31-01-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வரப் போகும் அஷ்டலட்சுமியை எதிர்பார்த்து வட்டிக்கு வாங்கிப் படமெடுத்து வந்த தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம்.. கிடைக்கின்ற பணத்தை அன்றாடச் சோத்துக்கு பயன்படுத்திவிட்டு நாளைய பொழுதை உழைப்பதற்காக மட்டுமே கைவசம் வைத்திருக்கும் தொழிலாளர்கள் மறுபக்கம்.. இப்படி இரண்டு பேரும் கலக்கத்தில் இருக்க.. திரையுலகத்தின் அறிவிக்கப்படாத ஸ்டிரைக் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..!
பாரதிராஜா கலைஞர் டிவிக்காக தான் எடுத்து வரும் சீரியலில் பணியாற்றும் பெப்ஸி மற்றும் உள்ளூர் தொழிலாளர்களை வைத்தே அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தை தேனியில் இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மொட்டை போட்டிருக்கும் மேக்கப்பில் படம் எடுத்து வரும் பாலா, கன்டினியூட்டி போயிரும் என்ற ஒரு வார்த்தையில் தப்பித்து ஷூட்டிங்கை நடத்தி வருகிறார்..!
நேற்றோடு 23 திரைப்படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்பட்டு வருகிறது. பெப்ஸி அலுவலகத்திற்கு பெப்ஸி தொழிலாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது..! யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.. அதிகாரமும், பண பலமும்தான் தொழிலாளர்களை தொழிலாளர்களாவே வைத்திருக்கிறது என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாகச் சொல்ல்லாம்..!
நேற்றைக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அனைவரையும் முந்திக் கொண்டு தொழிலாளர் நலத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்துள்ளனர். பெப்ஸி நிர்வாகத்தினரோ அம்மாவின் மீது முழு நம்பிக்கை வைத்து உண்ணாவிரதம் இருக்க இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்..!
இடையில் தயாரிப்பாளர்களுக்கு முழு அளவில் ஆதரவு தரும் இயக்குநர் சேரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விபரம் இங்கே :
நியாயத்தின் கதவுகளைத் திறந்து பாருங்கள்.. - இயக்குனர் சேரன்
“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ்.
சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது..? என்பதில்தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை.
திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்?
‘லாபத்தில் பங்கு' என்பதுதான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும் வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷியலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது. மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச் சொற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என் கடமையும், உரிமையும்.
இன்றைய இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும் விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இது மாற வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டுநிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன சாப்பிட வேண்டும்?என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில் இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா? கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை! என்பதுதான்.
முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று ஆளாளுக்கு ஓடி வந்தனர். ஆனால் இன்றென்ன நிலைமை?
ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது. திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி.. திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.
பல முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்? அப்படித் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்? கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து, ஓசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக் கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது. கோமா ஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள் தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால் கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில் தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை. ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா? அதாவது, சினிமா - மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த நியாயம்?
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால், எதார்த்தம் என்ன? ஒரு படம் ஓடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
ஒளிப்பதிவாளர்களும், படத்தின் பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துத்தான் வாங்குகிறார்.
இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா! நூறு கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம்தான். இது பாரபட்சமான அணுகுமுறை.
பெரிய பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும். அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பது தான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.
சினிமா நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலைத் திரைப்படத் தொழிலாளர்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்?
இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத்தான் தர வேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில்தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன் வைக்கிறது.
அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ஃபெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?
தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,' என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது. ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணி செய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வர முடியாது.
இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை. டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ஃபெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!
படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதை எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.
தமிழ் இயக்குனர் சேரன்,
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)
சேரனின் இந்த அறிக்கை தற்போது இயக்குநர்கள் சங்கத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது. மாதச் சம்பளம் பெறும் இயக்குநர்கள் சங்கம் தங்களது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை உயர்த்தித் தரும்படி கேட்டிருந்தும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு பதில் அளிக்கவில்லை. இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான (இருந்த-இருக்கும்) சேரன், இதுவரையில் அதற்காக ஒரு ஸ்டெப்கூட எடுக்காமல் ஊதிய உயர்வை எப்படி எதிர்க்கலாம்.. என்ற கொதிப்புகள் சங்கத்திற்குள்ளும் வெடித்துவிட்டது..!
மேலும், படம் தோல்வியடைந்தால் படத்தில் கோடி, கோடியாக சம்பளம் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாமே..? படம் எவ்வளவு வியாபாரம் ஆகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதன் பின்பு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாமே..? படம் வெற்றியடைந்தால் அதில் பங்கு வாங்கிக் கொண்டும், தோல்வியடைந்தால் ஒரு குறைந்தபட்சத் தொகையை நடிப்புக்காக வாங்கிச் செல்ல்லாமே.. இதை சேரன் ஏன் குறிப்பிடவில்லை. கேவலம், சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள்தான் பணத்தைத் திருப்பித் தர வேண்டுமா? என்றெல்லாம் குமரன் காலனி தெருக்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தினச் சம்பளம் பெறும் சங்கங்களின் ஊதிய உயர்வு விபரம் வெளியான நிலையில் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் நிலை பற்றி தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதில் சொல்லும்விதமாக இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர் தலைமையில் கூடிய செயற்குழு உறுப்பினர்களில் ஒரு அணி தாங்களே தங்களுக்கான புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயித்து அவசரமாக வெளியிட்டுள்ளார்கள்.
இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களின் புதிய ஊதிய விகிதம் பற்றிய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் அறிக்கை
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகளோடு பேசி, புதிய ஊதியங்கள் மற்றும் பணிகளுக்கான வரைமுறைகள் குறித்து 2008 ஏப்ரல் 10-ம் தேதி கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தம் முடிந்து காலாவதியாகிவிட்டபடியால் எங்கள் சங்க இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களின் நலன் கருதிய ஊதிய உயர்வை உயர்த்தி முறைப்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மூலமாக தயாரிப்பாளர் சங்கத்தில் 2011 மே 27 அன்று கொடுத்தும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு வருட காலத்திற்கு மேலாக்க் காத்திருந்தும் எந்தத் தீர்வும் எட்ட முடியாத நிலையில் தற்காலச் சூழலுக்கு ஏற்றாற்போல் இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக இணை, துணை, உதவி இயக்குநர்களின் நலன் கருதி, புதிய ஊதிய உயர்வை நாங்கள் அறிவிக்கிறோம்.
தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில் திரைப்படத்தில் சிக்கல் ஏற்படும்போது அப்படத்தின் ஊதியமாக இயக்குநருக்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட வேண்டும்.
இதே நிலை இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு ஏற்படும்பட்சத்தில்
இணை இயக்குநருக்கு - 4 லட்சம்
துணை இயக்குநருக்கு - 3 லட்சம்
முதல் நிலை உதவி இயக்குநருக்கு - 2 லட்சம்
இரண்டாம் நிலை உதவி இயக்குநருக்கு - 1 லட்சம்
என தரப்படுதல் வேண்டும்.
இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் படப்பிடிப்பில் பணி புரியும் நேரங்களில் கீழ்க்கண்டவாறு தினப்படி வழங்கப்பட வேண்டும்.
நாளொன்றுக்கு..
இயக்குநர் - 1000 - 2000
இணை இயக்குநர் - 500 - 600
துணை இயக்குநர் - 400 - 500
முதல் நிலை உதவி இயக்குநர் - 300 - 400
இரண்டாம் நிலை உதவி இயக்குநர் - 200 - 300
திரைப்பட வேலையாக அலுவலகம் வரும் நாட்களிலும் முன் தயாரிப்பு மற்றும் பின் தயாரிப்பு பணிகளில் இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு தினப்படியாக மேற்குறிப்பிட்டுள்ள தொகையில் 50 சதவிகிதம் வழங்கப்பட வேண்டும்.
ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் ஊதியம் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு படக் கலவைக்கு முன்பாக நிலுவையின்றி வழங்கப்பட்ட வேண்டும்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் எந்த்த் திரைப்படத்திலும் வேலை செய்யக் கூடாது. ஒப்பந்த்த்தின் நகல் இயக்குநர் சங்கத்தில் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
திரைப்படத்தின் இயக்குநரே கதை, திரைக்கதை, உரையாடலுக்கு பொறுப்பேற்கும்போது கதை, திரைக்கதை, உரையாடலுக்கென்று தனி ஒப்பந்தம் இயற்றிக் கொள்ள வேண்டும்.
இனிமேல் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திடமிருந்து குறிப்பிட்ட திரைப்படத்தின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே தயாரிப்பாளர் சங்கம், படத் தணிக்கைக்காக தடை இல்லாச் சான்றிதழை தணிக்கை அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய இடங்களில் திரைப்படங்களின் தலைப்பை பதிவு செய்வதை போன்று இனி வரும் காலங்களில் நமது உறுப்பினர்களின் நலனை கருதி இயக்குநர்களின் சங்கத்திலேயே படத் தலைப்பை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், சமுத்திரக்கனி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, பிரபு சாலமன், எம்.தம்பிதுரை, பாலசேகரன், கமலக்கண்ணன், முகமது அஸ்லாம், ஜெகதீசன், ஐந்து கோவிலான் போன்றோர் கலந்து கொண்டனர்.
இப்போது அமீர் தலைமையிலான குழு சொல்லியிருக்கும் இந்த ஊதிய உயர்வு சென்ற தேர்தலின்போதே இந்தக் குழுவினர் முன் வைத்ததுதான். இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஊதிய ஒப்பந்தம் இல்லாமல் இனிமேல் எந்த இயக்குநரும் பணியாற்றக் கூடாது என்பது புதிய விதி. அந்த ஊதிய ஒப்பந்தத்திலும் அறிமுக இயக்குநருக்கே சம்பளம் 10 லட்சம் என்று அறிவித்திருப்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிறார்கள் சில உதவி இயக்குநர்கள்..!
35, 40, 50, 60, 70, 80, 90 லட்சங்களில்கூட குறைந்த பட்ஜெட் செலவில் படமெடுக்கிறார்கள். இந்த புதிய ஊதிய ஒப்பந்தப்படி பார்த்தால் இயக்குநர்கள் டீமிற்கே 20 லட்சம் ரூபாய் செலவாகிறது.. இதற்கு யார் ஒத்துக் கொள்வார்கள்..? ஒத்துக் கொள்ளாவிட்டால் நீ இயக்காதே.. அவர்கள் படம் தயாரிக்க வரக் கூடாது என்பதுதானே பொருள்.. அப்படியெனில் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களையே பீல்டில் இருந்து வெளியேற்றும் முயற்சி இது என்று ஆதங்கப்படுகிறார்கள் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.
சென்ற வருடம் வெளியான 142 தமிழ்த் திரைப்படங்களில் 10 படங்கள் மட்டுமே வெற்றிக் கோட்டை எட்டியுள்ளன. அதாவது போட்ட காசு திரும்பக் கிடைத்திருக்கிறது. மீதமுள்ளவைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு சம்பளமாக சில ஆயிரங்களைச் செலவிட்டிருந்தாலும், தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கின்றன.
இந்த 142 சினிமாக்களில் கண்டிப்பாக 100 படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான். அதாவது 1 கோடிக்கும் குறைவான தொகையில் உருவான படங்கள்தான்..! இந்தப் படங்களிலும் பல வகைகள் உண்டு. கில்மா டைப் படங்களெனில் 30 அல்லது 35 லட்சத்தில் 10 பிரிண்டுகள் மட்டும் போடப்பட்டு ரிலீஸ் ஆகிவிடும். இதற்கு மேலான படங்களில் பலவற்றில் பணம் இன்வெஸ்ட் செய்பவர்களின் மகனோ, அல்லது மகளோ அதில் நடித்திருப்பார்கள். பணம் உள்ளவர்கள் பணம் கொடுத்து தாங்களே நடித்திருப்பார்கள். தங்கள் முகம் திரையில் தெரிய வேண்டும் என்பதற்காகவே படம் எடுப்பவர்களும் உண்டு. உதாரணம், சென்ற ஆண்டு கடைசியில் வெளியான கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ், வழிவிடு கண்ணே வழிவிடு, மற்றும் சென்ற வாரம் வெளியான தேனி மாவட்டம் படங்களை சொல்லலாம்.
இவர்களெல்லாம் இயக்குநர்களுக்கு 1 அல்லது 2 லட்சத்தை சம்பளமாகக் கொடுத்துவிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த பட்ச நாட்களில்(30 அல்லது 40 நாட்களுக்குள்) குறைந்த பட்ச தொழிலாளர்களை வைத்து படத்தை எடுத்து முடிப்பார்கள். இவர்களின் மொத்தத் தயாரிப்புச் செலவே 1 கோடிக்குள்தான் இருக்கும்..! இவர்களை போன்றவர்கள்தான் இடைநிலை தயாரிப்பாளர்கள். இவர்களால்தான் புதிய புதிய இயக்குநர்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அமீர் தெரிவித்திருப்பதை போன்ற ஊதிய ஒப்பந்தத்தில் இது போன்ற எந்த லோ பட்ஜெட் படமும் தயாரிக்கவே முடியாது.. நிச்சயமாக தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இயக்குநர்களுக்கு 20 லட்சம் கொடுத்துவிட்டு படத்தில் நடிக்கவிருப்பவர்களுக்கு 5 லட்சம் என்று பட்ஜெட் போட முடியாது..! இப்போது அறிமுக இயக்குநர்களுக்கு அதிகமான லோ பட்ஜெட் படங்களில் 1 லட்சம் ரூபாய்தான் சம்பளம். இதற்கு மேல் யாரும் கொடுப்பதில்லை.
பெரிய பேனர் என்றால்தான் தங்களது கம்பெனியின் பெயருக்காக 2 அல்லது 3 லட்சம் தருகிறார்கள். இது இயக்குநருக்கு மட்டும். இயக்குநர்கள் டீமிற்கு என்று பார்த்தால் தற்போது சங்கம் வழி சம்பளம் வருவதால் மட்டுமே நியாயமான சம்பளம் பலருக்கும் கிடைத்து வருகிறது. இதனிலும் குறைத்து துணை இயக்குநர்கள் தங்களது விருப்ப்ப்படி கடிதம் மூலம் ஒப்புதல் அளித்து குறைவான சம்பளத்தை பெற்று வருகிறார்கள். இயக்குநர்களுக்காக அல்லது தங்களுக்கு வேலை அல்லது பணிப் பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்கள்.
குறைந்த பட்ஜெட் படங்களென்றால் 100 சதவிகிதமும் தோல்வி என்பது உறுதிதான். ஒரு வாரம்தான் ஓடும் என்று தயாரிப்பாளருக்கும் தெரியும்.. இயக்குநருக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் எடுக்கிறார்கள் என்றால் ஒரு வேளை ஹிட்டடித்துவிட்டால் என்று தயாரிப்பாளர் நினைப்பார். இதையேதான் இயக்குநரும் நினைக்கிறார். இது சூதாட்டம் போலத்தான்..! அரசு மானியமாக 10 லட்சம், சேனல் ரைட்ஸாக 5 லட்சம், மற்றபடி மாதச் சம்பளம் போல தயாரிப்பாளர் சங்கம் மூலமாக படத்தின் கிளிப்பிங்ஸ்களை சேனல்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் சொற்பத் தொகை.. என்று சில வரவுகள் இருந்தாலும், போட்ட காசு தேறவே தேறாது..
பணம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்பவர்கள் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவார்கள். அடுத்த படத்தையும் தயாரிப்பார்கள். நம்ம பவர் ஸ்டார் சீனிவாசனை எடுத்துக் கொள்ளுங்கள். தான் சினிமாவுலகில் பிரபலமாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னால் பிரசாத் லேப்பில் நடந்த காதல் பாதை படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அவர் வந்தபோது 10000 சர வெடி போட்டு, மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்க வைத்தார். இதற்கான செலவெல்லாம் அவருடையதுதான்.. இது ஒருவகையான விளம்பர ஆசை.
அவருடைய லத்திகா படத்தை இன்னமும் ஒரு தியேட்டரில் ஓட்டி வருகிறார். தியேட்டர் வாடகையை முன்கூட்டியே 3 மடங்கு உயர்த்திக் கட்டியிருக்கிறார். வேறு எந்த படம் போட்டாலும் இந்த அளவுக்கு காசு கிடைக்காது என்பதால் தியேட்டர் ஓனர் விட்டுவிட்டார்.. எப்படியாவது 200 நாள் ஓட்டியே தீருவது என்று ஷோவுக்கு 2 3 பேருடன் நடத்திக் காண்பித்துவிட்டார்..! இது அவரிடம் இருக்கும் பணத்தினால் விளைந்தது..!
பவர் ஸ்டார் தனது அடுத்த படத்தில் இயக்குநருக்கு இது போன்று சம்பளம் தரலாம். அவருக்குத் தாங்கும். ஆனால் 40 லட்சத்தில் படமெடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களால் முடியுமா..? இயக்குநர்கள் சங்கத்தின் இந்த ஊதிய உயர்வால் இது போன்ற குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத்து என்று திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
இதே பிரஸ் மீட்டில் பெரிய படங்கள், சின்ன படங்கள் என்று தனித்தனியே பிரித்து சம்பளம் பெறலாம் என்ற தயாரிப்பாளர்களின் யோசனையை அமீர் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். “பெரிய பட்ஜெட் என்றாலும், சின்ன பட்ஜெட் என்றாலும் தொழிலாளி செய்யக் கூடிய வேலை ஒன்றுதான்.. நாங்கள் அந்த வேலைக்கு ஏற்றாற்போல் சம்பளம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களால் படத்தின் பட்ஜேட்டுக்கேற்ப சம்பளம் வாங்க முடியாது” என்றார்.
குறைந்த பட்ஜெட் படங்களில் ஸ்டில் கேமிராவை வைத்தே இப்போது படமெடுக்கிறார்கள். இதனை பயன்படுத்த ஆட்கள் தேவையில்லை. ஒளிப்பதிவாளரும், அவருக்கு ஒரு உதவியாளருமே போதுமானது. அனைத்தையும் வெளிப்புறக் காட்சியாகவே எடுத்தாலும் லைட்டிங் வசதிக்கு 2 கேவி லைட்டுகளே போதும் என்பார்கள். ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுப்பதுதான் இதில் அவர்கள் செய்யும் அதிகப்பட்ச செலவு. டிராலி ஷாட்டுகளை இவர்களின் படங்களில் பார்க்கவே முடியாது. சாம் மார்த்தாண்டன் நடித்த படத்தை பாருங்கள். அதிகப்பட்சம் வெளிப்புறக் காட்சிகள். பட்டப் பகலில் கிடைக்கின்ற சூரிய வெளிச்சத்திலேயே எடுத்திருப்பார்கள். இது போன்றுதான் 20 லட்சம் ரூபாய் செலவில் கேரளாவில் சந்தோஷ் பண்டிட் கிருஷ்ணனும், ராதையும் என்ற படத்தை எடுத்து.. அவருடைய நல்ல நேரம்.. பெரும் வசூல் செய்திருக்கிறார்.
ஷூட்டிங்கில் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையே 20-ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இதனால் சாப்பாட்டு செலவும் மிச்சமாகும். கேமிராவுக்கும், ஹீரோயினுக்கும் மட்டுமே ஒரு பழைய அம்பாசிடர் காரை ஏற்பாடு செய்துவிட்டு மீதமிருப்பவர்கள் ஆட்டோவில் வந்து செல்வார்கள். 3 படம் இயக்கியிருக்கும் இயக்குநர்கள் இப்போதும் டூவிலரில்தான் ஷீட்டிங் போய்க் கொண்டிருக்கிறார்கள். பல படங்களுக்காக விளம்பரம் கூட செய்யப்படுவதில்லை. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை எவ்வளவு சிம்பிளாக முடிக்க வேண்டுமோ அவ்வளவுக்கு முடிக்கிறார்கள். ரிலீஸ் சமயத்தில் மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்து கவர் கொடுத்து டைட்டிலை மட்டும் பிரபலப்படுத்துங்கள் என்கிறார்கள். இன்னும் சிலர் இதையும் செய்வதில்லை.
சென்ற வாரம் வெளியான பாரி, அன்புள்ள துரோகி ஆகிய படங்களுக்கு அதிக விளம்பரங்கள் செய்யப்படவில்லை. ஒரு வாரம் முழுவதும் தினத்தந்தி, தினகரனில் மட்டுமே விளம்பரம் செய்து முடித்துவிட்டார்கள். அன்புள்ள துரோகி படம் 4 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ். இது அவரவர் வசதிகளைப் பொறுத்தது. இப்படி வசதிகளைக் குறைத்து, குறைத்து தயாரிப்புச் செலவை பெருமளவு குறைத்துதான் படத்தை எடுத்து முடிக்கிறார்கள். எப்படியோ படம் ரிலீஸாகிவிட்டது என்று தயாரிப்பாளரும், டைட்டில் கார்டில் பெயர் கிடைத்துவிட்டது என்று இயக்குநரும் திருப்திபட்டு ஒதுங்க வேண்டியதுதான்..!
இது போன்ற படங்களின் படப்பிடிப்புகளில் துணை நடிகர்கள் சங்கத்தினரும், டெக்னீசியன் யூனியனும், லைட்மேன் யூனியனும்தான் அடிக்கடி தகராறு செய்வதாக பெப்ஸியில் வண்டி, வண்டியாக புகார்கள். பல அவுட்டோர் படப்பிடிப்புகளில் லோக்கல் ஆட்களை நடிக்க வைப்பதற்கு துணை நடிகர்கள் சங்கத்தினர் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். எங்கள் சங்கத்து நபர்களைத்தான் நடிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் அபாரதம் கட்டுங்கள் என்று போர்க்கொடி தூக்குகிறார்கள். பார்த்த முகங்களையே திருப்பித் திருப்பிப் பார்ப்பதா என்று இயக்குநர்கள் சொன்னாலும், உண்மையான காரணம்.. பட்ஜெட்டுதான்..
துணை நடிகர்களெனில் அனைவரும் சென்னையில் வசிப்பவர்கள். இங்கேயிருந்து அவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்ல ஆகும் போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு, தினமும் அளிக்க வேண்டிய பேட்டா செலவு, சாப்பாட்டுச் செலவு இதையெல்லாம் மனதில் வைத்துதான் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்கள். அதிலும் ஹீரோ, ஹீரோயினோட அப்பா, அம்மாக்கள், சொந்தக்காரர்கள் என்று உள்ளூர்காரர்களை வேலைக்கு வைத்தால், அவர்களுக்கு சோறு மட்டும் போட்டால் போதும்.. பல இடங்களில் தங்கள் முகம் திரையில் தெரிய வேண்டி அவர்களே இலவசமாக நடித்துக் கொடுப்பதுண்டு. துணை நடிகர்கள் சங்கமோ இதனைத்தான் எதிர்க்கிறது..!
லைட்மேன் யூனியன்காரர்களும், டெக்னீஷியன்களும், குறைந்தபட்சம் தங்களுடன் 3 பேராவது வேலை செய்ய வேண்டும். என் ஒருத்தரால் மட்டுமே இத்தனை வேலைகளையும் செய்ய முடியாது என்கிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையால் இதையும் எதிர்க்கிறார்கள் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.
கலை இயக்குநரை மட்டும் புக் செய்தால் போதாது. இவருடைய குறைந்தபட்சம் 2 உதவியாளர்களையும் வைத்துக் கொள்ள வேண்டும். இது போலவே மேக்கப், காஸ்ட்யூம்ஸ் என்று சில சங்கங்களும் மொத்தமாக 3 பேர் வருவோம் என்று அடம் பிடிப்பார்கள். சில சின்ன பட்ஜெட் படங்களில் பார்த்தீர்களேயானால் ஹீரோவின் வீட்டில் காட்டப்படும் வேல் வைத்திருக்கும் கிரேக்க வீரனின் சிலை, ஹீரோயினின் வீட்டிலும் இருக்கும். எதையாவது செய்து கேமிராவை பில்லப் செய் என்று சொன்னால் கையில் கிடைப்பதைத்தான் வைக்க முடியும். இரண்டும் வேறு வேறு நாட்களில் எடுக்கப்படும் காட்சியாக இருந்தால் கலை உதவியாளர் தெரியாமல் வைத்துவிடுவார். படத்தொகுப்பில்தான் இதனை கண்டு பிடிப்பார்கள். சின்ன பட்ஜெட்தானே எவன் இதையெல்லாம் பார்க்கப் போறான்... விட்டிரு என்பார்கள் சிலர். இது போன்ற குழப்பங்களை இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் அதிகம் பார்க்கலாம்..!
இப்படி சின்ன பட்ஜெட் படங்களுக்கு தேவைப்படாத அளவுக்கு தொழிலாளர்களை சில சங்கங்கள் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இப்பிரச்சினை இன்றைய நிலையில் பெரிதாவதற்கு காரணமாகிவிட்டது..! பெரிய பட்ஜெட் படங்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. இப்போது பாலா இயக்கி வரும் புதிய படத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கும், ஆண்களுக்கும் மொட்டை போட்டு.. அதிலும் தினமும் மொட்டையை ரெப்ரஷ் வேறு செய்து வருகிறாராம். இது அவரால் சாத்தியமானது. அவருடைய படத்தின் பட்ஜெட்டுக்கு தோதானது. இதை தண்டச்செலவு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இதனையும் சின்ன பட்ஜெட் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, சம்பள உயர்வையும், ஆட்களின் எண்ணிக்கையையும் கூட்டுவது திரையுலகத்தின் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் ஒவ்வாததுதான்..!
100 குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியானாலும்கூட அதில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 2000 அதிகப்பட்சம் 6000 இருக்கலாம். இந்தத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்ததே இது போன்ற படங்களால்தான்..! இப்போது இந்தப் படங்களுக்கும் இயக்குநர்கள் சங்கம் மறைமுகமாகத் தடை போட்டுள்ளது. சங்கம் நிர்ணயித்துள்ள ஊதிய விகித்த்தின்படியே ஊதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அது இல்லாமல் இயக்குநர்கள் யாரும் பணியாற்றக் கூடாது என்று சொல்லியிருப்பதன் மூலம் தயாரிப்பாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இயக்குநர்கள் சங்கம் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருமல் துவங்கிவிட்டது..!
இதற்கான தயாரிப்பாளர்களின் பதில் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும் இயக்குநர் சங்கத்தின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, இந்தப் பிரச்சினையை வேறு திசை நோக்கி கொண்டு செல்லப் போகிறது என்பது மட்டும் உறுதி.
|
Tweet |