ICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்

29-09-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

மாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும்,

இரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.

அக்டோபர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும் துருக்கி நாட்டுத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

அதில் திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:

06.10.08 - 6.45 மணிக்கு - BLISS


07.10.08 - 6.15 மணிக்கு - MY FATHER AND MY SON

07.10.08 - 8.10 மணிக்கு - ICE CREAM ICE CREAM
08.10.08 - 6.00 மணிக்கு - ISTANBUL TALES

08.10.08 - 7.45 மணிக்கு - WHO KILLED SHADOWS

FRAME OF MIND FILM FESTIVAL என்ற பிரிவில் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில் திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:

10.10.08 காலை 9.30 மணிக்கு - VADAJJYNABATHAN (Malayalam)
10.10.08 மதியம் 2 மணிக்கு - IRIS (Eng)

10.10.08 மாலை 6 மணிக்கு - வெயில் (தமிழ்)

11.10.08 காலை 9.30 மணிக்கு - OIL ON WATER(Eng)

11.10.08 மதியம் 2 மணிக்கு - THE AVIATOR (Eng)

11.10.08 மாலை 6 மணிக்கு - TAARE ZAMIN PAR (HINDI)

12.10.08 காலை 9.30 மணிக்கு - HIDING DIVYA(Eng)

12.10.08 மதியம் 2 மணிக்கு - CANVAS (Eng)

12.10.08 மாலை 6 மணிக்கு - WHO LAMHE (HINDI)


அக்டோபர் 13-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரையிலும் நெதர்லாந்து நாட்டுத் திரைப்பட விழா நடைபெறும். இதில் பங்கேற்கும் படங்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அக்டோபர் 21-ம் தேதியிலிருந்து 24-ம் தேதிவரையிலும் ரஷ்யத் திரைப்பட விழா ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல்:

21.10.08 - மாலை 6.30 - BARBARA THE FAIR WITH THE SILKEN HAIR

21.10.08 - இரவு 7.45 மணிக்கு - KINGDOM OF CROOKED MIRRORS

22.10.08 - மாலை 6.15 மணிக்கு - THROUGH FIRE, WATER AND BRASS PIPES
22.10.08 - இரவு 8 மணிக்கு - YELLOW SUITCASE

23.10.08 - மாலை 6.15 மணிக்கு – THE TALE OF TSAR SALTAN

23.10.08 - இரவு 7.45 மணிக்கு – FATHER PROST

24.10.08 - மாலை 6.15 மணிக்கு – THE SCARLET FLOWER

24.10.08 - இரவு 7.45 மணிக்கு – SNOW QUEEN

மறைந்த திரைப்பட நடிகர் குருதத் நினைவாக அவர் நடித்தத் திரைப்படங்கள் அக்டோபர் 29-ம் தேதியிலிருந்து நவம்பர் 2-ம் தேதி வரையிலும் திரையிடப்படுகிறது.

29.10.08 - மாலை 6.30 மணிக்கு - CHOWDHAVIN KA CHAND
30.10.08 - மாலை 6.30 மணிக்கு - PYASA
01.11.08 - மதியம் 3.30 மணிக்கு - KAGAZ KE PHOOL
02.11.08 - மதியம் 3.30 மணிக்கு - SAHIB BIBI AUR GHULAM / MR.&MRS.55

அக்டோபர் 31-ம் தேதியன்று அமெரிக்கத் திரைப்படம் “AMERICAN PRESIDENT” திரையிடப்படும்.

இத்திரைப்பட விழாக்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும்.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புக்கு : http://www.chennaifilmfest.org/

குசும்பனுக்கு ஒரு எச்சரிக்கை

குசும்பா..

அடங்குவாய் என்று நினைத்துத்தான் கால்கட்டுப் போட்டோம்.. நிச்சயம் அடங்க வேண்டும் என்று நினைத்துத்தான் அனைவரும் வாழ்த்துச் சொன்னோம்.. அடங்கியே ஆக வேண்டும் என்று சொல்லித்தான் பரிசுப் பொருள்களை வழங்கினோம்.. இன்னமும் அடங்காமல் ஆடினால் என்ன அர்த்தம்..?

எங்கே பார்த்தாலும் குசும்பன்.. எதில் பார்த்தாலும் குசும்பன்.. குசும்பன் இல்லாத வலைப்பதிவே இல்லை என்பது மாதிரி வலையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

"அடங்க மறு" என்பதெல்லாம் காட்டில் வாழும் சிங்கங்களுக்கும், கழுதைப் புலிகளுக்கும் மட்டுமே சொன்னது.. குசும்பா உனக்கல்ல..

மொக்கைப் பதிவை போடவே கூடாது, மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த, என்னை இப்படியொரு பதிவை போட வைத்துவிட்டாயே கிராதகா..

நான் என்ன சொல்லி வாழ்த்தினேன் ஞாபகமிருக்கிறதா..? “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு..” என்றேன்.. பரவாயில்லை.. இப்போதும் வாபஸ் வாங்க மாட்டேன்.. ஆனால் கூடுதலாக ஒன்றையும் சொன்னேன்.. “பார்சலைப் பிரித்துப் பார்த்துவிட்டு அலமாரியில் வைக்கக்கூடாது.. அட்டை டூ அட்டை படித்துப் பார்த்து அர்த்தம் புரிந்து உணர வேண்டும். உணர்த்தியதை வெளிப்படுத்த வேண்டும்” என்றேன்.. மறந்துவிட்டதா..?

உனக்காக, உனக்கு நல்ல புத்தி வர வேண்டுமென்பதற்காக அவசரம், அவசரமாக ஓடோடிப் போய் கடையைப் பூட்டப் போன நேரத்தில் கடைக்கார அம்மணியிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த விலை மதிக்க முடியாத புத்தகத்தை வாங்கி வந்தேன்..

என் ஸ்கூல் புத்தகத்திற்குக்கூட நான் இப்படி ஒழுங்காக அட்டை போட்டதில்லை. முந்தின நாள் பெய்த மழையோடு மழையாக கடைக்கு ஓடிப் போய் குசும்பனுக்கு சிவப்பு கலர்தான் பிடித்தமானது என்று சொல்லி அதே நிறத்தில் அட்டை வாங்கி புத்தகத்திற்கு அதனைப் போர்வையாகப் போர்த்தி, கூடவே அதற்குப் பொட்டு வைத்து, இரவு முழுவதும் என் தலைமாட்டிலேயே வைத்திருந்து அவ்வப்போது பார்த்துப் பார்த்து வைத்திருந்தேன்.. தெரியுமா உனக்கு..?

சந்திப்பு நாளன்று காலையில் எழுந்தவுடனேயே பல்லைக்கூட விளக்காமல் மறந்து விடுவோமோ என்றெண்ணி எனது பி.எம்.டபிள்யூ., வண்டியின் சைட் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு, அதையும் பத்து நிமிடத்திற்கொரு முறை பூட்டியிருக்கிறதா என்று சோதனை செய்துபார்த்து பைத்தியம் போல் இருந்தேன்.. இதையெல்லாம் நான் அன்றைக்கே http://truetamilans.blogspot.com/2008/04/30.html - இந்தப் பதிவில் எழுதவில்லை.

எழுதியிருந்தால் “கால் லூஸ¤, அரை லூஸ¤, முக்கால் லூஸ¤, முழு லூஸ¤” என்று நீயே அனானி பெயரில் போட்டுத் தாக்கியிருப்பாய் என்பது எனக்குத் தெரியுமடா குழந்தை..

ஆனாலும் அவ்ளோ தூரம் ஆசையாய், அன்பாய், பாசமாய் வாங்கிக் கொடுத்த அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தையாவது நீ இதுவரையில் படித்தாயா என்பது எனக்குத் தெரியவில்லை. ஊருக்குப் போனதும் ஒரு வரி “புத்தகம் நன்று.. அருமை.. பிடித்திருந்தது” என்று எழுதினாயா..? இல்லையே.. உனக்குத்தான் இங்கே வெட்டித்தனமாக கும்மியடிக்கவே நேரமில்லையே..

எந்தப் பதிவிற்குள் கால் வைத்தாலும் உன் பெயர்தான் இருக்கிறது. அதுவும் ஒரே பதிவில் 20 இடங்களில்கூட பார்த்துத் தொலைத்தேன். இதற்கெல்லாம் எங்கேயிருந்து கிடைக்கிறது நேரம்..? இந்த நேரத்தில் அந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்திருக்கலாமே.. எனக்கும் சொல்லியிருக்கலாமே..

குசும்பா கடைசியாக கேட்கிறேன்..

இனிமேல் எனக்கு மடல் எழுதி சொல்ல வேண்டாம்.. இதுவரையில் செய்யாததற்கு தண்டனையாக 25 பக்கத்திற்கு அந்தப் புத்தகம் பற்றி உனது பதிவில் விமர்சனம் எழுத வேண்டும்.

எழுதாவிட்டால் நீ அடுத்த முறையும் இங்கு வரும்போது அதே புத்தகம் உன் கையில் திணிக்கப்பட்டு, அங்கேயே அதனைப் பிரித்துப் படிக்கும் ஸ்கூல் தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கிறேன்..

பின்குறிப்பு :

உன்னை மாதிரியே அன்னிக்கு மாயவரத்துல இருந்து நடந்தே வந்தேன்னு ஒருத்தர் கதை விட்டுட்டு, ‘வெங்கட்-தீபா’ மாதிரி லேசா நடிச்சுக் காமிச்சுட்டுப் போனாரே.. அவர்கிட்டேயும் சொல்லி வை.. உனக்கிடப்பட்ட எச்சரிக்கையினால் சுதாரித்து அவர் முந்திக் கொண்டால் நல்லது.. இல்லாவிடில் ‘வெங்கட்-தீபா’ சீரியலில் எப்படி பேசுவாரோ அதே பாணியில் அவருக்கும் கடிதம் வரும்... சொல்லி வை..

நன்றி

வருகிறேன்..

ராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்

20-09-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..

இதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.

இப்போது அவருடைய சீடர் முறை.. இம்முறை காதலை ஓரங்கட்டிவிட்டு கல்யாணத்திற்குள் நுழைந்திருக்கிறார் சேரனின் சீடர் ஜெகன்னாத்.

காதலின் முதல் முத்தம் எந்த அளவுக்கு மறக்க முடியாததோ அதே அளவு மீள முடியாத ஒரு சுகானுபவத்தை ஆண், பெண் இருபாலருக்கும் கொடுப்பது, திருமணத்திற்கு முன் தங்களது துணையை நேரில் பார்த்த நாளாகத்தான் இருக்கும்..

அந்த நாளில் ஆரம்பிக்கும் கதை அதே போன்ற வேறொரு நாளில் அதே இடத்தில் முடிவதுதான் படத்தின் ஹைலைட்டான சிறப்பு.

சுயத்தொழில் செய்து தற்போது தொழிலதிபராக இருக்கும் வேணுவிற்கு லேசான திக்குவாய்.. பள்ளியில் நன்கு படித்திருந்தும் விதியின் சுழற்சியால் மன அழற்சி நோய்க்கு ஆளாகி படிப்பைக் கைவிட்டு சிறிது காலம் மனநலப் பயிற்சி பெற்று வீடு திரும்பிய சோக அனுபவத்தைக் கொண்டவன்.

அதன் பின் படிப்பில் கவனம் போய் சுயத்தொழிலில் ஆர்வமாகி திருமண அழைப்பிதழ்கள் டிஸைன் செய்யும் தொழிலில் மிக வேகமாக முன்னேறி இன்று பெரியதொரு பணக்காரனாகத்தான் இருக்கிறான். கார், வீடு என்று வசதிகளுடனும் அம்மாவுடனும் இருப்பவன் தனக்கு துணை வேண்டுமென நினைத்துப் பெண் பார்க்கத் துவங்குகிறான். இதில்தான் படம் துவங்குகிறது.

முதல் பெண்ணான ரஞ்சனியின் அழகான மறக்க முடியாத முகம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டாலும் தன் உண்மைக் கதையைச் சொல்லிவிடுகிறான். வந்தது வினை. “எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை.." என்ற ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டு முதல் முயற்சியே தோல்வியில் முடிந்து திரும்புகிறான்.

மீண்டும் முயற்சிக்கிறான். பல பெண்களும் அவனுடைய திக்குவாயையும், மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும் குறிப்பிட்டுச் சொல்லி நோகடித்து அனுப்புகிறார்கள். மணிவண்ணனின் மகள் வித்யா மட்டும் அவனை ஏற்றுக் கொள்ள கல்யாணத்திற்கு முதல் நாள் மண்டபம் வரைக்கும் திருமணம் வந்துவிடுகிறது.

அன்றைய தினம் வித்யா தனது காதலனோடு ஓடிவிட, வருங்கால மாமனாரையும், மாமியாரையும் காப்பாற்ற வேண்டி பழியைத் தன் மேல் போட்டுக் கொண்டு “திருமணம் பிடிக்கவில்லை.. நிறுத்தவும்..” என்று எழுதிவைத்துவிட்டு வெளியேறுகிறான் வேணு.

அன்றைய தினத்தின் மூட் அவுட்டினால் வெளியில் காலார நடந்து போகும்போது விபத்தொன்றில் சிக்கப் போய் கண் பார்வை இல்லாத வானொலி அறிவிப்பாளர் நெடுமாறனால்(பசுபதி) காப்பாற்றப்படுகிறான் வேணு. இனி கதை நெடுமாறனைச் சுற்றி வருகிறது.

இருவரும் காபி ஷாப்பில் இருக்க.. கஜாலா காரில் வந்து நிற்க.. கஜாலாவைப் பார்த்துச் சொக்கிப் போய் வேணு பார்க்க.. “கார்ல ஒரு பொண்ணு இருக்காளா..? அழகா இருப்பாளே.. நம்மை பார்த்து சிரிப்பாளே..?” என்றெல்லாம் கேட்டுவிட்டு “அது என்னோட வொய்ப்..” என்று நெடுமாறன் சொல்லும்போது வேணுவோடு சேர்ந்து ரசிகர்களுக்கும்தான் திகைப்பு..

இங்கே ஆரம்பிக்கும் பசுபதியின் கதையில் அந்த ஒரு சண்டைக் காட்சியைத் தவிர மற்றவைகளில் மறுக்க முடியாத உண்மை நடிப்பு.

தினமும் வானொலியில் அவர் நடத்தும் தன்னம்பிக்கை பற்றிய நிகழ்ச்சியில் மனதைப் பறி கொடுத்திருக்கும் கஜாலாவுக்கு நெடுமாறன் கண் பார்வையற்றவர் என்பது தெரியவில்லை. தெரிந்த பின்பு அவருடன் நெருங்கிப் பழகிவிட்டு நண்பி என்ற ஸ்தானத்திலிருந்து மனைவி என்ற ஸ்தானத்தை அடையும் தன் விருப்பத்தைச் சொல்கிறார்.

வாசல் கதவைத் திறந்து வைத்து “போங்கன்னு சொல்றேன்..” என்பதையே பதிலாகச் சொல்லும் நெடுமாறனுக்கு.. அவர் பாணியிலேயே கஜாலா அப்போதே பதில் சொல்லும் விதம் டச்சிங்தான். பக்கத்து வீட்டுக்காரம்மாவுக்கு கேட்பதுபோல், “இந்த நெடுமாறனுக்கு தாழ்வு மனப்பான்மை.. மத்த ஆம்பளைங்க மாதிரி தன்னால இருக்க முடியாதோன்னு தப்பா நினைக்கிறார். அதான் கல்யாணம்னு சொன்னவுடனே பயப்படுறார்” என்று வீட்டு வாசலில் நின்று பொறுமிவிட்டுப் போவது அழகு.

கஜாலாவின் ஆளுமை நெடுமாறனுக்குள் பரவியதும் அவரால் அதைத் தவிர்க்க முடியாமல், கஜாலாவை பெண் பார்க்க வந்திருக்கும் வைபத்தின் ஊடேயே போய் தான் கஜாலாவைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி பெண் கேட்டு திருமணம் முடிந்த கதையும் விரிவாகவே வர கதாநாயகன் சேரன் ஒரு அரை மணி நேரம் திரையிலேயே இல்லாமல் போனதைக் கண்டு நான் பயந்துதான் போனேன்.

ஆனாலும் பள்ளி செல்லும் குழந்தை, தன் ஊனத்தைப் பார்க்காமல் உள்ளத்தை நேசிக்கும் மனைவி என்ற குடும்பத்துடன் வேணுவுக்குக் காட்சியளிக்கும் நெடுமாறன் அளிக்கும் தைரியம் வேணுவுக்கு மறுபடியும் தொலைந்து போன வாழ்க்கையை அரை மணி நேரத்தில் மீட்டெடுத்து தருகிறது. “உங்களைப் பார்த்ததிலேயே எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருச்சு ஸார்..” என்று சொல்லிவிட்டுப் போகிறான் வேணு.

ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதைப் போல இந்த இடத்திலிருந்து ஓடிப் போன வித்யாவின் அப்பா மணிவண்ணன் வேணுவுக்கு கார்டியனாக மாறி அவரே அவனுக்காகப் பெண் பார்க்கத் துவங்குகிறார்.
முதல் பெண் பார்த்த அதே நாகர்கோவிலில் மறுபடியும் பெண் பார்க்க வந்த பின்புதான் கதை சூடு பிடிக்கிறது.

வந்த இடத்தில் வித்யாவை நிறை மாத கர்ப்பிணியாகப் பார்த்து அதிர்ச்சியடையும் வேணு, அவளை ஸ்கேனிங் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து வர அங்கே ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கும் ரஞ்சனியைப் பார்த்து திகைத்துப் போய் நின்று, அவளிடம் தன்னுடைய ரிலேட்டிவ்ஸ் என்று வித்யாவை பொய் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்து அவளைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு பெண் பார்க்கும் படலத்தைத் துவக்குகிறான்.

இம்முறை பார்க்கும் காயத்ரி(கார்த்திகா) என்ற இந்தக் கேரக்டர்தான் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். நாகர்கோவில் வட்டார பேச்சு வழக்கில் தனது தெற்றுப்பல் தெரிய பேசுகின்ற பேச்சில் கவர்ச்சி நடிகைகளின் குலுக்கல் ஆட்டம்கூட மனதில் நிற்காது.

“நீங்க என்னை காயத்ரின்னே கூப்பிடலாம்.” என்று சொல்வதாகட்டும்.. “நானும் கொஞ்சம் டைம் எடுத்துக்குறேன்.. நீங்களும் கொஞ்சம் டைம் எடுத்துக்குங்க. அப்புறமா போன், மெயில்ன்னு நிறைய இருக்கே.. அதுல பேசிட்டு அப்புறமா நாம டிஸைட் பண்ணிக்கலாமே..?” என்று சொல்லும் மெச்சூரிட்டி கேரக்டர் அவருக்கு.

இந்தப் பெண் கிடைத்தாற்போலத்தான் என்ற திருப்தியுடன் ஆட்டோவில் திரும்பும் வேணுவுக்கும், மணிவண்ணனுக்கும் ஆட்டோ டிரைவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடப் போகிறான் என்பது தெரியவில்லை.

நடுவழியில் ஒரு இன்ஸ்பெக்டர் ஆட்டோவை நிறுத்தி டிரைவரான நிதின் சத்யாவை அழைத்து நாலு அறை அறைந்து “போடா” என்று சொல்லியனுப்ப மெளனமாகத் திரும்பி வந்து ஆட்டோவை எடுத்து ஓட்டி வருபவனிடம் அவனது கதையைத் தானே கேட்டு தனது கதையை முடித்துக் கொள்கிறான் வேணு.

“நான் திருடன்தான்.. ஒரு நாள் ராத்திரி ஒரு வீட்ல திருடப் போய் ஒரு பொண்ணைப் பார்த்துட்டேன் ஸார்..” என்று ஆரம்பித்து தனது காதல் கதையைச் சொல்லும்போது கதை இன்னொரு பக்கம் ஜெட் வேகத்தில் போகிறது.

அந்த இரவில் காயத்ரியின் வீட்டில் நடைபெறும் அந்தக் கூத்து ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. அதுவும் கொள்ளையடிக்கப்பட வேண்டிய நகைகளை மணப்பெண் போல அலங்காரம் பண்ணி போட்டுக் கொண்டு வரச் செய்து அவள் கையாலேயே காபியை வாங்கிக் குடித்துவிட்டு “அஞ்சு மணி வரைக்கும் பேசிட்டிருக்கலாமே” என்று நக்கல் செய்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பது அக்மார்க் கலக்கல்..

அன்றைக்கு எப்படியோ தப்பிவிடும் சத்யா, தொடர்ந்து அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தப் போய், “நான் உன்னை மாதிரி திருடனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. நல்லவனா, பொறுப்பா, நாலு பேர் பாராட்டுற மாதிரி இருக்குற ஒருத்தனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்று காயத்ரி சொல்லும் வார்த்தைதான் அந்தத் திருடனை திருட்டுத் தொழிலுக்கு நாமம் போட்டுவிட்டு ஆட்டோ ஓட்டி பிழைக்க வைக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறான் சத்யா.

அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்றாலும், கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்றாலும் தனக்கு அதனைப் பற்றிக் கவலையில்லை. அவள் நினைப்பிலேயே காலத்தை ஓட்டிவிடுவேன் என்று இயல்பாக அப்பாவியாகச் சொல்கிறான் சத்யா.

அவன் சொல்லும் அந்தப் பெண் காயத்ரிதான் என்பது டேஷ் போர்டில் அவன் மாட்டி வைத்திருக்கும் புகைப்படத்தில் இருந்து வேணுவுக்கும், மணிவண்ணனுக்கும் தெரிய வர அடுத்த அதிர்ச்சி.

“அவன் ஒரு பிராடு.. அவன் சொல்றான்னு.. நீ அதையெல்லாம் நம்பாத..” என்று மணிவண்ணன் அடுத்தக் காட்சியில் சொல்கிற வசனத்திற்கு கைதட்டல் தூள் பறந்தது தியேட்டரில். ஆனாலும், வேணு விடாப்பிடியாக காயத்ரியை வரவழைத்து அவளிடம் ஆட்டோ டிரைவரின் உறுதியான காதலைச் சொல்லி தனது தியாகத்தை பறை சாற்றுகிறான்.

இந்த இடத்திலும், “நான் பாக்குற பொண்ணுகளுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆயிரும்” என்ற வேணுவின் மெல்லிய பொறாமையுடன்கூடிய வசனத்திற்கு அரங்கம் அதிர்ந்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். இந்த இடத்திலேயே கதைக்குள் ரசிகர்களை இழுத்து உட்கார வைத்துவிட்டார் இயக்குநர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அதற்குள் வித்யாவுக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கிறான் வேணு. அதை மணிவண்ணனுக்கு போன் போட்டுச் சொல்லி அவரை வரவழைத்து அவராலேயே அடியும் வாங்கிக் கொள்கிறான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அப்போதுதான் அறியும் ரஞ்சனிக்கு வேணுவின் மீது காதல் கூடுகிறது.

ரஞ்சனியின் அப்பா இறந்து போய் தற்போதைய குடும்பத்தின் வாழ்க்கையோட்டத்திற்கு ரஞ்சனியின் சம்பளமே உதவியாக இருக்கிறது என்பதுமே யதார்த்த வாழ்க்கையை இப்போது ரஞ்சனிக்கு காட்டியிருக்கிறது என்பதை இயக்குநர் வெகு இயல்பாக உணர்த்துகிறார்.

குழந்தையும் பிறந்து மணிவண்ணனும் தனது பேத்தியைப் பார்த்து உச்சி முகர்ந்து மகளைப் பார்த்து கதறியழுத பின்பும் அடுத்தது ரஞ்சனி-வேணுதான் என்ற நினைப்பில் இருக்கும்போது சென்னையில் இருந்து நெடுமாறன் மூலமாக இன்னொரு பெண் பார்க்கும் படலம் உறுதியாகிறது. இம்முறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை.

தன் மனம் இப்போது வேணுவை விரும்புகிறது என்பதை தனது அம்மாவிடம் சொல்லும் ரஞ்சனியிடம் “மதியம், சாப்பாட்டுக்கு அவரை வீட்டுக்குக் கூப்பிடு. நான் பேசுறேன்..” என்ற அம்மாவின் பதிலைக் கேட்டு உற்சாகமாக இருக்கும் ரஞ்சனியிடம் “கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு பெண் பார்க்கப் போகணும். துணைக்கு நீங்கதான் வரணும்” என்ற வேணுவின் அழைப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.?

இறுக்கமான முகத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் ரஞ்சனி லாக்கப்பில் வைத்து ஒருத்தனை ‘சாத்திக்’ கொண்டிருக்கும் செந்தாமரையைப் பார்த்து ஏற்படும் ஒரு திடுக் நமக்கும் ஏற்படுகிறது. பெண் பார்க்கும் படலம் என்றவுடன் செந்தாமரை(நவ்யா நாயர்)க்கு ஏற்படும் லேசான பதட்டத்தையும், சங்கடத்தையும் ரசிக்கவே முடிகிறது.

“சாயந்தரம் போலீஸ் குவார்ட்டர்ஸ¤க்கு வரச் சொல்லுங்க.. அங்க பேசிக்கலாம்.. நான் இப்ப மந்திரியோட பங்ஷனுக்கு போகணுமே..!’ என்று தர்மசங்கடத்துடன் சொல்கிறாள் செந்தாமரை. “சாயந்தரம் நான் வரலை. என்னை விட்ருங்க.. எனக்குத் தலைவலி..” என்று சொல்லி தப்பிக்கும் ரஞ்சனியின் வருத்தம் நியாயமானதுதான்.

சாயந்தரம்வரைக்கும் பொறுக்காத நமது ஹீரோ, மந்திரியின் பங்ஷனுக்கே சென்று அங்கு செந்தாமரையே பார்த்துவிடுவது என்ற நினைப்பில் அங்கே போவதுதான் ஒரு சுவையான திருப்பம்.

மந்திரிக்கு திடீரென்று கருப்புக் கொடி காட்டும் ஒரு கும்பலின் பக்கத்தில் எதேச்சையாக போய் நின்றுவிடும் வேணு தான் பார்க்க வந்த பெண்ணிடமே தர்ம அடி வாங்கித் தப்பித்து ஓடுவது சுவையான காட்சி.

“கை கொடுங்க தோழர்..” என்று சொல்லி வேணுவை அழைத்து அவன் தோளில் கை போட்டு நடந்தபடியே “எப்படி காட்டிட்டோம்ல.. மந்திரிக்கு வச்சுட்டோம்ல ஆப்பு..” என்று சிரித்தபடியே சொல்லும் அவனை வேணு கோபம்தீர மட்டும் அடித்துவிட்டு “எனக்கு வைச்சுட்டீங்களேடா ஆப்பு..” என்று கொதிப்பதைக் கேட்டு வருத்தப்பட வேண்டிய நிலையிலும் சிரிப்புதான் வந்தது.

இனி அடுத்தது என்ன என்பதிலும் ஒரு திருப்பத்தைக் கொடுத்து படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர். இப்படி நெத்திலி மீன் குழம்பு வைக்கும் கதையாக பல்வேறு களங்களில் காட்சியமைப்புகளை வைத்திருந்தும் நேர்த்தியான, கச்சிதமான திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கும் இயக்குநருக்கு எனது முதல் பாராட்டு.

எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை மோசமாகிவிட்டால் முடிந்தது கதை என்பார்கள். இந்தப் படத்தில் திரைக்கதையை அடுத்தடுத்து லேசுபாசான திருப்பங்களோடு கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் பலம்.

இக்கதையில் நடிக்க முன் வந்திருக்கும் சேரனுக்கு அடுத்த சல்யூட். படத்தில் முதல் பாதியில் அரை மணி நேரமும், அடுத்த பாதியில் முக்கால் மணி நேரமும் தான் இருக்க மாட்டோம் என்பது தெரிந்தும் ஒரு ஹீரோ நடிக்க முன் வந்திருக்கிறார் எனில், இன்றைய சினிமா உலகில் அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான்.

சேரனின் நடிப்பு எப்போதும் இயல்புதான். ‘யதார்த்த நாயகன்’ என்ற பெயருக்கேற்றாற்போல் இப்படத்திலும் தனது ரோலை கச்சிதமாகச் செய்திருக்கிறார். வழக்கமாக அவர் அழும் காட்சியில் முதுகைக் காட்டித் தொலைக்கும் கொலைகாரச் செயலை இப்படத்தில் எந்தக் காட்சியிலும் வைக்காமல் சேரனைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

ரஞ்சனியுடனான தனது முதல் சந்திப்பில் தனது சர்டிபிகேட்டை காண்பித்தும், மனநல சிகிச்சை பெற்றதையும் திக்குவாயோடு திக்கித் திணறிச் சொல்கின்ற காட்சியில் அவருடைய படபடப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

படம் துவங்கி முதல் ரீலிலேயே இப்படியா என்ற லேசான பயம் எனக்குள்ளும் ஏற்பட்டது. இதற்கு முன்பான சேரனின் நடிப்பை அருகில் இருந்து பார்த்ததினாலோ என்னவோ இயக்குநர் சேரனின் நடிப்பிற்கு நிறையவே கட் கொடுத்திருக்கிறார் என்பது புரிகிறது.

“யதார்த்த நாயகன்” பட்டத்தை சேரனிடமிருந்து இப்போதைக்கு யாரும் பறிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

நெடுமாறனாக வலம் வந்திருக்கும் பசுபதியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இது போன்ற சில காட்சிகளில் மட்டுமே வலம் வரும் நடிப்பிற்கெல்லாம் மெனக்கெட்டு பயிற்சி எடுத்து நடித்து வருவது பசுபதியிடம் இருக்கும் நடிப்பின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது.

பார்வையற்றவர்களைப் போலவே மூக்கைச் சுண்டுதல், பார்வைகளைத் திருப்புதல், முகத்தின் தசைகளை ஏற்றி இறக்குதல் என்று மிக அழகாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அந்தச் சண்டைக் காட்சிகூட எதற்காக என்பது புரியவில்லை. வேறு மாதிரி வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

திருடனாக வரும் சத்யா திடீரென்று நல்லவனாக மாற விரும்பி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெறும் காலுடன் ஓடி வந்து முதல் பரிசைப் பெறும்போது இந்தக் காதல்தான் இளைஞர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதை யோசிக்க வைக்கிறது.

அந்தப் பரிசுப் பொருளோடு காயத்ரியிடம் வந்து ஐ லவ் யூ சொல்ல “என்னலே.. நான் என்ன சொன்னேன்.. நீ என்ன செஞ்சிருக்க..?” என்று அவனது காதலை நிராகரித்து அனுப்பி வைத்த பின்பும் தளர்ந்த நடையோடு போகும் சத்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பும் இயல்பாகத்தான் அமைந்துள்ளது.


நடிகைகளில் ரஞ்சனியான விமலாராமனை குளோஸப் காட்சிகளில் காட்டுகின்றபோது அவர் கண்கள்கூட பேசுகின்றன. கொள்ளை அழகு. அவருக்காக ஒரு பாடல் காட்சியையும் வைத்து அதிலும் கண் விளையாட்டைத் தொடர்ந்திருக்கிறார் இயக்குநர்.

வித்யாவாக ரம்யா நம்பீசன். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு அவனும் ஜெயிலுக்குப் போன பின்பு குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து பிழைத்து வருவதை சொல்கின்ற கட்டம் எத்தனையோ உண்மைக் காதல் கதைகளை நிச்சயம் கிளறும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் இரண்டு திரைப்படங்களின் தோல்வியினால் மனம் தளராமல் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் ஜெகன்னாத்திற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வியாபார ரீதியான காட்சியமைப்புகளுக்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு குடும்பத்துடன் வருபவர்களை சங்கடத்துடன் நெளிய விடாமல் சிரிக்க வைத்தும், அவரவர் ‘பெண் பார்க்கச் சென்ற கதை’யையும், ‘பெண் பார்க்க வந்த கதை’யையும் பற்றி யோசிக்க வைத்து அனுப்பியிருக்கும் இயக்குநருக்கு எனது நன்றிகள்.

இனி வலையுலக தைரியசாலிகள் தங்களது ‘பெண் பார்த்த’, அல்லது ‘பார்க்க வந்த’ அனுபவக் கதைகளை வெளியிட்டால், அடுத்த ஒரு வாரத்திற்கு வலையுலகம் பரபரப்பாகும் சாத்தியம் உண்டு.

நன்றி..!

படம் உதவிக்கு நன்றி : indiaglitz.com

சரோஜா - கை தவறிய "புகழ்!"

19.09.2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

3 நாட்கள் முன்னதாக “சரோஜா” திரைப்படத்தை மிக, மிகத் தாமதமாகப் பார்த்தேன். எவ்வளவு சீரியஸான திரைப்படத்தையும் வெற்றிகரமான காமெடிப் படமாகத் தன்னால் மாற்ற முடியும் என்பதனை வெங்கட் பிரபு மறுபடியும் நிருபித்திருக்கிறார்.

இதற்கு முந்தைய படமான சென்னை-600028 திரைப்படமே “லகான்” திரைப்படத்தின் கதைக்கருவோடு ஒத்துப் போயிருந்தாலும், அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைத் தன் வயதையொத்த, தன் சக நண்பர்களின் கொண்டாட்டத்திற்காக என்று திட்டமிட்டு வெற்றி பெற்ற அவருடைய செயல் ஒரு துணிச்சல்கார புதிய இயக்குநரைத் தமிழ்த் திரையுலகத்திற்குக் கொடுத்தது.

“சரோஜா” அந்த யூனிட்டின் இரண்டாவது திரைப்படம். முதல் படத்தின் வெற்றியைத் தொட்டுப் பார்த்து அதே போல் மிக எளிமையாக, இன்றைய ஜீன்ஸ், மச்சி ஸ்டைல் இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே அதே மாடலில் கலந்து கொடுத்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் கதையை முன்பே முழுமையாகத் தெரிந்த பின்புதான் படம் பார்க்கச் சென்றேன். இருந்தாலும் making என்கிற வார்த்தைதான் தமிழ்ச் சினிமாவில் இன்றைக்கு யாருக்கும் புரியாத ஒரு வார்த்தை. இந்த மந்திர வார்த்தையை யாரால் புரிந்து கொள்ள முடிகிறதோ அவர்தான் ஜெயிக்கும் இயக்குநர்.
அந்த making எப்படியிருக்கிறது என்பதற்காகவே காணச் சென்றேன்..

படம் பிரமாதம் என்று சொல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும், முழுக்க, முழுக்க காமெடியைக் கலந்துவிட்டதனால் அந்த வார்த்தையைச் சொல்ல முடியாமல் தடுமாற்றம் ஏற்படுகிறது.

ஆனால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.. பேப்பர் வொர்க்.. இந்தப் படத்திற்கு பேப்பர் வொர்க் என்கிற வேலைக்காகத்தான் வெங்கட்பிரபு நிச்சயம் மல்லுக் கட்டியிருக்க வேண்டும். இதனைத்தான் நான் பிரமிப்பாக பார்க்கிறேன்.

திரைக்கதை அமைப்புகள் அவ்வளவு அழகான ஒரு நேர்க்கோட்டில் கச்சிதமாக வளைந்து, நெளிந்து செல்கின்ற பாங்கில் எந்தவொரு குழப்பமும் நிகழாமல் சென்றிருப்பது பாராட்டுக்குரியது..

பொதுவாகவே தமிழ்ச் சினிமாவில் பெரிய இயக்குநர்களைத் தவிர மற்றவர்கள் ஸ்பாட்டிற்கு வந்துதான் வசனத்தை எழுதுவார்கள். அப்போதுதான் மூட் வரும் என்பார்கள். அதிலும் 99 சதவிகிதம் காமெடித் திரைப்படங்கள் இப்படித்தான் நடக்கும்.

ஆனால் இதில் அது சாத்தியமில்லாததுபோல் எனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் அது போல் செய்யாமல் மனப்பாடம் செய்த பின்பே களத்தில் இறங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் அந்த குடோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் முன்பே கச்சிதமாகத் திட்டமிட்டே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வெங்கட்பிரபு தனது யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் மிகத் துல்லியமாகப் புரிந்து வைத்து அவர்களுக்கேற்ற ஒரு வேடத்தைக் கொடுத்து வேலை வாங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

பிரம்மானந்தம் கேரக்டரை அவர் பயன்படுத்தியிருக்கிறவிதத்தில் இருந்து திரைக்கதை யுக்தியில் வெங்கட்பிரபுவின் திறமையை கண்டு கொள்ள முடிகிறது.

சரணின் தொணத்தொண மனைவி கேரக்டரும், அதனை நினைத்துப் பார்த்து அல்லல்படும் சரணின் மெதுவான நடிப்பும் கச்சிதம்தான்.. அவருக்கேற்ற வேடத்தை அவரே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

வெங்கட்பிரபு, சரண், பிரேம்ஜி, யுவன்சங்கர்ராஜா என்கிற கூட்டணி ஏதோ இந்த ஒரு திரைப்படத்திற்காக உருவானதல்ல..

இவர்களுடைய தகப்பன்மார்கள் முதல் தலைமுறையாய் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒன்றினைந்து உழைத்த போது, அவர்களுக்குள் இருந்த குடும்ப நெருக்கமே இந்த இளைஞர்களையும் இன்றுவரையிலும் நெருக்கமானதாகவே வைத்திருக்கிறது எனலாம்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னை வந்து வேலைக்காக நடிகை ‘குட்டி பத்மினி’யின் அலுவலகத்திற்கு நடையாய், நடை நடந்து கொண்டிருந்தபோது எஸ்.பி.பி.யின் வீடு வழியாகச் செல்ல வேண்டி வரும். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போன்ற போக்குவரத்து கிடையாது. தெரு வெறிச்சோடிக் கிடக்கும்.

அந்த வெறிச்சோடிய நடுத்தெருவில் எஸ்.பி.பி.யின் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள் பிரேம்ஜியும், பிரபவும், சரணும்..

அந்தப் பழக்கம் அவரவர் வேலை அவரவர்க்கு என்ற ரீதியில் இன்றைக்கும் தொடர்ந்து வந்து தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு டிரெண்ட் செட்டரான கிரியேட்டிவ் டீமை காட்டியிருக்கிறது எனில், இவர்களின் பெற்றோர்களுக்குத்தான் நாம் ஒரு ‘ஜே’ போட வேண்டும்.

இத்திரைப்படத்தில் என்னதான் பிடித்தமானவைகள் நிறைய இருந்தாலும், பொதுப்புத்தி என்ற ஒன்று நமக்குள் உண்டு. அதன்படி பார்த்தால் இப்படத்திற்கு நிச்சயமாக A சர்டிபிகேட்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் எப்படி U கொடுத்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

குழந்தைகள் பார்க்கக் கூடாத வன்முறைக் காட்சிகளெல்லாம், பாலியல் நோக்கில் அமைந்த காட்சிகளெல்லாம் இப்படத்தில் மலிந்து இருந்தும், சென்சார் அதிகாரிகள் கண்ணை மூடியிருந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

பிரகாஷ்ராஜின் மகளைக் கட்டிப் போட்டிருக்கும் காட்சியிலும், அவளை அணுகும் ஒரு ரவுடியின் செயலிலும் இருக்கும் பாலியல் நோக்கு சார்ந்த வன்முறை, நிச்சயம் குழந்தைகள் மனதில் பதியக்கூடாத விஷயம். பதியும்படி எடுத்திருந்ததினால்தான் நான் இதனைச் சொல்கிறேன்.

அதே போல் நிகிதா ஆடும் அந்த குடோன் டான்ஸ்.. சென்சார் போர்டு பாடல் காட்சியில் மெய்மறந்துவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது.

சிலத் திரைப்படங்களில் கூட்டமாக ஆடுகின்ற டான்ஸர்களின் முந்தானை விலகியிருந்தாலும் அதனை குளோஸப்பில் காட்டக் கூடாது என்பார்கள். காட்டினால் வெட்டுவார்கள். “இல்லை. நிச்சயம் வேண்டும்” என்று இயக்குநர் சொன்னால் “A-தான் தருவேன்” என்பார்கள். வாதிட்டுப் பார்த்தும் முடியாமல் போகும்பட்சத்தில் கத்திரி வெட்டுக்குப் பலியாகும் அந்தக் காட்சி.

இப்போதெல்லாம் வரக்கூடியத் திரைப்படங்களில் அனைத்துப் பாடல் காட்சிகளுமே கண்ணை கூச வைக்கக் கூடியதாகத்தான் அமைகின்றன. சென்சார் போர்டு தனது விதிமுறைகளை பீரோவுக்குள் பூட்டி வைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.

இதே கதையைத்தான் “அஞ்சாதே” திரைப்படத்திலும் செய்தார்கள். இப்போது இந்தப் படத்திலும்.

“அஞ்சாதே” திரைப்படத்திற்கும் இத்திரைப்படத்திற்குமான ஒற்றுமையும் உண்டு. கதையின் களம் இது போன்ற காமெடி களமாக இல்லாமல் சீரியஸாக இருந்திருந்தால், நிச்சயம் “அஞ்சாதே” படத்தைப் போல அமைந்திருக்கும் திரைப்படம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லியிருக்கலாம்.

வாய்ப்பைக் கெடுத்தது இயக்குநர் வெங்கட்பிரபுதான்..

ஒரு திரைப்படம் பார்த்து முடித்ததும் மனதில் எதையோ தோற்றுவிக்க வேண்டும் என்று நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். "அஞ்சாதே"; "சுப்பிரமணியபுரம்" போல..!

ஆனால் இத்திரைப்படத்தின் முடிவில் நகைச்சுவைக்காக எடுத்திருந்த டைட்டில் காட்சிகளும் சேர்ந்து மனதை கூல் செய்துவிட்டதால், எழுதுவதற்கு வேறு ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

பரவாயில்லை.. ஆற, அமர, சிரிக்க வைத்து மனசை லேசாக்கி அனுப்பி வைத்த அந்தக் குழுவுக்கு எனது நன்றிகள்..

படம் உதவி : indiaglitz.com

அமெரிக்க அதிபர் தேர்தல்-2008 ஒரு பார்வை

17-09-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அமெரிக்காவில் உலகத்தின் அடுத்த ஆண்டவனைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா களை கட்டத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என்று இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நம்மூர் வடக்கத்திய தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இடமளித்து வருகின்றன. ஆனால் நமது நாட்டு ஜனாதிபதி தேர்தல் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பத்தோடு பதினோறாவது செய்தியாகத்தான் போடுவார்கள். இதனைப் பற்றி நாமும் கவலைப்படுவதில்லை. நிற்க..





ஒபாமாவோ, அல்லது ஜான் மெக்கயினோ இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு எந்த மாற்றத்தையும் தரப் போவதில்லை. அமெரிக்க அதிபர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அருகில் இருக்கும் கண்டங்களைக் கவனித்துக் கொள்ளும் அதிகார லாபியைத் தாண்டி எதுவும் செய்துவிட மாட்டார்கள்.

அந்த ஆலோசகர்களில் பெரும்பாலோர்க்கு ஆசியா என்றாலே பாகிஸ்தான் என்ற இன்னொரு அமெரிக்க மாநிலம் இங்கே இருப்பது ஒன்றுதான் நினைவுக்கு வரும். மற்றவையெல்லாம் பின்னர்தான்.

நம் ஊர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நாம் செலவழிக்கும் தொகையே நமக்கு வாயைப் பிளக்க வைக்கிறது என்றால் அங்கே ஆகும் செலவைக் கேட்டால் தலையே சுற்றுகிறது.

இதுவரையிலும் தேர்தல் செலவுகளுக்காக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாராக் ஓபாமா 37,499,525 டாலர்களைத் திரட்டியுள்ளாராம். இன்றுவரை செலவான தொகை 57,246,263. கையிருப்புத் தொகை 65,837,810 என்றெல்லாம் கணக்கு வேறு காட்டியிருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெயினும் சாதாரணமாக இல்லை.. 20,355,226 டாலர்களைத் திரட்டியுள்ளார். 32,385,310 டாலர்களை இதுவரையில் செலவழித்துள்ளாராம். கையிருப்புத் தொகை மட்டும் கொஞ்சமாகத்தான் வைத்துள்ளார். 21,417,463 டாலர்களாம்.

ஆனால் இவ்வளவு பணத்திற்கு அந்த ஊரில் ஏற்படும் செலவுகள் என்ன என்பதுதான் தெரியவில்லை.

நம்மூரில் சாதாரண வார்டு உறுப்பினர் தேர்தல் செலவைக் கூட கவுன்சிலர்கள் நம் கண்ணுக்குக் காட்டுவதில்லை.. கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் நம் நாட்டு அரசியலின் நேர்மை பல் இளிக்கிறது.

நம்மூரில் சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு “புறப்படு உடன்பிறப்பே.. கயவர்களைக் கூண்டோடு அழித்தொழிப்போம்..” என்ற கவிதையைப் படித்துவிட்டு கொடியோடு கிளம்புபவன் எப்போது பசி வருகிறதோ.. அப்போது இருக்கின்ற இடத்தில் கிடைப்பதைச் சாப்பிட்டுவிட்டு தூக்கம் வரும்போது வீடு திரும்புவான்.(உண்மையானத் தொண்டர்களை மட்டுமே சொல்கிறேன்) ஆனாலும் இவனுக்கு செலவானதாக ஒரு கணக்கு பணம் வைத்திருப்பவரின் கள்ளக்கணக்குப் பதிவேட்டில் ஏறியிருப்பது இவனுக்குத் தெரியாது. நம் ஊர் அரசியல் ஸ்டைலே தனிதான்..

அங்கே இரு தரப்பு பிரச்சாரக் கூட்டத்திலும் ஆளாளுக்கு நம்மூர் போலவே தட்டிகளில் புகைப்படத்தை ஒட்டி வைத்து கோஷம் போடுகிறார்கள். கை தட்டுகிறார்கள். நம்மூரைப் போல பேச விடாமல் கத்திக் கொண்டேயிருப்பது என்கிற நொச்செல்லாம் இல்லாததால் பார்க்கப் பிடிக்கிறது.

பாராக் ஒபாமா ஜனாதிபதி தேர்வுக்கு ஆளாகியிருக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதால் முதல் சிறப்பைப் பெறுகிறார். ஒரு வேளை வெற்றி பெற்றாரென்றால் இரண்டாவது சிறப்பையும் பெறுவார்.

இல்லினாய்ஸ் மாகாண செனட் உறுப்பினர் என்கிற கட்சித் தகுதி இவருக்கு உண்டு. வயது கம்மிதான்.. 47 என்கிறார்கள். போதும்.. ஒரே திருமணம்தான்.. இரண்டு பெண் குழந்தைகள்.. இதுவும் போதும்.. சாதாரண குடும்பப் பிரச்சினைகள் என்னென்ன என்பதை கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பார்.

ஆனாலும் ஒரு பிரச்சினை.. ஜெயித்து வருகின்ற அனைத்து ஜனாதிபதிகளும் அந்த வெள்ளை மாளிகையில் குடியேறுகிறவரைக்கும்தான் சாமான்யனாக தெரிகிறார்கள். மாளிகையில் பால் காய்ச்சியவுடன் கண்டம் விட்டு கண்டம் வந்து அனைவரையும் காய்ச்சுகிறார்கள். அது என்ன கிரகம் புடிச்ச வீடோ.. தெரியலை..?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவரும் ஒரு குண்டை போட்டிருக்கிறார்.. மென்பொருள் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் நிதி சலுகைகளை கட் செய்யப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவுக்கு அவருக்கு பூர்வீக ஓட்டுக்களை வாரி வழங்கப் போகிறது என்பது தெரியவில்லை.

அதே போல் இராக்கில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்வது என்பது உடனேயே முடியாது என்பதை மூடி மறைத்து கொஞ்சம் லேசுபாசாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஒபாமா ஆட்சிக்கு வந்தாலும் இரண்டாண்டுகள் கழித்துதான் கடைசி அமெரிக்க ராணுவ வீரனும் ஈராக்கில் இருந்து வெளியேற முடியும் என்கிறது அமெரிக்க பாதுகாப்புத் துறை.

கறுப்பினத்தவர், இருப்பவர்களில் இளைஞர், புஷ் கட்சியைச் சேராதவர் என்ற மூன்றுவித வடிவங்களில் பாராக் தவழ்ந்து கொண்டிருப்பதால் இந்தியத் திருநாட்டின் பொது அறிவு படைத்த மக்களின் எதிர்பார்ப்பு ஜனாதிபதியாக இவரே இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.

குடியரசுக் கட்சியில் ஜான்மெக்கயின் என்கிற 72 வயதான கிழவர், அரிஸோனா மாகாண மூத்த செனட்டராக இருந்தவரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

72 வயது என்றவுடன் நம்மூர் தலைவர்களை மனதில் வைத்து கைத்தடி ஊன்றி, தடவித் தடவி நடப்பார் என்று எதிர்பார்த்தேன்.. மனிதர் ஒபாமா போலவே சுறுசுறுப்புத் திலகம்.. மைக்கில் குட்பை சொல்லிவிட்டுத் திரும்பிய வேகத்தில் மனைவியை இழுத்து அணைத்து முத்தமிடுகிறார். புன்னகை மாறாமல் மேடையின் இரு புறமும் சென்று கையசைக்கிறார். “பதிலுக்குப் பதில் ஒப்பாரி வைக்க முடியாது. எனது செயல்களே என்னை நிரூபிக்கும்..” என்று ஒபாமாவுக்கு கச்சிதமாகப் பதில் சொல்கிறார்.

இரண்டு முறை மோதிரம் மாற்றிக் கொண்ட அனுபவம் இவருக்கு உண்டு. முதல் மனைவியை முறைப்படி டைவர்ஸ் செய்துவிட்டே இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில் நாம் பெருமைப்படக்கூடிய அரசியல்வாதிதான்.

வியட்நாம் போரில் அமெரிக்கப் போர்ப் படையில் வீரராகப் போரிட்டிருக்கிறார். இது ஒன்று போதுமே.. நமக்கு இவரைப் பிடிக்காமல் போவதற்கு.. இப்படித்தான் இந்தியத் திருநாட்டின் ஊடகங்கள் முதலிலிருந்தே ஒபாமாவைத் தூக்கிப் பிடித்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள்.

“ஈராக் போர் முடியாது.. இப்போதைக்கு வாபஸ் கிடையாது.. ஈரானுடன் மோதிதான் தீர வேண்டுமெனில் அதுவும் நடக்கும்..” என்றெல்லாம் இவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஸோ, நமக்கு இவர் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.

ஜனாதிபதியாக ஆகியே தீருவேன் என்பதைவிட தனது கணவர் பில் கிளிண்டனை வெள்ளை மாளிகையின் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக்கி காட்டுவேன் என்று சபதமெடுத்து சூறாவளியாய் உழைத்த ஹிலாரியைத்தான் ஒபாமா துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார் என்று நானும்தான் வெகுவாக நம்பியிருந்தேன். ஆனாலும் மனிதர் என் கனவைப் பொய்யாக்கி ஜோ பிடன் என்ற 66 வயதான டெல்வர் மாகாண செனட் உறுப்பினரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுத்துவிட்டார்.



ஒபாமா வயதில் சின்னவர்.. ஜோ பிடன் வயதில் பெரியவர்.. இந்த ரேஞ்ச்சில் ஜான் மெக்கெயினும் நிச்சயமாக ஏதாவது ஒரு கோல்மால் செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் மகா கோல்மால் செய்துவிட்டார். இவர்கள் மூன்று பேருமாவது செனட் உறுப்பினர்கள். குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜான் மெக்கெயின் தேர்வு செய்த சாரா பாலின் என்கிற பெண்மணி அலாஸ்கா மாகாண கவர்னராம்.



இவரது வயது 44-தான்.. ஒரே கணவர்தான்.. ஆனால் 5 குழந்தைகள். கடைசியாக ஆண் குழந்தை பிறந்து 7 மாதங்கள்தான் ஆகிறதாம். முன்னாள் அலாஸ்கா மாகாண அழகிப் போட்டியில் ரன்னராக வந்தவராம். இப்போதும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறார். அலாஸ்கா எப்போதுமே பனி மூடியே இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதனால்தான் இப்படியொரு கவர்னரைத் தேர்வு செய்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை.

அந்தக் கட்சியைப் போலவே சாரா பாலினும் பழமைவாதியாகத்தான் தென்படுகிறார். “ஓரினச் சேர்க்கை மகா பாவம்” என்கிறார். “அபார்ஷனா? கூடவே கூடாது..” என்றிருக்கிறார் பாலின்.

அழகு, அறிவு, கட்சியின் கொள்கைப் பிரச்சாரப் பீரங்கி, குறிப்பாக மீடியாக்களின் கவனத்தை முற்றிலுமாக தங்கள் மீதே நிலை கொத்த வைக்கலாம் என்ற ரீதியில் பாலினின் தேர்வு மெக்கெயின் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த கதைதான் என்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நால்வரும் மறைமுகமாகத் தங்களது குடும்பத்தின் மூலம் மக்களை நெருக்குவதாக ஊடகங்கள் பறை சாற்றுகின்றன.


ஜான் மெக்கெயின் தனது முதல் மனைவி, பையன்களுடன் கார் விபத்தொன்றில் சிக்கினாராம். அந்த விபத்தின் காரணமாக அவரது முதல் மனைவி நீண்ட பல வருடங்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாம்.. அதன் பின்தான் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். ஆனாலும் முதல் மனைவியின் மருத்துவச் செலவுகளுக்குப் பணமும், வீடும் கொடுத்துவிட்டுத்தான் டைவர்ஸ் வாங்கியதாக அவரது பயோடேட்டா பறை சாற்றுகிறது.

ஜோ பிடனுக்கும் இதே வகையான ஒரு சோகம். அவருடைய முதல் மனைவி Neilia Hunter தனது ஒரு வயதுக் குழந்தையுடன் கார் விபத்தொன்றில் மரணமடைந்த சோகமும் இவருக்கு உண்டு. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவதாக Jill Tracy Jacobs என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். ஸோ.. அதுக்கு இது சரியாப் போச்சு என்ற அளவோடு நிற்க.. சாரா பாலின் பின்னால் வேறு ஒரு கதையோடு வந்திருக்கிறார்.


அம்மணியை ஏன் மெக்கெயின் தேர்வு செய்தார் என்றால், முதல் காரணமாக பெண் என்பதால் கிடைக்கின்ற ஒரு அனுதாப ஓட்டுக்கள் கொஞ்சம் கூடுதலாக கிடைத்துவிட்டால், கடந்த தேர்தல் போல கடைசி நேர கட்டப் பஞ்சாயத்து செய்தாலாவது பிழைத்துவிடலாம் என்றெண்ணியிருக்கிறார் போலும்..

கூடவே சாரா பெலினுக்கு கடைசியாக பிறந்த பையன் டவுன் சின்ட்ரோம் என்னும் குறைபாடு வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி அனுதாபத்தை ஊக்குவிக்குமா அல்லது வெறும் ஊக்கை மட்டுமே கிளப்பிவிட்டு விக்காமல் போய்விடுமா என்பது தெரியாத பட்சத்தில் அவரிடத்திலிருந்தே இன்னொரு பூதம்.

அம்மணியின் 17 வயது பெண்ணான டிரிக் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். நம் ஊரில் காதோடு காது வைத்தாற்போல் கலைக்கும்படியான சூழலையெல்லாம் பாலின் உருவாக்கவில்லை. அந்தப் பெண்ணையும் ஊர், ஊராகக் கூட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு அப்பனாக அப்பாவியாக அருகில் நிற்கும் பையனைக் காட்டி, “இவனுக்கே என் மகளைக் கட்டி வைப்பேன்..” என்று உண்மையான குடும்பத் தலைவியாகச் சொல்லிவிட்டார். ஸோ.. இப்படியொரு பொறுப்பான பொம்பளையா என்று அமெரிக்க தாய்க்குலங்கள் கைக்குட்டை நனையும் அளவுக்கு கண்ணீர் விட்டுவிட்டால் என்னாகும் என்று தெரியவில்லை.

ஆனாலும் எதிர்த் தரப்பும் விடவில்லை.. அம்மணியைப் பற்றித் தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு விஷயம் சிக்கியிருக்கிறது. அலாஸ்கா மாகாணத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை மிக சமீபத்தில் பதவி நீக்கம் செய்திருக்கிறார் பாலின். அது என்னவெனில் பாலினின் இளைய சகோதரிக்கும், பிரிந்திருக்கும் அவரது கணவரான போலீஸ்காரருக்கும் இடையில் அவர்களது குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக அவரது கணவரை மிரட்ட போலீஸை பயன்படுத்தச் சொன்னார். நான் மறுத்தேன். அதனால்தான் என்னை நீக்கிவிட்டார் என்று நமது தெலுங்குப் பட கதையாக அம்பலப்படுத்துகிறார் அந்த போலீஸ் அதிகாரி.

வழக்கமான அரசியல்வாதியாக பாலின் இதை மறுத்துள்ளார். ஆனாலும் இனை விசாரிக்க ஒரு கமிட்டி போட்டுள்ளார்களாம். அதன் விசாரணையில் பாலின் மீதும் தவறு இருப்பது தெரியவர முதலில் அலாஸ்கா மக்களிடம் பாதி மன்னிப்பு கேட்டுள்ளார் பாலின். இறுதி விசாரணை அடுத்த மாதமாம். அதுவரையில் பத்திரிகைகளுக்கு நல்ல தீனிதான்..

ஒபாமாவைப் பொறுத்தமட்டில் எடுத்த எடுப்பிலேயே அமெரிக்க பழமைவாதிகள் வைத்த புகார் அவர் ஒரு முஸ்லீம் அல்லது முஸ்லீம் போல வளர்க்கப்பட்ட நபர் என்பதுதான். முஸ்லீம் என்றால் அமெரிக்கர்களுக்கு ஆகாதா? ஏன் அமெரிக்க குடியுரிமை பெற்ற முஸ்லீம் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக் கூடாதா? என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுகின்றன.

ஆனால் ஒபாமா தப்பித் தவறிக்கூட இது மாதிரியான ‘தேசத்துரோக’ கேள்வியை கேட்கவில்லை. “நான் முறைப்படி ஆச்சாரமாக வளர்க்கப்பட்ட கிறிஸ்துவன்தான். என்னை நம்புங்கள்..” என்று சொல்லியிருக்கிறார்.

போகப் போக இந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் வயதானவர், இளைஞர், பெண், பாவமானவர் என்றெல்லாம் போய் அங்கேயும் இந்தியா போல் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு முட்டாள்தனம் செய்துவிடுவார்களோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

நம் நிலைமைக்கு ஒபாமா வந்தாலும் சரி.. மெக்கெயின் வந்தாலும் சரி.. எல்லாம் ஒன்றுதான்.. பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை அவர்கள் எப்போதும் நிறுத்தப் போவதில்லை.. அவர்களுக்கு வழங்க வேண்டிய, செய்ய வேண்டிய கடமையை செய்யத்தான் போகிறார்கள். அங்கே மிக்-26 கொடுத்தால் நமக்கு F-16-ஐ நீட்டுவார்கள். இரண்டு பக்கமும் கொடுத்துவிட்டு காசு அள்ளப் போவது அவர்கள்தான். சிக்கல் நமக்குத் தொடரத்தான் போகிறது.

போதாக்குறைக்கு நமது அணு ஒப்பந்த விவகாரத்தில் அண்ணன் புஷ் அவர்கள் கடைசியில் தனது முகத்திரையைக் காட்டிவிட்டார். ஆனால் அந்த உண்மையை நமது மன்னமோகனசிங்குதான் நமக்குத் தெரிவிக்காமல் டபாய்த்து வருகிறார். வருகின்ற 24-ம் தேதி புஷ்ஷை சந்தித்து கஷ்டப்படாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு இந்தியாவை அடமானம் வைத்துவிட்டு வரத்தான் போகிறார்.

ஒருவேளை புஷ் காலத்திலேயே அது நிறைவேறாவிட்டாலும் பின்னாளில் எந்த ஜனாதிபதி வந்தாலும் நமது சரணடையும் சாசனம் அங்கே ஏற்றுக் கொள்ளப்படத்தான் போகிறது. என்ன அப்போது புஷ் தனது பண்ணை வீட்டில் கொக்கு பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார். அவ்வளவுதான்..

21ம் நூற்றாண்டாக இருந்தும்கூட இன்னமும் கறுப்பினத்தவர்கள் மத்தியில் நிலவி வரும் நிற வேறுபாடு ஒபாமா பதவியேற்றவுடனேயே காணாமல் போகும் என்று நான் நம்பத் தயாரில்லை. அது நம் ஊரில் குண்டு வெடித்தால் ஊரில் இருக்கும் முஸ்லீம்களையெல்லாம் அழைத்து விசாரிக்கிறார்களே.. அது போலத்தான் வழி, வழியாக உணர்வில், உள்ளத்தில் ஊறிப் போன விஷயம்.. அதை அழித்தொழிப்பது என்பது மற்ற நிறத்தவர்களின் கையில்தான் இருக்கிறதே ஒழிய.. அதே கறுப்பினத்தவர்களிடத்தில் இல்லை.

“எல்லாம் சொல்லிவிட்டு உன்னுடைய சாய்ஸ் எது என்று சொல்லாமல் போயிட்டியேடா பரதேசி..” என்று என்னை நீங்கள் திட்டுவதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் நானே சொல்லிவிடுகிறேன்..

பாராக் ஒபாமா வந்தால் பரவாயில்லை. இரண்டாண்டுகள் கழித்து என்றாலும்கூட பரவாயில்லை.. ஈராக் என்ற தேசத்தை சின்னாபின்னப்படுத்தியது போதும்.. போதும் வா என்று தனது ராணுவத்தினரை அழைப்பதே வரும் ஆண்டுகளுக்கு நமது உலகத்திற்கு நன்மை தரும் செயல் என்பதால் நான் அவரையே ஆதரிக்கிறேன்.

வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. நாமும் பார்ப்போம்.

பின்குறிப்பு :

நம்முடைய மரியாதைக்குரிய அமெரிக்க வலைப்பதிவர்கள் பலர் சேர்ந்து 2008, அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழ்ச்சிக்காக தனி வலைத்தளத்தை உருவாக்கி அதில் துவக்கம் முதல் இன்றுவரையிலான பல்வேறு நிகழ்வுகளையும், தகவல்களையும் தொகுத்து வைத்துள்ளார்கள். அதன் முகவரி இது http://uspresident08.wordpress.com. இங்கேயும் சென்று பொறுமையாக, முழுமையாக பல்வேறு புதிய செய்திகளையும், ஆழமானத் தகவல்களையும் படித்துத் தெளிந்து கொள்ளுங்கள்.

சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா


05-09-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி.

வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது.

வருகின்ற டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அந்த அமைப்பு நடத்தும் இந்த விழாவின் மூலம்தான் உலக சினிமா பற்றிய ஒரு புரிதலே எனக்குக் கிடைத்தது.

முழுக்க, முழுக்க ICAF என்னும் இந்தத் திரைப்பட அமைப்பு மற்றும் சினிமா ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் நடைபெறும் இந்த விழா வருடா வருடம் மெருகேறிக் கொண்டே செல்கிறது.

முதல் 3 திரைப்பட விழாக்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்த ஆனந்த் திரையரங்கத்திலும், பிலிம் சேம்பர் திரையரங்கத்திலும் நடந்தது. அந்தத் திரையரங்கம் வணிக வளாகம் கட்ட வேண்டி இடிக்கப்பட்டதால் அடுத்த 2 திரைப்பட விழாக்கள் பைலட் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம், பிலிம் சேம்பர் திரையரங்கம் என்று 3 இடங்களிலும் நடந்தது.

இந்த முறையும் சென்ற ஆண்டு போலவே அதே இடங்களில்தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் ICAF அமைப்பில் ஏற்கெனவே அங்கத்தினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் 300 ரூபாய் என்றும் மற்றவர்களுக்கு 500 ரூபாய் என்றும் சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்டது. இந்தாண்டும் அதே அளவு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு நாளைக்கு 5 படங்கள் என மூன்று திரையரங்குகளிலும் சேர்த்து 15 திரைப்படங்களாக.. 9 நாட்களில் கிட்டத்தட்ட 136 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

இந்தாண்டு கோவா, திருவனந்தபுரம் திரைப்பட விழாக்களில் இடம் பெறவிருக்கும் புதிய திரைப்படங்களில் அதிமான படங்கள் சென்னை திரைப்பட விழாவிலும் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் திரைப்படங்களில் ஆர்வம் உள்ள வலைப்பதிவர்கள் இப்போதே தங்களது நிகழ்ச்சி நிரலை இதற்கேற்றாற்போல் மாற்றி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு http://www.chennaifilmfest.org/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி


உண்மைத்தமிழன்

ICAF-2008, செப்டம்பர் மாத திரைப்பட விழாக்கள்

02-09-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008, செப்டம்பர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

01.09.2008 - திங்கள்கிழமை மாலை 6.15 மணிக்கு ஸ்பெயின் நாட்டுத் திரைப்படம் "NOBODAY'S PERFECT" திரையிடப்படும்.
இரவு 8 மணிக்கு நெதர்லாந்து நாட்டுத் திரைப்படமான "YOUR NAME IS JUSTIN" திரையிடப்படும்.

03.09.08 புதன்கிழமை முதல் 05.09.08 - வெள்ளிக்கிழமை வரை சீன மொழிப் படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

03.09.08 - 6.15 pm - 2 BECOME ONE
- 7.45 pm - THE BIRTHDAY
04.09.08 - 6.15 pm - BEAUTIFUL HOMELAND
- 8.00 pm - CALL FOR LOVE

05.09.08 - 6.15 pm - FULL MOON OVER LIANGZHOU
- 8.00 pm - TURPANS LOVE SONGS

15.09.08 திங்கள்கிழமை முதல் 19.09.08 வியாழன்வரை பிரெஞ்சு இயக்குநர் திரு.LOUIS MALLE நினைவாக அவர் இயக்கியத் திரைப்படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்


15.09.08 - 6.30 pm ASCENSEUR POUR L'ECHAFAUD


16.09.08 - 6.30 PM - LECOMBE LUCIEN

17.09.08 - 6.30 PM - LE FEU FOLLET (A Time to live, A Time to Die)


18.09.08 - 6.30 PM - AU REVOIR LES ENFANTS


19.09.08 - 6.30 PM - ZAZIE DANS LE METRO

22.09.08 திங்கள்கிழமை முதல் 25.07.08 வியாழன்வரை இஸ்ரேல் நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

6 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. பட்டியல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

26.09.08 அன்று மாலை 6.30 மணிக்கு அமெரிக்கத் திரைப்படமான "THE CONTENDER" திரையிடப்பட உள்ளது.


இத்திரைப்பட விழாக்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும்.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.