தீக்குளிக்கும் பச்சை மரம் - சினிமா விமர்சனம்

21-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில படங்களின் போஸ்டரை பார்த்தே அதன் உள்ளடக்கத்தை ஓரளவுக்கு ஊகித்துவிடலாம். சில படங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே எடுக்கப்பட்டிருக்கும். பல படங்கள் வாயாலேயே சீன் ஓட்டியவையாக இருக்கும்..!  இதில் நடுவாந்திரமாக இப்படியெல்லாமா எடுப்பாய்ங்க..? என்று யோசிக்கவும், திட்டவும்.. கண்டிக்கவும் வைக்கும்..! அப்படியொரு படம்தான் இது..!


கேரளாவில் நடந்த உண்மைக் கதையாம்.. நம்ப முடியவில்லை..! பள்ளிப் பருவத்தில் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்த்திருத்த மையத்திற்கு அனுப்பப்பட்டு இதனாலேயே தனது குடும்பத்தினரை இழக்கும் ஹீரோ, வெளியில் வந்து தனது சொந்தக் கிராமத்திலேயே பொழப்பை ஓட்டுகிறார். காதலிக்கவும் செய்கிறார். கல்யாணமும் செய்த பின்பு சோத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல், மார்ச்சுவரியில் பிணம் அறுக்கும் வேலைக்குப் போகிறார். அங்கே நடக்கும் சில கசமுசாக்களால் பாதிக்கப்பட்டு அல்லல்படுகிறார்..! தப்பித்தாரா அல்லது அதிலேயே மூழ்கினாரா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

தப்பித் தவறிக்கூட குடும்பத்தினருடன் போய்விடாதீர்கள்..! சினிமா துறைக்குள்ளேயே இருந்து கொண்டு இப்படிச் சொல்வதற்கு மிகுந்த தயக்கமும், சங்கடமுமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை.. குழந்தைகள் கண்டிப்பாக பார்க்கக் கூடாத படம்..!  ஏ சர்டிபிகேட்டுதான் கிடைக்கும். நிச்சயம் கூட்டம் வராது.. படம் பல்டியடிக்கும் என்று தெரிந்தே இப்படி படம் எடுத்திருக்கும் இதன் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் என்னவென்று சொல்வது..?

இடைவேளை வரைக்கும் படம் நன்றாகத்தான் இருக்கிறது..! ஹீரோவின் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள்.. கிராமத்து பள்ளிக்கே உரித்தான நேட்டிவிட்டியும், அதன் ஹெட்மாஸ்டரின் பேச்சும், நடத்தையும் அச்சு அசலாக இருந்தது..! நிழல்கள் ரவியின் வீட்டுப் பிரச்சினை.. அவர் தம்பியின் மெளனமான நடத்தை.. அண்ணனுக்கு அடக்கமான தம்பியாக காட்ட விரும்பி இருட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் தம்பியின் முக பாவனைகளை துழாவித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.. இவரது  தொண தொண மனைவியாக வரும் ரேகா சுரேஷின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்..!

கரும்புத் தோட்டம் பற்றிய விவரங்கள்.. அதன் வேலையாள் டி.பி.கஜேந்திரனின் சில காட்சி நடிப்பு.. திருட்டுத் தொழிலுக்கு அழைத்தும் போகாமல் ஹீரோ சொந்த ஊருக்குத் திரும்புதல்.. “திரும்ப எங்களை கூப்பிடுவடா” என்று தோழர்கள் சொல்லும்போதே கதை அங்கேதான் செல்லும் என்பது தெரிகிறது. ஆனால் அந்த சஸ்பென்ஸ் நிறைந்த சந்திப்பு எதிர்பாராததுதான்..! தண்ணியடித்துவிட்டு பேசுவது போன்ற நடிப்பு என்றால் நமது நடிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.. இதில் ஹீரோவும், எம்.எஸ்.பாஸ்கரும் செய்யும் அலப்பறை அதைத்தான் காட்டுகிறது..! 

கொலையை தற்கொலையாக மாற்றும் டாக்டர்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக செய்யும் மருத்துவக் கொலைகள்.. பிணத்துடன் உறவு கொள்ள விரும்பும் வாடிக்கையாளரான அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. இதற்கு ஒத்துப் போகும் கம்பவுண்டர் என்று இரண்டாம் பகுதி முழுக்கவே ஹெவி வெயிட்டான பீலிங்ஸ்..!

உடல் உறுப்புகள் கடத்தல்.. அல்லது இன்சூரன்ஸுக்காக கொலை.. பணத்துக்காக பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டை மாற்றுவது என்பதெல்லாம் சாதாரண விஷயங்கள்தான். இவற்றுக்கு இத்தனை கொடூரமான காட்சிகள் தேவைதானா என்பதை அந்த இயக்குநர் ஏன் சிந்திக்கவில்லை..? இதன் காரணமாகவே அந்தக் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. பார்க்கவே கொடூரமாக இருக்கிறது..!

பிணத்துடன் உறவு கொள்ள நினைக்கும் இன்ஸ்பெக்டரின் எண்ணத்தை ஒரு பார்வையிலோ அல்லது ஒரு செய்கையிலோ காட்டி முடித்திருக்கலாம். அதனை இத்தனை விஸ்தாரமாக காட்டித் தொலைத்தால், படம் பார்க்க வந்தவனெல்லாம் சைக்கோவாக மாறிவிட மாட்டானா..?

கிளைமாக்ஸ் அதைவிட கொடுமை..! மார்ச்சுவரி அறை ரத்தக் சகதியாகும் அளவுக்கு கொலைகள் நடக்கும் அந்த கிளைமாக்ஸ்வரைக்கும் தியேட்டரில் யார் உட்கார்ந்திருக்கப் போகிறார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ..? படத்தின் முடிவில் என்ன சொல்ல வந்திருக்கிறார்..? என்ன சொல்லியிருக்கிறார்..? என்று எதுவும் புரியும்படி இல்லை..! சீக்கிரமா எந்திரிச்சு ஓடிருவோம் என்பது மட்டும்தான்  புரிந்தது..!


ஹீரோயின் சரயூ.. மலையாளப் பொண்ணு.. வழக்கம்போல கண்ணு ரெண்டும் பளபள.. கிராமத்து வேடம் என்பதால் அதிகம் மேக்கப்பில்லாமல் நேட்டிவிட்டியோடு ஒட்டியிருக்கிறார்.. நடிப்பை.. வேறு படத்தில் நடித்து முடித்த பின்பு பேசலாம்..! ஹீரோ பிரஜின்.. நிச்சயமாக நடித்திருக்கிறார்தான்.. ஆனால் எல்லாம் விழலுக்கு இழைத்த நீர்..! இப்படியெல்லாம் நடித்தால் படம் அதிக மக்களிடம் ரீச்சாகாது..! படத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பேசப்பட மாட்டார்கள்..! பிரஜினின் நடிப்பைக் குறிப்பிட்டுப் பேச அடுத்து வரவிருக்கும் நேற்று இன்று படத்திற்காக காத்திருப்போம்..! ஹீரோயினின் அக்கா கேரக்டரும், இவளுக்காக காத்திருக்கும் பிரஜினின் நண்பன் கேரக்டரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள்..! அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்கூட ரசனையாகத்தான் இருந்தது.. கதையை அப்படியாவது கொண்டு போயிருக்கலாம்..!

ஆனால் திரும்பத் திரும்ப பிணங்களை அறுப்பது.. எப்படி, எந்த ஆயுதத்தை வைத்து அறுப்பது..? அதற்கு முன் எவ்வளவு சரக்கு அடிப்பது..? என்று தமிழ்ச் சினிமா ரசிகனுக்கு கிளாஸ் எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!


ரொம்ப வருடங்கள் கழித்து மது அம்பட்டின் ஒளிப்பதிவை பார்த்த திருப்தி மட்டுமே கிடைத்திருக்கிறது.. உடல் நலக் குறைவால் சில வருடங்கள் வேலை செய்யாமல் இருந்த மது அம்பட், இந்தப் படத்தின் கதைக்காகவே இதனை ஒத்துக் கொண்டதாகச் சொன்னார். சிலரை புரிந்து கொள்ளவே முடியவில்லை..! 

கதை என்னவோ வெள்ளித்திரையில் இதுவரையில் சொல்லப்படாத கதைதான்.. ஆனால் திரைக்கதைதான் நூற்றுக்கு நூறு ரியலிஸமாக காட்டுகிறோம் என்ற போர்வையில் முகம் சுழிக்க வைத்திருக்கிறார்கள்..! இன்னும் இந்தக் கதையை வேறு வடிவத்தில் கொடுத்திருக்கலாம் என்பது எனது சிறிய அபிப்ராயம்..! மொத்தமாகவே ரசிக்க முடியவில்லை. 

போவதும், போகாததும் உங்களது இஷ்டம்..!

குருவை மிஞ்சிய சிஷ்யன் மணிவண்ணன்..!

20-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வாடகை வீடுதான்.. அந்த வீட்டின் பெயரே சரஸ்வதிதான்.. வாசலில் ஒரு பிள்ளையார் கோவில். பழுத்த நாத்திகரான, பெரியாரின் அருட்பெருந்தொண்டரான நாத்திக மணிவண்ணனின் வீடு ஆத்திகமும் கலந்துதான் இருக்கிறது.. ஒரு பக்கச் சுவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டார்வின், காரல்மாக்ஸ், ஏங்கல்ஸ், தந்தை பெரியார், தம்பி பிரபாகரன் இவர்களைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இதனாலேயே அந்த வீட்டுக்குள் யாரும் செருப்பு சுமந்து நடக்கக் கூடாது என்பது விதியாம்..! அதே சுவரின் அடுத்தப் பக்கம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாமிகளின் புகைப்படங்களும் அணிவகுத்திருக்கின்றன..! தன் பாதியான திருமதியாருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார் மணிவண்ணன்..! பக்திப் பழம் சொட்டுகிறது வீட்டின் மற்ற பகுதிகளில்..!

பாவம் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன். தான் தலைவராக வெற்றி பெற்ற பின்பு முதலில் செய்யும் சங்கத்தின் நடவடிக்கையே தனது குருவானவர்களில் ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதுதான் என்பதையறிந்து ரொம்பவே சோகமாக வீட்டு வாசலில் நின்று பேட்டியளித்துக் கொண்டிருந்தார். (‘குவா குவா வாத்துக்கள்’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் மணிவண்ணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் விக்ரமன்) பக்கத்தில் வீ.சேகர், ஈ.ராமதாஸ், டி.கே.சண்முகசுந்தரமும்..! நடிகர் இளவரசுதான் இரண்டு நாட்களும் இறுதிச் சடங்கு காரியங்களை நாம் தமிழர் தோழர்களுடன் இணைந்து நடத்திக் கொடுத்தார்..


நான் வீட்டிற்குள் நுழைந்தபோது தனது ஆரூயிர் நண்பனை இழந்த சோகத்தில் குமுறி, குமுறி அழுது கொண்டிருந்தார் சத்யராஜ். அருகில் நின்று கொண்டிருந்த இயக்குநர் சீமானின் கண்ணில் இருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது..! மனோபாலாவின் கதறல் வீடு முழுக்கக் கேட்டது..! இயக்குநர் சுந்தர்.சி சுவரோரம் சாய்ந்து சோகத்தில் ஆழ்ந்திருந்தார். ரகு மணிவண்ணனை இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்.. இவர்களுக்கிடையில் சேரில் அமர்ந்திருந்த திருமதி மணிவண்ணன், அருகில் நின்றபடியே கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த திருமதி சத்யராஜிடம் என்னென்னமோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.

செங்கோட்டை சசிகுமாரை நீண்ட வருடங்கள் கழித்துப் பார்த்தும் சட்டென அடையாளம் கண்டு.. “வாடா சசி.. உங்க ஸாரை பாரு. அக்கா நிலைமையை பாரு..” என்று சொல்லிச் சொல்லி அழுதார் திருமதி செங்கமலம். ஓடோடி வந்த மன்சூரலிகான், ரகுமணிவண்ணனை கட்டிப் பிடித்து அழுது தீர்த்தார்..!

இந்த நேரத்திலும் போலீஸின் உளவுப் பிரிவு கனகச்சிதமாக தனது வேலையைச் செய்து கொண்டிருந்த்து. அன்றைய தினம் இரண்டு வடநாட்டு செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்களில் மணிவண்ணனின் மரணம் குறித்து வேறு மாதிரியான செய்திகளை போட்டுவிட.. வழக்கமான, அறிமுகமான உளவுப் பிரிவு போலீஸ்காரர், “எத்தனை மணிக்கு இறந்தார்..? எப்படி இறந்தார்...? கூட யார், யாரெல்லாம் இருந்தாங்க..? இப்போ இருக்கிறவங்கள்லாம் யாரு..? எப்போ தூக்குவீங்க..?” என்றெல்லாம் வீட்டு வேலைக்காரம்மா முதற்கொண்டு நாம் தமிழர் தம்பிகளிடமும் விசாரித்துவிட்டுத்தான் வெளியேறினார்..!


59 வயதெல்லாம் சாகுற வயசா..? கண்ணதாசனும் இதே வயதில்தான் இறந்தாராம்..! ஒரே மகள் ஜோதி.. கல்யாணமாகி மலேசியாவில் வசிக்கிறார்.. மகனுக்கு நிச்சயத்தார்த்தம் முடித்தாகிவிட்டது..! மகனை வைத்து ‘தாலாட்டு மச்சி தாலாட்டு’ என்ற பெயரில் அடுத்தப் படம் செய்யவும் தயாராகவே இருந்தார். ஸ்கிரிப்ட் ரெடி.. படப்பிடிப்புக்கு புறப்பட வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக போய்ச் சேர்ந்த இடம்தான் வேறாகிவிட்டது..!

கடந்த சில வருடங்களாகவே.. குறிப்பாக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்த பின்பு கிடைத்த மேடைகளிலெல்லாம் தன்னுடைய மரணத்தை தான் எதிர்நோக்கி காத்திருப்பது போலவேதான் பேசி வந்தார் மணிவண்ணன். தான் இறந்தால் தனது உடலை தனது மகன்-தலைவன் சீமானிடம்தான் ஒப்படைக்க வேண்டும். அவர்தான் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கையாகவே சொல்லி வந்தார். தனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருந்தார். இதனை செவ்வனே செய்தார் சீமான்.

அவசரத்தில் புலிக்கொடி தாங்கிய துணி கிடைக்காததால் சிறிது நேர கால தாமத்த்திற்குப் பின் அது வந்தவுடன் தனது அப்பாவின் உடலில் உடல் குலுங்கிய அழுகையுடன் போர்த்தி தனது கடமையைச் செய்தார் சீமான்..!  மணிவண்ணனின் உடலை படமெடுக்க அப்போதுவரையிலும் மீடியாக்களுக்கு அனுமதியில்லை என்றார்கள்..! பெட்டிக்குள் வைத்த பின்பே மீடியாக்கள் வீட்டினுள் அனுமதிக்கப்பட்டன..!

அதற்குள்ளாக அந்த வீடே நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது..! வாசலின் ஒரு பக்கக் கதவை மூடிவிட்டு பார்வையாளர்களுக்காக ஒரு பக்கம் மட்டுமே திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். உள்ளே வந்தவர்களை வெளியே இழுக்கின்ற வேலையையும் தொண்டர்களே செய்தார்கள்..! 

இப்போதுதான் அந்தப் பகுதி மக்களுக்கே மணிவண்ணன் இங்கேதான் குடியிருக்கிறார் என்பது தெரிந்திருக்கிறது.. முதலில் அந்தத் தெருவில் வசித்தவர்கள் வந்தார்கள். அக்கம்பக்கத்தினர் வந்தார்கள். பின்பு வந்த கூட்டம் இருக்கிறதே..!? எங்கேயிருந்துதான் இத்தனை கூட்டமோ தெரியவில்லை.. அன்றைய இரவு நான் அங்கேயிருந்த 10.30 மணிவரையிலும் மக்கள் வந்து கொண்டேதான் இருந்தார்கள்..!

எம்ஜிஆர் நகர், சத்யா கார்டன், அசோக் நகர் பகுதியில் இருந்துகூட மக்கள் பொடி நடையாக நடந்தே வந்திருந்தார்கள். மணிவண்ணன் என்னும் நடிகரை பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்திருந்த அவர்களின் முகத்தில் தெரிந்த ஆர்வமும், பார்த்து முடித்து வெளியில் வரும்போது பலரின் முகத்தில் தெரிந்த சிரிப்பும், பூரிப்பும் இது வேறுவகையான அஞ்சலி என்பதையும்தான் சொல்லியது..!

நான் அந்த வீட்டிற்கு இதற்கு முன் 2 முறை சென்றிருக்கிறேன்.. முதல் முறை ‘அமைதிப்படை’ இரண்டாம் பாகத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்காக.. வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்த நிலையில் அனைத்து சேனல்களுக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கே கொஞ்சம் போரடித்து, “மொத்தமா கொடுத்திரவா..?” என்றார். “ஸார்.. ஆபீஸ்ல திட்டுவாங்க ஸார்..” என்று இழுத்தவுடன், “ஓகே.. ஓகே.. அப்ப யாராச்சும் கேள்வி கேளுங்களேன்.. நானே பேசிக்கிட்டிருக்கேன். சொன்னதையே எப்படி திருப்பித் திருப்பிச் சொல்றது..?” என்றார்..! 

“இடைல கொஞ்சம் கேப் விட்டுட்டீங்க.. இப்போ மறுபடியும் இதுல வர்றீங்க..! இந்த ஒரு படம்தானா.. இல்லை அவ்ளோதானா..?” என்றேன்.. “அதெப்படிப்பா விட முடியும்.. இந்த மணிவண்ணன் சாகுறவரைக்கும் சினிமாதான்.. நடிகன்தான்.. எனக்கு நடிப்புதான் தெரியும்.. அதைத்தான் செய்யப் போறேன்.. நான் எங்கேயும் போக மாட்டேன்.. அடுத்தடுத்து படங்களையும் இயக்கத்தான் போறேன்..” என்றார் உறுதியாக..!

மீண்டும் ஒரு முறை தனிப்பட்ட பேட்டிக்காக அதே வீட்டிற்குச் சென்றிருந்தேன். பார்த்தவுடன் “வாங்க..” என்றார் புன்சிரிப்புடன். அந்தப் பேட்டி 5 நிமிடத்தில் முடிய.. “அவ்ளோதானா..? இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க..?” என்றார். “ஆமா ஸார்.. நியூஸ்ல போடப் போறோம். அதுக்காகத்தான்..” என்றேன்..! “வந்தது வந்துட்டீங்க.. அமைதிப்படை பத்தியும் ஏதாச்சும் கேளுங்க.. அதை தனி எக்ஸ்கிளூஸிவ்வா போடுங்க..” என்று ஐடியா கொடுத்தார். அதையும் செய்துவிட்டுத்தான் கிளம்பினேன்..! 

“வாங்க.. போங்க..” எந்த வயதினராக இருந்தாலும் இந்த மரியாதையைக் கொடுக்க மணிவண்ணன் ஸார் தவறியதே இல்லை..! சின்ன வயது கேமிராமேனாக இருந்தால்கூட அவர்களை தம்பிகளா இப்படி வாங்க.. உக்காருங்க என்று “ங்க” போட்டுத்தான் அழைப்பார். பேசுவார்..! 

எந்த விழாக்களுக்கு வந்தாலும் கை குடுக்க மறக்க மாட்டார். நெருங்கிய நட்பாளர்கள் எனில் பெயரைச் சொல்லி அழைத்து, இரண்டு கரங்களையும் சேர்த்துப் பிடித்துப் பாசத்துடன் பேசுவார்..! அந்த ஸ்டைலே தனி அழகு.. சினிமாவில்கூட அவர் காட்டாதது..! 

பொது மேடைகளில் “உட்கார்ந்து பேசுங்கள்” என்றால் “கூடாது..” என்பார். “தமிழ்நாட்டுல உக்காந்து பேசுறதுக்கு தகுதியுள்ள ஒரே ஆள் தந்தை பெரியார் மட்டும்தான்” என்பார்.. இந்த பெரியாரின் வெறியும், மார்க்சிய சிந்தனையும் சேர்ந்துதான் அவரை பண்பட்ட மனிதராக சேமித்த்து..! கடைசிவரையிலும் மதுரை பக்கம் சென்றால் தான் முன்பு வேலை பார்த்த தீக்கதிர் அலுவலகத்திற்குப் போகாமல் திரும்ப மாட்டாராம்..! கொஞ்ச நேரமாவது அலுவலகம் சென்று அமர்ந்துவிட்டுத்தான் வருவாராம்.. அந்த அளவுக்கு பழசை மறக்காதவர்..!


அன்றைய பொழுதில் பல பிரபலங்களும் வந்து அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்க ஒரேயொரு பிரபலத்தின் வருகைக்காக இரவு 10 மணிவரையிலும் மீடியாக்கள் காத்திருந்தன. ஆனால் அந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா வரவேயில்லை. இத்தனைக்கும் தனது சிஷ்யன் மணிவண்ணனின் இறப்புச் செய்தி அவரின் காதுக்கு எட்டியபோது, அவர் அண்ணா சாலை அருகேயுள்ள பார்சன் காம்ப்ளக்ஸில் இருந்த தனது அலுவலகத்தில்தான் இருந்தாராம். மறுநாள் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்ட நாளில் தேனிக்கு பயணமாகிவிட்டாராம் தனது சீரியலின் படப்பிடிப்புக்காக..! ஒரு குரு இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிக்க.. அந்த சிஷ்யன் அப்படியென்ன தப்பு செஞ்சுட்டார்..?

நெய்வேலியில் நடந்த காவிரி பிரச்சினைக்கான ஆர்ப்பாட்டத்தின்போது தன்னைத் தவிர வேறு யாரும் அறிக்கைவிடக் கூடாது.. மீடியாக்களிடம் பேசக் கூடாது.. தானேதான் தலைமை தாங்குவேன் என்றெல்லாம் சொல்லி ஒட்டு மொத்தத் தமிழ்த் திரையுலகத்தினரை பாரதிராஜா டென்ஷனாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், ம.தி.மு.க.வில் இருந்த காரணத்தினாலும், தமிழ்ப் பற்றாளர் என்ற முறையிலும் மணிவண்ணன் அந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தது குருவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. 

சிஷ்யன் தன்னை மிஞ்சிவிட்டானே என்ற கோபம் ஒரு குருவுக்கு வரவேகூடாது.. ஆனால் இந்தக் குரு கொஞ்சம் வித்தியாசமானவர் என்பதால் அனைத்திற்கும் கோபப்பட்டார். இந்தக் கோபத்தில்தான் மணிவண்ணன் அவரிடமிருந்து தூர தேசத்திற்கு தள்ளி வைக்கப்பட்டார்..!

அடுத்த வினை.. மணிவண்ணனின் மகள் ஜோதி திருமணத்தின்போது நடந்தது..! அன்றைய திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைக்கும் பொறுப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சென்றது.. இதைத் தெரிந்து கொண்ட பாரதிராஜா கடும் கோபத்துடன் கல்யாணத்துக்கு போகவே கூடாது என்றுதான் இருந்தாராம்.. கடைசியில் வரவேற்புக்கு மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டு அவசரமாக வெளியேறிவிட்டார்..! தான் பார்த்து, தன் செலவில் கல்யாணம் செய்து வைத்தவனின் மகள் கல்யாணத்தில் தனக்கு இரண்டாமிடமா என்ற கோபம் கொப்பளித்த்து குருவுக்கு..! ஆனால் சிஷ்யனோ "இது ஒருவகை நன்றிக் கடன்.." என்றார். 

‘கொடி பறக்குது’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது வில்லன் அரசியல்வாதி கேரக்டர் யார் என்றே முடிவு செய்யாமல் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தில் வசனம் எழுதிய கையோடு, இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த மணிவண்ணனின் மாடுலேஷனை கவனித்த ரஜினி, “அந்த அரசியல்வாதி கேரக்டருக்கு நம்ம மணியையே நடிக்க வைச்சா என்ன..? வசன உச்சரிப்புல பின்னுறாரே..?” என்று அழுத்தமாக சிபாரிசு செய்ய.. பாரதிராஜாவால் தட்ட முடியாத நிலையில் நடிகரானார் மணிவண்ணன். அதன் பின்பு அவர் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் அடுத்தடுத்த வருடங்களில் இருந்து கடைசிவரையிலும் அவர் நடித்த 400 படங்களின் மூலமாக வந்ததுதான்..! இந்த நன்றிக் கடனுக்காகத்தான் தாலி எடுத்துக் கொடுக்கும் பாக்கியத்தை ரஜினிக்கு தந்தார்..! இதுவும் வினையானது..!

இந்தக் கதையை மீடியாக்களிடம் சொல்லி, “இதுல என்ன ஈகோ வேண்டிக் கிடக்கு..? நான் என் நன்றியைத்தானே செலுத்தினேன்..?” என்று மணிவண்ணன் சொன்ன பின்பு, இது பெரிதாகி பேச்சுவார்த்தை அற்ற நிலைமைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது..! நெய்வேலி கூட்டத்தை புறக்கணித்து ரஜினி சென்னையில் தனியே ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதும் பாரதிராஜாவுக்கு கடும் கோபத்தை எழுப்பியது. இதற்காகவே பல முறை ரஜினியைத் தாக்கி பாரதிராஜா அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முறை "கொடி பறக்குது படத்துல எல்லாம் ரஜினியை நடிக்க வைச்சப்போ அவர் கன்னடர்ன்னு தெரியலையா..? அப்போ அவரை வைச்சு நாம சம்பாதிச்சிட்டு... இப்போ நாம வசதியா வந்த பின்னாடி அவர் கன்னடன்னு, தெலுங்கர்ன்னு பேசுறது பச்சை சந்தர்ப்பவாதம்.." என்று பாரதிராஜாவுக்கு பதிலடியே கொடுத்தார் மணிவண்ணன்.


வைகோவிடமிருந்து மணிவண்ணன் விலகி வந்த பின்பு அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக தலையெடுத்துக் கொண்டிருந்த தனது சீடன் சீமான் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். சீமான் தொடர்புடன் ஈழம், காவிரி, தமிழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்ததும் சிஷ்யனை யார் என்று கேட்கும் நிலைமைக்கு குருவையும் கொண்டு போனது..!

ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சீமானின் தம்பிமார்கள் காட்டிய ஆவேசத்தையும், எழுச்சியையும் பார்த்து பயந்துதான் போனார் பாரதிராஜா. இது அவர் கூட்டிய கூட்டமல்ல.. சீமான் கூட்டிய கூட்டம் என்பதுபோலாகிவிட.. குருவுக்கு சீமானைவிட அவரைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் சிஷ்யன் மீதுதான் கோபம் அதிகமானது..!

ஆனாலும் 4 வருடங்களுக்கு முன்னால் பாரதிராஜா தலைமையேற்று நடத்திய ஈழப் போரின் இறுதிக் கட்ட ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் மணிவண்ணனும் கலந்து கொண்டு “புலி நம்ம தேசிய விலங்கு.. அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை.. தம்பி பிரபாகரன் நம்ம அண்ணன் மாதிரி.. அவரும் ஒரு புலிதான்.. அப்போ அவரையும் ஆதரிக்க வேண்டியது நம்ம கடமை..” என்றெல்லாம் முழங்கிவிட்டுத்தான் சென்றார்..! அடுத்தடுத்த கூட்டங்களில் இவருக்கு அழைப்பு இல்லாவிட்டாலும்கூட இன்னொரு பக்கம் சீமானின் மேடைகளில் ஈழத்திற்காக தொண்டை கிழிய பேசி தனது நேரத்தை செலவிட்டவர் இந்த இயக்குநர்..!

“எந்த பிரபாகரன்?” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எகத்தாளமாகக் கேட்டபோது ஈரோட்டில், கோவையில் மேடை போட்டு இளங்கோவனை அர்ச்சித்தார்கள் சீமானின் தம்பிகள்.. இயக்குநர் மணிவண்ணனும் “யார் இந்த இளங்கோவன்?” என்ற தலைப்பில் பேட்டியெல்லாம் கொடுத்தார். அதே இளங்கோவன், பார்.. பார்.. நீ போயிட்ட.. நான் இருக்கேன்..” என்பதுபோல மணிவண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்து போனார்.

விகடனில் பாரதிராஜாவின் அந்த கேள்வி பதில் வந்த பின்பு அதைப் படித்து நிறையவே வருத்தப்பட்டிருக்கிறார் மணிவண்ணன். தனது குரு இன்னமும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறார். இதற்கு பதில் கேட்டு பல பத்திரிகைகள் முயன்றபோது அவருடைய போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜாவும் இந்த அளவுக்கு கீழிறங்கி எழுதியிருக்கக் கூடாது.. ஒரு குரு பிச்சைக்காரனை கோடீஸ்வரனாக்கினேன் என்று சிஷ்யனை பார்த்துச் சொன்னதாக நான் எங்கேயும் இதுவரையில் படித்ததில்லை. முதல்முறையாக இப்போதுதான் பாரதிராஜா என்று குரு வாயிலாக அறிகிறேன்.. இதனால் இந்தக் குருவுக்கு நிச்சயம் பெருமையில்லை. தீராத பழியைச் சுமந்து கொண்டுவிட்டார் பாரதிராஜா..! 

ரேடியோ சிட்டிக்கு மணிவண்ணன் கொடுத்திருக்கும் பேட்டியை கேட்ட அனைவரும் திகைத்துதான் போனார்கள்.. துடித்துதான் போனார்கள்.. ஆனால் அறிய வேண்டியவரோ இதெல்லாம் நடிப்பு என்பதாகவே எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது..!  பாரதிராஜாவின் கேரக்டரே இப்படித்தான் என்பதால் மீடியாக்களிடம் மட்டும் எந்த மாறுதலுமில்லை.. 

இயக்குநர் விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், தான் பாரதிராஜாவை விட்டு விலகி ஓடிய 2 தருணங்களிலும், தன்னைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து பணியில் சேர்த்தார் பாரதிராஜா என்பதை சுவையான திரைக்கதையோடு சொன்னார். இதைக் கேட்டபோது சுவாரஸ்யமே இல்லாமல், முகத்தில் எந்த பீலிங்கையும் காட்டாமல் இருந்தார் பாரதிராஜா. தன்னுடைய பேச்சில் பாக்யராஜ் பேசியதைக் குறிப்பிட்ட பாரதிராஜா, “பாக்யராஜ் சொன்னதெல்லாம் கரெக்ட்டுதான்.. ஆனா கொஞ்சம் ஆங்காங்கே தூவி தூவி பெரிசாக்கியிருக்கான்.. என்ன.. மணிவண்ணன் நிறைய பொய் பேசுவான். அதுலேயும் என்னை பக்கத்துல வைச்சுக்கிட்டே நிறைய பொய் பேசுவான் அவன்.. இவன்(கே.பாக்யராஜ்) கொஞ்சமா கலந்து பேசுவான். அவ்ளோதான்...” என்று பட்டவர்த்தனமாக பதில் சொல்ல பாக்யராஜ் வெறுத்தே போனார்..  பாக்யராஜை கண்டு கொள்ளாமலேயே விழாவில் இருந்து வெளியேறியவரை பார்த்து நமக்கும்தான் வெறுப்பாக இருந்தது..! இதுதான் பாரதிராஜா..!

அன்றைய தினம் 12 மணி முதல் மறுநாள் 12 மணிவரையிலும் கிட்டத்தட்ட 24 மணி நேரமும் மணிவண்ணனின் உடலைவிட்டு அகலாத நிலையில் அருகிலேயே அமர்ந்திருந்தார்கள் சத்யராஜ், சீமான், மனோபாலா மூவரும்..!  நாம் தமிழர் தம்பிமார்கள் எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும், வருகின்ற கூட்டம் நிற்காமல் போக.. போலீஸை வரவழைத்தும் கூட்டத்தை நிறுத்தத்தான் முடியவில்லை..!

வந்திருந்த பிரபலங்களை வாசலிலேயே மடக்கிப் பிடித்து மீடியாக்கள் தங்களது கடமையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தன.. இளமை காலங்களை தயாரித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி மணிவண்ணனின் நேர்மை பற்றிச் சொல்லிச் சிலாகித்தார்..!   

மலேசியாவில் இருந்து அவசரம் அவசரமாக ஓடி வந்த மகள் ஜோதியின் கதறல் தெருவிலேயே ஆரம்பித்தது.. வீட்டு ஹாலில் தரையில் விழுந்து அழுது புரண்டபோது உள்ளே ஹாலில் இருந்த அத்தனை பேருமே கதறினார்கள்..! 


இசைஞானி இளையராஜா கனத்த சோகத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார். குரு வரவில்லை. ஆனால் மகேந்திரன் வந்திருந்தார். உடலுக்கு அருகில் சேர் போட்டு ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்துவிட்டுத்தான் எழுந்து போனார். பேட்டி கேட்டபோது, “என்ன சொல்றதுன்னே தெரியலப்பா.. சாகுற வயசா இவருக்கு..? இன்னமும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.. எனக்கு ரொம்பவும் புடிச்ச இயக்குநர் இவர்.. இயக்கம் என்ற வார்த்தையே இவரது படங்களில் இருக்காது. அது வெளியில் தெரியாமலேயே இயக்கியிருப்பார்..  என்னை நிரம்பவும் பாதித்தவர் மணி..” என்று உருக்கத்துடன் அஞ்சலிகளை தெரிவித்தார். முதல் நாள் இரவில் விஜய் வந்தபோதே ஒரு சில ரசிகர்கள் கை தட்டியும், விசிலடித்தும் அவரை பயமுறுத்திவிட திரும்பிச் செல்லும்போது பேட்டியளிக்க மறுத்துவிட்டு ஓட்டமாய் ஓடி காரில் ஏறி அமர்ந்து தப்பிச் சென்றார்..!

மறுநாளும் வெயிலும் கூடி, வெப்பம் கொளுத்தியெடுக்க.. அந்தப் பகுதியே மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது..!  காலையில் மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த்தும், கவுண்டமணியும் வந்து சென்றனர்..! பாரதிராஜாவின் சார்பில் அவரது மகன் மனோஜ் வந்து சென்றதாகச் சொன்னார்கள். நான் பார்க்கவில்லை..! நேரம் கருதி சீக்கிரமாகவே கொண்டு சென்றுவிடலாம் என்றெண்ணி, 12 மணியோடு பார்வையாளர்களை தடுத்து நிறுத்திவிட்டு தூக்குவதற்கான பணிகளைச் செய்தார்கள் தம்பிமார்கள்..!

இந்த நேரத்தில்தான் கோவையில் இருந்து அவசரம் அவசரமாக விமானம் பிடித்து வந்து சேர்ந்தார் நடிகர் சிவக்குமார். உடன் கார்த்தியும்.. உள்ளே நுழைவதற்கே 10 நிமிடங்களானது..! இதற்கு மேல் யாரும் உள்ளே போக முடியவில்லை. ‘அமைதிப்படை’யை வாங்கி வெளியிட்ட தயாரிப்பாளர் டாக்டர் ராமே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது..!

மகளின் கதறல்.. தங்கை, அக்காளின் அழுகை.. மனைவியின் சன்னமான கூப்பாடு.. இது அத்தனையையும் கேட்டுக் கொண்டு சுடுகாடு நோக்கிப் பயணமானார் மணிவண்ணன். நாம் தமிழர் தம்பிமார்கள் அணிவகுத்து நடக்கத் துவங்க.. ஊர்வலமும் மெதுவாகத்தான் ஊர்ந்தது..! போரூர் சுடுகாட்டிற்கு திருமதி சத்யராஜூம், சிபிராஜும் வந்து காத்திருக்க.. பல பிரபலங்கள் நேராக சுடுகாட்டிற்கே வந்திருந்தனர்..! ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி., நடிகர்கள் விச்சு, வையாபுரி, சின்னத்திரை எழுத்தாளர் ராஜ்பிரபு, இயக்குநர் விடுதலை, என்று வந்திருந்த பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதுதான் சினிமாவுலகம்..!  

ராஜ்யசபா தேர்தல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்ட கையோடு வலது கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் மூவரணி உள்ளே வந்தது. இவர்கள் வந்த சில நிமிடங்களில் வைகோவும் வந்து சேர்ந்தார்.. மணிவண்ணனின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வேனில் இருந்து உடலை இறக்கவே பெரும் இழுபறியானது..! அத்தனை கூட்டம்..! ஆற்காடு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையிலும் தொண்டர்கள் கூட்டம் தொடர்ந்து நிற்க.. மரக்கிளைகள்.. காம்பவுண்ட் சுவர்கள்.. பக்கத்து வீட்டு மாடிகள் என்று அனைத்திலும் மனிதத் தலைகள்..

மணிவண்ணன் நாத்திகரே ஆனாலும், குடும்பத்தாரின் வேண்டுகோளுக்காக சிறிய அளவுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.. எப்போதும் பாடப்படும் சிவபுராணத்தின் பாடல்கள் நிறுத்தப்பட்டன. சடங்கு நடக்குமிடத்தில் நடந்த கூட்ட நெரிசலை பார்த்து வைகோவை வெறுத்துவிட்டார்.. உள்ளே நுழையவே பிரயத்தனம் செய்ய வேண்டியதாகியிருந்தது..! சீமான் பெரும்பாடுபட்டு வைகோவை உள்ளே அழைத்துச் சென்றார்..! இந்தக் களேபரத்தில் வெறுத்துப் போன சத்யராஜ் வெளியேறி வந்து ஓரமாய் நின்றுகொண்டார்.. தனது குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துபோய் அவரே களத்தில் குதிக்க.. பின்பு நாம் தமிழர் கட்சிக்கார பிரமுகர் ஒருவர் மைக்கை பிடித்து தம்பிமார்களை விலகிக் கொள்ளும்படி பல முறை அழுத்தமாகக் கேட்டுக் கேட்டு வழிகளை உண்டாக்கினார்..!

உற்ற நண்பன் சத்யராஜ் முன்னே செல்ல.. தனது குடும்பத்தினரும், நெருங்கிய நட்புகள் மட்டுமே பின் தொடர.. மணிவண்ணனின் உடல் மேலே எரியூட்ட கொண்டு செல்லப்பட்டது.. பல கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில்தான் இரும்புக் கதவு சாத்தப்பட்டு தடுக்கப்பட்டார்கள் தொண்டர்கள்..! மிகச் சரியாக 3.10 மணிக்கு ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கூச்சலும், இடையே பெண்களின் ‘ஐயோ.. ஐயோ’ என்ற சத்தமும் வர.. மணிவண்ணன் என்ற நமக்குப் பிடித்தமான ஒரு தோழர் அக்னியில் கரைந்து போனார்..!

உள்ளொன்று வைத்து பிறிதொன்றை பேசத் தெரியாத அவருடைய குணம் மட்டும்தான், கடைசியில் அவருக்கு பெரிய மன பாரத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்..! ‘அமைதிப்படை’ இரண்டாம் பாகத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் “எங்க டைரக்டருக்கு தான் மட்டுமே டைரக்டருன்னு நினைப்பு.. வேற யாரையும் அவர் மதிக்க மாட்டாரு. அதுலேயும் பாக்யராஜை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது.. பாக்யராஜ்கிட்ட நான் ஏதாவது பேசிட்டிருந்தா உடனே கூப்பிட்டு திட்டுவார்.. அவன்கூட உனக்கென்ன பேச்சுன்னு கண்டிப்பார்..” என்றெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருந்தார்..!

அதே கூட்டத்தில்தான் தன்னை இயக்குநராக்கியது இசைஞானி இளையராஜாதான் என்று அழுத்தமாக பதிவு செய்திருந்தார் மணிவண்ணன். ‘ஜோதி’ என்றொரு படத்தை மோகன், அம்பிகா நடிப்பில் உருவாக்கி அது பாதியிலேயே நின்று போன நிலைமையில் தவித்துக் கொண்டிருந்த மணிவண்ணனை கலைமணியிடம் அறிமுகப்படுத்தி வைத்து, “இவரை வைச்சு படமெடு. நான் உடனே மியூஸிக் போட்டுத் தரேன்..” என்று இளையராஜா வாக்குறுதி அளிக்க, கலைமணியின் தயாரிப்பில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றார் மணிவண்ணன். இந்த நன்றியையும் இசைஞானிக்கு இவர் தெரிவிக்க.. போதாதா குருவுக்கு..?! இதற்குப் பிறகு ‘ஜோதி’யையும் முடித்து வெளியிட்டார். இந்த பாதிப்பில்தான் தன்னுடைய முதல் குழந்தைக்கு ‘ஜோதி’ என்றே பெயரிட்டாராம்..!

அதே கூட்டத்தில் தனது முதல் படத்தில் இருந்து ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ வரையிலுமான 40 படங்களில் கேமிராமேனாக இருந்த சபாபதியை பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லி முடித்துக் கொண்டார் மணிவண்ணன். நகமும், சதையுமாக.. புருஷனும் பொண்டாட்டி போலவே இருந்து வந்த இந்தக் கூட்டணி, மதுவின் போதையால் எழுந்த சச்சரவால் ஒரு நாள் இரவில் முறித்துக் கொண்டபோது திரையுலகமே பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போனதாம்.. சபாபதி இல்லாமல் மணிவண்ணனா என்று..!? 

அதன் பின்பு சபாபதி ஆஸ்திரேலியா சென்று ஏதேதோ வேலை பார்த்து எதுவும் செட்டாகாமல் மீண்டும் சென்னை திரும்பி கோடம்பாக்கத்திலேயே கால் வைத்தார். அப்போதும் மணிவண்ணனுடன் இணையாமல் சில சீரியல்களுக்கும், படங்களுக்கும் பணியாற்றினார்.. சபாபதியின் பிரதான சீடர் சங்கர்தான் அதற்குப் பின்பு மணிவண்ணனின் அனைத்துப் படங்களுக்கும் கேமிராமேன்..! இந்தக் கூட்டணி அமைதிப்படை 2-ம் பாகத்தின் ஷூட்டிங்கை கோவையில் துவக்கிய அதே நாளில் சென்னையில் ஒளிப்பதிவாளர் சபாபதி தற்கொலை செய்து கொண்டது அசந்தர்ப்பமானது..! நடந்திருக்கவே கூடாதுதான். ஆனால் நடந்தேறியது.. 

400 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.. எத்தனை படங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஆனாலும் மணிவண்ணனின் நடிப்பு ஸ்டைலும், பேச்சு ஸ்டைலும் வேறு யாராலும் பின்பற்ற முடியாதது என்பது மட்டுமே நமக்குத் தெரிகிறது..!

ஒரு நாள் மதியப் பொழுதில் திண்டுக்கள் கணேஷ் தியேட்டரில் ‘நூறாவது நாள்’ படம் பார்த்தேன். பொழுது போக்குக்காக படம் பார்க்கத் துவங்கியிருந்த காலக்கட்டம். ஒரு திரில்லராக எடுத்துக் காண்பித்து விஜயகாந்த் அந்த சுவரைத் தட்டிப் பார்க்கும்போது நெஞ்சுக்குள் ஒரு கல்லெறிந்தது போன்ற ஒரு உணர்வைத் தூண்டிவிட்டது அவரது இயக்கம்..! ‘மணிவண்ணன்’ என்ற பெயர் நமக்குள்ளும் ஆழமாகப் பதிந்தது..! இதற்குப் பின்புதான் இவரது முந்தைய படங்களையே பார்க்கத் துவங்கினேன்..!

அடுத்த படமான ‘24 மணி நேரம்’. திண்டுக்கல் அபிராமி தியேட்டரில். எனக்குப் பிடிக்கவேயில்லை. எனக்கு முன் வரிசையில் ஒரு ஐயராத்து மாமி தனது மகள்கள் 4 பேரையும் அழைத்து வந்திருந்தார். சத்யராஜ் பெட்ரூமில் வரிசையா 7 பெண்களுடன் படுத்திருக்கும் காட்சியின்போது அவர்கள் பட்ட அவஸ்தை படத்தைவிட சுவாரஸ்யமாகவே இருந்தது..!

‘பாலைவன ரோஜாக்கள்’தான் மணிவண்ணனை மிக மிக பிடித்த இயக்கநராகக் கொண்டு வந்தது..! மலையாளப் படத்தின் தமிழாக்கம் என்றாலும், திரைக்கதையில் அதே விறுவிறுப்புடன் அப்போது நடந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கிண்டல் செய்யும்வண்ணம் “இங்க யாரும் பாலம் கட்ட வரலை போலிருக்கு...” என்ற வசனத்திலும், “கமிஷன் கொடுக்கலை போலிருக்கு. அதான் கட்டாம விட்டிருக்காங்க..” என்ற வசனத்தை பயன்படுத்திய இடத்திலும் அந்தப் படத்தின் பாதிப்பு அன்றைய அரசியலையே நினைவுபடுத்தியிருந்தது..!

இதன் பிறகு இவரது படங்களை விரட்டிப் பிடித்தபோதுதான் ‘முதல் வசந்தம்’ கிடைத்தது..! சத்யராஜ் அண்ட் மலேசியா வாசுதேவனின் எகத்தாளமான அந்த மாடுலேஷனும்... அதுக்கேற்றது போன்ற அந்த திரைக்கதையும் இப்போதும் அந்தப் படத்தை மறக்க முடியாத்தாக மாற்றியது.. இவரும் சத்யராஜும் சேர்ந்தால் லொள்ளோடு ஜொள்ளும் சேர்ந்த்து என்பதை இந்தப் படத்திலும் சொல்லிக் காட்டினார்கள்..! ஒரு இடத்தில் வசனம் இப்படி : விபச்சாரத் தொழில் செய்யும் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவார்கள். அந்தப் பெண் ஜலதோஷம் பிடிச்சிருக்கு என்று சிணுங்குவார்.. “பல ஊர் தண்ணி பாயுதுல்ல..!” என்று அலட்சியமாக வசனத்தை தெளித்திருந்தார் மணிவண்ணன். தியேட்டர் குலுங்கியது இந்த இரட்டை அர்த்த வசனத்தில்.. “ஆறு அது ஆழமில்லை” பாடலை எடுத்திருக்கும்விதம் மறக்க முடியாதது..!

‘உள்ளத்தை அள்ளித் தா’ படத்தில் தனது குருநாதரின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட வேண்டியே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் சுந்தர் சி. ‘டேய்’ என்று அவர் பேசும் வசனமே ஒரு கவன ஈர்ப்புதான்..! ஒரு வசனத்தை எத்தனை விதமாக பேசலாம் என்பதைப் பேசிக் காட்ட மணிவண்ணனால்தான் முடியும்..!  டி.பி. கஜேந்திரனின் ஒரு படத்தில் வினுசக்கரவர்த்தியின் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு இவர் செய்யும் காமெடிகளும், அலம்பல்களும் இன்றைக்கும் கண்ணிலேயே இருக்கிறது..!

எனக்கு அவருடைய படங்களில் அதிகம் பிடித்தது ‘அமைதிப்படை’யும், ‘தெற்குத் தெரு மச்சானும்’தான்..! ‘அமைதிப்படை’ டிரெண்ட் செட்டர் படம். அதனை முறியடிக்க இன்னொரு அரசியல் படம் இனிமேல் வருமென்று எனக்குத் தோன்றவில்லை..! ‘தெற்குத் தெரு மச்சானில்’ சத்யராஜ்-பானுபிரியா காதல் காட்சிகளில் இருக்கும் லவ்வை, இப்போதைய இயக்குநர்கள்கூட காட்ட முடியாது..!  அவ்வளவு அழகு.. அந்த போர்ஷனுக்காகாவே நான் அந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்..! அன்பாலயா பிரபாகரன் தயாரித்த அந்தப் படம் காதல், சமூகம் என்பதையும் தாண்டி இயக்குநராக அவருக்குப் பெருமை சேர்த்த படம்..!

‘இனி ஒரு சுதந்திரம்’. அவரது பெயர் சொல்லும் இன்னொரு படம். நடிகர் திலகத்தை படம் பார்க்க அழைத்து.. அவரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு.. “நானும் கப்பலோட்டிய தமிழன்ல நடிச்சேன். மூஞ்சில கரியைப் பூசிட்டானுக.. உனக்கு குழைச்சிட்டிருக்கானுகடி..” என்று சிவக்குமாரிடம் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டுப் போனாராம். கடைசியில் சிவாஜி சொன்னதுதான் நடந்தது..! சிவக்குமாருக்கு மட்டுமே பெயரை சம்பாதித்துக் கொடுத்த இந்தப் படம், மணிவண்ணனுக்கு பெரும் நஷ்டத்தைத்தான் கொடுத்தது..!

சத்யராஜுக்கு இவரைப் போன்றதொரு இயக்குநர் இனிமேலும் கிடைக்க மாட்டார். “மணிவண்ணனை போல அரசியல் டயலாக்.. ஒரு டயலாக்.. வேற யாரையாச்சும் எழுதச் சொல்லுங்க பார்ப்போம்.. யாராலேயும் முடியாது.. மணிவண்ணனால் மட்டும்தான் முடியும். அதுனால அவர் படத்துல மட்டும்தான் நான் வில்லனா நடிக்க முடியும்..” என்றார் சத்யராஜ். இனிமேல் அவருடைய சினிமா கேரியரில் வில்லன் நடிப்பு இருக்காது என்றே நானும் நம்புகிறேன்..!

லொள்ளு, ஜொள்ளு என்று இந்தக் கூட்டணி காட்டியவைகள் பற்றி பலருக்கும் பலவித கருத்துகள் இருக்கலாம். ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர் இப்படியெல்லாம் படம் எடுக்கலாமா என்று கேட்கும் லெவலுக்கெல்லாம் அமைதிப்படையின் முதல், இரண்டாம் பாகங்களில் பல காட்சிகள் இருந்தன.  “சினிமாவை சினிமாவாக மட்டுமே நான் பார்க்கிறேன்..! அதில் அல்வாவோடு சேர்த்துதான் மருந்தை கொடுக்க வேண்டும். ஒரேயடியாக மருந்தை மட்டுமே கொடுத்தால் அப்புறம் நானே மருந்து சாப்பிட வேண்டி வரும்..” என்று பதில் சொன்னார் மணிவண்ணன்.

அவர் கடைசியாக கலந்து கொண்ட விழா ஆபாவாணனின் சீடர் இயக்கிய ‘மறுமுகம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா. இதிலும் வழக்கம்போல தனது குருநாதரை கொஞ்சம் வாரிவிட்டார் மணிவண்ணன். முந்தைய இரவில் தண்ணியடித்திருக்கும்போது தான் எழுதிய வசனங்களை படித்துவிட்டு “உன்னை மாதிரி எவண்டா எழுதுறான்..? பிச்சுட்டடா மணி..” என்று கட்டிப் பிடித்து கொஞ்சும் பாரதிராஜா, மறுநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அதே வசன பேப்பரை மூஞ்சியில் விசிறியடித்து, “இதெல்லாம் ஒரு டயலாக்கா..? குப்பை..? என்ன மயிறு மாதிரி எழுதியிருக்க?” என்று திட்டுவாராம்..! “டயலாக்கை திருத்தித் திருத்தி எழுதி, எழுதி பழகினதால நமக்கு இப்பவும் எழுத்து நல்லாவே வருது.. இதெல்லாம் ஒரு டிரெயினிங்குதான்..” என்றார்.

அதே கூட்டத்தில் பேசிய ஆபாவாணன், தான் தயாரித்து அளித்த ‘கங்கா யமுனா சரஸ்வதி’ தொலைக்காட்சித் தொடரில் பணம் ஏதும் வாங்கிக் கொள்ளாமல் இலவசமாக நடித்துக் கொடுத்த மணிவண்ணனின் நல்ல மனதை பாராட்டித் தீர்த்தார். “இது ஆபாவாணன் என்ற திறமைசாலிக்கு நான் கொடுத்த மரியாதை” என்றார் மணிவண்ணன். அன்றைய தினம் ஒரு நெகிழ்ச்சியான விழாவாகத்தான் இது தெரிந்தது.. நன்றிக் கடனை தெரிவித்த கையோடு, “எனக்குத் தெரிஞ்சது சினிமாதான்.. நான் இனிமேலும் சினிமாக்குள்ளதான் இருக்கப் போறேன்.. என்னைத் தூக்கி வெளில போட்டாலும், திரும்பவும் சினிமாக்குள்ளதான் வருவேன்..” என்று தன்னம்பிக்கையுடன் சொல்லிவிட்டுப் போனார்.. இனி அவரது திரைப்படங்கள் மட்டுமே இங்கே பேசப்படும்..!

தனது குருநாதரை போலவே தானும் நல்ல சிஷ்யர்களை உருவாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறார் மணிவண்ணன். இதில் சுந்தர் சி.யும், ஆர்.கே.செல்வமணியும், சீமானும் முக்கியமானவர்கள். செல்வபாரதி, சி.வி.சசிகுமார், ஈ.ராமதாஸ், விக்ரமன், ஜீவபாலன் என்று இந்த லிஸ்ட் நீண்டுதான் செல்கிறது..! அனைவருமே இப்போதும் பலவித வேலைகளில் சினிமாக்குள்ளேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படித்தவர்.. பல வரலாற்று நூல்களையும், அரசியல் நூல்களையும் கரைத்துக் குடித்தவர்.. இதன் போக்கிலேயே தனது காலத்தில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல்.. வெளிப்படையாக பேசியவர்.. ஈழம், காவிரி பிரச்சினை, தமிழ் தேசம் என்றெல்லாம் பல விஷயங்களை பேசினாலும் விஷயத்தோடு பேசியிருக்கிறார்..! அவருடைய பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள் இப்போதும் நாம் தமிழர் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும்..! இனிமேலும் இந்த சிடிக்கள் மூலமாகவும் அவர் தான் நம்பிய கொள்கைகளை பரப்பிக் கொண்டேயிருப்பார்.. 

மனுஷனுக்கு கஷ்டம் வந்தால் தொடர்ந்து வரும் என்பார்கள்.. மணிவண்ணனுக்கும் இதுதான் நடந்திருக்கிறது.. அவருடைய மனைவி செங்கமலமும் இப்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருடன் போராடி வருகிறார்.. இந்த்த் துயரத்தைக்கூட தாங்கிக் கொண்டு இவரால் எப்படி சிரித்தபடியே விழாக்களுக்கு வர முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்த்து பிரமிக்க வேண்டியிருக்கிறது..! அந்தக் குடும்பத்திற்கு ஒரு நல்ல ஆறுதலையும், அரவணைப்பையும் முருகப் பெருமான் வழங்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்..!

தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்

14-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கலகலப்பை' முடித்துவிட்டு அதனை திரைக்குக் கொண்டு வந்த ஜோரோடு 'மதகஜராஜா'வையும் முடித்துவிட்டு அதன் பின்பு துவக்கிய 'தீயா வேலை செய்யணும் குமாரை' ரன் பாஸ்ட்டில் கொண்டு வந்து வெற்றிக் கொடி காட்டியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

இப்போது இருக்கின்ற சினிமா டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போல் அடுத்து ஒரு படம் வந்து திசை திருப்புவதற்குள் கல்லாவைக் கட்டிவிடலாம் என்று பொழைக்கத் தெரிந்த அனைத்து இயக்குநர்களுமே நினைக்கிறார்கள்..! சுந்தர் சி மட்டும் விதிவிலக்கா என்ன..? அவருடைய அவ்னி கம்பெனியின் சார்பில் படத்தைத் தயாரித்ததும்போலாச்சு.. காசும் சம்பாதிச்சது போலாச்சு என்ற அவரது உழைப்பின் வேகம்தான் நம்மை கொஞ்சம் அசர வைக்கிறது..! 

மனிதர் தீயாய் உழைத்திருக்கிறார் படத்தின் திரைக்கதையில்..! கொஞ்சமும் அலுப்புத் தட்டாத வகையிலும், லாஜிக்கை பார்க்க வைக்காத வகையிலும் நகைச்சுவை படங்களுக்கு திரைக்கதை அமைப்பது ரொம்பவே கஷ்டம்.. இதில் பலரது உதவியுடன் திரைக்கதையை அமைத்து அவர்களுக்கு டைட்டில் பெயரும் கொடுத்தமைக்காக அவருக்கு எனது நன்றிகள்..! படத்தின் திரைக்கதையில் நமது வலையுலக நண்பர் ரமேஷ் வைத்யாவின் பங்களிப்பும் இருப்பதாக அறிகிறேன்.. அவருக்கும் எனது பாராட்டுக்கள்..!


கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என்று தலைமுறை, தலைமுறையாக காதலித்தே திருமணம் செய்து கொள்ளும் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஹீரோ குமார், தனக்கென்ற ஒரு ஹீரோயின் கிடைக்காமல் இருக்கிறார்.. அவர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திலேயே வேலைக்குச் சேரும் ஹீரோயினை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். அந்தக் காதலுக்கு நோக்கியா கம்பெனி ஓனர் சந்தானம் ஹெல்ப் செய்கிறார்.. இந்த உதவி இறுதிவரையில் தொடர்ந்து சென்று இவர்களது காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான் மிச்ச மீதிக் கதை..! இதில் சந்தானம் தொடர்பான ஒரு சஸ்பென்ஸை உடைத்தால் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு சப்பென்றாகிவிடும் என்பதால் அதனை தவிர்த்துவிடுகிறேன்..! 

சித்தார்த் மென்மேலும் தேறி வருகிறார்.. சாக்லேட் பாயாகத் துவங்கி, கொஞ்சம் ஆக்சன் ஹீரோவாக ஆனவருக்கு இப்போது காமெடியும் நன்றாகவே வருகிறது..! முன்பு கார்த்திக் செய்த கேரக்டர்களை இப்போது சித்தார்த் செய்யலாம் என்று நினைக்கிறேன்.. சந்தானத்திடம் டிரெயினிங் எடுக்க அவர் படும் பாட்டையும், அதற்காக அப்பாவித்தனமாக அவர் சொல்லும் பதில்களும் நடிப்போடு சேர்ந்தே நம்மைக் கவர்கிறது.. வெல்டன் சித்தார்த்..! சிவப்பா இருக்கிறவங்களெல்லாம் பேச்சுலேயே வாய்ப்பு வாங்கிக்கிறாங்கன்னு சொல்றவங்க வாய்ல் நல்லாவே மண்ணையள்ளிப் போட்டிருக்காரு சித்தார்த்..! இது இப்படியே தொடர்ந்தால் சித்தார்த்துக்கு இங்கே ஒரு நிலையான மார்க்கெட் நிச்சயமாக கிடைக்கும்..!

என்னவொரு குழந்தைத்தனம்..? பப்ளிமாஸ் மாதிரி இருந்துக்கிட்டு ஹீரோயின் வேஷம் கட்டியிருக்கும் ஹன்ஸிகா பல்லு போன கிழடுகளையெல்லாம் கொஞ்சம் உசார் படுத்தியிருக்கிறார்..! படம் முழுவதும் இவரது இளமையை எப்படியாவது எந்தக் கோணத்திலாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்து இயக்குநரும், காஸ்ட்யூம் டிஸைனரும் இயக்குநரின் மனைவியுமான திருமதி குஷ்பூவும், கேமிராமேனும் கூட்டணி சேர்ந்து படையல் செய்திருக்கிறார்கள்..!

ஆசிய கண்டமே போற்றிப் புகழ்ந்த அசோக் பில்லர் தொடையழகி ரம்பாவை பிரபலப்படுத்தியே அதே டெக்னிக்கில் இதிலும் ஹன்ஸிகாவை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்..! இவருக்கு என்ன பட்ட்ப் பெயர் வைக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அம்மணி பாடல் காட்சிகளில் நடந்து வந்தாலே டான்ஸ் மாதிரிதான் இருக்கும். இதில் ஒரு குத்துப் பாடலுக்கு டப்பாங்குத்து டான்ஸ் வேறு ஆடியிருக்கிறார்..! மெலடி பாடல்களில் சிக்கென்ற உடையில் வருவதைப் பார்த்து நமக்குத்தான் பக்கென்று இருக்கிறது..! தெலுங்கு மணவாடுகளுக்கு ஹன்ஸிகாவே ஏன் பிடிக்கிறது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி.. நடிப்பு வருமா என்றவர்களுக்கு கணேஷ்வெங்கட்ராமனிடம் கிளப்பில் மென்மையான வாய்ஸில் பேசி காதலை கட் செய்யும் அந்தக் காட்சியை உதாரணத்துக்குச் சொல்லலாம்..! இன்னும் கொஞ்ச நாளைக்கு ஹன்ஸிகாவை ஒப்பேத்தலாம்..!  வாழ்க இயக்குநர்..!

சந்தானம் இதில் உண்மையாகவே நடித்திருக்கிறார். முதலில் சேர்த்து வைத்துவிட்டு பின்பு பிரிக்க வைக்கத் துவங்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது அண்ணனின் ஆட்டம்.. பெத்த அப்பனுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டும் காட்சியில் டயலாக் டெலிவரியிலும் கோபத்திலும், ஆத்திரத்திலும் அவர் பேசும் பேச்சுக்கள் நகைச்சுவையைக் காட்டிலும் ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது..!

சித்தார்த்தின் வீட்டில் தங்கிவிட்டு காலையில் அவர்கள் செய்யும் டிராமாவை பார்த்து நம்ப முடியாமல் “விக்ரமன் ஸார் படம் மாதிரியிருக்கு” என்று சொல்லும் சந்தானத்தை ரொம்பவே பிடிக்கிறது..! அண்ணனின் நோக்கியோ கம்பெனி மாதிரி ஊருக்கு நாலு பேர் இருக்கத்தான் செய்றானுக.. ஆனால் ஐடியா மட்டும் சினிமாவில் இருந்து சுட்டதாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையும், வசனமும் பெரும்பாலான காதலர்களால் இனிமேல் சுடப்படலாம்..!

படத்தின் மிகப் பெரிய பலமே திரைக்கதைதான்.. கணேஷ்வெங்கட்ராமன்-ஹன்ஸிகாவை பிரிக்க வேண்டி சந்தானம் சொல்லும் ஐடியாவும்.. சித்தார்த்துக்கு அவர் கொடுக்கும் டிரெயினிங்கும் படு சுவாரஸ்யமானவை.. காட்சியே நகைச்சுவையாக இருக்கும்பட்சத்தில் வசனம்கூட இரண்டாம்பட்சம்தான்.. இதில் திரைக்கதைக்காகவே இரண்டாம் பாகத்தை மட்டும் இன்னொரு வாட்டி பார்க்கலாம் போல தோணுது..!

இது போன்ற நகைச்சுவை படங்களுக்கு பாடல்களையும் நகைச்சுவையாகவே போடலாம் என்று நினைத்தார்களோ.. சத்யாவின் இசை அப்படியொன்றும் கவரவில்லை..! ஆனால் சந்தானம்-ஹன்ஸிகா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளில் ஓட்டியிருக்கும் பின்னணி இசை மட்டுமே கவர்கிறது..! நன்று..! திருட்டுப் பசங்க பாடல் மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உள்ளது.. மற்றதில் எவன் பாட்டைக் கேட்டான்..? ஹன்ஸிகா.. ஹன்ஸிகா.. ஹன்ஸிகா..!!!

கணேஷ் வெங்கட்ராம், திவ்யதர்ஷிணி, பாஸ்கி, பாலாஜி, சித்ரா லட்சுமணன், ஹன்ஸிகாவின் தோழி என்று பலரும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். அனைத்துமே நகைச்சுவை என்பதால் இது அவர்களது நடிப்பு கேரியரில் முக்கியமான படமாக இல்லாமல் போனதுதான் அவர்களுடைய துரதிருஷ்டம். இன்னொரு சந்தோஷம்.. வழக்கு எண் படத்தில் நடித்த ரித்திகா சீனிவாஸை கொஞ்சம் குளோஸப்பில் அடிக்கடி காட்டி ஸ்கிரீனை அழகு செய்திருக்கிறார்கள். அதற்கும் எனது நன்றிகள்..!

இன்னமும் எழுத நினைத்தாலும் சந்தானத்தின் சஸ்பென்ஸ் இடையில் சண்டைக்கு வருவதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை.. படத்தை அவசியம் பார்த்து சிரியுங்கள்..! டைம் பாஸான மாதிரியும் இருக்கும்.. கொஞ்சம் கவலையை மறந்த மாதிரியும் இருக்கும்..!

யமுனா - சினிமா விமர்சனம்

10-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈ.வி.கணேஷ்பாபு. பல சின்னத்திரை தொடர்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்திருக்கும் நடிகர். தன்னுடைய சின்ன வயதிலேயே குறும்படம் ஒன்றை இயக்கி தேசிய விருதையும் பெற்றவர்.. தனது தணியாத சினிமா தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்வகையில் சினிமாவை இயக்கும் பணியில் ஈடுபட்டு இன்றைக்கு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்..! படம் பரபரப்பாக ஓடுகிறதோ இல்லையோ.. படம் பார்த்தவர்கள் சிறப்பான இயக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது..! 
தான் காதலித்த பெண் சூழ்நிலையால் ஒரு கும்பலிடம் சிக்கித் தவிக்க.. அவளை காப்பாற்ற முயல்கிறார் ஹீரோ. அதில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை..! இந்தப் படத்தின் சஸ்பென்ஸை உடைத்தால் நன்றாக இருக்காது என்றே கருதுகிறேன். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பாருங்கள்..!

யமுனா என்ற ஹீரோயினின் கேரக்டரையே படத்துக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குநர். படம் ஆரம்பிக்கும்போது மெதுவாகவே நகர்கிறது.. சில இடங்களில் திரைக்கதையே சிரிக்க வைக்கிறது.. நாம பார்க்காததா என்றே சொல்லத் தோன்றுகிறது..! சாம்ஸை வைத்துக் கொண்டு இவர்கள் கல்லூரியில் அடிக்கும் லூட்டியை பார்க்கும்போதும், காதலுக்காக ஹீரோ காதலியிடம் மல்லாடும்போதும், இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என்றும் திட்டத்தான் தோன்றுகிறது.. எல்லாமே அந்த இண்டர்வெல் பிளாக் வரும்வரையில்தான்.. இடைவேளைக்கு பின்பான பகுதியின் திரைக்கதையும், கேரக்டர்களின் அழுத்தமான நடிப்பும்தான் படத்தின் மிகப் பெரிய பலம்.  

பாலுமகேந்திராவின் நடிப்புக் கல்லூரியில் பயின்ற சத்யா என்பவர்தான் ஹீரோ.  பார்த்தவுடனேயே பிடிக்காத ஒரு முகம். ஆனால் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்பதால் சொல்லிக் கொடுத்தவரையிலும் இவருடைய நடிப்பை பார்க்கலாம்..!

ரம்யா.. தெலுங்கில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டாம்.. நந்தி விருதும் பெற்றவராம்..! சிறந்த அறிமுகம். வஞ்சகமே இல்லாமல்தான் நடித்திருக்கிறார். கல்லூரி கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் துவங்கி இறுதிக் காட்சிவரையிலும் இவர் இருக்கும் பிரேமில் கண்ணை வெளியே எடுக்க முடியவில்லை..! என்னடா புதுமுகங்களை நடிக்க வைக்குறாங்க என்பவர்கள் இந்தப் படத்தில் இவருடைய நடிப்பையும் கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் அம்மணிக்கு தமிழ் சுத்தமாக லேது.. ஆனால் உச்சரிப்பு பலமாக இருக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். டப்பிங் வாய்ஸ் கொடுத்தவருக்கும் எனது பாராட்டுக்கள்..! 

அடிக்கடி சில படங்களில் பார்த்திருந்தாலும் வினோதினிக்கு இந்தப் படத்தில்தான் பெத்த பேரு.. ஆண்ட்டி கேரக்டரில் ஆண்ட்டியாகவே நடித்திருக்கும் இவருக்குக் கொடுத்திருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சும்.. இயக்குநரின் இயக்கமும் இவருக்கு நிச்சயம் பெயரையும், புகழையும் பெற்றுத் தருமென்று நம்புகிறேன்..!


யமுனாவுடன் காரில் போகும்போதும், வரும்போதும் வினோதினியின் பேச்சும், பார்வையும், நடிப்பும் கவர்கிறது.. மெல்லிய வார்த்தைகளில் கோபத்தைக் காட்டி மிரட்டுவது.. அன்பாகப் பேசுவதுபோல கவிழ்ப்பது.. நரேனை வீட்டுக்கு அழைக்க போனில் பேசும் அந்தக் காட்சி.. இப்படி பலவும் அந்தக் கேரக்டருக்கே ஒரு ஊக்கம் கொடுத்திருக்கிறது.. உச்சமான நடிப்பு பாலாசிங்கை கடத்திவரும் காட்சியில் காரின் பேனட்டில் கைகளை விரித்து வைத்துக் கொண்டு கேமிராவுக்கு முகத்தைக் காட்டி புன்முறுவல் பூப்பது.. அம்மணியை தெலுங்கு பக்கம் கொண்டு போய்விட்டா, வில்லி கேரக்டர்ல கலக்கிருவாங்க..! வெல்டன் வினோதினி..!

இப்போதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களின் இசைதான் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று. புதிய இசையமைப்பாளர் இலக்கியன்.. கணேஷ்பாபுவின் ஊர்க்காரராம்.. பால்ய காலத்து நண்பராம்.. நட்புக்காகவும், அவரது திறமைக்காகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள் இயக்குநருக்கு. இப்படியெல்லாம் நண்பர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

வைரமுத்துவின் வரிகள் 6 பாடல்களிலுமே கலக்கியிருக்கிறது..! இதில் ‘டிம்ப டிம்பா’ பாடல் யூடியூபில் சக்கைப் போடு போட்டுள்ளது..! தமிழ்ச் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக சுடுகாட்டில் ஒரு டூயட் பாடலை எடுத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர்.. பாடல் வரிகளை கேட்டால், வைரமுத்துவை திட்டுவதற்கு இன்னும் ஒரு கூட்டம் கிளம்பி வரும் என்று நினைக்கிறேன்..!

"பற்கள் எல்லாம் அழகிய ரம்பம்
பாவியின் உள்ளம் எப்படி நம்பும்?
ஒரு நாள் அவளே உள்ளம் பறிப்பாள்.. 
மறுநாள் அவளே பள்ளம் பறிப்பாள்..
பெண்ணை நம்பாதே மனமே
பெண்ணை நம்பாதே.."

இப்படிச் சொல்லியிருக்கிறார் 'பெண்ணை நம்பாதே' பாடலில்..!

"கூந்தலை அள்ளி அள்ளி
குதிரைவால் போட்டுப் போட்டு
நடந்து நீ வருகையில்
என் மனம் குதிரையாகுதே.."

இப்படி துள்ளிக் குதித்து எழுதியிருக்கிறார் 'ஓஹோ ஒற்றைப் பனித்துளி' பாடலில்..!

சுடுகாட்டுப் பாடலில் இசையின் இரைச்சலை சற்றுக் குறைத்திருந்தால், இன்னமும் நன்கு கவனப்பட்டிருக்கும் அப்பாடல்..!

"மண்வாழ்க்கை முடியுமிடத்தில்
மணவாழ்க்கை தொடங்குது பெண்ணே..
மலர்க்கூட்டம் சிதறுமிடத்தில்
மணமேடை அமைந்தது கண்ணே.."

என்று துவங்கும் பாடலின் சரணத்தில் வைரமுத்துவின் தமிழ் விளையாடியுள்ளது..

"பால் பழங்கள் பருகுவதென்று 
பள்ளியறை சாஸ்திரமுண்டு
பழுத்த பழம் இங்கும் உண்டு
பாலோடு சடங்குகள் உண்டு.."

சுடுகாட்டில் ஒரு பக்கம், பிணம் எரிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அன்றைக்குக் கல்யாணமான தம்பதிகள் தங்களது முதல் இரவை இப்படித்தான் கொண்டாடுகிறார்களாம்..!

'வித்தகக் கவிஞர்' வாலிக்கு பலமான போட்டியாக வைரமுத்து வருவார் போலிருக்கிறது.. இதனாலேயே இப்போதெல்லாம் கவிஞர் ஒரு படத்தில் சில பாடல்கள் மட்டுமே என்றாலும் ஒப்புக் கொள்கிறாராம்.. அதிலும் புதிய இளம் இயக்குநர்கள் என்றால் அதற்கும் பிகு செய்யாமல் ஒப்புக் கொள்கிறார். 

'ஒரு பொண்ணப் பாரு' பாடலில் வேறொரு வைரமுத்துவை பார்க்க வேண்டியிருக்கிறது..!

ஒரு பொண்ணப் பாரு
அவ கண்ணப் பாரு
அவ உதட்டப் பாரு
அவ கழுத்தப் பாரு
அப்புறம்
மனசப் பாரு..!

ஆல்கஹால் ஊற்றிச் செய்த
அல்வாதான் அழகு குட்டி
சிக்கான சின்னப் பெண்ணின்
அக்காதான் ஷில்பா ஷெட்டி..!

இதயம்தான் செல்போனு
அவதானே சிம்கார்டு
சிம்கார்ட போட்டுப் பார்த்தா
அவ மட்டும் ரெக்கார்டு..!

கண்ணுக்குள்ளே சாரல் சிந்தும் ஏற்காடு
அவ போகும் வழியில் ரெண்டு பக்கம் பூக்காடு..!

அட பப்பர பப்பா
நெஞ்சில பம்பரமப்பா.. அட
உலகம் முழுதும் கலகம் பண்ணும்
ஹார்மோன் தப்பா...!

மொத்தத்தில் ஆசை வைத்து
மூக்கின் மேல கோபம்தானே..
துப்பட்டா மூடும் நெஞ்சை
துப்புத் துலக்கப் போறேன் நானே..!

பேஸ்புக்கில் தினமும் வந்து
பேசிப் பேசி மயக்கிடுவா..
பாஸ்புக்கப் பறிச்சிடுவா..
பல்லைக் காட்டி இளிச்சிடுவா..!

ஹை ஹீல்ஸின் ஓசை கேட்டு
ஹைவேயில் டிராபிக் ஜாமு..
இவ போட்ட கிளாசுக்குள்தான்
நடக்குது கிளாஸ் ரூமு..!

இவளோட அப்பன்தாண்டா
என் மாமூ..
மம்தா மம்தா குல்கர்னி
மனசுக்கேத்த மச்சினி..!

நாட்டுக்குள் அணுமின் நிலையம்
கூடாதென்று சில பேர் சொல்ல..
கண்ணுக்குள் அணு மின் நிலையம்
கொண்டாய் பெண்ணே.. எங்கே சொல்ல..!

அவளோட பேசப் பேச 
செல்போன் பில்லு சார்ஜ் ஏறும்..
அவள் மீண்டும் பேசப் பேச
செல்போனுக்கே சார்ஜ் ஏறும்..!

அவள் வீட்டு பூந்தொட்டிக்குள்
என் ரோஜா பூப்பதெப்போ..
என் வீட்டு ரேசன் கார்டில்
அவள் பேரை சேர்ப்பதெப்போ.?!.

பித்தத்தில் பீ.பீ. ஏறுது
அப்பப்போ..
மம்தா மம்தா குல்கர்னி
மனசுக்கேத்த மச்சினி..!

வைரமுத்துவின் செந்தமிழின் உச்சக்கட்டம் 'டிம்ப டிம்பா' பாடலின் வரிகள்தான்..!


சின்னாஞ்சிட்டு மினுக்கி வர்றா
சிலுக்கு மக குலுக்கி வர்றா..
ஆறு முதல் அறுபதையும்
ஆட்டிப் படைக்க வர்றா..!

உரிச்சு வைச்ச கோழியைப் போல்
சிரிச்சுக்கிட்டே சிறுக்கி வர்றா..
ஒத்த எலையில் பந்தி வச்சு
ஊரை அழைக்க வர்றா..!

கட்டான மேனி பாரு..
கட்டி வச்ச ஆப்பிள் பாரு..
எப்போதும் பிளாக்கு லேபிள்
ஊத்தி வைச்ச கண்ணப் பாரு..!

என்னோட ஆட்டம் போட்ட
ஆளு மொத்தம் ஆறு நூறு..
என் பேரில் வீடு வாசல்
எழுதி வைச்ச ஆளு நூறு..!

பஞ்சணைப் பாடத்துக்குப்
பள்ளியறை தானடா
பல்கலைக் கழகங்களும் 
படிக்குமிடம் நானடா..!

மஸ்கட்டு ஆளு வந்து
தங்க பிஸ்கட்டு குடுக்குறான்..
இங்கிலாந்து துரை எனக்கு 
எஸ்எம்எஸ்ஸு அடிக்கிறான்..!

கட்டில் போட்டு எல்லாம் அள்ளித் தாரேன்- நானும்
கத்த வித்தை எல்லாம் சொல்லித் தாரேன்..

தயங்காதேடா - புத்தி
மயங்காதேடா..
தொடு.. தொடு.. தொடு.. தொடு என
தொடர்வேனடா..!

என்னோட வாழ்ந்து பாரு
இதயத் துடிப்பு மாறிப் போகும்..
என்னோட டைரி பாரு
ஊரு மானம் நாறிப் போகும்..

பவர் கட்டு ஏற ஏற
எனது ரேட்டு ஏறிப் போகும்..
அஞ்சு, பத்து குறைக்க வேணாம்..
அந்தச் சூடு ஆறிப் போகும்..!

ஊரே குடிச்ச பின்னும்
ஊறி வரும் தேனுடா..
யாரும் புடிச்சுக்கலாம்
அடக்கமான மீனுடா..!

களவும் கத்து மற
கெழடு கட்டை சொன்னது..
கட்டில் கத்து மற
நாட்டுக் கட்டை சொல்வது..!

பாவம் பண்ணக் கடவுள் மனுசன வச்சான்-செஞ்ச 
பாவம் தீர மனுசன் கடவுள வச்சான்..!

கடவுள் வாழ நீயும்
பாவம் பண்ணு..!
கட கட கட கடைசியில்
எல்லாம் மண்ணு..!

இந்தப் பாடலில் ஆடிய நாட்டியத் தாரகையைவிடவும், பாடலின் வரிகளே அதிகம் கவர்கின்றன.. வெல்டன் கவிப்பேரரசு.. வாழ்க நீர்.. வாழ்க உமது தமிழ்..! 

அனைத்துப் பாடல்களுமே திரும்பவும் கேட்கும்வகையில் இருப்பதால்தான் உன்னிப்பாகக் கேட்கவும் முடிகிறது..! இந்தப் பாடலின் சிறப்பை நினைத்துதான் தயாரிப்பாளரும் பாடல் வரிகளை தனியே அச்சிட்டு வழங்கியிருக்கிறார்கள். வாழ்க தயாரிப்பாளர்..! 

குப்பத்து மக்களை மிக எளிதாகக் கவரும் வினோதினியின் பேச்சும், அவரது அலட்டல் இல்லாத நடிப்பும், யமுனா மீதே கோபம் கொள்ளும்வகையில் அவரது அக்கம்பக்கத்தினரை திசை திருப்பும் அந்தத் திடீர் திரைக்கதையும்.. யமுனாவின் அம்மாவாக நடித்திருக்கும் மீனாளின் பரபர நடிப்பும்.. காவல்துறையின் கிரிமினல் அண்டர்கிரவுண்ட் தொடர்பையும் அடுத்தடுத்த காட்சிகளில் கிளைமாக்ஸை நோக்கி நம்மையே தள்ளிக் கொண்டு போகிறது..! 

பெரிய ஸ்டார்களை நடிக்க வைத்தால் அவர்களுக்காக திரைக்கதை திருத்தப்பட வேண்டுமே என்பதற்காகத்தான் புதுமுக இயக்குநர்கள், புதியவர்களையே நடிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அதுவே படத்தின் வியாபாரத்திற்கும், விளம்பரத்திற்கும் மிகப் பெரிய இழப்பையும் ஏற்படுத்துகிறது..! எல்லாவற்றையும்விட படத்திற்குள் இழுக்க ஏதொவொன்று தேவைப்படுகிறது. அந்த ஒன்று இதில் மிஸ்ஸிங் என்றே நினைக்கிறேன்.. பட்... நேரத்தை வீணாக்காமல் சிறந்த இயக்கத்துடன் கூடிய ஒரு படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது..!

இயக்குநர் கணேஷ்பாபுவுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து தனது திறமையை வெளிக்காட்டும் சூழல் வர வாழ்த்துகிறேன்..!

கரிமேடு - சினிமா விமர்சனம்

03-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மைச் சம்பவங்களை படமாக்கினால் அதன் தாக்கமறிந்த ரசிகர்களின் கூட்டம் இன்னமும் கொஞ்சம் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு ஓடி வரும் என்பது சினிமா இயக்குநர்களின் எண்ணம். இதற்கேற்றவாறு பல உண்மைச் சம்பவங்கள் இதற்கு முன்னர் பலவாறு எடுத்துக் கொத்து புரோட்டோ போடப்பட்டு சிதைக்கப்பட்டது சினிமா வரலாறு. அப்படியொரு கதையை இப்படத்தின் அடித்தளமாக எடுத்துக் கொண்ட இயக்குநர் முடிந்த அளவுக்கு இதனை நேர்மையாகச் செய்திருப்பதாகச் சொல்கிறார்.. 

சென்ற ஆண்டு ‘தண்டுபால்யா’ என்ற பெயரில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் இது. படத்தின் தயாரிப்புப் பணிகள் கமுக்கமாக நடைபெற்று வந்த நிலையில் இதன் ஹீரோயின் பூஜா காந்தி அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்ற ஒற்றைச் செய்தியே இந்தப் படத்தை திராவிட நாடுகளுக்கு அடையாளப்படுத்தியது.. கன்னடத்தில் இருந்து தாவி, தெலுங்கில் ஓடோடி முடிந்து இப்போது தமிழுக்கு இயக்குநர் இராம.நாராயணனால் கொண்டு வரப்பட்டுள்ளது..!மனிதக் கறியைத் தவிர மீதமுள்ளவற்றை ரசித்து உண்பவர்கள். குழுவில் இருக்கும் பெண்கள் யாருக்கு யார் கணவன் என்பதே தெரியாத அளவுக்கு அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பவர்கள்.. நாகரிகத்தை கண்ணால்கூட காட்டாதவர்கள்.. பணம்.. இதற்காக எத்தகைய செயலையும் செய்யத் தயங்காதவர்கள் என்று அந்த தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த சில மக்களை அடையாளம் காட்டியது கர்நாடக போலீஸ்..!

அந்த டீமை வளைத்துப் பிடித்து சிதைத்த கதையைத்தான் இந்த 2 மணி 10 நிமிட கதையில் சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்துலேயே பலரும் “இன்னும் நிறைய வெட்டியிருக்கலாம்.. பார்க்க சகிக்கலை..” என்று சொல்லி தியேட்டரைவிட்டு வெளியே ஓடிய சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது. தமிழிலும் அப்படியே..! 

பார்க்கவே விசித்திரமான முகங்கள்.. கொடூரமான மனதை வெளிக்காட்டாத செய்கைகள்.. கொலை செய்ய அவர்கள் செய்யும் முன்னேற்பாடு ஸ்கெட்ச்சுகள், கொலை செய்யும்போது அவர்கள் அதனை ரசித்துச் செய்யும் காட்சிகள்.. “எதையும் அனுபவிச்சு செய்யணும்டா..” என்பதற்கு இந்தக் கொலைகாரர்களும் உதாரணமாகத்தான் இருந்திருக்கிறார்கள்..!

இவர்களைப் பிடித்தே தீருவது என்று வைராக்கியத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர்.. அவரிடமே “பார்த்து போங்க” என்று எச்சரிக்கையை வாங்கிவிட்டு அவர் சென்றவுடன் இவர்கள் சிரிக்கும் சிரிப்பு.. கழுத்தை கத்தியினால் அறுக்கும்போது வரும் அந்த கடைசி நிமிடத் துடிப்புதான் ரொம்ப ரசனையா இருக்கும் என்று அந்தக் கும்பலின் தலைவனே சொல்லுவது நமக்குள் பக்கென்றாகிறது.. படத்திலும் பல கொலைகளை அப்படித்தான் ரசனையாக எடுத்திருக்கிறார்கள்..!

எந்த ஹீரோயினும் சத்தியமா முன் வந்திருக்க மாட்டார்கள்..! எப்போதும் அயிட்டம் கேர்ள் போல முந்தானையை நடுவில் விட்டுக் கொண்டு காட்சியளிப்பது.. பீடியை வலித்து ரசித்து குடிப்பது.. தண்ணியடித்துவிட்டு ஆடுகிற ஆட்டம்.. “நோட்டம் பார்க்க போகலியா..” என்று புருஷனிடம் அடி வாங்குவது..! “குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா...?” என்று அப்பாவியாய் கேட்கும் அந்தத் தோரணை..! பூஜாகாந்திக்கு சிறந்த நடிகை விருது கொடுத்தது ஓகேதான்..!

5000 ரூபாய்க்குக் கொலை செய்வது.. போலீஸ் இன்ஸ்பெக்டரையே நடுரோட்டில் போட்டுத் தள்ளுவது.. ஜாமீன் எடுக்க வக்கீலிடம் தன்னையே அடகு வைப்பது போல் பூஜா காந்தி பேசுவது.. வக்கீல் வேடத்தில் இவர்களைவிட பெரிய அயோக்கியனை காட்டியிருப்பது. இவர்கள் சாப்பிடும் கழுதை கறியை பார்த்து அந்தக் கழுதை முகத்தைச் சுளிக்கிறத பாருங்க.. இங்கதான் நமக்கும், அவங்களுக்கும் வித்தியாசமே தெரியுது.. நாம முகமூடி போட்டுக்கிட்டு செய்றோம்.. அவங்க போடாம செய்றாங்க. அவ்ளோதான் வித்தியாசம்..!

மனிதர்களிடத்தில்தான் மனித உரிமைகளை பத்தி பேச முடியும். இவர்கள் மிருகங்கள் என்று இயக்குநரே தீர்ப்பு சொல்லிவிட்டதால், உண்மையாக போலீஸ் விசாரணையில் என்ன நடக்கும் என்பதை அப்படித்தான்.. நல்லா வேணும் என்பதை போல காட்சிகளில் திணித்திருக்கிறார்..!

பிடிபட்ட இந்தக் கும்பலை இன்ஸ்பெக்டர் அடித்துத் துவைத்து எடுப்பது.. சித்ரவதை செய்வது.. கால் நகங்களை குறடு வைத்து பிடுங்குவது.. மலத் துவாரத்தில் மிளகாய்ப் பொடி தடவிய குண்டாந்தடியை நுழைப்பது.. ஆண் குறியில் கரண்ட் ஷாக் கொடுப்பது.. பூஜாவை அரை நிர்வாணமாக்கி முதுகுத் தோலை உரிப்பது.. என்று போலீஸ் செய்திருக்கும் தேர்ட் டிகிரி விசாரணைகளை அப்பட்டமாக அப்படியே எடுத்துக் காண்பித்திருக்கிறார். கர்நாடகாவில் இதெல்லாம் வீரப்பன் வேட்டையிலேயே நாங்க பார்த்துட்டோமாக்கும் என்று பம்மாத்தாக அலட்சியமாக விட்டிருக்கிறார்கள். நமக்குத்தான் மனசு ‘கெதக்’ என்கிறது..! 

கீதாஞ்சலியில் நளினியுடன் இன்னொரு ஹீரோயினாக நடித்த யமுனாவை ரொம்ப வருஷம் கழிச்சு இதுல அம்மா கேரக்டர்ல பார்த்தாச்சு.. ராம்கோபால்வர்மாவின் பிரியங்கா திரிவேதி, மார்க்கெட் இல்லாததால் இது போன்ற சின்ன கேரக்டரில் நடிச்சிருக்காங்க போலிருக்கு..! 

டப்பிங் படம்ன்னாலும் வசனங்களை நச்சென்றுதான் எழுதியிருக்கிறார்கள். திராவிட மொழிகளில் தமிழில் இருந்து பிரிந்தவைதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பதால் சினிமாத்துறையினருக்கு இது பெரிய உதவியாக இருக்கிறது..! அப்படியே அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பேசி நடித்ததுபோல் வசனங்களை பேச வைத்திருக்கிறார்கள்..! ஆங்கிலத்திலேயே பிய்க்கும்போது இதென்ன ஜூஜூபி..?!

இவ்வளவு காதலுடன் இருக்கும் தம்பதியினரை போய் கொலை செய்றானுக பாருங்க என்று நம்ம பரிதாபத்தைக் கூட்டுவதற்காக ஒரு டூயட்டு..! பின்னணி இசை இந்தக் கொலைகார பாவிகள், கொலை செய்யப் போகும்போது கொஞ்சம் பில்டப்பை கூட்டிக் கொடுத்து அவங்களுக்குத்தான் உதவியிருக்கு..! 

உண்மைக் கதையை படமாக்கி மக்களிடம் பெயர் எடுக்க விரும்புபவர்கள், வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்கள் என்பதையும் படமாக்கிக் காண்பித்தால் இன்னும் சிறப்பான பெயர்களே அவர்களுக்குக் கிடைக்கும்..! 

இளகிய மனதுடையவர்கள் தயவு செய்து இந்தப் படத்தைத் தவிர்க்கவும்..!

இசக்கி - சினிமா விமர்சனம்

01-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எது சிறந்த படம் என்று தீர்மானிப்பதில் பலருக்கும், பலவித அளவுகோல்கள் உண்டுதான்.. என்னளவில் ஏற்கெனவே பார்த்துச் சலித்த கதையாக இருந்தாலும், வித்தியாசமான ஒரு கோணத்தில் அதனை அணுகியிருக்க வேண்டும்.. திரைக்கதை கடிகாரத்தை பார்க்கவிடாதவாறு செய்திருக்க வேண்டும்.. வசனங்கள் கதைக்கு அழுத்தம் கொடுப்பதாய் இருத்தல் வேண்டும்.. எல்லாவற்றிற்கும் மேலாக இயக்கம் நம் மனதுக்குள் கொஞ்சமேனும் ஊடுறுவல் செய்திருக்க வேண்டும்.. இது அனைத்தையும் இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் இந்தப் படத்தை ஒரு முறையாவது பார்க்கக் கூடிய படம் என்று அடித்துச் சொல்கிறேன்..! 


சென்னையில் இருந்து நிலம் வாங்குவதற்காக தனது கார் டிரைவர் ஹீரோவுடன் மதுரை வருகிறார் முதலாளி சித்ரா லட்சுமணன். வந்த இடத்தில் ஸ்கூட்டியில் மதுரையை வலம்வரும் ஹீரோயினை பார்த்தவுடனேயே விரட்டுகிறார் ஹீரோ.. தன் மனதுக்குள் அவள் இருப்பதாக தனது முதலாளியிடம் சொல்ல.. முதலாளி ஹீரோவை அழைத்துக் கொண்டு ஹீரோயின் வீட்டுக்கு நேரில் சென்று பெண் கேட்கிறார். ஹீரோயினின் அப்பா ஏற்கெனவே ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருப்பதால் இவர்களை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். 

அப்படியும் ஹீரோ ஹீரோயினை மறக்க முடியாமல் அவள் பின்னால் அலைய.. இப்போது ஹீரோயினே ஹீரோவைத் திட்டுகிறாள். தன் பின்னால் அவன் வரக்கூடாது என்று..! ஆனால் ஹீரோ வந்தே தீருவேன் என்று ஹீரோயினை கடத்த.. அதே நேரம் ஹீரோயினுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வர.. ஹீரோயினின் அப்பாவும் தனது மகளை வலைவீசித் தேட.. என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஹீரோ ஏன் ஹீரோயினை பின் தொடர்கிறார் என்பது மகா சஸ்பென்ஸ்.. அதனை இங்கே உடைக்க நான் விரும்பவில்லை. தியேட்டருக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

முதலில் எனக்குப் பிடித்தது திரைக்கதைதான்..! ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்து கதையை கொண்டு போய் அதனை உடைத்த இடமும், அதனை வைத்து முந்தின கதையை அழகான குழப்பமில்லாத வகையில் சொல்லியிருப்பதும் படத்தினை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது..!

இதைவிடவும் ஹீரோ, ஹீரோயின், வில்லன் நடிகர், அப்பாவாக நடித்திருக்கும் 'பசங்க' சிவக்குமார், இவரது தங்கை என்று அனைவருமே அவரவர் கேரக்டருக்கு பங்கமில்லாமல் நடித்திருக்கிறார்கள். பாஸ் என்கிற பாஸ்கரனைவிடவும் நல்ல கேரக்டர் சித்ரா லட்சுமணனுக்கு.. நிஜமாகவே பெண் கேட்டு போகுமிடத்தில் அவரது பேச்சும், ஆக்சனும்தான் அந்த காட்சியை வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதைவிடவும் தண்ணியடித்துவிட்டு பாதி உளறலுடன், மீதி தெளிவுடனும் ஹீரோவுக்கு சமாதானம் சொல்லும் அந்தக் காட்சியிலும் சித்ரா ஸார் பலே.. பலே.. தண்ணியடிச்சா எல்லாருக்கும் நடிப்பு தானா வந்திரும்போல..!

ஹீரோ புதுமுகம்.. பார்த்தால் அப்படித் தெரியவில்லை. முதற்பாதியில் வருபவரைவிட, இரண்டாம் பாதியில் வரும் ஹீரோ அசத்தல் நடிப்பு.. அந்த மேக்கப்பும், அப்பாவித்தனமும் அவருக்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறது..! சண்டை காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவரைக் குறை சொல்ல ஒரு வாய்ப்பும் இல்லை..!

ஆத்ரிஷா என்ற தெலுங்கு நடிகை இதில் அறிமுகம். ஏற்கெனவே கன்னட, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறாராம்.. அதான பார்த்தோம் என்று படம் முடிந்தவுடன் பேசிக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள். நன்கு நடித்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி.. அது ஒன்றே போதும்..! சின்னச் சின்ன ஆக்சன்களிலேயே இப்போதெல்லாம் நடிப்பை கிளாஸாக கொண்டு வரலாம் என்று திரையுலகத்தினர் கண்டறிந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நேரம் படத்திற்குப் பிறகு இதிலும் பார்த்த இடத்திலெல்லாம் சின்ன சின்ன ஷாட்டுகளில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆத்ரிஷா. கூடவே இந்தப் பொண்ணுக்கு டப்பிங் பேசிய அந்தப் பெண் கலைஞருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும், பிசிறு இல்லாமல் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது உதட்டசைவு.. 

'பசங்க' சிவக்குமார், வில்லனாக நடித்தவர், ஹீரோயினின் அத்தை என்று யாரும் சோடை போகவில்லை..! சிவக்குமாருக்கு ஏன் இத்தனை வில்லத்தனம் என்பதற்கு கேரக்டரே அப்படித்தான் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதற்காக தனி ஸ்கெட்ச் எதையும் செய்யாமல் விட்டதற்கே இயக்குநருக்கு ஒரு தேங்க்ஸ்..!

நான்காவதாக பெரிய பாராட்டு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு.. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களின் வரிகளும் தெள்ளத் தெளிவாக காதுகளில் விழுகின்றன..! ஒரு பாடலில்கூட இசையின் இரைச்சல் காதுகளைத் துளைக்கவில்லை.. மெலடி பாடல்களின் ரசிகர்கள் அவசியம் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுப் பார்க்கவும்.. பின்னணி இசையில்கூட முதன்முதலாக ஹீரோ, ஹீரோயினைத் தேடியலையும் காட்சியிலும், ஹீரோயினை பார்க்கும்போதெல்லாமும் பின்னணியில் ராகத்தைத் தாலாட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த்தேவா.. இந்தப் படத்தில் தனியே தெரியுமளவுக்கு சுதந்திரமாக இசையமைத்திருக்கிறார் போலும்..!

கிராமத்துக் கதை.. வழக்கமான சாதி, ஸ்டேட்டஸ் பார்க்கும் அப்பா.. கெட்ட வில்லன்.. ஹீரோயின் ஹீரோவை முதலில் வெறுப்பது. பின்பு திடீரென ஹீரோ மீது காதல் கொள்வது.. பரிதாப உணர்ச்சி காதலாக மாறுவது..  வில்லன் பெண் கேட்பது.. அந்தஸ்துக்காக அப்பன் ஒத்துக் கொள்வது.. செய்த தவறுக்காக வில்லனை ஹீரோயினே மாட்டிவிடுவது.. திருமண ஏற்பாடுகள்.. ஹீரோ தப்பிப்பது.. இறுதியில் உண்மை தெரிவது என்று வழக்கமான கதைதான் என்று ஈஸியாக சொல்லிவிட முடியும்.. ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும்போது யாரும் அப்படி நினைக்கவிடாத அளவுக்கு திரைக்கதையால் நம்மை ஈர்த்திருக்கிறார் இயக்குநர் கணேசன்..! பாராட்டுக்கள்..!

அனைத்து கலைஞர்களுமே மிகச் சிறப்பான முறையில் நடித்துக் காண்பித்திருப்பதால் இந்தப் படம் ஒரு முறை உட்கார்ந்து பார்க்குமளவுக்கு சிறப்பாக இருப்பதாக, மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.. 

இதற்கு மேல் அவரவர் விருப்பம்..!