முதல்வர்தான் தலைவர். புத்தக வெளியீட்டு விழாவுக்கும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும், தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும் நொடியில் போனில் பேசுகின்ற அளவுக்கு செல்வாக்கும் இருக்கின்றபோது அதன் வழியாக இந்தப் பிரச்சினையை விரைந்து செயல்படுத்துபடி பேசுவதை விட்டுவிட்டு அப்பாவி மக்களின் அடிமடியில் கை வைப்பது எந்த வகையில் சிறந்த அரசியல்..?

மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த ஆவணத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதை வெளியில் சொல்லி எங்கள் கருத்தை ஏற்காத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொல்லி கூட்டணியிலிருந்து வெளியேறலாமே..? மக்கள் மனமுவந்து ஏற்பார்களே..

இதைச் செய்யாமல் ஏதோ ரிக்ஷா ஓட்டுபவனும், கை வண்டி இழுப்பவனும்தான் இந்த விஷயத்தில் குற்றவாளி என்பதைப் போல், அவனது ஒரு நாள் பொழைப்பைக் கெடுப்பது சிறந்த நிர்வாகமா?

கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மத்தியில் ஆளும் நிர்வாகத்தினர். அவர்களுடைய நிர்வாகத்தில் இங்கே இருப்பவர்களும் பங்கு கொண்டுள்ளார்கள். அப்படியிருக்க தமிழகத்தில் பந்த் எதற்கு? பேசாமல் இங்கேயுள்ள ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடலாமே..?

'மத்திய அரசின் கவன ஈர்ப்புத்தானே' இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதை டெல்லியிலேயே போய்ச் செய்யலாமே..? உடனடி கவனம் பெறுமே..?

இப்போது அனைவருக்குள்ளும் எழுகின்ற கேள்வி யாதெனில், மக்களுக்கு உண்டாகப் போகின்ற கெடுதிகளை வருமுன் காக்கின்ற கடமையைச் செய்ய வேண்டியவை அரசுக்கு இருக்கிறதா? இல்லையா..?

விஷயம் கோர்ட்டின் பரிசீலனையில் உள்ளது என்பதனை மறைத்துவிட்டு, 'இதனால் நமக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. நாம் எப்போதும் நல்லவர்களாகத்தான் மக்களின் கண்களுக்குக் காட்சி தர வேண்டும்.. எப்போதும் நம்மை எதிர்ப்பவர்களே கெட்டவர்கள்.. நம்மை எப்போதும் ஆதரிப்பவர்களே நமது தோழர்கள்' என்கிற ஆளும்கட்சிகளின் அரசியல் சூத்திரத்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுப் போட்ட மக்கள்தான், இவை இரண்டையும் பார்த்துக் கொண்டு எப்போதும் அமைதியாக இருப்பவர்கள்..

இவர்களின் அமைதி என்றைக்கு முடிகிறதோ, அன்றைக்குத்தான் இது மாதிரியான முட்டாள்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

சகோதரர் சுரதா யாழ்வாணனுக்கு நன்றி..!

26-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"பக்கம், பக்கமாக எழுதித் தள்றீங்களே எப்படி ஸார்..?" இப்படி என்னிடம் கேட்காத வலைப்பதிவர்கள் கொஞ்சம் பேர்தான்..

அந்த அளவுக்கு என்னுடைய கட்டுரைகளின் நீளம் உங்களுக்கு அலுப்பையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கலாம்.

ஆனால் அந்தப் பக்கம் பக்கமாக டைப் செய்வது எப்படியெனில், நான் முதலில் MS-WORD-ல் டைப் செய்து பின்பு, அதனை suratha.com/reader.htm-ற்கு கொண்டு வந்து tsc font-ல் convert செய்து அதை copy செய்து, பின்பு வலைப்பதிவின் post பக்கத்திற்கு வந்து, அதனை paste செய்வேன்.

இப்படித்தான் நேற்று வரையிலும் பதிவுகளை பதிவு செய்து கொண்டிருந்தேன்.

காரணம் எனது typing method தமிழிலேயே மிகப் பழமையான method - Inscript Method.

இதனை உடனடியாகக் கைவிட்டு வேறு method-ஐ கையில் எடுக்க எனது இன்றைய பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காததால், இதனையே கட்டி அழுது கொண்டிருந்தேன்.

வலையுலகில் அனைவரும் மின்னல் வேகத்தில் கமெண்ட்ஸ்களை போடும்போது என்னால் அந்தளவிற்கு வேகமாக இயங்க முடியாமல் தவித்ததுண்டு. அதற்கெல்லாம் மொத்தமாக இப்போது ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.

இதற்கு முடிவு கட்டியவர் அருமை நண்பர் திரு.சுரதா யாழ்வாணன் அவர்கள்.

சென்ற மாதம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் மாலை நேரத்தில் நடந்த ஒரு வலைப்பதிவர் கூட்டமொன்றில்தான் அவரை முதன்முறையாக நான் சந்தித்தேன்.

அப்போதே அவரிடம் "உங்களால்தான் நான் வலையுலகில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.." என்றேன். ஆர்வத்துடன் எனது டைப்பிங் முறைகள் பற்றி விசாரித்தார். முழுவதையும் சொன்னேன்.

"unicode-ல் டைப் செய்யும் அளவுக்கு உங்களது டைப்பிங்லேயே ஒரு கீபோர்டை நான் வடிவமைத்துத் தருகிறேன். காத்திருங்கள்.." என்று நான் கேட்காமலேயே ஒரு வாக்குறுதியை எனக்கு அளித்தார்.

சில நாட்கள் கழித்து அவர் ஜெர்மனி செல்வதற்கு முதல் நாள் அவருடைய வீட்டருகே சந்தித்துப் பேசியபோதும், "உங்களுடைய கீபோர்ட் மேட்டர் என் நினைவில் உள்ளது. நிச்சயம் செய்து தருவேன்.." என்றார்.

சொல்லியது போலவே ஊர் போய்ச் சேர்ந்து சில நாட்களுக்குள் எனக்காக unicode-ல் type செய்யும் அளவுக்கு கீபோர்ட் ஒன்றை வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளார்.

இதோ, இந்த நன்றி பதிவுகூட அண்ணன் யாழ்வாணன் அவர்களின் கீபோர்டை வைத்து நேரடியாக வலைப்பதிவின் post Box-ல் Type செய்யப்பட்டதுதான்.

பார்த்ததே இரண்டு நாட்கள்தான்..

பேசியதோ அரை மணி நேரம்தான்.

செய்து கொடுத்ததோ பெரும் உதவி.

பிரதிபலன் எதிர்பாராமல் செய்த உதவிக்கு கைமாறு என்னால் முடிந்த இந்த ஒரு நன்றி அறிவிப்புதான்..

உதவுகின்ற எண்ணத்தை உள்ளுக்குள் தோற்றுவித்த நம் அன்னைத் தமிழுக்கும்,

உதவிய பெரும் நெஞ்சம் அண்ணன் சுரதா யாழ்வாணனுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..

சுரதா யாழ்வாணன் போன்ற திறமைசாலிகள் எங்கிருந்தோ தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்க..

இங்கே தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், தமிழை வைத்தே தமிழர்களிடமே வியாபாரம் செய்வது நமது சாபக்கேடு..

உங்கள் காதுகளுக்கும் இப்படி ஆகலாம்..!

24-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அது’ எப்போது, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல் எப்போதும் சாதாரணமாகத்தான் இருந்து வந்தேன்..

‘சானா, சர்ர்ர்ரு..’ என்று செல்லமாக என்னை அழைப்பவர்களிடம் சட்டென்று திரும்பிப் பார்த்துப் பேசியிருக்கிறேன். எந்த மாறுபாடும், வேறுபாடும் என்னிடம் காணப்படவே இல்லை. ஒரு மதிய நேரம் எனக்கு அந்த உண்மையைக் காட்டும்வரையில்..

அன்றும் வழக்கம்போல் திண்டுக்கல் ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக் வகுப்பில் அமர்ந்திருந்தேன். முதல் நாள் இரவு எனது தந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருந்ததால் அரைத் தூக்கத்தில் வகுப்பறையில் இருந்தேன்.

வகுப்பு ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் என்னை உற்று உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்தபடியே ஏதோ சொல்ல. ஒட்டு மொத்த வகுப்பும் என்னையவே திரும்பிப் பார்த்தது. அப்போதும் எனக்கு அவர் சொன்னது காதில் விழவில்லை.

ஆசிரியர் அருகில் வந்து என் கன்னத்தில் விட்ட ஒரு அறைதான் எனது அரைகுறைத் தூக்கத்தை விரட்டியது. "ஒண்ணு தூங்கு.. இல்லாட்டி பாடத்தைக் கவனி.. அரைத் தூக்கத்துல என்னைப் பார்த்து என்னையும் தூங்க வைக்கதடா.." என்றார் ஆசிரியர். அடித்ததைவிடவும் அவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நிறைய துக்கத்தைக் கொடுத்தது..

வகுப்பு முடிந்து வெளியில் வந்தவுடன் சக நண்பர்கள் "என்னடா ஸார் அவ்ளோ நேரம் உன்னைப் பத்தியே பேசுறாரு.. அப்படியே இடிச்சப்புளியாட்டம் உக்காந்திருக்கிறே..?" என்றார்கள். அப்போதும் நான் அவர்களிடம் கேட்டேன்.. "அப்படியா.. என்ன சொன்னார்..?" என்றேன்.. ஏதோ வித்தியாசமாக என்னைப் பார்த்தபடியே சென்றார்கள் நண்பர்கள்.

வீடு திரும்பியவுடன் எனது அக்கா வாசலிலேயே காத்திருந்தவர் சத்தம் போடத் துவங்கினார், "ஏண்டா காலைல எத்தனை தடவ கத்துறது.. நீ பாட்டுக்கு கண்டுக்கா போய்க்கிட்டே இருக்க.. சரி.. சரி.. சீக்கிரமா போ.. மாமா ஏதோ ஊருக்குப் போகணுமாம்.. அதுனால உன்னை உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.." என்று விரட்டினார்.

ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்பதைவிட காலையில் அக்கா கூப்பிட்டது என் காதில் ஏன் விழுகவில்லை என்பதே எனக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.

மருத்துவமனையில் இரவு நேரத்தில் எனது தந்தை தூக்கம் வராமல் “ஒரு ஊசியைப் போடச் சொல்லுடா.. செத்தாவது போகிறேன்..” என்று கண்ணீர் சொட்டாக வடிய கெஞ்சியபோது அதுகூட எனக்குக் கேட்காமல் போய் பக்கத்து பெட்காரர் அதைக் கேட்டு எனக்கு டிரான்ஸ்லேட் செய்தபோது சத்தியமாக எனக்குத்தான் சாவு வர வேண்டும் போல இருந்தது.

அங்கே இருந்த நர்ஸ் என்னைத் தோளைத் தட்டி இழுத்து "என்னாச்சு உனக்கு? காது கேட்காதா..?" என்று கேட்டபோதுதான் அப்படியரு விஷயமே எனது காதுக்கு வந்தது.

கொஞ்சம் லேசாக கேட்டேன்.. உற்றுக் கேட்டேன்.. ஆம்.. எனது காதில் ஏதோ ஒரு சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 'கிர்ர்ர்' என்ற சப்தம். டேபிள் பேன் ஓடினாலும் ஒரு லேசான சப்தம் எழுமே.. அதே போல்தான்.. எனது இனிய காதுக்கு ஏதோ ஒன்றாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது..

மருத்துவர்களிடம் ஓடினேன்.. தேனினும் இனிய செய்தியை நமது தேனமுத தமிழில் என் செவியில் திணித்தார்கள். “உங்களது செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி குறைந்துள்ளது. அதனால் உங்களுக்கு கேட்கும் சக்தியும் குறைந்துள்ளது..” என்று.. இந்தச் செய்தியை கேட்கும் சக்தியே எனக்கில்லை..

அப்போது நான் ஒரு வயதுக்கு வந்த 16 வயது வாலிபன். ‘விக்ரம்’ படத்தை 6 முறை பார்த்துவிட்டு, நானே கமல்ஹாசனைப் போல் மனதிற்குள் எண்ணிக் கொண்டு ஒரு கனவுலக கதாநாயகனாக எனக்குள்ளேயே ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு காது அவுட் என்று சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை ஜனகராஜ் இடத்திற்கு கொண்டு வந்தார் அந்த மருத்துவர்.

உதடு துடிக்கிறது. வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஏதாவது செய்யக்கூடாதா என்று கண்களில் திரண்டு நின்ற கண்ணீரோடு கேட்கிறேன்.

"இல்லை சரவணன்.. இது பரம்பரை வியாதியாக உங்களைத் தொற்றியிருக்கிறது. உங்களது அம்மாவின் 40-வது வயதில் பிறந்திருக்கிறீர்கள். அப்போது உங்களது அம்மாவுக்கும் உடம்பில் சக்தி குறைந்துள்ளது. அதனால் பிறக்கின்றபோதே இந்த வீக்னஸோடுதான் பிறந்திருக்கிறீர்கள். அதோடு உங்க அம்மாவுக்கும் இப்போது இந்த வியாதி வந்துள்ளது. ஸோ.. வருவதை.. வந்துவிட்டதை ஒன்றும் செய்ய முடியாது.." என்றார் டாக்டர் மோகன்ராவ்..

ஏற்கெனவே அப்பாவுக்கு கேன்சர் என்று ரணகளமாக இருந்த எனது இல்லம், இப்போது எனது காதுகளும் அவுட் என்றவுடன் இன்னும் கொஞ்சம் சோகத்தை அப்பிக் கொண்டுவிட்டது.

அதன் பிறகு தினமும் அனைவரும் எனது பாணியில் கத்தத் துவங்கினார்கள். “கத்திதான் பேச வேண்டும். வேறு வழியில்லை.. நாங்க சமாளிச்சுக்குறோம்..” என்று எனது அக்கா ஆறுதல் பாணியில் சொல்லி என்னைத் தேற்றினார்.

பின்னாளில் இந்த நோய்க்கு பரிகாரம் என்னவெனில் “எலும்பு மாற்று அறுவை சிகிச்சைதான்..” என்றார் சென்னையின் மிகப் பெரிய காது மருத்துவர். “ஆஸ்திரேலியாவிலிருந்து எலும்பை வரவழைப்போம். ஒரு சுமாரா 8 லட்சம் ரூபாய் செலவாகும்..” என்று கூலாகச் சொன்ன டாக்டரிடம் அவருடைய பீஸ¤க்கு ஆகும் பணத்தையே கடன் வாங்கி வந்திருக்கிறேன் என்பதை சொல்ல முடியுமா என்ன..?

“ஊரில் என் தாத்தாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன் ஸார்..” என்று சொல்லிவிட்டு வந்தவன்தான், இன்னும் அந்த கிளினிக் பக்கமே செல்லவில்லை.

ஒரு மாதம் நான் என் நினைவிலேயே இல்லை.. எனது தந்தையிடம்கூட நான் சொல்லவில்லை. அவரே “தன்னைக் கருணைக் கொலை செய்துவிடு” என்று என்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் நான் என் சோகத்தைச் சொல்லி என்ன செய்ய என்று விட்டுவிட்டேன்..

எப்படி வந்தது இது?

மருத்துவக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் செய்த அரிய செயல்களைப் பாருங்கள்..

கிரிக்கெட் என்றால் எனக்கு அப்போது உயிர். ரேடியோவை தலைமாட்டில் வைத்து கிரிக்கெட் கேட்டுக் கொண்டே இருப்பேன். “ரேடியோவை கொஞ்சம் தள்ளிதான் வையேண்டா...” என்று என் வீட்டினர் கெஞ்சினாலும் ரேடியோ என் காதோரம்தான் இருக்கும்.

ஐடிஐயில் படித்தபோது எனது நண்பன் மோகன்தாஸ் ஒரு சிறிய கையடக்க டேப்ரிக்கார்டரை கொண்டு வந்தான். அதில் கிரிக்கெட் கமெண்ட்ரியை கேட்பதற்காக hear phone-ஐ மாட்டி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.

முன் வரிசையில் இருக்கும் நண்பர்கள் என்னிடம் திரும்பி ஸ்கோர் கேட்கும்போது நான் வேண்டுமென்றே பந்தா செய்து ஒரு இரண்டு, மூன்று கெஞ்சல்களுக்குப் பிறகு சைகையில் சொல்வேன்.. ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. ஒரு வருடம் தொடர்ந்தது..

ஏற்கெனவே வைட்டமின் சி அல்லது டி எதுவோ ஒன்று குறைபாடுடன் இருந்த நான் இதையும் கேட்க கேட்க.. காதின் உள் எலும்பின் சக்தி தாக்கப்பட்டு வலுவிழக்க ஆரம்பித்து, கடைசியில் முக்கால் செவிடன் என்கிற இன்றைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..

நண்பர்களை விடுங்கள்.. அவர்கள் பரவாயில்லை.. பக்கத்திலேயே வந்து பேசுவார்கள்.. சமாளித்துக் கொண்டேன். மற்றவர்கள்.. முதலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசி எனக்கே வெட்கமாகி பின்பு வெளியாள் யாருடனும் பேசாமல் என்னை நானே குறுக்கிக் கொண்டேன்..

அப்போதுதான் “மருத்துவர் காது கேட்கும் கருவியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை..” என்று சொன்னவுடன் எனது கனவுலகத்தைக் கலைத்துவிட்டு ஒரு பெரும் மனப் போராட்டத்திற்குப் பிறகு காது கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்திக் கொண்டேன்.

அப்போதும், இப்போதும் சிலர் கத்த முடியாமல் வெறுப்பாக என்னிடமே தங்களது முகத்தைக் காட்டும்போது அப்படியே ஜன்னல் வழியாக கீழே குதித்துவிடலாமா என்ற எண்ணம்தான் எனக்குள் வரும்.. இதற்காகவே எங்கு வேலை பார்த்தாலும் அநாவசியமாக யாரிடமும் சென்று பேசாமல் இருந்துவிடப் பழகிவிட்டேன்.

முதலில் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடிந்திருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளை சிறிய வயதிலேயே நான் எடுத்திருந்தால் என் காது பிழைத்திருக்கும். அந்த அளவிற்கான அறிவுத்திறன் என் இல்லத்தில் யாருக்கும் இருக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..

இப்படியரு குறை இருக்கிறது என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அதிகமாக ஒலியைக் கேட்காமல் தவிர்த்து எனது காதைக் காப்பாற்றியிருக்கலாம்.

அன்றிலிருந்து வாக்மேனில் பாட்டு கேட்கும் பழக்கத்தைத் தொலைத்தே விட்டேன். இப்போதும் யாராவது “வாக்மேனில் மேட்டரைத் தருகிறேன். கேட்டு டைப் செய்து கொடுங்கள்..” என்று சொன்னால் எவ்வளவு பணம் தருகிறேன் என்றாலும் “முடியாது..” என்று சொல்லிவிடுவேன்.

ஏனெனில் அதிகமான ஒலியை இப்போதும் எனது காதில் கேட்டால் அன்று இரவே என் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ரீங்காரமான சப்தம் என்னைத் தூங்கவிடாமல் செய்து தலைவலியை கொண்டு வந்துவிடும்.

இந்தக் காரணத்திற்காகவும் நான் வெளியில் வண்டியோட்டிச் செல்லும்போதுகூட காது கேட்கும் கருவியை மாட்டாமல்தான் சென்று வருகிறேன்.

இந்தத் தலைவலியும், அதன் உடன்பிறப்பான காய்ச்சலும் தொடர்ந்து வந்தால் நான் அடித்துச் சொல்வேன்.. எனது காது கேட்கும் திறன் 2 டெசிபல்கள் குறைந்துள்ளது என்று..

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் எனது காது கேட்கும் திறனான டெசிபல்கள் குறையும். அதை நான் கவனித்தே வந்திருக்கிறேன்.

இந்த காது கேளாமை நோயும் இப்போது பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிகமான சத்தம், இரைச்சலான சப்தம் ஏற்படும் இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு முதலில் தொற்றக்கூடியது இந்நோயாகத்தான் இருக்கும்.

ஏனெனில் உடல் ஊனமுற்றவர்களில் இந்த காது கேளாமை வாயிலாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கைதான் உலகளவில் முதலிடமாம்.

இப்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் இந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிலும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்கள்தான்.

இந்தியாவில் 1000-த்துக்கு 2 அல்லது 3 குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை நோயோடு பிறக்கின்றன என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 6.3 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பவர்களாம்.

இன்றைக்கு கக்கூஸில் இருக்கும்போதுகூட செல்போனில் பேசிக் கொண்டே அவசர வாழ்க்கை வாழ்ந்து வரும் இளைஞர்கள் நிறைய பேர், நாளைய முதியவர்களாகும்போது காது கேளாமையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிகபட்சமான கூம்பு வடிவ ஸ்பீக்கரின் அருகில் நின்று பாட்டு கேட்பது, மேடை கச்சேரிகளின்போது அருகில் சென்று கேட்டு காதைக் கிழித்துக் கொள்வது.. நாடகம் பார்க்கச் சென்று நடிகர், நடிகைகளை அருகில் பார்க்க நினைத்து நம் காதிற்குள் வம்பாக அதிகப்பட்சமான ஒலியை திணித்துக் கொள்வது..

இவை போன்று நம்மால் முடிகின்ற விஷயங்களைத் தவிர்த்தோமானால் என்னைப் போன்ற தவிர்த்திருக்கக்கூடிய சிலரும் பிழைத்துக் கொள்ளலாம்.

நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று இப்போதே செக் செய்து கொண்டு அதற்கேற்ற மருத்துவம் எடுத்துக் கொண்டு வருமுன் காப்பது அனைவரின் குடும்பத்திற்கும் நல்லது.

அனுபவப்பட்டவன் சொல்கிறேன்..

ஏனெனில் அனுபவமே வாழ்க்கை..!

அனுபவமே இறைவன்..!

பின்குறிப்பு : இன்றைக்கு உலக காது கேளாதோர் தினம்.