உறியடி - சினிமா விமர்சனம்

29-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவில் எங்கெங்கும் காணாதபடி அனைத்திலும் ஊடுறுவியிருக்கும் சாதிய வேர்களை எத்துனை முயன்றும் இன்றைக்கும் அகற்ற முடியவில்லை. அது இந்தியர்களின் கூடவே பிறந்தது என்று சொல்லும் அளவுக்கு பரவியதற்கு, இந்தியாவின் அரசியல் சூழலும் ஒரு காரணம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளே அனைத்து தொகுதிகளிலும் மெஜாரிட்டியான சாதியைச் சேர்ந்த தங்களது கட்சி உறுப்பினர்களையே சட்டசபை வேட்பாளராகவும், பாராளுமன்ற வேட்பாளராகவும் நிறுத்துகின்றன. இதன் பின்பு சாதி, சமய வேறுபாடுகளை களைய பாடுபடுவோம் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
இந்தச் சாதி எப்படியெல்லாம் நம் கண்ணை ஏமாற்றி நாம் அறியும் முன்னரே நம்மை ஆக்கிரமிக்கிறது என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இளம் வயது இயக்குநரான விஜயகுமார்.

திருச்சி அருகில் இருக்கும் ஒரு சிறிய நகரம். அதில் 15000 பேர் இருக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு சங்கத்தை நடத்தி வருகிறார்கள். அதன் தற்போதைய தலைவர் உலகப்பன். இவர் தன்னுடைய தங்கை மகனான மைம் கோபியை வளர்ப்பு மகனாக வளர்த்து வருகிறார்.
கோபிக்கு தங்களுடைய சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று ஓர் ஆசை. இதற்கு உலகப்பன் உடன்படவில்லை. மிகக் குறைந்த நபர்களை வைத்துக் கொண்டு கட்சியைத் துவக்கி என்ன செய்வது என்று கூறி தடுக்கிறார்.
கோபி நெடுஞ்சாலையில் தாபா டைப் ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரி இருக்கிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் விஜய்குமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் நால்வரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
கல்லூரியில் படிக்கிறார்களோ இல்லையோ.. இந்த தாபாவுக்கு வந்து தினமும் குடிக்கிறார்கள். குடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நாள் அந்த ஹோட்டலுக்குள் வரும் கீழ் சாதியைச் சேர்ந்த ஒரு பெரியவரை வெளியேறும்படி சொல்கிறான் ஹோட்டல் மேனேஜர். இதனை இந்த நான்கு பேரும் தட்டிக் கேட்கிறார்கள். இது அங்கே பெரிய ரகளையாகிறது. தங்களைத் தாக்க வந்தவர்களுடன் மல்லுக் கட்டுகிறார்கள் நால்வரும். அதற்குள் கோபி அங்கே வந்து அவர்களை விலக்கிவிடுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலுக்குள்ளாகவாவது சங்கத்தை அரசியல் கட்சியாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் கோபி. இந்த நேரத்தில் உலகப்பன் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவனையில் படுத்துவிடுகிறார்.
கோபியின் ஹோட்டலுக்கு போலி மதுபானங்களை சப்ளை செய்பவரின் மகனான ராமநாதன் பேருந்தில் பயணம் செய்கையில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொள்கிறார். இதைப் பார்க்கும் நால்வரில் ஒருவன் ராமநாதனை அடித்துவிடுகிறான். மேலும் அதே பேருந்தில் பயணிக்கும் திருநங்கையும் ராமநாதனை அவமானப்படுத்த இது ராமநாதனின் தூக்கத்தைப் போக்கிவிடுகிறது. அவமானத்தில் குன்றிப் போய் இருக்கிறான்.
இந்த மாணவர்களை அடிக்க தாபாவுக்கு அடியாட்களை அனுப்பி வைக்கிறான். ஆனால் அங்கே இதை எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவர்கள் வந்த ரவுடிகளை சுளுக்கெடுத்து அனுப்பி வைக்கின்றனர். இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து வேறு வழியை யோசிக்கிறான் ராமநாதன்.
மாணவர்கள் ராமநாதனுடன் மோதுவதை அறியும் கோபி, இதை அரசியல், சாதிய பிரச்சினையாக்கி இதன் மூலமாக ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பி சாதி அரசியல் செய்ய நினைக்கிறான். இந்தச் சூழ்ச்சி தெரியாமல் மாணவர்களும் கோபியின் நட்பான பேச்சால் கவிழ்ந்து அவர் போக்கில் செல்கிறார்கள். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களில் முக்கியமான நிகழ்வு ‘உறியடி திருவிழா’தான். கண்ணைக் கட்டிக் கொண்டு தூரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பானையை கையில் இருக்கும் கம்பால் அடித்து உடைக்க வேண்டும்.  இதுதான் அந்தத் திருவிழா. இந்த ‘உறியடி’யைத்தான் படத்தின் தலைப்பாக மிக மிக பொருத்தமாக வைத்திருக்கிறார்கள்.
‘நம்முடைய கண்ணைக் கட்டிக் கொண்டு எதிராளியை அடிக்கச் சொன்னால் எப்படி?’ என்கிறார் இயக்குநர். இந்தச் சாதிய பிரச்சினையும் இப்படித்தான் இருக்கிறது. சாதி எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறது. அதனை கண்டுபிடித்து தீர்வு காண்பதென்பது மிகவும் கடினம் என்பதுதான் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் நமக்குச் சொல்லும் கருத்து.
படத்தின் மிக முக்கிய விஷயமே இயக்கம்தான். இயக்கம் என்றால் என்ன என்று கேட்பவர்களும், தெரியாமல் புலம்புவர்களும் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு அழகான இயக்கம். ரத்தச் சகதியில் துவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இமை கொட்டாமல் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பது இயக்குநர் விஜயகுமாரின் சிறப்பான இயக்கத்தினால்தான்.
இயக்கம் மட்டுமல்ல.. கலை இயக்கம்.. குறிப்பாக அந்த தாபா ஹோட்டலின் உட்புறம்.. அருமையான தயாரிப்பு.
இப்படியொரு சண்டையை வேறெந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு தத்ரூபமான சண்டை காட்சிகள்.. இடைவேளை பிளாக்கில் நடக்கும் சண்டையைப் பார்க்கும்போது குரூரம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் இதைவிட பயங்கரத்தை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அப்படியொரு கொலை வெறியோடு அந்த சண்டைக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.  
வசனங்கள் அனைத்துமே மிக எளிமையாக எழுதப்பட்டு அதிக அழுத்தமில்லாமல் கதையோட்டத்துடன் பேசப்பட்டிருக்கிறது. இதுவே கை தேர்ந்த இயக்குநரின் படமாக இருந்தால், ஒவ்வொரு வசனத்தையும் பிளக்ஸ் போர்டில் எழுதி வைப்பதுபோல பேசியிருப்பார்கள்.
ஆனால் இந்த இயக்குநர் மிக கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார். எந்த ஜாதி என்று தெரியாத வண்ணம் கதையை நகர்த்தியிருக்கிறார். அப்பா, மகன் என்றால் லேசுபாசாகத் தெரிந்துவிடும் என்பதால் மாமா, மருமகன் என்று மாற்றியிருக்கிறார். அதேபோல் கட்சியே வேண்டாம் என்கிற முடிவில் இருக்கும் சங்கத்தின் தலைவரை மெல்ல, மெல்ல தன்வசப்படுத்துவதுபோல மருமகன் செய்யும் உள்ளடி வேலைகளும், அதை அவர் கண்டு கொண்டும் காணாததுபோல இருப்பதுமான காட்சிகள் ரசனையானவை. “இதுல விஷம் கலக்கலியே..?” என்று தன் மருமகனிடமே கேட்கும் காட்சியில், அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் மனப்போராட்டத்தை தெளிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஆட்சி, அதிகாரம், பதவி  இதை அடைய ஒரு வழி அரசியல்தான். அந்த அரசியலில் வெளிச்சம் கிடைக்க உதவுவது ஜாதிப் பாசம்.. வெறும் 15000 வாக்குகள் மட்டுமே தொகுதியில் வைத்திருந்தாலும் அது எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை கோபி கணக்குப் போட்டுச் சொல்லும்விதத்தைப் பார்க்கும்போது.. இயக்குநரின் அரசியல் அறிவை வியப்புடன் பாராட்டத் தோன்றுகிறது.
கீழ்ச்சாதிக்காரன் என்பதாலேயே ஹோட்டலுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று மேனேஜர் மறுக்கும் காட்சியில் சில வசனங்களை கட் செய்திருந்தாலும் அவைகள் புரிகிறது. தெரிகிறது.. இதேபோல் பேருந்தில் ஒரு திருநங்கையின் அருகில் இடம் இருந்தும் அமர மறுக்கும் பெண்மணியின் செயலை முன் வைத்தும் ஒரு கருத்தினை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு அவமானச் செயல் எப்படியெல்லாம் ஒருவனை அலைக்கழிக்கிறது என்பதை இந்த ராமநாதன் கேரக்டர் மூலமாக பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.  ராமநாதன் ஹோட்டலில் தங்கியிருந்தபடியே ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவதும், திருநங்கையை கொலை செய்ய முயற்சிக்கும்வேளையில் நண்பர்கள் குழாம் ஹோட்டல் அறையை துவம்சம் செய்யும் காட்சியும் அபாரம்.. அதீத வன்முறை என்றாலும் கொஞ்சமும் நம் மனதை பாதிக்காதவண்ணம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கல்லூரி ஹாஸ்டலில் நடிக்கும் இறுதிக் காட்சி பயமுறுத்துகிறது. இருந்தாலும் ஜாதி வெறி என்னும் அரக்கன் அவரவர் மனங்களில் இருந்து இறங்கும்வரையிலும் இது போன்ற கொடூரங்கள் தொடரத்தான் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு வேறு வேலையே இல்லையா..? எப்போதும் குடியும், கும்மாளமும்தானா என்கிற கேள்வியும் பார்வையாளர்களுக்குள் எழுகிறது. இதனால்தான் அவரவர் வகுப்புகளில் செய்யும் சேட்டைகள்.. படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பது.. அவர்களே இந்தக் கேள்வியை தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வது என்று பலவற்றையும் நம் முன் வைத்திருக்கிறார் இயக்குநர்.
நண்பர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருமே நடிப்புக்கே புதியவர்கள். அனைவருமே வேறு வேறு தொழில் செய்து வருபவர்கள். கல்லூரி என்றால் ஒரு காதல் இருக்காதா..? அதற்காகவே ஒரு காதலை திணித்திருக்கிறார்கள். அந்தக் காதல் காட்சிகளும், பாடல் காட்சியும் ரம்மியமானவை. அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதற்கும் ஒரு பாராட்டு..!
பைத்தியக்காரனாக நடித்திருக்கும் நபரின் செயல் முதலில் பைத்தியமாகத் தெரிந்தாலும் பின்பு அரைகுறை மனிதராக காட்டி அவரை வைத்து ஸ்கெட்ச் போடும் பலே திட்டத்தை கடைசியான காட்சியாக காட்டி சஸ்பென்ஸில் வைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.
தரமான ஒளிப்பதிவு. தாபா காட்சிகள் மட்டுமன்றி பெரும்பாலான இரவுக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டத்தக்கது. பின்னணி இசை சில இடங்களில் ஏனோதானோவென்றாலும், பல இடங்களில் காட்சிகளை மேம்படுத்தியிருக்கிறது.
படம் நெடுகிலும் காட்சியமைப்புகளில் ஒரு வித்தியாசத்தை உணர வைத்திருப்பதன் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் விஜயகுமார் தமிழ்ச் சினிமாவில் புதிய சிறந்த இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் என்பது உண்மை.
படத்தின் இறுதியில் சாலப் பொருத்தமாக மகாகவி பாரதியின், ‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலை ஒலிக்க வைத்திருக்கிறார்கள். இது ஜாதி வெறியர்களுக்காக அப்பாவி இளைஞர்கள் எழுப்பும் கோபக் குரலாக இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது.
தலைவர்களின் சிலை உடைப்பு.. சிலைகளில் அசிங்கத்தை வீசுவது என்பதெல்லாம் இப்போதும் தமிழகத்தில் பல ஊர்களில் தொடர்ந்து நடந்து வருவதுதான். தற்செயலாக நடந்துவிடும் விஷயத்திற்கெல்லாம் பேருந்து எரிப்பு, கலவரம், துப்பாக்கிச் சூடுவரையிலும் கொண்டு போய் முடிக்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.
இந்தத் தீ எந்தப் பொறியில் இருந்து கிளம்புகிறது என்பதுதான் நாம் தேட வேண்டிய விஷயம். இதைத்தான் இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அந்தப் பொறி அரசியல்தான். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் படத்தை முடித்திருக்கிறார்.
ஆனால் இது அனைவராலும் புரிந்து கொள்ளப்படுமா என்பதுதான் கேள்விக்குறி.

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்

28-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையிலும் சிறு வயது குழந்தைகளுக்கான படங்களையே இயக்கி வந்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், இந்த முறை சற்றே பெரிய வயதுடைய குழந்தைகளுக்காக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் தங்களது காதல் சம்பந்தப்பட்ட கதை என்று தெரிந்தும் நடிக்க ஒத்துக் கொண்ட சிம்பு மற்றும் நயன்தாராவிற்கு முதல் நன்றி. இப்படியொரு கதையை, அதே கதாபாத்திரங்களையே நடிக்க வைத்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு திரைக்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜை பாராட்ட வார்த்தைகளில்லை. யாருக்கு வரும் இந்தத் தைரியம்..?

சாப்ட்வேர் நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கிறார் சிம்பு. இவருக்குக் கால்கட்டு போட்டுவிடத் துடிக்கும் இவரது தந்தை இவருக்காக ஒரு பெண் பார்க்கிறார். சிம்புவும் பெண் பார்க்க வருகிறார். வந்த இடத்தில் நயன்தாரா என்னும் தேவதையைப் பார்த்தவுடன் அதுவரையிலும திருமண வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமே இல்லாதவர், சட்டென மனம் மாறுகிறார்.
இருவரும் தனிமையில் பேசிக் கொள்கிறார்கள். அவரவர்க்கு ஒரு வாழ்க்கைப் பாதை உண்டு என்பதை உணர்கிறார்கள். சிம்புவின் முதல் காதல் பற்றி கேட்கிறார் நயன்தாரா. இதை சற்றும் எதிர்பார்க்காத சிம்பு அதிர்ச்சியானாலும் நடந்ததைச் சொல்லிவிடுகிறார்.
ஆனாலும் முடிவை சஸ்பென்ஸில் விட்டு வைத்திருக்கிறார் நயன்தாரா. அதுவரையிலும் பொறுமை தாங்காத சிம்பு, நயன்தாராவை போனில் தொடர்பு கொண்டு ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறார். நயனும் பேசத் துவங்குகிறார்.
ஆனாலும் லிமிட் தாண்டாமல் பழக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நயன்ஸ். சில, பல மோதல்களுக்குப் பிறகு திருமண நிச்சயத்தார்த்தம் நடக்கிறது. இந்த நேரத்தில் நயன்தாராவின் முன்னாள் காதலர்கள் பற்றி சிம்புவின் நண்பரான சூரி, தனது டிடெக்டிவ் நண்பனான சந்தானத்தின் மூலம் விசாரிக்கத் துவங்க.. இது டேவிட் என்கிற புதிய கேரக்டரை அடையாளம் காட்டுகிறது.
டேவிட் பற்றி நயன்தாராவிடம் சிம்பு கேட்க அவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பமாகிறது. அதே நேரம் திருவையாறில் வருங்கால சம்பந்தி வீட்டிலேயே தங்கியிருக்கும் சிம்புவின் அப்பாவுக்கும், நயன்தாராவின் அப்பாவுக்குமான ஒரு சின்ன பிரச்சினை பெரிதாகி அது மோதலாக உருவெடுத்து கல்யாணம் நின்று போகிறது. நின்று போன சிம்பு-நயன்தாரா கல்யாணம் எப்படி நிறைவேறுகிறது என்பதுதான் மீதமான திரைக்கதை.
படத்தின் மிகப் பெரிய பிளஸ்ஸே வசனங்கள்தான். அதிலும் நயன்தாரா, சிம்பு இருவரின் தனிப்பட்ட குணங்களை மையப்படுத்தியே வசனங்கள் பெரிதும் எழுதப்பட்டிருக்கின்றன. இருவருமே அதை விரும்பி அசை போட்டிருக்கிறார்கள் போலும். தியேட்டரில் அத்தனை ரெஸ்பான்ஸ்..
“எத்தனை காதல்தான்டா பண்ணுவ..?
காதலிக்கிறதைத் தவிர உனக்கு வேற வேலையே இல்லையா..?
என்னைய வைச்சு காமெடி பண்ணி சிரிச்சுக்குறீங்க..? சிரிங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டு போயிக்கிட்டே இருப்பேன்..
நீயும்தான் மாத்தி, மாத்தி காதல் பண்ணிக்கிட்டிருக்குற..!?
நீ பண்ணின காதலுக்கெல்லாம் உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது..
உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது..?
பையனா பொறந்தா ஆர்யா, தனுஷ், விஷால்ன்னு பேரு வைப்பேன்..
நான் நேர்மையாத்தான் இருக்கேன். ஆனா வர்றவங்கதான் என்னைப் புரிஞ்சுக்காம பாதியிலேயே போயிடறாங்க.. உன்னை மாதிரி..”
இது மாதிரி சிம்பு, நயன்ஸ் இருவரின் வாழ்க்கையை கொத்து புரோட்டா போடுவது மாதிரியே வசனங்களை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அதிலும் சில சென்சிட்டிவ் வசனங்களை சிம்பு, நயன்ஸ் இருவருமே தனித்தனி ஷாட்டுகளில் பேசியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் சர்ச்சைக்குரிய வசனங்களின்போது அவரவர் ரியாக்ஷன்கள் ரசிகர்களுக்குத் தெரியாதது ஒரு குறைதான்..!
படம் முற்பாதியில் கலகலப்பாக போனாலும் பிற்பாதியில் பாதி நேரம் போனிலேயே கடலை போட்டுக் கொண்டிருப்பதால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. ஜெய் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கியிருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கும்தான்..
சிம்பு-ஆண்ட்ரியா காதலின் துவக்கக் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் ரசிப்பு.. அதிலும் ஒரு ஷாட்டில் ஆண்ட்ரியா வெட்கத்துடன் தலையைக் குனிவதும், சிம்பு அதைப் பார்த்து ரசிப்பதும் படு ஜோர்..
இதேபோல் ஆண்ட்ரியா திரும்பிப் பார்ப்பார் என்று சூரியிடம் சிம்பு சொல்ல அதேபோல் அவரும் திரும்ப.. ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு இந்தக் காதல் போர்ஷன்தான்..
இருவரின் பிரிவுக்கான காரணத்தை இழுக்காமல் மிக நாசூக்காக வசனத்தாலேயே சொல்லி முடித்திருப்பது இயக்குநரின் டச். ஆண்ட்ரியா இப்போதும் சிம்பு மீது காதலுடனேயே இருப்பது படத்தின் திரைக்கதைக்காக இழுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.
நயன்தாராவின் அப்பா, அம்மா.. சிம்புவின் அப்பா சம்பந்தப்பட்ட  காட்சிகளுக்கு பின்புதான் படமே சூடு பிடிக்கிறது. அதாவது படத்தின் இறுதி 20 நிமிட காட்சிகள்தான் படமே.. அதுவரையிலும் ஆளாளுக்கு செல்போனில் கடலை போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
இடையில் சூரி, நயன்தாராவிடம் வந்து சிம்பு தன்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகவும் அதனால் தன்னை மீண்டும் சேர்க்குமாறு சிம்புவிடம் சொல்லும்படி வந்து கேட்கும் காட்சியும் ஒரு அழகு சீன்.
சிம்பு தமிழ் சினிமாவில் உண்மையிலேயே ரொமான்ஸுக்கு ஏற்ற ஹீரோ. ஆனால் படம் கிடைத்தாலும் ஆள் கிடைக்காமல் ஓடிக் கொண்டிருப்பதால் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் திண்டாடுகிறார்.
இந்தப் படத்தில் எந்த விளையாட்டையும் காட்டாமல் பாண்டிராஜின் இயக்கத்திற்குள் நடித்திருக்கிறார் போலும். அதனால்தான் ஹரோயிஸ வசனங்களே இல்லாமல் கதாபாத்திரத்திற்கேற்ற வசனங்களே இடம் பெற்றுள்ளன. அதற்கேற்ற நடிப்பையும் காட்டியிருக்கிறார் சிம்பு. வெல்டன்.
ஆண்ட்ரியாவின் முக பாவனைகளிலேயே நடிப்பைக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். தாபாவில் முதல்முறையாக சிம்புவை பார்த்தவுடன் தனது தோழிகளிடம் இதைச் சொல்லும்விதம்.. சூப்பர் மார்க்கெட்டிற்குள் இரவு நேரத்தில் சிம்புவுடன் மாட்டிக் கொள்ளும் காட்சியில் அப்பாவிடம் போனில் பேசி சமாளிப்பது.. அந்த விளம்பரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
தொடர்ந்து தனது அப்பாவின் விருப்பத்தை மீறி எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை சிம்பு தெரிவித்தவுடன் ‘பிரேக் அப்பை நாகரிகமா சொல்ற’ என்று திருப்பிச் சொல்லிவிட்டு எழுந்து செல்லும்போது அந்த பீலிங்கை கொணர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா..! அத்தனை பெரிய அழகியல்ல.. ஆனால் சினிமா கேமிராவில் பதிவாகும்போது அழகியாகத் தெரிகிறார் ஆண்ட்ரியா.
நயன்ஸ்.. தேவதையை போலவே படம் முழுவதிலும் வலம் வந்திருக்கிறார். அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து கடைசியாக சிம்புவிடம் போனில் கெஞ்சுவதுவரையிலும் ஒன் வுமன் ஷோவே நடத்தியிருக்கிறார். கண்டிப்பான குரலில் அவர் பேசும் விதமும், காதல் வந்த பிறகு சிம்புவுடன் உருகி, உருகி பேசும்விதமும்.. இவரை எதற்காக.. ஏன்.. எப்படி சிம்பு மிஸ் செய்தார் என்று அவர் மீது கோபம்தான் வருகிறது..! நயன்ஸுக்காகவே பார்க்க வேண்டிய படம் என்கிற பட்டியலில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
சூரிதான் இந்தப் படத்தை பல நேரங்களில் தாங்கிப் பிடித்திருக்கிறார். எப்போதும் உடன் வரும் விடிவி கணேஷ் இல்லாததாலும், சந்தானம் ஒரு சில காட்சிகளில் மட்டும் வருவதாலும் சூரியின் சப்போர்ட்டிங் ஆக்டிங்தான் சிம்புவுக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்கும் பக்க பலம். பல காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் அட்டே போடவும் வைத்திருக்கிறார். எல்லாப் புகழும் வசனமெழுதிய இயக்குநர் பாண்டிராஜையே சேரும்..!
பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு வழக்கம்போல அபாரம்.. இரண்டு அழகிகளையும் பிரேமில் காட்டும்போது அப்படியே தொடரக் கூடாதா என்று கேட்கும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், மாண்டேஜ் காட்சிகளிலும் ஒளிப்பதிவு சொட்டுகிறது..!
படத்தின் பாடல்களை பற்றி இயக்குநர் பாண்டிராஜே விமர்சனம் செய்திருந்தார். ஆனால் படத்தில் பார்க்கும்போது அப்படியொன்றும் மோசமில்லை. ஆனால் இசையமைத்தது உண்மையிலேயே குறளரசனா என்கிற சந்தேகமும் இருக்கிறது. அவரது அப்பாவின் சாயல் பாடல்களில் தொனிக்கிறது.
எப்போது பார்த்தாலும் காதல்.. காதல்.. காதல்தானா என்கிற கோபம் சாமான்ய சினிமா ரசிகனுக்குள் எப்போதுமே உண்டு. ஆனால் இந்தப் படம் ஒரு கல்யாணமாகப் போகும் காதலர்களுக்குள் நடக்கும் ஈகோ, மோதல்களைப் பற்றிப் பேசுவதால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
காதலர்களுக்கும், காதலித்து தோற்றவர்களுக்கும், காதலினால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்..!

கோ-2 - சினிமா விமர்சனம்

14-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசியல் அதிகாரம் எப்படி ஒரு நல்லவனை அதர்மப் பாதையில் நடக்க வைக்கிறது என்பதை ‘கோ’ திரைப்படம் சொன்னது. இதன் இரண்டாம் பாகமான இது அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி மதியால் வீழ்த்துவது என்பதைச் சொல்கிறது.
இந்த மாதிரி படத்தை எடுப்பதற்கு இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்களே இல்லை என்று நினைத்திருந்த நேரத்தில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இதோ நானிருக்கிறேன் என்று சொல்லி தைரியமாக துணிச்சலுடன் களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நமது முதற்கண் வாழ்த்துகளும், பாராட்டுக்களும், கூடவே கோடானு கோடி நன்றியும்தான்..!

தமிழகத்தின் முதலமைச்சரை கடத்தி வைத்து இதன் மூலமாக அவருடைய அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் உள்துறை அமைச்சராக இருக்கும் தில்லை நாயகத்தின் முகமூடியைக் கிழிப்பதுதான் படத்தின் கதை.. அவ்வளவுதான்.. மூன்று வரியில் சொல்லப்படும் அளவுக்கு சுருக்கமாகவே திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் காட்சியிலேயே முதல் அமைச்சரைக் கடத்திவிடுகிறார்கள். அதன் பின்னர் ஏன் கடத்தினேன் என்பதை கடத்தல்காரரான ஹீரோ பாபி சிம்ஹா ஒவ்வொரு சுவாரஸ்ய முடிச்சுக்களை வெளியில் சொல்லிக் கொண்டே வர.. படத்தின் சுவாரஸ்யமும் கூடிக் கொண்டே செல்கிறது.
முதல் பாதியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்.. என்ன செய்துவிட்டார் இந்த முதலமைச்சர் என்கிற கேள்வியையெல்லாம் பலமாக நமக்குள் தூண்டிவிட்டு பிற்பாதியில் இதற்கு நேர் எதிரான திரைக்கதையுடன் படம் படு வேகமாக பயணிக்கிறது. இறுதியில் இது போல நாமும் ஒரு நாளைக்குச் செய்தால்தான் என்ன என்று பார்வையாளனையும் தூண்டிவிட்டிருக்கிறது இந்தப் படம். இதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டம் போடும் அரசியல்வியாதிகளைத் தண்டிப்பதென்பது இந்த நாட்டில் முடியாத காரியமாக இருக்கிறது. இந்தத் தண்டிக்கும் வேலையையே இன்னொரு அரசியல்வியாதியே முனைந்து செய்தால்தான். ஊழல் அரசியல்வியாதி ஜெயிலுக்குப் போக முடிகிறது. நம் நாட்டில் இப்படியொரு சூழல் இருக்கும் நிலையில் சாதாரணமான காமன்மேன் என்னதான் செய்வான்..? அவனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு உதாரணக் கதையாகவும் இந்தப் படம் இருக்கிறது.
பாபி சிம்ஹாவுக்கு மிகப் பெரிய ரோல் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக திரையில் ஒலிக்கிறார். நடித்திருக்கிறார். படத்தில் பேசப்பட்டிருக்கும் பல அரசியல் வசனங்களை தைரியமாக முன் வந்து பேசியிருக்கும் பாபிக்கு நமது பாராட்டுக்கள். பழம் தின்னு கொட்டையையும் முழுங்கும் அளவுக்கு நடிப்பவர்கள்கூட இது போன்ற அரசியல் வசனங்களை தப்பித்தவறிக்கூட வெளியில் பேச மாட்டார்கள்.
ஆனால் இதில் செம்பரப்பாக்கம் ஏரி, வெள்ளம், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஏரிகளை தூர் வாராதது.. அணைகளை பரமாரிக்காதது.. தொலை நோக்கு பார்வையில்லாமல் திட்டங்களை கையாள்வது.. ஊழலையும், லஞ்சத்தையும் ஊக்குவிப்பது என்று பலவித அம்சங்களையும் பாபி சிம்ஹா மாநிலத்தின் முதலமைச்சரான பிரகாஷ்ராஜிடம் பளிச்சென்று கேட்கிறார்.
எதற்கெடுத்தாலும் இதுவொரு மிடில் கிளாஸ் மனோபாவம் என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளும் அரசியல்வியாதிகளால், பதிலே சொல்ல முடியாத பல விஷயங்களையும் இதில் பட்டியலிட்டிருக்கிறார் இயக்குநர்.
“1000 ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி புகைப்படத்தை நீக்கிவிட்டு ஒரு நோட்டை புதியதாக அச்சடித்துக் கொடுங்கள்..” என்பதில் இருக்கும் உள்ளர்த்தமே வேறு. இப்போதைய நிலைமையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து கருப்புப் பணத்தையும் ஒழிக்க ஒரே வழி.. இதுதான் என்கிறார் இயக்குநர். செய்யலாம்தான். ஆனால் அரசியல்வியாதிகள் விடுவார்களா..?
பேட்டா செருப்பிற்கு சொல்லும் விலை போலவே பல பொருட்களுக்கும் 50 பைசா.. 60 பைசாக்களை விலையாக வைத்து.. அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அடிக்கும் கொள்ளைப் பணமாக மாதம் 85000 கோடி ரூபாய் சேர்கிறது. அதனை மாநிலங்களுக்கு முறைப்படி கொடுத்தாலே மக்கள் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கலாமே என்கிறார் இயக்குநர். இதுவும் நல்ல யோசனைதான்.. ஆனால் செய்ய மனம் வேண்டுமே..?
பாபி சிம்ஹாவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சும் அதன் முடிச்சும் சுவாரஸ்யமானது. குமரன் என்னும் பாபி சிம்ஹா அனாதையாக வளர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டு நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு பத்திரிகையாளராகப் பணியில் சேர்கிறார். அங்கேதான் ஹீரோயின் நிக்கி கல்ரானியை பார்க்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.
இந்த நேரத்தில்தான் பாபி சிம்ஹாவை சின்ன வயதில் இருந்தே ஹோமில் ஸ்பான்ஸர் செய்த ஒருவரைப் பற்றி அவருக்குத் தெரிய வர.. அவர் யாரென்று விசாரித்து தெரிந்து கொள்ள வருகிறார். வந்த இடத்தில் அந்தப் பெரியவர் குமாரசாமி என்னும் நாசர் காணாமல் போய் பல நாட்கள் ஆகிறதென்பது தெரிகிறது.
சென்ற முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உள்துறை அமைச்சர் தில்லை நாயகம் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனாலும் தனது பண பலத்தால் தான் ஜெயித்துவிட்டதாக அறிவிக்க வைத்து ஆட்சியிலும் பங்கேற்று அமைச்சரவையிலும் இடம் பிடித்துவிட்டார்.
இதை எதிர்த்து குமாரசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க.. இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க அமைச்சர் தில்லை நாயகம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அது பலனளிக்காமல் போக.. கடைசியில் குமாரசாமியை கொலை செய்திருக்கிறார். இதையறியாமல் தனது அப்பா திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையில் பிரிண்டிங் வேலை செய்து வரும் அவரது மகன் கருணாகரனையும் அமைச்சரின் ஆட்கள் கொலை செய்துவிட.. நீதி, நியாயம் கேட்டு வேறு வழியில் போராடும் சூழலுக்கு வருகிறார் பாபி. இந்தச் சூழலை மிக எளிமையான திரைக்கதையில் குழப்பமில்லாத திரை மொழியில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
பிரகாஷ்ராஜ் வழக்கம்போல நடிப்புக்கென்றே பிறந்தவர்போல நடித்திருக்கிறார். காமன்மேன்களை திட்டித் தீர்ப்பது.. தனது ஆட்சி, அதிகாரத்தைச் சொல்லி பயமுறுத்துவது.. உண்மை தெரிந்து அதையும் ஜீரணித்துக் கொள்வது.. கடைசியாக பாபியின் செயலில் இருக்கும் நீதியை உணர்ந்து அமைதியாக திரும்பிச் செல்வதுவரையிலும் ஒரு அக்மார்க் இந்தியாவில் எங்குமே கிடைக்காத ஒரு முதலமைச்சரை காட்டியிருக்கிறார்.  இப்படியொரு நல்ல முதலமைச்சரை இந்தியாவில் தேடித்தான் பார்க்க வேண்டும். இதுதான் இந்தப் படத்தில் இருக்கும் மிகப் பெரிய முரண்பாடு..!
நிக்கி கல்ரானி வழக்கம்போல் டூயட்டுகளுக்கும், காதலுக்கும், கொஞ்சம் கடமைக்குமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அசத்தல் நடிப்பைக் காட்டியிருப்பது பால சரவணன்தான். அவர் ஜான் விஜய்யிடம் முதலில் சொல்லும் கதையை அப்படியே நம்பிவிட்டோம். அந்த அளவுக்கு அழுத்தமாக தான் சொல்லும் பொய்யைக்கூட உண்மை போல புலப்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவும் ஒரு சான்று.
நிஜத்தில் தமிழகத்தின் மு்ன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அப்படியே நியாபகப்படுத்துகிறார் உள்துறை அமைச்சர் தில்லை நாயகமாக நடித்திருக்கும் இளவரசு.
“இந்த சி.எம். போயிட்டா அடுத்த சி.எம். நான்தான் தெரியும்ல்ல..?” என்று டி.ஜி.பி.யிடம் உதார் விடுவதிலேயே தெரிந்துவிட்டது.. கூடுதலாக நெற்றியில் இருக்கும் வீபூதிப் பொட்டும், குங்குமப் பொட்டும் வேறு அடையாளம் காட்டுகிறது.
என்ன ஒரேயொரு வித்தியாசம்.. இளவரசுவைபோல படபடவென பேச மாட்டார் ஓ.பி.எஸ்., எண்ணி, எண்ணி அளவோடுதான் பேசுவார்.. பரவாயில்லை. அடுத்த முதலமைச்சர் ரேஸில் இவரும்தானே காத்திருக்கிறார்.
இவரது தம்பியும் பெரியகுளம் நகராட்சியின் தலைவருமான ராஜா, நாகமுத்து என்கிற பூசாரியின் தற்கொலைக்கு காரணம் என்கிற குற்றச்சாட்டில் சிக்கி போலீஸ், வழக்கு என்று இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரிந்ததே..
இதேபோல் மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை, கொலை என்று பல வழிகளில் இறந்து போயிருக்கிறார்கள். இதுவும் அந்த ஊழலில் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகளின் கைவண்ணம்தான்.. இப்படி இப்போது நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் அராஜகங்களை நினைவுபடுத்தும்விதமாகத்தான் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சங்கரபாண்டியனாக வரும் ஜான் விஜய்யின் கேரக்டர் மட்டுமே நம்பக் கூடியதாக இல்லை. ஒரு முதலமைச்சரையே கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது எத்தனை சீரியஸான விஷயம். இதை ஹேண்டில் செய்ய ஒரு காமெடியான ஸ்கெட்ச்சில் ஜான் விஜய் வலம் வருவதுதான் சற்று நெருடலான விஷயம். மற்றபடி போலீஸின் வழக்கமான பேச்சுக்கள்.. மிரட்டல்களை அசால்ட்டாக அவர் பேசுவது பிடிக்கத்தான் செய்கிறது..!
டூயட்டுகளை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாமல் இடையூறு செய்கின்றன. ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு. கலை இயக்குநரின் ஆடம்பரமில்லாத செட்டுகள் கண்ணைக் கவர்கின்றன.
பல லாஜிக் மிஸ்டேக்குகள் படத்தில் இருந்தாலும் இது போன்ற அரசியல் கதைகள் நம் கதைகளைத்தான் பேசுகின்றன என்பதால் அதையெல்லாம் பார்க்கத் தேவையில்லைதான்..!
கடைசியாக கடத்தியவர்களை தேடலாம் என்று இன்னொரு போலீஸ் அதிகாரி சொல்லும்போது “எதற்கு..?” என்று கேட்டு விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் ஜான். ஸோ.. இவரும் இதற்கு உடந்தையா என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. முதல்வரே தேவையில்லை என்றாலும் அது சட்டப்படி சரியாகுமா..? முறையாகுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா இயக்குநரே..?
அமைச்சர் இளவரசுவின் லீலைகளெல்லாம் தெரியாமல் முதல் அமைச்சர் இருந்திருப்பார் என்பதையும் நம்பத்தான் முடியவில்லை. அவருக்கும் இதில் மறைமுகமான பங்கிருக்குமே..? அதற்கு யார் பொறுப்பாவது என்பதையெல்லாம் இயக்குநர் இதில் சொல்லவில்லை. நாமளே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்..! அடுத்த முறை இதே முதலமைச்சரை நாம் கடத்தும்போது அதைப் பார்த்துக் கொள்வோம்..!
‘கோ-2’ தைரியமான ஒரு அரசியல் படம். மிஸ் பண்ணிராதீங்க. அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

கருணாநிதி... ஜெயலலிதா... ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

11-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘கருணாநிதி’ என்ற பெயரைக் கேட்கும்போது ஜெயலலிதாவும், ‘ஜெயலலிதா’ என்ற பெயரை உச்சரிக்கும்போது கருணாநிதியும் தமிழர்களின் நினைவுக்கு வருவது தற்செயல் நிகழ்வல்ல. 

கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தின் தலையெழுத்தை, அரசியலைத் தீர்மானிக்கும் இவர்கள், அரசியல் செய்வது, அறிவிப்பு வெளியிடுவது என எதிரெதிர் துருவங்களாகக் காட்சியளிக்கின்றனர். 

ஆனால், ஊழல், தனி மனிதத் துதி, குடும்ப அரசியல், சர்வாதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இருவரும் ஒருவரே.சர்க்காரியாவும் மைக்கேல் டி.குன்ஹாவும்..!

தமிழகத்தில் ஊழல் என்ற வார்த்தை கருணாநிதியின் காலத்தில் பிரபலம் அடைந்தது. காமராஜரின் காலத்தில்... அண்ணாவின் ஆட்சியில்... அந்த வார்த்தைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்கு கருணாநிதி கொண்டு வந்த பிறகே, ஊழல் என்ற சொல் பிரபலமானது. 

1969-ல் முதன்முதலாக முதலமைச்சரான கருணாநிதி, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தது; சென்னை மவுன்ட் ரோட்டில் இருந்த குளோப் தியேட்டருக்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்தது; ‘பிராட்வே டைம்ஸ்’ பத்திரிகையுடன் ஒப்பந்தம் போட்டது; சென்னையில் அண்ணா மேம்பாலம் கட்டியது; ஏ.எல்.சீனிவாசன் என்பவருக்கு பீர் தொழிற்சாலை அமைக்க உரிமம் வழங்கியது; வீராணம் ஏரித் திட்டத்துக்குக் குழாய் பதித்தது என்று ஊழல் பட்டியலை நீளமாக்கிக்கொண்டே போனார். 

அதைப் பட்டியல் போட்டு, அன்றைய ஜனாதிபதியிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதன்பேரில் அமைக்கப்பட்டதுதான் சர்க்காரியா கமிஷன். இன்றைக்கும் சர்க்காரியா என்ற பெயரைக் கேட்டால் கருணாநிதிக்கு மட்டுமல்ல... தி.மு.க-வில் பலருக்கும் கிலி பிடிக்கும்.

கருணாநிதி மீதான அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த சர்க்காரியா, மிரண்டு போனார். “விஞ்ஞானப்பூர்வமாக இந்த ஊழல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்பட்டமாகத் தவறுகள் நடந்துள்ளன. பல லட்சம் (அன்றைய மதிப்பு) பணம் கைமாறி உள்ளது. அந்தப் பணத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். ஆனால், அதை நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் இல்லை. அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, நிர்வாகரீதியில் இந்த ஊழல்கள் செய்யப்பட்டுள்ளன” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். 

அன்று ஊழல்களுக்குப் பழகிய கருணாநிதியின், ஒவ்வோர் ஆட்சியிலும் ஊழல் தொடர்கதையாகிக்கொண்டே வருகிறது. கருணாநிதியிடம் பாடம் கற்றுக் கொண்ட அவரது உடன்பிறப்புகள், மத்தியில் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கும் தங்களின் ஊழல் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட்டனர். 2ஜி அதற்குச் சாட்சி. 

கருணாநிதிக்கு ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்க விரும்பும் ஜெயலலிதா, இந்த விஷயத்தில் கருணாநிதியாகவே இருக்க விரும்பினார் போல. 

1991-ம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரானதும், தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்தார். ஊராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி, புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அத்தனை துறைகளிலும் ஊழல் ஊற்றெடுத்து ஓடியது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி வாங்கியது; சுடுகாடுகளுக்குக் கூரை போட்டது; டான்சி நிலம் வாங்கியது; நிலக்கரி இறக்குமதி செய்தது; பிறந்த நாள் பரிசு வாங்கியது என்று எல்லாவற்றிலும் ஊழலை அரங்கேற்றினார். இவற்றில் சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். 

மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1991-96 காலகட்டத்தில் மட்டும் ரூ.66 கோடியாக உயர்ந்தது. பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை பெற்று பதவியையே இழந்தார். பிறகு, நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகி விடுதலை பெற்றார். அதன் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டிக்கப்பட்டு மீண்டும் பதவியை இழந்தார். அந்த வழக்கில், நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த தீர்ப்பின் மூலம் விடுதலை வாங்கிவிட்டாலும், இன்றுவரை அந்த வழக்கு ஜெயலலிதாவின் தூக்கத்தைத் தொலைக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. 

கருணாநிதிக்கு சர்க்காரியா என்றால், ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க-வினருக்கும் குன்ஹா என்ற பெயரைக் கேட்டால் தூக்கம் தொலையும். 

ராஜராஜ சோழனும்... அம்மாவும்..! 
திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த கருணாநிதி, ஜெயலலிதாவை மாலைகளும், மரியாதைகளும், புகழுரைகளும் தேடிச் சூடிக்கொள்ளும் தருணங்கள் ஏராளமாக வாய்த்து இருந்தன. ஆனால், அவை கிடைக்காத தருணங்களில், விலை கொடுத்து வாங்குவதற்கும், அதைக் கொடுப்பதற்காகவே ஒரு  கூட்டத்தைத் தங்களைச் சுற்றிவைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினர். 

2006-11 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் அரங்கேறிய பாராட்டு விழாக்கள் கருணாநிதியின் புகழ் மாலைகளுக்கு உதாரணங்கள். அது பாராட்டு விழா நடத்தி காரியம் சாதிக்கும் அளவுக்குப் போனது. கவிஞர்கள் கருணாநிதியைப் பாராட்டு மழையில் நனைத்தனர். ஒருகட்டத்தில் கருணாநிதியைத் தவிர, மற்றவர்களுக்கு அலுத்துப்போயின அந்த விழாக்கள். 

ஒரு பாராட்டு விழாவில், நடிகர் அஜித், “எங்களை மிரட்டி கூப்பிடுறாங்கய்யா” என்று போட்டு உடைத்தார். அதைச் சொல்ல முடியாமல், புழுங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், அஜித்தின் அந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அதன் பிறகு ரஜினியும் அஜித்தும் கோபாலபுரம் சென்று கருணாநிதியிடம் தங்கள் பேச்சுக்கு புது விளக்கங்கள் கொடுத்து வந்தனர்.  

அதே ஆட்சியில்தான் செம்மொழி மாநாடு, ராஜராஜ சோழன் பட்டாபிஷேகம் போன்ற விழாக்களின் நாயகன் ஆனார் கருணாநிதி. கருணாநிதியின் புகழ் பலவீனத்தைப் புரிந்து கொண்டவர்கள், புதுப்புது வார்த்தைகளைத் தேடித் தேடி கருணாநிதியைப் புகழ்ந்தனர். அவர்களுக்குக் கைமாறாகப் புதுப்புதுப் பதவிகளை உருவாக்கிப் பரிசாகக் கொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்குப் பாராட்டு விழாக்கள் என்றால், ஜெயலலிதாவுக்கு சட்டமன்றக் கூட்டத் தொடரே ஜால்ரா மன்றமாக அமைந்தது. மக்களின் குறைகளை மன்றத்தில் உறுப்பினர்கள் தெரிவிப்பதற்காக நடக்கும் கூட்டத் தொடரை, தன்னுடைய புகழ்பாடும் மன்றமாக மாற்றினார் ஜெயலலிதா. 

துணிச்சலோடு ஒரு சில கேள்விகளையாவது கேட்கும் எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றிவிட்டு, தனது அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களை வைத்து தனக்குத் தானே நாள்தோறும் பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டார். அவரைப் புகழும் அளவுக்குக் கருணாநிதியைத் திட்ட வேண்டும் என்பது அந்த அவையில் எழுதப்படாத விதியாக இருந்தது. அதைத் திறம்படச் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவியை அள்ளிக் கொடுத்தார். 

அதன் உச்சகட்டமாக, சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவை விடுவிப்பதற்கு நடத்தப்பட்ட யாகங்கள், பூஜைகளில் தெய்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஜெயலலிதாவே முன்னிறுத்தப்பட்டார்.

குடும்ப ஆதிக்கமும்... குறுநில மன்னர்களும்...!

அண்ணா வளர்த்த கட்சியை ஓயாத சுறுசுறுப்பு, பேச்சாற்றாலுடன் கருணாநிதி சேர்த்துவைத்த கோஷ்டியும் அவரைத் தலைவராக்கியது. அப்போது அவரைத் தலைவராக ஏற்காத பேராசிரியர் அன்பழகன்கூட பின்னாளில் ‘கலைஞர் என் தலைவர்’ என்று ஏற்றுக் கொண்டார். ஆனால், கருணாநிதியின் வாரிசுகள் என்ற ஒரே தகுதி உடைய பலரையும் தலைவர்களாக ஏற்க வேண்டிய நிலை, இன்றைய தி.மு.க தொண்டனுக்கு வந்திருக்கிறது.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, செல்வி, தயாநிதி மாறன் ஆகியோரின் ஆதிக்கம் கட்சிக்குள் எப்படி இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

2006-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ஸ்டாலின் நாடு, அழகிரி நாடு என்று தமிழ்நாடு பிரிந்து கிடந்தது.  இப்போது அந்தத் தலைமுறையையும் தாண்டி சபரீசன், உதயநிதி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, அஞ்சுகச் செல்வி என்று அடுத்த தலைமுறையின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. 

தேர்தலுக்கு சீட் கொடுப்பதில் இருந்து, யாருக்கு எங்கே பொறுப்பைக் கொடுக்க  வேண்டும் என்பதுவரை இவர்கள் தீர்மானிக்கின்றனர். தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தால் இவர்கள்தான் மிகப் பெரிய அதிகார மையங்களாக இருப்பார்கள்.


ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் குடும்பத்துக்குப் பதில் அங்கு சசிகலாவின் குடும்பம் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் அ.தி.மு.க-வில் நிரந்தரமாகிவிட்டது. சசிகலா, இளவரசி, நடராஜன், சுதாகரன், ராவணன், தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியையும் கட்சியையும் மன்னார்குடி குடும்பம் கட்டுப்படுத்துகிறது.  ஒருவர் போனால், அந்த இடத்துக்கு வரும் மற்றொருவரும் மன்னார்குடி குடும்பத்தில் இருந்தே வருகிறார். அந்தவகையில் இன்றைய புது வரவு விவேக் ஜெயராமன். அடுத்து அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் விவேக் ஜெயராமனின் ஆதிக்கமே நிலவும். கருணாநிதி ஆட்சியில் குறுநில மன்னர்களாக, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, நேரு, பெரியசாமிகள் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வைத்திலிங்கம் வகையறாக்கள் வருகிறார்கள். நில அபகரிப்பு, மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுப்பது, கல்லூரிகள் கட்டுவது, காசு பார்ப்பது என்று இருக்கும் இவர்கள், தலைமையின், கட்சியின் நிதி ஆதாரங்களாக இருக்கிறார்கள்.

வேட்டி கட்டிய ஜெயலலிதாவும்... சேலை உடுத்திய கருணாநிதியும்..!

ஆட்சியை நடத்துவதிலும் கட்சியைக் கட்டுப்படுத்துவதிலும் கருணாநிதி ஒரு வேட்டி கட்டிய ஜெயலலிதாவாக இருப்பார். ஜெயலலிதா சேலை உடுத்திய கருணாநிதியாகக் காட்சி தருவார். 

கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, சட்டமன்ற நடவடிக்கைகள் என்று அனைத்திலும் ஒரே போக்கு. கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் எதிர்ப்பவர்களைக் கட்டம் கட்டுவது, ஓரம் கட்டுவது, பொய்வழக்குப் போடுவது, அவர் போட்டத் திட்டத்தை இவர் உடைப்பது, இவர் கொண்டு வந்த திட்டத்தை அவர் முடக்குவது என்று சர்வாதிகாரமாகச் செயல் படுவதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான். 

தன்னைப் பற்றியும் தன் அரசாங்கம் பற்றியும் பத்திரிகைகளில் எது வந்தாலும், ஜெயலலிதா நேரடியாக அவதூறு வழக்குத் தொடர்வார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வழி இன்னும் விநோதமானது. கருணாநிதியைப் பற்றியோ, அவரது குடும்ப ஆதிக்கம் பற்றியோ, அவரது ஆட்சியைப் பற்றியோ ஏதேனும் விமர்சனம் செய்து, பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டால், `முரசொலி’யில் கட்டுரை எழுதுவார். `பார்ப்பன ஏடுகள்’ என்பார்; அவதூறு வழக்குப் போடுவார். இருவரும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் விளம்பரங்களை வெட்டுவார்கள்.

புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா தேர்வு செய்த இடத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார் கருணாநிதி. கருணாநிதி கட்டிய தலைமைச் செயலகத்தை பொதுநோக்கு மருத்துவமனை ஆக்கினார் ஜெயலலிதா. இப்படி இவர்களின் ஒவ்வோர் அசைவும் எதிரும் புதிருமாக இருந்தாலும், அடிப்படையில் இருவரும் ஒருவரே. அவர் செய்ததைத்தான் இவர் செய்வார். இவர் செய்ததைத்தான் அவர் செய்வார்.

நன்றி : ஜூனியர் விகடன் - 15, மே, 2016

- ஜோ.ஸ்டாலின்

24 - சினிமா விமர்சனம்

07-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தீராத ஆசை இருக்கும். அது அவரவர் வாழ்க்கையில் தாங்கள் செய்த தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதுதான். காலத்தை திரும்பிப் பார்க்க மட்டுமே முடிந்த நமக்கு, காலத்தைத் திருத்த முடிந்தால் எப்படியிருக்கும்..? இந்த ஏக்கம்தான் டைம் மிஷின் டைப் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் வெற்றி பெற்றதற்கான அடிப்படையாக்கம்..!
சென்ற ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ இது போன்ற டைம் மெஷின் டைப் கதைதான். முதல் பிள்ளையார் சுழி போட்டு ஒரு எதிர்பார்ப்பை தமிழ் ரசிகனுக்குள் ஏற்படுத்தியது அந்தப் படம். இதோ அடுத்தக் கதையை சூர்யா தனது சொந்தத் தயாரிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்காகக் கொடுத்திருக்கிறார்.

சேதுராமன் என்னும் சூர்யா டைம் மெஷின் என்னும் காலத்தில் பின்னோக்கிச் செல்ல வைக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அன்றைய தினம் அனைத்துமே வெற்றிகரமாக முடிந்து அந்தக் கருவி செயல் நிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில், அவரது சொந்த அண்ணனான ஆத்ரேயா அங்கே வருகிறார்.
ஏற்கெனவே இப்படியொரு திட்டத்தில் தனது தம்பி ஈடுபட்டிருப்பதை அறிந்திருக்கும் ஆத்ரேயா இப்போது அந்தக் கருவியைக் கைப்பற்ற நினைக்கிறார். அண்ணனுக்கும், தம்பிக்குமான மோதலில் சேதுராமனின் மனைவியான நித்யா மேனனை கொலை செய்கிறார் ஆத்ரேயா. சேதுராமன் தனது கைக்குழந்தையுடனும், தான் கண்டுபிடித்த வாட்ச் போன்ற அந்தக் காலக் கருவியுடனும் அங்கிருந்து தப்பிக்கிறார்.
ஆனாலும் ஆத்ரேயா விடாமல் பின் தொடர.. ஓடும் ரயிலில் ஏறிய சேதுராமன் அதில் பயணிக்கும் சரண்யாவிடம் தனது குழந்தையையும், அந்த காலக் கருவி அடங்கிய பெட்டியையும் ஒப்படைக்கிறார். அதே ரயிலில் சேதுராமனை கண்டுபிடிக்கும் ஆத்ரேயா அவரைச் சுட்டுக் கொல்கிறார். ஆனால் கருவியை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றமாகிறார் ஆத்ரேயா. அந்தக் குழந்தை பெட்டியில் ஒருவேளை வெடிகுண்டு இருக்குமோ என்று நினைத்து பயந்துபோய் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஆத்ரேயா தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு ஆளாகிறார்.
இனி கதை 26 வருடம் கழித்து தொடர்கிறது. இப்போது கைக்குழந்தையான சூர்யா மணிகண்டனாகி வாட்ச் கடை வைத்து நடத்துகிறார். இவரது அம்மாவான சரண்யாவுடன் வசித்து வருகிறார். இவருடனேயே கவசகுண்டலம் போல வந்து சேர்ந்த அந்த காலக் கருவியடங்கிய பெட்டியை சூர்யா தன் அமரும் சேருக்கு முட்டுக் கொடுப்பதற்கும், சரண்யா சமையற்கட்டில் சிலவைகளை உடைப்பதற்குமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் கால மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட அதனை ஒரு கழுகு முன் நின்று செய்கிறது.
தனது ஒற்றைச் சிறகினால் ஆத்ரேயா தங்கி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் தீ பரவச் செய்கிறது. இந்தத் தீயினால் அதுவரை கோமாவில் இருந்த ஆத்ரேயா கண் முழிக்கிறார். அதே சமயம் அதுவரையிலும் அவரிடத்தில் இருந்த காலக் கருவி பெட்டியின் சாவி, குப்பையோடு குப்பையாக அள்ளப்பட்டு குப்பைக் கிடங்குக்கு வருகிறது. அங்கிருந்து அது பழைய இரும்புச் சாமான்கள் விற்கப்படும் கடைக்கு வருகிறது. அந்தக் கடையில் இருந்தும் அது தப்பித்து சூர்யாவின் டேபிளில் அதுவும் அந்தக் காலக் கருவியின் அருகிலேயே சூர்யாவின் நண்பன் சத்யானால் வைக்கப்படுகிறது..
சாவியின் டிஸைனை பார்த்து அசந்து போன சூர்யா, அதனை தற்செயலாக காலக் கருவியின் பெட்டிக்குள் புகுத்திப் பார்க்க அது திறக்கிறது. உள்ளேயிருக்கும் வாட்ச் போன்ற அந்தக் காலக் கருவியை கையில் கட்டிப் பார்க்கும்போது எதிர்பாராதவிதமாக சூர்யா சுவிட்ச்  போர்டில் கை வைக்க, அதன் மூலமாக மின்சாரம் பாய்ந்த அந்தக் காலக் கருவிக்கு உயிரும் வருகிறது.
வாட்ச் ரிப்பேரிஸ்ட் என்பதால் நோண்டிப் பார்க்கும் எண்ணத்தில் சூர்யா அதை ஆபரேட் செய்து பார்க்க, திடுமென்று 2 நிமிடங்கள் பின்னோக்கிய காலத்திற்குப் போய் வருகிறார் சூர்யா. உண்மையாகவே நம்ப முடியாமல் இரண்டு முறை செய்து பார்த்துவிட்டு இதை நம்பத் துவங்குகிறார் சூர்யா.
இந்த நேரத்தில் அழகு தேவதையாக வந்து நிற்கும் சமந்தாவை பார்த்தவுடனேயே காதலிக்கத் துவங்குகிறார். இதற்கு அந்தக் காலக் கருவியையும் பயன்படுத்துகிறார். இது தெரியாமல் சமந்தா இவரது செயலால் குழப்பமடைந்து போகிறார்.
அதே சமயம் சூர்யாவின் பெரியப்பனான ஆத்ரேயா கோமாவில் இருந்து மீண்டாலும் இனி வாழ்க்கை முழுவதும் படுக்கையில் படுத்தபடியேதான் இருந்தாக வேண்டிய சூழல். தனது அப்போதைய உதவியாளர் மித்ரனின் உதவியோடு மீண்டும் அந்தக் காலக் கருவியைத் தேடச் சொல்கிறார்.
இருவரும் சேதுராமன் இருந்த பழைய இடத்திற்கு ஆட்களுடன் வந்து காலக் கருவியைத் தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. ஆனால் வழிமுறைகள் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி புதிய கருவியைச் செயலாக்க முனைகிறார்கள். சேதுராமனின் ஆராய்ச்சியின்போது அவருக்கே தெரியாமல் கடைசி நேரத்தில் ஒரு கழுகு செய்த வேலையினால் கிடைத்த ரசாயன கலவை உதவி இப்போது இவர்களுக்குக் கிடைக்காததால் ஆத்ரேயாவின் இந்த புதிய முயற்சி பல முறை தோல்வியடைகிறது.
ஆனால் அந்த காலக் கருவியின் வடிவமைப்பு தெரிந்திருப்பதால் அந்தக் கருவி இப்போது யாரிடத்திலாவது இருந்தால் அதைக் கைப்பற்றலாமே என்று நினைத்து தினசரி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார் ஆத்ரேயா. அது போன்ற டிஸைன் உள்ள வாட்ச்சுக்கு தான் ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் சொல்கிறார்.
இதைப் பார்த்துவிட்டு சத்யன் சூர்யாவை உசுப்பிவிட.. சூர்யாவும் ஒரு சந்தேகத்துடன் இதற்கு ஒத்துக் கொள்கிறார். இருவரும் ஆத்ரேயாவின் அலுவலகத்திற்கு படையெடுக்கிறார்கள். அங்கே நடக்கும் சண்டையில் மணிகண்டன் கொல்லப்பட அவரது கையில் கட்டப்பட்டிருந்த காலக் கருவி ஆத்ரேயாவின் வசம் வருகிறது.
சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் ஆத்ரேயா அந்தக் கருவியை இயக்கிப் பார்க்க அது அவரை 24 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே கொண்டு செல்கிறது. இதனால் ஏமாற்றமடைகிறார் ஆத்ரேயா. இந்தக் கருவியில் மாற்றம் செய்தால் மட்டுமே முந்தைய காலத்திற்கு போக முடியும் என்பதை உணரும் ஆத்ரேயா.. அதற்கான முழு திறமை மணிகண்டனுக்கு மட்டுமே உண்டு என்பதை புரிந்து கொள்கிறார்.
உடனேயே காலக் கருவியின் உதவியுடன் 24 மணி நேரத்திற்கு முந்தைய காலத்திற்கு வருகிறார் ஆத்ரேயா. இப்போது மணிகண்டன் உயிருடன் இருக்கிறார். அவரை திட்டமிட்டு தனது இல்லத்திற்கு வரவழைக்கும் ஆத்ரேயா ஒரு சென்டிமெண்ட்டல் நாடகமாடுகிறார். ஆத்ரேயா கேரக்டரை ஒழித்துவிட்டு மணிகண்டனின் அப்பாவான சேதுராமனின் வேடத்தை ஏற்கிறார்.
இப்போது இதனைப் பார்க்கும் மணிகண்டன் தனது தந்தை உயிருடன் இருப்பதாக நினைத்து தனது பூர்வீகக் கதையை சரண்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். உடனேயே சரண்யா தனது சொந்த ஊருக்கு மணிகண்டனை அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கே புதிய டிவிஸ்ட்டாக சமந்தாவும் இருக்கிறார். அவர் சரண்யாவின் அண்ணன் மகள் என்பது தெரிய வர.. இருவருக்குள்ளும் காதல் தீயாய் பரவுகிறது.
இந்த நேரத்தில் தனது தந்தை உயிருடன் இருப்பதை அவர்களிடத்தில் சொல்லி சேதுராமன் உருவத்தில் இருக்கும் ஆத்ரேயாவை அங்கே வரவழைக்கிறார் மணிகண்டன். இந்த நேரத்தில் சேதுராமன், “அந்தக் காலக் கருவியில் கொஞ்சம் மாற்றம் செய்து கொடுத்துவிட்டால் தன்னுடைய இந்தப் பணி நிறைவடையும்.. ஆத்ரேயாவையும் பழி வாங்கலாம்..” என்கிறார். இதனை உண்மை என்று மணிகண்டனும், சரண்யாவும் அவரது குடும்பத்தினரும் நம்புகிறார்கள்.
இதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் மிக, மிக சுவாரஸ்யமான படத்தின் கடைசி 1 மணி நேர திருப்பு முனைகள் அடங்கிய கதை.
இயக்குநர் விக்ரம் கே.குமாருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும்.. ரீமேக் கதையாகவே இருந்தாலும் அதனை தமிழுக்கேற்றாற்போல் திருத்தி, மாற்றம் செய்து.. திரைக்கதை அமைத்து, வசனம் மூலமாக ஒரு முறைக்கு, இரண்டு முறை ரசிகர்களின் மனதில் இது டைம் மெஷின் கதை என்று புரிய வைத்து இதற்கு மேலும் தனது சிறப்பான இயக்கத்தினால் படத்தை ரசித்து பார்க்கும்படி உருவாக்கியிருக்கிறார்.
சத்யன்-சூர்யா இடையிலான சம்பாஷனையை.. அதை 2 நிமிடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை 2 முறை நடத்திக் காட்டுவதில் துவங்கி.. ‘கடைசியாக நான் போய் 26 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த்தை திருத்திக் காட்டுகிறேன்’ என்று சொல்லி சூர்யா திரும்பி வரும்போது அவர் குழந்தையாகவும், அவருடைய கையில் அந்தக் காலக் கருவி இருப்பது போலவும் காட்டி படத்தின் மேக்கிங்கில் ஒரு சிறிய தவறுகூட இல்லாதபடிக்கு திரைக்கதையை கச்சிதமாக அமைத்திருக்கிறார் இயக்குநர்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் படத்தில் இருக்கும் புதிய தொழில் நுட்ப காட்சிகள்தான். கிராபிக்ஸ் வேலைகளாகவே இருந்தாலும் அதையும் பிரமிப்பூட்டும்விதத்தில் செய்திருக்கிறார்கள். சாவி, காலக் கருவியின் செயல்பாடு.. சேதுராமனின் விஞ்ஞானக் கூடம்.. குழந்தையை தூங்க வைக்கும் சிறிய பெட்டியின் செயல்பாடுகள்.. என்று பலவிதங்களிலும் புதிய சினிமா பார்வையாளர்களை உருவாக்கும்விதத்தில் படத்தின் செய்நேர்த்தி பிரமிக்க வைக்கிறது.
‘தெய்வ மகன்’ சிவாஜி போல மூன்று சூர்யாக்களுக்கும் வேறுவேறு கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொடுத்திருக்கிறார்கள். மூவரிலும் வில்லனாக வரும் ஆத்ரேயாதான் அசத்தல். சூர்யாவுக்கே அதுதான் பிடித்திருக்குமென்று நம்புகிறோம். விஞ்ஞானி சேதுராமன் முதல் பகுதியில் பரிதாபமாக இறந்து போனாலும், பிற்பாதியில் சக்கர நாற்காயில் அமர்ந்தபடி மாறுவேடத்தில் பேசும்போது இன்னும் அதிகமாகவே நடித்திருக்கிறார்.
இதேபோல் ஆத்ரேயா ‘சிங்கம்’ பாணியில் ‘ஆத்ரேயாடா’ என்று வீல்சேரை உயர்த்திக் கொண்டே குரலையும் உயர்த்திக் கொண்டே பேசும் பாணியில் ஒரு கொடூரத்தை குரலிலேயே உணர்த்தியிருக்கிறார். குரல் கொடுத்தது நடிகர் சிவக்குமாரா என்று தெரியவில்லை. அட்சரச் சுத்தமாக அவரது குரல்தான்.. மிகப் பொருத்தமானது..!
தனது தம்பியாகவே இருந்தாலும் அவனிடமிருந்து காலக் கருவியை மீட்டாக வேண்டும் என்கிற வெறியோடு, இரண்டாவது முறையாக அந்த வீட்டுக்குள் வந்து சண்டையிடும்போது அவரது ஒவ்வொரு ஆக்சனும் மணிகண்டனாக நடித்திருக்கும் சூர்யாவை புலிக்கு முன் எலி என்கிற கதையாக மாற்றிவிட்டது.
மணிகண்டன் சூர்யா எப்போதும்போல தியேட்டருக்கு வரும் ஒரு ரசிகனாக மாறி நடித்திருக்கிறார். டைம் மெஷினை பயன்படுத்தி சமந்தாவை இன்ஸ்பிரேஷன் செய்ய வேண்டி அவர் செய்யும் தகிடுதத்தங்கள் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்துதான். ப்ரீஸ் மோடில் அப்படியே அனைத்தையும் நிறுத்தும்வித்தையில் சமந்தாவின் டூ விலரில் கத்தியால் குத்தும்போது மாட்டிக்கொள்ளும் காட்சியில் யதார்த்தமான நகைச்சுவையைக் கொணர்ந்திருக்கிறார்.  
நீளமான காதல் காட்சிகளில் சமந்தாவை இன்ஸ்பிரேஷன் செய்வதற்காக இவர் ஆடும் டிராமாவும்.. பேசும் வசனங்களும் கச்சிதம்.. அதிலும் கானாடுகாத்தான் அரண்மனை வீட்டில் சமந்தாவும், அவரும் பேசும் ரொமான்ட்டிக்கான சீன் செம. அந்த இரவில் இங்கேயிருப்பது தனது தந்தை அல்ல.. ஆத்ரேயாதான் என்பதை அறியும் மணிகண்டனின் ஆக்சன் காட்சிகள் அடுத்த பொழுதில் இருந்து மாறுவதும்.. இதையே கடைசிவரையிலும் கொண்டு போயிருப்பதும் சூர்யா ரசிகர்களை நிச்சயம் கவரும்.
நித்யா மேனன் சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கிறார். சமந்தா வழக்கம்போல.. சொக்க வைக்கிறார். குளோஸப் காட்சிகளில் எதிரில் நிற்பவர் யார் என்பதையே மறக்க வைக்கிறார். இந்த அழகுக்கு முன் ஹீரோக்களெல்லாம் எம்மாத்திரம்..? அந்த குளோப்ஜாமூன் முகத்தில் கொஞ்சம் வெட்கச் சிரிப்புடன் சூர்யாவுடனான தனது காதலை ஒத்துக் கொள்ளும் பரவசத்திற்கு பிறகு பாடல் காட்சியே தேவையில்லை எனலாம்.
முதல் பாதியில் கொஞ்சம் கதை, கொஞ்சம் காதல் என்றும் பிற்பாதியில் சென்டிமெண்ட்டல் காட்சிகளையும் வைத்து இரண்டையும் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர். அதிலும் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு குடும்பமே மவுன விரதம் இருப்பதுபோல காட்சியை வைத்து சரண்யாவுக்காக அதனை அவர்களே உடைப்பதும் தியேட்டருக்கு வரும் குடும்பத்தினரை கவரும்தான். ‘மனம்’ கொடுத்த இயக்குநராச்சே..? இதற்கெல்லாம் சொல்லியா தர வேண்டும்..?
படத்தின் மிகப் பெரிய ஸ்பீடு பிரேக்கர் பாடல் காட்சிகள்தான். ஏ.ஆர்.ரகுமான் என்னதான் இசையமைத்திருந்தாலும் பாடல்கள் எடுபடவில்லை. அதே நேரத்தில் பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் புண்ணியத்தால் பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது. பின்னணி இசை படத்தின் ரசிப்புக்கு குறுக்கே வராமல் இருப்பதால் பாராட்டப்பட வேண்டியதாகிறது.
கலை இயக்குநர்கள் அமித்ராய், சுபர்ட்டோ சக்ரபர்த்தியை எத்தனை பாராட்டினாலும் தகும். படத்தின் பிரமாண்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தனது திறமையைக் காட்டியிருக்கிறார்கள். சேதுராமனின் விஞ்ஞானக் கூடத்தின் செட்டப் மிக அருமை. அதிலிருந்து சேதுராமனும், நித்யா மேன்னும் தப்பிக்கும்விதம் எதிர்பாராதது.. அதேபோல் குழந்தை படுக்கும் அந்தப் பெட்டியின் வடிவமைப்பும் ரசிக்கக் கூடியது. வெல்டன் பிரதர்ஸ்.
ஒளிப்பதிவாளர் திரு இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் எந்தக் காட்சியிலும் ஒளிப்பதிவின் தாக்கம் இல்லாமல் இல்லை. பாடல் காட்சிகளில் வெளிநாட்டு லொகேஷன்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக சமந்தாவுக்கு போட்டியான அழகைக் காட்டியிருப்பதில் திரு பிரமிக்க வைத்திருக்கிறார். இது போன்ற திரைப்படங்கள்தான் ஒளிப்பதிவாளருக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்பார்கள். திரு போன்ற திறமைசாலிகளுக்காகவே இது போன்ற கதைகள் இன்னமும் அதிகமாக வெளிக்கொணரப்பட வேண்டும்.
மணிரத்னம் பாணி ஒலிப்பதிவு மட்டுமே படத்திற்கு இருக்கும் மிகப் பெரிய குறை. அனைத்து ஒலிப்பதிவாளர்களும், இயக்குநர்களும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மட்டுமே குறி வைத்து தமிழகம் முழுவதுமே தியேட்டர்கள் இப்படித்தான் சிறப்பாக ஒலி, ஒளி அமைப்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒலிப்பதிவை மேற்கொள்கிறார்கள்.
இந்த ஒலியமைப்பு பாளையங்கோட்டை சினிமா தியேட்டரில் இருக்கவே இருக்காது. வசனங்கள் மெல்லிய வாய்ஸில் அதிகம் கேட்காத வண்ணம் பதிவு செய்திருப்பதால் யாருக்கு என்ன லாபம்..? உரையாடல் புரியாமல் போனால் கதையும் புரியாமல் போய் பார்வையாளனுக்கு சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடுமே..? ‘கடல்’ படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமே இதுதான்.. இயக்குநர்களும், ஒலிப்பதிவு இயக்குநர்களும் இதைப் புரிந்து கொண்டால் நல்லது..!
இது போன்ற அறிவியல் ரீதியான திரைப்படங்களில் லாஜிக் பார்க்கவே கூடாதென்றாலும் சில கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை. ஆனாலும் அவைகளெல்லாம் படத்தின் நீளம் கருதி சொல்லப்படாமல் போயிருக்கலாம் என்று நினைக்கிறோம்.
சூர்யாவின் ரசிகர்களுக்காக வேண்டி, காதல் காட்சிகளை நீட்டி முழக்கி வைத்திருப்பதால் படத்தின் நீளம் அதிகமாகிவிட்டது என்பது ஒரு குறைதான். இதில் கத்திரியை போட்டு லாஜிக் மீறல்களை நியாயப்படுத்த கூடுதலான சில காட்சிகளை வைத்திருக்கலாம்..!
‘பசங்க-2’ படம் கொடுத்த நல்ல பெயரை இந்த ‘24’ படமும் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..! நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் சூர்யாகவும் ஜெயித்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!