சலீம் - சினிமா விமர்சனம்

31-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஆச்சரியமாக இருக்கிறது. முதல் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் படத்தின் கதையையும் கொண்டு வருவதென்பது ஒரு ஹீரோவாலும், இயக்குநராலும் மட்டும் முடியாது.. தயாரிப்பாளரும் நினைக்க வேண்டும். இங்கே 2 தயாரிப்பாளர்கள் கூட்டணியுடன் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள் விஜய் ஆண்டனியும், இயக்குநர் நிர்மல் குமாரும்..!
முதல் பாகமான ‘நான்’ படத்தில் இந்துவாக இருந்து சந்தர்ப்பவசத்தால், முஸ்லீமாக அடையாளம் காட்டி தவறான வழியில் மருத்துவ சீட்டை பெற்று மருத்துவம் படிக்கும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நடக்கும் குறுக்கீடுகளை காட்டினார்கள்..
இதில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சேவை செய்யும் மனப்பான்மையோடு நல்ல மருத்துவனாக இருக்க முயலும் ஹீரோவை, சிலர் மனதளவில் தாக்கிவிட.. இதன் பக்க விளைவுகள் என்னவாகின்றன என்பதுதான் கதை..!

சலீம் இப்போது ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். திருமணத்திற்கு பெண் பார்த்திருக்கிறார். அந்தப் பெண்ணும் இவரைப் பார்க்க வருகிறார். ஆனால் அந்தப் பெண் கூப்பிட்ட போதெல்லாம் உடனுக்குடன் ஓடி வரும் கணவர்தான் தனக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சலீமுக்கு அப்படியொரு டார்ச்சரை கொடுக்கிறார்.
இயல்பாகவே மிக நல்ல மனிதராக இருக்கும் சலீம் வரப் போகும் மனைவிக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறார். ஆனால் அவரது மருத்துவத் தொழில் அதனை செய்யவிடாமல் தடுக்கிறது. புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் வருங்கால மனைவி.
இந்த நேரத்தில் ஒரு இரவு வேளையில் 4 ஆண்களால் கசக்கி எறியப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்றி தன்னுடைய மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார் சலீம். போலீஸுக்கும் தகவல் சொல்கிறார். ஆனால் விடிந்தபோது அந்தப் பெண் அங்கில்லை. ஏற்கெனவே சலீம் மீது மிக கோபத்தில் இருக்கும் மருத்துவமனையின் எம்.டி. அன்றிரவு ஹோட்டலுக்கு அனைத்து மருத்துவர்களையும் அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே சலீமை அவமானப்படுத்தி டிஸ்மிஸ் என்கிறார்.
இந்த விரக்தியில் மதுவருந்திவிட்டு வெளியே வரும் சலீம் போதையில் மப்டியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அருள்தாஸிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் பேசுகிறார். சலீமை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் அமர வைக்கிறார். முந்தைய நாள் கல்யாணம் கேன்சல் என்று மணப்பெண்ணே சொல்லிவிட்டுப் போன விரக்தியில் இருக்கும் சலீமுக்கு மாமனார் போன் செய்ய.. அதையும் பேசவிடாமல் தடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.
கடுப்பான சலீம் போனை தூக்கிக் கொண்டு ஓட.. பின்னாலேயே போலீஸும் விரட்ட.. ஒரு தேடுதல் வேட்டைக்கப்புறம் சலீம் பிடிபடுகிறார். ஆனால் அவரை சிறையில் வைக்க ஜாமீன் கிடைக்காத வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு அவனது மாமனாரிடமும் இதைச் சொல்ல முயல.. இப்போது சலீம் அந்த போலீஸ் காரை விபத்துக்குள்ளாக்குகிறார். இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பறிமுதல் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுகிறார்.
மீண்டும் ஹோட்டலுக்கு வந்து தனது மருத்துவமனை எம்.டி.யையும், சகாக்களையும துவம்சம் செய்துவிட்டு ஒரு தீர்மானத்தோடு வெளிநாடு செல்ல கிளம்புகிறார். போகும் வழியில் அவர் சந்திக்கும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா வழிமறித்து தனது மகளையும், மனைவியையும் மீட்டுக் கொடுக்கும்படி சொல்ல.. சலீமின் மனம் மாறுகிறது.
இப்போது அவர் எடுக்கும் முடிவுதான் படத்தின் சுவையான இரண்டாம் பகுதி.. மாநில உள்துறை அமைச்சரின் மகனையும், அவது 3 நண்பர்களையும் ஹோட்டல் அறைக்குள் அடித்துப் போட்டு கட்டிப் போட்டு பிணைக் கைதிகளாக்கி போலீஸிடம் பணயம் பேசுகிறார். அது எதற்கு என்பதும் முடிவு என்ன என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
இதில் இருக்கும் சஸ்பென்ஸை உடைத்தால் இனி படம் பார்க்கப் போகும் அன்பர்களுக்கு சுவையிருக்காது என்பதால் அதனை முற்றிலுமாக தவிர்க்கிறேன்..!
முதல் பாதியில் சலீமின் குண நலன்களை வெளிக்காட்ட விரும்பி பல காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்ற அளவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனாலும் மனைவியாக வரப் போகின்றவர் செய்யும் டார்ச்சர்கள் படம் பார்ப்பவர்களையே டென்ஷனாக்குவதால் படம் முதல் பாதியும் ஓகே என்ற நிலைமைக்குத்தான் உள்ளது.
படத்தின் பிற்பாதியில் சஸ்பென்ஸ் திரில்லராக மிக வேகமாக பறக்கிறது.. அடுத்தது என்ன என்பதை யூகிக்காத அளவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நர்மதாவின் தந்தையைச் சந்தித்தது.. அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி பிரிட்ஜுக்குள் வைத்திருப்பது.. வடசென்னை தாதாவை வரவழைப்பது.. உள்துறை அமைச்சரை வரவழைப்பது.. ஒவ்வொரு முடிச்சாக சுவாரஸ்யமாக அவிழ்ப்பது என்ற திரைக்கதையால் கடைசிவரையிலும் டென்ஷனை கூட்டியிருக்கிறார்கள்.
முதல் பாகம் ஓகே.. இரண்டாம் பாகம் டபுள் ஓகே.. மூன்றாம் பாகமும் வரப் போகிறதாம்.. அதனால் தொடரும் என்றே போட்டு முடித்திருக்கிறார்கள்..!
நான் படத்தில் பார்த்தே விஜய் ஆண்டனிதான். சலீமாக நடித்திருப்பதால் புதிதாக எதையும் செய்யவில்லை. அதே சாந்தமான முகம். அமைதியான, அடக்கமான, அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் இப்படியே தொடர்ந்து எத்தனை படங்களில் நடிப்பாரென்று தெரியவில்லை.. கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் கண்ணீர் சிந்துகிறார். ஆனால் அது மனதைத் தொடவில்லை. ஆனால் காட்சியமைப்பு மட்டுமே உருக்குகிறது..!
இவருக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார் ஹீரோயின் அக்சா. படபடவென எண்ணெய் சட்டியில் பொரியல் வெந்ததை போல இவர் வெடிக்கின்ற அழகே அழகு.. தக்காளியாக இருக்கும் இவரது முகம் கோபத்தில் மேலும் சிவந்து போகிறது.. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார்.. போலீஸாரிடம் படபடவென பேசும் காட்சியில் நச் என்று இருக்கிறது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாராட்டுக்கள்.. டப்பிங் குரல் என்றாலும் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. வெல்டன் டைரக்டர்..
கிரைம் பிரான்ச் டெபுடி கமிஷனர் செழியனாக நடித்திருக்கும் சந்திரமெளலி அடக்கமாக தனது பாணி நடிப்பைக் காட்டியிருக்கிறார். உள்துறை அமைச்சரிடம் வந்து நீயும் பிடுங்கு என்று கோபத்துடன் சொல்லும்போது அரங்கம் அதிர்கிறது.. ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமையைச் செய்யும்போதும் வரும் குறுக்கீடுகளை அவர் எதிர்கொள்ளும்விதத்தில் காவல்துறை மீது கொஞ்சம் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.
ஓரிடத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையை உரைகல்லாக்கியிருக்கிறார்கள் வசனகர்த்தாக்கள்.. “நீ எந்த நாட்டு தீவிரவாதிடா..? முஹாஜிதீனா? லஷ்கர் இ தொய்பாவா?”  என்று டெபுடி கமிஷனர் செழியன் கேட்கும்போது “என் பேரை வைச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார்.. எல்லாரும் அப்படி இல்ல.. வேணும்னா என் பேரை விஜய்ன்னும் ஆண்டனின்னும் வைச்சுக்குங்க..” என்று சலீம் திருப்பி பதில் சொல்வதும் நல்லதொரு பதிலடி.. வசனங்கள்கூட மிக சின்னதாக.. ரத்தினச் சுருக்கமாக அழகாக இருக்கின்றன..!
அடுத்து பாராட்டுக்குரியவர் உள்துறை அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர். அரசியல்வாதிகளுக்கே உரித்தான கவுரவமே முக்கியம் என்கிற கொள்கையை பின்பற்றுபவராக இருக்கிறார். அறிமுக்க் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் மகன் மீது பாசம் உள்ளவராகவும், பின்பு மகனையே போட்டுத் தள்ளும்படி அடியாட்களுக்கு சிக்னல் கொடுப்பவராகவும் மாறுவது இன்றைய அக்மார்க் அரசியல்வியாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான்..!
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா அசத்தியிருக்கிறார். முதல் காட்சியில் இருந்து முற்றும்வரையிலும் பிரேம் பை பிரேம் அழகுதான்.. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டியிருக்கிறார். பிற்பாதி விறுவிறுப்புக்கு எடிட்டரும் ஒரு காரணம்.. ஹோட்டல் அறைக்குள் நடக்கும் சண்டை காட்சியை தொய்வில்லாமல் மிக அழகாக தொகுத்திருக்கிறார் எடிட்டர். பாராட்டுக்கள்..!
‘உன்னை கண்ட நாள் முதல்’, ‘மஸ்காரா மஸ்காரா’ பாடல்கள் அருமை. நினைத்தாலே இனிக்கும் படத்தின் ‘சிவ சம்போ’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். இது ஒன்றுதான் இப்படத்தின் மன்னிக்க முடியாத குற்றம்..! இப்படத்தின் பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அளவு தனது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறது. சொந்தப் படமென்றால் சாதாரணத்தைவிடவும் மிக நன்றாகவே இசையமைப்பார்கள் போலிருக்கிறது.
இது போன்ற படங்களில் லாஜிக்கெல்லாம் பார்க்கவே கூடாது என்றாலும் சிலவைகளை சொல்லியே ஆக வேண்டும்.. அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பணம் வாங்குவது என்பது அறவே கிடையாது.. அது தனி பில்லாக ரிசப்ஷனிலேயே கட்டிவிடச் சொல்வார்கள். சின்ன மருத்துவமனையில் மட்டுமே அது சாத்தியம்..
“5 ரூபாய் வாங்கியிருக்கிறீர்களே…” என்று சலீமை எம்.டி. கடிந்து கொள்வது.. பின்பு அதே எம்.டி. “தனது மருத்துவமனையின் இந்த வருட வருமானம் 132 கோடி..” என்று சொல்வது மிகப் பெரிய முரண்பாடு..!
சமீப காலமாக இது போன்ற திரில்லர், சஸ்பென்ஸ் போன்ற படங்களில் போலீஸை மிகக் குறைவாகவே எடை போட்டதுபோலவே காட்சிகளை அமைக்கிறார்கள் நமது இயக்குநர்கள்..
ஒரே சமயத்தில் கதவை உடைத்துக் கொண்டும், ஜன்னல் பக்கம் உடைத்துக் கொண்டும் உள்ளே போனாலே கதை முடிந்துவிடும்.. போலீஸுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உள்துறை அமைச்சர் என்பதால் பேசியே சமாளிக்கலாம் என்பதால் இத்தனை பெரிய திரைக்கதையோ..?
கிளைமாக்ஸில் அவ்வளவு அதிகமான போலீஸ் படைகளைத் தாண்டியும் சலீமால் குருவை வெளியில் கொண்டு போக முடியுமென்பது படத்தின் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.. இருந்தாலும் படத்தின் இறுக்கமான இயக்கத்தினால் நன்கு ரசிக்க முடிந்தது..! அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட்கூட சூப்பர்தான்..!
முயலைகூட சீண்டிக் கொண்டேயிருந்தால் அது ஒரு கட்டத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு திருப்பிக் கடிக்கத்தான் செய்யும். அதைத்தான் இந்தப் படத்தில் முடிந்த அளவுக்கு நம்பகத் தன்மையோடும், சமூக அக்கறையோடும் சலீம் செய்து காட்டியிருக்கிறார். அடுத்த பாகம் எப்படியோ..?
சலீமுக்கு நிச்சயம் ஒரு சலாம் போடலாமுங்கோ..!

மேகா சினிமா விமர்சனம்

29-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வாரமே வந்திருக்க வேண்டிய திரைப்படம்.. கிளைமாக்ஸ் காட்சியை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்குமே என்று பத்திரிகையாளர்களும், நண்பர்களும் எடுத்துச் சொன்னதால், அதைக் கவனத்தில் கொண்டு சிறிது நேரம் எடுத்து கிளைமாக்ஸை மாற்றி ஒரு வாரத்திற்கு பின் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

தடயவியல் துறையில் வேலை பார்க்கிறார் ஹீரோ அஸ்வின். அவரை படிக்க வைத்து அவரது வாழ்க்கை உயர்வுக்கு வழி வகுத்த கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டு தற்கொலை என்ற பெயரில் இறந்து போகிறார். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதை அறிந்து அது தற்கொலையல்ல.. கொலை என்றும், அதைச் செய்தவர் யாரென்பதையும் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி ஹீரோ கண்டுபிடிப்பதும்.. இதனால் ஏற்படும் விளைவுகளால் ஹீரோ எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதும்தான் கதை.
காதலியின் தந்தை பற்றிய ஒரு அறிமுகம்.. இன்னொரு பக்கம் விஜயகுமாரை கொலை செய்த இன்னொரு ஐ.ஜி.. இதற்கு நடுவில் ஒருவேளை இவராக இருக்கலாமோ என்று நினைக்குமளவுக்கு ஆக்சன் காட்டும் தடயவியல் துறையின் தலைவரான ஜெயபிரகாஷ்.. இப்படி மூவரில் யார்தான் செய்திருப்பார்கள் என்கிற சஸ்பென்ஸை கடைசிவரையில் கொண்டு சென்றாலும் கடைசியில் இவர்தான் என்று சப்பென்று முடித்திருப்பதுதான் ஏமாற்றமளிக்கிறது..!
திரைக்கதையின் வேகமும் அழகான இயக்கமும் சேர்ந்து படத்தை இறுதிவரையில் பார்க்க வைத்திருப்பது என்பது மட்டும் உண்மை. படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலமே காதல் காட்சிகளும்.. அதில் இருக்கும் வசனங்களும்தான்..!
மலையாள தேசத்தின் அழகை படகில் இருந்து ரசித்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு அழகான காதல் கதை இதில் உண்டு. இந்த வேலைக்கு வருவதற்கு முன்பாக பகுதி நேர புகைப்படக்காரராக பணியாற்றும் இடத்தில் தனக்கு குடைக்குள் இடம் தந்து அப்போதே மனதில் இடம் பிடித்த ஹீரோயினை விரட்டிப் பிடித்து காதல் கொள்ள வைக்கும் அந்தக் காட்சிகளெல்லாம் ஏ ஒன்.
பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் மழை வர.. குடையுடன் நின்று கொண்டிருக்கும் ஹீரோயினின் குடைக்குள் அத்துமீறி நுழைகிறார் ஹீரோ. ஹீரோயின் அதை ஏற்றுக் கொள்கிறார். நிஜத்தில் எங்காவது நடக்குமா இது..? டங்குவாரு அந்துறாது.. ஆனால் இதனை அழகான காட்சிப்படுத்தியதில் நம்மை யோசிக்கவே விடவில்லை இயக்குநர்.
“குடை எடுத்து வராட்டி இப்படித்தான் ரொம்ப கஷ்டப்படணும்” என்று ஹீரோயின் சொல்ல, “இதுல என்ன கஷ்டமிருக்கு..? கொண்டு வந்திருந்தா, இப்போ உங்க குடைக்குள்ள இவ்வளவு பக்கத்துல நான் நின்றிருக்க முடியுமா..?” என அஸ்வின் கேட்பது மிக நல்ல சுவாரஸ்யமான உரையாடல்…
ஹீரோயின் பேருந்தில் ஏறும்போது “அடுத்த தடவை உங்களைப் பார்க்கும்போது, உங்களை எப்படி கூப்பிடுறது..?” என அஸ்வின் கேட்க, ஹீரோயின் தனது ஒற்றை விரலால் வானத்தைக் காட்டி மேகா என்று புரிய வைப்பதெல்லாம் அழகு காட்சி.
புகைப்படம் எடுக்கப் போய் ஹீரோயினின் அண்ணன் திருமணத்தில் ஹீரோயினை தனியே லுக் விட்டு கவிழ்க்க பார்க்கும் அந்த விரட்டலே தனி சுவாரஸ்யம்.. ஹீரோயினை மட்டும் தனியே படம் எடுத்துத் தள்ளுவது… அவரது கையில் இதய வடிவில் மெகந்தி போட்டு விடுவது.. புகைப்படத்தில் நிற்கச் சொல்லும் சாக்கில் ஹீரோயினை தொட்டுத் தொட்டு பேசுவது.. ரவிக்கை தைக்க ஹீரோயினை வெளியே அழைத்துச் செல்வது.. போகும்போது இருவரும் காதில் ஒரே இயர்போனில் பாட்டு கேட்பது.. மழை பெய்யும் அந்த நள்ளிரவில் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது… டீக்கடையில் டீயைக் குடித்துவிட்டு ஹீரோயின் முகம் சுளிப்பதும்.. ஹீரோ இதை ரசிப்பதுமான கவித்துவமான காட்சிகள். இயக்கத்தில் பின்னியிருக்கிறார் இயக்குநர்.
போதாக்குறைக்கு இசைஞானியின் புத்தம்புது காலை பாடலும் சேர்ந்து கொள்ள.. முதல் 25 நிமிடங்கள் போகும் நேரமே தெரியவில்லை.. புத்தம்புது காலை பாடலை படமாக்கியவிதம் செய்தவரையில்கூட ஓகேதான்.. ஆனாலும் பாடல் வரிகளுக்கு பொருத்தமாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை..
தனது காதலியை பெண் பார்க்க வந்திருப்பது தெரிந்தும் அவளது வீட்டில்… அவளது அறையில்.. அவளது நண்பர்கள் முன்னிலையிலேயே லிப் கிஸ் கொடுத்துவிட்டு “எனக்கு இப்படித்தான் லவ் பிரபோஸ் செய்ய தெரியும்…” என்று தெனாவெட்டாகச் சொல்லிவிட்டு வரும்போது நமக்குத்தான் மனசு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. என்னவொரு வயலன்ட் பிரபோஸல்..?
இதே காட்சியில், “என்னை உனக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்” என்பார் ஹீரோ. “எப்படித் தெரியும்” என்கிறார் ஹீரோயின். “என்னைப் பார்க்கும்போது, நீ ரொம்ப அழகா இருப்ப…” என ஹீரோ சொல்வது காதலிஸம்.
இன்னொரு காட்சியில் ஹீரோ ஹீரோயினிடம் முத்தம் கேட்க, “பொது இடத்தில் இதெல்லாம் தப்பு” என்கிறார் ஹீரோயின். பட்டென்று ஹீரோயினின் உதடுகளைப் பிடித்திழுத்து, “இது பொது இடமா? எனக்கு மட்டுமே சொந்தமான இடமாச்சே..?” என ஹீரோ சொல்வது காதலின் உச்சக்கட்டம்.
இதேபோல மருத்துவமனையில் ஒய்.ஜி.மகேந்திரன் தனது மனைவிக்கும், தனக்குமான காதலைச் சொல்லுமிடத்திலும் மனம் நெகிழ்கிறது.. இப்படிப்பட்ட கணவர்களும் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. அதற்கு இந்த ஒரு காட்சியே சான்று..!
‘மங்காத்தா’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்திருக்கும் அஸ்வின், இதில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அழகு, டயலாக் டெலிவரி.. நடிப்பு என்று மூன்றுமே பையனுக்கு உண்டு. தீவிர காதலனாக முற்பாதியில் வந்து கிளைமாக்ஸில் தனது காதலிக்காக உருகிப் போய் நிற்கையில் வேறு மாதிரியான காதலனாகவும் தென்படுகிறார். இயக்கம் அப்படி..!
ஹீரோயின் சிருஷ்டி.. மென்மையாக நடித்துள்ளார். காதல் தனக்குள் வந்துவிட்டதை உணர்ந்து அவர் தவிக்கின்ற தவிப்பை மிக அழகாக முகத்தில் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறது இவரது அமைதியான நடிப்பு.. டெல்லிக்கு போகாமல் திரும்பி காதலனின் வீட்டுக்கே வந்து அந்த 3 அறை வீட்டில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் காட்சியில் செம ரகளை செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநரான கார்த்திக் ரிஷி, காட்சிகளை தொடர்புப்படுத்துவதில் இயக்குநர் கில்லாடியாக இருக்கிறார். ஹீரோ அடிபட்டு ஆஸ்பத்திரிக்குள் நுழைவதும்.. அந்த நர்ஸ் அவருக்கு முன்பே தெரிந்தவராக இருப்பதும்.. இவருடைய நண்பர் கொலை செய்து கிடப்பது.. ஹீரோயினை கடத்திய நபர்கள் போனில் அழைத்து இடத்தைச் சொல்வதும்.. ஹீரோ ஹீரோயினை தேடி கண்டறிவதும் துப்பறியும் படம் போல பரபரப்பாக செல்கிறது..!
இவருக்கு மிகப் பெரிய உறுதுணை ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். ஒரு காட்சியில்கூட படத்தின் தன்மை கெடாமல், முதல் காட்சியில் பார்த்த அதே பீலிங்கை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்..
இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் முதல் ஒரு ரீலுக்கு தான் எப்படி இசையமைத்தேன் என்பதை இயக்குநரிடமே கேட்டார் இசைஞானி இளையராஜா. நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார் இயக்குநர் கார்த்திக் ரிஷி. உண்மையில் படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. பின்னணி இசைக்கு மொட்டை சாமியை அடித்துக் கொள்ள இன்னொரு ஆளும் இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். சந்தேகம் கொள்பவர்கள் இந்தப் படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..!
பின்னணி இசைக்கு மட்டும் 12 நாள் எடுத்துக் கொண்டாராம் இசைஞானி. மேலும் படத்தின் துல்லியமான ஒலிப்பதிவுக்காக டால்பி அட்மாஸ்(Dolby Atmos) என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்களாம்.. படத்தில் அதன் தரம் நன்கு தெரிகிறது. இசைஞானியே பாடியிருக்கும் கடைசி பாடலும் கேட்க வைக்கிறது.. ஆனால் தாளம் போட வைக்கவில்லையே..? என்னவென்று சொல்வது..?
லாஜிக் மீறல்கள் இல்லாமலெல்லாம் இல்லை.. சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக போஸ்டிங் கிடைக்க மத்திய அரசு அனுமதியெல்லாம் எதற்கு..? சிட்டி போலீஸ் கமிஷனராக வருவதற்காக சக அதிகாரியை இன்னொரு அதிகாரி கொலையா செய்வார்..? அப்படி போலீஸ் கமிஷனராக வந்து அவர் என்ன செய்யப் போகிறார்..? ஆதாரங்கள் உள்துறைக்கு அனுப்பப்பட்ட பிறகு உள்துறை அலுவலகத்தையே தீ வைத்து எரிப்பது போன்ற சீன்களெல்லாம் இயக்குநரின் ஓவர் கற்பனையாக இருக்கிறது..! இதெல்லாம் நிஜத்தில் நடவாத விஷயமாச்சே..?!
கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக ஹீரோ போடும் திட்டமெல்லாம் வரிசையாக அடுத்தடுத்து தொடர்ந்து நடப்பதை பார்த்தால் திரைக்கதையை ரொம்ப எளிதாக இயக்குநரின் வசதிக்காகவே எழுதியிருப்பது போல தோன்றுகிறது..!
பாஸிட்டிவ்வான கிளைமாக்ஸ் வேண்டும் என்பதற்காகவே முன்பு எடுத்த கிளைமாக்ஸை மாற்றியிருக்கிறார்கள். இப்போதும் அதன் இடைச்செருகல் தெரிகிறது என்றாலும் வேறு வழியில்லைதான்.. அத்தனை பெரிய கொலையைச் செய்துவிட்டு ஒருவன் இதன் பின்பு நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா..? அதான் போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆரே போட்டாச்சு என்கிறார்கள். பிறகெப்படி ஹீரோ தப்பிக்க முடியும்..?
இதுவொரு நல்ல காதல் படமாக வந்திருக்க வேண்டியது. அல்லது நல்லதொரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்க வேண்டியது. இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துவிட்டதால், படம் முடிந்தவுடன் அது மட்டுமே குழப்பமாக இருக்கிறது.
இதுவரையில் பார்த்த காதல் திரைப்படங்களிலெல்லாம் தோன்றாத ஒரு விஷயம் இந்தப் படத்தின் காதல் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றியது. அதெப்படி காதலர்கள் 22 வயதுவரையிலும் தங்களை வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோரை வெறும் ஒரு மாதமே பழகிய ஒரு பையனுக்காகவோ, அல்லது பெண்ணுக்காகவோ தூக்கியெறிந்துவிட்டு போகிறார்கள்..? போக முடிகிறது..? யோசித்தால் மிக பயங்கரமான நம்பிக்கை துரோகமாக இதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது..!
எடுத்தவரைக்கும் பார்க்கும்படியாகவே எடுத்திருப்பதால் ‘மேகா’வை ஒரு தரம் பார்த்து விடுங்களேன்..!

கூரியரில் கேன்ஸல் செய்தாலும் அபராதமா..? கேட்டால் கிடைக்கும்..!

26-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சம்பாதிக்கிறோமோ இல்லையோ..? வருமான வரியை மட்டும் கரெக்ட்டா கட்ட வேண்டியிருக்கு..! 2013-ல வரியான எடுத்துக்கிட்டதை ரீபண்ட் கேட்டு இந்த வருஷம் மனு தாக்கல் செஞ்சாச்சு.. அது ஒரு பார்ம்ல மெயில்ல வந்துச்சு.. அதை பிரிண்ட் அவுட் எடுத்து பெங்களூர் இன்கம்டாக்ஸ் ஆபீஸுக்கு அனுப்பிருங்கன்னு ஆடிட்டர் சொன்னார்.. மறந்தே போச்சு.. ஒரு மாசம் போய் இப்போ திரும்பவும் ஞாபகப்படுத்தினாரு ஆடிட்டர்..

அச்சச்சோன்னு ஓடிப் போய் பிரிண்ட் அவுட் எடுத்திட்டேன்.  அதே கடைல புரொபஷனல் கூரியர்ஸும் இருந்துச்சு.. அதுலயே அனுப்பிரலாமேன்னு சொல்லி 45 ரூபாயை கட்டி ரசீதையும் வாங்கிட்டு கடைக்கு வெளில வந்து நின்னு ஆடிட்டருக்கு போன் அடிச்சு சொன்னா.. அவர் குண்டை தூக்கி போடுறாரு..

"அதை போஸ்ட் ஆபீஸ் மூலமா ஸ்பீட் போஸ்ட் இல்லாட்டி ஆர்டினரி போஸ்ட் மூலமாத்தான் அனுப்பணும். தனியார் கூரியர்ன்னா வாங்க மாட்டாங்க.. அந்த மெயில்லேயே போட்டிருந்துச்சே பாக்கலையா?"ன்னாரு.. என்னடா இது கொடுமைன்னு மெயிலை திரும்பவும் ஓப்பன் செஞ்சா ஆடிட்டர் சொன்னதுதான் இருந்துச்சு..

திரும்பவும் கடைக்குள்ள போயி “அதைத் திருப்பிக் கொடுத்திருங்க.. நான் போஸ்ட் ஆபீஸ் மூலமாத்தான் இதைக் கொடுக்கணுமாம்.. இப்பத்தான் ஆடிட்டர் சொன்னாரு...” என்றேன்.. கோபத்துடன் முறைத்த அந்த பெண் என்னுடைய கடிதத்தை எடுத்து அதில் ஸ்டேப்ளர் பின் போட்டிருந்த கூரியர் பில்லை எடுத்துக் கொண்டு.. ஒட்டியிருந்த ஸ்டிக்கரையும் எடுத்துவிட்டு தொப்பென்று டேபிளில் அந்த கவரை போட்டார்.

“காசு..” என்றேன்.. “அதெல்லாம் முடியாது ஸார்.. பில்லெல்லாம் போட்டாச்சு. திரும்பவும் கேன்ஸல் பண்ண முடியாது...” என்றார் படபடவென்று.. “பில்லை கேன்ஸல் பண்றதுல உங்களுக்கென்ன சிரம்ம்..? அந்த பில் மேலேயே நடுவுல கோட்டை கிழிச்சு கேன்ஸல்ன்னு எழுதிட்டா போச்சு.. ஒண்ணுமே செய்யாம நான் எதுக்கு 45 ரூபாயை உங்களுக்குக் கொடுக்கணும்..?” என்றேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது ஸார்.. யார் கேன்ஸல் செஞ்சாலும் பணம் திருப்பித் தரக் கூடாதுன்னு ஓனர்தான் சொல்லியிருக்கார்.. “ என்றார். “ஓனருக்கு போன் போடுங்க. நான் பேசுறேன்...” என்றேன்.. 5 நிமிட காத்திருப்புக்கு பின் சலிப்புடன் ஓனருக்கு போன் செய்தார் அந்த பெண். “ஸார்.. இங்க ஒருத்தர் பில் போட்டுட்டு கேன்சல்ன்னு சொல்லிட்டாரு. லெட்டரையும் திருப்பிக் கொடுத்திட்டேன். காசை கேக்குறாரு..” என்றார். அவர் என்ன பதில் சொன்னாரோ தெரியவில்லை.. “சரி ஸார்.. சரி ஸார்...” என்று சொல்லி போனை வைத்துவிட்டு 30 ரூபாயை எடுத்து நீட்டினார்.

நான் வாங்க மறுத்து, “எனக்கு முழு பணமும் திரும்ப வேணும்..” என்றேன். “ஓனர் 30 ரூபாதான் கொடுக்கச் சொன்னார்..” என்றார். “அவருக்கு திரும்பவும் போன் போடுங்க. நான் பேசுறேன்..” என்றேன். திரும்பவும் போன் போட்டு “அவர் வாங்க மாட்டேன்றார் ஸார்..” என்றார் பெண். போன் என் கைக்கு வந்த்து.

எடுத்த எடுப்பிலேயே, “இந்தாப்பா.. நீ பாட்டுக்கு பில் போட்டுட்டு ரசீதையும் வாங்கிப்புட்டு இப்போ கேன்ஸல்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..? எனக்கு அந்த பில்லு வேஸ்ட்டாகுதுல்ல.. அதுக்குத்தான் 15 ரூபா..?” என்றார். “அப்படீன்னு உங்க கம்பெனில ரூல்ஸ் இருக்கா..?” என்றேன். “ரூல்ஸெல்லாம் நாமளே வைச்சுக்குறதுதாம்பா..” என்றார். “சரி.. அதை உங்க கடைல போர்டுல எழுதி வைச்சிருக்கலாம்ல.. ஏன் வைக்கலை..?” என்றேன். “சரி.. இனிமே வைச்சுக்குறேன்..” என்றேன். “அப்போ நான் அடுத்தத் தடவை வரும்போது இதே மாதிரி கேன்ஸல் செஞ்சா, 15 ரூபாயை விட்டுக் கொடுக்குறேன்..” என்றேன்.

“இல்லப்பா.. முடியாதுப்பா.. தர முடியாதுப்பா..” என்றார். “நீங்க தரலேன்னா நான் உங்க கூரியர்ஸ் ஹெட் ஆபீஸ்ல இது பத்தி கம்ப்ளையிண்ட் செய்வேன்.. உங்க லைசென்ஸை கேன்ஸல் செய்யச் சொல்லி சொல்லுவேன்..” என்றேன் கோபத்துடன். “அட என்னப்பா நீயி.. புரிஞ்சுக்காத தம்பியா இருக்குற..? இப்போ என்னான்ற.. 10 ரூபா வேணும்ன்னு சொல்ற.. அவ்ளோதான..?” என்றார். “10 இல்ல 15...” என்றேன்.. “சரி... போனை அந்த பொண்ணுகிட்ட கொடு...” என்றார். கொடுத்தேன். ஏதோ சொல்ல.. போனை வைத்துவிட்டு 45 ரூபாயையும் திருப்பிக் கொடுத்தார் அந்தப் பெண்.

கிளம்பும்போது “கேன்ஸல் செய்தால் 5 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்னு போர்டு எழுதி வைங்க.. 15 ரூபாயெல்லாம் ரொம்ப டூ மச்..”  என்று சொல்லிவிட்டு வந்தேன்..!

பொதுவாக கூரியர் அனுப்பவர்கள் கேன்ஸல் செய்வது அரிதிலும் அரிதுதான்.. கேன்ஸல் செய்யாமல் அதில் எதையாவது மாற்றி வைத்துவிட்டோம். அல்லது வைக்க மறந்துவிட்டோம் என்று சொல்லி வாங்கி அதை சரி செய்து கொடுப்பார்கள். இதைத்தான் பார்த்திருக்கிறோம்.. 

அனுப்ப தேவையில்லாதது என்றால் போஸ்ட் ஆபீஸில்கூட வாங்க முடியாது.. கூரியரில் வாங்கும் வசதி இருப்பதால் 5 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. 15 என்பது கொள்ளையில்லையா..? 

இத்தனைக்கும் புரொபஷனல் கூரியர்ஸ் அலுவலக நடைமுறையில் இது போல எதுவும் சொல்லப்படவில்லையாம்.. லோக்கல் ஏஜெண்ட்டுகள் இவர்களாகவே வைத்துக் கொள்கிறார்கள் விதிமுறைகளை..! எதையும் தயங்காமல் தைரியமாக உறுதியுடன் கேட்டால் கிடைக்கும்தான்..!

சிநேகாவின் காதலர்கள் சினிமா விமர்சனம்

21-08-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரமாண்டமும், பெரிய நடிகர்களும்தான் படத்தின் வெற்றிகளுக்குக் காரணமோ என்று நினைத்து மருகிக் கொண்டிருந்த வருங்கால இயக்குநர்களுக்கு, இந்தப் படத்தின் மூலமாக ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அண்ணன் முத்துராமலிங்கன்.
முதற்கண் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கலைக்கோட்டுதயம் அவர்களுக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.. முத்துராமலிங்கன் என்கிற ஒரு மனிதரை மட்டுமே நம்பி துணிந்து ஒரு படத்தைத் தயாரித்து.. அதையும் பேர் சொல்லும் படமாக உருவாக்கியிருக்கிறார் என்றால் நிச்சயம் இவரது முயற்சி பாராட்டுக்குரியது..
கதையை மட்டுமே நம்பி முத்தண்ணன் களத்தில் இறங்கி சாதித்திருக்கிறார்.. இதுவரையில் அவர் எழுதிய சினிமா விமர்சனங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கவே ஒரு டீம் இங்கே தயாராக இருந்தது. அது அத்தனைக்கும் வேலையே இல்லாமல் செய்துவிட்டார் முத்தண்ணன். சாதாரண ஒரு கதைதான்.. அதை விரிவுபடுத்தியவிதம் ஒரு திரில்லர் படம்போல விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருந்தது..!


சிநேகா என்ற ஹீரோயினின் ‘ஆட்டோகிராப்’தான் படத்தின் கதை.. இதுவரையில் ஆண்களுக்கான ‘ஆட்டோகிராபை’த்தான் நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். இது பெண் ‘ஆட்டோகிராப்’. பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபிரியா நடிப்பில், ருத்ரையாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு பின்பு ‘பெண்ணிய பார்வையில் காதல்’ என்கிற தலைப்பு இந்தப் படத்திற்குத்தான் பொருந்தும். இத்தனைக்கும் அண்ணன் முத்தண்ணன் இலக்கியவியாதி அல்ல..
சிநேகா என்கிற பெண் திருமண வயதில் இருந்தும் அதற்குத் தயாராக இல்லாத நிலையிலும், தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக பெண் பார்க்கும் படலத்தில் தலையைக் காட்டுகிறாள். வந்த மாப்பிள்ளையிடம் தனக்குத் திருமணத்தில் இஷ்டமில்லை என்று சொன்னாலும் அந்த மாப்பிள்ளையால் அவளை மறக்க முடியவில்லை.
அவர்கள் சந்தித்துப் பேசி நண்பர்களாகிறார்கள். அவனிடமே தனது வாழ்க்கையில் முன்பு நடந்த முதலிரண்டு காதல்களை பற்றிச் சொல்லிவிட்டு தற்போது அவள் வயிற்றில் கருவுடன் இருப்பதையும் சொல்லிவிட்டு அவனுடன் கொடைக்கானலுக்கு செல்கிறாள் அவளது மூன்றாவது காதலை உறுதி செய்ய..!!! அது உறுதியானதா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்..
எந்தப் படத்தையும் காப்பி செய்யாத கதைதான்... சிநேகாவின் முதல் கல்லூரி காதல்.. அது உருவாகும்விதம்.. உருவாக்கிய பின் அது சிதறும் இடம்.. அதற்கான காரணங்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இங்கே பெருமளவிலான காதல்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டு பெண்களால் வளர்க்கப்பட்டு ஆண்களாலேயே அழிக்கப்படுகிறது.
காதலிக்கிறோம் என்பதாலேயே பெண் தனது சுயத்தை இழந்து இப்போது தனது காதலனுக்காக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதே ஒருவகை ஆணாதிக்கத்தனம்தான்.. ஆனால் இதை எந்தக் காதலனும் உணர்வதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் அண்ணன்.
முதல் காதல் ஆணின் அடிமைத்தனத்தால் முறிந்தது எனில் இரண்டாவது காதல் அதற்கு நேரெதிராக ஒரு ஆணின் தோல்வியால் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார். இதையும் கடந்து மூன்றாவது காதலையும் தொட்டு சிநேகா அதில் வெற்றி பெறுவதென்பது ஆண்மையத்தன்மையுடைய தமிழ்ச் சினிமாவில் நிச்சயம் புதிதுதான்..
இரண்டாவது காதலின் தோல்வி இவளால் அல்ல.. ஆனால் அந்த காதலன் ஒரு சிறு தோல்வியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத பக்குவத்தில் இருக்கிறான் என்பதை ‘நச்’ என்று காட்டியிருக்கிறார். இந்த எபிஸோடில், எத்தனையோ கதைகளை கைகளில் வைத்துக் கொண்டு ‘அது சரியில்லை.. இது சரியில்லை.. வேற கதை சொல்லுங்க’ என்ற தயாரிப்பாளர்களின் ரெடிமேட் பதில்களை எதிர்நோக்கி வருடக்கணக்கில் தங்களது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு காத்திருக்கும் துணை இயக்குநர்களின் அன்றாட அவல வாழ்க்கையையும் கொஞ்சம் தொட்டுப் பேசியிருக்கிறார் இயக்குநர்.
மூன்றாவது காதலை தைரியமாக சமீபத்தில் நடந்த தர்மபுரி இளவரசன் கதையோடு சம்பந்தப்படுத்தி எடுத்திருக்கிறார். மூன்றுவித காதல்களிலேயே இந்தக் காதல் எபிஸோடுதான் அருமை.. செருப்பு தைக்கும் இடத்திலேயே வந்து நின்று கொண்டு எங்கோ பார்த்தபடி காதல் வசனம் பேசுவதும்.. பதிலுக்கு செருப்பை தைத்துக் கொண்டே இளவரசன் பயந்து பயந்து பேசுவதுமான அந்தக் காட்சி ரம்மியமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காதல் எப்படி நடந்தேறிகிறது.. ஜாதி வெறியர்களால் முறியடிக்கப்படுகிறது என்பதையும் உண்மைத்தன்மையுடன் நம்பும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஹீரோயின் கீர்த்தி ரெட்டியின் மூக்கில் அந்த வளையம் போட்டாலும் அழகுதான்.. போடாவிட்டாலும் அழகுதான்.. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் நடித்திருக்கிறார். அதிலும் அழகு வசனத்தை அதன் வீரியம் குறையாமல் வீசியிருக்கிறார். குருவி பாடல் காட்சியில் இவரது கொள்ளை அழகு தென்படுகிறது. உண்மையாகவே சிநேகாவுக்கு தங்கை போலத்தான் இருக்கிறார். இந்தப் படத்திற்கு பின் நிறைய படங்கள் கிடைக்கப் பெற்று தனது திறமையை இங்கே பறைசாற்றுவார் என்று நம்புகிறோம்..
காதலர்கள் மூவருக்கு சம அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். இளவரசனாக வந்தவர் அதிக பாராட்டை பெறுகிறார்.. இவருக்கான காதல் காட்சி அழகாக இருப்பதால் இவரும் அதிகம் கவனப்படுகிறார்.. இயக்குநர் பாண்டியனாக நடித்தவர் மிக யதார்த்தமாக எதுவும் செய்யாமல் இயல்பாகவே வந்து போயிருக்கிறார்..
இவர்களையும்விட அதிகம் கவர்கிறார் பூங்காவில் அமர்ந்து கதை சொல்லும் மிமிக்ரி நடிகர் கணேஷ். அற்புதமான, கம்பீரமான குரல் வளம்.. அந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘இதையும் எடுத்திட்டாங்களா?’ என்ற ஏமாற்றத்துடன் கேட்கும் அந்தக் கேள்வியில் எத்தனை, எத்தனை உதவி இயக்குநர்களை அடையாளம் காட்டுகிறார்..? அவருடைய இப்போதைய பரிதாப வாழ்க்கையையும், கடைசியில் காட்டியிருப்பதுகூட சினிமாவுலகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது..!
இனிமேல் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு போட்டி நம்ம முத்தண்ணன்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக கரு.பழனியப்பனின் படத்தில்தான் அவரது வசனங்கள் படத்தையும் தாண்டி ரசிகனுக்காகவும் சொல்லப்படும் வசனங்களாக இருக்கும்.. இந்தப் படத்தின் வசனங்களும் அதேபோல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  பாராட்டுக்கள்ண்ணே..!
இரா.பிரபாகரின் இசையில் மூன்று பாடல்கள் முத்தானவை. ‘குருவி குருவி’ பாடல் ஏ ஒன்.. ‘மதுரை’ பாடலும் ரசிக்க வைத்தது..  ஏமாற்றமளித்தது பின்னணி இசைதான்.. இளவரசனின் மனைவி எரிக்கப்படும் அந்தக் காட்சியில்கூட பின்னணி இசை எங்களை எழுப்பவில்லை என்பதுதான் உண்மை. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்தான்..!
குறைகள் இல்லாமல் இல்லை. இருக்கத்தான் செய்கிறது.. டிஜிட்டலில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் எடுப்பதுதான் ஒளிப்பதிவு.. இங்கே முதல் ஷாட்டில் இருந்தே இது டிஜிட்டல் ஒளிப்பதிவு என்பதை பறைசாற்றிவிட்டது.. மற்ற டிஜிட்டல் படங்களெல்லாம் இப்படியில்லையே..? ஏன்..?
பட் பட்டென்று டிரெஸ் மாற்றுவது போல காதலர்களை மாற்றிக் கொண்டே செல்வது போல காட்சிகள் வந்து போவது ஹீரோயின் கேரக்டர் மீதான பெருமையைக் குலைப்பதாக இருக்கிறது.. சென்னையில் ஒரு பேட்டிக்காக வந்த இடத்தில் துணை இயக்குநருடன் காதல்.. கொடைக்கானலில் ஒரு பேட்டிக்கா போன இடத்தில் அங்கேயும் ஒரு காதல்.. என்று தொடர்வதுதான் ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச் மீதான தவறாகப்படுகிறது.
எப்படியும் சராசரி சினிமா போல முடிவாகிவிடும் என்று நினைத்த நேரத்தில் கடைசி 15 நிமிடங்களில் வெறுமனே இசையை மட்டுமே வைத்து நகர்த்தியிருக்கும் அந்த சஸ்பென்ஸ் முடிவு ரசிக்கும்படித்தான் இருக்கிறது. ஆனால் இளவரசன் செய்யும் அந்தக் கொலைக்குப் பின்பு என்ன நடக்கும்..? காதலர்கள் சேரலாம்.. ஆனால் காவல்துறை விடுமா..? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கிறது.
ஒரு சின்ன பட்ஜெட்டுக்குள் ஒரு வித்தியாசமான காதல் கதையை.. ஒரு பெண் சார்ந்த காதல் வாழ்க்கையை.. மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கும்விதத்தில் புதுமுக இயக்குநர் அண்ணன் முத்துராமலிங்கன் தமிழ்ச் சினிமாவில் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்..
இனியெல்லாம் அவருக்கு சுகமாக இருக்கட்டும்..!

அஞ்சான் சினிமா விமர்சனம்

21-08-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு..? இத்தனை கிண்டல்கள்.. நக்கல்கள் என்று தெரியவில்லை..!
இதற்கு முன் இதேபோல் எத்தனையோ கமர்ஷியல் கம்மர் கட்டுகள் வந்து போய்க் கொண்டுதான் இருந்தன. அப்போதெல்லாம் பேசாமடந்தையாக இருந்தவர்களெல்லாம் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்ததை பார்த்தபோது அண்ணன் சூர்யா நிறைய பேர் கண்களில் திருஷ்டியாக பட்டிருக்கிறார் என்பது புரிகிறது..!
வழக்கமான கமர்ஷியல் படம்தான்.. இது போன்ற படங்களின் வரிசையில் ஒவ்வொரு படத்திற்கும் அடுத்து வரும் படத்தில் ஏதாவது ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கும். இருக்க வேண்டும். இதுதான் கமர்ஷியல் உலகத்தின் அடிப்படை. அதுபோல் இதில் 2 முக்கிய விஷயங்கள்.. சமந்தாவின் அளவு கடந்த கவர்ச்சியும், வித்யூஜ் ஜம்வாலின் நல்ல டான் என்கிற இரண்டும்தான்..!
டான் கதை என்று வந்தால் அதை சென்னையில் வைத்து எடுக்க முடியாது. அப்படியெடுத்தால் தமிழ்நாடு இப்படியா இருக்கு என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்து அரசியலுக்குள் இழுத்துவிட்டுவிடுவார்கள் என்கிற முன் ஜாக்கிரதையினால் மும்பைக்கே தாவிவிட்டார் இயக்குநர் லிங்குசாமி.

‘பாட்ஷா’ ஸ்டைலில் மும்பையின் டான் வேலையை வஞ்சகமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் வித்யூத்தும், ராஜூ பாயும்.. ‘தளபதி’ ஸ்டைலில் பாசத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு நாள் இவர்களைவிட அதிக செல்வாக்குள்ள மனோஜ் பாஜ்பாயுடன் மோதிவிட.. மனோஜ் தனது செல்வாக்கால் வித்யூத்தை போட்டுத் தள்ளிவிடுகிறார். ராஜு பாயும் தாக்கப்பட்டுவிடுகிறார்.. உயிர் பிழைக்கும் ராஜு பாய், தனது உயிர் நண்பனை கொன்றவர்களை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் இந்த ‘அஞ்சானி’ன் கதை. இதில் இன்னொரு சஸ்பென்ஸ் உள்ளது. அதைச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் விட்டுவிடுவோம்..!
சூர்யாவுக்கு இரட்டை வேடம்.. ஒன்றில் முரட்டு ராஜூபாயாக.. இன்னொன்றில் சாப்ட்வேர் கம்பெனி ஸ்டாஃப் மாதிரி  கிருஷ்ணா.. இரண்டுக்கும் இரண்டு வித்தியாசங்கள்தான்… ஒன்று பல் குச்சியும், இடது புருவத்தின் நடுவில் காணாமல் போயிருக்கும் இத்தூணுண்டு முடியும்தான்..! கஷ்டமே படாமல் வேஷம் போட்டிருக்காருப்பா நம்ம அண்ணன்..!
டானாக நடித்துக் காட்டுவது ரொம்ப ஈஸிதான்.. இதில் ராஜூ பாய்.. அதே ஸ்டைலில் வருகிறார்.. நடக்கிறார்.. கொலைகளைச் செய்கிறார்.. சமந்தாவை மிரட்டுகிறார்.. மும்பை கமிஷனர் பொண்ணையே தூக்குகிறார்.. இத்தனையும் செய்துவிட்டு சமர்த்தாக மும்பையை வலம் வருகிறார்.. பாடல் காட்சிகளில் சமந்தாவுக்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார்.. ‘சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி’ பாடல் காட்சியில் தெலுங்கு ரசிகர்களுக்கு வேண்டி தனி ஆவர்த்தனமே செய்து காட்டியிருக்கிறார் சூர்யா. ‘சிங்கம்’ படத்தின் காட்சிகளில் ஒன்றிரண்டு வரும்படியான அளவுக்கு, ஆக்சன் காட்சிகளில் நடிப்பையும் கொட்டியிருக்கிறார்.
இவரைவிடவும் அழுத்தமாக, அமைதியாக நடித்திருக்கிறார் ‘கிருஷ்ணா’ என்ற சூர்யா. கன்னியாகுமரியில் இருந்து கிளம்புவதில் இருந்து இறுதிவரையிலும் இந்த கிருஷ்ணா கேரக்டர் அடக்கமாக இருப்பதாலேயே படத்தில் சில இடங்களில் அமைதி பிறக்கிறது.. இந்த சஸ்பென்ஸினால்தான் படத்தை ரசிக்கவும் முடிந்தது.
சமந்தாவுக்கு தோல் நோய் எதுவுமில்லை என்பதை இந்த ஒரு படத்தை பார்த்தாவது அகில இந்தியாவும் தெரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.. ‘நான் ஈ’ படத்தில்தான் இவரது அழகை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். அதன் பின்பு தெலுங்கு படவுலகில் இவரது ஆட்டமும், அழகும் வெளிப்பட.. இப்போது தமிழிலும் ஸ்கிரினில் மிளிர்கிறார்.. ரசிக்க வைக்கிறார்..
அதற்காக இந்த அளவுக்கு ‘காண்பிக்க’ வேண்டுமா..? கவர்ச்சியைக் குறைக்கலாம்.. ‘எல்லாத்தையும்’ காட்டிட்டா, அப்புறம் அடுத்தடுத்த படங்கள்ல என்னத்த செய்வாராம்..? ஒரு துள்ளலோடு அந்தப் பாடல் காட்சியின் துவக்கத்தில் ஓடி வரும் சமந்தாவை பிடிக்காமலா போய்விடும்..?
'துப்பாக்கி' படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால் இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவை போல வருகிறார்.. டப்பிங் வாய்ஸ் மட்டுமே ஒட்டவில்லை.. வேறு கனமான குரலை பேச வைத்திருக்கலாம். ஹோட்டல் அறையில் மனோஜ் பாஜ்பாய் ஆட்களுடன் மோதி வீழ்ந்த நேரத்தில், அவர் பேசும் வசனமும் அவரது கேரக்டருக்கு நல்லதொரு அழுத்தத்தைக் கொடுத்தது..
மனோஜ் பாஜ்பாய் வந்த சில காட்சிகளிலும் அழுத்தமாகத் தனது பெயரை பதிவு செய்திருக்கிறார். வித்யூத்தை முடித்து வைக்க வரும் காட்சியில் சோபாவில் அமர்ந்து கொண்டு அவர் காட்டும் அந்த ஒன் மேன் ஷோ.. அசத்தல் பாய்.. வெல்டன் பாய்..!
நட்புக்காக சூரி.. பெரிய நடிப்பில்லை.. ச்சும்மா காரில் வைத்து அப்படி போக.. இப்படி போக.. கதை முடிந்தது..
எப்போதும் லிங்குசாமியின் படங்களில் திரைக்கதையில் ஒரு உண்மைத்தனமும், வேகமும் இருக்கும். இதில் இந்த இரண்டுமே மிஸ்ஸிங்.. கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வருவதற்கு 2 நாட்களாகும்.. அந்த 2 நாட்களும் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தே வருகிறாராம் கிருஷ்ணா.. அதுவும் கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷனிலேயே குச்சியை ஊன்றிக் கொண்டு வருகிறார்.. யாரை நம்ப வைக்க.? எதற்கு இந்த குச்சி டிராமா..? மும்பை வந்தவுடன் செய்திருக்கலாமே..?
ராஜூ பாய் என்றவுடன் பலரும் பேதியான நிலையில் பேசுவது போல காட்சிகள்தான்.. ஆனால் ராஜூ பாய் செய்யும் காட்சிகளெல்லாம் ச்சும்மா உதார்தான்.. அதில் டேலண்ட்டுகள் இல்லை.. பயங்கரமில்லை.. தப்பித்தல்கள்தான் இருக்கின்றன.. கிருஷ்ணா தனது முகத்திரையைக் கிழிக்கும் காட்சியில்தான் சரி அடுத்த்து என்ன என்று கேட்கத் தோன்றியது.. மறுபடியும் கிருஷ்ணா “யார்ரா அவன்..?” என்று தேட ஆரம்பிக்க நமக்கு உஷ் என்றாகிவிட்டது..
மனோஜ் பாஜ்பாயை கடத்தி வந்தியாகிவிட்டது.. மிரட்டியாச்சு.. “பன்னி மாதிரி சுட்டுத் தள்ளிருவோம்…” என்று சவாலும் விட்டாச்சு.. இதுக்கப்புறமும் யார் வித்யூத்தை காலி செய்திருப்பார்கள் என்பதை மிகப் பெரிய டானாக இருக்கும் சூர்யாவின் மூளைக்குத் தெரிய வேண்டாமா..? இதையெல்லாம் கன்னியாகுமரி தியேட்டரில் படம் பார்ப்பவனே சொல்லிவிடுவானே..?
மூன்று பாடல்களுமே அப்போதைக்கு தாளம் போட வைத்தன.. ‘ஏக் தோ தீன்’ ஹிட்டுதான்.. ஆனால் அதை மியூஸிக் கச்சேரிகளில்கூட பாட மாட்டார்களே.. வேறு வார்த்தைகளா சிக்கவில்லை..? பின்னணி இசையில் ராஜூ பாயின் தீம் மியூஸிக் பரவாயில்லை ரகம்.. டானுக்கேற்ற இசை முழுமையாக இல்லை என்பதே உண்மை..
இத்தனையிருந்தும் படத்தில் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரு சின்ன தலைவலிகூட வரவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. இது எப்படி சாத்தியமானது என்றே தெரியவில்லை.. லிங்குசாமிக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டே இதுதான்..
இந்தப் படத்தை பார்க்காதவர்கள்கூட படம் நல்லாயில்லை என்று கமெண்ட் போட்டு படத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எமது நன்றி..!
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு நடிகரையும், அவரது படத்தையும் விமர்சிப்பது எந்தவிதத்திலும் ஏற்கக்கூடியதில்லை..  அதற்குப் பதிலாக இதுபோல அவரவர் கருத்தை விமர்சனமாக எழுதுவதுகூட சரியானதுதான்..!
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டியூப்லைட் அளவுக்கான ஒளியை எதிர்பார்க்கக் கூடாது.. அது அது, அது அது வேலையைத்தான் செய்யும்..!

எல்லாம் நன்மைக்கே..!

11-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இன்று மதியம் அருமைத் தம்பி செந்தில்குமார் என்னைப் பார்ப்பதற்காக அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்தான். என்னுடைய 20 வருட சென்னை வாழ்க்கையில் 10 வருடங்கள் என்னுடன் இருந்தவன்.. மாம்பலம் மேன்ஷன், வேம்புலியம்மன் கோவில் தெரு பார்கவி அபார்ட்மெண்ட், சீனிவாசன் தெரு வீடு... இவைகளில் நான் குடியிருந்தபோது என்னுடன் இருந்த தம்பி..

இப்போது அமெரிக்காவில் டெக்சாஸில் ஒரு நிறுவனத்தில் நெட்வொர்க் என்ஜீனியராகப் பணியாற்றுகிறான். 15 நாட்கள் விடுமுறையில் மூன்று வருட கால இடைவெளிக்குப் பின்பு வந்திருக்கிறான். ஊருக்குப் போகும் அவசரத்திலும் “உங்களை பார்த்தே ஆகணும்னே...” என்று சொல்லி கால்டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்தான். 

அவனை நினைக்கையில் பெரிதும் சந்தோஷமாக இருக்கிறது. ஈரோடு பக்கம் கிராமம்.. வீட்டுக்கு ஒரே பிள்ளை.. அப்பா விவசாயம்தான்.. பிளஸ் டூ தேர்வில் குறைவான மார்க் எடுத்ததால்,  மறுபடியும் அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அதன் மூலம் அரசு கோட்டாவில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படித்தவன்..

படித்து முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்தவுடன் மெக்கபி ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்திற்காக வீதி, வீதியாக அலைந்து அந்த சாப்ட்வேரை விற்பனை செய்தான். அப்போதெல்லாம் பஸ்ஸில் செல்வதற்குக்கூட அவனிடம் பணமிருக்காது. வீட்டில் அப்பாவை தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லி சென்னையில் அவனது தேவைகளை வெகுவாக குறைத்துக் கொண்டான்.

அடுத்தடுத்து வேறு, வேறு நிறுவனங்களில் சேர்ந்து கொஞ்சம் சம்பளம் உயர்ந்த பின்புதான் காலை உணவையே சாப்பிட ஆரம்பித்தான்.. அப்படியொரு வைராக்கியமானவன். எனக்கு ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம்.. அவனது டிரெஸ் செலக்சன். எப்படித்தான்.. எங்கிருந்துதான் இப்படி சட்டைகளை வாங்கி வருவானோ தெரியாது.. அப்படியொரு டிப்டாப்பாக இருக்கும்..  சினிமா ஹீரோ மாதிரியே இருப்பான்.. அப்படியேதான் அவனது உடை, நடை பாவனையும்.. அவனுடன் இருந்த 10 ஆண்டுகளில் அவன்தான் என்னைத் தாங்கிக் கொண்டிருந்தான். ஹைதராபாத்தில் சத்யம் கம்ப்யூட்டரில் அவனுக்கு வேலை கிடைத்து சென்றபோதுதான் நான் தனி மரமானேன்.

என்னுடைய உண்மைத்தமிழன் வலைத்தளத்திற்கும் தீவிர ரசிகன். நான் எழுதிய ஒவ்வொரு விமர்சனத்தையும் படித்துவிட்டு விமர்சனம் செய்வான். "உனக்கு ரசிக்கவே தெரியலை.. நல்ல படத்தையெல்லாம் மொக்கைன்னு எழுதுற.." என்று கண்டிப்பான்.. என்னுடைய அரசியல் விமர்சனங்களைக் கண்டு அதிகம் பயந்து போனான்.. "கொஞ்சம் காரத்தைக் குறைண்ணே.." என்பான்.. தன்னுடைய பணியிடத்து நண்பர்கள் பலருக்கும் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி வைத்து புண்ணியத்தையும் கட்டிக் கொண்டான். 

எத்தனையோ இரவுகளில் போன் செய்து ஆறுதல் சொல்வான்.. “அண்ணே கல்யாணத்தை பண்ணுண்ணே.. பண்ணுண்ணே..” என்று தினமும் போன் டார்ச்சர் செய்து கொன்றவன்.. இந்த போனில் வந்த அன்புத் தொல்லைகூட அவன் அமெரிக்கா சென்றதோடு முடிந்தது..

அவன் கல்யாணம் சென்னிமலை முருகன் கோவிலில் நடந்தது. அதற்காக சென்னிமலை செல்ல எல்லாம் தயாரான நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு என் அப்பன் முருகன் சோதனையைக் கொடுத்துவிட்டான். அந்தக் கோவிலுக்கு வரக் கூடாது என்று நினைத்துவிட்டான் போலிருக்கு..

“தம்பி.. வர முடியலடா.. கோச்சுக்காதடா...” என்று போனில் சொல்லிவிட்டு வருத்தப்பட்டேன். அமெரிக்கா சென்ற பின்பு அங்கேயிருந்து 2 மாதங்களுக்கு ஒரு முறை போனில் பேசுவான்.. இப்போது அவனுக்கு 2 குழந்தைகள்.. ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. செல்போனில் ஸ்கிரீன் சேவராகவே வைத்திருந்தான். காட்டினான்.. பொண்ணு இந்தியாவில் பிறந்து.. பையன் அமெரிக்காவிலேயே பிறந்திருக்கிறான்.. வாழ்த்துகள் சொன்னேன்.

அவனுக்கு பொதுவில் முகம் காட்ட பிடிக்காதாம்.. அதனால் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் அவன் இல்லை.. ஆச்சரியமாக இருந்தது எனக்கு..! “வேண்டாம்ன்னு ஒரே நாள்ல முடிவெடுத்து எல்லாத்துலேயும் இருந்த அக்கவுண்ட்டுகளை ஒரே நாள்ல டெலீட் பண்ணிட்டேண்ணே.. இப்பத்தான் நிம்மதியா இருக்கேன். இப்போ என் பெயரை போட்டு சர்ச் பண்ணிப் பாருங்களேன்.. போட்டோ, டீடெயில்ஸ் ஒண்ணுமே வராது...” என்றான் சிரிப்புடன்..

அமெரிக்காவில் சத்யம் கம்யூட்டரில் இருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறானாம்.. எத்தனையோ நாட்கள் எனக்காக ஹோட்டல் டிபனை வாங்கி வைத்திருக்கிறான்.. வாங்கி வந்து கொடுத்திருக்கிறான்.. பண உதவி செய்திருக்கிறான்.. அவனுடைய சட்டையை நான் போட்டுக் கொள்ள அனுமதியளித்திருக்கிறான்.. என் மன அமைதிக்காக தன் உழைப்பை கொடுத்திருக்கிறான்..

இன்று திடீரென்று வந்த அந்தத் தம்பிக்கு கொடுப்பதற்கு பச்சைத் தண்ணியைத் தவிர வேறு எதுவும் என் வீட்டில் இல்லை.. முறையான வாழ்க்கையை வாழலையே என்று இன்றைக்குத்தான்.. அந்த நேரத்தில்தான் பெரிதும் உணர்ந்தேன்.. 1 மணி நேர பேச்சில் முடிந்த அளவுக்கு பழையவைகளை அசை போட்டு.. என் வாழ்க்கையையும் கொஞ்சம் அலசிப் போட்டுவிட்டு நிரம்ப சந்தோஷத்துடன் விடைபெற்றுச் சென்றான் தம்பி..

எனக்குத்தான் மனம்கொள்ளா வருத்தம்..! ஒரு ஷெல்பி புகைப்படம்கூட எடுக்கலையே என்று அவனது கார் தெருவைத் தாண்டியவுடன்தான் ஞாபகம் வந்தது..! இதுவும் நன்மைக்கே என்று பின்பு புரிந்தது..! எல்லாம் நன்மைக்கே..!

சண்டியர் சினிமா விமர்சனம்

06-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ஜிகர்தண்டா’வின் அசுர வெற்றியிலும், ‘சரப’த்தின் மவுத் டாக் பரபரப்பிலும் இந்த ‘சண்டியர்’ தனித்து தெரிகிறார்.. வேலு பிரபாகரன் மற்றும் ரமணாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் சோழதேவன் இயக்கியிருக்கும் முதல் படம் இது.
முருகதாஸ், ‘கராத்தே’ வெங்கடேசன், சிங்கம்புலி, ஹீரோயின் கயல் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே சினிமாவுக்கே புதிதானவர்கள்.. தஞ்சை மண்ணின் வயல்வெளிகளை வெறும் காட்சிப்படுத்தலுக்காகவே இதுவரையில் காட்டிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருக்கும் அரசியல் நிகழ்வுகள்.. செய்யப்பட்ட அரசியல் படுகொலைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் உருவானதில்லை..
காவிரியின் பிறப்பிடத்தில் இருந்து அது செல்லும் வழியை கிராபிக்ஸில் படம் போட்டு காட்டி அது எங்கெல்லாம் தன் முகம் காட்டி செழிக்க வைக்கிறது என்பதை படத்தின் துவக்கத்தில் காட்டும்போதே இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யூகிக்க முடியாமலேயே போய்விட்டது.. ஆனால் அதற்கு நேரெதிர்தான் படத்தில் அவர் காட்டியது..
அரசியல்.. நம் நாட்டை சீரழித்த விஷயங்களில் முதலிடத்தில் இருக்கிறது.. குடும்பம் முதல்  பொருளாதாரம்வரையிலும் அரசியலால் சீரழியாத விஷயங்களே இல்லை.. இப்போதும் தமிழ்நாடெங்கும் அரசியலில் இருக்கும் இளைஞர்களின் கவனமெல்லாம் அவரவர் சார்ந்த கட்சிகளில் ஏதாவது பெரிய பதவிகள் மீதுதான் இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பலன்கள்.. உழைக்காமல் உடனடியாக கிடைக்கும் பெரிய அளவிலான பணம்.. கேட்காமலேயே கிடைக்கும் மக்கள் செல்வாக்கு.. சாதாரண குடிமகனுக்குக் கிடைக்காத அரசியல் அதிகார பலம்.. இதெல்லாம் இன்றைய இளைய அரசியல்வாதிகளை மதிமயக்கி வைத்திருக்கிறது.
இந்த அரசியலுக்காக இந்தியாவெங்கும் எத்தனை படுகொலைகள்..? எத்தனை குடும்பங்கள் தங்களது உறுப்பினரை இழந்தன.. எத்தனை கட்சிகளுக்குள் வெட்டுக் குத்துகள்.. இன்று அரசியல் மிக எளிதான, முதலீடு போடாத தொழிலாக உருமாறிவிட்டதுதான் இதற்கு அடிப்படை காரணம்..!
அரசியலில் ஈடுபட்டு மிகப் பெரிய லெவலுக்கு உயர வேண்டும் என்று நினைத்த ஒருவன் அதனை அடையும் முயற்சியில் என்னென்ன ஜனநாயக விரோதச் செயல்களை செய்து உச்சத்தை அடைந்து இறுதியில் எப்படி அதே அரசியலால் வீழ்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..!
பாண்டித்துரை என்ற அந்த இளைஞனை தந்திரமாக பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு முன்பு பொய் வழக்கொன்றில் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தான் தலைவராகத் தேர்வாகிறார் நாயகம். இந்த நாயகத்தின் அப்பா தஞ்சிராயரும், பாண்டித்துரையின் அப்பா ரவியும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஒரே ஜாதிக்காரர்கள் இல்லை. இது திரைப்படத்தில் மிகவும் நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது..
பாண்டித்துரை குடும்பத்தினருக்கு தஞ்சிராயர் மிகப் பெரிய உதவிகளை செய்திருக்கிறார். இப்போதும் செய்து வருகிறார். இதனாலேயே ரவி, தஞ்சிராயரை ‘மச்சான்’ என்றும் அவர் ‘மாப்ளை’ என்றும் பாசத்தோடு சொல்லி வருகிறார்கள். ஆனால் ஆடு நெருக்கமாக இருக்க, குட்டிகள் பகையாக மாறுகின்றன. காரணம் அரசியல்.
தன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நாயகம் தலைவரானதை பாண்டித்துரையில் ஏற்க முடியவில்லை. ஊர் கோவில் சாமி ஊர்வலம் வரும்போது தங்களது வீட்டு வாசலில் தனக்கு நியாயம் வழங்கினால்தான் தேர் நகரும் என்று தகராறு செய்கிறான் பாண்டித்துரை. அப்போதைக்கு ரவியின் சாமர்த்திய பேச்சினால் அது சமாதானமாகிறது.
நாயகத்தை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் ஒழிய தனக்குத் தூக்கம் வராது என்று நினைத்தே நாயகத்துக்கு நிறைய குடைச்சல்கள் கொடுக்கிறான் பாண்டித்துரை. பெய்த ஒரு மழையில் ரோடு சகதியும், குண்டும் குழியுமாக அதில் நாத்து நடும் போராட்டம் நடத்தி அதனை டிவியில் காட்டி போடாத ரோட்டுக்கு பில் போட்டு தலைவர் காசை கொள்ளையடித்துவிட்டார் என்று டிவியில் பேட்டி கொடுக்கிறான் பாண்டித்துரை.
இரு பக்கமும் அடிதடிகள் பறக்கின்றன. பொய் வழக்கும் போடப்படுகிறது.. ஆனால் சாதூர்யமாக பிசிஆர் வழக்கு.. இந்த வழக்கு தொடுத்தவரை.. போதையில் கிடந்தவரை தூக்கி வந்து வழக்கு வாபஸ் என்று சொல்ல வைத்துத் தப்பிக்கிறார் ஹீரோ. அப்போது அந்த வழக்குத் தொடுத்தவர் சொல்கிறார்.. “புகார் கொடுன்னு நீங்க அடிக்கிறீங்க.. புகாரை வாபஸ் வாங்குன்னு அவன் ரெண்டு அடி அடிக்கிறான்.. நான் என்ன செய்யறதுன்னு..?” இதுதான் இன்றைக்கு பி.சி.ஆர். வழக்கு தொடுக்கும் சில அப்பாவிகளின் உண்மையான நிலைமை.
வேறு வழியில்தான் நாயகத்தை மடக்க வேண்டும் என்று நினைத்து நாயகத்தின் அக்கா மகள் கயலை காதலிப்பதுபோல் நடிக்கத் துவங்குகிறார் பாண்டித்துரை. முதலில் மறுக்கும் கயல்.. பிறகு மெல்ல மெல்ல காதல் வலையில் விழுந்துவிட சமயம் பார்த்துக் காத்திருக்கிறார் பாண்டித்துரை..
கள்ளச்சாராயத்தைக் குடித்ததில் சிலர் மரணமடைய.. பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்களின் துணையோடு நாயகத்தை பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த இடத்துக்கு பாண்டித்துரை வருகிறார். வந்த வேகத்தில் மேலும் பல அரசியல் வேலைகளைத் தொடர்ந்து செய்து, மாவட்டச் செயலாளர்வரையிலும் உயர்கிறார்.. கடைசியில் என்னவானார் என்பது திருவாரூரில் நடந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வத்தின் அரசியல் படுகொலையோடு முடிச்சுப் போட்டு முடிந்திருக்கிறது..!
தஞ்சையைச் சுற்றியிருக்கும் சாலியமங்கலம், பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் அதிகமாக படப்பிடிப்பை நடித்தியிருக்கிறார்கள்.. ஆனால் மிகப் பெரிய பொருட்செலவில்தான் எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
தஞ்சை மண்ணின் எதார்த்தமான ஸ்லாங்கை இந்தப் படத்தில்தான் முதல்முதலாக பார்க்கவும், கேட்கவும் முடிந்திருக்கிறது. பாண்டித்துரையாக நடித்திருக்கும் ஜெகன் அந்த கேரக்டருக்கு அழுத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்.. புதுமுகமாகவும் தெரியவில்லை.. படத்தின் எந்தக் காட்சியிலும் ஒரு சின்ன ஸ்லிப்பிங்கூட இல்லாமல் மிக எதார்த்தமாக இருக்கிறார்.
இவருடைய கருப்புச் சட்டை, கடவுள் மறுப்பு கொள்கையெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை..? கடவுள் மறுப்பு கொள்கையையும், கருப்புச் சட்டையையும் அணிந்து கொண்டு ஒருவன் இத்தனை பெரிய அயோக்கியனாக வர விரும்புவான் என்பதெல்லாம் நம்ப முடியாத கதை.. ‘அவாள்’களே நம்ப மாட்டார்கள்.. இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்..
ஒவ்வொரு ஸ்டெப்பாக மேலே தாவிக் கொண்டேயிருக்கும் இந்த பாண்டித்துரைக்கு கிடைத்ததெல்லாம் தற்செயல்தான் என்று நினைக்கும்போது அத்தனையும் நான் செய்த திருவிளையாடல்கள்தான் என்று அவர் சொல்லும்போது அவருடைய கேரக்டரே செத்துவிட்டது.. இதனை சொல்லாமலேயே போயிருக்கலாம்.. இவருடைய வாழ்க்கைக் கதை இப்படித்தான் முடியும் என்று தெரிந்ததுபோல முடித்திருக்கலாம்..! ஹீரோவை வில்லனாக்கிவிட்டது அந்தக் காட்சி..!
கயல் என்ற ஹீரோயின்.. ஏற்கெனவே சென்ற ஆண்டு ‘அவன் அப்படித்தான்’ என்கிற படத்தில் அறிமுகமானவர். அழகு.. இயக்குநரின் திறமையால் மிக இயல்பாக நடித்திருக்கிறார். முதலில் காதலில் விழுகக் கூடாது என்று தவியாய் தவித்து பின்பு அதில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இள வயது உணர்வை தன் முகத்தில் இயல்பாகக் காட்டியிருக்கிறார். அந்த போண்டாவை வைத்து இயக்குநர் எடுத்திருக்கும் காதல் காட்சிகள் அருமை.
சிங்கம்புலியின் பல காமெடி டயலாக்குகள் சிரிக்க வைத்தவை என்றாலும் சில கதைக்குத் தேவையற்றவையாக இருந்தன.. ஆனாலும் சதா குடி.. புகை.. என்று படம் முழுக்கவே ஒரு டாஸ்மாக் கடையில் உட்கார்ந்திருந்த தோரணை இருந்ததால் சிங்கம்புலிகூட படத்தில் இல்லையேல் நாம் என்னவாகியிருப்போம் என்று யோசிக்கவும் வைக்கிறது.. புரோட்டா கடையில் போய் சலம்பல் செய்து மாட்டிக் கொள்ளும் சிங்கம்புலியின் காமெடி, ரசிக்க வைத்தது..!
தஞ்சிராயராக நடித்தவர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்.. ‘அரிமா நம்பி’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர்.. 40 வயதுதான்.. ஆனால் 60 வயது முதியவராக காலை நொண்டிக் கொண்டே படம் முழுவதும் ஒரு ஷாட்டில்கூட ஆக்சன் மாறாமல் நடித்திருக்கிறார்..
தனது மாப்ளை ரவிக்கும், தனக்குமான நட்பையும், உறவையும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டேயிருப்பவர் தனது மகனது வருத்தத்தையும், சோகத்தையும் உணர்ந்து ஒரு நொடியில் மனம் மாறி ‘பாண்டித்துரையை போட்டிரு’ என்று சொல்லும் நேரத்தில் எந்தவொரு லாஜிக் மீறலும் இல்லை.. அசத்தல் நடிப்பு..
இரண்டு தந்தைகளின் நெருக்கத்தால் இரண்டு மகன்களுக்கும் இருக்கும் எரிச்சலையும் உண்மையாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.. அதிலும் நாயகமாக நடித்தவரின் புலம்பலும், எரிச்சலும்தான் மிக ரசிக்க வைத்தது..! போதையில் கைலி ஒரு பக்கம், ஆள் ஒரு பக்கமுமாக படுத்திருந்தவர்.. தந்தையைப் பார்த்தவுடன் பதற்றத்துடன் எழுந்து கைலியைக் கட்டிக் கொண்டு தள்ளாடி எழுந்து போகும் காட்சியும், இதைப் பார்க்கும் அப்பாவின் மனம் மாறும் காட்சியும் தத்ரூபம்..
இவருக்கு அப்படியொரு எதிர் பாய்ச்சலை காட்டியிருக்கிறார் பாண்டித்துரையின் தந்தையாக நடித்த கராத்தே வெங்கடேசன். ‘வெயில்’ படத்தில் பன்றி மேய்ப்பவராக வந்து கொலையாகும் அந்த கேரக்டரையே மறக்க முடியாது.. மறுபடியும் மீண்டும் ஒரு கேரக்டர்.. தனது மச்சானுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே கடைசியில் தனது உள்ளுணர்வால் மச்சானின் கொலை வேலையை உணர்ந்து கொண்டு அவரிடம் பேசும்காட்சியில் அசல் மனிதரை காட்டியிருக்கிறார்.. படத்தில் மிக சுவாரஸ்யமே இந்த இரண்டு அப்பன்களும்தான்.. நமக்கே ஒரு கட்டத்தில் எரிச்சல் வருகிறது.. ‘என்னடா உங்க பிரெண்ட்ஷிப்புன்னு..?’ இதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்தார்போலும்..!
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஹரிபாஸ்கர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.. சில இடங்களில் காட்சிகளின்போதே லைட்டிங்ஸ் போய் வந்து கொண்டிருந்தது.. இசை ரொம்ப மெனக்கெடவில்லை.. பாடல் காட்சிகள் தேவையே இல்லை.. ஆனால் தமிழ்ச் சினிமாவின் வழக்கத்திற்காக வைத்திருக்கிறார்கள். காதல் சோகப் பாடல் ஒன்றும் படத்தின் பிற்பாதியில் வந்து நம்மை சோதிக்கிறது.. இந்த நேரத்தில் இது எதற்கென்று..?
இயக்குநரின் இயக்கத் திறன்தான் படத்தை இந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறது..! மிகப் பெரிய செலவுதான் செய்திருக்கிறார்கள். அத்தனை கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.. போராட்டக் காட்சிகளை படமெடுத்திருக்கிறார்கள்.. லஞ்சம் என்பது எப்படியெல்லாம் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுகிறது.. கொள்ளை எப்படியெல்லாம் அடிக்கப்படுகிறது என்பதையும் துணிச்சலுடன் காட்டியிருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல்லை விற்கும்போது அரசு அதிகாரிகள் அடிக்கும் கொள்ளை.. டாஸ்மாக் கொள்ளை.. திட்டத்தில் கமிஷன்கள் என்று அத்தனையும் அத்துப்படியாகியிருக்கிறது.
நாயகத்தை போட்டுத் தள்ளும் முயற்சி தோல்வியடைந்து சோளக் காட்டுக்குள் பதுங்கியிருந்து வெளியேற செய்யும் திட்டங்களும், அந்தக் காட்சிகளும் மிக யதார்த்தம். அதேபோல் முருகதாஸ் மனம் மாறி திரும்பவும் பாண்டித்துரை பக்கம் வந்ததை பிளாஷ்பேக்கில் சொல்லி கதையை நகர்த்தியிருக்கும்விதம் அருமைதான்.. வித்தை காட்டினால்தானே இங்கே இயக்குநர்..?
ஒன்றியச் செயலாளர் ஆனவுடன்.. ஒரு மறியல் போராட்டம். டிவிக்களில் முகம் என்றாகி சட்டென்று மாவட்டச் செயலாளர் போஸ்ட்.. அரசியலில் என்ன செய்தால் மேலே வரலாம் என்பதை தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.. தனது முதல் படத்திலேயே இத்தனை போல்டாக ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதனை தேர்ந்த நிலையில் கொடுக்க முனைந்திருக்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது..
இந்தப் படம் மார்க்கெட் உள்ள கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு ‘ஜிகர்தண்டா’ வசூலையும், பெயரையும் தொட்டிருக்கும்.. சின்ன கலைஞர்களை வைத்து.. அறிமுக நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.
புதிய இயக்குநர்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நமது கடமை.. இந்த ‘சண்டியரை’ வரவேற்க வேண்டியதும் நமது கடமை.. வரவேற்போம்..
தமிழ்ச் சினிமா ரசிகர்கள் இந்த ‘சண்டியரை’ அவசியம் பார்க்க வேண்டும்..!

ஜிகர்தண்டா – சினிமா விமர்சனம்

04-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்த வருடத் துவக்கத்தில் இருந்தே கேங்ஸ்டர் படங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக வந்திருப்பதுதான் இது.
‘பீட்சா’ கொடுத்த வெற்றியினால் எங்கே அந்த கார்த்திக் சுப்புராஜ் என்று கோடம்பாக்கம் கொடுவாள் மீசையோடு தேடிக் கொண்டிருந்தது.. அடுத்தப் படம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று மீடியாக்களும் காத்திருந்தன. இருவருக்குமே செம பைட் கொடுத்திருக்கிறார் கார்த்திக்.

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் தனது படம் எலிமினேட் செய்யப்பட்டதால் சோகப்படும் சித்தார்த்துக்கு, அந்த நிகழ்ச்சியின் நடுவராக வந்த ஒரு தயாரிப்பாளர் தான் படம் பண்ண வாய்ப்பு தருவதாகச் சொல்ல சந்தோஷம் பிய்த்துக் கொண்டு வருகிறது. ஆனால் தயாரிப்பாளரோ எதையோ சொல்லி அனுப்பி வைக்க வேண்டுமே என்பதற்காக ‘நல்ல கேங்ஸ்டர் படம் எடுக்கணும்ப்பா.. அதைப் பத்தி ஒரு நல்ல கதை பண்ணிட்டு வா’ என்று சொல்லி அனுப்பிவிட.. நிசமாகவே அதனை சீரியஸாகவே செய்யத் துவங்குகிறார் சித்தார்த்.
அவருடைய பத்திரிகையாளர் மாமாவின் உதவியால் மதுரையின் பிரபல தாதா கும்பல் தலைவன் சேதுவை பற்றி பாடம் படிக்க மதுரைக்கு வருகிறார் சித்தார்த். ஒரு புல் பாட்டிலையும், “நீதான் படத்துல செகண்ட் ஹீரோ…” என்று வாய்மொழி உத்தரவாதத்தையும் நம்பி சித்தார்த்தின் நண்பன் கருணாகரன் தன் வீட்டில் இடம் கொடுத்து உதவிகள் செய்ய, சேது பற்றிய அஸைண்மெண்ட்டில் இறங்குகிறான் சித்தார்த்.
சேதுவின் அல்லக்கைகள் மூவரை வேறு வேறு வழிகளில் நெருங்கிப் பார்த்தும் முடியாமல் தவிக்க.. இவர்கள் மீது அல்லக்கைகளுக்கு சந்தேகம் வருகிறது.. சேதுவின் அல்லக்கை ஒருவனே இவர்களைத் தேடி உளவு பார்க்க வருகிறான். அவன் மூலமாக சேதுவின் ஒரு கொலை அஸைண்மெண்ட்டை காதால் கேட்கிறார்கள் கருணாவும், சித்தார்த்தும்..
சித்தார்த் மறைமுகமாக செய்திருந்த மைக்ரோ ரிஸீவர் சேது கும்பலில் இருக்கும் ஒரு புத்திசாலி ஆளிடம் சிக்கிவிட இவர்களைத் தேடி வந்து உதைக்கிறார்கள்.. 'பொலி' போடுவதற்குள் உண்மையைச் சொல்லிவிட வேண்டுமே என்றெண்ணி “சினிமா, ஹீரோ.. படம் எடுக்கணும்..” என்று சித்தார்த் உண்மையைச் சொல்ல.. “இதை நம்மகிட்ட நேராவே வந்து கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பனே..?” என்ற சேது தன் கதையைத் தானே சித்தார்த்திடம் சொல்கிறான்..
எல்லாம் சரியா போய்க்கிட்டிருக்கும்போது சித்தார்த் காதலிப்பதாக நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனனிடம், “நம்ம காதலை மறந்திரு…” என்கிறான் சித்தார்த். அந்தக் கோபத்தில் அவள் சேதுவையே படத்தின் ஹீரோவாக நடிக்கச் சொல்ல.. அவனும் சந்தோஷமாக 'சரி' என்று சொல்ல.. சித்தார்த்தை மீண்டும் அங்கேயே இருக்க வேண்டி வருகிறது..
தயாரிப்பாளர் சென்னையில் இருந்து தூக்கி வரப்படுகிறார். மதுரையில் வைத்து மஞ்சத்தண்ணி தெளித்து.. தீர்த்தவாரி அபிஷேகங்கள் நடக்க.. சேதுவை ஹீரோவாக வைத்து படமெடுக்க ஒப்புக் கொள்கிறார்.. வேறு வழியில்லாமல் சித்தார்த் படத்தை இயக்கித் தர ஒப்புக் கொள்ள.. ஷூட்டிங் துவங்குகிறது..
இவர்களுக்கு நடிப்புச் சொல்லித் தர ஒரு வாத்தியாரையும் வரவழைத்து அவர் மூலமாக இல்லாத நடிப்பை ஏனோதானோவென்று கொண்டு வந்து காட்டி.. ஒரு வழியாக படத்தை எடுத்து முடிக்கிறார்கள்.  ரிசல்ட்.. ஏறுக்கு மாறாக.. சூப்பர் ஹிட்டாக.. சித்தார்த் எடுத்தது முழு நீள காமெடி படம் என்பதையறிந்து கொலை வெறியோடு அவனைத் தேடுகிறான் சேது. தப்பிக்க நினைக்கும் சித்தார்த், சேதுவை மாட்டிவிட செய்த கொலைகளை அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட வீடியோக்களை போலீஸிடம் கொடுக்க திட்டமிடுகிறான்.. செய்தானா..? அல்லது சேதுவிடம் மாட்டினானா என்பதுதான் கடைசி 4 ரீல்களில் சொல்லப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ்..
இது போன்ற தாதா கும்பல் கதைகளில் அடுத்தடுத்து காட்சிகளை விறுவிறுப்பாக வைக்கலாம். இதில் ஒரு சதவிகிதம்கூட இழப்பில்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். முதல் பாதி நீளமே தெரியாத அளவுக்கு படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.
படத்தின் பிற்பாதியில் பல இடங்களில் சிரிக்க வைத்தும், சஸ்பென்ஸ் வைத்தும், இறுக்கமான திரைக்கதையில் பாபி சிம்ஹாவின் அசத்தல் நடிப்பில் மேலும் ஒன்றரை மணி நேரம் உட்கார வைத்து படத்தை வெற்றியடைய வைத்திருக்கிறார் இயக்குநர்.
இதுவரையில் வந்த கேங்ஸ்டர் படங்களில் ‘அஞ்சாதே’ படத்திற்கு பின்பு, அவர்களின் உள் அரசியலையும், வாழ்க்கையையும் பிரதிபலித்த படம் இதுதான் என்று சொல்லலாம்.
சித்தார்த்தைவிடவும் பாபி சிம்ஹாவின் அதகளம்தான் படத்தில் அதிகம்.. மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ச்சும்மா சாதாரணமான ஒரு காட்சியைக்கூட தனது நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். சேகரின் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு பேசுகின்ற அந்த ஒரு காட்சியே போதும்.. இன்னுமொரு 25 படங்களில் நடிக்க வேண்டிய நடிப்பை ஒரே படத்தில் காட்டிவிட்டார் சிம்ஹா..
சித்தார்த்கூட செகண்ட் ஹீரோவாகத்தான் செய்திருக்கிறார்.. என்னதான் அவர் முயற்சி செய்தாலும் மதுரைக்கு அன்னிய முகமாகவும், இந்தப் படத்துக்கும் பொருத்தமில்லாதவராகவும்தான் தெரிகிறார்.. ஆனால் இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் இளைய தலைமுறை இயக்குநர்களிடம் நெருக்கமாக இருப்பதால் இவரைவிடவும் மாட்டார்களே..?
லட்சுமி மேனன் ச்சும்மா ஒரு அழகுக்கும்.. பேருக்குமாக வந்து செல்கிறார்.. பாடல் காட்சிகளிலாவது இவரை பயன்படுத்தியிருப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.. ஆனால் ஒரு காட்சியில் ஆடியன்ஸையும் பதற வைத்திருக்கிறார். அது சேதுவுக்கு ரொமான்ஸ் கிளாஸ் எடுக்கும்போது சித்தார்த் வேண்டுமென்றே லட்சுமியை மாட்டிவிட கீழே அமர்ந்த நிலையில் தான் இன்னமும் சித்தார்த்தை காதலிப்பதாகச் சொல்லும் காட்சி.. மிக அழகான இயக்கம். ஆனால் இப்போதும் சித்தார்த் லட்சுமியை காதலிக்கவில்லையே..?
கருணாகரன்.. பாட்டிலை பார்த்து ஜொள்ளுவிடும் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் உடன் இருந்து படத்தை நகர்த்த உதவியிருக்கிறார்.. அவ்வப்போது இவர் எடுத்துவிடும் கடி ஜோக்குகள் பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவும், இசையும் படத்தில் இன்னுமிரண்டு கேரக்டர்களாக வந்திருக்கின்றன.. “பாண்டி நாட்டு” பாடல் காட்சியில் கேமிரா காட்டியிருக்கும் வித்தையும், நடனமும் பிற்பாதியில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அந்தப் பாடலின் முடிவிலேயே ஒரு காட்சியைத் திணித்து படத்தின் டர்னிங் பாயிண்ட்டுக்கு வித்திட்டிருப்பது இயக்குநரின் பெரும் சாமர்த்தியம்.. கங்கிராட்ஸ் கார்த்திக்..
சந்தோஷ் நாராயணனின் இசை வேறுவிதமாக இருக்கிறது.. இந்த இடத்தில் இதுதான் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில் வேறொன்றை வைத்து இசையைப் பற்றிய நினைக்காமலேயே செய்துவிட்டார். இருந்தும் இல்லாத மாதிரி.. கிளைமாக்ஸில் பன்றிமலை அருகே நடக்கும் காட்சியில் சிம்ஹாவின் அந்த உணர்ச்சிகரமான பேச்சுக்கு பின்னணியில் எந்தத் தடங்கலும் இல்லை.. மனதைத் தொட்டது.. கதவுக்கு வெளியே சித்தார்த் நின்று ரசிகர்களின் கரவொலியை கேட்டு சந்தோஷப்படும் காட்சியில் நம்மையும் சந்தோஷப்பட வைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.. இது போலவே மெதுவாக இசையை போட்டு நம் காதுகளை பஞ்சராக்காமல் விட்டதற்கு நன்றி..!
படத்தில் புத்திசாலித்தனமான காட்சிகள்தான் அதிகம்.. அந்த முதல் காட்சியில் ‘மலர்ந்தும் மலராத பாட்டின்போதே’  சேது சுட்டுக் கொல்லப்படுவது போன்ற காட்சி..  இந்தக் காட்சி மீண்டும் கிளைமாக்ஸில் வந்து கதையை மாற்றுவது.. கருணாகரனுக்கு பாட்டிலை அறிமுகப்படுத்தும் காட்சி.. லட்சுமி மேனன் சேலை திருடும் காட்சி.. சேதுவின் அல்லக்கைகளின் கேரக்டர் ஸ்கெட்ச்.. அதிலும் ஒருவனின் பிட்டு பட ஆர்வம்.. அந்தக் குட்டு வெளிப்பட்டவுடன் தொடர்ச்சியாக வரும் சிரிப்பலை காட்சிகள்.. சங்கிலிமுருகனின் கேரக்டர்.. தன் அல்லக்கை ஒருவன் போட்டுக் கொடுக்கிறானா என்பதை கண்டறிய செய்யும் கொலை ஸ்கெட்ச்.. வீட்டுக்குள் ஒருவனை கொலை செய்ய முடிவெடுத்த நிலையில், நான் செய்றேன் என்று ஒருவன் முந்திக் கொண்டு ஆர்வப்படுவது.. தியேட்டரில் சிம்ஹாவை கொலை செய்ய நடக்கும் முயற்சி.. இதுவரையிலும் ரொமான்ஸையே நினைத்துக் கூட பார்த்திராத சேதுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. இவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஐடியா.. படத்தின் மேக்கிங் எப்படியிருக்கிறது என்பதை ஆடியன்ஸூக்குக்கூட சொல்லாமல் கடைசிவரையில் சஸ்பென்ஸாகவே வைத்திருந்த்து.. ரசிகர்களின் கை தட்டலை கதவுக்கு வெளியே நின்று கேட்டு சித்தார்த் சந்தோஷப்படுவது.. தயாரிப்பாளரிடம் "ஏன் ஸார் அழுகுறீங்க..?" என்று அப்பாவியாய் கேட்டு அந்தக் காட்சியை கட் செய்து இன்னொரு இடத்தில் இணைத்துக் காட்டுவது.. படம் சூப்பர் ஹிட் என்றானவுடன் தயாரிப்பாளர் வெளிநாடு செல்வதாகச் சொல்லி தப்பிப்பது.. தன்னை காமெடியாக்கிவிட்டார்களே என்று நினைத்து சேது கோபப்படுவது..  10 வருடமாக பேசாத அவனது அம்மா, "எலே சேது.. அம்மாவுக்கு தண்ணி கொண்டு வாப்பா.." என்று கேட்பது.. மக்கள் சேதுவை ரசிப்பது.. சாவு வீட்டிலும் தன்னை விசாரிப்பது.. குழந்தை முதற்கொண்டு தன்னை பலரும் விரும்புவது இந்த ஒரு படத்தின் மூலம் என்று நினைத்து மனம் மாறியதைக்கூட காட்டாமல் கிளைமாக்ஸில் சோமசுந்தரத்தின் பாடத்தின் மூலமாக விளக்குவது.. வினோதினியின் கேரக்டர்.. சேதுவுடனான அவர்களின் இறுதித் தொடர்பு.. சித்தார்த்-லட்சுமி மேனன் காதல் முடிவு.. என்று இந்தப் படத்தின் சுவாரஸ்யங்கள் பலவும் அடுத்தடுத்த ரீல்களில் வந்தபடியே இருந்ததால் கடைசிவரையிலும் சீட்டில் உட்கார முடிந்தது..
ஆனால் லாஜிக்..?
இதில் எதுக்குங்க லாஜிக் என்றால்.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சி முதல் சினிமா தயாரிப்பதுவரையில் காட்டிய பின்பு கேட்காமல் எப்படியிருக்க முடியும்..? திரைப்படத் துறையைப் பற்றியெடுத்திருப்பதை லாஜிக்கோடுதான் பார்க்க முடியும்.. இது ச்சும்மா காமெடிக்கு என்று எப்படி விட்டுச் செல்வது..?
லோக்கல் போலீஸ் வீடு தேடி வந்து விசாரித்தவிட்டு அவர்கள் இல்லீகலாக சம்பாதித்த பணத்தை சேதுவிடம் கொடுத்து ரொட்டேஷன் விட்டு வரும் பணத்தில் கமிஷனை எடுத்துக் கொள்ளும்படி கேட்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைத்தனம்.. இவ்வளவு உண்மையிருக்கும்போது லாஜிக் பார்க்கக் கூடாதா..?
கார்த்திக்கிற்கு யார் மீது கோபம் என்று தெரியவில்லை.. மாற்று சினிமா ரசிகர்களுக்கும், தியேட்டர் சினிமா ரசிகர்களுக்குமான மோதலை ‘நாளைய இயக்குநர்’ பஞ்சாயத்திலேயே காட்டிவிட்டார்.. நாசரின் கோபத்திலும், ‘ஆடுகளம்’ நரேனின் பதிலிலும் இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள்.. உண்மைதான்..
எந்த ஊர் தாதா கும்பலின் தலைவன் இந்த சேது போல கேணையனாக இருக்கிறான்..? 'ஜூனியர் விகடன்' பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைக்காக அக்கட்டுரையை எழுதிய பத்திரிகையாளனை தீயிட்டுக் கொழுத்தியது சேதுவின் வாழ்க்கையில் மிகப் பெரிய கிரைம். இதற்குப் பின்பும் இதனை ச்சும்மா சாதாரணமான தற்கொலை என்று முடிவு கட்டி மூடிவிட முடியுமா..? முடிந்திருக்குமா..?
எந்த தாதா கேமிரா முன்பாக தான் செய்த அனைத்து கொலைகளையும் ஒத்துக் கொள்வான்..? பேனா பத்திரிகையாளரிடம் பேசும்போதே காந்திக்கு அடுத்த வாரிசு நான்தான் என்பார்கள்.. இதில் கேமிரா முன்பாக எல்லாவற்றையும் சொல்கிறாராம்..! நம்ப முடிகிறதா..? அவ்வளவு முட்டாளா இந்த சேது..?
ஏதோ அரிவாள் வெட்டு என்றால்கூட பரவாயில்லை.. துப்பாக்கியை வைத்து பொசுக்.. பொசுக்கென்று சுட்டுத் தள்ளிவிட்டு போலீஸ் வரவே வராது என்றால் எப்படி..?
சேதுவின் வாழ்க்கைக் கதையில் வந்து செத்துப் போகும் பாலாசிங்கும், மற்றொரு நடிகரும் கடைசியாக மீண்டும் சேதுவின் படத்திலேயே நடிக்க வருவது போல வைத்திருப்பது ஏனோ..?
செளராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த லட்சுமி மேனன் கடைகளில் போய் புடவை திருடுகிறார் என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார் கார்த்திக். செளராஷ்டிரா இனத்துக்காரர்கள் இன்னமும் படம் பார்க்கவில்லையோ..? இந்த ஹீரோயினும் சாதா சினிமா ஹீரோயின் மாதிரியே பார்த்தவுடன் லவ்வாகி விழுக.. சித்தார்த்துக்குத்தான் ஒரு காரணம் கிடைக்கிறது.. லட்சுமியின் அம்மா அம்பிகாதான் சேதுவுக்கு சமைத்துப் போடுகிறார் என்பது.. இப்படி கதைக்கு வசதியாக திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.
கொல்லப்பட்ட அல்லக்கையின் பாக்கெட்டில் இருந்து விழுகும் கேமிராவை கையில் எடுக்கும் சவுந்தர்ராஜன், அதனை பின்பக்கம் திருப்பி டோப்போவை கழட்டி மைக்ரோ ரிசீவரை வெளியில் எடுத்துப் பார்க்க அந்தக் காட்சியில் என்ன கட்டாயம் இருக்கிறது..? இது வலிந்து திணிக்கப்பட்ட திரைக்கதை.. இடைவேளைக்கு கார்டு போட வேண்டியிருப்பதால் எப்படியாவது சீக்கிரமாக கனெக்சனை கொடுத்துவிட நினைத்து இதனைச் செய்திருக்கிறார் இயக்குநர்..
சேது, படத்தில் தானே நடிக்க விரும்புவது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் இவர்களுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்க ஒருவர் வருவதும்.. அவர் இவர்களை அடிப்பதும், உதைப்பதும், கன்னத்தில் அடிப்பதுமாக இருக்க.. இதனை அவர்கள் சினிமாவுக்காக தாங்கிக் கொள்வதுமான திரைக்கதையை, இப்போதைய உண்மையான கேங்ஸ்டர்கள்கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்..
இவ்வளவு சீரியஸாக கட்டப் பஞ்சாயத்து, அடிதடி வெட்டு குத்து கொலை என்று போய்க் கொண்டிருந்தவர்களை மனம் மாற்றி சினிமாவுக்குள் திணித்துவிட்ட கதையை காமெடியாகவே எடுக்கிறார்கள் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் மிகப் பெரிய காமெடி.. இயக்குநரின் சாமர்த்தியத்தை ரொம்பவே பாராட்ட வேண்டும்..!
இத்தனை பெரிய தயாரிப்பாளரை மதுரைக்குக் கொண்டு வந்து தூக்கிப் போட்டு மிதித்து படத்தைத் தயாரிக்க வைக்க முடியுமா..? இது திரைப்பட தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது..? தாதாக்களின் பிடியிலா சினிமாவுலகம் இருக்கிறது..? பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் தாதாக்களுக்கு கட்டுப்படுபவர்களா..? இப்படி நாமளே படமெடுத்தால் வெளியில் இருப்பவர்கள் சினிமாக்காரர்களை எப்படி மதிப்பார்கள்..? டைட்டிலில் 'மதுரை அன்புச்செழியனுக்கு நன்றி' கார்டு போட்டிருப்பதையும் கவனித்தோம்..
ஒரு படத்தில் நடித்த சேது, மிகப் பெரிய ஹீரோவாகி தனிக்காட்டு ராஜாவாகிவிட்டார் என்பதுகூட ஓகே..  ஆனால், மிகப் பெரிய நடிகரான விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்குச் சென்று அவரை மிரட்டி பணிய வைப்பது போன்ற காட்சிகளெல்லாம் எந்தவிதத்தில் உண்மைத்தனமானவை..?
இப்போது சித்தார்த்தின் பின்புலத்தில் அதே ரவுடிகள் அணி வகுத்து வருவது போன்றவையெல்லாம் இப்போதைய இயக்குநர்களை அசிங்கப்படுத்துவது போலில்லையா..?  எந்த இயக்குநருக்கு ஒரு ஹீரோவிடம் இப்படி பேசுவதற்கு மனம் வரும்..?
இதையெல்லாம் செய்த பின்பு.. மிரட்டல் விடுத்த பின்பு விஜய் சேதுபதி சித்தார்த்தின் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வது போலவும் காட்சிகளை வைத்து நடிகர்களையும் ஒரு வழி பண்ணிவிட்டார் கார்த்திக்.. இவருக்கு யார் மீது கோபமா தெரியவில்லை..?
திரைப்படத் துறையினர் இந்தப் படத்தை எந்தவிதத்தில் அணுகுவார்கள் என்றுதான் தெரியவில்லை..! புரியவில்லை.. அவர்களுக்கு புரியாமலேயே போய்விட்டால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு சந்தோஷம்தான்..
ஜிகர்தண்டா.. இரவு நேரத்தில் கடும் வெப்பமான சூழலில் சாப்பிடும்போது அது தரும் குளிர்ச்சி அலாதியானது.. அது போலத்தான் இந்தப் படமும்.. முதல் பாதி ரன் வேகமும்.. இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவான வேகத்திலும் ஓடினாலும் இறுதிவரையிலும் நம்மை உட்கார வைத்ததற்கு காரணமான நடிகர்களின் நடிப்புத் திறமை, இயக்குநரின் திறமையான இயக்கம் இரண்டுக்கும் நமது பாராட்டுக்கள்..!
முதல் படத்தில் அடித்த ஸ்கோரைவிடவும் இரண்டாம் படத்தில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக்.. வாழ்த்துகள்..!